ஊர்ப்புதினம்

80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா

1 month 1 week ago

80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஹிஸ்புல்லா

17 Feb, 2026 | 07:56 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதியாகும். அதனால் பதிவுக்காக காத்திருக்கும் 80க்கும் அதிகமான அரபுக் கல்லூரிகளின் பதிவை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

2020ஆம் ஆண்டு புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆனால் புத்தசாசன திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற பிரிவெனாக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அறநெறி பாடசாலைகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மிஷனரி பாடசாலைகள் என்பவற்றை பதிவு செய்வதற்கான முறையான அனுமதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதுடன் அது மிகவும் சுமூகமாகவும் இடம் பெற்று வருகின்றது. இலங்கையில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்களை பதிவு செய்வது தற்போதைய நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கல்வி, சமூக மற்றும் நிர்வாக ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுமதி வழங்காத காரணத்தினால் நாடு முழுவதிலுமிருந்து பதிவிற்காக விண்ணப்பித்த சுமார் 80 அரபுக் கல்லூரிகளுக்கும், மதரசாக்களுக்கும் பல ஆண்டுகளாக பதிவு செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை.

மேற்படி பதிவு இடைநிறுத்தத்தின் காரணமாக, குறித்த அரபுக் கல்லூரிகள் மற்றும் மத்ரசாக்கள் இயங்குவதில் அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அரச ரீதியாக அங்கீகாரம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர்கள் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல வருடங்கள் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களது கல்வி முயற்சிக்கு உரிய சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையில் தவிப்பதோடு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகள் இஸ்லாமிய மார்க்க கல்வி, ஒழுக்கப் பயிற்சி மற்றும் சமுக வழிகாட்டுதலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பதிவு இடைநிறுத்தம் காரணமாக இந்த மார்க்கக் கல்வி தொடர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டு, சமூகத்தில் தவறான புரிதல்கள் மற்றும் நம்பிக்கை குறைபாடுகள் உருவாகும் அபாயமும் காணப்படுகிறது. அத்துடன், பதிவு இல்லாத கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுவதால், வங்கி கணக்குகள், நிதி உதவிகள், வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக சட்டம் மற்றும் நடைமுறை ரீதியான குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.

நமது நாடும், முழு உலகமும் வேண்டி நிற்கின்ற நல்லொழுக்கங்களையும் உயரிய பண்புகளையும் கற்றுக் கொடுக்கின்ற இம் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் பதிவை தொடர்ந்தும் இடைநிறுத்தி இருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள பாரிய அநீதி .

எனவே, மேற்படி நிலைமைகளை கருத்திற்கொண்டு, மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வது தொடர்பான நடைமுறையை விரைவாக தெளிவுபடுத்தி, பதிவு செயல்முறையை மீண்டும் ஆரம்பிக்க அல்லது உரிய வழிகாட்டுதல்களை வழங்க தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும்.

அதனால் மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு ஆவண செய்ய முடியுமா?மத்ரசாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளினை பதிவு செய்வதற்கான அனுமதியினை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என கேட்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/238910

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

1 month 1 week ago

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

18 Feb, 2026 | 10:32 AM

image

யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் , கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் 'சீட்டு' முறையில் பணம் கட்டியுள்ளார்.

ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர்.

மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும்

ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.

மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் "பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்" என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார்.

தீராத கடன் சுமை

சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் "இன்னும் வட்டி மீதமுள்ளது" எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

சமூகத்தின் குரல்

மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.

"என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?" என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா?

பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை முன்னெடுக்க முடியும்.

https://www.virakesari.lk/article/238933

ஊழல் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

1 month 1 week ago

ஊழல் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

17 Feb, 2026 | 04:37 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடாக இலங்கை இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது. அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து வருகிறோம். இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

'வளமான நாடு அழகான வாழ்க்கை' கொள்கைத் திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அதில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் பிரதானமாக பொருளாதார ஸ்திரத் தன்மையை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ளோம். அதனுடன் அரசியல் கலாச்சார மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த பதவியில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் சிறப்புரிமைகளும் இருந்தன.

ஊழல் மிக்க அரசியலும், ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் இருந்தனர். ஊழல் மோசடிகளை தடுக்கவே பாராளுமனற் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார். ஆனால் இந்த ஓய்வூதியம் மூலம் எந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது விசாரணைகள் நடக்கின்றன.

எதுவும் இடையில் நிறுத்தப்படாது. சிலரின் வீடுகளில் இராணுவத்தினர் நாய்களை பராமறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தளவுக்கு சிறப்புரிமையை மீறி பயன்படுத்தியுள்ளனர்.

இந்த சிறப்புரிமை வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் நினைத்தால் எதிர்காலத்தில் இதற்காக மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு செயற்படலாம். ஆனால் எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின்படியே நாங்கள் செயற்படுகின்றோம்.

இது தொடர்பில் எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறியவாறு அதனை செயற்படுத்தி வருகின்றோம். ஆனால் எதிர்க்கட்சிக்கு அவசியமென்றால் மக்கள் ஆணையுடன் மீண்டும் அதனை பயன்படுத்த முடியும்.

நாங்கள் ஊழல் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களிடம் செல்லக்கூடிய மக்களுடன் நெருங்கி செயற்படக்கூடிய பிரதிநிதிகளை உருவாக்கி வருகின்றோம்.

ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடே இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது.

அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவருகின்றோம். நாங்கள் இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.

இதேவேளை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஏனைய விடயங்களையும் நிறைவேற்றுவோம். கல்வி மறுசீரமைப்பு, கிராமிய வறுமை நிலைமை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றி வருகின்றோம். குறுகிய காலத்தில் சமூக மாற்றத்திற்காக நாங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/238875

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா இன்னும் இறுதி ஒப்புதலளிக்கவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

1 month 1 week ago

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா (JICA)' இன்னும் இறுதி ஒப்புதலளிக்கவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

Published By: Vishnu

17 Feb, 2026 | 06:31 PM

image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜைகா) இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய திட்டங்களின் வெற்றிகரமான அமுலாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்குப் பின்னரே எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜைகா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எல்.ஆர்.டி. திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ள போதிலும், ஜைகாவிடமிருந்து இன்னும் இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு அமையும் என்று ஜைகா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

நாம் ஜப்பானில் ஜைகா அதிகாரிகளைச் சந்தித்தபோது அனைத்து முன்மொழிவுகளையும் முன்வைத்தோம். எவ்வாறிருப்பினும் ஆரம்ப கட்டமாக தற்போதுள்ள திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்றார்.

இதேவேளை ஜைக்காவின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சை அலகுகளை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் ஆகிய பணிகளை மீண்டும் தொடங்குதல் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய 5 பிரதான வைத்தியசாலைகளில் இதய சிகிச்சை அலகுகளை அமைப்பதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் ஜைக்கா 2018ஆம் ஆண்டில் 7,903 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியது.

இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருவதாலும், ஜப்பானிய அரசாங்கத்துடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாலும், இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஜைக்கா உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பணிகளை பூர்த்தி செய்வதற்காக திட்ட காலப்பகுதியை 2029 டிசம்பர் 31 வரை நீடிப்பதற்கும், நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் மற்றும் உபகரணக் கொள்வனவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/238901

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

1 month 2 weeks ago

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

Feb 17, 2026 - 05:45 PM

பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmlqkfwof001z356ncoy1gyia

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரை புத்தாண்டுக்குள் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை ; தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க இராணுவம் முயற்சி

1 month 2 weeks ago

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரை புத்தாண்டுக்குள் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை ; தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க இராணுவம் முயற்சி

17 Feb, 2026 | 05:46 PM

image

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளமையால், தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்துக்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றியமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில், அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையையடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு, மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபட்டுத் திரும்ப, இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

0__3_.jpeg

குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில், அப்பாதையை நிரந்தர பாதையாக்கும் நோக்குடன் இராணுவத்தினர், பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததையடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளபோதிலும், பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும், பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியேக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில், அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி, தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது, நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவித்து, ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சித்தரை புத்தாண்டு தினத்தன்று ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட ஏதுவாக பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

0__4_.jpeg

0__1_.jpeg

0__2_.jpeg

https://www.virakesari.lk/article/238890

இலங்கை - ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் நிறுவும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

1 month 2 weeks ago

முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் நிறுவும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

Published By: Digital Desk 3

17 Feb, 2026 | 05:03 PM

image

இலங்கை-ஜப்பான் பொருளாதார உறவுகளை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும், முன்மொழியப்பட்ட இலங்கை - ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஜப்பான் உயர்மட்டக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் Matsuo Takehiko, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata , ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் Fumihiko Kobayashi, ஜப்பான் அரசாங்கத்தினதும் அந்நாட்டின் தொழில்துறையையும் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குவர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டெம்பர் மாதத்தில் ஜப்பானுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட இந்நாட்டிற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், இந்த விசேட பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது.

முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் (Export-Industrial Corridor) மூலம், முதன்மையாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட உற்பத்திகளுக்கான முதலீட்டை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், பிராந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இலங்கைக்கு உள்ள அங்கீகாரம் அதிகரிக்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் முதலீடு தொடர்பில் இலங்கை குறித்து ஜப்பான் அரசாங்கம் மற்றும் வர்த்தக சமூகத்தின் ஆர்வம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/238882

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

1 month 2 weeks ago

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

Feb 17, 2026 - 07:13 PM

டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு விஜயத்தை இன்று (17) மேற்கொண்டுள்ளார்.

அனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான மாவதுர பிரதேசத்தில், ஏராளமான வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய ஜோர்ஜியேவா, அவர்களுக்கு தனது கவலையைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் போது, அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளையும், மக்கள் வெளிப்படுத்திய தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வையும் அவர் மேலும் பாராட்டினார்.

இப்போது இங்கு வாழும் சிறு குழந்தைகள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நாளை பெரும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் இளைய தலைமுறையினரை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தாம் நம்புவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளிடம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜீ.எச்.எம். பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmlqnifln0023356ny2r4eci4

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

1 month 2 weeks ago

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

17 Feb, 2026 | 06:28 PM

image

அனர்த்தங்களின்போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் மூலம் பிள்ளைகளின் உயிராபத்து இன்றி வாழ்வதற்கான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

இன்றைய தினம் (17) யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜிடம் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். வாழ்வுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தாலும் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளாலும் பாதுகாக்கப்படும் முதன்மை உரிமையாகும்.

கல்வி நிறுவனங்கள், குறிப்பாக சிறுவர்கள் அதிக நேரம் தங்கும் இடங்களாக இருப்பதால், அவர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்.

அவசர கால வெளியேற்றப் பாதை இல்லாதது அல்லது செயலற்ற நிலையில் இருப்பது, தீ விபத்து, நிலநடுக்கம் அல்லது பிற அனர்த்தங்கள் ஏற்படும் சூழலில் மாணவர்களின் உயிரை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்தும்.

இது பாதுகாப்பு அலட்சியமாக மட்டுமன்றி, மாணவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறும் செயலாகவும் கருதப்படக்கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் உட்பட பாரதூரமான இழப்புக்கள் ஏற்படுதற்கும் அது காரணமாக அமைகிறது.

கடந்த 05.02.2026 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட குளவிக் கொட்டுக்கு இலக்காகி 44 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கட்டடத்தில் காணப்பட்ட ஒரே ஒரு பாதை ஊடாக வெளியேறுவதற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் நெருக்கடி காரணமாக 44 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருந்தது.

இந்த கட்டடத்தில் Emergency Exit காணப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை குறைத்திருக்கலாம். இதேவேளை ஏதோவொரு அனர்த்தம் இவ்வாறான கட்டடங்களில் காணப்படுகின்ற ஒரேயோரு பாதையில் ஏற்பட்டிருப்பின் மாணவர்களின் நிலைமை மிகவும் பாரதூரமானதாக அமைந்திருக்கும்.

எனவே, இந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் Emergency Exit இல்லாத பாடசாலை கட்டடங்களின் பாதுகாப்பு நிலையை உடனடியாக தொழில்நுட்ப ஆய்விற்கு உட்படுத்துதல், தேவையான இடங்களில் அவசர வெளியேற்ற படிக்கட்டு மற்றும் கதவுகள் அமைத்தல், தெளிவான சுட்டிக்காட்டி பலகைகள் மற்றும் அவசர ஒளி வசதி ஏற்படுத்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அவசர வெளியேற்ற முன்னாயத்த பயிற்சி வழங்கல், புதிய கட்டட நிர்மானத்தில் Emergency Exit இல்லாத கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்குவதனை தடை செய்தல், கட்டட வடிவமைப்பில் Emergency Exit கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குமாறு தனது முறைப்பாட்டில் கோரியிருக்கின்றார்.

https://www.virakesari.lk/article/238900

அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

1 month 2 weeks ago

அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

Feb 17, 2026 - 04:15 PM

அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா?

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன்.

அரசாங்கத்திற்கு 65% மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கூட்டுறவு வாக்குகளை கருத்திற் கொள்வதில்லை என்றால் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் காணப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறேன். அதை நேரடியாகவே தெரிவிக்கின்றேன்.

உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது ஊழல் மற்றும் இலஞ்சத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாகும்.

இவர்களினது பதவிக்காலம் முடிந்த பின்பு இவர்களுக்கு ஒருவகையில் சமூக பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதும் இதில் ஒரு அம்சமாக அமைந்து காணப்படுகின்றன.

இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுதியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து அக்கறை காட்டும் அரசாங்கம், 7 இலட்சத்து 50 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் ஊதியங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவற்றதாக காணப்படுகின்றன.

பி.சி. பெரேரா குழுவின் பரிந்துரைப்படி அரச ஊழியர்களுக்கு 60% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதில் ஆசிரியர், அதிபர், ஆலோசகர் சேவைகளுக்கு அது வழங்கப்படாமல் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது.

சுபோதனி குழுவின் 20% அதிகரிப்பு 2022 ஜனவரி 1-ஆம் திகதியிலிருந்து பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால், ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

ஜனாதிபதி ஓய்வூதியர்கள் தேசிய மாநாட்டில் இந்த பிரச்சினைகளை தீர்த்துத் தருவேன் என்று கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2025-2027 சம்பள அதிகரிப்பு செய்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்ற 1 இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு எந்த நிவாரணமும் இல்லை.

2025 ஏப்ரல் 1-க்கு முன் அதாவது, ஜனவரி-மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் கிடைத்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு சரிசெய்யப்படாமல் போனதால் அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

10,000 சம்பள அதிகரிப்பை ஓய்வூதியத்தில் இணைக்கும் செயல்முறையை கோட்டாபய அரசாங்கம் இரத்துச் செய்த பிறகு, இந்த அநீதியை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லாமல் பல ஓய்வூதியர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlqh5pnp001t356nzlrr1txl

ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி

1 month 2 weeks ago

ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி

Feb 17, 2026 - 05:18 PM

ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது.

அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlqjhp53001x356nmt847zdf

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

1 month 2 weeks ago

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

February 17, 2026 12:33 pm

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள, 2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பு முறையை அடியோடு நிராகரிப்பதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வே எட்டப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

” கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தரப்புகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு ‘பொதுச் சபை’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு விசேட ‘அரசியல் குழு’ அமைக்கப்படும். இக்குழுவானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் சுயாட்சியை முழுமையாக அனுபவிக்கக்கூடிய அரசமைப்பு யோசனைகளைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்கும்.

முக்கியமாக, தமிழ் மக்கள் பேரவையால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகள் பெறப்படும். மேலதிகமாக ஏனைய தரப்புகளிடம் உள்ள சிறந்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டு, ஒரு பொதுவான வரைவு தயாரிக்கப்படும். இந்த வரைவு மீண்டும் பொதுச் சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மக்கள் மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும்.” – என்றார்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் எதிர்காலத்தில் இந்த முயற்சியில் இணைய விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்றும், அனைவரையும் அரவணைத்துத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://oruvan.com/draft-new-constitution-with-thimpu-principles-tamil-parties-in-jaffna-unanimously-decide/

மீண்டும் பதவியேற்பேன்..! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் சிறீதரன் எம்.பி

1 month 2 weeks ago

மீண்டும் பதவியேற்பேன்..! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் சிறீதரன் எம்.பி

Vhg பிப்ரவரி 17, 2026

AVvXsEinwlq4bctk1O8LhDAFfE2_19vQh4INBLJEvEFDYj1ECABbvFP1NISOCFOPt_DF-kF8hEjQSvZS5MZJuAMXhFbUXALvvjiHYm8DKPM9sMQKpgA3jtgjoMQxXAVVyr8D2tZG82OdojC8r1PHaFAkU3I8Kr5VS-vwu0uJPM2ety5RwlJbu8P_tgtQDYqXpizL

இலங்கை தமிழரசுக் கட்சியின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பதவியில் இருந்து சிவஞானம் சிறீதரன் விலக்கப்பட்டதிலிருந்தது அக்கட்சிக்குள் நடக்கும் பல விடயங்கள் அம்பலமாகி வருகின்றன. 

இந்நிலையில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவஞானம் சிறீதரன், தான் தெரிவு நிலை பதவியில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டார். 

மேலும் அவர், திருகோணமலை நீதிமன்றத்தில் என் மீதான தடை எப்போது நீக்கப்படுகின்றதோ, அப்போது அடுத்த நொடியே நான் பதவியேற்கலாம். 

ஆகவே, நான் அந்த நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றேன். அவ்வாறு நான் மீண்டும் பதவியேற்கும் போது, அனைவரையும் அரவணைத்து தான் செல்ல வேண்டும்” என கூறினார்.

https://www.battinatham.com/2026/02/blog-post_17.html

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

1 month 2 weeks ago

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

17 Feb, 2026 | 06:26 AM

image

இந்திய  பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'செயற்கை  நுண்ணறிவு  தாக்கம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மாநாட்டினை தொடர்ந்து  இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  நாளை மறுதினம் (19) உரையாற்றவுள்ளார்.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த இந்திய விஜயத்தின் போது,  ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

https://www.virakesari.lk/article/238845

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நாளை மறுதினம்

1 month 2 weeks ago

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நாளை மறுதினம்

adminFebruary 17, 2026

univercity-if-jaffna.jpg?fit=800%2C450&s

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, அதன் 50-ஆவது ஆண்டுப் பூர்த்தியைஒட்டி நடைபெறும் 40-ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை மறுதினம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் அவர்களின் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நான்கு நாட்கள்   நடைபெறவுள்ளது.

📅 முக்கிய விபரங்கள்:

  • காலப்பகுதி: நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (4 நாட்கள்).

  • அமர்வுகள்: மொத்தம் 12 அமர்வுகள்.

  • மொத்தப் பட்டதாரிகள்: 3,252 பேர்.

📊 பட்டதாரிகளின் விபரம்:

வகைப்பாடு

எண்ணிக்கை

பட்டப்பின் தகைமை பெற்றவர்கள் (Postgraduate)

376

உள்வாரி மாணவர்கள் (Internal)

2,557

வெளிவாரி மாணவர்கள் (External)

252

உயர் தகைமை & ஏனைய சான்றிதழ்கள்

67

மொத்தம்

3,252

🏆 உயர்தனிச் சிறப்புகள் மற்றும் விருதுகள்

இம்முறை பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் கல்வியார்ந்த சாதனைகளுக்காகப் பல கௌரவங்கள் வழங்கப்படவுள்ளன:

  • தங்கப் பதக்கங்கள்: 94

  • பரிசில்கள்: 69

  • புலமைப்பரிசில்கள்: 15

🥇 பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கம்:

பல்கலைக்கழகத்தின் மிக உயரிய விருதான இது பின்வருமாறு வழங்கப்படுகிறது:

  • பல்கலைக்கழக மட்டம் (2021 கல்வியாண்டு): கலைப்பீட மாணவர் ஒருவர்.

  • பீட மட்டம் (2022 கல்வியாண்டு): கலைப்பீடம் (1), விஞ்ஞான பீடம் (1).

  • பீட மட்டம் (2023 கல்வியாண்டு): முகாமைத்துவக் கற்கைகள் பீடம் (1), மருத்துவ பீடம் (1).

  • பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கம் (2022): விஞ்ஞான பீட மாணவர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

🔬 சிறப்பு நினைவுப் பேருரைகள் (Memorial Lectures)

பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய உரைகள் நடைபெறவுள்ளன:

  1. சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை:

    • உரையாளர்: ஓய்வுபெற்ற துணைப் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா (UK).

    • தலைப்பு: “சமூக ஈடுபாட்டுடன் செயற்படும் பல்கலைக்கழகம்: ஆய்வு, உரையாடல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு”.

  2. சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை:

    • உரையாளர்: இருக்கைப் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ்.

    • தலைப்பு: “அடுத்த தலைமுறையைப் பேணிப் பாதுகாப்பது: குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த சமகாலக் கண்ணோட்டங்கள்”.



https://globaltamilnews.net/2026/229172/

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்கு முழுமையாக ஏற்பில்லை - ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை

1 month 2 weeks ago

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்கு முழுமையாக ஏற்பில்லை - ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை

Published By: Vishnu

16 Feb, 2026 | 10:47 PM

image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாகத் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை இப்புதிய வரைவு எவ்வாறு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றியும், இவ்வரைவு குறித்த பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் தமக்கு விளக்கமளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்புதிய சட்டவரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் சோல், வலுகட்டாயத் தடுத்துவைப்பு தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் பிரதித்தலைவர் மத்தியூ கில்லெற், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் தலைமை அறிக்கையாளர் கேப்ரியெல்லா சிற்ரொனி, சட்டவிரோத மற்றும் வலுகட்டாய தண்டனை வழங்கல்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மொரிஸ் ரிட்போல்-பின்ஸ், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலர், தனியுரிமைக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அனா பிரையன் நௌக்ரெரெஸ் மற்றும் சித்திரவதைகள், மிகமோசமானதும், மனிதாபிமானமற்றதுமான தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அலிஸ் ஜில் எட்வட்ஸ் ஆகிய எழுவரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கூட்டாக அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;

உங்களது அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிக்காட்டும் வகையிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதில் மேற்கொள்வதற்கென கடந்த 2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதிலும், பொதுமக்களின் கருத்தறியும் நோக்கில் புதிய வரைவை வெளியிட்டதிலும் உங்களது அரசாங்கம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை பெரிதும் வரவேற்கிறோம். அதேபோன்று சட்டவாட்சி பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படவேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் சில சரத்துக்களின் ஊடாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டப்பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளமை என்பன உள்ளடங்கலாக இப்புதிய வரைவில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டுகிறோம். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்பதுடன், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் தயாரிக்கப்படவில்லை.

குறிப்பாக இச்சட்டவரைவின் 3 ஆம் பிரிவில் 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை விட முன்னேற்றகரமானதாக இருப்பினும், இதுவும் மிகப்பரந்துபட்டதாகவும் சர்வதேச நியமங்களுக்கு உட்படாததாகவுமே காணப்படுகிறது. இவ்வாறான பரந்துபட்ட வரைவிலக்கணங்கள் திட்டமிடப்படாத எதிர்மறை விளைவுகளுக்கும், திட்டமிடப்பட்ட வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கும் வழிகோலும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 15(1) ஆம் சரத்தின் பிரகாரம் குற்றவியல் சட்டங்கள் மிகவும் 'குறிப்பானதாக' இருக்கவேண்டும். அதனூடாகவே எவ்வாறான நடவடிக்கைகளைக் குற்றவியல் குற்றமாகக் கருதமுடியும் என்பது குறித்தும், அவ்வாறான குற்றங்களைப் புரிவதனால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்தும் தெளிவான புரிதலை ஏற்படுத்தமுடியும். இருப்பினும் இத்தகைய விரிவான வரைவிலக்கணமானது சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கும், அதன்விளைவாக அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

அதேவேளை இப்புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சில குற்றங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19 ஆவது சரத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான உரிமைக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன. கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மீது பிரயோகிக்கப்படும் எந்தவொரு மட்டுப்பாடும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19(3) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டும். கருத்து வெளிப்பாடு மற்றும் தகவல்களை அறிதல் ஆகியவற்றின்மீது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனக்கூறி மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் முற்படுமேயானால், அதற்கு நியாயமான நோக்கம் இருப்பதுடன் இவ்வாறு மட்டுப்பாடு விதிப்பதன் ஊடாக அந்நோக்கங்கள் நிறைவேறும் என்பதை நிரூபிக்கவேண்டும். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் 8(2) ஆம் பிரிவை 78 ஆம் பிரிவுடன் இணைத்து நோக்குகையில், அதனூடாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் முடக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.

அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவின் ஊடாக நபரொருவரின் (சந்தேகநபர்) உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன போதியளவுக்கு உறுதிப்படுத்தப்படாத வேளை, அவரைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரிகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச அகதிகள் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றி எமக்கு விளக்கமளிக்குமாறு கோருகிறோம்.

அதேபோன்று தற்போது இவ்வரைவு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் உரியவாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமா எனவும், இவ்வரைவு தொடர்பான பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெளிவுபடுத்துமாறு வேண்டுகோள்விடுக்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/238836

பிரித்தானிய துணைப் பிரதமர் இலங்கையில்...

1 month 2 weeks ago

பிரித்தானிய துணைப் பிரதமர் இலங்கையில்...

Feb 17, 2026 - 10:59 AM

பிரித்தானிய துணைப் பிரதமர் இலங்கையில்...

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தார். 

டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம், இன்று (17) காலை 09:11 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

அவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர்கள் அறைக்கு வருகை தந்திருந்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானிய துணைப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். 

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் அந்த வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதும் துணைப் பிரதமரின் விஜயத்தின் நோக்கமாகும்.

மேலும், சிறுவர் பராமரிப்புக்கான பூகோள சாசனத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் இந்த விஜயத்தின் போது இடம்பெறவுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlq5ullj001e356n6v814sxk

எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம்

1 month 2 weeks ago

எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம்

Feb 17, 2026 - 07:35 AM

எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (17) பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.


இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இதற்கான விவாதம் நடைபெறும் எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.


பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாராளுமன்ற வாரம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், முற்பகல் 11.30 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இன்றைய முக்கிய அலுவல்கள்:


பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம்.


தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlpy6b7e0015356nrfo0o5bq

76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில்

1 month 2 weeks ago

76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில் 

16 Feb, 2026 | 06:35 PM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

நாட்டின் 76 வருடகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உழைக்கும் வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான தீர்க்கமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (16) நுகேகொடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

76 வருடங்களாக நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த இரு பிரதான அரசியல் கும்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 2024 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர்.

2022 மக்களின் அரகலய போராட்டத்தின் நேரடி விளைவே இந்த மாற்றமாகும். எனினும் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசாங்கம் பழைய ஆட்சியாளர்களின் அதே 'நவதாராளவாத' பொருளாதாரப் பாதையிலேயே பயணிக்கிறது. மக்கள் மீது வரிச் சுமைகளை ஏற்றிவிட்டு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ள அரசாங்கம் இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் இல்லாதொழிக்க முற்படுகிறது.

3000 கிராமப்புற பாடசாலைகளை மூடும் திட்டம் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு என்பன மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன. மறுபுறம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கும் சக்திவள பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவாலாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அதைவிடக் கொடிய அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கின்றனர். மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முடக்குவதே இவர்களின் நோக்கம். கல்வி சுகாதார உரிமைகள் பறிக்கப்படும் போது தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிஊழியர் சேமலாப நிதி ஆகிய நிதியங்கள் சூறையாடப்படும் போது மக்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி 'வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி' எனும் தொனிப்பொருளில் எமது 4வது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.

வெறும் ஆட்சி மாற்றங்கள் எமது மக்களுக்கு விடிவைத் தரவில்லை. இனிவரும் அரசியல் சூழல் என்பது உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் கைம்மாறும் ஒரு தருணமாக அமைய வேண்டும்.

மலையக மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மற்றும் கிழக்கு முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசாங்கம் தவறிவிட்டது. மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மாற்றீட்டை எமது மாநாட்டின் மூலம் முன்வைப்போம்.

உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் உக்ரைன் மற்றும் காசாவில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற போர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச இடதுசாரி இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது மாநாட்டில் சர்வதேச இடதுசாரிப் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

எனவே இந்த மாற்றத்தை விரும்பும் தொழிலாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் மார்ச் 1ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/238829

வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

1 month 2 weeks ago

வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

16 Feb, 2026 | 05:36 PM

image

வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்பவியல் சார்ந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி தெரிவித்துள்ளார்.  

கீழ்க்காணும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:

மண் பரிசோதகர் – மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III அல்லது பயிற்சித் தரம் (அறிவித்தல் இல: R/2026/04) 

ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் – வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III (அறிவித்தல் இல: R/2026/05) 

வேலை மேற்பார்வையாளர் – வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களம் தரம் III (அறிவித்தல் இல: R/2026/06) 

மேற்படி பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை மற்றும் விண்ணப்ப விபரங்கள் அடங்கிய முழுமையான தகவல்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் "Exam and Recruitment Advertisement" எனும் பகுதியில் பார்வையிட முடியும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2026.03.03க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

https://www.virakesari.lk/article/238794

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr