கவிதைக் களம்

"கடவுள் கேட்கிறார்"

2 months 2 weeks ago
"கடவுள் கேட்கிறார்"
 
"பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய்
காலை மாலை எனக்கு படைக்கிறாய்
சாலை ஓரத்தில் என் மகன்
மாலை வரை இருக்க தவிக்கிறான் !"
 
"பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா?
தட்டும் படையலும் எனக்கு எதற்கடா?
கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும்
சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!"
 
"தடல் புடலாக என்னை பூசிக்கிறாய்
கடல் கடந்து யாத்திரை போகிறாய்
குடல் வற்றி அவன் சாகிறான்
உடல் சிதறி அவன் வாடுகிறான்!"
 
"எங்கும் என்னை தேடி அலையாதே
இங்கு கொட்டும் கறந்த பாலை
அங்கு வறியவன் வாயில் கொட்டு
அங்கு அவன் சிரிப்பில் நானே !"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?"

2 months 2 weeks ago

"மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?"


"என்னை மறக்கத் தெரிந்த மனமே
உனக்கு நினைக்கத் தெரியாதா பெண்ணே? 
விண்ணில் மறைந்த வெண்ணிலாப் போல 
கண்ணில் படாமல் ஒழித்தது எனோ?"


"இரக்கம் அற்று பிரிந்து போனவளே 
உருக்கமாக உன்னைக் நான் கேட்கிறேன்? 
மயக்கும் நளினத்தால் கொள்ளை அடித்தவளே 
தயக்கம் இல்லையோ மற்றவன் கைப்பிடிக்க ?"  


"தேடி வந்தாய் தேனாய் கதைத்தாயே
தேவை முடிந்தது தள்ளி விட்டாயே?
தேவதையே ஒருதரம் திரும்பி பார்க்காயோ 
தேய்ந்து இவன் படும்பாட்டை  காணாயோ?"  
 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை]

2 months 2 weeks ago

"தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை]


தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய  காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக  தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, 


“அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார 
என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ 

“எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் 
அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“  


மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்]  அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [நானும்] அடியவர்க்கு [பிள்ளைக்கு] அவரது பிழை பொறுத்து வாழும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டேன் 08 / 06 / 2007 திகதி அன்று. ஆமாம் திடீரென மனைவிக்கு தோன்றிய தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் [meningitis], பதினாறு மணித்தியாலத்துக்குள், நானோ, பிள்ளைகளோ எதிர்பாராதவிதமாக காலை ஐந்து மணிக்கு அவரின் உயிரை பறித்துவிட்டது. 


"ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? 
எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள்!
சிந்தை ஓடவில்லை?- எம் மனம் ஆறவில்லை? 
எந்தை அவள்-கண்  மூடி  உறங்கிவிட்டாள்!!"


தாயற்ற குழந்தை போலத் என் குழந்தைகளை துன்புற வைத்துவிட்டான். இப்ப  நான் தந்தையும் தாயாக இரு வேறு நிலையில், ஆனால் ஒருவனாக செயல் பட வேண்டிய கட்டாயம் உணர்ந்தேன். 


“நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத்
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“ 

 
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அது போலத்தான் நானும் தந்தையாகவும் தாயாகவும் இனி கவனமாக வாழ்வை நகர்த்தவேண்டும் என்று தாயுமானவரின் இந்த வரி எனக்கு உறுதியையும் வலுவையும் கொடுத்ததை நான் மறுக்கவில்லை.
படித்துக்கொண்டு இருக்கும் இளம் அகவையில், தாயை இழப்பது மிகப்பெரிய மோசமான இக்கட்டான சூழ்நிலை என்றாலும், அவர் மிகவும் கடுமையாக குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காக நல்ல பாடசாலை, நல்ல வாழ்விட சூழல், வருங்காலத்தில் திறமையான தொழில் வாய்ப்பு பெற நல்ல படிப்புகள் எவை, எந்த பல்கலைக்கழகம் முழுமையாக இவ்வற்றை எல்லாம் வழங்குகிறது என்றெல்லாம் ஏற்கனவே தேடி தேடி வைத்தவை எனக்கு ஆறுதல் அளித்தன. அவர் என்னுள் இருந்து இயக்குவது போல் இருந்தது. அர்த்தநாரீசுவரர் போல், தாயும் தந்தையாக வாழ்வு அன்றில் இருந்து ஆரம்பித்தது.
பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான் என்று புறநானூறு: 


"பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;"


கூறுவது போலத்தான் நானும் தாய்மையை ஒரு நேரத்தில் வெளிக்காட்டியும், ஆனால், அதேநேரத்தில், அதை மறைத்து தந்தையாக  தனித்தும் இயங்க தொடங்கினேன்! ஆனால், எனோ தெரியாது, என் மனம் அவர்கள் தாயில்லா பிள்ளை என்று கொஞ்சம் அதிகப்படியாக வசதியை அவர்கள் எப்பவும் கவலைப்படக்கூடாது என்று கொடுத்துவிட்டேன் என்று இன்று எண்ணுகிறேன்! என்னுள் தாயும் இருந்து இயக்குகிறாள் என்பதை எப்படி மறந்தேனோ, நான் அறியேன் பராபரமே! 


"நீலமேனி வாலிழை பாகத்து 
ஒருவன் இருதாள் நிழற்கீழ்"


என்று ஐங்குறுநூறு- நீலத் திருமேனியும் தூய ஆபரணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே - அதாவது "தந்தை எனும் தாய்" யாக என் நிழலில் அவர்கள் இன்று என்பதை ஏன் நான் நினைக்கவில்லை? அது தான் எனக்கு புரியவில்லை??


என்றாலும் தாய் ஏற்கனவே வரிசைப்படுத்தி இருந்த வழிகாட்டி என்னுள் இருந்து இயங்க, அதே வழியில் அவர்கள் பல்கலைக்கழக பட்டங்கள் பெற்று இன்று நல்ல நிலைக்கு வாழ்வில் வந்து, திருமணமும் செய்து மகிழ்வாக இருக்கிறார்கள் . எப்படியாகினும் தாயுமானவர் அறிவுரை வழங்கியது போல:


“என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும் 
கன்றை உதை காலி கதை காண் பராபரமே“ 


பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; போதுமான காலம் கழிந்தபின், தன் கன்றின் நலன் நோக்கி, தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுவது போல, ஒருவேளை கொஞ்சம் அவர்களுக்கு பொறுப்பு ஏற்படுத்தி இருந்தால் இன்னும் மேலாக அவர்களின் வாழ்வு அமைந்து இருக்கலாம்?


நம்மைப் பற்றி நமக்கும் மட்டுமே தெரியும் ஒரு ரகசியம் தான் ‘நான்'!  இனம்புரியா எண்ணங்களோடு ஒழிந்து கிடக்கும் ஆழ்மன ‘நான்' தான் அது!  இதன் வெளிப்பாடு நம்மையறியாமல் அப்பப்ப சூசகமாக பேச்சிலோ எழுத்திலோ உடல் மொழியிலோ  நடந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படி தந்தை என்ற 'நான்', 'தந்தை எனும் தாய்' என்பதை மறந்ததே இதற்கு காரணம். ஆனால் பேரப்பிள்ளைகள் பிறக்க, அவர்கள் இப்ப மெல்ல மெல்ல ஒவ்வொரு பொறுப்பாக தாங்களே உணர்ந்து கடமையாற்றுவது, கட்டாயம் தாயின் நிழல், அவர்களை வெளிப்படையாக நகர்த்துவதை மகிழ்வாக நான் காண்கிறேன்!


'தந்தை எனும் தாய்' ஆகிய நானும் இனி கவலைப்பட ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளின் - தாயின் - செயலே!!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"எரிச்சலை ஊட்டுகிறது"

2 months 2 weeks ago

"எரிச்சலை ஊட்டுகிறது"


"எனக்கு மேல்- ஒரு சக்தி
     உண்டு- அதை நம்புகிறேன்
மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி
     உண்டு- அதை நம்புகிறேன்
அணங்கு மேல்- ஒரு மோகம் 
     உண்டு - அதை நம்புகிறேன்
பிணக்கும் பிரச்சனைக்கும் - ஒரு தீர்வு
     உண்டு- அதை நம்புகிறேன்"


"நந்தியை விலத்தி- ஒரு அருள் 
     காட்டியவனை- எனக்குப் புரியவில்லை
மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை
     வெட்டியவனை- எனக்குப் புரியவில்லை 
அந்தியில் வாடும்- ஒரு மலரை
     மாட்டியவளை- எனக்குப் புரியவில்லை
இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம்
     மூட்டியவனை- எனக்குப் புரியவில்லை"


"வருணத்தை காப்பாற்ற- ஒரு பக்தனை
     நீ அழைக்காதது- எரிச்சலை ஊட்டுகிறது
கருணைக்கு அகலிகை- ஒரு சீதைக்கு
     நீ தீக்குளிப்பு- எரிச்சலை ஊட்டுகிறது
ஒருவனுக்கு ஒருத்தி- பஞ்சபாண்டவருக்கும்
    நீ ஒருத்தி- எரிச்சலை ஊட்டுகிறது
எருமையில் ஏறி- ஒரு சாவித்திரியை 
   நீ கலக்கியது- எரிச்சலை ஊட்டுகிறது"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 

2 months 2 weeks ago

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 


"விமானம்" 


"விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க 
வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது  
செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின  
பேசிய திசையில் பறந்தது விமானம்!"

..............................................

"அறுவடை"


"அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக 
பணம் சேர்ந்து திருமணம் கைகூட 
கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் 
மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!"

..............................................     

"அன்பு"


"அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் 
ஒன்று கூடி இன்பம் பொழிய 
பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே!


நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி 
ஏந்திய காதலை அவளில் கொட்டி  
கொட்டிய ஆசையில் தெரிந்ததே அன்பு!"    


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 

2 months 2 weeks ago

"மூன்று அந்தாதிக் கவிதைகள்" 

"விமானம்" 


"விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க 
வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது  
செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின  
பேசிய திசையில் பறந்தது விமானம்!"

..............................................

"அறுவடை"


"அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக 
பணம் சேர்ந்து திருமணம் கைகூட 
கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் 
மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!"

..............................................     

"அன்பு"


"அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் 
ஒன்று கூடி இன்பம் பொழிய 
பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே!


நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி 
ஏந்திய காதலை அவளில் கொட்டி  
கொட்டிய ஆசையில் தெரிந்ததே அன்பு!"    


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

"காந்தி மடியில் சரணம் அடைந்தேன் ....."

2 months 2 weeks ago

"காந்தி மடியில் சரணம் அடைந்தேன் ....."


"உறங்கிக் கிடந்த மனது ஒன்று
உறக்கம் இன்றி தவிப்பது எனோ?
உறவு தந்து உள்ளம் கவர்ந்து
உலகம் துறந்து போனது எனோ?"


"கண்கள் மூடி கனவு கண்டால்
கலங்கிய ஒளியில் மிதப்பது எனோ?
கருத்த வெள்ளை உருவம் தோன்றி
கண்ணீர் துடைத்து மறைவது எனோ?"


"காற்றில் விண்ணில் குரல் கேட்க
காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ?
காலம் போனாலும் கோலம் மாறினாலும்
காமாட்சி நினைவு வருத்துவது எனோ?"


"காந்தி மடியில் சரணம் அடைந்தேன்
காந்தமாய் என்னை இழுப்பது எனோ?
காமம் துறந்த காதல் அவன்
காதில் கீதை ஓதியது எனோ?"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

மனம் சூடான ஒன்றை விரும்புகிறது

2 months 2 weeks ago
என் வீட்டின் சாளரங்களை
விருப்பப்பட்ட நேரம்
நான் திறக்க விரும்புகிறேன்
பனி மூடிய வீதிகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்
எப்போதாவது ஒரு
வசந்த நாளை நான்
எதிர்பார்த்திருக்கிறேன்
குளிர் சலித்துப் போய்விட்டது
இப்போது என் மனம்
சூடான ஒன்றை விரும்புகிறது
 

தேனீ (ஞானக்கூத்தன்)

2 months 2 weeks ago

ஒரு தேன்கூடு வீட்டில் கட்டப்பட்டுவிட்டது. தேனீக்களை குறை சொல்வது நியாயம் இல்லாத ஒரு செயல். இங்கு என்றும் எங்கும் பூக்கள். தேனீக்கள் பூக்களை காய்களாக்கின்றன. அவை பழங்கள் ஆகின்றன. அதிலிருந்து பறவைகள் காடுகளை உருவாக்குகின்றன, பூமி வாழத் தகுந்த இடமாக தொடர்ந்தும் இருக்க தேனீக்களும் பறவைகளும் விடாமல் பாடுபடுகின்றன.

கூட்டைக் கட்டிய தேனீக்கள் பக்கத்து வீட்டில் கட்டியிருந்தால் நல்லாயிருக்குமே என்றும் தோன்றுகின்றது. வீட்டில் இருவருக்கும் தேனீக்கள் கொட்டிவிட்டன. புளியா அல்லது சுண்ணாம்பா என்ற விஞ்ஞான விளக்கம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. வீக்கமும், நோவும் நின்று, பின்னர் மூன்று நாளில் போனது.
 
கொல்லப்படக்கூடாத பிறவிகள் இவை. மெதுவாக தண்ணீர் அடித்தால் ஓடி விடும் என்றனர். தண்ணீரில் குளித்து இப்பொழுது சுத்தமாக கூட்டில் நிற்கின்றன. உள்ளி கரைத்து ஊற்றினால், அந்த மணத்திற்கு ஓடி விடும் என்றனர். உள்ளித் தண்ணீரை குடித்து விட்டு இப்பொழுது ஆரோக்கியமாக பறந்து திரிகின்றன.
 
இனிமேல் எஞ்சி இருக்கும் வழிகள் எல்லாம் அவைகளின் உயிர்களுக்கு ஆபத்தானவையே. ஆனால் மனமில்லை. இதைத் தெரிந்து தான் இவை என் வீட்டில் கூடி கட்டியிருக்கின்றன போல என்று நினைத்திருக்க, ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையைக் கண்டேன்.
 
************** 
 
தேனீ (ஞானக்கூத்தன்)
----------------------------------

வண்டின் மென்மையான ரீங்காரம்
செவியில் ஒலித்தது
எங்கே வண்டென்று தேடினேன்

வரவேற்பறை முழுவதும்
பறந்து பறந்து சுற்றிப் பார்த்த
அந்தத் தேனீ
என்னையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தது
பால்கனிப் பக்கம் பின்னர் பறந்தது

சில நாட்கள் சென்றதும்
வாரணாசி சாது சன்யாசி ஒருவர்
பால்கனியில் தலைகீழாய்த் தொங்கி
விளையாட்டுக் காட்டினாற் போல
ஒரு பெரிய தேன்கூடு

எண்ணற்ற தேனீக்கள் சுற்றின
தேனீ கொட்டும்
கொட்டினால் கடுக்கும்
சருமம் தடிக்கும் என்றார்கள்

மலையில் கட்டப்பட வேண்டிய தேன்கூடு
என் வீட்டுப் பால்கனியில் கட்டப்பட்டது
ஆட்களை ஏவி தேன்கூட்டைக்
கலைக்கச் சொன்னேன்

அவர்கள் கூட்டைக் கலைத்த பாங்கு எனக்குக்
கொஞ்சமும் பிடிக்கவில்லை
கவலைப்பட்டவாறு உட்கார்ந்திருந்தேன்
வண்டின் மென்மையான ரீங்காரம்
செவியில் ஒலித்தது

சட்டென்று என்னை அறியாமல் மன்னி என்றேன்
சொல்லிவிட்டுத்தானே கட்டினேன் என்பது போலக்
காதில் அருகில் முரன்றது தேனீ.

"உலகின் மிகப் பழைய சுமேரிய காதல் பாட்டின் தமிழ் ஆக்கம்"

2 months 2 weeks ago

 

"உலகின் மிகப் பழைய சுமேரிய காதல் பாட்டின் தமிழ் ஆக்கம்"

ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer  இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இது காதல் கணவனுக்காக முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு உரைக்கப்பட்டது. இந்த காதல் கடித கவிதை 

"Bridegroom, dear to my heart, Goodly is your beauty, honeysweet ,........ " 

அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே உலகின் மிகப்  பழைய காதல் பாட்டும் ஆகும் . இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. 

அந்த பெருமை பெற்ற பாடலை என்னால் இயன்றவரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன்.

"அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!
உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது

ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே,
உன் வசீகரம் இனிமையானது,அமுதம் போல் இனிமையானது

நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே 
எனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன்

ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னை
உன்னுடன் கொண்டு போ

நீ என்னை மயக்கி விட்டாய், எனவே 
எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்

காதல் தோழனே! படுக்கையறைக்குள் என்னை
உன்னுடன் தூக்கி  போ

மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு
என் மதிப்புள்ள காதற் கண்மணியே! உனக்கு என்னை தேன் தர விடு

தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை
மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே

இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு
என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட  விடு 

வீரனே!  நீ என்னை கவர்கிறாய், எனவே 
என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன்
என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்

உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும்
மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு

உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது என்பது எனக்கு தெரியும் இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு

வீரனே! நீ என்னை விரும்புவதால்,
நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால்
எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!!  
"என்லில்" கடவுளின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும்
எனது "ஷு-சின்" அரசனே!

உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின்,
தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,
அளவு சாடியின் மூடி போல
அங்கே உன் கையை எனக்காக மூடு [வை]

மரச் சீவல் சாடியின் மூடி போல
அங்கே உன் கையை  எனக்காக விரி [பரப்பு ]" 


குறிப்பு: 

ஷு சின்' : கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர்.

என்லில்: மழை மற்றும் காற்றுக் கடவுள்"

தமிழ் ஆக்கம்:

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 01] / "Memories of university life" [Poem - 01] / தமிழிலும் ஆங்கிலத்திலும்

2 months 3 weeks ago

"பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 01]
[உயிர் எழுத்துக்கள் வரிசையில் / பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / மெல்பேர்ண், ஆஸ்திரேலியா]


"அறிவிற்கு பத்தொன்பதில் ஒன்று கூடினோம்,
அறுபது ஆயிரம் கனவு கண்டோம்,
ஆறு பாயும் பேராதனை வளாகத்தில்,
ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டோம்!"


"இறுமாப்பு இல்லை வேற்றுமை இல்லை,
இதயங்கள் கலந்து கூடிக் குலாவினோம்,
ஈரம் சொட்டும் மலை அடிவாரத்தில்,
ஈசனைக் கண்டு பரவசம் அடைந்தோம்!"


"உலகத்தை கட்ட பொறியியல் படித்தோம்,
உண்மையை உணர்ந்து நட்பை வளர்த்தோம்,
ஊருக்கு ஊர் ஊர்வலம் போனோம்,
ஊசி முனையிலும் நடனம் ஆடினோம்!"


"எறும்புகள் போல் சுமை தாங்கினோம்,
எண்ணங்கள் வளர்த்து அறிவை கூட்டினோம்,
ஏற்றம் இறக்கம் எம்மை வாட்டவில்லை,
ஏழை பணக்காரன் எம்மிடம் இல்லை!"


"ஐயம் அற்ற வாலிப பருவம்,
ஐயனார் கோயிலிலும் கும்மாளம் அடித்தோம்,
ஒருவராய் இருவராய் மூவராய் திரிந்தோம்,
ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்தோம்!"


"ஓடும் உலகில் நாமும் ஓடினோம்,
ஓரமாய் இன்று நினைவில் ஒதுங்கினோம்  
ஒளவையார் கண்ட நட்பின் மகிமையை,
ஒளதடமாய் என்றும் நிலை நாட்டுவோம்!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"Memories of university life" [Poem - 01]
[published in a memorial magazine / Melbourne, Australia]


"When we were nineteen, We came together,
With sixty thousand dreams,
Amid the flowing river in Peradeniya campus,
Settled with a peaceful mind, and a joyous heart"


"With neither vanity nor difference,
We grew friendship by mingling hearts,
In the Foot of the hill where the water falls,
Felt ecstatic in seeking the grace of god!"


"We studied Engineering to build the world,
We nurtured friendship by understanding truth in all forms,
We marched from town to town and
Even danced at the  top of a pin!"


"We carried weight on our shoulders like ants,
We widened our thoughts and Increased our knowledge, 
Ups & Downs never worried us.
Poverty  or Affluence never within us!"


"We were young, fearless & outgoing,
Even in  temples we enjoyed & romped,
We wandered as one, two & three,
And reached out promptly to help one another!"


"In this moving  world, We too have moved along,
Today We have paused and remembering the past,
The friendship Avvaiyar proclaimed as noble
We will continually keep it till we die!"


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 
 

"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி"   [பாடல் - 2]

2 months 3 weeks ago

"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி"  
[பாடல் - 2 / second poem of  my own eulogy  / உயிர்  எழுத்து வரிசையில்] 


"அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில்  
அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில்     
அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக 
அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"


"ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே 
ஆடை அணிகளை அளவோடு உடுத்து 
ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே 
ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"


"இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே  
இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ?
இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே 
இடுகாடு போய் உறங்குவது எனோ ?" 


"ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி 
ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில்  
ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ 
ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?" 


"உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய்  
உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ?
உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம்
உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"


"ஊடல் கொண்டு சென்ற மனைவியால்    
ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே 
ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ 
ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?" 


"எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய்  
 எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே 
எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது
எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"


"ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம்  
ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ 
ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் 
ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"


"ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி 
ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே
ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே 
ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!" 


"ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து    
ஒழுங்காக தினம் செயல்கள் செய்து  
ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே  
ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?" 


"ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை    
ஓலம்பாட என்னை வைத்தது எனோ?
ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து 
ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"  


"ஔவை வாக்கை மருந்தாக கொண்டு   
ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே  
ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? 
ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


ஈறிலி - கடவுள்
எரிவனம் - சுடுகாடு
ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை
ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன்
ஓலாட்டு - தாலாட்டு
ஔதாரியம் - பெருந்தன்மை
ஔரசன் - உரிமை மகன்
ஔடதம் - மருந்து]
 

"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி"  [பாடல் - 1]

2 months 3 weeks ago

"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" 
[பாடல் - 1 / First poem of  my own eulogy / உயிர்  எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]


"அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக    
அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக   
அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில்   
அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" 


"ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே
ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே 
ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே 
ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"


"இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் 
இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே 
இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே 
இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"


"ஈடணம் விரும்பா சாதாரண மகனே   
ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே    
ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் 
ஈமத்தாடி குடி கொண்ட  சுடலையில்?" 


"உலகத்தில் பரந்து வாழும் பலரின் 
உண்மை இல்லா பற்றில் பாசத்தில் 
உடன்பாட்டிற்கு வர முடியாமல் 
உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"


"ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல்    
ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே 
ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே 
ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"


"எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து   
எழுதுகோல் எடுத்து உலகை காட்டி  
எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் 
என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?" 


"ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல்  
ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே 
ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே  
ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?" 


"ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி 
ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து 
ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே 
ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"


"ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து     
ஒழிக்காமல் வெளிப்படையாக  நடவடிக்கை எடுத்து 
ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற   
ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!" 


"ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு 
ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே 
ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை 
ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"


"ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே
ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே 
ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே
ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஈடணம் - புகழ்
ஈடிகை - எழுதுகோல்
ஈமத்தாடி - சிவன்
உணக்கம் - உலர்ந்ததன்மை
ஊறு - இடையூறு
ஊனம் - உடல் குறை, இயலாமை
எய்யாமை - அறியாமை
ஏகாகாரம் - சீரான முறை
ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு 
ஏகாந்தம் - தனிமை
ஐங்கணைக்கிழவன் - மன்மதன்.
ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, 
காமவெறியின்மை, பொய்யாமை,  கள்ளுண்ணாமை
ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன்
ஓகை - உவகை, மகிழ்ச்சி
ஔவியம் - பொறாமை, அழுக்காறு
ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் 
உற்பத்தியாயிற்றென்று கூறுவோன்
ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்

"சொர்க்கம் போக ஆசை பட்டேன்!"

2 months 3 weeks ago

"சொர்க்கம் போக ஆசை பட்டேன்!"

"சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் 
சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன் 
பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் 
வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !"

"ஊர் பெரியாரைக் கும்பிட்டு கேட்டேன் 
தர்மமும்  தானமும் செய் என்றான் 
ஏர் பிடித்தவனைக் கேலியாய்க் கேட்டேன்
தர்மமும் தானமும் மிஞ்சியது என்றான் !"   

"தூர்ந்த கேணியை திருத்திக் கட்டினேன் 
தேர்த் திருப்பணிக்கு அள்ளிக் கொடுத்தேன் 
தர்ம சாலை கட்டித் திறந்தேன் 
ஊர்ப் பலகையில் பெயரும் போட்டேன் !" 

"மார் தட்டி சத்தம் போட்டேன் 
கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன் 
மோர் ஊற்றி விழா நடத்தினேன் 
சீர் திருத்த அறிக்கை விட்டேன் !" 

"கார் காலம் கோடை ஆக 
தேர்தல் ஒன்று நாட்டை சூழ 
சேர்த்த காசு விளம்பரமாய் மாற 
ஊர்த் தலைவன் பதவி எனக்கு !" 

"வர்ணம் பல நாட்டில் மாற 
கர்ணம் அடித்து கட்சி தாவி 
தர்ம கட்டளைக்கு மந்திரி ஆகி 
வேர்வை சிந்தா பணக்காரன் இப்ப !" 

"ஆர்த்தி எடுத்து எனக்கு வரவேற்பு 
மூர்த்தி வழிபாட்டில் எனக்கு தனியிடம் 
ஊர்த்தி பவனியில் எனக்கு முதலிடம் 
கீர்த்தி பெருமை எனக்கு தண்ணீர் !" 

"சொர்க்கம் போக இப்பவும் ஆசை 
தூர்ந்த கனவை தூசு தட்டுகிறேன்   
பார்த்து ரசித்து புராணம் படிக்கிறேன் 
நேர்த்திக் கடனாய் காவடி ஆடுகிறேன் !"    

"மர்ம சாமியார்கள் புடை சூழ 
ஊர் வலம் சென்று ஆசீர்வதித்து 
நேர்மை பற்றி பிரசங்கம் செய்து 
சர்ச்சை இல்லாமல் களவு செய்கிறேன் !" 

"ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண 
பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள 
சொர்க்க லோகத்திற்கு தலைவன் ஆக 
அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன் !"  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

குழந்தைகள் தேடும் உலகம்

2 months 3 weeks ago
with Public
Public
 
 
ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம்
433105656_7184869668227812_5817417151531

புத்தகங்கள்

சிறார்களின் தனி உலகம்

 

புத்தகங்கள்

முடிவில்லா வசீகரம்

எல்லையற்ற பேரானந்தம்

 

புத்தகங்கள்

கிடைத்தற்கரிய பொக்கிஷம்

 

புத்தகங்கள்

ஆர்வமுள்ள சிறாருக்கு

அளவற்ற மகிழ்ச்சி தரும்

 

புத்தகங்கள்

புதியனவோ பழையனவோ

அச்சிடப்பட்ட புத்தகங்கள்

மனதுக்கு இனிமையானவை

 

சிறுவர்கள் கையில்

புத்தகங்களைக் கொடுங்கள்

புத்தகம் விரும்பும்

எந்தக் குழந்தையும்

கைப்பேசி கேட்டு அடம் பிடிக்காது

 

அவர்களைப் படிக்க வைக்க

அவர்களின் கனவு மெய்ப்பட

அவர்களைச் சிந்திக்க வைக்க

அவர்களுக்கு ஒரு

புத்தகம் கொடுங்கள்

 

உங்கள் குழந்தைகளுக்கு

சிறந்த புத்தகங்களை

பரிசாகக் கொடுங்கள்

 

புத்தகங்கள் சிறந்த பரிசுகளை

உங்கள் குழந்தைகளுக்கு வழங்கும்

ஏனென்றால் 

அவர்கள் தேடும் முழு உலகும்

புத்தகத்துக்குள்தான் உள்ளன. 


 

முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் 

2 months 3 weeks ago

இவ்வுலகில் யாரும் 

பசியோடு இல்லை 

உலகில் அமைதி நிலவுகிறது

எங்கும் சண்டை இல்லை 

 

ஈழத் தமிழரின்  

இனப்படுகொலையை 

ஐ நா விசாரிக்கிறது  

 

யூதர்களும் பலஸ்தீனர்களும் 

ஒருவரை மற்ரொருவர் 

மிகவும் நேசிக்கிறார்கள்

சமாதானம் ஒரே தீர்வென்று 

இரேலியர்கள் விரும்புகிறார்கள் 

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் 

நேற்றைய விருந்தொன்றில் 

ஈஸ்டர் முட்டையை

பரிமாறிக் கொண்டார்கள்   

 

ஆம் நம்புங்கள் 

முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில்  

அறிவாளிகள் அனைவரும் 

கோமாளிகளே!

 

தியா காண்டீபன் 

 

433194175_7181087461939366_6155443488377



 

பழைய நீதிக்கதை

2 months 3 weeks ago

இன்றைய வாழ்க்கை கொடுக்கும் அழுத்தத்தை அளக்க ஒரு சுட்டி, அளவீடு இங்கில்லை. மருத்துவமும் அறியாதது அது. அளவில்லா விருப்பங்களே அழுத்தங்களாக பின்னர் இழப்புகளாக மாறுகின்றன என்று சொன்னாலும், அதைக் கேட்போர் என்று எவரும் இல்லை.

***************************

பழைய நீதிக்கதை

------------------------------
ஒரு ஊரில்
ஒருவர் இருந்தார்
 
அவர் பெயர் அப்துல் கலாம்
 
'கனவு காணுங்கள்' 
என்று அவர் சொன்னார்
 
கலாம் ஐயா
பொதுவானவர்
எளிமையானவர்
நல்லவையே சொன்னார்
 
ஆகவே
கனவிற்கு மேல் கனவென்று
எல்லோரும் காண்கின்றனர்
 
உத்தியோகம் உயர
ஊதியம் இரண்டு மடங்காக
வீடு மாளிகையாக
வாகனம் வசதியாக
பிள்ளைகள் தனியே தெரிய
போன்ற சொந்தக் கனவுகளுடன்
 
அடுத்தவர்களின் கனவுகளையும் வாங்கி
இருப்பதுடன் ஒப்பிட்டு
அதில் சிலதையும் 
சேர்த்துக் கொண்டு
 
கனவுத் தொழிற்சாலைகளாக
கால் முளைத்து நடந்து  கொண்டிருக்கின்றோம்
 
கனவுகளுடன் நடந்த ஒருவர்
நன்றாகத் தெரிந்தவர்
எள்ளவும் எதிர்பாராமல் 
இடறி விழுந்து
ஆஸ்பத்திரியில் இருக்கின்றார்
 
உயிர் தப்பியதே உன்னதம் என்றாகி விட்டது
 
நாலு அடைப்புகள் நெஞ்சில் என்று
திறந்து பார்க்க
ஐந்து அடைப்புகள் அவரின் உள்ளே இருந்தன
 
'ஒரே நாளில் வாழ்க்கையே முடிந்திட்டுதே.....' என்று
உயிர் போய் வந்த அடுத்த நாள்
அழுது கொண்டே இருந்தார்
படைத்தவனுக்கோ
பார்த்தவர்களுக்கோ நன்றி சொல்லாமல்
 
பார்த்து விட்டு
திரும்பும் வழியில்
'கொலஸ்ட்ரால் கூட இருக்கவில்லையே....' என்று
குழம்பி வந்தனர் நண்பர்கள்
 
மீண்டும் மீண்டும்
வேதாளம்
முருங்கையில் ஓடி ஏறி
தலை கீழாகத் தொங்குகின்றது.

கடவுள் விற்பனைக்கு

2 months 3 weeks ago
அவள் ஒருநாள் வீதியோரம்
கூடை நிறைந்த கடவுளர்களை
கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்
 
போவோர் வருவோரிடம்
'கடவுள் விற்பனைக்கு'
என்று கத்திச் சொன்னாள்
 
அவள் சொன்னதை யாரும்
கவனித்ததாகத் தெரியவில்லை
 
பிள்ளை பாலுக்கு அழுதது
கடவுளர்களின் சுமை
அவளின் தலையை அழுத்தியது
 
'கடவுள் விற்பனைக்கு'
அவள் முகம் நிறைந்த புன்னகையுடன்
மீண்டும் கூவினாள்
 
கடவுள் மீது விருப்புற்ற பலரால்
கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்
 
அந்நாளின் முடிவில்
அவளின் வேண்டுதலை ஏற்றுக்
கடவுளர்கள் அனைவரும்
விலை போயினர்
 
433634858_7170450119669767_8258514053132
 
மார்ச் 29, 2024
காலை 7:20

உரையாடலின் அறுவடை

2 months 4 weeks ago

'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன்.

பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன.

இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.    

நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது?

அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது. 

'....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார்.

*************   

உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்)
-------------------------

கேட்கும் கேள்விகளிலிருந்தும்
அளிக்கும் பதில்களிலிருந்தும்
கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும்
நமக்கிடையேயான தூரத்தை
நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம்


தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்
உடைத்து உடைத்து உள் பார்க்கிறது
தொடர்ந்து அளிக்கும் பதில்கள்
உள் திறந்து திறந்து காண்பிக்கிறது


தொடரும் மௌனம்
இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது
பூட்டினால் திறக்கவும்
திறந்தால் பூட்டவும்


கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
நம்மைவிட்டு விடுகிறது

https://akazhonline.com/?p=6797

 

புரட்சியில் விழித்தோம்

2 months 4 weeks ago
 
432882072_7154042677977178_7166801738279இன்று நாம்
 
பனிப் புயலின்
புரட்சியில் விழித்தோம்
எங்கள் நிலப்பரப்பு
மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது
வெள்ளைக் கொடி பிடித்து
சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம்
கட்டிடங்கள் பனியில் மூழ்கின
பள்ளிகள் களை இழந்தன
தபால் சேவை முடங்கியது
இப்போதைக்கு நான்
எங்கள் வீட்டில்
சிறை வைக்கப்பட்டுள்ளேன்
ஆனால்
கொஞ்ச நேரத்தில் நான்
பூட்ஸ் போடுவேன்
விண்வெளியில் நடப்பது போல
நிறை தண்ணீரில் மிதப்பது போல
வெளியில் உலாவுவேன்
வழியை மூடிய
பனியை அகற்றி
புதுப்பொலிவு செய்வேன்
எங்கள் குழந்தைகள்
இன்னும் சற்று நேரத்தில்
ஜாக்கெட்டுகளை அணிவார்கள்
அங்கு கூடுவார்கள்
குதிப்பார்கள் சறுக்குவார்கள்
ஆம்
பனிப் பொழிவின்
பெரு மௌனத்தின் பின்
இங்கு ஒரு
சிறு கலவரம் நடக்கவுள்ளது
 
Checked
Wed, 06/26/2024 - 08:49
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/