ஊர்ப்புதினம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன்

1 month 3 weeks ago

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன்

04 Feb, 2026 | 06:23 PM

image

(நா.தனுஜா)

தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்' (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen's constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் 2022 ஆம் ஆண்டு உருவான 'அரகலய' மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் பின்னரேயே தீவிரமடைந்திருக்கின்றன. இருப்பினும் அதன் பின்னரான தேர்தல்களில் வாக்களித்த தமிழ்மக்கள், தமக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமையளித்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வாக்களித்திருக்கிறார்கள்.

அந்தவகையில் தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும்.

அதேபோன்று இலங்கை ஒரு பல்லின அரசு என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டறியவேண்டும். அதனூடாக மாத்திரமே சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அரசியலமைப்பை உருவாக்கமுடியும்.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்பில் சில சொற்பதங்களை உள்ளடக்கிவிட்டு, அதனை சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்குப் பிறிதொரு விதமாகவும் கூறி சமாளிக்கமுடியாது. அதனடிப்படையிலேயே கடந்த காலங்களில் 'ஒருமித்த நாடு' மற்றும் 'ஏக்கிய இராச்சிய' உள்ளிட்ட சொற்பதங்கள் தொடர்பான தர்க்கங்கள் உருவாகின.

தற்போது பெரும்பான்மைப்பலத்துடன் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான அரசியலமைப்பை உருவாக்குவதற்கும், அதனை அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குமான பெருவாய்ப்பு காணப்படுகின்றது. அவ்வாய்ப்பு உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/237833

இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் சிறுபான்மை மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் - மேயர் அதாவுல்லா

1 month 3 weeks ago

இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் சிறுபான்மை மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் - மேயர் அதாவுல்லா

05 Feb, 2026 | 09:52 AM

image

(ஏ.எல்.நிப்றாஸ்)

நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மூவின மக்களும் இணைந்து காலனித்துவ சக்திகளிடம் இருந்து மீட்டெடுத்த நாட்டின் வளங்கள் சரியான முறையில் பகிரப்படவில்லை. மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை உணரச் செய்வது அவசியம்.

இதன் ஒரு அங்கமாக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைவாக அனைத்து வளங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அக்கரைப்பற்றில் நேற்று புதன்கிழமை (4) இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய மேயர் அதாவுல்லா மேலும் கூறுகையில்

இலங்கையின் வளங்களை கொள்ளையிடுவதற்காக காலனித்துவாதிகள் நாட்டுக்குள் வந்தனர். மூவின சமூகங்களும் ஒன்றுபட்டு போராடி சுதந்திரத்தை பெற்றோம்.

ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகும் இலங்கையின் வளங்கள் மீது வெளிநாட்டுச் சக்திகள் குறியாக உள்ளன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இலங்கை தன்னகத்தே எல்லா வளங்களையும் வைத்துக் கொண்டு வெளிநாடுகளிடம் எல்லாவற்றுக்கும் கையேந்துகின்ற பாணியிலான ஒரு பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்கக் கூடாது. நமது வளங்கள் சரியாக பராமரிக்கப்பட்டுரூபவ் உள்நாட்டுப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இப்போது மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சர் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே யுத்தமொன்று ஏற்பட்டு அதன் விளைவாக இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

வளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அவற்றில் இருந்து உச்சபட்ச பலனைப் பெறுவதற்கு இரு மொழிகளை பேசும் நான்கு இன மக்களும் முன்னிற்க வேண்டும். மிக முக்கியமாக இன விகிதாரசத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் இனிமேலாவது பகிரப்பட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்கள் சுதந்திரத்தின் பரிணாமங்களை உணர்வார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/237856

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு!

1 month 3 weeks ago

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு!

05 FEB, 2026 | 12:08 PM

thumb_large_336133947_940223833670621_58

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/237871

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

1 month 3 weeks ago

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 

டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cml92e02104tuo29n0fquk4up

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

1 month 3 weeks ago

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

image_ec997cd199.jpg

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05)  காலை 8.30 மணியளவில் குளவி  கூடு கலைந்து மாணவர்கள்  குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று  கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு  மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

 இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,  மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

  பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள்   நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குளவி கூட்டின் ஆபத்து குறித்தும்  அதை அகற்ற வேண்டும்  என்று  இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

https://www.tamilmirror.lk/செய்திகள்/கிளிநொச்சியில்-குளவி-கொட்டு-39-மாணவர்கள்-பாதிப்பு/175-372041

தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

1 month 3 weeks ago

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

05 Feb, 2026 | 10:55 AM

image

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.

திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது.

அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் படுகொலை செய்யப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு அகவை 3.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின்  துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல்  பணிமனையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.

IMG-20260205-WA0026.jpg

IMG-20260205-WA0024.jpg

IMG-20260205-WA0013.jpg

IMG-20260205-WA0014.jpg

IMG-20260205-WA0032.jpg

IMG-20260205-WA0010.jpg

IMG-20260205-WA0011.jpg

IMG-20260205-WA0000.jpg

https://www.virakesari.lk/article/237865

அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர

1 month 3 weeks ago

அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர

04 Feb, 2026 | 06:13 PM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார்.

78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/237826

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை

1 month 3 weeks ago

04 Feb, 2026 | 10:01 AM

image

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட்  மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. 

குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர்.

அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

d8e8dd73-b629-4859-aa23-cc70fdceaadc__1_

e9743888-4b7f-48a5-83ff-3ae7bb326f9f.jpe

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk

ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

1 month 3 weeks ago

04 Feb, 2026 | 10:34 AM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம்  அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த  5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk

புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன!

1 month 3 weeks ago

04 Feb, 2026 | 03:44 PM

image

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி  தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித  தாதுக்கள்  கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த புனித  தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர்.

இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

626945807_1197675829206170_7339631689589

627124585_1197675879206165_6990676533264


புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன! | Virakesari.lk

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு

1 month 3 weeks ago

04 Feb, 2026 | 05:55 PM

image

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை  (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பெண்கள்  இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின்  சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி,  மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Screenshot_20260204-141707__1_.jpg

IMG_20260204_142551_0.jpg

IMG_20260204_142957_2.jpg

Screenshot_20260204-141917__1_.jpg


“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு | Virakesari.lk

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

1 month 3 weeks ago

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

03 Feb, 2026 | 03:41 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கான கடிதத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக பதவி வகிக்கும் எஸ். சிறீதரன் கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியினால் பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தமிழரசுக்கட்சியினதும் தமிழ் மக்களினதும் நிலைபாடுகளுக்கு முரண்பாடானதெனத் தெரிவித்து அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியது

இவ்வாறான பின்னணில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இனி பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராக பதவி வகிக்க கூடாது என அவருக்கு கட்சியால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து எஸ். சிறிதரன் அண்மையில் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைமையினால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/237716

நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள்

1 month 3 weeks ago

நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள்

Published By: Vishnu

04 Feb, 2026 | 04:24 AM

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (3) வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்மு ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை. எனினும் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டி அல்லது அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டி , தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மக்கள் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.

சுதந்திர தினம் அல்லது ஏனைய தேசிய நிகழ்வுகளின் போது நாட்டு மக்கள் ஒன்றிணையும் போது, இவ்வாறான கருத்துக்களை வெளியிடப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவை சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் பிரச்சினையே அன்றி, அது நாட்டு பிரச்சினையல்ல. எனவே அவரால் அவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அது கவலைக்குரியதாகும்.

இந்நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என்றார்.

https://www.virakesari.lk/article/237756#google_vignette

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)

1 month 3 weeks ago

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)

Feb 4, 2026 - 07:44 AM

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)

78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. 

"இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. 

சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வை நேரலையில் பார்வையிட,

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் டிவி தெரண (TV Derana) மற்றும் அத தெரண (Ada Derana) ஊடாக ஒளிபரப்பப்படும். 

இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பிரதம நீதியரசர் திரு. பிரீதி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தார். 

இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவும் விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். 

அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் வருகைத் தந்தார்.

https://adaderanatamil.lk/news/cml7e95a704sto29nfweznwp5

ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு

1 month 3 weeks ago

ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு

Published By: Vishnu

04 Feb, 2026 | 03:45 AM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் காலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இம்முறை வெளிநாடுகளிலிருந்து விசேட அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாண்டு இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், செலவுகளை 60 - 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் காலை 6 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

சர்வமத வழிபாடுகள்

அத்தோடு காலை 5.30 மணி முதல் சர்வமத வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. பௌத்த மத வழிபாடுகள் கொள்ளுபிட்டி - தர்மகீர்த்திராம விகாரையிலும், இந்து மத வழிபாடுகள் மயூராபதி பத்திரகாளி அம்மன் கோவிலிலும், கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலும், கிருஸ்தவ ஆராதனைகள் கிரிமண்டல மாவத்தை மக்கள் தேவசபை தேவாலயத்திலும், இஸ்லாமிய வழிபாடுகள் கொழும்பு - ஜூம்மா மஸ்ஜித்திலும் இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதிகள் வருகை

நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் காலை 7 மணி முதல் வருகைதரவுள்ளனர். தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரது வருகையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய கொடியை ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். அத்தோடு தாய் நாட்டின் சுதந்திரத்திலும், இறையான்மையிலும் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் நிரந்தர இருப்பிற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இலங்கை பிரஜைகளுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

4000 வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு 

தொடர்ந்து ஜனாதிபதிக்கான மரியாதை வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் அவரால் நாட்டு மக்களுக்கு விசேம உரையாற்றப்படும். காலை 8.45 மணி முதல் 9.30 மணி வரை முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை, தேசிய மாணவர் படையணி என்பவற்றால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும். இதில் 1962 இராணுவத்தினர், 693 கடற்படையினர், 583 விமானப்படையினர், 352 பொலிஸார், 278 சிறப்பு பொலிஸ் பணிப்பிரிவினர், 183 சிவில் பாதுகாப்பு திணைக்களம், 507 தேசிய மாணவர் படையணி, 22 ஓய்வு பெற்ற பாதுகாப்பு படையினர் மற்றும் 22 அங்கவீனமுற்ற பாதுகாப்பு படையினர் உள்ளடங்களாக 4602 படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 7 ஆயுதமேந்திய வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் கடற்படையினரால் காலி முகத்திடலில் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன.

போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு அதிகாலை 4.45 மணி முதல் சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்த வீதிகள் முற்றாக மூடப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. நிகழ்வுகள் நிறைவடைந்து பிரதம அதிதிகள் வெளியேறும் வரை குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்படுத் என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/237749

யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்!

1 month 3 weeks ago

யாழ். மாவட்டத்தில்  சுதந்திர தினம்!

adminFebruary 4, 2026

IMG_4417.jpeg?fit=1170%2C780&ssl=1

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், காவற்துறை  கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

https://globaltamilnews.net/2026/228339/

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

1 month 3 weeks ago

AKD.jpg?resize=750%2C375&ssl=1

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி.

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,

பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். 

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட  குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில்   வெற்றி பெற்றுள்ளோம்.

சவால்களுக்கு மத்தியில், கூட்டாகவும் உறுதியுடனும் செயற்பட்டு நமது நாட்டை தூய்மையான அரசியல் கலாசாரத்திற்குள் கட்டியெழுப்பப்பட்ட அழகான இலங்கையாக சர்வதேச அளவில் முத்திரை பதிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். 

நாம் பெற்றுள்ள பேரண்டப் பொருளாதார நன்மைகள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இன சமூகங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த முக்கிய நோக்கம் ஆகும்.

அவ்வாறு இன்றி, புதிதாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தி செயல்முறையின் உண்மையான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அண்மைய காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. 

அந்த அனர்த்தத்தின் அனுபவம் வேதனையாக இருந்தபோதிலும், கடந்த ஒன்றரை வருட குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் பணியில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றோம்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில், நமது நாட்டை சரியான திசையில் வழிநடத்தவும், தேசிய ரீதியில் அடையவேண்டிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையாக வாழவும் வரலாற்றில் கிடைத்த பொன்னான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்பட்டுள்ளன. 

இருப்பினும், இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், நமது நாட்டை முன்பை விட மிகவும் முன்னேறிய, வலிமையான மற்றும் கௌரவத்துக்குரிய நாடாக மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் செயல்படுவோம். 

நமது பெருமைமிக்க கலாசாரம், பண்டைய வரலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதன் மேல் உறுதியாக நிலைத்து நின்று, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்களின் ,பெருமைமிக்க நாடு பற்றிய கனவு கலைந்த போதும் , இருபத்தியோராம் நூற்றாண்டில் அந்தக் கனவை நனவாக்கி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான மற்றும் சிறந்த நாடாக இலங்கையை  கட்டியெழுப்பி, நாம் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன். 

இதன்போது, இந்நாட்டின் அனைத்து மக்களின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் நாம்  வலுவான நம்பிக்கை  கொண்டுள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை,உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்றார்.

https://athavannews.com/2026/1463023

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

1 month 3 weeks ago

GOVPAY.jpg?resize=750%2C375&ssl=1

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ பயன்பாட்டைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 46,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மொத்தம் 46,635 வாகன சாரதிகள் ‘GovPay’ செயலி மூலம் அபராதம் செலுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தினர்.

அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1463152

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

1 month 3 weeks ago

IMG-20260204-WA0015-scaled.jpg?resize=75

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

IMG-20260204-WA0014.jpg?resize=600%2C338&ssl=1

தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந் நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

IMG-20260204-WA0013.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2026/1463127

சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை - அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்

2 months ago

சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை -அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்

03 Feb, 2026 | 04:50 PM

image

(நா.தனுஜா)

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்று திங்கட்கிழமை (2) நெடுங்கேணியில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என்ற கோஷத்துடன் பாரிய மக்கள் எழுச்சிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் இப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 'குடியேற்றத்திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மை.

எனவே புதிய குடியேற்றத்திட்டங்கள் வரும்போது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானதேயாகும். இருப்பினும் கிவுல் ஓயா திட்டம் நிச்சயம் வரும். அது தமிழ் மக்களுக்கான குடியேற்றத்திட்டமே தவிர, சிங்களவர்களுக்கான திட்டமல்ல' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சந்திரசேகரின் கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புதிய குடியேற்றங்கள் நிறுவப்படும் என கிவுல் ஓயா திட்டத்தில் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் அதனை முழுமையாக வாசிக்காமல் கருத்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

'கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என்றும், தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்டிருப்பவர்கள் அனைவரும் சிங்களவர்களாவர். அவ்வாறானதொரு பகுதியில் குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே அங்கு குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பவில்லை எனக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது' எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.

அத்தோடு இத்திட்டத்தின் மூலம் மூழ்கடிக்கப்படும் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகள் எனவும், அதன்மூலம் பெறப்படும் நீர் அங்குள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு விநியோகிக்கப்படபோவதாகவும் தெரிவித்த அவர், ஆகவே அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் இடமளிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் பேசுவதில் எவ்வித பயனுமில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், மாறாக இதுபற்றி இவ்விடயதானத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத்துறை அமைச்சரே பேசவேண்டும் என்று வலியுறுத்தினார்.

'அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆகவே கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளில் சிங்களவர்களே குடியேற்றப்படுவார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏனெனில் சந்திரசேகர் கூறுவதை அவ்வாறே நம்புவதற்கு அவர் ஒன்றும் கடவுள் அல்ல.

அதேபோன்று தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது என நம்புவதற்கு ஏதுவான வகையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக கடந்தகால நிலைவரங்களே தற்போதும் தொடர்கின்றன.

ஆகவே முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். 

https://www.virakesari.lk/article/237733

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr