ஊர்ப்புதினம்

’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிவராத்திரி வாழ்த்து செய்தி

1 month 2 weeks ago

’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது.

இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்துவதையும் நினைவுகூறும் விதமாக அமைந்துள்ளது. இது உலகம் மற்றும் வாழ்க்கையின் 'இருளை வெல்வதை' குறிக்கிறது.

அனைத்து மனித உறவுகளையும் மதிக்கும், ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இதுபோன்ற மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அகங்காரத்தை நீக்கி, உள்ளங்களில் ஆன்மீக உயிர்ப்பை ஏற்படுத்தும் மகா சிவராத்திரி சமய சடங்குகள், நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உண்மைப் பண்புகளின்படி வாழ நம்மை நெறிப்படுத்துக்கின்றதுடன், மகா சிவராத்திரியின் ஆன்மீக செய்தி நமது சமூக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் நான் பார்க்கிறேன்.

அண்மைக்கால நினைவுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட பின்னர், உறுதியுடனும் திட்டமிடலுடனும் மீண்டெழுந்து, அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம்.

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கையில் உள்ள இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்து-மக்களின்-நல்லெண்ணங்கள்-நிறைவேறும்/175-372517

திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம்  திறந்து வைப்பு.

1 month 2 weeks ago

திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம்  திறந்து வைப்பு.

adminFebruary 14, 2026

616373712_1454497602896249_8256219287316

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர்   அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

இதன் போது அன்ன பூரணி மட நிர்வாக உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2026/229059/

நாட்டின் உத்தியோகப்பூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி

1 month 2 weeks ago

நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

Feb 14, 2026 - 04:24 PM

நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

2026 ஜனவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் அளவு 6.824 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது

இது 2025 டிசம்பர் மாத இறுதியில் பதிவாகியிருந்த 6.838 பில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீத சிறிய வீழ்ச்சியாகும்.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு 2025 டிசம்பரில் காணப்பட்ட 86 மில்லியன் டொலர்களிலிருந்து, 2026 ஜனவரியில் 109 மில்லியன் டொலர்கள் வரை 21.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த மாதத்தில் உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தமையால், மத்திய வங்கி வசமுள்ள தங்கக் கையிருப்பின் பெறுமதியும் இவ்வாறு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmlm76q240004356nvkz1cns2

காதலர் தினம்; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்!

1 month 2 weeks ago

காதலர் தினம்; நுவரெலியாவில் சிவப்பு ரோஜா ஒன்றின் விலை 750 ரூபாய்!

14 Feb, 2026 | 11:59 AM

image

காதலர் தினத்தை முன்னிட்டு பூ கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

காதலர் தினம் இன்று (14) (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும் ஆனால் இம்முறை நுவரெலியாவில் வியாபாரம் சற்று மந்தமாக உள்ளதாக தெரிவிக்கின்றன.

இதில் சிகப்பு ரோஜா 750 ரூபாவிற்கும் மஞ்சள் ரோஜா 600 ரூபாவிற்கும் வெள்ளை ரோஜா 400 ரூபாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர் இதனால் பூக்களை வாங்குவதைத் தவிர்க்கின்றனர்.

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் அதிகம் பாதித்தது இதில் மண்சரிவு ,வெள்ளம் உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களால் பூக்கள் அழிவடைந்தது இதனால் பூக்களின் வரத்தும் குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் கடுமையாக குறைந்துள்ளது இதன் காரணமாக பூக்கள் மற்றும் பூங்கொத்துக்களின் விலை அதிகரித்து உள்ளது இதனால் விற்பனை சற்று இம்முறை மந்தமாகவே உள்ளது.

குறிப்பாக ஜனவரி மாதம் முழுவதும் நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் பருவநிலை மாற்றம் காரணமாக ரோஜா உற்பத்தி சுமார் 35% முதல் 45% வரை சரிந்துள்ளது எனவும் விலை உயர்ந்திருந்தாலும், இந்த ஆண்டு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மலையகத்தில் இருந்து புகையிரம் இயங்காது உள்ளமையால் தலைநகர் உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்துகொள்ள முடியாத நிலையும் உள்ளது இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாகவே ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது.

கூடுதலாக தற்போது செயற்கை மலர்களைப் பரிசளிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் "மொத்த விலையில் பூக்களை வாங்கி வந்துள்ளோம், ஆனால் சில்லறை விலையில் மக்கள் வாங்கத் தயங்குகிறார்கள் இன்று முழுமையாக விற்பனை ஆகவில்லை என்றால் பூக்கள் வீணாகிவிடும்" எனவும் கவலை தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/238634

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

1 month 2 weeks ago

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

sumanthiran.jpg

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது.

https://akkinikkunchu.com/359979/

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

1 month 2 weeks ago

0000.jpg?resize=650%2C375&ssl=1

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1464739

#################### ############################

26-698fcb1e01821.jpg?resize=600%2C375&ss

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு.

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கார் ஒன்றில் வந்த குழுவினர் ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர்.

https://athavannews.com/2026/1464783

ஜே.வி.பி - இந்தியா நெருக்கம்: மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை

1 month 2 weeks ago

ஜே.வி.பி - இந்தியா நெருக்கம்: மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசனை

14 February 2026

1771037568_4084761_hirunews.jpg

ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா கொண்டுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரப்பூர்வப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்திய கலாசார உறவுகளுக்கான நிலையத்தின் அழைப்பின் பேரில் கடந்த 05ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை அவரின் இந்த இந்திய விஜயம் அமைந்திருந்தது.

இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரை டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

இது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான நகர்வாகும் என குறிப்பிடப்படுகிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயலவருக்கு முதலிடம்' மற்றும் 'மஹாசாகர்' தொலைநோக்குப் பார்வையின் கீழ் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு இங்கு உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/446337/jvp-india-rapprochement-consultations-with-jaishankar-on-provincial-council-elections

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

1 month 2 weeks ago

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது: பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

Published By: Vishnu

13 Feb, 2026 | 11:01 PM

image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் 3457 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகளும் வழங்கப்பட்டிருந்தன. வவுனியா மாவட்டத்தில் பல வீடுகள் இறுதி கட்டத்தில் உள்ளது. பூர்த்தி செய்யும் நிலையில் உள்ள வீடுகளுக்கான வேலைகளை முடித்து விட்டால் வவுனியாவில் 900 வீடுகள் பூர்த்தியாகும். அவை சின்ன வேலைகளில் தங்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த போதே கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

வவுனியாவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது சில குடும்பங்களுக்கு இரண்டு, மூன்று வீடுகள் வழங்கப்கப்பட்டு அதில் அவர் குடியிருக்காமல் பூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு 600 வீடுகள் உள்ளது. மடுகந்த, குடாகச்சகொடி, ஈரப்பெரியகுளம், கலாபோகஸ்வேவ போன்ற இடங்களில் அவ்வாறு வீடுகள் உள்ளன.

சஜித் பிரேமதாசாவால் வீடுகள் வழங்கப்பட்டர்களில் வேறு வீடுகள் இல்லாதவர்களின் வீடுகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். அரசியலுக்காக இவ்வாறு பல இடங்களில் வழங்கப்பட்டுளளது. மன்னாரில் 1500 வீடுகள் உள்ளது. அவ்வாறான வீடுகளை மீள எடுத்து வீடு இல்லாத மக்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுததியுள்ளோம். பாதிக்கப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238611

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்

1 month 2 weeks ago

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள் - இலங்கையிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்

13 Feb, 2026 | 07:12 PM

image

(நா.தனுஜா)

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் வியாழக்கிழமை (12) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பை அடுத்து, அதில் கலந்துரையாடப்பட்ட மற்றும் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நட்பு ரீதியாகவும், திறந்த மனப்பாங்கின் அடிப்படையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன் ஆட்சியியல் நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி, மீன்பிடி, கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இக்கூட்டமானது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு இரு தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் மறுசீரமைப்புக்கள், நடைமுறை முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான முயற்சிகளின் தற்போதைய நிலைவரம் குறித்துப் பரிமாறுவதற்கும் வாய்ப்பளித்தது.

அதேபோன்று கடந்த ஆண்டு மேமாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சியியல், மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சி என்பன தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி மெய்நிகர் முறைமையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த கூட்டம் மற்றும் கடந்த 11 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் என்பன பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல், சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதன் நீட்சியாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய சுயாதீன கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பன பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கையின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதிலும், அதனை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதிலும், மீன்பிடித்துறை சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளிப்பதிலும் தொடர் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

அதுமாத்திரமன்றி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைசார் ஒத்துழைப்பு, புலம்பெயர்வு மற்றும் மீள் அனுமதி சார்ந்த கொள்கைகள் என்பன பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினர்.

இவ்வேளையில் நாட்டின் நிலையான வளர்ச்சியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முக்கிய வகிபாகம் குறித்துப் பிரஸ்தாபித்து, அதனைப் பாராட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கல் சுழற்சி முடிவடைந்ததும், மீண்டும் அதனைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தமது நோக்கத்தை வெளிப்படுத்தினர்.

அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், தற்போதைய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவ்வதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருத்தமான அமை;புக்களுடன் இணைந்து செயலாற்றுமாறு ஊக்குவித்தது.

அதற்குப் பதிலளித்த இலங்கையின் பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின்கீழ் 27 முக்கிய சமவாயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் தயார்நிலையை மீளுறுதிப்படுத்தினர்.

மேலும் பாதுகாப்புத்துறையில், குறிப்பாக இந்து - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கு இருதரப்பினரும் ஆராய்ந்தனர்.

நிறைவாக ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ப்ரூஸேல்ஸில் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

https://www.virakesari.lk/article/238601

தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ?

1 month 2 weeks ago

தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ?

written by admin February 13, 2026

Black.jpg?fit=840%2C560&ssl=1

 

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

“இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமையுடன் அவற்றை கரிநாள்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர்.

இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு.

ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது.

எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்? ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? – என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும்.

இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது.

தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே. அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின்போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எவ்வித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயகபூர்வமான நடவடிக்கையே.

கடந்த 4ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது.

மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அறகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றுள்ளது.

தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ? - Global Tamil News

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

1 month 2 weeks ago

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள் ; தபால் போக்குவரத்துக்கு 10 லொறிகள், 20 கெப் வாகனங்களும் கையளிப்பு

13 Feb, 2026 | 04:41 PM

image

(செ.சுபதர்ஷனி)

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தபால் சேவையை தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயப்படுத்தி, அதன் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் 849 மில்லியன் ரூபா செலவிலான விசேட திட்டங்கள் வியாழக்கிழமை (12) தபால் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தபால் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும் நேக்குடன் 590 மில்லியன் ரூபா பெறுமதியான 10 லொறி வண்டிகள் மற்றும் 20 'குரு கெப்' (Crew Cab) ரக வாகனங்கள் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, தபால்காரர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய பொதி காவிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதுடன், தபால் நிலையங்களின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் டெஸ்க்டொப் மற்றும் லெப்டொப் கணினிகள் மற்றும் 'டேப்' கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டன.

மேலும், தபால் சேவையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு பதில் பிரிவும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

கடந்த ஆண்டு தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சில நெறுக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பினும், இதனை பார்க்கிலும் தபால் துறையால் அதிக வருமானத்  பெறலாம். இவருடம் எதிர்பார்க்கப்பட்டுள் வருமான இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. 

தபால் சேவையில் நிலவிவரும் மனிதவள தேவையை நிவர்த்தி செய்ய 2,800 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளதுளடன். தற்போது கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அவசியமான  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தபால் கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட  நிலையில் எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தபால் சேவையின் முன்னேற்றத்தை விரும்புவோர் இச்சேவையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

தபால் சேவையை  நிரந்தரமாக மூடிவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.  சகல நவீன வசதிகளையும் வழங்கி அதனை உலகத்தரம் வாய்ந்த சேவையாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என்றார்.

WhatsApp_Image_2026-02-13_at_15.41.49.jp

https://www.virakesari.lk/article/238586

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்

1 month 2 weeks ago

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்

13 Feb, 2026 | 04:47 PM

image

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு", "அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்" போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினால் உரிமைக்காகப் போராடியவர்கள் சிறையில் இருப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், மீண்டும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, இத்தகைய விசேட சட்டங்கள் தேவையற்றவை எனத் தெரிவித்த அவர், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பாதிக்கும் என எச்சரித்தார். 

குறிப்பாக, இது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலையக மக்களின் வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மலையக மக்களின் பாரம்பரியத் தொடர்பாடல் முறையான 'பறை' அடித்து, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது கலாசார ரீதியிலான எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

WhatsApp_Image_2026-02-13_at_16.34.10.jp

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11.jp

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11__2

WhatsApp_Image_2026-02-13_at_16.34.11__1

WhatsApp_Image_2026-02-13_at_16.34.13.jp

https://www.virakesari.lk/article/238588

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

1 month 2 weeks ago

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

Feb 13, 2026 - 05:26 PM

2029-க்குள் இலங்கையில் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். 

இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். 

இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், தேசியத் தேவையைப் பூர்த்தி செய்ய மொத்தமாக 600 முதல் 1,000 வரையான தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்கள் தேவைப்படுவதாகவும், அவை படிப்படியாக நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், தற்போது நாட்டில் சுமார் 98 சதவீத இணையக் கவரேஜ் (Coverage) இருந்தபோதிலும், அது அதிவேக இணையத் (High-Speed Broadband) தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என அவர் வலியுறுத்தினார். 

இதனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்குத் தற்போதுள்ள கொள்ளளவை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்று (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்தார். 

மேலும், இணையத் தொடர்பாடல் கோபுரங்களுக்கான வணிக மாதிரியொன்றைத் தயாரித்து, அதற்காக கேள்வி மனுக்களை கோருவதற்குத் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்புக்கு வெளியேயுள்ள பகுதிகளில் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது என முன்மொழியப்பட்டது. 

அத்துடன், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmlktzgl70003356nky16oudz

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

1 month 2 weeks ago

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

Feb 13, 2026 - 12:41 PM

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. 

இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதேநேரம் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

முதலாம் தவணையின் முன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன. 

பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. 

நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmlkjtjlt0002356nmgy024rp

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!

1 month 2 weeks ago

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!

Vhg பிப்ரவரி 13, 2026

AVvXsEiwCZQVZDH7kG4F9QQOuXXnOFaM3ugDFcJqB5F8hNgh59pWU64fgUHd_B9LttStVV-eX-d17piTMnTOmquihf4iW6HwfqBKnQ1s7ygnBTR91sgelwnUjHgFenAyzPt2uY5k0On2CqfxDI_iDO4dOvPaJkO7XQYlRJ1YJfwjk0FcgeqAJVkNh4OEcAGA4kEA

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.battinatham.com/2026/02/blog-post_87.html

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை

1 month 2 weeks ago

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை

13 Feb, 2026 | 11:50 AM

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இவ்வருடம் சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்  கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் குறித்த ஆலயத்திற்கான காணி மற்றும் பாதை விடுவிப்பு தொடர்பில் தன்னால் வடக்கு மாகாண ஆளுனருக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. 

அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் பிரதேச செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அந்த அறிக்கை அனுப்பப்படவில்லை. ஏன் அது அனுப்பப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். விரைவில் அறிக்கையினை சமர்ப்பிப்பதாக பிரதேச செயலாளர் பதிலளித்திருந்தார். 

IMG_0723.jpeg


https://www.virakesari.lk/article/238548

வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

1 month 2 weeks ago

வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

Published By: Digital Desk 1

13 Feb, 2026 | 10:14 AM

image

மட்டக்களப்பு - வாழைச்சேனை நகரில், இன்று வியாழக்கிழமை (13) காலை இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் எனவும், உணவு விற்பனை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மற்றையவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/238536

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

1 month 2 weeks ago

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

வடக்கு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அதனை நிறுத்தாது தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதன்போது, பொலிஸார் வாகனத்தை நோக்கி ஐந்து தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmlkh8qbg0004356nypr1i1a3

🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன்   போராட்டம்

1 month 2 weeks ago

🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன்   போராட்டம்

adminFebruary 13, 2026

01211-4.jpeg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாண நகரப்பகுதியில் அப்பிள் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இன்று (பெப்ரவரி 13, 2026, வெள்ளிக்கிழமை) யாழ். மாநகர சபை முன்பாகக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.  மாநகர சபையினால் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால், நகரில் உள்ள அப்பிள் கடைகளின் ஒழுங்கமைப்பு அல்லது கட்டுப்பாடு தொடர்பாக முன்மொழியப்பட்ட ஒரு பிரேரணையே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது.

உறுப்பினர் தர்சானந்தின் பிரேரணை தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களைச் சந்தித்துத் தமது நியாயமான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.  நகரின் அழகையும் போக்குவரத்தையும் பாதிக்காத வகையில் வியாபாரம் செய்யத் தாங்கள் தயார் என்றும், ஆனால் தங்களை முற்றாகப் பாதிக்கும் வகையிலான தீர்மானங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதியோரங்களில் அமைந்துள்ள அப்பிள் கடைகள், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகச் சில காலங்களாகப் புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாகவே மாநகர சபை உறுப்பினர் தர்சானந் விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார். எனினும், முறையான மாற்று இட வசதி இன்றி எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தங்களைப் பாதிக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

01211-1.jpeg?resize=800%2C450&ssl=101211-2.jpeg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2026/228984/

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

1 month 2 weeks ago

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

Feb 13, 2026 - 08:56 AM

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr