ஊர்ப்புதினம்

கச்சத்தீவில் அரசியல் வேண்டாம் - வட மாகாண மீனவர் சங்கம்

2 months ago

கச்சத்தீவில் அரசியல் வேண்டாம் - வட மாகாண மீனவர் சங்கம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அன்னலிங்கம் அன்னராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். 

கச்சத்தீவு வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக கச்சத்தீவு வரும் இந்திய மீனவர்கள், அங்கு இலங்கை - இந்திய மீனவ விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன் அதனை யாத்திரைத் தளமாக மாத்திரம் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்திய சட்ட சபைத் தேர்தல் அண்மையில் வரவுள்ளதால் நீண்ட காலமாக நிலவி வரும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையும் தேர்தலின் பேசுபொருளாக மாறியுள்ளது. 

எனவே அதனடிப்படையில் இங்கு நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசாங்கம் மற்றும் மீனவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cml4synui04qio29nxfwe2i56

திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

2 months ago

திருகோணமலை சம்பவம் - கைதான தேரர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.  

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.  

இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.  

இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (2) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  

இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cml4otgnp04q4o29nwq0aiiuy

‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

2 months ago

‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

Published By: Vishnu

02 Feb, 2026 | 04:41 AM

image

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டதோடு, வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு முடிவடைந்த நிலையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதி மொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்,மேற்கூறிய உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளி பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது.

இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாச்சார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது.

சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப் படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நீர் தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்த மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

இதன்விளைவாக, கல்லு,ஈச்சங்குளம்,கூழாங்குளம்,காட்டு பூவரசங்குளம்,காஞ்சூர மோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும்குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

பெரியமேலும், 1921 ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தலின் மூலம் 'ஒதுக்குக் காடாக' அறிவிக்கப்பட்ட கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரில் மூழ்க போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

இத்தகைய பின்னணியில்,இந்த நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப் படுவதை 'தொல்லியல் பாதுகாப்பு' என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவு களுக்குரிய

ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனுடன், கொக்குத்தொடுவாய் சூரிய நாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1,990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இது, இப்பிரதேசங்களில் இனப்பரம்பல் அமைப்பையும், சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாக பார்க்கப்படுகிறது.

எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமை உடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால், அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலம் சாத்தியமாகும் என்பதை அரசிற்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் .என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237583

நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்னவர் வள்ளுவர்: வவுனியாவில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை

2 months ago

நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்னவர் வள்ளுவர்: வவுனியாவில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை

01 Feb, 2026 | 05:09 PM

image


நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாகத் திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், 'மனித மாண்பு' எனும் தொனிப்பொருளிலான 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த கருத்துகளைத் தற்காலக் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது, வள்ளுவரின் தீர்க்கதரிசனம் எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உதாரணமாக, 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு' என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை, வள்ளுவர் அன்றே,

'பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்' என்ற குறளின் மூலம் மிக எளிமையாக விளக்கியுள்ளார். நாம் ஒருவருக்குத் துன்பம் இழைத்தால், அது நிச்சயம் நமக்கே திரும்பி வரும் என்ற வாழ்வியல் உண்மையை அறிவியல் பூர்வமாக அவர் அன்றே எடுத்துரைத்துள்ளார்.

மனிதன் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறும் நூல் திருக்குறள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வள்ளுவர் வகுத்த பாதை மிக அழகானது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்று அவர் கூறியது போல, அறநெறியில் நின்று வாழும் மனிதன், வானுலகில் உள்ள தெய்வத்திற்கு இணையாகப் போற்றப்படுவான். இத்தகைய உயரிய மனித மாண்புகளைப் போற்றும் திருக்குறளைப் படித்து, அதன்படி நடப்பவர்கள் வாழ்வில் சகல நலங்களையும் பெறுவார்கள்.

இத்தகைய பெருமைமிகுந்த திருக்குறள் மாநாடு வடக்கு மாகாணத்தின் வவுனியாவில் நடைபெறுவது எமக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. இம்மாநாடு இங்கு நடைபெறுவதற்குக் காரணமான வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்கள் பாராட்டுக்குரியவர். அவர் பல்கலைக்கழகத்தைச் சமூகத்துடன் ஒன்றிணைத்துப் பயணிக்கும் பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருகின்றார். அவர் தனது பெயரைப் போலவே ஒரு 'அற்புதமான' மனிதராகச் செயற்படுகின்றார்" என ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றத்தின் பொதுச் செயலாளரும் பேராசிரியருமான பாஞ்.இராமலிங்கம், சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நிறுவுனரும் தலைவருமான திரு. மாவை.சோ.தங்கராசா, முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40-இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

IMG-20260201-WA0023.jpg

 IMG-20260201-WA0018.jpg

IMG-20260201-WA0004.jpg

IMG-20260201-WA0010.jpg

IMG-20260201-WA0012.jpg

IMG-20260201-WA0014.jpg

IMG-20260201-WA0005.jpg

IMG-20260201-WA0015.jpg

IMG-20260201-WA0011.jpg

IMG-20260201-WA0008.jpg

https://www.virakesari.lk/article/237567

இந்திய பட்ஜெட் 2026 - இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

2 months ago

இந்திய பட்ஜெட் 2026 - இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

Feb 1, 2026 - 01:35 PM

இந்திய பட்ஜெட் 2026 - இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  

இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற இலக்கை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியில் இம்முறை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை (INR 400 Crore / 4 Billion INR) இந்தியா ஒதுக்கியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும். 

இந்த நிதியானது இலங்கையில் முன்னெடுக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cml3gh6my04p5o29nkk65km2n

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!

2 months ago

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!

01 Feb, 2026 | 04:30 PM

image

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து, இன்று அதிகாலை 3.00 மணியளவில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தைத் தருமபுரம் பொலிஸார் சோதனையிட முற்பட்டனர்.

இதன்போது பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகத் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/237564

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,

2 months ago

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது!

உதாரணமா பார்த்தீங்க என்றால்,

* ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால்

* டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால்

* எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால்

* கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால்

* கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால்

*யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால்

தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால்

*செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா

* அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா

என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !!

இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!!

ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!!

#அழகியதொருவாழ்வு

முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

2 months ago

New-Project.jpg?resize=600%2C300&ssl=1

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் கராப்பிட்டிய மற்றும் வென்னப்புவ பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது

குறித்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீனவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது

போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடாத்தியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையினை நிறைவு செய்து மீண்டும் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

இதேவேளை தாம் எதிர்கொண்ட அசம்பாவிதம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கியிருந்ததைடுத்து அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் நால்வர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் வென்னப்புவ பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்த அரசுடன் ராஜதந்திரமட்டத்தில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1462572

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு

2 months ago

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு

01 Feb, 2026 | 10:45 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்கும் துணைசெல்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடவில்லை. எதிர்க்கட்சியினரால் தோற்றுவிக்கப்பட்ட தவறான நிலைப்பாட்டையும், பாடப்புத்தக தயாரிப்பின் போது ஏற்பட்ட குறைபாட்டையும் நிவர்த்தி செய்வதற்காகவே ஆறாம் தரத்துக்கான கல்வி மறுசீரமைப்பு 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது.

புதிய கல்வி மறுசீரமைப்பின் போது தேசிய கல்வி நிறுவகம் இரு இடத்தில் தவறிழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த தவறு திருத்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவர்களுக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரமும், தாபன விதிக்கோவையின் பிரகாரமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வியையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வங்குரோத்து அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் போலி என்று நிரூபித்ததன் பின்னர் தாங்கள் கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பிற்போட்ட கல்விக் கொள்கையை உடன் அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தற்போது குறிப்பிடுகிறார். உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சுய சிந்தனையுடன் தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.

கல்விக் கொள்கைக்கு எதிராக இரண்டு பிரதான ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து தவறான நிலைப்பாட்டையே கொண்டு சென்றது. இந்த இரண்டு ஊடகங்களும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. அதேபோன்று எதிர்க்கட்சிகளும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன.

புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்தி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக குறிப்பிட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டுவருமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் சுவிஸ்லாந்தில் இருந்து நாடு திரும்பியவுடன் சபைக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார். பிரதமரும் நாட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரவில்லை.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்க்கட்சியினர் தற்போது குறிப்பிடுகிறார்.

பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்குவது தொடர்பில் ஆராய்ந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலகவும் கலந்துக் கொண்டார். ஆகவே எதிர்கட்சித் தலைவர் மேலதிக தகவல்களை கயந்த கருணாதிலகவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/237521

காத்தான்குடியில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி 3ம் திகதி வரை விளக்கமறியல்

2 months ago

காத்தான்குடியில் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் ; கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி 3ம் திகதி வரை விளக்கமறியல்

01 Feb, 2026 | 03:38 PM

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து, மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவரும், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணியாக கடமையாற்றி வருபவருமான ஒருவர், தனது பிரதேசத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த, நான்கு பெண் பிள்ளைகளை கொண்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரியான 24 வயதுடைய யுவதி ஒருவரை 2023 ஆம் ஆண்டு முதல் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

அந்த யுவதி காலை முதல் இரவு 8.30 மணி வரை, 2025 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு வருடங்களாக கடமையாற்றி வந்துள்ளார். அவருக்கு வாரத்திற்கு 3,000 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அலுவலகத்தில் தனியாக பணியாற்றிக் கொண்டிருந்த யுவதிக்கு, குறித்த சட்டத்தரணி மதிய உணவு பொட்டலமொன்றை வழங்கி உணவுகொள்ளுமாறு கூறியுள்ளார். அதை உணவாக எடுத்த சில நிமிடங்களில் யுவதி மயக்க நிலைக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யுவதியின் சம்மதம் இன்றி, சட்டத்தரணி அலுவலகத்திற்குள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னர், யுவதி இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கும் எவருக்கும் தெரிவிக்காமல் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டத்தரணி 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி யுவதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் பேசிச் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஒரு வாரத்திற்குள் யுவதி வாந்தி மற்றும் மயக்க நிலை காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் 12 வாரங்கள் கொண்ட, மூன்று மாத கர்ப்பிணி என உறுதிப்படுத்தியுள்ளனர்.

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கணவர் யுவதியுடன் முரண்பட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து, யுவதி மீது பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் மற்றும் பெண்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், பிரதேச செயலக சேவையில் இயங்கும் மகளிர் பிரிவினர் யுவதியை பாதுகாப்பான இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சு பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, யுவதியிடமிருந்து வாக்குமூலம் பெற பொலிசார் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்றபோது, ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை (28) யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலிசார் வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சட்டத்தரணிக்கு எதிராக பலாத்கார பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டு, அடுத்த வழக்கை 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், குறித்த சட்டத்தரணி வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டு, மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். எதிராளி சார்பில் சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் தலைமையில் நான்கு சட்டத்தரணிகளும், வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையில் யோகேஸ்வரன், கமலதாசன், வேணுதாசன், நஜீபா, ரம்சீயா உள்ளிட்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.

இரவு 7.30 மணி வரை நீண்ட விசாரணையின் பின்னர், நீதவான் குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனிடையே, எதிராளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்டீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், இலங்கை சட்டத்தின் படி சம்மதம் இருந்தால் குற்றமாகாது எனவும் தெரிவித்தார். எனினும், முறைப்பாட்டாளர் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக கூறினார்.

16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் கட்டாய விளக்கமறியல் மற்றும் சிறைத்தண்டனை அவசியம் என்றும், இவ்வழக்கில் 16 வயதுக்கு மேற்பட்டவர் மூன்று மாதங்கள் கழித்து முறைப்பாடு செய்துள்ளதால் மேலதிக விசாரணைகள் அவசியம் என்பதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதால், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/237555

நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம்

2 months ago

நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம்

01 February 2026

1769925378_2580370_hirunews.jpg

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, இன்று (1)உலகக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த கிண்ண சுற்றுப்பயணத்தில் இலங்கையின் பல இடங்களுக்கும் கிண்ணம் கொண்டு செல்லப்படும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

உத்தியோகபூர்வ பயணத் திட்டத்தின்படி, இன்று அதிகாலை தம்புள்ளையிலிருந்து புறப்பட்ட கிண்ணம் தாங்கிய ஊர்தி, மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.

இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு (கச்சேரி) முன்பாக உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம், துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகிய இடங்களுக்குக் கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது.

வடபகுதியின் முக்கிய விளையாட்டு மையமாகத் திகழும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கான விஜயம், அப்பகுதி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரினை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், இலங்கை முழுவதும் கிரிக்கெட் உணர்வை மேம்படுத்தவும் இந்த கிண்ணச் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய விஜயம் இரவு யாழ்ப்பாணப் பொது நூலகத்துடன் நிறைவடையும்.

முற்பகல் 07:30 - தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் ஆரம்பம்

முற்பகல் 08:30 - மிஹிந்தலை

முற்பகல் 10:30 - வவுனியா

நண்பகல் 12:00 - கிளிநொச்சி

பிற்பகல் 03:30 - யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

பிற்பகல் 04:25 - நல்லூர்

பிற்பகல் 06:20 -துரையப்பா விளையாட்டு அரங்கம்

பிற்பகல் 06:40 -யாழ்ப்பாணக் கோட்டை

பிற்பகல் 07:10 -யாழ்ப்பாணம் பொது நூலகம்

https://hirunews.lk/tm/sports/443905/from-nallur-to-the-library-the-world-cup-adorns-the-land-of-jaffna

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

2 months ago

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

adminFebruary 1, 2026

3-3.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள்  முன்னெடுக்கப்பட்டது. போராட்ட களத்தில் பெருமளவான  காவல்துறையினா்  குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

3-1.jpg?resize=800%2C450&ssl=13-2.jpg?resize=800%2C450&ssl=13-3.jpg?resize=800%2C450&ssl=14-33.jpg?resize=275%2C183&ssl=1500.jpg?resize=300%2C168&ssl=1

https://globaltamilnews.net/2026/228132/

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் –  நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

2 months ago

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் –  நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

adminFebruary 1, 2026

indian-boats.jpg?fit=1170%2C439&ssl=1

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு இடையிலான பகுதியில் இந்திய இழுவைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. எல்லை தாண்டி வர வேண்டாம் என நயினாதீவு மீனவர்கள் எச்சரித்தபோது, இந்திய மீனவர்கள் அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், உடனடியாக இந்திய துணைத்தூதரக அதிகாரியை “வீடியோ கோல்” (Video Call) ஊடாகத் தொடர்பு கொண்டு, கடலில் நடக்கும் அத்துமீறல்களை நேரலையாகக் காண்பித்துள்ளார். தூதரக அதிகாரி படகின் இலக்கத்தைக் கேட்டபோது, இந்திய மீனவர்கள் தமது படகின் இலக்கத்தை வேண்டுமென்றே அழித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தாக்குதல் மற்றும் அத்துமீறல் தொடர்பான காணொளி ஆதாரங்கள் முறைப்பாடாக இந்திய துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக அரங்கேறும் இவ்வாறான அத்துமீறல்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வடபகுதி மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.”வீடியோ கோல்” மூலம் பெறப்பட்ட நேரடி ஆதாரங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில், இந்திய துணைத்தூதரகம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளின் பட்டியலை தமிழக கடலோர அதிகாரிகளிடமிருந்து பெற்று, சம்பந்தப்பட்ட படகை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்திய எல்லைகளைத் தாண்டி அத்துமீறிச் செல்லும் மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணைத்தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நயினாதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த கடற்படையினர் அதிவேகப் படகுகள் மூலம் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.
அத்துமீறி நுழையும் படகுகளைக் கண்டறியும்போது அவற்றை விரட்டியடிக்க அல்லது கைது செய்யத் தேவையான உத்தரவுகள் கடற்படைத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளூர் மீனவர்கள் இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அறிவிக்குமாறும் கடற்படை அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து விரைவில் மாபெரும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.

https://globaltamilnews.net/2026/228114/

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2 months ago

earthquake.jpg?resize=750%2C375&ssl=1

திருகோணமலை, முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2026/1462483

ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!

2 months ago

ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!

Feb 1, 2026 - 09:26 AM

ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!

நாட்டின் முன்னணி பொருளாதார மத்திய நிலையங்கள் ஐந்தினை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து நீக்கி, தனியானதொரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கு அறிவித்துள்ளனர்.

நேற்று (31) பிற்பகல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, 7 பணிப்பாளர்களை நியமித்து, தற்போது முகாமைத்துவ நிதியத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களை இந்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் விடயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் பியன்வில, அரச அதிகாரிகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவ நிதியத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வர்த்தகச் சமூகத்தினர் அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கையில், இந்த வர்த்தக நடவடிக்கைகள் 35 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒரு நிறுவனம் என்று கூறினர்.

அதேபோன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அமைச்சருக்குத் தேவையான குழுக்களை நியமித்துத் தமது வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகித்து, மக்களுக்கு மிக நியாயமான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டார்.

அதற்கமைய தம்புள்ளை, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பெட்டிபொல, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை இந்தப் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் மாதாந்த வாடகை மற்றும் நிர்வாகப் பணம் அனைத்தும் அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பறிக்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வர்த்தகச் சமூகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எவ்வித ஆராய்வும் இன்றி புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, தாம் நடத்தி வந்த வர்த்தகத்தை ஒப்படைக்க முடியாது என்றும், தற்போது மிகவும் பலமான முகாமைத்துவ நிதியத்தின் ஊடாக 30 வருடங்களுக்கும் மேலாகப் பொருளாதார மத்திய நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக வர்த்தக சங்கங்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வர்த்தகச் சமூகத்தினர், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரை மிகவும் சூட்சுமமான முறையில் மாற்றி, புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினர்.

இதற்காக எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர்.

அதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 29 வருட காலப்பகுதியில் அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டு, தற்போதும் முகாமைத்துவ நிதியத்தில் 25 கோடி ரூபா பணத்தைச் சேமித்துள்ளதாகவும் அவர்கள் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினர். வர்த்தகச் சமூகம் விவசாய மக்களுக்கு வட்டியில்லாக் கடன், விதை உள்ளிட்ட மரக்கறிச் செய்கைக்கான செலவுகளை மேற்கொண்டு இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைப் பராமரித்து வருவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்விதத்திலும் தெரியாத நிறுவனமொன்றுக்குத் தமது உரிமையை வழங்கத் தயாரில்லை என்றும் வர்த்தகச் சமூகம் அமைச்சரிடம் தெரிவித்தது.

இதற்கு அமைச்சரும் பதில் வழங்க முற்பட்டபோது, வர்த்தகர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்புள்ளைக்கு வந்து, தேர்தல் வாக்குறுதியாக 30 வருட குத்தகை ஒப்பந்தத்தைப் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்களுக்கு வழங்குவதாகக் கூறியதையும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் நினைவுகூர்ந்தனர்.

எனினும், அதற்கு எவ்வித பதிலையும் வழங்க அமைச்சர் இதன்போது முற்படவில்லை.

எவ்வாறாயினும், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் வர்த்தகர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ள வர்த்தகப் பெயர் ஆகியவற்றுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிறுவனத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எப்படியிருப்பினும், வர்த்தகச் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இது குறித்துத் தொடர்ந்தும் பரிசீலித்து, நிறுவனம் மற்றும் வர்த்தகச் சமூகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடத் தான் எதிர்காலத்தில் திகதி ஒன்றை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cml37lycs04owo29nbuyyy2m5

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு

2 months ago

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு

01 Feb, 2026 | 09:36 AM

image

ஆர்.ராம்

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இந்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த திட்டம் மீள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 23,500மில்லியன் ரூபா செலவில் மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டிருக்கின்றநிலையி;ல், அங்குள்ள குடியேற்ற பெரும்பான்மை மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்கள் கையகப்படுத்தப்படும் ஆபத்துக்கள் காணப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்வாதரத்தினை பூர்த்தி செய்யும் வயல்நிலைங்களும் பறிபோகும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கரிசனைகள் வெளிப்டடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், சிலில் அமைப்புக்களும் ஆணித்தனமாக வலியுறுத்தும் முகமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/237510

நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!

2 months ago

நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!

Published By: Digital Desk 1

01 Feb, 2026 | 08:58 AM

image

(நமது நிருபர்)

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ஈ.ஆர்.படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237504

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!

2 months ago

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!

Jan 31, 2026 - 10:29 PM

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!

1996 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் யாழ். சிவகுரு ஆதீனத்தில் "நீதிக்கான சாட்சி" என்ற நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. 

இதே போன்ற ஒரு நாளில் (1996.01.31) கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதியின் 31வது ஆண்டை நினைவுகூரும் முகமாக இந்த நூதன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதன்போது, அவர்களது சிறைவாச ஆண்டுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சி சித்தரிக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை மெழுகுவர்த்தி போல தேய்வடைந்து செய்கின்றது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டது. 

இதில் அரசியல் கைதிகளின் உறவுகள் வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், சட்டத்தரணிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் தேசியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cml2k445m04ooo29ng9ox5cpd

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கு மகத்தான வரவேற்பு!

2 months ago

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கு மகத்தான வரவேற்பு!

31 Jan, 2026 | 03:32 PM

image

இலங்கை கனடா வணிக கவுன்சில் மற்றும்  இலங்கை கனடா வணிக சபை இலங்கை வர்த்தக சபை ஏற்பாட்டில் இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகரை வரவேற்கும் நிகழ்வு  கடந்த வியாழக்கிழமை ( 29 )  கொழும்பில் மேரியட் ஹோட்டல் நடைபெற்றது. 

இந்நிகழ்வில்  இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள், இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-கனடா வணிக மன்றத்தின்  உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

7Q8A7165.jpg

7Q8A7114.jpg

 7Q8A7145.jpg

7Q8A6958.jpg

https://www.virakesari.lk/article/237482

📜  பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்

2 months ago

📜  பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்:

adminJanuary 31, 2026

gazette.jpg?fit=650%2C433&ssl=1

இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் (Essential Services) பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Security Ordinance) கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு (LP Gas) விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் (Nursing homes/Dispensaries) மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பான அனைத்து சேவைகள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து சேவைகள், புகையிரத போக்குவரத்து மற்றும் வீதிப் போக்குவரத்து சேவைகள்மற்றும் துறைமுகச் சேவைகள் மற்றும் உணவு விநியோகம் தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன.

இந்தச் சேவைகளை அத்தியாவசியமாக்குவதன் மூலம், இந்தத் துறைகளில் பணிபுரிபவர்கள் பணிப்புறக்கணிப்பு (Strike) செய்வதற்கோ அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்துவதற்கோ சட்டப்படி முடியாது. மீறினால் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்குத் தடையில்லாச் சேவையை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும். தேவைப்படின், ஒவ்வொரு மாதமும் புதிய வர்த்தமானி மூலம் இது நீடிக்கப்படலாம்.

அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்கு சமூகமளிக்கத் தவறினால் அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்தினால், அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படவும், பிணையின்றி விளக்கமறியலில் வைக்கப்படவும் சட்டத்தில் இடமுண்டு. அத்துடன் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பல தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தங்களது ஜனநாயக ரீதியான போராட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பள உயர்வு அல்லது சீர்திருத்தங்கள் கோரி போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வந்த நிலையிலேயே, அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யச் சில தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.

https://globaltamilnews.net/2026/228028/

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr