எங்கள் மண்

குட்டி மிராஜ் வகுப்பு பயிற்சி வண்டி

17 hours 4 minutes ago

கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு).

ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம்.

கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது.

இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை,

→ லெப் கேணல் நிசாந்தன்,
→ லெப் கேணல் எழிற்கண்ணன்.
→ லெப் கேணல் பழனி,
→ லெப் கேணல் தன்ராஜ்,

ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள் வழங்கியிருந்தனர்

-- Facebook

ஓயாத அலைகள்-2 இல் கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? | தொடர்

6 days 13 hours ago

ஓயாத அலைகள் இரண்டு – கிளிநொச்சி சமர்

ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும்.

பின்னணி

1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியது இலங்கை அரசபடை. அதன்பின்னர் ஜெயசிக்குறு என்று பெயரிட்டு மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது அரசபடை. தமது கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குடையில் இருக்கும் நிலப்பகுதியையும் முக்கிய வினியோகப் பாதையையும் கைப்பற்றுவதே அரசபடையின் நோக்கமாக இருந்தது. நீண்டகாலமாக நிகழ்ந்த இந்த ஜெயசிக்குறு படைநடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்த போதே, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்றத் திட்டமிட்டு ஒரு தாக்குதலைத் தொடுத்தனர்.

பெப்ரவரி 2, 1998 அன்று நடத்தப்பட்ட கிளிநொச்சி நகர் மீதான தாக்குதல் புலிகளுக்கு எதிர்பார்த்தளவு வெற்றி தராதபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொண்டனர். அதன்பின்னும் ஜெயசிக்குறு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் ஒரு தடவை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர். இம்முறை புலிகளுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.

தாக்குதல்

செப்டம்பர் 26, 1998 அன்று இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக அகிம்சை முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் ஆண்டு நினைவுநாளின் இரவில் ஓயாத அலைகள் இரண்டு என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ம் நாள் அதிகாலை தொடக்கம் மூன்றுநாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் கிளிநொச்சி நகரம் முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு?
சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது டிவிசனின் 3 ஆவது படைப்பிரிவு, பிரிகேடியர் உபாலி எதிரிசிங்கவின் தலைமையில் கிளிநொச்சிப் பகுதியை 1996 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புக்குள்ளாக்கியிருந்தது.

1996-07-26 அன்று ஆரம்பமான ‘சத்ஜெய” எனும் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தம் எனக்கூறிக் கொண்டு 70 நாட்கள் மூன்று கட்டங்களாக 12 கிலோமீற்றர் பகுதிக்குள் ஆமை வேகத்தில் முன்னேறி 22.09.1996 அன்று கிளிநொச்சியை ஆக்கிரமித்தன சிறிலங்காப்படைகள்.

இவ் ஆக்கிரமிப்பினால் அன்று ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். 1,279 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே ஆனையிறவு, பரந்தன் படைத்தளங்கள் அமைந்திருந்த நிலையில் சத்ஜெய 60 சதுர கிலோமீற்றர் நிலத்தை விழுங்கிக்கொண்டது.

இந்நடவடிக்கைக்கெதிராக புலிகள் 15 நாட்கள் தான் எதிர்சமரை மேற்கொண்டனர். இதன்போது நாளொன்றுக்கு 3,000 எறிகணைகள் என்ற வீதத்தில் புலிகள் மீது எறிகணைகளை ஏவியும், நாளொன்றுக்கு நான்கு தடவைகள் இரண்டு கிபிர் விமானங்கள் குண்டுகளை வீசியும் தாக்குதலை நடாத்தியே ஆக்கிரமிப்பை நடத்தின. இதன்போது சிறிலங்காப் படைகள் பயன்படுத்திய எறிகணைகளின் எடை மட்டும் 500 தொன் எனவும் கிபிர் குண்டுகளின் எடை 325 தொன் எனவும் மொத்தமாக சத்ஜெயவிற்கு 825 தொன் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழிச் சமரை வெற்றிகரமாகக் கையாண்ட சமராக இது அமைவதோடு, 120 மில்லி மீற்றர் மோட்டார் உட்பட பெயர் குறிப்பிடாத பல சுடுகலன்களை விடுதலைப் புலிகள் முதன்முதல் பயன்படுத்திய சமராகவும் இது அமைகிறது. எனினும் புலிகள் தமது ஆட்பலத்தைத் தக்கவைப்பதற்காக தற்காலிக பின்வாங்கல்களையும் மேற்கொள்ள நேர்ந்தது.

இச்சமரில் 700 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட 2,500 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்திருந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 254 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இவ்வாறு ஆக்கிரமித்திருந்த படைகளுக்கு இடிவிழுந்த நாள் 27.09.1998 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் பல உயிர்த்தியாகங்களைச் செய்து கிளிநகரை மீட்பதற்கான ஓயாத அலைகள் – 02 ஐ ஆரம்பித்தனர். இன்று நீரோடும் கால்வாய்கள் அன்று மாவீரரின் குருதி சிந்திக்கிடந்த கால்வாய்களாகக் காணப்பட்டன. இன்று நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அன்று பல புலி வீரர்களின் உடல்கள் சரிந்த நிலங்களாகக் காணப்பட்டன.

இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன் நடந்த ஓயாத அலைகள் – 02 சமர் எவ்வாறு நடைபெற்றதென்பதை அன்றைய சமர்க்களங்களில் எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

ஓயாதஅலை – 02 சமரின் வெற்றிக்கு வலுச்சேர்த்தவர்களில் எதிரியின் முகாம்களுக்குள் ஊடுருவி தாக்குதலுக்கான தரவுகளையும் உள்ளே எதிரியின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்த வேவு வீரர்கள் தாம் எவ்வாறு எதிரியின் நிலைகளுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும், தாக்குதலுக்கான தகவல்களை எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இதுவரை வெளியிடாத தகவல்களை வேவுப்புலி வீரர்கள் ஓயாத அலைகள் – 02 இன் 7 ஆவது ஆண்டு நினைவுநாளில் பகிர்ந்து கொள்கின்றார்கள். அதில் வெற்றிக்கு வழிவகுத்த அம்சங்களை- பல புதிய தகவல்களை வேவு வீரர்களை நெறிப்படுத்தியவரும் அன்றைய விசேட வேவுப் பிரிவின் தளபதிகளில் ஒருவராகவும் இருந்த லெப்ரினன்ட் கேணல் ஜெரி இவ்வாறு கூறுகிறார்.

‘ஓயாத அலை இரண்டுக்கான வேவு நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் கிளிநொச்சிப் பகுதியை அண்டிய இராணுவ காவலரண்களைச் சுற்றி ஓரளவு கண்காணிப்பை வைத்திருந்தோம் கிளிநொச்சி முகாமை அடிக்க வேண்டுமென்று எல்லாரும் உறுதியோடு இருந்தோம் ஆனால் எப்போது அடிக்கிறதென்ற திட்டம் எங்களுக்குத்தரப் படவில்லை.

ஓயாத அலை – 02 நடவடிக்கைக்கு ஒரு மாதத்திற்குள்தான் இந்த வேவு நடவடிக்கையை வேகப்படுத்தினோம். ஆரம்பத்தில் விசேட வேவுப்பிரிவினர்தான் இதைப் பார்த்தார்கள்.

சண்டைக்கு அணிகளை இறக்குவதற்கான வேவுக்காக ஒவ்வொரு படையணிகளையும் இந்த வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியே இதனை முழுமைப்படுத்தினோம்.

ஆரம்பத்திலே வேவு பார்த்ததற்கும் கடைசிக் கட்டங்களில் வேவு பார்த்ததற்கும் நிறையப் பிரச்சினைகள் இருந்தன. என்னவென்றால் வேறு நடவடிக்கைகளுக்கு வேவு பார்க்கும் போது குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் என்றால் 500 அல்லது 600 மீற்றர் விலத்தியும் பார்ப்போம். ஆனால் இந்தப் பிரதேசத்தைப் பொறுத்த மட்டில். எங்களுக்கென குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட இடத்தில் பாதை எடுத்து கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. ஏனென்றால் அந்த இடத்தில் உடைப்பை ஏற்படுத்தினால் மட்டும்தான் இலகுவான முறையில் கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இதே நேரத்தில் எதிரியும் எதிர்பார்க்கக்கூடிய இடத்தில்தான் உடைப்பு பகுதியும் இருந்தது. மூன்று பேரைக் கொண்ட வேவு அணி உட்புகுந்து வேவு பார்க்க முடியும். ஆனால் பெரும் அணி நகரும் போது எதிரி அவதானிக்காதவாறும் வேவுபார்க்க வேண்டியிருந்தது.

வேவின் ஆரம்பத்தில் சிக்கல் குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் எல்லாப் பாதைகளிலும் எதிரியின் பதுங்கித் தாக்கும் அணிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தது. பகல் வேளைகளிலும் இரவிலும் எதிரி தனது அரணுக்கு வெளியிலும் அவதானிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருந்தான். இதற்கும் பின்புதான் நாங்கள் முழுமையான வேவுகளை பார்க்க வேண்டியிருந்தது. அதாவது எமது அணிநகரும் போது அவர்களுக்கு பாதுகாப்பாக மற்றுமொரு அணியை நகர்த்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. கூடிய பாதைகளால் அணிகளை நகர்த்துவதற்கான வேவுகளைப் பார்த்து நகர்த்தியதென்பதும் எமக்கு பெரும் வெற்றி என்றே கருதலாம். இதில் எல்லா வேவுப் போராளியும் கடுமையாக உழைத்தார்கள்.

கடைசிக் கட்டங்களில் இரவு, பகல் முழுமையாக ஓய்வின்றி செயற்பட்டார்கள். ஏனென்றால் சண்டையினுடைய முழுப்பொறுப்பும் வேவு வீரனுக்குரியதாக இருக்கும். உண்மையில் ஒரு வேவுப் போராளி தனது உயிரை மதிக்காமல் கடும் ஆபத்தான பகுதிகளுக்குள் சென்று வருகிறானென்றால் அதன் உண்மையான நோக்கம் தான் உயிரோடு திரும்பினால் அந்தப் பாதையில் ஏனைய போராளிகளின் இழப்புக்களை குறைப்பது தான் வேவுப் போராளியின் நோக்கமாக இருக்கும். வேவில் பிரச்சினைகள் இருந்தால் இழப்புக்கள் கூடும் ஆகவே வேவுப் போராளிகள் சரியாக இதை உணர்ந்து கொண்டுதான் இதில் ஈடுபடுவார்கள் ஒரு சண்டையில் வெற்றியடைந்தால் அதனுடைய ஆரம்ப வெற்றி வேவுவீரனையே சாரும்.

இந்த ஓயாத அலை – 02 ஐப் பொறுத்த வரையில் முழுப்பாதையாலும் குறித்த நேரத்திற்கு சண்டை தொடங்கி முழுப்பாதைகளையும் உடைத்து அணிகள் உட்புகுந்தன. ஒருபாதையால் 50 பேர் கொண்ட அணி அமைதியாக உள்ளே சென்றுதான் சண்டையில் ஈடுபட்டன.

வேவுப் போராளிகளுக்கு இந்தப் பிரதேசத்தில் அமைந்த சாதகம் என்னவென்றால் நடை தூரம் குறைவாக இருந்தது. இந்த போராளிகளுக்கு வேவின் கடைசிக்கட்டங்களில் ஓய்வு கொடுக்க முடியாதிருந்தது. ஏனென்றால் ஓய்வெடுத்தால் சண்டையில் பெரும் மாற்றம் ஏற்படும் அவர்களும் ஓய்வினை எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் சண்டைக்கு முதல்நாள் நகர்விற்கான பாதையில் சிக்கல் ஏற்பட்டால் மற்றுமொரு பாதையை அவர்தான் எடுக்கவேண்டும் இந்த சண்டையிலும் சண்டைக்கு முதல் நாள் ஒரு பாதையில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அந்தபாதைக்குரியவர் அடுத்தநாள் நான்கு மணிக்கிடையில் இன்னுமொரு பாதையை எடுத்தார்.

நகர்வுப்பாதைகளை எடுப்பதிலும் நிறைய விடயங்களை அவதானிக்க வேண்டும். ஒவ்வொரு பாதையும் எங்களுக்கு சாதகமான முறையில் இருக்க வேண்டும் பாதையால் அணிகள் நகரும் போது எதிரி அவதானிக்காதவாறிருக்க வேண்டும். எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகளின் நடமாட்டமற்ற பகுதியாக இருக்க வேண்டும். இது போன்ற பல விடயங்களை அவதானித்துத் தான் பாதை எடுக்க வேண்டும். அதாவது இராணுவம் எந்த உசார் நிலையிலிருந்தாலும் தேவைக்கேற்ப பாதை எடுத்தே ஆகவேண்டும்.

ஓயாத அலை – 02 இல் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் உண்டு அதாவது பயிற்சி முடித்த குறுகிய காலத்திற்குள்ளேயே ஓர் அணியையும் இந்த வேவில் ஈடுபடுத்தினோம். இவர்களுக்கு வேவுப்பயிற்சியை வழங்கும்போது அதிலே சில போராளிகளின் திறமையான செயற்பாடும் இந்த சண்டையில் முக்கியத்துவம் பெறுகிறது.

2 ஆம் லெப்டினன் ரகுவரன் எனும் போராளி ஆரம்பத்தில் வேலைத் திட்டங்களுக்கு அனுப்பும்போது ஒரு வித்தியாசமான துணிச்சல், நகர்வு, பண்பு என்பவற்றை கொண்டிருந்தார். அவரின் திறமையை அவதானித்து இந்த பாதை எடுக்கும் செயற்பாட்டில் அவரையும் ஈடுபடுத்தினோம். பாதைகள் எடுக்கப்பட்ட பின் மேற்கொண்ட பகுப்பாய்வில் அவரின் செயற்பாடு மிகவும் வித்தியாசமானதாகவிருந்தது. ஒரு அனுபவமுள்ள வேவுவீரன் எவ்வாறு செயற்படுவாரோ அதேபோல் இவர் பயிற்சியையும் பொறுப்பாளர்களால் விளங்கப்படுத்தப்பட்ட விடயத்தையும் வைத்து இராணுவத்தின் நடவடிக்கைகளை மிகவும் நுணுக்கமாக அவதானித்திருந்தார். அவ்வாறுதான் ஒவ்வொரு வேவுப் போராளிகளும் செயற்பட்டிருந்தார்கள்.

சண்டை நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் வேவுப்போராளிகளின் பணி என்ன வென்றால் திட்டத்திற்கேற்ப அணிகளை நகர்த்தி சண்டையை தொடங்கி மண் அரண்களில் ஏறி காப்பரண்களைக் கைப்பற்றியவுடன் வெளி லைனுக்குரியவர்கள் அங்கு நிற்க உள்ளே அணிகளை கொண்டு செல்ல வேண்டியவர்கள் அணிகளுடன் உட்செல்வார்கள்.

சில பாதைகளை எடுக்கும் காலத்தில் எங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஏனென்றால் அப்பகுதிகள் வெளியான பிரதேசம், அங்கு எதிரியின் அணிகள் வந்து பதுங்கியிருந்து தாக்குதல்களை பெருமளவில் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் சண்டைக்கு முதல் நாள் அப்போது பொறுப்பாக இருந்தவரால் சொல்லப்பட்டது இந்தப்பகுதியால் பாதை எடுக்கப்படா விட்டால் சண்டையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுமென்று இதனை அந்த பாதைக்குரிய போராளிகளுக்கு தெரியப்படுத்தினோம். அதாவது இந்தப்பாதை தளபதி பால்ராஜ் அண்ணாவின் அணி போகவேண்டிய பாதை இந்த அணிதான் கட்டவுட்போட வேண்டிய அணி.

எனவே ஒரு புதுவிதமான முறையில் இதில் வேலையை மேற்கொண்டோம். அதாவது நாங்கள் ஒரு அணியை தயார்ப்படுத்தி நகர்ந்து சண்டை ஏற்பட வேண்டிய நிலை உருவானால் சண்டையிட்டாவது பாதையை எடுப்பது என்ற நிலையில். மிகக்கூடிய ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்திலும் அந்த போராளிகளின் திறமையான செயற்பாட்டினால் அந்தப்பாதையை எடுத்து அதனூடாகவே மறுநாள் அணிகளை நகர்த்தினோம்.

ஒரு பகுதிக்கு சுகந்திரன் என்ற போராளி பொறுப்பாக நின்று செயற்பட்டார். அவர்கள் மாலை 6.30 இற்கு குளத்து தண்ணிக்குள் இறங்கினால் காலை 4.30 இற்கு பிறகுதான் அவர்கள் கரைக்கு வருவார்கள் 10 மணித்தியாலம் வரையில் தண்ணிக்குள்ளிருந்து நீண்டநேரம் அவதானித்தார்கள் அதாவது சில இடங்களில் தாழ்வான பகுதியும் சில இடங்களில் தாழ்வற்ற பகுதியுமாக இருந்தது. அதற்குள் சத்தமின்றி அணிகள் நகர்வது என்றால் மிகக் கடினம் அதற்கேற்றவாறு வேவு பார்க்க வேண்டியிருந்தது. இதன்படி இப்பகுதியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அணிகள் நகர்த்தப்பட்டன.

சண்டைக்கான பயிற்சிகளை அணிகளுக்கு வழங்கும் போது வேவுப் போராளிகளும் ஈடுபடுவார்கள் ஏனென்றால் இவர்களின் வழிகாட்டல் அணிகளுக்கு அவசியமானதாக இருக்கும்.

ஒரு பகுதியால் சண்டை அணிகள் நகர்ந்து கைப்பற்ற வேண்டிய அரண்கள் எல்லாம் பிடிக்கப்பட்டு விட்டன. இதற்கு லெப். கேணல் சித்தா பொறுப்பாக சென்றார். பின்பு பகலில் இராணுவம் மிக முனைப்பாக சண்டையிட ஆரம்பிக்கும் போது இந்த அணியினரின் துப்பாக்கிகள் நீருக்குள்ளால் சென்றதால் செயற்படாது போனது இதனால் அணிக்கு இழப்பு அதிகரிக்க தொடங்கியது லெப். கேணல் சித்தா உட்பட 40 பேர் வரை குளத்து பண்டில் வீரச்சாவடைந்தனர். இதேபோன்று இன்னுமொரு பாதையிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. இவ்வாறு இராணுவம் அதி உசார் நிலையில் இருந்த போதும் வேவு வீரர்களின் ;திறமையான வேவுச் செயற்பாட்டினால் தான் ஓயாத அலைகள் – 02 சமரை வெற்றி கொள்ள முடிந்ததென அன்று பொறுப்பாக இருந்த தளபதிகள் கூறினார்கள் அது உண்மையும் கூட.

ஓயாத அலைகள் – 02 இல் உள்வேவு என்பதும் முக்கியமானதொன்று இதை பொறுத்த வரையில் வேவுப்போராளிகள் முகாமிற்குள் ஊடுருவி விட்டார்கள் என்பதை எதிரி அறிந்திருந்த நிலையிலும் போராளிகள் உட்புகுந்து மிகவும் துல்லியமாக வேவு பார்த்திருந்தார்கள்.

அதாவது எதிரியின் முகாமுக்குள் அவனது கட்டளைத் தளங்கள், ஆயுத களஞ்சியங்கள், முக்கிய தளங்கள், மோட்டார் தளங்கள், உள் அரண்கள் முட்கம்பி வேலிகள் அனைத்தும் எவ்வாறு எந்த அளவு உசார் நிலையில் இருக்கின்றன என்பதையும் உள் அரண்கள் எத்தனை எந்த அளவு தூரத்தில் உள்ளன என்பனவற்றைக் கூட வேவுப் போராளிகள் தெளிவாக அவதானித்திருந்தார்கள்.

வேவைப் பொறுத்த வரையில் தடையங்களை விட்டால் அந்த சண்டையே குழம்பிவிடும். அதற்கேற்றவாறு வேவு வீரன் செயற்பட வேண்டும். உண்மையில் வேவு வீரன் விசுவாசமானவனாகவும் நம்பிக்கையுடையவனாக துணிச்சல் நிறைந்தவனாக இல்லாதிருந்தால் அந்த வேவு வீரனாலேயே பல போராளிகள் வீரச்சாவடைய வேண்டிய நிலை ஏற்படும் ஆகவே இந்த சண்டையில் அவ்வாறு எந்த செயற்பாடும் நடைபெறாதது வேவு வீரரின் திருப்திகரமான செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.

பொதுவாக சண்டை ஆரம்பிக்கின்ற நேரத்தில் அனைத்து பாதைகளும் ஒழுங்கமைக் கப்பட்டு குறித்த நேரத்திற்குள் அணிகள் நகர்ந்து சண்டையில் ஈடுபட்டன. இந்த சண்டையில் தடை உடைப்பிற்கான செயற்பாட்டில் வீரச்சாவுமிகக்குறைவாகவே இருந்தது.

பொதுவாக வேவு வீரர்கள் திரட்டும் தகவல்கள் அனைத்தும் தளபதிகளுடாக தேசியத் தலைவருக்கு அனுப்பப்பட்டு தேசியத் தலைவராலேயே சண்டைக்குரிய திட்டங்கள் வகுக்கப்படும் அவரின் திட்டத்திற்கேற்பதான் மாற்றங்கள் மேற்கொள்வதானால் செய்வோம். இந்த சண்டையில் ஏற்கனவே நாங்கள் தெரிவு செய்த சில பாதைகளை தலைவர் நிறுத்தினார். அதற்கேற்ப அடுத்த பாதைகளை எடுத்துத்தான் அணிகளை நகர்த்தினோம்.

இவ்வேவுப்புலி வீரர்களின் அணிகளின் துணிகரச் செயற்பாட்டுக்கு வித்திட்டவர்கள் வீரச்சாவைத் தழுவிய வேவுப்புலி மாவீரர்கள் என்பதே மிகப்பொருத்த முடையது. ஏனெனில் வேவுக்காக செல்கின்ற ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடைகின்ற பொழுது அடுத்த வேவு வீரனுக்கு ஏற்படுகின்ற உணர்வு எதிரியின் மீது தாக்குதலை நடத்தவேண்டுமென்ற உத்வேகத்தை அதிகரிக்கும். ஆகவே எமது விடுதலையின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் வீரச்சாவ டைந்த ஒவ்வொரு மாவீரனின் தியாகமும் விடுதலை உணர்வுமே உத்வேகத்தை அளிக்கின்றன.

கள ஆய்வுகளுடன்:- இ.சசிக்குமார்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

 

 

கியூபா மருத்துவத்துறை போன்று தமிழீழத்திலும் மருத்துவ அணி இயங்கியது !

1 week ago

இன்றைய நாட்கள் ஒரு கடுமையான நாட்களாகவே நகர்கின்றது. எப்போது? யாருக்கு ? என்ன ஆகும் என்ற உண்மை நிலை புரியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது இந்தப் பூமிப்பந்து. சீனாவில் தொடங்கி இன்று அநேகமான நாடுகளைத் தொட்டு நிற்கும் கொரோனா வைரஸ்தான் இன்றைய பேசு பொருள். இந்த உண்மையை யாராலும் மறுதலிக்க முடியாது.

இந்த நிலையில் தான் இன்று கியூபா நாட்டினை அதிசயமாக நோக்குகிறது இந்த உலகம். கியூபா நாடு ஒரு மருத்துவ வல்லரசு என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. தனது மருத்துவ அணிகளை பல நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் மனித நேய செயற்பாட்டை கியூபா மேற்கொள்வதாக கியூபா மீது மருத்துவ வல்லரசு முத்திரை குத்தப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தான் தமிழீழத்தில் கியூபாவின் மருத்துவ அணியை ஒத்த மருத்துவ செயற்பாட்டு அணி ஒன்று இயங்கியதை நாம் மறந்து போகிறோம். காலணியற்ற அடிப்படை மருத்துவர்கள் என்ற கருவைச் சுமந்து உருவாக்கப்பட்ட இந்த கியூபாவின் மருத்துவ சேவை இன்று உச்சம்பெற்று நிற்பதைப் போல தமிழீழ நாட்டில் தமிழீழ அரசின் ஒரு அணி மருத்துவர்களும் இயங்கினார்கள் என்பதை யார் அறிவர்?

இந்த அணி தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை புலர்வு கொண்டு வருகிறது. இதற்காக திலீபன் மருத்துவமனையின் மருத்துவராக பணியாற்றிய மருத்துவப் போராளி திரு. வண்ணன் அவர்களை புலர்வு நேர்காண்கிறது.

வணக்கம் திரு வண்ணன்.
வணக்கம் கவி

நீங்கள் ஒரு மருத்துவராக எங்கள் போராட்டம் மௌனித்த இறுதிக் கணம் வரை இயங்கிய ஒரு போராளி உங்கள் பணி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் இறுதி நாள்வரை ஒரு மருத்துவப் போராளியாக இயங்கி எம் மக்கள் மீது சிங்கள வல்லாதிக்கம் ஏவி விட்ட இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து பல உயிர்களை காத்த திருப்த்தி ஒன்று மட்டுமே என்னுள் வாழ்கின்றது. நான் ஒரு மருத்துவராக இக்கடமையை சரியாக செய்திருந்தேன். தியாக தீபம் திலீபன் மருத்துவமனையின் நிர்வாக அலகுக்குள் ஒரு மருத்துவராக மக்கள் பணியாற்றி இருந்தேன்.

– திலீபன் மருத்துவமனையின் நோக்கம்?

தியாக தீபம் மருத்துவமனை தமிழீழ தேசியத்தலைவரது எண்ணக் கருவில் உருவாகிய தமிழீழ விடுதலைப்புலிகளை அடையாளப் படுத்தக் கூடிய ஒரு மக்களுக்கான மருத்துவப் பணிப்பிரிவு. இது அடிப்படை மருத்துவ தேவைகள் எங்கெல்லாம் தேவைப் படுகிறதோ அங்கெல்லாம் அம் மருத்துவ தேவையை நிறைவேற்றுதல். இது கிராமங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்பதும் அங்கே தேவையான அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவேற்று வேண்டும் என்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டது என்றே கூறமுடியும்.

இதை ஆரம்பிப்பதற்கான புள்ளி எங்கே இருந்து போடப்பட்டது?

.இதற்கான புள்ளி இதுதான் என்று என்னால் வரையறுக்க முடியாமல் இருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த கிராமிய மட்ட சுகாதார செயற்பாடுகள் இருந்தன. என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

மக்களுக்கான மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக “ சுதந்திரப்பறவைகள் “ அமைப்பு பணியாற்றியதும், அம் மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வுகளையும் அடிப்படை மருத்துவ உதவிகளையும் அவர்கள் நிறைவேற்றியிருப்பதும் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள்.

இது மட்டும் அல்லாது, எமது விடுதலை இயக்கத்தின் மூத்த மருத்துவராக இருந்த திருமதி ஏழுமதி கரிகாலன் அவர்களினால் ஆரம்ப காலங்களிலே எழுதி வெளியிடப்பட்ட “போர்க்கால முதலுதவி” என்ற மக்களுக்கான நூல் போன்றவற்றோடு பல விடயங்களையும் குறிப்பிடலாம்

aunty.jpg

அதே நேரம் போராளிகளுக்கான மருத்துவப்பிரிவின் தேவைகள் உணரப்பட்டு அதன் அடிப்படைப் பயிற்சிகள் தொடங்கப்பட்ட போதே மக்களுக்கான மருத்துவத் தேவைகளும் உணரப்பட்டே இருந்தது. தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்ட போது அங்கே மருத்துவ மாணவர்களாக பயின்ற போராளிகளுக்கு தெளிவாகத் தலைவர் தெளிவாக உரைத்துத் தான் வளர்த்தார். அவரின் எண்ணங்களுக்கு ஏற்பவே இறுதியாக முள்ளிவாய்க்காலில் எம் விடுதலைப் போராட்டம் மௌனித்த நாள்வரை அவர்களால் மக்கள் பணியாற்ற முடிந்தது.

இது மட்டுமல்ல மருத்துவப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் குறுகிய காலத்திலே, தேவா அன்டி என்று அழைக்கப்படுகின்ற பெண் மருத்துவப் போராளி தனது அணியோடு கிராமங்களை நோக்கி நடமாடும் மருத்துவ சேவையினை வழங்கி வந்தார்.

எதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவாக இதை உருவாக்கினீர்கள்?

இது தலைவரின் திடமான முடிவாக இருந்தது. இதற்கு திலீபன் அவர்களின் தலமையில் உருவாகிய சுதந்திரப்பறவைகள் அமைப்பு முதலில் இப் பணிகளை செய்தது காரணமாக இருக்கலாம்; அல்லது அவர் ஒரு மருத்துவபீட மாணவனாக இருந்து போராளியாகியது காரணமாக இருக்கலாம்; அல்லது வீரச்சாவின் பின் கூட மருத்துவபீட மாணவர்களுக்காக தனது உடலத்தை கற்கைக்காக பயன்படுத்துங்கள் என்று கூறிய வார்த்தையாக இருக்கலாம்.

தியாக தீபம் திலீபன் மருத்துவமனை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தியாக தீபம் திலீபன் மருத்துவமனைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பான காலங்களில் மக்கள் பணிகளை மருத்துவப்பிரிவுப் போராளிகள் செய்திருந்தாலும் அது தமிழீழச் சுகாதாரசேவைகள் பகுதிப் போராளி மருத்துவர்களே செய்திருந்தார்கள். அதன் பின் திலீபன் மருத்துவமனை ஒரு கட்டமைப்பாக இக் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. முதலில் நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பித்தோம். அதனூடாக மக்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் தொற்றுநோய்த் தடுப்புக்கள், பாம்புக்கடி அல்லது விசக்கடி தொடர்பான விடயங்களை கையாண்டோம். அதன் செயற்பாடுகளை , அரசியல் துறையில் ஊரகமேம்பாட்டுப் பிரிவினரால் தெரிவு செய்யப்பட்டிருந்த கிராமங்களை நோக்கி முதலில் ஆரம்பித்தோம். அங்கே மக்களை நேரடியாக சந்தித்து, மக்களோடு நெருங்கி இருந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றினோம். நான் நினைக்கின்றேன் எமது கட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்பு முதல் சேவையை பூதன்வயல் கிராமத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பின்பு படிப்படியாக ஒவ்வொரு கிராமங்களை நோக்கி சென்றோம்.

thileepan_06_03_06_05.jpg

2002 ஆம் ஆண்டு மருத்துவமனை வளாகமாக கட்டிடங்களோடு நிமிர்ந்து நின்றது எமது கட்டமைப்பு. கற்சிலைமடு எனும் கிராமத்தில் முதலாவது மருத்துவமனையைத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் திறந்து வைத்தார். அதன் பெயர்ப்பலகையை மருத்துவக்கலாநிதி சூரியகுமாரன் திறந்து வைத்தார். அந்த வளாகத்தின் முதல் மருத்துவராக பெண் மருத்துவப் போராளி வசந்திமாலா பொறுப்பெடுக்கிறார்.

ஏன் கிராமப் புறங்களை நோக்கித் திலீபன் மருத்துவமனை செயற்பாடுகள் அமைந்தன?

அதன் நோக்கமே கிராமங்களில் வாழும் மக்களுக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை நிறுவுதல். ஏனெனில் அங்கே தான் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றும் வசதிகள் காணப்படவில்லை. நகர்ப் புறங்களில் தகுந்தளவுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கும். அதனால் நாங்கள் எங்கே தேவை இருக்கன்றதோ அங்கே பயணிக்கத் தொடங்கினோம்.

எம் தாயகப் பிரதேசத்தை பொறுத்தவரை அதிலும் வன்னியைப் பொறுத்தவரை சனத்தொகைச் செறிவு குறைவாகவே இருந்தது. அதனால், சகல கிராமங்களிலும் அடிப்படை மருத்துவ நிலையங்களை அமைப்பதில் அரசாங்கம் முனைவு காட்டவில்லை. ஏனெனில், அரச மருத்துவ திணைக்களம் சனத்தொகையை மையப்படுத்தியே மருத்துவமனைகளை உருவாக்கும். அதனால் எம் பிரதேசத்தில் அரச அடிப்படை மருத்துவமனைகள் அதாவது மத்திய மருந்தகங்கள் என்ற கிராமிய அளவிலான மருத்துவமனைகள் குறைவாகவே இருந்தது. அதனால் அவ்வாறான. மருத்துவமனைகள் இல்லாத போது மக்களால் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது. நீண்ட தூரப் பயணத்தில் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் எங்கெல்லாம் தேவைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நாங்கள் போக வேண்டி இருந்தது.

இங்கே பணியாற்றியவர்கள் பற்றி?

உண்மையில் அவர்கள் அனைவரும் போராளிகளே. அவர்கள் அனைவரும் தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவர்களே. அவர்கள் அனைவரும் தேசியத்தலைவரின் எண்ணங்களை இறுதிவரை உறுதியாக நிறைவேற்றியவர்கள். எந்த நேரம் என்றாலும் எந்த இடம் என்றாலும் மக்களுக்காகப் பணியாற்றும் தன்மை கொண்டிருந்தவர்கள். அரசியல் தெளிவும் மக்கள் மீதான நேசமும் அவர்களை உயர்ந்த சிந்தனையோடு பணியாற்றியவர்கள்

பெரும்பாலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்களே கடமையாற்றுவார்கள். அதனால் அவர்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய தேவை எழுந்தது. போராளிகளான அம் மருத்துவர்கள் சலிக்காமல் தொடர்ந்தும் பணியாற்றினார்கள். அதே நேரம் அக் கிராமத்து மக்கள் தாமாகவே முன்வந்து மருத்துவர்களுக்கு உதவத் தொடங்கினர். தொண்டர்களாக பல இளையவர்கள் பணியாற்ற முன்வந்தனர். அதனால் அவர்களுக்கும் அடிப்படை முதலுதவி பற்றிய பயிற்சிகளை வழங்கி தயார்ப்படுத்தினோம். அதன் பின்பாக பெண் போராளி மருத்துவர்கள் கடமையில் இருந்தால், அப் பெண் தொண்டர்களும் இரவு பகல் என்ற வித்தியாசம் இன்றி அம் மருத்துவமனை வளாகத்திற்குள்ளே தங்கி இருந்து பணிகளை செய்தனர்.

உதாரணத்துக்கு அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை ஓரிரண்டு உதாரணங்களூடாக நான் குறிப்பிட முடியும்.

நைனாமடு மருத்துவமனையின் மருத்துவர், எப்போதும் தனது தங்ககத்தில் இருந்து மருத்துவமனைக்கு அதிகாலையில் பேருந்தில் தான் போவார். ஏனெனில் அங்கே தங்குவதற்கான வசதிகள் இல்லாமல் இருந்ததால் நள்ளிரவு நேரம் சென்று வேறு இடத்தில் தங்கிவிட்டு அதிகாலையில் மருத்துவமனைக்கு திரும்புவது வழக்கம். அவ்வாறே அன்றும் மருத்துவரான தில்லைநம்பி பேருந்தில் போய் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பேருந்தில் மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்த ஒரு கர்ப்பிணித் தாய்க்கு அவசர நிலை. உடனடியாக அங்கே குழந்தை பிறந்து விடும் அபாயம். அங்கிருந்தவர்கள் பதட்டப்படுகிறார்கள். தாயும் சேயும் குறித்த நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாது போய்விட்டால் உயிர் தப்புவார்களா என்ற சந்தேகத்தில் எல்லோரும் பதட்டமடைந்த போது, தான் ஒரு மருத்துவன் என அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கிருந்தவர்களை பேருந்தில் இருந்து வெளியேற்றிவிட்டு சில பெண்களின் உதவியோடு பிரசவம் பார்க்கின்றார். அம்மாவையும், பிள்ளையையும் எந்த பிரச்சனையும் இன்றி உயிர் காக்கிறார். அன்று உண்மையில் தில்லைநம்பி அந்த இடத்தில் இல்லாது இருந்திருந்தால் அந்த தாயும் சேயும் ஆபத்தான நிலையில் இருந்திருப்பர் அல்லது இறந்திருப்பர்.

அதை போலவே இன்னொரு மருத்துவமனையில் ஒரு மருத்துவப் போராளி கடமையில் இருந்த போது, அங்கே அவசர சிகிச்சைக்காக சிறு பிள்ளை ஒன்று கொண்டுவரப்படுகிறாள். அந்த பிள்ளைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. மூச்சுக்குழாயைச் சளி அடைத்திருந்தது. மூச்செடுப்பதில் பலத்த சிரமம் ஏற்பட்டிருந்தது. அப்போது அந்த மருத்துவமனையில் மூச்சுத் திணறலைச் சீர்ப்படுத்தும் கருவிகள் எதுவும் இல்லை. அதனால், சாதாரண குழாய் ஒன்றை மூக்கு வழியாக உள்ளே செலுத்தி அப்பிள்ளையின் சளியை தனது வாய்க்குள் உறிஞ்சி எடுத்து வெளியில் துப்புகிறார். பெற்ற தாய் கூட செய்ய அருவருக்கும் இச் செயற்பாட்டை அன்று எம் போராளி செய்து அப்பிள்ளையின் உயிரைக் காக்கிறார். அதனூடாக அப் பிள்ளைக்கு மூச்சுத் திணறலை சீர்ப்படுத்துகிறார்.

இவ்வாறு பல ஆயிரம் சம்பவங்கள் எம் மருத்துவர்களின் வரலாற்று படிவங்கள்.
இதைப் போலவே மாங்குள மருத்துவமனை மருத்துவரஇன் சம்பவம் . ஒரு தடவை பிரசவத்துக்காக வந்து கொண்டிருந்த தாய் ஒராள் தொடர்ந்து உந்துருளியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது தாயகப் பிரதேசங்களில் வாகன வசதிகள் என்றால் அப்போதெல்லாம் உந்துருளிகள் தான். அதனால் அதில் பயணம் செய்த அந்த தாயால் தொடர்ந்து பயணிக்க முடியாது வீதியில் படுத்துவிட, அவரது கணவன் மருத்துவரிடம் ஓடி வருகிறார். அவசரமாகத் தன் மனைவியின் நிலையை தெரிவிக்கிறார். மருத்துவரோ அவசர நிலை உணர்ந்து உடனடியாக அப்பகுதிக்குச் செல்கிறார். மாங்குளத்தின் தேசித் தோட்டம் தாண்டி கொய்யாத் தோட்டத்துக்கு அருகில் அந்த தாய் நிலத்தில் படுத்திருந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத காலம் கடந்திருந்தது. உடனடியாக பிரவசம் பார்க்க வேண்டிய சூழல் அதனால் அவ்வீதியின் அருகில் இருந்த ஒரு மர நிழலில் வைத்து பிரசவம் பார்த்து அக் குழந்தையையும் தாயையும் தியாக தீபம் திலீபன் மருத்துவமனை மருத்துவர் காப்பாற்றுகிறார்.

இன்னொரு உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம்.

தென் தமிழீழத்தின், பாட்டாளிபுரம் என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு நாங்கள் எம் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் நகர்ந்து விட்ட சமாதான உடன்படிக்கை முறிவுக்காலம். அதனால் எப்போதும் விடுதலைப் புலிகளை இராணுவம் தாக்கலாம் அல்லது கைது செய்யலாம் என்ற நிலை. அதனால் எம்மை எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி பொறுப்பாளர்கள் அறிவுறுத்தியபடி இருப்பர். நாங்களும் கவனமாகவே இருந்தோம். அப்படி இருக்கும் போது ஒருநாள் ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு சிறுபிள்ளை இரும்பு நட்டு ஒன்றை விழுங்கி விட்டது. அப்பிள்ளையின் தாய் கையால் அதை எடுக்க முற்பட்டு போது அது இன்னும் உள்ளே சென்றுவிட்டது. உடனடியாக திலீபன் மருத்துவமனைக்கே அவர்கள் கொண்டு வருகிறார்கள். அப்போது, எமது மருத்துவமனையில் அப் பிள்ளைக்கு சிகிச்சை தரக்கூடய உபகரணங்கள் இல்லை. அதனால் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக அரசமருத்துவமனைக்கு அனுப்பியாக வேண்டும். இல்லையெனில் பிள்ளைக்கு உயிராபத்து ஏற்படலாம். ஆனால் அரச மருத்துவமனையோ இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதனால் உடனடியாக பிள்ளையை நோயாளர்காவு வண்டியில் அனுப்ப வேண்டும். ஆனால் எமது நோயாளர் காவு வண்டிக்கான சாரதி அப்போது அங்கே இருக்கவில்லை. அவர் விடுமைறையில் சென்றிருந்தார். அங்கே இருந்தவர்களுக்கு வாகனம் ஓடத் தெரியாது.

அதனால் பெரிய பிரச்சனை எழுந்தது. அங்கிருந்த மருத்துவப் போராளி அங்கு சென்று குறுகிய காலம் என்பதால், பாதை கூடத் தெரியாது. அதனால் அங்கிருந்தவர்களை அழைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுகிறான் அந்த மருத்துவப் போராளி. நீங்கள் பாதையை மட்டும் காட்டுங்கள் நானே வாகனம் ஓடுகிறேன் என சொல்கிறான். ஆனால் அவர்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள். அந்த நேரத்தில் ஒரு போராளியை அழைத்துக் கொண்டு இராணுவப் பகுதிக்குள் போவதற்கு அவர்கள் யோசித்திருக்கலாம். ஆனால் நிலமையின் தீவிரத்தை வலியுறுத்தி வற்புறுத்தியதால் அவனோடு புறப்படுகிறார்கள். .

அவனோ தனது பொறுப்பாளரிடம் அனுமதி பெறவில்லை. போவது இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதி. எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை. ஆனாலும் அதைப்பற்றி எதையும் அவன் நினைக்கவில்லை. தான் கைதாகலாம் அல்லது சாகடிக்கப்படலாம். ஆனாலும் அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவனின் நினைவில் அப்பிள்ளையே இருந்தது. மூச்செடுக்க முடியாது தவிக்கும் அப்பிள்ளைக்கு மேலதிக சிகிச்சை வழங்கவில்லை என்றால் நிச்சயம் சாவடைந்துவிடும் என்று தெரிந்ததும் தன் உயிரைப்பற்றிச் சிந்திக்க தோன்றவில்லை. இந்த இளையவர்களுக்காக போராடத் துணிந்த அவனால் தன்னுயிர் பற்றி சிந்திக்க முடியவில்லை.

வாகனத்தை செலுத்தி கொண்டு செல்கின்றான் போகும் போது எந்தத் தடையும் இருக்கவில்லை. இராணுவம் சாதாரண சோதனையோடு செல்வதற்கு அனுமதிக்கிறது. ஆனால் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும் போது, தடைமுகாமில் இருந்த இராணுவம் மறித்து பிரச்சனை பண்ணத் தொடங்கியது. அப்போது தான் அவனுக்கு அவனின் நிலை புரிந்தது. ஆனால் மனம் தளராமல் ஏதேதோ காரணங்களை சொல்லி , பொய்களை உரைத்து அவர்களை ஏமாற்றி விட்டு மீண்டும் தன்னோடு வந்தவர்களோடு மருத்துவமனைக்குத் திரும்பி வந்தான்.

அப்போதெல்லாம், தேசியத் தலைவர் எம் கட்டமைப்பை உருவாக்கியதும், அப்பணியில் நாம் ஈடுபடுவதும் மனநிறைவாக இருந்தது. எம் போராளிகள் எதைப் பற்றியும் சிந்திக்காமலே பணியாற்றினார்கள். களமருத்துவப் போராளிகள் களத்தில் நின்று பணியாற்றும் அதே வேளை நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்காக விழித்திருந்து பணியாற்றினோம்.

எங்கெல்லாம் தியாகதீபம் திலீபன் மருத்துவமனைகள் இயங்கின?

பெரும்பாலும் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் பல மருத்துவமனைகள் உருவாகி இருந்தன. குறிப்பாக முதலாவது மருத்துவமனையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கற்சிலைமடுக் கிராமத்தில் முதல் மருத்துவமனை தனது சேவையை ஆரம்பித்தது. அதற்கு எம் மருத்துவப் போராளி திருமதி. வசந்திமாலா மருத்துவராக நியமிக்கப்படுகிறார். அதன் செயற்பாட்டு ஆரம்பத்தோடு இயங்கத் தொடங்கிய மருத்துவமனைகள் சிறப்பாக இயங்கின. அதை தொடர்ந்து,
கிளிநொச்சி மாவட்டம் – பூநகரி,
வவுனியா மாவட்டம் – நைனாமடு மற்றும் புளியங்குளம்,
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் மற்றும் மாங்குளம்,
மன்னார் மாவட்டம் கறுக்காய்குளம் மற்றும் முத்தரிப்பு
போன்ற இடங்களில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முத்தரிப்புத்துறை பகுதியில், எம் மருத்துவமனை இயங்கிய போதும் முத்தரிப்புத்துறையின் அமைவிடம் காரணமாக முழுமையான செயற்பாடுகளை திலீபன் மருத்துவமனை கட்டமைப்பால் செய்ய முடியாது இருந்தது. அதாவது முத்தரிப்புத்துறை சிங்களப் படைகளின் கட்டுப்பாடோ அல்லது எமது கட்டுப்பாட்டுக்குள்ளோ இல்லாத ஒரு சூனியப்பிரதேசமாகும். அதனால் அங்கே முழுமையான திலீபன் மருத்துவமனை நிர்வாகக் கட்டுப்பாடென்றில்லாமல், மருத்துவப் போராளி ஒருவர் அங்கிருந்த விடுதலைப்புலிகளின் வேறு பிரிவுகளோடு இணைந்து மக்கள் பணியாற்றினார்.

திலீபன் மருத்துவமனைகள் வன்னியில் மட்டுமா இயங்கின ?

இல்லை. ஆரம்பத்தில் வன்னிக்குள் எமது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளான யாழ் மாவட்டத்திலும், தென்தமிழீத்திலும் எமது மருத்துவமனையின் அவசியம் உணரப்பட்டது. அதனால், யாழ்ப்பாணத்தின் தீவகக் கோட்டத்தில் உள்ள நெடுந்தீவுப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தோம். அதோடு புங்குடுதீவுப் பகுதியிலும் ஆரம்பித்தோம். அப்போது யாழ்மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பருதி தொடக்கம் தீவகக் கோட்டப் பொறுப்பாளராக இருந்த திரு. கண்ணன் வரைக்கும் இம் மருத்துவமனைகளை உருவாக்குவதற்கும் பூரணமான செயற் பாட்டுக்கும் உந்துசக்தியாக இருந்தனர்.

அதைப் போலவே தென் தமிழீழ மக்களுக்கான மருத்துவத் தேவைகள் மிக முக்கியமானவையாக உணரப்பட்டு அங்கும் மருத்துவமனையை உருவாக்கி இருந்தோம்.
திருகோணமலை மாவட்டத்தின் பாட்டாளிபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளி மற்றும் கொக்கட்டிச்சோலை,
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு என்ற கிராமத்தில் மருத்துவ மனைகள் இயங்கத் தொடங்கின.

தியாகதீபம் திலீபன் மருத்துவமனைக்குரிய மருத்துவர்களின் உருவாக்கம் என்பது எப்பிடி இருந்தது?

உண்மையில் திலீபன் மருத்துவமனை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கென்று தெரிவுசெய்யப்பட்ட மருத்துவப் போராளிகள் அனைவருக்கும் ஒரு விடயம் தெளிவூட்டப் பட்டிருந்தது.

திலீபன் மருத்துவமனை மருத்துவர்கள் ஏனைய மருத்துவர்களைப் போலல்லாது, மக்களுக்குள் நின்று வேலை செய்ய வேண்டியவர்களாக இருப்பதால், அவர்கள் அதற்கேற்ற மருத்துவப் போராளிகளாகவே உருவாக வேண்டும் என்பது முக்கியமாகின்றது. மக்களுடன் மக்களுக்காக நின்று பணியாற்றுபவர்கள் என்பதால், அவர்கள் எப்போதும் மருத்துவம் மட்டும் அல்லாது வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து விடயங்களிலும் அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டது.

கியூபாவில் போர் நடந்த போது அமெரிக்காவின் பொருளாதாரத்தடையின் கொடூரத்திலும் தாக்குதல்களினாலும் மருத்துவ வசதிகளற்றும் பல ஆயிரம் மக்கள் இறந்த கொடுமைக்கு மத்தியில் சர்வதேசத்தை நோக்கி உதவிக்கரம் நீட்டிய பிடல் கஸ்ரோவுக்கு சர்வதேச நாடுகள் உதவ மறுத்த நிலையில், பிடல் கஸ்ரோ தனது உன்னத நோக்கத்தை நிறைவேற்ற திட்டமிட்டார். காலணிகள் அற்ற மருத்துவர்களை உருவாக்கினார். அவர்களினூடாக மக்களுக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்யத் தொடங்கினார்.

இவர்கள் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்ட மருத்துவர்கள், வெற்றுக் கால்களுடன் கிராமம் கிராமமாக நடந்து சென்று மக்களோடு மக்களாக அவர்களது தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

அவ்வாறான மருத்துவர்களாக நாம் உருவாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ( அதற்காக வெற்றுக் கால்களோடு பயணித்தவர்கள் என்று நினைக்க வேண்டாம் ) மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டி இருப்பதால் நாங்கள் பல விடயங்களில் தயாராக வேண்டிய தேவை எழுந்தது. அவர்களோடு நட்பாகவும் அவர்களின் காப்பாளராகவும், அவர்களுக்கு வழிகாட்டிகளாகவும், அவர்களின் தோழனாகவும், நல்ல உறவாகவும் நாங்களே இருக்க வேண்டும் எனக் கற்பிக்கப்பட்டது. அதை பின்பற்ற வேண்டிய அவசியம் கட்டாயமாகியது.

அதனால் நாம் அதற்கு ஏற்றபடி தான் உருவாக்கப்பட்டோம். இது தொடர்பாக எமது தேசியத் தலைவர் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். அதனால் டொக்டர் அன்டி என்று அனைவரும் அழைக்கும், திருமதி. எழுமதி கரிகாலன் மற்றும் மருத்துவக் கலாநிதி சூரியகுமார் ஆகியோரிடம் எம் கற்கைக்கான பொறுப்பு வந்து சேர்கிறது. இதற்கான கல்வித்திட்டத்தை திட்டமிட்டு அதற்கான விரிவுரையாளர்களை நியமித்துப் பயிற்சிகளை அவ்விரு மருத்துவக் கலாநிதிகளும் அரம்பித்தனர்.

கற்றலுக்காக உள்வாங்கப்பட்ட அனைவரும் மருத்துவராக பணியாற்றினீர்களா?

அம் மருத்துவக் கற்கையை முழுமையாக கற்றுத் தேறி பரீட்சைகளில் சித்தியடைந்த போராளிகள் மட்டுமே மருத்துவர்களாக வெளியேறினோம். நடாத்தப்பட்ட பரீட்சையில் பலர் தோற்றிருந்தனர். சிலர் பயிற்சியில் தேறாமல் கற்றலை விட்டு வெளியேறியும் இருந்தனர். ஆனாலும் அந்த மருத்துவப்படிப்பை கற்று முடித்து மருத்துவர்களாக அனேகமானவர்கள் வெளியேறினோம். அப்படி இருந்தும் உடனடியாக நாம் பணிக்காக அனுப்பப்படவில்லை. எமக்கு மருத்துவப் பயிற்சி மட்டும் போதாது வேறு சில பயிற்சிகளும் தேவை என்ற எண்ணப்பாடு அங்கே உறுதியாக இருந்தது.

எவ்வகையான பயிற்சிகள்?

விசக்கடி மருத்துவம், மகப்பேற்று மருத்துவம், அடிப்படை சத்திரசிகிச்சைகள் இது தவிர அரசியல் பயிற்சிகள்.

அரசியல் பயிற்சியா? ஒரு மருத்துவருக்கு எதற்கு அரசியல்?

நான் ஏற்கனவே கூறியதைப் போல ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் எமது மருத்துவருக்கு தனியே மருத்துவ அறிவு மட்டும் போதாது என் விடயத்தில் எமது வளவாளர்கள் உறுதியாக இருந்தார்கள். எனக்குத் தெரிய உலகளவில் நோக்கினால் தமிழீழ அரசு மட்டுமே மருத்துவர்கள் கட்டாயமாக அரசியல் தெளிவுள்ளவர்களாக மக்களுக்குள் பணியாற்ற வேண்டும் என்ற விடயத்தில் நம்பிக்கையாக இருந்தது. ஏனெனில், நாம் மக்களோடு இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்களாக இருந்ததால், மக்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் இணைந்து நிற்பதற்குத் தேவையான பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருந்தோம்.

மருத்துவ அறிவை மட்டும் வைத்து மக்களிடம் சென்றால் அவர்கள் எம்மை வேற்றாளர்களாக பார்க்கும் சந்தர்ப்பம் இருப்பதை நாமும் உணரந்தே இருந்தோம். அதனால் மக்களோடு நெருங்கி இருப்பதற்கு சகல ஆளுமைகளும் உள்ளவர்களாக நாம் உருவாக வேண்டி இருந்தது. உதாரணமாக, சிறு பிள்ளைகள் கல்வியில் சந்தேகம் கேட்டாலோ, பெரியவர்களுக்கு குடும்பங்களில் சிறு சிறு பிணக்குகள் வந்தாலோ அவற்றுக்கான தீர்வுகளை நாமே வழங்கும் போது அவர்களுக்கு எம்மில் நம்பிக்கையும், நெருக்கமும் உண்டாகும் என்பதில் எந்தச் சிக்கல்களும் இருக்கவில்லை. அதனால் முழுமையாக நாம் தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் மக்கள் சமூகம் என்பது பல விடயங்களை கொண்டது. அங்கே பல பழக்கவழக்கங்கள், எதிர்பார்ப்புக்கள், நடைமுறைகள் இருக்கும் அவற்றைப் பற்றிய அறிவு இல்லாது நாம் அவர்களோடு இணைந்து பணியாற்றுவது என்பது சாதாரணமானதல்ல.

அதற்காக தூயவன் அரசறிவியல் கல்லூரியில் எமக்கு புதிய பயிற்சிகள் ஆரம்பித்தது. அங்கே பொறுப்பாளராக இருந்த திரு. உமைநேசன், அதிபராக இருந்த திரு. அரசண்ணா, நிர்வாகப் பொறுப்பாளராக இருந்த திரு. பாரிமகன் ஆகியோர் இவற்றுக்கான கல்வித்திட்டத்தை உருவாக்கி நடாத்தினார்கள். அங்கே தூயவன் அரசறிவியல் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் உட்பட வெளியில் இருந்து துறைசார் வல்லுனர்கள் விரிவுரையாளர்களாக வந்தார்கள். நீதி நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பரா, மற்றும் தமிழீழ காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலரும் எமக்கு விரிவுரைகளை நடாத்தினர். அதில் உளவியல், மக்கள் தொடர்புகளைப் பேணுதல், சாதிய பிரச்சனைகள், தமிழீழச் சட்டங்கள், காவல்துறை நடைமுறைகள், அரசியல் தெளிவு , மக்களின் பிரச்சனைகள் அவற்றுக்கான. தீர்வுகள் எனப் பல விடயங்கள் கற்பிக்கப்பட்டன.

முக்கியமாக எனக்கு தூயவன் அரசறிவியல் கல்லூரியின் அதிபர் அரசண்ணா எடுத்திருந்த தமிழீழத்தின் சாதியம் பற்றிய வகுப்பு எனக்கு எம் தாயகத்தில் இருந்த சாதிய விழுமியங்கள் பற்றிய முழுமையான பார்வையையும் உயர்ந்த தாழ்ந்த என்ற பாகுபாட்டை உடைத்து ஒரு சமத்துவ சமூகத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையும் தெளிவாக கற்றுத் தந்தது. அதுவரை சாதியம் என்பதை பற்றிச் சிந்திக்கவோ அல்லது அதை பற்றி அறிவதற்கோ எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால் மக்களிடையே பணியாற்றப் போகின்றவன் என்ற நிலையில் நான், பின் சந்தித்த பல பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கக்கூடியவனாக அவ்வகுப்பு எனக்கு வழிகாட்டியது.

அதோடு ரெயினோல்ட் அடிகளார், அரசியல் ஆய்வாளர் திரு. மாஸ்டர், மற்றும் கிளி பாதர் ஆகியோர் வகுப்பெடுத்தார்கள். இதில் கிளி பாதர் என்று அன்பாக அழைக்கப்படும், கருணாரட்ணம் அடிகளார், அனைத்து மதங்களையும் சார்ந்த மதபோதகர்களின் மூடநம்பிக்கைகளும் அவற்றில் எவை நம்பக்கூடியவை, எவை நம்பிக்கையற்றவை அவற்றை எவ்வாறு உடைப்பது என்பது பற்றியும் வகுப்பெடுத்தார். அது தொடர்பாக மிக தெளிவாக எமக்கு பல விடயங்களை எமக்குள் விதைக்கிறது. மதத்தைத் தாண்டி மக்களுக்கு இந்த மருத்துவத்தால் என்ன செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டி எம்மை புடம் போட்டது. இங்கும் பரீட்சைகள் நடாத்தப்பட்டு நாங்கள் அதன் பின்பு தான் நாம் முழுமையான திலீபன் மருத்துவமனையின் மருத்துவர்களாக வெளியேறினோம்.

இப்படியான வகுப்புக்களோடு நாம் எம்மை தயார்ப்படுத்திக் கொண்டு இறுதியாக ஒரு கையெழுத்தேட்டை “சுற்றோட்டம்” என்ற பெயரில் ஒன்றை வெளியிடுகிறோம். அந்தப் புத்தக வெளியீட்டோடு எமது மக்களுக்கான பணி ஆரம்பிக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது வாழ்வில் பல விடயங்களை கற்கவும் என்னை நானே புடம் போட்டுக் கொள்ளவும் இப்பயிற்சிகள் பெரிதும் உதவின.

திலீபன் மருத்துவமனை தனி அலகாக செயற்பட்டதா?

ஓம். மருத்துவப் பிரிவுக்குள் களமருத்துவம், சுகாதாரசேவை, களஞ்சியப்பகுதி, கொள்வனவுப்பகுதி என பல அலகுகள் தனியே இயங்கியதைப் போலவே திலீபன் மருத்துவமனையும் தனியலகாக இயங்கியது. இதற்கு முதல் பொறுப்பாளராக, திருமதி. எழுமதி கரிகாலன் இருந்தார். பின் பல பொறுப்பாளர்கள் மாறி வந்தாலும் இறுதிக் காலங்களிலும் திருமதி எழுமதி கரிகாலனே அப் பொறுப்பை ஏற்றிருந்தார். திலீபன் மருத்துவமனைக்காக தனி இலட்சணை இருந்தது. அதன் பணியாளர்களுக்கென்று தனிச் சீருடை இருந்தது. இவற்றையெல்லாம் தாண்டி தனித்துவமான செயற்பாட்டு நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. ஆனாலும் செயற்பாடுகளின் போது எந்தப் பிரிவும் பிரிந்து நின்றதில்லை. இணைந்தே செயற்பாடுகளை செய்தோம்.

திலீபன் மருத்துவமனை தொடங்கிய போது தடைகள்.

உண்மையில் எங்களது மருத்துவக் கற்கைகளை முடித்து வெளியேறிய போது எமக்கு பல கேள்விகள் எழுந்தன. மருத்துவப் பொருட்களின் தட்டுப்பாடு என்பது அதில் மிக பிரதானமானதாக இருந்தது. ஏனெனில் அக் காலம் வன்னிப் பிரதேசம் எங்கும் பொருளாதார/ மருத்துவத் தடை இருந்த காலம். அதனால் மருத்துவப் பொருட்கள் கிடைப்பது என்பது பெரிய விடயம், எமது மருத்துவப் பிரிவின் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரிவு மருந்துகளே எம் மருத்துவப்பிரிவின் தேவைகளை நிறைவேற்றி வந்தது. இந்த நிலையில், மக்களுக்காக நாம் வெளிப்படையாக செயற்படத் தொடங்கும் போது குறைவற்ற மருத்துவ வளங்கள் எமக்கு கிடைக்குமா என்பதே பிரதான பிரச்சனை. அதனால் இம் மருத்துவ தேவையை யார் நிறைவேற்றுவது என்பது தான் பிரச்சனையாக இருந்தது. ஆனாலும் எமக்கான மருத்துவப்பிரிவின் மருத்துவக் களஞ்சியத்தின் ஊடாக, பெறுவதாக முடிவெடுக்கப்பட்டு எமக்கான தேவைகளை வரையறுத்து மருந்துகளுக்கான பாதீடு அனுப்பப்பட்டு அவர்களால் அனுமதிக்கப்பட்டு எமக்கான மருந்துகள் வழங்கப்பட்டன. அதாவது போராளிகளுக்கு மருத்துவப்பிரிவினால் வழங்கப்படும் மருந்துகள் மக்களுக்காக திலீபன் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு இத் தடை தீர்கிறது.

அடுத்தது மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை அனுப்புவதற்கு பிரதானமாக நோயாளர் காவு வண்டி தேவை ஏற்படுகிறது. ஏனெனில் திலீபன் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களை அவர்களின் வாகனங்களிலேயே மேலதிக சிகிச்சைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அதனால் மருத்துவ வளங்களைக் கொண்ட வாகனங்கள் தேவை இருந்தது.

எங்கிருந்து அத் தேவைகளை நிறைவேற்றினீர்கள்?

அது பல வழிகளில் கிடைத்தது. உதாரணமாக புங்குடுதீவில் நான் பணியாற்றிய போது, கனடாவில் இருந்து தாயகம் வந்திருந்த புங்குடுதீவு பழையமாணவர் சங்கத்தை சார்ந்த உறவான அருட்பிரபா என்பவர் என்னைச் சந்திக்கிறார். சந்தித்து அன்றைய தேவைகள் திலீபன் மருத்துவமனையின் பணிகள் போன்றவற்றை கலந்துரையாடிவிட்டு கனடா சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் என்னோடு தொடர்பு கொண்டு தான் தமது நிர்வாகக் கட்டமைப்போடு பேசியதாகவும், அவர்கள் புங்குடுதீவுக்கான நோயாளர் காவு வண்டியை வாங்கித் தர அனுமதித்ததாகவும் கூறுகின்றார். அப்போது நான் ஒரு மருத்துவராக இருந்த காரணத்தால் அப் பணத்தை நேரடியாக கையாள முடியாது. அதனால் உடனடியாக திலீபன் மருத்துவமனைப் பொறுப்பாளர் மற்றும் அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர், சோ.தங்கன் ஆகியோருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி அவர்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்துகிறேன். அப்போது கனடாவில் இருந்து, 30லட்சத்துக்கு மேலான பணம் ( சரியாக தொகை நினைவில்லை ) அனுப்பப்பட்டு உடனடியாக நோயாளர் காவு வண்டி கொள்வனவு செய்யப்படுகிறது. அவ்வண்டி யாரால் எமக்கு வழங்கப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய எழுத்துகள் பொறிக்கப்பட்டு புங்குடுதீவில் நோயாளர்களுக்கான சேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

திலீபன் மருத்துவமனைகள் நடமாடும் மருத்துவ சேவைகளை மட்டுமா செய்தன?

அவ்வாறு இல்லை திலீபன் மருத்துவமனை தனித்து நடமாடும் மருத்துவ சிகிச்சைகளை மட்டும் நடாத்தவில்லை. மருத்துவமனைகளாகவும் இயங்கின. கிட்டத்தட்ட 12 இடங்களில் மருத்துவமனைகளாகவும், தேவைப்படும் இடங்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைகளும் இடம்பெற்றன.

எத்தகைய பணிகள்?

மருத்துவ சிகிச்சை.- நோய் வர முதல் தடுத்தல், தொற்றுநோய் அல்லாத நோய்களுக்கான சிகிச்சை வழங்குதல், விழிப்புணர்வு செயற்பாடுகள். மாணவர்களுக்கான கல்வி கற்பதற்கான செயற்பாடுகள், அடிப்படை மருத்துவ முதலுதவி தொடர்பான பயிற்சிகள், பற்சுகாதாரம், உடலியல் சுகாதாரம் போன்றவற்றை நாங்கள் மக்களிடையே செயற்படுத்தினோம்.

எமது மருத்துவர்கள் அனைவராலும் அனைத்துப் பிரதேசங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், நான் இந்த பயிற்சித்திட்டத்தை புங்குடுதீவில் பணியாற்றிய போது செய்யத் தொடங்கி இருந்தேன். அப்போது அத் திட்டத்தில் என்னிடம் புங்குடுதீவில் கிட்டத்தட்ட 120 மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள். அப் பயிற்சிகள் நிறைவுற்ற போது அவர்களுக்காக ஒரு பரீட்சையை செய்து சான்றிதழ் வழங்க வேண்டி இருந்ததால், அப் பரீட்சையை நடாத்திச் சான்றிதழ் வழங்குகிறேன். அச் சான்றிதழில் தமிழீழ அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர், தமிழீழ சுகாதாரசேவைகளின் பொறுப்பாளர், யாழ்மாவட்ட சுகாதாரசேவைப் பணிப்பாளர் ( இலங்கை அரச யாழ்மாவட்டப் பணிப்பாளர்) ஆகியோர் கைபொப்பமிட்டு பெறுமதியான சான்றிதழாக அதை தியாக தீபம் திலீபன் நினைவு நாளில் வழங்கினேன். பின்பான நாட்களில், திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் என்ற அடையாளத்தோடு அவர்கள் பணியாற்றியதும் நிறைவாக இருந்தது. பின்பு நான் மட்டக்களப்பில் பணியாற்றிய காலத்தில், அங்கே இருந்த அரசசார்பற்ற நிறுவனமான உலகில் வைத்தியர் நிறுவகம், எம்மோடு இணைந்து ஒரு கற்கைநெறியைச் செய்து முதலுதவியாளர்களை உருவாக்கினோம். அங்கும் நாம் பெறுமதியான சான்றிதழ்களை வழங்கினோம். அதில், அரச சார்பற்ற நிறைவனப் பொறுப்பதிகாரி, மாவட்ட அரசி சுகாதாரசேவைப் பணிப்பாளர், மற்றும் திலீபன் மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் வழங்கி அவர்களை நல்ல முதலுதவியாளர்களாக உருவாக்கினோம்.

இதைப் போலவே கிழக்கு மாகானத்திலும் முதலுதவியாளர்களின் அணி ஒன்றை நாங்கள் உருவாக்கினோம் அத் திட்டத்தில் கிட்டத்தட்ட 75 பேரை கற்பித்து முதலுதவியாளர்களாக உருவாக்கினோம். இதற்காக அப்போது மருத்துவ பணிகளை செய்து வந்த “உலக மருத்துவர்கள் (MDM) என்ற சர்வதேச அமைப்பு மிக முக்கிய பணியை செய்திருந்தது. அத்திட்டத்துக்கான முழு பொறுப்பையும் எடுத்தது மட்டுமல்லாமல் சான்றிதழில் வலது பக்கம் மாவட்ட அரச வைத்திய பணிப்பாளர் நடுவில் உலக மருத்துவ அமைப்பு சார்ந்த அதிகாரி இடது பக்கம் கிழக்கு மாகான தியாக தீபம் திலீபன் மருத்துவமனை பணிப்பாளர் என்று மூன்று பெறுமதியான கையொப்பங்களைத் தாங்கிய சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

தியாகதீபம் திலீபன் நினைவு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் பற்றி.

அர்ப்பணித்து பணியாற்றினார்கள். வளங்கள் பற்றாக்குறை இருந்தாலும், நிறைவாக மக்களுக்கான பணிகளை செய்தார்கள். இரவு பகல் என்றில்லாது ஓய்வு இல்லாது ஒவ்வொரு பணிகளிலும் பங்கெடுத்தார்கள்.

அனர்த்தமுகாமைத்துவ செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன?

இதற்குச் சான்று “சுனாமி “. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது அவன்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க எப்போதும் நாங்கள் தயாராகவே இருந்தோம். எம் அணியை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் களமருத்துவப் போராளிகளாக இருந்தவர்களே. அதனால் சுனாமி ஏற்பட்ட போது கூட அதன் தாக்கம் எமக்கு புதிதாகத் தோன்றவில்லை.

சுனாமி தாக்கிய போது நான் முல்லைத்தீவுக் கடற்கரையில் இருந்து மிக அருகிலே நின்றிருந்தேன். மக்கள் ஓடி வருவதைப் பார்த்து விசாரித்த போது, கடல் ஊருக்குள் புகுந்து விட்டதாகவும் நிறையப் பேரை அடித்துச் சென்று விட்டதாகவும் மக்கள் கூறினார்கள். நான் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த போது முல்லைத்தீவுக் கடற்கரை உருக்குலைந்து காணப்பட்டது. உடனடியாகவே களச்செயற்பாட்டில் நான் இறங்கினேன். காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தி முதலுதவிகளைச் செய்தேன் இறந்து போயிருந்தவர்களை ஓரிடத்தில் கொண்டு வந்து கிடத்திய போது மீண்டும் பேரலை வருவதை கண்ணுற்று பின்னால் நகர்ந்து வந்தோம். இரண்டாவது சுனாமியும் தாக்கிய பின் அந்த இடத்தில் எதையும் பார்க்க முடியாத அளவுக்கு மீண்டும் உருக்குலைந்து கிடந்தது முல்லை மண்.

அந்த இடத்தில் இருந்து முற்றுமுழுதாக திலீபன் மருத்துவமனை மருத்துவர்கள் மக்களோடு மக்களாக பணியாற்றத் தொடங்கினோம். அனர்த்தம் நடந்த உடன் மக்களின் இழப்புக்களிலும் சரி, காயப்பட்டவர்களைகளை காப்பாற்றுவதிலும் சரி மருத்துவப்பிரிவும் தமிழீழ சுகாதாரப்பிரிவும் நாமும் அரச மருத்துவர்களோடு இணைந்து பணியாற்றினோம். இது தவிர சுனாமித் தாக்கம் நடந்து பல மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுகைப்படுத்தும் செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டோம்.

இந்த இடத்தில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று மருதங்கேணிப் பகுதியில் நடந்தது.
7 குழந்தைகளைப் பெற்ற தாய் தனது 7 குழந்தைகளையும் பேரலைக்கு விலையாக கொடுத்து தனித்து நின்ற வேளையில் அந்த தாய் முற்றுமுழுதாக மனநோயாளியாக மாறக்கூடிய அபாயம் இருந்த போது அந்தத் தாயோடு நான் பேசினேன். அந்தத்தாய்க்கு இன்னும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் வயதும் உடல்நிலையும் இருந்ததால் நான் அதை குறிப்பிட்டு கவலைப்பட வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அந்தத்தாயோ “ 7 பிள்ளைகளைப் பெற்ற பின்பு கருத்தடை சத்திரசிகிச்சை செய்து விட்டதை கூறி வருந்தினார். பெற்றவர்களும் இல்லை இனிப் பெறவும் முடியாது என்று வருந்தினார். அந்த நிலையில் அந்தத் தாயை மனநிலை ஆற்றுகைப்படுத்தி சாதாரண தாயாக மாற்றுவதற்காக நான் உட்பட்ட பலர் முயன்று வெற்றி பெற்றோம்.

இவ்வாறு எம் திலீபன் மருத்துவமனையை சார்ந்தவர்களும் தமிழீழ சுகாதார மற்றும் மருத்துவப்பரிவு சார்ந்தவர்களும் பணியாற்றினோம்.

தொற்று நோய்த் தாக்கங்கள் ஏற்பட்ட போது அவற்றை தடுக்கும் செயற்பாடுகள் பற்றி?

தொற்றுநோய் தாக்கம் ஒன்று ஏற்பட்டால் அவற்றை இரண்டு வழிகளில் கையாள வேண்டும்
1. தொற்றுநோயாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கான சிகிச்சையை வழங்குதல்
2. தொற்றுநோய் ஏனையவர்களுக்குப் பரவாமல் இருக்கக் கூடியதான தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செய்தல்.

இவ்விரண்டிலும் எம் மருத்துவப்பிரிவு சிறப்பாக இயங்கியது. இதற்கு பல சான்றுகள் உள்ளன.

நான் நினைக்கிறேன் 1995- 1999 காலப்பகுதி வரை வன்னியில் மிக பாரிய நோயாக கொள்ளக் கூடியது மலேரியா. இந்த மலேரியாவை இல்லாமல் செய்ததில் எம் மருத்துவப்பிரிவு பெரும் வெற்றியை கண்டது. மருத்துவ கலாநிதி சுஜந்தன் தலைமையில் மருத்துவக்கலாநிதி விக்கினேஷ்வரன் மருத்துவக்கலாநிதி சூரியகுமாரன் ஆகியோர் கொண்ட அணியில் இருந்த பல போராளி மருத்துவர்கள் மலேரியாவே இல்லாத வன்னியை உருவாக்கினார்கள். அதாவது “Malaria 0” என்ற நிலையை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உருவாக்கினார்கள் எமது மருத்துவ அணி.

இதைப் போலவே கொலரா தொற்றுநோய்த் தாக்கம். இந்தக் கொலரா தொற்று ஏற்பட்ட போது அதன் விளைவுகள் உடனடியாக உணரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. விடத்தல் தீவு எனும் இடத்தில் முதல் நோயாளி கண்டு பிடிக்கப்பட்டு போது அங்கே விரைந்து சென்ற மருத்துவர் சூரியகுமாரன் தலைமையில் போராளி மருத்துவர்களான தணிகை, பிரியவதனா போன்றவர்கள் அங்கே கடமையில் இருந்த அரச மருத்துவரையும் இணைத்து ஒரு பெரும் வெற்றியைக் கொடுத்தார்கள்.

நான் ஏற்கனவே கூறியதைப் போல தொற்றுநோய்த் தாக்கத்தை கண்டறிந்த உடனேயே விடத்தல் தீவுக் கிராமம் முற்றுமுழுதாக மூடப்பட்டு மருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. யாரும் அங்கிருந்து வெளியேறவோ அல்லது உள்நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் கொலராவை விடத்தல் தீவுக்குள் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த நோய் எங்கிருந்து வந்தது என்பதையும் ஆய்வு செய்து சிங்கள தேசமான புத்தளத்தில் இருந்து இந்நோய்க்காவி வந்திருந்தார் என்பதையும் கண்டறிகின்றனர். எம் மக்களின் உயிரைக் காத்தது மட்டுமன்றி இலங்கை அரசுக்கும் இத்தகவலை அனுப்பி இலங்கை மக்களைக் காக்கவும் வழி செய்தனர் எம் மருத்துவர்கள்.

இதைப் போலவே போராளிகளுக்குள்ளும் இந்தக் கொடிய நோய்த் தாக்கம் பரவியது. அதையும் எம் மருத்துவப்பிரிவு சரியான முறையில் கையாண்டு வெற்றி பெற்றது. தென்தமிழீழத்தின் திருகோணமலைக் காட்டுக்குள் நின்ற ஒரு அணி முழுவதுமாக கொலராவால் பாதிக்கப்பட்ட போது அவர்களின் மருத்துவனாக பணியாற்றிய மருதன் என்ற போராளிக்கும் கொலரா தொற்று ஏற்படுகிறது. இந்த நிலையில் முற்றுமுழுதாக மருத்துவ உதவியை இழந்து நின்றது 100-120 போராளிகளைக் கொண்ட அந்த அணி.

அதனால் வடதமிழீழத்தில் இருந்து தேவையான அளவு திரவநிவாரணிகள் மருத்துவப் பொருட்களோடு ஒரு மருத்துவ அணி அங்கே சென்றது. அங்கிருந்து காப்பாற்றப்படக்கூடியவர்கள் தவிர ஏனைய மேலதிக சிகிச்சைக்குத் தேவையான போராளிகளை உடனடியாக வடதமிழீழம் நோக்கி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போது கடற்புலிகள் அதை இலகுவாக செய்து முடித்தார்கள். ஆனாலும் இலங்கை கடற்படை இடையில் வைத்து சண்டையைத் தொடங்கிய போது ஏற்கனவே கொலராவால் பாதிக்கப்பட்ட போராளிகளோடு கடற்புலிப் போராளிகள் சிலரும் வீரச்சாவடைகின்றனர். ஏனையவர்கள் கிழக்கு முல்லைத்தீவுப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டை சிகிச்சை வழங்கப்படுகின்றனர். காப்பாற்றப்படுகின்றனர். இது சாதாரண நடவடிக்கை தான் ஆனால் அதன் பின்பாக எமது மருத்துவப்பிரிவு தொற்றுநோய்த் தடுப்பை எவ்வாறு கையாண்டது என்பது தான் முக்கியமானது.

இந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் அங்கிருந்து கொண்டுவரப்பட்டதில் இருந்து விதைகுழியில் விதைக்கும் வரை யார் எல்லாம் சம்மந்தப்பட்டிருந்தார்களோ அத்தனை பேருக்கும் உடனடியாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.

கிழக்கு முல்லைத்தீவுக் கடற்கரையில் கடற்தொழில் செய்வதற்கும் அங்கே உள்நுழைவதற்கும் தடைகள் அமுல் படுத்தப்பட்டன.

இவ்வாறு சின்ன சின்ன விடயங்களைக் கூட நாம் கவனம் எடுத்து செயற்பட்டதால் மட்டுமே வன்னி மண் தொற்றுநோய்த் தாக்கங்கள் அற்ற மண்ணாக இருக்கக் காரணமாகியது.

இன்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் இச் செயற்பாடுகளை பின்பற்றுவதாக தோன்றுகிறதே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இருக்கலாம், ஆனால் நாம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பயணித்தோம். இப்போது இலங்கை அரசோ இந்த சந்தர்ப்பத்தை அரசியல் ஆக்கப் பார்க்கிறது. இதை எம் மக்கள் நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய அரசு தான் செய்த இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தமிழர் தரப்பிடம் இருந்து நற்பெயரைப் பெற்றுவிட வேண்டும் என்று முயல்கிறது. இதை எம் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை தருகிறது.

எம்மினத்தையே அழித்தவனை, தம்மைக் காக்க வந்த கடவுளைப் போல கொண்டாடுகின்றனர் பலர். ஆனால் அவன் இப்போதும் தமிழர் மீது இனவழிப்பையே மறைமுகமாக ஏவிக் கொண்டிருக்கின்றான்.

ஒரு விடயத்தை வைத்து நான் இந்த முடிவுக்கு வருகிறேன்.

இலங்கை ஒரு தீவு. இங்கே வான்வெளிப் பயண வாசல் மட்டுமே வெளியுலகிற்கான தொடர்பு. இந்த வான்வழிப் பயணத்தை சர்வதேச மட்டத்தில் பாரியளவில் செய்யும் இடம் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம். இந்த வானூர்தித் தளத்தில் இருந்து தமிழீழப் பகுதி எத்தனை நூறு கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கின்றது? சர்வதேசத்தில் இருந்து நோய்காவிகளாக வருபவர்களை தடுத்து வைத்திருப்பதற்கு தென்னிலங்கையில் ஒரு சிறுதுண்டு காடு கூடவா கிடைக்கவில்லை? பலநூறு கிலோமீட்டர்கள் தாண்டி தமிழீழத்தின் தமிழ்மக்கள் வாழும் இடங்கள் தானா இதற்கு தகுந்த இடங்கள்?

இது எவ்வாறான நினைப்பு என்றால், தொற்றுப் பரவினால் கூட சிங்கள மக்களுக்கு பரவாது தமிழர்களுக்குப் பரவித் தொலையட்டும் என்ற நினைப்பு மட்டுமே.

ஊரடங்கு சட்டம் பற்றி?
இது உண்மையில் தொற்றுநோய்த் தாக்கத்தை குறைக்கும் செயல் தான் நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த அரசு உண்மையாக மக்கள் மீது நலன் கொண்டிருந்த அரசு என்றால் இப்படியான இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்காது. சீனாவில் இந்த COVID 19 பிரச்சனை தலைவிரித்தாடிய போதே சர்வதேச போக்குவரத்தை நிறுத்தி இருந்தால் இப்போது இந்த அவசரநிலை வந்திருக்காது. இப்போதும் கூட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு போட்டு மக்களை சங்கடத்துக்குள்ளாக்கி இருக்கத் தேவையில்லை.

இப்போதும் கூட பிரச்சனை உள்ள மாவட்டங்களைத் தனிமைப்படுத்தி ஏனையவற்றை இயங்குநிலைக்கு கொண்டு வரலாம் உதாரணமாக யாழ்ப்பாணத்தை எடுத்தால் ஒரிரண்டு தரைப்பாதைகளே இருக்கின்றன அவற்றை மூடி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை அமுல்படுத்தலாம் இதனால் யாழில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு தொற்றுப்பரம்பல் நடப்பதை தடுக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகளையும் இறுக்கமான காவல்துறை / இராணுவ எல்லைகளாக்கி மக்களை பாதுகாக்கலாம். இதைவிட்டு பாதிப்பற்ற மாவட்டங்களிலும் இந்த ஊரடங்குச் சட்டம் என்பதை அமுல்படுத்தும் போது மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். கூலி வேலைக்குப் போகின்ற மக்கள், விவசாயிகள் என்று எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

விடத்தல் தீவில் கொலரா பரவிய போது நாம் வன்னி முழுக்க ஊரடங்கை அமுல்படுத்தவில்லை. விடத்தல் தீவை மட்டுமே சுற்றி வளைத்து முடக்கினோம். ஆனாலும் வன்னிமண் காப்பாற்றப்பட்டே இருந்தது.

இறுதிச் சண்டை என்று எம் மீது இனவழிப்பு நடவடிக்கையை ஏவி விட்ட சிங்களப் படையின் 2009 மே 18 ஆம் நாள் பற்றி…

இதை சொல்லுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங்கள் கனவுகள் எல்லாம் சிதைந்து போன நாள். நாங்கள் எம்மை எதற்காக தியாகித்தோமோ அந்த இலட்சியம் மௌனித்துப் போன நாள். விடுதலைக்காக விதையாகிவிட்ட மாவீரர்களின் குருதியில் சிவந்த எம் மண் சிங்கள வல்லாதிக்கத்தின் காலடியில் அடிபணிந்துவிட்ட நாள். நினைக்க முடியாத வேதனையைத் தந்து நிற்கும் நாள்.

இந்தச் சண்டை 2008 ஆம் ஆண்டி ஆரம்ப காலத்தில் வன்னிக் களமுனைகளில் ஆரம்பித்த போது நான் நெட்டாங்கண்டல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். களமுனைகள் எங்களின் ஊருக்குள் நகர்ந்து கொண்டிருந்த போது அங்கிருந்து பல இடங்கள் இடம்பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்காலில் வந்து சேர்ந்தோம். எம் இலட்சியம் கொஞ்சம் கொஞ்சமாக மௌனிப்பதை கண்முன்னே கண்டு செய்வதறியாது திகைத்தாலும் திலீபன் மருத்துவமனை மருத்துவனாக என் பணியை இறுதி நாள் வரை செய்தேன். என்னிடம் இருந்த ஒரு அவசர ஊர்தியியை சிறு சத்திரசிகிச்சை செய்யக் கூடிய நிலையில் உருமாற்றி வைத்து, வட்டுவாகல் பகுதியில் ஒரு மரத்துக்குக் கீழ் நிறுத்தி வைத்திருந்து 17 ஆம் நாள் மே 2009 ஆம் ஆண்டின் மாலைப்பொழுதில் காயமடைந்த மூன்று பேருக்கு சத்திரகிச்சை செய்தேன். அது தான் நான் செய்த இறுதிச் சிகிச்சை. இதன் போது மருத்துவக்கலாநிதி எழுமதி கரிகாலனும் என்னருகில் நின்று தன் பணியை செய்தது இன்றும் நினைவில் எழுகிறது.

எமது தமிழீழ தேசியத்தலைவர் எம்மை உருவாக்கிய போது எதை எதிர்பார்த்து உருவாக்கினாரோ அதை இறுதிக் கணம்வரை நான் செய்த வலியோடு தான் இன்றும் வாழ்கிறேன். நாங்கள் மௌனித்துவிட்டோம் எங்கள் கனவுகள் மௌனித்துவிட்டன. ஆனாலும் நினைவுகளும் கடமைகளும் இன்றும் நிலையாகவே இருக்கின்றன..

நேர்கண்டது: இ.இ.கவிமகன்

நாள்: 06.04.2020

நிழலரசின் நிஜமுகங்கள் – திலீபன் மருத்துவமனை

1 week 1 day ago

சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை.

வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)!

அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள்.



இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்தடம் பதித்து அளப்பரிய சேவை செய்தவர்கள் தாம் நேசித்த மக்களுக்காக ஈகத்துக்கு தயாராக இருந்தவர்கள்.

IMG_20200523_090807.jpg?resize=200%2C300

இந்த திலீபன் மருத்துவமனையின் உதவி மருத்துவர்கள் (AMPs-Assistant Medical Practitioners) அனைவரும் தமை அப்பணிக்கத் தயாரான போராளிகள் என்பது அதன் தனிச்சிற்ப்பு ஆகும் !🗝

8D7D7E81-5D71-4D0B-A91A-CE1FDDD4F624.jpeg?resize=696%2C522&ssl=1

வனத்தாய்மடியில் தாலாட்டப்படும் ஐயங்குளம் கிராமத்தில் உள்ள தியாக தீபம் திலீபன் மருத்துவமனையை படத்தில் காண்கிறீர்கள்!

நோர்வேயின் ‘பேச்சு வார்த்தை நாடக அரங்கேற்றம்’ நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவில் வாழும் தமிழ் வைத்திய நிபுணர் ஒருவரால் இந்த அழகிய மருத்துவமனைக் கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டது.

போர்ச்சுமை நடுவிலும் தமிழர் நிழல் அரசு நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம்!

எமது மக்களுக்கான
அரும்பெரும் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வந்த இந்த
திலீபன் வைத்தியசாலைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தவர் Dr பத்மலோஜினி கரிகாலன் அவர்கள்.

BD45609D-8429-4300-9A87-7AB76A423335.jpe


1956 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் இடைக்காட்டில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் Dr பத்மலோஜினி அவதரித்தார்.

உயர்தரக் கல்வியை அந்நாட்களில் புகழ்பூத்து விளங்கிய யா/புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் கற்றார். பெற்றாரும் உறவுகளும் பெருமை கொள்ளத்தக்க வகையிலே க/பொ/த உயர்தரச் சோதனையில் சாதனை படைத்தது பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பீடத்துக்கு தெரிவானார்.

1985ஆம் ஆண்டு MBBS பட்டம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு பரிபூரண வைத்தியராக வெளியேறினார்.

வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்தவர். அக்காலகட்டத்தில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச வன்முறையைக் கண்டு கொதித்து
அரச உத்தியோகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விடுதலைப் போரில் குதித்தவர். மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஓர் வைத்தியராக இருந்த இந்த வைத்தியரும் கணவரான திரு. கரிகாலன் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர்.

பின்னிணைப்பு –

தற்கொலைகளைத் தடுத்தல் (Prevention of suicidal attempts),

சட்டவிரோத கருக்கலைப்புகளைத் தடுத்தல்(Illegal abortion/miscarriage)

குடும்பநல ஆலோசனைகள்(Family Planning plans)என பல் வேறுபட்ட இன்னோரன்ன விடையங்களில்
கவனம் செலுத்தி கிராமப்புற மக்களின் நலவாழ்வுக்கு தமிழர் நிழலரசு வித்திட்டது.

இவற்றுடன் மேலதிகமாக,

“குழந்தை உளவியலும் கல்வியும்” என
“சிறார் உளவியலும் கல்வியும்” என நிறைய விடையங்களில் திலீபன் ஞாபகார்த்த வைத்தியசாலைகள் சமூகம் கவனமெடுத்தது.

உங்களின் அனுபவங்களையும் தகவல்களையும் இங்கே பதிவு செய்யுங்கள் எனதருமை நண்பர்களே!

நன்றி

– வயவையூர் அறத்தலைவன் –

 

https://vayavan.com/?p=8597

இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவப் பிரிவு

1 week 1 day ago

இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது.

போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது.

போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார்.

நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது.

ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு.

எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”.

இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர்.

குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும். 

புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர்.

போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது.

மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின.

புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது.

ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது. 

அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது.

போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது.

மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது.

அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின.

இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார்.

மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன. 

இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின.

தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன.

பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின.

போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள்.

இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர்.

பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன.

மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது. 

சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர்.

ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது.

மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது.

குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும்.

அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள்.

போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. 

இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும்.

உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர்.

வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார்.

திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது.

உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார்.

தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.

கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர்.

பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள். 

( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்)

இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது.

மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது.
உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது.

“எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்”

என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம்.

https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/

போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்

1 week 1 day ago
கவனமா போய் வா மச்சான் !

 

 

புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார்.

மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி.

அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான்.

வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது.

அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான்.

கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது.

இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும்.

ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது.

தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்…

கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான்.

சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண…

கவிமகன்.இ
17.11.2017

சீனதேசத்தின் வெறுங்கால் வைத்தியர்களும் தமிழர்தேசத்தின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையும்!

1 week 1 day ago
Barefoot Doctors of China and Thileepan Memorial Hospitals of Our Homeland

மானுடத்தின் வேதனைகளை வெல்வதைவிட உயர்ந்த மானுட இலட்சியம் வேறு ஏதும் இருக்கமுடியாது.

மருத்துவ சேவைகளை இலகுவில் எடுத்துச் செல்லமுடியாத மிகவும் பின் தங்கியகிராமங்கள்,மலைப்பிரதேசங்ள் போன்ற இடங்களில் அடிப்படைச் சுகாதார சேவைகளைத் தரமுயர்த்தும் நோக்கில் சீனமக்கள் குடியரசு வினைத்திறன் மிக்கதோர் சேவையை அமுல்படுத்தியது.

1960களில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தவர் சீன தேசத்தின் சிற்பி என வருணிக்கப்படும் மா ஓ சேதுங் ஆவார்.

“Barefoot Doctors” என அழைக்கப்படும் அவர்களின் அதியுன்னத சேவையால் சீனதேசத்தில் ஓர் புரட்சிகரத்திருப்புமுனையை ஏற்பட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது.

68F486B7-2FFE-423C-9340-080B94916AFC.jpe

குக்கிராமங்களில் இருந்த விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு Paramedical Training வழங்கப்பட்டு பின் தங்கிய கிராம மக்களின் அடிப்படை மருத்துவ சேவைகள் அல்லது முன் வைத்தியசாலை பராமரிப்புகள் சரிவர வழங்கப்பட்டன.

அவர்கள் ஒரு தோளில்/முதுகில் மருத்துவப் பையுடனும் மறுதோளில் மண்வெட்டியுடனும் கிராமப்புற மக்கள் மத்தியில் திருவுலா வந்தனர்.

பாதணி கூட இல்லாமல் வெறுங்கால்களுடன் சறுக்கு மலைகளில் சலிக்காமல் ஏறி சீனதேசத்தின் “வெறுங்கால் வைத்தியர்கள்”உன்னத பணி செய்தனர்.

அத்தகைய பாணியில் அதையும்விட பன்மடங்கு அதிகரித்த மருத்துவக்கல்வி போராளிகளுக்குப் புகட்டி கிராமப்புறங்களின் அடிப்படைச் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காகவே தியாக தீபம் மருத்துவமனைகள்உருவாக்கப்பட்டன.

44183FA1-52D4-4942-9B41-7F13D3C1DBF9.jpe

களமுனைகளில் பல காலம் உயிர்காத்த அனுபவம் மிக்க மூத்தமருத்துவப் போராளிகளும் தமிழர் சேனையின் இராணுவ வைத்தியசாலைகளில் தாதியாக சேவை புரிந்தவர்களுமே தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகாகத் தேர்வு செய்யப்பட்டு உதவி மருத்துவர் கற்கை நெறி(Curriculum of Assistant Medical Practitioner) போதிக்கப்பட்டது.

போதனைகளை வழங்கியவர்களில் முக்கியமானவர்கள்

Dr.பத்மலோஜினி கரிகாலன்,

Dr கா.சுஜந்தன்,
Dr தா.சூரியகுமாரன்,

Dr சி.சிவபாலன்,

Dr வீ.சண்முகராஜா,
Dr த.பாஷ்கரன்(கலை),

Drசதானந்தன்,
Dr இ.கதிர்ச்செல்வன்…

ஆகியோர்கள்.

இந்த மருத்துவமனைகளில் கண் வளராது, மனம் தளராது, மது அருந்தாது,புகைப்பிடிக்காது தவம் இருந்த பலர் இறுதி சமரில் அரச வைத்தியசாலைகளில் தங்கள் சேவையைத் தொடர்ந்தார்கள்.

வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிலர் தியாகச் சாவடைந்தனர்.

அவர்களில் களமருத்துவர் செவ்வானம், களமருத்துவர் இறையொளி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

தமிழர் எங்களை அடக்கி ஒடுக்க சீனதேசம் துணை போன கசப்பான செயலையும் எங்களால் மறக்க முடியாது.

தொடரும்…

நன்றி

 

 

https://vayavan.com/?p=9433

சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் – நிழலரசின் நிஜமுகங்கள்

1 week 1 day ago

எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது.

மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

குண்டுவீச்சாலும் பட்டினியாலும்
வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள்.

நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது.

FB_IMG_1589383315523.jpg?resize=300%2C19

மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த உதவி மருத்துவர்களும் தாதியர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர்.

புதிய புதிய சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்தவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர்.

தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர்.

பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் எங்களால் உயிர்காக்கப்பட்டவர் ஆன்மாவின் ஆழத்தில் இவர்கள் இருக்கிறார்கள்.

எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தார்கள்.

மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள்.

இருதரப்பிலும் சிறை வைக்கப்பட்டிருந்த
கைதிகளை பெற்றோர் பார்வையிடவும்,களத்திடை எதிரியின் கைகளில் அகப்பட்ட வித்துடல்களை வாங்கித் தரவும் மீதமாய் மருத்துவ உதவிகளும் செய்த ICRC அடுத்தத கட்டமாய் அந்தரித்த எமது மக்களை
கைவிட்டனர்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த
ICRC யின் இறுதிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது.

குண்டுவீச்சாலும் பட்டினியாலும்
வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும்” #நாங்கள்_இருக்கிறோம்”
என சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தினர் கைகொடுத்து புதுவேகம் தந்தார்கள்.

நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது.

இங்கே மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த #தாதியர்களும்_உதவிமருத்துவர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர்.

சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்த புதியவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர்.

தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர்.

பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் இங்கே இந்த ஒளிகொண்ட ஒளிப்படத்தில் இருப்பவர்களால் பல ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்காக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் இவர்களும் இருக்கிறார்கள்.

 

 

https://vayavan.com/?p=11334

சிங்களத்தின் வதைமுகாம் இரகசியங்கள் – மருத்துவர் வரதராஜா!

1 week 1 day ago

நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார்.

https://youtu.be/zUkMcIe0iNE

யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுது, ‘மக்களின் உயிர்களைக் காப்பதற்கு வன்னியில் எனது சேவை உங்களுக்கு தேவைப்படும் என்றால் வருகின்றேன். அல்லாது போனால் நானும் மக்களோடு போகின்றேன். அப்பொழுது எனக்கு ஏதாவது நடந்தால், மக்களுக்கு நடந்தது எனக்கும் நடந்ததாக இருக்கட்டும்’ என்று கூறியவர். அதன் பின் வன்னியில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைக் கருத்திற் கொண்டு வன்னி சென்றவர்.

யுத்தம் முடிவடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே, மக்களைக் கைவிட்டு எத்தனையோர் ஓடிய பொழுதும், 15.05.2009 அன்று சிங்களப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் காயமடையும் வரை மக்களோடு மக்களாக நின்று அவர்களின் உயிரைக் காப்பதற்கு ஓயாது உழைத்தவர்.

தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் மருத்துவர் வரதராஜா அவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது அவரை நாம் சந்தித்தோம். அப்பொழுது அவர் எமக்கு வழங்கிய நேர்காணலை இரண்டு பாகங்களாகத் தருகின்றோம். இரண்டாவது பாகம் எமது அடுத்த இதழில் வெளிவரும். ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் மருத்துவர் வரதராஜா அவர்களைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா.

கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். அந்த வகையில் இறுதி யுத்தத்தில் பல சவால்களை எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த வகையிலே நீங்கள் எதிர்கொண்ட சவால்களை – மிக முக்கியமாக – நீங்கள் குறிப்பிடக் கூடிய சவால்களைப் பற்றி விபரிக்க முடியுமா?

பதில்: வன்னியில் மட்டுமல்ல, வாகரைப் பிரதேசத்திலும் கடமையாற்றிய பொழுது, அது ஒரு யுத்தப் பிரதேசமாக இருந்ததால் பல விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உதாரணமாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்களினுடைய இடப்பெயர்வு, பெரும் எண்ணிக்கையான காயங்கள், இறப்புகள் – ஒரு அசாதாரணமான சூழ்நிலை – பல சவால்களைத் தந்திருந்தது. அதேநேரம் காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக அரச கட்டுப்பாட்டுப் வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதிலும், காயமடைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் போதிய அளவு ஆளணி, மருத்துவ வசதி இல்லாததாலும் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியிருந்தோம்.

அதேநேரம் மக்களுக்கும் அந்த இடத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து – ஒரு இடத்தில் இருக்கிற மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் – சாப்பாடு, தங்குமிடங்கள் போன்ற பல்வேறு விதமான சவால்களை மக்களும் எதிர்நோக்கியிருந்தார்கள். அதேநேரம் வைத்தியசாலைகள் அனைத்தும் – நாங்கள் கடமை செய்த அனைத்து வைத்தியசாலைகளும் – திட்டமிட்ட ரீதியில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தது. சுயமாக நாங்கள் – இயல்பாக இருந்து – வைத்திய சேவை வழங்க முடியாத நிலைமையும் காணப்பட்டது.

கேள்வி: இந்த சவால்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

பதில்: சவல்களை நாங்கள் அந்தந்த நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம் – சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தி – எமது வைத்தியசாலையும் சரி, மக்கள் குடியிருப்புகளும் சரி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற செய்திகளை தெரியப்படுத்தியும், மருத்துவப் பற்றாக்குறை, மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை, காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதற்கு இருக்கின்ற சவால்கள், தேவைகளையும் உரிய நேரத்தில் தெரியப்படுத்தி அந்த முடிவுகளை எடுத்திருந்தோம். அதேநேரம் எமது வைத்தியசாலையில் கடமை புரிந்த அனைத்து ஊழியர்கள், வைத்தியர்கள் அனைவரும் வழமையை விட மேலதிக நேரங்கள் கடுமையாக உழைத்து, கஸ்ரப்பட்டு நித்திரை கொள்ளாமல் தங்களுடைய சுய தேவைகளை எல்லாம் மறந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொண்டிருந்தோம்.

கேள்வி: இதிலே நீங்கள் குறிப்பிட்ட அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை ஒரு பரந்துபட்ட கருத்தாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இதிலே நீங்கள் குறிப்பிடத்தக்க – ஒரு பிரத்தியேகமாக நீங்கள் எதிர்கொண்ட ஒரு சவாலும், அதை நீங்கள் எதிர்கொண்ட விதத்தையும் சற்று விரிவாக விளக்க முடியுமா?

பதில்: உதாரணமாக சொல்வதென்றால் ஒரு பாரிய காயம் – ஒரு பெரிய காயம் – அல்லது ஒரு பெரிய சத்திர சிகிச்சை, நீண்ட நேரம் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சைகள் – அப்படியான நிலைகள் வருகின்ற பொழுது, அவர்களுக்கு மயக்க மருந்து மிகவும் அதிக எண்ணிக்கையில் – பெரும் அளவான மயக்க மருந்து தேவைப்படும். அதேநேரம் மருந்து, சேலைன், இரத்தம் ஏற்றுவது போன்றவை அதிகமாக தேவைப்படும். நீண்ட நேரம் எடுத்து அந்த சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒரு நோயாளருக்கு அப்படியான ஒரு சிகிச்சையைச் செய்து, அவரைக் காப்பாற்றுவதற்குரிய வீதம் சில நேரம் குறைவாக இருக்கும். சில நேரம் காப்பாற்ற முடியாமல் இருக்கும். அதேநேரம் நாங்கள் அப்படியான சிகிச்சைகளைத் தவிர்த்து, வேறு சிறிய காயங்களை அல்லது வேறு காயங்களுக்கான சத்திர சிகிச்சைக்காக அந்த நோயாளர்களைத் தவிர்த்து செய்திருக்கின்றோம். அதேநேரம் ஒரு நோயாளருக்குத் தேவையான மருந்தின் அளவுகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு கொடுக்கின்ற சேலைன், மருந்துகள், மயக்க மருந்துகளைக் குறைத்துக் கூட அவர்களுக்கு சத்திர சிகிச்சைகளையும், ஏனைய சிகிச்சைகளையும் வழங்கியிருக்கிறோம்.Dr. Varatharajah

கேள்வி: இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது?

பதில்: எங்களுடைய உணர்வுகள் யுத்தம் ஆரம்பித்த நாட்களில் இருந்து மிகவும் கஸ்ரமாக இருந்தது. மக்கள் பாதிக்கப்படுவது, காயமடைந்து அங்கவீனர்களாவது, இறப்பது, மருந்தில்லாமல் இறப்பது, மேலதிக சிகிச்சைக்கு அனுப்ப முடியாமல் அவர்கள் இறப்பது போன்ற சம்பவங்கள் எங்களுடைய மனதை – மற்ற வைத்தியர்களுடைய மனதை – மிகவும் பாதித்துக் கொண்டிருந்தது.

கேள்வி: நீங்கள் வாகரையிலும், வன்னியிலும் – இரண்டு இடங்களிலும் கடைசி வரை பணிபுரிந்த மருத்துவர் என்ற வகையில் – சிங்கள அரசாங்கம் எறிகணை வீச்சுக்கள், பல்வேறு விதமான வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தது ஒரு இனவழிப்பு என்று இருந்தாலும், இனவழிப்பிற்கு அப்பால் வேறு என்ன நோக்கம் இருந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதாவது மக்களுடைய மனவுறுதியைக் குலைப்பது – இப்படியான நோக்கம் – அல்லது போராட்டத்தில் இருந்து அவர்களை விலக வைப்பது – இப்படியான எண்ணங்களோடுதான் இந்தத் தாக்குதல்களைச் செய்தார்கள் என்று கூறுவீர்களா?

பதில்: இலங்கையில் ஏற்பட்ட இந்த யுத்தம் வாகரையிலோ அல்லது முள்ளிவாய்க்காலிலோ ஏற்பட்டதல்ல. அதற்கு முன்பு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட ஒரு யுத்தம். தமிழின அழிப்பிற்கான ஒரு யுத்தம். 83ஆம் ஆண்டு கலவரத்திலும், அதற்கு முன்பு கூட இந்தப் பிரச்சினை ஆரம்பித்திருந்தது. இது ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இந்த இனவழிப்பை, ஆயுதங்களால் மட்டுமல்ல, உணவுக் கட்டுப்பாடு, போக்குவரத்துத் தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, எரிபொருட்களுக்கான தடைகளை விதித்து, எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் வந்தாலும், அந்தத் தடைகள் – குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இனவழிப்பின் ஒரு உச்ச கட்டமாகத்தான் இந்த வாகரை, முள்ளிவாய்க்கால் பகுதியை நாம் பார்க்க வேண்டும்.

கேள்வி: ஆனால் இதன் மூலமாக அவர்கள் – அதாவது மக்களைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்ததா? அல்லது வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் – அதாவது கொல்வதன் மூலம் மக்களின் மனவுறுதியை உடைப்பது, போராளிகளிடமிருந்து மக்களைப் பிரிப்பது – இப்படியான நோக்கங்கள் இருந்திருக்கும் என்று கூற முடியுமா?

பதில்: பல நோக்கங்கள் இருந்திருக்கும். சாதாரணமாக ஒரு இடத்தில் இருக்கிற மக்களை அழிப்பது என்பது மட்டுமல்லாமல், அவர்களை இடம்பெயரச் செய்து அவர்களின் சொத்துக்களை அழிப்பது, அந்த மக்களை – இடம்பெயர்ந்த மக்களைக்கூட நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து – அவர்களுடைய முகாம்கள் எல்லாம் மிகவும் இறுக்கமான முகாம்களாக, அந்த இடத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் செல்ல முடியாது. முகாமிற்குள் உள்ள மக்கள் வெளியில் – மருத்துவ தேவைகளுக்குக் கூட தாங்கள் நினைத்த மாதிரி வர முடியாத ஒரு இறுக்கமான சூழலில் அடைத்து வைத்திருந்து, பல்வேறு விதமான – எங்களுடைய கலாச்சாரம், போன்ற எல்லா வகையிலான தடைகளையும் அங்கு ஏற்படுத்தி, கலாச்சார சீரழிவுக்குக் கூட ஏற்படுத்தக் கூடிய மாதிரித்தான் யுத்தம் நடந்தது. உயிரிழப்பிற்கு அப்பால் மக்களுடைய சொத்துக்கள், கல்வி வளர்ச்சி எல்லாமே அந்த யுத்தம் மூலம் அழித்திருந்தார்கள்.

கேள்வி: இந்த இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் நடைபெற்றன – போரை நிறுத்த வேண்டும் என்று கோரி. அதேநேரத்தில் சில வெளிநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகளும் இலங்கைக்கு சென்று போர்நிறுத்தம் பற்றிக் கதைத்திருந்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் நீங்கள், அங்கிருந்த மருத்துவர் என்ற வகையிலேயே சர்வதேசத்திடம் அந்த நேரத்தில் நீங்கள் எதனை எதிர்பார்த்திருந்தீர்கள்?

பதில்: நான் மட்டுமல்ல, எங்கள் மக்கள் அனைவருமே ஒரு சமாதான முன்னெடுப்பொன்று ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த மக்கள் இடப்பெயர்விலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களைச் சர்வதேசம் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பார்கள் என்றும் நம்பியிருந்தார்கள். இந்த மக்கள் அனைவருமே சர்வதேசம் இதில் தலையிட்டு உடனடியாக எங்களுடைய மக்களைப் பாதுகாப்பார்கள், அல்லது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது சமாதான முன்னெடுப்புக்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

கேள்வி: அந்த கால கட்டத்திலே நடைபெற்ற புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பியிருந்தீர்களா?

பதில்: எங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கையும் இருந்தது. ஏதோ ஒரு வழியில் புலம்பெயர்ந்த மக்களுடைய போராட்டமென்றால் என்ன, வெளிநாடுகளின் – இந்தியா, அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகள் தலையிட்டு மக்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும், எங்களுக்கும் இருந்தது.

கேள்வி: இந்த சந்தர்ப்பதிலே இறுதி வரை எதையுமே சர்வதேசம் செய்யவில்லை என்ற பொழுது உங்களுடைய மனநிலை எப்படியிருந்தது?

பதில்: ஒரு கோபம் கலந்த ஒரு வெறுப்பு, அல்லது ஒரு ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது. ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் வெளியேற்றி விட்டது. சர்வதேச நிறுவனங்கள், சுயாதீனமாக இயங்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எவரையுமே அந்த இடத்தில் அனுமதிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஒரு அச்சம் இருந்தது. ஒரு சர்வதேச நிறுவனத்தையும் அனுமதிக்காமல், மக்களை அழிக்க – அழிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்திலேயே மேற்கொண்டு விட்டார்கள். அப்பொழுது மக்களுக்கு அந்த அச்சம் மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது. ஏனென்றால் எல்லாரையும் அழிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணமும் அச்சமும் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதில் இருந்தது. அதேநேரம் குறிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் 2009 ஆண்டு தை மாதம் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் அந்தப் பகுதியில் மூன்றரை இலட்சம் மக்கள் இருந்த பொழுது, எண்பதுனாயிரம் மக்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு செய்தியை உலகத்திற்குக் கூறி, கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சர்வதேச நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி அந்த உண்மையை எடுத்துக் கூறி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறிவிட்டார்கள்.

கேள்வி: இந்த இறுதி யுத்தத்திலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்ற சரியான புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனால் 146,000 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்ற ஒரு கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதேநேரத்திலே சில இடங்களிலே ஐக்கிய நாடுகள் சபை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று கூறியது. ஒரு இடத்தில் – நான் சென்ற ஒரு இடத்தில் கூறினார்கள் – ஐ.நா.வின் ஒரு முன்னாள் அதிகாரி – 80,000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது களத்தில் மாத்திரம் – முள்ளிவாய்க்கால் – வன்னிப் பகுதியில் நடந்த யுத்தத்தில் மட்டும். அதற்கு வெளியில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது – அதாவது முகாம்களுக்குச் செல்லும் பொழுது. ஆனால் 80,000 பேர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வின் ஒரு உயர் அதிகாரி குறிப்பிட்டிருந்தார். அது ஒரு வெளியில் வராத சந்திப்பொன்று. உங்களுடைய கணக்கின் படி, நான் அதாவது இந்த 146,000 பேர் கணக்கைச் சொல்லவில்லை. வன்னியில் மட்டும் – வன்னியில் நடந்த எறிகணை வீச்சுக்கள், வான்வழித் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்கள்?

பதில்: இது ஒரு சிக்கலான கேள்வி. புள்ளி விபரங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருந்தது. வழமையாக, சாதாரண நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வருவார்கள். நாங்கள் அந்தப் பதிவுகளை மேற்கொண்டிருக்கலாம். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. போக்குவரத்து எல்லாம் சீர் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாத நிலை இருந்தது. காயமடைந்தவர்களை மட்டும் தான் ஏதோ ஒரு கஸ்ரப்பட்டு, தூக்கியோ, அல்லது மோட்டார் சைக்கிள் – வேறு ஒரு வாகனங்களில் கொண்டு வருவார்கள். இறந்தவர்களை கணிப்பிடுவதில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல் இருந்தது. இது கிட்டத்தட்ட 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பல்வேறு புள்ளிவிபரங்கள் ஊடாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்தப் புள்ளிவிபரத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. இதை இலங்கை அரசாங்கம், அரச அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களம், ஜீ.ஏ. – அவர்களுடைய பிறப்பு, இறப்புப் பதிவாளர்கள் மூலம் கணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் நாங்கள் சரியான புள்ளிவிபரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் வன்னியிலும், வாகரையிலும் – இரண்டு பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தவை – அங்கு கடமையாற்றியவர் என்ற வகையிலேயே, நீங்கள் முன்னெடுத்த மருத்துவப் பணிகளில், மக்களுக்கான பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பு எவ்வாறாக இருந்தது?

பதில்: நான் வாகரையில் கடமையாற்றிய பொழுதும் சரி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றிய பொழுதும் சரி, விடுதலைப் புலிகளினுடைய இராணுவ அணிக்கும், அவர்களுடைய மற்றப் பிரிவினருக்கும் எங்களுக்கும் நேரடியாக சம்மந்தம் இருப்பதில்லை. நான் மருத்துவர் என்ற ரீதியிலும், மருத்துவ அதிகாரி என்ற ரீதியிலும், விடுதலைப் புலிகளுடைய சுகாதாரப் பிரிவினர், மருத்துவப் பிரிவினர் எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள் – ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதனடிப்படையில் சில வைத்தியசாலைகளில், உதாரணமாக கிராமிய வைத்தியசாலைகளில், அல்லது பொது வைத்தியசாலைகளில் இருந்து கிராமங்களை நோக்கி இருக்கின்ற இடங்களில் அரசாங்க வைத்தியர்களை நியமிப்பதில் பற்றாக்குறை இருந்தது. அந்த பற்றாக்குறைகளில் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவின் வைத்தியர்கள், தியாக தீபம் திலீபன் மருத்துவமனையின் வைத்தியர்களின் உதவியுடன் அந்தக் கிராம வைத்தியசாலைகளை நாங்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தோம்.

விடுதலைப் புலிகளின் வைத்தியர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் தங்கி சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வைத்தியசாலை எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த வைத்தியர்கள் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவினராக இருந்தார்கள். அதேபோல பல்வேறு சுகாதாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்களுடைய உதவி தேவைப்பட்டது. மிகவும் ஒத்துழைப்பைத் தந்தார்கள். சில இடங்களில் நாங்களும், அவர்களும் சேர்ந்து கூட வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் – நிர்ப்பந்தம் என்ன சந்தர்ப்பங்கள் இருந்தது – சூழ்நிலைகள். அது மிகவும் ஒரு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தது. எங்களுக்கு என்பதைவிட மக்களுக்குப் அது ஒரு பெரும் உதவியாக இருந்தது.

கேள்வி: மருந்துப் பொருட்கள் என்று வரும் பொழுது விடுதலைப் புலிகள் தங்களிடம் மருந்துப் பொருட்களையும் வைத்திருந்தார்கள் – தமக்கென்று, போராளிகளுக்கென்று. அந்த மருந்துப் பொருட்களின் விடயத்தில் எவ்வாறான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைத்தது – விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து?

பதில்: எங்களிடமிருந்த மருந்துகளை வைத்துத்தான் எங்களுடைய சிறிய வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகளை செயற்படுத்திக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளுடைய வைத்தியர்கள் அங்கு கடமையாற்றியிருந்தார்கள். ஆனால் சில மருந்துப் பொருட்களை இலங்கை அரசாங்கம் எங்களுக்குத் தர மறுத்து விட்டது. உதாரணமாக மயக்க மருந்து, இரத்தம் ஏற்றுகின்ற அந்த இரத்தப் பை என்று முற்று முழுதாகத் தர மறுத்து விட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் – சில சந்தர்ப்பங்களில் – விடுதலைப் புலிகளினுடைய மருந்துகளை நாங்கள் வாங்கிப் பாவித்திருக்கிறோம்.

கேள்வி: நீங்கள் இறுதி வரை, அதாவது இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்காலில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். உங்கள் பொறுப்பில் ஒரு மருத்துவமனை இருந்தது என்று அறிகிறோம்.

பதில்: ஆம், நான் முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதேநேரம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒரு வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தேன் – சாதாரண சூழ்நிலையில். 2009 ஆண்டு இடம்பெயர்வுக்குப் பின்னர் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியதோடு, அதற்குப் பின்பு புதுமாத்தளன், வலைஞர்மடம், பொக்கணை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடம்பெயர்ந்த பொழுது நான் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தேன்.

கேள்வி: அப்படிப் பணியாற்றிய நீங்கள் எவ்வாறு கைதாகினீர்கள்? அதாவது என்ன அடிப்படையில் உங்களை – நீங்கள் யுத்தம் முடிகின்ற கட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பொழுது – என்ன அடிப்படையில் உங்களைக் கைது செய்தார்கள்?

பதில்: எங்களை அவர்கள் உண்மையில் கைது செய்திருக்கக் கூடாது. நாங்கள் அரச வைத்தியர்கள். அரச வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அதற்குரிய முறையான அனுமதிக் கடிதங்கள், முறையான அனுமதிகள் எல்லாம் எடுத்துத்தான் அந்த இடத்தில் நாம் வேலை செய்திருந்தோம். ஒவ்வொரு கிழமையும் அங்கே இருக்கின்ற நிலைமைகளைத் தெரியப்படுத்தி – எமது சுகாதாரத் திணைக்களத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் – சிற்றுவேசன் ரிப்போர்ட் என்று. அந்த மருத்துவத் தேவைகள், மக்களினுடைய காயங்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை எல்லாம் அந்த சிற்றுவேசன் ரிப்போர்ட்டில் இருக்கும். நாங்கள் ஒரு இடத்தில் கூட அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தாமலோ, அல்லது அவர்களின் விதிமுறைகளை மீறி நாங்கள் எந்தவொரு வேலையும் செய்யவில்லை.

மே மாதம் 15ஆம் திகதி வைத்தியசாலைகள் எல்லாம் இயங்க முடியாத ஒரு கட்டம் வந்துவிட்டது. 12ஆம் திகதிக்குப் பிற்பாடு யுத்தம் மிகவும் அண்மையிலும், மிகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்தது. 14ஆம் திகதி இரவிரவாக விடியும் வரைக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தான் எல்லா வைத்தியர்களும், சில ஊழியர்களும் இருந்தோம். 15ஆம் திகதி நண்பகல் நான் காயமடைந்தேன். அந்த காயமடைந்த ஒரு சொற்ப நேரத்தில் அந்த இடத்திற்கு இராணுவம் வந்து விட்டார்கள். வந்து எங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு கூறினார்கள். பின்பு நான் சிகிச்சைக்காக அவர்களுடைய இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஏனைய வைத்தியர்கள் அங்கிருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஓமந்தையில் வைத்து அவர்களைப் பிரித்து நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தார்கள். என்னை கிளிநொச்சியில் உள்ள அவர்களுடைய ஒரு இரகசியமான இராணுவ ஜெயில் – அந்த இடத்தில் ஒரு கிழமைக்கு மேல் வைத்திருந்தார்கள்.

கேள்வி: என்ன குற்றச்சாட்டின் அடிப்படையில், என்ன சட்டத்தின் கீழ் உங்களை அப்படித் தடுத்து வைத்திருந்தார்கள்?

பதில்: நான் ஆரம்பத்தில் சொன்னது போல், எங்களுக்கு சட்டமோ – குற்றங்களோ நாங்கள் இழைத்திருக்கவில்லை. ஆனாலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ்தான் எங்களைக் கைது செய்திருந்தார்கள். அந்த விசாரணைகள் எல்லாம் சி.ஐ.டி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், அதைச் சார்ந்தவர்களும் தான் எங்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரான எந்த விதமான குற்றங்களும் நேரடியாகச் சுமத்தப்படவில்லை. விசாரணையில் கூட எங்களுக்கு எதிரான ஒரு குற்றங்களைக் கூட அவர்களால் உறுதிப்படுத்தக் கூடிய மாதிரி இருக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லாத்தையும், எல்லா செயற்பாடுகள், நடைமுறைகள் அனைத்தையும் சுகாதாரத் துறையின் சட்ட திட்டங்களுக்கு அமையத் தான் செய்திருந்தோம்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இரகசிய முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன?

பதில்: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய வாகனத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்புவதாகத் தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பஸ்சிலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சொற்ப நேரத்தில் திரும்பி இறக்கி விட்டார்கள். இறக்கும் பொழுது ஒரு இராணுவ வீரர் மற்றவரிடம் கேட்கிறார் ‘ஏன் இறக்குகின்றீர்கள்’ என்று. அவர் சொன்னார் ஓடர் வந்திருக்கு செல்லுக்குள்ள போடச் சொல்லி. செல் என்றால் ஜெயில் கம்பிக்குள் போடச் சொல்லி. அதற்கு முதல் நாள் இரவு அவர்களுடைய ஒரு முகாம் – ஒரு காம்ப் – ஒரு வெளியிடத்தில் தான் நான் தங்கியிருந்தேன் – படுக்க வைக்கப்பட்டிருந்தேன் ஒரு அறையில்.

ஒரு கம்பிக் கூட்டுக்குள் விட்டிருந்தார்கள். அந்தக் கம்பிக் கூடு, ஒரு தற்காலிகமாக ஒரு அறை – சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கின்ற அறைக்குள் மூன்று கம்பிக் கூடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் ஒடுக்கமானது. அதற்குள் விடப்பட்டிருந்தேன். பின்பு நான் அவதானித்திருந்தேன் அந்த வீடு – அந்த முகாம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தங்களுடைய அலுவலகமாகப் பாவித்த அடையாளங்கள் – சுவரில் ஒட்டப்பட்டிருந்த அடையாளங்கள் மூலம் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. அதிலிருந்த எனக்கு காவலுக்கு இருப்பவர்கள், தங்களுக்கு மேலிடத்து அனுமதி வந்தால்தான் என்னை வவுனியாவிற்கு அனுப்ப முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு மேல் நான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

கடைசி நாள் – நான் நினைக்கிறேன் 8ஆவது நாள் இரவு – அந்த கொமாண்டர் – இராணுவ அதிகாரி வந்து, கடுமையான தொனியில் – அவர்களுக்கு ஆகலும் பிரச்சினையாக இருந்த விடயம் அங்கே நடந்த செய்திகளை சர்வதேச ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதும், வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்தியதும் எங்கள் மீது ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. அவர்களுடைய கதைகள் எல்லாம் ஏன் பேட்டி கொடுத்தனீர்கள், ஏன் சொன்னீர்கள் என்ற கோபம் தான் இருந்தது. அதனால் தங்களுக்கு ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை விட, செய்தி ஊடகங்களுக்கு உண்மைச் சம்பங்களைத் தெரியப்படுத்தியது தங்களுக்கு மிகவும் அசௌகரியங்களைத் தந்ததாகத்தான் அவர் கூறியிருந்தார்.

கேள்வி: நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது எவ்வளவு – ஒரு ஆள் இருந்து, படுத்துறங்கக் கூடிய அளவா, அல்லது மிருகங்களை அடைத்து வைத்திருப்பது போன்ற கூண்;டா?

பதில்: அது சாதாரண ஒரு அறையில் மூன்று கூடு என்றால், கிட்டத்தட்ட மூன்று அடி அகலம், ஏழு அடி நீளம், நிற்கக்கூடிய அளவுக்கு உயரம். அதற்குள் போய்ப் படுக்கத்தான் முடியும் – படுத்து எழும்பி வர முடியும். அதற்குள் இருந்து வேறு வேலைகளைச் செய்யக்கூடிய மாதிரி இருக்காது. கம்பிக் கூட்டுக்குக் கீழால் சாப்பாட்டுப் பிளேற் அனுப்பக் கூடிய மாதிரி ஒரு இடைவெளி இருந்தது. அதற்குக்குள்ளால் சாப்பாடு வரும். சாப்பிடலாம். மற்றைய தேவைகளுக்காகக் கதவைத் திறந்து அழைத்துச் செல்வார்கள் – முகம் கழுவுதவற்கு, குளிப்பதற்கு எல்லாம். அவர்கள் அந்தந்த நேரம் ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்திற்குள் போய் எல்லாம் செய்ய வேண்டும்.

கேள்வி: உங்களுக்குத் திடீர் என்று ஏதாவது உடல் உபாதைகள் – உதாரணமாக இயற்கைக் கடன் கழிக்க வேண்டிய தேவை வந்தால் என்ன செய்வார்கள்?

பதில்: சொன்னால் கூட்டுக் கொண்டு போவார்கள்.

கேள்வி: இந்தக் கூண்டில் உங்களை அடைத்து வைத்ததன் நோக்கம் என்ன? அதாவது நான் கேட்பது, உங்கள் மீதான குற்றச்சாட்டல்ல. உங்கள் மனவுறுதியை உடைத்து, தங்களுக்குச் சார்பாக நீங்கள் கதைக்க வேண்டும், அல்லது இப்படித்தான் உங்கள் நிலைமை இருக்கப் போகின்றது என்று உணர்த்துவதற்காகச் செய்தார்கள் என்று நினைப்பீர்களா இதை?

பதில்: கிளிநொச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது அவர்களுடைய நோக்கங்கள் எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக அவர், 8ஆம் நாள் வந்து கதைத்த அதிகாரியின் கதையில் இருந்து நான் அறிந்து கொண்டது – அவர் சொன்னார் ஒரு கட்டத்தில் ‘உன்ரை நல்ல காலம் சண்டை முடிஞ்சிது. இல்லாட்டித் தெரிஞ்சிருக்கும்.’ அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன், சில வேளை அவர்கள் என்னை, இந்தச் சண்டை முடியாமல் இருந்திருந்தால் என்னைச் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவர்களுடைய பேச்சில் இருந்தது. உதாரணமாக சனல்-4 இல் ஆட்களைக் கொண்டு போய் சுடுவது போல் ஒரு சந்தர்ப்பம் என்னையும் கொண்டு போய் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவரது பேச்சில் இருந்தது. அதனைத் தான் என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சண்டை முடிந்ததால் அவர்களுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்று நினைக்கின்றேன்.

கேள்வி: ஆனால் சண்டை முடிந்த பின்னரும் பலரைப் படுகொலை செய்தார்கள். அதாவது சமரி எக்சிகியூசன் என்று சொல்லும் வகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். உங்களை, அதாவது இவ்வளவு உண்மைகளை வெளிப்படுத்திய உங்களை ஏன் அவர்கள் சுடவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: அதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றது. நான் காயமடைந்த பின்பு என்னால் நடக்க முடியாமல் இருந்தது. என்னுடைய வைத்திய நண்பர்களும், மற்றும் ஊழியர்களும் – என்னைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் – இராணுவத்திடம் கையளித்த பின்பு அதனைப் பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் காயமடைந்த என்னைத் தூக்கிக் கொண்டு வந்து இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார்கள். அதேநேரம் இந்த வைத்தியர்களை – வன்னியில் வேலை செய்த வைத்தியர்களை – இலங்கை அரசாங்கம் தடுத்து – விசாரணைக்காக தடுத்து வைத்திருக்கின்றது என்ற செய்தி, உலகத்திற்கும், சர்வதேச நிறுவனங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய அழுத்தங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் என்னை கிளிநொச்சியில் ஒரு கிழமைக்கு மேல் தடுத்து வைத்திருக்கின்ற பொழுது, நான் அங்கே இருக்கின்றேன், தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றேன் என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் யாருக்குமே சொல்லவில்லை – எங்களது குடும்பத்தினருக்கும் சரி, சர்வதேச நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. நான் நினைக்கிறேன் யுத்தம் முடியாமல் இருந்திருந்தால், அல்லது அவர்களுடைய முடிவில் மாற்றம் வராமல் இருந்திருந்தால், என்னை அவர்கள் சுட்டு விட்டு, காயத்தால் இறந்து விட்டார் என்றோ, அல்லது கொண்டு வரும் பொழுது யுத்தத்தின் அடிப்படையில் இரண்டு பேருக்குமான சண்டையில் இறந்திருப்பேன் என்று ஒரு பொய்யை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

(நான்காம் மாடிக்கு மாற்றப்பட்ட பொழுது தான் எதிர்கொண்ட அனுபவங்களை அடுத்த இதழில் விபரிக்கின்றார் மருத்துவர் ரி.வரதராஜா)

நன்றி: ஈழமுரசு

மருத்துவ புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images

1 week 1 day ago

 'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

large.ThiyakaTheepamThileepanMedicalUnit

இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

"சிறு துளிகள்"

3 weeks ago

"சிறு துளிகள்"

 

ஒரு காலத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏங்கும் பச்சைபசேலென இயற்கை அன்னையின் கொடையை அதிகமாகவே பெற்றும், சலசலுக்கும் அருவியின் ஓசையும், ஓயாமல் கூவிக்கொண்டு இருக்கும் குயிலின் ஓசையும் அபூர்வமான தூய காற்றையும் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும் நெற்கதிரையும் பெற்று, காண காண திகட்டாத மண்ணுலக சொர்க்கமாக திகழ்ந்த அவளின் கிராமத்தின் அழகை காணும் போதெல்லாம் அன்று தன் இதயத்தில் தோன்றும் வலியை மறந்துவிடும் அருள்விழி, தன் குடும்பத்தின் நெற்பயிர்களுக்கு அன்று உயிர் கொடுத்த அந்த மண், இன்று விரிசல் அடைந்தும் காய்ந்தும் கிடப்பதை தனது வயலின் ஓரத்தில் நின்று பார்த்தாள். ஆனால் இன்று, அந்த முன்னைய பசுமையான நிலப்பரப்பு, இராணுவத்தால் தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமாக வலுக்கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது. அவளுடைய கண்கள், சோகம் மற்றும் கருணையின் ஆழமான கிணறுகளாக,  சொல்லொணா இழப்பின் கனத்தை சுமந்தன. இலங்கையின் வடக்கு மாகாணத்தை சீரழித்த போரில் அவளது கணவரும் அவளது இரண்டு குழந்தைகளும் பலியாகினர். குண்டுவெடிப்புகள் உயிர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டையும் அழித்துவிட்டன, அருள்விழி தனது இரண்டு இளம் குழந்தைகளான [டீன் ஏஜ்] கனிமொழியன் மற்றும் ஒயிலழகியுடன் உயிர்வாழப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் அத்தனையும் இழந்த போதிலும், அருள்விழி தன்னிடம் இருந்து எந்த போரும் எடுக்க முடியாத ஒரு விடயத்தை வைத்திருந்தாள், அது தான் அவளின் உறுதியான நம்பிக்கை!. அருள்விழி ஒவ்வொரு சிறு துளிகளையும் ஒவ்வொரு சிறு செயல்களின் சக்தியையும் நம்பினாள், "சிறிய துளிகள்" இறுதியில் ஒரு பெரிய கடலாக மாறும் என்பதில் அவளுக்கு ஐயம் இருக்கவில்லை. மாற்றத்தின் வெள்ளம் அவர்களின் வாழ்க்கையைத் தழுவும் வரை, ஒவ்வொரு சிறிய அடியும், தரிசு மண்ணில் பெய்யும் மழையைப் போல, மெல்ல மெல்ல வலுசேர்க்கும் என்பதால், தன் குழந்தைகளுக்கும் தனக்கும் எதிர்காலத்தை மீட்டெடுப்பதில் உறுதியாக, ஒரு நேரத்தில் ஒரு சிறிய படியாக, ஒரு சிறு துளியாக, திட்டங்களைச் செய்யத் தொடங்கினாள்.

"சிறுசிறு துளியாய் மழைத் துளி 
சிறு தரையில் விழுந்து சிதறியதே! 
சிறு துளிகள் ஒன்றாய்க் கூடிக்கூடி   
சிறுதூறல் மழை ஒன்று சாரலானதே!" 

"அடைமழை ஆகி அழகாய் விழ 
அனைவரின் தேகமும் மகிழ்வில் நனைந்ததே! 
அன்றைய எம்பூமியும் துளிர்கள் விட   
அழகிய சிறுதுளி பெருவெள்ளம் ஆகியதே! 

ஒரு காலத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தத்தாலும், அன்றாட வாழ்க்கையின் ஓசையாலும் துடிப்பான கிராமமான அது இன்று மிகவும் அழகிழந்து அமைதி சிதைந்து நலிந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் விவசாயிகள் விடியற்காலையில் இருந்து மாலை வரை உழைத்த சலசலப்பான நெற்பயிர்கள், இப்போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு, அருள்விழியின் குடும்பத்தையும் அவளைப் போன்ற மற்றவர்களையும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அவர்களை ஒரு விளிம்பிற்குத் தள்ளி உள்ளது.

நினைவுகளால் அவளின் இதயம் கனத்தது அருள்விழி பெருமூச்சு விட்டாள். "இது என்ன வாழ்கை?" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். பல வருட கடின உழைப்பால் கரடுமுரடான அவளது கைகளால், அவள் அணிந்திருந்த புடவையின் விளிம்பை சற்று சுற்றி இறுக்கி, அவள் எதிர்காலத்தை நினைத்தாள்.

அருள்விழியின் மகன் கனிமொழியன் அவள் அருகில் நின்றான், அவன் கண்கள் அதே தரிசு வயல்களை மேய்ந்துகொண்டு இருந்தது. பதினெட்டு வயதில், அவன் வீட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டான், என்றாலும் அவனது இளம் வாழ்க்கையின் மீது போர் நிழல் படர்ந்தது இருந்ததால், ஒரு காலத்தில் அவனது  கவலையற்ற விளையாட்டுத்தனமும் கம்பீரம் நிரம்பிய பள்ளிப்பருவமும் அன்பான பேச்சும் இன்று கோபத்துடனும் விரக்தியுடனும் கூர்மையாக வளர்ந்து இருந்தது, இல்லை ஆக்கப்பட்டு விட்டது.
 


"அம்மா, இங்க இருந்து நமக்கு இனி எதுவும் கிடைக்காது", என்று உறுதியுடன் குரல் கொடுத்து, "எனக்கு நகரத்தில், அதிகமாக கொழும்பில் வேலை கிடைக்க வேண்டும், அப்படி என்றால் என்னால் சம்பாதிக்க முடியும் அம்மா, நாங்கள் கட்டாயம் பிழைப்போம்." என்று தாயின் கையை இறுகப் பிடித்தான். 

அருள்விழி மகனை திரும்பி உற்றுப்பார்த்தாள், தன் மகனைப் பார்த்ததும் அவளுக்கு கவலையுடன் இதயமும் வலித்தது. அத்தகைய சுமையைச் சுமக்க மிகவும் இளையவனாக இருந்தாலும், குழந்தைப் பருவம் இன்னும் முழுமையாக மாறாத இந்த நிலையிலும் அவனின் உறுதி, நம்பிக்கை அவளுக்கு ஒரு தெம்பு கொடுத்தது.

"ஆனா ஒயிலழகி என்னாச்சு? அவளை என்னுடன் இங்க விட்டுட்டு போறீங்களா? இந்த இடத்துல தனிய வாழும் பெண்களிடம் உலகம் கருணை காட்டாது தெரியுமா" என்று கூறிக்கொண்டு அருள்விழி, குரல் நடுங்க தன் மகளைக் இருகக் கட்டிப்பிடித்தாள். 

ஒயிலழகி, அவள் கொஞ்சம் நெட்டையாக இருந்தாள். முழங்காலுக்கு கீழ் நீளமான மஞ்சள் பாவாடை அணிந்திருந்தாள். நல்ல நிறம். அழகான வட்ட வடிவிலான சாந்தமான முகம். பதினாறும் நிறையாத பருவ மங்கையாகத் தோன்றினாள். சிதைந்த வீட்டின் எஞ்சிய பகுதி ஒன்றுக்கு அருகில் அமர்ந்து, தரையை வெறித்துப் பார்த்தாள். அவள் எப்போதும் தனது கருணை மற்றும் அமைதியான வலிமைக்காக அறியப்பட்டவள், கிராம மக்களிடமிருந்து அவளுக்கு "ஸ்டைல் பியூட்டி" என்ற புனைப்பெயர் கூட உண்டு. ஆனால் அவள் தனது வெளித்தோற்றத்துக்கு அப்பால், உண்மையில் அவளும் தங்கள்      துயரத்தின் பங்கைச் சுமந்தாள்.

“அண்ணா [கனிமொழியன்] சொல்வது சரிதான் அம்மா” என்று ஒயிலழகி மெதுவாகச் சொல்லிவிட்டு அவர்களை நோக்கி நடந்தாள். "வீடு இல்லாமல், நிலம் இல்லாமல் நாங்கள் இப்படி தொடர்ந்து வாழ முடியாது. நாங்கள் எங்கள் எண்ணத்தை, நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தவேண்டும்." என்று கூறி, பின் கொஞ்சம் இடைநிறுத்தி, "நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன், அண்ணாவுடன் நானும் சென்றால், அங்கே  நான் உயர்வகுப்பு படிக்க முடியும்." என்று, பதினாறும் நிறையாத பருவ மங்கை, அன்பு  பசி ஊட்டி வசமாக்கும் கனிமொழியன் தங்கை, குதித்தாடி மருந்தோடும் கலை மானே, இளம் குமரிகளும் மயங்கும் சிலை தானோ என்று இருந்தவள், தாயின் முந்தானையை விரலால் சுருட்டிக்கொண்டு, மேகத்தில் மறைந்த நிலா போல், தாயின் சேலையால் முகத்தை மூடி நின்றாள். 

அருள்விழியின் இதயம் துடித்தது. அவள் எப்படி இருவரையும் வெளியூர் அனுப்புவாள் ? ஒரு காலத்தில் அவர்களின் வாழ்க்கையாக இருந்த இந்த சிறிய கிராமத்துடன் ஒப்பிடும்போது நகரம் ஒரு வித்தியாசமான பெரிய, அறிமுகம் இல்லாத பலர் வாழும் அவசர உலகமாக இருக்கும், அதுமட்டும் அல்ல, அது அன்னியமானதும் கூட. ஆனால் அவளால் அவர்களை என்றென்றும் தன்னுடன் வைத்திருக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். போர் ஏற்கனவே நிறைய அவர்களிடம் இருந்து திருடிவிட்டது. அப்படி என்றால் மேலும் பிள்ளைகளின் எதிர்காலத்தை திருட அவள் யார்? அவள் மௌனமாக சிந்தித்தாள்.

என்றாலும் அருள்விழி பிள்ளைகளை நோக்கி, "இங்கே உயிர் இல்லை, வாழ்வு இல்லை என்பது போல் நீங்கள் இருவரும் பேசுகிறீர்கள்," அவள் மெதுவாக சொன்னாள். "ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இங்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியமும் முக்கியமானது. 'சிறு துளி பெரு வெள்ளம்' அது தான் ஒரு பெரிய கடலையே  உருவாக்கிறது  என்பதை மறக்கவேண்டாம். நம் நிலத்தை, நம் மக்களை எங்களால் என்றும் கைவிட முடியாது. நாம் அனைவரும் வெளியேறினால் என்ன நடக்கும்? கொஞ்சம் சிந்தியுங்கள் பிள்ளைகளே?" என்று இருவரையும் கட்டிப் பிடித்தாள். 

கனிமொழியன் முகம் சுளித்தான், அவனுடைய இளமை அமைதியற்று இருந்தது. "அம்மா, சில சமயங்களில் சிறு துளிகளை கடல் விழுங்குகிறது, அவை அங்கே அவை தம்மை இழந்து மறைந்துவிடுகின்றன. அது தான், இந்த, இன்றைய சூழலில், இந்த இடத்தை விட பெரிதாக நினைத்தேன். நம்பிக்கையில் மட்டும் நாம் தொடர்ந்து இப்படியே வாழ முடியாது." என்றான். 

வெறுமையான வயலை பார்த்தபடி தாயும் பிள்ளைகளும் அங்கு கதைத்துக் கொண்டு நின்ற போது, அவர்களுக்கிடையில் ஒரு கணம் அமைதி நிலவியது. அப்போது, அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் அவர்களின் அமைதியைக் குலைத்தது.

அது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தூயவன் என்ற இளைஞன். அவனது குடும்பமும் போரினால் எல்லாம் இழந்தது, ஆனால் தூயவன் பல்கலைக்கழகத்தில் படித்து தற்சமயம் கொழும்பு நகரத்தில் வேலை செய்கிறான். அவன் உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்தான். அவன் அதிகமாக ஒவ்வொரு மாதமும் கிராமத்திற்குத் திரும்பி வருவான், வரும் பொழுது தன்னால் இயன்ற உதவிகளை கிராம மக்களுக்கு உதவுவான். சில குடும்பங்களுக்கு  தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவினான்.

"அருள்விழி மாமி " என்று வாழ்த்தி, அவன் கண்கள் ஒயிலழகியின் மீதும் ஒரு கணம் நீடித்தது. "உன் நிலையைப் பற்றிக் இப்ப சற்றுமுன் காதில் விழுந்தது. கனிமொழியன் போனால், வீட்டைப் பழுதுபார்ப்பதில் நீ அம்மாவுடன் இங்கேயே இருந்து ஏதாவது உதவி செய்யலாமே. அத்துடன் இங்கு உயர் கல்வி படிப்பதற்கு ஏற்ற ஒழுங்கை நான் கட்டாயம் செய்து தருவேன், மற்றும் உங்க அம்மாவை தனிய விட்டு எங்கும் போகக் கூடாது" என்று கூறி மீண்டும் ஒயிலழகியைப் பார்த்தான். 

ஆனால் ஒயிலழகி தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள், ஆனால் அவளுடைய இதயம் நிச்சயமற்று இருந்தது. என்றாலும் நாட்கள் போக, 
ஒரு சொல்லப்படாத தொடர்பை உணர்ந்த அருள்விழி, ஒரு நாள் தூயவனை கண்டு மெலிதாக சிரித்தாள். "தூயவன், உங்கள் உதவி ஒரு வரமாக இருக்கும். என்றாலும் எங்கள் அண்ணா கட்டாயம் எங்களை கைவிடமாட்டார் " என்றாள். தூயவனின் கண்களை முதன்முதலாக நேருக்கு நேர் அன்றுதான் சந்தித்தாள், அவள் முடிவில், தாங்களாக தங்கள் காலில் எழுந்து நிற்க வேண்டும் என்ற அவளின் முடிவு தெளிவாகத் தெரிந்தது. தூயவனின் முகத்தில் ஒரு வித ஏமாற்றம் மிளிர்ந்தாலும், தலையசைத்தான். 

இதற்கிடையில் அருள்விழி தன் நிலத்தை எப்படியும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். இராணுவம் அதன் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருந்தாலும், அவளும் மற்ற இடம் பெயர்ந்த கிராம மக்களும் உள்ளூர் அதிகாரிகளிடமும் மனிதாபிமான அமைப்புகளிடமும் நிலத்தின் முழுவதையும் அல்லது முதற் கட்டமாக சில பகுதிகளையாவது பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திருப்பி கொடுக்க அரசை, ராணுவத்தை கட்டளையிட்டு வற்புறுத்த வேண்டும் என்று கோரினர். இது ஒரு மெதுவான, அதிகாரத்துவ செயல்முறை, எனவே விடாமுயற்சி முக்கியம் என்பதை அருள்விழி அறிந்திருந்தாள். இந்த விடா முயற்சியுடன், அவள் அருகிலுள்ள நகரங்களில் ஏதாவது கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினாள், வீடுகளைச் சுத்தம் செய்தல் மற்றும் தினசரி பிழைப்புக்காக பணம் சம்பாதிக்க கூடைகளை நெசவு செய்வது இப்படி தனக்குத் தெரிந்த வேலைகளை தொடர்ந்து செய்தாள். என்றாலும் அதனால் அவளுக்கு அதிகம் பணம் மிகுதியாக சேமிக்க கிடைக்கா விட்டாலும் ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு சிறு துளியும் எண்ணப்படும் என்பது அவளுக்குத் தெரியும். அவள் வாய் அவளை அறியாமலே "கடல் கொண்ட நீரை கவர வந்த கள்வன் கரு கொண்ட மேகம், பெரு மேகம் தங்கள் பேதைமை மறந்து இணைந்து பெய்வது தான் பெரு மழை, மேகத்துடன் மேகம் இணைந்து மேலான ஒற்றுமை கொண்டதால் மேதினி பெறுவது தான் மழை, சிறு சிறு துளிகள் எல்லாம் சிதறாமல் சேர்வது தான் சினம் கொண்ட பெரு வெள்ளம்" முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அப்படி சிதறாமல் ஒவ்வொரு குடிமகனும் ஒன்று சேர்ந்தால், சினம் கொண்டு பெருவெள்ளமாக திரண்டால், .... கட்டாயம் விரைவில் திரும்பி பெறலாம், ஆனால்..? அவள் அதற்கு மேல் சிந்திக்க விரும்பவில்லை?   

அவளது பிள்ளைகளான  கனிமொழியன், ஒயிலழகி இருவரும் தாயுடன் இணைந்து  தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாங்களாகவே சிறு அடி எடுத்து வைத்தனர். தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கனிமொழியன், தூயவன் உதவியும் தொடக்கத்தில் கிடைக்க வேலை தேடி கொழும்பு சென்றான். அவனுக்கு ஒரு சிறிய நிறுவனத்தில் விநியோக பையன் [டெலிவரி பாய்] வேலை கிடைத்தது, அவன் விரைவில் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டான் மற்றும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய சிறு துளியாக இருந்தாலும் சேமித்துக் கொண்டான். ஒயிலழகி, ஆரம்பத்தில் கொழும்பில் உயர் கல்வி கற்க விரும்பினாலும், பின், தங்கள் கிராமத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் தற்காலிகப் பள்ளியில் சேர்ந்து, தனது உயர் கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். 

“மீண்டும் நாம் கட்டி எழும்புவோம் அம்மா” என்று கொழும்பில் இருந்து  தனது முதல் தொலைபேசி அழைப்பில் உறுதியளித்தான்.  "இது ஆரம்பம் தான்." என்று கூறி முடித்தான் “ஆமாம் மகனே” என்று அருள்விழியும் பதிலளித்தாள். "நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு சிறிய துளியும் கணக்கிடப்படுகிறது." என்றாள்.

வாரங்கள் மாதங்களாக மாற, அருள்விழியின் முயற்சியின் சிறு துளிகள் ஒன்றின் மேல் ஒன்றாக குவியத் தொடங்கின. போரிலிருந்து தப்பியவர்களுக்காக வாதிடும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் [NGOs] ஆதரவும் அவளுக்கு கிடைத்தது. நில உரிமைக்கான அருள்விழியின் மனு, அதிகாரத்தால் மூடிய பெட்டியில் இருந்து தூசு தட்டி இழுத்து எடுக்கப்பட்டது. மெதுவாக, அவர்களது சொந்த நெல் வயலின் ஒரு சிறிய பகுதி உட்பட, நிலத்தின் சில சில பகுதிகள் கிராம மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன. கண்ணி வெடிகள் மற்றும் இராணுவப் பிரசன்னம் காரணமாக பெரிய அளவிலான விவசாயத்திற்கு இன்னும் அந்த நிலம் ஒரு ஆபத்தானது என்றாலும், இது ஒரு சிறிய வெற்றியாகும் - அவர்களின் முயற்சிகள் பலனளித்ததற்கான முதல் அறிகுறி, இந்த முதல் "சிறு துளிகளே"!

கூரையை விட்டு அழகாய் அத்துமீறும் ஆர்பரிக்கும் மழைச்சாரல் வடிந்து ஓடும் பொழுது சிதறிய துளிகளில் உடல் எங்கும் கூசும். அதில் ஒரு இன்ப உணர்வு பூரித்து அந்த துளிகளை உற்று நோக்கும். அப்படித்தான் நிதானம் கொண்டு, விடுபட்ட வயல் காணியை இமைக்காது பார்த்தாள்.

இதற்கிடையில் கனிமொழியன் கொழும்பில் திறமையான, நேரம் தவறாத, டெலிவரி பாய் ஆகிவிட்டார். பல மாதங்கள் அர்ப்பணிப்புக்குப் பிறகு, அவன் ஒரு சிறிய குழுவை நிர்வகிக்கும் பதவி உயர்வும் பெற்றான். அவனது இயல்பான தலைமைத்துவமும், அன்பான பேச்சு முறையும், அவனது பெயருக்கு ஒரு உண்மையான புகழையும், நகரத்தில் அதனால் முக்கியமான தொடர்புகளை உருவாக்கவும் உதவியது. இந்த இணைப்புகள் இறுதியில் அவன் தனது சொந்த சிறிய விநியோக சேவையைத் தொடங்க வழிவகுத்தது, அது செழிக்கத் தொடங்கியது. இதன்பின் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அவன் வீட்டிற்கு பணத்தை கூடுதலாக அனுப்பினான், அதுமட்டும் அல்ல, அவன் அருள்விழியையும் ஒயிலழகியையும் வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப  அனுமதித்தான். அதற்கு தூயவன் கூட உடல் உதவி செய்ய முன்வந்தான்.  

கிராமத்தில் தாயுடன் தங்கி இருந்த ஒயிலழகி தனது படிப்பைத் திறமையாகத் தொடர்ந்தாள், கஷ்டங்களையும் மீறி தனது வகுப்பில் சிறந்து விளங்கினாள். தன்னைப் போலவே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு உதவ அவள் ஒரு ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டாள். அவளது கல்வி வெற்றியடையும் அதே தருணத்தில், அவளது வாழ்க்கையின் தனிப்பட்ட மற்றொரு அம்சமும் அமைதியாக மலர்ந்தது - அது தூயவன் என்ற இளைஞனுடன் அவளது உறவு நெருக்கமாகியது. 

"நீங்கள் அற்புதமான, சொற்களால் வர்ணிக்க முடியாத அழகையும் நல்ல விடயங்களையும் கையாளுகிறார்கள், ஒயில்," என்று அவளின் கையைக் தன் கையுடன் கோர்த்துக் கொண்டு தூயவனும் ஒயிலழகியும் ஆற்றங்கரையில் அமர்ந்து சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்ததனர்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான். காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்றால் அது தவறு. அது கருங்கல்லுக்கும் உண்டு, செம்மனிற்கும் உண்டு, நீல வானத்திற்கும் உண்டு, அதில் நீந்துகின்ற விண்மீனுக்கும் உண்டு, அதை பிரதிபலிக்கும் நீலக்கடலில் நீந்துகின்ற நீலத்திமிங்கிலத்திற்கும் உண்டு, வாசமில்லா மலருக்கும் உண்டு, அதில் தேனை தேடும் வண்டுக்கும் உண்டு, ஏழு வண்ண வானவில்லுக்கும் உண்டு, நொடிக்கு நொடி நிறம் மாறும் அழகான (ரீங்காரம் செய்யும்] ஹம்மிங் பட்சிக்கும் உண்டு, அதில்  ஒயிலழகியும் தூயவனும் விதிவிலக்கல்ல!

அவனது வார்த்தைகளின் அரவணைப்பையும், அவை தனக்குள் துளிர்விட்ட நம்பிக்கையையும் உணர்ந்த ஒயிலழகி, அவனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகை செய்தாள். அவள் தன் கல்வியில் கூடிய கவனம் செலுத்தி, திறமையாக தன் பட்டப் படிப்பை முடித்தாள். தங்கள் கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்ப அது கட்டாயம் உதவும் என்று நம்பினாள். மிகவும் கடினமான, போருக்கு பின்னான காலங்களில் கூட, கடினமான நிலத்தில் விரிசல்களின் வழியே அன்பும் ஆதரவும் காட்டுப் பூக்கள் போல அவர்களிடம் வளர்ந்தன. என்றாலும் "ஒரு நாள், நான் விரும்பியதை அடைந்துவிட்டால், ஒருவேளை நம் எதிர்காலத்தைப் பற்றி அந்த நேரம் பேசலாம்," என்று நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது.  

தூயவன் அவள் உறுதியை மதித்து தலையசைத்தான். ஒயிலழகி தனது சொந்த பாதையில் செல்ல நேரம் தேவை என்பதை அவன் அறிந்திருந்தான், மேலும் அவன் அவளை மிகவும் ஆழமாக காதலிப்பதற்கும் ரசிப்பதற்கும் காரணங்களில் அதுவும் ஒன்று.

எதுஎன்ன என்றாலும், தன்னை சுற்றிய சூழல் மறந்து இரண்டு விழிகளுக்கும் ஒற்றைத் தேடல் ஏற்பட்டது. இத்தனை பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள். எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. எப்பொழுதாவது திரும்புகிறது அவள் பார்வை அதற்காகவே தவமிருக்கிறது விழிகள். அவள் என்னை தாண்டும் சமயம் இதயம் எகிறி குதித்தோடும் அவள் பின்னால். பெறுபவர் இல்லாது வீசி எறிந்த கடிதங்கள் ஆயிரம். ஒற்றை எழுத்தோடு தவம் இருந்த கடிதங்கள் எத்தனை? நிலை கொண்ட பயத்தால் ஒரு பக்க கதையானது காதல். அவள் வீட்டு சாலைகளுக்கு தெரியும் எனது கால்களின் இடைவிடாது உழைப்பு. காதல் கண் சிமிட்ட காத்திருக்கும் இமைப்பறவை. ஆண்டுகள் கடந்தும் ஆர்பாரிக்கும் பேரலை அவள். நான் எழுதி கொண்டு இருக்கும் வரையில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாள் என்னவள். ஒரிரு வார்த்தைகள் தான் பேசி இருப்பாள் அத்தனை வருடத்தில் அதையே இன்று வரை அடைகாக்கிறேன். கட்டாயம் அவளின் உறுதி அன்பு இரண்டும் அதை பெரு மழையாக்கி காதல் மழையில் என்னை  நனைக்கும் என்று தனக்குள் தானே பேசி பேசி தூயவன் காத்திருந்தான்.      

மேலும் சில வருடங்கள் கடக்க, அருள்விழியும் அவளது மகனும்  கஷ்டப்பட்டு சேகரித்த "சிறு துளிகள்" ஏதோ பெரியதாக, பெரும் வெள்ளமாக, கடலாக  ஒன்று சேர ஆரம்பித்தன. கனிமொழியனின்  வணிகம் விரிவடைந்து, நாடு முழுவதும் விநியோக சேவை செய்யும் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக மாறியது. அவன் தனது சேமிப்பைக் கொண்டு, அவர்களது கிராமத்திற்கு அருகில் ஒரு சிறிய நிலத்தை வாங்கினான், அங்கு அவன் விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் மூலம் பொருளாதார சுதந்திரத்தை மீட்டெடுக்க, போரினால் பாதிக்கப்பட்ட மற்ற குடும்பங்களுக்கு உதவ ஒரு கூட்டுறவு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டான்.

இதற்கிடையில் ஒயிலழகியும் தனது கல்வியை முடித்துவிட்டு ஆசிரியையானாள். அவள் தன் கிராமத்தில் குழந்தைகளுக்காக ஒரு மாலை நேர பள்ளியை நிறுவினாள், பாரம்பரிய பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடங்களில் மட்டும் மேலதிக உதவியும் கவனமும் செலுத்தாமல், கடினமான அல்லது மோசமான போர் காலத்தின் பின், அதனால் பாதிக்கப்பட்ட இளம் பிள்ளைகளுக்கு அதில் இருந்து  மீண்டும் மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக மீண்டெடுக்க அவர்களுக்கு  மீள்திறனை வழங்கும் கட்டமைப்பிலும் கவனம் செலுத்தினாள். அடுத்த தலைமுறையினரை, போரினால் சிதைந்த சமூகங்களை, மீண்டும் கட்டியெழுப்புவதே அவளின் முதல் நோக்கமாக இருந்தது. 

அருள்விழியைப் பொறுத்தவரை, அவர்களின் நிலத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் வீட்டை மீட்டெடுக்கவும் அவள் எடுத்த முயற்சிகள் பலனளித்தன. நிலம், துண்டு துண்டாகத் திரும்பப் பெற்று, கனிமொழியனின் கூட்டுறவின் உதவியுடன், மீண்டும் நெல் பயிரிட முடிந்தது. கிராமமும் மெல்ல மெல்ல உயிர்பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஒரு போர் மண்டலத்தின் பேய் எச்சமாக இருந்த அது, அதன் மக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், ஒரு செழிப்பான சமூகமாக மாறியது.

எப்போதும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருந்த தூயவன், ஒயிலழகி தனது இலக்குகளை அடைந்த பிறகு அவளிடம் தன் திருமண ஆசையை முன்மொழிந்தான். அவளும் மகிழ்வுடன்  ஏற்றுக் கொண்டாள், இப்போது, தனது சொந்த கனவுகள் நிறைவேறிய நிலையில், அவள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தழுவத் தயாராக இருப்பதாக உணர்ந்தாள். ஒன்றாக, அவர்கள் ஒரு குடும்பத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கினர், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையில் அடித்தளமாக இருந்தனர், என்றாலும் தமது  போராட்டம் மற்றும் தமது கிராமத்தின் மீளெடுப்பு போன்றவற்றில் இருந்து என்றும் விலகவில்லை. 

ஒரு மாலையில், அருள்விழி புதிதாகக் கட்டப்பட்ட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தன் பேரக்குழந்தைகள் வயல்வெளியில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர்களை இங்கு அழைத்து வந்த நீண்ட பயணத்தை நினைத்துப் பார்த்தாள். சிரிப்பின் சத்தம் காற்றை நிரப்பியது - போரின் அமைதியிலிருந்து அது வேறுபட்டது. கருணையும் வலிமையும் நிரம்பிய அவள் கண்கள் நன்றியுணர்வுடன் நிரம்பி வழிந்தன.

இப்போது ஒரு வெற்றிகரமான தொழிலதிபரான கனிமொழியனும் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தான். "நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம், அம்மா," அவன் மெதுவாக அம்மாவின் காதில் கூறினான்.

"ஆமாம்," அருள்விழி பதிலளித்தாள், அவளுடைய குரல் உறுதியாக ஒரே நிலையில் தழும்பாமல், ஆனால் உணர்ச்சியால் நிறைந்தது. "சிறு துளிகள்" ஒவ்வொன்றாக இந்தக் கடலை உருவாக்கின என்றாள். 

அருள்விழியும் அவனது குடும்பத்தினரும் எடுத்துக் கொண்ட சிறிய படிகள், "சிறு துளிகள்",  தங்கள் நிலத்தைப் பாதுகாத்தல், கல்வியைத் தொடர்தல், ஒரு தொழிலைத் தொடங்குதல், உறவுகளை உருவாக்குதல் ஆகியன எல்லா மிகப் பெரிய விடயத்திற்கும் அடித்தளமாக அமைந்தது. உரிமையுடன் அதிகாரத்துடன் உயிர்வாழ என அருள்விழி குடும்பம் ஆரம்பித்தது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வெற்றியாக மாறியது. ஒவ்வொரு "சிறு துளி" முயற்சியும் கனிமொழியன் உழைத்த நீண்ட மணிநேரமும், ஒயிலழகி தன் மாணவர்களிடம் காட்டிய அர்ப்பணிப்பும், அருள்விழி எடுத்த கோரிக்கைகள் மற்றும் வேலைகளும், ஒவ்வொரு சிறு துளிகளும் பெரும் மாற்றத்தின் பெருங்கடலை உருவாக்கியது.

ஒரு காலத்தில் போரினால் சிதைந்து போன அவர்களின் வாழ்க்கை, இப்போது நெகிழ்ச்சி, அன்பு மற்றும் இழந்ததை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பெருமை பெற்றது. இறுதியில், அவர்கள் செய்த சிறிய, வெளித்தோற்றத்தில் அற்பமான செயல்கள், "சிறு துளிகள்", அவர்கள் ஒருமுறை மட்டுமே கனவு கண்ட எதிர்காலத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லும் வலிமையான பெரும் கடலாக மாறியது!

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

468704222_10227520707626094_4878929243991327445_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=DQZb0msRdNkQ7kNvgGQMBsa&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AHoBLVC5mvcXIVvyIFJUoG8&oh=00_AYAKIMansTPsLMX1Rn3D1BuOFgRXo37CkkKWbr_GSH4_tw&oe=6752237F 468761238_10227520707666095_8164732013069783255_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=1LDwZ3TNUwIQ7kNvgGvWsUD&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AHoBLVC5mvcXIVvyIFJUoG8&oh=00_AYAw1z577YEPTtcFlNfsTEc0oIg6U7xN1JrmlR94lDgpoA&oe=675227E8 468756258_10227520708226109_2967643239467301636_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=lQdKhibn2EwQ7kNvgGXuGrK&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AHoBLVC5mvcXIVvyIFJUoG8&oh=00_AYBPuLc6pIfOFS9aXepVnYpkRhp49255z_EApB5DATbLDA&oe=67522E38


 

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 05 ['மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி']

3 weeks 3 days ago

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 05
['மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி']

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை (தருமபுரி) ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப் பொருட்களாக உள்ளன. திண்மையான உடல் வலி பொருந்தியவன் என்றும்; சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். நாம், பாடசாலை பாடங்களில் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம். அதியமான் என்பது பரம்பரைப் பெயர். அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன். ஒரு முறை வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான். அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான். அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும், உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான், அக் கனியைத் தான் உண்ணாது, தன் அமைச்சரவையில் அவைப் புலவராக இருந்த ஔவைக்கு, அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான். ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி!

ஒரு சமயம் நடை பெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக் கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெரு மகிழ்ச்சி அடைந்தார். உன்னால் போரில் தோற்கடிக்கப் பட்டவர்கள் சிதறியோடினார்கள். அந்த பெருந் தன்மையற்ற அரசர்கள் அங்கு இறந்தார்கள் .அவர்கள் அவ்வாறு இறந்ததால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று அவ்வையார் அதியமானை பார்த்து கேட்டார். இதோ அந்த பாடல்:

"திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே."
[புறநானூறு - 93]

பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க் களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” [ஓர் ஒலிக் குறிப்பு / denoting sound, as that of a drum] என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.
புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவரைப் பற்றிய தகவல்கள் உள்ளன. 

அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவருடன் போரிட்டு அவரது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தார். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும்,இப்போரில் தோற்று இறந்தார். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.
மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு [படம் - 05] என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது. இந்த ஜம்பைக் கல் வெட்டு, 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மாணவர் ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டது. அதில்:

"ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)"

என பதியப் பட்டுள்ளது. அதாவது,  அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தனக்கு தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது. அத்துடன், அதியமான் இக் கல்வெட்டில் "சதிய புத்தோ" என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில், 

[The Edicts of King Asoka - 2, Everywhere  within Beloved-of-the-Gods, King Piyadasi's domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras,  the Keralaputras [Cera dynasty], as far as Tamraparni and where the Greek king Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos,..] சேர, சோழ, பாண்டியர்களுடன் "சதிய புத்தோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததும் இதன் இன்னொரு சிறப்பு ஆகும்.

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே."
[புறநானூறு - 94]

பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன் மீது ஊர்ந்து வந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம் போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் [Musth / மதநீர் = மதம் + நீர், ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.] போலக் கொடுமையானவன் என அவ்வையார் இவனை புகழ்ந்து பாடுகிறார். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

பகுதி 06 - "மாவீரன் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி" தொடரும்.

468575100_10227505644929536_8678358933043985141_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=n9LM8oJjS9YQ7kNvgFR_IEy&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AV9nUL0lg6MX-9rSCQesvA1&oh=00_AYA7hcfqMdSXrWJCc2wA0ckVbdpg1NYCsJx8WomFJY1IjQ&oe=674E1F74  468550320_10227505645009538_8734744616211162059_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=GSX4NEnJGRgQ7kNvgHNBfF3&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AV9nUL0lg6MX-9rSCQesvA1&oh=00_AYD2zeFZOHojdDdQDml2i0DX-44qMqjWpdYPB1uqXhZtjg&oe=674E416E


 

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 04 [மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]

3 weeks 4 days ago

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 04
[மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]

 

சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப் போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அவர்களது போர் முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடை பெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். சங்க காலத்து தமிழர்களின் தரைப் படைகள் ஐந்து படையணிகளாக பகுக்கப் பட்டிருந்தன: அவை யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை,காலாட் படை, தூசிப் படை ஆகும்  இதில் நவீனயுக கொமாண்டோப் படையணிகளுக்கு நிகராக இயங்கியதே தூசிப் படையாகும். அதாவது முதலாவதாக வந்து [படையின் முதற்பகுதியாக] சண்டையிடும் படை தான் தூசிப் படை அல்லது தார் ஆகும். ["தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து."/குறள் எண்: 767] இனி, அப்படியான எதிர்த்து வரும் தூசிப் படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? என ஆறாத் துயரம் எய்தி, கேள்வி கேட்கிறார் கழாத்தலையார் என்ற கி.மு மூன்றாம் / இரண்டாம்  நூற்றாண்டளவில் வாழ்ந்த, சங்க புலவன். இவனை இப்படி கேட்க வைத்தது சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளி ஆகிய இருவரினதும் வீரச் சாவு தான். 

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிகுந்தவன். இவனுக்கும் சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் [திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடியென வழங்குகிறது] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிட வேண்டாம் என்று நிறுத்தி விட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவ்வாறு போரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ [அறம்:- ஒழுக்கம், மண்டு:- தாக்கு] என்று பெயர். போர்க்களத்தில், சேரமான் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பதைக் கண்ட கழாத்தலையார் அவனைப் புகழ்ந்து பாடினார். சேரன் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கழாத்தலையாருக்கு அணிவித்துப் பின்னர் இறந்தான். மன்னர்கள் இருவரும் இந்தப் போரில் விழுப்புண்பட்டு போர்க்களத்திலேயே இறப்பதைக் கண்ட புலவர் கழாத்தலையார் மிகுந்த வருத்த முற்றார். அவர்களுடைய வெற்றியை அறை கூவும் முரசு ஓய்ந்தது. மன்னர்களின் மனைவியர் கைம்மை நோன்பை மேற்கொள்வதை விரும்பாது தம் கணவரைத் தழுவி உயிர் துறந்தனர். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த இரு மன்னர்களையும் விருந்தினராகப் பெற்றனர் என்று  இந்த காட்சியை பார்த்து விட்டு தான் இப்படி பாடினான்.

"வருதார் தாங்கி அமர் மிகல் யாவது
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்து எறி அனந்தர் பறைச் சீர் தூங்கப்
பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
பன் நூறு அடுக்கிய வேறு படு பைஞ்ஞிலம்
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைக்
களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே!"
[புறநானூறு 62]

இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப் போர்க் களத்தில் சண்டையிட்டு அங்கே புண் பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலை மயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப் பெண்கள், மேன் மேலும் கொட்டு கின்ற மந்தமான தாளத்திற்க் கேற்ப ஆடுகின்றனர். இறந்த படை வீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படை யோடு, சினந்து அறவழியில் போர் புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக் கணக்கான படை வீரர்கள் அடங்கிய பல வகைப் படைகளும் இருக்க இடமில்லாத படி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க் களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக் கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக, என அந்த புலவன் இருவரையும் வாழ்த்தினான். 

போர் என்னும் ஊரைப் போர்வை என்றும்,போஒர் என்றும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்துக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது. இங்குப் பாடிவீடு அமைக்கப்பட்ட இடம் கட்டூர் எனப்பட்டது. இந்தத் திருப்போர்ப் புறம் தஞ்சை மாவட்டத்திலுள்ள ’கோவிலடி’ என்ற ஊர் என்றும், இவ்வூர்க் கல்வெட்டுக்களில் ‘திருப்பேர்த் திருப்புறம்’என்று குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிக உடையவன். இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான். வரலாற்று ஆசிரியர்கள் உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனும் ஒருவனே எனப்படுகிறது.

கரிகால் வளவனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கரிகால் வளவன் இறந்த பிறகு, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான்.
மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம் புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று கூறப்படுகிறது. 

கிட்டத் தட்ட இப்படியான ஒரு போர் தான் எல்லாளனுக்கும் [அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன்] துட்டகாமினிக்கும் [இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது. தென் இலங்கையை ஆண்ட மன்னன்] இடையில் இலங்கையில்  இரண்டாயிரத்தி நூறு வருடங்களுக்கு முன் நடைபெற்றது. துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றி கொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் "நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்" என்றான் கெமுனு என்னும் துஷ்டகாமினி. போர் நடந்த போது எல்லாளனுக்கு வயது 74.துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, தமிழ் மன்னன் எல்லாளன் ஏற்றுக் கொண்டான். அவன் அறப்போர் மரபு வழி வந்தவன் அல்லவா?

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அது உடன் சேர்ந்து எல்லாளனும் விழுந்தான்  அப்பொழுது, யுத்த தருமத்திற்கு மாறாக துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது. அதன் பின் அவன் திட்டங்கள் முற்றாக நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து அவனும் பின் இறந்து போனான். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 05 - "மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி"  தொடரும்.

468478974_10227499796783336_6877971751097467088_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=mPm281nzSusQ7kNvgGUWtDp&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AiTAjnFeZV3yL1MmRllLdP2&oh=00_AYAX7Y4p6X1Auyutw8Sci-Xt8dGtuhZvawQpMGhoNsrSxA&oe=674CB8AD  468185205_10227499796823337_4498456129813538564_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=h9-udWO7vA8Q7kNvgFzQ6yT&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AiTAjnFeZV3yL1MmRllLdP2&oh=00_AYDFYiIF3FyRRJPyHLhfER3ATIxtqlhLqluFGp1YjeFl5w&oe=674CD493


 

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 03  ["மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"]

3 weeks 4 days ago

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 03 
["மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"]

வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப் பட்ட , சங்க கால தமிழ் பெண்களின் / தாயின் வீரம் செறிந்த பண்பினை முன்பு பார்த்தோம். மானமா? உயிரா? என்று கேட்டால், மானமே பெரிது என்று வாழ்ந்த வாழ்க்கை தான் புறநானூறு வாழ்க்கை. "மயிர் நீப்பின் உயர் வாழாக் கவரி மான்" தான் அந்த வீரர்கள். இதைத் தான் வள்ளுவரும் தனது குறள் 969 இல் 


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்."


என்று கூறுகிறார். அதாவது நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம் நம்முடைய செயல்கள் ,குணங்கள் இருக்க வேண்டும் என்கிறார். அப்படித்தான் அன்று வீர மரணம் அடையும் போக்கு சங்க கால வீரனிடம் இருந்தது.

இந்த வலிமையை வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா என்கிறார் பாரதியார். 

"கருவினில் வளரும் மழலையின் 
உடலில் தைரியம் 
வளர்ப்பாள் தமிழன்னை..
களங்கம் பிறந்தால் 
பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள்பிள்ளை! "


["அச்சம் என்பது மடமையடா" / மன்னாதி மன்னன் (1960)] 

என்கிறான் கண்ணதாசன். தாயின் கருவில் உண்டாகும் போதே ஒரு மனிதனின் பண்புகள் உருவாகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த வீரத் தமிழ் தாய் அத்துடன் நிற்கவில்லை. தமது பிள்ளைகளின் மார்பில்  ஐம்படைத் தாலி அணிவித்து இன்புற்றனர் என்கிறது சங்க பாடல்கள். அதுமட்டும் அல்ல, கம்பராமாயணம் / பால காண்டம் / நாட்டுப் படலத்தில் [58] கூட : 

"தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை ... "

என்று கூறுகிறது. அதாவது  ஐம்படைத்  தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும் [saliva - உமிழ்நீர்; எச்சில்] தம் குழந்தைகளுக்குத்  பாலமுதைப்  புகட்டும்  தாய்மார்களின் அழகிய கைகள் என்று கூறுகிறது. அது என்ன  ஐம்படைத் தாலி? வேல் [அல்லது சங்கு], சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்களால் அமைந்த தாலியை பிறந்து ஐந்தாம் நாள் அணிவித்து மகிழ்கிறார்கள். அதன் பின் சிறிது வளர, அவர்களின் விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது போன்ற வற்றை ஒன்றோடு ஒன்று மோத விட்டு பார்த்து மகிழ விடுகிறார்கள். இப்படி வீரத்தை ஊட்டியவர்கள் இந்த வீர பெண்கள் / தாய்கள். அதாவது வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த பண்பினை காண்கிறோம். 

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானங் காப்போர்
சரித்திரந்தனிலே நிற்கின்றார் “

இப்படி கண்ணதாசன், அதே பாடலின் இறுதியில் கூறுகிறான். அப்படி மக்கள் மனதிலும் சரித்திரத்திலும் நிற்கின்ற, அவர்கள் வளர்த்த சில  மாவீரர்களை இனி பார்ப்போம்.

மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்:     
              
 

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற சங்ககாலப் பாண்டிய நாட்டினை கி.பி. 205 முதல் 215 வரை ஆட்சி செய்த ஒரு மன்னன். இவரின் தந்தை இளமையிலேயே இறந்ததும், இவனது தாயும் அந்த கால மரபுப்படி உடன்கட்டை ஏறியதாலும் [கணவனை இழந்த மனைவி அவரின் சடலம் தீமூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. இந்த சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ம் ஆண்டு சட்டத்துக் எதிரானதாக ஆக்கப்பட்டது], சிறு வயதிலேயே முடிசூட்டப் பட்டவன் இவன். புறநானூறு 77 இவனை, இந்த பாலகனை, 

"கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
......................................................................
......................................... தார் பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே;  " 

என்று பாடுகிறது. அதாவது சலங்கை கழற்றப் பட்ட கால்களில் ஒளி பொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான் [கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் கழல் அணிவது அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது இந்த வீரக் கழலைத் தான்.] ......... ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) ஐம்படைத் தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்று தான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! என்று கூறுகிறது. 

நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். இதை அறிந்த இவன்:

“இந்தப் பாண்டியன் நெடுஞ் செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால் சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப் படைகளையும் தேர்ப் படைகளையும் குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு திரட்டிக் கொண்டு வந்திருக் கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப் பேசியவர்கள் ஆவார்கள்.

அவர்களை வேரோடு அழிந்து சிதைந்து போகும் படியாகத் தாக்கி முரசத்தையும் குடையையும் கைப் பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்த வில்லையானால் என் பெயர் பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும் குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் ‘இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப் படுவேனாக! மிக்க சிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடா தொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம் அழுது புலம்பிட, ‘இல்லை யென்று கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்...”

எனக் தனது புறநானூறு பாடல் 72 மூலம் வஞ்சினம் கொட்டி, உடனே படைகளோடு போருக்குப் புறப் பட்டான். அத்தனை அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட இந்த, நெடுஞ்செழியன் அனைவரையும் தோற் கடித்தான் என்பது வரலாறு. இவனது இந்த பெருமையை புலவர் மாங்குடி கிழாராகிய மருதனார் இப்படி கூறுகிறார்:
 


மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு / தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக் கொண்டு செல்வது போல, உன் யானைகள் சென்று போர்க் களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்து ஊடுருவ, அவ்வாறு களம் அகலச் செய்த பரந்த இடத்தில், அதாவது அந்த யானை சென்ற அகன்ற பாதையில், ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க் களத்தைக் கலக்கி, அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடி [கிரீடம்] யணிந்த தலைகளை அடுப்பாகவும்,அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலை பெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ் வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு, ஆகியவற்றையுடைய அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள். உன்னோடு மாறு பட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள் தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால், அவர்களும் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள். அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் எல்லோரும் எந்த வேறுபாடும் இன்றி சொர்க்கம் போவார்கள் என்று உரைக்கப்படுகிறது. இனி அந்த பாடலை பார்ப்போம். 

"நளிகட லிருங்குட்டத்து 
வளிபுடைத்த கலம்போலக் 
களிறுசென்று களனகற்றவும் 
களனகற்றிய வியலாங்கண் 
ஒளிறிலைய வெஃகேந்தி 

அரைசுபட வமருழக்கி 
உரைசெல முரசுவௌவி 
முடித்தலை யடுப்பாகப் 
புனற்குருதி யுலைக்கொளீஇத் 
தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின்

அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய 
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை 
நான்மறை முதல்வர் சுற்ற மாக 
மன்ன ரேவல் செய்ய மன்னிய 
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே 
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு 
மாற்றா ரென்னும் பெயர்பெற் 
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே."

[புறநானூறு பாடல் 26] 

மேலும், புறநானூறு 19, & 25, அகநானூறு 36, 175 & 209, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127 பாடல்களில் இந்த தலையானங்கானத்து போரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்படி பெருமை பெற்ற, சிறப்பு பெற்ற இவனின் தந்தை, வெற்றிவேற் செழியன் ஆகும். இவன், கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்த, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனின் தம்பி ஆகும். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 04 - "மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்" தொடரும்.

468621161_10227494800458431_7294551439657643706_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=wjpBT6qk_JMQ7kNvgHI09EN&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A3fa2JjcPi9Vm2bdC8wTmGf&oh=00_AYD77E2bMNZZifKEvUhUnZ_3Hw_AGuT8M5XH7ZNWM9VmCg&oe=674BB60B

 

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 02 [வீரத் தாய்]    

3 weeks 6 days ago

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 02
[வீரத் தாய்]    
 


சங்க காலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்; அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப் படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிறுவியுள்ளன. உதாரணமாக புறநானூறு 76 


"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
..............................................
பசும்பூட் செழியன்
10 பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!"

என்று அடித்து சொல்கிறது. அதாவது  'ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டு போவதும் இயல்பு தான். .... என்றாலும் பசும் பொன்னாலான அணி கலன்களை அணிந்த நெடுஞ் செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க் களத்தில் அவர்களை அழித்ததை முன்பு கண்டதில்லை' என்று தலையாலங்கானப் போரில் பாண்டியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் பாடுகிறார்.
 


இப்படி பல சான்றுகள் புறக் கவிதைகளில் மேலே கூறியவாறு ஏராளமாக உள்ளன, என்றாலும் கவி பொன்முடியின் ஒரு கவிதை முதன்மையான ஆதாரம் எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது. "வாளைக் கையில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து வெற்றியுடன் மீள்வது ஆண்மகனின் கடமை" என்கிறது! 

சங்கப் பாடல்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கை 473 பேர். அவற்றில் பெண் புலவர்களின் எண்ணிக்கை 41 ஆகும். 16 புறநூனூற்றுப் புலவர்கள். அவர்கள் 59 பாடல்களைப் பாடியுள்ளனர். அதில் ஒரு புலவர் தான் இந்த பொன்முடியார். இவர் ஒரு தாய். 

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"

என முடியும் (புறநானூறு 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை ஆகும். ஆண் மகனைப் பெறுவதில் சங்க காலச் சமூகத்துக் கிருந்த மகிழ்ச்சியையும் அதை விட அவனை சான்றோன் ஆக்குதலில் இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியையும் நாம் இங்கு காண்கிறோம். சங்க காலத்தில் சான்றோன் என்பதற்கு வீரன் என்ற பொருளே பொதுவாக இருந்தது. 

ஒரு நாள், மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்த பெண்பாற் புலவராகிய காவற் பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் அவரின் சிறிய வீட்டின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு “உன் மகன் எங்கே உள்ளான்” என்று நீ என்னை கேட்கிறாய். இதோ என் வயிற்றைப் பார், என தன்  வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது. என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன், அந்த புலி, இப்ப குகையை விட்டு வெளியே போய் விட்டது. அவன் இப்ப தன் நாட்டுக்காக போர்க் களத்தில் இருப்பான். அங்கு போய்ப் பார் என்று கூறுகிறார். இதோ அந்த வீரத் தாயின் பாடல்:

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே"
[புறநானூறு 86] 

பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க் களத்திற்கு அனுப்பினாள். அவன் வீரச் சாவடைந்தான். நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள். அவனும் களம் பட்டான். ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப் [சிறப்பை, பெருமையை] படம் பிடித்துக் காட்டுகிறார்.

"கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே."
[புறநானூறு 279]

களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந் தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள். “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள். கையில் வாளெடுத்தாள். களம் நோக்கிக் கடுகினாள். வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்: மகனைப் பிணமாகக் கண்டாள்: அழுகை பொங்கியது. ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு [போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்] மாண்டான் என்பது கண்டு உவகை [மகிழ்ச்சி] கொண்டாள் .அவனை ஈன்ற ஞான்றினும் [நாள்] பெரிது உவந்தனள். இப்படிப் பழந் தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப் பண்பைக் [வீரத்தை] காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார்.

"நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாள் அடு படு பிணம் பெயராச்
செங்களம் துழவு வோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."
[புறநானூறு 278]

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய  மகாகவி காளிதாசன், தனது குமார சம்பவத்தில் (7-87) " நீ வீரர்களின் தாயாக விளங்க வேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி)" என்று வாழ்த்துவதாகக் கூறுவதையும், தனது மற்றும் ஒரு நாட்டிய நாடகமான சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் - வீரர்களின் தாயாக [வீரப்ரசவினீ பவ] விளங்குவாயாக என்று சகுந்தலையை வாழ்த்துவதையும் கவனிக்க. அப்படிபட்ட வீரர்களின் நடு கல்லை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். பொதுவாக இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப் படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெரு மதிப்புக் கொடுக்கப் பட்டு வந்தது. சங்க இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப் பற்றிய தாகவே உள்ளதும் குறிப்பிடத் தக்கது.

நெடுங்காலம் பிள்ளையில்லா ஒரு குடும்ப பெண், தனது முதுமை பருவத்தில் ஒரு ஆண் பிள்ளையை  பெற்றாள். மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அவன் காளை பருவம் அடைந்த பொழுது நாட்டில் போர் மூண்டது. தன் முதுமையையும் கருதாது, அந்த தாய், தன் ஒரே மகனை, வாழ்த்து கூறி போருக்கு அனுப்பி வைத்தாள். போரில் அவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். இதை கேள்வியுற்ற அந்த தாய், பிறவி பயனைப் பெற்றவள் போல், பேரின்பம் உற்றாளாம் என்கிறது இன்னும் ஒரு பாடல்.  

"மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்,
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே"
[புறநானூறு 277]  

மீன் உண்ணும் கொக்கின் இறகு போன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை என்று அந்த வீரத் தாயை  பூங்கண் உத்திரையார் என்ற பெண்பாற் புலவர், அவளின் இந்த வியக்கத்தகு செயல்களைக் கண்டு பாடுகிறார்.  

“ஈன்ற பொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத்தாய்” 
(குறள்:69)

என்கிற திருக்குறளை  மேலே நாம் சுட்டிக் காட்டிய புறநானூற்றுப் பாடல்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு தாய் தன் மகன் இறந்தாலும் அவன் சான்றோனாகவும், வீரனாகவும் தான் இறக்க வேண்டும் என்றும், இது அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட உண்மையில்  பெரியதாகும் என திருவள்ளுவர், சங்கத் தமிழரின் வாழ்க்கை நெறி முறையை உணர்ந்தே இங்கு வீரத்தாயின் உணர்வினை படம் பிடித்துக் காட்டுகிறார் என்று நம்புகிறேன். 

மேலும் சங்க காலத்தில் பெண்கள் வீரமானவர்களாகவும் , வீர மகன்களை பெற்ற வீர அன்னையாகவும்  இருந்துள்ளனர் என்பதையும்  ஆண் குழந்தைகள்  வீரத்தின் அடையாளமாக, குறிப்பாக  எண்ணப்பட்டது போல, அவர்களுக்கான வீரமும், வீரமரணமும் முக்கியமெனவும் பதிவு செய்யப் பட்டுள்ளதையும் காண்கிறோம்.  புறநானூற்றில் வீரமகனைப் பெற்றெடுத்த தாயின் உணர்வுகள் மிக மிகத் தெளிவாக, சில பாடல்களில் தரப் பட்டுள்ளதும் எம் கவனத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் தன்பால் ஈர்ப்பதும் அதன் பெருமையே ஆகும் !.   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 03 - "மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்" தொடரும்.

468364082_10227484752527239_7283461720557577877_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=fdxaK9tjlwkQ7kNvgHdh6Rg&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A9KIbfaB-rvbHU0YHq7wa2M&oh=00_AYDepnXafqMhU6vCrzECMkBxL-UJ9uLDG15sWf75ds3KJA&oe=674A21B2  468523424_10227484752327234_4671477109462333260_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=CyLifXa5tW4Q7kNvgHWSds_&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=A9KIbfaB-rvbHU0YHq7wa2M&oh=00_AYATMsLSNl5yfefnovB89YAKdKFOA05bkbGvXK5U87S_bQ&oe=6749F948

 

"நூல் அறுந்த பட்டம்"

3 weeks 6 days ago

"நூல் அறுந்த பட்டம்"

 

நிழலவன் யாழ்ப்பாணத்தின் மணல் கரையில் அமர்ந்தான், தூரத்தில் படபடக்கும் பட்டங்களை ரசித்தபடி அவன் கண்கள் பின்தொடர்ந்தன. அவற்றின் பிரகாசமான வண்ணங்கள் வானத்தில் வரைந்தன, ஒவ்வொன்றும் தனித்துவமாக வெவ்வேறு வடிவில், நிறத்தில், அளவில் இருந்தன. அவன் எண்ணங்கள் கி முன் 9500 ஆண்டுக்கு பறந்து சென்றன. பட்டம் ஆசியாவில் தோன்றினாலும், அதன்  துல்லியமான தோற்றம் இதுவென எண்ணமுடிய விட்டாலும், இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசியில் உள்ள மூனா தீவில் [Muna island, southeast Sulawesi, Indonesia] கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 9500-9000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் பட்டத்தின் பழமையான படம் காணப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. எனினும் மற்ற சான்றுகள் கி மு 450 அளவில் சீனாவில் பட்டம்  உருவாக்கப்பட்டன என்று கூறுகின்றன. 

அது இன்னும் யாழ்ப்பாண மணல் வெளியில் பறப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். என்றாலும் அங்கு கண்ட சில காட்சிகள் அவன் மனதைக் கனக்கச் செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டங்களை வைத்திருந்த சில நூல்கள் ஒவ்வொன்றாக அறுந்து ஒடிந்து, துடிப்பான பட்டம் சில காற்றினால் இழுக்கப்பட்டு, இறுதியில் பூமியை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்தது தான் அவன் மனதில், இன்றைய அவனது சொந்த வாழ்க்கையுடன் - இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் - ஒரு தொடர்வை  வரையாமல் இருக்க அவனால் முடியவில்லை. 

பட்டம் நூல் அறுந்த போது கீழ் நோக்கி விழுவதும், வால் அறுந்த போது பறப்பதை தொலைக்க தொடங்குவதும் அவனின் சிந்தனையை தூண்டின. அவர்களின் இன்றைய தலைவர்கள் அந்த உடைந்த நூல்களைப் போல இருப்பதால், பட்டத்தின் நூல் பலமற்று இருப்பது போல, தங்களுக்குள் முரண்பட்டு,  தமிழ் சமூகத்தை ஓங்கி உலக வானில் பறக்க முடியாமல் செய்து விட்டார்கள்.  பட்டத்தின் வால் கொடுக்கும் சமநிலையைக் கூட மறந்து, மக்களை இலக்கின்றி, திசையில்லாத பட்டங்கள் போல நகர்த்தி விட்டார்கள்.

"நூல் அறுந்த பட்டம் இதுவோ
பாழ் அடைந்த சமூகம் இதுவோ 
மேல் இருந்து கீழே விழுகுதே  
கால் இருந்தும் நொண்டி மனிதனாய்!" 

"வால் அறுந்த போதே நடுங்குதே 
ஊழ் வினை அதைச் சூழுதோ
கோள் சொல்லி ஒற்றுமை நடுங்குதே 
நாள் நெருங்கி இனமே முறியுதே!"   

அவனுக்குப் பக்கத்தில், மணல் தரையில், இருண்ட கூந்தல் மேகம் சுற்றிச் சுருண்டு இருக்கும் நீர்ச்சுழியில் பார்த்தவர் நெஞ்சைச் சூறையாடும் விழியாகிய கெண்டைமீனைக் கொண்டும், முருக்கம்பூ அரும்பு போன்றிருக்கும் சிவந்த இதழுடனும், வளைந்த வில்லைப் போலவும், பிறையைப் போலவும் இருக்கும் நெற்றியுடனும்  அமைதியாக அமர்ந்திருந்தாள் நன்விழி. அவளின் கூந்தல் காற்றில் சலசலக்கும் சத்தம் மட்டுமே அவனுக்கு கேட்டது. இவள் புருவத்தைப் பார்த்து வானவில்லும் ஆசையாகப் பேசும் என்றாலும் இவளது மங்கைப் பருவத்தில் பிறர் அறிவை மயக்கும் ஒரு கர்வமும் இருந்தது. அது தான் கொஞ்சி பேசுவதை விட்டுவிட்டு பட்டம் ரசிக்கிறானோ?, இல்லை இல்லை அவளும் பட்டத்தைப் பார்த்துக்கொண்டும் அவற்றினதும் அவர்களினதும் எதிர்காலத்தைப் பற்றி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பல மாதங்களாக, அவர்கள் தங்கள் மக்களின் நிலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர், ஒரு காலத்தில் துன்பங்களாலும் நோக்கத்தாலும் ஒன்றுபட்ட பெருமைக்குரிய தமிழ்ச் சமூகம், ஒரு காலத்தில் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வழிவகுத்த தலைவர்களிடையே, இன்று உள்ள உள் மோதல்களால் பிளவுபட்டுள்ளது. "நூல் அறுந்த பட்டம்" அது !


"அதைப் பார்த்தாயா?" நிழலவன், நூல் அறுந்த பட்டத்தை நோக்கிக் கேட்டான். "இது சிறிது நேரம் மிதக்கிறது, ஆனால் இது இனி எங்கு செல்கிறது என்பதைக் கட்டுப்படுத்த முடியாது. எங்களைப் பற்றி நான் அப்படித்தான் உணர்கிறேன். எங்கள் நூல் உடைந்து விட்டது, நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம்." என்றான். 


நன்விழி தலையசைத்தாலும் ஒரு கணம் அமைதியாக இருந்தாள். "இது நாம் மட்டுமல்ல, நிழலவன். நாம் அனைவருமே ?. நம் தலைவர்கள் ஒரு நூலைப் போல - வலிமையானவர்களாக, காற்றில் நம்மை வழிநடத்தி, நம்மை உயர்த்தி வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது ...  அவர்கள் நான் தலைவர், நீ தலைவரென ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அதையும் எங்களுக்காக என்று ஒரு போடும் போடுகிறார்கள்! " என்றாள். 


அவர்களின் வாழ்க்கை, அவர்களின் அன்பு, அவர்களின் மக்களின் எதிர்காலத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது. வடக்கில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நிழலவன் ஒரு லட்சிய இளைஞன். உள்நாட்டுப் போரின் போது அழிக்கப்பட்ட வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவ வேண்டும், ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று அவன் எப்போதும் கனவு கண்டான். அதே நேரம் கிழக்கைச் சேர்ந்த நன்விழி, ஒரு வழக்கறிஞராக விரும்பினாள், நீதிக்காக வாதிடவும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் விரும்பினாள். இருவரும் தங்கள் படிப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தனர். அவர்களின் பீடம் வெவ்வேறு இடத்தில் அமைந்து இருந்தாலும், அவள், அவனின் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதால், இருவருக்கும் இடையில் ஒரு உறவு மலர்ந்து, அது ஓய்வு நேரங்களில் சந்திப்பாகவும் தொடர்ந்தது. என்றாலும் அரசியல் ஸ்திரமின்மை, தலைமைத்துவத்தின் துண்டாடுதல் மற்றும் தமிழ் சமூகத்தின் அதிகரித்து வரும் ஓரங்கட்டல் ஆகியவை அவர்களின் எதிர்காலத்தின் மீது நீண்ட நிழலைப் போட்டன.


“நேற்று ராத்திரி அப்பாகிட்ட பேசிட்டேன்” என்று மௌனத்தைக் கலைத்து ஆரம்பித்தாள் நன்விழி. "எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக வைத்திருக்கும் நிலம் பறிக்கப்படுகிறது. ஏதேதோ காரணம் கூறி அரசு அதை வலிந்து எடுக்கிறது. என் தந்தை சட்ட உதவி பெற முயன்றார், ஆனால் கிழக்கில் உள்ள உள்ளூர் தலைவர்கள் - அவர்கள் போராட முடியாத அளவுக்கு -  பலவீனமாக உள்ளனர்." என்று அவனின் கையை தன் கையால் பற்றிக் கொண்டு வேதனையுடன் சொன்னாள்.


நிழலவன் தன் விரல்களை தன் உள்ளங்கையில் இறுக்கமாக அழுத்தியபடி, கொஞ்சம் கோபத்துடன் "வடக்கிலும் அப்படித்தான். நீயும் இப்ப வடக்கில் தானே, உனக்கு நன்றாகத் தெரியும் தானே, பள்ளிக்கூடங்களில், பாடசாலைகளில் குழப்பம். சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய புதிய போராட்டம் அல்லது வேலை நிறுத்தம் நடக்கிறது, வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. அரசாங்கம் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை, எங்கள் தலைவர்களும் கூட. ஒருவரையொருவர் கொஞ்சம் பிரிந்து பிரிந்து அவர்களின்  செயல்களால் நாங்கள் இன்று பின்தங்கிவிட்டோம். நமது கல்வி கூட உடைந்திருக்கும் போது நாம் எப்படி முன்னேறமுடியும்?"


நன்விழி பெருமூச்சு விட்டாள். "அது வெறும் கல்வி மட்டுமல்ல, அந்த  வாழ்வின் எல்லாமே!. வேலைகள் மறைந்துவிட்டன. எனது கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான வாலிபர்கள் வெளியேறிவிட்டனர். அவர்கள் மத்திய கிழக்கில் கூலி வேலை செய்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகள், ஆனால் இங்கே சரியான வாய்ப்புகள் இல்லாததால், அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை"


"பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! நன்விழியே!" 
 

நீயோ பாயும் வெளிச்சம் என்றால் நானோ அதை பார்க்கும் கண்களாவேன் ; நீயோ அணைக்கும் தேன் என்றால் நானோ அதை உண்ணும் வண்டு ஆவேன் ;உன்னுடைய மேன்மை எல்லாம் வாயினால் சொல்ல வார்த்தை இல்லையடி ; தூய்மையான வெளிச்சம் தரும் நிலவே கொள்ளை அழகே, நன்விழியே என்று அவளை அணைத்தபடி நெருங்கி இருந்தான். ஆனால் அவர்கள் மீண்டும் மௌனமாக, ஆனால்  மற்றொரு பட்டம் வானத்தில் உயரப் பறப்பதைப் பார்த்தார்கள். அதன் நூல் இன்னும் அப்படியே இருந்தது, அது காற்றிற்கு எதிராக நம்பிக்கையுடன் நடனமாடியது.


"நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா?" நிழலவன் பட்டத்தைக் காட்டினான். "நாங்கள் முன்பு அப்படித்தான் இருந்தோம். நாங்கள் காற்றை எதிர்கொண்டோம் - எதிர்ப்பு, போராட்டம் - ஆனால் எங்களை நிலைநிறுத்த, எங்கள் நூலை வலுவாக வைத்திருக்கும் தலைவர்கள் அன்று எங்களிடம் இருந்தனர். இப்போது ... எங்களை இணைக்க யாரும் இல்லை. ஆனால் பிரித்து பிரித்து சிதறடிக்கிறார்கள் " என்று பட்டத்தை மீண்டும் காட்டினான். 


நிழலவனின் தோளில் அவள் தலை சாய்த்தாள். "நூல் இல்லாத பட்டம் ஒரு துண்டு மட்டுமே என்று என் அம்மா எப்போதும்  சொல்வார். துண்டு  அழகாக இருக்கலாம்  ஆனால் திசை இல்லை எனறால், எதுவும்  பயனற்றது. நம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், எவ்வளவு காலம், நாம் நன்றாக இருப்போம் என்று, எனக்குத் தெரியாது."


நிழலவனின் மனம் அந்த வார தொடக்கத்தில் அவனது பெற்றோருடன் உரையாடியது. அவனது தந்தை, ஒரு காலத்தில் தமிழர் உரிமைகளுக்காக ஆர்வத்துடன் செயல்பட்டவர், ஏமாற்றமடைந்தவர்.


"இப்போது அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக, ஒற்றுமை தவிர்த்து வேற்றுமையில் இருக்கிறார்கள்," என்று அவனது தந்தை அவனிடம் கூறினார். "இந்தத் தலைவர்கள் முன்பு ... எங்களுக்காகப் போராடினார்கள், ஆனால் இப்போது? பதவிக்காக, பணத்திற்காகப் போராடுகிறார்கள். மக்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, நாங்கள் "நூல் அறுந்த பட்டம்" போல இருக்கிறோம், மகனே, யாரும் நூல் கட்ட வரப் போவதில்லை. நாமே நம்மை திருத்தி, பலமான நூலால் கட்டி, சூறாவளி காற்றாக எம்மை தாக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுகண்டு நாம் மேலே எழவேண்டும், தொடர்ந்து பறக்க வேண்டும்." என்று ஆலோசனை கூறினார். 


"அது சரியப்பா, ஆனால் இப்ப நாம் புதியவர், நாம் இளம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு புற்றில் இருந்து வெளிவரும் ஈசல் போல் பறக்கத் தொடங்கி விட்டார்கள். அங்கு அதே ஒற்றுமை இல்லை, அங்கு அதே ஒருவரை ஒருவர் குறைகூறுதல் பெருகிவிட்டது. இது  ஜனாதிபதி தேர்தலிலும் அதைத்தொடர்ந்து பாராளமன்ற தேர்தலிலும் அதிர்ச்சியைத் தருகிறது. யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் நாற்பதுக்கு மேற்பட்ட காட்சிகள் அல்லது சுயேச்சைகள் போட்டியிடுகின்றன? இது  எதைக் காட்டுகிறது? ஏன் நம்மால் ஒரு குடையின் கீழ், எதுவும் செய்ய முடியவில்லையா?" நிழலவன் கேட்டேன். "இந்த ஒன்றுபடா இளம் தலைவர்களைப் பற்றி என்ன? அவர்களால் எப்படி விடயங்களை மாற்ற முடியும்?"


அவன் தந்தை தலையை ஆட்டியபடி பெருமூச்சு விட்டார். "உண்மையான இளம் தலைவர்கள் இன்று மிகக் குறைவு, அவர்களுக்கு செல்வாக்கு இல்லை. அவர்களை எம் மூத்த தலைவர்கள் சரியாக வளர விடவில்லை. பலர் தாமும் தம்பாடும் என்ற அளவில், அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளால் நிறுத்திவிட்டார்கள். இன்றைய தலைவர்களிடம்  வலுவான, ஒற்றுமையான, தெளிவான குரல் இல்லை. நீங்கள் பலரைப் போலவே இந்த நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிப்பீர்கள்?" என்று கேட்டார். 


நிழலவன் பதிலளிக்கவில்லை, ஆனால் அந்த வார்த்தைகள் அவனிடமே இருந்தன. அவனது தந்தை ஒரு பெருமை மிக்க தமிழர், தனது மக்களுக்காக கடந்த காலத்தில் அனைத்தையும் தியாகம் செய்தவர். இப்போது அவரும் நம்பிக்கை இழந்து விட்டார்.


நன்விழியும் தன் பெற்றோரிடம் இதே போன்ற வார்த்தைகளைக் கேட்டிருந்தாள். காணி உரிமை மறுக்கப்பட்டவை, தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னம், கலாசாரச் சிதைவு - இவையனைத்தும் அவர்களைப் பெரிதும் பாதித்தன. அவளது தந்தை ஒரு காலத்தில் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், ஆனால் இப்போது அவரும் கைவிடப்பட்டதாக உணர்கிறார் என்றாள்.  


"நன்விழி," அவள் அம்மா ஒரு நாள் மாலை தேநீர் அருந்தியபடி கூப்பிட்டாள், "உனக்காக நான் விரும்பிய வாழ்க்கை இதுவல்ல. நீ நாம்  யார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும், வளர்ந்து வெற்றிபெற வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். ஆனால் இப்போது எங்களைப் பாருங்கள். நாங்கள். எங்கள் நிலத்தைக் கூட வைத்திருக்க முடியாது, நாங்கள் உங்களுக்கு எப்படி எதிர்காலத்தை தருவோம்? இது தான் என் கவலை" என்றாள்.  


அன்று மாலை நன்விழி தன் அறையில் மௌனமாக அழுது கொண்டிருந்தாள், வக்கீல் ஆக வேண்டும், தன் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தன் கனவுகள் எப்போதாவது நிறைவேறுமா? என்று யோசித்தாள். உடைந்த தலைமைத்துவம், பிளவுபட்ட தமிழ் அரசியல் காட்சிகள், அவளை ஆற்றலற்றதாக உணரவைத்தது.


உப்பு கலந்து அள்ளி வீசும் கடல் காற்று, அவர்களின் உதடுகளை தொட்டிச் செல்ல, அவளின் காந்த விழி, ஒளியிழந்து பரிதாபமாக அவனை ஏறிட்டுப் பார்க்க, கரையை முத்தமிடும் ஒவ்வொரு அலைகளும் அவர்களின் காலை தொட்டுச் செல்ல, மணல் தோண்டும் நண்டுகளும் வழி விலத்திப் போக, அவள் தலை நிமிர்ந்து, வெட்டி வெட்டி மறையும் மின்னலாய் ஒரு புன்னகையை வீசி, அங்கே சிறு குழந்தைகள் பட்டத்தை காற்றில் பறக்க வைக்க போராடுவதை,  நிழலவனுக்கு காட்டினாள். அவர்களின் நூல் சிக்கி இருந்தது. குழந்தைகள் அதை எவ்வளவு இழுத்து இழுத்தாலும், பட்டம் உயர மறுத்தது.


"அதை எப்படி நீ உணருகிறாய் ?" நன்விழி அவனில் சாய்ந்து  காதுக்குள் கிசுகிசுத்தாள். "நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நூல் சிக்கலாக இருப்பது போல, எம்மை வழிகாட்டும் தலைவர்கள் ஏதேதோ வெவ்வேறு கொள்கையில் சிக்கி விளக்கம் இல்லாமல் பிரிந்து பிரிந்து இருந்தால், எங்களால் வாழ்க்கையில் மேலே பறக்க முடியாது." என்று ஆணித்தரமாக பதில் அளித்தான்.


நிழலவன் அவள் கையை மெதுவாக அழுத்தி பிடித்தான். "நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். நாங்கள் அதை விரைவில் செய்ய வேண்டும்."


ஆனால் அவன் வார்த்தைகளைச் சொன்ன போதும், சந்தேகம் அவனைப் பற்றிக் கொண்டது. அப்படி உடைந்ததை அவர்களால் சரி செய்ய முடியுமா? இரண்டு இளைஞர்களான அவர்களால் பல ஆண்டுகளாக தங்கள் சமூகத்தை முடக்கிய பிளவுகளை சமாளிக்க முடியுமா?


காதலில் இருவரும் ஒருவரை ஒருவர் அணுகினர். இரண்டு துருவங்கள் - வடக்கும் கிழக்கும் - முட்டிக் கொண்டன. ஒரே மொழி பண்பாட்டு இனம் என்றாலும் , நிலத்தோடு கூடிய மண்வாசனை பாரம்பரிய பின்னணிகள் மோதிக்கொண்டன. எனினும் மண் மேல் மனித இனம்  கொள்ளும் உறவுகளிலேயே மிகக் கூர்மையானதும், மிக மிக மிருதுவானதும், முடிவில்லாத காதல், கவர்ச்சி கொண்டதும் காதலுறவே. அதில் தான் இன்று இருவரும் வெளிப்படையாக இணைந்து இருந்தனர். ஆனால் இது, சமூகத்தை பிளக்கும் நூலை அறுக்கும் செயலை தடுப்பது, இருவராலும் மட்டும் முடியாது என்றாலும், ஒரு ஆரம்பமாக முயற்சிக்கலாம் என அவன் தனக்கே ஒரு நம்பிக்கை கொடுத்தான். 


அன்று மாலை, இருவரும் நிழலவனின் பெற்றோரை சந்தித்தனர். அவரது தாயார் நன்விழியை அன்புடன் வரவேற்றாள், அவர்கள் சிறிய, அடக்கமான தாழ்வாரத்தில் காற்று வாங்கிக் கொண்டு ஒன்றாக அமர்ந்த போது, தாயார் எல்லோருக்கும் சிற்றுண்டிகள் மற்றும் தேநீர் வழங்கினாள்.


"கிழக்கில் எப்படி இருக்கிறது நன்விழி?" நிழலவனின் அம்மா மெதுவாகக் கேட்டாள்.


"நல்லா இல்லை," நன்விழி ஒப்புக்கொண்டாள், அவள் குரலில் சோகம். "எங்கள் நிலம் எடுக்கப்படுகிறது. அங்குள்ள தலைவர்கள் ... அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை."


நிழலவனின் அம்மா பெருமூச்சு விட்டாள். "இங்கேயும் அப்படித்தான். முன்பு எங்களிடம் அக்கறையுள்ள, நமக்காகப் போராடும் தலைவர்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் தங்களுக்காகப் போராடுகிறார்கள். நாங்கள் கஷ்டப்படுகிறோம். அது தான் நாம் கண்ட முன்னேற்றம், வேடிக்கையாக இல்லையா, மற்றது வடக்கு கிழக்கு பிரதேச வாதம்? " அவள் சொன்னாள். 


"ஆனால் நாம் என்ன செய்ய முடியும்?" நிழலவனின் தந்தை கேட்டார், அவரது குரல் விரக்தியுடன். "தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர், ஒற்றுமை இல்லாமல் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகள் ...  - " நிழலவனையும் நன்விழியையும் நோக்கி சைகை செய்தார், பின் "-அவர்கள் அதற்கான விலை கொடுப்பார்கள்." என்றார். 


நன்விழி தலையசைத்தாள், இதயம் கனத்தது. அமைதியாக, யோசனையில் ஆழ்ந்திருந்த நிழலவனைப் பார்த்தாள். அவன்  அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி, அவர்கள் ஒன்றாக வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது, தங்கள் மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றி, அவர்கள் பகிர்ந்து கொண்ட கனவுகளைப் பற்றி, அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.  .


அன்று இரவு, நன்விழி வீட்டிலிருந்து திரும்பிச் செல்லும் போது, நிழலவன் அவளை கொஞ்சம் தடுத்தான்.  "நன்விழி, நீ நினைக்கிறாயா...   'நூல் அறுந்த பட்டம்' ஆகிய நாம் மீண்டும் எப்போதாவது பறக்க முடியுமா என்று ?"


நன்விழி கொஞ்சம் சிந்தித்தாள், இருண்ட வானத்தை நிமிர்ந்து பார்த்தாள், அந்த நாளின் கடைசி பட்டம் இன்னும் பறந்து கொண்டிருந்தது, அதன் நூல் வலுவாகவும் இறுக்கமாகவும் இருந்தது. உறுதியும் சந்தேகமும் இரண்டுமே கண்களில் நிறைந்திருக்க, நிழலவன் பக்கம் திரும்பினாள்.


"எனக்குத் தெரியாது," என்று அவள் நேர்மையாக கூறினாள். "ஆனால் நாம் முயற்சி செய்ய வேண்டும். நூலை அறுக்க அனுமதித்தால், ஏதாவது செய்யாவிட்டால் ... அனைத்தையும் இழந்துவிடுவோம். நமது நிலம், நமது உரிமைகள், நமது கலாச்சாரம். நம் அன்பும் கூட."


நிழலவனின் கண்கள் மென்மையாகின. "நான் உன்னுடன் இருக்கிறேன் நன்விழி. என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்த அறுந்த நூலை சரி செய்ய முயற்சிப்போம். ஒன்றாக." என்றான். " பெண்கள் இலங்கையில் 52% பெண்கள் இருந்தாலும் பெண்ணின் தலைமை மிக மிக குறைவே. ஆக  5.3% வீதமே பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல, 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு மொத்த மக்கள் தொகையில் 33.6% மட்டுமே, ஆகவே பெண்கள் விழித்தாள் எதுவுமே நடக்கும் "  என்றான். 


அந்த தெளிவுடன், அவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தில் நடந்தார்கள், எது தேவை ? எது தேவையில்லை ? என்பதை மனது அலசிக் கொண்டு இருந்தது. வானத்தில் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்க போராடும் பட்டத்தைப்  போல - எல்லாவற்றையும் மீறி, மீண்டும் உயரும் என்று நம்பினார்கள்!

 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

467701407_10227484626204081_8702620483487794338_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=4xKbLaPiyssQ7kNvgEk62AV&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Ax0TiGvzPrawrB0PtKZDUpT&oh=00_AYDgwPwI7YMYIiNCss_aRr88ONFL0YYV5AezxY76kRp6vw&oe=674A0653   468083649_10227484626764095_4344891724826638399_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=c3nO1rniPWgQ7kNvgFyMqJp&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Ax0TiGvzPrawrB0PtKZDUpT&oh=00_AYADiKy4HXW8m0Xy5RhqfVPbCHmB9uojvvB0_Od6xb3xYg&oe=674A0210

 

"கணவனை இன்னும் தேடுகிறாள்"

4 weeks ago
"கணவனை இன்னும் தேடுகிறாள்"
 
 
இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர் காணாமல் போவதாக `மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது.
பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை, 30 ஆகஸ்ட் 2020, அனிதா என்ற பெண்மணி வவுனியாவில் இதற்கு தலைமை தாங்கினார்.
 
 
இலங்கையின், வவுனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அனிதா வாழ்ந்து வந்தார். அவளும் அவளது கணவன் அர்ஜுனும் அமைதியான வாழ்க்கையை அங்கு நடத்தி வந்தனர், அவர்கள் தங்களை சூழ்ந்து உள்ள சமூகத்தின் பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்ததுடன் நேரடியாக பங்கும் பற்றினார்கள். அர்ஜுன் ஒரு ஆசிரியராக இருந்தார், மேலும் அனிதா உள்ளூர் பெண்கள் குழுவின் முன்னேற்றத்திற்கும், அரச இயந்திரங்களாலும் இராணுவத்தாலும் அடிக்கடி எதிர்நோக்கும் இனவாத அடக்குமுறை செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் மற்ற பெண்களுடன் முன் நின்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். மேலும் பெண்களின் கல்வி மற்றும் அவர்களுக்கான தேவையான அதிகாரம் ஆகியவற்றிற்காக தன்னுடைய வாதத் திறமையை அங்கு வெளிக்காட்டினார்.
 
 
வெளியில் சென்ற நம் குடும்பத்தினர், சரியான நேரத்தில் வீடு திரும்பாவிட்டால் நம் மனம் எவ்வளவு பதறிப்போகும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், அவற்றின் மூலம் தொடர்புகொள்ள முயல்வோம். அப்படியும் தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை அதைப் பற்றியே நம் மனம் யோசித்துக்கொண்டிருக்கும். சரி ... அந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக, மணிகளாக, பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகளென்றால் அப்படிக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்குப் பிரியமானவர்கள் எவ்வளவு துயரத்தில் உழல்வார்கள் ... அப்படிக் காணமல் போனவர்களும், மற்றவர்களால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு ஆளாவார்கள். அதை அனிதா பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பார்த்தவள். ஆனால் அது தனக்கும் வரும் என்று என்றுமே சிந்திக்கவில்லை.
 
 
பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய ‘காதல் வாழ்வை’, களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு ‘அவர்களின் இல்லற வாழ்வு’, கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை இரண்டையும் கண்டவள் தான் அனிதா. அவளின் முதல் சந்திப்பே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான். அர்ஜுன் படிப்பித்தல் முடிந்து தன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தான். திடீரென கடும் மழை வந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாதவன், அங்கே பக்கத்தில் இருந்த, குண்டுகளால் சேதமாக்கப்பட்ட கட்டிடத்துக்குள் நுழைந்தான். என்ன ஆச்சரியம் அழகே உருவான ஒரு இளம் பெண் அங்கே பதுங்கி இருப்பதைக் கண்டான். அவளின் கண்கள் பயத்தைக் காட்டின, அவன் என்ன எது என்று விசாரிக்க அருகில் சென்றான்.
 
 
"எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!"
 
 
அர்ஜுனும் அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. அவள் தான் அனிதா. திடீரென இராணுவம் அங்கு சுற்றிவளைப்பதை அறிந்த அவள், அதில் இருந்து தப்ப அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அர்ஜுன் அவளுக்கு ஆறுதல் கூறி, இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி அறிமுகம் செய்தனர். ஒருவரை ஒருவர் அறிய அறிய, ஒன்றாகிவிட்ட அவர்களின் உணர்வுகளுக்கு வெட்கமும் இல்லாமல் போய்விட்டது. தங்களை அறியாமலே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து சிறிது நேரம் கண்களையும் மூடிவிட்டார்கள்.
 
 
"தாழ் இருள் துமிய, மின்னித் தண் என
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே,
செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு, 5
இவளின் மேவினம் ஆகிக் குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே."
 
 
தங்கிய இருள் அழியும்படி மின்னி, மின்னல் வெட்டி, குளிர்ந்த நீர்த்துளிகளைச் சிதறி, மரபிற்கு ஏற்ப, சிறு குச்சிகளைக் கொண்டு அடிக்கும் முரசினைப் போல முழங்கி, இடித்து இடித்து, அதாவது தொடர் இடிமின்னலுடன், இப்பொழுது பொழிந்து ,நீ வாழ்வாயாக, பெரிய மேகங்களே! நான், செய்ய வேண்டியப் [ஆசிரியப்] பணியை முடித்து நிறைவுடன், இவளுடன் இருப்பதற்கு [இப்ப] விரும்பி வந்துவிட்ட நான், சிறிய காம்பினை உடைய புதிதாக மலர்ந்த குவளை மலரின் நறுமணம் வீசும் மென்மையான கூந்தலை மெலிதாக அணைத்துக் கொண்டுஇருக்கிறேன் என்று மேகத்திடம் சொல்வதுபோல தனக்குள் முணுமுணுத்தான். இது தான் அனிதாவின் முதல் சந்திப்பு. அவர்கள் இருவரும் இணைபிரியா காதலர்களாக, கணவன் மனைவியாக அன்றில் இருந்து இன்றுவரைக் காணப்பட்டனர்.
 
 
ஒரு நாள், தேசிய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை நடத்துவதாகக் கூறி, அவர்களது கிராமத்தில் அரசுப் படைகள் இறங்கியபோது, அவர்களது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அர்ஜுன், கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன், விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். தங்கள் அன்புக்குரியவர்களின் கதி என்ன என்று கிராமத்துப் பெண்கள் பதற்றமும் பயமும் கொண்டு பின் தொடர முற்பட்டார்கள். என்றாலும் அரசு தற்காலிக ஊரடங்கு சட்டம் போட்டு அதை நிறுத்திவிட்டனர்.
 
 
நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியது, ஆனால் பிடித்துக்கொண்டு போனவர்கள் திரும்பி வருவதற்கான அறிகுறி இன்னும் காணப்பட வில்லை. அனிதா, அர்ஜுன் மீதான அன்பாலும், நீதியின் ஆழமான உணர்வாலும் தூண்டப்பட்டு, கண்ணகி போல நீதிக்கு குரல்கொடுக்க, குரலற்றவர்களின் குரலாக மாறினாள். அவள் மற்றும் சிலரின் துணைகளுடனும் ஆதரவுடனும் அயராது பிடித்துக்கொண்டு போனவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தேடி, அவர்களின் விடுதலைக்காக வாதிட்டார்.
 
 
வெளியே சென்று வீடு திரும்பாதவர்கள், ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என காணாமல்போன இவர்களது உறவினர்கள் நம்பிக்கை இழக்காமல் தங்கள் உறவுகளைத் இன்னும் தேடிவருகின்றனர். அவர்களுடன் அனிதா போராட்டங்களில் கலந்து கொள்ளவும், மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், அதே நேரம் நாளாந்த வாழ்வில் தனது சமூகம் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக பேசவும் தொடங்கினார். அது மட்டும் அல்ல, அப்படியான மற்ற குடும்பங்களுக்கு வலிமை மற்றும் துன்பங்களைத் தாங்கும் திறன் மற்றும் கடினமான வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து மீள்வது போன்றவற்றுக்கு அவள் ஒரு அடையாளமாக மாறினாள். மேலும் மற்றவர்களுடன் ஒன்றாக, அவர்கள் ஒரு ஆதரவு வலைப்பின்னலை [நெட்வொர்க்கை] உருவாக்கி, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் கூட்டுக் குரலாக அதை பெருக்கினர் அல்லது மாற்றினார்.
 
 
காணமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ல் சாலிய பீரிஸ் தலைமையில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் 2019லிருந்து யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. அதனை மரணச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் என குற்றம் சாட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, முழுமையான விசாரணை நடந்து, உண்மை கண்டுபிடிக்கப் பட்டு, நீதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் அனிதா முதன்மை படுத்தி தன்னை அதில் இணைத்துக் கொண்டாள்.
எவ்வாறாயினும், அரசாங்கம் இவர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூற்றுக்களை நிராகரித்தது. என்றாலும் அனிதா, மனம் தளராமல், நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்தாள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்களைச் சந்தித்தாள், மேலும் சர்வதேச அமைப்புகளை அணுகினாள். ஆரம்பத்தில் ஆதரவளித்த சமூகம், அதிகாரிகளின் அழுத்தத்தை உணரத் தொடங்கியது. சில கிராம மக்கள், பின்விளைவுகளுக்கு பயந்து, அனிதாவிடமிருந்தும் போராட்டத்தில் பங்கு பற்றுவதில் இருந்தும் தங்களைத் தூர விலக்கினர். இதனால் அனிதா தனிப்பட்ட சவால்களையும் எதிர்கொண்டாள். ஆனாலும், அவள் விடா முயற்சியுடன், தன் கணவன் மீதான அன்பாலும், உண்மை வெல்ல வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாலும் தனது போராட்டத்தை விடாமல் தொடர்ந்தாள்.
 
 
வருடங்கள் செல்ல செல்ல அனிதாவின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் நீதிக்கான அழைப்பில் இணைந்தனர். அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது, எனவே இதை எப்படியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என இறுதியாக அரசும் தீர்மானத்தித்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஆனால், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அரசு தலைவர்கள் மாறினார்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. என்றாலும் அனிதாவின் பயணம் அநீதியை எதிர்கொள்வதில் ஒரு தனி நபரின் தைரியத்தின் சக்திக்கு சான்றாக அமைந்தது, மற்றவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நிற்கவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடவும் அது தூண்டியது. ஆனால் அனிதா ? அவளுக்கு என்ன நடந்தது? ஒரு மர்மமாக தொடர்கிறது.
அனிதா இப்ப தன் சுய நினைவை இழந்துவிட்டாள் அல்லது இழக்கச் செய்யப்பட்டு விட்டாள்? அவள் அர்ஜுனை முதல் முதல் சந்தித்த அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் பைத்தியக்கார பெண்ணாக வாழத் தொடங்கிவிட்டாள்.
 
 
"கனவு எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போன
நாள் ஒன்றில் தெருவில் தனித்து நின்றாள்
சிரித்துக் கொண்டு அர்ஜுன் அர்ஜுன் என்றாள்!
கடந்து போனவர்கள் பைத்தியம் என்றார்கள்
தூரத்தில் போய்நின்று வேடிக்கை பார்த்தார்கள்
கூட்டமாய் நின்று அவள் வரலாறு கூறினர்
ஏளனமாய் பார்த்து மௌனமாகவும் போனார்கள்!
விதி சதி செய்து வீதிக்கு வந்தாள்
கதி இதுவே என வாழ்வு அழைக்க
பாழடைந்த கட்டிடத்துக்கு உள்ளே புகுந்தாள்
அன்பே அன்பே என்று எங்கும் தேடினாள்"
 
 
அனிதா அர்ஜுனை தேடி பேதுற்றுப் புலம்பிக் அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் அங்கும் இங்கும் ஓடினாள். தன் காதல் கணவனை கண்டீரோ என்று சத்தம் போட்டு கேட்டுக் கொண்டு அலைந்தாள். இராணுவத்தின் பிடியில் வலாற்காரமாக இழுத்து செல்லப்பட்ட , “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள்.
 
 
"கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன்
வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல்
சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என"
 
 
ஒரு சங்கப் பாடலை முழங்கினாள். உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பைத்தியம் பிடித்தவர்களாகவே இருக்கிறோம். இவளோ
கணவனை அடைய, மீட்டு எடுக்கும் முயற்சியில் , சிலரின் வஞ்சகத்தால், பாவம் உண்மையாகவே பாதிக்கப்பட்டு, என்ன செய்கிறோம் என்று அறியாமல், கணவனை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறாள்.
 
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
  468007552_10227480119091406_3240021608473317610_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=kxn03xgAFKUQ7kNvgE5v-Vw&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ALwaWmt4KdSoNEEssOpMEjg&oh=00_AYDkO2R7TUay-RTmf0-YQ27W6JnZIiVwJsfpcN08wueO-A&oe=6748D53D  468002552_10227480105091056_111110324649526698_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=HAZK5LTqDmUQ7kNvgG5NDUf&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=ALwaWmt4KdSoNEEssOpMEjg&oh=00_AYAz5UAXENFpWf65QSJ9guE7yhcriw8CRLLaELk6jKOIzA&oe=6748E516

"புறநானூற்று மாவீரர்கள்"

4 weeks ago

"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 01

 

உலகில் எந்த ஒரு பெண்ணும் அல்லது தாயும்  ஒரு கோழையைப் பெற ஒரு போதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள். உதாரணமாக, கி.மு 1700 க்கும் கி.மு 1100 க்கும் இடைப் பட்ட காலத்தில் தொகுக்கப் பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 [Holy Rig Veda: Book 10, hymn 85, verse 44] இல்


"Not evil-eyed, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentlehearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds."


இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:


“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”
["சத்ரபதி சிவாஜி" / பாரதியார்]


என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படி பட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மாவீரர்களையும் புறநானூறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்கத் தமிழர்களுக்கு உண்டு. 


மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன், அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப் பட்டிருப்பது, அவர்கள், சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன் படுகிறது. இதைத் தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்: 


"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." 


"குந்தியின் மகனே! கொல்லப் பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!" 
(கீதை 2-37)


மேலும் இந்த போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப் பட்டன எனவும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வது ஒரு வழமையாக இருந்துள்ளதும் சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி எதிரி படையை கலங்கடித்து இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மாவீரனை தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள் எம் மூதாதையர்கள். 


அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே பெருமை உடையதாய் கருதப் பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு, இலங்கையில் இந்த நூற்றாண்டு அனுபவித்தும் உள்ளோம். 

சங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக் காலத்தில் தோன்றியது தான் புறநானூறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றாதாரங்கள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. 


சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம். 


இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறைக்கு அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயல் படுகிறார்கள். குழந்தைகள், வயது போனவர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக அழிக்கப் படுகிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள் அல்லது இடங்கள் என அறிவிக்கப் பட்ட இடங்கள் கூட தாக்கப் படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப் படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப் படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடை பெறுகின்றன. குறிப்பாக இலங்கை, பர்மா போன்ற ஆசிய நாடுகளில் தமிழர்கள் நேரடியாக பார்த்துள்ளார்கள், அநுபவித்துள்ளார்கள்.  


ஆனால் முறைப் படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தது என்பதை புறநானூறு 9 கூறிச் செல்கிறது. 
கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி, இப் பாடல் பாடப் பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல். அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப் பட்டவை என்றும், தர்ம யுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். 

இதில் போர் தொடுக்கப் போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட் செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள் என முன் கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என்பதை அறிய முடிகிறது.  


இதே போல கி.மு 2150 - 1400 ஆண்டில் எழுதிய சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) மற்றும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் போர் சாற்றுதல் குறிப்பிடப் பட்டுள்ளது. [Brien Hallett, The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம்  என்பது பண்டைக் கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப் பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும்.  

இன்று போர்ப் பிரகடனம் அல்லது போர் சாற்றுதல் (Declaration of war) என்பது ஒரு நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும். இந்த போர் சாற்றுதலுக்கான சர்வதேச நெறிமுறை 1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இனி புறநானூறு  - 09  பாடலை விரிவாக பார்ப்போம் 

"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"
[புறநானூறு - 9]

பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னை யொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்" / "இறந்தவர்களுக்கு  செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. 


அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக் கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறு தான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப் பட்ட போரின் அடையாள மாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பல காலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும்.

அதே போல, சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், வஞ்சின மாலையில் 

"பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’ என்று, காய்த்திய
பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே-
நல் தேரான் கூடல் நகர்."

அதாவது பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை ஆகியவர்களை விட்டு விட்டுத் தீய செயல் புரிபவர் பக்கம் சென்று எரிப்பாயாக - என்று கண்ணகி கூறினாள். அவ்வாறே மதுரை மாநகரம் எரிந்தது என பாடப் பட்டது இதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.

போர்க் களத்தில் சென்று வீரம் விளை வித்து பகைவரது வாளாலும், வில்லாலும், அம்பினாலும் விழுப்புண் படும் நாளே பயனுடைய நாள்கள், மற்ற நாள்களெல்லாம் பயனற்ற வீண் நாள்கள் என்ற உணர்வோடு வாழ்ந்துள்ளனர் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  திருவள்ளுவரும், 


"விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து."


என்ற தனது 776 வது குறளில் கூறுகிறார் என்பதையும் கவனிக்க.  
இனி அடுத்து வரும் பகுதிகளில்  சில புறநானூற்று வீரர்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 02 - "வீரத் தாய்" தொடரும்.

468325764_10227480043889526_7605492347213742451_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=u47yaKO5HEwQ7kNvgEOkyjT&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AG6at7S57Q3r1hOjFkAE3lO&oh=00_AYCpt6h6wnODBclFJw3ejl-tI6Jw-QVv6g4lC6clv5vcEg&oe=6748F25E   468191757_10227480043849525_6087099646012396628_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=qNSwITDvMncQ7kNvgEBaGpR&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AG6at7S57Q3r1hOjFkAE3lO&oh=00_AYC_UIhxCdmJMmWB7BkOPUf9PXUyfY4J8AenfxhdGdDuCg&oe=6748CF09  

 

தமிழீழத்திற்கான நாணயத்தாள் வரையப்பட்டது

4 weeks ago

 

தமிழீழத்திற்கான நாணயத்தாள் முதன்முதலில் 1991 இல் வரையப்பட்டது. அதனை வரைந்து தலைவரிடம் பாராட்டுப்பெற்றவர் தமிழீழத்தின் ஓவியர் திரு.சதீஸ் அவர்கள்.

ஆ.க.வெ. சமருக்கான முதல் மாதிரி வடிவமைப்பைக் (ஆனையிறவு) களிமண்ணில் உருவாக்கிக் கொடுத்தவரும் இவரேயாவார்.

இப்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார்.

GbTF5d2WkAAk6WP.jpg

GbTF5cfXkAAh55-.jpg

 

GbTF5c2X0AA-4JB.jpg

 

"இருபிள்ளைகளைக் கையில் பிடித்து அழைத்துச்செல்லும்"  மாவீரர் குறியீட்டை வரைந்தவர் இவரது தந்தையான "அரஸ் Arts" அரசரட்ணம் ஆவார்.

பின்னாளில் புலிகளின் இந்த முயற்சி திரு. வரதராஜன் என்பாரின் அறுவுறுத்தலின் பேரில் நிறுத்தப்பட்டதாம்!

 

--> Voice of Global Tamil Rights

 

 

Checked
Sun, 12/22/2024 - 12:59
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed