ஊர்ப்புதினம்

யுத்தகால மீறல்களில் முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்கவின் வகிபாகம் என்ன?

1 week 5 days ago

யுத்தகால மீறல்களில் முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்கவின் வகிபாகம் என்ன? ; சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் புதிய அறிக்கையில் தகவல்

22 Mar, 2026 | 09:48 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட மீறல் குற்றங்களில் முன்னாள் இராணுவத்தளபதி (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்கவின் வகிபாகம் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டமை மற்றும் யுத்தத்தின் பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு நிலையங்களுக்குள் பரவலாக நிகழ்ந்த மீறல்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையில் தயா ரத்நாயக்க இராணுவத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் பொதுமக்கள் மீதான சட்டவிரோதப் படுகொலைகள், வலுகட்டாயமாகத் தடுப்புக்காவலில் வைத்தல், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல், வலிந்து காணாமலாக்குதல் என்பன உள்ளிட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளின்போது பீரங்கிகள், வான்வழித்தாக்குதல் உபகரணங்கள் மற்றும் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள்மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும், அக்காலப்பகுதியில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்திருந்த வாகரையில் உள்ள பாடசாலை ஒன்றின்மீது நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அக்காலப்பகுதியில் 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய தயா ரத்நாயக்க, இந்த மீறல்களில் முக்கிய பங்கு வகித்ததாக விபரிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்பட்ட கட்டமைப்புக்களுக்குள் அடித்துத் துன்புறுத்துதல், நீருக்குள் மூழ்கடித்தல், மூச்சுத்திணச்செய்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் உளவியல் சித்திரவதைகள் என்பன உள்ளிட்ட பரவலான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/241606

தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

1 week 5 days ago

தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

22 Mar, 2026 | 09:41 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழர்களும் இன ரீதியாக ஒரு பொதுவான மூலத்தைக் கொண்டவர்கள் என்பதிலும், எமது இரு மொழிகளினால் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. இலங்கையர்களாகிய நாம் இன ரீதியில் எமது பொதுவான தன்மையை உணர்ந்து, 'ஒற்றையாட்சி' அரசியலமைப்புக்குப் பதிலாக 'ஒருமித்த' அரசியலமைப்பை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணம் இதுவாகும். 'ஒருமித்த' அரசியலமைப்பானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முதலாம் பிரிவின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான சுயாட்சி உரிமையை வழங்கும் என தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

'சமீபத்திய மரபணு ஆய்வுகள், குறிப்பாக கடந்த ஆண்டு Current Biology எனும் இதழில் வெளியான மரபணு வரிசை முறை ஆய்வானது இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தென்னிந்திய மக்களுடன் வலுவான மரபணுத் தொடர்புகளைக் கொண்டிருப்பதைக் காண்பிக்கின்றனவா? அவ்வாறெனில், இன ரீதியாக சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே மரபணுத் தொடர்பைக் கொண்டவர்கள் என்பதும், அவர்கள் மொழியால் மட்டுமே வேறுபடுகிறார்கள் என்பதும் உண்மையா?' என எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஆம், நிச்சயமாக மரபணுத் தொடர்பு இருக்கிறது. சிங்கள வரலாற்று ஆசிரியர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக மகாவம்சம் மற்றும் ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில் சிங்களவர்களுக்குப் பிரத்தியேகமான வட இந்திய ஆரிய மூலம் இருப்பதாகக் கூறிவந்தனர்.

ஆனால் நவீன மரபணுச் சான்றுகள் இதுவரை அவர்களால் முன்வைக்கப்பட்ட தவறான கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவில்லை. உண்மையில் விஜயனும் அவனது 700 தோழர்களும் அவனுடைய தந்தையால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதாகக் கூறப்படும் கதைக்கு இணையான குறிப்புகள் எவையும் வட இந்திய வரலாற்று நூல்களில் இல்லை. எனவே இந்தக் கதை மத நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு புனைவாகும்.

மகாவம்சம் என்பது ஒரு வரலாற்று ஆவணம் அல்ல. மாறாக அது பௌத்த மதத்தை மேன்மைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட ஒரு புனைவு என்று நாம் நீண்டகாலமாகக் கூறிவருகிறோம். மகாவம்சத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் முழு வரலாற்று விவரிப்பையும் பௌத்த வழிபாட்டின் பின்னணியில் சித்தரிக்கும் வகையில் முடிவடைகிறது.

இலங்கையில் பௌத்த மதத்தை நிறுவுவதற்காகவும், அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவுமே மகாநாம தேரரினால் மகாவம்சம் இயற்றப்பட்டிருக்கிறது. எனவே அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை வேதவாக்காக எடுத்துக்கொள்ளாமல், அரசர்களின் வரலாறு உள்ளிட்ட புறம்பான சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தவேண்டும்.

மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தில் சிங்கள மொழி இருக்கவில்லை. ஆகையினாலேயே அது பாலி மொழியில் எழுதப்பட்டது. அக்கால மக்களின் மொழியாகத் தமிழ் இருந்தது. தேவநம்பியதீசன், பண்டுகாபயன் மற்றும் துட்டகைமுனு ஆகிய மன்னர்களின் மொழி கூட தமிழ் தான். துட்டகைமுனு தமிழ் பேசும் பௌத்தராக இருந்தார். எல்லாளன் தமிழ் பேசும் சைவராக இருந்தார்.

அதேவேளை வட, கிழக்கு தமிழ் வம்சாவளியை 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கண்டறியமுடியும். ஆனால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் மதுரையிலிருந்து தமிழ் பிராமணர்கள் இங்கு வந்து, உள்ளுர் பெண்களைத் திருமணம் செய்து, தம்மை சிங்களவர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு குடியேறியது எத்தனை சிங்களவர்களுக்குத் தெரியும்?

இலங்கையில் உள்ள சிங்களவர்களும் தமிழர்களும் இன ரீதியாக ஒரு பொதுவான மூலத்தைக் கொண்டவர்கள் என்பதிலும், எமது இரு மொழிகளினால் மட்டுமே நாம் வேறுபடுகிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. நான் 1950 களின் ஆரம்பத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்ற வேளையில், கீழ்நாட்டு சிங்களவர்கள், மேல்நாட்டு சிங்களவர்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், ஏனைய இலங்கைத் தமிழர்கள், சோனகர், மலாயர்கள் மற்றும் ஏனைய முஸ்லிம்கள், பரங்கியர்கள் என சகல இனங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாகப் படித்தோம். நாம் ஆங்கில மொழியாலும், எமது பாடசாலையினாலும் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாக இருந்தோம். எனினும் 1956 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் எமது ஒற்றுமையை மிகமோசமாகப் பாதித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையர்களாகிய நாம் இன ரீதியில் எமது பொதுவான தன்மையை உணர்ந்து, 'ஒற்றையாட்சி' அரசியலமைப்புக்குப் பதிலாக 'ஒருமித்த' அரசியலமைப்பை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணம் இதுவாகும். 'ஒருமித்த' அரசியலமைப்பானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முதலாம் பிரிவின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான சுயாட்சி உரிமையை வழங்கும். அதேவேளை சுயாட்சி தேவைப்படும் இவ்விரு தரப்பினரைத் தவிர ஏனைய மக்களின் உரிமைகளும் அந்த அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/241605

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

1 week 5 days ago

இன்றிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

21 Mar, 2026 | 11:59 PM

image

நாட்டில் எரிபொருள் விலைகள் இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Geographic Reference

ஐ.ஓ.சி. ஆகிய நிறுவனமும் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, அனைத்து முக்கிய எரிபொருள் வகைகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு:

* ஒட்டோ டீசல் – ரூ. 79 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 382

* சூப்பர் டீசல் – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 443

* பெட்ரோல் ஒக்டேன் 92 – ரூ. 81 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 398

* பெட்ரோல் ஒக்டேன் 95 – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 455

* மண்ணெண்ணெய் – ரூ. 60 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 255

இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகளின் இந்த திடீர் உயர்வு பொதுமக்களின் வாழ்வுச் செலவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பல துறைகளிலும் இதன் தாக்கம் காணப்படக்கூடும்.

download.jfif

https://www.virakesari.lk/article/241593

சட்டவிரோத கடலட்டைப் பண்ணையாளர்களுக்கு விசுவாசம் காட்டும் கடற்றொழில் அமைச்சர் ; கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

1 week 5 days ago

சட்டவிரோத கடலட்டைப் பண்ணையாளர்களுக்கு விசுவாசம் காட்டும் கடற்றொழில் அமைச்சர் ; கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

22 Mar, 2026 | 11:59 AM

image

சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால் நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்யமுடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர்கள் மேலும் கூறுகையில்,

கிராஞ்சி கடற்பகுதியில் தற்போது கடற்றொழில் சமூகத்தினரை தவிர்ந்த ஏனையவர்களே பல நூறு ஏக்கர் கடற்பரப்பில் பண்ணைகளை வைத்துள்ளனர்.

இதில் சிலர் சட்டவிரோதமாக 30 முதல் 40ஏக்கர் வரை கபளீகரம் செய்து தமது பண்ணைகளை முன்னெடுக்கின்றனர்.

இதனால் எமது பொருளாதாரம் முற்றாக பறிக்கப்பட்டு விட்டது. நாம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனிடம் இது தொடர்பில் முறையிட்டும் ஏதும் நடக்கவில்லை. அவர் பண்ணையாளர்களுக்கே விசுவாசமாக செயற்படுகின்றார்.

நாம் எமது நிலையை சொன்னால் வருகிறார் பார்க்கிறார் தீர்வு மட்டும் தரார். ஏனெனில் அவருக்கு பண்ணைகளை செய்பவர்களுடன் முரண்பட விருப்பமில்லை.

சட்ட நடவடிக்கை எடுப்போம் என எமக்கு சாக்குப்போக்கு சொல்லி காலத்தை ஓட்டுகின்றார். எனவே எமது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கு உரிய தீர்வை அனுர அரசு தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

https://www.virakesari.lk/article/241622

ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்!

1 week 5 days ago

ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயங்கள்!

Published By: Digital Desk 1

21 Mar, 2026 | 02:37 PM

image

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள், கொழும்பை மையமாகக் கொண்டே செயற்படுவது நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/241567

162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு - உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்!

1 week 5 days ago

162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு - உயிர்நீத்த வீரர்களுக்கு கௌரவம்!

Published By: Digital Desk 1

21 Mar, 2026 | 02:41 PM

image

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) காலை கொழும்பில் நடைபெற்றது.

பம்பலப்பிட்டி பொலிஸ் களத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடமையின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது.

மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இதுவரை 5,789 பொலிஸ் அதிகாரிகள் உயிர்நீத்துள்ளனர். இதில் கடந்த மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்தத்தின் போது மாத்திரம் 2,598 அதிகாரிகள் வீரமரணமடைந்துள்ளனர்.

அதேநேரம், யுத்த காலப்பகுதியில் மற்றும் கடமையின் போது காயமடைந்து ஊனமுற்ற நிலையில் 2,575 அதிகாரிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வின் போது பொலிஸ் மா அதிபரால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2026-03-21_at_13.38.00.jp

WhatsApp_Image_2026-03-21_at_13.37.59.jp

WhatsApp_Image_2026-03-21_at_13.37.59__1

WhatsApp_Image_2026-03-21_at_13.38.02.jp

WhatsApp_Image_2026-03-21_at_13.38.02__1

WhatsApp_Image_2026-03-21_at_13.38.04.jp

WhatsApp_Image_2026-03-21_at_13.38.04.jp

WhatsApp_Image_2026-03-21_at_13.38.05.jp

WhatsApp_Image_2026-03-21_at_13.38.07.jp

WhatsApp_Image_2026-03-21_at_13.38.10.jp

https://www.virakesari.lk/article/241565

குழிக்குள் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற தாய் யானை நடத்திய போராட்டம் : சோகத்தில் முடிந்த சம்பவம்

1 week 6 days ago

குழிக்குள் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற தாய் யானை நடத்திய போராட்டம் : சோகத்தில் முடிந்த சம்பவம்

Published By: Digital Desk 1

21 Mar, 2026 | 12:03 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

கெக்கிராவை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஹொரிவில பகுதியில், ரயில் சமிக்ஞை வடங்களுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து இரண்டு மாதமேயான குட்டி யானையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சுமார் 30 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டமொன்று ரயில் பாதையைக் கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

ரயில்வே ஊழியர்களால் சமிக்ஞை வடங்களை இடுவதற்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான, குறுகிய குழிக்குள் எதிர்பாராத விதமாக குட்டி யானை விழுந்துள்ளது.

குட்டி யானையை மீட்பதற்கு யானைக்கூட்டம் பெரும் முயற்சி எடுத்தபோதிலும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஏனைய யானைகள் அங்கிருந்து சென்ற போதிலும், தாய் யானை மட்டும் தனது குட்டியை மீட்பதற்காக அங்கேயே தங்கிப் போராடியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னரே குட்டி யானை உயிரிழந்துள்ளது.

https://www.virakesari.lk/article/241548

மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை - துரைராசா ரவிகரன்

1 week 6 days ago

மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை - துரைராசா ரவிகரன்

20 Mar, 2026 | 04:33 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இரண்டாவது நாளாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு காலசாரம் எமக்குள்ளது. என்று ஹிரிகம காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அநுராதபுரத்தில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். பாராட்டுகின்றேன். இதனைத்தான் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலப்பறிப்பினாலேயே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்தகால ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் இப்போதைய ஜனாதிபதி நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஒருபகுதி மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் சமயம் இது.

ஆனால் வவுனியாவடக்கு, முல்லைத்தீவு, தையிட்டி. வலிவடக்கு, கேப்பாப்புலவு, முள்ளிக்குளம், திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு என வடக்கு கிழக்கெங்கும் தமது நிலமீட்பிற்காகத்தான் தமிழ்மக்கள் உரமாகப் போராடுகின்றார்கள். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்களுக்கும் தமது நிலம் தமது உறவுகளின் பின்னிப்பிணைந்த கலாசாரத்துடனான பூர்வீகத் தமிழ் மண்தான் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

ஜனாதிபதி அநுராதபுரத்தில் உரை நிகழ்த்திய அதே நாளில் கடந்த முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி என்னும் இடத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

அந்தக்காணிகள் தமிழ்மக்களுடைய பூர்வீக தனியார் அறுதி உறுதிக் காணிகளாகும். நில அளவையாளர் நாயகத்தினால் அளந்து வரையப்பட்டு, பேணப்பட்டுவரும் (Top off pp 70 இலக்க) வரைபடத் தொகுதியில் தனியார் காணியாகவும், மேய்ச்சல் தரை நிலங்களாகவும் உள்ளன.

எனவே மகாவலி அதிகாரசபைக்கு அந்த நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அதிகார எல்லைக்குட்பட்ட இந்த தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளைத் திருடி சிங்கள வர்த்தகருக்கு குத்தகைக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மகாவலி அதிகாரசபையிடமிருந்து தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளை சட்டவிரோதமாகக் குத்தகைக்குப் பெற்றுள்ள அந்தநபர், அந்தக் காணியில் உப்பளம் அமைக்கும் வேலையைத் தொடங்கியதால் அங்கு ஒரு அமைதிக்குலைவு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததது.இவ்வாறான இனவிரோத செயற்பாட்டைச் செய்தது மகாவலி அதிகாரசபையே .

இவ்வாறான இனவிரோத செயற்பாடு தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்திலே மகாவலி அதிகார சபையினால் வடக்கிற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் கிராமப்பெயர்களை சிங்களப் பெயராக மாற்றி அங்கு சிங்களமக்களைக் குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மகாவலியின் இத்தகைய அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையும், சமாதானக் குலைவும் ஏற்படுகின்றது.

எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/241485

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

1 week 6 days ago

250627-Chemmani-grave-2.jpg?resize=750%2

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தொடர்பான விவாதத்தின் போது, செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் குறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் ஒரு இயக்கம் எனக் குறிப்பிட்டார்.

கடந்த 25 ஆண்டுகளில் செய்யப்படாத பல பணிகள் தற்போதைய குறுகிய கால ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1999ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட செம்மணிப் புதைகுழியில், 2024ஆம் ஆண்டு வரை 25 வருட காலப்பகுதியில் வெறும் 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தும், செம்மணி விவகாரத்தில் அவர்கள் ஏன் மௌனம் காத்தார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த கடந்த 17 மாதங்களில் மட்டும் 239 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது முறையற்றது என்றார்.

செம்மணி அமைந்துள்ள தொகுதியில் மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில், நீதித்துறை பொறிமுறையூடாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது தவிர மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நீதி நிலைநாட்டப்படும் போது அதற்கான கால அவகாசம் தேவைப்படும் என்றும், சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2026/1469481

காணாமல் போனவர்களுக்கு நீதி: புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயார் - அமைச்சர் ஹர்ஷண!

1 week 6 days ago

காணாமல் போனவர்களுக்கு நீதி: புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயார் - அமைச்சர் ஹர்ஷண!

20 Mar, 2026 | 04:34 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி அவசியமாகும். அந்த நீதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுக்கும். இதன்போது புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய தேவை எழுமாக இருந்தால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைமப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி.எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சாணக்கியன் எம்.பி தனது கேள்வியின்போது,

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் காணாமல் போனவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை என்ன? அது புதுப்பிக்கப்பட்டுள்ளதா? காணாமல் போனவர்களைப் பற்றிய ஒருங்கிணைந்த, நம்பத்தகுந்த தேசிய தரவுத்தளம் இன்னும் இல்லையென அரசு ஏற்றுக்கொள்கிறதா? அத்தகைய தரவுத்தளத்தை உருவாக்க எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனவும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? உடற்கூறு ஆய்வு, அடையாளம் காணல் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கான கால அளவு என்ன?

அத்துடன் யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன? இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான நடவடிக்கை என்ன? என்றார்.

இதற்க தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகையில்,

2009 இறுதிக் கட்ட யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்த மதிப்பீடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் இன்னும் கணக்கில் வராமல் உள்ளனர் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு காலத்தில் மாறுபடுகின்றன. எவ்வாறாயினும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி அந்த எண்ணிக்கை 2,764 ஆகும்.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்களின் நம்பகமான ஒருங்கிணைந்த தரவுத்தளம் இல்லாதது ஒரு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இதனால் இது தொடர்பில் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பபடுகின்றன. குறிப்பாக நீண்ட காலத் தீர்வாகச் செயல்படும் வகையில், ஒரு விரிவான தரவுத்தள மேம்பாட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை 2025ல் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி விடயத்தில் தடயவியல் பரிசோதனைக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நீதி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான நீதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றதத்தின் ஊடாக நடக்கும்.

நாங்களும் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வு காண வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். தடயவியல் பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இதற்கான கால அளவை கூற முடியாது. எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை வழங்கும் ஒரு அறிவியல் பூர்வமான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுப்போம். அத்தடன் ஏனைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் காணாமல் போதல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. யுத்தத்தில் எது சரி, தவறு என்று கூற முடியாது. ஆனால் எவராவது காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போனோர் விடயத்தில் இது வரையில் கவனம் செலுத்தப்படாத விடயங்கள் இருப்பின் அது தொடர்பில் கூறலாம். தேவையான நடவடிக்கைளை நாங்கள் முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம்.

இதேவேளை, பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளி பொறிமுறையுடன் அரசாங்கம் இணங்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் கூறியுள்ளார். எமது தேசிய வேலைத்திட்டங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதனால் இவ்வாறாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி தேவையான நீதியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம். எவராவது தவறு செய்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். இன பேதமின்றி தேசிய பொறிமுறையில் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம். இதற்காகவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைகிறது.

காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி அவசியமாகும். இதற்காக புதிய சட்டம் தேவையென்றால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது. இதற்காக எதிர்வரும் 3 வருடங்களில் தேவையான அவதானத்தை செலுத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/241486

வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்களின் பின்னணி என்ன? - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

1 week 6 days ago

வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்களின் பின்னணி என்ன? - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

20 Mar, 2026 | 04:36 PM

image

(நா.தனுஜா)

இலங்கைக்கு சடுதியாக வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக நாம் இப்போது உலக வல்லரசுகளின் போட்டி எனும் ஈர்ப்பு விசைக்குள் இழுக்கப்பட்டு வருகிறோம். இது நாம் குழப்பத்தை அன்றி, தெளிவை வெளிக்காட்டவேண்டிய தருணமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்.

இந்நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்கள் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி செய்திருக்கும் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை புவிசார் அரசியல் போட்டிகளுக்கான ஒரு களம் அல்ல. இதனை எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி தெளிவாகக் கூறவேண்டும். எமது நாடு, எமது துறைமுகங்கள் மற்றும் எமது கடற்பரப்பில் எந்தவொரு போர்வையிலும் வெளிநாட்டு இராணுவத்தின் அல்லது உளவுத்துறையின் கூறுகள் இருக்கக்கூடாது.

நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதோ, நீர்த்துப்போகச் செய்யக்கூடியதோ அல்லது கட்டம் கட்டமாக சமரசம் செய்துகொள்ளப்படக்கூடியதோ அல்ல.

எமது பிரத்யேக பொருளாதார மண்டலம், கடல் வழித்தடங்கள் உள்ளடங்கலாகத் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். அவற்றை 'ஒத்துழைப்பு' எனும் பெயரில் முன்வைக்கப்படும் நீண்டகால மூலோபாய விளைவுகளைக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சகல நாடுகளுடனும் இணைந்து செயலாற்றுவோம். ஆனால் எவருடனும் அணிசேர மாட்டோம்.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தை ஒரு 'அமைதி நிலவும் மண்டலமாகப்' பேணுவதற்கு இலங்கை தொடர்ந்து முனைப்புடன் குரலெழுப்பி வருகிறது. இது வெறும் சொல்லாடல் அல்ல. மாறாக இது நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தீர்மானத்தையும் வழிநடத்தும் ஒரு கொள்கையாகும்.

இது பிற நாடுகளின் விவகாரங்களில் சிக்குண்டு தத்தளிப்பதற்கான நேரம் அல்ல. மாறாக இது நாம் உறுதியாக நிற்பதற்கும், எமது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், துணிச்சலுடன் செயலாற்றுவதற்குமான நேரமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/241487

வடக்கு, கிழக்கில் 2500 மீள்குடியேற்ற வீடுகள் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்: ரீ.பீ. சரத்

1 week 6 days ago

வடக்கு, கிழக்கில் 2500 மீள்குடியேற்ற வீடுகள் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்: ரீ.பீ. சரத்

20 Mar, 2026 | 05:36 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இந்த வீடுகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிர்மாணித்து வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண்போம் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ. பீ. சரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனால், நல்லாட்சி காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வன்னி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் முழுமையடையமல் இருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளுக்காக எங்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடொன்றுக்காக இதுவரை காலம் 9 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி இந்த பிரதேச மக்கள் தொடர்பில் விசேட அவதானத்தை செலுத்தி வீடொன்றுக்காக 20 இலட்சம் ரூபாவை வழங்குமாறு கூறியுள்ளார். இதன்படி அந்தத் தொகை வழங்கப்படும்.

அத்துடன் அங்கு 2500 மீள்குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்கவும் எதிர்வரும் 3 வருடங்களில் அந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கில் இந்தப் பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/241499

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!

1 week 6 days ago

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!

21 Mar, 2026 | 10:08 AM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கணவன் - மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கெமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் (20) திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விரிவுரையாளரான பெண், மருமகனின் தாக்குதலின்போது உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், விரிவுரையாளரின் சடலத்தை எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கான தொடர் விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/241537

யாழில் கோர விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் பலி

1 week 6 days ago

யாழில் கோர விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் பலி

Mar 21, 2026 - 11:11 AM

யாழில் கோர விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் பலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி - புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. 

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது. 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmmzwgsp80005356p0iq9ac48

மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!

1 week 6 days ago

மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!

Published By: Vishnu

20 Mar, 2026 | 07:24 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

IMG_2880__1_.jpeg

இந்தத் திட்டத்தால் தங்கள் காணிகளை இழந்துள்ள மக்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதோடு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

IMG_9991__1_.jpeg

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய காணிகளை, அவர்களின் அனுமதியின்றி, உப்பளம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

IMG_2795.jpeg

இந்த முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு, 'மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு' என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

IMG_2849.jpeg

உப்பளம் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும், எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்குமென, அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

IMG_2839__1_.jpeg

கொக்குத்தொடுவாய் பகுதியில் உப்பளத்தை அமைப்பதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதியின்றி 50 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக  காணி உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டுடன் தொடர்பபுடைய , ஆவணங்களையும், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளார்.

உப்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்திற்குள் தனியார் காணிகளும் மேய்ச்சல் தரையும் உள்ளடங்குவதாக நில அளவைத் திணைக்களத்தின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவிடம், சர்ச்சைக்குரிய வகையில் காணிகள் கைமாற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அந்தக் காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுத் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தமது காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, உப்பளம் அமைக்கப்படும் இடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் காணியை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/241514

இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !

2 weeks ago

20 Mar, 2026 | 05:36 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தளம் மாவட்டத்திற்கான தனது விஜயத்தின் போது உடப்பு கிராமத்திற்குச் சென்றார்.

தெற்கு இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அக்கமடம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் முன்னோர்கள் வந்தவர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்கும் இந்த உடப்பு கிராமம், வரலாற்று மற்றும் பண்பாட்டு ரீதியாக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விஜயத்தின் போது, உயர்ஸ்தானிகர் உடப்பு ஸ்ரீ பார்த்தசாரதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ததுடன், கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது, 17ஆம் நூற்றாண்டில் தங்கள் முன்னோர்கள் இலங்கைக்கு வந்து குறித்த பகுதியில் குடியேறியதாகவும், இன்றுவரை தங்கள் பாரம்பரிய மரபுகள் மற்றும் வழக்கங்களை பாதுகாத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், திரௌபதி அம்மன் வழிபாடு மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதிப்புதிருவிழா போன்ற தனித்துவமான பாரம்பரிய வழக்கங்களையும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, உடப்புவ மக்களின் வரலாறு, இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நூற்றாண்டுகள் நீளும் மக்கள்-மக்கள் உறவுகளின் ஒரு முக்கிய சின்னமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு இணைந்து செயல்படுத்தி வரும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டித்வா சூறாவளிக்கு பின்னராக மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் இணைப்பு வசதிகள் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் அனைத்து மக்களும், குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களும் முன்னேறுவதற்காக இந்தியா தொடர்ந்தும் உறுதியாக ஆதரவு வழங்கும் எனவும் அவர் உறுதிபடுத்தினார்.

இந்த விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான பண்பாட்டு மற்றும் மக்கள் மட்ட உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் ! | Virakesari.lk

கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!

2 weeks ago

20 Mar, 2026 | 06:14 PM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை (21) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீட சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக - திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 2026 /2 கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பல்கலைக்கழக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலைப் பீடாதிபதி தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இன்றைய தெரிவின்போது, கலைப் பீட சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.      

கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு! | Virakesari.lk

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது: 13 விசைப்படகுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றல்!

2 weeks ago

20 Mar, 2026 | 05:35 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 53 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 03 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்புகளின் போது, 13 சிறிய ரக விசைப்படகுகள் (டிங்கி) மற்றும் 4 உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், அதிசக்தி வாய்ந்த மின்விளக்குகளைப் பயன்படுத்தல், அனுமதிப்பத்திரமின்றி இரவு நேரங்களில் கடலில் சுழியோடி மீன்பிடித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் விஞ்சுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையகங்களுக்கு உட்பட்ட பின்வரும் பகுதிகளில் இச்சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. விடத்தல்தீவு, சவுத்பார், வங்காலை, புத்தளம், உடப்பு, உடையூர்பதி, வாகரை, கண்டலடி, களுவான்கேணி, பாலாச்சேனை, சவுக்கடி, யாழ்ப்பாணம் மண்டைதீவு, திருகோணமலை, கிண்ணியா, கொக்கிளாய் மற்றும் காலி அக்குரலை கடற்பகுதிகள்.

கைது செய்யப்பட்ட 53 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்புக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படை, மன்னார், புத்தளம், வாழைச்சேனை, மட்டக்களப்பு, மண்டைதீவு, நானாட்டான், கின்னியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகங்களிலும், காலி கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp_Image_2026-03-20_at_17.04.49.jp

WhatsApp_Image_2026-03-20_at_17.04.49__1

WhatsApp_Image_2026-03-20_at_17.04.50.jp

WhatsApp_Image_2026-03-20_at_17.04.51.jp

WhatsApp_Image_2026-03-20_at_17.04.51__1

WhatsApp_Image_2026-03-20_at_17.04.52.jp

WhatsApp_Image_2026-03-20_at_17.04.53.jp

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது: 13 விசைப்படகுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றல்! | Virakesari.lk

இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு

2 weeks ago

20 Mar, 2026 | 05:46 PM

image

தாந்தாமலை நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவரும் வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்து தாயின் குழந்தையும் உயிருக்குப் போராடிய நிலையில் இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்ட தாய் பொலிஸாரிடம் கூறியதற்கிணங்க, சிறிது நேரத்தில் கிணற்றினுள்ளிருந்து சடலமொன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் (வயது 27) தனது இரண்டரை வயது குழந்தையுடன் வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு நேற்று வியாழக்கிழமை (19) சென்ற நிலையில், காணாமல்போயுள்ளார். 

ab90afd2-1975-4466-b5d2-4ff1134fe184.jpg

குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று காலை  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குப் புறப்பட்ட அந்தப் பெண் இரவாகியும் வீடு திரும்பாததால்  உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். பின்னர், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் மாட்டுப்பட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்றுகொண்டிருந்தபோது அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அதனையடுத்து அவர்கள் கிணற்றினுள் பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர், பொலிஸார் உரிய இடத்துக்கு சென்றதையடுத்து, அந்தப் பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அந்த இளம் தாய், கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்குக் கூற, பொலிஸார்  நீதிமன்ற அனுமதியை பெற்று, தடயவியல் பிரிவு பொலிஸாருடன் இணைந்து கிணற்றில் இருந்த அழுகிய சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சுமார் 20 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரின் அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்ட இளம்தாய் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை அந்த இளம்தாயின் குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து  சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வயல் பகுதியில் கைவிடப்பட்டு, அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இளம்தாயிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

19ccf97b-8793-4667-a7ab-5c6c4197fe17.jpg

6df8b1d1-e19a-499c-ab87-ca8b7c9769f1.jpg

இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு | Virakesari.lk

நயினாதீவில் மினி சூறாவளி

2 weeks ago

நயினாதீவில் மினி சூறாவளி

adminMarch 20, 2026

TamilNews2-64.png?fit=900%2C1200&ssl=1

நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால், இறங்குதுறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால், பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை மழை பெய்தது. அதேநேரம், தீவகப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், தீவுகளுக்கான படகு சேவைகள் தாமதமடைந்துள்ளன.

மேலும், நயினாதீவு பகுதியில் வீசிய பலத்த காற்றினால், இறங்குதுறை பகுதியில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருந்த நிழற்கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், மீனவர்கள் மற்றும் படகுப் போக்குவரத்துகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த பகுதிகளில் விழுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகள் மற்றும் தகரக் கூரைகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0-1.jpg?resize=800%2C600&ssl=10-2.jpg?resize=800%2C600&ssl=1

https://globaltamilnews.net/2026/230703/

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr