ஊர்ப்புதினம்

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

2 months 1 week ago

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

22 Jan, 2026 | 10:29 AM

image

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (21) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் எனத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், "உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளில், கிளிநொச்சி மருத்துவமனைக்குத் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தூதுவர் குறிப்பிட்டார். அம்மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் அவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

'வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில்' தான் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த தூதுவர், கொழும்பிலிருந்து வடக்கை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்ந்துள்ளமை ஒரு சிறப்பான மாற்றம் எனக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், "தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. எமது மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்ற. இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக (Value Added Products) மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றன" என வலியுறுத்தினார்.

மேலும், பனைசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாகப் பனையிலிருந்து புத்தாக்க முயற்சியாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வைன் (Wine) உற்பத்தி குறித்தும் ஆளுநர் எடுத்துரைத்தார். இம்முயற்சிகள் எதிர்காலத்தில் மாகாணப் பொருளாதாரத்தில் நேரான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அண்மையில் வீசிய 'டித்வா' (Ditwa) புயலால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், மாகாண நிர்வாகச் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல், போதைப்பொருள் பாவனை விவகாரம் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் உறுதியளித்துள்ளமை வடக்கின் அபிவிருத்திக்குச் சாதகமான சமிக்ஞை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் நெதர்லாந்துத் தூதரகத்தின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகர், கலாசார ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர்.

IMG-20260122-WA0005.jpg

IMG-20260122-WA0013.jpg

https://www.virakesari.lk/article/236667

நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன்

2 months 1 week ago

நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன்

21 Jan, 2026 | 03:54 PM

image

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றியவர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது.

இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.

தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெற்று, தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/236617

நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு

2 months 1 week ago

நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு

Published By: Digital Desk 3

21 Jan, 2026 | 11:15 AM

image

நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் பல பகுதிகளில் வெப்பநிலைக் கணிசமாகக் குறைந்துள்ளது. 

நாட்டில் இன்று புதன்கிழமை (21) பதிவான மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.4°C நுவரெலியா வளிமண்டலவியல் திணைக்களத்தில் அதிகாலை வேளையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

பிராந்திய ரீதியான வெப்பநிலை விபரங்கள் இன்றைய தினம் அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விபரங்கள் பின்வருமாறு:

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூடுபனி: மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனி நிலவக்கூடும்.

தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களால் சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள், நாட்டின் தற்போதைய வெப்பநிலை விநியோக வரைபடத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/236580

டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்

2 months 1 week ago

டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்

Jan 21, 2026 - 07:03 PM

டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்

தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. 

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கிய நபர் என சந்தேகிக்கப்படும் நபர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் வாகனத்தால் மோதி கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். 

இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

பொலிஸ் பொறுப்பிலிருந்த அந்த டிப்பர் வாகனம் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. 

மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் அந்த டிப்பர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நபரின் இளைய சகோதரர் அதே வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 

எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. 

எனினும், இந்த விபத்தானது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட வேண்டும் என்றும், விபத்துக்கு நீதிக் கோரியும் பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

https://adaderanatamil.lk/news/cmko2cenw048ao29ndnhqypk9

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்

2 months 1 week ago

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்

Jan 21, 2026 - 12:37 PM

மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. 

மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும். 

இதற்கமைய, புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீனவர்கள் தாங்கள் விரும்பிய திட்டத்திற்குப் பங்களிக்க முடியும். 

இந்தத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், 60 வயதுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு வயது எல்லைகளிலும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவதாகும். 

உதாரணமாக, மாதாந்தம் ரூ. 1,000 ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்திற்கு ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தால், அவருக்கு 64 - 70 வயது வரை ரூ. 1,250 ஓய்வூதியமும், 71 - 77 வயது வரை ரூ. 2,000 ஓய்வூதியமும், 78 வயதுக்குப் பின்னர் ரூ. 5,000 ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைத்தல், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) ஓய்வூதியம் உரித்தாதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தில் இணைய முடிவது போன்றவை இதன் மேலதிக விசேட நன்மைகளாகும்.

https://adaderanatamil.lk/news/cmknokd44047to29n13m3udf1

📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

2 months 1 week ago

📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!”

சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

adminJanuary 21, 2026

1-2-3.jpeg?fit=1170%2C658&ssl=1

மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல்  என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பிரஜாசக்தி என்கிற அடிப்படையிலே கிராம மட்டங்களிலே ஜேவிபியானது தனது கட்சி பிரமுகர்களை நியமித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும்.

இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ அரச உத்தியோகத்தில் இருப்பவர்களையோ பலருக்கும் தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள்.

அவ்வாறான விடயம் தவறானது. ஜனநாயக வினோதமானது என்ற அடிப்படையில் நாங்கள் அவற்றை முற்றுமுழுதாக நிராகரித்து அவை நடைபெறக்கூடாது என்று விரும்புகிறோம். அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான சில முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம்.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு உதவியாக அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும்.

இராணுவம் தேவையற்ற விதத்தில் காணிகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள். வருகின்ற போது அவர்கள் கூறியபடியே அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று விடயத்தை கூறினார்கள். ஆனால் இதுவரையிலே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை.

சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களிலே புத்த கோயில்களை கட்டுகிற வேலையைத்தான்  தொடர்ந்து செய்கிறார்கள். வடக்கிலோ கிழக்கிலோ அது தான் நடக்கிறது. இந்த விடயங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பது மாத்திரம் அல்லாமல் காணிகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் கூட காணி விடுவிப்பு நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

புதிய அரசியல் சாசனம் வரவிரிக்கின்ற நிலையில் தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு  திருத்தம் ஒன்றை முன் வைப்பதாகவும் முடிவு செய்திருக்கிறோம்.

எமது கூட்டம் என்பது தொடர்ந்து மாதாந்தம் நடைபெறும் என்பது மாத்திரமல்ல ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முன்மொழிகளை கொண்ட பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கொண்டு நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2026/227001/

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2 months 1 week ago

Accident-2.jpg?resize=750%2C375&ssl=1

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும்.

இந்த விபத்துக்களில் 216 பேர் படுகாயமடைந்தனர், அதே நேரத்தில் 490 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார்.

விபத்துக்களில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் சாரதிகள் ஆவார் (45), அதேநேரம் மோட்டார் சைக்களின் பின் இருக்கையில் இருந்து பயணித்த 07 பேரும் உயிரழந்துள்ளனர்.

இது தவிர விபத்துக்களில் பாதசாரிகளும் அதிகளவில் (33 பேர்) உயிரிழந்துள்ளனர்.

அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த, குறிப்பாக பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களைத் தடுக்க, சாலைப் பாதுகாப்பு அமுலாக்கம் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2026/1460762

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு

2 months 2 weeks ago

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு

20 Jan, 2026 | 07:40 PM

image

அரச பணிகளுக்காக 2016.01.01 திகதியின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி, அவர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை ‘இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவை அல்லது தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்’  என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை  வெளியிடுவதற்கும் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பான 2016 வரவு - செலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ‘இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்’ எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து, குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/236558

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2 months 2 weeks ago

New-Project-41.jpg?resize=750%2C375&ssl=

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.கே. நதீகா வத்தலியத்த தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும்.

ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும்.

https://athavannews.com/2026/1460688

வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது

2 months 2 weeks ago

Vehicles-.jpg?resize=750%2C375&ssl=1

வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின் போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1460686

தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!

2 months 2 weeks ago

NIE.jpg?resize=750%2C375&ssl=1

தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்!

தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

இதே பிரச்சினை தொடர்பாக மேலும் இரண்டு தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண, உள் விசாரணையின் முடிவு வரும் வரை தனது பதவியில் இருந்து விலகினார்.

பொருத்தமற்ற வலைத்தளத்தைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கிய உள்ளடக்கம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, புதிதாக அச்சிடப்பட்ட 6 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின் விநியோகத்தை கல்வி அமைச்சு நிறுத்தி வைத்தது.

தேசிய கல்வி நிறுவகம் தயாரித்து ஏற்கனவே அச்சிடப்பட்ட இந்தப் பாடப்புத்தகம் குறித்த முறையான புகாரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1460621

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

2 months 2 weeks ago

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியதுடன், அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். 

எனினும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது ஆளும் கட்சி அல்ல எனவும் அது எதிர்க்கட்சியே எனவும் கூறியதுடன், அரசாங்கம் கூறுவதற்கமைய அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சி தயாரில்லை எனவும் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmkm7z2jt0464o29ny1pimdpv

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

2 months 2 weeks ago

📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –

adminJanuary 20, 2026

cvk.jpeg?fit=809%2C448&ssl=1

தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார்.

வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

“எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது, அந்த நிகழ்வுகள் JVP மற்றும் NPP யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. அதை அரசாங்க நிகழ்வாகப் பார்க்க முடியாது,” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தன்னை ஒரு மாகாண சபை அவைத்தலைவராக அழைப்பதுமில்லை, அறிவிப்பதுமில்லை எனவும், மக்கள் வாக்குப் பெற்று வந்த பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்கைகளை வழங்கிய போதிலும், வடக்கில் ஒருமித்த பயணம் சாத்தியமில்லை எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

மேலும் “வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள்,” என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.

தமது பிரச்சினைகள் தொடர்ந்தால் நாடாளுமன்றத்திலும், சர்வதேச ரீதியாகவும், ஊடகங்களுக்கும் செல்வோம் எனவும் அவா் எச்சரித்தார்.

https://globaltamilnews.net/2026/226891/

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர

2 months 2 weeks ago

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர

19 Jan, 2026 | 09:40 PM

image

(இராஜதுரை ஹஷான்)

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர்  திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது.

திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது.

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/236460

சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன்

2 months 2 weeks ago

download-2026-01-19T163354.362.jpg?resiz

சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன்.

இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை  மன்னாரில் இருந்து நாளை ஆரம்பிக்க உள்ளார்.

வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து,மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தனது பயணம் குறித்து தெளிவு படுத்தினார்.

இதன் போது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலி யூடாக இலங்கை பூராகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும்,குறிப்பாக,இலங்கை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகள் மனிதாபினான உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் புலம் பெயர் உறவுகளும் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும் இலங்கை மக்கள் அனைவரும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இலங்கை நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காக கொண்டு குறித்த பயணம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மேலும் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகள் இன்றி முடங்கியுள்ளனர்.அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பயணம் மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாக குறித்த பயணம் முன்னெடுக்கப்பட  உள்ளது.

எனவே மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து,மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது பயணத்தின் நோக்கத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1460578

செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

2 months 2 weeks ago

செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Jan 19, 2026 - 08:30 PM

செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக அகழ்வுப் பணிகளைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் அகற்றப்பட்ட பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.

மயானத்தின் உட்புறத்தில் உள்ள பாதையை நல்லூர் பிரதேச சபையினர் சீரமைத்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குறித்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தில் மாற்றங்களையோ ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எவ்வித பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmklakm8f0459o29n81uv65ns

கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !

2 months 2 weeks ago

கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !

19 Jan, 2026 | 05:55 PM

image

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சாவித்ரி குணசேகர, மூத்த ஊடகவியலாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர்.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

மேலும், சுனில் ஜயசேகர, ஹனா இப்ராஹீம் மற்றும் ஆர். ராம்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், ஊடக சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

WhatsApp_Image_2026-01-19_at_17.40.57.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.40.51.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.40.38.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.41.38.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.42.02.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.41.43.jp

WhatsApp_Image_2026-01-19_at_17.41.04.jp

https://www.virakesari.lk/article/236456

"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

2 months 2 weeks ago

"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை

19 Jan, 2026 | 05:31 PM

image

யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08 ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது.

அதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/236454

இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு

2 months 2 weeks ago

களுத்துறையில் இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு

19 Jan, 2026 | 05:36 PM

image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா  தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும்.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான  பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

8883ceae-b415-4048-a30d-efbdc06ce673.jpg

d42a8337-c81a-4777-9be7-9917ac76956a.jpg

5ffe4eba-5b3b-45c6-8b4a-cc2d8f13953d.jpg

f12a81c3-8eca-4aad-a238-1a9a8145b21e__1_

https://www.virakesari.lk/article/236451

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன்

2 months 2 weeks ago

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன்

19 Jan, 2026 | 01:08 PM

image

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய 'இந்தியாவில் கல்வி' (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில்  திங்கட் கிழமை  (19) நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நிகழ்வானது ஒரு சாதாரணக் கண்காட்சி மட்டுமல்ல. இது எமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நுழைவாயில். அத்தோடு, இது வலுவடைந்து வரும் 'இந்தியா - இலங்கை அறிவுசார் பங்காண்மையின்' ஒரு சான்றாகவும் திகழ்கின்றது.

இந்தியா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்கின்றது. அங்கு ஏறத்தாழ 1,300 பல்கலைக்கழகங்களும் 75,000 கல்லூரிகளும் உள்ளன. 

இங்குள்ள யாழ்ப்பாண மாணவர்களுக்கு, முதன்மையான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஒரு மாணவருக்கு, இந்தியாவில் கல்வி கற்பது அதிகபட்ச கலாசார இணக்கப்பாட்டையும், ஒரு இணக்கமான சூழலையும் வழங்குகின்றது.

எமது பிராந்தியம் ஏற்கனவே வலுவான பழைய மாணவர் தடம் ஒன்றைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றின் பல விரிவுரையாளர்கள், இந்தியாவில் தமது பயிற்சியைப் பெற்ற பெருமைமிக்க ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில் பெற்றவர்கள்.

இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 800 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இவை இளங்கலை, முதுகலை மற்றும் செவ்வியல் இசை, நடனம் போன்ற விசேட துறைசார் பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன.

இந்தக் கண்காட்சியானது 'நம்பிக்கையின் புதிய பாலமாக அறிவு' அமையப் பெறுவதற்கான ஒரு மேடையாகும். இந்தியாவில் கல்வி கற்கத் தெரிவு செய்வதன் மூலம், எமது மாணவர்கள் வெறும் பட்டத்தை மட்டும் பெறவில்லை. 

அவர்கள் எமது முழுப் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்கள் மற்றும் புத்தாக்கங்களின் இருவழிப் பரிமாற்றத்தில் பங்குகொள்கின்றனர்.

ஒன்றாக இணைந்து, பாக் நீரிணையை ஒரு 'அறிவுசார் நீரிணையாக' மாற்றுவோம். பகிரப்பட்ட கற்றல் மற்றும் வளர்ச்சியின் ஊடாக எமது சிறந்த அறிவாளிகள் அங்கு வளம் பெறட்டும் என்றார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

034efeef-0217-4cbb-b7d1-38d3ea9f1046.jpg

7a1a0652-9fd5-4742-8e23-51ae94fb2b9d.jpg

7a1a0652-9fd5-4742-8e23-51ae94fb2b9d.jpg

83178e3a-fcac-4028-9b4f-c8b5364486aa.jpg

6d294a27-30fa-485f-9442-780cf76393f3.jpg

a91fe025-6e62-4063-9908-52c312dffa14.jpg

https://www.virakesari.lk/article/236416

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr