சமூகவலை உலகம்

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்

18 hours 10 minutes ago

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

தனியான ஈழம் இல்லை 

“1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா?

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் | Sinhala Journalist Exposed Balasingham Tamil Eelam

அதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் போகிறீர்கள்” என நான் கேட்டேன்'. அவர் சிரித்துக் கொண்டு, மச்சான் தனியான ஈழம் இல்லை அதற்கு கீழே தான் எமது எதிர்பார்ப்பு என்றார்.

ஆனால் தனி ஆட்சியொன்றை கோரிய அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் வேறு யாராக இருந்தாலும் கற்பனையில் இருந்தனர். மேலும் ஜே.ஆர் மற்றும் பிரேமதாச ஆகியோரும் அவ்வாறே செயற்பட்டனர்.

இந்தியாவை புரிந்து கொள்ளாத ஜே.ஆர் மற்றும் பிரேமதாசா

இந்தியாவுடன் அவர்கள் மென்மையான போக்கை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஈழம் என்ற இராச்சியம் இலங்கையில் ஏற்பட்டால் இந்தியா பல துண்டுகளாக உடைந்து விடும்.

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் | Sinhala Journalist Exposed Balasingham Tamil Eelam

ஆதலால் டில்லி எந்த காலத்திலும் ஈழம் என்ற இராச்சியத்தை விரும்பாது. இதை ஜே.ஆர் அறிந்திருந்தால் ஈழப்போரை சுமுகமாக முடித்திருக்கலாம். ஆனால், டில்லியுடனான இணைப்பை ஜே.ஆருக்கு சரியான முறையில் பேண முடியவில்லை.

இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்'

எனக்கு தெரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், அதாவது இந்தியாவில் ரோவில் பயிற்சி எடுத்தவர்கள், பயிற்சிக்கு போகும் போது முதலில் இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்'அடிக்க வேண்டுமாம். ஏன் இவ்வாறு என அவர்களுக்கு புரியவில்லை.

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் | Sinhala Journalist Exposed Balasingham Tamil Eelam

எனது கருத்து இந்தியாவை, அதாவது டில்லியை இவர்கள் யாரும் நன்றாக புரிந்து வைத்திருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/sinhala-journalist-exposed-balasingham-tamil-eelam-1758106045

ஒரு நல்ல மாற்றம்

1 day 15 hours ago

AVvXsEibKjOyrxW5mGSYz42eGf0Rw7MWq3vP8mOE

எனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது - மருத்துவர்கள் தன்னை டய்ட் உணவு மேற்கொள்ளச் சொல்லியிருப்பதாகவும், குறிப்பாக மாவுச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தியிருப்பதாகவும் சொன்னார். இது ஒரு முக்கியமான நகர்வு - ரொம்ப காலமாக மருத்துவர்கள் இதை ஏற்கத் தயங்கினார்கள். இருபதாண்டுகளுக்கு முன் என் அப்பா புற்றுநோயால் அவதிப்பட்டு இச்சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போது மருத்துவர்கள் கொழுச்சத்து அதிகமான மாமிசம், குறிப்பாக மாட்டுக்கறி, காரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் சொன்னார்களே தவிர மாவுச்சத்துதான் புற்றுநோய் அணுக்களுக்கு தூண்டுதல் அளிப்பது எனும் புரிதல் அவர்களுக்கு இருக்கவில்லை. இன்று மெல்லமெல்ல அந்த இடத்துக்கு மருத்துவர்கள் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இதை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்து மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும். ஏனென்றால் என் நண்பருக்கு முதலில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோதே அவரிடம் டயட் விசயத்தை அறிவுறுத்தியிருந்தால் புற்றுநோயால் முழுக்க பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்.

புற்றுநோய் குறித்து atavistic கோட்பாடு ஒன்றுள்ளது - அதாவது இந்த புற்று அணுக்கள் நம் உடலில் ஏற்படும் கடும் அழுத்தத்தால் அணுக்களின் ஆதி நினைவைத் தூண்டப்படுவதால் தோன்றுபவை என்று. ரெண்டரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியில் உயிர்வளி குறைவாக இருந்த காலத்தில் பெருகியிருந்த ஒற்றை அணு உயிரிகள் காற்றிலி (aneorobic) உயிரிகள் என அழைக்கப்பட்டன. இவை மாச்சர்க்கரையை (குளூகோஸை) உயிர்வளி இன்றி உடைத்து ஆற்றலை உருவாக்கின. ஆனால் உயிர்வளியைக் காற்றில் பெருக்குகிற கிருமிகள் தோன்றி அவை புதுவகையாக (உயிர்வளியைப் பயன்படுத்தி) ஆற்றலை உற்பத்தி பண்ண ஆரம்பித்தன. பழைய ஓரணு உயிரிகள் (உயிர்வளி தேவையற்றவை) அருகிட, அல்லது புதிய வகை கிருமிகளுடன் கலந்து புதுவகையான கிருமிகள் தோன்றிட நம் பிரபஞ்சமே மாறியது. பல்லணு உயிரிகள் தோன்றிப் பெருகி, மனித இனமும் தோன்றிட நமது அணுக்களுக்குள் கிருமிகளின் மரபணுக்கள் உறைந்திருந்தன. இந்த மரபணுவுக்குள் ரெண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான காற்றிலி உயிரிகளின் நினைவுகளும் இருக்கின்றன. எப்போதெல்லாம் நாம் தொடர்ச்சியாக மாவுச்சத்து மிகுந்த துரித உணவுகளை உட்கொண்டும், வேதியல் நச்சுக்களால், மாசுக்களால் பாதிக்கப்பட்டும் உடலைப் படுத்தி எடுக்கும்போது இந்த உடலால் இனிப் பயனில்லை என அணுக்கள் முடிவெடுக்கின்றன. அவை உடனே ஒரு பக்கம் தற்கொலை செய்கின்றன, இன்னொரு பக்கம் அவை வேகமாகத் தமக்குள் பிரிந்து இந்த உடலுக்குத் தேவையில்லாத சுயாதீனக் குழுமங்களாகின்றன. அவையே புற்று அணுக்கள். உடல் அழியுமுன் வேகமாகத் தோன்றி வளர்ந்து அழிவதே அவற்றின் நோக்கம். உதாரணமாக, இந்த புற்று அணுக்கள் மூளையில் தோன்றினால் அவை மூளையின் பணியைச் செய்து உடலுக்கு உதவாது. மூழ்கும் கப்பலில் உள்ள எலிகளைப் போல அவை நடந்துகொள்ளும். சீக்கிரமாகத் தின்று பெருகிவிட்டு தப்பித்து ஓடப் பார்க்கும்.

ஆனால் உயிர்வளியைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி பண்ணும்போது வேகமாக இந்த அணுக்களால் தோன்றவோ வளரவோ முடியாது. அதற்காக இவை காற்றிலி உயிரிகளின் மரபணு நினைவை மீட்டெடுக்கின்றன. அவை பல்லணு உயிரிகளாக அல்லாமல் ஒற்றை அணு உயிரிகளாகத் தம்மைக் கருதிச் செயல்படுகின்றன. உயிர்வளி இன்றியே குளூகோஸைக் கொண்டு ஆற்றலை உற்பத்தி பண்ணுகின்றன. ஆற்றலைக் குறைவாகவே அவ்வாறு பெருக்க முடியும் என்பதால் அவற்றுக்கு மிக அதிகமாக குளோகோஸ் தேவைப்படுகிறது. புற்று அணுக்களில் நாம் காணும் முக்கியமான பண்பு அவற்றில் உயிர்வளி மிகக்குறைவாகவும் குளோகோஸ் அதிகமாகவும் உள்ளன என்பது. இதை 1920களில் ஓட்டோ வார்பெர்க் என்பவர் கண்டறிந்ததால் இது வார்பெர்க் விளைவு என்று அழைக்கப்படுகிறது. முதுமரபை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும் இந்தப் போக்குக்கும் புற்றுநோயின் வளர்ச்சிக்குமான தொடர்பைப் பற்றி இந்த ஆகையால்தான் இப்போது மருத்துவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்ச்சிதை மாற்றம் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையை இன்னும் முழுக்க ஏற்கவில்லை என்றாலும் இது கூட ஒரு கவனிக்கத்தக்க மாற்றம்தான்.

இந்தப் புதிய அணுகுமுறையைக் குறித்து Travis Christofferson எழுதியுள்ள நூலும் (Tripping Over the Truth: The Return of the Metabolic Theory of Cancer) பால் டேவிஸ் பேசியுள்ள கருத்துக்களும் முக்கியமானவை.

வாயைக் கட்டுப்படுத்தி, குடலில் நல்ல நுண்ணுயிர்களை வளர்த்து, சரியாக ஓய்வெடுத்து மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே புற்றுநோய் அருகிவிடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் ஒன்று விரைவில் வரும்.

Posted Yesterday by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/09/blog-post_14.html

@Justin அண்ணை உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.

ஜெர்மனி ICU வில்.

3 days 9 hours ago

ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஜேர்மனி இன்று சேடமிழுக்கிறது.

2017-2025 வரை 1.7 வீத வளர்ச்சி.

உலகிலேயே பெயர்போன தரமான வாகனங்களைச் செய்த ஜேர்மனி இன்று வாகனங்களை இறக்குமதி செய்கிறது.

குறைந்த விலையில் எரிபொருட்களை ரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனி இன்று அதிகவிலை கொடுத்து எரிபொருட்களை வாங்குவதால்

இன்று பல கம்பனிகள் மூடப்படுகின்றன.

இதைப்பற்றிய உண்மை பொய் தெரியவில்லை.

சிறிய வயதிலிருந்தே ஜேர்மனி மீது ஒரு ஆர்வம் இருந்தது.

இங்கிலாந்து மீது வெறுப்பாகவும் இருந்தது.

இந்தக் காணொளி பார்த்ததும் ஏதோ கஸ்டமாக உள்ளது.

ஜேர்மன் வாழ் உறவுகள் ஊரில் வீடுவாசல் இருந்தால் விற்காமல் வைத்திருங்கள்.

இன்னொரு குண்டு என்னவென்றால்

இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.

யாரோ ஒருவர் நெஞ்சை உருக்கிய நிகழ்வு

3 days 17 hours ago

நோய்வாய்ப்பட்டு ஒன்றுக்கும் இரண்டிற்கும் யாருடைய தயைவையோ எதிர்பார்க்கையில் தான்

அஞ்ஞான மேகம் விலகி ஞானத்தின் ஒளி கண்களை கூசச்செய்யும்

வாழ்வின் பிரம்மாண்டங்களை மட்டுமே துரத்தி ஓடியதில்

அர்த்தம் பொதிந்த சின்னஞ்சிறு நொடிப்பொழுதுகளை

நம்மையறியாமலேயே புறக்கணித்தது புலப்படும்

பாவமன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பொன்று வேண்டி மனம் பிரார்த்திக்கும்

பாவம்..

பொம்மைக்காய் அழுத என் குழந்தையை அடித்திருக்க வேண்டாம்

"கால் வலிக்குதுப்பா"

கடைத்தெருவிற்கு கூட்டிச் செல்கையில்

பிள்ளை சொன்னபோதெல்லாம்

தூக்கிக்கொண்டிருக்கலாம்

என் தேவைகளை கேட்டு கேட்டு செய்தவளுக்கு கேட்காமலேயே

அன்போடு ஒரு வேளை

சமைத்து பரிமாறியிருக்கலாம்

ஏதோ ஒரு சண்டையில்

வார்த்தைகள் முற்றிய தருணத்தில்

கையிலிருந்த தண்ணீர் செம்பை

தூக்கிவீசாமல் இருந்திருக்கலாம்

காய்ச்சலில் அவள் கிடந்த நாட்களில் இன்னும் கொஞ்சம்

அக்கறையோடிருந்திருக்கலாம்

பல்லாயிரம் கருத்துமோதல்களில் ஏதாவதொன்றினையாவது அவள் பாதங்களை இதமாய் வருடி

மனதார மன்னிப்பு கேட்டு முடித்திருக்கலாம்

சர்க்கரை கொதிப்பு மாத்திரைகளை அம்மா நினைவுபடுத்தாமலேயே வாங்கிக்கொடுத்திருக்கலாம்

அம்மாவை நினைத்து அப்பா மனதோடு அழுத போதினில் அருகில் அமர்ந்து ஆறுதல் தந்திருக்கலாம்..

அவள் ஊரிலில்லாத நாளில் கஞ்சித்தண்ணீருக்காய்

வாசல் வரை வந்த மாட்டின் மீது கல்லெறியாமல் இருந்திருக்கலாம்

ரயில்பயணத்தில் முன் பதிவு செய்த கீழ்இருக்கையை என்னோடு பயணித்த முதியவருக்கு

விட்டுக்கொடுத்திருக்கலாம்.

கட்டங்கள் பாதகமென யாரோ சொன்னதை நம்பி

உசுரான காதலியை நிராகரிக்காமலிருந்திருக்கலாம்.இதில் யாரோ ஒருவரின்

சாபம் தான் இப்படி பாயோடும் நோயோடும் கிடத்திவிட்டதோ?

புரண்டு படுக்கும் போதெல்லாம்

உறுத்துகிற பாயென இப்படித்தான் ஏதேதோ எண்ணங்கள். ...அலைபாயும்

மீண்டும் வாழ்ந்து கடக்க முடியா தருணங்கள்

நோயைக் காட்டிலும் வேகமாய்க் கொல்லும்

ரோகத்துடனான போராட்டத்தில் அழுத்தும் நினைவுகளோடு போராட தைரியமின்றித்தான் நம்மில் அநேகம் பேர்

உறக்கத்திலேயே உயிர்பிரிய வேண்டுமாய் மானசீகமாய் பிரார்த்திக்கிறோமோ?

நன்றி முக நூல் சியாமளாரமேஷ்பாபு

உயிரை மாய்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை சமூகத்தில் குறைப்பதுதான் எங்களுடைய நோக்கம் - சுமித்ரயோ

5 days 15 hours ago

Published By: Digital Desk 3

10 Sep, 2025 | 09:21 AM

image

சமகால சமூகப் பிரச்சினைகளில் உயிர்மாய்ப்பு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. உயிர் மாய்ப்பு நிகழாத காலமோ சமூகமோ உலகில் எங்கும் இல்லை. உயிர் மாய்ப்பில் ஈடுபடுவதானது ஒரு தனிமனிதனது செயலாகக் காணப்பட்டாலும் அது ஒரு சமூக நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதன்படி ஒரு மனிதன் பிரச்சினையை எதிர்நோக்குகின்றபோது, அப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கத் தெரியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கிறான். இதனால்தான் உயிர்மாய்ப்பு தடுப்பு முறையானது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 

உயிர்மாய்ப்பு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சுமித்ரயோ அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் இருவர் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி வருமாறு............

01.எமது நாட்டில் உயிர் மாய்ப்பு பாதிப்பு எந்த அளவில் உள்ளது?

பொலிஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்திற்கமைய 2022 ஆம் ஆண்டு 3406 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு 09 தொடக்கம் 10 பேர் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தேசிய மனநல நிறுவனத்தின் ஆராய்ச்சியின்  புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் உள்ள சனத்தொகையில் ஒரு இலட்சம் பேரில் 15 பேர் உயிர்மாய்ப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு, 10 பேர் உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வி அடைகின்றாா்கள். இந்த சம்பவங்கள் அவர்களை சார்ந்தவர்களையும் பாதிக்கின்றது.

02.உயிர்மாய்ப்பு நிகழ்வதற்கு காரணம் என்ன?

உயிர்மாய்ப்பு நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை சொல்ல முடியாது. ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டால் ஏன் இவ்வாறு செய்தார் என்பது தான் எல்லோருடைய மனதிலும் எழும் கேள்வி. ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள இறுதியாக என்ன காரணமாக இருந்ததோ அதுதான் காரணம் என்று எல்லோரும் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் அவர் அந்த நிகழ்வு நடப்பதற்கு முதலே அவருடைய உடல், உள, சமூக, பொருளாதார, உறவுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் போன்ற காரணிகளால் அவர் போராடிக்கொண்டு இருந்திருக்கக்கூடும். இவ்வாறு போராடிக்கொண்டிருந்த சூழ்நிலையில் இறுதியாக நடந்த ஒரு நிகழ்வினால் தான்  உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். ஆகவே, நாங்கள் உயிர் மாய்ப்புக்கு, ஒரு காரணம் மாத்திரம் இருக்கலாம் என குறிப்பிடமுடியாது. எல்லோரும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். எல்லோரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பதும் இல்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் இல்லை. ஒரு சிலர் தான் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

அவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்வதற்கு 3 முக்கிய காரணிகள் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

01.பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சமாளிக்கக்கூடிய திறமை எல்லோருக்கும் இருப்பதில்லை.

02.உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கும் குணநலம்.

03.அவர்களுக்கு தெரியாமல் மனநலம் பாதிக்கப்படுதல். பெரிதளவானதோ, சிறிதளவானதோ பாதிப்போடு போராடுவது முக்கிய காரணியாக உள்ளது.

அதை விட வாழ்க்கையில் திடீரென நிகழும் விடயங்கள். நெருங்கிய ஒருவரை அல்லது தொழில், பணம், சொத்து போன்றவற்றை திடீரென இழக்கும்போது அதற்கு அவர்கள் சமாளிக்க முடியாமல் போகும் ஒரு முடிவாக இருக்கலாம்.

03.இவ்வாறான இழப்புகள் இடம்பெறும்போது நாம் என்ன செய்யவேண்டும்? 

யாராவது ஒருவர் ஒரு இழப்பில் இருந்தால் “ஐயோ பாவமே” என குறிப்பிடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அவர்களுக்கு மேலதிகமாக அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு என்ன செய்யலாம்? முக்கியமாக இழப்பு நேரிட்டால் மனதளவில் கஷ்டமான விடயமாகத்தான் இருக்கும். எனவே அதிலிருந்து விடுபட எங்களோடு வந்து கதைக்கலாம்.

இழப்பினால் ஏற்பட்ட வேதனையை தாங்க முடியாமல்தான் அந்த முடிவை எடுக்கின்றார்களே தவிர அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை. அதிலிருந்து தப்பிக்க ஒரு வழியாக செயற்படுகிறார்கள்.  ஒருவர் கஷ்டப்படும்போது ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என கேட்கவேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும்.

04. உயிர் மாய்ப்பை தடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியும். எங்கள் சுமித்ரயோ அமைப்பின் முக்கிய நோக்கமே சமூகத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைப்பது தான்.

ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் இருக்கிறார் என்றால் அவருடன் அக்கரையாக பேசி புரிதலுடன் செவிமெடுத்தால் அவர்களின் மனதிலுள்ள பாரம் குறையும். அவர்களும் பிரச்சினைகளும் ஒரு இருட்டு அறைக்குள் இருப்பது போன்ற எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களுடன் வேறொருவர் பேசினால்  மனதில் இருக்கின்ற அனைத்து சுமைகளையும்  இறக்கியவுடன் அவங்களுக்கே தெளிவு வரும்.  வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரும்.  எங்களை போன்ற அமைப்புகளிடம் அவர்களை தொடர்புபடுத்தி கொடுக்கலாம். அப்படி செய்தால் உயிர் மாய்ப்புகள் தவிர்க்கப்படலாம்.

240594160_4209233385828888_8774060948628

05. உயிர் மாய்ப்பு தடுப்பில் சுமித்ரயோ அமைப்பின் பங்களிப்பு என்ன?

எங்களிடம் வருபவர்கள் பாரிய பிரச்சினைகளை தலையில் சுமந்துகொண்டுதான் வருவார்கள். அவ்வாறான சூழ்நிலைகளில் இந்த பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வும் இல்லாத மாதிரிதான் அவர்களின் மனநிலை இருக்கும். அப்போது நாங்கள் பொறுமையோடு நிதானமாக, எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அவர்களின் கதைகளை  கூறச் சொல்வோம். அதை கூறும்போது அவர்கள் பெரிய ஆறுதல் அடைவார்கள். அப்போது, பிரச்சினை மாறாது. ஆனால் அந்த பிரச்சினையை பார்க்கும் விதம் மாறிவிடும். ஏனென்றால் அவர்களின் கதையை பொறுமையாக செவிமடுக்க, ஒரு தீர்வும் சொல்லாமல் கேட்பதற்கு சமூகத்தில் ஒருவரும் இல்லை. ஆனால் நாங்கள்  அதனைத்தான் செய்கிறோம். நிதானமாக அவர்களின் கதைகளை செவிமடுக்கின்றோம். அது மாத்திரமல்ல, எங்களிடம் வருபவர்களுக்கு நாங்கள் எந்த விதமான அறிவுரையும் கொடுப்பதில்லை. விமர்சனம் ஒன்றும் செய்வதில்லை. அதற்கு ஒரு காரணம் அவர்களின் பிரச்சினைகளை அவர்கள் தான் தீர்க்க வேண்டும்.

ஆனால், நாங்கள் அவர்களின் நிலைவரத்தை விளங்கிக்கொள்ளவும். அந்த நிலைவரத்தை இன்னொரு விதத்தில் பார்ப்பதற்கும், சமாளிப்பதற்கும் நாங்கள் அவர்களுக்கு உதவியாக இருப்போம். ஏனென்றால் அவர்களுக்கு அந்த பிரச்சினைகளுக்கு இன்னொரு முறை கதைக்க வேண்டும் என்றால் எங்களிடம் வரமுடியும்.

எங்களிடம் வருபவர்களின் கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளது. ஆனால், அந்த உணர்வு அந்த நேரத்தில் அவர்களுக்கு அந்த பிரச்சினையை பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களின் தலை உணர்வாக தான் இருக்கும். நாங்கள் அவர்களுடன் கதைக்கும் போது அவர்களின் பிரச்சினை மூலம் உணர்வுகளை விளங்கிக்கொள்கிறோம்.  அவர்கள் கதைக்கும் போது அவர்களின் தலை தெளிவாகும். அதனால் அந்த பிரச்சினையை வேறு விதமாக பார்க்க முடியும். அந்த தெளிவூணர்வுதான் அவ்விடத்தில் நடக்கின்றது.

நாங்கள் அவர்களின் பிரச்சினைகைளை கவனமாக கேட்டுக் கொள்வோம். அவர்களுக்கு எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதால் அவர்களுக்கு ஒரு சுதந்திரம் மற்றும் பாரிய பாரத்தை இறக்கியது போன்ற உணர்வு ஏற்படும்.

எங்களிடம் வருபவர்கள் அவர்களை பற்றி எந்தவொரு விபரத்தையும் சொல்லத் தேவையில்லை. அவர்களின் பெயர் சொல்ல தேவையில்லை. அவை எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை.அவர்கள் சொல்லும் கதைகள் எங்கள் அமைப்பை தவிர வேறு எங்கும் வெளியில் செல்லாது. அதனால் தான் மக்கள் எங்களிடம் வந்து பேசுகிறார்கள்.

07. இவ்வாறு உங்களிடம்  வந்து கதைத்து விட்டு போகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

அவர்கள் சில நேரம் எங்களை விழுந்து வணங்குவார்கள். அதற்கு காரணம் அவ்வளவு தெளிவு கிடைக்கிறது. வருடக்கணக்காக அவர்களுக்கு இருந்த பிரச்சினை மூலம் அவர்கள் அடையும் நிம்மதி வார்த்தைகளால் சொல்ல முடியாது.

08. உயிர்மாய்ப்பு தடுப்பில் சமூகம் எவ்வாறு உதவ முடியும்?

எங்களுக்கு இருக்கிற உணர்வு, பிரச்சினைகள் ஒரு மனநோய் என  எமது சமூகத்தில் பிழையான கருத்து உள்ளது. அது ஒரு பிழையான ஒரு விமர்சனம்.  அது மாற வேண்டும். எங்கள் உடம்பில் நோய்கள் ஏற்படுவது போன்று எங்களின் மனதிலையும் தலையிலையும் நோய்கள் ஏற்படலாம். அப்போது நாங்கள்  உடல் பிரச்சினைக்கு வைத்தியரிடம் போக வேண்டும் என்றால் இதற்கும் யாருடையாவது போய் கதைத்தால் தான் தீர்வு என்றால் அதை ஏன் நாங்கள் ஒரு பாரிய பிரச்சினையாக கருத வேண்டும். அப்படி கருத தேவையில்லை.

கூடுதலாக இந்த பிரச்சினைகளுக்கு காரணம் எங்களுடன் இருப்பவர்கள் எங்களின் கதைகளை கேட்பதில்லை. கேட்பது மாத்திரமல்ல அவர்களின் கதைகளை சரியாக புரிந்து கொண்டு அதற்கு தீர்வு சொல்லாமல் கூர்ந்து கவனிப்பதும் இல்லை. அதனால் அவர்கள் எங்களிடம் வருகிறார்கள்.

அதனால் நாங்கள் சமூகத்துக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் அல்லது உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் சோகமாக இருந்தால் கேளுங்கள். கொஞ்சம் மற்றைய மனிதர்கள் பத்தி யோசியுங்கள். அந்த கேள்வியை கேட்பதால் தெளிவு பெறுவார்கள். கையடக்கத் தொலைபேசி பாவனை மனிதர்களிடம் இருந்து எம்மை தனிமையாக்கும். எங்களுக்கு ஏனையவர்களுடனான தொடர்பு முழுமையாக குறையும். எனவே மனம் விட்டு பேச வேண்டும்.  மனம் விட்டு பேசுவதற்காக சூழ்நிலையை நாங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.  உயிர்மாய்ப்பை தடுக்கக்கூடியது அனைவரின் பொறுப்பு.

09. உயிர்மாய்ப்பு எண்ணம் கொண்ட ஒருவரை அடையாளம் காண்பது எப்படி?

ஒருவர் தங்களை தனிமைப்படுத்த பார்ப்பார்கள். பேசும்போது தனக்கு யாரும் இல்லை. தனிமையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் எந்தவொரு குறிக்கோளும் இல்லாத  மாதிரி, வாழ்ந்து என்ன பிரயோசனம். என்னால் எந்த பிரயோசனமும் இல்லை. நான் உதவாக்கரை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். எவற்றிலும் ஒரு நம்பிக்கை இருக்காது. எதையுமே சாதிக்க முடியாது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நாம் அடையாளம் காணலாம்.

அவர்களை தடங்கல் செய்யும் ஒரு பிரச்சினையை முடிவே இல்லாத பிரச்சினையை திருப்பி  திருப்பி  பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். 

அவர்களுக்கு பிடித்த மற்றும் பொக்கிஷமாக வைத்திருந்த விடங்களை மற்றையவர்களுக்கு கொடுப்பார்கள். 

அவர்கள் வாழ்க்கையை முடித்து  கொள்ள தயார் செய்வார்கள். தற்போது உள்ள பிள்ளைகள் கூகுள் மற்றும் சமூக ஊடகங்களில் எப்படி உயிரை மாய்த்து கொள்ளலம் என்ற தகவல்களை தேடுகிறார்கள்.

அதை பற்றி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் ஏதாவது ஒரு சந்தேகம் எழுந்தால் உடனடியாக சுற்றி இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. என்னது? ஏன் இப்படி செய்கின்றீர்கள்? ஏன் தேடுகின்றீர்கள், என்ன காரணம்? என கேட்டால் போதும். இவ்வாறு அவர்கள் ஒவ்வொரு விடயங்களை செய்வது தனக்கு யாரும் உதவி செய்ய மாட்டாங்களா? என கேட்க வழியில்லை. அவை அனைத்தும் ஒரு வகையான அழுகை. 

10. உயிர்மாய்ப்பு தோற்றுவிக்கக்கூடிய சூழ்நிலைகள் என்ன?

இழப்பு, உறவுகளில் விரிசல், பாடசாலை மாணவர்களால் தாழ்த்தப்படுவதால் மனதளவில் பாதிக்கப்படுதல், கஷ்டப்படுத்துதல், வாழ்க்கையில் தாங்கமுடியாத அதிர்ச்சி தரக்கூடிய  செயல்,  இழப்புகளை தாங்கி கொள்ள முடியாமல் மனதில் வைத்து கொண்டு இருத்தல், நோய்கள், பயம், குடும்பத்தில் ஒருத்தர் உயிரை மாய்த்து கொண்ட சூழ்நிலை இருந்தால் இந்த சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்இவ்வாறான சூழ்நிலைகளில் இருப்பவர்களிடம் அருகில் இருப்பவர்கள் மனம் விட்டு பேச வேண்டும்.

11.சுமித்ரயோ அமைப்பை எவ்வாறு தொடர்பு கொள்வது?

சுமித்ரயோ அமைப்பு  வருடத்தில் 365 நாட்களும் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணிவரைத் திறந்திருக்கும்.(விடுமுறை நாட்கள் உட்பட)

தொடர்பு எண்: சுமித்ரயோ - 011-2692909,011- 2683555,011- 269666

முகவரி : 60பி, ஹோட்டன் பிலேஸ், கொழும்பு 7 (சுமித்ரயோ)

மின்னஞ்சல்: sumithra@sumithrayo.org / sumithrayo@sltnet.lk

இணையத்தளம்: www.sumithrayo.org 

12. சுமித்ரயோ அமைப்பின் சேவைகள் என்ன?

நாங்கள் நட்புடன் செவிமெடுக்கின்றோம் (with friendly). உயிர்மாய்ப்பு தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நாளாந்தம் வாழ்க்கையில் அழுத்தங்கள் அதாவது, உயிர் மாய்ப்பு அல்லாத பல பிரச்சினைகளுக்கு எங்களை நாடி வருபவர்களுக்கு திறன் விருத்தி நிகழ்வுகள் செய்கின்றோம்.

13.சுமித்ரயோ அமைப்புக்கு எந்த வயதுடையவர்கள் வருகை தருகிறார்கள்?

20 வயதுக்கு மேற்பட்டவர்களும் வயது கூடியவர்களும் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது பாடசாலை பிள்ளைகளும் வருகை தருகிறார்கள். அவர்களை பெற்றோர்கள் அழைத்து கொண்டு வருகிறார்கள். உயர் தர மாணவர்கள், புலமை பரீட்சைக்கு தோற்றுவிக்கும் பிள்ளைகளும் வருகிறார்கள். மன அழுத்தத்தில் தூக்குவதில்லை. படிக்கிறார்கள் இல்லை என பெற்றோர் தெரிவிக்கிறார்கள்.  வயது எல்லைகள் இன்றி அனைவரும் வருகிறார்கள். முன்று நான்கு வருடங்களாக சிறுவர்கள் வருவது அதிகரித்துள்ளது. தற்போது கையடக்க தொலைபேசி போன்ற பாவனைகள் அதிகரித்துள்ளமை, படிப்பு, மற்றைய விடயங்களுக்கு நேரத்தை சமாளிக்க அவர்களுக்கு தெரியவில்லை.

https://www.virakesari.lk/article/224278

Sumithrayo-HOTLINE.jpg

உயரத்துக்கு ஏற்ற வீடு; உயர்ந்து நிற்கும் காதல் - நெகிழ வைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

1 week 2 days ago

இந்த மினி தம்பதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மண்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பிரபலமான இந்த ஜோடி, தங்கள் உயரத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டியுள்ளனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்னைகள் குறித்தும் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க விரும்புகிறார்கள்.

#Couple #MiniCouple

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?

1 week 4 days ago

540512615_24570246982571410_179226218314

தேங்காய்க்கு Coconutனு ஆங்கிலத்தில் பேருன்னு எல்லாருக்கும் தெரியும். அது ஏன்னு தெரியுமா?
o 0 o
Coco என்றால் ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் தலை, மண்டை என்று பொருள்.
தேங்காயைப் பார்த்தால் மூன்று புள்ளிகளுடன் ஒரு முகத்தைப்போலத் தோன்றியதால், போர்த்துக்கீசிய நாட்டுப்புற இலக்கியங்களில் வரும் பேயையும் குறிக்கும் கோகோ என்ற சொல்லால் கோகோ நட் எனப் பெயர் வைத்தார்கள். அதுதான் coconut ஆனது.
உலகில் இரண்டு வகை தேங்காய்கள் உள்ளன. ஒன்று இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நிலப்பகுதியில் உருவான தேங்காய். மற்றொன்று பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பகுதியைச் சேர்ந்த தேங்காய். எந்தெந்த நாடுகளில் தென்னை மரங்கள் உள்ளன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். (தெரியாவிட்டால் கூகுளில் பார்க்கவும்.)
இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்துதான் உலகின இதர பகுதிகளுக்கு தேங்காய் பரவியது என்று ஒரு கருத்து நிலவியது. கடல் நீரோட்டத்தின் மூலமும், பயணிகள் மூலமும் பல நாடுகளுக்கும் பரவியது உண்மைதான். ஆனால் இந்திய-பசிபிக் கடலோரத் தேங்காய்களின் டிஎன்ஏவைப் பரிசோதித்தபோது, இரண்டும் வேறு வேறு எனத் தெரிய வந்துள்ளதாம். (இரண்டுக்கும் மத்தியில் உள்ள மடகாஸ்கரில் இரண்டின் கலவையும் உண்டாம்!) ஆக, ஒரே சமயத்தில் உலகில் பல பகுதிகளிலும் உருவாகி வளர்ந்தது தென்னை.
தென்னையின் பயன் யாருக்கும் தெரியாதது அல்ல. தென்னையிளங் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது என்று டிஎம்எஸ் பாடியது முதல், கேஸ்ட் அவே திரைப்படத்தில் தனிமையில் வாடும் நாயகனின் தாகம் தீர்ப்பது வரை தென்னையின் பயன் பரந்துபட்டது. 🙂

Shahjahan R

விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்

2 weeks 1 day ago

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடல் தகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

கட்டுரை தகவல்

  • சம்பத் திஸாநாயக்க & ஷெர்லி உபுல் குமார, கிளிநொச்சியில் இருந்து

  • பிபிசி சிங்கள சேவை

  • 3 செப்டெம்பர் 2025, 01:43 GMT

    புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

''பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் உயிருடன் அல்லவா கையளித்தோம். சடலத்தைக் கொடுக்கவில்லையே'' என கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.

செல்வதுரை கோபிநாத் என்ற அவரது மகன், பள்ளி ஆசிரியராக இருந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றினார்.

சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தருணத்தில் தனது மகனை ராணுவத்திடம் ஒப்படைத்த போதிலும், அவருக்கு என்ன நடந்தேறியது என்பது தொடர்பில் எந்தவிதத் தகவலும் இல்லை என கோபிநாத்தின் தாய் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் இந்தச் சம்பவமானது, நாட்டில் தீர்க்கப்படாதுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பட்டியலில் மற்றுமொரு சம்பவமாகவும் இருக்கக்கூடும்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளின் பிரகாரம், உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அதிகளவானோர் காணாமல் போன நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இராக் முதல் இடத்தில் உள்ளது.

கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் வசித்து வந்த செல்வதுரை கோபிநாத், தனது 27வது வயதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, அவரது தந்தையின் கூற்றுப்படி, கோபிநாத் விருப்பமின்றித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்திகளை வழங்கச் சென்றார்.

மா, வாழை, தென்னை போன்ற மரங்கள் நிரம்பிய தோட்டத்திற்கு மத்தியில் மிகவும் அமைதியான சூழலில் அவரது வீடு அமைந்துள்ளது. நாங்கள் அவரது வீட்டை நெருங்கிய சந்தர்ப்பத்தில், அவரது தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி வரவேற்றார்.

அதன் பின்னர், அவரது கணவர் சுப்ரமணியம் செல்வதுரை எங்களிடம் பேசத் தொடங்கினார். 73 வயதான அவருக்கு, கடந்த ஒரு வார காலமாக காது கேட்கும் திறன் குறைந்துள்ளது.

முச்சக்கரவண்டி (ஆட்டோ) ரிப்பேர் வேலைகளைச் செய்தல், வாகனங்களின் ஆசனங்களுக்கு மேலுறை தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

''எமது மகன் செல்வதுரை கோபிநாத் ஒரு ஆசிரியர். அக்கராயன் மகா வித்தியாலயத்தில் அவர் ஆசிரியராக வேலை செய்தார். அவர் ஆங்கில ஆசிரியர். அவருக்கு ஆங்கலம் நன்றாகத் தெரியும்.''

''நிதர்சனம் என்ற விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேனல் ஒன்று இருந்தது. எனது மகன் 1:15 மணிக்கு விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தியை வாசிக்கச் சொன்னார்கள். செய்தியை வாசிக்க வேண்டும். 10,000 ரூபா சம்பளம் கொடுத்தார்கள்'' என சுப்ரமணியம் செல்வதுரை தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் செல்வதுரை சொல்லும் விதத்தில், தனது இரண்டாவது மகனான கோபிநாத், விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகச் சென்றமையானது, தனது சுய விருப்பத்திற்கன்றி, வேறு மாற்று வழி இல்லாமையே அவர் அங்கு சென்றார் எனப் புரிகிறது.

ஆங்கில செய்தி வாசிப்பாளராகப் பணியாற்ற வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவிக்காத பட்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காகத் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற அச்சத்திலேயே அவர் அதற்கு விருப்பம் தெரிவித்து இருந்ததாக கோபிநாத்தின் பெற்றோர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தனர்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, தாயார் இன்னும் கோபிநாத்தின் டூத்பிரஷை பத்திரமாக வைத்துள்ளார்.

''என்னை இவ்வாறு அழைக்கின்றார்கள் என்ன சொல்வது என்று எனது மகன் கேட்டார். எங்களுக்கு இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதற்கான வழி இல்லை. அதனால், செய்தி வாசிக்குமாறு நான் கூறினேன். அப்படி இல்லையெனில், விடுதலைப் புலிகள் அழைத்து செல்வார்கள்தானே!''

"கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே அவர் ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் மாவீரர் தினத்திற்கான நேரடி ஒளிபரப்பிற்காக முதலில் அவரை அழைத்துச் சென்றார்கள். அவர் செய்தியை மொழிபெயர்ப்பு செய்வார். வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு இந்த இடத்திலிருந்தே அவரை அழைத்து சென்றார்கள்" என்று விவரித்தார் அவரது தந்தை.

"வாகனத்தில் இருவர் வருகை தந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரியவர்கள் என நினைக்கின்றேன். பிரபாகரன் ஐயாவின் நேரடி ஒளிபரப்பை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. போகுமாறு கூறினோம்.''

''பின்னர் 9 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்து இறக்கி விட்டார்கள். அவர் பள்ளிக்குச் சென்று வருவார். அன்றுதான் இது ஆரம்பமானது. நீங்கள் நன்றாகச் செய்தி வாசிக்கின்றீர்கள் என மக்கள் சொன்னார்கள். ஆளுமை நன்றாக இருக்கின்றது என்றார்கள். அதனால் நீங்களே செய்தி வாசிக்க வேண்டும் என்றார்கள்.

அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், எதுவும் செய்ய முடியாது. செல்ல வேண்டும். அழைப்பது பெரியவர்கள், அவர்களுடன் எம்மால் மோத முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதால் போகச் சென்னோம். அதன் பின்னர் 9:15 மணி செய்தியை வாசித்தார். ஒன்பது முப்பது அல்லது 10 மணி போல வீட்டிற்கு வருவார். அவர் வரும் வரை நாங்கள் வீதியைப் பார்த்துக் கொண்டிருப்போம்.''

கடந்த 2009-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ''குண்டுகள் விழ ஆரம்பித்தன. நாங்கள் முள்ளிவாய்க்கால் - வள்ளிபுரம் கிராமத்திற்குச் சென்றோம்.''

கோபிநாத்திற்கு மூத்த மற்றும் இளைய சகோரர்கள் இருக்கின்றார்கள். யுத்தம் கடுமையானதை அடுத்து, சுப்ரமணியம் செல்வதுரை தனது குடும்பத்தினருடன் கிளிநொச்சியை விட்டு வெளியேறி, முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுபட்டு, இந்த குடும்பத்தினர் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வந்துள்ளனர்.

''விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பித்து ராணுவத்திடம் சென்றோம். அவர்கள் எங்களை ஓர் இடத்தில் தங்கச் சொன்னார்கள். அதன் பின்னர் பிரிந்து இருக்குமாறு சொன்னார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நாங்கள் அழுதோம். நாங்கள் அழுது கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ராணுவத்தினர் வந்து மகன்கள் இருந்தால் வருமாறு கூறினார்கள். ஏன் வரச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னால் அதை விவரிக்க முடியவில்லை, கவலையாக இருக்கின்றது'' என செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி கூறினார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, "எங்கள் மகனுக்கு என்ன ஆனது எனச் சொல்லுங்கள். நாங்கள் அவனை உயிருடன்தானே கொடுத்தோம், சடலமாக அல்லவே!" என்று அவர் சற்று சீற்றத்துடன் கேள்வியெழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக வேலை செய்தமையால், எனது மகனை பலரும் அடையாளம் கண்டு கொண்டிருந்தனர் என்பதாலேயே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம் என கோபிநாத்தின் தந்தை தெரிவிக்கின்றார்.

''நான் தப்பு செய்யவில்லை. அம்மா எந்தவித பொய்யையும் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்' என்று அவர் எந்நேரமும் சொன்னார்'' என அவரின் தாய் கூறுகின்றார்.

''மகன் பள்ளியில் தங்கியிருப்பார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வருவார். வெள்ளிக்கிழமை வருகை தந்து மாலை 6 மணியளவில் செய்தி வாசிப்பதற்காகச் செல்வார். இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வருவார். வாரத்தில் இரண்டு தினங்கள் மாத்திரமே செய்தி வாசிப்பதற்காக அவர் செல்வார்.''

''அம்மா என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது என அவர் சொன்னார். அப்பாவுக்கு கண் தெரியவில்லை என அவர்கள் வந்தால் கூறுங்கள். அதையும் செய்து, இதையும் செய்ய முடியாது எனச் சொல்லுங்கள். நாங்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு தொகையை அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்லுங்கள். எமது சம்பளத்தில் ஒரு தொகையைத் தருகின்றேன். வேறு ஒருவரை எடுக்குமாறு கூறுங்கள்'' என்று அவர் கூறியதாகவும் தாயார் கூறினார்.

அதோடு, ''முள்ளிவாய்க்கால் செல்லும் வரை அவர் எம்முடனேயே இருந்தார். எமது மகன் தவறு செய்யவில்லை என பேருந்தில் ஏறும்போது சொன்னேன். மகனும் தகவல்களைச் சொன்னார்.''

"எனது மகன் தவறு செய்யவில்லை என ராணுவத்திடம் நான் சொன்னேன்.''

''இல்லை, இல்லை. அவரிடம் தகவல்களைப் பெற்றதன் பின்னர் அனுப்புவோம் என அவர்கள் கூறினார்கள்.'' 'இவரிடம் தகவல்களை பெற வேண்டும் என மற்றுமொருவர் கூறினார்.''

''இல்லை, இல்லை அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்து கையளிப்போம். எதுவும் செய்ய மாட்டோம். பயப்பட வேண்டாம். உங்கள் மகனை நாங்கள் அனுப்புவோம் என்று சொன்னார்கள்''

''அதன் பின்னர், "அம்மா அழுக வேண்டாம். அடையாள அட்டையைத் தாருங்கள். சென்று வருகின்றேன் அம்மா. அழுக வேண்டாம் அம்மா' என்று எனது மகன் சொன்னார். பேருந்தில் ஏறும்போதும் சென்று வருகின்றேன் என்றார்.''

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, கோபிநாத்தின் தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷினி, எங்களை வீட்டிலுள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, கோபிநாத் பயன்படுத்திய பொருட்களைக் காட்டினார்.

தனது மனதில் ஏதோ ஒருவித சந்தேகத்தில் வாழ்கின்ற போதிலும், தனது மகன் இன்னும் வாழ்கின்றார் என்ற பெரும் நம்பிக்கையுடன் வாழ்வதாகவே பத்மா பிரியதர்ஷனி. ''மகன் இருக்கின்றார் என்று நம்புகின்றேன். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.''

ராணுவம், போலீஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில் சோர்வடைந்த இந்தப் பெற்றோர், ஜோதிடம் பார்க்கும் இடங்களுக்கும் சென்றுள்ளனர். இந்தியாவில் உள்ள ஜோதிடம் சொல்லும் கோவிலுக்குக் கூட சென்றுள்ளனர்.

அவர்கள் மாத்திரமன்றி, அவர்கள் தேடிச் சென்ற ஜோதிடர்கள்கூட, தனது மகன் உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ள போதிலும், அவர் தொடர்பில் இன்று வரை எந்தவிதத் தகவலும் இல்லை என சுப்ரமணியம் செல்வதுரை கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

கோபிநாத்தின் தாயான பத்மா பிரியதர்ஷனி எம்மை வீட்டின் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று, தனது மகனின் பொருட்களைக் காண்பித்தார்.

''எனது தங்க நகைகளை விட்டுவிட்டு, எனது மகனின் பொருட்களை மீண்டும் எடுத்து வந்தேன். இது அவர் பயன்படுத்திய பொருட்கள்'' கூறியவாறு பெட்டியொன்றைத் திறந்து எமக்குக் காண்பித்தார்.

வலுவான உடல் கட்டமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட பழைய படமொன்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்ட அவரது தாய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஏனைய இளைஞர், யுவதிகள் தொடர்பிலும் கவலை தெரிவித்தார்.

''படலந்த தொடர்பில் சொல்லும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது. எமது பிள்ளைகளுக்கும் ஏதேனும் நடந்தேறியிருக்கும் என நினைத்துக் கவலையாக இருக்கின்றது.''

''யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் எமது பிள்ளைகளை உயிருடன் கையளித்திருந்தோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரே நாங்கள் அவர்களைக் கையளித்திருந்தோம். அவர்கள் என்ன கூறி அழைத்துச் சென்றார்கள்? தகவல்களைப் பெற்று மீண்டும் அனுப்புவதாகச் சொன்னார்கள் அல்லவா? அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். எமது பணமோ காணியோ ஒன்றுமே வேண்டாம். பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள். உயிருடன் கையளித்தோம். சடலத்தைக் கையளிக்கவில்லை அல்லவா!'' என உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசினார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

'கவலையில் இருக்கும் தந்தை'

வேறொரு முகாமில் இருந்த தனது நெருங்கியவர்கள், தனது மகனைக் கண்டுள்ளதாகக் கூறுகிறார் கவலையில் இருக்கும் தந்தை.

''ராமநாதன் என்ற பெயரில் முகாமொன்று இருந்தது. பெரும்பாலானோருக்கு எம்மை நன்றாகவே தெரியும் அல்லவா? உங்களின் மகனைக் கண்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். நன்றாக இருக்கின்றார். தண்ணீர் எடுக்கும் குழாய் அருகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கறுப்பு நிற கால் சட்டை அணிந்திருந்தார். நான்கு பேர் இருந்தார்கள். கையில் காயம் இருந்தது எனக் கூறினார்கள். சிறு குழந்தை ஒன்றும் அதேபோலக் கூறியது. நான் மாமாவை கண்டேன் என்று சொன்னது'' என்கிறார் அவர்.

அதன் பின்னர், இந்தக் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாமில், வெளியில் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டதை அடுத்து, உறவினர்களைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரத்தை பெற்று கோபிநாத்தின் தந்தை முகாமை விட்டு வெளியில் சென்றிருந்ததாக அவரது தந்தை கூறினார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், தான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், வவுனியா - மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் வெள்ளை நிற வேன் ஒன்றில் நான்கு பேருடன் தனது மகன் நின்று கொண்டிருந்ததை அவதானித்ததாக சுப்ரமணியம் செல்வதுரை தெரிவிக்கின்றார்.

அவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என சுப்ரமணியம் செல்வதுரை கூறிய போதிலும், அதைச் சுயாதீனமாக எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

பேருந்தில் இருந்து இறங்கி அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அந்த இடத்தில் இருந்து குறித்த வேன் வெளியேறியிருந்ததாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

''அநுராதபுரம் சிறைச்சாலையில் கோபிநாத் என்ற நபர் ஒருவர் இருக்கின்றார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. நான் அங்கு சென்றேன். அவர் இல்லை. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர்'' என கோபிநாத்தின் தந்தை கூறினார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

'ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும்'

''மகன் இருக்கின்றார் என்று அனைவரும் கூறுகின்றார்கள்''

''மகன் வருவார் என்று உயிர் இருக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். மகனின் எந்தவொரு பொருளையும் அழிக்கவில்லை. நான் அனைத்து இடங்களுக்கும் அதை எடுத்துச் சென்று, இங்கு கொண்டு வந்துள்ளேன். எனது தங்க நகைகளையும் கைவிட்டுவிட்டேன். மகனின் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகளைக் கொண்டு வந்தேன். அவரது டுத் பிரஷையும் கொண்டு வந்தேன். பாதணியையும் கொண்டு வந்து வைத்துள்ளேன்.''

''நாங்கள் ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும். அவரிடம் இவ்வாறு இருப்பதைக் கதைக்க வேண்டும். எத்தனை ஜனாதிபதிகள் பதவிக்கு வந்த சென்றுள்ளார்கள்? ஆனால் எங்களுக்கு விடுதலை இல்லை. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் ஒரு முடிவு தேவைப்படுகிறது. எதுவும் நடக்கவில்லை.''

''நான் மாத்திரம் இதைக் கதைக்கவில்லை. அனைவரும் கையளிப்பதாகச் சொல்லிச் செல்கின்றார்கள். நாங்கள் வந்தவுடன் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று இந்த ஜனாதிபதி கூறினார், கதைப்பதாகவும் கூறினார். ஆனால், இன்னும் கதைக்கவில்லை. அவர் பதவிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கதைக்கவில்லை.''

''எங்களுக்குப் பணம் தேவையில்லை. எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? உயிருடன் நாங்கள் கையளித்தோம்'. அம்மா என்று சொல்லி, அடையாள அட்டையைப் பெற்றுச் சென்றார்.''

''அவர் சாப்பிடும் உணவுகளை நாங்கள் வீட்டில் சமைக்க மாட்டோம். அவர் நினைவு வரும் என்பதற்காகவே சமைப்பது இல்லை.''

'பெற்றோர் என்பதை வைத்துக்கொண்டு மாத்திரம் பதில் சொல்ல முடியாது'

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள இந்தத் தருணத்தில், வடக்கில் மாத்திரமன்றி, தெற்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பானவர்களின் அரவணைப்பின்றி கவலையுடன் வாழந்து வருகின்றனர்.

முழு அளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் நிர்க்கதி ஆகியுள்ளதுடன், பகுதியளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வை முன்னோக்கிக் கொண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், சில தரப்பினர் எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி, தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஊடக பிரதானி தயா மாஸ்டர் மற்றும் சர்வதேச நிதி தொடர்பான பிரதானியாகக் கடமையாற்றி கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆகிய விடுதலைப் புலிகளின் முன்னிலை செயற்பாட்டாளர்கள், சட்டக் கட்டுப்பாடுகள் இன்றி இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்" என்கிறார் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே. (கோப்புப் படம்)

இவ்வாறான பின்னணியில் ராணுவத்தின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கோபிநாத்திற்கு என்ன நடந்தது? அவர் ராணுவம், குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு ஆகிய நிறுவனங்களின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டாரா என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தோம்.

இதன்படி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வருகை தந்து ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செல்வதுரை கோபிநாத் தொடர்பில் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகேவிடம் பிபிசி சிங்கள சேவை முதலில் வினவியது.

அதற்கு அவர், ''பெற்றோர் கூறுகின்ற விதத்தில் மாத்திரம் தன்னால் பதில் கூற முடியாது. எம்மிடம் ஒப்படைக்கப்பட்டாரா? நாங்கள் பொறுப்பேற்றோமா? என்பது தொடர்பில் தகவல் இல்லை'' என பதிலளித்தார்.

''ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் புனர்வாழ்வு அளித்தோம். ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் போகவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.

'ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'

அவ்வாறான 15,000 திற்கும் அதிகமானோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

''ராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'' என்று கூறுகிறார் அவர்.

''அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் தேவை எமக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்.''

''முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ராணுவத்தில் இணைந்து கொண்டு கடமையாற்றினார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியிருந்தனர்.''

''அவர்கள் சுயவிருப்பத்துடன் ராணுவத்தில் இணைந்து கொண்டார்கள். புனர்வாழ்வின் பின்னர் எம் மீது எழுந்த நம்பிக்கை காரணமாக அவர்கள் எம்முடன் இணைந்தார்கள்.''

''எம்மிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் ஆக்கப்பட்டதாக எந்த வகையிலும் குற்றச்சாட்டு இல்லை.''

''அந்தப் பெற்றோர் சொல்கின்றமை தொடர்பில் இதையே கூற வேண்டும். நாங்கள் பொறுப்பேற்ற அனைவருக்கும் உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். எம்மிடம் தற்போது யாரும் இல்லை'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பதில்

செல்வதுரை கோபிநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் நாயகம் மிரான் ரஹீமிடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.

பிபிசி சிங்கள சேவை வழங்கிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி அலுவலக அதிகாரிகளை கோபிநாத்தின் தந்தையுடன் தொடர்புபடுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, அடுத்தகட்ட விசாரணைகளில் இந்தச் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'உலகில் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 2வது இடம்'

இந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 29வது அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளது.

இதற்கு முன்னர் சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கானோர் உண்மை மற்றும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அதிகளவில் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது. முதலாவது இடத்தில் இராக் உள்ளது.

வலிந்து அல்லது தன்னிச்சையாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவில், இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளின் பிரகாரம், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் 6,264 வலிந்து காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 1980ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களாகக் குறைந்தது 60,000 முதல் 100,000 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை கணிப்பிட்டுள்ளது.

கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஆகியவற்றில் தண்டனைகளின்றி மீறியுள்ளதுடன், சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெற்ற கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், சிறுவர்கள் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டமை போன்ற மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgngr9d8zro

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர், அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள்.

2 weeks 3 days ago

541458093_1352205133137951_6524796394563

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்
கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வல்வை மண்ணின் மகத்தான புதல்வன், சந்நிதியான் அருளில் திகழும் தொண்டர், “அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்” எனப் புகழப்படும் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நாளை (31.08.2025) தனது 76ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
🌺 சந்நிதியான் சுவாமியின் பணி
பெரியபுராண நாயன்மார்களின் வழியில், “அடியார்க்கு அமுதூட்டல் தான் உயர்ந்த தர்மம்” என்ற கருத்தை வாழ்வின் கடமையாக ஏற்று நிற்கும் மோகன் சுவாமி, 1989 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில் சந்நிதியான் ஆச்சிரமத்தை நிறுவினார்.
அன்று தொடங்கிய அந்த தர்மம் இன்றும் 37ஆண்டுகளாக, வருடம் 365 நாட்களும், தினம் மூன்று வேளையும் அன்னதானமாக தொடர்கிறது...
சந்நிதிக்கு வரும் அடியவர்கள் எவரும் பசியோடு செல்லக்கூடாது எனும் உயரிய சிந்தனையில் சந்நிதியான் ஆச்சிரமத்திலிருந்து அன்னதானப் பணியை அரும்பணியாக செய்து வருகிறார்.
அன்னதானப்பணியுடன் நின்று விடாது சந்நிதியான் ஆச்சிரமம் ஊடாக பல சமூக, சமய பணிகளையும் ஆற்றுகின்றார்.
65 முதியோருக்கு உடை, உணவு, மருத்துவம்,
கல்விக்கான உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணங்கள்,
சமூக நலத்திற்கான வீடமைப்பு, கிணறு அமைப்பு, மருந்து வழங்கல் என பரந்து விரிந்த அறப்பணிகளின் பெருங்கடலாக வளர்ந்து நிற்கிறது.
தன்னடக்கம் மிக்க தொண்டர்
அவரை எவ்வளவு பாராட்டினாலும், சுவாமி தன் வாக்கில் தாழ்மையுடன் –
“நான் ஒன்றும் செய்யவில்லை; சந்நிதியான்தான் செய்கிறான்; நான் வெறும் கருவிதான்” என்று கூறுவர்.
இத்தகைய தன்னடக்கமே அவரை அடியார்க்கு அடியார் என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
🌺 சைவக் கலாச்சாரச் சேவைகள்
1992 இல் தொடங்கிய சைவகலை பண்பாட்டுப் பேரவை,
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைவ நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.
1998 முதல் மாதந்தோறும் வெளிவரும் “ஞானச்சுடர்” ஆன்மிகச் சஞ்சிகை ஆயிரக்கணக்கானோரின் இல்லங்களுக்குச் சென்று சந்நிதியான் அருள்வாக்கினை பரப்பி வருகின்றது.
இந்தச் சேவைகளின் இயக்குனர் கலாநிதி மோகனதாஸ் சுவாமி.
🌺 மலையகத்திற்கான கரம் நீட்டல்
2014 அக்டோபர் 29 மீரியப்பொத்த மண்சரிவு மலையக உறவுகளை சோகத்தில் ஆழ்த்தியபோது, முதலில் உதவிக்கரத்தை நீட்டியவர் மோகன் சுவாமி.
அதன்பின் பதுளை, கெக்கிராவ, முல்லைத்தீவு என எங்கு துயரம் ஏற்பட்டாலும் அங்கு அவர் ஆச்சிரமத்தோடு விரைந்து சென்று உணவு, மருந்து, கல்வி, வாழ்வாதார உதவி வழங்கும் பணியில் முன்னிலை வகித்து வருகிறார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
அவரது தொண்டுகளை உலகம் பாராட்டியதன் சின்னமாக,
அமுதவாரிதி விருது,
அறப்பணி அரசு விருது,
சமூகச் சுடர் விருது,
2017 இல் இந்தியப் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்,
2018 இல் யாழ்ப்பாண மாநகரசபையின் “யாழ் விருது”
என பல கௌரவங்கள் அவரை அணிந்துள்ளன.
ஆனால் மக்களின் நம்பிக்கையே மிகப்பெரிய விருது என்று கருதுபவர் தான் மோகன் சுவாமி.
வாழ்த்துப் பிரார்த்தனை
“சமயம் என்பது சமூக நலனாகவே வெளிப்பட வேண்டும்” என்பதை தன் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டும் வள்ளல் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வுடன், அடியார்க்கு அமுதளிக்கும் அறப்பணியில் பல்லாண்டு சிறக்க சந்நிதியான் அருள்புரியப் பிரார்த்திப்போம்.
(நன்றி பாபுஜி)

நம்ம யாழ்ப்பாணம்

நல்லூர் தேர்திருவிழாவில் பணப்பையை பறிகொடுத்த வெளிநாட்டு பெண்

3 weeks 3 days ago

கோவிலுக்கு வந்த ஒரு மணி நேரத்துக்கிடையில் தனது பணம், கிரடிட் காட் போன்ற பெறுமதியான பொருட்களை திருடர்களிடம் இழந்த வெளிநாட்டுப்பெண் சமூகவலைத்தளத்தில் அதைப் பதிவு செய்துள்ளார். https://www.facebook.com/reel/9991376287630968

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன? - சட்டம் வழங்கும் தண்டனையும் அதற்கான தேவையும்

3 weeks 6 days ago

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகான தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை (குறியீட்டு படம்)

கட்டுரை தகவல்

  • அபினவ் கோயல்

  • பிபிசி செய்தியாளர்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது கடுமையான பாலியல் குற்றங்களில் ஒன்று. டிஜிட்டல் என்ற வார்த்தையின் காரணமாக, பலர் இது ஆன்லைன் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றம் என்று நினைத்துக் கொள்கின்றனர், ஆனால் உண்மையில் இதன் பொருள் முற்றிலும் மாறுபட்டது.

கடந்த சில ஆண்டுகளில், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றில் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் நாள் புதன்கிழமை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கௌதம் புத் நகர் மாவட்ட நீதிமன்றம், 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

2014ஆம் ஆண்டு இதுபோன்ற வழக்கு ஒன்றில் டியூஷன் ஆசிரியரின் உறவினரான பிரதீப் குமார் என்ற நபர், நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமை செய்பவர்களைத் தண்டிக்க நாட்டில் விரைவு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன (குறியீட்டு படம்)

2021 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி சாகேத் நீதிமன்றம், பிரதீப் குமார் என்ற நபரே குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்போது, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது.

தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால், "இப்போது தண்டனையின் அம்சத்திற்கு வருகிறேன். மேல்முறையீடு செய்தவர் சம்பவம் நடந்த நேரத்தில் நான்கு வயதுடைய ஒரு சிறுமியை 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' செய்ததைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றம் அவருக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது" என்று கூறினார் .

டெல்லி உயர் நீதிமன்றம் பிரதீப் குமார் குற்றவாளி என்பதை உறுதி செய்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

NCRB, பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, NCRB தரவுகளின்படி, 2018-2022க்கு இடையில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 27 முதல் 28 சதவிகித வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்)

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன?

லத்தீன் வார்த்தையான 'டிஜிட்டஸ்' என்பதிலிருந்து, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பதில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் என்ற சொல் வந்தது.

'டிஜிட்டஸ்' என்றால் விரல். விரல் என்றால் அது கை விரலாகவோ அல்லது கால் விரலாகவோ இருக்கலாம்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், ஜோத்வானி அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவருமான திவ்யா சிங், "டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சிறுமியின் அல்லது பெண்ணின் அனுமதியின்றி அவர்களுடைய அந்தரங்கப் பகுதிகளில் விரல் அல்லது வேறு எந்தப் பொருள் மூலம் துன்பம் விளைவிப்பதை குறிக்கும் பாலியல் குற்றமாகும்" என்று கூறுகிறார்.

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை, ஆயுள் தண்டனை, தண்டனை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சட்டத்தின்படி, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம் (குறியீட்டு படம்)

பாலியல் வன்கொடுமைக்கும் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைக்கும்' உள்ள வேறுபாடு

அந்தரங்க உறுப்புகளை பயன்படுத்தப்படாமல் செய்யப்படும் பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது கடினமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் சட்ட நுணுக்கங்களை சாக்குப்போக்காகச் சொல்லி தப்பித்துவிடும் நிலை இருந்துவந்தது. ஆனால், 2012ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கிற்குப் பிறகு, பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டன.

"2013க்கு முன்பு, ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தி செய்யப்படுவது மட்டுமே பாலியல் வன்கொடுமையாகக் கருதப்பட்டது. பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் விரல் அல்லது வேறு எந்தவொரு பொருளையும் செருகுவது, பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை தொடர்பானது) என்பதற்குப் பதிலாக, பிரிவு 354 (பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்) அல்லது பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) ஆகியவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்பட்டது" என்று பிபிசியிடம் பேசிய திவ்யா சிங் கூறினார்.

"இந்த வழக்குகளில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படாததால் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவாகவே இருந்தது. ஆனால் நிர்பயா வழக்கிற்குப் பிறகு, சட்டம் மாற்றப்பட்டது. குற்றவியல் சட்ட (திருத்தம்) சட்டம், 2013 மூலம், ஐபிசியின் பிரிவு 375இல் பாலியல் வன்கொடுமைக்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

"இப்போது டிஜிட்டஸ் (விரல்) ஊடுருவல் கூட, தெளிவாக பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது, எந்த கருணையும் காட்டப்படுவதில்லை" என்று திவ்யா கூறுகிறார்.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) அமலுக்கு வந்ததன் மூலம், ஐபிசி சட்டப் பிரிவு 375, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63 என மாற்றப்பட்டுவிட்டது.

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பாலியல் வன்கொடுமைக்கான வரையறையை இன்னும் விரிவானதாக மாற்ற, 'ஊடுருவாத செயல்' (non-penetrative acts) என்பதும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது (குறியீட்டு படம்)

தண்டனை வழங்கல்

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63Bஇன் கீழ் கடுமையான பாலியல் குற்றமாகும்.

இதுபோன்ற வழக்குகளில் தண்டனை வழங்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64இன் கீழ் வகை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க பிஎன்எஸ் சட்டப்பிரிவு 65(2) வகை செய்கிறது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும் விதிக்கப்படலாம். இதைத் தவிர, அபராதமும் விதிக்கப்படலாம்.

பாரதிய நியாய சன்ஹிதா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 2023ஆம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்று பெயர் மாற்றப்பட்டது

காவல்துறை நடவடிக்கை

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்குகளில், காவல்துறையினர் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். தடயவியல் மாதிரிகள் எடுத்து, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசும் வழக்கறிஞர் திவ்யா, "பல சந்தர்பங்களில் மருத்துவ அறிக்கையில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இல்லை என்று எழுதப்படுவது வழக்கை பலவீனப்படுத்துகிறது. ஆனால் சட்டத்தின்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருக்க வேண்டியது அவசியமில்லை."

"ஆண்குறியை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தாமலேயே பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்பதையும், அதற்கும் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு வழங்கப்படும் அதே அளவிலான கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை சமூகத்தில் பரப்ப வேண்டிய அவசியம் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள் சந்திக்கும் பாதிப்புகள்

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்குகளில் ஏற்படும் மன மற்றும் உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவை பிற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உள்ளதைப் போன்றது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் கூறுகிறார்.

"பல நேரங்களில் மக்கள் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில்லை, ஆனால் சட்டத்தின்படி, அது பாலியல் வன்கொடுமை மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63இன் கீழ் வருகிறது" என்று அவர் கூறுகிறார்.

"பாலியல் கல்வி என்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமல்ல, வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். சரியான தொடுகை, தவறான எண்ணத்தில் தொடுதல் என்ன போன்றவற்றை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்" என்கிறார் காமினி ஜெய்ஸ்வால்.

"இதுபோன்ற குற்றங்களை சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg0r6jz7ddo

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.

4 weeks 1 day ago

536280651_1342221374136327_3455018282553

536274554_1342221257469672_1192542487522

534601150_1342221544136310_5161841896817

535895511_1342221540802977_8591363453382

அண்மைக் காலமாக சிறிய ரக கார்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகுவதையும் பட்டா ரக கூடாரம் அடித்த சிறிய ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுவதையும் உயிர்ச்சேதம் உருவாகுவதையும் அவதானித்திருப்பீர்கள்.

இந்த விடயத்தினை கொஞ்சம் ஆழமாக அவதானித்தால் இன்னொரு விடயத்தினையும் புரிந்து கொள்வீர்கள்.

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள் பல வீதியைவிட்டு விலத்தி கடலுக்குள் பாய்தல் , வீதியோரம் அடித்து விபத்துக்குள்ளாகுதல் , சிறிய பட்டா ரக மற்றும் சின்ன கண்டர் ரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகுதல் அதிகம் பதிவு செய்யப்படுகின்றது.

இந்திய தயாரிப்பிலான இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் இந்த "சோப்பு டப்பா" என்று பலர் அழைக்கின்ற வலுக்குறைந்த சின்ன கார்கள் பல பாரம்/ எடை குறைந்தவை. ஒரு கார் அல்லது வாகனம் அதிக வேகத்தில் தெருவில் பிரயாணிக்கும் போது அது தெருவோடு ஒட்டி பற்றிபிடித்தவாறு செல்லகூடியவாறே பல பிரபல கார் நிறுவன கார் தயாரிப்புக்கள் இருக்கும். அதன் எடை அதிகமாக இருக்கும் எனவே அதன் நிறை புவியை நோக்கி அதன் புவியீர்ப்பு மையத்தினூடாக ஈர்க்கப்பட்டு அதிக வேகத்திலும் பாதையினை விட்டு விலகி செல்லாது தெருவில் பற்றி பிடித்தவாறு பயணிக்கும்.

ஆனால் இந்திய சோப்பு டப்பா போன்ற சின்ன கார்கள்( எந்த ரகம்-brand என்று உங்களுக்கே தெரியும்) அதிக எடை இல்லாதவை . அவற்றினால் மத்திய அளவான வேகத்திலேயே ( medium Speed) தெருவை பற்றிப்பிடித்தபடி பயணிக்க முடியும். அவை மணிக்கு 70-80 கிலோமீற்றர்(70km/hr - 80km/h) வேகத்தினை விட அதிக வேகத்தினை பெறும் போது அவற்றின் எடை குறைவு காரணமாக வளியோட்டடத்தில் அவை நிதானமிழந்து பறப்பது போன்ற உணர்வை பல சார்திகள் உணர்ந்திருக்கலாம்.

அதாவது எடைபோதாமை காரணமாக அதிக வேகத்தில் ஆடி அசைவது போல உணர்வீர்கள். உதாரணமாக எடை குறைந்த காட்போட் மிதமான காற்றில் சும்மா இருந்துவிட்டு காற்றோட்டம் அதிகரிக்க அவை காற்றின் திசைக்கேற்றது போல இழுத்து பறந்து செல்லப்படுதல் போன்ற நிகழ்வுகளை நினைத்து பாருங்கள்.

அதுபோல தான் இந்த இந்திய சிறிய வாகனங்கள் தம்மால் ஈடுகொடுக்கமுடியா வேகத்தினை அடையும் போது அவற்றின் எடை தெருவோடு சேர்ந்தியங்க முடியாமல் போக வளியோட்டத்தில் காற்றின் பக்கம் ஓர் பக்கம் இழுத்து செல்லப்படும். இதன்போது பாதையோரம் சென்று மோதலாம், அல்லது பாதையின் அருகே /எதிரே செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்தடையலாம். இதனால் பாரிய விபத்துக்களும் உயிர் சேதங்களும் ஏற்படும்.

அதுபோலவே இந்த பட்டாரக வாகனங்களும் .

அவை சின்ன சின்ன பொருள் எற்றி இறக்க பயன்படுத்த சிறிய ரக கன்ரர் வாகனம் போல தயாரிக்கப்பட்டவை . அவற்றினை வாங்கி ஓடும் இளசுகளை தெருவில் பார்த்தால் ரொக்கற்று வேகத்தில் தான் ஓடுவார்கள். அந்த வாகனத்தின் எடை அதிக வேகத்தினை தாங்காத நிலை வரும் போது பாதையில் இருந்து விலகும்/ மோதும்/ தூக்கி வீசப்படும்.

இப்படி அதிக எடையற்ற வாகனங்கள் அதிக வேகத்தினை பெறும்போது மிதத்தல் நிலையினை அடைவதனால் அருகே / எதிரே இன்னொரு பெரிய டிப்பரோ / லொறியோ/ பேருந்தோ அதிக வேகத்தில் போகும் போது இந்த ரக வாகனக்கள் ஆட்டம் காணும், இழுத்து கொண்டு செல்வது போல் இருக்கும் அதை அனுபவித்தவர்கள் உணர்வீர்கள்.

அதோடு விஞ்ஞான ரீதியாக இன்னொன்று!

இந்த பட்டா ரக சின்ன வாகனங்களை பயன்படுத்துவோரை பார்த்திருப்பீர்கள். அந்த வாகனம் தயாரித்து இறக்குமதி செய்து சந்தையில் விற்கும் தோற்றத்தில் யாரும் ஓடுவதில்லை(Original Appearance) பலர் வாங்கிய பின் பின்னுக்கு பெட்டி போல கூடாரங்களினை உலோகம் கொண்டு மேலதிக இணைப்புக்களினை பொருத்துவார்கள். இவை வாகனம் தயாரிக்கப்பட்டபோது வாகனத்தில் இருந்த "புவியீர்ப்பு மையத்தினை" (Gravitational point )வெகுவாக மாற்றியமைக்கும். உருவத்தினை மாற்றி அமைத்தபின் அவர்கள் அந்த வாகனத்தின் கொள்ளளவு தாங்குதிறனுக்கும் (carrier Capacity) அதிக எடையில் பொருட்களை ஏற்றிசெல்லும் போதும் வாகனத்தின் புவியீர்ப்பு மையம் வேறொறு இடத்துக்கு இடம்மாறுகிறது.

இவற்றையெல்லாம் கணிக்காத அனுபவமில்லாத சாரதிகள் அதிக வேககத்தில் பிரயாணிக்கும் போது வாகனம் இழுத்து செல்லப்படும்/ மோதும்/ குடைசாயும் இவற்றால் பாரிய விபத்துக்கள் உண்டாகும்.

அதைவிட இன்னொன்று இந்த சிறிய கார்கள், பட்டா ரக வாகனங்கள் வளைவான பதைகளில் பயணிக்கும் போது சாரதி அதற்கேற்ற வகையில் வேகத்தினை கட்டுபடுத்தி சீராக வளைவில் திருப்ப வேண்டும். இல்லையேல் "மைய நீக்க விசையினால்" அது பாதையினை விட்டு விலத்தி மோதும், தூக்கி வீசப்படும், விபத்துக்குள்ளாகும்.

இன்றைய பல விபத்துக்களுக்கு பல அனுபவமில்லா இளைய வாகனவோட்டிகளும், பந்தா காட்டி முறுக்கி ஓடும் சாரதிகளும் , வாகனத்தின் விஞ்ஞான தன்மை அறியாத சாரதிகளும் கூடியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதைவிட முன்னனுபவம் இல்லா தெருக்களில் அதிக வேகத்தில் ஓடும் போது திடீரென வளைவு வரும் போது அவர்களினால் வேகத்தினை கட்டுபடுத்த முடியாமல் விபத்தடைகின்றன.

முன்னையகாலங்களில் வடக்குமக்கள் பலரும் யப்பான் ரக வாகனங்களினை விரும்பி வாங்கி தலைமுறை தலைமுறையாக பாவித்தமைக்குரிய காரணங்களில் ஒன்று நீண்டகாலம் பாவிக்கும் என்பதற்கப்பால் அவற்றின் எடை , அவற்றின் புவியீர்ப்பு மையம் எந்த வேகத்திற்கும் இடம்மாறமல் இருத்தல் போன்ற பல காரணங்கள் உண்டு. இதனால் அன்றிருந்த சீரில்லாத தெருக்களிலேயே லாவகமாக ஓட்டி சென்றார்கள்.

ஆக எல்லா விபத்துக்களிற்கும் பெரிய ரக வாகனங்களினை குறைகூறி அவர்களை பிடித்து அடிக்காமல் சிறிய ரக வாகனங்களின் விஞ்ஞான கோட்பாடுகள் மற்றும் சாரதிகளின் மிதவாத அனுபவமில்லா சாரத்தியம் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இது ஒரு வீதியில் பெண்பிள்ளை விபத்தடைந்தால் அது வாகனத்தினை செலுத்திய பெண்ணில் தான் பிழையாக இருந்தாலும் இடித்த மற்றைய ஆணின் மேல் தான் அனைவரும் வசைபாடிபேசுவார்கள் அதுபோல தான் இந்த சிறியரக பெரியரக வாகன மோதல் நிலைகளும் அமைகின்றன.

ஆக எந்த வாகனமாக இருந்தாலும் அது துவிச்சக்கரவண்டியாக இருந்தாலும் ஏன் நடந்து பயணிப்பவராக இருந்தாலும் அனைவருமே அவதானத்துடனும் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் பயணிப்பதனாலேயே எல்லா விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் கட்டுப்படுத்தலாம்.

மதுசுதன்.

18.08.2025

நம்ம யாழ்ப்பாணம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு.

1 month ago

534674702_122207535356114056_40637011722

533137714_122207535452114056_59152263858

நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு. 🙏
இலங்கையின் மிக உயரமான அசையும் கட்டுமானம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறம். ஆங்கிலேயரின் குறிப்பேடுகளில் தகவல் லண்டன் அருங்காட்சியகத்தில் ஆவணங்கள்.


நல்லூரானின் சப்பறம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே கட்டப்பட்டு வருகின்றது. அக்காலத்தில் இலங்கையின் உயரமான அசையும் கட்டுமானம் என்று ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. அக் குறிப்பேடுகள் இப்போதும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன.


ஒருமுறை வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் தர்மகத்தா வைத்திலிங்க செட்டியாரும் அவரது மனைவியும் நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர். அப்போது வைத்திலிங்கச் செட்டியாரின் மனைவி செட்டியாரிடம் ஒரு குறுணி வேலுக்கு இந்தளவு பெரிய சப்பறம் தேவையா? என்று கேட்டுள்ளார்.

இருவரும் திருவிழா முடிந்து வீட்டுக்கு சென்று தூங்கும் போது இருவர் கனவிலும் சிறிய வேல் மிகப் பிரமாண்டமாக சப்பறத்திற்கு மேலாக வானளாவ காட்சி கொடுத்ததாம். மறுநாள் நல்லூர் ஆலய அறங்காவலர் ரகுநாத மாப்பாண முதலியாரைச் சந்தித்து விடயத்தை சொல்லி சப்பறத் திருவிழா உபயத்தை தமக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க ரகுநாதரால் வைத்திலிங்கச் செட்டியாருக்கு சப்பற திருவிழா உபயம் வழங்கப்பட்டது.

அதற்கு பிரதிபலனாக ஏராளமான நிலபுலங்களை எழுதிவைத்ததோடு முருகனை அலங்காரம் செய்வதற்கு ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாக வைத்திலிங்கச் செட்டியார் கொடுத்தார். அதன்பின் மிக நீண்டகாலம் வைத்திலிங்க செட்டியார் பெயரிலேயே சப்பறத் திருவிழா நடைபெற்று வந்தது.

ஆரம்பகாலத்தில் நல்லூர் சப்பறம் நூற்று முப்பது அடியாக கட்டப்பட்டதாக குறிப்புக்கள் உண்டு. 1977 ம் ஆண்டு சப்பறம் முறிந்தது. அதன் பின்னர் சப்பறத்தின் உயரம் நூறு அடிகளாக குறைக்கப்பட்டது. 1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாகவும் நல்லூர் வீதி மாற்றியமைத்தமை காரணமாகவும் யாழ்ப்பாணக் கோட்டை சண்டை காரணமாக சில வருடங்கள் சப்பறம் இழுக்கவில்லை.

அதன் பின்னர் 1999 ம் ஆண்டு மீண்டும் பெரிய சப்பறம் இழுக்கப்பட்டது. பின் வீதியின் அகலம் போதாததால் சப்பறப் படல்கள் குறைக்கப்பட்டு சப்பறத்தின் உயரம் 80 அடியாக குறைக்கப்பட்டது. பழைய சப்பறச் சகடை பழுதடைந்ததன் காரணமாக 2021 ம் ஆண்டு புதிய சப்பறச் சகடை செய்யப்பட்டது.

வேல் பெருமானுடைய ழுழுத் தோற்றத்தையும் சப்பறத்தின் மேல் பகுதியில் உள்ள கண்ணாடியில் காணமுடியும்.
கீழே உள்ள ஓவியம் ஆங்கிலேயர் காலத்தில் கைகளால் வரையப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறத்தின் பென்சில் ஓவியம். தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழா எதிர்வரும் 20.08.2025 புதன்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதி - வீர செங்குந்தர் மரபு

Babu Babugi

தமிழர்கள் மீதான இன அழிப்பு தற்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக நீட்சி பெற்றுள்ளது - ரவிகரன்

1 month ago

15 AUG, 2025 | 04:42 PM

image

தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு சந்திப் பகுதியில் நேற்று (14) நடைபெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சோகமயமான ஒரு தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றுகூடியிருக்கிறோம்.

குறிப்பாக, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் கண்ணீர் சொரிந்து சோகத்தை வெளிப்படுத்தி, கொடூர செஞ்சோலைப் படுகொலை நினைவுகளுடன் இருக்கின்றீர்கள். நாமும் அந்த கொடூர படுகொலையின் கனத்த அந்த நினைவுகளைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம்.

ஏற்கனவே நாம் குறித்த விமானத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அஞ்சலிகளைச் செலுத்திவிட்டுத்தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளோம். 

1000479515.jpg

உலகில் மிகக் கொடூரமான தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட இராணுவங்களில் இலங்கை இராணுவமும் ஒன்றாகும். 

வெள்ளைச் சீருடையோடு கல்வி கற்கச் சென்ற எமது பிள்ளைகளின் மீது விமானம் குண்டுமழை பொழிந்தது. எமது பிள்ளைகளின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்து சிவப்புச் சீருடையாக மாறியிருந்த கோலம், உடல்கள் சிதறிக் கிடந்த நிலைமை, இத்தகைய கெடூரமான சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது. 

இந்தக் கொடூரம் இடம்பெற்றும் 19 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுது தமது சோகத்தை வெளிப்படுத்துகின்றபோது, இந்தக் கொடூர படுகொலை இன்றளவும் எந்த அளவிற்கு மனங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றது என்பதை நன்கு உணரமுடிகின்றது. இது என்றுமே மறக்கமுடியாத ஆறாத வலியாகும். 

1000479514.jpg

இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வருடம் முழுவதும் தமிழ் இனப் படுகொலையை மேற்கொண்டது. அவ்வாறு இராணுவத்தால் தமிழினப் படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளும் ஆதாரங்களும் தற்போது தாயகப்பரப்பின் பல்வேறு இடங்களிலுமிருந்தும் வெளிப்பட்டுவருகின்றன. 

எமக்கான விடிவு கிடைக்கவேண்டுமென்ற நோக்குடனும், தமிழ்த் தேசிய இனமான நாங்கள் எம்மை நாமே ஆட்சி செய்யவேண்டுமென்ற நோக்குடனும் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்திக்கொண்டிருந்த எம்முடைய தலைவனின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை உலக நாடுகள் இணைந்து அழித்த வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும். 

தற்போது தமிழர்கள் நாங்கள் நலிவடைந்தவர்களாக, அடிமைகளாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. 

தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதுவுமில்லை என்ற நிலையாகிவிட்டது. கடலிலே தொழில் செய்யமுடியாத நிலைமை, ஆறு மற்றும் குளங்களில் தொழில் செய்ய முடியாத நிலை, வயலில் தொழில் செய்யமுடியாத நிலையென எமது தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டுள்ளனர். 

1000479513.jpg

எமது தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. 

குறிப்பாக வனவளத் திணைக்களத்திடம் மாத்திரம் 4,32,486 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் 2,22,006 ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு 2 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கிறது. 

இவ்வாறு அரச திணைக்களங்களால் எமது தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் முடக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் பெருமளவானோர் தாயகப் பரப்பிலிருந்து புலம்பெயர்ந்து செல்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறாக தாயகப்பரப்பில் தமிழர்களின் பெருக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலைமைகளும் ஏற்படுகின்றன. 

அந்த வகையில் கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழின அழிப்புக்கள் நடத்தப்பட்டன. தற்போது தாயகப் பரப்பிலுள்ள எமது தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. 

1000479511.jpg

கடந்தகால அரசாங்கங்கள் மிக அதிகளவில் ஆக்கிரமிப்புக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை. எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படும் எனக் கூறுகிறார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை. 

அந்த வகையிலே தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம். இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றோம். 

குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷ பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கிறோம்.

எனவே, தமிழ்த் தேசிய இனத்தின் மீது இன அழிப்பு நடத்திய, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடத்தியவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலைச் செய்கின்ற காலம் வரும். உரிய தீர்வு கிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம்.

படுகொலைகளின் போதும் எமக்கான விடுதலைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கும் தொடர்ந்தும் அஞ்சலிகளைச் செலுத்துவோம் என்றும் அவர்களை நினைந்திருப்போம் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/222624

பத்தோடு பதினோன்றாக மாறிய இலங்கை விவகாரம்.

1 month ago

ஆணையாளரின் முன்னோடி அறிக்கை வெளியானது

*** **** *** ****

*2015 ஆம் ஆண்டு போன்று 2025 இலும் அதே நகர்வு...!

*அநுர அரசாங்கம் மீது நம்பிக்கை....

*உள்ளக விசாரணைக்கே முன்னுரிமை.....!

*தமிழர் விவகாரம் பத்தோடு பதினொன்றாக மாறியது.

*ICC யில் இலங்கை இணைந்தால் பழைய குற்றங்கள் கைவிடப்படும்.....

- --- ------ ---

ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் 12 திகிதியிட்ட பதிப்பிக்கப்பட்டிராத முன்னோடிப் பிரதி ஒன்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் பிரதி ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரதியாகும்.

இதற்கேற்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள திட்டம் எதிர்வரும் நாட்களில் அல்லது வாரங்களில் தெரியவரும்.

ஆணையாளரின் 16 பக்க அறிக்கைய தொனிப்பொருள் என்ன என்பதைப் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது.

அதாவது, 2015 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் - மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவோடு இணைந்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றிய 301 தீர்மானம் போன்ற ஒரு நிலைமை 60 ஆம் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுவதற்கான நிகழ்தகவு, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 இல் ஏற்படலாம் என்ற கற்பிதம் தொனிக்கிறது.

ஜேவிபி என்பிபி எனப்படும் புதிய அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறல் விவகாரம் முழுவதையும் இலங்கையிடம் இருந்தே ஆணையாளர் எதிர்பார்க்கிறார்.

இது வடக்கில் என்.பி.பி எனப்படும் ஜேவிபிக்கு வாக்களிக்கும் நிலைக்கு மக்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இட்டுச் சென்றதன் நேரடி விளைவு ஆகும்.

அத்துடன் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court, ICC) இலங்கை இயல்பாகவே இணைவது நல்லது என்ற கோணத்திலும், இலங்கை கடந்தகால குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக புதிய முன்னேற்றங்கள் அமையும் என்ற வியூகத்திலும் அறிக்கையின் உள்ளடக்கம் பொதிந்துள்ளது.

இதை நான் ஏற்கனவே செய்தி உளவியல் தன்மையின் பிரகாரம் ஊகித்துச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இலங்கை செய்ய வேண்டிய பொறுப்புக் கூறல்கள் தொடர்பாக சிறிய சிறிய விடயதானங்கள் அடங்கிய பரிந்துரைகள் இம்முறை எண்ணுக்கணக்கில் அதிகளவாக அறிக்கையின் முடிவுரையில் காணப்படுகின்றன.

ஆனால், கடந்தகால அறிக்கைகளிற் பலவற்றில் குறைந்த எண்ணுக்கணக்கில் ஆனால் கடுமையான விடயதானங்கள் கையாளப்பட்டிருந்தது போன்று இம்முறை அனுப்பப்பட்டுள்ள அறிக்கை அமையவில்லை.

மாறாக புதிய அரசாங்கத்தின் மீது ஒரு மென்போக்கையே அது வெளிப்படுத்துகின்றது.

ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.

அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.

புதிய அரசாங்கம் என ஆiணாயளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனிவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை.

ஆகவே, புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் எந்தப் புள்ளியில் இருந்து வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது!

பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction) விசாரணை முறை கூட பயனற்றது. அதாவது போர்க்குற்றவாளி எனப்படும் நபர் வெளிநாடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு வைத்து விசாரணை நடத்துவது.

இத் திட்டம் சர்வதேச விசாரணை முறையும் அல்ல.

ஆனால் இத் திட்டம் பற்றிய நம்பிக்கையை ஆணையாளர் பிரஸ்தாபித்துள்ளார்.

இதன் காரண - காரியமாவே பொது நியாயாதிக்கம் என்பதை தமிழர்கள் தமது கோரிக்கையாக முன்வைக்கக்கூடாது என்ற கருத்துருவாக்கம் தமிழ்ப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்க காலத்தில் நிலைமாறுகால நீதி என்று மார் தட்டி நம்பி எதுவுமே நடக்காத ஒரு பின்னணியில், எந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிலும் புதிய அரசாங்கம் என்று ஆணையாளர் சித்தரித்து நம்பிக்கை வைக்கிறார்?

போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும், அதற்கான சர்வதேச விசாரணைகள் எனவும் முன்னைய அறிக்கைகளில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டிருந்தனர்.

ஆனால் -----

இம்முறை மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன என்ற கருத்தையும், பொறுப்புக்கூறலுக்கு இதுவரை இலங்கை ஒத்துழைக்காவிடினும், இனியாவது ஒத்துழைக்கவேண்டும் என்பது போலவும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படாமை பற்றியும் ஆங்காங்கே எடுத்தியம்பும் இந்த அறிக்கை பற்பல சிறிதும் பெரிதுமான குற்றச்சாட்டுகளை மாத்திரம் அறிக்கையில் முன்வைக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றிய தெளிவான பரிந்துரைகள் அறிக்கையில் இல்லை.

விசேடமாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை கோருவதாகத் தமிழ்த் தேசிய பேரவை கூறியிருந்தபோதும், அந்த விடயங்கள் அல்லது தமிழ்த் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கடிதம் அனுப்பியமை தொடர்பான எந்த ஒரு பதிவும் அறிக்கையில் இல்லை.

அது ஏற்கனவே ஆணையாளர் அனுப்பியிருந்த பதிலோடு கரைந்து போய்விட்டது போலும்.....

உண்மையில் இன அழிப்புக்கான நீதியை மையப்படுத்தி அந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியப் பேரவை வரைந்திருக்கவில்லை. அதனாற்தான் அதை இலகுவாகத் தட்டிக்கழிக்க முடிந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் என்று தொடங்கிய ஆணையாளரின் அறிக்கையிடல், தற்போது மனித உரிமை நிலைமை என்று குட்டிச் சுவராகியுள்ளது.

கடந்த கால சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பத்தோடு பதினொன்றாகிவிட்டது.

இம்முறை அறிக்கையின் தாக்கம் குறைவடைந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் பற்றியதாகவும் மக்களின் ஜனநாயகப் பாதுப்பு என்ற தொனியிலும் அமைந்துள்ளது.

ஆணையாளர் கடந்த யூன் மாதம் இலங்கைக்கு வந்தபோது யாழ் செம்மணி மனிதப் புதைகுழியையும் பார்வையிட்டிருந்தார்.

இதை அறிக்கையில குறிப்பிட்டபோதும், இதை ஓர் இன அழிப்புக்கான குற்றங்களில் ஒன்றாக அவர் எடுத்தாளவில்லை.

அதேநேரம்----

ஆணையாளர் எதிர்ப்பார்ப்பது போன்று ஐசிசி இல் இலங்கை இணைந்தாலும், 2002 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆண்டுக்கும் இடையான குற்றங்களை அதன் அடிப்படையில் அது விசாரிக்காமல், எதிர்காலத்தில் நிகழக்கூடிய குற்றங்களைத் தண்டிக்கும் உரிமையை வழங்குவதாகவே இலங்கை வாக்குறுதி அளிக்கும்.

ஆகவே -----

இதுவா பொறுப்புக்கூறல்...? இதுவா சர்வதேச நீதி...?

இதனை நம்பி கடந்தகாலக் குற்றங்களை மறப்போம் மன்னிப்போம் என நல்லிணக்க அடிப்படையில் நீக்கம் செய்து விட்டு இலங்கை ஐசிசி இல் இணைந்த காலத்தில் இருந்து நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றி மாத்திரமே விசாரணைகள் நடைபெறலாம்.

ஆகவே ஈழத்தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்படப் போகின்றனர் என்ற முடிவுக்கே வர வேண்டும். தேசிய இனப் பிரச்சினை விவகாரம் கூட பத்தோடு பதினொன்றாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இங்கே கேள்வி என்னவென்றால்--

1) 2012 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்டு வரும் தீர்மானங்களை இந்த ஆணையாளர் வாசிக்கவில்லையா?

2) அல்லது கவனிக்கவில்லையா?

3) அல்லது மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணியாற்றுகிறாரா?

அரசு அற்ற இனங்களுக்கான நீதி என்பது புவிசார் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே அமைகின்றது என்பதற்கும், தமிழர் பிரதிநிதிகள் இறுதி நேரத்திலும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பது ஆணையாளருக்கு இப்படியான அறிக்கைகளை முன்வைக்க இடமளிக்கிறது என்பதற்கும் இந்த அறிக்கை சிறந்த உதாரணம்....

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid0p9oEGWQhJAXzxYzrRLe3ZnpWRQTW5gEhDK1kUT6kpsncrj8nLuVmPXnAdMkVmp3Al/?mibextid=wwXIfr

ஊருக்கு... "கொலிடே" போறேன்.

1 month ago

sri-lanka-3-9827.gif

ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய்
கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும்
இல்லையோ வானாவது பிடிக்கணும்
வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில்
இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும்
போகேக்க விமான நிலையத்திலும்
போய் இறங்கி விமான நிலையத்திலும்
போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும்
படம் பிடித்து கட்டாயம் போடணும்

சொல்லீட்டும் தான் நான் போனாலும்
சப்பிரைஸ்சா தான் போறன் என்று
சனத்திற்கு நல்லா படம் காட்டணும்
ஜட்டியை விட கொஞ்சம் பெருசா
காற்சட்டை ஒன்றை கொழுவணும்
கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும்
தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும்
கையில் ஒரு தண்ணிப் போத்தல்
கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ்
தலையில ஒரு தொப்பி கட்டாயம்

முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை
முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ
ஒரு காசுப்பையை தொங்க விடணும்
கையில கொஞ்ச மோதிரம் கைச் சங்கிலி
கழுத்தில வடம்போல சங்கிலிகள்
கடைசிவரை பூட்டாத சேட் மேல் பட்டன்
கையை அகட்டியபடி ஒரு நடை
கையில கட்டுக்காசுக்கு வாங்கிய போன்
காலில சேலில வாங்கின செருப்புகள்

இடைக்கிடை என்ன வெக்கையப்பா
இங்க மனுசர் வாழலாமோ என்றனும்
இங்கிலீசிலையும் கொஞ்சம் கதைக்கணும்
இடைக்கிடை வெளிநாட்டையும் பீத்தனும்
கடை கடையா ஏறி இறங்கணும்
காணாததை கண்டவன் போல கண்ணில்
கண்டதையும் வாங்கி வைக்கணும்
கண்டவைக்கு ஹலோ என்றனும் இங்க
கடையில மலியப்போட்ட சாமான்களை
கட்டிக்கொண்டுபோயவைக்கு குடுக்கணும்

ரிச்சாவுக்கு இயக்கச்சியில் போகணும்
உச்சா போறதை தவிர மிச்சமெல்லாம்
மிச்சம் விடாமல் படம்பிடிச்சு போடணும்
கச்சான் கடலை சாப்பிடணும் நல்லூர்
கந்தசாமியாரையும் கட்டாயம் பார்க்கணும்
அந்த றீயோவில ஐஸ்கிறீம் நக்கணும்
அப்படியே நாலு கடற்கரை போகணும்
அதிலும் மீன் சந்தைப்படம் கட்டாயாம்
அப்படியே ஏலுமென்றால் சந்தையும்

இங்க பாணும் பருப்பும் சாப்பிட்டாலும்
அங்க போய் பீசா பர்கர் என்று நிக்கணும்
ஊரில இருக்கேக்க போகாத கோயிலுக்கு
உதுதான் எங்கட குலதெய்வம் என்று
ஊரைக் கூட்டி பொங்கல் வைக்கணும்
ஊரில் உள்ள கோயில் எல்லாம் போகணும்
உள்ளவனை எல்லாம் கூப்பிட்டு நல்ல
ஊர் ஆடு வெட்டி பாட்டி வைக்கணும்
ஊத்தி நல்ல சாராயமும் வாக்கணும்

வாக்கிற சாரயத்தில வந்தவன் எல்லாம்
வாழ்த்தணும் பெரிய வள்ளலென்று
எல்லாம் முடிய ஏக்கங்களோட
மிளகாய் தூளும் அரிசி, வேற வகை
மாக்களோடு கருவாடும் பனங்கட்டியும்
மிச்ச சொச்ச சாமானும் கட்டிக்கொண்டு
எச்சிலயாவது பூசி அழுகிறமாதிரி நடிச்சு
அதையும் வீடியோ எடுத்துப் போட்டிட்டு
அப்படியே அழுவார் மாதிரி வந்திடணும்
வந்து போன கடனை கட்ட சரியாகீடும். 😂😂😂

உண்மை உரைகல்

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்

1 month 1 week ago

10 AUG, 2025 | 10:42 AM

image

கிழக்கு முஸ்லீம்கள் அரசியலில்  மறைமுகமான  அடிமைத்துவத்தின் கீழ்  இருக்கின்றமை கவலையளிக்கின்றது. பொத்துவில் அறுகம்பை பிரச்சினையானது அரசியலாக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது  என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்  தெரிவித்தார்.

கல்முனையில் சனிக்கிழமை (09) மாலை நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  கருத்து வெளியிட்ட அவர்,

இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர்  ஒட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எங்களின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற குப்பைகளை போடுகின்ற வாளியில் கூட இந்த ஸ்டிக்கர் ஒட்டி இருக்கின்றோம். 

இந்த ஸ்டிக்கர் ஒட்டுகின்ற  நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும்  இல்லை. தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன பிரச்சினைகளை பேசுகின்றார்களோ கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைச்சுகளில் அவர்கள் இருந்திருக்கிறார்கள் .

அவ்வாறு அவர்கள் அன்று செய்யாது இன்று இஸ்ரேல் தொடர்பில் அரசியல் ரீதியாக பிரச்சனைக்கு உட்படுத்துகின்றார்கள். பங்களாதேஷ்காரர்கள் என்றாலும் சரி இஸ்ரேல் காரர்கள் இருந்தாலும் சரி சீனாக்காரர்கள் என்றாலும் சரி எமது நாட்டில் தேவையற்ற விடயங்களை  செய்வதை நாங்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். 

அதற்காக நாங்கள் இஸ்ரேலியர்களை விரட்டுவதற்காக பொத்துவில் மண்ணுக்கு வர வேண்டிய தேவையில்லை. எமது தலைநகரம் கொழும்பில்  இரந்து அதாவது  எமது வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தூரம் தான் கட்டுநாயக்க  விமான நிலையம் இருக்கின்றது. 

அங்கிருந்து நாங்கள் இஸ்ரேலியர்களை மீண்டும் அவர்களை நாட்டிற்கு அனுப்பி விடுவோம். ஆனால் எமது நாட்டிற்கு உல்லாச பயணிகளாக வருகின்றவர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். இந்த நாட்டின் பிரதான வருமான வழிகளில் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் பெற்றது. 

அதை மேம்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதற்காக நாட்டின் இறைமையை பாதிக்கும் விடயங்களுக்கு அனுமதிக்க முடியாது.

எனவே தான் இலங்கையின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் சட்டவிரோத இஸ்ரேலிய  சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட முன்வர வேண்டும்.

பொத்துவில் அறுகம்பே பகுதியில் அரச அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தளம் (சபாத் இல்லம்)  அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து  இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது. 

கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும்.

தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் வாயால் கதைத்தவற்றை தவிர சமூகத்தின் நலனுக்காக இந்த காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்யவில்லை.

கடந்த காலங்களில் வாயால் பேசிக்கொண்டிருந்ததையே இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கை தமிழ் முதலமைச்சர் ஆளவேண்டும் என்ற எங்களின் கொள்கைப்படி கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம்.

அதற்காக எதிர்வரும் காலங்களில் சகல காங்கிரஸ்காரர்களையும் பெருந்தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்  செயலாளர் நாயகமும்  கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதி தலைவர் கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம். அஹூவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/222204

தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .

1 month 1 week ago

முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"---

தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள்

*பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள்.

--- ----- ----- ------

நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது.

“இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும்.

ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது.

மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், எந்த துன்பத்தையும் எளிதாக கடந்து விடலாம் என்று வள்ளுவர் அன்றே கூறிவிட்டார்.

ஆகவே, வள்ளுவர் வாக்கை மையப்படுத்தி துன்பத்தை வெல்ல “மகிழ்ச்சி” ஓர் ஆயுதம் என்பதை அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் நிறுவியுள்ளனர்.

ஈழத் தமிழர்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில், சிலேடைச் சொற்கள் சில, தூய தமிழில் - சாதாரண பேச்சு மொழியில் இவர்களின் வார்த்தைகளில் இருந்து இவர்களை அறியாமலேயே வெளிப்படுகின்றன.

அதுவும் ஆங்கில கலப்பில்லாத பேச்சு மொழி. அந்த சிலேடைச் சொற்கள் பல கற்பிதங்களை உணர்த்துகிறது.

முகபாவங்கள் கூட வாழ்வியல் அர்த்தங்கள் பலதை தருகின்றன.

அதாவது, ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் - சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்த இரு கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து வெளிப்படுகின்றன.

இருவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இயல்பான நகைச்சுவை தன்மை கொண்டது. வாழ்வியல் உண்மைகளும் புடம்போட்டு காண்பிக்கின்றன.

ஆகவே, சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்கள் எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட வேண்டும் என்பதற்கு அக்குட்டியும் - பிச்சுமணியும் என்ற பாத்திரங்கள் சிறந்த வகிபாகத்தை கொடுத்துள்ளன.

அதுவும் தாயகத்தில் இருந்து ...

யூரியுப் போன்ற சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்தி பிழையான கருத்தியல்களை சமூகத்தில் விதைத்து வரும் சூழலில், அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் சமூக யதார்த்தங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பது சிறப்பு.

சம்மந்தப்பட்டவர்களை உணர வைத்து திருந்த வழி வகுக்கும் ஏற்பாடு என்று கூடச் சொல்ல முடியும்.

இந்தியக் கலைஞர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை விடவும் உள்ளூர் கலைஞர்கள் என்று பெருமைப்படக்கூடிய அக்குட்டி - பிச்சுமணி மற்றும் உள்ளூரில் உள்ள ஏனைய நகைச்சுவை கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை ஈழத்தமிழர்கள் முதலில் வரவேற்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்.

எமது வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசத்தை நுகர பழக வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid0KJ3F44wkhyAUbiSbFhAYSNHP8UnKW9H9PxhKi8pUHf7HBQXX7bBsjc6crbUXMFBVl/?

நானும் இவர்களின் காணொளிகளைக் கண்டு கொள்வதில்லை.

இனிமேல் தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

ஒரு மாணவியின் மரணமும், நாட்டின் கல்வி முறைக்கு அது விடுத்த செய்தியும்

1 month 1 week ago

ஹோமாகமவில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் பதினோராம் வகுப்பு மாணவியின் அகால மரணம் இந்த நாட்டின் கல்வி முறை குறித்த ஒரு ஆழமான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பல மருந்து மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமையினால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. பாடசாலையில் ஓர் ஆசிரியரின் செல்வாக்கு காரணமாக தனது மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக அவரது முன்னாள் அதிபரான தந்தை தெரிவித்திருப்பது, இக்கட்டான சூழலில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் உளவியல் நிலையை ஒரு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனது மரணத்திற்கு முன்னர் அந்த மாணவி தான் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி தனது சகோதரியிடம் பகிர்ந்துகொண்டமை, பாடசாலைகள் குழந்தைகளின் உளநலன் குறித்து எவ்வளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உண்மையில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல, தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறையால் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயகரமான மன அழுத்தத்தின் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு.

இந்தத் துயரமான நிகழ்வின் தாக்கம் தனிப்பட்ட குடும்பத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக ஒரு குழந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்டமை, பாடசாலைக் கல்வியின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறியாகியிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு தொடருமாயின், அது சமூகத்தின் எதிர்கால தலைமுறையின் மனநல ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். அழகியல் பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு, அவை வெறும் கூடைப் பாடங்களாக மாற்றப்பட்டதனால், குழந்தைகள் கலை, இலக்கியம், மற்றும் வாசிப்பு இன்பங்களை இழந்து விடுகிறார்கள். இதனால், ஆளுமையையும், படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், வெறுமனே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே அவர்கள் உருமாறுகின்றனர். இந்தத் தேர்வு மையப்படுத்தப்பட்ட முறை, குழந்தைகளின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, கவனச்சிதறல், மற்றும் பல்வேறு அக்கறையின்மைகளை இது உருவாக்குகின்றது. இந்த எதிர்மறையான விளைவுகள், உலக அளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கைகளுடன் ஒத்திருக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இறந்த மாணவியின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள், இந்தச் சம்பவம் எவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. "இனி ஒருபோதும் இதுபோன்ற பேரழிவுகள் நடக்காத வகையில் கல்வித் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என அவர் முன்வைத்த கோரிக்கை, பலரின் மனங்களில் எதிரொலித்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும், பொது விவாதங்களிலும் கல்வி முறை குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கல்வி நிபுணர்களும், மனநல மருத்துவர்களும் தேர்வு மன அழுத்தம் குறித்து அவ்வப்போது விவாதங்களை நடத்திய போதிலும், ஹோமாகம மாணவியின் மரணம் இந்த விவாதங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. வினாத்தாள்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும், யதார்த்தத்தில் தேர்வுகளின் கடினத்தன்மை அதிகரித்தே வருகின்றது.

இந்த நிலைமைக்கு அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள் பெரும்பாலும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பேச்சுகளிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் இந்த துயரத்தின் அடிப்படைக் காரணத்தை முழுமையாக நிவர்த்தி செய்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு பாடசாலை இடைவேளைகளோ, அல்லது விரிவுபடுத்தப்பட்ட பாடவேளைகளோ குழந்தைகளின் மன அழுத்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை. புதிய 'மோடியூலர் பை'கள் குறித்து பேசுகின்ற அதேவேளை, வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றலையும் வளர்ப்பதற்கான வழிகள் குறித்துப் பேசுவதில்லை. ஒருபுறம் நாட்டின் கல்வி முறையை மாற்றியமைப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் கல்வி முறைக்குள் ஏற்கனவே இருக்கும் அழகியல் பாடங்களைக் குறைத்து, அவற்றை வெறும் பெயரளவுக்கு மட்டுமே வைத்திருப்பது, இந்த அரசியல் பதில்கள் வெறும் கண்துடைப்பிற்கானவையாகவே இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

என்னுடைய பார்வையில், இந்த மாணவியின் மரணம் ஓர் அலறல்; அது நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறைக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தச் சோகத்திற்கு நேரடியாக ஆசிரியரையோ, பெற்றோரையோ அல்லது பாடசாலையையோ மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியானதல்ல. மாறாக, பல ஆண்டுகளாகத் தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு வழிவகுத்து, குழந்தைகளுக்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் மறுத்த அரசியல் தலைவர்களும், கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுமே இதற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். கல்வி என்பது மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமல்ல, ஆளுமையை வளர்த்துக்கொள்வது, படைப்பாற்றலுடன் சிந்திப்பது, சமூகத்துடன் இணைந்து வாழ்வது, மற்றும் வாழ்வின் அழகியலை ரசிப்பது போன்றவற்றை உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்த அபாயகரமான போக்கைத் தடுக்க, நடைமுறைச் சாத்தியமான சில தீர்வுகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலாவதாக, பாடசாலைக் கல்வியில் அழகியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அவை வெறும் கூடைப் பாடங்களாக இல்லாமல், கட்டாயப் பாடங்களாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம், குழந்தைகள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பெற முடியும். இரண்டாவதாக, பாடசாலைகளில் நூலக வசதிகளை மேம்படுத்தி, புதிய புத்தகங்களை வாங்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். வெறும் பாடத்திட்டப் புத்தகங்களுக்கு அப்பால் உலகத்தை அறியும் வாய்ப்பை அது உருவாக்கும். மேலும், கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று, பாடசாலைகளில் மாதாந்த பொது மாணவர் கூட்டங்கள், கலை விழாக்கள், நாடகங்கள் போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது, குழந்தைகளின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர உதவும். இந்த மாற்றங்கள் தனிநபர்கள், அரசாங்கம், மற்றும் ஆசிரியர்கள் என அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகளாகும்.

ஹோமாகம மாணவியின் அகால மரணம் நாட்டிற்கு அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது: நமது கல்வி முறைக்கு ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவை. இந்தத் துயர சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால், இது போன்ற சோகமான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழலாம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மதிப்பெண்களால் மட்டுமே தீர்மானிக்கும் இந்த முறையை கைவிட்டு, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான ஆற்றலுடன் சமூகத்தில் பங்களிக்கக்கூடிய ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான மனமாற்றத்தையும், நடைமுறை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான நேரம் இது. கல்வி சீர்திருத்தங்கள் என்பது வெறும் கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல, அது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை கட்டமைப்பதற்கான ஒரு பொறுப்பான கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_5.html

Checked
Thu, 09/18/2025 - 07:53
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed