ஊர்ப்புதினம்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான தொழிற்சாலைகளை உடனடியாக காலி செய்யுங்கள்: ஈரானின் புரட்சிகர காவலர்களின் எச்சரிக்கை

6 days 2 hours ago

அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான தொழிற்சாலைகளை உடனடியாக காலி செய்யுங்கள்: ஈரானின் புரட்சிகர காவலர்களின் எச்சரிக்கை

Published By: Vishnu

28 Mar, 2026 | 04:28 AM

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரானில் உள்ள ஒரு கனநீர் ஆலை மற்றும் 'மஞ்சள் கேக்' உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிராந்தியத்தில் உள்ள கனரக தொழிற்சாலைகள் மீது தங்கள் போராளிகள் பதிலடி கொடுப்பார்கள் என்று IRGC எச்சரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் முடியும் வரை, குறிவைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் (1 கி.மீ) சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/242129

தபால் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

6 days 2 hours ago

தபால் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

28 Mar, 2026 | 12:33 PM

image

( இணையத்தள செய்தி பிரிவு)

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்களுக்கு ஒரு பொதி (Parcel) வந்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறி மோசடியாளர்கள் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். அந்தச் செய்தியில் உள்ள போலி இணையதள இணைப்பை (Link) கிளிக் செய்யுமாறும் கோரப்படுகின்றனர்.

இணைப்பை கிளிக் செய்ததும், வங்கி அட்டைகளின் விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது. அவ்வாறு விபரங்களை வழங்கியதும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கித் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதோடு, இது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தபால் திணைக்களம் இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தெரியாத நபர்களுக்கோ அல்லது இணையதளங்களுக்கோ உங்களது வங்கி அட்டை விபரங்கள் அல்லது OTP குறியீடுகளை வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இலங்கைத் தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/242145

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது

6 days 4 hours ago

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காணியில் நூலகம் பயங்கரவாத தடை சட்டம் பாய்கிறது;  விசாரணைகளுக்கு பருத்தித்துறை நீதிமன்று அனுமதி

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் நூலகமொன்றை அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவரின் பூர்வீக காணியில் நூலகம் ஒன்றினை நிர்மாணிக்க , அவரது சகோதரி வல்வெட்டித்துறையை சேர்ந்த அனந்தராஜ் என்பவருக்கு அற்றோணி தத்துவம் வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் காணியில் கட்டுமானங்களை மேற்கொள்ள வல்வெட்டித்துறை நகர சபையில் அதற்கான அனுமதிகளை பெறும் நடவடிக்கைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உருவங்கள் , ஓவியங்கள் , பதாகைகள் , வரலாற்று சின்னங்கள் , புலிகளின் தலைவரின் சிலை உள்ளிட்டவை காட்சிப்படுத்த உள்ளனர் எனவும் அதனூடாக விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன் இத் திட்டத்தை இலங்கையில் அனந்தராஜ் என்பவர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , அதற்காக அவருக்கு முதல் கட்டமாக 16 இலட்ச ரூபா நிதி வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பண பரிமாற்றம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , அதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரிய நிலையில் , அதற்கான அனுமதியினை மன்று வழங்கியுள்ளது.

https://akkinikkunchu.com/365852/

ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா?

6 days 4 hours ago

ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா?

March 28, 2026

ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளதைக் காணமுடிகிறது.

இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடியதெனினும், போர்க்காலத்தில் பயிற்சி பெற்ற வீரர்களை ஈரானுக்குத் திருப்பியனுப்ப மறுப்பதனை, அதன் விளைவுகளின் அடிப்படையில் நோக்குகையில் எவ்வகையிலும் நடுநிலையான நகர்வாகக் கருதமுடியாது என இந்தியாவின் பிரபல பூகோள அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் பிரம்மா செல்லனே சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.ilakku.org/sri-lanka-refuses-to-return-iranian-sailors-did-it-bow-to-us-pressure/

தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி

6 days 4 hours ago

தையிட்டி விகாரை காணியை விடுவிக்கும் பணிகள் 80 வீதம் பூர்த்தி

adminMarch 28, 2026

TamilNews2-102.png?fit=900%2C1200&ssl=1

தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் காணி மக்களுக்கே.. ” என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புத்த சாசன அமைச்சரின் பணிப்பில் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , விகாரைக்குரிய விகாராதிபதி , உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்று அமைக்கப்பட்டு , பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது காணிகளை அளவிட்டு , அதனை எல்லைப்படுத்தி , உரிமையாளர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.  அந்த வகையில் காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் 80 வீதம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் விரைவில் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்போம் என தெரிவித்தார்.


https://globaltamilnews.net/2026/231152/

தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான் - முரளிதரன் குற்றச்சாட்டு!

6 days 5 hours ago

nnnj.jpg?resize=722%2C375&ssl=1

தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான் - முரளிதரன் குற்றச்சாட்டு!

வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு, கேவில், சுண்டிக்குளம்வரையான மக்களின் காணிகள் தேசிய பூங்காவென பிரகடனப்படுத்தியமைக்கு தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காமல் அன்றைய காலப்பகுதியில் அதனை ஆதரித்ததுதான் இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் படும் துன்பத்திற்கு காரணமென சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மக்களின் காணிகளை தேசிய பூங்காவென கூறி வடமராட்சி கிழக்கில் வனஜீவராசி திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்

இந்தப் பகுதி தேசிய பூங்காவென உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது யானைகளை கொண்டுவந்து விட்டு மக்களை அச்சப்படுத்துகின்றார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கடந்த கால ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தேசிய பூங்கா தொடர்பில் மக்களுடன் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது

குறித்த கருத்தரங்கில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அபிவிருத்தி எங்களுக்கு வேண்டும் தேசிய பூங்கா கட்டாயம் எங்களுக்கு தேவை என்னும் கருத்தை முன்வைத்திருந்தார்

அப்போது அந்தக் கருத்தரங்கில் இருந்த நான் உட்பட ஒரு சிலர் சுமந்திரனின் கருத்தை கடுமையாக எதிர்த்தோம்

தேசிய பூங்காக்குள் மக்கள் குடியிருக்க முடியாது என்பதனை கூறும்போது சுமந்திரன் அவர்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை

இன்று யானைகளை கொண்டுவந்து எமது பகுதிக்குள் விட்டு தேசிய பூங்காவென கூறி எமது மக்களை தமது காணிகளை விட்டு விரட்டியடிக்க பார்க்கின்றார்கள்.அன்று தமிழ் அரசுக் கட்சி இதனை எதிர்த்திருந்தால் இன்று இந்த நிலை மக்களுக்கு வந்திருக்காது

அப்போதைய காலத்தில் இந்த வர்த்தமானியை நீக்குவதாக கூறினார்கள் அவர்களிடம் பெரும்பாண்மை இல்லாததால் அதனை செய்ய முடியவில்லை ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருக்கின்றது.

தேசிய பூங்காவாக அடையாளப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியை அவர்களால் நீக்க முடியும் பெரும்பான்மையை கொண்டு நீக்குவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

https://athavannews.com/2026/1470248

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

6 days 6 hours ago

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

Mar 28, 2026 - 11:01 AM

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். 

இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

இந்த மோதலில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmn9w5z35000a356pv48tkfkz

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

6 days 6 hours ago

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் 

Published By: Vishnu

27 Mar, 2026 | 10:36 PM

image

பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புபேச்சுக்களை பேசுவதை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்தக்கோரி வவுனியா, பிரமனாலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG-20260327-WA0012_1_.jpg

குறித்த ஆர்ப்பாட்டமானது பிரமனாலங்களம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களினால் பிரமனாலங்குளம் சந்தியில் இடம்பெற்றிருந்தது.

IMG-20260327-WA0009.jpg

இதன்போது வெறுப்பு பேச்சுகளை உடனடியாக நிறுத்துங்கள், ஒழுக்க விதிகளை உருவாக்குங்கள், அரசியல் நாகரீகத்தை பேணவும் போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242125

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு

6 days 7 hours ago

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு

Mar 27, 2026 - 11:55 PM

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பான அறிவிப்பு

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. 

அதன்படி, அந்தத் திணைக்களத்தின் கீழுள்ள 73 நீர்த்தேக்கங்களில் தற்போது 76.47 சதவீத நீர் இருப்பு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்கள் 61.84 சதவிகித கொள்ளளவைக் கொண்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 92.01 சதவிகிதமாகும். 

பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களின் நீரின் கொள்ளளவு 94.93 சதவிகிதமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்கள் 91.03 சதவிகிதமாகவும் உள்ளன. 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்கள் 75.14 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்கள் 72.25 சதவிகித நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 92.47 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 76.45 சதவீதமும், மொனராகலை மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களில் 80.17 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பொலன்னறுவையில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 86.55 சதவீதமும், புத்தளத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் 55.98 சதவீதமும் நீரின் கொள்ளளவு உள்ளது. 

திருகோணமலையில் உள்ள ஐந்து நீர்த்தேக்கங்களில் 95.62 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் 59.97 சதவீதமும் நீர் கொள்ளளவு உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

https://adaderanatamil.lk/news/cmn98es4v0007356po4c1a4vf

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது!

6 days 7 hours ago

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது!

Mar 27, 2026 - 11:30 PM

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியினரால் கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmn97i3350006356p3ihngs4f

யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது

6 days 7 hours ago

யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது

Mar 28, 2026 - 07:37 AM

யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், வீட்டு வேலைகளுக்காக 54 வயதுடைய பெண் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக அந்தத் தம்பதியினர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த வீட்டின் பணிப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

அதேவேளை, தான் இதற்கு முன்னர் பணியாற்றிய வீட்டிலும் நகைகளைத் திருடியுள்ளதாக அந்தப் பெண் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார். 

குறித்த பெண்ணைத் தடுத்து வைத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmn9owf250003356pczb28am1

உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி?

6 days 7 hours ago

உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி?

General28 March 2026

1774672422_1771985_hirunews.jpg

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது.

இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது.

கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

https://hirunews.lk/tm/456304/second-place-in-the-world-a-massive-economic-crisis-awaits-sri-lanka

இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

6 days 19 hours ago

இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

Mar 27, 2026 - 09:16 PM

இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன் அனுமதிக்கப்படாதது மற்றும் அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லாதிருந்தது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

எனினும், அந்த நேரத்தில் வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லை எனக் கூறி, மாணவனை அனுமதிக்க வைத்தியசாலை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி வழங்குமாறும், மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி (Ambulance) மூலம் அனுப்பி வைக்குமாறும் மாணவனின் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

எனினும், "நாங்கள் சிகிச்சை அளித்தால் அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறி ஊழியர்கள் முதலுதவி அளிக்க மறுத்துள்ளனர். 

அத்துடன், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி வசதி இல்லை எனக் கூறி, தனியார் வாகனம் ஒன்றில் மாணவனை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து, மயக்கமடைந்த நிலையில் இருந்த மாணவன் முச்சக்கர வண்டி மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் இது குறித்து தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் முறையான விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmn92ox2h0003356p4aineolu

புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல் !

6 days 20 hours ago

புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல் !

27 Mar, 2026 | 05:12 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த. உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம், பெற்றோரது தொழில் தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி மற்றும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம், ( 36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம், (இல. 42, ஹில்பஹந்துர மாவத்தை, அம்பிட்டிய வீதி, கண்டி), இலங்கை ஆகிய முகவரிகளிலும் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ.இலக்கம்-882, காலி வீதி, கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2026 ஏப்ரல் 28ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும்.

WhatsApp_Image_2026-03-27_at_16.56.36.jp

https://www.virakesari.lk/article/242105

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வு!

6 days 20 hours ago

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வு!

27 Mar, 2026 | 03:19 PM

image

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 09:00 மணியளவில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் வரவேற்புரையாற்றுகையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியினை உச்சளவில் பயன்படுத்தி, மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும் ஆக்கபூர்வமான கருத்துகளுடன் மாவட்டத்தின் சமூகப் பொருளாதார வாழ்வியலை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் சர்வதேச ரீதியாகப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அத்தியாவசியச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளதால் இக்கூட்டம் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன:

மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ள காணி விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய எரிபொருள் விநியோக நடைமுறைகள் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள்.

நகர அபிவிருத்தித் திட்டம், 'சமூக சக்தி' நிகழ்ச்சித் திட்டம் மற்றும் 'தூய இலங்கை' (Clean Sri Lanka) வேலைத்திட்டங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடந்த காலத் தீர்மானங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வட மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

001__7_.jpg

001__8_.jpg

001__1_.jpg

001__3_.jpg

001__2_.jpg

001__5_.jpg

https://www.virakesari.lk/article/242088

அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

6 days 20 hours ago

அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

Mar 27, 2026 - 11:10 AM

அமைச்சர் குமார ஜயக்கொடியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான அமைச்சர் குமார ஜயக்கொடி நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார். 

குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

அத்துடன், அவரது விரல் அடையாளங்களைப் பெற்று அது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முன் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படவுள்ளது. 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டின்படி, 2016 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, கொள்முதல் செயல்முறை ஒன்றின் ஊடாகத் தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmn8h2h8k000f356p1tglksu1

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

6 days 21 hours ago

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Mar 27, 2026 - 06:41 PM

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

இவ்விடயத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

'வெரிட்டே ரிசர்ச்' (Verité Research) நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரச பிணையங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்த தகவல்களை கோரியிருந்தது. 

குறித்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற திகதிகள், அவற்றின் செயல்திறன், விலைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்த விரிவான பதிவுகள் உள்ளிட்ட விபரங்களை அது கோரியிருந்தது. 

இது தொடர்பாக மத்திய வங்கி சில பொதுவான தகவல்களை வெளியிட்ட போதிலும், இவை வணிக ரீதியாக உணர்திறன் மிக்கவை என்பதாலும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1) பிரிவின் கீழ் உள்ள விதிவிலக்குகளுக்குள் வருவதாலும், விரிவான தகவல்களை வழங்க மறுப்புத் தெரிவித்தது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(d) பிரிவின் கீழ், மூன்றாம் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வணிக ரீதியான இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான விதிவிலக்கிற்குள் இந்தத் தகவல்கள் அடங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிதியத்தின் மூலோபாயங்கள் பகிரங்கப்படும் என நீதிமன்றம் அவதானித்துள்ளது. 

இதன் மூலம் அரச பிணையங்கள் ஏலத்தில் சந்தையிலுள்ள ஏனைய தரப்பினர் முன்கூட்டியே எதிர்வுகூறல்களை மேற்கொண்டு தந்திரோபாய ரீதியில் ஏலங்களை சமர்ப்பிக்க முடியும். 

இது இறுதியாக மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிதியத்தின் போட்டித்தன்மை மற்றும் இலாபமீட்டலைக் குறைக்கும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

நிதியத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மத்திய வங்கிக்குள்ள பொறுப்பை வலியுறுத்திய நீதிமன்றம், இவ்வாறான உணர்திறன் மிக்க நிதித் தகவல்களை வெளியிடுவது நிதியத்தின் சந்தை ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. 

நிதியத்தின் வெளிப்படைத்தன்மையானது வருடாந்த அறிக்கைகள், கணக்காய்வாளர் நாயகத்தின் தணிக்கை மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை போன்ற சட்டரீதியான பொறிமுறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பொது நலன் சார்ந்த விடயத்தில், இந்தத் தகவல்களை வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள், ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விடவும் அதிகம் என்பதை நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் முடிவெடுத்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmn8x6xuo0000356p9xf3491g

https://epf.lk/

https://etfb.lk/ta/home/

75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!

1 week ago

images-93.jpg?resize=275%2C183&ssl=1

75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது.

https://athavannews.com/2026/1470218

யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு!

1 week ago

IMG-20260327-WA0023.jpg?resize=750%2C375

யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Marc Andre Franche  மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார்.

https://athavannews.com/2026/1470236

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை!

1 week ago

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை!

வெள்ளி, 27 மார்ச் 2026 05:41 AM

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - கதிர்காமத்திற்கான பாரம்பரிய புனித பாதயாத்திரை, ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இலங்கையின் மிக நீண்ட இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமியுடன் 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இம்முறை 95 யாத்திரிகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் இந்தப் பாரம்பரிய பாதயாத்திரை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் கடந்து செல்லவுள்ளது.

சுமார் 52 நாள்கள், 572 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/55871

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr