தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர்
18 Dec, 2025 | 06:55 PM
![]()
மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் பெய்த அதிக மழை காரணமாக நுவரெலியா பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்தமையே கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாகும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர தெரிவித்தார்.
நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது உபாலி வணிகசேக்கர இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் பிரதி நகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உட்பட மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாநகர சபை கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கட்டு வான்கதவுகள் திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியதாக ஒரு சில ஊடகங்களில் நுவரெலியா பொது மக்கள் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதில் எந்தவித உண்மையும் இல்லை.
நுவரெலியா நகரம் நீரில் மூழ்வதற்கு முன்பே நுவரெலியா கிரகரி வாவியின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களும் இடைவிடாது பெய்த கன மழையினால் பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகல ஓயா நீரோடையில் நீர் பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது.
அத்துடன் நுவரெலியாவில் அதிகரித்த சட்டவிரோத கட்டடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதி, நுவரெலியா குதிரைப்பந்தய திடல் (ரேஸ்கோஸ்) நுவரெலியா கொல்ப் மைதான லயம், நுவரெலியா யுனிக் கிராமம் உட்பட பல இடங்களில் இயற்கை அனர்த்தத்தால் மழை நீர் நிரம்பியும் மண்சரிவு ஏற்பட்டும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை நுவரெலியா மாநகர சபை முன்னின்று செய்து வருகிறது.
மேலும் நுவரெலியா நகரில் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையையும், சுற்றுலாத் துறையையும், பாதிக்கப்பட்ட வர்த்தகத் துறையையும் அபிவிருத்தி செய்து மீண்டும் பழைய நிலைக்கு நுவரெலியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நுவரெலியா நகரில் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் மாநகர சபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.
தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர் | Virakesari.lk





இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க...























