ஊர்ப்புதினம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை!

2 months 2 weeks ago

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவின் இலங்கை வருகை!

16 Jan, 2026 | 11:57 AM

image

எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் உண்மை கண்டறியும் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் (Julie Kozack) அறிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் சேதவிபரங்களை இந்தக் குழு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் தொடர்பான கொள்கை விவாதங்களையும் அவர்கள் நடத்துவார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கொசக் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/236159

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்கக் குற்றச்சாட்டு - பொறுப்புக்கூறலில் இலங்கையின் மௌனம் கலைக்கப்படுமா?

2 months 2 weeks ago

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து பகிரங்கக் குற்றச்சாட்டு - பொறுப்புக்கூறலில் இலங்கையின் மௌனம் கலைக்கப்படுமா?

15 January 2026

logo_hrw_featured-2000x1050.png

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்து, வழக்குத்தொடர்வதற்கு, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல் பதவிக்கு வந்த போது, நீதி வழங்குவதாக உறுதியளித்த போதிலும், இதுவரையில் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. 

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், உயிர் பிழைத்தவர்களும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை, இலங்கை நிவர்த்தி செய்யத்தவறியது, பொறுப்புக்கூறல் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுயுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இரு தரப்பினரும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள், விசாரணைகளை முடக்கி, நீதியை மறுத்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளதாகவும், அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/440847/public-accusations-about-sri-lankas-war-crimes-will-sri-lankas-silence-on-accountability-be-broken

முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது

2 months 2 weeks ago

முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது

16 Jan, 2026 | 11:11 AM

image

முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட  பெண் பெண் கணினி பொறியியலாளரை கைது செய்துள்ளதாக  குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட பெண்  சந்தேக நபர் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயதுடைய கணினி பொறியாளர் என  குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நிர்வாண புகைப்படங்களை தனது முன்னாள் காதலி வாட்ஸ்அப் குழு மூலம் பகிர்ந்து கொண்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம்  முறைப்பாடு அளித்துள்ளார். 

இந்த முறைப்பாட்டடின் அடிப்படையில் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை தொடங்கியபோது சந்தேகநபரான பெண் முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுவிற்கு பகிரந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. 

பின்னர் குற்றப் புலனாய்வுத் பிரிவினர்  குறித்த பெண் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த பெண் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக முன்பு முன்னால் காதலடன் உறவை பேணிவந்துள்ளார். 

அவர்களின் காதல் முறிவை தொடர்ந்து,  அந்த பெண் உணர்ச்சி ரீதியான துயரத்தையும் மனக்கசப்பையும் அனுபவித்ததால்  முன்னால் காதலனை பழிவாங்கும் நோக்குடன் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்,  பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/236148

காதலர்கள் ஜாக்கிரதை!

யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !

2 months 2 weeks ago

யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !

16 Jan, 2026 | 12:25 PM

image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/236163

🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨

2 months 2 weeks ago

🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨

adminJanuary 15, 2026

a5.jpg?fit=1170%2C746&ssl=1

யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அவர்கள் கலந்துகொண்டார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் யாழ். மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் உரையில் பல இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 🗣️

குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு –  “எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே தமது இலக்கு.” எனக் குறிப்பிட்டுள்ளார்

இனவாதமற்ற சமூகத்துடனான பாகுபாடுகளற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும், கலாசார மதிப்பை பேண “ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தி உள்ளார்.

பொதுமக்களின் உற்சாகமான வரவேற்புடன் நடைபெற்ற இவ்விழா, வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2026/226606/

வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா!

2 months 2 weeks ago

வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா!

adminJanuary 16, 2026

3-2-1.jpg?fit=1170%2C878&ssl=1

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (15.01.26)  இடம்பெற்றது.

இதில் முதலாம் இடத்தை யோ. பிரகாஷின் அச்சுலேட்டர் பட்டம் பெற்றது. இரண்டாம் இடத்தை லோ.கோபிசாந்தின் விண்ணில் சிதறிய ரத்தினங்கள் பட்டமும், மூன்றாம் இடத்தை யோ.பிரகாஷின் சாகசம் காட்டும் விமானம் பட்டமும் பெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர்  எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://globaltamilnews.net/2026/226615/

💔மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! 🌊

2 months 2 weeks ago

💔மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! 🌊

adminJanuary 16, 2026

616841868_1199723525600015_6975411397902

மன்னார் பேசாலை கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நண்பர்களுடன் இணைந்து பேசாலை கடல் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக அவர்கள் அலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.

  • உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம் மற்றும் உதயபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரு பாடசாலை மாணவரும் அடங்குவார்.

  • நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பேசாலை காவற்துறையினர் இந்த துயரச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தைப்பொங்கல் கொண்டாட்டங்களின் மத்தியில் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே மீளாத் துயரை ஏற்படுத்தியுள்ளது.

https://globaltamilnews.net/2026/226620/

இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

2 months 2 weeks ago

இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

Published By: Vishnu

15 Jan, 2026 | 06:47 PM

image

(செ. சுபதர்ஷனி)

அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருவதாக விசேட வைத்திய நிபுணர் நாலக்க திஸாநாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சையில் 65 தொடக்கம் 67 சதவீதமானவை பைபாஸ் சத்திர சிகிச்சையாகும். அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதில் பைபாஸ் சிகிச்சைக்காக வருகை தருபவர்களின் எண்ணிக்கையும், வீதமும் சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

அத்தோடு தொற்றா நோய்களும் சமூகத்தில் அதிகரித்துள்ளன. நோய் தொடர்பான தெளிவும் அவதானமும் இல்லாமையே நோயாளர் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் விலா எலும்புகளை அகற்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது நவீன சிகிச்சை முறைகளைப் பின்பற்றி எலும்புகளை அகற்றாது இடது பக்கமாக இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வயது வந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.

இலங்கையில் கொழும்பு, கண்டி, காலி கராபிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளிலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரமே இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிகிச்சைகள் வழங்கப்படுவதால், சத்திரசிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளர் காத்திருப்புப் பட்டியலில் ஒரு வருடத்துக்கும் அதிக காலத்துக்கு நீண்டுள்ளது.

ஆகையால் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்த தீர்வு. பொதுமக்கள் நோய்த் தடுப்புக் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளுதல் மற்றும் இரத்த கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/236125

நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்

2 months 2 weeks ago

நாடு தழுவிய ரீதியில் தை திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்

15 Jan, 2026 | 12:59 PM

image

நாடு தழுவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (15) தைப்பொங்கல் திருநாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருவதோடு,இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

நீர்கொழும்பு 

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று காலை  நீர்கொழும்பு ஸ்ரீ சிங்க மகா காளியம்மன் கோயிலில்  பரமேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட பூஜை நடைபெற்றது.

அம்பாளுக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை, சூரிய பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்றதை அடுத்து  அம்பாள் உள்வீதி வலம் வருதல் தொடர்ந்து இடம் பெற்றது.

இந்த விஷேட பூஜையில் அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

Thaipongal_4.jpg

20260115_073255.jpg

Thaipongal_6.jpg

20260115_073644.jpg

Thaipongal_1.jpg

Thaipongal_5.jpg

மட்டக்களப்பு 

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலைபெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

IMG_7159.JPG

IMG_7148.JPG

IMG_7132.JPG

IMG_7188.JPG

IMG_7170.JPG

திருகோணமலை

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமான இன்று திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளிலும் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றன. 

குறிப்பாக ஆலயங்களிலும் ,வீடுகளிலும் விசேட வழிபாடுகள் தைப்பொங்கல் நாளான இன்று இடம் பெற்றன. 

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் விசேடமாக பூஜை வழிபாட்டுடன் பொங்கல் இடம் பெறுகிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் குடும்பங்களாக சேர்ந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக திருகோணமலை   திருக்கோணேஸ்வரம்,  திருகோணமலை பத்திரகாளி அம்பாள் போன்ற  ஆலயங்கள் மற்றும் வீடுகளில்,பொது இடங்களிலும்  தைப்பொங்கல் நிகழ்வுகள்  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20260115-WA0025.jpg

IMG-20260115-WA0023.jpg

IMG-20260115-WA0022.jpg

IMG-20260115-WA0021.jpg

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா குருக்களினால் இப்பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு கைவிசேஷமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

chedipalayam__1_.png

chedipalayam__3_.png

chedipalayam__4_.png

chedipalayam__5_.png

https://www.virakesari.lk/article/236087

2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்

2 months 2 weeks ago

2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்

Published By: Vishnu

15 Jan, 2026 | 03:12 AM

image

2026 ஜனவரி 21 முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், 1ஆம் தரத்திற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழான பாடத்திட்டக் கற்றல் செயல்பாடுகள் ஜனவரி 29 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் 6–13ஆம் தரங்களுக்கு தினசரி பாடவேளைகள் எட்டாகவும், ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்களாகவும் அமையும்.

மேலும், 2026 இலும் கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரப்படுவதுடன், மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களையே முதன்மையாக பயன்படுத்த வேண்டும் என்றும், புதிய சீர்திருத்தங்களுக்கு உரிய முன்னோடித் திட்டம் சில மாகாணங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/236061

நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

2 months 2 weeks ago

நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

Jan 15, 2026 - 01:17 PM

நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmkf5cyo003ybo29nf06wgdlk

ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி

2 months 2 weeks ago

ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி

GAJA-1.jpg

ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள்.ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தமிழ் தலைவர்கள் அதை செய்யவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு செவ்வாய்க் கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

அண்மையில் தமிழகத்திற்கு நாம் விஜயம் செய்து எமது நிலைப்பாட்டை தமிழகத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம்.எங்கள் முயற்சி தொடர்பான விளக்கக் குறைவு காரணமாக கணிசமானோர் விமர்சிக்கின்றனர்.

தமிழ் நாட்டுக்கு செல்வது தொடர்பாக எங்கள் அமைப்புக்குள் நீண்டகாலமாக பேசி வந்தோம்.

தமிழ் நாட்டை ஆண்ட தலைவர்களை சந்திக்க முடியாமல் ஏனைய கட்சிகளின் தலைவர்களை சந்திப்பது பொருத்தமற்றது என்பதால் அதனை தவிர்த்திருந்தோம்.

தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததால் தமிழகத்திற்கு சென்று காங்கிரஸை தவிர அனைத்து கட்சித் தலைவர்களுடன் நாம் சந்தித்தோம். காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்திற்கு வெளியில் இருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

இந்தச் சந்திப்புக்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதியிருந்தார்.

ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட அணி தமிழ் தேசிய நிலைப்பாட்டை தமிழகத்திற்கு சென்று வலியுறுத்திய போது தமிழ் நாட்டு அரசாங்கம் பிரதமர் மோடிக்கு பலமான கடிதம் எழுதுமாக இருந்தால்,தமிழ் தேசிய அணியின் பலமாக பத்துப் பேரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் எவ்வளவு விடயங்களை செய்ய முடியும்.

கடந்த காலங்களில் மக்கள் அங்கீகாரம் பெற்ற எமது தலைவர்கள் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை.

தமிழகத்துடனான உறவைப் அவர்கள் பேணவில்லை. ஏழு கோடி மக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் எமது மக்கள் அனாதைகளாக இருந்தார்கள்.

ஏன் கடந்த காலத்தில் மக்கள் ஆணை பெற்ற தலைவர்கள் அதை செய்யவில்லை. தமிழ் தேசிய நீக்கம் அவர்களின் நோக்கம் என்றதால் அவர்களுக்கு தமிழ் நாடு தேவையில்லாமல் இருந்தது – என்றார்.

https://akkinikkunchu.com/?p=356208

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்!

2 months 2 weeks ago

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்திடமிருந்து விடுவிக்க வலியுறுத்தல்!

January 15, 2026

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்திற்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவம் அங்கு முகாமிட்டிருப்பது உரிமை மீறலாகும்.  உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் அக் காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா   நிரோஷ்   வலியுறுத்தினார்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் விடயத்தில்,  19.42 ஏக்கர் நிலம் உரிமையாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு – சுவிகரிப்பு தொடர்பான தற்போதைய நிலை அரச காணி (03.09.2014) இராணுவத்தினருக்குக் கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என  செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயத்தில் குறுக்கிட்டு பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்   நிரோஷ் , மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினருக்கு கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் புதிதாக தற்போதே கேள்விப்படுகின்றோம்.

அது முன்னைய காலங்களில் இடம்பெற்றதாக தங்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த இரகசிய தகவலை நாம் அறியும் நிலையில், நாம் அதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.

துயிலும் இல்லத்தில் எமது உறவுகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு மரணித்தவர்களை நினைவு கொள்ளும் உரிமை, அஞ்சலிக்கும் உரிமை எமது உறவுகளுக்கு கிட்டவேண்டும்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக் குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, இது 2014 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து குறுக்கிட்ட தவிசாளர் 2014 ஆம் ஆண்டு எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டிருக்கின்றது? காணி கையளிப்பு சட்டங்கள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜிவன் எம்.பி, மாவீரர் துயிலும் இல்ல நிலங்களை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். அது நடக்கும் என்றார். இராணுவம் இருக்கின்ற பெருமளவான காணிகள் விடுவிக்கப்படும் என்றார்.

https://www.ilakku.org/demand-to-release-the-kopayi-maveerar-thuyum-illam-from-the-military/

மன்னாரில் ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!

2 months 2 weeks ago

ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!

Vhg ஜனவரி 15, 2026

AVvXsEiSqtNN64QYNjC5IRp3DwDSTdxFUhglQ5OH7eBzjbLT-Uqez_d--z-FoYd9RSaB2dmte6uwBL84m8JrE_Lifo-RIlII_SDzpdMNS_n_vxR4Rmi2kCBsT9sbYYt2WCpDxerbkuU1HS2f6lnqwXku6SaCRb58wnWt5HytUPPPtGe9j0viRCMLLcnxcRXYPkFa

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்' (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (15.01.2026)வியாழக்கிழமை மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது.

ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட்  நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 

AVvXsEiAsW6RICIu8pdYtLLFKz7slduM-2GBzIP-L2qVpszl2nJKksvefj3IG5iFeju8H-ziKefC16buH2zY80efrknFy-I2m0pTzrk2qtcFk-IwnS-9FGE8wRziAcZEOrseGOh4JIrjmUIZM6aWQzOC-zO7usvB-rIHpQAHimCuselgaHWp9BuHP75sPaj-0S4b

AVvXsEjENdrhcZoZjX4vYd_vjQihSpo3jDz-QyiTsDVAn5WmXvvdRln7jPfSMAKxcHpuN1juY9lzCn2uUsLiAFzmrGgWP-nbxqy6B32Q47hkw9lu5-6LKwBSIyVooO0dVvLrKFZO-4FDqVVF45I0Zz_uviTuz-pAVGOeFyhsSo4U7nm4MCtbgBrYkZZcO7A7d5r2

இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி பிரதி அமைச்சர் முஹமது இலியாஸ் முஹமது அஹ்ரம் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். 

மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டமானது, நாட்டின் தேசிய மின்வழங்கலுக்குத் தூய எரிசக்தியைச் சேர்ப்பதோடு, சூழலுக்கு உகந்த மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.battinatham.com/2026/01/blog-post_542.html

புதிய வற் வரி விலைப்பட்டியல் முறை: நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல்

2 months 2 weeks ago

புதிய வற் வரி விலைப்பட்டியல் முறை: நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடல்

15 Jan, 2026 | 12:52 PM

புதிய VAT வரி விலைப்பட்டியல் (VAT Tax Invoice) வடிவம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தேவைகள் குறித்து சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் (ICCSL) வரிக்குழு அண்மையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. 

எமதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த மாற்றங்களுக்குக் கொள்கை வகுப்பாளர்கள், வரி வல்லுநர்கள் மற்றும் வணிக சமூகம் எவ்வளவு தூரம் தயாராக உள்ளது என்பதை ஆராய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களாக, புதிய VAT விலைப்பட்டியல் முறைக்கு வணிகங்களின் தயார்நிலையை மதிப்பீடு செய்தல், நடைமுறை இடைவெளிகள் மற்றும் தெளிவற்ற தன்மைகளைக் கண்டறிதல் என்பன அமைந்திருந்தன.

இதன் மூலம், புதிய முறையை வணிகங்களுக்கு உகந்த வகையில் சுமூகமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு (IRD) வழங்க ICCSL திட்டமிட்டுள்ளது.

முக்கிய உரை மற்றும் கொள்கை விளக்கங்கள்

நிகழ்வின் ஆரம்ப உரையை ஆற்றிய சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் தலைவர் திரு. ஜொனி பெர்னாண்டோ, இந்த சீர்திருத்தம் ஒரு சாதாரண நிர்வாக மாற்றம் மட்டுமல்ல, இது வணிகங்கள் பரிவர்த்தனைகளை ஆவணப்படுத்தும் மற்றும் வரி வரவுகளைக் கோரும் முறையில் ஏற்படும் ஒரு கட்டமைப்பு மாற்றமாகும் என வலியுறுத்தினார். வருவாய் இலக்குகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்குத் தெளிவான நடைமுறைகளும், போதிய கால அவகாசமும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

KPMG நிறுவனத்தின் வரி மற்றும் ஒழுங்குமுறை சேவைகளின் முதல்வர் செல்வி. ரிஃப்கா ஸியாத் (Ms. Rifka Ziyard), புதிய விலைப்பட்டியல் வடிவத்தின் பின்னணியில் உள்ள கொள்கை ரீதியான காரணங்களை விளக்கினார்.

போலி விலைப்பட்டியல்களைத் தடுத்தல், டிஜிட்டல் முறைக்கு மாறுதல் மற்றும் உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) முறைகேடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே இந்த மாற்றம் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சவால்கள்

ஏர்ன்ஸ்ட் அண்ட் யங் (Ernst & Young) நிறுவனத்தின் வரித்துறை முதல்வர் திரு. வேலாயுதபிள்ளை சக்திவேல், நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசுகையில் பின்வரும் முக்கிய சவால்களைப் பட்டியலிட்டார்:

* மென்பொருள் மற்றும் முறைமைகளைத் தயார்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.

* சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) ஏற்படும் மேலதிக சுமை.

* சிறிய பிழைகளுக்காக விலைப்பட்டியல்கள் நிராகரிக்கப்படும் அபாயம் மற்றும் வரி வரவுகள் மறுக்கப்படுதல்.

* அதிகரித்த இணக்கப்பாட்டுச் செலவுகள்

வணிக சமூகத்தின் கோரிக்கைகள்

2026 ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் நிலவும் தெளிவற்ற தன்மைகளைத் தீர்க்காவிட்டால், அது பொருளாதார ரீதியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பங்கேற்பாளர்கள் எச்சரித்தனர். குறிப்பாக, அதிக பரிவர்த்தனைகள் நடைபெறும் மற்றும் சேவை சார்ந்த துறைகளில் இந்த சிக்கலான நடைமுறை தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைச் சீர்செய்யப் பங்கேற்பாளர்கள் முன்வைத்த பரிந்துரைகள்:

* முறைமைகளை மாற்றியமைக்க மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப் போதிய கால அவகாசத்தை IRD வழங்க வேண்டும்.

* தெளிவான வழிகாட்டிக் குறிப்புகள் மற்றும் உதாரணங்களை வழங்க வேண்டும்.

* ஆரம்பக் கட்டத்தில் கடுமையான தண்டனைகளைத் தவிர்த்து, கல்வி மற்றும் வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சர்வதேச வர்த்தக சபை இலங்கையின் துணைத் தலைவர் திரு. ஹேமக்குமார குணசேகர மற்றும் முன்னாள் தலைவர் திரு. ஷனில் பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச வர்த்தக சபை இலங்கை உறுதி அளித்தது. வரிச் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்தது.

https://www.virakesari.lk/article/236088

இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு

2 months 2 weeks ago

இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு

அமெரிக்காவில் பொது நலத்திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில்,
75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் ஈரான், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது ‘எக்ஸ்‘ தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- “அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் சாரும் குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்படுகின்றன.

புதிய குடியேற்றவர்கள் அமெரிக்க மக்களின் செல்வத்தை சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரும்” என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், வெள்ளை மாளிகை வெளியிட்ட பதிவில், “புதிய குடியேற்றவர்கள் பொதுச் சுமையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வரை விசா செயலாக்கம் நிறுத்தப்படுகிறது. அமெரிக்க நாட்டுக்கே முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இலங்கை-உள்ளிட்ட-75-நாடுகளுக்கு-அமெரிக்கா-விடுத்த-அறிவிப்பு/50-371077

போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்!

2 months 2 weeks ago

போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்!

adminJanuary 15, 2026

Anantha-Vijayapala.jpeg?fit=960%2C665&ss

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முழு நாடும் ஒன்றாக – தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து செயற்படவுள்ளனர்.

இதனூடாக போதைப்பொருட்களை இல்லாது செய்வதுடன், அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் இல்லாதொழிப்பதே நோக்கம்

அந்த வகையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்டெடுக்க அமைக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்தவித அச்சமும் இன்றி, நம்பிக்கையுடன் தகவல்களை வழங்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2026/226564/

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2 months 2 weeks ago

HE-2_large.jpg?resize=750%2C375&ssl=1

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2026/1459972

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்.

2 months 2 weeks ago

download-71.jpg?resize=750%2C375&ssl=1

கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்.

கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று  இடம்பெற்றது

இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது

நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்

download-72.jpg?resize=600%2C400&ssl=1

https://athavannews.com/2026/1460010

2026இல் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

2 months 2 weeks ago

2026இல் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 

14 Jan, 2026 | 06:52 PM

image

இலங்கை மின்சார சபையானது உரிய நேரத்தில் முறையான கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த போவதில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

குறித்த காலத்திற்குள் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியமை, முதன்மை முன்மொழிவின் குறைபாடு காரணமாக இந்த காலாண்டிற்கு மின்சாரசபை ஒரு புதிய முன்மொழிவை முன்வைத்திருப்பினும், காலாண்டின் மீதமுள்ள குறுகிய காலத்திற்கு ஒரு திருத்தத்தை செயல்படுத்துவதன் மூலம் அதிக சதவீதத்தில் கட்டணங்களை மாற்றுவதன் தீமைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை கடந்த 2025 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆணைக்குழு மின்சார சபைக்கு தெரிவித்திருந்தது. இருப்பினும், மின்சார சபை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதியன்று 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்தது. 

குறித்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது. திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதங்கள் ஏற்படும் என்று மின்சாரசபை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைகுழுவிற்கு தெரிவித்தது. இன்றுவரை ஆணைகுழுவிற்கு திருத்தப்பட்ட கட்டண திருத்த முன்மொழி திட்டம் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் கட்டண திருத்த முன்மொழி திட்டம் பெறப்பட்டவுடன், மதிப்பாய்வு மற்றும் பொது ஆலோசனைக்குப் பின்னர் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடையும் காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். காலாண்டில் குறுகிய காலத்திற்கு வருமானம் மற்றும் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்வதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாறக்கூடும் என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பொருளாதாரத்தில் அதிக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சரியான காலப்பகுதியில் செல்லுபடியாகும் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்காததாலும், காலாண்டின் குறுகிய காலத்திற்கு கட்டண திருத்தத்தை செயல்படுத்துவதாலும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம் செய்தது. 

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி  அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/236050

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr