ஊர்ப்புதினம்

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!

2 months 2 weeks ago

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!

19 Jan, 2026 | 03:59 PM

image

கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் 3.2 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

321 மீற்றர் நீளத்தில் 11 மீற்றர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திறப்பு விழாவில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

2018-2019 காலப்பகுதியில் இப்பகுதியில் மூன்று மேம்பாலங்களை அமைக்கத் திட்டமிடப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இந்த மேம்பாலத்தின் பணிகள் தடைப்பட்டிருந்தன. குறிப்பாக, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பொலிஸ் குடியிருப்புகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக 2022 இல் நிறைவடைய வேண்டிய இப்பணிகள் காலதாமதமானதுடன், இதனால் ஆரம்ப மதிப்பீடான 2,700 மில்லியன் ரூபாயுடன் மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு, தற்போது மொத்தம் 3.7 பில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மேம்பாலமானது ஒரு வழிப் பாதையாகச் (One-way) செயற்படுவதுடன், இது கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு நகரை ஒரு சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தில் இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, இப்பகுதியில் அகற்றப்பட்ட பொலிஸ் குடியிருப்புகளுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

617561159_1082095944011392_3917720480199

613809883_893810773060942_45527726842066

613848604_1390111652841989_2081206451679

614364943_861194233561073_62996814273676

616196833_1854410055213653_6648196483203

https://www.virakesari.lk/article/236414

ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை

2 months 2 weeks ago

ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை

19 Jan, 2026 | 11:59 AM

image

(இராஜதுரை ஹஷான்)

2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில்  131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2024 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏதேனும் நிதியை ஜனாதிபதியால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முதலீடு செய்ய முடியும்.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கணக்காய்வில் 2024 ஆம் ஆண்டு நிர்வாக சபை ஒரு தடவை மாத்திரமே கூடியுள்ளது. அதாவது 2024.08.15 ஆம் திகதி நிர்வாக சபை கூடியுள்ளது.எவ்வாறாயினும் இந்த வைப்புகளுக்குரிய அனுமதி 2025.01.28 ஆம் திகதியன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில்  131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ உதவிக்கான கொடுப்பனவை வழங்கும் முறை பரிசீலிக்கப்படும் முறையான விண்ணப்பம், மாத வருமானம், பிரதேச செயலாளரின் அறிக்கை, சொத்துக்கள், உயர்ந்தபட்ச மருத்துவ உதவித் தொகை வரையறை உள்ளிட்ட விடயங்கள் பரிசீலிக்கப்படாமல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதியை கடனாக வழங்கும் சட்ட ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.இவ்வாறான பின்னணியில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியத்தின் ஊடாக முன்னாள் பிரதமருக்கு 29,809,143 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட விடயங்களுக்கமைய அந்த தொகையில் 13,748,217 ரூபா மீள அறவிடப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2025 ஜுலை  மாதம் வரை அந்த தொகை மீள அறவிடப்படவில்லை என்று கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி நிதியத்தின் பணிக்குழாமினருக்கான சம்பளம் மற்றும் ஏனைய செலவுகள் நிதியத்தின் ஊடாகவே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்  இதற்குரிய 51,128,078 ரூபா செலவை ஜனாதிபதி செயலகவே ஏற்றுக்கொண்டுள்ளது.

அதற்கமைய மீளாய்வு ஆண்டின் இறுதி பகுதிக்குரிய  விதிமுறைகள் ஜனாதிபதி நிதிய சபையினால் தயாரிக்கப்படவில்லை.அதன் காரணமாக அதிகாரங்கள் பகிர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் இல்லாமல் செயற்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/236409

மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம்

2 months 2 weeks ago

மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக  மூடப்படும் - புகையிரத திணைக்களம்

Published By: Digital Desk 1

19 Jan, 2026 | 12:09 PM

image

(இராஜதுரை ஹஷான்)

புனரமைப்புப் பணிகளுக்காக  வடக்கு புகையிரத  மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக  இன்று திங்கட்கிழமை (19) முதல்  மூடப்படவுள்ளது.  மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி - தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள்  இன்று ஆரம்பிக்கப்படும்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத  பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரத பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு - தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் 'புலதிசி கடுகதி புகையிரதம்' மற்றும் 'உதயதேவி' புகையிரத  சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான 'இரவு தபால் புகையிரத' சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய  இன்று முதல் அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையும், எதிர்வரும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை - காங்கேசன்துறை வரையும் 'யாழ் ராணி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளது.

https://www.virakesari.lk/article/236399

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

2 months 2 weeks ago

Anura-4.jpg?resize=750%2C375&ssl=1

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2025 நவம்பர் நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் 10 வாக்குறுதிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

அதே நேரத்தில் ஒன்பது வாக்குறுதிகளில் எந்த முன்னேற்றமும் பதிவு செய்யப்படவில்லை. 

ஒரு வாக்குறுதி தோல்வியுற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“அனுர மீட்டர்”, ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட 30 முக்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது. 

இந்த மதிப்பீட்டில் 2026 தேசிய பட்ஜெட் வரையிலான முன்னேற்றங்கள் அடங்கும். 

டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டது.

கண்காணிக்கப்பட்ட வாக்குறுதிகள், அவற்றின் உயர் மட்ட பொது நலன் மற்றும் தேசிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அவை பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கியது.

தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை Manthri.lk பராமரிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கண்காணித்த “மைத்ரி மீட்டர்” மற்றும் “கோட்டா மீட்டர்” போன்ற முந்தைய உறுதிமொழி கண்காணிப்பு திட்டங்களை அனுர மீட்டர் பின்பற்றுகிறது.

தற்போது கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில், ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. 

கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பும் மேலதிக வாக்குறுதிகளை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கும் இந்த தளம் அழைப்பு விடுத்துள்ளது.

Manthri.lk என்பது இலங்கையின் ஒரே நாடாளுமன்ற கண்காணிப்பு தளமாகும், மேலும் இது நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

https://athavannews.com/2026/1460479

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா!

2 months 2 weeks ago

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா!

பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை!

written by admin January 18, 2026

NOTHEN-MANNAR-PONGAL-VELLA-18012026-7.jp


மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா –

பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம்  (18)   ஞாயிற்றுக்கிழமை  காலை  நடை பெற்றது.

வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில்  இடம்பெற்ற குறித்த விழாவில்  விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்    அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண  ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி   பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு,  சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த   கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள்    அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு  அபிவிருத்தி   பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த  நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது.

இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண  ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது  சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது.  தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட  நிகழ்வு தொடர்ந்து   இடம் பெற்றது.

மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.


https://globaltamilnews.net/2026/226770/

கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மை ஐ.நாவின் புதிய அறிக்கை மூலம் நிரூபணம் - அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல்

2 months 2 weeks ago

கொடூர மீறல்கள் நிகழ்ந்தன என்ற உண்மை ஐ.நாவின் புதிய அறிக்கை மூலம் நிரூபணம் - அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தல்

18 Jan, 2026 | 10:21 AM

image

(நா.தனுஜா)

இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி, இவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராயவேண்டும் என வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய 'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டது.

இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.நாவின் இப்புதிய அறிக்கையைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும், உலகளாவிய ரீதியில் பல்வேறு மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தலைதூக்கியிருக்கும் சூழ்நிலையில், தமது பிரச்சினைகளை ஐ.நா மறந்துவிட்டது எனக் கருதியிருந்த வேளையில் இவ்வறிக்கை வெளியானது தமக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிகமோசமான அக்கிரமங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச மக்கள் தீர்ப்பாயம், சர்வதேச நீதிமன்றம் போன்ற கட்டமைப்புக்களின் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா? அதனை எவ்வாறு செய்வது? என்பன தொடர்பில் ஆராயவேண்டும் எனவும் லீலாதேவி குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்த ஆராய்வு செயன்முறை குறித்தவொரு தரப்பினருக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், மாறாக அதில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/236330

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

2 months 2 weeks ago

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் விடயம் தொடர்பாக முக்கிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியநேத்திரனின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போதுதான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

அரசியல் குழுவின் இறுதி முடிவு! கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன் | Ariyanathran Expelled From The Party

பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

கட்சியின் அரசியல் குழு கூடி குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே அவர் இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.” என்றார்.

https://akkinikkunchu.com/?p=356525

மட்டக்களப்பு வவுணதீவில் வயல்களை நாசமாக்கிய காட்டுயானை ; நீண்ட நேரப் போராட்டத்தின் பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு

2 months 2 weeks ago

மட்டக்களப்பு வவுணதீவில் வயல்களை நாசமாக்கிய காட்டுயானை ; நீண்ட நேரப் போராட்டத்தின் பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு

18 Jan, 2026 | 04:45 PM

image

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் பெரும்போக நெற்செய்கை வேளாண்மை வயல்களுக்குள்  நேற்று (17) மாலை நுழைந்த காட்டு யானை பல மணிநேரங்கள் வயல்வெளிக்குள் நின்று, விளைந்த பெருமளவு நெல்மணிகளை உட்கொண்டுள்ளன.

குறித்த யானையை அப்பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானை வெடிகள் கொழுத்திப்போட்டு, பல மணிநேர போராட்டத்தின் பின்னர், அந்த யானையை காட்டுப்பகுதிக்கு அதிகாரிகள் விரட்டினர்.

யானையின் அட்டகாசத்தினால் பல ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காட்டு யானைகளிடமிருந்து மக்களையும் பொருட்களையும் பாதுகாக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

download__1_.jpg


https://www.virakesari.lk/article/236360

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்

2 months 2 weeks ago

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்

18 Jan, 2026 | 12:52 PM

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். 

இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும். சட்டம் அனைவருக்கும் சமம். 

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்? 

சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும் நாக விகாரை பிக்கு ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். 

இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது?

தைப்பொங்கல் என்பது உழைக்கும் வர்க்கத்தின் விழா. மண்ணோடு ஒட்டிய வாழ்வின், வாழ்வு கலாச்சாரத்தின், பண்பாட்டின் விழா மட்டுமல்ல மண் தமது வியர்வை விழுந்த மண்ணின் சுதந்திர வாழ்வுக்கான அரசியல் உரிமைசார் விழாவுமாகும். இதனை கௌரவப்படுத்துவது என்பது மண்ணின் மக்களை சுதந்திரமாக வாழ விடுவதாகும். அதற்கான எந்த உறுதிமொழியையும் ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் காலங்களில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியவர் அதற்கான எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக தெளிவாக இதனை கூறாதவர் தமிழ் மக்களின் மண்ணில் நின்று தம் மக்களை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள். 

தமிழ் மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.

இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/236339

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு

2 months 2 weeks ago

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. 

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

"Star of Pure Land" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்ற கற்களை விட இது மிகவும் சிறப்பானதாகும் என்றும் கூறப்படுகின்றது. 

இதன் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாகும் என மதிப்பிடப்படபடுவதாக இம்மாணிக்கக்கல்லை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை மாணிக்கக்கல் ஆய்வுகூடத்தின் பிரதம இரத்தினக்கல் ஆய்வாளர் அஷான் அமரசிங்க தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmkjkzlev042wo29n043wb2ly

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

2 months 2 weeks ago

download-3-3.jpg?resize=297%2C170&ssl=1

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்மைய நாட்களாக வடகடல் பகுதி வழமையை விட அதிக குளிராகக் காணப்படுகிறது.

இந்த மாற்றமானது இலங்கையின் ஒட்டுமொத்த வானிலைப் பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

வடக்கிலிருந்து ஆரம்பிக்கும் இந்தக் குளிர்ந்த நீர், கிழக்குக் கரையோரம் வழியாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படும்.

இந்த நீரோட்டத்தின் காரணமாக, தெற்குப் பகுதியில் நிலவும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது குறைக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

‘டித்வா’ (Ditwah) புயல் மறைந்ததைத் தொடர்ந்து, நிலப்பரப்பில் பதிவாகும் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன.

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும் என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1460367

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

2 months 2 weeks ago

MediaFile-13.jpeg?resize=750%2C375&ssl=1

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துவடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்து வந்த நபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 16 ஆம் திகதி இரவு ஜிந்துப்பிட்டி 125தோட்ட பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் புர்கா அணிந்திருந்தமை சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது

இந்தத் துப்பாக்கிச் பிரயோகத்தில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், மற்றும் 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஜிந்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்துவந்த நபர் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் விளைவே தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது

திட்டமிடப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பழனி ரொமேஷினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 https://athavannews.com/2026/1460384

கொத்மலை மக்களின் துயர்துடைக்க வந்த 2,000 கைகள்

2 months 2 weeks ago

கொத்மலை மக்களின் துயர்துடைக்க வந்த 2,000 கைகள்

Jan 18, 2026 - 12:43 PM

கொத்மலை மக்களின் துயர்துடைக்க வந்த 2,000 கைகள்

'டித்வா' புயலினால் அதிக பாதிப்புக்குள்ளான கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் கொத்மலை மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சிரமதானப் பணிகள் மூலம் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

நேற்று (17) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள் நாளை (19) வரை நடைபெறவுள்ளன.  

கொத்மலை பனங்கம்மன பகுதியில் சுமார் 20 கிராமங்களுக்கான பிரதான வீதி முழுமையாக நிலச்சரிவுக்குள்ளானதால், கடந்த 2 மாதங்களாக அந்த கிராமங்களின் குடியிருப்பாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.  

இதனைக் கருத்திற்கொண்டு, அனுராதபுரத்திலிருந்து வருகை தந்த குழுவினர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் குறித்த வீதியைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

கினிகத்தேன பகுதியிலிருந்து வருகை தந்த மற்றுமொரு குழுவினர், கொத்மலை மகா பீல்ல கால்வாய்ப் பகுதியைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

இந்தச் சிரமதானப் பணிகளுக்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.
https://adaderanatamil.lk/news/cmkjeghp0042qo29n5fq3u8pl

ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் ; இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

2 months 2 weeks ago

ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் ; இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

18 Jan, 2026 | 11:43 AM

image

(செ.சுபதர்ஷனி)

ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இவ்வருடத்துக்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும்  ஆரோக்யா மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார  பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் நேற்று (17) கண்டி அஸ்கிரி மகா விகாரையில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும், மல்வத்து மகா விகாரையில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ  சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மல்வத்து மகாநாயக்க தேரரிடம் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இதன்போது அமைச்சர் குறிப்பிடுகையில்,

கடந்த ஆண்டு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வருடத்திற்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இம்மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தவும், பிரதான வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் இதய நோயாளர்களுக்காகச் சகல வசதிகளுடன் கூடிய நவீன இதய சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும். சுமார் 12 பில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள இக்கட்டிடப் பணிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்கான அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அரச வைத்தியசாலைகளில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 62 அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை ஆதார வைத்தியசாலையை நவீன வசதிகளுடன் வேறொரு இடத்தில் புதிதாக நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியினால் சேதமடைந்த வத்தேகம வைத்தியசாலையையும் புதிய இடத்தில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சிலாபம், மஹியங்கனை உள்ளிட்ட 6 அரச வைத்தியசாலைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் புனரமைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள புத்தபகவானின்புனித சின்னங்கள்  எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசன வழிபாடுகளுக்காக வைக்கப்பட உள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/236331

தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல்

2 months 2 weeks ago

தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல்

Published By: Vishnu

18 Jan, 2026 | 03:41 AM

image

பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது.

உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் திட்ட வரைபு ஒன்றியத்தின் உத்தியோகத்தர் ரேணுக, பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், திட்ட வரைபு ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அரவிந்தன், ஊவா மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் இணைப்பாளர், கிழக்கு திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்பு நடனம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு உரைகள் இடம்பெற்று அதிதிகள் உரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக இயற்கு விவசாயத்தினை முன்னிறுத்தும் முகமாக விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு அலங்கரிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாகரை பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டது.வனஇலாகா,தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு பகுதிகளினாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன.

அந்தவேளைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கமுடிந்தது.இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் முன்னோக்கும் சூழ்நிலைகள் காணப்படுகின்றன.அவற்றினை நாங்கள் எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்.அவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமே எமது எதிர்காலத்தில் எமது நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கமுடியும் என இதன்போது கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்துகொண்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளினாலும் தெரிவிக்கப்பட்டது.

WhatsApp_Image_2026-01-17_at_16.07.53__2

IMG_7355.JPG

WhatsApp_Image_2026-01-17_at_16.07.54.jp

IMG_7321.JPG

IMG_7316.JPG

WhatsApp_Image_2026-01-17_at_16.07.54__1

IMG_7365.JPG

https://www.virakesari.lk/article/236296

இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும்

2 months 2 weeks ago

இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும்

அனர்த்தம் நீங்கியும் அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமா ?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஆர்.யசிஹரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 18 ஜனவரி 2026, 05:47 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முழுவதும் ஏற்பட்ட பரவலான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாக்கவும் அனர்த்தங்களை கையாளவும் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) கீழ், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அனர்த்தம் ஏற்பட்ட வேளையில், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அழுத்தம் எதிர்க்கட்சிகளால் கொடுக்கப்பட்டதை அடுத்து, கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியில், ராணுவத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றிப் பேணவும் இத்தகைய அசாதாரண நடவடிக்கைகள் அவசியமானவை என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

எனினும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. சூறாவளி நாட்டைவிட்டு நகர்ந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது நிவாரண முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் தொடர்புகள் பெருமளவு சீரமைக்கப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து அமல்ப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது அனர்த்த கால அவசரத் தேவைகளையும் தாண்டி, அரசாங்கம் தனது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியோ என்ற அச்சத்தையும் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கரிசனை

தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன என உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆசியப்பிராந்திய ஆய்வாளர் ரொபேர்டா மொய்ஸக் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலையின் கீழான விதிகள் இதற்கு முன்னைய சில சந்தர்ப்பங்களில் முன்னைய அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில விதிகள் நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்துக்கும், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கும் முரணானவையாகக் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன விதிகள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அத்தோடு அரச அதிகாரிகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது என்பது அரசியலமைப்பின் 14(1)(ஏ) பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஓரங்கமாகும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கிறது - ஐங்கரன் குகதாசன்

தற்போது மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஐங்கரன் குகதாசன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான அவசியமே இருக்கவில்லை என்றும், அப்பிரகடனத்தில் மனித உரிமைக் கோட்பாடுகளை மீறுகின்ற, மிதமிஞ்சிய அதிகாரத்தினை வழங்குகின்ற ஏற்பாடுகள் உள்ளன என்றும் கூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அப்பிரகடனம் நீடிக்கப்பட்டிருப்பது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"எதிர்க்கட்சியாக இருந்தபோது, இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்த அநுரகுமார திசாநாயக்க, இன்று அதனையே செய்வது 'மாற்றம்' தொடர்பில் இருந்த சொற்ப அளவு நம்பிக்கையையும் தவிடுபொடியாக்குகின்றது. அதேபோல் அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கின்றது" எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளனர். குறிப்பாக இந்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, "அரசாங்கம் தற்போது செயற்படுத்தியுள்ள அவசரகால சட்டமானது, அனர்த்தத்தை கையாள நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக அரசாங்கம் தமக்கு எதிரான விமர்சனங்களை தடுக்க பயன்படுத்தும் கருவியாக இது கையாளப்படுகின்றது" என குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில், "கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தின் கீழ் பல ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்கவும் இல்லை. இந்த நாட்டில் நீதி என்பது தகுதி தராதரம் பார்த்தே கையாளப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இன்றும் இராணுவ அடக்குமுறை நிலைமையே காணப்படுகின்றன. இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகள் எப்போதும் அவசரகால சட்டத்தின்கீழ் தான் உள்ளன. இந்த நிலைமைகளை மாற்றும்வரை தமிழர்களுக்கு விடிவுகாலம் இருக்காது" என்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறுகையில், "அனர்த்தத்தை கையாள நடைமுறைக்கு வந்துள்ள அவசரகால சட்டத்தில் தேடுதல் மற்றும் கைதுகள் என்பன எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளன? தடுப்புக்காவல் என்ற விடயம் எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்காக அவசரகால சட்டம் என்றால் அது பொதுமக்களை பாதுகாக்க மட்டுமே கையாள வேண்டும். மாறாக அதனை கையாண்டு யாரையும் கைதுசெய்யவோ அல்லது தண்டிக்கவோ முடியாது. ஆனால் அதனையே அரசாங்கம் செய்ய நினைக்கின்றது" எனக் குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கத்தின் விளக்கம்

இந்த குற்றச்சட்டுக்களை முழுமையாக நிராகரிக்கும் அரசாங்க தரப்பினர், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர இது குறித்து தெரிவிக்கையில், "இதற்கு முன்னர் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அவற்றைவிட மிக மோசமான அழிவொன்றை இம்முறை நாம் சந்தித்துள்ளோம்.

நாட்டில் 22 மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று வரை முகாம்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்த நிலைமைகளை கருத்தில்கொண்டே அனர்த்த நிலைமைகளை கையாள ஜனாதிபதியினால் நடைமுறைக்கு கொண்டுவந்த அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதுகுறித்த நாடாளுமன்ற அனுமதியையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்" என்றார்.

"இந்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளை கையாளவோ அல்லது யாரையும் தண்டிக்கவோ அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது. மாறாக பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய அரசு இயந்திரத்தை விரைவாக பயன்படுத்தி துரிதமாக சேவையாற்றவே கையாளப்படுகின்றது" எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை-பிரதமர்

இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய

அதேபோல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகையில், 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முகங்கொடுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. மத்திய மலைநாட்டின் பொதுமக்கள் வாழும் பல பகுதிகளில் இன்னமும் அனர்த்த அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களை பாதுகாப்பான பகுதிகளில் மீள் குடியேற்ற வேண்டும். இவற்றை கையாளும் விதமாக அரச அதிகாரிகள் விரைவாக செயற்படவும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை முறையாக வழங்கவே அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறிய அவர் இந்த சட்டத்தை தவறாக ஒருபோதும் கையாள மாட்டோம் என்றார்.

மேலும், நீண்ட காலத்திற்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டில் சகல பகுதிகளிலும் பொதுமக்கள் வழமையான சாதாரண வாழ்கையை வாழ வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும். அதுவரையில் மிகக்குறுகிய காலத்திற்கு இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvg17pzrpeo

இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு

2 months 2 weeks ago

இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு

Published By: Vishnu

17 Jan, 2026 | 10:06 PM

image

“அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குத் திரும்புவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) மற்றும் ‘இலங்கையைக் குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) ஆகிய செயற்திட்டங்கள், “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026” இல் (Global Caregiver Forum 2026) உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பட்டன.”

“இலங்கை தனது அண்மைக்கால வரலாற்றில் மிகப்பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) எனும் செயற்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் வேளையில், அதற்கு இணையாகப் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ‘இலங்கையை குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) எனும் மற்றுமொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது, அனைத்துத் தரப்பினரினதும் செயற்திறன்மிக்க ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உளசமூக நலனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலமும், அவர்களது தனிப்பட்ட உள வடுக்களைக் குணப்படுத்துவதற்கு உதவுவதன் மூலமும், நாட்டின் தேசிய முன்னுரிமையாகச் சிறுவர்களுக்குத் தேவையான தரமான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் போஷாக்கு கிடைப்பதை இச்செயற்திட்டம் உறுதி செய்கிறது.”

- சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் –

நேற்று (16), கௌரவ அமைச்சர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலாவது “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026”இல் (Global Caregiver Forum 2026) கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஸ்பெயினின் ராணி லெட்டிசியா (Her majesty Queen Letizia) அவர்களின் அனுசரணையில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான இந்த இரண்டு நாள் மாநாடு, யுனிசெஃப் (UNICEF), உலக சுகாதார நிறுவனம் (WHO), மற்றும் லெகோ (LEGO) அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்பிள்ளைப் பருவ மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான சர்வதேச வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நிபுணர் கலந்துரையாடல்கள் மற்றும் பல செயற்பாடுகள் இம்மாநாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

“எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்” (Looking Forward and Next Steps) எனும் தலைப்பிலான மாநாட்டின் இறுதி அமர்வில் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒரு குழு உறுப்பினராகப் பங்கேற்றார். இக்குழுவில் கசகஸ்தான் சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ அலியா ருஸ்டெமோவா, ட்ரிபிள் பி பாசிட்டிவ் பேரன்டிங் புரோகிராம் (Triple P Positive Parenting Programme) தலைமை நிர்வாக அதிகாரி திரு. மெட் பட்டர்ரி, போவிஸ்டா (Boavista) பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி. கதரினா மாகல்ஹேஸ் மற்றும் அயர்லாந்து குடும்ப வள மைய தேசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பெர்கல் லேண்டி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்த அமர்வின் போது, முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு:

• முன்பிள்ளைப் பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் "ஸ்டெப்-அப்" (Step-Up) தொடர்பாடல் திட்டம்.

• 2027 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் 19,000 ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி.

• முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயற்திட்டம் 2025-2029.

• ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல வளர்ச்சி குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான ஐந்து ஆண்டு கால திட்டம்.

அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழலில் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த “இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்” மற்றும் “இலங்கையை குணமாக்குதல்” ஆகிய திட்டங்கள் இம்மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், உலகத் தலைவர்களின் பாராட்டையும் பெற்றன.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவில் பின்வருவோர் அடங்குவர்:

• மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ்

• மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாட்டிற்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் செல்வி நிலுஷிகா தனசேகர

• யுனிசெஃப் இலங்கையின் கல்வி அதிகாரி செல்வி சசிகலா சுமுது குமாரி ரத்நாயக்க

https://www.virakesari.lk/article/236294

கொழும்பு துறைமுக நகரத்தில் The Food Harbour உணவக மையம் திறப்பு !

2 months 2 weeks ago

கொழும்பு துறைமுக நகரத்தில் The Food Harbour உணவக மையம் திறப்பு !

Published By: Digital Desk 1

17 Jan, 2026 | 09:34 PM

image

கொழும்பு துறைமுக நகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திறந்தவெளி உணவக மையமான ‘த ஃபுட் ஹார்பர்’ (The Food Harbour), நேற்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமாகியதை தொடர்ந்து உணவுத் துறைமுகம் பற்றிய கண்ணோட்டம் இடம்பெற்றது.  

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் ஏனைய விருந்தினர்கள் உட்பட பல பிரமுகர்களுடன் இணைந்து, உத்தியோகபூர்வமாக இதனை ஆரம்பித்து வைத்தனர்.

கொழும்பு துறைமுக நகர பிரதிநிதிகள் மற்றும் அழைக்கப்பட்ட தலைமை விருந்தினர்களால் முக்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டன.

கொழும்பு துறைமுக நகரத்தின் பரந்த வளர்ச்சிப் பார்வைக்கு பங்களிப்பதில் உணவு மையம் போன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஃபுட் ஹார்பர் என்பது இலங்கையின் முதல் சர்வதேச தரத்திலான திறந்தவெளி உணவு மற்றும் பான இடமாகும், இது கொள்கலன் பூங்கா பாணி சமையல் மையமாக உருவாக்கப்பட்டது. 

நேற்று (16) பொதுமக்களுக்குத் திறக்கப்படும் இது, சுற்றுலாப் பயணிகள், நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் உணவு ஆர்வலர்களுக்கு உணவளிக்கும் உலகளாவிய மற்றும் உள்ளூர் உணவு வகைகளை வழங்கும் பல்வேறு வகையான உணவு மற்றும் பான பிராண்டுகளை ஒன்றிணைக்கிறது.

உணவருந்தலுக்கு அப்பால், தி ஃபுட் ஹார்பர், போர்ட் சிட்டி கொழும்பின் வாழ்க்கை முறை மற்றும் ஓய்வு இடமாக அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது, அதேநேரம், இலங்கை மற்றும் பிராந்திய பிராண்டுகளுக்கு உயர்-தெரிவுநிலை தளத்தை வழங்குகிறது மற்றும் விருந்தோம்பல் மற்றும் உணவு சேவைத் துறைகளில் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது.

தி ஃபுட் ஹார்பரின் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களிடையே நெட்வொர்க்கிங் ஆகியவற்றுடன் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.  

615823394_1444903746993995_8193629796191

615564704_1444903963660640_1751401745723

615486411_1444903070327396_7488531601538

615612151_1444904376993932_8794861196303

616670213_1444903606994009_6901314946743

https://www.virakesari.lk/article/236278

கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை

2 months 2 weeks ago

கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை

Jan 17, 2026 - 06:45 PM

கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை

கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் மாற்றத்தக்க மாற்றங்களை முன்னெடுப்பதில் இருந்து ஒரு அடியைக் கூட பின்வைக்கப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் திட்டமிட்டபடியே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:

"இந்த கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் நீண்டகாலச் செயல்பாட்டின் மூலம் அடையத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, ஆசிரியர்-அதிபர் ஆட்சேர்ப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உபகரணங்கள் விநியோகம் ஆகியவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பாரிய செயல்பாட்டின் போது, ஒரு சில குழுக்கள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்வைக்கும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேண வேண்டும். இது பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் முழு நாட்டினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு செயல்பாடு என்பதால், இது தொடர்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியமாகும். கல்வி மாற்றச் செயல்பாட்டின் விசேட திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கியுள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட டிஜிட்டல் கல்வி வசதிகளான ஊடாடும் தொடுதிரை (Interactive screens) மற்றும் இணைய இணைப்புகளை முதற்கட்டமாக முதல் இரண்டு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmkiby3rc0421o29nvubm84cj

ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை!

2 months 2 weeks ago

ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை!

Jan 17, 2026 - 06:16 PM -

0

ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு 'குறைப்புப் புள்ளிகள்' வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 

கேகாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார். 

மேலும், போதைப்பொருள் பாவித்துக் கொண்டு வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக இந்த 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். 

போதைப்பொருள் பாவனையைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் மா அதிபரால் புதிய பரிசோதனை உபகரணமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், அது நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிப்பாகங்களை அகற்றாது வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmkiax0dg0420o29nfypvfych

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr