உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால்
Published By: Vishnu
24 Mar, 2026 | 05:19 AM
![]()
(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. முடிந்தால் கைது செய்யுங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறேன். சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் எவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மார்ச் 31 ஆம் திகதி ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி பகிரங்கப்படுத்துவதற்கு உதய கம்மன்பில மார்ச் 27 ஆம் திகதி வெளியில் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நான் இதுவரை காலமும் எந்த மோசடி மற்றும் துர்நடத்தைகளிலும் ஈடுபடவில்லை.அரசுக்கு சொந்தமான ஒரு பேனை கூட வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. ஆகவே முடிந்தால் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்யுங்கள் என்று அமைச்சரவை பேச்சாளருக்கு சவால்விடுக்கிறேன்.
இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை நான் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறேன். என்னை கைது செய்வதற்கு இதுவரையில் 06 முறை முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் தற்போதும் அரசாங்கம் அதே முயற்சியை தொடர்கிறது. உரிய காரணிகள் ஏதும் இல்லாமல் என்னை கைது செய்வதற்கும் முயற்சிக்கப்படுகிறது.
பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்துக்கு கூட இதுவரையில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்கும், அவருக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பதற்கும் அவரது வீட்டாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இப்ராஹிமிற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோர் அரச மரியாதையளித்து கவனித்துள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு ரமழான் பண்டிகையின் போது இப்ராஹிமின் குடும்பத்தாரின் அனுசரணையுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் இருந்த அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் இருந்து பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிரியாணி விடயத்தை நான் செவிவழி கதையாக சொல்லவில்லை.நாமல் அத்தநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகததர் 2020.12.18 ஆம் திகதியன்று குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சத்தியமளித்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் '108' ஆவது பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரியாணி விடயத்தை மறுக்கும் ஆளும் தரப்பினர் அறிக்கையில் 108 ஆவது பக்கத்தை புரட்டிப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பயங்கரவாதிகளுக்கு அரச மரியாதை வழங்கப்படுகின்ற நிலையில், இராணுவ அதிகாரிகள் அரசியல் நோக்கங்களுக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நான் உள்ளே இருந்தாலும், வெளியில் இருந்தாலும் மார்ச் 31 ஆம் திகதி புத்தகம் வெளியாகும். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பகிரங்கப்படுத்தப்படுவார்.
இலங்கையில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்களுக்கு எவ்வித்திலும் சட்டபாதுகாப்பு கிடையாது. ' சொனிக், சொனிக்' என்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள், இஸ்லாமிய அடிப்படைவாதியை போன்று சென்று தகவல் திரட்டிய புலனாய்வு அதிகாரியாவார்.Beaches & Islands
சொனிக், சொனிக் என்பது யார் என்ற இரகசியத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதானி சானி அபேசேகர வெளிப்படுத்துகிறார். இந்த செயற்பாடு அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறைச்செல்லக் கூடிய குற்றமாகும்.ஆனால் இலங்கையில் சானி அபேசேகரவுக்கு பதிலாக, சொனிக், சொனிக் சிறைச்சென்றுள்ளார்.Beaches & Islands
சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் எவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மார்ச் 31 ஆம் திகதி ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன். இதனால் தான் அரசாங்கம் தற்போது கலக்கமடைந்து என்மீது பழிசுமத்துகிறது என்றார்.






























