17 Sep, 2025 | 06:19 PM

(இராஜதுரை ஹஷான்)
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.இலஞ்ச ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச நிர்வாகத்தில் ஒருசிலர் பழைய பழக்கத்திலேயே இன்றும் உள்ளார்கள்.பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடவத்த –மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை புதன்கிழமை (17)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியாற்றியதாவது,
இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சிடைந்தது. பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் நாடு ஒரு தசாப்த காலத்தை இழக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுவார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பொருளாதார வீழ்ச்சியினால் பல அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டன.கடவத்த –மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகள் அவ்வாறே இடைநிறுத்தப்பட்டது.இதனால் பல நெருக்கடிகள் சமூக கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் ஏற்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்த போது சீன முதலீட்டுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு சீன ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.எமது வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவியளிக்க சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.ஆகவே இலங்கை மக்கள் சார்பில் சீன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டொலர் அலகில் அல்லாமல் யுவான் அலகில் கடன் வழங்கவும், 2.5 -3.5 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தும் போது பொருளாதார நெருக்கடி எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது குறித்தும் ஆராய வேண்டும்.2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட சமூகமட்ட பாதிப்புக்கள் இயற்கையாகவே தோற்றம் பெற்றதல்ல,
பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணிகள் உள்ளன.பொருளாதார நெருக்கடியின் உரிமையாளர்களாகவே ஒட்டுமொத்த மக்களும் உள்ளார்கள்.இலங்கையில் மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார மீட்சிக்குரிய சகல திட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும்.நாட்டில் சட்டவாட்சியை உறுதியாக செயற்படுத்தினால் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்தலாம்.நாட்டில் கடந்த காலங்களில் பெரிய மீன்கள் தப்பித்துக் கொள்வதும் நெத்தலி மீன்கள் அகப்பட்டுக்கொள்ளும் சட்டமே இருந்தது.இந்நிலைமை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவுக்கு உயிர்கொடுத்துள்ளோம்.ஆகவே எவரும் எதிர்பார்க்காத இடங்களில் சட்டம் சென்றுள்ளது.சட்டத்துக்கு மேற்பட்டவர்களாக இருந்தவர்கள் பலர் இன்று சட்டத்துக்குள் உட்பட்டுள்ளார்கள்.
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களின் செயற்பாடு ஆயுதமேந்திய குழுக்களாகவும்,கறுப்பு இராச்சியமாகவும் காணப்படுகிறது.அதிகாரமிக்க இராணுவத்தினரால் பாதாள குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவர்களின் போதைப்பொருட்களை பொலிஸார் விநியோகித்துள்ளார்கள்.பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும்,அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.இதன் விளைவே இன்று பாரிய நெருக்கடியாக தோற்றம் பெற்றுள்ளது.
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
நாட்டில் புற்றுநோய் போன்று காணப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் நாட்டின் அபிவிருத்திக்கு பாரியதொரு தடையாக உள்ளது.கடந்த கால ஊழல் மோசடிகள் முறையாக விசாரிக்கப்படுகிறது. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகத்தை ஸ்தாபித்துள்ளேன்.இருப்பினும் ஒருசிலர் இன்றும் பழைய பழக்கத்தில் உள்ளார்கள்.
ஒன்று பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.இல்லையேல் சேவையில் இருந்து விலக வேண்டும்.இல்லாவிடின் நாங்கள் அவர்களை பதவி விலக்குவோம்.இலஞ்சம் மற்றும் ஊழல் மோடியற்ற கலாசாரத்தை உருவாக்க அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி | Virakesari.lk