ஊர்ப்புதினம்

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

3 months 1 week ago

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

21 Dec, 2025 | 09:20 AM

image

(நமது நிருபர்)

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த  வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன்.

இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும்.

பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார்.

https://www.virakesari.lk/article/233967

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

3 months 1 week ago

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

21 Dec, 2025 | 09:26 AM

image

(நா.தனுஜா)

நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது:

இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம்.

அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம்.

அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/233968

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

3 months 1 week ago

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

21 Dec, 2025 | 12:58 PM

image

வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ராணி ரயிலில் இருந்து காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; 

Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-

Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-


https://www.virakesari.lk/article/234005

நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

3 months 1 week ago

நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

21 December 2025

1766283521_4172941_hirunews.jpg

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். 

நாட்டிற்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை, வெளிவிவகார அமைச்சர் , ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், பேரிடர் மீட்புக்கான இந்தியாவின் விசேட பொதி தொடர்பிலும் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடினமான நிலையில் இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய உயர்மட்டக் குழுவுடன் நாட்டிற்கு வருகைதரவுள்ள வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், தமிழ்த் தரப்பினரும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

https://hirunews.lk/tm/436883/s-jaishankar-to-arrive-in-sri-lanka-tomorrow-important-meeting-with-the-president

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

3 months 1 week ago

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

இந்த வான் பாய்தல் காரணமாக வெள்ள நிலைமையோ அல்லது அத்தகைய நிலைக்கு நீர் வெளியேற்றப்படுவதோ இடம்பெறாது என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், எதிர்கால பருவமழை நிலைமைகளுக்கு ஏற்ப ஆறுகளின் நீர் மட்டங்கள் மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அந்த நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே 50-100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

ஈரவலயத்தின் பல இடங்களை அண்டி 25 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

மத்திய மலைநாடு மற்றும் களனி கங்கை படுக்கையை அண்டிய சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சியும், கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 25-50 மில்லிமீற்றருக்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

இந்த நிலைமையின் அடிப்படையில் நில்வலா நதியின் நீர் மட்டம் சிறிய அதிகரிப்பைக் காட்டினாலும், கிடைத்த மழையின் அடிப்படையில் அது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் வரை செல்லவில்லை என பொறியியலாளர் குறிப்பிட்டார். 

அத்துடன் மஹாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி நீர் மட்டம் உயர் நிலையில் காணப்பட்டாலும் அதுவும் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும், ஏனைய நீர்நிலைகளை அண்டி மழை பெய்தாலும் வெள்ள நிலைமை ஏற்படும் அளவிற்கு நீர் மட்டங்கள் அதிகரிப்பைக் காட்டவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjf3u29102ypo29n4225nb7n

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

3 months 1 week ago

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

21 Dec, 2025 | 07:50 AM

image

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு குருநகர் - பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடியுள்ளார்.

இதன்போது மற்றைய சுவர் அவர்மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

https://www.virakesari.lk/article/233959

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

3 months 1 week ago

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

Dec 20, 2025 - 10:12 PM -

0

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

கண்டியில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது. 

எனவே, பிரஜைகள் என்ற ரீதியில் தமக்குத் தேவையான அளவை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும். இதன் மூலம், தேவையுள்ள ஏனைய தரப்பினருக்கு முறையான முகாமைத்துவத்தின் கீழ் அந்த நிதியை வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிட்டும். 

அத்துடன், பெற்றுக்கொள்ளும் நிவாரண நிதியை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும். 

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போது, அத்துறையினருக்கு நிவாரணக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்காத தரப்பினர் என இரு சாராரும் தேவைக்கு அதிகமாக கடன்களைப் பெற்றனர். பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வணிகங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததை ஆளுநர் நினைவுகூர்ந்தார். 

எனவே, வழங்கப்படும் நிவாரணக் கடன்களைக் கூட தமது வணிகத்திற்குத் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் பணத்தை முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் என்றார்.

https://adaderanatamil.lk/news/cmjej0snj02yko29nd30ixnco

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

3 months 1 week ago

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

Dec 21, 2025 - 11:18 AM

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதெனப் பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

"இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை. அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது நடவடிக்கையினால் போராட்டக்களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjfb3o7k02ywo29npez5i2v0

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

3 months 1 week ago

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்களின் பட்டியலின் பிண்ணனியில்  தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதாக தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(20.12.2025) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கிளிநொச்சியில் கட்டப்பஞ்சாயத்து நடாத்திக் கொண்டு பல அரசியல்வாதிகள் நல்லவர்கள்போல் நடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள் எப்படி சொத்துக்கள் சேர்த்தனர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தம்மைத் தாக்கிய கூலித்தொழிலாளியிடம் எப்படி சொத்து வந்தது என்பனையும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!

3 months 1 week ago

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!

Published By: Digital Desk 2

20 Dec, 2025 | 02:57 PM

image

நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன.

மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233942

பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம்

3 months 1 week ago

பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம்

20 Dec, 2025 | 11:05 AM

image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு  வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து  உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றினால்  உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.

https://www.virakesari.lk/article/233917

'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

3 months 2 weeks ago

'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

சனி, 20 டிசம்பர் 2025 04:43 AM

'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகம் புதிதாக அமையவுள்ளது. 

அதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், தென்மராட்சி பிரதேச செயலர் சந்திரா சத்தியஜோதி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , சாவகச்சேரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது 

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் , யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் , யாழ் . மாநகர சபை உறுப்பினருமான எஸ், கபிலன் , அரச அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

அதன் போது , புதிய பிரதேச செயலகத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க இது வரையில் நால்வர் முன் வந்துள்ளனர் எனவும்  , எதிர்வரும் 31ஆம் திகதி க்கு முன்னர் வேறு யாரேனும் காணிகள் வழங்க விரும்பின் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது. 

அடுத்த வருடம் முதல் வார கால பகுதியில் பொருத்தமான காணியினை தெரிவு செய்த பின்னர் , பிரதேச செயலகம் அமைப்பதற்கான அடுத்த கட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

https://jaffnazone.com/news/53388

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்

3 months 2 weeks ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்

2025 டிசெம்பர் 20 , மு.ப. 11:04

தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இதன்போது பிரதி அமைச்சரிடம் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

No image previewமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரதியமைச்சர் சுந்த...
தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்று

சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்

3 months 2 weeks ago

சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்

Published By: Vishnu

20 Dec, 2025 | 03:29 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நான் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இனரீதியாக பேசியதில்லை. ஆனால் இப்போது சொல்கின்றேன், சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்தவாரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஒரு முன்மொழிவை தயாரித்து சமர்ப்பித்தார்கள். புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, தீர்வு தொடர்பான முன்மொழிவே அது. அதனை இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக எங்களால் முடிந்த உதவியாக எம்மால் சேகரிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பணத்தில் பாதிக்கப்பட்ட 2137 குடும்பங்களுக்கு நாம் உதவி செய்துள்ளோம். இதற்கு உதவியவர்களுக்கு இந்த சபையில் நன்றி கூறுகின்றேன்.எமது உதவி தொடர்பான கணக்கு விபரங்களையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். என்றாலும் நாம்செய்த இந்த உதவி போதாது.

கடந்த பாராளுமன்ற அமர்வில் கொத்மலையில் நடந்த அசாதாரண சம்பவம் தொடர்பில் நான் உரையாற்றினேன்.அதில் முக்கியமானதொரு பிரச்சினையாக அந்த பகுதியிலிருந்த பிரதேச செயலாளர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற விடயத்தை முன்வைத்தேன். இது தொடர்பில் அரசு. அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் நான் கூறியபோதிருந்ததை விட இப்போது அந்த பிரச்சினை அதிகரித்துள்ளது . நேற்றைய தினம் ( வியாழக் கிழமை)அதே பகுதியிலிருக்கின்ற மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே அந்த பிரதேச செயலாளர் தம்மை முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்கள்.

நான் எனது பாராளுமன்ற நாட்களில் ஒரு உரையைக்கூட இனரீதியாக ஆற்றியதில்லை. ஆனால் இன்று உண்மையான விடயம் கொத்மலை பிரதேசம் மட்டுமல்ல கொத்மலை, உடப்புசல்லாவ என சிங்கள சமூகம் எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை.

இது தொடர்பாக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று நன் அந்த குற்றச்சாட்டை வைத்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க சொன்னார்கள். நான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததால் இன்று அங்குள்ள தமிழ் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் அனைத்துப்பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

இது அமைச்சரின் நோக்கம் கிடையாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எல்லோரும் மோசமானவர்கள் என நான் சொல்லவில்லை. ஒரு சிலரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்துக்கு மட்டும் கெட்ட பெயர் கிடையாது. நாட்டுக்கே கெட்ட பெயர் .அதேமாதிரி கிராமசேவகர்களைப் பார்த்தால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பெயருக்கே செல்கின்றார்கள். பெயர்களை எடுக்கின்றார்கள் .ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் என்கின்றார்கள்.

9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடந்தது அதில் ஜனாதிபதி ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். அப்படிப்பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச் காணிதான். திகாம்பரம் எம்.பி. இருக்கும்போது 7 பேர்ச் காணி என சட்டம் கொண்டுவரப்பட்டது.நாங்கள் இருக்கும்போது 10 பேர்ச் காணி என சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்போது 6 பேர்ச் எனப்படுகின்றது எனவே இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென ஜனாதிபதி இந்த சபையில் தெளிவு படுத்தியேயாக வேண்டும்.

அதேவேளை சந்தாப்பணத்தில் நான் நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ்வோடு நான் சென்ற போது அவருடன் கூட்டு சேர்ந்து விட்டதாக கூறினார்கள். எல்லோரும் சந்தாப்பணம் வாங்குகின்றார்கள்.எத்தனைபேர் கணக்கு வழக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் ? ஆனால் நான் சமர்ப்பித்துள்ளேன். நான் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் நுவரெலியா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனக்கூறினேன். எனக்கு ஆளும் கட்சியா எதிர்கட்சியா, சிவில் அமைப்புக்களா என்ற பிரச்சினை கிடையாது. அந்த வகையில்தான் நாமல் ராஜபக்ஷ் அங்கு வந்து உதவிகளை வழங்கினார் என்றார்.

https://www.virakesari.lk/article/233892

பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்

3 months 2 weeks ago

பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர்

Published By: Vishnu

19 Dec, 2025 | 10:57 PM

image

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை (19) ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.

அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது.

நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம்.

எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம்.

2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது.

குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது.

இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும்.

மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.

தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/233884

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

3 months 2 weeks ago

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

19 Dec, 2025 | 02:39 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (19) பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் புதிய அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு, அது மக்களிடம் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல்களுடன் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதன்படி இதற்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை மற்றும் ஏனைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் ஆராயப்படுவதுடன், அது தொடர்பான ஆரம்பகட்ட யோசனை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

எமது கொள்கை பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை அமைத்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியை நியமித்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் பிரகாரம் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுதொடர்பான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. புதிய அரசியலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. இது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதுடன், இந்த விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இது தொடர்பான காலப்பகுதி தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. 2017/17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கமைய எல்லை நிர்ணயம் தொடர்பிலும், தேர்தல் தொகுதிகள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னர் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும்.

இதுவரையில் எல்லை நிர்ணய நடவடிக்கை முடிவடையாத காரணத்தினால் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. இதனால் இதில் திருத்தங்களை மேற்கொண்டு பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும். 2026ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக பரிந்துரைகளுடனான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியிலான குழுவொன்றுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அது தொடர்பான சட்டவரைபுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/233835

இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி

3 months 2 weeks ago

இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி

Dec 19, 2025 - 10:06 PM

இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. 

பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்குப் பக்கபலமாக அமையும். 

புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு IMF ஆதரவுத் திட்டம் எவ்வாறு சிறந்த முறையில் உதவ முடியும் என்பதை ஆராய்வதற்கும் மேலதிக காலம் தேவைப்படுகிறது. 

இதன் காரணமாக, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான கலந்துரையாடல்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjd3cy9t02xmo29nbrwlvvuh

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

3 months 2 weeks ago

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

Dec 19, 2025 - 05:58 PM

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார். 

டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். 

2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டொலர் அளவை விட 500 மில்லியன் டொலர் மேலதிகமாக ஈட்டுவதன் மூலம் டொலரின் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் ஊடாக வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி குறித்துப் பின்வருமாறு விவரித்தார். 

முழுமையாக 6,282 வீடுகளுக்கு சேதம். 4,543 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம். எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் NBRO வினால் அனுமதி வழங்காத 6,877 வீடுகள் உட்பட மொத்தம் 17,648 வீடுகளுக்கு, மூன்று மாத காலத்திற்கு மாதமொன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

அனர்த்த நிலைமை தணிந்த பின்னர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக 25,000 ரூபாய் வழங்கல். 

தளபாடங்கள் சேதமடைந்த வீடுகளுக்கு, அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாய் வழங்கல். 

முதற்கட்டமாக, முழுமையாக வீடுகளை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், NBRO பரிந்துரைகளைக் கொண்ட பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் அல்லது வீடுகள் சேதமடையாத போதிலும் அபாய நிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு ஜனவரி முதல் மூன்று மாத காலத்திற்கு 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். 

வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தவர்கள், பகுதியளவில் சேதமடைந்தவர்கள் அல்லது வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும் NBRO பரிந்துரையின் பேரில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கல். 

நெல், சோளம், நிலக்கடலை மற்றும் ஏனைய தானியங்களைப் பயிரிட்டுள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல்.

 

மிளகாய், வெங்காயம், பப்பாளி, வாழை உள்ளிட்ட செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். 

அடர்த்திக்கு ஏற்ப மிளகு, ஏலக்காய் மற்றும் கோப்பி ஆகிய பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் ( ஒரு மிளகு கொடிக்கு 250 ரூபாய்). 

கால்நடை மருத்துவ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு கலப்பினப் பசுவிற்காக தலா 200,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 10 பசுக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 

ஒரு நாட்டு பசுவிற்காக 50,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 பசுக்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும். 

பன்றி, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு விலங்கிற்கு 20,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 விலங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 

உயிரிழந்த ஒரு முட்டையிடும் கோழிக்கு 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 2,000 கோழிகளுக்கு உதவி வழங்கப்படும். 

இறைச்சிக் கோழி ஒன்றிற்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சம் 4,000 கோழிகளுக்கு உட்பட்டு (அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை) நட்டஈடு வழங்கப்படும்.

 

கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, காப்புறுதி கொண்டுள்ள படகுகளுக்கு, அக்காப்புறுதித் தொகையை 'சீனோர்' நிறுவனத்திற்கு வழங்கி அத்தரப்பினருக்கு புதிய படகுகளைப் பெற்றுக்கொடுத்தல். 

வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இழந்த ஒவ்வொரு மீனவருக்கும் 100,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கல். 

அனர்த்தத்தினால் சேதமடைந்த படகுகளை 'சீனோர்' நிறுவனம் மூலம் இலவசமாகத் திருத்திக் கொடுத்தல். 

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தோணியை இழந்தவர்களுக்கு 100,000 ரூபா பணமும், பாதிப்படைந்த நீர்த்தேக்கங்களுக்கு மீன்குஞ்சுகளும் வழங்கல். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். 

கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 9,600 கைத்தொழில் நிலையங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கல். 

பகுதியளவில் சேதமடைந்த வர்த்தகக் கட்டடங்களுக்கு 5 இலட்சம் ரூபா அல்லது மதிப்பீட்டின் பின்னர் அதிகபட்சமாக 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கல். 

பதிவு செய்யப்பட்டுள்ள பிரதேச வர்த்தக நிலையங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடுப்பனவு வழங்கல். 

சிறிய கைத்தொழில்களுக்கு 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையும், பெரிய கைத்தொழில்களுக்கு 25 மில்லியன் ரூபாய் வரையும் வழங்கல்.

https://adaderanatamil.lk/news/cmjcui1t802xco29n6co5fogn

கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு

3 months 2 weeks ago

19 Dec, 2025 | 01:04 PM

image

"தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு, சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அதேவேளை விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என சபையில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சி எதுவும் தலைமை தாங்காது. மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.

அதன்போது, நடத்தப்படும் போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது. 

அதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு | Virakesari.lk

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!

3 months 2 weeks ago

19 Dec, 2025 | 12:54 PM

image

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது.

இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது.

இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.  

அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. 

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு! | Virakesari.lk

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr