விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா.
”தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலிருந்து இலஞ்சம், மற்றும் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி மற்றும் கட்சியின் களனி அமைப்பாளர் பதவிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சுயாதீன வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். இந்நாட்டின் கட்சி அரசியல் என்பது ஊழல், மோசடிகளால் நிரம்பியுள்ளது என்பதை நான் பல தடவைகள் கூறியுள்ளேன்.
கட்சி அரசியல் என்பது ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் மோசடியாளர்கள்தான் கட்சிகளை வழிநடத்தி செல்கிறார்கள். இந்தக் கட்சிகளில் உள்ள பெரும்பாலானோரும் மோசடியாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஏனைய உறுப்பினர்களுக்கு நாட்டை வழிநடத்தும் அளவுக்கு போதிய அறிவும் தெளிவும் திட்டங்களும் கிடையாது. நான் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் இன்று விலகியுள்ளேன். எனினும், எனக்கு வாக்களித்து நாடாளுமன்றுக்கு அனுப்பிய களனி மக்களுக்காக தொடர்ந்தும் சேவை செய்தத் தயாராகவே உள்ளேன்.
நாட்டை வழிநடத்தக்கூடிய சரியான தலைவரை மக்கள் இம்முறை தெரிவு செய்ய வேண்டும்.
இராஜதந்திர ரீதியாக தலைமைத்துவம் வகிக்கக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக நான் பெரும் பங்காற்றியிருந்தேன். எனினும், இந்தக் கட்சியின் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பாக என்னால் திருப்தியடைய முடியாது.
பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு வந்தபோது, நான் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு வலியுறுத்தினோம்.
ஆனால், சிறுபான்மையான உறுப்பினர்களுடன் அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முடியாது என அவர் அதை தட்டிக் கழித்தார். ஆனால், 2015 இல், 44 உறுப்பினர்களுடன் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தோம். அந்த அரசாங்கத்தை ஒரு வருடம் கொண்டும் சென்றிருந்தோம்.
நாட்டில் எல்லாம் சரியான பின்னர், முழுமையான அரசாங்கமொன்றை தானா நீங்கள் பொறுப்பேற்பீர்கள் என்று வினவியிருந்தேன். ஏனெனில், எதிர்க்கட்சி என்றால் வீழ்ந்துக் கிடக்கும் நாட்டை தான் பொறுப்பேற்க வேண்டும். எனினும், இந்த சவாலை அவர் அன்று ஏற்கவில்லை.
பின்னர், நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடந்தபோது, அநுரகுமார திஸாநாயக்க 3 உறுப்பினர்களுடன் போட்டியிட்டிருந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரோ அந்தப் போட்டியிலிருந்தும் விலகினார்.
இறுதிவரை இதில் போட்டியிடுவேன் என்று அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாக்கெடுப்பு தினத்தன்று காலையில் தனது முடிவை மாற்றி டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்தினார். அப்போதே நான், சவாலை ஏற்றுக் கொள்ளாத இப்படியான தலைவர்களால் பயனில்லை என்று நினைத்தேன்.
இப்படியான தலைவர்தான் இன்று பாடசாலைகளுக்கு சென்று பேருந்துகளையும் உபகரணங்களையும் வழங்கி வருகிறார். இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது? பொதுஜன பெரமுனவுக்கு நிதி வழங்கிய கொழும்பின் கெஷினோ வியாபாரிகள்தான் இவருக்கும் நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால்தான் மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பாக மக்களும் சிந்திக்க வேண்டும்.
எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன்.
அதேபோல, நாட்டின் ஊழல் மோசடிகளையும் நான் ஆட்சிக்கு வந்தவுடன் இல்லாதொழிப்பேன். ஒழுக்கமான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஸ்தாபிப்பேன் என்றும் மக்களிடம் இவ்வேளையில் உறுதியளிக்கிறேன்” இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2024/1395250