ஊர்ப்புதினம்

நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்!

1 month 2 weeks ago

நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்!

Published By: Digital Desk 1

16 Feb, 2026 | 10:33 AM

image

நெடுந்தீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கடற்படையின் விசேட படகு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட நாட்களாக குறித்த பஸ், பழுதடைந்த நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு விசேட கூட்டத்தில், இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்;ளது.

இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறியிருந்த நிலையில், சுமார் 05 மாதங்களின் பின்னர் புதிய பஸ், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை காலமும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ், திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/238763

கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர்

1 month 2 weeks ago

கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர்

16 Feb, 2026 | 09:43 AM

image

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நலன்கருதி குறிப்பாக பரந்தன் பகுதியில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வயத்தின் தேவை கருதியும், பொது மக்களுக்கான குடி நீர் தேவை அதிகரித்துச் செல்லும் நிலைமையினையும் ஆதாவது முக்கியமாக கண்டாவளை பிரதேச செயலக பிரிவிவில் அதிகரித்து வரும் சிறுநீரக பாதிப்புக்களை கருத்தில் எடுத்தும் கிளிநொச்சி மாவட்ட நீர் விநியோகத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கிராமங்களுக்கான குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் அத்தோடு முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கும் நீர் விநியோகம் வழங்கப்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி சமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/238757

மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்

1 month 2 weeks ago

மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்

Feb 16, 2026 - 05:12 PM

மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்

மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர்.

மேலும், ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் சிறையிலிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விபரங்கள்:

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் தற்போது சிறையிலுள்ளனர்.

இவர்களில் 70 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.

பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlp3h0mq000r356n9zrd34cd

யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை

1 month 2 weeks ago

யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை

Feb 16, 2026 - 08:03 PM

யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்துக் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்திய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlp9v1vy000x356ntpv0ztpa

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி!

1 month 2 weeks ago

download-8.jpg?resize=275%2C183&ssl=1

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி!

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (மத்திய இந்தி நிறுவனம்) நிறுவனத்தில் 2026-2027 கல்வியாண்டிற்காக இலங்கையர்களுக்கு இந்தி கற்க உதவித்தொகைகளை வழங்குகிறது.

இந்தத் திட்டம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட உதவித்தொகையாகும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு திரும்பும் விமானக் கட்டணம், உதவித்தொகை, விடுதி தங்குமிடம் மற்றும் வருடாந்திர புத்தக மானியம் வழங்கப்படும்.

19-45 வயதுக்குட்பட்ட (01.04.2026 நிலவரப்படி) மற்றும் தொடக்க/இடைநிலை மட்டத்தில் இந்தி படித்த அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் https://www.hcicolombo.gov.in/section/news/ இல் கிடைக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (இந்திய கலாச்சார மையம்), 16/2, கிரிகோரிஸ் சாலை, கொழும்பு 07 இல் மார்ச் 9, 2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://athavannews.com/2026/1465131

"இனவாதமும் பாகுபாடும் இனி செல்லாது!" - அடம்பனில் பிரதமர் அதிரடி

1 month 2 weeks ago

"இனவாதமும் பாகுபாடும் இனி செல்லாது!" - அடம்பனில் பிரதமர் அதிரடி

15 February 2026

1771168812_1237716_hirunews.jpg

இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இவ்வாறான அநீதிகளால் அதிகளவில் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மன்னார், அடம்பன் பகுதியில் இன்று (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு, பலமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பெண் தலைமைத்துவம் அவசியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை வடிவமைப்பதில் பெண்கள் முன்வந்து தீவிரமான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் அழைப்பு விடுத்தார்.

வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பாரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது. https://hirunews.lk/tm/446680/racism-and-discrimination-will-no-longer-be-tolerated-prime-minister-takes-action-in-adampan

வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்!

1 month 2 weeks ago

வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்!

வடக்கு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் நேற்று (15) சிறப்பாக இடம்பெற்றது. 

இதன்போது நேற்று மதியம் 2.00 மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். 

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பொலிஸார் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவித தடைகளும் விதித்திருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlop6dhc0004356ny5ebog49

“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்!

1 month 2 weeks ago

IMG-20260216-WA0017-scaled.jpg?resize=75

“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்!

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து ‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றையதினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டம். இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார், ஏனைய மதகுருக்கள் குறித்த சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உடனிருந்தார்.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளும் கையொப்பமிடும் வகையில் இணைய வழி மூலமான கையொப்பமிடும் வசதியும் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1465053

சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று ; தமிழரசுக்கட்சி பங்கேற்காது

1 month 2 weeks ago

சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று; தமிழரசுக்கட்சி பங்கேற்காது

15 Feb, 2026 | 02:33 PM

image

(நா.தனுஜா)

தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் ஏக்கிய இராச்சிய வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை நிராகரித்து, அதற்குப் பதிலாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

அக்கடிதத்துக்கு பதில் அனுப்பிவைத்த சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாரின் அழைப்புக்கடிதத்தின் இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி கஜேந்திரகுமாரினால் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்துக்கும் அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதற்குப் பதில் அனுப்பிய நாகலிங்கம், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதில் அனுப்பிய கஜேந்திரகுமார், அச்சந்திப்பை 15 ஆம் திகதிக்கு முன்பதாக ஒருங்கிணைக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருப்பினும் 15 திகதி நடைபெறவிருக்கும் சந்திப்பை தமிழ்த்தேசிய பேரவை ஒருங்கிணைப்பதன் காரணமாக, இச்சந்திப்பையும் அவர்களே ஏற்பாடு செய்வது தான் இலகுவானதாக இருக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மீண்டும் பதில் அனுப்பியது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்றைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவியபோது, தாம் இறுதியாக அனுப்பிய கடிதத்துக்கு இன்னமும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238712

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் - லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு

1 month 2 weeks ago

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் - லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு

15 Feb, 2026 | 01:54 PM

image

ஆர்.ராம்

நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது எமது கொள்கையாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருப்பினும், நாட்டின் தேசிய பாதுகாப்பு சார்ந்த பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியமாகின்றது என்பதாலேயே அதுபற்றி கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, ஊடக ஒழுக்கநெறி மற்றும் சுதந்திரத்துக்கான நிலையம், இன்சைட் நியூஸ் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாதந்த கலந்துரையாடலின்போது, மக்கள் விடுதலை முன்னணியானது, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றபோது பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டுமெனக்கோரியது. பின்னர்கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவற்றுக்கான கலந்துரையாடல்களில் கூட பங்கேற்றிருக்கவில்லை.

அவ்விதமான நிலையில் தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை தயாரித்து மக்கள் கருத்துக்களை கேட்டறிவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தததும் கொள்கை ரீதியாக திடீரென்று மாற்றம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஊடகவியலாளரால் கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பது தற்போதும் எமது கொள்கையாகவே உள்ளது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அரசுக்கு தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பங்காளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்வதற்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடு அவசியமாகின்றது என்பது கோரிக்கையாக உள்ளது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் பயங்கரவாதத்தின் அனுபவங்களை 15வருடங்களுக்கு முன்னதாக கொண்டிருந்தாரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவும் நாம் பயங்கரவாத வெளிப்பாட்டின் விளைவுகளை அனுபவிக்கின்றோம்.

அவ்விதமான நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பங்காளர்களின் கோரிக்கையை எவ்வாறு நிராகரிக்க முடியும். நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்காது என்று எவ்வாறு உறுதிப்படுத்த முடியும். ஆகவே சட்டத்தின் தேவையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

ஆனால், கடந்த காலத்தில் பங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகளை நாம் அனுபவரீதியாகவே கண்டிருக்கின்றோம். ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கான நோக்கம் பற்றியே அதிகமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்ட வரைவே வெளியிடப்பட்டுள்ளது. இதனை சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கின்றார்கள். சிலர் நியாயமான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். எம்மைப்பொறுத்தவரையில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கே அந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் குறித்த வரைவு பற்றி முறையாக கலந்துரையாடப்படும். அதன்பின்னரேயே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே அதற்குரிய செயன்முறைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. தற்போதைய நிலையில் சட்ட வரைவு தொடர்பில் உங்களுடைய அபிப்பிராயங்களை சுட்டிக்காட்டி வெளியிடுவதன் ஊடாக அரசாங்கத்துக்கும் அதுபற்றி சீர்தூக்கிப்பார்த்து மாற்றியமைப்பதற்கு இலகுவானதாக இருக்கும்.

தற்போது இருக்கும் வரைவினையே அரசாங்கம் அமுல்படுத்தப்போகின்றது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. நெகிழ்ச்சித் தன்மையுடன் மாற்றங்களைஏற்படுத்துவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/238707

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

1 month 2 weeks ago

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

Published By: Digital Desk 3

15 Feb, 2026 | 12:05 PM

image

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர்.

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

3__2_.jpg

https://www.virakesari.lk/article/238696

பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை

1 month 2 weeks ago

பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை

15 Feb, 2026 | 10:46 AM

image

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது.

இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில்,

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை.

மலையகத்தில் உள்ள மாணவர்களை கல்வித்துறையில் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகிறது தோட்டப் புறங்களில் எமது செயற்பாட்டை முன்னெடுக்க பாரிய சவாலாக இருக்கிறது.அதில் ஒன்றுதான் தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருந்து வருகிறது.

எமது முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் போது இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்பள்ளி ஒன்றியத்தின் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கியம் தெரிவிக்கையில்,

மலையக மக்களுக்கு அங்கிகாரத்தை வழங்கிய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் இன்று எல்லோரும் காணி சம்பந்தமாக பேசுகிறார்கள். ஆனால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நூற்றுக்கு எழுபது வீதமானோருக்கு முன்பள்ளியில் கற்றல் செயற்பாடுகள் கிடைப்பதில்லை. 30 வீதமானோருக்கு மாத்திரம் முன்பள்ளி கல்வி கிடைக்கிறது.

இந்த நாட்டில் முன்பள்ளி கல்வி என்பது மாகாண சபையின் கீழ் காணப்படுகிறது. முன்பள்ளி எந்த பகுதியில் இடம் பெற்றாலும் அது மாகாணசபை அதிகாரத்திற்கு கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.தோட்ட பகுதிகளில் இயங்குகின்ற முன் பள்ளிகளுக்கு தோட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது.

ரதெல்ல மற்றும் பல பகுதிகளில் முன் பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன. முன்பள்ளி கல்வி அரசாங்கத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி கல்வியும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

முன்பள்ளி கல்விக்கு தடையாக இருக்கின்ற தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியன தடையாக இருப்பதை இடைநிறுத்த வேண்டும்.

எனவே இது தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து எதிர்வரும் 22ம் திகதி அட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/238678

வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

1 month 2 weeks ago

வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Feb 15, 2026 - 06:02 PM

வவுனியாவில் 8,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அக்குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்றின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, இக்குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், அந்த வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும்போது வினைத்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பிள்ளைகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நன்னடத்தைப் பாதுகாப்பிலுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmlnq5m9y0007356ncnyl88xs

திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு!

1 month 2 weeks ago

திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு!

சிறிலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, பொதுமக்களின் வங்கி விபரங்களைப் பெற்று பணத்தைச் சூறையாடும் பாரிய மோசடி ஒன்று திருகோணமலை பகுதியில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த வியாழக்கிழமை (12) இவ்வாறானதொரு மோசடிக்கு இலக்காகி தம்பதியினர் ஒருவர் பெரும் தொகையை இழந்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர்கள், தாம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர்.

பணமோசடி

"நீங்கள் நீண்டகாலமாக எமது வாடிக்கையாளராக இருப்பதால், உங்கள் கணக்கில் 1,20,000 ரூபா பெறுமதியான 'ஸ்டார் பொயின்ஸ்' (Star Points) சேர்ந்துள்ளது. அதனைப் பணமாக மாற்றி உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட வங்கி விபரங்களைத் தாருங்கள்" என நயமாகப் பேசியுள்ளனர்.

குறித்த தொகையை இரண்டு கணக்குகளில் பிரித்து வைப்பிலிடுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபரின் வங்கி விபரங்களையும் அவரது மனைவியின் வங்கி விபரங்களையும் பெற்றுள்ளனர்.

திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு! | Money Laundering Many Affected In Trinco

அத்துடன், கணக்கின் பாதுகாப்பு இலக்கங்கள் மற்றும் ‘பின்’ (PIN) இலக்கங்களையும் நைச்சியமாகப் பேசிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சிறிது நேரத்தில், இருவருடைய வங்கிக் கணக்குகளிலும் இருந்த பணத்தில், எடுக்க முடியாத மீதித் தொகையான 2,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணமும் திருடப்பட்டுள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

இது குறித்து திருகோணமலை சிறிலங்கா டெலிகொம் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதே, தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அறிவுறுத்தல்

"விடயம் தெரிந்த நானே அவர்களின் பேச்சில் மயங்கி அனைத்து விபரங்களையும் வழங்கிவிட்டேன்" என பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற மோசடி அழைப்புகள் மற்றும் பண இழப்புகள் தொடர்பாக திருகோணமலை சிறிலங்கா டெலிகொம் அலுவலகத்திற்குப் பல முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதாகத் தெரியவருகிறது.

திருகோணமலையில் பணமோசடி: பலர் பாதிப்பு! | Money Laundering Many Affected In Trinco

முகம்தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இவ்வாறான அழைப்புகளை நம்பி, உங்களது வங்கி கணக்கு இலக்கம், இரகசிய குறியீட்டு இலக்கம் (PIN), கடவுச்சொல் (Password) அல்லது OTP இலக்கங்களை எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் எனத் நிறுவனங்களும் பாதுகாப்புத் தரப்பினரும் எச்சரிக்கின்றனர்.

இது போன்ற மோசடிகளுக்கு யாராவது உள்ளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://tamilwin.com/article/money-laundering-many-affected-in-trinco-1771071728?itm_source=article

போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல்

1 month 2 weeks ago

போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல்

போதைப்பொருள் வியாபாரத்தில் காவல்துறையினர் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தனமல்விலவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவல்துறை மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான எந்தவொரு தகவலையும் நேரடியாகத் பொதுமக்கள் எனக்கு தெரிவிக்க முடியும்.

100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது

 "இந்த போதைப்பொருள் வியாபாரம் ஒவ்வொரு மூலையிலும் இந்தக் கடத்தல்காரர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் மற்ற அரசு நிறுவனங்களிலும் இருந்தனர். அவர்கள் காவல்துறையிலும் இருந்தனர். நேற்று முன்தினம், ஒரு காவல்துறை அதிகாரி 700 கிராம் எடையுடன் பிடிபட்டார். அவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதால் மட்டும் சட்டம் இலகுவாக அமல்படுத்தப்படுவதில்லை. சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.

போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல் | 100 Police Officers Arrested For Drug Offences

இதன் விளைவாக, 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சேவையிலிருந்து நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முப்படைகளைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இந்தத் தொழிலில்

மேலும், பொது சேவையில் உள்ள வேறு சில அதிகாரிகளும், முப்படைகளைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இந்தத் தொழிலில் உள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் அதற்கு அடிமையாகி உள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல் | 100 Police Officers Arrested For Drug Offences

காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருந்தது. போதைப்பொருள் சோதனை நடத்திய பிறகு அந்தப் பிரிவை சேவையிலிருந்து நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போதைக்கு அடிமையானவர்கள் காவல்துறையில் இருக்க முடியாது

காவல்துறையில் எவ்வளவு குறைவானவர்கள் இருந்தாலும், நாங்கள் அந்த வேலையைச் செய்கிறோம். ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் காவல்துறையில் இருக்க முடியாது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் காவல்துறையில் இருக்க முடியாது.

போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல் | 100 Police Officers Arrested For Drug Offences

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இருக்கும் அதிகாரிகள் இருந்தால், தயவுசெய்து அந்தத் தகவலை எனக்கு வழங்கவும். போதைப்பொருள் "சமூகத்தில் எவ்வளவு கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியும்.

என்னுடைய கைபேசி 24 மணி நேரமும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்."என்றார். 

https://ibctamil.com/article/100-police-officers-arrested-for-drug-offences-1771091254

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!

1 month 2 weeks ago

33.jpeg?resize=750%2C375&ssl=1

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார்.

அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதன் பிரகாரம் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , பொலிஸ் விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதேவேளை, காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2026/1464869

நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு

1 month 2 weeks ago

நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு

15 Feb, 2026 | 12:06 PM

(எம்.மனோசித்ரா)

thumb_large_n_8.jpg

நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை விட, நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் கொண்டதாக தற்போதைய அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் ஊடகங்கள் மாத்திரமின்றி, மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்படுமென முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1979இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய கால கடத்தில் காணப்பட்ட மிகப் பயங்கரமான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அது அந்த காலகட்டத்துக்கு அவசியமாக இருந்தது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே ஆட்சியாளர்களுக்கு அன்று விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டுப்படுத்தி யுத்தத்தில் வெற்றி பெற முடிந்தது.

எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஆட்சியாளர்களால் அந்த சட்டம் ஊடகங்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். தற்போதைய அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளையேமுன்னெடுத்துள்ளது. யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற வரை இந்த சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு அதில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றமையால் அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய தேவை காணப்பட்டது. அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்ட மூலம் உருவாக்கப்பட்டது. அந்த சட்ட மூலத்துக்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. அவற்றைக் கருத்திற் கொண்டு அந்த சட்ட மூலம் இரத்து செய்யப்பட்டு, மற்றொரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. நிறைவேற்றதிகாரத்தால் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாதவாறு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டதால், சகல தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடனும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இவ்வாறு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.யினரால் அதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் யுத்த நிலைமை இல்லை என்பதால் இந்த சட்டம் தேவையற்றது என ஜே.வி.பி. எதிர்ப்பினை வெளிப்படுத்தியது.

இவ்வாறு எம்மால் உருவாக்கப்பட்ட சட்ட மூலம் தற்போதும் பாராளுமன்றத்தில் உள்ளது. அதனை நிறைவேற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் அதற்கு அப்பால் ஆட்சியாளர்களுக்கு அதி உச்ச அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தற்போதைய சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மக்கள் கருத்தாடல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. சட்டத்துறையில் நிபுணர்களும் அதில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. யாரோ ஒருவரால் எழுதப்பட்ட சட்ட மூலமாகவே அது காணப்படுகிறது.

மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் போது அதில் முதலாவது இலக்கு ஊடகங்களாகும். முதலில் ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட பின்னரே ஏனையோர் தாக்கப்படுவர். ஊடகங்களை முடக்கினால் ஏனையோரை முடக்குவது இலகுவானதாகும். அதற்கான ஏற்பாடுகள் அந்தசட்ட மூலத்தில் காணப்படுகின்றன. இதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட வேண்டும்.

அவ்வாறில்லை எனில் எதிர்காலத்தில் மக்கள் தமது எண்ணங்களைக் கூட வெளிப்படுத்த முடியாத ஜனநாயகமற்ற சூழல் ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/238692

வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்

1 month 2 weeks ago

வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்

15 Feb, 2026 | 11:38 AM

thumb_large_11.jpg

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம்.

வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு  அமைய பாதுகாப்பு அமைச்சு  மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக  யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும், நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு  இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் என்ற வகையில் மக்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக பல்வேறு சவால்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238691

சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு

1 month 2 weeks ago

சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு

15 Feb, 2026 | 11:29 AM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைவிடுத்து கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதனையடுத்த இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்ட ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இச்சந்திப்பு தொடர்பான விபரங்களை தனது மனைவி ஊடாக எழுத்துமூலம் வெளிப்படுத்திய சோமரத்ன ராஜபக்ஷ, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கி, அவ்விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, கைகழுவி விடுவதற்கே முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதேவேளை இச்சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றும் சோமரத்ன ராஜபக்ஷவினால் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

அக்கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சோமரத்ன ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருப்பதாக அறியமுடிகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் அக்கடிதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளால் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238685

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன்

1 month 2 weeks ago

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன்

15 Feb, 2026 | 12:06 PM

image

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசியமக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து அவ்வதிகாரிகளுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.  

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய அதன் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அவற்றின் இயலுமையை விட பன்மடங்கு உயர்வாகக் காணப்படுவதாகவும், அதன் விளைவாக சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

அதேவேளை மரணதண்டனை வழங்கலை முடிவுக்குக்கொண்டுவருவதாக அரசாங்கங்கள் வாக்குறுதி அளித்த போதிலும், அது இன்னமும் தொடர்வதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் அதிருப்தி வெளியிட்ட அம்பிகா சற்குணநாதன், போதைப்பொருள் பாவனை சார்ந்த குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.

https://www.virakesari.lk/article/238697

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr