ஊர்ப்புதினம்

அரச நிர்வாக ஊழலே இலஞ்ச மனப்பாங்குக்குக் காரணம் – ரங்க திசாநாயக்க

2 months ago

அரச நிர்வாக ஊழலே இலஞ்ச மனப்பாங்குக்குக் காரணம் – ரங்க திசாநாயக்க

Published By: Vishnu

28 Jan, 2026 | 03:51 AM

image

(இராஜதுரை ஹஷான்)

ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊழலுக்கு அனைவரும் எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் சமூககட்டமைப்பில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துள்ளது என்பதை ஆராய வேண்டும்.

ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது.

ஒருசில அரச நிறுவனங்களில் மேலதிகமாக பணம் பெறுவது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்று கருதுகிறார்கள். அண்மையில் மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தோம். அப்போது அங்கு பிரதி பணிப்பாளர் நாயகத்தின் காரியாலயத்தின் அலுமாரியில் இருந்து 41 இலட்சம் ரூபாவை கைப்பற்றினோம்.

பெற்றுக்கொள்ளும் இலஞ்ச பணத்தை வார இறுதியில் பகிர்ந்துக்கொள்ளும் ஒருமைப்பாடு தான் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டிய தரப்பினர் ஊழலுக்கு துணைபோகும் போது சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றதாகும். ஒரு நிறுவனத்தில் எவரேனும் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு தகவல் வழங்கினால் அந்த நபருக்கு எதிராக செயற்படும் போக்கு காணப்படுகிறது. புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் ஊழல் தொடர்பில் தகவல் வழங்குபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/237184

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு!

2 months ago

airport.jpg?resize=750%2C375&ssl=1

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த ‘ஈ-கேட்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்
இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/category/sri-lanka

323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடுகிறது

2 months ago

323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடுகிறது

Published By: Vishnu

27 Jan, 2026 | 08:57 PM

image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், நீதியமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இரண்டாவது தடவையாக 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் கடந்த வாரம் முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய இக்குழு இன்று புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் (சட்டத்தரணி)சுனில் வட்டகல, வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/237179

மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!

2 months 1 week ago

மனித உரிமை ஆர்வலர் ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!

27 Jan, 2026 | 04:37 PM

image

எங்களால் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த.முத்துக்குமாரசாமி அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்….

146,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், 30,000க்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் நீதி வேண்டி நாங்கள் இன்றும் அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இந்த நீண்ட போராட்டப் பயணத்தில், ரி. குமார், என்றழைக்கப்படும் தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்களை ஆழ்ந்த நன்றியுடனும், மரியாதையுடனும், துயரத்துடனும் நினைவுகூருகிறோம்.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் அரசியல் முயற்சிகளின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில் அவர் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தின் இரண்டாம் தலைமுறையில் ஒரு முக்கிய ஆளுமையாக உருவெடுத்தார்.

முறிந்துபோன வாக்குறுதிகளுக்கும், பாராளுமன்ற அரசியலின் மாயைகளுக்கும் அப்பால்,

அவர் மனித உரிமைகள், சர்வதேச சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை தமிழ் மக்களின் போராட்டத்தின் மையத்தில் வைத்தார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கைதியாகவும், 'மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட கைதியாகவும்', குமார் துன்பத்தை ஒரு கோட்பாடாக அல்லாமல், ஒரு நேரடி யதார்த்தமாக அனுபவித்தார். அவரது கல்விஅறிவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதிக்காக முழுமையாக அர்ப்பணித்தார்.

வாஷிங்டன் டி.சி. மற்றும் ஜெனீவாவில், T. குமார் தமிழர்களுக்காகப் பேசிய மிகவும் செல்வாக்கு மிக்க மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவராக இருந்தார்.

அந்த வேதனையை அவர் அமெரிக்க காங்கிரஸ், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை மன்றங்கள் வரை எடுத்துச் சென்று, தமிழர்கள் அனுபவித்த துயரங்களை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

1977 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரங்களின் போது, கொழும்பில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்களை, லங்கா ராணி என்ற பயணக் கப்பல் மூலம் தமிழ் தாயகமான வடகிழக்கிற்குச் செல்ல T. குமார் அவர்கள் முக்கியப் பங்காற்றினார்.

1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களின் போது, அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் இருந்தபோதும், அகதி முகாம்களில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு வழிகாட்டி, பல தமிழர்கள் பாதுகாப்பாகத் தங்கள் தாயகத்தை அடைய உதவினார்.

உள்நாட்டு விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது; ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்றார்.இன்றைய வரலாறு அவரது எச்சரிக்கையை உண்மையென நிரூபித்துள்ளது.

சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் ஒரு சுயநிர்ணய வாக்கெடுப்பு மட்டுமே தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான ஜனநாயக வழி என்று ஆழமாக நம்பினார், மேலும் அதற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.குரலற்ற மக்களுடன் அவர் உறுதியாக நின்றார்.நாங்கள் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்ற ஒரு மனிதர் என்றனர்.

IMG_20260127_115848.jpg

IMG_20260127_115354.jpg

IMG_20260127_115327.jpg

https://www.virakesari.lk/article/237163

பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது!

2 months 1 week ago

பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது!

Jan 27, 2026 - 08:59 PM

பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது!

வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு மதுபானத்தை விற்பனை செய்தபோதே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எம்.எச். புத்திக்க சிறிவர்தனவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சான்றுப் பொருட்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  

அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmkwr4rs704i7o29neuwegeco

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்

2 months 1 week ago

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்

Jan 27, 2026 - 04:32 PM

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார சட்டங்களில் திருத்தம்

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைவாக, இவ்வருடத்திற்குள் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்துவதற்குமாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அவ்விடயங்கள் பின்வருமாறு: 

01.சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை (Cyber crimes) கையாள்வதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல். 

02.ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய, 'சிறுவர் உரிமைகள் சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 

03.2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். 

04.வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்புக்காக புதிய சட்டத்தை உருவாக்குதல். 

05.1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 

06.1941 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சிறுவர் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல். 

07.1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தைத் திருத்துதல்.

https://adaderanatamil.lk/news/cmkwhl9r204hro29nlda7zu5k

அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்

2 months 1 week ago

அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்

Jan 27, 2026 - 03:17 PM

அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் நாளை (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. 

அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்படவுள்ளது. 

அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. 

மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmkwex3r604hjo29nu7p1uu8a

தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு

2 months 1 week ago

தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு

செவ்வாய், 27 ஜனவரி 2026 09:10 AM

தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு

தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் , தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டன. 

இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்திக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

அந்நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , பருத்தித்துறை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண  பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

https://jaffnazone.com/news/54588

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.!

2 months 1 week ago

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.!

Vhg ஜனவரி 26, 2026

AVvXsEhqx46ubDywqJC1LfxYC9WgvTvSIEeqBfdqRKPCG45-DIT6iXCxLrnxVuQWACDlLSMyH88HnfHqp-UiAgZZoAxrAtfivJbZR01IAN4tj4S35OBgsgEHhsRwAUdnd9uljJlFXj8spvudimXrmEt6Ep0HG6iEDdmfXn8RWQsWJlLP0R8rzyhlGyeMLJCeayDp

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழாவானது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பட்டிப்பளை பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில்   நேற்று (25.01.2026) ஆம் திகதி திகதி நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம் ( ஜெயம்) பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழக இணைப்பாளருமான சந்திரமோகன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகளின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://www.battinatham.com/2026/01/blog-post_791.html

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!

2 months 1 week ago

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!

27 Jan, 2026 | 02:49 PM

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த  82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/237150#google_vignette

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

2 months 1 week ago

யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். 

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது. 

கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன்றும் தெளிவாகக் காணப்படும் நிலையில் உள்ளது. 

புத்தசாசன அமைச்சின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, கோட்டையின் உண்மையான எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முற்றவெளி விளையாட்டு மைதானம், முனீஸ்வரன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், உள்ளூராட்சி அல்லது பொதுமக்களுடன் ஆலோசனை செய்யாது எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. 

கோட்டையை வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க அரசு, முன்னாள் காலனிய நாடுகள், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோட்டை வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட வேண்டும் சுமந்திரன் அவர்களிடம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செலஸ்டின் அவர்கள் வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களில் கோட்டையின் வரலாற்றுச் சுவர்களிலிருந்து தூரமாக அமைக்கப்பட்டிருந்த Concrete தூண்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

பல மத மற்றும் பல பண்பாட்டு மரபுகள் இணைந்துள்ள வரலாற்றுத் தளங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ள தொல்லியல் துறை நிர்வகிக்கக் கூடாது; சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. 

இக்கருத்துகளை சுமந்திரன் அவர்கள் பொறுமையாகக் கேட்டு, கோட்டையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.

https://adaderanatamil.lk/news/cmkw75asj04gto29n74r9shmn

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்

2 months 1 week ago

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.

அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. 

7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. 

எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்
தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்

'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2 months 1 week ago

'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) முற்பகல் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன. 

அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். 

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்றும், கிராமப்புற வறுமையை ஒழிக்கவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இவை அனைத்திற்கும் மத்தியில் சிறந்த மனித உறவுகளைக் கொண்ட ஒரு சமூகம் தேவை என்றும், அரச அதிகாரிக்கும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகின்ற மக்களுக்கும் இடையிலான உறவு, மகா சங்கத்தினருக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உட்பட இந்த அனைத்து உறவுகளும் இன்று வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டன என்றும், நாட்டை சமூக ரீதியாகக் கட்டியெழுப்ப, இந்த உறவுகள் அனைத்தும் மீண்டும் சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதுடன், மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களுக்கு இந்த விடயத்தில் பெரும் பங்கு உண்டு என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmkwc8s3m04hdo29nwrehsjm7

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

2 months 1 week ago

IMG-20260126-WA0139.jpg?resize=750%2C375

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகாக யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சர்வதேச இராஜதந்திரிகள் நேற்றையதின்பம் (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் UNDP துணை வதிவிடப் பிரதிநிதி ஆகியோரே குறித்த கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

இதன்போது திறந்த மற்றும் சிந்தனைக்கான இடத்தை உருவாக்கல், பெண்களின் தலைமை பற்றிய உரையாடல், பொது அலுவலகங்களில் பெண்கள் நுழைவதற்கும் மற்றும் நிலைநிறுத்துவதற்கும் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பெண்களின் அரசியல் பங்கேற்பை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புக் கூட்டாண்மை மூலம் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

IMG-20260126-WA0138.jpg?resize=600%2C355&ssl=1 IMG-20260126-WA0119.jpg?resize=600%2C228&ssl=1 IMG-20260126-WA0137.jpg?resize=600%2C277&ssl=1

https://athavannews.com/2026/1461683

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை

2 months 1 week ago

%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1461768

தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்!

2 months 1 week ago

தடை செய்யப்பட்ட தொழிலை நிறுத்த கால அவகாசம் கோரி வடமராட்சி கிழக்கில் சில கடற்தொழிலாளிகள் போராட்டம்!

adminJanuary 27, 2026

0-4-2.jpeg?fit=1170%2C657&ssl=1

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்ய தம்மை அனுமதிக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் , உழவு இயந்திரம் உள்ளிட்ட தொழில் உபகரணங்களை தாம் பல இலட்ச ரூபாய் செலவில் வாங்கியுள்ளமையால் , தமக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை  விடுத்துள்ளனர்.

அதேவேளை , வடமராட்சி கடற்பகுதியில் , வெளிமாவட்டங்களை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து தங்கி நின்று, உழவு இயந்திரங்களை பயன்படுத்தி , கரை வலை தொழில் செய்வதனால் , வடமராட்சி கிழக்கு பூர்வீக கடற்தொழிலாளர்கள் பலர் கரைவலை இழுக்கும் தொழில் இழந்துள்ளனர்

உழவு இயந்திரங்கள் ஊடாக கரை வலை தொழில் செய்யும் போது , அனுமதிக்கப்பட்ட தூரத்தினை விட அதிக தூரம் சென்று வலைகள் இடப்படுவதால் , அப்பகுதியில் தொழில் செய்யும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன் , இயந்திரம் மூலமான கரை வலை தொழிலால் , கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் , கடற்கரையில் உள்ள தாவரங்கள் கூட அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , இம்முறையே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதற்கு தடை விதித்து  அதனை இறுக்கமாக கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்

இந்நிலையிலேயே உழவு இயந்திரம் ஊடாக கரை வலை தொழில் செய்வதனை நிறுத்த கால அவகாசம் கோரி சில கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2026/227571/

ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில

2 months 1 week ago

ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில

26 Jan, 2026 | 06:20 PM

image

(இராஜதுரை ஹஷான்)

1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக இருந்து ஐந்து ரூபா கடன் பெற்றார்கள். இதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்தால் அரசியல்வாதிகள் தமது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தவறான எடுத்துக்காட்டாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் பிரபல்யமான தீர்மானத்தை எடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது? 

ஏனைய நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகிறதா? ஏன் என்பதை ஆராயாமல் ஊழலை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1947 முதல் 1970 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்கள்.

அதன் பின்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இருந்து பாராளுமன்றத்துக்கு வருபவர்களிடம் ஐந்து ரூபா கடன் கேட்பார்கள்.

இதனை கண்டு தமது எதிர்கால நிலைமையின் அச்சுறுத்தல் மற்றும் ஊழல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு 1977ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர்  சிறிமாவோ பண்டாரநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அதேபோல் சுதந்திர கல்வியின் தந்தையான கண்ணங்கர தான் வாழ்வதற்கு வழியில்லாமல் மாதாந்த கொடுப்பனவை வழங்குமாறு கோரி பிரதமர் டட்லி சேனாநாயக்கவுக்கு கடிதம் எழுதிய பிரபல்யமாக கதையும் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவை உறுப்பினராக இருந்த அமைச்சர் விமலா கண்ணங்கர வாழ்வில் இறுதி காலத்தில் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தமது சொந்த காணியை  அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார். நாட்டுக்காக சேவையாற்றிய பலர் இன்றும் இந்த ஓய்வூதிய கொடுப்பனவில் தான் வாழ்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்தால் சேவையில் உள்ள போது அரசியல்வாதிகள் ஊழல் மோசடி செய்து எதிர்காலத்துக்கு தேவையான நிதியை சேகரித்துக் கொள்வார்கள்.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் தவறான தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/237078

இந்தியா – இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி – குடியரசு தின உரையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

2 months 1 week ago

இந்தியா – இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி – குடியரசு தின உரையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

26 Jan, 2026 | 10:07 PM

image

இந்தியா - இலங்கையின் நம்பகமான மற்றும் நெருங்கிய பங்காளி என்பதுடன் அபிவிருத்தி, ஒத்துழைப்பு, மின்சாரம், போக்குவரத்து, டிஜிட்டல் மயமாக்கல், பேரிடர் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் இந்தியாவின் தொடர்ந்த ஆதரவு எப்போதும் இருக்கும். இந்தியா – இலங்கை உறவுகள் இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பு, பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டுறவுகளின் அடிப்படையில் மேலும் வலுப்பெறுகின்றன எனவும் இந்தியா–இலங்கை உறவுகள் உலகளாவிய கூட்டுறவுக்கான முன்மாதிரி எனவும் இந்திய  உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற 77வது இந்திய குடியரசு தின விழாவில், தலைமையேற்று உரையாற்றுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வணக்கத்துக்குரிய மதகுருமார்களே,

இன்றைய தினம் எமது நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களே,

பெருமதிப்புக்குரிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளே,

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களே, ஆளுநர்களே,

பாராளுமன்ற உறுப்பினர்களே மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகளே,

இராஜதந்திர துறையினைச் சேர்ந்த சக அதிகாரிகளே,

இலங்கை அரசாங்கத்தின் உயரதிகாரிகளே,

வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களே,

ஊடகவியலாளர்களே,

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் உட்பட இந்திய சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களே,

மதிப்புக்குரிய விருந்தினர்களே,

சீமாட்டிகளே கனவான்களே,

இனிய மாலை வணக்கம், நமஸ்கார், ஆயுபோவன்,

77 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்திய இல்லத்துக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.

 

இன்றைய தினம் எம்முடன் இணைந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி. உங்களது பிரசன்னம் மற்றும் உங்களது ஆதரவு ஆகியவையே எமது பலத்திற்கான மூலாதாரங்கள் ஆகும். ஓர் ஆழமான பங்குடமையை நோக்கி பணியாற்றுவதற்கு ஏனைய பிறகாரணிகளைக் காட்டிலும் இதுவே எமக்கு தைரியமூட்டுகின்றது. 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக உங்களது நட்புறவுக்கும் பங்களிப்புக்கும் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

76 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்திலேயே இந்திய மக்கள் எமது அரசியலமைப்பை அங்கீகரித்திருந்தனர். அன்று முதல் நாம் பாரிய ஜனநாயக நாடாக வளர்ந்திருக்கும் அதேசமயம், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாகவும் உள்ளோம்.

இந்த வருடத்தின் குடியரசு தினத்தின் இரு தொனிப்பொருட்களாக வந்தே மாதரம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் ஆகியவை காணப்படுகின்றன. வந்தே மாதரம் சுதந்திரத்தின் சிந்தனைகளை கொண்டாடுகின்றது. ஆத்ம நிர்பார் பாரத் சுபிட்சத்துக்கான எங்களின் அபிலாசைகளை முன்கொண்டு செல்கின்றது.

வந்தே மாதரம் இந்தியாவின் தேசிய பாடலாகும். இந்த பாடல் உருவாக்கப்பட்டமையின் 150 ஆண்டுகளை நாம் நினைவு கூறுகின்றோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போதான சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒருமித்த கோஷமாக அது அமைகின்றது. இந்திய தாய் பற்றிய எமது பெருமிதத்தின் வெளிப்பாடாகவும் இது காணப்படுவதுடன் இன்று கூட ஓர் உத்வேகத்தின் காரணியாகவும் உள்ளது.

ஒரு தற்சார்பு இந்தியாவை கட்டி எழுப்புவதற்கான எங்களது எதிர்கால முயற்சிகளை குறிக்கும் ஒரு முன்னெடுப்பு ஆத்ம நிர்பார் பாரத் என்பதாகும். இது தனிமைப்படுத்தலை முக்கியத்துவப் படுத்தவில்லை பதிலாக துரிதமானதும் முழுமையான வளர்ச்சிக்கான ஓர் அபிலாசையாகும். உலகளாவிய ரீதியில் ஓர் நம்பத் தகுந்த பங்காளராவதற்கான திறன்களை உள்ளூரில் கட்டி எழுப்புவதையே இது குறித்து நிற்கின்றது. 2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை அடைவதற்காக,  வரிகள் முதல் தொழில்துறை வரையிலும்; விண்வெளி முதல் பாதுகாப்பு மற்றும் அணு துறைகள் வரையிலும்; உட்கட்டமைப்பு முதல் உற்பத்தி துறை வரையிலும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு முதல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வரையிலும் நாங்கள் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அது மட்டுமல்லாமல் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில், இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்குரிய தேவைகளை குறைத்தல் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் உள்ளடங்குகின்றன. ஸ்திரமான வளர்ச்சி, குறைவடைந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைவடைந்து வரும் பண வீக்கம் ஆகியவற்றுடன் இந்தியா மிகச்சிறந்த தருணத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்தியா நான்காவது பொருளாதார நாடாக வருவதில் எந்தவிதமான அதிசயமும் இல்லை. அத்துடன் இந்த தசாப்தத்தின் நிறைவுக்கு முன்னதாக மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக வருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

 

உலகளாவிய ரீதியில் நம்பகமான ஒரு பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட கடப்பாட்டுடன் இந்தியாவின் எழுச்சி இணைந்திருக்கின்றது. உலகளாவிய ரீதியில் ஒரு நம்பகமான பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட உணர்வினையும் கொண்டிணைந்ததாக இந்திய எழுச்சி காணப்படுகின்றது. விக்சித் பாரத் அல்லது வளர்ந்த இந்தியா என்ற இலக்கானது உலகுக்கான ஒரு நண்பன் அல்லது ஒரு விஸ்வ மித்ரா என்பவற்றுக்கான எங்களது நோக்குடன் ஒன்றிணைந்ததாகவே காணப்படுகின்றது. எங்கள் அயலுறவுக் கொள்கைகளை எடுத்துக் கொள்ளும் போது மகாசாகர் மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய கொள்கைகளில் இந்த அணுகுமுறையானது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்த பிரிக்க முடியாத எங்களது பிணைப்பானது எங்களின் நாகரீக தொடர்புகள் மற்றும் புவியியல் ரீதியான அமைவிடம் ஆகியவற்றினால் மேலும் வலுவூட்டப்படுகின்றது.  நாம் இன்று நம்பிக்கை நல்லெண்ணம் மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அபரிமிதமான மட்டங்களை அனுபவிக்கின்றோம். இது வெறுமனே எமது தலைவர்கள் இடையில் மட்டுமல்ல எங்களது மக்களிடையிலும் அவை அனுபவிக்கப்படுகின்றமையை காண முடிகின்றது. இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக

வளர்ந்துள்ளது. 2025 ஏப்ரலில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் மற்றும் அதற்கு முன்னதாக 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் ஆகியவை இந்த பங்குடமைக்கான இலட்சிய வழித்தடத்தை உருவாக்கியிருந்தன.  பௌதீக, டிஜிட்டல் மற்றும் சக்தி இணைப்புகள் எங்களது பங்குடமையின் முக்கிய காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் பாதுகாப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய இலக்குகளாக வளர்ந்துள்ளன.

 

இந்த பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கடந்த வருடம் நாம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம்.  மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல திருகோணமலையை ஒரு எரிசக்தி கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுகள் இந்தியா இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 

பௌதிக உட்கட்டமைப்பினை நவீன மயப்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு வழங்கி வருகின்றது. மாஹோ -  ஓமந்தை புகையிரத பாதையினை நவீன சமிக்ஞை முறைமையுடன் மேம்படுத்தும் திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த தசாபத்தத்திலும் அதற்கு அப்பாலும் கவனத்தில் கொள்ளும்போது 500 கிலோமீட்டர் ரயில் பாதையினை மீளமைப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. அத்துடன் 400 கிலோமீட்டர் ரயில் பாதைகளின் சமிக்கை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதேவேளை காங்கேசன்துறை நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தற்போது கிரமமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். விமான சேவைகளை நோக்கும்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிட்டத்தட்ட 180 வாராந்த விமான சேவைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணத்துடனான இரண்டாவது பயண இடமாக திருச்சி இணைக்கப்பட்டது. 

எமது பங்குடமையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் அமுல்படுத்தலுடன் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணம் ஆரம்பமாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையூடாக ஆரம்பிக்க உதவும். நாட்டில் ரொக்கப்பணமற்ற கொடுக்கல் வாங்கல் முறைமைகளை கட்டி எழுப்புவதற்கான இலங்கையின் அபிலாசையானது இலங்கையில் UPI கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது.

 

எதிர்காலத்துக்கு தயாரான ஒரு பங்குடமையை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றுகின்றோம். செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பத்தின் புதிய வடிவங்களுக்கான வாய்ப்புகளை கடந்த வருடத்தில் நாம் உருவாக்கி இருக்கின்றோம். எங்களது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு மூலதன நிறுவனங்கள் இலங்கையில் ஒரு நவீன புத்தாக்க கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கி வருகின்றன.

 

அது மட்டுமல்லாமல் எங்களது சிறந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து செழிப்படைந்து வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் நிலையில் சுற்றுலா துறைக்கான பாரிய ஆதாரமாக தொடர்ந்து இந்தியா உள்ளது. அதேபோல கடந்த வருடம் இலங்கையின் ஏற்றுமதிக்கான இரண்டாவது பாரிய இடமாக இந்தியா பதிவாகியுள்ளது. இலங்கையின் பாரிய வர்த்தக பங்காளராகவும் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். இந்திய முதலீடுகள் ஓர் அதிகரித்த செல்நெறியினை கொண்டிருக்கும் நிலையில் 2025 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில் கிட்டத்தட்ட ஐம்பது வீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும். 

அபிலாசைகளை கொண்டிருக்கும் சமூகங்களாக முழுமையானதும் சுபிட்சம் நிறைந்ததுமான ஓர் எதிர்காலத்தினை உருவாக்குவதில் ஏற்பட்டிருக்கும் எமது வெற்றியில் அபிவிருத்தி ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இலங்கைக்கான எமது அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5  பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படும் நிலையில் இதில் 850 மில்லியன் பெறுமதியானவை நன்கொடை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையாகும். எங்கள் அபிவிருத்தி ஒத்துழைப்பு இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் விரிவடைகிறது. தேவைப்படும் தரப்பினருக்கு நலன்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மக்களை இலக்காகக் கொண்ட திட்டங்களிலேயே நாம் பணியாற்றி வருகின்றோம். கடந்த வருடத்திற்கு மேலாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கையர்களுக்காக நாம் எமது பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி திட்டங்களை விஸ்தரித்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி  சபைகளின் பிரதிநிதிகள் வரையிலும் சிரேஷ்ட அதிகாரிகள் முதல் கணக்காய்வாளர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் வரையிலும், ஊடகவியலாளர்கள் முதல் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் வரையிலும் இவ்வாறான திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் மூலம் ஒவ்வொரு துறையையும் சேர்ந்த நிபுணர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

 

இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரியதும் நம்பகமானதுமான பங்காளி என நான் அடிக்கடி கூறி வருகின்றேன். டித்வா புயல் தாக்கிய போது மீண்டும் ஒருமுறை முதற்கண் உதவி வழங்கியவர்களாக நாம் இருந்துள்ளோம். இலங்கையை புயல் தாக்க ஆரம்பித்த அதே நாளில் நாம் சாகர் பந்து நடவடிக்கையை ஆரம்பித்திருந்தோம். கொழும்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐ என் எஸ் விக்ராந்த் மற்றும் ஐ என் எஸ் உதயகிரி ஆகிய எங்களது கடற்படை கப்பல்கள் உடனடியாகவே நிவாரண உதவிகளை வழங்கியதுடன் மீட்பு நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்திருந்தன.

பின்னர் 1100 தொன்கள் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் எங்களால் விநியோகிக்கப்பட்டன. 14.5 தொன்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உங்களால் வழங்கப்பட்டது. அத்துடன் 60 தொன்கள் சாதனங்களும் விநியோகிக்கப்பட்டன. போக்குவரத்து தொடர்புகளை மீளமைப்பதற்காக 228 தொன்கள் பெய்லி பாலங்கள் வான் மார்க்கமாக கொண்டுவரப்பட்டன. இந்திய விமான படையின் எம்ஐ 17 உலங்கு வானூர்திகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை அணியினர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்டியருகில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட களமருத்துவனை மூலமாக கிட்டத்தட்ட 8,000 பேர் அவசர சிகிச்சை வசதிகளை பெற்றுக் கொண்டிருந்தனர். வான்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்த இரண்டு BHISHM  அவசர மருத்துவ பராமரிப்பு அலகுகள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது எமது பதிலானது துரிதமாகவும் உடனடியாகவும் பரந்தளவிலும் வழங்கப்பட்டிருந்தது. ஒரு பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவின் உள்ளுணர்வு ஆகியவற்றின் வழிகாட்டலில் எந்தவித நிபந்தனைகளுமின்றி இவை முன்னெடுக்கப்பட்டன.

 

டித்வா புயலின் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சு. ஜெய்சங்கர் அவர்கள் பிரதமர் அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். எங்களின் கூட்டொருமைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்காகவும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி பொதியினை அறிவிப்பதற்காகவும் அந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டித்வா புயலுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் மீள கட்டியெழுப்புதல் முயற்சிகளுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் இந்த பொதி அறிவிக்கப்பட்டது. இதன்கீழ் பின்வரும் ஐந்து பரந்த துறைகள் உள்ளடங்குகின்றன.

 

·        வீதிகள்,  ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் மீள் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு.

·        வீடுகள் நிர்மாணம் மற்றும் குடிநீர் விநியோகம்

·        சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கான ஆதரவு

·        விவசாயம் மற்றும் கால்நடைகள் துறைக்கான ஆதரவு; மற்றும்

·        சிறந்த பேரிடர் மீட்பு மற்றும் தயார் நிலையினை நோக்கி செயற்படுதல்

 

இந்தப் பொதியின் பயன்பாடானது அதனை நிறைவேற்றுதல் மற்றும் அதன் தாக்கங்களில் தங்கி உள்ளது என்பதனை நாங்கள் நன்கறிவோம். இத்திட்டங்களை உரிய காலப் பகுதியில் அமல்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காக நாம் இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். இத்திட்டங்களின் அமுலாக்க பணிகள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதனை நான் மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றேன். குறிப்பாக மிகவும் அவசர தேவைகளாக காணப்பட்ட பாலங்கள் மற்றும் புகையிரத மார்க்கங்களை மீளமைத்தல், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளை வேறு இடங்களில் அமைத்தல் ஆகியவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிகளாகும். எதிர்கால இயற்கை பேரிடர்களை தயார் நிலையுடன் எதிர்கொள்வதற்கான இலங்கையின் செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன.

புவியியல் ரீதியாக மிகவும் நெருக்கமான அமைவிடத்தினை நாம் கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தினை நாம் மிகைப்படுத்த முடியாது. எங்கள் அயல்பிராந்தியங்களில் பல்தேசிய குற்றவாளி அமைப்புகள் மற்றும் சட்ட விரோதமான செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காணப்படும் ஒத்துழைப்புகளில் இது வெளிப்படையாக உள்ளது. அதேபோல கடல் ரீதியான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எங்களது கூட்டு நடவடிக்கைகளிலும் இது வெளிப்பட்டுள்ளது. டித்வா புயலின் போது நாம் எதிர்கொண்டிருந்த சவால்கள் சாட்சியங்களாக காணப்படும் நிலையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும்போது அந்த தேவை அதிக அளவில் உணரப்பட்டது. இந்நிலையில் அவற்றுக்கான களங்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஊடாக இலங்கையின் பாதுகாப்பினை வலுவாக்குவதிலும் இது மிக முக்கியமானதாகும். குறிப்பாக பேரிடர் தணிப்பு மற்றும் நிவாரணமும் புனர்வாழ்வும் ஆகியவற்றில் இலங்கையின்   திறன்களை கட்டி எழுப்புதல் போன்றவையும் இதில் உள்ளடங்குகின்றன.

 

எனது உரையை நான் நிறைவு செய்வதற்கு முன்னர் உங்களது இயல்பான  மக்கள் மக்கள் தொடர்புகள் குறித்து நான் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னை பொறுத்தவரையில் எங்களிடையிலான உறவுகளில் இது மிகவும் விசேடமான அம்சமாகும். எங்களின் வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை போலவே, கிரிக்கெட் மற்றும் உணவுகள், யோகா மற்றும் ஆயுர்வேதம், நடனம் மற்றும் இசை போன்றவற்றுக்கான எமது ஆர்வமானது பகிரப்பட்ட ஒன்றாகும். இராமாயண சுவடாக இருந்தாலும் சரி, பௌத்த மத தடங்களாக இருந்தாலும் சரி, அது நவீன காலத்தில் ஆழமடைந்து வரும் நமது புராதன தொடர்பைப் பற்றிப் பேசுகின்றது. அடுத்த மாத ஆரம்பத்தில், கங்காராமை விகாரையில் புத்த பெருமானின் தேவ்னி மோரி சின்னங்கள் தரிசனத்துக்காக காட்சிப்படுத்தப்படும்போது, பல நூற்றாண்டுகளாகப் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட நமது உறவின் இந்த தனித்துவமான தன்மையை அது மீள உறுதிப்படுத்தும். இது நமது உறவுகளை ஏனையவற்றைப் போலல்லாமல் பிரத்தியேகமான ஒன்றாக உருவாகின்றது. பொதுவான சுபீட்சம் மற்றும் நல்வாழ்வின் எதிர்காலத்தை உருவாக்க நமது வரலாற்றின் இந்த செல்நெறியுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொள்வோம். இந்த கூட்டு முயற்சியில் உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கிறேன்.

 

ஜெய்ஹிந்த். ஜெய் இந்தியா இலங்கை மைத்ரி!

நன்றி. பஹுத் பஹுத் தன்யாவத். நன்றி . போஹமஸ் துதி இவ்வாறு
மேலும் உரையாற்றினார்.

https://www.virakesari.lk/article/237088

கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு தூண்டப்பட்டிருக்கலாம் ; ஆளுநர் வேதநாயகன்

2 months 1 week ago

கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு தூண்டப்பட்டிருக்கலாம் ; ஆளுநர் வேதநாயகன்

26 Jan, 2026 | 05:18 PM

image

(எம்.நியூட்டன்)

கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு தூண்டப்பட்டிருக்கலாம். தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு  திங்கட்கிழமை (26) காலை கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

'நேர்மையான தேசத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும்.

எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது. நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது.

மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும். எனவே, இப்பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம்.

சில சந்தர்ப்பங்களில் 'அன்பளிப்பு' என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை.

கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும், என்றார்.

https://www.virakesari.lk/article/237067

சி.வீ.கே .சிவஞானம்- சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்! மறவன்புலவு சச்சிதானத்தன் காட்டம்

2 months 1 week ago

இலங்கை தமிழரசுக்கட்சி கடந்த 12 ஆண்டுகளாக பல உறுப்பினர்களை நீக்கியுள்ளது என்று சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பல உறுப்பினர்களை அதற்கு அடித்தளமாக இருந்தவர் கிருஸ்தவ பாதிரியார் சுமந்திரன் ஆவார். கிருஸ்தவ பாதிரியாருடைய சபையாக தமிழரசுகட்சியை மாற்ற வேண்டும் என்ற நோக்கதுடன் தமிழரசுகட்சியின் தூண்களையெல்லாம் நீக்கிவிட்டார்.

தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களையெல்லாம் நீக்கிவிடுகின்றார்கள். தற்போது , தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனின் பதவியையும் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் சி.வீ.கே .சிவஞானமும், சுமந்திரனும் தான் நீக்கப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டார்.

https://tamilwin.com/

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr