ஊர்ப்புதினம்

நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

4 days 6 hours ago

WhatsApp-Image-2026-03-29-at-21.26.20.jp

நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சிரயாதீவு பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை  சுற்றிவளைத்தனர் .

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 8 பரள்களில் 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்

சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன .

சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதுடன்,  கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

WhatsApp-Image-2026-03-29-at-21.26.16.jpeg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2026/1470408

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய மோசடி முறியடிப்பு

4 days 7 hours ago

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய மோசடி முறியடிப்பு

Published By: Digital Desk 1

30 Mar, 2026 | 07:35 AM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் போலியான முறையில் பயன்படுத்தி, மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயலொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது.

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த 26ஆம் திகதி இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த நிறுவனம் நீண்டகாலமாக இவ்வாறான பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்தமை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கண்டறியப்பட்டுள்ளது.

மாவனல்லை - ஹிங்குல பகுதியில் இயங்கி வந்த நிறுவனமொன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயர் மற்றும் அரச இலச்சினை என்பவற்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி, போலித் தயாரிப்புகளை உண்மையான கூட்டுத்தாபனத் தயாரிப்புகள் என நுகர்வோரை ஏமாற்றி விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தசம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/242266

நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

4 days 7 hours ago

நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Published By: Digital Desk 3

30 Mar, 2026 | 10:55 AM

image

நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் வெப்ப வாதம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேன்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 02ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும்.

இதன் காரணமாக நாளுக்கான சராசரி வெப்பநிலை 38- 42 பாகை செல்சியஸ் ஆக நிலவும். பகல் பொழுதில் அளவிடப்படும் நாளின் அதிகூடிய வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக மனித உடல் 40 பாகை செல்சியஸ் இனை விட அதிக வெப்பநிலையை தாங்காது. இது பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும்.

40 பாகை செல்சியஸ் என்பது வெப்ப வாதத்தை ஏற்படுத்தும் வெப்பநிலையாகும். ஆனால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக இந்த அதிக வெப்பநிலை வெப்ப உணர்திறன் உள்ளவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களும் அதிக வெப்பநிலையினால் அதிக நீரிழப்பு உள்ளவர்களும் இந்த அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

இக் காலத்தில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுப் போட்டிகள் உட்பட்ட சகல செயற்பாடுகளையும் நிறுத்துவது சிறந்தது.

அதிக வெப்பநிலை நிலவும் இந்த நாட்களில் வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதன் நிலவும் என்பதனால் இந்த அதிக ஈரப்பதனும் ஆபத்தை உருவாக்கும்

அதிக வெப்பநிலை நிலவவிருப்பதனால் அதிக ஆவியாக்கமும் ஆவியுயிர்ப்பும் நிகழும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, வட மத்திய வட மேல் மாகாணங்களில் அதிக அளவில் ஆவியாக்கம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக ஆவியுயிர்ப்பினால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதனால் இந்த நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் பயிர்களுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேற்கொள்வது சிறந்தது.

அதேவேளை வெப்பநிலை வெப்பச் சலன நிகழ்வை உருவாக்கும் என்பதனால் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் சில இடங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த வெப்பச் சலன மழை இடி மின்னலோடு இணைந்த மழை என்பதனால் இடிமின்னல் நிகழ்வுகள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/242286

வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

4 days 17 hours ago

வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

29 Mar, 2026 | 09:58 PM

image

வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

வலுசக்தி வளங்களை மிகவும் அவதானத்துடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டின் வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள், அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய "எல்-நினோ" வானிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

அரச வளங்களை மிகவும் சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுவதுடன், தேசிய வலுசக்திப் பாதுகாப்பிற்காகப் பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

இதற்கமைய, இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka திட்டத்தின் ஒரு அங்கமாக, "இலங்கையைக் காப்போம்  - ஒன்றிணைவோம் - ஒளியேற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது.

இதற்காக அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான அதிக பயன்பாட்டு நேரத்தில் (Peak Hours) மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் அல்லது 

அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்வதற்கு மக்களை ஊக்குவித்தல் ‘’இலங்கையைக் காப்போம் ‘’ திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை. எனினும், நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர்மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரைப் பயன்படுத்துவதிலும் மிகுந்த சிக்கனம் தேவை என்பதை இது வலியுறுத்துகிறது.

வலுசக்திப் பயன்பாடு குறித்து மக்களிடையே ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தானாக முன்வந்து ஒத்துழைக்கச் செய்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

https://www.virakesari.lk/article/242258

நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்

4 days 17 hours ago

நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்

29 மார்ச் 2026 03:06 PM

நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்

நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு,  சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியவேளை பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

https://jaffnazone.com/news/55916

ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை!

4 days 21 hours ago

ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை!

Published By: Digital Desk 3

29 Mar, 2026 | 02:32 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் இரவு நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து உறங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் கொள்ளையர்களுக்குச் சாதகமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெப்பத்திலிருந்து தப்பிக்கக் காற்றோட்டத்திற்காக ஜன்னல்களைத் திறந்து வைப்பது இயல்பானதே. ஆனால், அவ்வாறு செய்யும் போது முறையான இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு முன்னர் அனைத்துக் கதவுகளும், வெளிப்பக்க வாயில்களும் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.

வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய வெளிச்சத்தைப் பேணுவது ஊடுருவல்காரர்களைத் தடுக்க உதவும்.

உங்கள் வீட்டின் அருகாமையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள்.

https://www.virakesari.lk/article/242227

அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு

4 days 21 hours ago

அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு

29 Mar, 2026 | 01:06 PM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

மத்திய கிழக்கின் இறையாண்மை கொண்ட நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், உலக மேலாதிக்கச் சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் நாட்டை ஆக்கிரமித்து, அங்கு தமக்குச் சாதகமான ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவுவதே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நோக்கமாகும். 

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தக் கொடிய போர், தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்காவும், தனது விரிவாக்கக் கனவை நனவாக்க இஸ்ரேலும் இணைந்து இந்த அநீதியான போரை முன்னெடுத்து வருகின்றன.

அமெரிக்கா உலகின் முதல் நிலை வல்லரசு என்றும், இஸ்ரேல் அசைக்க முடியாத பலம் கொண்ட நாடு என்றும் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள், ஈரானிய மக்களின் வீரமிக்க எதிர்ப்பினால் இன்று உடைந்து நொறுங்கி வருகின்றன. 'மக்களே உலக வரலாற்றின் உந்துசக்தி' என்பதை ஈரானிய மக்கள் இன்று உலகுக்கு நிரூ

பித்துக் காட்டியுள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் ஈரானிய மக்களுக்கும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எமது கட்சியும் இலங்கை மக்களும் தமது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றனர்.

ஏகாதிபத்தியம் என்பது போர் மற்றும் இரத்தத்தால் ஆனது என்பதை நடப்பு நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போரின் விளைவாக இலங்கை உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. 

எரிபொருள் தட்டுப்பாடு, அநியாயமான விலை ஏற்றம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. பசி, பட்டினி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை உலக மக்களுக்குப் பரிசாக அளிக்கும் முதலாளித்துவ சக்திகள், மக்களின் வளங்களைச் சுரண்டி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்வதிலேயே குறியாக உள்ளனர்.

உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலையும் முறியடிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். எனவே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என எமது கட்சி கேட்டுக்கொள்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/242217

மோடிக்கு நன்றி கூறிய அநுர

4 days 21 hours ago

மோடிக்கு நன்றி கூறிய அநுர

Mar 29, 2026 - 03:41 PM

மோடிக்கு நன்றி கூறிய அநுர

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். 

இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. 

இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmnblnbxc000n356p0byh5vr2

மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை

4 days 21 hours ago

மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை

29 Mar, 2026 | 01:07 PM

image

(இராஜதுரை ஹஷான்)

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும். பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயற்குழுவில் முன்மொழிந்தனர்.

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியது.

மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் மாகாண சபைகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என்றும், பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக்கும் ஒரு தேர்தல் முறையை உருவாக்குவத தொடர்பில் பரந்த, ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

அதன்படி, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான சட்ட ரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக சட்டமாஅதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.இதற்கமைய சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/242218

5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது

4 days 22 hours ago

5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது

29 Mar, 2026 | 11:34 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது.

ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் அணுமின் நிலையம் குறித்து பேசப்பட்டதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வினாவிய போது, இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடும் எனத் தெரிவித்தார்.

எனினும், வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய அமைச்சர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வார்.

இருப்பினும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ள சூழலில், ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கைக்குப் பாரிய இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. முப்பது நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்தால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது சர்வதேச ரீதியில் இலங்கையைப் பாதிக்கலாம்.

இதற்கிடையில், அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் உறுதிப்படுத்தியது.

அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த சர்வதேச அணுசக்தி நிறுவனம், குறிப்பாக உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கி, 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. ஆனால் ரஷ;ய தரப்பு இத்திட்டம் குறித்து கோரிக்கையை முன்வைத்த போது தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242202

இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை?

5 days 5 hours ago

இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை?

ஞாயிறு, 29 மார்ச் 2026 05:22 AM

இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை?

இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல காரணிகள் ஒன்றாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான நீர்மின் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

ஒரு அலகு டீசல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசாங்கத்திற்கு சுமார் 90 ரூபா செலவாகிறது. மாலை நேர உச்சப்பயன்பாட்டு நேரத்தில் நிலவும் 150 மெகாவாட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினசரி 36 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன.

நுரைச்சோலை மின்நிலையத்தில் நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன.

நாடு தழுவிய ரீதியில் பாரிய மின் முறிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகிய கால சுழற்சி முறையிலான மின்வெட்டுக்களே ஒரே தீர்வு என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை இந்த மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் இது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை. இது ஒரு இறுதி முயற்சியாகவே எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பகல் நேரங்களில் 21 வீதம் சூரிய சக்தி, 14 வீதம் நீர்மின்மற்றும் 26 வீதம் அனல் மின் என மின்சாரம் பெறப்படுகிறது. இருப்பினும், இலங்கையிடம் போதிய மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் 1,500 மெகாவாட் சூரிய சக்தியைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் இரவு வேளையில் நீர்மின்சாரத்தின் தேவை 42 சதவீதமாக உயர்கிறது.

2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஈடு செய்ய இலங்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுவரை, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

https://jaffnazone.com/news/55910

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்

5 days 6 hours ago

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம்

29 Mar, 2026 | 01:08 PM

(நா.தனுஜா)

thumb_large_13.jpg

இரு கட்சிகளினதும் சார்பில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்குமென இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிலிருந்து அறுவரும் என மொத்தமாக 9 பேரடங்கிய இணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைக்குரிய பொதுவான விடயங்கள் தொடர்பில் ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயலாற்றும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தொடர் சந்திப்புக்களை நடாத்திவருகின்றன.

அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று சனிக்கிழமை மு.ப 10.00 - பி.ப 12.30 மணி வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரட்ணலிங்கம், ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், வேந்தன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு இணைக்குழுவை நியமிப்பதற்கு ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் துரைராஜசிங்கம் ஆகிய மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், வேந்தன், சந்திரகுமார் மற்றும் இரட்ணலிங்கம் ஆகிய அறுவரும் என மொத்தமாக ஒன்பது பேர் அங்கம் வகிக்கும் இக்குழுவுக்கு தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படுவர்.

அதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதுடன், அதில் இரு கட்சிகளும் ஒருமித்துச் செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் நடாத்தப்படவேண்டிய மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து தாமதப்படுத்தி, 'பிரஜாசக்தி' எனும் முறையற்ற செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துவருவது பற்றியும், இத்தகைய பின்னணியில் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும் நாட்டின் சமகால அரசியல் மற்றும் பூகோள அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது.

https://www.virakesari.lk/article/242220

யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம்

5 days 6 hours ago

யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம்

adminMarch 29, 2026

3-5-3.jpeg?fit=1170%2C788&ssl=1

சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில்  கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன.

அவையாவன,

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், இரவு நேரங்களில் மணல் கொண்டு செல்வதற்கு முற்றாகத் தடை விதிப்பதற்கும், பகல் நேரங்களில் மாத்திரம் மணல் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.  அத்துடன் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு வருவதற்கான அனுமதியை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய பொறிமுறையூடாக நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், காவல்துறையினரும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளும் இணைந்து விசேட வீதிச்சோதனைகளை மேற்கொள்வதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்று மணலை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது.

குளத்து மணலைக் கழுவி உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விநியோகிப்பதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு மணலைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  இது மணல் மாபியாக்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், வடக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களில் செயற்பாட்டு நிலையிலுள்ளவை தொடர்பான விவரங்களைப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் வழங்கவேண்டும் என்றும், எதிர்காலத்தில் காவல்துறையினர், மாவட்டச் செயலாளர்கள், ஆளுநர் செயலகம் இணைந்த குழுவில் அதனை இற்றைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 இதன் ஊடாக மணல் அகழப்படும் இடங்கள்  காவல்துறையினருக்குத் தெரியவருவதுடன், அகழப்படும் மணல் கொண்டு செல்லும் பாதைகளை அறியமுடிவதன் மூலம் ஏனைய மார்க்கங்களில் செல்லும் மணல் வாகனங்களைப் பிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.  மேலும், மணல் விநியோக வாகனத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும்போது எவ்வளவு மணி நேரத்துள் அதனை விநியோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

கனரக வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.  குறிப்பாகப் பாடசாலை நேரங்களில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகத் தண்டப்பணங்களை விதிப்பதை நடைமுறைப்படுத்தவும் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

எதிர்காலத்தில் கனியவளங்கள் தேவைப்படுபவர்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிப்பதற்கும், அதன் ஊடாகத் தேவைப்படும் மணலின் அளவு கணிக்கப்பட்டு ஒரு நாளில் எவ்வளவு மணல் விநியோகம், எந்த மார்க்கம் ஊடாக நடைபெறும் என்ற விவரங்கள் துல்லியப்படுத்தப்படுவதன் ஊடாக மணல் மாபியாக்களைக் கட்டுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண மூத்த பிரதிக்  காவல்துறை மா அதிபர் புத்திக சிறிவர்தன, யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிக் காவல்துறை  மா அதிபர் மாறப்பன, யாழ். பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஜெயமஹா, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடபிராந்திய முகாமையாளர் டி.மயூரன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் நேரடியாகப் பங்கேற்றனர்.  மேலும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களின் பிரதி காவல்துறைமா அதிபர்கள் நிகழ்நிலை காணொளி ஊடாக கலந்து கொண்டிருந்தனர்.

3-2-3.jpeg?resize=800%2C572&ssl=13-3-3.jpeg?resize=800%2C483&ssl=1

https://globaltamilnews.net/2026/231208/

'நெடுந்தாரகை' படகுச் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

5 days 6 hours ago

'நெடுந்தாரகை' படகுச் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

Mar 28, 2026 - 11:09 PM

'நெடுந்தாரகை' படகுச் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள 'நெடுந்தாரகை' படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

 

இதற்கமைய, இன்றைய தினம் 'நெடுந்தாரகை' படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் குறித்த படகு நாளை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது.

 

மேலும், 'நெடுந்தாரகை' படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmnalnz2r0001356polzyrie7

கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டாம் - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை

5 days 6 hours ago

கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை

29 Mar, 2026 | 09:27 AM

image

வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள், சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டாம். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை கூட காவு வாங்கியுள்ளனர்.

இது ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்ச கதையாக பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

மணல் விநியோகத்தை ஒழுங்கு படுத்தி அனுமதி பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக ஒரு கியூப் மண் 7500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர் மண் 23 ஆயிரத்திற்கு பெற முடியும். யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால், சுமார் 55 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரத்திற்கும் மண்ணை விநியோகிக்க முடியும். 

சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர் மண்ணை ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். 

அவ்வாறான மண் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள் சில பொலிஸார் உள்ளனர் என்பதும் எமக்கும் தெரியும் கடந்த கால அரசாங்கங்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் விளையாட்டு கட்டலாம் என நினைக்க வேண்டாம் அவர்களுக்கு எதிராக  கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். 

சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறை செய்தால் 20 இலட்ச ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். 

அத்துடன் பொலிசாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக இருக்காது , மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

மாஃபியாக்களுக்கு மக்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க பயப்படுகிறார்கள். அதனால் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க மிக விரைவில் தொலைபேசி இலக்கங்களை அறிவிப்போம். அதனூடாக அவர்கள் தகவல்களை தெரியப்படுத்த முடியும். 

இவ்வாறான செயற்பாடுகளை தனியே பொலிஸாரோ , அரசாங்கமோ கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/242184

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்

5 days 6 hours ago

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்

Mar 29, 2026 - 10:51 AM

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை  அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது.


தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய 3 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு குறித்த வழக்கினூடாக இந்த டிஜிட்டல் முறைமை பரிசீலிக்கப்பட்டது.


திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கமான காகிதக் கோப்புகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் கோப்புகளை நீதியரசர்கள் கணினி மூலம் பரிசீலித்தனர். பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற பதிவாளர் மனோதி ஹேவாவசம் தெளிவுபடுத்தியதுடன், அதன் மீது டிஜிட்டல் கையொப்பமிட்டு மின்-முறைமையில் பதிவேற்றியதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.


வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026 மே 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் "E-court" திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உயர் நீதிமன்றத்தாலேயே இந்தச் செயலி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.


இந்த  E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmnbb5ai4000d356p2oaomw8t

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது

5 days 7 hours ago

MediaFile-20.jpg?resize=650%2C365&ssl=1

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது.

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

https://athavannews.com/2026/1470306

கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை

5 days 7 hours ago

2-1-1.jpg?resize=750%2C375&ssl=1

கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை.

வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன.

இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

கனிய வள திருட்டுக்கள் ,  சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம்.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1470309

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!

5 days 22 hours ago

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!

Mar 28, 2026 - 08:40 PM

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு, நேற்றைய தினம் (27) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சாட்சியமளித்தார்.


கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதைப்பொருட்களாக மருந்தகங்கள் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். இந்தக் கூற்றுத் தொடர்பாகவே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இவ்வழக்கின் ஆரம்ப விசாரணைகளின் போது, குறித்த காணொளி தன்னாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அந்தத் தகவல் தன்னாலேயே கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார். மேலும், அக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றில் நிரூபிப்பதாகத் தமது தரப்பு நியாயத்திலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த வைத்தியர் கேதீஸ்வரன், தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகள் மருத்துவச் சீட்டு இன்றி வழங்கப்படுவது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.


மருந்தகங்கள், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் சான்றாதாரங்களுடன் விளக்கமளித்தார்.


விசாரணையின் போது அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட காணொளி நீதிமன்றில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. இதன்போது  அர்ச்சுனாவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். சாட்சியமளித்த பணிப்பாளர் கேதீஸ்வரன், தமது 35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் எவ்விதக் களங்கமும் ஏற்படாத நிலையில், திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டானது தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக இந்தக் காணொளி வெளியானதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து பலர் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார்.


அடுத்த அமர்வின் போது பணிப்பாளர் கேதீஸ்வரன், அர்ச்சுனாவின் சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். பணிப்பாளர் கேதீஸ்வரன் சார்பில் சட்டத்தரணிகளான க. குமணன், த. தினேஷ், சி. அபினாஸ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகியிருந்தார். அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி சி. கனகசிங்கம் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmnags05d000v356pylfilq5q

453 வைத்திய பட்டதாரிகளுக்கு நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்!

5 days 22 hours ago

453 வைத்திய பட்டதாரிகளுக்கு நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்!

28 Mar, 2026 | 05:45 PM

image

தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 வைத்திய பட்டதாரிகளுக்கு, ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளாக நியமனம் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2025.07.04 ஆம் திகதியுடன் பயிற்சியை முடித்த 453 வைத்திய பட்டதாரிகள் இந்த ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளாக நியமனம் வழங்குவதற்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2026.04.04 நண்பகல் 12.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியாகும்.குறித்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

குறித்த திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரிகள் தொடர்பாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என அந்த அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Capture.PNG

https://www.virakesari.lk/article/242165

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr