ஊர்ப்புதினம்

தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

3 months ago

தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

Dec 31, 2025 - 03:57 PM

தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்,

தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.

இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர்.

இதன்போது அரசாங்க அதிபர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இக் கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்தார்கள்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjtvgj3y03cfo29nwqune9sh

தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்!

3 months ago

IMG_2847-scaled.jpeg?resize=750%2C375&ss

தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்!

ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான தண்ணீர் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது.

ஆனால் டித்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது மைதானத்திற்குள் அதிகளவான தண்ணீர் தேங்கியுள்ளது.

டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னர் சில பரீட்சாத்த போட்டிகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1457913

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது - ஜனாதிபதி

3 months ago

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது - ஜனாதிபதி

31 Dec, 2025 | 10:45 AM

image

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் மதுவரித் திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதுவரித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்கான  227.4 பில்லியன் ரூபாவைத் தாண்டி 231.3 பில்லியன் ரூபா வருமான இலக்கை மதுவரித் திணைக்களம் எட்டவுள்ளதுடன், இது வரலாற்றில் முதல் முறையாக 102% வருமான இலக்காக அமைகின்றது. 

அரச வருமானம் எவ்வளவு ஈட்டப்படுகிறது என்பதிலே நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வருமானம் குறைந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், 2020-2021 ஆம் ஆண்டில் அரச வருமானம் பெருமளவில் குறைந்ததன் விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

வாகனங்கள் மற்றும் கட்டிட வசதிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், குறிப்பாக நிறைவேற்றுப் பதவிகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை உள்ளக இணக்கப்பாட்டுடன், விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும்,  மதுவரி கட்டளைச் சட்டத்தின் திருத்தம் மற்றும் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகியவை பற்றியும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.பீ.என்.ஏ. பேமரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/234814

அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது..! சவால் விடுக்கும் தையிட்டி காணி உரிமையாளர்கள்

3 months ago

தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிரூபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை

மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. நீங்கள் தென் இலங்கையை நோக்கி நகரப் போகிறீர்கள். தையிட்டி மக்களின் காணிகள் பற்றி தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டாம்.

அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது..! சவால் விடுக்கும் தையிட்டி காணி உரிமையாளர்கள் | Archchuna Mp Said Thayiddy Temple Not Accept

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். எத்தனை பரப்பு ஒரு ஏக்கர் என்று தெரியாத ஒரு வழக்கறிஞரும், எல்லோரையும் எத்தனையாம் தரம் படித்தார்கள் என்று கேட்கிற நாடாளுமன்ற உறுப்பினரும் தையிட்டிக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. செயலாளர் என்ற பெண்ணை தொடர்பு கொண்டு விளங்கப்படுத்தினேன்.

போராட்டத்தின் நிமித்தம் பிக்கு இறங்கி வந்திருக்கிறார். கொஞ்சம் காணியை விட்டு ஏமாற்றி விட நிற்கிறார்கள் இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு போய் பேசுகிறார்.

ஆதாரங்களை கொண்டு வழக்கை போடுங்கள்

24 மணி நேரமும் நேரலை போட்டு செல்கிறார்கள். நாம் எந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களை சந்திப்பது? நாங்கள் போராடுவதாகவும் கத்துவதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் போராடியே அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

வைத்தியர் கேதீஸ்வரனுக்கும் வைத்தியர் பிரணவனுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்திக்கும் எதிராக ஆதாரங்கள் இருக்கிறது என்று சொல்லி பல விடயங்களை சொன்னார். அந்த ஆதாரங்களை கொண்டு முதலில் வழக்கை போடட்டும். அந்த வழக்கை நடத்தி விட்டு இங்கு வாருங்கள்.

அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது..! சவால் விடுக்கும் தையிட்டி காணி உரிமையாளர்கள் | Archchuna Mp Said Thayiddy Temple Not Accept

நேரம் ஒரு நேரம் உளறாமல் செயல்படுங்கள். நீங்கள் தகுந்த வைத்தியராக இருந்தால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு போகவில்லை என்று சொன்னால் எங்கள் பிரச்சினையில் இருந்து விலகுங்கள்.

கதைக்கும் போது நிதானமாக கதைக்க வேண்டும். உங்கள் வார்த்தை தடுமாறுகிறது. தமிழர் மரபை மீறி கதைக்கின்றீர்கள். கலாசாரத்தை மீறி கதைக்கின்றீர்கள். தேசிய தலைவரை பற்றி பேசுகிறீர்கள். அனைவரையும் எத்தனையாம் வகுப்பு படித்தது என கூறுகிறீர்கள்.

முன்னர் இந்த மண்ணை ஆண்டவர்கள் எத்தனையாம் தரம் படித்திருந்தார்கள் என்பதை தெரிந்திருந்தால் அது பற்றி கேட்க மாட்டீர்கள். வாகனத்துடன் கதைத்துக் கொண்டு நேரலை போட்டால் பொலிஸ் என்ன தண்டம் கொடுக்கும் என்று உங்கள் சகோதரை கேளுங்கள்.

ஆட்களை தனிப்பட்ட ரீதியாக தாக்க வேண்டாம். உங்கள் மீது மதிப்பு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கத்துவதற்கு ஆள் தேவை. சரியான விடயத்திற்கு அதை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

https://tamilwin.com/

கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது

3 months ago

கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது

31 December 2025

1767163662_9878375_hirunews.jpg

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு கடும் இழுபறிக்கு மத்தியில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் முடிவில், இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2 வாக்குகள் வித்தியாசத்தில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 22 ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு தோல்வியடைந்திருந்தது. அதன்போது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் பாதீடு முன்வைக்கப்பட்டு மறு வாக்கெடுப்பு இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்திக்கு சபையில் தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், ஏனைய சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் கொழும்பு மாநகர சபையின் ஆளுமையை ஆளும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

https://hirunews.lk/tm/438471/colombo-municipal-council-budget-passed

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா - அரசாங்கம்

3 months ago

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா - அரசாங்கம்

31 Dec, 2025 | 11:22 AM

image

(எம்.மனோசித்ரா)

தித்வா புயலால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். அத்தோடு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேத மதிப்பீடு இன்றி 5 இலட்சம் ரூபா வழங்கப்படுவதோடு, சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் வரை அதிகரிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,

இதுவரையில் 6090 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். முதலாவது முறைமை சேதமடைந்த வீடு அமைந்துள்ள காணியில் அபாயமின்றி தொடர்ந்தும் வாழ முடியுமெனில் அவ்வாறானவர்களுக்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.

இந்த கொடுப்பனவு குறித்த வீட்டின் பெறுமதி மதிப்பீடு இன்றி வழங்கப்படும். இரண்டாவது முறைமையின் கீழ் வீடு முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை, அந்த வீட்டில் மீண்டும் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டால் காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி முதலிரு வாரங்கள் நிறைவடைய முன்னர் இந்த இழப்பீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும்.

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக 25 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் சேத மதிப்பீடுகள் இன்றி 5 இலட்சம் வழங்கப்படும். அதன் பின்னர் சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும்.

அரச அதிகாரிகளால் சேத மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படும் போது, அது குறித்து திருப்தியடையாதவர்கள் பிரதேச செயலாளர்கள் அல்லது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியும். உலக வங்கியின் ஆரம்ப கட்ட மதிப்பாய்வுகளுக்கமைய 4.1 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 000 ரூபா ஆரம்பகட்ட கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய 450 225 வீட்டு அலகுகள் அடையாளங் காணப்பட்டன. அவற்றில் இதுவரையில் 393 669 வீட்டு அலகுகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. கண்டி, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும் 80 - 90 சதவீதம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றார்.

https://www.virakesari.lk/article/234816

”தையிட்டி போராட்டம் நில அபகரிப்புக்கு எதிரானதே – பௌத்தத்திற்க எதிரானது அல்ல” - கஜேந்திரகுமார்

3 months ago

”தையிட்டி போராட்டம் நில அபகரிப்புக்கு எதிரானதே – பௌத்தத்திற்க எதிரானது அல்ல”

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கடுமானத்தை மக்கள் ஒரு போதும் வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பவில்லை சட்டத்துக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடத்தை உரியவர்கள் அகற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எம்மைப் பொறுத்தவரையில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரை விகாரையல்ல தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் அடாத்தாக கட்டப்பட்ட சட்ட விரோத கட்டிடம் .

இதற்கு எதிராக இரண்டு வருடங்கள் கடந்தும் ஜனநாயக நீதியாக மக்கள்
போராட்டங்களை மேற்கொண்டு வர நிலையில் அதனை மக்கள் அடாத்தாக அகற்ற வேண்டும் என கருதியது இல்லை.

இலங்கை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடங்களை எவ்வாறு அகற்றுகிறீர்களோ அவ்வாறே இந்த சட்ட விரோத திஸ்ஸ விகாரை கட்டிடத்தையும் அகற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

வலி வடக்கில் #இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில் இந்த சட்ட விரோத விகாரக் கட்டிடம் அமைந்துள்ள பகுதிகளை சூழ்ந்து தமிழ் மக்களின் பாரம்பரியமாக காணப்பட்ட நான்கு #கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஒரு இந்து ஆலயமும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
அதில் 2013 ஆம் ஆண்டு மயிலிட்டி பிள்ளையார் ஆலயம் உயர் பாதுகாப்பு நிலையத்தில் இருந்த போது உரிய அனுமதிகளை பெற்று பாதுகாப்பு தரப்பினர் அப்பகுதி மக்களை ஒரு நாள் வழிபட அனுமதித்தார்கள்.அங்கு வழிபாட்டை நடத்தியவர்கள் தாங்கள் சென்றபோது ஆலயம் முழுமையாக இருந்ததாகவும் தாங்கள் வழிபாடுகளை மேற்கொண்டோம் என தெரிவித்த நிலையில் தற்போது குறித்த ஆலயம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளது .
சட்டரீதியாக மக்கள் வழிபட்ட ஆலயங்களை அழிக்க முடியுமென்றால் சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டடத்தை அகற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது.

நாங்கள் மதங்களை மதிக்கிறோம் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல விடுதலைப் புலிகள் கூட தமது கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது நயினாதீவு விகாரை மற்றும் யாழ் நாக விகாரைகளை அகற்ற நினைக்கவில்லை பாதுகாத்தார்கள்.
இன்று #யாழ்ப்பாணத்தில் விகாராதிபதிகள் என்ன கூறுகிறார்கள் அண்மையில் #நயினாதீவு நாக விகாராதிபதி கூறினார் தையிட்டியில் புத்தபெருமான் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து விகாரை கட்ட யாருக்கும் கூறவில்லை.
தையிட்டி திஸ் விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்க வேண்டும் என கூறுகிறார்.

அதேபோல் யாழ்ப்பாணம் நாக விகாரதிபதி தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகளை அந்த மக்களுக்கே மீணடும் வழங்க வேண்டும் எனக் கூறுகிறார்.
இதிலிருந்து என்ன வழங்குகிறது குறித்த விகாரை சட்டவிரோதமாக அடாத்தாக காணப்படுகின்றமை தெளிவாக பௌத்த துறவிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பௌத்த மதத்தை இழிவு படுத்தவில்லை யாழிலிருந்து பௌத்த மதத்தை அகற்ற வேண்டுமென கூறவில்லை சட்ட நீதியாக எமது மக்களின் காணி உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாறு கோருகிறோம்.
ஆகவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டிடத்தை அகற்றுவதற்காக போராடும் நாங்கள் இனவாதிகளோ மதவாதிகளோ கிடையாது தமிழ் இனத்தின் இருப்புக்காகவும் இன விடுதலைக்காகவும் போராடுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்

https://www.samakalam.com/தையிட்டி-போராட்டம்-நில-அ/

செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம்

3 months ago

செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம்

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது.

செம்மணி வளைவு

அதன் போது யாழ்ப்பாணத்தின் நுளைவு வாசலாக இருக்கின்ற செம்மணி வளைவு பகுதியில் எமது சமய காலசாரங்களை பிரதிபலிக்கின்ற நல்லூரான் செம்மணி வளைவு, சிவலிங்கம்.

செம்மணி பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம் | Controversial Decision Nallur Pradeshiya Sabha

மற்றும் கோவில்கள் ஆகியன காணப்படுவதன் அடிப்படையில் அச் சூழலில் அசைவ உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் போன்ற அச்சூழலுக்கு பொருத்தமில்லாத வியாபார நிலையங்களினை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் அமைப்பற்குரிய அனுமதியினை நல்லூர் பிரதேச சபை வழங்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/controversial-decision-nallur-pradeshiya-sabha-1767161372

குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர் - தவிசாளர் சுட்டிக்காட்டு!

3 months ago

குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர் - தவிசாளர் சுட்டிக்காட்டு!

31 Dec, 2025 | 11:08 AM

image

காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டினார்.

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காரைநகர் பகுதியில் கரையோர பகுதிகளுக்கே அதிகளவான நீர் தேவை உள்ளது. ஆனால் அங்கே பிரதான குழாய்கள் பொருத்தப்படவில்லை என தவிசாளர் சுட்டிக்காட்டினார்.

உரிய அதிகாரி அதற்கு பதிலளிக்கையில்,

நீர்த்தாங்கி வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. குழாய் இணைப்புகளை முடித்த பின்னர் மார்ச் முதல் வாரத்தில் குடிநீரை வழங்குவோம். அத்துடன் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக நாங்கள் பிரதேச செயலகத்திடம் விண்ணப்ப படிவங்களை விநியோகித்துள்ளோம்.

அண்ணளவாக 3700 குடும்பங்கள் இங்கே இருந்தாலும் 500 குடும்பங்கள் அளவிலேயே இங்கே விண்ணப்பங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

அத்துடன் காரைநகர் பிரதேச மக்கள் 38 வீத மானியத்தில், 13 ஆயிரத்து 875 ரூபாவை செலுத்தி மக்கள் இநாத இணைப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.

பெப்ரவரி மாதத்தில் நடமாடும் சேவையை இங்கே மேற்கொண்டு, இணைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான வேலையை செய்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/234818

ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

3 months ago

ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

Dec 30, 2025 - 11:05 PM

ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். 

இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (31) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 

இதே குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எனினும், அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அவரைத் தேடிக் கைது செய்வதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjsvbkx103beo29n1jsw22ox

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை

3 months ago

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை

30 Dec, 2025 | 04:45 PM

image

இன்று நீதி அமைச்சில் ஒன்றுதிரண்ட இலங்கையின் சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்" (PSTA) குறித்துத் தமது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுப்படுத்தும் ஒரு அடக்குமுறை கருவியாகவே இந்தப் புதிய சட்டமூலம் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். இந்தச் சட்டமானது குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைத் தீவிரமாகப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும், சாதாரண கருத்து வெளிப்பாடுகள் கூட "பயங்கரவாதம்" எனக் குற்றம் சாட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், அமைப்புகளைத் தடை செய்தல், ஊரடங்கு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற அதிகாரங்கள் இதன் மூலம் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் சூழலில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தப் புதிய சட்டமூலத்தை நிபந்தனையின்றித் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இத்தகைய சட்டத்தின் அவசியம் குறித்துப் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும், அதுவரை PTA சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைத்து தற்காலிகத் தடையை (Moratorium) நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ் காந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/234775

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

3 months ago

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

Dec 30, 2025 - 12:40 PM

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

அதேநேரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmjs8znxs03a9o29ndhg8ar4l

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்

3 months ago

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்

Dec 30, 2025 - 03:47 PM

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்

தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. 

இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

முறையான தங்குமிட வசதிகள் இல்லாமையால் இப்பாடசாலைகளில் குறிப்பாக இரண்டாம் நிலை வகுப்புகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. 

இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப்பகுதி மாணவர்களின் தேர்ச்சி மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. 

இவ்விளைவினால் தோட்டப்புற இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjsfo5dg03ano29n4ncre58i

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!!

3 months ago

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!!

30 Dec, 2025 | 10:02 AM

image

முல்லைத்தீவு  வலயப் பாடசாலை ஒன்றின்  அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை  கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது.

பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார்.

மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234717

மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்

3 months ago

மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்

30 Dec, 2025 | 03:51 PM

image

மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு  காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக  நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து  நான்கு இலட்சம்  கியுபிக் மண்  அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன.

அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு நீர் நிரைகளில் சேரக்கூடும். அப்படியாயின் நீர் நிலைகளின் ஆழம் குறைந்து சிறிய மழைக்குக் கூட வௌ்ளப் பெருக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே அவற்றை மீளப்பயன்படுத்தும் முறையொன்று கண்டு பிடிக்கப்படாவிட்டால் இன்னும் சொற்ப காலத்தில் சுற்றாடல் பிரச்சினையாக மாறி பின்னர் அது சமூகப்பிரசசினையாக இடமுண்டு என்றார்.

https://www.virakesari.lk/article/234753

பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள்; வவுனியாவில் போராட்டம்

3 months ago

பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் ; வவுனியாவில் போராட்டம்

30 Dec, 2025 | 02:19 PM

image

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும்,  வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், 

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதானஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. 

வடக்கில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி, தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 

பௌத்த துறவிகளே இப்படியான கலவரங்கள் ஏற்ப்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம். என்றனர்.

IMG_20251230_113825.jpg

IMG_20251230_114145.jpg

IMG_20251230_113637.jpg

IMG_20251230_113738.jpg

https://www.virakesari.lk/article/234747

அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

3 months ago

அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்

Dec 30, 2025 - 03:20 PM

அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்

இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்த மாற்றுக் காணிகளையோ அரசாங்கம் இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன. 

இது பாரதூரமான விடயம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டபடி சகல நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்பை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரில் மற்றுமொரு கட்டமாக அநுராதபுரம் மாவட்டம், ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நான் இவ்வாறு பயணம் செய்யும் வேளைகளில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் பேசிய சந்தர்ப்பங்களில், அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்ககளை நிறுத்துவதாக ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் அறிவித்த செய்திகளை நடைமுறையில் காண முடியாதுள்ளதை தெரிந்து கொண்டேன். அரசாங்கம் இவற்றை ஊடகங்கள் மூலம் பொறுப்புடனே விளம்பரப்படுத்தியது. தொழில்முனைவோர், தொழிலதிபர்களுக்கு, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு, விவசாய சமூகத்தினருக்குப் பெற்றுத் தருவோம் என்ற இழப்பீடுகளை அரசாங்கம் உரியவாறு பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த போகத்தில் விவசாயம் சரியாக செய்யப்படாவிட்டால், உணவு நெருக்கடியும் ஏற்படும். எனவே அனைவர் குறித்தும் சிந்தித்து, இந்த விடயத்தை பரந்த கண்ணோட்டத்தில் நோக்கி, அறிவித்த நிவாரணங்களை உரிய தரப்புக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

வாக்குறுதியளித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்காவிட்டால், மக்கள் சார்பாக நாம் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்வோம். 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வாக்குறுதியளித்த விடயங்கள், ஏனைய சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் ஊடாக வாக்குறுதியளித்த, அறிவிப்புச் செய்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வரை, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும். இந்த உரிமைகள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாகும், ஆகையால் மக்கள் இவற்றைப் பெறும் வரை எதிர்க்கட்சி போராடும். இந்த நிவாரணம், சுயதொழில் செய்பவர்கள் முதல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். 

வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படுவது போல, இந்த நிவாரணத் தொகைகளை குறைக்கக் கூடாது. அரசாங்கம் பொய் சொல்லாமல் இதனைச் செய்ய வேண்டும். இந்த நிவாரணங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவ்வாறே, எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjsephjz03amo29nh9e6dysp

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு

3 months ago

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு

Dec 30, 2025 - 11:44 AM

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. 

ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. 

எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjs6zdv803a4o29n4syz1a8r

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

3 months ago

archuna.jpg?resize=750%2C375&ssl=1

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா,

யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

அது தொடர்பாக நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன்.

ஆனால் பொலிசார் அதனை முறையாக விசாரணை செய்யவில்லை.

கொலை மிரட்டல் விடுத்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரமுடியும் என கேட்டிருந்தனர்.

அவர்கள் கிறிஸ்மஸ் உள்ளதாகல் தற்போது வரமுடியாது என கூறியிருந்தனர்.

எவவே அவர்களை 19ஆம் திகதி வருமாறு பொலிசார் கூறியிருந்தனர்.

கொலை மிட்டல் விடுக்கப்பட்டுள்ள எனக்கு நீதி கிடைக்கவில்லை.

மாறாக நான் யாரையாவது தவறுதலாக அழைத்து பேசியிருந்தால்.

பொலிசார் உடனடியாக என்னை கைது செய்திருப்பார்கள்.

வீதியிலுள்ள மஞ்சள் கோட்டில் என் வாகனத்தை நிறுத்தியதற்காக
நான் கைது செய்யப்பட்டேன்.

தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படடிருந்தால்
பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாகர்கள்.

கஞ்சாவை பறிமுதல் செய்யச் சென்ற அப்பாவி பொலிஸ் அதிகாரிக்கு
இன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நான் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும்
எனக்கு பதினைந்து தோட்டாக்கள் கொண்ட ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வந்துள்ளோம், மக்களைக் கொல்ல முடியாது.
ஜனாதிபதி அனுரகுமார மக்களைக் கொல்லச் சொல்கிறாரா…

யாராவது என்னிடம் வந்து என்னைக் கொல்லப்போகிறேன் என கூறினால்
பொலிசாரிடம்தான் நான் முறையிடுவேன்.

நான் அனுரகுமாரவிடம் போன் செய்து சொன்னேன்.

சட்டம் அமல்படுத்தப்படவில்லை என.. அவர் ஆனந்த விஜேபாலனாயவிடம் கூறினார்.
ஆனாலும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் பின்னர், நான் சுட வேண்டியிருக்கும்… ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும்
மருத்துவரைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இப்போது மிகவும் முயற்சி செய்கிறார்…
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதற்கு உதவுகிறார்கள்.

அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது,
எனவே அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1457659

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

3 months ago

New-Project-170.jpg?resize=750%2C375&ssl

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1457695

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr