இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதா்களால் உருவாக்கப்படும் பேரழிவுகரமான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் அவற்றுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தரமுயர்த்தும் நோக்குடன், Montana National Guardஉம், அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும், இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியினை மேற்கொள்கின்றன.
மீண்டெழும் தன்மையுடைய, செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு மற்றும் அனர்த்தங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றினை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் இலங்கை மற்றும் மாலைதீவினைச் சேர்ந்த தமது எதிரிணைகளுடன் 70க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகளும் இரண்டு C-130 Hercules விமானங்களும் பங்கேற்கின்றன.
நகர்ப்புற மற்றும் மருத்துவ தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப்பணி ஆகியவற்றுடன் விமான ஓடுதள பழுதுபார்ப்பு உட்பட ஆறு வகையான பயிற்சிகளை உள்ளடக்கிய Atlas Angel பயிற்சியானது இறுதியாக ஆகஸ்ட் 9ஆம் திகதி இடம்பெறும் ஒரு நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியுடன் நிறைவடையும்.
இப்பயிற்சியில் பங்குபற்றுவோர் உண்மையான அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்குத் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பல்வேறு சூழ்நிலைகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறன்களைப் பரிசீலனை செய்வதற்காகவும் அவற்றை மேம்படுத்துவதற்காகவும் இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரதான பயிற்சியினைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் இலங்கை இராணுவ மற்றும் சிவிலியன் மருத்துவ அலுவலர்களுடன் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் அறிவுப் பரிமாற்ற அமர்வில் அமெரிக்க விமானப்படையினைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொள்வர்.
பேரிடர்களுக்கு பதிலளிப்பதற்கான ஒத்துழைப்பினை பாராட்டிய அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் “பேரிடர்களுக்கு எல்லைகள் எதுவும் கிடையாது மற்றும் உலகம் முழுவதும் ஏற்படும் பேரிடர்களின் எண்ணிக்கையும், அவற்றின் தீவிரமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சேதத்தை குறைப்பதற்கும், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், பிராந்தியத்தில் மீண்டெழும் தன்மை மற்றும் செழிப்பினைப் பேணி வளர்ப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையினை மேம்படுத்துவதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது.
Atlas Angel போன்ற செயன்முறைப் பயிற்சிகள் ஊடாக எங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வதன் மூலம் பேரிடர்கள் ஏற்படும்போது விரைவாகவும் செயற்திறனுடனும் பதிலளிப்பதற்கான சமூகங்களின் திறனை நாம் பலப்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
“Atlas Angel என்பது மொன்டானா மாநில பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய ஒருங்கிணைந்த பயிற்சிகளுள் ஒன்றாகும். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் என்பன தொடர்பான மூலோபாய தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை விருத்தி செய்து பிராந்தியத்தில் கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து பணியாற்றும் தன்மையை ஊக்குவிக்கும் வகையில், விடயம் தொடர்பான நிபுணத்துவ பரிமாற்றங்கள் ஊடாக இலங்கை விமானப் படை மற்றும் Montana National Guard ஆகியவற்றுக்கிடையே அதிக ஈடுபாட்டுக்கான ஒரு சந்தர்ப்பத்தினை இப்பயிற்சி வழங்குகிறது” என இலங்கை விமானப்படையின் கட்டளைத்தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறினார்.
பேரிடர்களை முகாமை செய்வதில் அது தொடர்பான பயிற்சிகளின் முக்கியத்துவத்தினை வலியுறுத்திய Montana National Guardஇனைச் சேர்ந்த துணைத்தளபதி பீற் ரோனெக், “செயற்திறனுடைய பேரிடர் முகாமைத்துவமானது முதலில் பதிலளிப்பவர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு நெருக்கடி நிலைமைகளின்போது தீர்க்கமாகச் செயற்படுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக வலிமையான பயிற்சியில் தங்கியுள்ளது. ஒரு அவசரநிலை ஏற்பட்டால் செயற்படுவதற்கு நாம் அனைவரும் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த வாரம் முழுவதும், பிராந்தியத்திலுள்ள எமது எதிரிணை சகாக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், உருவகப்படுத்தப்பட்ட உண்மையான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது, அவர்களின் நிபுணத்துவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Montana National Guard என்பது முதன்மையாக சிவிலியன் ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்ட பொதுவாக தேசிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் பதிலளிப்பு நடவடிக்கைகள் ஊடாக தமது சமூகம், மாநிலம் மற்றும் தேசத்துக்கு உதவியாக பகுதி நேர அடிப்படையில் இராணுவப் பணியாற்றும் ஒரு குழுவாகும்.
மாநில மற்றும் சமஷ்டி செயற்பணிகளுக்கு உடனடித் தயார் நிலையிலிருக்கும் பயிற்சியளிக்கப்பட்ட படையணிகளை இக்குழு வழங்குகிறது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் மாநில பங்காண்மை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 2021ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு, ஆயுதப்படைகள், மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைப்புகளுடன் இணைந்து பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, மீண்டெழும் தன்மை மற்றும் ஏனைய செயற்திறன் பரப்புகளை மேம்படுத்துகின்ற, இரு தரப்பினருக்கும் பயனுடைய பரிமாற்றங்களை Montana National Guard மேற்கொள்கிறது.
https://www.virakesari.lk/article/190115