ஊர்ப்புதினம்

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

1 month 3 weeks ago

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

09 Feb, 2026 | 10:10 AM

image

யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/238192

உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது ; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம்

1 month 3 weeks ago

உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது ; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம்

08 Feb, 2026 | 11:58 AM

இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை என்பதற்கு மணலாறு (வெலிஓயா) ஒரு உதாரணமாகும். அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது.

மொழி உரிமை மிகமுக்கியம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் அவ்வுரிமை மறுக்கப்படுகின்றது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், அக்கூட்டம் வழமைக்கு மாறாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றமை குறித்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 

மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்றது. மணலாறு தற்போது வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து அனைவருக்கும் தெரியும். இந்தக் கூட்டத்தில் வவுனியா வடக்கு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் கலந்துகொள்வது வழமையாகும். ஒவ்வொரு முறையும் இக்கூட்டத்துக்கு வவுனியா வடக்கு தவிசாளர் கிருஷ்ணவேனி சமுகமளிப்பார்.

இக்கூட்டத்தில் பங்கேற்பவர்களில் அநேகமானோர் தமிழர்களாவர். அதன்படி இந்தக் கூட்டம் இதுவரை காலமும் மொழிபெயர்ப்புடனேயே நடைபெற்றுவந்தது. ஆனால் இம்முறை இக்கூட்டம் நடைபெறவதற்கு முதல்நாள் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக சகலரும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

இத்தகைய பின்னணியில் மறுநாள் இந்தக் கூட்டம் நடைபெற்றபோது வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளருக்கு வழமையாக ஆசனம் ஒதுக்கும் இடத்தில் ஆசனம் ஒதுக்கப்படவில்லை. மாறாக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருடன் அமரமுடியாது எனவும், ஆகவே கீழே அமருமாறும் கூறப்பட்டது.

இருப்பினும் இருக்கையை வழமைக்கு மாறாக மாற்றமுடியாது எனக் குறிப்பிட்ட தவிசாளர் மேடையிலேயே அமர்ந்தார். அதன் பின்னர் இக்கூட்டம் முழுமையாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றது. மொழிபெயர்ப்பு கோரிய போதிலும், அது வழங்கப்படவில்லை. ஆகையினால் தவிசாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

தேசிய சுதந்திரதினக்கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட தாம் அனைவரும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது கிடையாது எனவும், மாறாக நாம் நடத்திய போராட்டமே இனவாதப் போராட்டம் எனவும் கூறியிருந்தார்.

அவ்வாறிருக்கையில் வவுனியா வடக்கு தவிசாளரையும், அங்கிருந்த மக்களையும் புறக்கணித்து, மொழிபெயர்ப்பு இல்லாமல், கூட்டத்தைத் தனிச்சிங்களமொழியில் நடத்தியமையை எவ்வாறு வர்ணிப்பது என்பதே இப்போது எமக்கு இருக்கும் கேள்வியாகும். இதனை இனவாதம் என்பதா? இல்லாவிடின் வேறு எவ்வாறு கூறுவது? எனக் கேள்வி எழுப்பினார்.

https://www.virakesari.lk/article/238141

பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

1 month 3 weeks ago

பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

08 Feb, 2026 | 01:08 PM

image

(நமது நிருபர்)

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமெனஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிடுகையில்,

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய பாடசாலைகளில் இனிமேல் பண வசூலிப்பு இடம் பெறாது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் முழுப் பாடசாலைக் கட்டமைப்பும் பெற்றோரின் பணத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.

2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடசாலையின் முழுச் செலவையும் மாணவர்களின் எண்ணிக்கையினால் பிரித்து பெற்றோரிடம் அறவிடும் முறைமையே தற்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பிரபல்யமான பாடசாலைகளில் வர்ணம் பூசுதல்  தளபாடங்கள் திருத்தம் செய்தல் போன்ற காரணங்களைக் கூறி ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 3000 முதல் 5000 ரூபா வரை பணம் அறவிடப்படுகிறது. 

இவ்வாறான வசூலிப்புகள் பாடசாலை வங்கிக் கணக்குகளில் இடப்படாமல் வகுப்புக் குழுக்கள் என்ற பெயரில் தனிப்பட்ட பெற்றோரின் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றன. இதன் மூலம் பாடசாலை நிர்வாகம் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக்கொள்ள முற்படுகிறது.

கல்வி அமைச்சரின் வெற்று வார்த்தைகளால் மட்டும் இதனைத் தடுத்துவிட முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று ' எனது வாய்ச் சொல்லே சுற்றறிக்கை' என்று கூறாமல் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் . அந்தச் சுற்றறிக்கையை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன் பல முன்னணிப் பாடசாலைகளின் கணக்குகளில் பல கோடி ரூபா பணம் நிலையான வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முறையான கணக்காய்வு நடத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி என்பது உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் பெற்றோர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த நிதிப் பாரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடியே இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/238150

கிழக்கின் முக்கிய சுற்றுலாத்தலத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கடும் அவதி

1 month 3 weeks ago

கிழக்கின் முக்கிய சுற்றுலாத்தலத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கடும் அவதி

08 Feb, 2026 | 03:41 PM

கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரையில், நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்களின் தொல்லையினால் அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்காக வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சுற்றுலா வரும் அதிகளவிலான உள்நாட்டுப் பயணிகள் காத்தான்குடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இங்கு அவர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட வரவேற்பு மண்டபங்களும், தங்குமிட விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், காத்தான்குடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உடற்பயிற்சியாளர்களுக்குக் குறித்த கட்டாக்காலி நாய்களினால் பெரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இவை மனிதர்களைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, குறித்த நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

20260131_094614.jpg

20260131_094838.jpg

https://www.virakesari.lk/article/238159

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

1 month 3 weeks ago

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

08 February 2026

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

https://hirunews.lk/tm/445276/sridelo-party-leader-p-udayarasa-arrested

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம்

1 month 3 weeks ago

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு கோரியும் யாழ்ப்பாண நகரில் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. 

அத்துடன் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவதற்குப் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர். 

இதில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சமூக உரிமைகளுக்கான இயக்கம் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlaxmt2f0000356ng17zf1vu

டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா

1 month 3 weeks ago

டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. 

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவு சேதங்கள் 'டித்வா' புயலினால் ஏற்பட்டதோடு, இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது. 

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர். 

புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையினதும், இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளின் ஆதரவும் கிடைக்கிறது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

https://adaderanatamil.lk/news/cmldqjgy6000d356ng4c71y94

சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

1 month 3 weeks ago

சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

08 Feb, 2026 | 11:02 AM

image

(இராஜதுரை ஹஷான்)

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பியதை போன்று தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் விலைகளை அதிகரித்துக் கொள்கிறது.

நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேள்வியெழுப்பிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கேள்வியெழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

லாப் நிறுவனம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4330ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1742 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பிள் தலைவர் ரஞ்சித் விதானகே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் விரும்பிய வகையில் ஏனைய நாடுகளுக்கு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் தனது விருப்பத்துக்கு அமைய சிலிண்டரின் விலையை அதிகரித்துக் கொள்கிறது.

எரிவாயு உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அவர்களே விலைகளை அதிகரித்துக்கொள்கிறார்கள்.நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேட்கிறோம். ஆகவே நுகர்வோருக்கு சாதகமான வகையில் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாட்டு விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இதற்கமை லிட்ரோ நிறுவனம் கடந்த மூன்று மாதகாலமாக விலைகளை திருத்தம் செய்யவில்லை. 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 3690 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1482 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் தேசிய மட்டத்தில் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.இருப்பினும் நாட்டின் மற்றும் நிறுவன கட்டமைப்பின் நிதி நிலைமை காரணிகள் ஊடாக சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதகாலமாக விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை என்று லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/238131

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

1 month 3 weeks ago

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

Feb 8, 2026 - 12:27 PM

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. இதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பதாரர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில், வடக்கு மாகாணத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் 253 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 135 சதவீதத்தாலும், மத்திய மாகாணத்தில் 116 சதவீதத்தாலும், ஊவா மாகாணத்தில் 108 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

47 வருடங்களாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்விப் புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் அவசர அனர்த்த உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்கள் இப்போது தமது பிரதேச செயலகங்கள் ஊடாக இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlddx3v70010356npt038g61

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் ராஜபக்ஷர்கள் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

1 month 3 weeks ago

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷர்கள் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

08 Feb, 2026 | 12:36 PM

image

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது. வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா? வழக்கு விசாரணையை நாளாந்தம் முன்னெடுக்காமல் புதுக்கடை நீதிமன்றத்தில் மூன்று மாதத்தக்கு ஒருமுறையா விசாரிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை செய்தது யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார்? என்பதையும் அறிவார்கள். அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர கால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் சொல்வதற்கு முரணாக செயற்படுகிறார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது.

அமைச்சரின் பங்களாவில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது, விசாரணைகள் தினசரி இடம்பெறுவதால் சாட்சியாளர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் முன்னிலையாகுவதற்கு கடினமாக உள்ளது, அதேபோல் பிரதான சூத்திரதாரி இல்லாமல் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்கள்.

ஏதேனும் வழக்குத் தொடர்பில் நாளாந்தம் விசாரணைகளை முன்னெடுப்பதில் தவறேதும் உள்ளதா என்பதை நீதியமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என சபையில் இருந்த நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தண்டனைச் சட்டக்கோவையின் பிரகாரம் நாளாந்தம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தான் விதிமுறை,சட்டத்தரணிகள் பகிரங்க நீதிமன்றில் முன்னிலையாகுவார்கள். அமைச்சரின் பங்களா என்று குறிப்பிட்டாலும் அதுவும் அரச சொத்துதான்.

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். இதற்கு புதிய நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணிக்க முடியாது. அரச கட்டடங்கள், பங்களாக்களையே பயன்படுத்த முடியும். இன்னும் ஐந்து,ஆறு நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படும்.

வழக்கு விசாரணைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்படும்.எதிர்க்கட்சியின் உறுப்பினர் நீதிக்காகவும், உண்மைக்காகவும் பேசவில்லை. குற்றவாளிகளுக்காகவே முன்னிலையாகியிருந்தார். பேசினார் என்றே எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் படுகொலையாளிகளின் நிலைப்பாட்டையே எதிர்க்கட்சி தற்போது கொண்டுள்ளது.வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது.

அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நீதிமன்றமாக மாற்றியமைத்து, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா?

வழக்கு விசாரணையை நாளாந்தம் முன்னெடுக்காமல் புதுக்கடை நீதிமன்றத்தில் மூன்று மாதத்தக்கு ஒருமுறையா விசாரிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை செய்தது. யார், அரசியல் பிரதான சூத்திரதாரி யார் என்பதையும் அறிவார்கள்.

அது ராஜபக்ஷர்கள் என்பதையும் அறிவார்கள். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சானி அபேசேகர, ரவி செனவிரத்ன மற்றும் ஏனைய விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகவே எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.

இவர்கள் படுகொலையாளிகளின் பைகளில் இருந்துக்கொண்டு பேசுகிறார்கள்.குண்டுத்தாக்குதல் படுகொலையாளிகளுக்காக முன்னிலையாகும் கீழ் நிலைக்கு எதிர்க்கட்சியினர் விழுந்துள்ளார்கள். இவர்களின் நிலைமை கவலைக்குரியது என்றார்.

https://www.virakesari.lk/article/238144

கடன்சுமை காரணமாக யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

1 month 3 weeks ago

யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

08 Feb, 2026 | 10:05 AM

image

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை (06)  வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/238121

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

1 month 3 weeks ago

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

Published By: Digital Desk 1

08 Feb, 2026 | 09:20 AM

image

தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/238117

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

1 month 3 weeks ago

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

Published By: Digital Desk 1

07 Feb, 2026 | 01:45 PM

image

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது.

'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது.

மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைப்பால் 'INS GHARIAL' போர்க்கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் ஒப்படைக்கப்பட்டதும் இந்தக் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2026-02-07_at_13.32.18.jp

WhatsApp_Image_2026-02-07_at_13.32.19__1

WhatsApp_Image_2026-02-07_at_13.32.19.jp

WhatsApp_Image_2026-02-07_at_13.32.20.jp

https://www.virakesari.lk/article/238075

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

1 month 3 weeks ago

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்

தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது.

அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர்  கட்டியமைத்தார்? 

மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது.

மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.

தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. 

அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/54835

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

1 month 3 weeks ago

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

sumanthiran-721x470.webp

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது.

நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது.

கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது.

கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது.

இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://akkinikkunchu.com/358888/

தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!

1 month 3 weeks ago

தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. 

இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளதாகவும், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmlbz0812000k356np5y299h9

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!

1 month 3 weeks ago

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!

adminFebruary 7, 2026

01-2.jpg?fit=1170%2C780&ssl=1

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும்.

இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள்.

இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும்.

பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன

இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://globaltamilnews.net/2026/228569/

அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 3 weeks ago

அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Vishnu

07 Feb, 2026 | 05:53 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க  அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற  முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற  பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர் மேலும் உரையாற்றியதாவது,

அவசரகால சட்டம் தொடர்பான  அரசாங்கத்தின்  தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம். இதன்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்போம். நாங்கள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் புதிதாக பதிவு செய்யத் தேவைப்படாது.

இப்போது கூட தையிட்டியில் நாங்கள்  போராடும் போது பொலிஸார் வழமைப் போன்று நடவடிக்கை எடுக்கின்றனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காட்டி நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு மற்றும்  கிழக்கில் அரசியல் ரீதியில் அரசாங்கத்தை எதிர்க்கும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

டித்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும்  கிழக்கும்  பாதிக்கப்பட்டுள்ளன.

பேரிடர்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை பேய் காட்ட முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் உங்களுக்கு தேவைப்படும் அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கூறியுள்ளனர். அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த அரசாங்கம் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025ஆம் ஆண்டில் 15 ரோலர்களும்,  இந்த வருடத்தில் 6 ரோலர்களை மட்டுமே பிடித்துள்ளீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கான படகுகள் வந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிக்கின்றன.

கடந்தகால  ஆட்சியாளர்களும் இவ்வாறே செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டில் இருந்து 500 இந்திய ரோலர் படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 319 படகுகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. 30 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2871 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2779 பேர் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியொரு நிலைமை இருக்கையில் அரசாங்கமும் ஏன் இப்படி நடந்துகொள்கிறது. இராஜதந்திரம்,  இந்தியாவை பகைக்கக்கூடாது என்று கூறுகின்றீர்கள். இதுபோன்று தெற்கில் நடந்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். படகுகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க முடியதா?

இதேவேளை திருகோணமலையில் கடந்த முதலாம் திகதி கோகன்ன ரஜமகா விகாரையின் காலமான விகாராதிபதியின் உடல்  ஹேய்சர்  விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. அந்த மைதானத்தை தமிழ் சிறுவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கமைய எரிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கால் வைப்பதில்லை. ஆனால் தேரர் ஒருவர் அவ்விடத்தில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களால் விளையாட முடியாது.

இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238037

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

1 month 3 weeks ago

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Feb 6, 2026 - 09:30 PM

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு அபாயகரமான கோடாலி உள்ளிட்ட ஏனைய சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவுப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlb2mzj0000g356nm8c6opol

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr