ஊர்ப்புதினம்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது: மன்னாரில் ஆலம் கடும் எச்சரிக்கை!

1 month 1 week ago

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது: மன்னாரில் ஆலம் கடும் எச்சரிக்கை!

21 Feb, 2026 | 04:36 PM

image

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சமீபத்தில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்களும் அவர்களது 6 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்டி வரும் நிலையில், ஓரிரு படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது எமது நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு சிறிய தீர்வாகவே அமைகிறது. இது குறித்து அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே தமிழக மீனவர்கள் இக்குற்றச்செயலைச் செய்கிறார்கள். ஒரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மீறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி கூட அவர்களுக்கு இல்லை. வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எமது கடல் வளங்களைச் சூறையாடி, மீன்பிடி உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்துகிறார்கள்.

குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் படகுகளை விடுவிக்கக் கோரியும் மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் தமிழகத்தில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்துவது வேடிக்கையானது. தவறு செய்துவிட்டு அதை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. இந்திய மத்திய மற்றும் தமிழக அரசுகள் தமது மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்றொழில் அமைச்சர் இந்திய மீனவர் விவகாரத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாக நாங்கள் கருதுகிறோம். வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் அவர் மௌனம் சாதிப்பதை ஏற்க முடியாது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அமைச்சருக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்திய மீனவர்களின் வருகையை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். எமது கடல் பரப்பில் அவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொடர்ச்சியான கைதுகள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இந்த அத்துமீறலைத் தடுக்க முடியும்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/239236

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்!

1 month 1 week ago

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்!

Feb 22, 2026 - 11:47 AM

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22) இப்பொராட்டம் நடைபெற்றது.

அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது, அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும், நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது பொலிஸாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே, உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதும், சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நாளை மறுதினம் (24) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlxct9bf0001356pwu9kcdvd

மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை

1 month 1 week ago

மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை

Feb 22, 2026 - 10:51 AM

மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, வைத்தியசாலைப் பகுதியை அண்டியுள்ள இரண்டு உணவகங்கள் மீதும், மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதிப் பகுதிகளில் அமைந்துள்ள இரு உணவகங்கள் மீதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமை, கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை, அதிக அளவு இலையான்கள் காணப்பட்டமை, கையுறை பயன்படுத்தாமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmlxas09q0001356pwlqy3vwn

புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

1 month 1 week ago

புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

Feb 21, 2026 - 08:51 PM

புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlwfhu1d000r356pfkjmlmwo

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு

1 month 1 week ago

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு

Feb 21, 2026 - 12:52 PM

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானத்தை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு 13.56 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்பார்த்து, கடந்த 13 ஆம் திகதி இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்காக இலங்கை மின்சார சபையினால் 11.57 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பு முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmlvzraz5000f356pa6dhqryy

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்.!

1 month 1 week ago

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்.!

Vhg பிப்ரவரி 21, 2026

AVvXsEiVyPq4jagdGlBqUuOpfvoqE5MFBy5bK3k98nJH27WaX-GTi22fi04Pin6lApANvQ0NEE_TFq32RCQcGhzMrwYjquM_UOEaOk9Ky3rooeSWM3UjgKz2nYZYuBQTvbxaUeV0FtMyo9m16YPvePeOFYJUAWNldCC3jkTCWz1tJXdmklh08_PoTQsrnrJkojfd

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம்  மட்டக்களப்பு மக்களுக்கு பெரும்  துயரத்தை ஏறடுத்தியுள்ளது.

மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20.02.2026) உயிரிழந்துள்ளார் .

மட்டக்களப்பு வைத்தியசாலையில் திறமையான ஒரு மருத்துவர்

அம்பாறை காரதீவை பிறப்பிடமாக கொண்ட மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்துள்ள நிலையில்  மட்டக்களப்பு  வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவர் ஆவார்.

இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இளம் மருத்துவரின்  திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்  பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.battinatham.com/2026/02/blog-post_115.html

"மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ!

1 month 1 week ago

"மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ!

Published By: Digital Desk 1

21 Feb, 2026 | 04:19 PM

image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். ஒருபுறம் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு சுட உத்தரவிட்டதாகக் கூறும் பொன்சேகா, மறுபுறம் அவர்கள் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறார்.

நாம் யுத்தம் செய்தது தமிழ் மக்களுடன் அல்ல, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுடனேயே ஆகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஒரே நோக்கம் குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆகும். புலம்பெயர் அமைப்புகளும் ஜே.வி.பி அரசாங்கமும் கூறுவது போல மஹிந்த ராஜபக்ஷ இரத்த தாகம் கொண்டவர் அல்ல என்பதை பொன்சேகா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நாட்டை அபிவிருத்தி செய்த, சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர்.

அதேபோல், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மகா சங்கத்தினரை 'ராஜபக்ஷ நிக்காய' (ராஜபக்ஷ தரப்பு) என விமர்சிப்பது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. மதத் தலைவர்களை அவமதிப்பது அவர்களின் கலாசாரமாக மாறியுள்ளது. பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதன் மூலமே ஏனைய மதங்களையும் பாதுகாக்க முடியும். மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது இனவாதம் அல்ல, ஒரு பௌத்தனாக எனது மதத்தை பாதுகாப்பதே எனது கடமையாகும்" என அவர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/239238

யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

1 month 1 week ago

யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

21 February 2026

1771668227_2935603_hirunews.jpg

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் எங்கே ? அரசே பதில் சொல் , ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு 19 ஆண்டுகள் , நீதி எங்கே ? என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வாறும் கோஷங்களை எழுப்பியுமே அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர்கள், வலிந்து காணானல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவரும், சிவகுரு ஆதீன குரு முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் குரலற்றவர்களின் குரல், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, பருத்தித்துறை வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://hirunews.lk/tm/448005/attention-grabbing-demonstration-in-jaffna

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ?

1 month 1 week ago

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ?

adminFebruary 20, 2026

2-3.jpg?fit=1170%2C876&ssl=1

ஊர்காவற்றுறை துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பகுதி ஆகிவற்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

அதன் போது, காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைப்பது, துறைமுக அபிவிருத்தி, ஊர்காவற்றுறையில் இருந்து காரைநகர் கடற்கோட்டைக்கு பயணிகள் செல்வதற்கான வழிவகைகள், துறைமுகத்திற்கு அருகில் பாவிக்கப்படாது காணப்படும் காணிகளை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் எதிர்கால சுற்றுலா வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

  இந்தப் பாலத்தை அமைப்பதற்கு ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி கணிசமான நிதி தேவைப்படும். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அல்லது நட்பு நாடுகளின் நீண்டகால சலுகைக்கடன் உதவியைப் பெறுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சாத்தியக்கூறு ஆய்வுகளுக்கான (Feasibility Study) நிதி ஒதுக்கப்படவுள்ளது.

கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்குத் தேவையான நிதி, துறைமுக அதிகார சபையின் (SLPA) சொந்த நிதி மற்றும் அரசாங்கத்தின் “நீலப் பொருளாதார” (Blue Economy) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படவுள்ளது.

அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் அறிவிப்பின்படி, பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். சர்வதேச தரத்திலான கேள்வி மனுக்கள் கோரப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்ததாரர்கள் அடையாளம் காணப்படுவர்.பாலத்திற்கான அடிக்கல் நடும் விழா மற்றும் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் கடற்கோட்டைப் பகுதிகளை ஒரு விசேட சுற்றுலா வலயங்களாக பிரகடனப்படுத்த சுற்றுலா அமைச்சுடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ளது.சுற்றுலாவைக் கருத்திற்கொண்டு காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை இடையே நவீன மின்சார படகுச் சேவைகளை (Electric Ferries) அறிமுகப்படுத்தவும் அமைச்சர்கள் குழு ஆர்வம் காட்டியுள்ளது.

2-1-1.jpg?resize=800%2C600&ssl=12-2.jpg?resize=800%2C600&ssl=1


https://globaltamilnews.net/2026/229447/

பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.

1 month 1 week ago

பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.

adminFebruary 21, 2026

637477619_3665108936962587_2343533896809

 

மன்னார் மாவட்ட குடும்ப நல   உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட  காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட தோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. கடமை நேரத்தில் குறித்த குடும்ப நல உத்தியோகத்தர் வழிமறிக்கப்பட்டு, உடமைகள் அபகரிக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கையில் கருப்பு பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று சனிக்கிழமை (21) காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குடும்ப நல  உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம் வரை பேரணியாக சென்றனர்.அங்கிருந்த உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்து மகஜர் ஒன்றை கையளித்தனர். தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்,பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில்  காவல்துறை  பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்,மன்னார் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர்

மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தனியாக நடமாடும் இடங்களை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களால் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை இவ்வாறான 4 சம்பவங்கள்   பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் வீதிக்கு இறங்கி நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ள தோடு, தமக்கான பாதுகாப்பு இல்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

634303499_699427533160604_62624358111979637477619_3665108936962587_2343533896809DSC_0159.jpg?resize=800%2C533&ssl=1DSC_0205.jpg?resize=800%2C533&ssl=1DSC_0217.jpg?resize=800%2C533&ssl=1DSC_0229.jpg?resize=800%2C533&ssl=1

https://globaltamilnews.net/2026/229476/

அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பலான “DECISIVE” இலங்கை கடற்படையில் இணைகிறது - வரலாற்றுப் பயணம் ஆரம்பம்

1 month 1 week ago

அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பலான “DECISIVE” இலங்கை கடற்படையில் இணைகிறது - வரலாற்றுப் பயணம் ஆரம்பம்

Published By: Priyatharshan

21 Feb, 2026 | 11:22 AM

image

( வீ.பிரியதர்சன் )

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான Cutter DECISIVE என்ற கப்பல், மேரிலாந்து மாநிலத்தின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு இலங்கை கடற்படையில் இணைவதற்கான வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தப் பயணம், ஒரு கப்பலை தாயகத்துக்கு கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை மேற்கொள்ளும் அதிக நீளமான கடல் பயணம் என்பதுடன், பனாமா கால்வாயை முதன்முறையாக கடக்கும் இலங்கை கடற்படை கப்பல் பயணம் என்ற வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்கிறது.

இலங்கை கடற்படையில் சேவையில் இணைந்த பின்னர், “DECISIVE” என்ற கப்பல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும் தேடுதல் மற்றும் மீட்பு (Search & Rescue) நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதைகளை பாதுகாக்கவும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அமெரிக்கத் தூதரகம் தெரிவிக்கையில், “ இந்த கப்பல் மாற்றம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பகிரப்பட்ட பொறுப்பை வலுப்படுத்தும் முயற்சியாக அமைகிறது. அமெரிக்காவின் Excess Defense Articles (EDA) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்களை இயக்குவதில், தற்போது உலகிலேயே முன்னணியில் இருப்பது இலங்கையாகும்.

இத்துடன், இலங்கை கடற்படையில் தற்போது நான்கு முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்கள் சேவையில் உள்ளன. இது அமெரிக்கா – இலங்கை இடையேயான ஆழமான நம்பிக்கை, இணக்கத்தன்மை மற்றும் வளர்ந்து வரும் கடற்படை கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.

இதேவேளை, கப்பலை இலங்கைக்கு கொண்டு வரத் தயாரான இலங்கை கடற்படை பணியாளர்களுடன் அமெரிக்காவில் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறோம் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. “DECISIVE” என்ற கப்பலை பொறுப்பேற்றுக் கொள்ளும் இலங்கை கடற்படை குழுவிற்கு சிறப்பான கடற்பயணம் அமைய வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கப்பல் இணைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

HBqDb4DbgAE4BW4.jpg

HBqDb4JboAAWrJJ.jpg

HBqDb4MaYAA9Z4p.jpg

https://www.virakesari.lk/article/239216

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றல் ; அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை தீவிரம்

1 month 1 week ago

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோரிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றல் ; அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை தீவிரம்

20 Feb, 2026 | 03:53 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உட்பட ஏனையவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கெஹல்பத்தரே பத்மேவுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சகல விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2024.09.21 ஆம் திகதி முதல் இன்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பெருந்தொகையான சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய முடக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 12 புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாட்டில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தரே பத்மே உட்பட ஏனையவர்கள் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவர்களிடமிருந்து 30 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நேரடியான தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சகல விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/239168

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்

1 month 1 week ago

20260220_1300382.jpg?resize=750%2C375&ss

மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்.

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த பிரேரணையை தவிசாளர் கொண்டுவந்த நிலையில் , தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தவிசாளர் தனது பிரேரணையில் கருத்து தெரிவிக்கையில்,

மரணச் சடங்குகளின் போது வீதிகளில் வெடி வெடிப்பதால் வீதிகள் அசுத்தமடைகின்றன. அவற்றை பிரதேச சபையே சுத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே அந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் குறித்த வெடிகளை வெடிப்பவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபா கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

அவர்கள் எமது பிரதேச சபைக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தி அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே வெடிகளை வெடிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து சபையில் நீண்ட விவாதம், கருத்து முரண்பாடுகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், வெடி வெடிப்பது என்பது எமது மரபு. எமது மரபுகளுடனும், மக்களின் உணர்வுகளுடனும் விளையாடாதீர்கள். இந்த விடயத்திற்கு நான் எதிர்ப்பு என்று கூறியதுடன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன்பின்னர் குறித்த பிரேரணையானது சபையில் நிறைவேற்றப்பட்டது.

20260220_1300381.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2026/1465726

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள் ; விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்

1 month 1 week ago

வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள் ; விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்

20 Feb, 2026 | 02:45 PM

image

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நேற்றைய தினம் (19) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வெத்தன்சிங்கன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

f51730c9-8c27-44c3-a0e7-02b22db1a949.jpg

எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படவுள்ள துரித வளர்ச்சிக்குத் தேவையான மனித வளத்தைத் தயார் செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பாடசாலை மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான தெளிவை வழங்குவதே பிரதான நோக்கமாகும். 

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் விமானப் போக்குவரத்து சங்கங்களை நிறுவுதல், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், விமான நிலையச் செயற்பாடுகள் குறித்த களப்பயணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

568b8647-5be4-406e-a0c9-e16531fdc5e3.jpg

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக, சமூகத்தில் பலருக்கு விமானப் பொறியியலாளராகவோ அல்லது விமானியாகவோ வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை குறித்து போதிய தெளிவு இல்லை எனச் சுட்டிக்காட்டினார். 

தற்போது தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை விமானப் பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதிலும், அத்துறையில் போதிய ஆட்கள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, எமது இளைஞர் சமூகத்தை இலங்கைக்கு மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இத்துறை சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய தகுதியுள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

88235c07-7c84-4080-9752-d659a1b3f149.jpg

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரவுகளின்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறை மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான தகுதியுள்ள நபர்களை உருவாக்க விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார். 

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன உரையாற்றுகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளால் சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக புதிய விமான நிறுவனங்கள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், வட மாகாணத்தில் இத்துறையை அபிவிருத்தி செய்ய முன்வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்ததுடன், வட மாகாணத்தில் உள்ள வளங்களை உச்சகட்டமாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
https://www.virakesari.lk/article/239158

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

1 month 1 week ago

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

Feb 20, 2026 - 05:19 PM

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் பல்வேறு கட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த அறிக்கையை அமைச்சின் இணையதளத்தில் வெளியிட்டு, பொது அறிவித்தல் மூலம் அந்த அறிக்கை தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஒரு மாத காலம் வழங்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், உயர்கல்வித் துறை தொடர்பான உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்னவும், பாடசாலைகளில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பிரதி அமைச்சர் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன ஆகியோரும் முன்வைத்தனர்.

மேலும், பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ முன்வைத்தார்.

அத்துடன், தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளல் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmlutuk3a0007356pbcwwmasu

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

1 month 1 week ago

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி 

Published By: Vishnu

20 Feb, 2026 | 08:54 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரது சமூக வலைப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த நெரிசல் கொண்ட சுகாதார நிலையமாகும். இவ்வளவு பெரும் மக்கள் வருகையுள்ள சூழலில் வைத்தியசாலையை சுத்தமாகவும் சுகாதாரத் தரநிலைகளுக்கு இணங்கவும் பேணுவது எங்களின் முதன்மை பொறுப்பாகும்.

இத்தகைய நோக்கத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தினமும் இரவு பகலாக பணியாற்றி, வார்டுகள், நடைபாதைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மிகுந்த தூய்மையுடன் பராமரித்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு சேவையால் வைத்தியசாலை சுத்தமான சூழலை நிலைநிறுத்தி வருகிறது.

ஆயினும், சிலர் வெற்றிலைப் பயன்படுத்தி எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு முரணானதோடு, நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை முழுவதும் பதியப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் இத்தடை மீறப்படின், சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக அனுப்பப்படுவார்கள் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த வைத்தியசாலை உங்கள் அனைவரின் வைத்தியசாலையாகும். அதனை சுத்தமாகவும் சுகாதாரமான சூழலுடனும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, இத்தகைய செயல்களில் இருந்து முழுமையாக விலகி, சுத்தம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/239187

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!

1 month 1 week ago

harshana-nanayakkara.jpg?resize=750%2C37

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (19) தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,500 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. தற்போது அவை கிட்டத்தட்ட 39,000 பேரை அடைத்து வைக்கின்றன.

இவற்றில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், தண்டனை விதிக்கப்படாத அதிக எண்ணிக்கையிலான தடுப்புக் கைதிகள்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 20,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உட்பட, சுமார் 28,000 கைதிகள் தடுப்புக் காவலில் உள்ளனர்.

இந்த நிலையில், நீதிபதி யசந்த கோடகொடவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படும் முன்மொழியப்பட்ட சட்டம், சந்தேக நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றங்களை அனுமதிக்கும்.

இதனால் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ளும் கைதிகளுக்கான தண்டனைகளை மறுபரிசீலனை செய்ய அல்லது குறைக்க தற்போது எந்த கட்டமைக்கப்பட்ட வழிமுறையும் இல்லை.

நீண்டகால சிறைவாசிகளுக்கு தண்டனை குறைப்பு கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நீதிபதி துரைராஜா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை நீதிமன்றங்கள் சுமார் 1.1 மில்லியன் நிலுவையில் உள்ள வழக்குகளால் நிரம்பியுள்ளது.

தற்போதைய தலைமை நீதிபதியின் கீழ் வழக்குகளை தீர்ப்பதற்கான விகிதம் அதிகரித்துள்ளதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலஞ்ச வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதற்கு மேலதிகமாக ஏழு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

https://athavannews.com/2026/1465609

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் அரசுடைமை

1 month 1 week ago

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் அரசுடைமை

Feb 20, 2026 - 01:37 PM

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் அரசுடைமை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) வெளிப்படுத்தினார். 

பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்தச் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 'கெஹெல்பத்தர பத்மே' உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பல சொத்துக்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார். 

அமைச்சர் பாராளுமன்றில் சமர்ப்பித்த சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு, 

ஹப்புகொட ஆராச்சிகே கங்கானம்கே துமிந்த தில்ருக் 

முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு 23 மில்லியன் ரூபாய். இதில் ஒரு வேன், ஒரு மோட்டார் சைக்கிள், வீடு மற்றும் ரோலர் கேட் 

கந்தையா கலாமோகன், 

சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. 2 மோட்டார் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

திலூம் தாரக பாலசூரிய, 

8 இலட்சம் ரூபாய் முகப்பு மதிப்புக் கொண்ட 15 பேர்ச் காணியுடன் கூடிய இரண்டு மாடி வீடு. 

மொஹமட் ஹரீஷ் மொஹமட் 

2026.01.21 முதல் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன, பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை. மேலதிகமாக 5 வாகனங்கள் அரசுடமை 

மொஹமட் ஷியாம், 

2026.01.21 அன்று சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. கார் ஒன்று அரசுடமை. 

விஜேசூரிய மஹதுருகே உதித இரோஷன் விஜேசிறி, 

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 1 லொறி. 

இந்திக பத்மக்குமார, 

2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கெப் வாகனம் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் வைப்புச் செய்யப்பட்ட வங்கி கணக்கு. 

லஹிரு சம்பத், 

1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு முச்சக்கரவண்டி 

ஹெட்டியாரச்சிகே தோன ஸ்ரீயானி சந்திரலதா, 

6 கோடி ரூபாய் பெறுமதியான 14.7 பேர்ச் காணியும் நான்கு மாடி வீடு. 

கெஹெல்பத்தர பத்மே என்ற மந்தினு பத்மசிறி 

30 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுடன் கூடிய 20 பேர்ச் காணி, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 அறைகளைக் கொண்ட பாதி பூர்த்தியான கட்டிடம். 

தெஹிபாலா என்ற பட்டபெதிகே மத்துமகெ ஷெஹான் சத்சர 

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 பலநாள் மீன்பிடி படகுகள், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான 15.8 பேர்ச் காணி மற்றும் இரண்டு மாடி வீடு. 

ஜயசிங்ககே மதுரங்க சம்பத், 

5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 கெப் வாகனம், 14.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 வேன், 5 வங்கிக் கணக்குகளில் உள்ள 73.03 மில்லியன் ரூபாய், மற்றுமொரு கணக்கில் உள்ள 160,328.88 ரூபாய், 544 அமெரிக்க டொலர் மற்றும் 283 மில்லியன் ரூபாய் பணம். 

அதிகாரி சமந்த பெரேரா,

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 10.10 பேர்ச் காணி, 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 ஏக்கரும் 1.5 பேர்ச் காணி.

https://adaderanatamil.lk/news/cmlulu5wg0006356pisiutrnh

திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்

1 month 1 week ago

திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்

February 20, 2026

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின்  கோரிக்கைக்கு அமைவாக 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது இருப்பினும் குறித்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இவற்றை அகற்றுமாறு குறித்த திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்ததுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விகாராதிபதி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்கள் ஊடாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்டதுடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகளை அகற்றியிருந்தார்கள்.

இதன்பின்னர் 19.11.2025 அன்று குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் நவம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைத்து குறித்த விடயம் சர்ச்சையாகியிருந்ததுடன் குறித்த விடயம் திசைமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

https://www.ilakku.org/trincomalee-illegal-restaurant-set-up-on-the-beach-removed/

யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல்

1 month 1 week ago

யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல்

20 Feb, 2026 | 10:21 AM

image

யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியதாகக் கூறி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) இதில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) வலியுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், குறித்த கட்டுமானப் பகுதி ஒரு தாழ்வான கடலோர சதுப்பு நிலமாக இருப்பதையும், அது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெள்ளக் கட்டுப்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் வளப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பகுதி கண்டல் காடுகள் (Mangroves), உவர் சதுப்பு நிலங்கள், கடற்புல் படுக்கைகள் மற்றும் இயற்கை நீரோட்ட அமைப்புகளை கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. இவை கடல் மட்ட உயர்வு, சூறாவளி அலைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு எதிரான இயற்கை அரண்களாகச் செயல்படுகின்றன.

பாரிய அளவிலான நில நிரப்புதல், தாவர அழிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், இந்த இயற்கை சூழலமைப்புகள் நிரந்தர சேதமடையக்கூடும் என்றும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுமானத் திட்டம் பல்லுயிர் வாழ்விட இழப்பை ஏற்படுத்தி, கடலோர சூழலியல் சமநிலையை பாதிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தனது கடிதத்தில், 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் Terms of Reference வழங்கப்பட்டிருந்த போதிலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறை முழுமையாக நிறைவேறாமல் சுமார் 60 சதவீத கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது சட்டத்தின் ஆட்சி முறையை பாதிப்பதோடு, சுற்றுச்சூழல் ஆளுமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.

முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மதிப்பீடு மற்றும் பொதுமக்கள் ஆலோசனை இன்றி இத்தகைய பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமைகளை புறக்கணிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எதிர் அனுர சதரசிங்க’ என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையானவை அல்ல என்றும், அவை பொதுமக்களின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புகள் (Public Trust Doctrine) என்றும் நினைவூட்டியுள்ளது.

எனவே, முழுமையான சட்ட இணக்கப்பாடுகள் உறுதி செய்யப்படும் வரை யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வ பதில் வெளியாகும் வரை, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் நிதானமாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239125

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr