ஊர்ப்புதினம்

இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு

3 weeks 2 days ago

லிட்ரோ எரிவாயு விலை ரூ.300 ஆல் உயர்த்தப்பட்டது

Published By: Vishnu

10 Mar, 2026 | 10:30 PM

image

இன்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.300 ஆல் அதிகரிக்கப்படும், மேலும் அதன் புதிய விலை ரூ.3990 ஆக இருக்கும்.

https://www.virakesari.lk/article/240666

கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள்

3 weeks 2 days ago

கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள்

Mar 10, 2026 - 06:52 PM

கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள்

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தோல் நோயியல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், இந்த சர்வதேச மாநாட்டின் தலைவருமான தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் நயனா மதரசிங்க, இந்த மாநாடு முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் தோல் நோயியல் துறையைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இம்மாநாட்டின் போது 45 வெளிநாட்டு வளவாளர்கள் தோல் நோயியல் துறையின் புதிய போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதேவேளை, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150 தோல் நோய் நிபுணர்களும் வளவாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmmkn22630014356pygzvp3v2

விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக - அரசாங்கத்திடம் மனோ கணேசன் கோரிக்கை

3 weeks 2 days ago

விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக - அரசாங்கத்திடம் மனோ கணேசன் கோரிக்கை

10 Mar, 2026 | 05:28 PM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாரிய விலை உயர்வுகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதாகவும் விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பது வெறும் இரண்டு துறைகளுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இது உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என அனைத்திலும் ஒரு சங்கிலித் தொடரான விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் நலிவடைந்துள்ள மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இந்தத் திடீர் விலை உயர்வுகளால் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலப் பேரிடர்களின் போது ஜனாதிபதியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணங்கள் கூட இன்னும் முழுமையாக இம்மக்களைச் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட இருப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக விசேட நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். சமையல் மற்றும் ஏனைய தேவைகளுக்காகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், மலையக மக்களின் பிரதான உணவுத் தேவையான கோதுமை மாவை சலுகை விலையில் தடையின்றி விநியோகிப்பதற்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணங்கள் எவ்வித பாகுபாடுமின்றி, தோட்டங்களில் வசிக்கும் அனைத்துத் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் அல்லாத குடும்பங்களுக்கும் சென்றடைவதை மாவட்ட மற்றும் பிரதேச செயலர்கள் ஊடாக அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

நிவாரணப் பொதிகளுக்கு அப்பால், தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினையான காணி உரிமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே தற்போதைய தேவையாகும். பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசிப்பிடத்திற்காகக் குறைந்தது 10 பேர்ச் காணியையாவது சட்டப்பூர்வமாக ஒதுக்கித் தர வேண்டும். இது மக்களின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

இதற்காகத் தற்போது நடைமுறையிலுள்ள காணி குத்தகைச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டத் திருத்தங்களுக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி மாத்திரமன்றி, ஏனைய எதிர்க்கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றன. எனவே, அரசாங்கம் மேலும் காலம் தாழ்த்தாது இந்த காணி உரிமையினை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/240648

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

3 weeks 2 days ago

iris-1.jpg?resize=750%2C375&ssl=1

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காலி தலைமை நீதிவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

காலி துறைமுக பொலிஸார் காலி தலைமை நீதிவான் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மார்ச் 4 அன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீது தாக்குதல் நடத்திய அதை மூழ்கடித்தது.

இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் இருந்து கப்பல் திரும்பிக் கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கை இல்லாமல் இந்தத் தாக்குதல் நடந்தது.

மத்திய கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தப் படுகொலை, ஈரானுக்கு எதிரான வொஷிங்டனின் தீவிரமடைந்து வரும் போரின் ஒரு பகுதியாகும். 

தாக்குதலின் பின்னர் மூழ்கத் தொடங்கிய ஈரானியக் கப்பலில் இருந்து அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி என இரண்டு அவசர அழைப்புகளுக்கு இலங்கை கடற்படை பதிலளித்து, உயிர் பிழைத்த 32 பேரை மீட்டனர், அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் கடற்படை மூழ்கிய கப்பலில் இருந்து டஜன் கணக்கான மாலுமிகளின் உடல்களை மீட்டது.

மார்ச் 4 ஆம் திகதி 208 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் புஷேர், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரி இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு ஒரு செய்தியை அனுப்பியது. 

ஆரம்பத்தில் கோரிக்கையை நிராகரித்த பின்னர் பதட்டமடைந்த இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மார்ச் 5 ஆம் திகதி கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதித்தது. 

அதன் பணியாளர்கள் இறக்கிவிடப்பட்டு, கப்பல் நாட்டின் மறுபக்கத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்படத்தக்கது.

https://athavannews.com/2026/1467891

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

3 weeks 2 days ago

New-Project-3-5.jpg?resize=750%2C375&ssl

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1467902

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

3 weeks 2 days ago

New-Project-29.jpg?resize=600%2C300&ssl=

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும்.

இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு அதிகரித்து செல்கின்றது, இரத்த வங்கியில் நேரடியாக வந்து இரத்தம் கொடுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற கொடையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது.

அத்துடன் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் தினமும் குருதியை பெற்றே நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குகின்றோம்.

தற்போது அவர்களிடமும் குருதியின் இருப்பு குறைவடைந்துள்ளதினால் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். ஆகவே சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள், திணைக்களங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் தங்கள் தங்கள் இடங்களில் இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் இடத்திற்கு வருகை தந்து குருதி சேகரிக்கும் பணியை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் தனி நபர்கள் எமது இரத்த வங்கிக்கு நேரடியாக காலை 8.00 மணியிலிருந்து பி.ப 7.00 மணிவரை சமூகம் கொடுத்து இரத்த தானம் செய்வதன் மூலம் குருதி தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.

ஆகவே இவ் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இளைஞர், யுவதிகள் இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து எமது உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 0212223063, 0772105375 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1467888

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை

3 weeks 2 days ago

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை

adminMarch 10, 2026

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது.  அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட  30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்,  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினா் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றும் போது எடுக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நேரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2026/230304/

புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா

3 weeks 2 days ago

புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா

adminMarch 10, 2026

0-3-1.jpeg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக ,  பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியான கேணல் கிட்டு என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புலிகளின் 10 போராளிகள் பயணித்த கப்பலை சர்வதேச கடற்பரப்பினுள் இந்திய கடற்படையினர் வழிமறித்து சரணடைய கோரிய நிலையில் ,16.01.1993 அன்று கப்பலுடன் வெடித்து சிதறி வீரகாவியமானார்கள்.

 இந்நிலையில்  கேணல் கிட்டுவின் நினைவாக யாழ்பாணத்தில் முத்திரை சந்தி பகுதியில் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ” கிட்டு பூங்கா” திறந்து வைக்கப்பட்டது. யுத்தம் தீவிரமடைந்து 1995 ஒக்டோபர் 30ஆம் திகதி மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் , கிட்டு பூங்கா முற்றாக அழிக்கப்பட்டது.

அதனை அடுத்து “கிட்டு பூங்கா” புனரமைக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்த போதிலும் , 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கிட்டு பூங்காவை , சங்கிலியன் பூங்கா என பெயர் மாற்றம் செய்து புனரமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அவை முழுமை பெறாது கைவிடப்பட்டது.  பின்னர் பூங்கா புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படாத போதிலும் , பூங்கா அமைந்திருந்த பகுதியில் அரசியல் பிரச்சார கூட்டங்கள் , கண்காட்சிகள், கூட்டங்கள் என்பன நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தற்போது கிட்டு பூங்காவை புனரமைக்கும் பணிகளை மாநகர சபை முன்னெடுக்கவுள்ள நிலையில் ,  முதல்கட்டமாக பூங்காவை சுற்றி சுற்று மதில் கட்டி , அதனை பாதுகாப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.  அதனை முன்னிட்டே  யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் , ஆணையாளர் , உள்ளிட்ட மாநகர சபை அதிகாரிகள் கலந்து கொண்டு துப்பரவு பணிகளை முன்னெடுத்தனர்.

 0-4-1.jpeg?resize=600%2C800&ssl=1

https://globaltamilnews.net/2026/230307/

மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்

3 weeks 2 days ago

மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்

11 Mar, 2026 | 10:27 AM

image

நாட்டின் தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு பணிக்கு வரத் தவறினால் அது கடும் ஒழுக்காற்று குற்றமாகக் கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேஷனல் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்வீஸ் புரொவைடர் (பிரைவேட்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். எஸ். வெத்தசிங்க வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் மின்சார பரிமாற்ற அமைப்பின் தொடர்ச்சியான செயல்பாட்டை எந்தவித தடையும் இன்றி பராமரிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் இலங்கை மின்சாரச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) கீழ், இலங்கை மின்சார சபையின் முக்கிய செயல்பாடுகள் 2026 மார்ச் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு வாரிசு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Beaches & Islands

அறிக்கையின்படி, பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி எண் 2477/47 இன் கீழ் மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் ஏற்கனவே அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப இடமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், தற்போதுள்ள மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய நிறுவனங்களின் கீழ் ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் வழக்கம்போல தங்களது கடமைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறி சில ஊழியர்கள் பணிக்கு வரத் தவறியதுடன், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அத்தகைய செயல்பாடுகள் கடும் குற்றமாகக் கருதப்படும். அதற்கேற்ப ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/240688

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

3 weeks 2 days ago

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

10 Mar, 2026 | 04:53 PM

image

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

'மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது.

இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், சாதாரண மக்கள் தங்களின் நாளாந்தத் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக அகழப்படும் மணலையே அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றி வருகின்றனர்.

மேலும், அரச நிறுவனங்கள் ஊடாக மணல் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தால் அதற்குக் காலதாமதம் ஏற்படுகின்றது.

ஆனால், தனிநபர்களுக்குப் பணியகத்தால் உடனடியாக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

'சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சுற்றிவளைப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும், பொலிஸாரால் மாத்திரம் இதனை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்த முடியாது. மாவட்டக் குழுக்களின் ஊடாகப் பொது அமைப்புகளுக்கு அனுமதிகளை வழங்குவது மிகவும் காத்திரமான செயன்முறையாக அமையும்,' என்றார்.

இதன்பின்னர் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர்களால் பல்வேறு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மணல் அகழ்வு, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய மூன்று வகையான அனுமதிப்பத்திரங்களும் ஒரே நபர்களுக்கோ அல்லது ஒரே குடும்பத்துக்கோ வழங்கப்படுகின்றமையும், அனுமதிகள் வழங்கப்படுவது தொடர்பில் தமக்கு எவ்வித முன்னறிவிப்புகளும் செய்யப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 5 குளங்களில் மணலைக் கழுவி எடுத்து, அதனை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக விநியோகிப்பதற்கான பொறிமுறையொன்று முன்மொழியப்பட்டது. இதன்மூலம், யாழ்ப்பாணத்தில் ஒரு டிப்பர் மணலை சுமார் 60,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

'தூய இலங்கை' செயலணியின் வடக்கு மாகாண இணைப்பாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளருமான சு.கபிலன் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உண்மையான மணல் தேவையைக் கணிப்பிடுவது அவசியம் எனவும், அதன் ஊடாகவே விநியோகத்தையும் விலையையும் சீராகப் பேண முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.Geographic Reference

பொதுமக்களின் சிறிய தேவைகளுக்கான மணலை, சிமெந்து விற்பனை போன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத்தில் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் அதனை எடுத்துச் செல்லும்போது பொலிஸாரால் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் தலைமையிலான விசேட மாவட்ட மட்டக் குழுவில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளீர்த்தல். மணல் மற்றும் கிரவல் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களைக் கள ஆய்வு செய்து அடையாளப்படுத்துதல்.

விநியோகப் பணிகளைப் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் ஊடாக மாத்திரம் முன்னெடுத்தல். இந்தப் புதிய பொறிமுறையின் தொடர் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, மாகாண மட்டத்திலான மீளாய்வுக் கூட்டங்களை ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடத்துதல் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விசேட கூட்டத்தில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க  வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், ஐந்து மாவட்டங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், நீர்ப்பாசன மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவளத் திணைக்களம், நிலஅளவைத் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20260310-WA0010.jpg

IMG-20260310-WA0015.jpg

IMG-20260310-WA0014.jpg

IMG-20260310-WA0019.jpg

https://www.virakesari.lk/article/240638

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு

3 weeks 2 days ago

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு

10 Mar, 2026 | 02:20 PM

image

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (9) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரகள் தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பாரியதொரு திருப்புமுனையையும் ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் அடைந்திருக்கிறோம்.

இந்த வழக்கு, விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வுப்பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும் ஒரு தடையாக இருந்தது.

இந்நிலையில், தற்போது காலநிலை சீராக உள்ளதால் அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணத்தை செலவழிக்கின்ற அதிகாரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்திருக்கிறார்.

இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகள், அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 30ஆம் திகதி முதற்கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்கிற செய்தியினை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

30ஆம் திகதி குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கையாக, இந்த புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக, களுவாஞ்சிக்குடியின் பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்ததன் பின்னர் மார்ச் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலற்றவர்களின் குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

முடிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீதிமன்றங்கள் நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என சட்டத்தரணி றாஸீ முஹம்மத் முஹம்மத் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/240627

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது!

3 weeks 2 days ago

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது!

10 Mar, 2026 | 05:16 PM

image

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குப் பெருந்தொகையான 'குஷ்' போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதியினர் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கனடாவின் அல்பர்ட்டா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கணவன் மற்றும் 29 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 பொதிகளில் அடைக்கப்பட்டு இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கோடி ரூபா பெறுமதியான 32 கிலோகிராம் 159 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 32 கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கனடாவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என்பதும், அவரது மனைவி தொழில் தேடும் நிலையில் உள்ளவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (10) காலை 10.45 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யூ.எல்-403 (UL-403) என்ற விமானத்தின் ஊடாக இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/240647

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

3 weeks 2 days ago

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Published By: Digital Desk 1

10 Mar, 2026 | 11:36 AM

image

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான கையெழுத்துகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டவுடன், அடுத்த வாரம் சபாநாயகரிடம் இந்தத் தீர்மானம் கையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/240606

"பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை": மாத்தறையில் பிரம்மாண்டமான மகளிர் தின விழா!

3 weeks 3 days ago

"பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை": மாத்தறையில் பிரம்மாண்டமான மகளிர் தின விழா!

Published By: Digital Desk 1

10 Mar, 2026 | 10:27 AM

image

"பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில் ற தேசிய மகளிர் தினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம் ஆகியவற்றினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வருடத்தின் மகளிர் தினமானது "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி கொண்டாடப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மகளிர் பணியகத்தினால் வெளியிடப்பட்ட "காந்தா சவிய" சஞ்சிகையின் விசேட இதழ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிதிகளுக்கு இதன்போது வழங்கப்பட்டது.

அத்துடன், மாவட்ட ரீதியாக சிறந்த தொழில்முனைவோர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 25 பெண் தொழில்முனைவோர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையானது (JICA), மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பங்களிப்புடன் வலுவூட்டப்பட்ட பெண் தொழில்முனைவோர்களைப் பாராட்டி கௌரவித்தது.

காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மகளிர் பணியகத்தின் 1500 உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தென் மாகாண ஆளுநர் சுசிரிபால மானாவடு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்; நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், அமைச்சின் அதிகாரிகள், தேசிய மகளிர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் பல பெண் தொழில்முனைவோர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.   

WhatsApp_Image_2026-03-10_at_07.47.32__1

WhatsApp_Image_2026-03-10_at_07.47.26.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.47.32.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.47.35.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.47.40.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.47.42.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.47.45.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.48.02.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.48.09.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.47.52.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.47.59.jp

WhatsApp_Image_2026-03-10_at_07.48.04.jp

https://www.virakesari.lk/article/240601

ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

3 weeks 3 days ago

srilankan-airlines.jpg?resize=750%2C375&

ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

மத்திய கிழக்கு வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் ஐரோப்பிய இடங்களுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அசர்பைஜான் வழியாக மாற்று வழியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுடன் தொடங்கிய விரிவடையும் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி பெரும்பாலும் மூடப்பட்டே உள்ளது. 

ஈரான் இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது, இதனால் இப்பகுதிக்கு செல்லும் மற்றும் இப்பகுதி வழியாக விமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக பாதை மாற்றத்தின் காரணமாக லண்டனுக்கு விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம் அதிகரித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் ஜெனரலும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, விமானப் போக்குவரத்து (பயணிகளின் மொத்த எடை, அவர்களின் சாமான்கள் மற்றும் வருவாய் ஈட்டும் விமானத்தால் கொண்டு செல்லப்படும் சரக்கு) குறைக்கப்பட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

வான்வெளி மூடப்பட்டதன் விளைவாக மத்திய கிழக்கு நகரங்களுக்கு திட்டமிடப்படாத விமானங்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். 

மேலும், விமான நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர் அது மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், ஆனால் சரியான தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, வான்வெளி மூடல் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதித்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க முன்னதாக தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1467762

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

3 weeks 3 days ago

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Mar 9, 2026 - 10:52 PM

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.

340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும்.

329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmjg7r44000i356pptfwqnv9

அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

3 weeks 3 days ago

அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

09 Mar, 2026 | 02:40 PM

image

நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல், பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படக்கூடும். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புற சூழலில் அதிக நேரம் செலவிடும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாகக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிக வெப்பநிலையினால் சிறுவர்களில் நீர்சத்து இழப்பு அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முறையான மேற்பார்வையின் கீழ் நீரில் விளையாடுவதன் மூலம் சிறுவர்களுக்கு குளிர்ச்சியளிக்க முடியும் எனவும், இது வெப்பமான வானிலையில் உடல் வெப்பத்தை குறைக்க உதவும் எனவும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், பல பாடசாலைகளில் ஆண்டு தோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளினால் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் போது வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டுகளின் போது அதிகமாக வியர்வை வெளியேறுவதால் சோடியம் மற்றும் பொற்றாசியம் போன்ற அத்தியாவசிய உடல் உப்புகள் இழக்கப்படலாம். இது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே, சிறுவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு, விளையாட்டு நடவடிக்கைகளின் போது இடைவேளைகளை எடுக்கவும், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதை தவிர்க்கவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாளின் அதிக வெப்பநிலை காணப்படும் நேரங்களில் சிறுவர்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், நீரேற்றமாக இருக்க அதிகளவு நீர் மற்றும் இயற்கை குளிர்பானங்களை குடிக்க ஊக்குவிக்கவும் சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/240533

CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்!

3 weeks 3 days ago

CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்!

Mar 9, 2026 - 08:40 PM

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மின் விநியோகப் பணிகளுக்கான பொறுப்பு எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட்டுக்கு (EDL)மாற்றப்பட்டுள்ளது.

மின்விநியோகத் துறையினுள் வினைத்திறன், நம்பகத்தன்மை மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக EDL நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பதிலளிக்கக்கூடிய மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மின்சார விநியோக சேவை உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்!

சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது - நீதியமைச்சர்

3 weeks 3 days ago

சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது - நீதியமைச்சர்

Published By: Vishnu

09 Mar, 2026 | 04:08 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது.கல்வி தகைமையை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்படும். நியமனத்தின் பின்னர் நீதியமைச்சின் ஊடாக போதுமான பயிற்சிகள் வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டில் சமாதான நீதவான்களுக்கான பயிற்சி வழங்குதல், தற்போதுள்ள சமாதான நீதவான்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் புதிதாக நியமிக்கப்படும் சமாதான நீதவான்களின் எண்ணிக்கை மற்றும் சமாதான நீதவான் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வேளையின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதியமைச்சர் மேலும் பதிலளித்ததாவது,

2025 ஆம் ஆண்டு வரை சமாதான நீதவான்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான அமைப்பு இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களை நியமிப்பதற்கான முறையான அமைப்பும் இல்லை. இதற்கான முறையான அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளோம். இருப்பினும் அவர்களை வழிநடத்தும் தொடர்புடைய விஷயங்கள் 'சமாதான நீதிபதிகளின் பங்கு' என்ற கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சமாதான நீதிபதிகளுக்கு நியமனங்கள் வழங்கும்போது நீதி அமைச்சினால் இந்த கையேடு வழங்கப்பட்டது, மேலும் 2025 ஆம் ஆண்டு முதல், இந்த கையேட்டை நீதி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம், மேலும் சம்பந்தப்பட்ட சமாதான நீதிபதிக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டா குறியீடு மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.

2013 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்படும் தரவு தகவல் அமைப்பின் படி,நாடு முழுவதும் அதிகார வரம்புகளுக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்ட சமாதான நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது. மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் 66,315 சமாதான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பராமரிக்கப்பட்ட தரவுத்தள அமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட்டதால்இ அதை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம்.

2025 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவின் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நிலப்பரப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சமாதான நீதிபதிகள் (200:1 என்ற விகிதத்தில்) தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, சுமார் 40,000 சமாதான நீதிபதிகள் காலியாக உள்ள நியமனங்களை வழங்க முடியும் என்பதால், மாதத்திற்கு 500-750 நியமனங்கள் வழங்குவது ஜூன் 2025 முதல் தொடங்கப்பட்டது.

சமாதான நீதிபதி சேவையை நெறிப்படுத்தி தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, விண்ணப்பதாரர்கள் 2025 முதல் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்படி, விண்ணப்பதாரர் க.பொ.த. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 6 பாடங்களில் சாதாரண தரப் பரீட்சை எழுதி, தாய்மொழி (சிங்களம்/ தமிழ்) உட்பட வேறு ஒரு பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஏதேனும் ஒரு வழியில் சான்றளிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்ற 06 பாடங்களுக்குள் மற்றொரு பாடத்திற்கு கூடுதலாக ஆங்கில மொழியைக் கொண்டிருக்க வேண்டும். முழு தீவுக்கும் சமாதான நீதவான் நியமனங்களை வழங்குவதில், நியமனம் வழங்கப்பட்ட பிராந்தியத்தில் சமாதான நீதவான் பதவியில் 5 ஆண்டுகள் சேவையாற்றியிருக்க வேண்டும் மற்றும் கல்வித் தகுதியாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் குறைந்தது ஒரு பாடத்திலேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 30 வயது பூர்த்தி செய்திருத்தலுடன், விண்ணப்பதாரர் 75 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.நியமனத்தின் போது நபர் நல்ல உடல் மற்றும் மன நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் கொண்ட நபராக இருக்கக்கூடாது மற்றும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக்கூடாது.

மேலும், அவர்களின் சேவையை பொதுமக்களுக்கு ஏற்றதாக மாற்றும் நோக்கத்துடன், ஒரு சமாதான நீதவானின் எந்தவொரு செயல்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எழும் ஏதேனும் சிக்கல்கள் அல்லது புகார்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க ஒரு வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, நீதி அமைச்சின் சீர்திருத்தப் பிரிவுக்கு கடிதம் மூலம் புகார் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.2025. நவம்பர் முதல் நியமிக்கப்படும் சமாதான நீதவான்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

https://www.virakesari.lk/article/240486

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள் அத்துமீறல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் - ரவிகரன்

3 weeks 3 days ago

09 Mar, 2026 | 04:21 AM

image

(இராஜதுரை ஹஷான்)

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருக்கும் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் டிஒபிஒ பிபி70 இலக்க நில அளவை வரைபடத்தின் 17,18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 2026.03.06 ஆம் திகதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன.

எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தஇ முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க,வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள் அத்துமீறல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் - ரவிகரன் | Virakesari.lk

Checked
Fri, 04/03/2026 - 09:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr