ஊர்ப்புதினம்

‘தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு

3 months ago

‘தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு

Jan 2, 2026 - 06:00 PM

‘தமக்கென ஒரு இடம்  -  அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 10,200 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டம் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் திட்டமிடல், செயல்பாடு மற்றும் நிறைவு செய்யவுள்ள காலக்கெடு தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தினார். 

மேலும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmjwuqkdr03g2o29n5nag3r9k

CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில்

3 months ago

CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில்

Jan 2, 2026 - 08:02 PM

CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல்  விரைவில்

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்கான எதிர்பார்க்கப்படும் செலவு 137,016 மில்லியன் ரூபாவாகும் எனவும், தற்போதுள்ள கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருமானம் 113,161 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதற்கமைய, 13,094 மில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை நிலவுவதால், மொத்த மின்சாரக் கட்டணத்தை 11.57% சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை முன்மொழிந்துள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது. 

இதில் நிலையான கட்டணம் மற்றும் அலகுக் கட்டணம் ஆகிய இரண்டையும் அதிகரிக்க மின்சார சபை பிரேரித்துள்ளது. 

முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு அமைய, வீட்டுப் பாவனை மின்சாரக் கட்டணங்கள் முதல் 60 அலகுகள் வரை இரண்டு கட்டங்களாகக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

முதல் 30 அலகுகள் (0-30): ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 4.50 ரூபா கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்தக் கட்டணத்தை 80 ரூபாவிலிருந்து 14.11 ரூபாவால் அதிகரித்து 94.11 ரூபாவாக மாற்றவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

31 முதல் 60 அலகுகள் வரை ஒரு அலகுக்கு அறவிடப்படும் 8 ரூபா கட்டணத்தை 9.41 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்த நிலையான கட்டணத்தை 37.03 ரூபாவால் அதிகரித்து 247.03 ரூபாவாக நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 

61 முதல் 90 அலகுகள் வரை ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 18.50 ரூபா கட்டணத்தை 21.76 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 

91 முதல் 120 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 24 ரூபாவாக உள்ள கட்டணத்தை 28.23 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

121 முதல் 180 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 41 ரூபாவாக உள்ள கட்டணத்தை 48.23 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 

181 அலகுகள் அல்லது அதற்கு மேல் ஒரு அலகுக்கு 61 ரூபாவாக இருந்த கட்டணத்தை 71.76 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

இந்த வகைகளுக்கான மாதாந்த நிலையான கட்டணங்களையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அறநிலையங்களில் முதல் 30 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 4.50 ரூபாவாக உள்ள கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், 75 ரூபாவாக இருந்த மாதாந்தக் கட்டணத்தை 88.23 ரூபாவாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 

31 முதல் 90 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை அதிகரிக்கவும், அந்த வகையின் மாதாந்தக் கட்டணத்தை 35.27 ரூபாவால் அதிகரிக்கவும் கோரப்பட்டுள்ளது. 

91 முதல் 120 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 9.41 ரூபாவாகவும், 121 முதல் 180 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 22.35 ரூபாவாகவும் அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 

181 அலகுகள் அல்லது அதற்கு மேல் அலகு ஒன்றின் விலையை 26 ரூபாவிலிருந்து 30.59 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. 

கைத்தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் 300 அலகுகள் அல்லது அதற்குக் குறைவான அலகு ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 9.41 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. 

300 அலகுகளுக்கு மேற்பட்டவைக்கு அலகு ஒன்றின் விலை 17 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. 

எனினும், இலங்கை மின்சார சபையினால் பராமரிக்கப்படும் மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்களின் (EV Charging Stations) கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சார சபையின் இந்த யோசனையை ஆய்வு செய்து, அது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய ஜனவரி மாதம் இரண்டாவது வாரமளவில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 6 வார காலப்பகுதிக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjwz39dm03g9o29nohkdrc5h

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

3 months ago

Education.jpg?resize=750%2C375&ssl=1

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு அமைவாக அமைவாக,

2026 ஆம் ஆண்டில் 05 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 07.30 மணி முதமல் பிற்பகல் 01.30 மணிவரை மாற்றமின்றி தொடரும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் தவணைக்காக ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

தரம் 06 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடசாலை வேளைகளின் எண்ணிக்கை 07 ஆகும்.

ஒரு பாடசாலை வேளைக்காக ஒதுக்கப்பட்ட நிமிடங்கள் 45.

2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும். கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகப்பூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தந்த தரங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய தரங்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி 12 முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 02 ஆம் திகதி வெளியிடப்படும்.

https://athavannews.com/2026/1458060

இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது

3 months ago

இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகு ஒன்றும் மீன்படி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.samakalam.com/இலங்கை-கடற்பரப்பில்-மேலு/

தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!

3 months ago

தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!

adminJanuary 2, 2026

Thaiyiddi-Viharai.jpg?fit=840%2C560&ssl=

தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த  சிங்கள மொழியில் தென்னிலங்கை ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது.

தையிட்டி விகாரை காணி வரைபடங்களை சிங்கள ஊடகங்களில் தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

https://globaltamilnews.net/2026/225479/

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம்

3 months ago

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம்

01 Jan, 2026 | 06:15 PM

image

(நா.தனுஜா)

பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளடங்கலாக அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோமென வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது கருத்துச் சுதந்திரத்தையும் நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தலுக்குள் தள்ளக்கூடிய  பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் மிக மோசமான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. இதன்மூலம் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தமது கரிசனைகளையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி அருட்தந்தை மா.சத்திவேல், அருட்தந்தை டெரன்ஸ் பர்ணாந்து, அருட்தந்தை எஸ்.விமலசேகரன், அருட்தந்தை மனுவேல் பிள்ளை டேவிட், அருட்சகோதரி தீபா பர்ணாந்து, செனாலி பெரேரா, சேனக்க பெரேரா, ருக்கி பர்ணாந்து ஆகியோர் உள்ளடங்கலாக அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் (கிறிஸ்தவர்கள்) அடங்கிய 61 பேரின் கையெழுத்துடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வரலாற்று ரீதியாக, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்காகவோ அல்லது அச்சட்டத்துக்குப் பதிலீடாக முன்னைய அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட 'பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை' நிராகரிப்பதற்காகவோ மாத்திரம் போராடிய இயக்கங்கள் அல்ல.

மாறாக அவர்களது அரசியல் நிலைப்பாடானது, புதிதாக எந்தவொரு அடக்குமுறை சட்ட வடிவங்களும் கொண்டுவரப்படக்கூடாது என்ற தெளிவான மறுப்பையே அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. இந்த நிலைப்பாடு 'பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச்செய்து, மக்களின் சுதந்திரத்தை உறுதிசெய்வோம்' என்றவாறு தேர்தல் வாக்குறுதியாகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு தெளிவாக அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகளையும், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தமது அரசியல் வரலாற்றையும் முழுமையாகப் புறக்கணித்திருக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகக்கொடூரமானதும், அதிகாரத்துஷ்பிரயோகத்துக்கு வாய்ப்பளிக்கக்கூடியதுமான அம்சங்களை மாற்றமின்றித் தக்கவைத்துக்கொண்டு, மேலும் தெளிவற்றதும் அபாயகரமானதுமான புதிய விதிகளின் மூலம் அரச அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு இப்போது தயாராகி இருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்ட வரைவு கருத்துச்சுதந்திரத்தையும், நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருக்கின்றது.

இந்தச் சட்டத்துக்கு நாங்கள் நிபந்தனையற்ற எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். இது எமது தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமல்ல. மாறாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் அவர்களாகவே நாட்டுமக்களிடம் அறிவித்த அரசியல் நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும்.

அரசாங்கம் இந்த சட்ட வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு ஒருமாத கால அவகாசத்தை அறிவித்திருந்தாலும், தேசிய ரீதியில் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில், இந்தளவு பரந்துபட்டதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் பணிகளை விரைந்து முன்னெடுப்பது உண்மையான ஜனநாயகப் பங்கேற்பையும், மக்களின் அறிவார்ந்த ஒப்புதலையும் பாதிக்கின்றது. எனவே இது முன்னைய ஆட்சிக்காலங்களில் நடந்ததைப்போல, பொதுக் கலந்தாலோசனையை உள்ளடக்காத ஒரு நடைமுறைச்சடங்காகவே தோன்றுகிறது.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது சிறுபான்மையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புவோரை இலக்குவைத்துப் பிரயோகிக்கப்பட்டதுடன், அது அவர்கள்மீது மட்டுமீறிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி அந்தச் சட்டத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டோரில் இன்றைய அரசை வழிநடத்தும் அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களே முக்கியமானவர்களாக இருந்தனர். இத்தகைய பின்னணியில், அடக்குமுறைச் சட்டத்தின் விளைவுகளையும் பாதிப்புக்களையும் அனுபவித்தவர்களே இந்தச் சட்டத்தின் விளைவுகளை விதி விதியாக விளக்கிக் கூறுவது அவசியமற்றதாகும்.

முன்னர் ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்தச் சட்டத்தை விமர்சிக்கும் அரசியல் உரிமை இருந்தாலும், அவர்களது சொந்த சட்ட வரலாறுகளை நினைத்துப் பார்க்கும்போது, அந்த விமர்சனங்களுக்கு நெறியியல் நம்பகத்தன்மை இல்லை என்பதையும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம். அதேபோன்று அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோம் என வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இவ்வாறானதொரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ள நாமனைவரும் பயங்கரவாதத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் முதல், அதற்கும் அதனை வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் மீண்டும் உருவாக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிராகத் திடமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம்.

 எமது கிறிஸ்தவ நம்பிக்கையிலும் ஆன்மீகத்திலும் ஆழ்ந்திருக்கும் நாம், அநியாயத்தை சட்டமாக்கி, அரச அதிகாரத்தின் மட்டுமீறிய விரிவாக்கத்தை இயல்பாக்கம் செய்யும் சட்டங்களுக்கு எதிரான ஒரு அறநெறிசார் சாட்சியமாக இந்த மகஜரை முன்வைக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/234972

பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படையற்றது! - தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்

3 months ago

பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படையற்றது! - தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் 

01 Jan, 2026 | 01:01 PM

image

மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படையற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

புதுவருட தினமான இன்று (ஜன. 1) வவுனியாவில் இச்சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், 

இன்று ஜனவரி 1, 2026, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்களாகிய நாங்கள், வவுனியாவில் 3,237வது நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறோம். 

IMG_20260101_111906.jpg

இந்தத் தியாகம் மற்றும் மன உறுதி நிறைந்த இடத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர உதவுமாறும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனப்படுகொலையை நிறுத்தி இறைமையை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் அரசியல்வாதிகளாக அல்ல, மாறாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தாய்மார்களாகவே இந்த தார்மீக அடிப்படையில் பேசுகிறோம்.

தமிழ் வரலாறு காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியலமைப்புகளுடனோ அல்லது திணிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புக்களுடனோ தொடங்கவில்லை. நவீன எல்லைகளுக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தத் தீவு தமிழ் பேசும் மக்களால் வசித்து ஆளப்பட்ட தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பண்டைய காலங்கள் வரை அது நீண்டு செல்கிறது. 

இந்தத் தீவில் தமிழர்களின் இருப்பு, பிற்கால அனைத்து அரசியல் மற்றும் இனக் கட்டுமானங்களுக்கும் முந்தையது. ஆயினும்கூட, சமகால தமிழ் தலைவர்கள் பலர் இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக தனிப்பட்ட வசதி, வெளி அழுத்தங்கள் அல்லது மேட்டுக்குடி நலன்களில் வேரூன்றிய அரசியல் சூத்திரங்களை ஊக்குவிக்கின்றனர்.

IMG_20260101_111735.jpg

கடந்த மாதம், அமெரிக்கா யாழ்ப்பாண விமான நிலையத்தில் இரண்டு முறை பெரிய இராணுவ விமானங்களைத் தரையிறக்கி மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் மூலம் தமிழ் பொதுமக்களின் மீது உறுதியான அக்கறையை வெளிப்படுத்தியது. 

இருப்பினும், எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது 'சிவில் சமூக அமைப்பு' என்று சொல்லிக்கொள்ளும் அமைப்போ இந்த ஆதரவை பகிரங்கமாக அங்கீகரிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் ஆகிய நாங்கள் மட்டுமே நன்றி தெரிவித்தோம். இது தமிழர் மத்தியில் உள்ள தார்மீக மற்றும் தலைமைத்துவத் தோல்வியை அம்பலப்படுத்தியது.

தென்னிந்தியா மற்றும் தமிழ் தீவான இலங்கையை உள்ளடக்கிய தமிழகத்தில் ஒரு பழங்கால சிங்கள இனம் இருந்ததற்கான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ் இனம் சைவ சமயத்தைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து தமிழ் பௌத்தத்தைப் பின்பற்றியது. பின்னர் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பியது. இந்த மாற்றங்கள் மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை.

சிங்கள மக்கள் தெற்கில் சுதந்திரமாக வாழலாம், ஆனால் வடக்கு - கிழக்கு வரலாறு, கலாசாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அது தமிழ் தேசத்திற்கு சொந்தமானது என்றனர். 

IMG_20260101_111822.jpg

IMG_20260101_111655.jpg

https://www.virakesari.lk/article/234926

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

3 months ago

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

Jan 1, 2026 - 09:36 PM

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (1) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும். 

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjvn0ngl03ero29nm693hxhc

22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி

3 months ago

22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி

Jan 1, 2026 - 04:52 PM

22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி

டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்புக்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழு, பல சந்தர்ப்பங்களில் ஒன்றுகூடி நிவாரணப் பணிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச வினைத்திறனை உறுதி செய்வதற்குத் தேவையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாகவும் முறையாகவும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரணங்களைச் சரியான நேரத்தில் முறையாக வழங்குவதற்கான பொறிமுறையானது, தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் ஊடாக தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjvcuuq403e7o29n1utsjkhl

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு

3 months ago

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு

01 Jan, 2026 | 02:21 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அதற்கான முன்னாயத்த வேலைகள் இடம்பெற்று வருகின்றன. 

குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமான திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் பாரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

WhatsApp_Image_2026-01-01_at_2.03.11_PM_

இந்நிலையில் தமிழ் மக்களின் பார்வையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தத்திற்குரிய திணைக்களமாகவே இயங்கி வருவதால் நியாயமான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் இதனால் குறித்த பணியின்போது பார்வையாளர்களாக தமிழ் தரப்பினரையும், அவர்களது அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கன்னியா வெந்நீரூற்றை அண்மித்த பகுதியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த மாரியம்மன் அறக்கட்டளைக்குச் சொந்தமான 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமானது 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் புனருத்தாரன பணிக்காக உடைக்கப்பட்டபோது தொல்லியல் திணைக்களத்தினால் அப்பகுதி தொல்லியலுக்கு உரியது என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. 

பின்னர் குறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக கூறி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பௌத்த விகாரை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் பிள்ளையார் கோவில் கட்டுவதற்காக கன்னியா வெந்நீரூற்றின் நுழைவுப்பகுதியின் இடது பக்க மூலையில் 10 பேர்ச் காணி வழங்கப்பட்டிருந்தது.

1623 – 1638 ஆண்டு வரை பறங்கிய படைத் தளபதியாக இருந்த நபரால் மடத்தடி மாரியம்மன் ஆலயத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட ஒரு பிரதேசமே கன்னியா வெந்நீரூற்றும் பிள்ளையார் ஆலயமும் என்பதும் பல ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2026-01-01_at_2.03.11_PM.

WhatsApp_Image_2026-01-01_at_2.03.13_PM.

WhatsApp_Image_2026-01-01_at_2.03.15_PM.

WhatsApp_Image_2026-01-01_at_2.03.12_PM.


https://www.virakesari.lk/article/234936#google_vignette

யாழ். மாவட்ட செயலகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான அரச கடமைகள் ஆரம்பம்!

3 months ago

யாழ். மாவட்ட செயலகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான அரச கடமைகள் ஆரம்பம்!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

2026ஆம் புத்தாண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் 2026ஆம் ஆண்டிற்கான அரச சேவை சத்தியப்பிரமாணத்தை (உறுதிமொழி) மேற்கொண்டனர். 

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjv61dgq03dzo29n6x2pa7e8

”அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்” – தையிட்டி விகாராதிபதி

3 months ago

”அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்” – தையிட்டி விகாராதிபதி

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் இடமளிக்கவில்லை.

தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான் எவ்வாறான விசேட அனுமதியும் எதற்கும் கொடுக்கவில்லை.

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறோன்.

அதேவேளை தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என அரசாங்கத்தால், புதிய குழு அமைத்துள்ளார்கள், அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். அதே போன்று காணியை உரிமை கோரும் நபர்களும் தமது காணி தான் என்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் இது ஒரு சட்டவிரோத செயல் என தீர்ப்பளிக்கப்பட்டால் இதனையும் ஏற்க நான் தயார்.

விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்றார்.

https://www.samakalam.com/அரசியல்-நோக்கத்திற்காக/

கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

3 months ago

MONEY.jpg?resize=750%2C375&ssl=1

கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது.

வருடத்தின் இறுதி நாளான நேற்றைய வர்த்தக நிறைவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.29 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.83 ரூபாவாகவும் இருந்தது.

2024 டிசம்பர் 31 அன்று, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.32 ரூபாவாகவும், 297.01 ரூபாவாகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1457954

தலைவர்களின் 2026 புத்தாண்டு வாழ்த்து செய்திகள்

3 months ago

மறுசீரமைப்பு,  மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியை தோள்மேல் சுமந்த நிலையில் நாம் புத்தாண்டில் கால்பதிக்கிறோம் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

Published By: Digital Desk 3

31 Dec, 2025 | 07:30 PM

image

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும்,  மீளக் கட்டியெழுப்பும்  பாரிய  பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான  அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக  2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும்.

இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக  இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக ' தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை  2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது.

அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட  மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக  எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள  மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட  சகோதர மக்களின் துயரத்தில்  கைகோர்த்தார்கள்.

இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம்  ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும்   பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று  உறுதியாக நம்புகிறோம்.

புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன்  மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த  2026 புத்தாண்டு  உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/234842

வடக்கு, தெற்கில் 3 வகையான வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு

3 months ago

வடக்கு, தெற்கில் 3 வீட்டுத்திட்டங்களுக்கான இந்திய நிதி உதவி இருமடங்காக அதிகரிப்பு

31 Dec, 2025 | 04:23 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு-ஐ மற்றும் கிராம சக்தி தெற்கு-ஐஐ ஆகிய மூன்று வீட்டுத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2017 ஒக்டோபர் மற்றும் 2018 ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்களின்படி, இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், சுயமாக வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 500,000 இலங்கை ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கி வந்தது. கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான விலை உயர்வு, அத்துடன் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் காரணமாக, ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் வீடுகளைக் கட்டி முடிப்பதில் பயனாளிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கமைய, இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை 1,000,000 இலங்கை ரூபாவாக இருமடங்காக அதிகரிக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட நிதியுதவியை அமுல்படுத்துவதற்கான இராஜதந்திர கடிதங்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எல்.பி. குமுது லால் ஆகியோரால் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த மூன்று திட்டங்களின் கீழ் 1550-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அதிகரித்த நிதியுதவியால் பயனடையவுள்ளன.

இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் மக்கள் நலன்சார் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களில் 'வீடமைப்பு' முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்தியாவின் பிரதான வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50,000 வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நிதியுதவி அதிகரிக்கப்பட்ட 3 கிராம சக்தி திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கையில் இந்தத் துறையில் ஏனைய உயர்தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் தலா 24 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்கும் நாடளாவிய மாதிரி கிராமத் திட்டம்; மன்னார் மடுத் திருத்தலத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கான இடைத்தங்கல் விடுதிகள்; மற்றும் அனுராதபுரத்தில் அண்மையில் நிறைவடைந்த சோபித நஹிமிகம திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன், தித்வா புயலைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் டொலர் புனரமைப்பு மற்றும் மீட்புப் பொதியின் கீழ், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளைக் கட்டுவதற்கான உதவிகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/234856

இலங்கையில் 2026 புத்தாண்டு நிகழ்வுகள்

3 months ago

மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு!

Jan 1, 2026 - 08:01 AM

மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு!

2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.  

மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதைக் காணமுடிந்தது.  

சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பலர் உயிரிழந்தும், சொத்துகளை இழந்தும் தவிக்கும் நிலையில், இம்முறை புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். 

முதல்வரின் அந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நகருக்குள் ஒன்றுகூடி மிகவும் அமைதியான முறையிலும், அதேநேரம் உற்சாகத்துடனும் புத்தாண்டை வரவேற்றனர்.  

மட்டக்களப்பில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும், மழையைப் பொருட்படுத்தாது மக்கள் திரண்டு வந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cmjutx13503dco29njyexr9wm

'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

3 months ago

'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

Dec 31, 2025 - 10:00 PM

'Rebuilding Sri Lanka'ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

'டித்வா' புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 

பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது. 

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது.

https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmju8fbj703czo29nxseozku9/documents/2469-09_T.pdf

https://adaderanatamil.lk/news/cmju8fbj703czo29nxseozku9

இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு

3 months ago

இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு

Dec 31, 2025 - 09:18 PM

இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் 'படோவிற்ற அசங்க' எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது. 

கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான 'அவிஷ்க ஏஷான்' என்பவர் சந்தேகித்துள்ளார். 

இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு நடத்திய போது, "படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்" என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. 

குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற 'ரஜவத்தே சதுவா' என பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் 'களுத்துறை நவீன்' எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmju6xyhz03cyo29ntnu66mvb

ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

3 months ago

ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

31 Dec, 2025 | 07:24 PM

image

நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சூட்சுமமாகப் புகுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யெவெல பஞ்ஞாசேகர தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது,

ஒரு ஒழுக்கமான நாட்டில் நிலவ வேண்டிய நற்பண்புகள் மற்றும் கல்வி முறைமை குறித்தே நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் பாலினக் கல்வி என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களால் பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், தற்போது ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடக் கையேட்டை வெளியிட்டு, அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

அத்துடன் மேலதிகக் கற்றலுக்காக 'சமதியாவ' எனும் இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு ஒரு வழிகாட்டி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் ஊடாகச் சிறுவர்களுக்கு ஓரினச்சேர்க்கை கல்வி தொடர்பான கருத்துக்களே திணிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பாரிய பொருளாதார இலாபங்கள் இருக்கலாம் எனவும், சிறுவர்களை இவ்வாறான விடயங்களில் ஆர்வம் கொள்ளச் செய்யும் ஒரு நுட்பமான தந்திரமே இது எனவும் நாம் கருதுகின்றோம்.

இது எமது நாட்டின் பண்பாட்டுக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணான செயலாகும். ஆகவே, குறித்த பாடக் கையேட்டை உடனடியாக மீளப்பெற வேண்டும். முறையான தெளிவுபடுத்தல்கள் இன்றி மாணவர்களை இவ்வாறான தளங்களுக்கு வழிநடத்தியவர்கள் யாரென உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 'நாங்கள் இதனை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டோம்' என்று கூறிவிட்டுப் பொறுப்பில் இருந்து எவரும் நழுவிவிட முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/234877

50 இந்திய ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர்!

3 months ago

மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - மீனவர் சங்க பிரதிநிதி தெரிவிப்பு!

31 Dec, 2025 | 05:00 PM

image

ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளுகின்ற எங்களுக்கு இம்முறை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளே.

தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் குறித்து பலமுறை கடற்றொழில் அமைச்சரிடம் கூறினோம். 2026ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்பட்ட தொழில்களை அகற்றுவதாக அவர் உத்தரவாதமளித்தார். ஆனால் இன்னமும் அது தீர்க்கப்படவில்லை.

எங்கள் பகுதியில் 10 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 4 சங்கங்கள் தரவைக் கடலை நம்பியும், 10 சங்கங்கள் ஆழ்கடலை நம்பியும் தொழில் செய்கின்றன. ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் இந்தியன் இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்படுகின்றன. 50 ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர்.

அவர்களது கப்பல் பெரிய கப்பல்கள் என்றும், அதனை பிடிப்பதற்கு பெரிய கப்பல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடற்படையினர் கூறுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளால் படிப்படியாக கடற்றொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவடைதல், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லல், அந்த பிரதேசங்களை விட்டு செல்லல் போன்ற துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடற்றொழிலாளர் வர்க்கமே இல்லாமல் போகின்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

இது குறித்து நீரியல்வள திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

அந்த பாலத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் கொடி கட்டினோம். அதற்குள் எவரும் வலை விட வேண்டாம் என்று நாங்கள் சங்கங்களுக்கு கடிதமும் வழங்கினோம். அப்படி இருந்தும் அதற்குள் வலைகளை விடுகின்றார்கள்.

நவம்பர் மாதம்தான் பருவகாலம். ஆகையால் நவம்பர் மாதம் அங்கு இருக்கின்ற வலைகளை அகற்றுவதற்கு திட்டமிட்டோம். இருப்பினும் டித்வா புயலால் அந்த வலைகளை அகற்ற முடியவில்லை. ஜனவரி அல்லது பெப்ரவரிக்குள் இவற்றை சீர் செய்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/234873

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr