நலமோடு நாம் வாழ

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை

5 days 23 hours ago

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை

03 Jan, 2026 | 04:50 PM

image

உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில் குணப்படுத்துவதற்கும் இயலும் என்றாலும், சமமற்ற சுகாதார அணுகுமுறைகள் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னெடுத்துள்ள கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக பேசிய ஜீனெட் என்ற பெண், “என் உடலே என்னை ஏமாற்றியது போல உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் என கண்டறியப்பட்ட ஒரு ஆண்டுக்குள் அவர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை புற்றுநோய் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கர்ப்பப்பையில் உருவாகும் புற்றுநோய் ஆகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால், இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 6.6 இலட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டதுடன், 3.5 இலட்சம் பெண்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம், இந்த நோயால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார் என எச்சரித்துள்ளது.

காரணம் என்ன?

கர்ப்பப்பை புற்றுநோய் பெரும்பாலும் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது. இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் மிகப் பொதுவான வைரஸ் ஆகும்.

பாலியல் செயலில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது HPV வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். பெரும்பாலும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை தானாகவே நீக்கிவிடும். ஆனால் சில வகை HPV தொற்றுகள் நீடித்தால், அசாதாரண செல்கள் உருவாகி பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது.

தடுப்பு மற்றும் சிகிச்சை

கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் கூடிய நோயாகும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் பரிந்துரைகளின் படி, 9 முதல் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதுடன் 30 வயதிலிருந்து பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக HIV தொற்றுள்ள பெண்களுக்கு 25 வயதிலிருந்து கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.

ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இது மிகவும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய முயற்சி

2020 ஆம் ஆண்டு, 194 நாடுகள் இணைந்து கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய திட்டத்தை தொடங்கின. அந்த நாள், நவம்பர் 17, தற்போது உலக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு நாள் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது.

2030க்குள் அடைய வேண்டிய இலக்குகள்:

* 15 வயதிற்குள் 90% சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி

* 35 மற்றும் 45 வயதுகளில் 70% பெண்களுக்கு பரிசோதனை

* நோய் கண்டறியப்பட்ட 70% பெண்களுக்கு முழுமையான சிகிச்சை

இந்த இலக்குகள் நிறைவேற்றப்பட்டால், 2120 ஆம் ஆண்டுக்குள் 7.4 கோடி புதிய நோய் சம்பவங்களைத் தவிர்க்கவும், 6.2 கோடி உயிர்களை காப்பாற்றவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகிய சர்வதேச அமைப்புகள், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகளை சமமாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/235114

முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

1 week 3 days ago

முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

முதுகெலும்பு

பட மூலாதாரம்,Getty Images and BBC

படக்குறிப்பு,பிபிசி வரைபடம் வெவ்வேறு நிலைகளில் உள்ள மூன்று பேரைக் காட்டுகிறது. ஒவ்வொருவரின் முதுகெலும்பும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

30 டிசம்பர் 2025, 01:52 GMT

பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வின் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக, முதுகு வலி சில வாரங்களில் குறைந்துவிடும் - ஆனால் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டால், அது பாதிக்கப்பட்டவர்களை முடக்கி, அவர்களது அன்றாட வாழ்க்கையை மோசமானதாக மாற்றிவிடும்.

அதுமட்டுமல்ல, மனித முதுகெலும்பானது விலா எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளுடன் மட்டுமல்லாமல், தசைநாண்கள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசைகள் மற்றும் நரம்பு திசுக்களின் தொகுப்போடும் இணைக்கப்பட்டது. எனவே, இந்த பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் பிரச்னைகளும் முதுகு வலியை ஏற்படுத்தக்கூடும்.

முதுகு வலி ஏற்படுவது என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானது. எனவே, முதுகு வலியைத் தடுக்கவும், முதுகு வலி இருந்தால், அதை சிறப்பாக கையாளவும் முக்கியமான ஐந்து உபாயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.

மேல் அல்லது கீழ்?

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் Institute for Health Metrics and Evaluation ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்' என்ற ஆய்வின் சமீபத்திய பதிப்பின்படி, நாள்பட்ட கீழ் முதுகு வலியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் அதிகரிக்க உள்ளது.

அப்போதைய காலகட்டத்தில், உலக மக்கள்தொகையில் பத்தில் ஒருவர் முதுகு வலியால் பாதிக்கப்படுவார்கள்.

உலகளாவிய ஆரோக்கியத்தில் முதுகு வலியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் என்று குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வு கூறுவதையும் தெரிந்துகொள்வோம். பக்கவாதம், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள், நீரிழிவு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் ஆகியவையே அவை.

முதுகுப் பகுதியின் கீழ் பகுதியே உடலின் அதிகளவிலான அசைவுகளுக்குத் துணைபுரிவதாலும், அதிக அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்வதாலும், அங்குதான் அடிக்கடி வலி ஏற்படுகிறது. இருப்பினும், உடலின் மேல் முதுகுப் பகுதி, குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளும் கூட இத்தகைய வலியை உண்டாக்கலாம்.

முள்ளெலும்பு, மனித முதுகெலும்பு, முள்ளெலும்புகள்

படக்குறிப்பு,33 முள்ளெலும்புகளைக் கொண்ட மனித முதுகெலும்பானது பொதுவாக மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்து பிட்டத்தின் உச்சி வரை நீண்டுள்ளது, அதன் கீழ் உள்ள ஒன்பது முள்ளெலும்புகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன

சிகிச்சைக்கு முன் நோயறிதல்

சிகிச்சைக்கு முன் நோயறிதல் என்ற மருத்துவக் கொள்கை முதுகு வலிக்கு மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், முதுகு வலி ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய ஒரேயொரு குறிப்பிட்ட நோயறிதல் சோதனை என்று எதுவும் கிடையாது.

பித்தப்பை அல்லது சிறுநீரக நோய் அல்லது சில வகை புற்றுநோய்கள் என உயிருக்கு ஆபத்தான நிலைகளை மருத்துவர்கள் பொதுவாக முதலில் நிராகரிக்க முயற்சிப்பார்கள். வழக்கமாக, நோயறிதல் என்பது உடல் பரிசோதனை மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாற்றைச் சரிபார்ப்பதையும் உள்ளடக்கியது.

ரத்தப் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் அல்லது குருத்தெலும்புகளை சேதப்படுத்தி மூட்டுவலியை உண்டாக்கும் வீக்கங்களைக் கண்டறிய முடியும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு, மூட்டுகள், எலும்புகள், டிஸ்க்குகள், உறுப்புகள் அல்லது மென்மையான திசுக்களை ஆய்வு செய்ய எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ போன்ற இமேஜிங் சோதனைகள் தேவைப்படலாம்.

பெரும்பாலான முதுகுவலிகள் லேசான வலி மற்றும் உடல் இறுக்கமானது போன்ற உணர்வாகவே இருக்கும். ஆனால், தசை அல்லது தசைநார் கிழிந்துபோனால் திடீரென கடுமையான வலியை உண்டாக்கும். அதேபோல, பிட்டம் மற்றும் கால்களுக்கு பரவும் வலி, அந்தப் பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் தோன்றுவது நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

தசைகளில் உள்ள மின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் 'எலக்ட்ரோடியாக்னோசிஸ்' முறை, தசை மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டறிய உதவும்.

கயிறு இழுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிற எலும்புகளை விட முதுகெலும்பு வேகமாக நீளமாகும்போது, அது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தலாம்

இந்த நோயறிதல் அணுகுமுறையானது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பொருந்தும்.

இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றியவரும், தற்போது ஜெர்மனியில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்துவரும் மருத்துவர் அரினா டிசோசா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது தான் கூர்ந்து கவனிக்கும் விஷயங்கள் என்ன என்பதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்:

"குழந்தைகள் குதித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள், அப்போது நான் சில விஷயங்களைக் கூர்ந்து அவதானிப்பேன்:

  • அந்தச் செயல்பாடுகளின் போது அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா?

  • மறைந்திருக்கும் தசைக்கூட்டு குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா?

  • பெற்றோர்களுக்கும் முதுகு வலி வரும் வாய்ப்பு உள்ளதா?

  • அவர்கள் சமச்சீர் உணவை உண்கிறார்களா?

முழங்கால்களிலும் கால்களிலும் ஏற்படும் வலி அதிகரித்து வருவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் சில சமயங்களில் இது முதுகிலும் ஏற்படலாம் - ஏனெனில் ஓர் குழந்தையின் முதுகெலும்பு முழுவதுமே, சில நேரங்களில் பிற எலும்புகளை விட மிகத் துரிதமாக நீளமாக வளரும்.

முதுகு வலி

பட மூலாதாரம்,Getty Images

ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல்

முதுகு வலி மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சமே சில நோயாளிகளின் குணமடையும் செயல்முறைக்கு தடையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"முதுகெலும்பு மற்றும் தசைப் பிரச்னைகள் ஏதும் இல்லாதபோதும், மீண்டும் வலி வந்துவிடுமோ என்ற கவலையே சிலர் தங்கள் முதுகைப் பயன்படுத்துவதில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது" என இங்கிலாந்தின் Down2U Health and Wellbeing இயக்குனர் ஆடம் சியு, பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், "இந்த பயம் அவர்களைச் சுறுசுறுப்பற்றவர்களாகவும், மந்தமானவர்களாகவும் மாற்றுகிறது. சிலர் தங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்வதைக் கூட நிறுத்திவிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் மக்வாரி பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி பேராசிரியர் மார்க் ஹான்காக் முதுகு வலி பற்றிக் கூறுகையில்: "சில நோயாளிகள் தங்கள் முதுகுப் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால், சமூக வாழ்க்கையிலிருந்தே விலகிவிடுகிறார்கள். சமூக அழுத்தம், வலியைப் பற்றிய கவலை, எரிச்சலூட்டும் முதுகு வலி என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, திடீரென்று இதுவொரு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது" என்று கூறுகிறார்.

எனவே, முதுகு வலி என்பது ஆக்கப்பூர்வமான மற்றும் முழுமையான அணுகுமுறையின் அவசியத்திற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.

"உலகெங்கிலும் உள்ள மருத்துவ வழிகாட்டுதல்களும் இப்போது உடல் ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் சமூகக் காரணிகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசுகின்றன," என்று பேராசிரியர் ஹான்காக் கூறுகிறார்.

"சி.எஃப்.டி (Cognitive Functional Therapy) எனப்படும் சிகிச்சை முறை, நோயாளிகள் சிகிச்சையாளர்களுடன் கலந்துரையாடி, வலிக்குக் காரணமான பல்வேறு விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அனுமதிக்கிறது.

அதன்பின், அவர்களுக்குப் பிடித்தமான செயல்களைப் படிப்படியாக மீண்டும் செய்வதற்குத் தகுந்த மாற்று வழிகளுடன் கூடிய திட்டம் ஒன்று வகுக்கப்படுகிறது.

தேவைப்பட்டால், நோயாளிகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்த சிகிச்சையாளர்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்."

முன்னேறிக் கொண்டே இரு

முகப்பு மூட்டு மாதிரி, முதுகெலும்புத் தட்டு, ஆடம் சியு

பட மூலாதாரம்,Adam Siu

படக்குறிப்பு,முகப்பு மூட்டு மாதிரியைப் பயன்படுத்தி, உட்காரும்போது அல்லது குனியும் போது முதுகெலும்புத் தட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் ஆடம் சியு

மீண்டும் வலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால், ஓய்வு எடுப்பது குணமடைய உதவும் என சில நோயாளிகள் நம்புகிறார்கள். ஆனால், அது தவறு எனக் கூறும் பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS), முதுகு வலியைத் தவிர்ப்பதற்கு சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் என்று கூறுகிறது. முதுகு வலிக்காக அதிக ஓய்வு எடுப்பது என்பது, வலி குணமாகும் காலத்தை மேலும் நீட்டிக்கும் என கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.

"முதுகெலும்புத் தொடர், வெர்டிப்ரே எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது, இது இயற்கையாகவே வெவ்வேறு பிரிவுகளில் வளைந்திருக்கும்" என ஆடம் சியு கூறுகிறார்.

"உடலின் எடை மற்றும் அசைவுகளுக்கு முதுகெலும்பு துணைபுரிய முதுகெலும்புத் தொடரின் வளைவுகள் உதவுகின்றன. முதுகெலும்பின் மேல் பகுதியில் உள்ள 24 எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை; இவை ஒவ்வொன்றும் ஃபேசெட் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொன்றுக்கும் இடையில் இன்டர்வெர்டெபிரல் டிஸ்க் எனும் மெத்தை போன்ற அமைப்பு உள்ளது.

இந்த இயற்கையான அமைப்பு மற்றும் அந்த டிஸ்க்கின் அதிர்வுகளைத் தாங்கும் தன்மை பலவீனப்படாமல் இருக்க வேண்டுமெனில், அமர்வது, குனிவது அல்லது நீண்ட நேரம் நிற்பது என ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்."

ஆனால் நவீன வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஆன்லைனில் படிப்பது, கேம் விளையாடுவது, வீடியோக்களைப் பார்ப்பது என உடலுழைப்பு குறைந்துவிட்டது.

அலுவலக ஊழியர்களில் சிலருக்கு மட்டுமே அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்கோ அல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்; ஆனால் பல வேலைகளில் இதற்கான வாய்ப்புகளும் இருக்காது.

"வாகன ஓட்டுநராக இருந்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் போது அமர்ந்த நிலையிலேயே சில பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்," என்று ஆடம் சியு கூறுகிறார்.

"கனமான பொருட்களைத் தூக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலை செய்வதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைத் தெரிந்துகொள்ள பிசியோதெரபிஸ்ட்டுகளை அணுக வேண்டும்."

கர்ப்பகால முதுகு வலி

கர்ப்பிணிப் பெண், கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல், மன அழுத்தம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவிக்கின்றனர்

கர்ப்ப காலமும் முதுகு வலியை உண்டாக்கக்கூடும் - அதுவும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இது ஏற்படலாம்.

கருத்தரித்த சில காலத்திலேயே பெண்ணின் உடலில் 'ரிலாக்ஸின்' என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது பிரசவத்திற்குத் தயாராகும் வகையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார்களைத் தளர்த்தி, கருப்பை வாயை மென்மையாக்குகிறது. ஆனால், அதே வேளையில் இது முதுகெலும்பில் உள்ள இணைப்புத் திசுக்களையும் மூட்டுகளையும் தளர்த்துவதால், முதுகின் கீழ் பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

கரு வளரும்போது, கர்ப்பிணிகள் தங்களின் உடல் நிலை, உடல் எடை பரவல் மற்றும் மன அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலியைத் தணிக்க சில குறிப்புகள்:

  • உடலைத் திருப்பும் போது, முதுகெலும்பை முறுக்குவதைத் தவிர்க்க உங்கள் கால்களையும் சேர்த்துத் திருப்புங்கள்.

  • உங்கள் உடல் எடையைச் சீராகத் தாங்கக்கூடிய வசதியான காலணிகளை அணியுங்கள்.

  • மகப்பேறு கால சிறப்புத் தலையணைகள் மற்றும் நல்ல மெத்தையை பயன்படுத்துவது, போதுமான ஓய்வு பெற உதவும்.

வலி நிவாரண மாத்திரைகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

"முதுகு வலியின் ஆரம்ப கட்டத்தில், மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும் (anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை; இது நீங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உதவும்" என்று சியு கூறுகிறார்.

"ஆனால், வலி தொடர்ச்சியாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், சில வாரங்களுக்கு மேலாகவோ அல்லது நீண்ட காலமோ இந்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டால், அது பிரச்னையை மூடி மறைப்பதாகவே அமையும். துரதிருஷ்டவசமாக, பல ஆண்டுகளாக மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் நபர்களை பார்க்கிறேன்."

வலியை மரத்துப் போகச் செய்வது என்பது, அந்த வலிக்கான உண்மையான காரணத்தை மேலும் மோசமாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS) இதை மறுக்கிறது.

"இது முற்றிலும் உண்மையல்ல. நம் உடலில் மிகவும் வலிமையான பாதுகாப்பு அனிச்சைச் செயல்கள் உள்ளன. சாதாரண வலி நிவாரணிகளால் அவற்றை அகற்றிவிட முடியாது. அதாவது, வலி நிவாரணிகள் வலியை மட்டுமே குறைக்கும்; ஆபத்தான செயல்களில் இருந்து உங்களைத் தடுக்கும் உடலின் இயற்கையான பாதுகாப்பு உணர்வை அவை நீக்கிவிடாது.

இதற்கு உதாரணமாக, சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டவர், கொதிக்கும் நீரில் கையை வைத்தால் என்னவாகும்? உடலின் அனிச்சை செயல்கள் வலியை ஏற்படுத்தும். அதேபோலத்தான், எளிய வலி நிவாரண நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு நடமாடுவதால் ஒருவரின் முதுகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

இவ்வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், ஒரு மருந்தாளரிடம் கலந்தாலோசிக்கவும்."

மூல உரை: பிபிசி நியூஸ் வேர்ல்ட் சர்வீஸ், குளோபல் ஜர்னலிசம் க்யூரேஷன்

கூடுதல் தகவல்கள்: பிபிசி நியூஸ் மராத்தியின் கணேஷ் போல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c33m37mgy4po

குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்

1 week 5 days ago

குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சுப் ரானா

  • பிபிசி இந்திக்காக

  • 28 டிசம்பர் 2025, 03:25 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் அதிக மரணங்களை விளைவிக்கும் காரணிகளுள் இதய நோயும் ஒன்று. குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வின்படி, இந்தியாவில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இதய நோயால் நிகழ்கின்றன.

இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன.

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால் அனைத்தும் நன்றாக உள்ளது என்பது தான் இதய ஆரோக்கியம் தொடர்பான பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த அனுமானம் சரியா என்கிற கேள்வியும் மருத்துவ வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.

கொலஸ்ட்ரால் தவிர வேறு எந்த அறிகுறிகள் மற்றும் காரணிகள் மாரடைப்பு தொடர்பான எச்சரிக்கையை வழங்குகின்றன, குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

குளிர் காலத்தில் வரும் ஆபத்துகள்

2024-ஆம் ஆண்டு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் முதன்மை ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, தீவிரமான குளிர்ந்த வானிலை மற்றும் திடீர் குளிர் அலை ஆகியவை மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்படி, குளிர்காலம் தொடங்கிய உடனே பெரிய ஆபத்து இல்லையென்றாலும் 2 - 6 நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தரவுகள்படி, அதிக அளவிலான மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்புடைய மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டியே பதிவு செய்யப்படுகின்றன.

குளிர், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் உடல் சார்ந்த எதிர்வினை ஆகியவற்றின் கலவை இதயத்தின் மீது கூடுதல் அழுத்தம் தருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்

குளிர் காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பது ஏன் என்கிற கேள்வியை மேதாந்தா மூல்சந்த் ஹார்ட் சென்டரின் இணை இயக்குநரும் தலைமை பேராசிரியருமான தருண் குமாரிடம் முன்வைத்தோம்.

இதன் பின் நான்கு முதன்மையான காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

"வானிலை குளிராக இருக்கிறபோது உடல் தன்னை இதமாக வைத்துக் கொள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சுருக்குகிறது. இது இதயத்தின் முக்கியமான ரத்த நாளங்களை சுருக்குகிறது. இதன் விளைவாக இதயத்திற்கு குறைவான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்கிறது."

"குளிர்காலத்தில் குறைவாகவே வியர்க்கிறது, மக்கள் அதிகம் நகர்வதும் இல்லை. இது உடலில் பிளாஸ்மா அல்லது மொத்த ரத்த அளவை அதிகரிக்கிறது. இது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு விகிதத்தை அதிகரித்து இதயத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது," என்றார்.

குளிர்காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் சிறிதளவு மெதுவாகும் என்று கூறும் அவர், "மக்கள் தங்களை அறியாமலே கலோரி அதிகமாக உள்ள கேரட் அல்வா, வெல்லம், வேர்க்கடலை, வறுத்த பக்கோடா போன்ற உணவுகளை சாப்பிடத் தொடங்குகின்றனர். கூடுதலாக அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொள்கின்றனர். இது உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது."

"குளிர்காலம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதனால் ரத்தம் கசியும் போக்கையும் அதிகரிக்கிறது. இந்தக் கசிவு இதயத்தின் நரம்புகளில் ஏற்பட்டால் நரம்பு அடைத்து மாரடைப்பும் ஏற்படலாம்.' என்று தெரிவித்தார்.

நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜியின் இயக்குநரான மருத்துவர் சமீர் குப்தா பிபிசியிடம் கூறுகையில், "ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக அளவில் சூப் அல்லது உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வது ஆபத்தானது. அதிக அளவிலான உப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதயம் செயலிழக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது." என்றார்.

குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது எப்படி?

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

குளிர் காலத்தில் அதிக அளவிலான வறுத்த உணவுகள் மற்றும் மன அழுத்தம் இதயத்திற்கு ஆபத்தானது என்கிறார் சமீர் குப்தா.

"உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் கூடுதல் எடை இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம் செய்ய வேண்டும். 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

பக்கோடா மற்றும் சமோசா போன்ற வறுத்த உணவுப் பொருட்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

"அதிக அளவில் உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய துடிப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த புகையிலை மற்றும் மது பழக்கத்தை கைவிட வேண்டும்," என்றார்.

உடலில் உள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீரான இடைவெளிகள் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் எனக் கூறும் அவர், நெஞ்சு வலி, சுவாசக் குறைபாடு அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த சிறிய அளவிலான மாற்றங்களால் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.

மாரடைப்பின் அறிகுறிகள்

2025-ஆம் ஆண்டு ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் இளைஞர்களிடம் நிகழும் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முதன்மை காரணியாக இருப்பது தெரியவந்தது.

இதய பிரச்னையால் ஏற்படும் 85% மரணங்களுக்கு ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் மாரடைப்பே காரணமாக உள்ளது.

"இந்தியாவில் மாரடைப்பு சம்பவங்கள், இளைஞர்களிடம் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மாரடைப்பு என்பது மிகவும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இதில் 25-30% மரணங்கள் 40 வயதுக்கும் குறைவானவர்களிடம் நிகழ்கிறது," என்கிறார் தருண் குமார்.

உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுவதற்கு மாரடைப்பின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது.

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

நெஞ்சின் இடது பக்கம் அல்லது நடுப் பகுதியில் வலி, அழுத்தம், கனமான அல்லது எரிச்சல் உணர்வு மாரடைப்பின் முதன்மையான அறிகுறிகள். இந்த வலி வயிற்றின் மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதிக்கு பரவலாம். இந்த வலி இடது கையின் மேல் பகுதிக்கும் பரவலாம்.

அத்துடன், பதற்றமாக உணர்வதும் தலைச்சுற்றல் மற்றும் சுவாசக் குறைபாடு ஏற்படுவதும் பொதுவான அறிகுறிகள் எனக் கூறும் தருண் குமார், இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்கிறார்.

"அனைவரும் நெஞ்சு வலியை அனுபவிக்க மாட்டார்கள். பலரும் சுவாசக் குறைபாட்டை உணர்வார்கள். சுயமாக இதனைக் கையாளாமல் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தாக அமையும்," என்கிறார் தருண் குமார்.

இதர காரணிகள்

இதய நோய் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் கொலஸ்ட்ரால் அல்லாத இதர காரணிகளை சமீர் குப்தா விவரித்தார்.

ஏபிஓ பி அளவு (Apo B Level): இவை ஒவ்வொரு கெட்ட கொலஸ்ட்ரால் துகளிலும் இடம்பெற்றிருக்கும். ஏபிஓ பி ரத்தத்தில் உள்ள கெட்ட துகள்களின் எண்ணிக்கையை துல்லியமாக தெரிவித்து இதய நோய் ஆபத்து பற்றிய சிறப்பான கணிப்பை வழங்குகிறது.

லிபோபுரோட்டீன் (எ) அளவுகள்: இது பிறப்பின் போதே தீர்மானிக்கப்படும் மரபணு அம்சம் மற்றும் இவற்றை பெரிதாக மாற்ற முடியாது. தெற்கு ஆசியாவில் வசிப்பவர்களிடம் (குறிப்பாக இந்தியர்களிடம்) இவை அதிக அளவில் காணப்படுகிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கிறது.

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

ஹீமோகுளோபின் ஏ1சி: இந்த ரத்தப் பரிசோதனை கடந்த 2-3 மாதங்களாக உள்ள சராசரி ரத்த சர்க்கரை அளவைத் தெரிவிக்கிறது. நீரழிவு நோயுடன் அதிக அளவிலான ரத்த சர்க்கரையும் இதய நோய் பாதிப்பை அதிகரிக்கிறது.

இதய நோய் ஆபத்தை தீர்மானிப்பதற்கான சில முக்கியமான வரம்புகளையும் பரிசோதனைகளையும் தருண் குமார் குறிப்பிடுகிறார். இவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் நோய் பாதிப்பை முன்கூட்டியே எச்சரிக்க முடியும் என்கிறார்.

முக்கியமான வரம்புகள் என்ன?

எடை மற்றும் பிஎம்ஐ: பிஎம்ஐ 18.5 - 24.9 என்கிற அளவில் இருக்க வேண்டும்.

கொலஸ்ட்ரால் அளவு: எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) - 100 எம்ஜி/டிஎல் என்கிற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். இது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாக குறைக்கிறது.

ஹெச்டிஎல் (நல்ல கொலஸ்ட்ரால்): இவை 50 எம்ஜி/டிஎல் என்கிற அளவில் இருப்பது இயல்பானதாகக் கருதப்படுகிறது.

அதிக உணர்திறன் கொண்ட சி-ரியாக்டிவ் புரோட்டின்: இது உடலில் உள்ள ரத்தக்குழாய் வீக்கத்தைக் கணக்கிடுகிறது. கொலஸ்ட்ரால் அளவு இயல்பாக இருந்தாலும் ரத்தக்குழாய்களில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் முறிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. இவை கடினமான உடற்பயிற்சி மற்றும் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் கசிவிற்கு வித்திடுகிறது.

ஆபத்தைக் கணக்கிடும் வழிமுறை

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர்: இது அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணக்கிடுகிறது. வயது, பாலினம், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற காரணிகள் இதில் கணக்கிடப்படுகின்றன. ரிஸ்க் 5 சதவிகித்தை விட அதிகரித்தால் மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டும்.

கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர்: இது சிடி ஸ்கேன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்கோர் பூஜ்ஜியத்தை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.

இவை போக மேலும் சில பரிசோதனைகளையும் தருண் குமார் பரிந்துரைக்கிறார். "நீரழிவு அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கும் என சந்தேகித்தால் ஈசிஜி, எகோ மற்றும் டிஎம்டி (டிரெட்மில் பரிசோதனை) எடுத்துக் கொள்ள வேண்டும். டிஎம்டி பரிசோதனையில் நடக்கிற நிலையில் ஈசிஜி மேற்கொள்ளப்படுகிறது. இது பிரச்னையை முன்கூட்டியே கணிக்க உதவும்." என்றார்.

இளம் வயதிலிருந்தே கவனமாக இருப்பது முக்கியம் எனக் கூறும் அவர் 18-20 வயதிலே கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்.

30 - 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர், கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர் மற்றும் டிஎம்டி பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx25ekj0n0po

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

2 weeks 1 day ago

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

25 Dec 2025, 6:57 AM

5 simple health habits for people over 60 senior citizen care tips healthy aging

“வயசாகிடுச்சு, இனிமே என்ன இருக்கு?” என்று மூலையில் முடங்கிவிடுபவரா நீங்கள்? 60 வயது என்பது வாழ்வின் முடிவுரை அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். பணி ஓய்வுக்குப் பிந்தைய இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸை’ (Second Innings) ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கெடாமல், தினசரி வாழ்க்கையில் இந்த 5 எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், நோயின்றி நூறாண்டு வாழலாம்!

1. அசைவே ஆரோக்கியம் (Keep Moving): முதுமையில் வரும் மூட்டு வலிக்கு முக்கியக் காரணம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், எலும்புகளின் உறுதிக்கும் உதவும். “நடக்கும்போது மூச்சு வாங்குது” என்றால், வீட்டிற்குள்ளேயே அல்லது மொட்டை மாடியிலேயே சிறுகச் சிறுக நடங்கள்.

2. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்: வயது ஏற ஏற, மூளையில் தாகத்தை உணர்த்தும் திறன் குறையத் தொடங்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration), சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அல்லது மோர், பழச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

3. உணவில் மாற்றம் அவசியம்: இளம் வயதில் சாப்பிட்டது போல எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை இப்போது செரிப்பது கடினம். எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கும்.

4. தனிமையைத் தவிருங்கள் (Socialize): உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் மிக முக்கியம். தனிமை என்பது முதுமையின் மிகப்பெரிய எதிரி. உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுங்கள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்துக்கொண்டாலே பாதி நோய்கள் குணமாகிவிடும்.

5. மூளைக்கு வேலை கொடுங்கள்: உடலைப்போலவே மூளைக்கும் பயிற்சி தேவை. சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் அல்லது புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஞாபக மறதி (Dementia) போன்ற பிரச்சனைகள் வருவதைத் தாமதப்படுத்தும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல!

முதுமை என்பது ஒரு நோய் அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். மருந்துகளை விட, மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த 5 பழக்கங்களையும் இன்றே தொடங்குங்கள், முதுமையை வெல்லுங்கள்!

https://minnambalam.com/5-simple-health-habits-for-people-over-60-senior-citizen-care-tips-healthy-aging/

இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்

2 weeks 2 days ago

இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மூட்டுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலி, வீக்கம், சிவத்தல் ஆகியவையும் கீல்வாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கட்டுரை தகவல்

  • சுமன்தீப் கவுர்

  • பிபிசி செய்தியாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

காலையில் எழும்போது கால் மூட்டுகள் விறைப்புடன் இருப்பதையோ, கால் அல்லது மூட்டுகளில் லேசான வலி இருப்பதையோ, வயது அல்லது சோர்வு காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்படுவதையோ நாம் புறக்கணித்து விடுகிறோம்.

ஆனால், இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட அது காரணமாகவும் இருக்கலாம். இது கீல்வாதம் அல்லது ஆர்த்ரிட்டீஸ் எனப்படுகிறது.

யூரிக் அமிலம் என்பது என்ன, அது ஏன் நம் உடலில் அதிகரிக்கிறது, சரியான நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்துவது ஏன் முக்கியம் என்பவை குறித்து மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் புரிந்து கொள்ள முயல்வோம்.

குர்காவுனை சேர்ந்த மூத்த வாத நோய் (rheumatologist) மற்றும் நோயெதிர்ப்பு நிபுணரான மருத்துவர் ரேணு டாபர், உடலில் உருவாகும் இயற்கைக் கழிவுகளே யூரிக் அமிலம் என விளக்கினார்.

"இவை பியூரின்கள் எனப்படும் கரிம சேர்மங்கள் உடையும்போது உருவாகின்றன. பியூரின்கள் என்பது உடலின் செல்களில் இயற்கையாகக் காணப்படும் வேதிம சேர்மங்களாகும். மேலும் அவை சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இவை உடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது" என்றார்.

ஹைப்பர்யூரிசெமியா (Hyperuricemia) என்பது ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பதால் ஏற்படும் பாதிப்பு. இதனால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் ஆகியவை ஏற்படுகின்றன.

யூரிக் அமிலம் எப்படி உருவாகிறது?

லூதியானா சிவில் மருத்துவமனையில் எலும்பியல் துறையில் மருத்துவ அதிகாரியாக உள்ள மருத்துவர் சௌரவ் சிங் சிங்லா, பியூரின் வளர்சிதை மாற்றம் அடையும்போது உருவாவதாகவும் அது இரண்டு வழிகளில் உருவாவதாகவும் விளக்கினார்.

முதலாவது உடலின் திசுக்களிலேயே, அதாவது கல்லீரல், குடல், தசைகள், சிறுநீரகங்கள் மற்றும் வாஸ்குலர் எண்டோதெலியம் (vascular endothelium - ரத்த நாளங்களை உருவாக்கும் உட்புறச் சுவரை உருவாக்குகின்ற மெல்லிய செல் அடுக்கு) ஆகியவற்றில் உருவாகிறது. இரண்டாவது வழி, உடலுக்கு வெளியே, அதாவது விலங்குப் புரதங்களைக் கொண்ட உணவுகளை உண்ணும்போது உருவாகிறது.

மேலும் அவர் கூறுகையில், "இந்த பியூரின் நியூக்ளியோடைடுகள் (nucleotides) நொதிகள் மூலம் ஹைபோக்ஸன்தைன் (hypoxanthine), ஸன்தைன் (xanthine) ஆகியவையாக உடைந்து, பின்னர் மேலும் ஸன்தைன் ஆக்ஸிடேஸ் (xanthine oxidase) எனும் நொதி மூலம் யூரிக் அமிலமாக மாறுகின்றன" என விவரித்தார்.

"மனிதர்களிடத்தில் யூரிகேஸ் (uricase) எனும் நொதி இல்லை என்பதால் யூரிக் அமிலம் உடையாமல் இருக்கும். எனவே அது சிறுநீரகங்களையே சார்ந்திருக்கிறது. அதன் மூலம், யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அமிலத்திற்கு தண்ணீரில் கரையும் தன்மை குறைவாக இருக்கும். எனவே, அது மிக அதிக அளவில் இருந்தால், உடல்நல பிரச்னைகள் ஏற்படும்."

"மற்ற விலங்குகளிடம் யூரிக் அமிலத்தை மேலும் உடைத்து வெளியேற்றும் யூரிகேஸ் நொதி உள்ளது. ஆனால் மனிதர்களிடம் இந்த நொதி இல்லை. எனவே, யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக சிறுநீரகத்தில் இருந்து வெளியேறுகிறது."

யூரிக் அமிலத்தின் இயல்பு அளவு

ஆண்கள் மற்றும் மெனோபாஸ் நிலையை கடந்த பெண்கள்: 3.5-7.2 mg/dL

மெனோபாஸ் கட்டத்திற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்கள்: 2.6–6.0 mg/dL

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பியூரின் எனப்படும் ஒரு பொருள் சிதைக்கப்படுவதன் மூலம் உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது.

யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் காட்டும் அறிகுறிகள்

நிபுணர்களின் கூற்றுப்படி யூரிக் அமிலம் 6.8 mg/dL-க்கு அதிகமாக இருந்தால், மோனோசோடியம் யூரேட் படிகங்கள் (crystals) உருவாகத் தொடங்கும். இந்தப் படிகங்கள், மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர்ந்து, கீல்வாதத்தை ஏற்படுத்தும்.

சில மருத்துவ ஆதாரங்கள், ஆண்களுக்கு 3.4-7.0 மற்றும் பெண்களுக்கு 2.4-6.0 என்பதை இயல்பு அளவாகக் குறிப்பிடுகின்றன.

எனினும் நிபுணர்களின் கூற்றுப்படி, "வெவ்வேறு ஆய்வகங்களில் அதன் அளவில் சிறிது வித்தியாசங்கள் இருக்கும். ஆனால், 7 mg/dLக்கு மேலே இருப்பது அதிகமான அளவாகக் கருதப்படுகிறது" என்றார்.

மருத்துவர் ரேணு விளக்கும்போது, கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் ஏற்படும் வரை யூரிக் அமிலம் அதிகரித்திருப்பது பெரும்பாலும் அறிகுறிகள் வாயிலாக எளிதில் தெரிய வருவதில்லை என்றார்.

"திடீரென மற்றும் கடுமையாக அழற்சி கீல்வாதம் ஏற்படும். இதனால் மூட்டுகளில் வீக்கம், சிவப்பாகுதல், சூடாகுதல் மற்றும் கடுமையான வலி ஏற்படும்," என்று அவர் விளக்கினார்.

"இந்த வலி கை, கால்களின் பெருவிரலில் ஆரம்பித்து, குதிங்கால், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் மற்றும் சிறு மூட்டுகளுக்குப் பரவும். இந்த வலி இரவு ஓய்வில் இருக்கும்போது ஆரம்பித்து ஓரிரு நாட்களில் அதிகபட்ச வலியை எட்டும்."

யூரிக் அமிலம் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்

மருத்துவர் சௌரவ் இதுகுறித்து விளக்கியபோது, யூரிக் அமிலம் அதிகமாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

"சுமார் 90% நோயாளிகளில், யூரிக் அமிலத்தை சிறுநீரகங்கள் முறையாக வெளியேற்றாததால் அதிகரிக்கும். 10% நோயாளிகளில் உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் உற்பத்தியாவது காரணமாக இருக்கிறது."

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

யூரிக் அமிலம் எதனால் உருவாகிறது? யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது கீல்வாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

  • வாழ்வியல் முறை: அதிகளவிலான இனிப்பு உணவுகள், மது (குறிப்பாக பீர்) மற்றும் இனிப்பு கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது.

  • அதிகமாக மது அருந்துவது, உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதைத் தடுத்து, பியூரின்களின் அளவை அதிகரிக்கிறது.

  • உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் ரத்தத்தில் யூரிக் அமிலம் செறிவூட்டப்படுகிறது.

  • இதுதவிர, வேகமாக உடல் எடையைக் குறைக்க அதிக புரதம் சார்ந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது போதிய உடலுழைப்பு இல்லாமல் போனால் இவ்வாறு யூரிக் அமிலம் அதிகரிக்கிறது.

  • மரபியல்: பிறவி நொதிக் குறைபாடுகள் (congenital enzyme deficiencies) அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட சில நோய்கள் குடும்பத்தில் ரத்த உறவுகள் யாருக்காவது இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புண்டு.

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

  • உடல்பருமன் (வயிற்றுப்பகுதி பருமனாக இருத்தல்): இதனால், இன்சுலின் எதிர்ப்பு அதிகமாவதால், குறிப்பாக பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே யூரிக் அமிலம் உருவாவதையும் அது சுரப்பதையும் அதிகரிக்கிறது.

  • உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தத்தில் அதிகமான அல்லது குறைவான கொழுப்பு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு (metabolic syndrome) ஆகியவற்றாலும் சிறுநீரகங்களில் இருந்து யூரிக் அமிலம் வெளியேறுவது குறைகிறது.

  • ரத்த புற்றுநோய் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள்: நோயெதிர்ப்பு அமைப்பைப் பாதிக்கும் மருந்துகள் மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும் யூரிக் அமிலம் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம்.

  • வயது மற்றும் பாலினம்: இந்தப் பிரச்னை பெண்களைவிட ஆண்களிடம் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.

  • மேலும், வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, மூட்டுகளில் தொடர்ச்சியாக வலி, வீக்கம், சிவந்துபோகுதல் ஆகியவற்றை அனுபவிக்கும் நபர்களுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் இருக்கலாம்.

இத்தகைய காரணங்களும் அறிகுறிகளும் உள்ளவர்கள் ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் (hyperuricemia) உள்ளதா என்பதை வழக்கமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு ஓய்வு அளித்தல், ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும்

எப்போது இந்த பிரச்னை அதிகமாகும்?

மருத்துவர் ரேணு கூறுகையில், அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை எடுக்காவிட்டால், கீல்வாதம் தவிர மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களில் நீண்ட கால விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும்.

"சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் யூரிக் அமிலம் படிகங்களாக உடலில் படிந்துவிடும்" என்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, "இதனால் எலும்பு சேதமடைந்துவிடும், இதை எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன்கள் மூலம் பார்க்கலாம். இதில், பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள நீரை நீக்குவதன் மூலமும் இத்தகைய படிகங்களை அடையாளம் காண முடியும்."

அவரை பொறுத்தவரை, "இந்தப் படிகங்கள் சிறுநீரகங்களில் படிந்து, சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்."

சிறுநீரக நோய் (Nephropathy) என்பது சிறுநீரகங்களை பாதிக்கும் ஒரு நோயாகும். இதனால் சிறுநீரகம் அதன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் போகும்.

இதற்கு சிகிச்சை என்ன?

மருத்துவர் சௌரவை பொறுத்தவரை, மருந்துகளுடன் சரியான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதைச் சார்ந்தே கீல்வாதத்திற்கான சிகிச்சை உள்ளது.

அதுகுறித்து விளக்கியவர், "இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது, மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் உதவியுடன் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்," என்றார்.

பாதிக்கப்பட்ட மூட்டுகளை ஓய்வில் வைத்திருத்தல், அதில் ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதோடு, நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பலன் தரும் என்றும் இவை உடல்நலத்தைப் பேணவும் மேம்படுத்தவும் உதவுவதாகவும் கூறுகின்றனர்.

மேற்கொண்டு விளக்கிய மருத்துவர் ரேணு, "மது மற்றும் இனிப்பு நிறைந்த பானங்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்."

"கீரைகள், தக்காளி, வெள்ளரிக்காய், செர்ரி, சிட்ரஸ் நிறைந்த பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். போதுமான தண்ணீரைப் பருகுவதும் மிக முக்கியம். ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் அல்லது 6-8 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கு உதவும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க் குழாய்களில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyvee7j1r7o

ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?

2 weeks 3 days ago

"நான் இறந்து விடுவேன் என நினைத்தேன்" - ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?

16 வயதான அலிசா டேப்லி

படக்குறிப்பு,16 வயதான அலிசா டேப்லி எனும் இவர் தான் இந்த முறையில் சிகிச்சை பெற்ற முதல் நபர்.

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லாகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ஒரு சிகிச்சை முறை ஒன்று, சில நோயாளிகளில் மிக மோசமாகப் பாதித்த மற்றும் குணப்படுத்த முடியாத ரத்தப் புற்றுநோய்களை மாற்றியமைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சிகிச்சை, வெள்ளை ரத்த அணுக்களில் உள்ள டிஎன்ஏவை துல்லியமாக மாற்றி, அவற்றை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் "உயிருள்ள மருந்தாக" மாற்றுகிறது.

இதற்கு முன்பு இந்த சிகிச்சை பெற்ற முதல் சிறுமியைக் குறித்து 2022-இல் பிபிசி ஒரு செய்தி வெளியிட்டது. நோயில் இருந்து விடுபட்டுள்ள அவர், இப்போது புற்றுநோய் குறித்த விஞ்ஞானியாக மாறும் கனவுடன் உள்ளார்.

தற்போது இதே சிகிச்சை மூலம், டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 64% பேர் நிவாரணம் பெற்றுள்ளனர்.

டி-செல்கள் சாதாரணமாக உடலைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டு, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தேடி அழித்துவிடுகின்றன. ஆனால் லுகேமியாவின் வடிவில், அதே டி - செல்கள் கட்டுப்பாட்டை இழந்து அதிக அளவு பெருகுகின்றன.

கீமோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்திருந்தன. எனவே பாதிப்பில் இருந்தவர்களுக்கு, பரிசோதனை மருந்தை தவிர எஞ்சிய ஒரே வழி, அவர்களுடைய மரணத்தை சற்று வசதியானதாக மாற்றுவதாக மட்டுமே இருந்தது.

"நான் உண்மையிலேயே இறந்து விடுவேன் என்று நினைத்தேன். வளர்ந்து, ஒவ்வொரு குழந்தையும் செய்யத் தகுதியான அத்தனை விஷயங்களையும் என்னால் செய்ய முடியாமல் போய்விடும் என நினைத்தேன்" என்கிறார் லெய்செஸ்டரைச் சேர்ந்த 16 வயது அலிசா டாப்லி.

கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் உலகிலேயே இந்தச் சிகிச்சை பெற்ற முதல் நபர் இவர் தான். இப்போது அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.

அலிசா

படக்குறிப்பு,அலிசா தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில், அவரது பழைய நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் அகற்றி, புதிய ஒன்றை உருவாக்கும் முறை இடம்பெற்றது. அவர் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். தொற்று ஏற்படக்கூடும் என்பதால், அந்த சமயத்தில் அவரது சகோதரனைக் கூட அவரால் சந்திக்க முடியவில்லை.

ஆனால் இன்று, அவரது புற்றுநோய் முற்றிலும் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அவர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலிசா தற்போது தனது ஏ -லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டுநர் பயிற்சி பெறுவதையும், தனது எதிர்காலத்தை திட்டமிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார் அலிசா.

"நான் உயிரி மருத்துவ அறிவியலில் பயிற்சி செய்வது குறித்து யோசித்து வருகிறேன். ஒருநாள் ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்," என்கிறார் அலிசா.

ஓட்டுநர் பயிற்சி பெறுவதையும், தனது எதிர்காலத்தை திட்டமிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார் அலிசா.

படக்குறிப்பு,அலிசா தற்போது தனது ஏ-லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் குழு பேஸ் எடிட்டிங் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.

பேஸ்கள் (bases) தான் உயிரின் அடிப்படை. அடினைன் (A), சைட்டோசின் (C), குவானைன் (G), தைமின் (T) எனும் நான்கு பேஸ்களே நமது மரபணு குறியீட்டின் கட்டுமானத் தொகுதிகள். எப்படி எழுத்துக்கள் சேர்ந்து அர்த்தமுள்ள சொற்களை உருவாக்குகின்றனவோ, அதுபோல நமது டிஎன்ஏவில் உள்ள பில்லியன் கணக்கான பேஸ்கள், நமது உடல் இயங்க வேண்டிய வழிமுறைகளை எழுதுகின்றன.

பேஸ் எடிட்டிங் என்பது மரபணு குறியீட்டின் குறிப்பிட்ட இடத்துக்கு நேராகச் சென்று, ஒரு அடிப்படையின் மூலக்கூறு அமைப்பை மாற்றி, அதை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்ற உதவும் முறையாகும். இதனால் மரபணு கையேட்டையே புதிதாக எழுத முடியும்.

ஆரோக்கியமான டி-செல்களிடம் இயற்கையாக உள்ள சக்தியைப் பயன்படுத்தி, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அழிக்கவும், அந்த சக்தியை டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவுக்கு எதிராக பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர்.

ஆனால் இது மிகவும் சிக்கலான செயல்முறை. இந்த சிகிச்சை முறை தன்னைத் தானே அழித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக, கெட்ட செல்களை மட்டும் குறிவைத்து அழிக்க நல்ல டி -செல்களை மாற்றி வடிவமைக்க வேண்டியிருந்தது.

அதற்காக முதலில் ஒரு நன்கொடையாளரிடமிருந்து ஆரோக்கியமான டி -செல்களைப் பெற்று, அவற்றை மாற்றியமைக்கத் தொடங்கினர்.

முதல் பேஸ் எடிட்டிங் மூலம், டி -செல்களின் 'இலக்கு பொறிமுறை' (targeting) செயல்பாடு முடக்கப்பட்டது. இதனால் அந்த செல்கள் நோயாளியின் உடலைத் தாக்காது.

இரண்டாவது திருத்தம், அனைத்து டி -செல்களிலும் காணப்படும் சிடி7 என்றழைக்கப்படும் ஒரு வேதியியல் குறியை நீக்கியது. ஏனென்றால், அந்த சிகிச்சை தன்னை தானே சிதைத்துக் கொள்ளும் அபாயத்தைத் தடுப்பதற்கு இந்தக் குறியை நீக்குவது அவசியம்.

மூன்றாவது திருத்தம், செல்களைச் சூழ்ந்த "கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு மேலங்கியைப்" போன்றது. இது கீமோதெரபி மருந்துகள் அந்த செல்களை அழிப்பதைத் தடுக்கிறது.

மரபணு மாற்றத்தின் இறுதி கட்டத்தில், சிடி7 (CD7) குறியுடன் இருக்கும் செல்களை தேடி அழிக்க டி-செல்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் மாற்றியமைக்கப்பட்ட டி -செல்கள், புற்றுநோய் செல்லாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருந்தாலும், தங்கள் முன் வரும் மற்ற எல்லா டி-செல்களை அழித்து விடும். ஆனால் அவை ஒன்றையொன்று தாக்காது.

அதன் பிறகு இந்த சிகிச்சை நோயாளியின் உடலில் மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நான்கு வாரங்கள் கழித்து புற்றுநோய் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்திருந்தால், நோயாளிக்கு புதிய நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

"சில ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு அறிவியல் புனைகதையாக இருந்திருக்கும்" என்கிறார் யூசிஎல் மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த பேராசிரியர் வசீம் காசிம்.

தொடர்ந்து பேசிய அவர், "நாம் முற்றிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தையே அகற்ற வேண்டும். இது ஆழமான, தீவிரமான, நோயாளிகளுக்கு மிகவும் கடினமான சிகிச்சை. ஆனால் இது வேலை செய்தால், மிகச் சிறப்பாகச் செய்கிறது," என்றார்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற முதல் 11 நோயாளிகளின் முடிவுகளைப் பற்றி கூறுகிறது. அவர்களில் ஒன்பது பேர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யும் அளவுக்கு ஆழ்ந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளனர்.

சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஏழு பேர் முழுமையாக நோயின்றி உள்ளனர்.

நோயெதிர்ப்பு மண்டலம் அகற்றப்படும் காலத்தில் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் தான், இந்த சிகிச்சையின் பெரிய ஆபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இரண்டு நோயாளிகளில், புற்றுநோய் தனது சிடி7 அடையாளத்தை இழந்தது. இதனால் அது இந்த சிகிச்சையிலிருந்து தப்பித்து உடலில் மீண்டும் வளரத் தொடங்கியது.

"இந்த வகை லுகேமியா எவ்வளவு தீவிரமானது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த சிகிச்சை முடிவுகள் மிகச் சிறப்பானவையாக உள்ளன. நம்பிக்கையிழந்த நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க முடிந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்றுத் துறையின் மருத்துவர் ராபர்ட் சீசா கூறினார்.

"குணப்படுத்த முடியாததாகத் தோன்றிய லுகேமியாவை அகற்றுவதில் கூட நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். இது மிகவும் சக்திவாய்ந்த சிகிச்சை முறை" என்று கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் ரத்தவியல் நிபுணரும் மருத்துவருமான டெபோரா யல்லோப் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் ஸ்டெம் செல் தொண்டு நிறுவனமான அந்தோணி நோலனின் மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவர் டானியா டெக்ஸ்டர், "சோதனைக்கு முன்னர் இந்த நோயாளிகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தற்போது கிடைத்துள்ள இந்த முடிவுகள், இது போன்ற சிகிச்சைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, நோயாளிகளின் வாழ்வை மீட்டெடுக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20gzdgqgrpo

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

3 weeks ago

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

வேலூரை பூர்வீகமாகக் கொண்ட மணிஷா மனோகரனுக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், முன்பெல்லாம் ஒவ்வொரு முறை திரையரங்கம் செல்லும்போதும் தன்னைப் பதற்றம் தொற்றிக் கொண்டதாகக் கூறுகிறார்.

அதற்குக் காரணம், அவரது கட்டுப்பாடின்றி தன்னியக்கமாக ஏற்படும் டிக்ஸ் (tics) என்ற உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளே.

"நான் படம் பார்க்கும்போது, உணர்ச்சி மிகுதியில் என் உடலில் தன்னியக்கமாக ஏற்படும் அசைவுகள் அல்லது எழுப்பப்படும் ஒலிகள் தங்களைத் தொந்தரவு செய்வதாகவும் அதைக் கட்டுப்படுத்துமாறும் பிறர் கூறுவதுண்டு."

ஆனால், "அதைக் கட்டுப்படுத்த முடிந்தால் செய்ய மாட்டேனா?" என்று பதற்றமும் கோபமும் தனக்கு ஏற்படும் எனக் கூறுகிறார்.

அவர் மட்டுமின்றி, கேரளாவை சேர்ந்த பாடகி எலிசபெத் மேத்யூவும் தனக்கு இருக்கும் டூரெட்ஸ் குறைபாட்டால் (Tourette's Syndrome) ஏற்படுகின்ற தன்னியக்கச் செயல்பாடுகளால் இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் எதிர்கொண்டுள்ளார்.

டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?

உளவியல் நிபுணர் ராஜ்குமாரின் கூற்றுப்படி, டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பியல் குறைபாடு. இது பிறவியிலேயே இருக்கும் என்றாலும், அது இருப்பது, "பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுக்குள், குழந்தைப் பருவத்தில் தெரியத் தொடங்குகிறது. உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்வது, அதையே திரும்பத் திரும்பச் செய்வது இதன் முதன்மையான அறிகுறி" என்று விளக்கினார்.

அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி, மூளை திடீரென ஒரு சமிக்ஞையை உடலுக்கு அனுப்புகிறது, அதற்கு உடல் டிக்ஸ் வடிவில் உடனடியாக எதிர்வினையாற்றுகிறது. "இந்த நிலை காரணமாகத் தங்களது உடல் ஏற்படுத்தும் அசைவுகளையோ ஒலிகளையோ ஒருவரால் கட்டுப்படுத்த முடியாது." என்கிறார் ராஜ்குமார்.

"அப்படிக் கட்டுப்படுத்த முயலும்போதுதான் நிலைமை மிகவும் மோசமாகும். ஓர் எறும்புப் புற்றின்மீது நிற்கிறீர்கள், அங்குள்ள எறும்புகள் உங்கள் கால்களைக் கடுமையாகக் கடிக்கின்றன. ஆனால், நீங்கள் அங்கிருந்து நகரவே முடியாது என்றால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் இந்தத் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயலும்போது எங்களுக்கு இருக்கும். அது அவ்வளவு கடினமானது," என்கிறார் மணிஷா.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

படக்குறிப்பு,மணிஷா மனோகரன்

டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள்

உடல் அசைவுகள், குரல் ஒலிகள் என டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள் இரண்டு வகைப்படுகின்றன.

உடல் அசைவுகளாக ஏற்படும் டிக்ஸ்களை பொருத்தவரை, "கண்களைப் பலமுறை சிமிட்டுவது, தோள்களைக் குலுக்குவது, முகத்தைச் சுருக்கிக் கொண்டே இருப்பது, கை கால்களைத் திடீர் திடீரென அசைப்பது ஆகியவை தன்னிச்சையாக அடிக்கடி நிகழக்கூடும்." என்கிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி.

உதாரணமாக, வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர் ஒருவர், தொடர்ந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பதைத் தன்னைக் கேலி செய்யும் செயலாக ஆசிரியர் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனால், "இந்தக் குறைபாடு உடைய அந்த மாணவரின் சுயக் கட்டுப்பாடின்றி அது நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்," என்று விளக்கினார் அனிஷா.

அதேபோல, தொண்டையை திரும்பத் திரும்பச் செருமுதல், நோய்க் காரணி ஏதுமின்றி இருமுதல், சிறு சத்தங்களை எழுப்புதல், ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறுவது ஆகியவை குரல் ஒலி டிக்ஸ்களுக்கான சில உதாரணங்கள்.

"நான் படிப்பை முடித்து முதன்முதலில் வேலைக்குச் சென்ற காலகட்டத்தில், தோள்களை திடீர் திடீரெனக் குலுக்குவது, அடிக்கடி குரலொலிகளை எழுப்புவது போன்ற என் உடலில் நடக்கும் தன்னியக்கச் செயல்பாடுகளை, பிறரின் கவனத்தை ஈர்க்க நான் செய்பவை என்று சக பணியாளர்கள் கருதியதுண்டு. ஆனால், அவை தன்னியக்கமாக நிகழ்பவை. எனது கட்டுப்பாட்டில் நடப்பவையல்ல.

என் உடலில் நடக்கும் இத்தகைய செயல்பாடுகள், பிறரின் கவனத்தை அதிகமாக ஈர்த்த காரணத்தால், நான் மிகவும் சங்கடமாகவும் பதற்றமாகவும் உணர்ந்தேன். அதனால் டிக்ஸ்கள் அதிகமானதே தவிர குறையவில்லை," என்று கூறுகிறார் மணிஷா.

உளவியல் நிபுணர்கள் ராஜ்குமார், அனிஷா ரஃபி இருவருமே, "இதுபோன்று திடீர் திடீரென நடக்கும் உடல் இயக்கங்கள், எழுப்பப்படும் குரலொலிகளை டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்கள்.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

படக்குறிப்பு,உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி

சமூகத்தில் ஏற்படும் அழுத்தம்

தற்போது பெங்களூருவில் பணியாற்றி வரும் மணிஷா மனோகரன், டூரெட்ஸ் குறைபாட்டால் பள்ளிப் பருவத்தின்போது பல சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறார்.

"முதன்முதலில் டிக்ஸ் ஏற்படத் தொடங்கியபோது, எனக்கு 6 வயது இருக்கும். என்னை அறியாமல் நான் கண் சிமிட்டிக்கொண்டே இருந்தேன். நான் ஏதோ அதிகமாக டிவி பார்ப்பதாலேயே இப்படி இருப்பதாக கண் மருத்துவர்கள் கூறினர். பல ஆண்டுகளாக என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமலே வளர்ந்தேன்."

பிறகு 2021-ஆம் ஆண்டுதான், தனக்கு இருப்பது ஏதோ வினோதமான பழக்கம் கிடையாது, அதுவொரு குறைபாடு என்பதை முழுமையாக உணரத் தொடங்கியதாகக் கூறுகிறார் மணிஷா.

ஒரு பெண் இந்தச் சமூகம் கருதும் "சாதாரணமான, அழகான, ஆரோக்கியமான" என்ற வகைப்பாட்டின் கீழ் வரவில்லை என்றால், அவர் ஒருவித "சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும். அதை நானும் எதிர்கொண்டேன்" என்கிறார் மணிஷா.

தனது பெற்றோர் இந்தக் குறைபாட்டைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு வினோதமான பிரச்னையாகப் பார்த்தாலும், எப்போதாவது அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்ததாகக் கூறுகிறார் அவர்.

ஆனால், "டூரெட்ஸ் சிண்ட்ரோமை உளவியல் சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியுமே தவிர அதைக் குணப்படுத்த முடியாது," என்கிறார் உளவியல் நிபுணர் ராஜ்குமார்.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தக் குறைபாட்டால் ஏற்படும் உடலின் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது எறும்புப் புற்றின் மீது நிற்பதைப் போல் மிகவும் கொடுமையானது என்கிறார் மணிஷா மனோகரன்

சமூகத்தில் தொடர்ந்து வினோதமாகப் பார்க்கப்படுவதைத் தவிர்க்க, "இயன்ற அளவுக்கு உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். இப்படித் தொடர்ந்து முகமூடியுடன் வாழ்ந்தது, என் மனநலனைப் பெரியளவில் பாதித்தது. நான் போலியானவளைப் போல் உணரத் தொடங்கினேன்" என்று தான் எதிர்கொண்டதை விவரித்தார் மணிஷா.

பிறரின் அடிப்படைப் புரிதலற்ற அறிவுரைகள் மற்றும் கேலிகளால் மிகுந்த மனச்சோர்வை எதிர்கொண்ட மணிஷா, மிகப்பெரிய உளவியல் போராட்டத்திற்குப் பிறகு, "இதுகுறித்து முதலில் நானே புரிந்து, உணர்ந்து, அங்கீகரிக்க வேண்டும்" என்பதையும் "இந்தக் குறைபாட்டுடன் சேர்த்து என்னை நானே முழுமையாகக் காதலிக்க வேண்டும்" என்பதையும் உணர்ந்ததாகக் கூறினார்.

பலவீனத்தை பலமாக மாற்றிய பாடகி

கேரளாவை சேர்ந்த பாடகியான எலிசபெத் எஸ். மேத்யூ, தனது டூரெட்ஸ் குறைபாட்டை ஒரு பலவீனமாகப் பார்க்காமல் அதையே பலமாகக் கருதித் தனது பாடல்களைப் பாடி வருகிறார்.

மேட்ச் பாயின்ட் ஃபெயித் என்ற இசை நிறுவனத்துடன் இணைந்து பாடல்களைப் பாடி வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் பாடும் பாடல்களுக்கு, பலராலும் இடையூறாகப் பார்க்கப்படும் டிக்ஸ்களே, ஒரு தனி அழகூட்டும் அம்சமாக மாறியுள்ளது.

"நான் பத்து வயதாக இருந்தபோது, எனக்கு டூரெட்ஸ் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. அப்போது அதுகுறித்த புரிதல் இல்லாததால், அதை நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை."

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Elizabeth/IG

படக்குறிப்பு,பாடகி எலிசபெத் எஸ். மேத்யூ

அதற்கு மாறாக, "எனது பெற்றோர் இப்படியொரு அரிய குறைபாடு தங்கள் மகளுக்கு இருப்பதை நினைத்து மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். ஆனால் அவர்களும் இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்" என்கிறார் எலிசபெத்.

இந்தக் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை, "நான் பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்வதாகவும், வலிய வேண்டுமென்றே செய்வதாகவும், உறவினர்கள் உள்படப் பலர் குறைகூறத் தொடங்கினார்கள். இதன் விளைவாக என் சுயத்தை மறைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

பள்ளிப் பருவத்தில், எப்போதும் ஒருவித கோபத்துடனும், ஆதங்கத்துடனுமே இருப்பேன். மனப் பதற்றம், அச்சம், குழப்பம் எனப் பல எதிர்மறை உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டிருந்தேன். இந்தப் பிரச்னைகளை டூரெட்ஸ் குறைபாடு இருப்பவர்கள் பலரும் எதிர்கொள்கின்றனர்," எனக் கூறிய எலிசபெத், இந்தக் குறைபாட்டுடன் வாழ்வது அவ்வளவு எளிய விஷயமல்ல என்றார்.

அதையெல்லாம் கடந்து, "எனக்கு பாடுவது பிடிக்கும் என்பதால், தன்னிச்சையாக ஏற்படும் டிக்ஸ்களை பொருட்படுத்தாமல், அதனூடாகவே பாடத் தொடங்கினேன்."

தனது பாடல்களை லட்சக்கணக்கானோர் ரசிக்கக் காரணம், அவரது திறமை மட்டுமில்லை எனக் கூறும் எலிசபெத், "இந்தக் குறைபாட்டால் ஏற்படும் டிக்ஸ்களை இடையூறாகக் கருதாமல், அவற்றின் ஊடாகவே நான் எனது பாடல்களைப் பாடுவதுதான் என் வளர்ச்சிக்குக் காரணம்," என்றார்.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

சமூக விழிப்புணர்வு மிகவும் அவசியம்

நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடான டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்களுக்கு ஏற்படும் டிக்ஸ்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் நடப்பதில்லை என்ற விழிப்புணர்வு "சமூகத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக" கூறுகிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி.

டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை பிறர் வினோதமாகப் பார்ப்பதால், "தன்னம்பிக்கை குறைவு, மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்," என்றும் கூறுகிறார் அவர்.

பொதுவாக, இதுகுறித்து முதன்மையாக பெற்றோர்களுக்குக் கற்பிக்கப்படும் எனக் கூறுகிறார் அனிஷா. "தங்களது குழந்தைகள் இத்தகைய செயல்பாடுகளை வேண்டுமென்றே செய்வதில்லை. இது அவர்களின் கட்டுப்பாட்டை மீறிய இயக்கம் என்பதை பெற்றோருக்குப் புரிய வைக்க வேண்டும்."

மேலும் அவரது கூற்றுப்படி, அதற்கு அடுத்தகட்டமாக பெற்றோர் வாயிலாக ஆசிரியர்கள் உள்பட அவர்களின் சுற்றத்தாருக்கு இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இதன் மூலம், "டூரெட்ஸ் குறைபாடு இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏதுவான சமூக சூழ்நிலையை ஆசிரியர்கள் உதவியுடன் ஏற்படுத்த முடியும்" என்பதை வலியுறுத்துகிறார் உளவியல் நிபுணர் அனிஷா.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

குழந்தைகளோ, பெரியவர்களோ, டூரெட்ஸ் இருப்பவர்களுக்கு டிக்ஸ் ஏற்படும்போது, "அவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே" அவர்களுக்கு நேர்மறையான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிறார் அவர்.

ஒருவேளை, இதற்கு நேர்மாறாக, இந்தக் குறைபாடு உடையவர்கள் தொடர்ச்சியாக கேலிக்கு உள்ளாவது, கண்டிக்கப்படுவது, வினோதமாக நடத்தப்படுவது, மனரீதியான கொடுமைகளைச் சந்திப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால், அது அவர்களின் வளர்ச்சியைப் பெரியளவில் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

'தன்னிலை அறிதலே என்னைக் காப்பாற்றியது'

டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்களுக்குப் பிறர் செய்யக்கூடிய சிறந்த உதவி அவர்களைப் புரிந்துகொள்வதுதான் என்கிறார் அனிஷா ரஃபி.

"அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் திட்டுவது, கேலி செய்வது, டிக்ஸ்களை நிறுத்துமாறு வலியுறுத்துவது போன்ற செயல்பாடுகள் அதை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

அதற்கு மாறாக, அவர்களிடம் பொறுமையைக் கடைபிடித்து, இந்த டிக்ஸ்கள் அடங்கும் வரை அவர்களுக்கு உளவியல் ரீதியாகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது, அவர்களின் நிலைமையை மேம்படுத்தும்," என்றும் விளக்கினார்.

"நீண்ட காலமாக, இந்தக் குறைபாட்டின் காரணமாகவே எனக்குள் ஏதோ தவறு இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறார் மணிஷா.

ஆனால், "எப்போது அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், என் உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேனோ, அதன் பிறகுதான் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினேன்," என்று கூறியபோது மணிஷாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது.

"இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, நீங்கள் முதலில் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் உடலை, மனதை, அவற்றிலுள்ள சிக்கல்களை, முழுதாக அப்படியே நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்."

"அன்று முதல் டூரெட்ஸ் குறைபாட்டின் விளைவாக நான் எதிர்கொண்ட சவால்களும் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கின" என்கிறார் அவர்.

இதையே வழிமொழியும் வகையில் பேசிய பாடகி எலிசபெத், "தன்னைப் பற்றி ஏற்படும் சுய உணர்வுகளை மேம்படுத்திக் கொண்டபோதுதான், தன் மீதான நம்பிக்கையும் மேம்பட்டது" என்கிறார். மேலும், அதுவே தனது பலவீனத்தை பலமாக மாற்றவும் வித்திட்டதாகக் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3d0m9xr1dvo

ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால்

3 weeks 5 days ago

ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால்

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.

முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன?

ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள் பெற்றுவிடும்.

"இப்படி மாறும் தொற்றுகள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளாகவே உள்ளன" என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும் பாக்டீரியாக்கள் 'சூப்பர்பக்' (superbug) என அழைக்கப்படுகின்றன.

'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட "கவலைக்குரிய" ஆய்வு என்ன சொல்கிறது?

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்தது என்ன?

இந்தியாவில் ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை ஐசிஎம்ஆர் சமீபத்தில் வெளியிட்டது. உயர்நிலை சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 99,027 மாதிரிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்றும், அதனால் இந்த தரவுகள் சமூக மட்டத்தில் (community patterns) அதன் நிலையை பிரதிபலிக்காது எனவும் ஐசிஎம்ஆர் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள்:

  • ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள தொற்றுகளில், கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியா தொற்று (72.1%) அதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கிராம் பாசிட்டிவ் வகை பாக்டீரியா தொற்றும் (17.7%) அடுத்ததாக பூஞ்சை தொற்றும் (10.2%) உள்ளன.

  • யுடிஐ (சிறுநீர் பாதை தொற்று) மற்றும் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஃப்ளூரோக்வினோலோன் (Fluoroquinolones) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, யுடிஐ போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் செஃபாலோஸ்போரின் (cephalosporin) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, செப்சிஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் கார்பாபெனெம் (carbapenems) எனும் ஆன்டிபயாடிக், பல்வேறு வித தொற்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிபெராசிலின் - டாஸோபாக்டம் (piperacillin-tazobactam) எனும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக நோய்த்தொற்றுகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளன என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

  • சிறுநீர்ப் பாதை தொற்று (யுடிஐ) போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக உள்ள இ.கோலை (Escherichia coli) பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் அமிகசின் (Amikacin) போன்ற சில ஆன்டிபயாடிக் மருந்துகள் தொற்றை எதிர்த்து செயலாற்றுவதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

  • நிமோனியா போன்றவற்றுக்குக் காரணமான கிளெப்சியெல்லா நிமோனியே (Klebsiella pneumoniae) பாக்டீரியா, பிபெராசிலின் - டாஸோபாக்டம் (Piperacillin–tazobactam) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது.

  • சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa) எனும் பாக்டீரியா, கார்பாபெனெம் (Carbapenem) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது.

  • அசினெடோபாக்டர் பௌமானி (acinetobacter baumannii) எனும் பாக்டீரியா மெரோபெனெம் (meropenem) ஆன்டிபயாடிக் மருந்துக்கு மிக அதிகளவில் (91%) எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளது.

  • சால்மோனெல்லா டைஃபி (Salmonella Typhi) எனும் டைஃபாய்டை ஏற்படுத்தவல்ல பாக்டீரியா செஃட்ரியாக்சோன் (Ceftriaxone- 98%), அஸித்ரோமைசின் (Azithromycin - 99.5%), டிஎம்பி-எஸ்எம்எக்ஸ் (TMP-SMX - 97.7%) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்திகொண்டவையாக உள்ளன.

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

இதுமட்டுமின்றி, முந்தைய சில ஆய்வுகளும் இதுகுறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. "மருத்துவ ஆய்விதழான தி லான்செட், உலகளவில் 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகள் இதனால் நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய கடும் தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கேடயங்களுள் முதல் வரிசையில் உள்ள ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இத்தகைய தொற்று பாதிப்புகளில் பெரும்பாலும் செயல்படுவதில்லை." என குறிப்பிட்டுள்ளது. இதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என அந்த ஆய்வு கூறுகிறது.

இவ்வாறு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் தொற்றுகளுக்கு அன்றாடம் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அத்தொற்றுகள் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளன. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதை எப்படி புரிந்துகொள்வது? மருத்துவர்களிடம் பேசினோம்.

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை பாக்டீரியா எப்படி பெறுகிறது?

ஆன்டிபயாடிக் என்பது பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்.

"பாக்டீரியாக்களை கிராம் நெகட்டிவ் மற்றும் கிராம் பாசிட்டிவ் என வகைப்படுத்துகிறோம். பாக்டீரியா தொற்றுக்களுக்குதான் பெரும்பாலும் நாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவோம். நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படவில்லையெனில் பாக்டீரியாக்கள் அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். அதாவது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உயிர் பிழைப்பதற்காக பாக்டீரியாக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டு மருந்துகளுக்கு எதிரான சக்தியை பெறும்" என்று சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர் விளக்கினார்.

பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கான காரணங்கள் என்ன?

"பாக்டீரியாக்கள் உருமாற்றம் அடைந்து பல்வேறு திரிபுகள் உருவாகும் போது அவை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறுகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் உபயோகிக்கும் போதோ அல்லது சரியான அளவில் பயன்படுத்தாத போதோ அவ்வாறு அவை மாறுகின்றன. சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் வேறு ஒன்றை மாற்றிக் கொடுத்தாலும் இது நிகழும்." என கூறுகிறார், சென்னையை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலஷ்மி.

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெற்றால் என்ன நடக்கும்?

"ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தி பாக்டீரியாக்களிடம் உருவாகிவிட்டால், அந்த மருந்து நோயாளிகளிடத்தில் வேலை செய்யாது." என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.

"இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான தொற்றுகளுக்கு நாம் பயன்படுத்தும் பல ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காது. இதனால், நோயாளிகள் உயிரிழப்பதும் நிகழ்கின்றன. குறிப்பாக, புற்றுநோய், இதயநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கடினமான அறுவை சிகிச்சைகளை செய்து காப்பாற்றுகிறோம். ஆனால், பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெறுவதால், சாதாரண தொற்றுகளுக்கு ஆளாகியும் கூட அவர்கள் உயிரிழப்பதை பார்த்துள்ளோம்." என்கிறார் மருத்துவர் விஜயலட்சுமி.

பாக்டீரியாக்கள் பலவும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதால், மருத்துவர்கள் வழக்கமாக பரிந்துரைக்கும் திறன் வாய்ந்த மருந்துகள் நோயாளிகளிடையே செயலாற்றுவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் எப்படி கவனமாக இருப்பது?

மருத்துவர்கள் சந்திரசேகர் மற்றும் விஜயலட்சுமியின் பரிந்துரைகள்

  • பரிந்துரைக்கப்பட்டதை விடவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இடையில் அவற்றை எடுத்துக் கொள்வதை நிறுத்தாமல் பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கவனத்துடன் பரிந்துரைக்க வேண்டும். சாதாரண சளி, காய்ச்சல் என்றாலே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை கல்ச்சர் பரிசோதனையில் உறுதி செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும்.

  • இந்தியாவில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மருந்தகங்களில் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0q51pn1ln0o

இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது?

1 month ago

இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது?

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், கழிவறை செல்வது பற்றிச் சிந்தித்தவுடன் பலருக்கும் கால்களை மடக்கி உட்காரும் முறைதான் மனக் கண்ணில் வரும்.

ஆனால், மேற்கத்திய முறையான நாற்காலியில் அமர்வதைப் போன்ற வகையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிவறைகளும் தற்போது இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதுமே கணிசமாக பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் கழிவறை பயன்பாட்டில் இந்திய பாணி அல்லது மேற்கத்திய பாணி ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு உகந்தது? என்கிற விவாதம் தொடர்ச்சியாக எழுகிறது.

இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியான ஓர் ஆய்வு, அறிவியல்பூர்வ பதிலை வழங்குகிறது.

இரண்டுமே மலம் கழிக்க ஏதுவான பாணியாக இருப்பதாகவும் இந்திய பாணி, மேற்கத்திய பாணி இரண்டிலுமே சாதகங்களும் பாதகங்களும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித உடலின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு எந்த பாணியில் மலம் கழிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்?

மலம் கழிக்கும் முறையின் பின்னுள்ள அறிவியல்

மலம் கழித்தல் என்பது மிகச் சாதாரண விஷயமாக தெரியலாம். ஆனால் உடலின் உட்புறத்தில், "தசைகள், உடல் இயக்கத்தின் கோணங்கள் ஆகியவற்றின் சிக்கலான அமைப்பைப் பொறுத்து, எளிதில் வெளியேறுவதும், சிரமப்படுவதும் இருப்பதாக" ஆய்வு கூறுகிறது.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

இதில், மலம் வெளியேறும் பாதையான மலக்குடல்வாய் எந்த அமைப்பில் இருக்கிறது என்பதும் பங்களிப்பதாகக் கூறும் மூத்த இரைப்பை குடல் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "இந்த மலக்குடல்வாய் பாதை நேர் கோணத்தில் இருக்கும்போது மலம் எளிதாக வெளியேறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாற்காலி போன்ற மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது இந்தப் பாதை வளைந்திருப்பதால் சிலர் மலம் கழிப்பதில் சற்று சிரமங்களைச் சந்திக்கலாம்" என்றும் கூறினார்.

அதாவது ஜூலை மாதம் வெளியான ஆய்வு முடிவுகள்படி, மலக்குடல்வாய் பாதை, மலம் கழிக்கும்போது நேராக்கப்பட வேண்டும்.

''அதுதான் இந்திய பாணி டாய்லெட் பயன்பாட்டில் நடக்கிறது." என்கிறார் கயல்விழி ஜெயராமன்

அதாவது, ஒருவர் குத்தவைத்து அமரும்போது, தொடைகள் வயிற்றுடன் அழுந்துகின்றன. அப்போது உடல் இயல்பாகவே முன்னோக்கிச் சாய்கிறது. அதனால், "தசைகள் தளர்வடைவதாகவும் மலக்குடல்வாய் பாதை நேராவதாகவும்" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

"மாறாக, மேற்கத்திய பாணி கழிவறையில், ஒருவர் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் போது தசைகள் இறுக்கமாகவும், மலக்குடல்வாய் வளைந்தும் இருப்பதால், மலத்தை வெளியேற்ற கூடுதலாக அழுத்தம் கொடுத்து வேண்டியிருப்பதாக" ஆய்வு கூறுகிறது.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

இருப்பினும், இதை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கத்திய பாணி கழிவறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று கூறிவிட முடியாது என்கிறார் மருத்துவர் கயல்விழி.

அவரது கூற்றுப்படி, இரண்டு விதமான கழிவறைகளுமே பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. "ஒருவேளை மேற்கத்திய பாணியில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்திருந்தால் அதன் பயன்பாடு இவ்வளவு காலம் நீடித்திருக்காது."

அதோடு, "முதியவர்கள், உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மேற்கத்திய பாணி கழிவறை பயனுள்ளதாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

மலம் கழிக்க சிறந்த முறை எது?

மலம் கழிப்பதைப் பொருத்தவரை, "இந்திய பாணியில் முழுமையாகக் குத்தவைப்பது, மேற்கத்திய பாணியில் நாற்காலி வடிவத்தில் உட்காருவது மற்றும் அதே பாணியில், கால்கள் மட்டும் சற்று உயரமாக இருக்கும் வகையில் முக்காலி அல்லது ஸ்டூலை காலுக்கு அடியில் பயன்படுத்திக் கொள்வது ஆகிய மூன்று வழிகள் உலகளவில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன." என்கிறார் மருத்துவர் கயல்விழி.

இதில் எந்த வகையிலும் பெரியளவில் இடையூறுகள் ஏற்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் "நாற்காலி வடிவத்தில் உட்கார்ந்தாலும், கால்களை உயர்த்தி மடக்கியபடி உட்காருவது மலம் கழிப்பதை எளிமையாக்குவதால், மேற்கத்திய பாணியில்கூட இப்படியான மாறுதல்களைச் செய்து கொள்கிறார்கள்," என்று விளக்கினார்.

அதாவது, இந்திய பாணியில் மலம் கழிக்கும்போது மலக்குடல்வாய் நேர்க்கோணத்தில் இருக்கிறது. அதனால், மலம் வெளியேறுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதில்லை. ஆனால், நாற்காலி வடிவ கழிவறையைப் பயன்படுத்தும்போது, சில சிரமங்கள் ஏற்படுவதால், அதைத் தவிர்க்க கால்களை ஸ்டூல் வைத்து உயர்த்திக் கொள்ளும் பழக்கம் பலராலும் பின்பற்றப்படுகிறது.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

மேலும், ஆய்வில் பங்கெடுத்த தன்னார்வலர்கள், "குந்துதல் முறையில், மலத்தை வெளியேற்றுவதற்குக் குறைந்த அளவிலான உழைப்பையே செலுத்த வேண்டியுள்ளது. மேற்கத்திய பாணியில் இருக்கக்கூடிய, சற்றுக் கூடுதல் அழுத்தம் கொடுத்து மலத்தை வெளியேற்ற வேண்டிய சூழல், இதில் இருக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளனர்.

அதோடு, வெளிப்புற அழுத்தம் அதிகப்படியாக கொடுக்கப்படும்போது, அந்த அசௌகரியம், மூல நோய், மலக்குடல் இறக்கம், மலப்புழையில் பிளவுகளை உண்டாக்குவது போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.

இது மட்டுமின்றி, எந்தவித இடையூறுமின்றி மலம் எளிதாக வெளியேறுவதால் இந்திய பாணியிலான குந்துதல் முறை, ஒருவர் கழிவறையில் செலவழிக்கும் நேரத்தையும் குறைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஜர்னல் ஆஃப் அட்வான்ஸ்டு மெடிக்கல் அண்ட் டென்டல் சயின்சஸ் ரிசர்ச் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை, இந்திய பாணி கழிவறைகளைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படுவதில்லை எனவும் செரிமானம் சரியான முறையில் நடப்பதாகவும் கூறுகிறது.

அதேவேளையில், "இந்திய பாணி கழிவறைகள், முதியவர்கள், உடல் இயக்கக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மேற்கத்திய கழிவறைகள் அல்லது ஸ்டூல் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு வசதியாக இருப்பதை நாமே பல வீடுகளிலும் பார்க்கிறோம்.

எனவே, எந்தக் கழிவறையைப் பயன்படுத்தினாலும், உணவுமுறையை, சரியான அளவுகளில் ஊட்டச்சத்துகளை உட்கொள்வதற்கு ஏற்பத் திட்டமிடுவதும், எந்தச் சிக்கலுமின்றி மலம் வெளியேறுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்திய பாணி கழிவறையைப் பயன்படுத்துவதில் சிரமங்களை சமாளிக்க, இதுபோன்ற மாற்றுத் தீர்வுகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்திய கழிவறை வடிவங்களில் மேற்கத்திய பாணி

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சமூகங்களை உருவாக்க முயல்வதன் மூலம் சுகாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

அந்தத் திட்டம், "மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ஆகியோரும் எளிதில் அணுகுவதற்கு ஏற்ற கழிவறை வடிவங்களைக் கருத்தில் கொண்டிருந்ததாகவும்" அதற்கெனவே, 'குறைபாடுகள் உள்ளோர் அணுக ஏதுவான வீட்டு சுகாதாரம் பற்றிய கையேட்டில்' இந்திய பாணியிலான குந்துதல் முறைக்கு மாறாக "இரண்டு சிக்கனமான கழிவறை வடிவமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும்" நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆஃப் இந்தியா என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை கூறுகிறது.

ஆனால், "அந்த மாற்றுத் தீர்வுகள், அதாவது மேற்கத்திய பாணியிலான நாற்காலி போன்ற கழிவறை வடிவங்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் பயன்படுத்தப்படவில்லையோ என்ற சந்தேகத்தை கள ஆய்வுகள் எழுப்பியிருப்பதாக" கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கட்டுரையின் கூற்றுப்படி, இந்திய பாணி கழிவறை அனைவருக்கும் ஏற்படையதல்ல மற்றும் மேற்கத்திய பாணியிலான கழிவறைகளின் தேவையும் சமூகத்தில் இருக்கவே செய்கிறது.

அதற்காக, "ஸ்டூல் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளை மேற்கத்திய பாணிக்கு ஒத்த வகையில் மறுவடிவமைப்பு செய்து, பயன்படுத்தும் முறையைப் பல குடும்பங்களில் நம்மால் அவதானிக்க முடிகிறது. அதற்கேற்ற உபகரணங்களும் சந்தையில் கிடைக்கின்றன." என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மேற்கத்திய பாணி கழிவறையில், மலக்குடல்வாய் பாதை நேரான கோணத்தில் இருப்பதற்காக, கால்களுக்கு ஸ்டூல் வைக்கும் பழக்கமும் பின்பற்றப்படுகிறது

மேற்கத்திய பாணியில் காலுக்கு ஸ்டூல் வைப்பது உதவுமா?

இந்திய பாணியிலான குந்துதல் முறையில் மலம் கழித்து முடிக்கும்போது ஏற்படும் தன்னிறைவு, மேற்கத்திய பாணியில் அனைத்து நேரங்களிலும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்று ஜூலை மாதம் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, "மலம் முழுமையாக வெளியேறவில்லையோ என்ற உணர்வை ஏற்படுகிறது. இது மலச்சிக்கல், செரிமான அசௌகரியத்துடன் தொடர்புடையது. இந்த உணர்வு மேற்கத்திய கழிவறைகளைப் பயன்படுத்தியவர்களிடம் அதிகம் தென்பட்டது," என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், இத்தகைய அசௌகரியங்களைச் சமாளிக்க "கால்களுக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது ஓரளவு உதவுவதாக" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

"கால்களை ஒரு சிறிய ஸ்டூலில் வைத்து உயரப்படுத்திக் கொள்வது, மலக்குடல்வாய் கோணத்தை மேம்படுத்துகிறது. இதனால், மேற்கத்திய பாணியில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.

கழிவறைகளும் வாழ்க்கை முறை மாற்றங்களும்

இந்தியாவில் குந்துதல் நிலையிலான கழிவறை பயன்பாட்டு முறையில் இருந்து நாற்காலி வடிவ கழிவறை முறைக்கு நிகழ்ந்த மாற்றம், உலகமயமாக்கப்பட்ட அழகியல் வடிவமைப்புகளுடன் தொடர்புடையது.

கடந்த சில ஆண்டுகளாக நாற்காலி வடிவ கழிவறைகளே, பெரும்பாலான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்களில் பொருத்தப்படுகின்றன.

மலச்சிக்கல், வீக்கம், மூல நோய் போன்ற பாதிப்புகள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, அதற்கும் இதற்கும் இடையே தொடர்பு இருக்கக்கூடுமா என்று மருத்துவர் கயல்விழியிடம் கேட்டபோது, "கழிவறை வடிவங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரது உடல் பாதிப்புகளை முடிவு செய்துவிட முடியாது. உணவுமுறை, வழக்கமாக உட்காரும் முறை, மன அழுத்தம் எனப் பலவும் அதற்குப் பங்கு வகிக்கிறது," என்று கூறினார்.

இந்தியாவில் தற்போது இருவிதமான கழிவறை முறைகளும் பழக்கத்தில் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், "குடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகுவது போன்ற பழக்கங்களை முறையாகப் பின்பற்றினால், எப்படிப்பட்ட கழிவறையைப் பயன்படுத்தினாலும் சரி, மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதில் எந்த இடையூறும் இருக்காது," என்றும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdegey9p07eo

இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

1 month ago

இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • அலெக்ஸ் டெய்லர்

  • பிபிசி செய்தியாளர்

  • 5 டிசம்பர் 2025, 01:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும்.

பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா?

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார்.

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

எந்த மருந்து?

பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம்.

இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.

ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.

மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார்.

மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது.

தண்ணீரின் முக்கியத்துவம்

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம்.

இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம்.

இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார்.

உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை.

மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது.

அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது.

அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.

தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா?

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும்.

சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார்.

இருமல் வெளியேறட்டும்

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது.

இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும்.

"வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும்.

நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்".

பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo

மனித மூளை அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள்

1 month 1 week ago

மூளை எந்த வயதில் மிக இளமையாக இருக்கும்? அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள்

மனநலக் கோளாறுகள் மற்றும் டிமென்ஷியாவின் ஆபத்து வாழ்நாள் முழுவதும் ஏன் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

படக்குறிப்பு, மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அந்த காலகட்டத்தில்தான் மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லேகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • X,@JamesTGallagher

  • 27 நவம்பர் 2025, 01:43 GMT

மனித மூளை வாழ்க்கையில் ஐந்து தனித்துவமான கட்டங்களை கடக்கிறது. இதில் 9, 32, 66 மற்றும் 83 வயதில் முக்கியமான மாற்றங்கள் நடக்கின்றன எனக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

90 வயது வரையிலான சுமார் 4,000 பேரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் மூளைச் செல்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அக்காலகட்டத்தில், மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனநலக் கோளாறுகளும், டிமென்ஷியாவும் (நினைவாற்றல்) ஏற்படக்கூடிய ஆபத்து வாழ்நாள் முழுவதும் ஏன் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்த முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

புதிய அறிவு மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப, மூளை எப்போதும் மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது.

படக்குறிப்பு, மூளை வளர்ச்சியில் ஐந்து வெவ்வேறு நிலைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

புதிய அறிவு மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப, மூளை தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

ஆனால் இந்த மாற்றம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே மாதிரி, சீரான முறையில் நடைபெறுவது இல்லை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

மனித மூளை 5 கட்டங்களை கடக்கிறது. அவை,

  • குழந்தைப் பருவம் - பிறப்பு முதல் ஒன்பது வயது வரை

  • இளமைப் பருவம் - ஒன்பது முதல் 32 வயது வரை

  • முதிர்வயது - 32 முதல் 66 வயது வரை

  • முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - 66 முதல் 83 வயது வரை

  • முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - 83 வயது முதல்

"மூளை வாழ்நாள் முழுவதும் தனது இணைப்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும். சில இணைப்புகளை வலுப்படுத்தும், சிலவற்றை பலவீனப்படுத்தும். இது ஒரே மாதிரியான, நிலையான முறை அல்ல. இடையிடையே மாற்றங்களும், புதிய கட்டங்களும் ஏற்படுகின்றன" என்று பிபிசியிடம் மருத்துவர் அலெக்சா மௌஸ்லி கூறினார்.

சிலருக்கு இந்த கட்டங்கள் வேகமாகவும், சிலருக்கு தாமதமாகவும் ஏற்படலாம். ஆனால் மாற்றம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட வயது தரவுகளில் எவ்வளவு தெளிவாகத் தனித்து நின்றது என்பது ஆச்சரியமாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட மூளை ஸ்கேன்களின் எண்ணிக்கை காரணமாக, இவை இப்போது தான் வெளிப்பட்டுள்ளன.

இது ஒரே மாதிரியான நிலையான முறை அல்ல. இடையிடையே மாற்றங்களும், புதிய கட்டங்களும் ஏற்படுகின்றன"என்று டாக்டர் அலெக்சா மௌஸ்லி பிபிசியிடம் கூறினார்.

படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முப்பதுகளின் ஆரம்பம் வரை மூளை இளமைப் பருவத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மூளையின் ஐந்து கட்டங்கள்

குழந்தைப் பருவம் – இந்த முதல் காலத்தில், மூளை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும். அதே சமயம், வாழ்க்கையின் தொடக்கத்தில் உருவான மூளைச் செல்களுக்கு இடையேயான அதிகப்படியான இணைப்புகள் (சினாப்சஸ்) மெலிந்துகொண்டிருக்கும்.

இந்தக் கட்டத்தில் மூளையின் செயல்திறன் குறைவாக இருக்கும். அது, A-விலிருந்து B-க்கு நேராகச் செல்லாமல், பூங்காவில் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஒரு குழந்தை போல, தன்னிச்சையாக விருப்பமான இடங்களுக்கு செல்வது போல செயல்படுகிறது.

இந்தக் கட்டத்தில் மூளையின் செயல்திறன் குறைவாக இருக்கும். அது, A-விலிருந்து B-க்கு நேராகச் செல்லாமல், பூங்காவில் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஒரு குழந்தை போல, தன்னிச்சையாக விருப்பமான இடங்களுக்கு செல்வது போல செயல்படுகிறது.

படக்குறிப்பு, குழந்தை பருவத்தில் மூளை அதன் விரைவான மாற்றங்களுக்கு உட்படுகிறது

இளமைப் பருவம் – ஒன்பது வயதிலிருந்து மூளையின் இணைப்புகள் திடீரென மாறி, மிக வலிமையான செயல்திறன் கொண்ட ஒரு கட்டத்தை அடைகின்றன. "இது ஒரு பெரிய மாற்றம்," என்று மூளை கட்டங்களுக்கு இடையிலான ஆழமான மாற்றத்தை மருத்துவர் மௌஸ்லி விவரித்து கூறுகிறார்.

இந்தக் காலத்தில் மனநலக் கோளாறுகள் தொடங்கும் ஆபத்து அதிகமாக இருக்கும்.

பருவமடைதல் தொடங்கும் நேரத்தில் இளமைப் பருவம் ஆரம்பிப்பது அசாதாரணமான விஷயமல்ல.

ஆனால், இது நாம் நினைத்ததை விட மிகவும் நீண்டகாலமெடுத்து முடிகிறது என்பதைக் காட்டும் புதிய ஆதாரமாக இந்த ஆய்வு அமைகிறது.

முன்பு, இளமைப் பருவம் பதின் பருவ வயதுக்குள்ளேயே முடிவடைகிறது என்று கருதப்பட்டது.

பின்னர், நரம்பியல் ஆய்வுகள் அது 20வயதுக்குப் பிறகும் தொடரும் என்று குறிப்பிட்டன. இப்போது, வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வு முடிவுகள் இளமைக்காலம் 30 வயதின் தொடக்கம் வரை நீடிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

மூளை நியூரான்களின் வலையமைப்பு மிகவும் திறமையானவையாக மாறும் ஒரே காலம் இதுதான். முப்பது வயதின் தொடக்கத்தில் மூளையின் செயல்பாடு உச்சத்தை அடைகிறது என்பதை பல அளவீடுகள் காட்டுகின்றன என்று மருத்துவர் மௌஸ்லி கூறினார்.

ஆனால், ஒன்பது வயது முதல் 32 வயது வரை மூளை அதே கட்டத்தில் இருப்பது "மிகவும் ஆர்வமூட்டக்கூடியது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது நம்மில் பலர் நேரில் கண்ட அல்லது அனுபவித்த நுண்ணறிவு மற்றும் ஆளுமையின் சமநிலை நிலையுடன்  (plateau) ஒத்துப்போகிறது," என்று மருத்துவர் மௌஸ்லி விளக்குகிறார்.

படக்குறிப்பு, மனநலக் கோளாறுகள் மற்றும் டிமென்ஷியாவின் ஆபத்து ஏன் வாழ்நாள் முழுவதும் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள அதன் முடிவுகள் நமக்கு உதவும் என்று ஆய்வுக் குழு கூறுகிறது

முதிர் பருவம் – அடுத்து மூளை அதன் மிக நீண்ட கால கட்டத்தில் நுழைகிறது. இது முப்பது ஆண்டுகள் நீடிக்கும் நிலைத்தன்மை கொண்ட காலமாகும்.

முன்பு இருந்த வேகமான மாற்றங்களுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் ஏற்படும் மாற்றம் மெதுவாக இருக்கும். ஆனால் இங்கே, மூளையின் செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தலைகீழாக மாறத் தொடங்குகின்றன.

"இது நம்மில் பலர் நேரில் கண்ட அல்லது அனுபவித்த நுண்ணறிவு மற்றும் ஆளுமையின் சமநிலை நிலையுடன் (plateau) ஒத்துப்போகிறது," என்று மருத்துவர் மௌஸ்லி விளக்குகிறார்.

முழு மூளையாக ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, அந்த உறுப்பு படிப்படியாக ஒன்றிணைந்து செயல்படும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

படக்குறிப்பு, முதிர்வயது என்பது மூளையின் வளர்ச்சியின் மிக நீண்ட காலம் என்றும், அது மிகக் குறைந்த மாற்றத்திற்கு உள்ளாகும் என்றும் ஆய்வுக் குழு கூறுகிறது

முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - இது 66 வயதில் தொடங்குகிறது, ஆனால் இது திடீர் மற்றும் உடனடி வீழ்ச்சி அல்ல. மாறாக, இந்த நேரத்தில் மூளையில் உள்ள இணைப்புகளின் வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

முழு மூளையாக ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, மூளை படிப்படியாக ஒன்றிணைந்து செயல்படும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது, இசைக்குழு உறுப்பினர்கள் தனி நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போல இது செயல்படுகிறது.

மூளையின் நலனை பாதிக்கும் டிமென்ஷியா மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இந்த வயதில் தான் வெளிப்படத் தொடங்குகின்றன.

முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - பின்னர், 83 வயதில், நாம் இறுதி கட்டத்திற்குள் நுழைகிறோம். ஸ்கேன் செய்வதற்காக ஆரோக்கியமான மூளைகளை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்ததால், மற்ற குழுக்களை விட குறைவான தரவுகளே இதில் கிடைத்துள்ளன. இந்த சமயத்தில், மூளையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு முந்தைய கட்டத்தைப் போலவே தோன்றுகின்றன, ஆனால் இன்னும் அதிகமாக வெளிப்படுகின்றன.

பருவமடைதல், பிற்காலத்தில் ஏற்படும் உடல்நல சிக்கல்கள் மற்றும் 30 வயதுகளின் தொடக்கத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்வது போன்ற "பல முக்கியமான மைல்கல்களுடன் வெவ்வேறு 'வயதுகள்' எவ்வளவு நன்றாக பொருந்துகின்றன" என்பது தன்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதாக மருத்துவர் மௌஸ்லி தெரிவித்தார்.

இந்த ஆய்வு ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பார்க்கவில்லை, ஆனால் மாதவிடாய் நிறுத்தம் (menopause) எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற கேள்விகள் எழ வாய்ப்புள்ளது.

படக்குறிப்பு, விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, முதுமையின் பிந்தைய கட்டம் 83 வயதில் தொடங்குகிறது.

'மிக அருமையான ஆய்வு '

இந்த ஆய்வு ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பார்க்கவில்லை, அதனால் மாதவிடாய் நிறுத்தம் (menopause) எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற கேள்விகள் எழ வாய்ப்புள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் தகவலியல் பேராசிரியரான டங்கன் ஆஸ்டில் இதுகுறித்துப் பேசுகையில், " பல்வேறு நரம்பியல் வளர்ச்சி நிலைகள், மனநலம் மற்றும் நரம்பியல் நிலைகள் மூளை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதோடு இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், மூளை இணைப்புகளில் உள்ள வேறுபாடுகள் கவனம், மொழி, நினைவு மற்றும் பல்வேறு நடத்தைகளில் ஏற்படும் சிரமங்களை முன்னறிவிக்கின்றன"என்றார்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் டிஸ்கவரி பிரெயின் சயின்ஸ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் தாரா ஸ்பைர்ஸ்-ஜோன்ஸ் இதுகுறித்துப் பேசுகையில், " வாழ்நாளில் நமது மூளை எவ்வளவு மாறுகிறது என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் அருமையான ஆய்வு இது"என்கிறார்.

மூளை வயதாவதைப் பற்றிய நமது புரிதலுடன் இந்த முடிவுகள் "நன்றாகப் பொருந்துகின்றன" என்று கூறிய அவர், ஆனால் "அனைவரும் ஒரே வயதில் இந்த மாற்றங்களை சரியாக எதிர்கொள்ள மாட்டார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgd12m1wnno

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

1 month 2 weeks ago

நண்பர்களே,

2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை.

அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை.

பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன்.

நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும்.

நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன.

வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது.

தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார்.

தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.

Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும்.

மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன.

இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன்.

என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும்.

2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம்.

நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு.

பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது.

இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு.

ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா?

ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி.

யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள்.

• US: nmdp.org

• Australia: stemcelldonors.org.au

• Canada: blood.ca/en/stemcells

• UK: blood.co.uk/stem-cell-donor-registry/

• France: dondemoelleosseuse.fr

• Germany: dkms.de

• Sri Lanka: praana.lk

• India: datri.org

இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது.

:J, Australia.

நீங்கள் 70 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 30 வயதுகளில் செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள் என்ன?

1 month 2 weeks ago

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • டேவிட் காக்ஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி முதல், தினசரி முறையான தூக்கம் வரை - உங்கள் 30களில் சில பழக்கங்களைப் பின்பற்றுவது 70கள் வரை கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உங்கள் வாழ்க்கையில் எழுபதுகளை அடையும் போது, இளமைப் பருவத்துடன் ஒப்பிடுகையில், சற்றே பலவீனமாகவும், சோர்வாகவும், அறிவாற்றல் ரீதியாக பின்னடைவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

உங்களது தூக்கம் சார்ந்த வழக்கங்கள் மாறியிருக்கலாம், இதனால் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பீர்கள், மாலையில் தூக்க கலக்கத்தை அதிகமாக உணருவீர்கள். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மக்கள்தொகை சராசரிகளின் அடிப்படையில், உங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள்பட்ட நோயாவது இருக்கலாம்.

இருப்பினும், இது தவிர்க்க முடியாதது அல்ல என்பதில் ஆராய்ச்சியாளர்கள் முன்னெப்போதையும் விட உறுதியாக உள்ளனர்.

"இப்போது நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், 90 அல்லது 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்," என்று கலிஃபோர்னியாவில் உள்ள 'பக் இன்ஸ்டிட்யூட் ஃபார் ரிசர்ச் ஆன் ஏஜிங்கின்' தலைவரும் தலைமை நிர்வாகியுமான எரிக் வெர்டின் கூறுகிறார்.

"ஆனால், பெரும்பாலான மக்கள் 65 அல்லது 70 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, முதுமையின் அனைத்து சிரமங்களையும் அனுபவிக்கும் நிலை தற்போது உள்ளது, அதனுடன் ஒப்பிடுகையில் இந்த விஷயத்தில் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்".

மாற்றங்களை விரைவாகத் தொடங்குவது நல்லது

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உடற்பயிற்சியை அதிகரிப்பது, நல்ல உணவுப் பழக்கம் கொண்டிருப்பது, மது அருந்துவதைக் குறைப்பது போன்ற நன்மை பயக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் எந்த வயதிலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று வெர்டின் கூறினாலும், அத்தகைய மாற்றத்தை விரைவாகத் தொடங்கினால் இன்னும் அதிக பலன்களைப் பெறலாம்.

முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக உங்கள் 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தசை நிறை மற்றும் வலிமை, எலும்பு அடர்த்தி அல்லது வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறை போன்ற பல உடலியல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்.

"இந்த காலகட்டத்தில் நீண்டகால மீள்தன்மையை வளர்க்கும் நடத்தைகளை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது" என்கிறார் அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 'மாயோ கிளினிக்கின்' கோகோட் மையத்தின் உடலியல் துறை பேராசிரியர் ஜுவோன் பாசோஸ்.

இதில் என்னென்ன சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள, முதுமை தொடர்பான செயல்முறையை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், வழக்கமான போக்குகளைப் பின்பற்றாத மக்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறார்கள். ஒரு உதாரணம், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது பிற விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் 35 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள். அவர்களில் பலர் தங்களது 60கள் அல்லது அதற்குப் பிறகும் இதைத் தொடர்கிறார்கள்.

மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான மூத்த விரிவுரையாளர் பால் மோர்கன், "இந்த விளையாட்டு வீரர்களில் பலர், முதுமையடைவது தொடர்பான விஷயத்தில், மற்றவர்களை விட மிகவும் மாறுபட்ட முறையைக் கொண்டுள்ளனர். இந்த முறை, இருதய செயல்பாடு மற்றும் தசை வலிமை மற்றும் செயல்பாட்டில் அதிக உச்சநிலையைத் தொடர்ந்து, தாமதமாக ஏற்படும் ஒரு வீழ்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது." என்கிறார்.

இதன் விளைவாக, அவர்களில் பலர் முதுமை வாழ்க்கையில் இயக்கம் மற்றும் சுதந்திரத்தை இழப்பதை நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடிகிறது என்று அவர் கூறுகிறார்.

"வாழ்க்கையின் நடுப்பகுதிகளில், ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும் இந்த கூடுதல் சக்தி அவர்களிடம் உள்ளது" என்று மோர்கன் கூறுகிறார்.

இது நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. மோர்கனின் கூற்றுப்படி, ஆரோக்கியமான முறையில் முதுமையடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, நமது 30களில், குறிப்பாக தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் ஏரோபிக் திறன் (செயல்பாட்டின் போது உங்கள் உடல் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச ஆக்ஸிஜன் அளவு) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகபட்ச அளவை அடைய முயற்சிக்க வேண்டும்.

விளையாட்டு ஒரு சிறந்த வழி

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று தடுமாறி விழுவது. இது சுறுசுறுப்பு குறைவு மற்றும் மூட்டுகளில் இயக்கம் குறைவால் ஏற்படுகிறது. 'நடப்பதற்கு உதவும் உடலின் கீழ் அங்கங்களில் உள்ள தசைக் குழுக்கள் சுயமாக வாழ்வதற்கும், முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கும் முக்கியம். அதனால் அவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்" என்று மோர்கன் கூறுகிறார்.

இதை அடைவதற்கு விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். டென்னிஸ் அல்லது பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பதற்கும், நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

அதே சமயம், 2025ஆம் ஆண்டு ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது, அதன்படி தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் முதியவர்களுக்கு நீண்டகால பராமரிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு அல்லது முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

வாரத்திற்கு 75 நிமிடங்களுக்கு மேல் ஓடுவது முதுமை செயல்முறையின் சில அம்சங்களின் மீது தாக்கம் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் உடலை உழைப்பின் உச்சநிலைக்குத் தள்ளுவது உண்மையில் முதுமையின் சில அம்சங்களை துரிதப்படுத்தக்கூடும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன, ஆனால் இது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.

மறுபுறம், ஒரு ஆய்வு தினமும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது மூளைக்கு வயதாவதை குறைக்க உதவும் என்று கூறுகிறது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவிப் பேராசிரியரான அதிதி குர்கரின் கூற்றுப்படி, "ஒப்பீட்டளவில் எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் அனைவரும் ஆரோக்கியமாக முதுமையடைவதன் நன்மைகளைப் பெறலாம். சாப்பாட்டுக்குப் பிறகு 15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்".

30களில் நமது தசைகள் மற்றும் இருதய அமைப்பைப் பாதுகாத்து வலுப்படுத்துவது போல, நமது மூளைக்கும் அதையே செய்ய முடியும். வழக்கமான பரிசோதனைகள், முறையாக பல் துலக்குதல், புகைபிடிக்காமல் இருப்பது மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல் மூலம் நல்ல பல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஆச்சரியமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஈறுகளில் ஏற்படும் அழற்சி அதிகரிப்பால் உருவாகும் 'பீரியோடொண்டல் நோய்' என்ற ஈறு நோய்க்கு, வாழ்க்கையின் பிற்பகுதியில் அறிவாற்றல் குறைவதற்கான அபாயத்துடன் தொடர்புள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மூளையில் நீண்டகால அழற்சியின் தாக்கத்தால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.

தூக்கத்தின் முக்கியத்துவம்

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குகிறது.

30களில் இருந்தே மது அருந்துவதைக் குறைக்கத் தொடங்குவதும் சாத்தியமாகும். மது அருந்துவது உடலில் மரபணு வெளிப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது, இது முதுமையடைவதை துரிதப்படுத்துகிறது. மதுவும் தூக்கத்திற்கு ஒரு முக்கிய இடையூறாகும். வரவிருக்கும் காலங்களில் வயது தொடர்பான மூளைச் சுருக்கத்தைத் தவிர்ப்பதற்கும் டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பதற்கும் நிலையான தூக்க முறைகள் முக்கியமாக இருப்பதாக வெர்டின் கூறுகிறார்.

இதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று எழுந்திருப்பதை உறுதிசெய்வதும் அடங்கும், இது தூக்க ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், மனித உடல் செல் மீளுருவாக்கத்தில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

"ஒரு இரவு தூக்கம் இல்லாவிட்டாலும், உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறை மாறுகிறது, மேலும் உங்கள் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் என்ற உங்கள் மன உறுதியும் போய்விடும்" என்று அவர் கூறுகிறார்.

வழக்கமான தூக்க முறையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தின் காரணமாக, வெர்டின் இப்போது ஒவ்வொரு இரவும் அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், ஆனால் தூக்கத்திலிருந்து எழுவதற்கு அல்ல, மாறாக தூங்கச் செல்ல நினைவூட்டுவதற்காக.

"இதற்குக் காரணம், நாம் சர்க்காடியன் உயிரினங்கள்," என்று அவர் கூறுகிறார்.

"மரபணு வெளிப்பாடு முதல் வளர்சிதை மாற்றம் வரை நமது முழு உயிரியலும் 24 மணி நேர சுழற்சியுடன் ஒத்திசைவில் உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது உங்கள் உடல் இவை அனைத்திற்கும் மிகவும் ஒத்திசைவாக இருக்க உதவுகிறது."

இருப்பினும், ஒரு நல்ல இரவு தூக்கம் எப்போதும் சாத்தியமில்லை என்பது இளம் குழந்தைகளை வளர்க்கும், 30களில் இருக்கும் பெற்றோருக்கு தெரியும்.

'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது'

இறுதியாக, உங்கள் 30கள் என்பது ஊட்டச்சத்தை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கான ஒரு உகந்த நேரமாக இருக்கலாம். நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, பகலில் உணவு சாப்பிடாமல் இருக்கும் நேரத்தை அதிகமாக உடலுக்கு கொடுப்பது. உதாரணமாக, 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) மூலம் இதைச் செய்யலாம்.

'இடைநிலை உண்ணாவிரதத்தை' ஆதரிப்பவர்கள் பலர் 16:8 பிரிவை பரிந்துரைக்கின்றனர், அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணவை எட்டு மணி நேரம் என்ற வரம்புக்குள் சுருக்குவது.

ஆனால், எளிதாக நிர்வகிக்கக்கூடிய 12:12 பிரிவின் மூலம் நாம் ஏராளமான நன்மைகளை அடைய முடியும் என வெர்டின் கூறுகிறார்.

"நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. நான் மக்களிடம் சொல்வது, நீங்கள் சாப்பிடும்போது, ஒன்றைக் கட்டமைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, உடலைச் சரிசெய்கிறீர்கள்."

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதிக அளவு உணவு கரோட்டினாய்டுகளை (Carotenoids - சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளிலும், மாம்பழம் மற்றும் அப்ரிகாட் போன்ற பழங்களிலும் காணப்படும் தாவர ரசாயனங்கள்) உட்கொள்பவர்கள் மெதுவாக முதுமையடைகிறார்கள் என்ற தனது ஆய்வு முடிவு மற்றும் பிற ஆய்வுகளை மேற்கோள் காட்டும் குர்கர், 'ஏனெனில் இந்த ரசாயனங்கள் நமது செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் எனப்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதில் பங்கு வகிக்கக்கூடும்' என்கிறார்.

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

ஒட்டுமொத்தமாக, 30களில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் முதுமையை பாதிக்கின்றன என்பதை பாசோஸ் உறுதியாக நம்புகிறார். பல தசாப்தங்களாக அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்காணித்து வரும் பெரிய ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக, ஃப்ரேமிங்ஹாம் இதய ஆய்வு மற்றும் செவிலியர் சுகாதார ஆய்வு போன்றவை, நடுத்தர வயதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் மக்கள், பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட இருதய நோய், அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் பலவீனம் ஆகியவற்றின் அபாயங்களைக் குறைவாகக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

"30களில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், காலப்போக்கில் குவிந்து, 70களில் செயல்பாட்டு வீழ்ச்சிக்கு பங்களிக்கும் நுட்பமான மூலக்கூறு மற்றும் செல்லுலார் மாற்றங்களைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்," என்கிறார் பாசோஸ். "இதைச் செய்வதன் மூலம் முதுமையைத் தடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை என்றாலும், அதன் பாதையை நிச்சயமாக மாற்ற முடியும்."

30களில் நல்ல ஆரோக்கியத்தோடு தான் நாம் இருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் முதுமை இறுதியில் நம் அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் அதிகப்படியான மதுவைத் தவிர்த்து, உங்கள் பிற்கால வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்து, வழக்கமான தூக்க முறையைக் கடைபிடித்து, தொடர்ந்து சாப்பிடுவதிலிருந்து உங்கள் உடலுக்கு அதிக இடைவெளிகளைக் கொடுத்தால், வருங்காலங்களில் உங்கள் இதயம், தசைகள், மூட்டுகள் மற்றும் மூளை என அனைத்தும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0l7lj2pz0do

தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா? மலச்சிக்கலுக்கான காரணங்களும் தீர்வும்

1 month 2 weeks ago

உலக கழிவறை தினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

19 நவம்பர் 2025, 01:45 GMT

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலக கழிவறை தினம் கடைபிடிக்கப்படுறது.

ஐ.நாவால் 2013-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மையக்கருவாக 'மாறி வரும் உலகில் தூய்மை' (Sanitation in a changing world) உள்ளது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது சுமார் 340 கோடி பேர் சரியான சுகாதார வசதியற்ற சூழலில் வாழ்வதாக ஐநா கூறுகிறது.

கழிவறை வசதி இல்லாமல் இருப்பது, தூய்மையான கழிவறைகள் இல்லாததால் மலம் கழிப்பதை தவிர்ப்பது அல்லது தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னையை பலரும் எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலச்சிக்கல் ஏற்படுத்தும் காரணிகள் அதனால் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த மூத்த இரைப்பை குடல் மருத்துவரான கயல்விழி ஜெயராமனிடம் பிபிசி தமிழ் பேசியது.

மலச்சிக்கல் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாகக் கூறுகிறார் கயல்விழி ஜெயராமன். பெரும்பாலும் தினசரி பழக்க வழக்கங்களால் தான் மலச்சிக்கல், சீரற்ற குடல் இயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தினசரி மலம் கழிப்பதன் அவசியம், மலச்சிக்கல் பிரச்னைக்கான காரணிகள், தீர்வுகள் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா?

உலக கழிவறை தினம், குடல் இயக்கம், மலச்சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக குடல் இயக்கம் பற்றி தவறான புரிதல்கள் உள்ளன. தினசரி காலை மலம் கழித்தே ஆக வேண்டும் எனக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அது அறிவியல் ரீதியாக சரியானது கிடையாது. ஒவ்வோர் உணவுக்குப் பிறகும் 20 நிமிடங்கள் கழித்து அதற்கான உணர்வுகள் ஏற்படும். பெரும்பாலும் அத்தகைய உணர்வு ஏற்படுகிற போது அடக்கி வைப்பதுதான் மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிற போதே கழிவறைக்குச் செல்ல வேண்டும். அதனை புறக்கணிக்கக் கூடாது. ஆனால் பயணங்களில் இருப்பவர்கள், வெளி வேலைக்குச் செல்பவர்கள், பணியிடங்களில் முறையான கழிவறை வசதி இல்லாதவர்கள், வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்கள் அவ்வாறு செய்ய முடியாமல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தூய்மையான சூழல் இல்லாதபோது மக்கள் அதனை தள்ளிப்போடுவது இயற்கையான சுழற்சியை பாதிக்கிறது. பெரும்பாலானோர் வீட்டுக்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம், அல்லது இரவு பார்த்துக் கொள்ளலாம் எனத் தவிர்க்கின்றனர். ஆனால் இது செரிமான அமைப்பை பாதிக்கும். மலம் கழிப்பதை முடிந்தவரை தவிர்க்கக் கூடாது. மலச்சிக்கலுடன் ஒப்பிடுகையில் சுகாதாரமற்ற கழிவறை பயன்படுத்துவதால் ஏற்படும் தொற்று பாதிப்பு என்பது மிக மிகக் குறைவு.

யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது?

உலக கழிவறை தினம், குடல் இயக்கம், மலச்சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

மலச்சிக்கல் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் வந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு கழிவறை மற்றும் மலம் கழிக்கும் வழக்கத்தை முறையாக பின்பற்றுவது குறித்து சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். வேலை நேரம் மாறுவது, வாழ்க்கை முறை மாறுவது, சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்றவை மலச்சிக்கலை அதிகப்படுத்துகின்றன.

நீண்ட கால பாதிப்பு இருப்பவர்கள் அதனை புறக்கணிக்கக்கூடாது. மலச்சிக்கல் தொடர்வதால் மூல நோய், ரத்தக்கசிவு, வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உணவுப் பழக்கம் காரணமா?

மாமிசம் போன்ற அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் சாப்பிடுகிறபோது மலச்சிக்கல் ஏற்படும். இருப்பினும் அது அச்சப்பட வேண்டிய விஷயம் இல்லை. அத்தகைய சூழலில் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்னையை தீர்ப்பதற்கான சில வழிகள்.

  • தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

  • 20 - 25 கிராம் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்

  • அதிக புரதச்சத்துள்ள உணவு சாப்பிடும் போது அதற்கு நிகராக நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதாகக் கூறும் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "மலச்சிக்கல் வருவதால் மட்டும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதைப்பற்றி கூடுதல் விழிப்புணர்வு தேவை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn4jed1p8mmo

தைராய்டு புற்றுநோய் விகிதம் மற்ற புற்றுநோய்களை விட வேகமாக அதிகரிப்பது ஏன்?

1 month 3 weeks ago

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

  • 17 நவம்பர் 2025, 02:14 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன - மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்?

தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுவது இதன் வேலை. தைராய்டு சுரப்பியின் உள்ளே உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரவும் பிரியவும் தொடங்கி, ஒரு கட்டியை உருவாக்கும்போது தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தச் சிதைந்த செல்கள் சுற்றியுள்ள திசுக்களை ஆக்கிரமித்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

பெரும்பாலான தைராய்டு புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவை என்றாலும், இந்த நோயின் விகிதங்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்துச் சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் புற்றுநோய் பற்றி தெரிவிக்கும் அமைப்பான 'கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகள்' (Surveillance, Epidemiology, and End Results - Seer) தரவுத்தளத்தின்படி, அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோயின் நிகழ்வு விகிதம் 1980 மற்றும் 2016 க்கு இடையில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது ஆண்களில் 1 லட்சம் பேரில் 2.39 லிருந்து 7.54 பேருக்கும், பெண்களில் 1 லட்சம் பேரில் 6.15 லிருந்து 21.28 பேருக்கும் உயர்ந்துள்ளது.

"மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், காலப்போக்கில் அதிகரித்து வரும் சில புற்றுநோய்களில் தைராய்டு புற்றுநோயும் ஒன்றாகும்," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCSF) உட்சுரப்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சான்சியானா ரோமன் கூறுகிறார்.

அப்படியானால், இந்த பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணியில் என்ன இருக்கிறது?

குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு (ionising radiation) ஆளாவது தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நீண்ட காலமாக அறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் செர்னோபில் அணு விபத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில், பெலாரஸ், யுக்ரேன் மற்றும் ரஷ்யாவில் குழந்தைகளிடையே இந்த நோயின் விகிதங்கள் வேகமாக உயர்ந்தன. ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களில், 1958 முதல் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 36% பேருக்கு குழந்தைப் பருவத்தில் கதிர்வீச்சுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், தைராய்டு புற்றுநோய் எண்கள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும் இத்தகைய உயர்வை விளக்கக்கூடிய வகையில் 80கள் அல்லது 90களில் அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணுசக்திப் பேரழிவுகள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் நிபுணர்கள் குழப்பமடைந்தனர், இருப்பினும் இறுதியில் ஒரு விளக்கம் முன்வைக்கப்பட்டது - நோயறிதல் மேம்பட்டதுதான் இதற்குக் காரணமா?

1980களில், மருத்துவர்கள் முதன்முறையாக தைராய்டு அல்ட்ராசோனோகிராபியைப் (thyroid ultrasonography) பயன்படுத்தத் தொடங்கினர். இது ஒலி அலைகளைப் பயன்படுத்தி தைராய்டு சுரப்பியின் படங்களை உருவாக்கும் ஒரு இமேஜிங் நுட்பமாகும். முன்பு கண்டறிய முடியாத மிகச் சிறிய தைராய்டு புற்றுநோய்களை மருத்துவர்கள் கண்டறிய இந்த முறை உதவியது.

பின்னர் 1990களில், சந்தேகத்திற்கிடமான கட்டிகள் புற்றுநோயா என கண்டறிய மருத்துவர்கள் அந்த கட்டியிலிருந்து செல்களைச் சேகரிக்க தொடங்கினர். இது நுண் ஊசி ஆஸ்பிரேஷன் பயாப்ஸி (fine needle aspiration biopsy) என்று அழைக்கப்படும் நுட்பமாகும்.

"முன்பு, மருத்துவர்கள் கட்டிகளைத் கண்டறிய தைராய்டு சுரப்பியைத் தொட்டுப் பார்ப்பார்கள்," என்று அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் காரி கிடாஹாரா கூறுகிறார்.

"ஆனால் அல்ட்ராசோனோகிராபி போன்ற நுட்பங்கள் மூலம், மருத்துவர்களால் சிறிய அளவிலான முடிச்சுகளைக் கண்டறிந்து, பின்னர் அவற்றிலிருந்து பயாப்ஸி எடுக்க முடிந்தது. இது சிறிய அளவிலான பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிய வழிவகுத்தது, அவை முன்பு (உடலைத் தொட்டுச் சோதிக்கும் முறையால்) உணரப்படாது."

மற்ற ஆதாரங்களும் இந்த அதிகப்படியான நோயறிதல் (over-diagnosis) கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளன. உதாரணமாக, தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அதிகமானாலும், தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் நிலையாக இருப்பது போல் தோன்றியது. இதற்கிடையில், தென் கொரியாவில் தேசிய தைராய்டு புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாதிப்பு அதிகமாக இருந்தது. திட்டம் குறைக்கப்பட்டபோது விகிதங்களும் மீண்டும் சரிந்தன.

கிடாஹாரா, "ஒட்டுமொத்தமாக இந்த மாதிரிகள் அதிகப்படியான நோயறிதலுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, கண்டறியப்படாமல் விடப்பட்டிருந்தால், அந்த நபர்களுக்கு அறிகுறிகளையோ அல்லது மரணத்தையோ ஒருபோதும் ஏற்படுத்தாத நோயை அதிகமாகக் கண்டறிதல் ஆகும்," என்று கூறுகிறார்.

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுசக்திப் பேரழிவுக்குப் பிறகு யுக்ரேன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளிடையே தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் கடுமையாக அதிகரித்தன.

சிறிய பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்கள் பொதுவாக வளரும் மற்றும் சிகிச்சைக்கு நன்றாக குணமாகும் என்று இப்போது நமக்குத் தெரியும். இவை அரிதாகவே அபாயகரமானவையாக இருக்கின்றன. மேலும், இதை முன்பே கணிக்கவும் முடியும். ஆனால் அந்தக் காலத்தில், இந்தப் புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிவது பலருக்குத் தேவையற்ற மருத்துவச் சிகிச்சைகளுக்கு வழிவகுத்தது. இதில் தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவது, அதைத் தொடர்ந்து எஞ்சிய செல்களை அகற்ற கதிரியக்க அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும். அறுவைசிகிச்சை சில சமயங்களில் குரல் நாண் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் கதிரியக்க அயோடின் சிகிச்சையும் இரண்டாம் நிலை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

இதன் விளைவாக, அமெரிக்காவில் இப்போது வெகு தீவிர புற்றுநோய்களுக்கு மட்டுமே கதிரியக்க அயோடின் பயன்படுத்தப்படுவதுடன், பக்க விளைவுகளின் அபாயத்தைக் குறைக்க மருந்தின் அளவுகள் குறைக்கப்படுகின்றன. தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவதற்குப் பதிலாக, மருத்துவர்கள் பெரும்பாலும் அதை பகுதியளவு அகற்றுகிறார்கள் அல்லது 'கண்காணிப்பு' அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

இதன் விளைவாக, கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் இப்போது நிலையானதாகிவிட்டன என்று கூறுகின்றன. உதாரணமாக, 2010 இல் 1 லட்சம் பேருக்குச் சராசரியாக 13.9 புதிய பாதிப்புகள் இருந்தன, அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள் கிடைத்த கடைசி ஆண்டான 2022 இல் 1 லட்சம் பேரில் 14.1 பாதிப்புகள் இருந்தன.

இருப்பினும், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே பாதிப்பு விகிதம் அதிகரிப்புக்கு முழுமையாக விளக்கமாக இருக்கமுடியாது என்று சில விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக வாதிடுகின்றனர்.

இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக்கழகத்தின் உட்சுரப்பியல் துறைப் பேராசிரியரான ரிக்கார்டோ விக்னேரி ஒரு ஆய்வில், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே இந்த உயர்வுக்குக் காரணமாக இருந்தால், சிறந்த நோயறிதல் நடைமுறைகளைக் கொண்ட உயர் வருமான நாடுகளில் மட்டுமே தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று வாதிடுகிறார். இருப்பினும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அது உண்மையல்ல என்கிறார் அவர்.

"வலுவான பரிசோதனை இல்லாத இடங்களிலும் கூட தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன," என்று ரோமன் கூறுகிறார்.

"பெரிய மற்றும் மிகவும் முற்றிய கட்டிகளும் அடிக்கடி கண்டறியப்படுகின்றன. இது நோயறிதல் சார்பு மற்றும் நோய் பாதிப்பின் உண்மையான அதிகரிப்பு இரண்டின் கலவையையும் நாம் பார்க்கிறோம் என்பதைக் குறிக்கிறது."

தைராய்டு புற்றுநோய்கள் ஆரம்ப கட்டங்களில் அதிகமாகக் கண்டறியப்படுவதாலும் சிகிச்சையின் விளைவுகள் மேம்பட்டுள்ளதாலும், தைராய்டு புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்று விக்னேரி கூறுகிறார். இருப்பினும், இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு சுமார் 0.5 ஆக நிலையானதாகவே உள்ளது, சில நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன.

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சி.டி. ஸ்கேன்கள் போன்ற அதிக அளவிலான அயனியாக்கும் கதிர்வீச்சுடன் கூடிய நடைமுறைகளின் அதிகரிப்பு, பதிப்பு விகித உயர்வுக்குப் பங்களிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

உதாரணமாக, ஒரு ஆய்வு கலிபோர்னியாவில் 2000 முதல் 2017 வரை கண்டறியப்பட்ட 69,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளை ஆய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள், கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் இரண்டும் காலப்போக்கில் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தனர். அந்த அதிகரிப்பு கட்டியின் அளவு மற்றும் புற்றுநோயின் நிலையோடு தொடர்பில்லாமல் இருந்தது, இது மிகச் சிறிய கட்டிகளின் மேம்பட்ட நோயறிதலைத் தவிர வேறு ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது.

2017 இல், கிடாஹாராவும் அவரது குழுவும் 1974-2013 க்கும் இடையில் கண்டறியப்பட்ட 77,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளின் மருத்துவப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பெரும்பாலான பாதிப்புகள் தைராய்டு சுரப்பியில் சிறிய பாப்பிலரி கட்டிகளால் ஏற்பட்டாலும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்த பரவும் (metastatic) பாப்பிலரி புற்றுநோய்களும் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர். தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் அரிதானவை என்றாலும், இவை ஆண்டுக்கு 1.1% என்ற விகிதத்தில் அதிகரித்து வருவதையும் ஆய்வு காட்டியது.

கிடாஹாரா, "இந்த மிகவும் தீவிரமான கட்டிகளின் அதிகரிப்பைத் தூண்டக்கூடிய வேறு ஏதாவது ஒன்று இருக்கலாம் என்று காட்டுகிறது," என்கிறார்.

முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுபவனவற்றில் உடல் பருமனும் ஒன்று, இது 1980 களில் இருந்து, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதிக எடைக்கும் தைராய்டு புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே ஒரு இணைப்பு இருப்பதாக ஆரோக்கியமான மக்களுடன் தொடங்கி ஒரு நீண்ட கால அடிப்படையில் நடத்தப்படும் குழு ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக பிஎம்ஐ (BMI) கொண்ட நபர்கள் ஆரோக்கியமான பிஎம்ஐ கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் வாழ்நாளில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு 50% க்கும் அதிகமாக வாய்ப்புள்ளது.

அதிக பிஎம்ஐ தீவிரமான புற்றுநோய் கட்டி அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உதாரணமாக, பாதிப்பு கண்டறியப்படும்போது பெரிய அளவில் இருப்பது அல்லது புற்றுநோய் எளிதில் பரவக்கூடிய ஒரு பிறழ்வைக் கொண்டிருப்பது.

"எங்கள் ஆராய்ச்சியில், அதிக பிஎம்ஐ, தைராய்டு புற்றுநோய் தொடர்பான மரணத்தின் அதிக அபாயத்துடன் தொடர்பு இருப்பதையும் கண்டோம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே இது வெறும் பாதிப்பு கண்டறிதல் சார்பு அல்ல என்பதற்கு இது ஒரு வலுவான ஆதாரமாக இருந்தது. அதிக பிஎம்ஐ கொண்டவர்கள் மருத்துவரிடம் சென்று தைராய்டைச் சோதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக தைராய்டு புற்றுநோய் அவர்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிக பிஎம்ஐ இருப்பது தைராய்டு புற்றுநோய் உருவாவது மற்றும் வளர்ச்சியுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரம் இது."

இருப்பினும், உடல் பருமன் எப்படித் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடல் பருமன் கொண்டவர்களுக்குத் தைராய்டு செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறியப்படுகிறது. உதாரணமாக, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தைராய்டு தூண்டுதல் ஹார்மோனின் (TSH) அதிக அளவு கொண்ட நபர்கள் அதிக பிஎம்ஐயையும் கொண்டிருக்கிறார்கள்.

"சாத்தியமான அடிப்படை வழிமுறைகளைப் பற்றி நாங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இது இன்னும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, ஆனால் இது பல காரணிகளால் இருக்கலாம்," என்று கிடாஹாரா கூறுகிறார்.

"உடல் பருமன் பல உடலியல் விளைவுகளைக் கொண்டுள்ளது, எனவே வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தைராய்டு செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தைராய்டு புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டுவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்."

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீயணைப்பு நுரை போன்ற பொதுவான பொருட்களில் காணப்படும் உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்களும் (Endocrine-disrupting chemicals) தைராய்டு புற்றுநோய் அபாயத்தில் ஒரு விளைவைக் கொண்டிருக்கலாம்

பிற விஞ்ஞானிகள், சாதாரண வீட்டுப் பொருட்கள் மற்றும் கரிமப் பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் "உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்கள்" (endocrine disrupting chemicals - EDCs) காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த ரசாயனங்கள் உடலின் ஹார்மோன்களைப் பிரதிபலிக்கவோ, தடுக்கவோ அல்லது அவற்றில் குறுக்கிடும் தன்மையுடையவையாகவோ இருக்கும். உதாரணமாக, பெர்ஃப்ளூரோஆக்டனோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோஆக்டேன்சல்பானிக் அமிலம் (PFOS) ஆகியவை இதில் அடங்கும். இவை சமையல் பாத்திரங்கள் மற்றும் காகித உணவுப் பொதிவு முதல் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் தீயணைக்கும் நுரை வரை பல பொருட்களில் காணப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய ரசாயனங்களைத் தைராய்டு புற்றுநோயுடன் இணைக்கும் சான்றுகள் கலவையாகவே உள்ளன.

பிற ஆய்வுகள், சுவடு கூறுகள் (trace elements) ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. சுவடு கூறுகள் என்பவை உயிரினங்களுக்கு மிகச் சிறிய அளவில் மட்டுமே தேவைப்படும் ரசாயனத் தனிமங்கள் ஆகும். இருப்பினும், அவை தைராய்டு செயல்பாட்டிற்கு முக்கியமானவை.

"தீவு நாடுகளில் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்," என்று கிடாஹாரா கூறுகிறார்.

"எரிமலை வெடிப்புகள் தொடர்பான சுவடு கூறுகளைப் பற்றிய கருதுகோள்கள் உள்ளன. அதனால் துத்தநாகம் (zinc), காட்மியம் (cadmium), வனேடியம் (vanadium) போன்ற வேறு சில ரசாயனங்கள் இந்தச் சூழல்களில் அதிக தைராய்டு புற்றுநோய் விகிதங்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் நேரடித் தொடர்பை காட்டுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட அதிக தொற்றுநோயியல் ஆய்வுகள் எதுவும் இல்லை."

இருப்பினும், நோயறிதலுக்கான மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று கிடாஹாரா நம்புகிறார். குறிப்பாக அமெரிக்காவில் 80களிலிருந்து சி.டி. (CT) மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன்கள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, இதில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன்களும் அடங்கும். இந்த சி.டி. ஸ்கேன்கள் தைராய்டு சுரப்பிக்கு ஒப்பீட்டளவில் அதிக அளவிலான கதிர்வீச்சை அளிக்கின்றன.

ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மீதான ஆய்வுகள் போன்ற பிற ஆய்வுகளிலிருந்து கதிர்வீச்சுக்கும் தைராய்டு புற்றுநோய்க்கும் இடையிலான உறவைப் பற்றி நாம் அறிந்திருப்பதன் மூலம், அத்தகைய கதிர்வீச்சின் விளைவுகளை நாம் மாதிரிப்படுத்தலாம். உதாரணமாக, ஒரு சமீபத்திய ஆய்வு, இனிவரும் காலங்களில், ஆண்டுக்கு அமெரிக்காவில் சுமார் 3,500 தைராய்டு புற்றுநோய்கள் சி.டி. ஸ்கேன் விகிதங்களால் நேரடியாக ஏற்படக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.

"இளம் தைராய்டு சுரப்பி, வயதானவர்களின் தைராய்டு சுரப்பியை விடக் கதிர்வீச்சு வெளிப்பாட்டின் விளைவுகளுக்கு அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டது," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே சி.டி. ஸ்கேன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் உயர்வுக்குப் பகுதி பங்களிக்கக்கூடும் என்பது சாத்தியமே."

இந்த அனைத்துக் காரணிகளும் ஒன்றிணைந்த பங்கைக் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

"நாம் சுற்றுச்சூழல், வளர்சிதை மாற்றம், உணவு மற்றும் ஹார்மோன் தாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, அத்துடன் அடிப்படை மரபணு ஏற்புத்திறனுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பல காரணி நிகழ்வைப் பார்க்கிறோம்," என்று ரோமன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgzjx316dyo

உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு உள்ள 'தங்க' ரத்தத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி

1 month 3 weeks ago

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் உலகில் 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • ஜாஸ்மின் ஃபாக்ஸ் ஸ்கெல்லி

  • பிபிசி

  • 14 நவம்பர் 2025, 04:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆர்.எச் பூஜ்ய (Rh null ) ரத்த வகை உள்ளது. இப்போது ஆராய்ச்சியாளர்கள் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதை ஓர் ஆய்வகத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர். ரத்தமாற்று சிகிச்சை நவீன மருத்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாம் எப்போதாவது காயமடைந்தாலோ, அல்லது பெரிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலோ, மற்றவர்களால் தானம் செய்யப்பட்ட ரத்தம் நம் உயிரைக் காப்பாற்றும். ஆனால் அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு பொருந்தக்கூடிய தானம் செய்யப்பட்ட ரத்தத்தைக் கண்டுபிடிப்பது போராட்டமே.

இத்தகைய அரிதான ரத்த வகைகளில் ஒன்று - ஆர்.எச் பூஜ்ய ரத்த வகை - உலகில் இது வரை 50 பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதாவது ஒரு விபத்தில் சிக்கினால், அந்த வகை ரத்தத்தை தானமாக பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே ஆர்.எச் பூஜ்யம் ரத்த வகை உள்ளவர்கள் தங்கள் சொந்த ரத்தத்தை நீண்ட கால சேமிப்புக்காக உறைய வைக்க வேண்டுமென ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அரிதானது என்பதை தவிர இந்த ரத்த வகை மற்ற காரணங்களுக்காகவும் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த ரத்த வகையின் பயன்பாட்டு நன்மைகள் காரணமாக மருத்துவ மற்றும் ஆராய்ச்சி சமூகத்திற்குள், இது சில நேரங்களில் "தங்க ரத்தம்" என்று குறிப்பிடப்படுகிறது. தானமாக பெறப்பட்ட ரத்தத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தி சவால்களை கடந்து அனைவருக்குமான ரத்தம் செலுத்தும் வழிமுறைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க இது உதவக்கூடும்.

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு வரை உலகம் முழுவதும் 47 ரத்த குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ரத்தம் எப்படி வகைப்படுத்தப்படுகிறது?

நமது சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் குறிப்பிட்ட குறிப்பான்கள் இருப்பது அல்லது இல்லாமல் போவது ஆகியவற்றின் அடிப்படையிலேயே நம் உடலில் இருக்கும் ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது. ஆன்டிஜென்கள் எனப்படும் இந்த குறிப்பான்கள் புரதங்கள் அல்லது சர்க்கரைகளைக் கொண்டுள்ளன. அவை உயிரணு மேற்பரப்பில் இருந்து ஒட்டிக்கொள்கின்றன மற்றும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கண்டறியப்படலாம்.

"ரத்தத்தில் இருக்கும் ஆன்டிஜென்கள் அல்லாமல் வேறு ஆன்டிஜென்களைக் கொண்ட ரத்தத்தை உங்கள் உடலில் ஏற்றினால், அந்த ரத்தத்திற்கு எதிரான ஆன்டிபாடிகளை உங்கள் உடல் உருவாக்கி அதைத் தாக்கும்" என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் பேராசிரியர் ஆஷ் டோய் கூறுகிறார்.

"நீங்கள் மீண்டும் அந்த ரத்தத்தை உடலில் ஏற்றினால், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்" என்கிறார் அவர்.

நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் இரண்டு ரத்த வகை அமைப்புகள் ஏபிஓ (ABO) மற்றும் ரீசஸ் (ஆர்.எச் -Rh) ஆகும். ஏ ரத்த வகை உள்ள ஒருவருக்கு அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் ஏ ஆன்டிஜென்கள் இருக்கும், அதே நேரத்தில் பி ரத்த வகை உள்ளவருக்கு பி ஆன்டிஜென்கள் இருக்கும். ஏபி ரத்த வகையில் ஏ மற்றும் பி ஆகிய இரண்டு ஆன்டிஜென்களுமே இருக்கும். ஓ ரத்த வகையில் அந்த இரண்டு ஆன்டிஜென்களுமே இருக்காது. இந்த ரத்த வகைகள் Rh பாசிடிவ் அல்லது Rh நெகடிவாக இருக்கலாம்.

ஓ நெகடிவ் ரத்தம் உள்ளவர்கள் பெரும்பாலும் அனைவருக்குமான நன்கொடையாளர்கள் என்று கூறப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் ரத்தத்தில் ஏ, பி அல்லது ஆர்எச் இல்லை. இருப்பினும், இது ஒரு மிகைப்படுத்தியக் கூற்றே ஆகும்.

முதலாவதாக, அக்டோபர் 2024 நிலவரப்படி, மொத்தம் 47 ரத்த வகைகளும் 366 வெவ்வேறு ஆன்டிஜென்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஓ நெகடிவ் ரத்த வகையை தானமாக பெறும் ஒரு நபர் இன்னும் மற்ற ஆன்டிஜென்களுக்கு எதிர்வினையைக் கொண்டிருக்கலாம். இருப்பினும் சில ஆன்டிஜென்கள் மற்ற வகைகளை விட நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் தூண்டக்கூடும்.

இரண்டாவதாக, 50 க்கும் மேற்பட்ட Rh ஆன்டிஜென்கள் உள்ளன. மக்கள் Rh நெகடிவ் இருப்பதைப் பற்றி பேசும்போது அவர்கள் Rh (D) ஆன்டிஜெனைக் குறிப்பிடுகிறார்கள், ஆனால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களில் இன்னும் பிற Rh புரதங்கள் உள்ளன. இது சரியாக பொருந்தக்கூடிய ரத்த நன்கொடையாளரை கண்டுபிடிப்பதை சவாலாக்கி உள்ளது.

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் அரிதானது மட்டுமல்ல, பயனுள்ளதும் கூட.

இருப்பினும், ஆர்.எச் பூஜ்ய (Rh null) ரத்தம் உள்ளவர்களுக்கு 50 Rh ஆன்டிஜென்களில் எதுவும் இல்லை. இந்த நபர்கள் வேறு எந்த ரத்த வகையையும் பெற முடியாது என்றாலும், அவர்களின் ரத்தம் பல Rh ரத்த வகைகளுடன் இணக்கமானது. இது ஓ வகையில் Rh null ரத்தத்தை மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக்குகிறது, ஏனெனில் ABO -ன் அனைத்து வகைகளையும் கொண்ட நபர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் அதைப் பெறலாம்.

ஒரு நோயாளியின் ரத்த வகை அறியப்படாத அவசர சூழலில், ஒவ்வாமை எதிர்வினையின் குறைந்த ஆபத்துடன் ஓ வகை Rh null ரத்தம் வழங்கப்படலாம். இந்த காரணத்திற்காக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த "தங்க ரத்தத்தை" உருவாக்கும் வழிகளைத் தேடுகிறார்கள்.

"Rh ஆன்டிஜென்கள் ஒரு பெரிய எதிர்வினையைத் தூண்டுகின்றன, எனவே உங்களிடம் Rh ஆன்டிஜென்கள் இல்லை என்றால், Rh அடிப்படையில் எதிர்வினையாற்ற எதுவும் இல்லை என்று அர்த்தம்" என்கிறார் பேராசிரியர் டோய். "நீங்கள் ஓ வகை Rh பூஜ்யமாக இருந்தால், அது மிகவும் உலகளாவியது. ஆனால் நீங்கள் இன்னும் கருத்தில் கொள்ள வேண்டிய பிற ரத்த குழுக்கள் உள்ளன" என்கிறார்.

Rh பூஜ்ய வகை ரத்தம் எப்படி உருவானது?

Rh தொடர்புடைய கிளைகோபுரோட்டீன் அல்லது ஆர்.எச்.ஏ.ஜி (RHAG) எனப்படும் சிவப்பு ரத்த அணுக்களில் முக்கிய பங்கு வகிக்கும் புரதத்தை பாதிக்கும் மரபணுப் பிறழ்வுகளால் ஆர்.எச் பூஜ்ய ரத்தம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த பிறழ்வுகள் இந்த புரதத்தின் வடிவத்தை சுருக்கவோ அல்லது மாற்றவோ செய்கிறது, இதனால் இது மற்ற Rh ஆன்டிஜென்களின் வெளிப்பாட்டை சீர்குலைக்கிறது.

2018ஆம் ஆண்டு ஆய்வில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டோய் மற்றும் சக ஊழியர்கள் ஆய்வகத்தில் ஆர்.எச் பூஜ்ய ரத்தத்தை மீண்டும் உருவாக்கினர். அவ்வாறு செய்ய, அவர்கள் முதிர்ச்சியடையாத சிவப்பு ரத்த அணுக்களின் ஒரு செல் வரிசையை ( ஒரு ஆய்வகத்தில் வளர்ந்த உயிரணுக்களை) எடுத்துக் கொண்டனர்.

பெரும்பாலான ரத்தம் செலுத்த இணக்கமில்லாத சூழலை உருவாக்கும் ஐந்து ரத்த குழு அமைப்புகளின் ஆன்டிஜென்களுக்கான மரபணு குறியீட்டை நீக்க அவர்கள் மரபணு திருத்த நுட்பமான Crispr-Cas9 -ஐ பயன்படுத்தினர். இதில் ABO மற்றும் Rh ஆன்டிஜென்கள் மற்றும் கெல் (Kell), டஃபி (Duffy) மற்றும் ஜிபிபி (GPB) எனப்படும் பிற ஆன்டிஜென்கள் ஆகியவை அடங்கும்.

"நாங்கள் (இந்த) ஐந்தை நீக்கி விட்டால் , அது ஒரு இணக்கமான உயிரணுவை உருவாக்கும், ஏனென்றால் அவை ஐந்தும் மிகவும் சிக்கலான ரத்த குழுக்கள் ஆகும்" என்று பேராசிரியர் டோய் கூறுகிறார். இதன் விளைவாக ஏற்படும் ரத்த அணுக்கள் அனைத்து முக்கிய பொதுவான ரத்தக் குழுக்களுக்கும் இணக்கமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் Rh null , 40 லட்சத்தில் ஒருவருக்கு உள்ள பம்பாய் ஃபீனோடைப் போன்ற அரிய வகைகளைக் கொண்டவர்களுக்கும் இணக்கமாக இருக்கும். இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு O, A, B அல்லது AB ரத்தம் கொடுக்க முடியாது. எவ்வாறாயினும், மரபணு திருத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது சர்ச்சைக்குரியதாகவும் உலகின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டதும் ஆகும். அதாவது இந்த மிகவும் இணக்கமான வகை ரத்தம் மருத்துவ ரீதியாக கிடைப்பதற்கு சிறிது காலம் ஆகலாம். இது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பல சுற்று மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், பேராசிரியர் டோய் ஸ்கார்லெட் தெரபியூட்டிக்ஸ் என்ற நிறுவனத்தை இணைந்து நிறுவியுள்ளார். இது Rh null உள்ளிட்ட அரிய ரத்த குழுக்களைக் கொண்டவர்களிடமிருந்து ரத்த தானம் பெற்று அதனை சேகரித்து வருகிறது. காலவரையின்றி சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க ஆய்வகத்தில் வளர்க்கக்கூடிய உயிரணு வரிசைகளை உருவாக்க அந்த ரத்தத்தைப் பயன்படுத்த முடியும் என்று குழு நம்புகிறது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்தம் அரிதான ரத்த வகை உடையவர்களின் அவசர கால தேவைக்காக சேமிப்பகத்தில் உறைய வைக்கப்படலாம்.

மரபணு திருத்த முறையைப் பயன்படுத்தாமல் ஆய்வகத்தில் அரிய ரத்தத்தின் வங்கிகளை உருவாக்க பேராசிரியர் டோய் விரும்புகிறார், இருப்பினும் மரபணு திருத்தம் எதிர்காலத்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக் கூடும்.

"மரபணு திருத்தம் இல்லாமல் எங்களால் அதைச் செய்ய முடிந்தால், அது பெரிய விஷயம். ஆனால் திருத்தம் செய்வதும் எங்களுக்கு உள்ள ஒரு வாய்ப்பு," என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் செய்வதன் ஒரு பகுதி என்னவென்றால், அவர்களின் ஆன்டிஜென்கள் அனைத்தையும் பெரும்பாலான மக்களுக்கு முடிந்தவரை இணக்கமாக மாற்ற முயல்கிறோம். அதற்காக நன்கொடையாளர்களை கவனமாக தேர்வு செய்கிறோம். பின்னர் அனைவருக்கும் இணக்கமாக மாற்ற மரபணு திருத்தம் செய்ய வேண்டும்." என்கிறார்.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மில்வாக்கியில் உள்ள வெர்சிட்டி ரத்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நோயெதிர்ப்பு நிபுணர் கிரிகோரி டெனோம் மற்றும் சக ஊழியர்கள், Crispr-Cas9 மரபணு திருத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, Rh null உள்ளிட்ட (தகவமைக்கப்பட்ட) அரிய ரத்த வகைகளை, ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களிலிருந்து (hiPSC) இருந்து உருவாக்கினர். இந்த ஸ்டெம் செல்கள் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. சரியான சூழலை உருவாக்கினால் மனித உடலில் எந்த உயிரணுவாகவும் மாறும் திறனைக் கொண்டுள்ளன. மற்ற விஞ்ஞானிகள் மற்றொரு வகை ஸ்டெம் செல்களைப் பயன்படுத்துகின்றனர், அவை ரத்த அணுக்களாக மாறுவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த வகை ரத்தம் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக, கனடாவின் கியூபெக்கில் உள்ள லாவல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் ஏ பாசிடிவ் ரத்தம் கொண்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரத்த ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தனர். பின்னர் அவர்கள் A மற்றும் Rh ஆன்டிஜென்களுக்கான மரபணுக்களின் குறியீட்டை நீக்க Crispr-Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இது O Rh பூஜ்ய, முதிர்ச்சியடையாத சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகிறது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒரு Rh பூஜ்ய ரத்த நன்கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்களை எடுத்தனர்.

Crispr-Cas9 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏ வகை ரத்தத்தை O வகை ரத்தமாக மாற்றினர். இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், மக்களுக்கு பயன்படும் வகையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செயற்கை ரத்தம் என்பதை அடைய நீண்ட காலமாகும். ஸ்டெம் செல்கள் முதிர்ந்த சிவப்பு ரத்த அணுக்களாக வளர வேண்டும் என்பது இதில் உள்ள முக்கிய சவாலாகும்.

உடலில், எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்களில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. அவை எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை தீர்மானிக்க சிக்கலான சமிக்ஞைகள் உருவாகின்றன. இதை ஆய்வகத்தில் உருவாக்குவது கடினம்.

"Rh null அல்லது வேறு எந்த பூஜ்ய ரத்த வகையையும் உருவாக்கும்போது, சிவப்பு ரத்த அணுக்களின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு சிரமம் ஏற்படலாம் என்ற கூடுதல் சிக்கல் உள்ளது" என்று டெனோம் கூறுகிறார். அவர் இப்போது ரத்தமாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சுகாதார நிறுவனமான கிரிஃ போல்ஸ் டயக்னாஸ்டிக் சொல்யூஷன்ஸில் மருத்துவ விவகார இயக்குநராக பணிபுரிகிறார். "குறிப்பிட்ட ரத்த வகை மரபணுக்களை உருவாக்குவதால் உயிரணு சவ்வு உடைந்து போகலாம் அல்லது சிவப்பு ரத்த அணுக்களை திறம்பட உற்பத்தி செய்வதில் இழப்பு ஏற்படலாம்."

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்தம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், நேரடியாக ஒருவரின் உடலிலிருந்து ரத்த தானம் பெறுவதே சிறந்தது.

RESTORE சோதனையை பேராசிரியர் டோய் இணைத் தலைமையேற்று வழிநடத்துகிறார். இது, நன்கொடையாக தரப்பட்ட ரத்த ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு ரத்த அணுக்களை வழங்குவதன் பாதுகாப்பை சோதிக்கும் உலகின் முதல் மருத்துவ சோதனையாகும்.

இந்த சோதனையில் செயற்கை ரத்தம் எந்த வகையிலும் மரபணு திருத்தப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் அதை மனிதர்களில் சோதிக்கத் தயாராக இருந்த கட்டத்திற்கு வர 10 வருட ஆராய்ச்சி தேவைப்பட்டது.

"இந்த நேரத்தில், ஒருவரின் கையில் இருந்து ரத்தத்தை நேரடியாக எடுப்பதே மிகவும் சிறந்தது மற்றும் செலவு குறைந்தது. எனவே எதிர்வரும் காலங்களில் ரத்த தானம் செய்பவர்களே தேவைப்படுவார்கள்" என்று பேராசிரியர் டோய் கூறுகிறார். "ஆனால் நன்கொடையாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கும் அரிய ரத்த வகைகளைக் கொண்டவர்களுக்கு, அவர்களுக்கு தேவைப்படும் ரத்தத்தை (ஆய்வகத்தில்) உருவாக்க முடிந்தால், அது மிகவும் சிறப்பாக இருக்கும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c986vd30r1no

சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

1 month 4 weeks ago

சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 10 நவம்பர் 2025, 02:22 GMT

இந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்)

2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நோய்களில் சிறுநீரக நோய் 9வது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் 1,53,000 பேரும் இந்தியாவில் 1,24,000 பேரும் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகில் அதிகபட்சமாக சீனாவில் 15.2 கோடி பேரும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 கோடி பேரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறிய, வளர்ந்த நாடுகளில் சிறுநீரக நோய் பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் சிறுநீரக நோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று திடீரென உடனே சிறுநீரகம் செயலிழப்பது, இரண்டாவது படிப்படியாக சிறுநீரகம் செயலிழப்பது. இதை தான் நாள்பட்ட சிறுநீரக நோய் என சொல்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இந்த இரண்டாவது வகை பாதிப்பு தான் ஏற்படுகிறது." என்றார் அவர்.

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

படக்குறிப்பு, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்

மாறி வருகின்ற வாழ்வியல் முறைகளால் சிறுநீரக நோய் வருவதாக அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன், அதிக அளவில் கலோரிகளை உட்கொள்வது மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த வேலைகள் ஆகியன சிறுநீரக கோளாறு ஏற்பட காரணமாக அமைகின்றன." எனத் தெரிவித்தார்.

சிறுநீரக நோயின் அறிகுறிகளை பட்டியலிட்ட அவர், ஆட்களைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடலாம் என்றும் தெரிவித்தார்.

அறிகுறிகள் என்ன?

  • கால் மற்றும் தலை வீக்கம்

  • சிறுநீர் வெளியேற்றம் குறைவது

  • சோர்வு

  • பசி

  • வாந்தி

  • ரத்த சோகை

  • தூங்கும் முறை மாறுவது

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அவர் கூறினார்.

யாரை அதிகம் பாதிக்கும்?

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டுமான பணியாளர்கள் (கோப்புப்படம்)

விவசாயம், கட்டுமானம் போன்ற திறந்தவெளியில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக கோபாலகிருஷ்ணன் கூறினார்.

"வெப்ப அழுத்தம், நாள்பட்ட நீரிழப்பு, காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்களை நுகர்வது போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நிழலில் இளைப்பாறுவதையும் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொள்வதையும் தவறாமல் செய்ய வேண்டும்," என்றார்.

இதய நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் உள்ள தொடர்பு

இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதும் முக்கிய காரணமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீரிழிவு நோயும் உடல் பருமனும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சிறுநீரக பாதிப்பில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் 1-3 கட்ட பாதிப்பிலே உள்ளனர்.

நாள்பட்ட சிறுநீரக நோயும் இதய நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்கிறார் கோபாலகிருஷ்ணன். சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கையில் இதய நோய் ஆபத்தும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆய்வறிக்கையின் படி, வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்பும் கூடுகிறது. முதியவர்களிடம் மிகத் தீவிரமான கட்டம் காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக வயது கூடக்கூட டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது குறைகிறது.

பரிசோதனை அவசியம்

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்த பரிசோதனை (கோப்புப்படம்)

சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களில் 30% பேருக்கு அது இருப்பதே தெரிவதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.

"காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் சிறுநீரக நோய் ஏற்படும். உகந்த வெப்பநிலை இல்லாததால் சிறுநீரகத்தின் செயல் திறனும் நாளடைவில் குறையும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார் கோபாலகிருஷ்ணன்.

சிகிச்சைகள் என்ன?

சிறுநீரக நோய்க்கு டயாலசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

டயாலிசிஸ் முறை செலவு அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான காப்பீடுகளின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்ய முடியும்?

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, இரண்டு சூழல்களில் மட்டுமே ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

அவரது கூற்றுப்படி, ஒன்று சிறுநீரக தானம் செய்யும் நபர் நோயாளியின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்போது தான் அவரது சிறுநீரக தானம் ஏற்றுக்கொள்ளப்படும்.

இவை போக யாரேனு மூளைச் சாவு அடைகின்ற சமயங்களில் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் மாற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் ட்ரான்ஸ்டான் என்கிற உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது.

தடுக்கும் வழிகள் என்ன?

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் போன்ற, சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டார்.

  • தினசரி 45 நிமிட நடை பயிற்சி

  • உடல் பருமனை தவிர்ப்பது

  • குறைவான அளவில் உப்பு மற்றும் சோடியம் எடுத்துக் கொள்வது

  • பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்வது

  • தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது

  • அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது

  • புகையிலை நுகர்வை தவிர்ப்பது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn7epvpzd8lo

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?

2 months ago

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 5 நவம்பர் 2025

கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் 'மூச்சை விழுங்கும் பாம்பு' என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதுதான் இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம்.

அதேவேளையில், கட்டு வரியன் கடித்துவிட்டாலே மரணம்தான் என்று அச்சப்படத் தேவையில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில், புதுக்கோட்டையில் அந்தப் பாம்பிடம் கடிபட்ட ஆறு வயது சிறுமி ஒருவர் ஒரு வாரம் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்திருப்பது அதற்குச் சான்றாக விளங்குகிறது.

இருப்பினும், கட்டு வரியன் பாம்பு கடித்தால் பலரும் தூக்கத்திலேயே இறந்துவிடுவது ஏன்? அதன் நஞ்சு மனித உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

இந்தத் தகவல்களை விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பாம்புகள் மற்றும் அதன் நஞ்சு தொடர்பாக ஆராய்ந்து வரும் வல்லுநர்களைத் தொடர்புகொண்டது.

வயிற்று வலியில் துடித்த ஆறு வயது சிறுமி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே அமைந்துள்ளது குலவைப்பட்டி கிராமம். அங்கு வாழும் பழனி, பாப்பாத்தி தம்பதியின் ஆறு வயது மகள் ஸ்ரீமதி, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.

சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்காத நிலையில், வயிற்று வலியில் துடித்த மகளை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Dr A. Thanigaivel

இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் வெவ்வேறு சிகிச்சைகளைப் பெற்று, முன்னேற்றம் இல்லாத நிலையில், இரண்டு நாட்கள் கழித்தே சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கண்களைத் திறக்க முடியாத நிலையில் சிறுமியைக் கொண்டு வந்ததாகவும் மிகத் தாமதமாக வந்ததால் சிகிச்சை அளிப்பதில் பல சிரமங்கள் இருந்ததாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த்.

"சிறுமி கடும் வயிற்று வலியால் சிரமப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். அதோடு, கண்களைத் திறக்க முடியாத நிலையில், இமைகளின் நரம்பு பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் சுவாசிக்கவும் சிரமப்பட்டார். இவையனைத்துமே கட்டு வரியன் பாம்பு கடித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்.

இதை உணர்ந்தவுடன், உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்தோம். பின்னர் பாம்புக்கடிக்கு கொடுக்கப்படும் நஞ்சுமுறி மருந்தை சிறுமிக்கு கொடுத்து சிகிச்சையளிக்கத் தொடங்கினோம்," என்று தெரிவித்தார்.

கட்டு வரியன் கடித்தும் அதிக நேரம் உயிர் பிழைப்பது சாத்தியமா?

பாம்பு கடிக்கும்போது எந்த அளவிலான நஞ்சை மனித உடலுக்குள் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுபடும் என்கிறார் யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்.

"இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை எப்போது பாம்பு கடித்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கடிக்கும்போது சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு சிறுமியின் உடலில் செலுத்தியிருக்கலாம். இது அனைவருக்கும் அமையாது, நல்வாய்ப்பாக இந்தச் சிறுமிக்கு அமைந்துவிட்டது," என்று தெரிவித்தார் அவர்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Dr.M.P.Koteesvar

படக்குறிப்பு, யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்

இதுபோல கட்டு வரியன் கடித்து ஒரு நாள், இரண்டு நாட்கள் கழித்தும்கூட சிகிச்சைக்காக மக்கள் மருத்துவமனையை நாடுவதைத் தனது அனுபவத்திலும் சில முறை கண்டிருப்பதாக முனைவர் மனோஜ் தெரிவித்தார்.

"இதற்குக் காரணம், நாகப் பாம்பு போல இதன் நஞ்சு உடலுக்குள் சென்றவுடன் வேலையைக் காட்டுவதில்லை. ஒருவேளை நஞ்சின் அளவு குறைவாக இருந்தால், அதன் வீரியம் தெரியத் தொடங்குவதற்குச் சில மணிநேரம் முதல் ஒரு நாள் வரைகூட ஆகலாம்.

உடல் தாங்கக்கூடிய சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு உட்செலுத்தியிருந்தாலும், அதன் அறிகுறிகளை ஒருவர் அனுபவிப்பார். அதில் மாற்றமில்லை. ஆனால் அதற்கு எடுக்கும் நேரம் அதிகம். ஒருவேளை இப்படிப்பட்ட சூழலை புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொண்டிருக்க வாய்ப்புள்ளது." என்று அவர் விளக்கினார்.

நஞ்சின் அளவு குறைவாக இருந்தாலும், அதற்கான விளைவுகளை உடல் அனுபவிக்கவே செய்யும் என்பதைக் குறிப்பிட்ட அவர் அதற்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த பாதிப்புகள் நீங்காது என்றார். அதுவே, இரண்டு நாட்களுக்கு மேல் பிழைத்திருக்க முடிந்தாலும், குழந்தை பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தமைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் மனோஜ் குறிப்பிட்டார்.

இரவில் கடிக்கும் கட்டு வரியன் பாம்பு

கட்டு வரியன் கடித்த பிறகும் இரு நாட்களுக்கு மேல் உயிர் பிழைத்திருந்த சிறுமி, பின்னர் ஒரு வார சிகிச்சையைத் தொடர்ந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். இதுபோல, கடிபட்டதன் விளைவுகளை ஒருவர் அனுபவிக்கச் சிறிது நேரம் எடுக்கலாம் என்றார் மனோஜ்.

ஆனால், 'இந்தியாவில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் கணிசமான இறப்புகளுக்கு கட்டு வரியனும் காரணமாக இருப்பது ஏன்?' என்ற கேள்வி எழுகிறது.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

அதுகுறித்துக் கேட்டபோது, "பாம்பின் நஞ்சு குறைவான அளவில் செலுத்தப்பட்டால் மட்டுமே இப்படியான நல்வாய்ப்புகள் கிடைக்கும்" எனக் குறிப்பிட்ட அவர், மற்றபடி கட்டு வரியனின் நஞ்சு நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாகக் கூறினார்.

ஊர்வனவியலாளர் ரமேஸ்வரனின் கூற்றுப்படி, கட்டு வரியன் ஓர் இரவாடிப் பாம்பு, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியது. குறிப்பாக, நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது சுறுசுறுப்பாக இயங்கும்.

அதோடு, "வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை காணப்படுகின்றன. இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீடுகளுக்குள் வருவதால் மக்கள் எளிதில் கவனிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. அது மட்டுமின்றி, கட்டு வரியன்கள் பிற நச்சுப் பாம்புகளைப் போல சீண்டப்படும்போது சத்தமிடுவது, எச்சரிப்பது போன்ற செயல்களைச் செய்யாது. எனவே அதன் இருப்பு கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது.

அவை வருவதை, செல்வதைக்கூட யாரும் கவனித்துவிடாதபடி கூச்ச சுபாவம் மிகுந்த நடத்தைகளைக் கொண்டவை. இந்தக் காரணத்தால் கட்டு வரியன் இருப்பதையே பல நேரங்களில் மக்கள் கவனிக்கத் தவறும் சூழ்நிலை ஏற்படலாம்," என்று விவரித்தார் ரமேஸ்வரன்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

படக்குறிப்பு, ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன்

கட்டு வரியனை பொறுத்தவரை, "மரக்கட்டை குவியல்கள், சிலிண்டர் சந்துகள் போன்ற மறைவிடங்களை அதிகம் நாடுகின்றன. மழை மற்றும் குளிர்காலங்களில் கதகதப்பான இடம் தேடி வீடுகளுக்குள் புகுவதும் நடக்கின்றன.

அதோடு, அதன் உடலமைப்பும் வீடுகளுக்குள் யார் கண்ணிலும் படாமல் எளிதில் வந்து செல்லும் சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கூடுதலாக இரவு நேரத்தில் அதிகம் இயங்குகின்றன. இதுவே இரவில் கட்டு வரியனால் பாம்புக்கடி விபத்துகள் அதிகம் ஏற்படக் காரணம். எனவே அவை குறித்த எச்சரிக்கை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்," என்றார் ரமேஸ்வரன்.

உடலில் கட்டு வரியன் பாம்பு கடித்த இடத்தை கண்டுபிடிக்க முடியாதா?

நாகம், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நச்சுப் பாம்புகளைப் பொறுத்தவரை கடித்த இடத்தில் அதைக் காட்டக்கூடிய காயங்கள் தென்படும். ஆனால் கட்டு வரியனில் அப்படி எதுவும் தெரியாது என்கிறார் முனைவர் மனோஜ்.

பொதுவாக பாம்பு கடித்துவிட்டால், கடித்த இடத்தில் கடுமையான வலி, நச்சுப் பற்கள் பதிவது, வீக்கமடைவது, சிவப்பு அல்லது கருமை நிறத்திற்கு மாறுவது, தீப்புண் போன்ற கொப்புளங்கள் வருவது எனப் பல்வேறு வடிவங்களிலான காயங்களைக் காண முடியும்.

ஆனால், "கட்டு வரியன் கடித்த இடத்தில் எவ்வித தடயங்களையும் காண முடியாது. இதனால், நோயாளி பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைத்தான் அனுபவிக்கிறார் என்பதை உறுதி செய்வதே மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்," என்று மனோஜ் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, நாகப் பாம்புகளின் நச்சுப் பற்கள் சராசரியாக 8 முதல் 10 மில்லிமீட்டர் வரை இருக்கும். "கண்ணாடி விரியனின் நச்சுப்பல் அதைவிடப் பெரியது, சுமார் ஒன்றரை இன்ச் வரைகூட இருக்கும். எனவே அவை கடித்த இடத்தை எளிதில் கண்டறிய முடியும்.

சுருட்டை விரியன் விஷயத்தில்கூட பற்கள் சிறிதாக இருந்தாலும் கடித்த இடத்தில் கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வெறும் 4 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட நச்சுப் பற்களை உடைய கட்டு வரியன் கடித்த இடத்தில் இப்படி எவ்வித தடயமும் இருக்காது."

இதோடு, வழக்கமாக பாம்புக்கடியை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனையில்கூட, நாகம் மற்றும் கட்டு வரியனின் நஞ்சு ரத்தத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் எனவும் மனோஜ் தெரிவித்தார்.

இந்த சவால்கள், ஒருவர் உடல்நல பாதிப்புகளோடு மருத்துவமனைக்கு வரும்போது "உடலில் பாம்புக்கடி பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆராய்வதை சிக்கலாக்குகிறது."

அதனால், "நோயாளிக்கு இருக்கும் பாதிப்புகள் கட்டு வரியன் கடியின் அறிகுறிகளை ஒத்திருந்தால் உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, உரிய பரிசோதனைகளைச் செய்த பிறகு சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும் என்பது நடைமுறை," என்று விளக்கினார் பாம்பின் நஞ்சு மற்றும் பாம்புக்கடி குறித்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து வரும் முனைவர் மனோஜ்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கட்டு வரியன் கடித்தால் தூக்கத்திலேயே இறந்துவிடுவார்களா?

இதுகுறித்து விளக்கிய ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன், "கட்டு வரியன் கடிப்பதாலேயே தூங்கும்போது இறப்பு நிகழ்வதாக அர்த்தமில்லை. அவை பல நேரங்களில் மனிதர்களை தூங்கும்போது கடித்துவிடுகிறது என்பதே அதற்குக் காரணம்," என்றார்.

குளிருக்கு கதகதப்பாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்துவிடும் இவை சில நேரங்களில் மனிதர்களுக்கு நெருக்கமாகச் சுருண்டு படுத்திருப்பதாகவும், அப்போது எதேச்சையாக அவற்றை மனிதர்கள் அழுத்திவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ உடனே கடித்து விடுவதாகவும் முனைவர் மனோஜ் குறிப்பிட்டார்.

மறுபுறம், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாவதாக வாய்மொழித் தகவல்கள் வந்தாலும், கட்டு வரியன் மனிதர்களை இரவு நேரத்தில் நெருங்கி வருவது ஏன் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார் ரமேஸ்வரன்.

கட்டு வரியன் பாம்பின் நஞ்சு நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்பதால், கடிபட்டவர்களுக்கு கடும் வயிற்று வலி, வாந்தி வருவதைப் போன்ற உணர்வு, கண்களைத் திறக்க முடியாமல் போவது, துர்நாற்றத்துடன் எச்சில் வடிதல், சுயநினைவை இழப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படுவதாக மனோஜ் தெரிவித்தார்.

"நரம்பியல் மண்டலத்தை அதன் நஞ்சு தாக்குவதால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது, கண் இமைகளைத் திறக்க முடியாமல் கடிபட்டவர்கள் அரை மயக்க நிலைக்குச் செல்ல நேரிடுகிறது, சுயநினைவை இழக்கின்றனர். நுரையீரல் ஆக்சிஜனை உடல் முழுக்க கொண்டு செல்ல முடியாமல் போவதால் சுவாசிக்க முடியாமல் கடிபட்டவர்கள் உயிரிழக்கின்றனர்." என்று அறிகுறிகளை விளக்கினார் மனோஜ்.

இரவு நேரங்களில் தூங்கும்போது ஒருவேளை கடித்து, காலை வரை அதை யாரும் கவனிக்காத சூழல் நிலவினால் கடிபட்டவர் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது என்றவர், அதையே "இரவில் தூக்கத்திலேயே அதன் கடி மரணத்தை ஏற்படுத்துவதாக" கூறப்படுகிறது எனவும் விவரித்தார்.

இதனாலேயே அவற்றை வட இந்திய கிராமங்கள் பலவற்றில் "மூச்சை விழுங்கும் பாம்பு" என மக்கள் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருவரை கட்டு வரியன் கடித்து பல மணிநேரம் கழித்தும்கூட அறிகுறிகள் தெரியத் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், மிக முக்கியமாக நரம்பியல் செயல்பாடுகளை அதன் நஞ்சு தடை செய்வதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் தடைபடுவதாகக் கூறினார்.

"அதற்கு வென்டிலேட்டர் உதவியுடன் நுரையீரலில் நேரடியாக ட்யூப் செலுத்தி செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்," என்று விளக்கினார் முனைவர் மனோஜ்.

அவரது கூற்றுப்படி, கட்டு வரியன் பாம்பின் நஞ்சு, நாகம் போன்ற பிற பாம்புகளின் நஞ்சைப் போல உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது குறைவுதான் என்றாலும், அவை கடித்துவிட்டதைக் கண்டுபிடிப்பதே கடினம் என்பதால், சவாலான பாம்புக்கடி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கூடுதல் தகவல்கள்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2em107e7rlo

வைட்டமின் பி12 குறைபாடு - எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

2 months 1 week ago

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • சுர்பி குப்தா

  • பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மே 2025-இல், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின் இந்தியாவில் வைட்டமின் பி -12 குறைபாடு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

வைட்டமின் பி -12 குறைபாடு குறித்த பல ஆய்வு தரவுகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 20 ஆய்வுகளில் மொத்தம் 18,750 பங்கேற்பாளர்கள் இருந்தனர்.

பங்கேற்பாளர்களில் 51 சதவீதம் பேருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு கண்டறியப்பட்டது. ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற சைவ உணவு உண்பவர்களில் 65 சதவீதம் பேர் குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர்.

வைட்டமின் பி -12 என்றால் என்ன? அதன் குறைபாடு என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்? அதை சரிசெய்ய என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா மற்றும் டெல்லி டயட்ஸின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா ஆகியோருடன் பேசினோம்.

வைட்டமின் பி 12 நமக்கு ஏன் தேவை?

பல உடல் செயல்முறைகளுக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இரண்டு வகையான வைட்டமின்கள் உள்ளன. அவை

  • வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்.

  • நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி -12 உள்ளிட்ட பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அடங்கும்.

"வைட்டமின் பி -12 ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். இது சிறிய அளவில் தேவைப்பட்டாலும், இது நம் உடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார் ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா.

வைட்டமின் பி -12 உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் அவசியம். தீப்தி கதுஜாவின் கூற்றுப்படி, உணவை ஆற்றலாக மாற்றுவது, புதிய மூலக்கூறுகள் உருவாக்குதல் உள்ளிட்ட உயிரணுக்களில் ஏற்படும் அத்தியாவசிய வேதியியல் எதிர்வினைகளில் வைட்டமின் பி -12 முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது முக்கியமானது என்று அவர் கூறுகிறார். இது நமது ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி-12 அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார். இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல வேலை செய்கிறது.

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

எந்த உணவுகளில் வைட்டமின் பி -12 உள்ளது?

வைட்டமின் பி -12 பிரதானமாக இறைச்சியில் காணப்படுகிறது. தாவர உணவுகள் செறிவூட்டப்படாவிட்டால் வைட்டமின் பி 12 கொண்டிருக்காது.

இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பிற பால் பொருட்களில் வைட்டமின் பி -12 உள்ளது.

இது முட்டை, கோழி, சிவப்பு இறைச்சி, மீன், கடல் உணவு மற்றும் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸும் கிடைக்கின்றன.

வைட்டமின் பி -12 மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளும் கிடைக்கின்றன என்று அம்ரிதா மிஸ்ரா விளக்குகிறார். இருப்பினும், எந்தவொரு சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம்.

"வைட்டமின் பி -12 சப்ளிமெண்ட்ஸ் ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்." என்று தீப்தி கதுஜா கூறுகிறார்.

வைட்டமின் பி -12 குறைபாடு

மோசமான உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் பொருட்களை போதுமான அளவு உட்கொள்ளாதது ஆகியவை வைட்டமின் பி 12 குறைபாட்டிற்கு காரணம் என்று அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார்.

வைட்டமின் பி 12 கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் குறைபாடு ஏற்படலாம். காரணம் அவர்களின் உடலால் அதை கிரகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். அதாவது, நீங்கள் பி12 கொண்ட உணவை உட்கொள்கிறீர்கள், ஆனால் அந்த உணவின் விளைவுகள் உங்கள் உடலில் தெரியவில்லை. இதன் பொருள் உங்கள் உடல் அதை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே.

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

உடலுக்கு வைட்டமின் பி -12 எவ்வாறு கிடைக்கிறது?

வைட்டமின் பி -12 நம் உடலில் எடுத்துக் கொள்ளப்படுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். உணவில், வைட்டமின் பி -12 புரதங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின்படி (என்ஐஎச்), வைட்டமின் பி -12 உடலால் இரண்டு கட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதல் கட்டத்தில், வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் வைட்டமின் பி -12 ஐ உணவில் உள்ள புரதங்களிலிருந்து பிரிக்கிறது.

இரண்டாவது கட்டத்தில், புரதத்திலிருந்து பிரிக்கப்பட்ட வைட்டமின் பி -12 வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதத்துடன் பிணைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த காரணி எனப்படுகிறது, பின்னர் உடலில் உறிஞ்சப்படுகிறது.

சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 எந்த புரதத்திற்கும் பிணைக்கப்படவில்லை. எனவே அதனை உடல் உள்ளே எடுத்துக் கொள்ள முதல் கட்டம் தேவையில்லை. இருப்பினும், சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 உடலில் உறிஞ்சப்படுவதற்கான உள்ளார்ந்த காரணியுடன் பிணைக்கப்பட வேண்டும்.

வைட்டமின் பி -12 உடலுக்குள் எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறையின் எந்தக் கட்டத்திலும் அது சரியாக நடக்கவில்லை என்றால், குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

என்ஐஎச்-ன் படி, வைட்டமின் பி -12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் போதுமான வைட்டமின் பி -12 பெறாதவர்கள் அல்லது உடல்கள் அதை சரியாக உறிஞ்சாதவர்களாக இருக்கலாம்.

உதாரணமாக

வயதானவர்கள்: வயதாகும்போது, பலரின் வயிற்றில் போதுமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருக்காது. இதனால் வைட்டமின் பி -12 ஐ உணவில் இருந்து உடல் எடுத்துக் கொள்வது கடினம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் பி -12 செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படலாம்.

இரைப்பை அழற்சி உள்ளவர்கள்: இந்த தன்னுடல் தாக்க நோய் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் வயிற்றில் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியில் குறைவை ஏற்படுத்துகிறது. இது வைட்டமின் பி -12 ஐ போதுமான அளவு உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

பெர்னிசியஸ் ரத்த சோகை உள்ளவர்கள்: இந்த நிலையில், உடல் உள்ளார்ந்த காரணியை உருவாக்காது. இது வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவதற்கு அவசியமானது. அத்தகையவர்களின் உடல் உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் இரண்டிலிருந்தும் வைட்டமின் பி -12 ஐ எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக வைட்டமின் பி -12 ஊசி மூலம் சிகிச்சையளிக்கிறார்கள்.

வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை செய்தவர்கள்: வயிற்றின் ஒரு பகுதியை அகற்றுவது போன்ற அறுவை சிகிச்சை உடலின் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவது கடினமாகும்.

சைவ உணவு உண்பவர்கள் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள், அசைவ உணவுகளை குறைவாக அல்லது சாப்பிடாதவர்கள் தங்கள் உணவில் இருந்து போதுமான வைட்டமின் பி -12 பெறாமல் போகலாம்.

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

உடலில் வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள்

வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம்.

"வைட்டமின் பி -12 குறைபாடு உருவாக காலம் எடுக்கும். எனவே அதன் அறிகுறிகளும் படிப்படியாக தோன்றி காலப்போக்கில் மிகவும் கடுமையானதாகிவிடும்." என்று தீப்தி கதுஜா விளக்குகிறார்.

வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்-

  • உங்கள் கைகள் அல்லது கால்களில் விசித்திரமான, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு

  • நடப்பதில் சிரமம் (சமநிலை பிரச்னைகள்)

  • பெர்னிசியஸ் ரத்த சோகை

  • நாக்கு வீக்கம்

  • சிந்திப்பதிலும் புரிந்துகொள்வதிலும் சிரமம் அல்லது ஞாபக மறதி

  • தளர்வு

  • சோர்வு

  • தோல் மஞ்சள் நிறமாதல்

  • மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சல்

  • செறிவு குறைதல்

ஒருவருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு இருக்கிறதா என்பதை வைட்டமின் பி -12 சோதனை மூலம் தீர்மானிக்க முடியும், இது ரத்த பரிசோதனையாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9v1dymwnkpo

புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை!

2 months 1 week ago

skynews-scan-mri_7064351.jpg?resize=750%

புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை!

எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மொத்தம் 58,218 ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டகாக கண்டறியப்பட்டனர்.

இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த நோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் ஒரு நாளுக்குள் நோயறிதலை மேற்கொள்ள இங்கிலாந்தில் புதிய சோதனை முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, MRI ஸ்கேன்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சில நிமிடங்களில் உடலில் இருக்கும் சிக்கலான படையணிகளைக் கண்டறிய கூடிய முறைகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில் புற்றுநோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக ஸ்கேன் முடிவு செய்தால், அது முன்னுரிமை மதிப்பாய்வுக்காக ஒரு கதிரியக்க நிபுணருக்கு அனுப்பப்படுவதுடன் அதே நாளில் நோயாளி செல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யப்படுவார்.

இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் 15 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்படும் என்றும், இந்த அணுகுமுறை ஆண்களின் நோய் குறித்த காத்திருப்பைக் குறைக்கும் என்றும் கூறுகிறது.

இந்நிலையில் தற்போது, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் தங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த நோயறிதல் முறையினையும் செல் பரிசோதனையையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1451385

Checked
Fri, 01/09/2026 - 14:54
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed