வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள்
28 December 2025

இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகப் பாரிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.
குறித்த நிவாரண உதவிகள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாகக் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்தின் அதிகாரிகள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.
இதன்படி தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள், 2 கொள்கலன்களில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், தமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் 12,33,604 இந்திய ரூபாய் நிதியுதவியையும் (இலங்கை ரூபாயில் சுமார் 42,50,000) வழங்கியுள்ளனர்.
இதற்கமைய குறித்த நிவாரணப் பொருட்கள் கடந்த 26ஆம் திகதி சென்னையிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவை உரிய திணைக்கள அதிகாரிகள் ஊடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
மேலும் இக்கட்டான காலகட்டத்தில் அனர்த்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்குத் தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர்.
மேலும் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே தங்கியிருந்து, அந்தந்தப் பகுதி காவல்துறையில் பதிவு செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், அவர்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கமைய குறித்த உன்னதமான பங்களிப்பிற்காக இலங்கை அரசாங்கம் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து அடுத்த வாரத்தில் மற்றுமொரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தது.
அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து இதுவரை 4 கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆடைகள், உலர் உணவு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நப்கின்கள் உள்ளிட்டவை அடங்கும்.
மக்களின் தேவைக்கருதி அடுத்த வாரத்தில் மேலும் ஒரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://hirunews.lk/tm/438008/humanitarianism-blossoms-even-in-poverty-massive-relief-assistance-from-sri-lankans-living-in-tamil-nadu