டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை
பட மூலாதாரம்,GETTY IMAGES
18 மார்ச் 2023
மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன.
தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்?
கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், ஒருநாள் போட்டிகள் அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளின் எல்லை கடந்து கிரிக்கெட்டை பரவலாக்கியதில் ஒருநாள் போட்டிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
ஒருநாள் போட்டி அறிமுகத்தால் டெஸ்டிற்கு நெருக்கடி
நாள்கணக்கில் விளையாடியும்கூட டெஸ்ட் போட்டிகளில் பல தருணங்களில் முடிவு கிடைக்காமல் போகும் அதேநேரத்தில், ஒரே நாளில் வெற்றி, தோல்வியைத் தெரிந்து கொள்ள வழிவகுக்கும் ஒருநாள் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் வரவற்பைப் பெற்றன.
ஒருநாள் கிரிக்கெட்டில், 1975ஆம் ஆண்டு உலகக்கோப்பை அறிமுகமான பிறகு கிரிக்கெட் வெகுவேகமாக இளைஞர்களிடையே பிரபலமாகத் தொடங்கியது.
இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களின் வரவேற்பு குறைந்து போகவே, டெஸ்டின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது உண்டு. இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளை சுவாரஸ்யமானதாக மாற்ற போட்டி நாட்கள் 5ஆக குறைப்பு என்பது போன்ற பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது அதேபோன்றதொரு நெருக்கடி ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு 20 ஓவர் போட்டி அறிமுகம்
2003ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டி20 போட்டிகள் படிப்படியாக பிற நாடுகளிலும் பிரபலமாயின.
2004ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும், 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசிலும் டி20 போட்டிகள் அறிமுகமாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.
இந்தியாவில் ஜீ எண்டெர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் பின்புலத்தில் 2007ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான அமைப்பு சார்பில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) முன்னெடுக்கப்பட்டது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
தோனியை ஜாம்பவானாக்கிய டி20 உலகக்கோப்பை
கிரிக்கெட்டின் புதிய குழந்தையான டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பைப் புரிந்துகொண்ட ஐ.சி.சி. அதே ஆண்டில் முதன் முதலாக டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்தியது.
அப்போதைய இந்திய அணியில் முன்னணி வீரர்களாகத் திகழ்ந்த சச்சின், கங்குலி, டிராவிட் ஆகிய மும்மூர்த்திகளும் ஒதுங்கிக் கொள்ள, தோனி தலைமையிலான இளம் படை யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்று அசத்தியது. அது முதல் தோனி இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக, சச்சினுக்கு அடுத்த ஜாம்பவானாக உருவெடுத்தார் என்பது தனிக்கதை.
2002ஆம் ஆண்டே மாற்றத்தின் அவசியத்தை உணர்த்திய சச்சின்
டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பு, கிரிக்கெட்டின் மற்ற வடிவங்களாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு அச்சுறுத்தலாகிப் போனது.
குறிப்பாக, ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் மீது கேள்விக்குறி விழுந்தது அன்றுதான். ஒருநாள் போட்டிகள் இனியும் வேண்டுமா என்ற பட்டிமன்றம் சர்வதேச கிரிக்கெட்டில் அப்போதே தொடங்கிவிட்டது.
ஒருநாள் போட்டிகள் வேண்டுமா? வேண்டாமா? ஒருநாள் போட்டிகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?
இது போன்ற விவாதங்கள் சூடு பிடித்தன.
ஆனாலும், ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர், 2002ஆம் ஆண்டே ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்தியா - இலங்கை இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி மழை காரணமாக முதல் நாள் கைவிடப்பட, அடுத்த நாளில் மீண்டும் தொடங்கி நடைபெற்ற போதும் அதை முடிக்க மழை விடவில்லை. இதனால், 110 ஓவர்கள் பந்துவீசியும்கூட அந்தப் போட்டியில் முடிவு கிடைக்காமல் போகவே, கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
2002 சாம்பியன்ஸ் கோப்பையுடன் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி, இலங்கை கேப்டன் ஜெயசூர்யா
டி20 வருகையால் கிரிக்கெட் வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு
அப்போதே, ஓவர்கள் குறைப்பு என்பதற்குப் பதிலாக ஒரு நாள் போட்டிகளை நடத்தும் விதத்தில் மாற்றம் செய்யலாம் என்று சச்சின் யோசனை கூறியிருந்தார். இதுகுறித்துப் பல முறை பேசியிருந்தாலும், 2011ஆம் ஆண்டுதான் அலுவல்பூர்மாக ஐ.சி.சி.யிடம் தனது யோசனையை அவர் முன்வைத்தார்.
அப்போதைய ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி லோர்கட்டிடம் கடிதம் வாயிலாக தனது யோசனையை சச்சின் தெரியப்படுத்தினார்.
சச்சின் யோசனை குறித்து ஐ.சி.சி. வெளிப்படையாகக் கருத்து ஏதும் தெரிவித்திராத நிலையில், உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுமே உள்ளூரில் அறிமுகப்படுத்திய டி20 தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின.
பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலரும் கிளப் டி20 போட்டிகளில் விளையாட வசதியாக, மிக விரைவிலேயே தங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரத் தொடங்கினர்.
Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு
பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பால் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி
அவர்களில், 31 வயதிலேயே இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை இங்கிலாந்து கைப்பற்றக் காரணமாகத் திகழ்ந்த அவர், அந்த அணியின் கேப்டனாக புகழின் உச்சியில் இருந்தபோதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
"மிக நெருக்கமான கிரிக்கெட் போட்டி அட்டவணையால் டெஸ்ட், ஒருநாள், டி20 என கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் கவனம் செலுத்துவது இயலாத காரியம், அதிகப்படியான சுமையைக் குறைக்கவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" என்ற பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பு, ஒருநாள் போட்டிகளுக்கான முடிவுரையின் தொடக்கம் என்றே கிரிக்கெட் உலகில் பலரும் கருதினர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
வாசிம் அக்ரம்
ஒருநாள் போட்டி - வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி கருத்து
கிரிக்கெட் வீரர்களின் சுமையைக் குறைக்க ஒருநாள் போட்டிகளை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்தார். இந்திய அணியின் முனனாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியோ, ஒரு நாள் போட்டிகளில் ஓவர்களின் எண்ணிக்கையை 40-ஆகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
டி20 போட்டிகளைப் போல் அல்லாமல், ஆட்டத்தில் பின்தங்கிய ஓர் அணி சுதாரித்துக்கொண்டு மீண்டு எழுவதற்கு வாய்ப்பு தரும் ஒருநாள் போட்டிகள் நீடித்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலியுறுத்தியுள்ளார்.
தோணி, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய இரண்டையும் கைப்பற்றிய இந்திய அணி கேப்டன் என்ற பெருமைக்குரியவர்.
ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் போட்டிகளுக்கு மட்டுமே ரசிகர்கள் வரவேற்பு காணப்படுகிறது. மற்ற அணிகள் மோதும் போட்டிகளின்போது மைதானம் வெறிச்சோடியே கிடக்கிறது. டி20 போட்டிகளின் வருகைக்குப் பின்னர், அதில் நிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் திரில் அனுபவம் ஒருநாள் போட்டிகளில் இல்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது யோசனையை மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். தனியார் விளையாட்டு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது முந்தைய யோசனையை மீண்டும் அவர் நினைவூட்டியுள்ளார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஒருநாள் போட்டியிலும் 4 இன்னிங்ஸ்கள் - சச்சின் யோசனை
ஓவர்களை குறைப்பதற்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளைப் போல ஒருநாள் போட்டிகளையும் தலா 25 ஓவர்களுடன் 4 இன்னிங்ஸ்கள் கொண்டதாக மாற்றவேண்டும் என்பது சச்சின் முன்வைக்கும் யோசனை. இதனால், பிட்ச் சூழல், காலநிலை போன்றவற்றால் டாஸ் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் சாதகம், இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்பதால் போட்டி ஒருதரப்பாக இல்லாமல், இன்னும் சுவாரசியமானதாக மாறும் என்பது அவரது கருத்து.
15வது ஓவர் முதல் 40வது ஓவர் வரையிலும் ஒருநாள் போட்டிகள் எப்படி இருக்கும் என்பது முன்கூட்டியே கணிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது என்பதை சச்சின் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 புதிய பந்துகள் எடுக்கப்படுவதால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஆயுதமே இல்லாமல் போயிருப்பதாகவும், ஐசிசி-யின் புதிய விதிகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும் சச்சின் கூறுகிறார்.
வீசப்படும் ஒவ்வொரு பந்தும் ஒரு கேள்வியைப் போன்றது, அவ்வாறு பந்துவீச்சாளர் முன்வைக்கும் கேள்விக்கு பேட்ஸ்மேன் அளிக்கும் பதிலே கிரிக்கெட் என்கிறார் சச்சின்.
கேள்வியே சுவாரஸ்யமில்லாமல் போனால் ஆட்டம் எப்படி ருசிக்கும் என்கிறார் சச்சின். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, பந்தை எச்சில் கொண்டு துடைக்கக் கூடாது என்று கொண்டு வரப்பட்ட விதியைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சச்சின் யோசனை - ஐ.சி.சி. என்ன சொல்கிறது?
இரு அணிகளும் மாறி மாறி 25 ஓவர் கொண்ட இன்னிங்ஸ்களை விளையாடுவதால் ஆட்டத்தில் எங்கும் தொய்வு இருக்காது. டாஸில் வெல்லும் அணிக்கு மட்டுமே உள்ள சாதகம் குறைந்து, எதிரணியும் போட்டியில் வெல்ல சரிசமமான வாய்ப்பு கிடைக்கும் என்று சச்சின் கூறியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும் ஒருநாள் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கத் தனது யோசனைகளைப் பகிர்ந்துள்ளார். முன்பு போல, முத்தரப்பு கோப்பை, நான்கு நாடுகள் ஆடும் தொடர் போன்றவை நடத்தப்பட வேண்டும் என்பது அவரது யோசனை.
ஆனால் ஐசிசி-யோ, ஒருநாள் போட்டிகளின் முக்கியத்துவம் குறைந்து வருவதாகக் கூறப்படுவதை நிராகரித்துள்ளது. நாடுகளுக்கு இடையிலான போட்டி அட்டவணையில் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை ஆரோக்கியமாகவே இருப்பதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.
https://www.bbc.com/tamil/articles/cg3z9lxllw0o