இல்லையில்ல, நாங்கள்
#JVP இல்ல. நாம்
#NPP” என்று புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் கூச்சல் எழுப்ப தேவையில்லை.
தாம் அடிப்படையில் JVP அங்கத்தவர் என்பதில் பெருமை அடைவதாக JVP தலைவர்களே கூறி வருகிறார்கள். பல போராட்டங்களை கடந்து வந்த அவர்களின் நியாமான பெருமை அதுவாகும். அதில் எமக்கு பிரச்சினை இல்லை.
இன்று NPP/JVPயின் பிரச்சார அணி, தங்கள் பழைய வரலாற்றை அழிக்க அல்லது மறைக்க முயல்கிறது அல்லது தாம் தமது பழைய தவறுகளை இனி செய்ய மாட்டோம் என சொல்ல முயல்கிறது.
சரி, நல்லெண்ண நோக்கில் அவற்றை ஏற்று கொண்டு, அந்த கட்சியை புதிதாக பார்த்து, அவர்களின் புதிய கருத்துகளை கேட்டு, ஒரு கட்சியாக நாம் அரசியல் பரப்பில் முன்னோக்கி நகர்வோம்.
இப்படி “பொசிடிவாக” NPP/JVPஐ கணிப்போம் என்றால் இவர்கள் தங்கள் தங்கள் கறுப்பு வரலாற்றை மறைக்க முயல்வதுடன் எமது வரலாற்றையும் கொச்சை படுத்த முயல்கிறார்கள்.
மகாவம்சத்தில் இருந்து, சமகாலத்தில் JVP உட்பட்ட பெருந்தேசியவாத சக்திகளினால், சிங்கள மக்கள் மத்தியில் 1950களில் இருந்து விதைக்க பட்டுள்ள பேரினவாத சிந்தனை என்பதை திரை போட்டு மறைத்து, மலையக அல்லது ஈழத்தமிழ் மக்களின் இன்று வரையிலான அவல நிலைமைகளுக்கு பிரதானமாக, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளுமே முற்று முழுமையான பொறுப்புகளை ஏற்க வேண்டும் என JVP பிரசாரம் செய்ய முயல்கிறது.
இது ஒரு பலவீனமான பிரச்சாரம்!
தமிழ் மக்கள் அரசியல் பரப்பில் முற்போக்கு அணி, பிற்போக்கு அணி என இரண்டு முகாம்கள் இருக்கின்றன என்பது ஜனாதிபதி அனுரவுக்கும், பிரதமர் ஹரிணிக்கும் மிக நன்றாகவே தெரியும். அவர்களுக்கு தெரியும் என்று
#TPA தலைவர் மனோவுக்கும் தெரியும்.
இது, இன்றைய சில புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். இவர்களை நாம் கணக்கில் எடுப்பதில்லை.
பிற்போக்கு தமிழ் அரசியல்வாதிகளை, ஏன் பிற்போக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளையும்கூட, தமிழ் பேசம் மக்களே உரிய விதத்தில் தோற்கடிப்பார்கள்.
அது தொடர்பில் JVPயின் தடுமாற்றம் அவசியமில்லை. முதலில், JVP சிங்கள பெருந்தேசியவாத பரப்பில் உள்ள இனவாத, கொலைக்கார, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்.
முதலில், JVPயின் கறுப்பு வரலாறு என்ன? இதிலும் கூட பல விஷயங்கள் விட்டு விடுகிறோம். எம்முடன் தொடர்பு பட்ட விடயங்களை மட்டும் பார்ப்போம்.
1) இந்திய ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக பெருந்தோட்ட தமிழ் மக்களை சித்தரித்து காட்டினார்கள். கட்சி தொண்டர்களுக்கான JVPஇன் “பந்தி பஹா” என்ற ஐந்து வகுப்புகளில் இது இரண்டாம் வகுப்பாகும். இந்தியாவை ஏகாதிபத்தியத்தியமாக குறிப்பிடுவதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் அம்சமாக JVP பிரசாரம் செய்ததால், சிங்கள மக்கள் மனங்களில் இனவாத நஞ்சு விதைக்க பட்டது.
2) மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக ஏற்பது விஞ்ஞான பூர்வமாக சாத்தியம் அற்றது என்றார்கள்.
3) ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துகளை JVP தலைவர்கள் கூறி வந்தார்கள்.
4) நாடு தழுவிய அரசியல் அதிகார பகிர்வை ஏற்க மறுத்தார்கள். இன்றுவரை அதிகார பகிர்வு தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள்.
5) அதிகார பகிர்வின் அடையாளமான மாகாணசபைகள் முறைமையையும், சட்ட மூலத்தையும் எதிர்த்து நாடு தழுவிய பெரும் கிளர்ச்சியை செய்தார்கள். பெரும்தொகை மரணங்களை, சேதங்களை விளைவித்த கிளர்ச்சி அதுவாகும். பின்னர் மாகாணசபைகள் தேர்தல்களில் பங்கு பற்றி சபைகளில் வந்து அமர்ந்தார்கள்.
6) மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பாரிய பங்காற்றி, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட மகிந்தவின் கொடூர ஆட்சிக்கு அஸ்திவாரம் போட்டார்கள்.
7) யுத்தம் செய்ய தயங்கிய, ஜனாதிபதி மகிந்தவை யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்குதல்களுக்கு உள்ளாக்கி, ஒரு முட்டாள் கொலையாளி கையில் அரிவாளை கொடுத்து, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட யுத்த கொடுமைகளுக்கும், யுத்தத்தின் பக்க விளைவான, கொழும்பில் நிகழ்ந்த “வெள்ளை-வேன்” கடத்தல், படுகொலை நிகழ்வுகள் உட்பட, வரலாறு காணாத மனித உரிமை மீறல்களுக்கும் முதல் காரணமாக அமைந்து விட்டார்கள்.
யுத்தம் முடிந்த பின்னர் யுத்த வெற்றி பெருமையில், JVPக்கும் பங்கு இருக்கிறது, என சிங்கள மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரம் செய்தார்கள்.
இங்கே, முற்போக்கு பொருளாதார நகர்வுகளுக்காக உலகத்துடன் சேர்ந்து முன்நகர இலங்கை முயன்ற போதெல்லாம், “கற்காலத்தில்” இருந்த JVP எவ்வளவு தடையாக நின்றது என்பதை பற்றி எழுதவில்லை.
இன்று அவர்கள் பொருளாதார கொள்கையிலும் மாறி விட்டார்கள் என்றும் நாம் நம்புவோம். (JVPயின் பொருளாதார தவறுகள் பற்றி அவசியமாயின் இன்னொரு நாள் எழுதுவோம்.)
இன்று தம் பழைய வரலாற்றில் இருந்து NPP மீண்டு விட்டது என்றும், பழைய தவறுகளை அவர்கள் செய்ய மாட்டார்கள் எனவும் நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை!
ஆனால், பழைய வரலாறு என்று ஒன்று இருக்கவே இல்லை என்று காட்ட படும் மலின முயற்சியை கண்டு கொஞ்சம் சிரித்தும் வைப்போம்!