ஊர்ப்புதினம்

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்

1 month 1 week ago

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்

19 Feb, 2026 | 12:34 PM

image

(எம்.நியூட்டன்)

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும்  எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும்  என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (19)  ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

https://www.virakesari.lk/article/239038

இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்

1 month 1 week ago

இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்

19 February 2026

1771461213_1793838_hirunews.jpg

இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க Xinhua ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக வரைபடமாக்குவதற்கான விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.

இந்தத் திட்டம் வெறும் அரசாங்கக் கண்காணிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்களின் நேரடிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

அடையாளம் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிக்கவும், அவற்றைச் சிதைவுகளிலிருந்து பாதுகாக்கவும் உள்ளூர் மட்டத்தில் 'சமூகப் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்படவுள்ளன.

நாட்டின் கலாசார மரபுகளை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், இனம் காணப்படாத இந்தத் தொல்பொருள் தளங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

https://hirunews.lk/tm/447403/special-project-to-protect-1000-unrecognized-archaeological-sites-in-sri-lanka

பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்!

1 month 1 week ago

பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று (19) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது.

மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது.

அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும் செலுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmlt1xr7z000r356n5kj7ulbh

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்

1 month 1 week ago

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்

Published By: Vishnu

19 Feb, 2026 | 04:52 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக விஜயம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இவ் கள விஜயத்தில் ஊடகவியலாளர் உள்ளடக்கிய குழு புதன்கிழமை (16) ஹம்பாந்தோட்டை கொன்னொருவ பிரதேசத்திற்கு இந்த கள விஜயத்தை மேற்கொண்டது.

இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட இந்த பிரம்மாண்டத் திட்டம் 2027 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது மின்சாரப் பங்களிப்பை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கத் தயாராகி வருவதாக சூரிய பூங்கா கட்டுமான பணிகளின் ஆலோசனை பொறியாளர் திலங்க பண்டார இந்தத் திட்டம் இலங்கையின் மீள்சுழற்சி எரிசக்தி இலக்குகளை அடைவதில் ஒரு பாரிய பாய்ச்சலாக அமையும் எனத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;

சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம் முழுமையாக ஒரு தனியார் துறை முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவித நிதிச் செலவுகளும் கோரப்படவில்லை. விக்டோரியா மற்றும் மேல் கொத்மலை நீர்மின் நிலையங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மீள்சுழற்சி எரிசக்தி திட்டமாக இது அமையவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முறையே 70 மெகாவாட் மற்றும் 80 மெகாவாட் என முதலீடுகளைப் பகிர்ந்துள்ளன.

இந்த சூரிய சக்தி பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்கு கொண்டு செல்வதற்கான மின் கடத்தல் தொகுதிகளுக்கு சுமார் 16 மில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவை இலங்கை மின்சார சபை ஏற்காமல் முதலீட்டாளர்களே அத்தொகுதிகளை நிர்மாணித்து மின்சார சபையிடம் ஒப்படைக்க உள்ளமை ஒரு விசேட அம்சமாகும். தரைவழி சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் ஆகச்சிறந்த நவீன முறைகள் இங்கு கையாளப்படுகின்றன.

நிலத்தை உச்ச அளவில் பயன்படுத்துவதற்காக, இத்திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டங்களைப் போலன்றி இங்கு சூரிய மின்தகடுகள் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் மின்தகடுகளுக்குக் கீழே உள்ள இடைவெளியில் காளான்கள் போன்ற குறைந்த சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறை நிபுணர்களின் ஆலோசனைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 முதல் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் 400 முதல் 500 பேர் வரை நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட கால அடிப்படையில் மேலும் பலர் உள்வாங்கப்பட உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் சூழல் நட்பு ரீதியான நில மேலாண்மை முறைகளும் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ பகுதியில் அமைந்துள்ள இந்த மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உருவாகும் இத்திட்டம் வறட்சி காலங்களில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுடன் நாட்டின் பகல் நேர மின் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/239013

நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

1 month 1 week ago

நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

Published By: Vishnu

19 Feb, 2026 | 04:21 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாதது. நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இதனை நாங்கள் எதிர்க்கிறோம். ஜனநாயக ரீதியில் மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

உணவுப் பொருட்கள் நிர்ணய விலைக்கு அமைய எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் இந்த விடயத்தில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் மக்கள் நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புகையிரத போக்குவரத்து நிலையில்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக இரவு நேர மன்னார் புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அரசாங்கம் மிக மோசமான விடயத்தை செய்ய முயற்சிக்கின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல், மாகாண சபை நிழல் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மாகாண சபைகளின் அமைச்சுக்களை உருவாக்கி,ஆளுநர் தலைமையில் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கம் போன்று நடத்தும் வகையில் அரசியலமைப்பில் இல்லாத விடயத்தை செய்வதற்கு அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கிறது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாத முறையே. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை நிறுத்தி மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/239007

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க

1 month 1 week ago

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க

18 Feb, 2026 | 07:05 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கல்ல, கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள். இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த போராட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். தித்வா புயல் தாக்கத்துக்கு முன்னர் புகையிரத சேவை நாடளாவிய ரீதியில் 1700 கிலோமீற்றர் தூரத்தை வரையறுத்ததாக காணப்பட்டது.

டித்வா புயல் தாக்கத்துக்கு பின்னர் 400 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக புகையிரத சேவை காணப்பட்டது. ஆனால் தற்போது புகையிரத சேவை 1200 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்பால் சேதமடைந்த புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத பாலங்களை குறுகிய காலத்துக்குள் புனரமைக்க முடிந்தது.

புகையிரத திணைக்கள சேவையாளர்கள் மாத்திரம் புகையிரத பாதைகளை புனரமைக்கவில்லை. முப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் புகையிரத பாதைகளை மறுசீரமைக்க குறைந்தது ஒரு வருடமேனும் சென்றிருக்கும்.

இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கல்ல,

இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள்.இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/238998

டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

1 month 1 week ago

டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

Feb 19, 2026 - 07:24 AM

டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

"AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (19) அந்த மாநாட்டில் உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlst1she000i356n40tfllzd

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

1 month 1 week ago

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

Published By: Vishnu

18 Feb, 2026 | 06:47 PM

image

(வீ.பிரியதர்சன்)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேற்று சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக் உடனிருந்தார்.

கலந்துரையாடலின் போது நல்லிணக்கம், சர்வதேச நீதியியல் (Transnational Justice), மற்றும் தமிழர் சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பிரதிநிதிகளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துவதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிலையான நல்லிணக்கமும், சமூக நீதி நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இருதரப்பினரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp_Image_2026-02-18_at_17.06.07.jp

WhatsApp_Image_2026-02-18_at_17.06.01.jp

WhatsApp_Image_2026-02-18_at_17.06.13.jp

https://www.virakesari.lk/article/238989

மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

1 month 1 week ago

மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

Feb 18, 2026 - 03:43 PM

மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

கணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார்.

தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlrvh2eh0004356n6qsq4di6

மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

1 month 1 week ago

மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

Feb 18, 2026 - 05:39 PM

மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, குறித்த கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், மணிக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இதனால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியின் நகர்வுகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியான அவதானத்தை செலுத்தி வருவதால், இது தொடர்பாக திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmlrzmkx20002356nxrenk1dx

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு அவசர மனிதாபிமான உதவி

1 month 1 week ago

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு அவசர மனிதாபிமான உதவி

18 Feb, 2026 | 03:20 PM

image

CFLI நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் இயலாமையுடன் கூடிய பெண்களுக்கான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் CFLI நிறுவனத்தின் அமுலாக்கத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்களுக்கு தலா 35000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதன் முதல் நிகழ்வு கடந்த வருடம் 28.01.2025 இல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாஞ்சலி டர்சன அருனசாந்த தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.

1. வவுனியா வடக்கு நெடுங்கேணி – 40 இயலாமையுடன் கூடிய பெண்கள்

2. வவுனியா நகர் - 30 இயலாமையுடன் கூடிய பெண்கள்

3. வெண்கலச் செட்டிகுளம் – 30 இயலாமையுடன் கூடிய பெண்கள்

4. வவுனியா தெற்கு – 20 இயலாமையுடன் கூடிய பெண்கள்

இயலாமையுடன் கூடிய 120 பெண்  குடும்பங்கள் பயன் பெற்றனர். 

PXL_20260128_055157820.jpg

PXL_20260128_053740717.MP__1_.jpg

WhatsApp_Image_2026-01-29_at_01.04.51__2

PXL_20260128_053041591__1_.jpg

https://www.virakesari.lk/article/238956

வடமாகாணத்தில் விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து முறைப்பாடு செய்யலாம்; போக்குவரத்து அதிகார சபை

1 month 1 week ago

வடமாகாணத்தில் விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து முறைப்பாடு செய்யலாம் ; போக்குவரத்து அதிகார சபை

18 Feb, 2026 | 12:37 PM

image

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 071 909 0900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய 'மீட்டல் பயிற்சி' வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

தனியார் பேருந்தாகவோ அல்லது அரச பேருந்தாகவோ இருப்பினும், பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயற்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை ஒளிப்படம் அல்லது காணொலியாக எடுத்து 071 909 0900 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும்.

அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/238938

மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

1 month 1 week ago

மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

Feb 18, 2026 - 01:55 PM

மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு நகரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

அத்துடன் தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பின் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுகின்றது.

இதேநேரம், தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடைகளை முன்னெடுத்த விவசாயிகள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான குளமான உன்னிச்சைகுளத்தின் 3 வான் கதவுகள், 2 அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 104.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 52 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமமம் பகுதியில் 63.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 80 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 39.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cmlrrnzbe00062a6eh6hrrlej

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

1 month 1 week ago

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

18 Feb, 2026 | 12:25 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது.

எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை எனும் பெயரில், பாலியல் அத்துமீறல்கள், துஸ்பிரயோகங்கள், சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள், விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.     

https://www.virakesari.lk/article/238939

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

1 month 1 week ago

வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

adminFebruary 17, 2026

636846483_122257079258059693_58070402559

வடக்கு மாகாணத்தில் உள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுக்கென (Management Service Officers) புதிய மற்றும் தனித்துவமான இடமாற்றக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இன்று (பெப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்திய கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இச்சந்திப்பு, மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் பல முக்கியமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்துள்ளது.

தற்போது முகாமைத்துவ அலுவலர்களுக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே நடைமுறையில் உள்ளது. இனிவருங்காலங்களில் அதிசிறப்பு தர (Super Class) முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கெனப் பிரத்தியேகமான கொள்கை ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு உத்தியோகத்தருக்குமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் இனி தெளிவாக வரையறுக்கப்படும். சில திணைக்களங்களில் நிர்வாக உத்தியோகத்தர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகப் பணியாற்றும் அதிகாரிகள் தமது விடுமுறை கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரிக்க அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கவும் ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

636753509_122257079354059693_21410758070636820246_122257079456059693_62482212989 637779612_122257079276059693_15146267823

https://globaltamilnews.net/2026/229226/

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

1 month 1 week ago

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

மன்னார் மூர் வீதியில் அரங்கேறும் கந்துவட்டி அராஜகம்: அதிகாரிகளின் நடவடிக்கை கோரி கதறும் குடும்பம்.

adminFebruary 18, 2026

635119856_2355691541565456_5938791885380

யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் ‘சீட்டு’ (Siddu) முறையில் பணம் கட்டியுள்ளார்.

ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி (Compound Interest) போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர்.

மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும்

ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.

மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் “பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்” என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார்.

தீராத கடன் சுமை

சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் “இன்னும் வட்டி மீதமுள்ளது” எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

சமூகத்தின் குரல்

மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.

“என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?” என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா?

பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2026/229246/

இலங்கை தெற்காசியாவில் முதன்முதலாக சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது

1 month 1 week ago

இலங்கை தெற்காசியாவில் முதன்முதலாக சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது

Published By: Vishnu

18 Feb, 2026 | 05:27 AM

image

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது.

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது.

WhatsApp_Image_2026-02-18_at_05.02.21__1

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்கள் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது.

WhatsApp_Image_2026-02-18_at_05.02.22.jp

இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது.

இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், அவற்றை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதும் இந்த சாசனத்தில் இணைவதன் முதன்மை நோக்கமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர்:

"சிறுவர்களின் நலன் என்பது வெறுமனே ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது, அது ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டார்.

யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மாண்புமிகு தெரேசா ஓ மகோனி, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு.மார்க் அன்ட்ரே பிரான்சே, யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி.எம்மா பிரிகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.தரங்கனி விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/238924

எங்களுக்கு ஆற்றுப்படுத்தல்கள் மட்டும் போதாது; சமத்துவம் எப்போது? – வன்னி எம்.பி. ரவிகரன்

1 month 1 week ago

எங்களுக்கு ஆற்றுப்படுத்தல்கள் மட்டும் போதாது; சமத்துவம் எப்போது? – வன்னி எம்.பி. ரவிகரன்

Published By: Vishnu

18 Feb, 2026 | 04:49 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பில் இந்த அரசாங்கம் அபிவிருத்தி சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் சிலவற்றை வழங்குவதை மறுப்பதற்கில்லை. அதற்காக மாறி வரும் ஒவ்வோர் அரசாங்கமும் ஆற்றுப்படுத்தல்களை மட்டும் வழங்கிக்கொண்டிருந்தால் எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள் எப்போது அடைவது? துறைதோறும் புரையோடிப்போயுள்ள சீரற்ற வளப்பரம்பலால் தொடர்ந்தும் வன்னி மண் வஞ்சிக்கப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாடளாவிய வகையில் வடமாகாணம் புறக்கணிக்கப்படுவதையும் வடமாகாணத்திற்குள் வன்னிப்பெருநிலப்பரப்பு புறக்கணிக்கப்படுவதையும் மீள மீள சுட்டிக்காட்டுவதிலேயே எமது பெருங்காலம் கழிகிறது.வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரச கொள்கையின் அடிப்படையில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் சேவை பிரமாணக்குறிப்பு வலுப்பெறும் திகதி 2011.08.01 வரையான காலப்பகுதியில் பல்வேறு பதவிப்பெயர்களின் கீழ் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு தேசிய சம்பள மற்றும் ஊழியர் தொகை மதிப்பு ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் எம்ஏ-4-2006(ஏ) சம்பள அளவுத்திட்டம் வழங்கப்பட்ட அலுவலர்கள் பின்னர் 2012.02.14ஆம் திகதிய 1745/11 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சேவையில் உள்வாங்கப்பட்டனர். பின்னர் 2012.09.07 ஆம் திகதிய 1774/31ஆம் இலக்க வர்த்தமானி மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பெயர் மாற்றம் பெற்றனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனும் அடையாளத்துடன் பணிபுரியும் இவ்வகுதியினருக்கு முறையான இடமாற்றக் கொள்கை ஏன் இன்றுவரை வகுக்கப்படவில்லை.5,6,7 ஆண்டுகள் கடந்தும் ஒரே சேவை நிலையத்தில் பணியாற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரின் பதில் என்ன?

ஓர் ஊழியர் ஓரே சேவை நிலையத்தில் பத்தாண்டுகள் கடந்தும் சேவையாற்ற உங்கள் நிருவாக ஒழுங்கு இடமளிக்கிறதா? ஆயிரத்துக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தில் மிகையாக இருப்பதை தங்கள் அமைச்சு இன்னமும் இனங்காணவில்லையா? வடமாகாணத்தில் மேற்படியான சமச்சீரற்ற வள ஒதுக்கம் தங்கள் அரசாங்கத்தில் சீராக்கப்படுமா என்பதை பாதிக்கப்படும் வன்னிப்பெருநிலத்தைச் சார்பாக்கும் பாராளுமன்ற அமைச்சரிடம் வினவுகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/238921

இந்தியாவுடன் கனிம வளம் தொடர்பில் எவ்வித ஒப்பந்தமும் இல்லை - அரசாங்கம் அறிவிப்பு

1 month 1 week ago

இந்தியாவுடன் கனிம வளம் தொடர்பில் எவ்வித ஒப்பந்தமும் இல்லை - அரசாங்கம் அறிவிப்பு

Published By: Vishnu

18 Feb, 2026 | 04:23 AM

image

(எம்.மனோசித்ரா)

கனிம வள ஆய்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவினால் எந்தவொரு முன்மொழிவும் எமது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அது குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கனிம வளங்கள் குறித்து தேசிய கனிம வள கொள்கைக்கமையவே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அது 2024ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முன்மொழிவாகும். எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அவ்வாறு எந்தவொரு ஒப்பந்த முன்மொழிவும் முன்வைக்கப்படவுமில்லை. அது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுமில்லை.

இதுபோன்று பல்வேறு பழைய ஒப்பந்த முன்மொழிவுகள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் எமது அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக பால் உற்பத்தி தொடர்பில் இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் எமது அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

நாம் தேசிய கனிம வள கொள்கையொன்றை வகுத்திருக்கின்றோம். அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்துள்ளது. நாம் அதனை பின்பற்றி அதற்கமையவே கனிம வளங்கள் குறித்த தீர்மானங்களை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/238917

வட, கிழக்கில் யுத்தத்தால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வீடமைப்பிற்கான நிதியுதவி 20 இலட்சமாக அதிகரிப்பு - அரசாங்கம்

1 month 1 week ago

வட, கிழக்கில் யுத்தத்தால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வீடமைப்பிற்கான நிதியுதவி 20 இலட்சமாக அதிகரிப்பு - அரசாங்கம்

Published By: Vishnu

18 Feb, 2026 | 04:13 AM

image

(எம்.மனோசித்ரா)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நிலைமைகளால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபா நிதி உதவியை, 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர்,

வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக பெரும்பாலானவர்கள் தமது குடியிருப்புக்களை இழந்தனர். அவ்வாறு குடியிருப்புக்களை இழந்தவர்களுக்காக பல்வேறு வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு முதல் 2025-12-31 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த 277,167 குடும்பங்களைச் சேர்ந்த 919,450 நபர்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதற்கமைய இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி நிலைவரத்தின் படி, அந்த மாகாணங்களில் இன்னும் தமக்குரிய ஒரு வீட்டைக் கொண்டிருக்காத 13,069 இடம்பெயர்ந்த குடும்பங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வீடற்ற இடம்பெயர்ந்த குடும்பங்களில் இரண்டு அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 340 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 9 இலட்சம் ரூபாவும், இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 550 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 15 இலட்சம் ரூபாவும் நிதியுதவியாக வழங்க இதற்கு முன்னர் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த ஜனவரி 2ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற முற்போக்கு ஆய்வுக் கூட்டத்தில், பயனாளிகள் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருப்பதையும், கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர் கூலி அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டன.

அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் குறித்த வீடுகளை அமைக்கும் வகையில், தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருதாது, 550 சதுர அடி வீட்டிற்காக 2026ஆம் ஆண்டு முதல் 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டது.

அதற்கமைய, இத்திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/238915

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr