ஊர்ப்புதினம்

இலங்கையின் பேரிடர் தயார் திறனை உயர்த்த ஜப்பான் ரேடியோ சாதன உதவி

1 week 1 day ago

இலங்கையின் பேரிடர் தயார் திறனை உயர்த்த ஜப்பான் ரேடியோ சாதன உதவி

25 Mar, 2026 | 11:11 AM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

“அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ், ரேடியோ உபகரணங்களை வழங்கும் ஒரு நன்கொடை திட்ட உடன்படிக்கையில் ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, செவ்வாய்க்கிழமை ( 24 ) அன்று,கைச்சாத்திட்டார்.

இந்த உடன்படிக்கை வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவருடன் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பான் அரசு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு செயல்படுத்தும் இந்தத் திட்டத்திற்கு 181,837 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 55.7 மில்லியன்) வழங்கியுள்ளது.

இந்தத் திட்டம் முக்கியமாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட உயர் தரமுடைய உபகரணங்களை வழங்குவதன் மூலம் மீட்புப் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குள் நேரடி ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கி நம்பகமான வலைப்பிணைகளின் நிறுவலுக்கு உதவும்.

இதில் HF ரேடியோக்கள், கையடக்கமான ரேடியோக்கள் மற்றும் ரிப்பீட்டர்கள் உள்ளடங்கும். இது பேரழிவின்போது தயார் நிலை மேம்படவும் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்பையும் சுலபமாக்கும்.

இலங்கையின் இயற்கை பேரழிவுகள் மீட்பு பணியில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்த ஜப்பான் கவனம் செலுத்துவதை வலியுறுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “இப்போது இலங்கை மீட்பு மற்றும் மீளமைப்பு கட்டத்தை அடைந்துள்ளதால், ஜப்பான் இலங்கை மக்களிற்கு துணை நிற்பதில் உறுதியாக உள்ளது’’.

தூதுவர் மேலும் கூறுகையில்: “நாம் இன்று கைச்சாத்திட்ட திட்டம், டிட்வா சூறாவளியால் பாதிப்படைந்த பகுதிகளின் மீட்பு, மீள் புனரமைப்பு மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களிடையே நிலைத்திருக்கும் நட்புறவை நீடிக்கும் சின்னமாகவும் திகளும்.” என்றார்.Beaches & Islands

இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் திரு. வருண ஸ்ரீ தனபால, இவ்வாறு கூறினார். “டிட்வா சூறாவளியின் பின்னர் இந்த ஜப்பானின் மானிய உதவிக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். முன்னேற்றமான ரேடியோ சாதனங்களை வழங்குவதன் மூலம், தேசிய பேரிடர் தயார் நடவடிக்கையை வலுப்படுத்த இந்த மானிய உதவி வழிவகுக்கும்.

இது வலிமையான அவசர தொடர்பு நெட்வொர்க்குகளை உறுதி செய்து, எதிர்கால இயற்கை பேரழிவுகளின்போது செயற்திறன் மிக்க ஒருங்கிணைப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.” என்றார்.

1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது.

ca62b7e9-813c-4a9e-89a0-b2483f7946df.jpg

ae12c56b-73bf-49df-8ac9-9a35014494dd.jpg

f22c85ce-74fd-4a21-ad68-7781dbe759c2.jpg

ce97386c-ed58-40db-92ff-75a028df8492.jpg

https://www.virakesari.lk/article/241874

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

1 week 1 day ago

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

Mar 25, 2026 - 08:03 AM

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். 

முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு, உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள். 

அந்த நேரத்தில்தான் மின்சார உற்பத்திக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. பகல் நேரங்களில் பிரச்சினை இல்லை. 

இரவில் பிரஜைகளாக நாம் அந்த ஆதரவை வழங்க வேண்டும். ஏனென்றால், அதன் சுமை இறுதியில் நமக்கும் மக்களுக்கும் தான் வந்து சேரும். 

மக்களுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். 

பிராந்திய ரீதியாகப் பார்த்தாலும் நாம் இதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். 

எதிர்காலத்திலும் நாம் அதைத் தொடர வேண்டும். அதற்காக எரிபொருளைக் கொள்வனவு செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். 

அரசாங்கம் என்ற ரீதியில் நான் பொறுப்புடன் கூறுகிறேன், பலர் மின்வெட்டைச் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை. 

எப்படியாவது மின்வெட்டைத் தவிர்க்கவே முயற்சிக்கிறோம். மே மாதம் வரை அனைத்து நுகர்வுகளுக்கும் தேவையான எரிபொருள் எங்களிடம் உள்ளது. எனவே யாரும் அச்சமடைய வேண்டாம்.

https://adaderanatamil.lk/news/cmn5fhmfs0004356ppqlg17y8

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு – இலங்கை தேயிலை சபை

1 week 2 days ago

25 Mar, 2026 | 09:50 AM

image

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற  நிலைமைகள் காரணமாக, அந்த நாட்டு மக்கள் உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க முற்பட்டுள்ளதால், தேயிலைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை ரூ. 1,153 ஆகக் காணப்பட்டது.  ஏலத்தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே உள்ளது. இது சந்தையின் சாதாரண நிலையாகும்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக குவைத், சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கப்பல் பாதைகள் ஊடாக ஏற்றுமதிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக, சந்தையில் நிலவிய பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

தேயிலை செய்கையில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு – இலங்கை தேயிலை சபை | Virakesari.lk

வடக்கில் 51 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம்

1 week 2 days ago

வடக்கில் 51 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம்

25 Mar, 2026 | 09:57 AM

image

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாகப் புதிய அரச நியமனங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சில விசேட நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், வடக்கு மாகாணம் அதில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எமது மாகாணத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குறித்து நாம் விரிவாகத் தெரியப்படுத்தினோம்.

அதன் பயனாக, பிரதமர் தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, ஆராயப்பட்ட பின்னரே தற்போது புதிய நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் சாரதி சேவை மற்றும் அலுவலகப் பணியாளர் சேவைகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு எமக்கு அனுமதி கிடைத்திருக்கவில்லை.

எனினும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போது இந்த விடயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

அப்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் உடனிருந்தார். அவர்கள் இருவரதும் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று இந்த நியமனங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நியமனங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றியும், பரிந்துரைப் பட்டியல்களுமின்றியும் உங்கள் தகுதியின் அடிப்படையில் மாத்திரமே உங்களுக்குக் கிடைத்துள்ளன.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் இப்படி ஒரு நேர்மையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

குறிப்பாக, சாரதி நியமனம் பெற்றுள்ள நீங்கள் அரச அதிகாரிகளைப் பொறுப்புடன் ஏற்றிச் செல்லப் போகின்றீர்கள். எனவே, நீங்கள் எப்போதும் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும், அதியுயர் ஒழுக்கத்துடனும் கடமையாற்ற வேண்டும். நீங்கள் ஒரு கணம் நிதானிக்கத் தவறினாலும் அது மிகப் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திவிடும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண மாவட்டத்தை விட ஏனைய நான்கு மாவட்டங்களிலுமே ஆளணிப் பற்றாக்குறையும், சேவையின் தேவையும் அதிகமாகக் காணப்படுகின்றது. 

அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, வடக்கு மாகாணத்தின் எந்தவொரு பகுதியிலும் பணியாற்றுவதற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

0__1_.jpeg

0__3_.jpeg

0__4___2_.jpeg

https://www.virakesari.lk/article/241868

ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா

1 week 2 days ago

ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா

25 Mar, 2026 | 11:19 AM

image

யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமையுடன் (24) விடைபெற்றுச் சென்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஆகஸ்ட் முதல் இன்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா புதன்கிழமை தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது அகவைக்குள் காலடி பதிக்கிறார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும்,   பல்கலைக்கழக சட்டத்தின் படி 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன்  காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தி, புதிய துணைவேந்தரிடம் பதவியை கையளித்தார்.

எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி, அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் - எதிர்வரும் செப்ரெம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/241878

யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு

1 week 2 days ago

யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு

25 Mar, 2026 | 12:35 PM

image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 

ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - கேவில் கடற்கரைக்கு வருகை தந்த ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் அங்கு காணப்பட்ட 36 இற்கும் அதிகமான தென்னைகளை நாசம் செய்தன. 

சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு தெரிவித்தோம். இதுவரை உரியவர்கள் வந்து பார்வையிடவோ, நஷ்ட ஈடு வழங்கவோ இல்லை.. 

யானைகள் சேதம் ஏற்படுத்திய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் இருக்கிறது. அவர்களுக்கு யானைகள் வந்தது தெரியவில்லை என்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். 

வடமராட்சி கிழக்கின் பெரும் பகுதி அதாவது கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையான பெரும் நிலப்பரப்பு தேசிய பூங்கா என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை உறுதி செய்யும் விதமாக வனஜீவராசிகள் திணைக்களகத்தினர் வேண்டுமென்றே இந்த யானைகளை வடமராட்சி கிழக்கு காட்டு பகுதிக்கு கொண்டு வந்து விட்டதாக சந்தேகமாக உள்ளது.

யானைகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு முன்னாயத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட குடும்பஸ்தர் யானைகளால் அழிக்கப்பட்ட 36 தென்னைகளுக்கும் இழப்பீடு கோரியுள்ளார்.

https://www.virakesari.lk/article/241887

06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

1 week 2 days ago

New-Project-2-25.jpg?resize=750%2C375&ss

06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் காலத்தில் காணாமல் போன தம்பதியரின் உடல்கள், கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வெல்லம்பிட்டிய, கம்பிகொட்டுவ பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து நேற்று (24) மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமந்த சில்வா ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

2020-ஆம் ஆண்டில் அவர்களது உறவினர்களால் குறித்த தம்பதியர் காணாமல் போனதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

முதற்கட்ட விசாரணைகளில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி செயலகத்திடம் முறையிட்டனர். 

அதனைத் தொடர்ந்து, செயலகம் இவ்வழக்கை கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைத்தது.

சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் இந்திகா லோகுஹெட்டியின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு அருகில் வசித்து வந்த ஒரு தம்பதியினரிடம் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தினர்.

அதையடுத்து, பொலிஸார் சந்தேகத்திற்குரிய தம்பதியினரையும், அவர்களுடன் தொடர்பிலிருந்து மற்றொரு நபரையும் கைது செய்தனர்.

அவர்களில் இருவர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியிருந்தனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், பெண்ணின் தங்க நகைகள் திருடப்பட்டதாகவும், உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறைக்கப்பட்டதாகவும் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. 

பல சந்தர்ப்பங்களில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டபோது, பிரதான சந்தேக நபர் அவற்றை மீண்டும் புதைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

https://athavannews.com/2026/1469930

யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு

1 week 2 days ago

யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு

25 Mar, 2026 | 11:27 AM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி புதன்கிழமை (25) பதவி ஏற்றார். 

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

3__6_.jpg

3__5_.jpg

3__3___2_.jpg

https://www.virakesari.lk/article/241880

இந்திய பிரதமர் மோடி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இடையே தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல்

1 week 2 days ago

இந்திய பிரதமர் மோடி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இடையே தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல் 

24 Mar, 2026 | 10:23 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழி முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் நிலைமை மற்றும் அதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்படும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக இந்திய பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு செய்துள்ளனர். அதேவேளை, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவும் இலங்கையும் நீண்டநாள் நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் எனக் குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயற்பட உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது,

மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்தச் சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (24) மாலை தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார். வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகளில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இங்கு மிகுந்த கவனம் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

https://www.virakesari.lk/article/241860

முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு

1 week 2 days ago

முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு

Mar 24, 2026 - 10:22 PM

முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 

அதன்படி, இக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. 

முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தொகைகள் எதிர்வரும் 26ஆம் திகதி அந்தந்தப் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. 

மார்ச் 26ஆம் திகதி முதல் பயனாளிகள் தமது அஸ்வெசும கணக்குகளின் ஊடாக இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmn4uq8qj0017356palpuvpml

ஜப்பான் உதவியுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நவீன சிடி ஆஞ்சியோ மற்றும் பல் மருத்துவ பிரிவு திறப்பு

1 week 2 days ago

ஜப்பான் உதவியுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நவீன சிடி ஆஞ்சியோ மற்றும் பல் மருத்துவ பிரிவு திறப்பு

24 Mar, 2026 | 04:30 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவமனையின் பிற சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவப் பிரிவு மற்றும் 4டி ஆஞ்சியோ சிடி சிகிச்சை அறையை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். 

இந் நிகழ்வு, சுகாதாரத் துறையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை எடுத்துக்காட்டியது. டிசம்பர் 2023-ல் கண் மருத்துவ உபகரணங்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஒப்படைப்பு இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கிறது. தற்போதைய கட்டமானது, தெற்காசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் அதிநவீன சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகிறது.

WhatsApp_Image_2026-03-24_at_4.16.29_PM.

இந்தப் பங்களிப்புகள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட தொற்ற நோய்களை (NCDs) எதிர்கொள்வதற்கான இலங்கையின் திறனை மேம்படுத்துதல், அதன்மூலம் உயிர்களைக் காப்பாற்றவும், நீண்டகால சிக்கல்களைக் குறைக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு, சிடி ஸ்கேனிங் மற்றும் ஆஞ்சியோகிராபி செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் நோயறிதலையும் சிகிச்சையையும் சாத்தியமாக்குகிறது. இது இலங்கையிலும் பரந்த பிராந்தியத்திலும் ஒரு முக்கிய மருத்துவ மையமாக மருத்துவமனையின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், 10 பல் மருத்துவப் பிரிவுகளை வழங்குவது, மருத்துவமனையில் பல் மருத்துவ சேவைகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். ஜப்பானில், வாய்வழி ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் நலத்துடன் நெருக்கமாக இணைந்ததாகக் கருதப்படுவதோடு, ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் இது ஒரு முக்கியப் பங்கையும் வகிக்கிறது. எனவே, இந்த ஆதரவானது இலங்கையில் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முதலில் திட்டமிடப்பட்ட 1,000 படுக்கைகளுடன் மேலும் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்தன தெரிவித்த கருத்திலிருந்து உருவான, நன்கு அறியப்பட்ட “1001-படுக்கை” கதை, இந்த ஒத்துழைப்பின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு மறக்கமுடியாத அத்தியாயமாக விளங்குகிறது.

WhatsApp_Image_2026-03-24_at_4.16.27_PM_

பல தசாப்தங்களாக, மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல், இரத்த விநியோக அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் போது தடுப்பூசி விநியோக உதவி வழங்குதல் உள்ளிட்டவற்றின் மூலம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஜப்பான் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது. மேலும், இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது, சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான எரிபொருளை ஜப்பான் வழங்கியதுடன், இயற்கை பேரிடர் காலங்களில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக அவசர மருத்துவக் குழுக்களையும் அனுப்பியது. இந்த முயற்சிகள், குறிப்பாகத் தேவைப்படும் காலங்களில், இலங்கைக்குத் துணை நிற்பதில் ஜப்பானின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த முயற்சிகள், அனைத்து தனிநபர்களும் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய ஒரு சுகாதார அமைப்புக்கு ஆதரவளித்து, “மக்களில் முதலீடு” மற்றும் “மனிதப் பாதுகாப்பு” ஆகியவற்றில் ஜப்பானின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.

இந்த ஆதரவு என்பது வெறும் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்ல, அது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான அடித்தளமாகும்," எனத் தூதுவர் இசொமதா குறிப்பிட்டார். ஜப்பானின் ஆதரவுடன் கட்டப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் சின்னமாகத் திகழ்கிறது.

வருங்கால சந்ததியினருக்குப் பயனளிக்கும் ஒரு நிலையான சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கும், நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.

அமைச்சர் ஜயதிஸ்ஸ அவர்கள், “இது வெறும் இயந்திரங்களின் நன்கொடை மட்டுமல்ல; இது நமது நோயாளிகளின் வாழ்விலும் எதிர்காலத்திலும் செய்யப்படும் ஒரு முதலீடாகும். இந்த நவீன பல் மருத்துவப் பிரிவை நிறுவுவதன் மூலம், நமது மக்களிடையே வாய்வழி நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் உள்ள ஒரு முக்கியத் தேவையை நாம் பூர்த்தி செய்கிறோம். இந்த தாராளமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை உண்மையான நட்பின் செயல்கள், மேலும் இலங்கை மக்கள் இவற்றை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூருவார்கள்” என்று சிறப்பித்து குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ஆழப்படுத்தவும் ஜப்பான், இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும்.

WhatsApp_Image_2026-03-24_at_4.16.27_PM_

WhatsApp_Image_2026-03-24_at_4.16.27_PM.

WhatsApp_Image_2026-03-24_at_4.16.28_PM_

WhatsApp_Image_2026-03-24_at_4.16.28_PM.

WhatsApp_Image_2026-03-24_at_4.16.26_PM.

https://www.virakesari.lk/article/241830

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

1 week 2 days ago

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

Published By: Digital Desk 3

24 Mar, 2026 | 05:05 PM

image

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளிடமிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தமது அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்குத் தோற்றுவோர் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் உள்நுழைந்து சுயமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் இன்றையதினம் முதல் ஏப்ரல் 24, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சிடப்பட்ட பிரதி ஒன்றை எதிர்காலத் தேவைகளுக்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பின்வரும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்:

அவசர தொலைபேசி இலக்கம் : 1911

தொலைபேசி: 0112785922, 0112784537, 0112786616, 0112784208

மின்னஞ்சல்: gcealexam@gmail.com

https://www.virakesari.lk/article/241834

இயலாமையுடைய நபர்களை சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும்

1 week 2 days ago

இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் – ஹன்சக விஜேமுனி

24 Mar, 2026 | 05:06 PM

image

(இணையத்தள செய்தி பிரிவு)

இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என பிரதி சுகாதார அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

2026 மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய வலிப்பு நோய் மைய அரங்கில் நடைபெற்ற, இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்தியத்தில் உள்ள ஏனைய மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை இவ்விடயத்தில் சில முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், சுகாதார சேவைகளைப் பெறுவதில் இயலாமையுடைய நபர்கள் இன்னமும் பல பௌதீக, தகவல் தொடர்பு மற்றும் மனப்பான்மை சார்ந்த தடைகளை எதிர்கொள்வதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சமூகத் தடைகளைக் கண்டறிவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மனப்பான்மை மாற்றத்தை உருவாக்குவதற்கும் தேவையான கொள்கை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதாரத் தகவல்களைப் பல வடிவங்களில் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இயலாமையுடைய நபர்கள் மீது பாரம்பரியாகக் காணப்படும் மருத்துவக் கண்ணோட்டத்தைக் கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு சேவையை வழங்குவதற்காக, சுகாதாரப் பணியாளர்களை முறையாக உணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனைத்து விடயங்களிலும் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஆற்றிவரும் பங்களிப்புப் பாராட்டத்தக்கது.

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்தப்பட்டுவரும் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு சுகாதார அமைச்சில் நடைபெற்ற போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், சுகாதார அமைச்சின் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுகத் வசந்த.த சில்வா, 'இயலாமையற்ற சமூக வாழ்க்கையை' அடைவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதுள்ள இலவச சுகாதார சேவையைப் பாராட்டியதுடன், இந்த நாட்டில் வசிக்கும் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெறுவதில் உடல் ரீதியான மற்றும் மனப்பான்மை ரீதியான தடைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான உரிமை என்பது வாழ்வதற்கான ஒரு அடிப்படை உரிமை. மேலும், எதிர்கால சுகாதார வல்லுநர்கள் தங்கள் பயிற்சிக் காலத்திலிருந்தே இந்த உரிமை குறித்து விழிப்புணர்வு பெறுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவ மற்றும் தாதியர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இயலாமையுடைய நபர்கள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டமும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவும் சேர்க்கப்பட வேண்டும்.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் அசோக வீரவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் திணைக்களத்தின் பேராசிரியர் சமாரி வீரரத்ன, சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) விந்தியா குமாரபேலி, சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான பிரிவின் பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) நிஷானி உபேசேகர மற்றும் இயலாமையுடைய சமூகத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

வைத்தியசாலையின் பிரிவுகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமை, சில வைத்தியசாலை கவுண்டர்கள் உயரமாகக் காணப்படுகின்றமை, அறுவை சிகிச்சை படுக்கைகள் காரணமாக இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மலசலகூடங்களில் இயலாமையுடைய நபர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றமை இங்கு எடுத்துக் கூறப்பட்டது. வரிசைகளில் காத்திருப்பதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் அறிவுசார்ந்த இயலாமையுடைய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடையாள அட்டைகளின் தேவையும் வலியுறுத்தப்பட்டது.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வைத்தியசாலைகளில் சாய்வுப் பாதைகள், இயலாமையுடைய நபர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் சிறப்பு மருந்து மையங்கள் போன்ற அணுகல் வசதிகளை அமைப்பதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அடிப்படை மருத்துவமனைகளில், அடிப்படை சைகை மொழியில் பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட சோதனை 'ஆதரவு மையங்கள்' அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) திட்ட அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். 

15e945c5-13ec-41b2-9d75-427f0a607da0.jpg

6ccc3b65-d903-4ae1-8c15-075045d3a0b7.jpg

1cdc4abc-214b-4705-baec-993402365f80.jpg

9ec1c2d9-febf-40d9-9d29-1a0de1aae6a9.jpg

https://www.virakesari.lk/article/241829

சீமெந்து விலை அதிகரிப்பு

1 week 2 days ago

சீமெந்து விலை அதிகரிப்பு 

Published By: Digital Desk 3

24 Mar, 2026 | 01:00 PM

image

உற்பத்தி நிறுவனங்களால் சீமெந்து விலை சுமார் 150 ரூபாவிலிருந்து 175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த உற்பத்திச் செலவுகளே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மணல், சரளைக்கல் மற்றும் இரும்பு உட்பட முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டாரின்டன் போல் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/241813

புதுப்பொலிவு பெறும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் – ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு

1 week 2 days ago

புதுப்பொலிவு பெறும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் – ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு

24 Mar, 2026 | 03:52 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

கொழும்பின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் விரிவான புதுப்பிப்பு பணிகளுக்குப் பின்னர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பயணிகளின் நெரிசல், வசதிகளின் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு சீர்கேடு போன்ற பிரச்சினைகள் நிலவிய நிலையில், இந்த பஸ் நிலையம் முழுமையான மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் காத்திருப்பு பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரங்களை தெளிவாகக் காட்டும் டிஜிட்டல் தகவல் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக உணவகங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் வணிக நிலையங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதுப்பிப்பு திட்டம், கொழும்பு நகரின் போக்குவரத்து முகாமையை மேம்படுத்துவதுடன், நகரின் அடிப்படை வசதிகளை நவீனமயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் தலைமையில் தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய திட்டமாக இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. இத் திட்டம் 424 மில்லியன் ரூபாய் நிதி செலவில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கீழ், முதலாவது தளம் பேருந்து தரிப்பிட நிலையமாகவும், இரண்டாவது தளம் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு அறைகளுக்காகவும், மூன்றாவது தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.

இதேவேளை மத்திய பஸ் தரிப்பிடத்தில் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் தகவல் அறியும் மத்திய நிலையமொன்றும் அமைக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பஸ் நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் நிலையில், பொதுமக்கள் சுலபமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை பெறுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

14555ea9-f927-4d86-8279-190f644d7ec5.jpg

ad96f0cb-b53a-4e5d-b431-5ed6641299af.jpg

1005d0e0-45cf-4d37-a37b-7bd6a9b2fed8.jpg

11861297-ac50-43ab-ae7a-8e84d11b64b3.jpg

https://www.virakesari.lk/article/241826

ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா தாக்குதல்: இலங்கையின் அழைப்பில் வந்த கப்பல் – ஈரான் தூதுவர் விளக்கம்

1 week 3 days ago

ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா தாக்குதல்: இலங்கையின் அழைப்பில் வந்த கப்பல் – ஈரான் தூதுவர் விளக்கம்

Published By: Vishnu

24 Mar, 2026 | 05:06 AM

image

(நா.தனுஜா)

ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி 'மிலான் - 2026' நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி வருகைதந்ததாகவும், அவ்வேளையிலேயே ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் அறிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் வலுப்பெற்றிருக்கும் பின்னணியில், இவ்விவகாரம் தொடர்பான சமகால நிலைவரம் மற்றும் ஈரான் நிலைப்பாடு என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் திங்கட்கிழமை (23) கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 - 25 ஆம் திகதி வரை நடைபெற்ற 'மிலான் - 2026' சர்வதேச கடற்படை பயிற்சி மற்றும் அணிவகுப்பில் கலந்துகொண்டு, இந்தியக் கடற்பரப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 - 44 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் நடாத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் (ஐரிஸ்) டெனா குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தூதுவர் டெல்கோஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

இம்மாதத் தொடக்கத்தில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்கா நடாத்திய தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா கப்பலில் இருந்த சுமார் 104 பேர் கொல்லப்பட்டனர். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் போரை எதிர்கொள்வதற்கோ அல்லது எதிர்த்தாக்குதல்களை நடாத்துவதற்கோ எவ்விதத்திலும் தயார்நிலையில் இருக்கவில்லை. அதேபோன்று இந்தத் தாக்குதல் போர் நடைபெறும் பகுதியிலிருந்து பல கடல் மைல் தொலைவில் இருந்த கப்பலின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற 'மிலான் 2026' நிகழ்வில் பங்கேற்ற ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி அந்நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டது. அந்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை நோக்கி வருகைதந்தன. அக்கப்பலில் இருந்தவர்கள் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயாராக ஆயுதங்களுடன் இருக்கவில்லை. அதுமாத்திரமன்றி அமெரிக்காவின் அத்தாக்குதலில் மரணித்தவர்களில் பலர் படைவீரர்கள் அல்ல. மாறாக அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாவர்.

அதேவேளை ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா உள்ளிட்ட கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு கோரிக்கை விடுத்து 11 மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் எம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட போதிய தகவல்கள் இல்லை. அதுபற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம்.

மேலும் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீதான தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் கப்பல் இன்னமும் திட்டமிடப்பட்டது போல திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. அக்கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட ஈரானியர்கள் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

https://www.virakesari.lk/article/241784

தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.!

1 week 3 days ago

தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.!

Vhg மார்ச் 23, 2026

AVvXsEgOPHMVEHS2eRCWkES6u0QouPJi_pOwvA99Tpg66iRPQT6LUlYrXVrfJuq88sbAJ5xIat-bduRKEQ_ZabtHqOjPvy_7_rmWl8Anlcw_fq0iHQduK1A-35KmcYDMAHnKfTzJpy4pKs33Izg__h56tBCq3ctDpMge9Q8KtW7I3pookDIraPYFuZMqPOfZJt9m

தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டம்.!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று (23.03.2026)ஆம் திகதி  மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கு பெண்கள்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அனுப்பவதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன.

இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள்.

ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும்.

மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும்.

இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர்.

எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது, இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும்.

https://www.battinatham.com/2026/03/blog-post_501.html

பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி

1 week 3 days ago

பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி

By Batticaloa

InShot_20250604_230454785.jpg
கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது -

ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

பயணம்: முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் (Auto) உள்ளிட்ட அறிமுகமில்லாத வாகனங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அறிமுகமான வாகனங்களைப் பயன்படுத்தவும்.

குழுவாகச் செல்லுதல்: பெண்கள் தனித்துப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுவாகவோ அல்லது உறவினர்களுடனோ பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. உங்களது பயண விபரங்களை நெருங்கிய உறவினர்களிடம் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள்.


உணவு மற்றும் பானங்கள்:
அந்நியர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம். மயக்கமருந்து கொடுத்து நகைகளைப் பறிக்கும் சம்பவங்கள் குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.


அவசர உதவி:
ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

நெருக்கடி கால நடைமுறைகள்:

தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு அவர் மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது.

ஒரே பயணத்தில் பல வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்வதன் மூலமும் பயணங்களைக் குறைக்கலாம்.

முடிந்தவரை கல்வி வகுப்புகள் மற்றும் அலுவலகப் பணிகளை இணையதளம் (Online) வாயிலாக மேற்கொள்ள முயற்சிப்பது காலத்திற்குப் பொருத்தமானது.

குறுகிய தூரங்களுக்கு நடைபயணம் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் எரிபொருள் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

https://www.battinews.com/2026/03/blog-post_270.html

யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

1 week 3 days ago

யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

adminMarch 24, 2026

2-4-1.jpg?fit=1170%2C780&ssl=1

யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலர் வழங்கினார்.

அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் மீன்பிடி போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட செயலரால் அறிவுறுத்தல்கள்  வழங்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர்கள், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்  கலந்து கொண்டனர்.

 2-5-1.jpg?resize=800%2C534&ssl=12-6.jpg?resize=800%2C534&ssl=12-7.jpg?resize=775%2C800&ssl=1

https://globaltamilnews.net/2026/230940/

வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி

1 week 3 days ago

வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி

adminMarch 24, 2026

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் புதிய உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டம் தொடர்பாக பிரதேச செயலகத்தில் பணியாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள், பிரதேச விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கேள்வி கோரல்கள் (tenders) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து அடுத்த ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த உள்ளக விளையாட்டரங்கில் மேசைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் (Badminton) மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான திடல்கள் அமைக்கப்படவுள்ளன. அதோடு கரம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், ஒரே நேரத்தில் சுமார் 1000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர் இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. இதனுடன் இணைந்து சிறுவர் பூங்கா மற்றும் நீச்சல் பயிற்சிக்கான நீச்சல் தடாகமும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2026/230931/

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr