கல்வித்துறையில் கத்தரிக்காய் வியாபாரிகள்
முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும்.
செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்துவிட்ட பின்னர் இன்று பலரும் வேலை இழந்து வருகிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களும் வேலை இழப்பார்கள் என ஒரு அமெரிக்க மருத்துவர் பேசுவதைக் கேட்டேன். அதுவும் நிச்சயமாகச் சாத்தியமே. பத்திற்கு ஒரு மருத்துவரே இருப்பார்கள். செவிலியரும் செயற்கை நுண்ணறிவுமாக இணைந்து மருத்துவரின் இடத்தை எடுத்துக்கொள்வார்கள். நாட்டில் மிக அதிகமாக சம்பாதிக்கிற, கௌரவமான வேலைகளையே செயற்கை நுண்ணறிவு கபளிகரம் பண்ணும்போது மற்ற வேலைகளில் உள்ளவர்கள்?
இது முதலில் பாதிக்கப் போவது உயர்கல்வித்துறையைத்தான்: மாணவர்களுக்கு கல்வி போதனையோ பயிற்சியோ அவசியம் இல்லை என நிர்வாகிகள் நம்பத் தொடங்கியுள்ளதால் நூற்றில் இருந்து பலநூறு மாணவர்களுக்குப் பாடமெடுக்க வகுப்புக்கு ஒரே ஒரு ஆசிரியரையே நியமிக்கிறார்கள். சர்வதேச அளவில் தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களிடம் உயர்வான மதிப்பீடு பெறுவதற்கு பேராசிரியர்கள் ஆய்விதழ்களில் பிரசுரித்தால் போதும் என நினைக்கும் நிர்வாகங்கள் இன்று அவர்களுடைய கற்பிக்கும் திறனைப் பொருட்படுத்துவதில்லை. சில நிறுவனங்களில் ஆசிரியர் ஒரே சமயம் கன்னாபின்னாவெனப் பிரசுரிக்கவும் வேண்டும், நன்றாகப் போதிக்கவும் வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஆளைத் தேர்வு பண்ணும்போது போதிக்கும் திறனைச் சோதிப்பதில்லை. ஆய்வேட்டில் பிரசுரம் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை, கார், சொத்து உள்ளதா, அவர் ஆணாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பெண் வீட்டார் எதிர்பார்ப்பதைப் போல நிலைமை மாறிவிட்டது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அதனாலே இன்று மாணவர்களை ஈர்க்க மாணவர்களுக்கான ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பனியாக மாறிவருகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், தொடர்ச்சியாக கவனத்தைச் சிதறடிக்கும் போட்டிகள் என வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை வைத்திருக்க முயல்கிறார்கள். இது முதலில் அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது. அதுவும் ஹார்வெர்டில். அங்கு தத்துவத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேரெட் ஹேண்டர்ஸன் ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து நிர்வாகிகள் அங்கு பணியாற்றுகிறார்கள், ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார். மாணவர்கள் இன்று எதையும் சிரமப்பட்டு வாசிக்க விரும்புவதில்லை எனில் அதை ஒரு குறையாகவோ பிரச்சினையாகவோ ஹார்வெர்ட் நிர்வாகம் பார்ப்பதில்லை, அவர்களுக்கு ஏற்றபடி மேலோட்டமாக ஜாலியாகப் பேசிவிட்டு வந்தால்போதும் என அது ஆசிரியர்களைக் கேட்பதாகச் சொல்லும் அவர் கற்பித்தலில் தனக்கு மகிழ்ச்சியே இல்லாமல் போக வேலையை விட்டுவிட்டு யுடியூபராகிவிட்டதாக சொல்கிறார். இனிமேல் தான் கல்வித் துறைக்கே போகப் போவதில்லை என்கிறார் (இவரது தத்துவச் சேனல் பிரசித்தமானது: https://www.youtube.com/@_jared). இந்தப் போக்கு இந்தியாவுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது.
குறைவாக முதலீடு செய்து கட்டாயத்தின் பெயரில் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சுரண்டி நூறு மடங்கு சம்பாதிப்பதே தனியார் உயர்கல்வித்துறையின் உத்தேசம் ஆன பின்னர் எந்த அடிப்படையான படிப்புக்கும் மதிப்பற்றுவிட்டது - கணிதத்தை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளுமா அதைக் கற்பிக்கவே தேவையில்லை, நேரடியாக வேலையில் தேவைப்படும் ஒன்றை மட்டுமே கற்பித்துக்கொடு என்று நிர்வாகங்களும் கம்பெனி சி.இ.ஓக்களும் சொல்கிறார்கள். இதையே இன்றைய இளைஞர்களுக்கு வேலைத் தகுதியின்மை எனச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மாறப் போகிற வேலைச் சந்தைக்குப் பொருத்தமான கல்வி எந்த கல்வி நிறுவனமும் அளிக்க முடியாது. பொறியியலின் அடிப்படையே தேவையில்லை, செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் திறன் மட்டும் போதும், யாரும் பேசவோ எழுதவோ மொழியைக் கற்கத் தேவையில்லை, செயற்கை நுண்ணறிவே அதைச் செய்யும் என ஒரு கம்பெனி சி.இ.ஓ சொன்னால் அதைப் பின்பற்றி அரைகுறையாகக் கற்கும் ஒரு மாணவர் நாளை வேலையின் தேவை முழுக்க மாறும்போது நிர்கதியாக நிற்பார். அவரால் சொந்தமாகச் சிந்தித்து புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலாதவராக இருப்பார். நான் இன்று அப்படியானவர்களை அதிகமாகப் பார்க்கிறேன் - அண்மையில் என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: அவர் ஒரு மாணவர் தேர்வு நேர்முகத்தில் இருந்தார். வணிகப் பயன்பாட்டுத் தரவுகளைப் பரிசோதித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நிரல்களை எழுதக் கற்றுக்கொடுக்கும் படிப்பு அது. வந்த மாணவர்களில் 98% பேர்களுக்கு நிரலாக்க, வணிகவியல் படிப்போ அறிவோ இல்லை. ஆனாலும் அப்படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டும் என வருகிறார்கள். இவர்களுக்கு உயர்கல்விக்குப் பிறகு எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாமல் ஆச்சரியமில்லை. அது போதும் என்றே யு.ஜி.ஸியும் தனியார் கல்வி நிறுவனங்களும் ஒருசேர நினைக்கிறார்கள். உ.தா., நீங்கள் இளங்கலைப் படிப்பில் பொறியியல் படித்துவிட்டு நேரடியாக - எந்த அடிப்படையும் தெரியாமல் - மொழியில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணலாம். இதை கல்விச் சுதந்திரம் என்று யுஜிஸி நினைக்கிறது. ஆனால் இது படுமுட்டாள்தனம் என யுஜிஸி மண்டைகளுக்கு விளங்கவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாகச் சம்பாதிப்பதற்கு எந்தப் படிப்பிலும் எவரையும் சேர்க்கலாம் என விதிமுறையை யுஜிஸி கொண்டு வந்தது. இப்போது ஆன்லைனில் பட்டப்படிப்பை யுஜிஸி அனுமதிக்கிறது. இது மேலும் பல பெருங்குழப்பங்களைக் கொண்டு வரும். வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்பை நிராகரிக்கும் நிலை வரும். ஏனென்றால் நமது மாணவர்களுக்குத் தாமாகப் படிக்கிற பொறுப்பும் சுயக்கட்டுப்பாடும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மோசடி செய்து பட்டம் வாங்கி விடுவார்கள். நான் அண்மையில் ஒரு முதுகலைப் பட்ட நேர்முகத்தில் ஒரு மாணவரைப் பார்த்தேன். அவர் பெங்களூரின் பிரசித்தமான தனியார் பல்கலையில் இளங்கலை ஆங்கிலப் படிப்பில் 83% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நான் மாணவராக இருந்தபோது 60-70% மதிப்பெண் வாங்க மிகச்சிறந்த மாணவராக இருக்க வேண்டும். அவர்களுக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் (நான் என் இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.). சரி பெரிய புத்திசாலி போல என நினைத்து நான் அம்மாணவரிடம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தேர்வு எழுதிய பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப சாதாரணமான கேள்விதான். அவருக்குத் தெரியவில்லை. "மறந்துவிட்டது சார்" என்றார். சரி பரவாயில்லை. உங்கள் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருந்தன என்று கேட்டால் அதுவும் தெரியவில்லை. அதெப்படி மறந்துபோகும்? எனக்கு நான் 25 ஆண்டுகளுக்கு முன் படித்ததெல்லாம் நினைவிருக்கிறதே. அவர் நூற்றுக்கு 82 மதிப்பெண்கள் வேறு அப்பாடத்தில் பெற்றிருந்தார். இன்னொரு மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் 85%. ஆனால் ஒரு வாக்கியம் பேசினால் 10 தவறுகள் செய்கிறார். இவர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன என்றால் அதை 'வாடிக்கையாளர் திருப்தி' எனும் பெயரில் நிர்வாகங்கள் நியாயப்படுத்துகின்றன. மதிப்பெண்ணை நியாயமாக அளித்தால் மாணவர் சேர்க்கை குறையும் என அஞ்சுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் அனைவரையும் தேர்வு செய்யும் முடிவை நாம் விமர்சிக்கையில் தனியாரில் நடக்கும் மோசடிகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மாணவர்களையே குற்றம் சொல்ல முடியாது - பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவர் துணைவேந்தர் ஆவதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை, தொழிற்துறையில் உயர்பொறுப்பில் இருந்த அனுபவம் போதும் என யுஜிஸி கூறுகிறது. நமது பிரதமர் ஒரு சிறந்த நடிகர்தான், ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்லர். அதற்காக அவருக்கு பால்கே விருது கொடுக்க முடியாதில்லையா. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது. யுஜிஸியோ கல்வித் தகுதியை விட பணம்தான் முக்கியம் எனும் கொள்கையை வைத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைவிட தனியாரின் லாபத்தையே அது பிரதானப்படுத்துகிறது. அதற்குத் தோதாக மட்டுமே விதிமுறைகளை இயற்றுகிறது. இப்படி எல்லா விதங்களிலும் அது உயர்கல்வியை அழிக்கும் பணியை ஆற்றுகிறது. இதுவும் அமெரிக்கப் பண்பாடுதான் - அங்கு தேர்தலிலே நிற்காத டெஸ்லா முதலாளி சற்று காலத்திற்கு முன்வரை அரசைக் கட்டுப்படுத்தவில்லையா!
கத்தரிக்காய் வியாபாரிகளும் தக்காளி வியாபாரிகளுமாக உயர்கல்வித் துறையை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
Posted 23 hours ago by ஆர். அபிலாஷ்