கதைக் களம்

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

4 weeks 2 days ago
மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 8:37 AM | வகை: கதைகள்பிரபஞ்சன் icon18_email.gif
"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம்.
"எந்த அற்புத மரி?" என்றேன் நான்.
"இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்."
prabanjan22தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான்.
"என்னத்துக்கு சார் டி.சி?"
"என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?"
"ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்."
"உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார்.
"பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!"
"சார்…"
"ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?"
"இருபத்தொன்பது சார்!"
"என் சர்வீஸே நாற்பது வருஷம்."
"பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்."
"அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
"சொல்லுங்க சார்"
"உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்றாள். யாருகிட்டே? இந்த நரசிம்மன்கிட்டே.”
எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது.
“இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?”
“என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.”
“மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?”
எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது.
”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.”
“இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.”
”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?”
***
நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?
நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள்.
”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள்.
அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன்.
என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன.
“மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி.
என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும்.
“வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள்.
“தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன்.
”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள்.
”நீங்க எப்படி இங்கே..?”
“சும்மாத்தான்.  பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?”
”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?”
“எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?”
“வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.”
எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது.
”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?”
“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.”
சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள்.
”உன் அம்மாதானே அவங்க?”
“ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.”
ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?”
“நான் யாருக்காக சார் படிக்கணும்?”
“உனக்காக,”
“ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.
”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.”
”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“வா.”
“இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள்.
நான் சுமதியைப் பார்த்தேன்.
“பாவங்க,” என்றாள் சுமதி.
“யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான்.
அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை.
“ஸ்மார்ட்!” என்றேன்.
“தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில்.
நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம்.
கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன.
குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம்.
“கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள்.
”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.”
“ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி.
“இருக்கட்டுங்க்கா.”
”என்ன இருக்கட்டும். நீ வர்றே.”
வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன்.
சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது.
“தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி.
*****
மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
“ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன்.
“இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே!
“சார், ஒண்ணு சொல்லட்டுமா?”
“ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.”
“சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?”
“சத்தியமாகக் கிடையாது.”
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்.
“ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”
சிரிப்புத்தான் வந்தது.
“பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”
அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.”
“எனக்கும் தெரியும்.” என்றேன்.
பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள்.
”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?”
நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில்.
“என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி  யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”
“உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன்.
மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.
******
தட்டச்சு : சென்ஷி

உயிர்தரிப்பு – ப.தெய்வீகன்

1 month ago
உயிர்தரிப்பு – ப.தெய்வீகன்
 
 
உயிர்தரிப்பு – ப.தெய்வீகன்

01

மூண்டு அணைந்த காட்டுத்தீயினால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன. கம்பீரமற்ற தரவை நிலத்தைக் கிழித்து பல கிலோ மீற்றர்களுக்கு நீண்டிருந்த புறநகர் நெடுஞ்சாலையில் நாங்கள் பயணித்தோம். மெல்பேர்னின் மேற்குத் திசை வழியாகச் சென்று பண்ணைப்பகுதிகளை தொட்டுவிட்டால், நாம் செல்லும் இடம் வந்துவிடுமென வரைபடத்தில்ஏற்கனவே பார்த்திருந்தேன். வாகனத்துக்குள்ளிருந்த மூன்று பேரையும்விட பேரச்சம்தழும்பிக்கொண்டிருந்த என்னுள் இறுக்கம் கூடியது. கண்ணாடி வழியாகத் தெரியும் பூமியை பார்க்கத்தொடங்கினேன். அடர்பசுமை நிறைந்த பண்ணை நிலங்கள் தெரியத்தொடங்கின. அடுத்து வந்த வயல்களில் அறுத்த புல்லுக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையில் சுருட்டி ஆங்காங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மெல்பேர்னின் மேற்கு நிலத்தின் வழியாக கடலை நோக்கி நீண்டிருக்கும் இந்தப் பகுதி மிகவும் மர்மமானது. ஆளரவமற்ற அமைதி அடர்ந்திருந்தது.வெறித்துக் கிடக்கும் வீதியிலும் அவ்வூர் தனித்துக் கிடந்தது. ஆனந்தக்களிப்பின் உல்லாச புருஷர்கள் போதையில் தள்ளாடுவதும் இங்கே தான் நிகழுமாம். 

எனக்குள்ளே குமிழ்விடும் பதற்றம் வியர்வையாக வழிந்தபடியிருந்தது. வந்து சேரவேண்டியஇடத்தினை அண்மித்துவிட்டோம் என்பது வாகனத்தின் வேகம் தணிந்ததில் புரிந்தது. தகரங்களால்வேயப்பட்ட சமச்சீரற்ற தனி வீடு, அருகில் செல்லச் செல்ல பெரிதாய் தெரிந்தது. அந்த வீட்டின் மீதுஎனக்கு அளவுக்கதிகமான கவனம் குவிந்தது. தனித்த தகரக்கொட்டகை. என்னில் தெரியஆரம்பித்த கலவர ரேகைகளை அழித்து, அமைதிப்படுத்துவதில் எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள். வாகனத்திற்குள் பாட்டுச் சத்தம் குறைந்தது. தகர வீட்டுக்குமுன்பாக கிளைவிட்டிருந்த பெயர் தெரியாத ஒரு மர நிழலில், வாகனம் ஓய்வுக்கு வந்தது. எல்லோரும் இறங்கினோம்.

“வேற ஆக்களும் வருவாங்களோ, நாங்கள் மட்டும்தானோ” என்று கேட்டான் செந்தூரன்.

செல்லக்கிளி ஏற்கனவே இங்கு பல தடவைகள் வந்திருக்கிறான். வாகனம் பூட்டியிருக்கிறதாஎன்று இரண்டு தடவைகள் சோதனை செய்த அப்பன், செல்லக்கிளியை முன்னால் நடக்கவிட்டு, பின்தொடர்ந்தான். மரங்களில் மோதி முறிந்த காற்று குளிர்ச்சியை எங்கள் மீது பொழிந்தது. வீட்டு வளாகத்திற்குள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் எனக்கு முள்ளந்தண்டுகுளிர்ந்தது. உயரமாகக் குவிக்கப்பட்ட வைக்கோல் போன்ற புல்லுக்குவியல், வீட்டின் கிழக்குப்பக்கம் அரணாகத் தெரிந்தது. வீட்டைச் சுற்றி ஒரே காலப்பகுதியில் நடப்பட்ட மரங்கள், சமஉயரத்தில் வளர்ந்து, தகரக்கூரையின் மீது சரிந்து கவிழ்ந்திருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால்கைவிடப்பட்ட மயானம் என்ற நம்பிக்கையைத் தந்துவிடக்கூடிய பாழடைந்த பிரதேசம்போலிருந்தது அந்த வீடு.

வீட்டின் உரிமையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் தொப்பி போட்ட நடுத்தர வயதானவன்வெளியில் வந்தான். எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கலாம். மார்பில் நரை பொங்கத்தெரிந்த முடி, அவனது தொப்பையின் சிறுபகுதியையும் வயதையும் தனக்குள்அழுத்தி வைத்திருந்தது. 

செல்லக்கிளி எங்களை நோக்கித் திரும்பி “இவர்தான் முக்காலா” என்றான்.

“வாங்கோ…வாங்கோ” பியரில் கரைந்த முக்காலாவின் கரகரத்த குரல், பரம்பரையான வெள்ளையின ஆஸ்திரேலியர்களுக்கே வாடிக்கையானது. எங்கள்எல்லோருக்குமான புன்னகையை அவன் செல்லக்கிளியிடம் பகிர்ந்தான். இவனுக்கு முக்காலாஎன்பது எங்களைப் போன்றவர்கள் வைத்துக்கொண்ட பெயர்தான் என்பதைப் புரிந்கொள்வதற்குக்கனநேரமாகவில்லை. முக்காலாவுக்கு பின்னாலேயே வந்த குதிரையளவு நாயொன்று, எங்கள்அனைவரிலும் தேறக்கூடிய இறைச்சியை தனது விழிகளால் எடைபோட்டது. அதன் நீண்ட சிவந்தநாக்கு, கூரிய பற்களை மீறி வெளியே தொங்கியது. முக்காலா தனது செல்லக்குதிரையைகூட்டுக்குள் தள்ளி கதவைப்பூட்டினான். எஜமானின் உத்தரவை ஏற்றுக்கொண்ட அந்த நாய், கூட்டுக்குள்ளிருந்து எங்களைப் பார்த்து கொட்டாவி விட்டது. பற்கள் அனைத்துமே கொத்தாகமினுங்கின.

“இறைச்சியைத் தூக்கிப்போவதற்கு இவ்வளவு ஆட்களை அழைத்து வந்திருக்கிறாயா கிளி?”வேடிக்கையானதொரு புன்னகையென்றாலும் முக்காலாவின் முகத்துக்கு அழகாகஇருந்தது. எங்களில் குறிப்பாக யாரையோ முக்காலாவின் கண்கள் தேடியது. உணர்ந்து கொண்டசெல்லக்கிளி என்னைக் காட்டி “அவர்தான் உங்களைச் சந்திக்க வந்திருப்பவர்” என்றான்.

அடுத்த கணமே எனது சோர்ந்த கரத்தைப் பிடித்துக்குலுக்கினான் முக்காலா. அதுவரைஉள்ளே ததும்பிக்கொண்டிருந்த அச்சம் வெளியில் சிந்திவிட்டதுபோல உணர்ந்தேன்.முக்காலாசொன்னான் – 

“உங்களுக்காகக் கொழுத்த கறியை நேற்றிரவு பண்ணையிலிருந்து தூக்கி வந்திருக்கிறேன், வாருங்கள், காட்டுகிறேன்”

எல்லோரும் முக்காலாவைத் தொடர்ந்தோம். 

02

முக்காலா மஞ்சள் வண்ணச் சப்பாத்துக்களை அணிந்திருந்தான். அவை அவனதுமுழங்கால்கள் வரை நீண்டிருந்தன. நடையில் அநாயாசமான நடனம். முறுகிய தேகத்தில் கைகள்சொன்ன வேகத்தில் அடுத்த நொடியே ஏவலை முடிப்பதற்காகக் காத்திருப்பது போல அவனதுவிரல்கள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். 

பின்வளவில் பரந்துகிடந்த கம்பி வலைக்குள் பல நூறு கோழிகள் அடைக்கப்பட்டிருந்தன. நெடுமரமொன்றில் சிவப்புநிற “பொக்சிங்” பொதி தொங்கியது. எல்லாவற்றையும் தாண்டி, சதுப்பு நிலத்துடன் கூடிய வேலியின் அருகில், மரப்பலகையால் அமைக்கப்பட்ட சிறிய கூடொன்றுதெரிந்தது. தனது இரண்டாவது வீடுபோல உரிமையோடு உள்ளே நுழைந்த முக்காலா, அதற்குள்ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த கொழுத்த ஆடு ஒன்றை செவியில் பிடித்து இழுத்து வந்தான். தனது செவிகளைப் பிடித்திருக்கும் முக்காலாவின் கைகளை ஆடு உறுதியாக நம்பியது. வாலை உதறியது. அதிலிருந்து சேற்று மண் உதிர்ந்தது. 

“என்ன பார்க்கிறீர்கள், உடனே வேலையை முடிக்கலாமா?”

கள்ளப் பாஸ்போர்ட்டில் விமானம் ஏறி இந்த நாட்டிற்கு வந்து இறங்கியவன் நான். எப்போதும்பதற்றத்தை அணிந்தபடி அலையும் சட்டவிரோதச் சீவன். எனது விரல்கள் அச்சத்தில் ஏற்கனவேவிறைத்திருந்தன. இரண்டு கைகளையும் உரசிக்கொண்டேன். முக்காலா கேட்டான் – 

“வழியில் பொலீஸ் நடமாட்டம் ஏதாவதிருந்ததா?”

“இல்லை….இல்லை….” என்றான் செல்லக்கிளி.

“முன்பெல்லாம் வேலைகளை முடிப்பதில் எந்த சிக்கலுமிருப்பதில்லை. ஆறு மாதங்களுக்குமுன்னர் இங்கிருந்து முப்பது கிலோ மீற்றர் தொலைவில், கள்ளமாக ஆட்டு இறைச்சி அடித்தார்கள்என்று ஆறு இந்தியர்களைப் பொலீஸ் கைது செய்து, பெரிய பிரச்சினையாகிவிட்டது. அதற்குப்பிறகு, இந்த ஏரியாவின் மீது எல்லோருக்கும் ஒருவிதமான சந்தேகப் பார்வைவிழத்தொடங்கியிருக்கிறது. உதிரிகளின் குற்ற வரைபடம் போல இந்த ஊர் ஆகிவிட்டிருக்கிறது”

நாங்கள் ஒருவரையொருவர் விநோதமாகப் பார்த்துக்கொண்டோம். செல்லக்கிளி கேட்டான்.

“இந்தப் பக்கம் இந்தியர்கள் இருக்கிறார்களா”

“இந்தப் பக்கமாக வாடி வீடுகள் உள்ளன. தூர இடங்களிலிருந்து வருபவர்கள் அவற்றைவாடகைக்கு எடுத்துக் கூத்தடிப்பார்கள்”

தகரக்கூரைக்குள் செருகி வைத்திருந்த இரண்டு பெரிய கத்திகளை எடுத்து, அவற்றின்கூர் பக்கங்களை மெதுவாக உரசியபடி சொன்ன முக்காலா, கத்தியோடு எனக்கு அருகில் வந்தான். 

“ஒன்றுக்கும் பயப்படாதே, ஒரு சிறிய வேலை அவ்வளவுதான். உன்னுடைய நண்பர்கள்கூடவே இருக்கும்போது என்ன பயம்?”

வீட்டுக்குள் சென்று ‘விக்டோரியா பிற்றர்’ பியர் தகரப்புட்டியை எடுத்து வந்தான். சிகரெட்ஒன்றை வாயில் பொருத்தினான். கைக்கு அடக்கமான பியரை இரண்டு தடவைகள் அண்ணாந்துசரித்து உறிஞ்சினான். இரண்டொரு துளிகள் அவனது தாடியில் வழிந்து விழுந்தன. பியர் சுவைநாவிலிருந்து அருகும் முன்னரே, சிகரெட் புகையை இழுத்தான். தணல் பிரகாசமாக எரிந்தது. அவனது கொலை நரம்புகளில் சென்று கங்குகளாய் பரவியது.

“ஆடு பதற்றமாக இருக்கும்போது வெட்டினால், இறைச்சி ருசியிராது. அது நிதானமாக இருக்கும் போதுதான் வெட்டவேண்டும். அதுதான், ஆட்டுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. இல்லையாகிளி? நீங்கள் இரத்த வறையும் கேட்டீர்கள் இல்லையா”

என்னைத் தவிர எல்லோரும் முக்காலாவைப் பார்த்து தலையாட்டினார்கள்.

பற்றி முடிந்த சிகரட் அடிக்கட்டையை தரையில் அழுத்தி, வெளியில் தட்டிவிட்டான்.ஆட்டின் அசைவுறும் கண்களைக் ஒருதடவை உற்றுப்பார்த்தான். தனது பொக்கெட்டிலிருந்துஎடுத்த சிறுதுண்டு கயிற்றினால் ஆட்டின் நான்கு கால்களையும் ஒன்றாக இழுத்துக் கட்டினான். வெள்ளிக்கிண்ணமொன்றை ஆட்டின் கழுத்துக்கு அடியில் வைத்த முக்காலா, இழுத்துக் கட்டியநான்கு கால்களையும் தனது ஒரு காலால் அழுத்திப்பிடித்தான். ஆட்டின் வாயை ஒரு கையால்சேர்த்து மூடினான். அதன் தொண்டைப்பகுதியில் ஓடும் நரம்பினை, எந்தக் குழப்பமும் இல்லாமல், மினுங்கிய சிறு கத்தியால் ஒரே இழுவையில் அறுத்தான். சீறிப்பாய்ந்தஇரத்தம் வெள்ளிக்கிண்ணத்தில் ஓசையோடு நிரம்பி நுரைத்தது. முக்காலாவின் கால்களுக்குள்கிடந்த ஆட்டின் உடம்பில் உயிர் விலகித் துடித்தது. 

ஒரு கொலையின் சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பதைஎன்னால் நம்பமுடியவில்லை. அழைத்தபோது நம்பிக்கையோடு தனது செவிகளைக் கொடுத்து, மரக்கூட்டிலிருந்து வெளியில் வந்த பொசு பொசுவென்ற வெண்ணிற ஆட்டின் துடிப்பு நிரந்தரமாகஓய்ந்தது. அதன்பிறகு, கழுத்தோடு வட்டமாக கத்தியை முன்பின்னாக ஓடவிட்ட முக்காலா, ஒருகிளையிலிருந்து பூவைப்பிடுங்கும் லாவகத்துடன், சில செக்கன்களிலேயே ஆட்டின் தலையைத்தனியாக அறுத்தெடுத்தான். எஞ்சிய இரத்தத்துளிகள் நிலத்தை நனைத்தன. திறந்திருந்த ஆட்டின்கண்களில் என்னுடைய பிம்பம் தெரிந்தது. எனக்கு இரண்டு கண்களும் இருட்டியது.

“கிளி நான் கொஞ்சம் வெளியில நிக்கவா?”

பதிலை எதிர்பாராமல் வீட்டின் முன்பக்கமாக வந்தேன். ஏற்றுக்கொள்ள முடியாத அந்தமரணத்தின் கணங்களும் ஆட்டின் கடைசித்துடிப்பும் நெஞ்சில் அறைந்தது. என் கண் முன்னால்நட்சத்திரங்கள் பறந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நடக்கும் போதும், எனது கால்களைமுக்காலா அழுத்திப் பிடித்திருப்பது போன்ற பாரத்தை உணர்ந்தேன்.

செந்தூரன் பின்னாலேயே வந்தான். 

“மச்சான், காருக்குள்ள சிகரெட் கிடக்கு. ஒண்டை எடுத்து அடி. முக்கியமானகாரியத்துக்கு வந்திருக்கிறம். அதை மறந்திடாத”

நான் அந்தக் காட்சியைப் பார்த்திருக்கக்கூடாது. உயிர் பிரியும் அந்த வலியை ஒருபோதும் அங்குநின்று உணர்ந்திருக்கக்கூடாது. விக்டோரியா பிற்றர் பியரும் சிகரெட் புகையும் ஒரு மரணத்தின்துர்நாற்றமாக வயிற்றைக் குமட்டியது. இப்போது எப்படி திரும்பவும் உள்ளே போவது?கசாப்புக்காரனிடம் தான் எனதுஉடலை ஒப்படைக்கப்போகிறேனா?

வீட்டுக்கு முன்னால் நீண்டிருந்த கிறவல் பாதையினால் நடந்தேன். சிறிது தூரம் சென்றதும், பாதைக்குக் குறுக்காக நீண்ட மண் நிறத்திலான கொழுத்த பாம்பொன்று அசைந்தபடி கிடந்தது. எனது அருகாமையை தன் சருமத்தினால் உணர்ந்து, தலையை நிமிர்த்திப் பார்த்தது. அந்தஇடத்திலேயே கால் மடங்கி விழுந்து விடப்போவதைப்போல எடையிழந்தேன். என் முழுத்தேகமும்ஒரு துணி போல சுருங்கி விழுவதாய் உணர்ந்தேன். என்ன அதிசயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை. அந்தப் பாம்பைப் பார்த்தபடியே பின்பக்கமாக ஓடிவந்து, முக்காலா வீட்டு வாசலுக்குள் விழுந்தேன்.

“என்ன நடந்தது….உன்னை வரட்டாமடா….வா” 

செந்தூரன் கீழே கிடந்த என்னை நோக்கி ஓடிவந்தான். என்னால் நிலத்திலிருந்துநிதானித்து எழுந்துகொள்ள சில நொடிகளானது. நான் இப்போது உள்ளே போகவேண்டுமா? 

“டேய் வந்த வேலைய மறந்திடக்கூடாது கெதியா வா” 

சினம் தலைக்கேறியது.

“டேய், இறைச்சி வெட்டுறவனிட்ட என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறீங்களேடா… அவன்என்னத்தை செய்தாலும் அது காலம் பூராவும் என்ர உடம்பில இருக்கப்போகுது தெரியுமா….”

“மச்சான், இந்த விசயம் உனக்கு முதலே தெரியும்தானே. தெரிஞ்சுதானே வந்தனீ….”

“இதைச் செய்யப்போறவன், ஆடு – மாடு வெட்டுறவன் எண்டு எனக்குத் தெரியாதடா….”

“இப்ப உன்ர பிரச்சினை, முக்காலா ஆடு வெட்டுறதா? நீ வந்த விசயத்தில கவனமா இரு. அவன்ஆட்டை வெட்டினால் என்ன, மாட்டை வெட்டினால் என்ன?”

“இந்த நாட்டில குடியுரிமை எடுக்கவேணும் எண்டு, திருட்டுத்தனமாக வாறதுதான், நான்செய்யப்போற முதலும் கடைசியுமான கள்ள வேலையாக இருக்கவேணும் எண்டு நினைச்சனடா. ஆனால், இஞ்சவந்த பிறகும்……நினைக்க… தலை வெடிக்குது”.

செந்தூரனுக்கு என்னுடைய கடைசி நேரக் குழப்பம்புரிந்தது.

“டேய் …… ஒரு நாட்டுக்குள்ள கள்ளமாக வந்து குடியுரிமை எடுக்கிறது எண்டால், அதுஎயார்போர்ட்டோடயோ படகு வந்து இறக்கிற இடத்தோடையோ முடியுற வேலை இல்ல. பாஸ்போட் எடுக்கிற வரைக்கும் அந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டிக்கிடக்கு. இஞ்சஅதிகாரத்தில இருக்கிறவன், எத்தனையோ குறுக்கு வழிகளில யோசிச்சு, யோசிச்சு எங்களுக்குப்பொறி வச்சு சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பிறதில குறியா இருக்கிறான். நாங்கள் வந்த நாடு, இடையில நிண்டநாடு எண்டு எல்லா நாடுகளோடையும் ஒப்பந்தங்கள் எழுதி, பெரிய திட்டங்களைப்போட்டு, எங்களை அதில விழுத்தப் பாக்கிறான். ஆனால், நாங்கள் எந்த அதிகாரமும் ஆதரவும்இல்லாத அநாதைச்சாதியடா. அகதியள். ஒரு பெரிய அரசாங்கத்தோட மோதுறதெண்டால், அவங்களைப்போல நாங்களும் கள்ளத்தனமாக யோசித்தால் தான் சரி. அகதி ஒருத்தன் செய்யிறகளவுக்கு கருணை இருக்கு. அது வாழ ஆசைப்படுகிற மானுட உத்தரிப்பு. இஞ்ச ஆடு வெட்டுறஆஸ்திரேலியன்தான், அந்த கடவுச்சீட்டுக்கான வழிய காட்டப்போறான். சரி, இவன்தான் அந்தஇமிகிரேசன் அதிகாரி எண்டு நினைச்சுக்கொண்டு, காரியத்தில இறங்குவம். அவ்வளவுதான்வித்தியாசம். இனியும் பிந்தக் கூடாது. பாஸ்போட் தாற பரமபிதாஉள்ள பாத்துக்கொண்டிருக்கிறான், வா”

03

முக்காலா வீட்டுக்குள் நின்றுகொண்டிருந்தான். செல்லக்கிளி அவனருகில் நின்றான்.இருண்ட அறையினுள் அவர்களது கண்கள் செந்தணலாய் எரிந்து கொண்டிருப்பது போலிருந்தது. அதிக பொருட்கள் இல்லா அந்த தகரக்கூரையுடைய வீட்டினை, முக்காலாஇப்படியான காரியங்களுக்குத்தான் உபயோகிப்பது போல் தெரிந்தது. மூலையிலிருந்த அடுப்பில்விறகு எரிந்து கொண்டிருந்தது. அடுப்புக்குப் பக்கத்தில் பெரிய சருவம் ஒன்றில் பலநீளங்களிலான அலுமீனியத் தடிகளிருந்தன. 

“மச்சான்…. நீ ஒருத்தரையும் நிமிர்ந்து பாக்காத. கண்ணை மூடிக்கொண்டு குப்புறப்படு.அஞ்சு செக்கனுமில்ல. உடன முடிஞ்சிடும். கொஞ்ச நேரம் பல்லைக் கடிச்சுக்கொண்டிரு. விளங்குதா” – செல்லக்கிளி அருகில் வந்து நம்பிக்கை தந்தான்.

இந்த நிலத்தில் ஒரு வாழ்வு நிரந்தரமாகுவதற்கு இதுதான் கடைசி வழியென்றால், அதனைஇக்கணமே தீர்மானிக்கட்டும். திருப்தியாக இரண்டு சிகரெட் பற்றியிருக்கிறேன். அது போதாதா? தைல மணம் பரவிக்கொண்டிருந்த அந்த அறையில், சட்டையைக் கழற்றிவிட்டு வெற்றுடம்பாகநடுவிலிருந்த நீளமான மேசையில் குப்புறப்படுத்தேன். எதுவும் கேட்கவில்லை. அறையின்மூலையில் கங்குத் தீயின் ஓசை மாத்திரம் அதிர்ந்து பரவியது. சற்று நேரத்தில் என்னைநோக்கி வருகின்ற காலடிச் சத்தங்கள் பேரிடியாகக் கேட்டன. அச்சத்தால் குளிர்ந்த நான்கு கைகள்எனது இரண்டுகால்களையும் மேசையோடு சேர்த்து அழுத்திப்பிடிக்கின்றன. எனது கைகள்இரண்டையும் செல்லக்கிளி பிடித்துக்கொண்டான். கைகளை மேசையோடு அழுத்திப்பிடித்திருக்கும் என் வாயில் தடித்த மரத்துண்டொன்றை திணித்தான் முக்காலா.

கங்குகளின் ஓசையும் வாசனையும் ஒருங்கே என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். விக்டோரியா பிற்றர் பியரும் சிகரெட் வாசனையும் என்னை அண்மிக்கின்றன. 

முதுகுத் தசையைக் கிழித்ததுபோல தீயினால் இரண்டு ஒத்தடங்கள், ஆழமாக என்னைப் பிழந்தன. தடம்பட்ட நீள் காயங்கள் இதயத்தின் வழி ஈட்டிபோல பாய்ந்தன. மூளை நரம்புகளில் ஒன்றிரண்டுவெடித்து உள்ளே உடலெங்கும் அமிலமாய் கரைந்தோடியது. தடித்த தோலின் மீது பதிந்தஅலுமீனியத் தணல் குழாய், சருமத்தை சதையோடு பொசுக்கியது. அந்த நேரம் எனது கால்களையும்கைகளையும் மேலும் அழுத்திக்கொண்டதால் எனது தேகம் பெருவலியிடம் கோரமாகஅடைக்கலமாகியது. குறி விறைத்தது. தடித்த மரத்துண்டினை பலம் முழுவதையும் திரட்டிக் கடித்துவலியைக் கரைக்கப் பார்த்தேன். வாய் நீர் வடிந்து நிலத்தில் வீழ்ந்தது. விழிகள் இரண்டும்மேலே செருகின.

“அவ்வளவும் தான் மச்சான்….அவ்வளவும் தான்…முடிஞ்சுது…முடிஞ்சுது…..”

கைகளைத் தளர்த்திவிட்டு செல்லக்கிளி என்னை அணைத்துக் கொள்கிறான். “எல்லாம்முடிஞ்சுது மச்சான்….சக்ஸஸ்….” என்கிறார்கள். மூவரும் சேர்ந்து, நான் மேசையிலிருந்து எழுந்து கொள்ள உதவினார்கள். முதுகில் இன்னமும் தீவடிந்து கொண்டிருந்தது. உடம்பில் ஒருபாகம் சுவாலையுடன் எரிந்துகொண்டிருப்பது போலிருந்தது. அழுதேன். பெரு வெப்பமேறியகொடிய திரவமாகக் கண்ணீர் என் கன்னத்தில் வடிந்தது.

“எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்துவிட்டது, நீ கெட்டிக்காரன். என்னிடம் வருபவர்கள், டொக்டர் மெலினாவிடம் போவதுதான் வழக்கம். இந்தக் காயம் சொந்த நாட்டில் இராணுவத்தினர்அடித்தது என்று அவர் உறுதிப்படுத்திக் கொடுக்கும் மெடிக்கல் சேர்டிபிக்கெட்டை ஆஸ்திரேலியஇமிகிரேசன் ஆட்கள் ஒரு போதும் நிராகரித்ததில்லை. கிளி..…உனக்குத் தெரியும்தானே…டொக்டர் மெலினா”

பொறுப்பான கேள்விகளுடன் முக்காலாவின் குரல் ஒலித்தது. 

“இளம் இரத்தம் பாய்கின்ற கட்டிளம் காளையே…..! இங்கு நான் அறுபது வயது ஈரான்கிழவனுக்குக்கூட தீத்தடம் வைத்து, அவருக்கு மெலீனா சேர்ட்டிபிக்கட் கொடுத்த மூன்றுமாதங்களில் இமிகிரேசன் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை கொடுத்திருக்கிறது. ஒன்றுக்கும்அஞ்சாதே. ஆஸ்திரேலியனாக மாறும் நாட்களை எண்ணிக்கொண்டிரு. நெருங்கிவிட்டாய்” 

என்னை நோக்கி முக்காலா பேசிக்கொண்டிருந்தான். என்னால் அவனது முகத்தைநிமிர்ந்துபார்க்கமுடியவில்லை. மேசையிலிருந்து எழுந்து அப்பனைப் பிடித்துக்கொண்டு வெளியேவந்தேன்.

வெட்டியகற்றப்பட்ட ஆட்டின் தோல்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருந்தன. ஆட்டின் தலைஎங்காவது தெரிந்துவிடுமா என்று தேடினேன். காணவில்லை. எங்களுக்கான இரத்தம் தோய்ந்தஇறைச்சி இறுகக்கட்டிய பொலீத்தீன் பையொன்றில் பொதிசெய்து ஆயத்தமாயிருந்தது. அருகில்சென்று, அந்தப்பொதியை வருடிப்பார்த்தேன். என்னையே நான் வருடுவது போலிருந்தது.

பணத்தை எண்ணிக்கொடுத்து முக்காலாவின் கைகளைப் பிடித்து நன்றிகளைச்சொரிந்தான் செல்லக்கிளி.

இரண்டு வாரங்களில் டொக்டர் மெலீனாவிடம் போகுமாறு மீண்டும் சொன்ன முக்காலா, காயத்தில் சீழ் வருவதுபோன்ற ஏதாவது சிக்கல் காணப்பட்டால், எந்த மருத்துவர்களிடமும்சென்றுவிடவேண்டாம் என்றும் தன்னிடம் வருமாறும் சொன்னான்.

வெளி முற்றத்துக்கு வந்தோம். காரியம் முடிந்த திருப்தியினால் எல்லோரது குரல்களும் சமசுருதியில் ஒலித்தன.

நான் முக்காலாவைப் பார்த்து “நன்றி” என்றபடி காரில் ஏறினேன். நாடற்றவனுக்கு வாழும் உரிமை வாங்கிக் கொடுப்பவன் நான்  எனும் கம்பீரத்தோடு பரிசுத்தவானைப் போல நின்று கொண்டிருந்த முக்காலா என்னருகே ஓடிவந்து,

“நீ விடுதலைக்காய் போரிட்ட வீரன் சகோதரா, எனக்குத் தெரியும். செல்லக்கிளி சொல்லியிருக்கிறான். எதற்கும் அஞ்சாதே” – என்றான்.

முதுகில் எரியும் காயத்தின் மீது எனது சொந்த நிலத்தின் கந்தக எரிச்சல்  எழுந்தது.

முற்றும்.

***

-ப.தெய்வீகன்

 

 

https://vanemmagazine.com/உயிர்தரிப்பு-ப-தெய்வீகன/

இரண்டாவது தலைவர்- யோ.கர்ணன்

1 month 1 week ago

நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும்,  இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிருந்தாலும் இனி இஞ்சயிருந்தால் பிசகுவரும். நான் சுவிஸ் போகப்போறன். நான் அபுதாபி போகப்போறன் என்று கதைக்கிறவையள் ஒரு பக்கம்இ மாறி மாறி ரெலிபோன் நம்பருகள் பரிமாறுறவை ஒரு பக்கமென பெரிய சத்தமாக இருக்கிறது.

எங்கட ஆளின்ர கையில விடுதலைப் பத்திரத்தை இப்பதான் ஒரு ஆமிக்காரன் குடுத்திட்டுப் போறான். ஆள் பத்திரத்தை ஒன்றுக்கு மூன்றுதரம் விஸ்தாரமாக வாசிச்சார். மூன்று மொழியிலயும் விசயத்தை இரத்தினச் சுருக்கமாக எழுதியிருக்கினம். என்ன இரத்தினச் சுருக்கமாக எழுதியென்ன, விபரம் என்னவோ பரிசு கெட்ட விபரம் தான். இன்ன ஆள், இன்ன இன்ன இடத்தில இருந்து வந்து கடைசிச் சண்டையில சரணடைஞ்சு, இவ்வளவு காலம் வைச்சிருந்து புனர்வாழ்வு குடுத்திட்டு விடுறம் என்றதுதான்.

எங்கட ஆளுக்கு முன்னுக்கிருக்கிற ஆள் ஆரென்று பார்த்தால், அது கலாமோகன் மாஸ்ரர். மாஸ்ரர் தான் கனகாலமாக ஆளுக்கு பொறுப்பாக இருந்தவர். மாஸ்ரரிட்ட நல்ல பணிஸ்மன்ற்றெல்லாம் வாங்கியிருக்கிறார். இப்ப எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்க, வயிறு பத்தி எரியுது. என்னயிருந்தாலும் தன்ர கையில பத்திரம் கிடைக்க முதல் மாஸ்டருக்கு கிடைச்சிட்டுது.இதென்ன நீதி? மோட்டுச் சிங்களவன் என்ன இன்குவாரி பண்ணினவன்? இது பெரிய அநீதியென யோசித்தார். பிறகு, எல்லாம் எங்கட ஆக்கள்தானே. எப்பிடியெண்டாலும் வந்து சேரட்டும் என்றும், எங்கட ஆக்கள் இப்பிடி மாறி மாறித் தங்களுக்க அடிபட்டுத் தானே சுதந்திர தமிழீழம் இல்லாமல் போனது என்றும் யோசித்து விட்டு, மாஸ்ரரைத் தட்டிக் கதைக்க முடிவு செய்தார்.

இந்த காம்பில ஒன்றரை வருசமாக இரண்டு பேரும் இருக்கினம். ஆனால் , ஒரு வசனம் கதைச்சது கிடையாது. கண்டால் ஒரு சிரிப்பு. அவ்வளவுதான். கதைக்கிறதில மாஸ்ரருக்கு ஒரு பிரச்சனையுமிருக்கிற மாதிரித்தெரியவில்லை. எங்கட ஆள்த்தான் கதைக்காமல் திரிஞ்சார். இப்ப விருப்பப்பட்டு மாஸ்ரரின்ர முதுகை தட்டுறார்.

“எப்பிடி மாஸ்ரர்… வீட்ட போய் என்ன செய்யப் போறியள்?…”

மாஸ்ரர் ஒரு பக்கமாக திரும்பியிருந்து கொண்டு கதைக்கத் தொடங்கினார். சிங்களவன் ஆளும் நாட்டில் அடிமை வாழ்வு வாழ இஸ்டமில்லையெனவும், ஆனால் விதி தமிழர்களை பழிவாங்குகிறது எனவும், தான் ஏதாவது கப்பல் மூலம் கனடா அல்லது அவுஸ்ரேலியாவிற்கு போகவுள்ளதாகவும் கூறினார்.

 

மாஸ்ரரின்ர குணம் இன்னும் மாறயில்லை. மாஸ்ரர் முந்தி அரசியற்துறையில இருந்தவராம். நல்லாக் கதைப்பார். இயக்கத்தில ஞாயிற்றுக்கிழமையில கலைநிகழ்ச்சியள் வைப்பினம். இதில மாஸ்ரரின்ர தலைமையில பட்டிமன்றம் நடக்கும். தமிழீழப் பெண்கள் சாதனைப் பெண்களா ? இல்லையா?, தமிழீழத்தை அடையச் சிறந்தவழி அகிம்சைப் போராட்டமா ? ஆயுதப் போராட்டமா?, இந்தியா தமிழீழத்தின் நட்பு நாடா? எதிரிநாடா? போன்ற விசயங்கள் பட்டிமன்றத் தலைப்புக்களாக இருக்கும். எங்கட ஆளும் மாஸ்ரரின்ர பேச்சுக்கு கைதட்டின ஆள்த்தான்.  இரண்டு பேருக்குள்ளும் இந்தக் கதைகள் வளர்ந்து கொண்டிருக்க, ஒரு ஆமிக்காரன் வேகமாக ஓடிவந்து விசிலடிச்சான். எல்லோரையும் அமைதியாக இருக்குமாறு கத்தினான். இவனின்ர வேகத்தை பார்த்த மற்றைய ஆமிக்காரரும் ஓடியோடி எல்லோரையும் ஒழுங்கான வரிசையில் இருத்திச்சினம். ஒழுங்கில்லாமல் அப்பிடிஇப்பிடி இருக்கிற சிலருக்கு அடியும் விழுது.

ஆமிக்காரர் பரபரப்பாக இருக்கிறதைப் பார்க்க, ஆரோ பெரிய ஆள் வரப் போறார் என்பது விளங்குது. வழமையாக, ஆமிக்காரர் ஓடித்திரியிற வேகத்தை வைச்சு வரப்போற ஆளின்ர தரத்தை தீர்மானிக்கலாம். இந்த வேகம் சாதாரண வேகம் இல்லை. அசுர வேகம்.

ஆர் வரப்போயினம்? என்று எங்கட ஆள் மண்டையைப் போட்டுப் குழப்பிக் கொண்டிருக்குது. ராஜபக்ச குடும்பத்தில ஆரும் வரப்போயினமோ? கருணா அம்மான் வரப் போகிறாரோ? வேற வெளிநாட்டு தூதர் ஆரும் வரப்போயினமோ? என்று பலதையும் யோசிக்கிறார். ஒன்றும் பிடிபடயில்லை.

கொஞ்ச நேரத்தில விருந்தாளியள் வருகினம். வெள்ளையும் மண்ணிறமும் கலந்த சேட்டும். வெள்ளை ரவுசரும் போட்டு கூலிங்கிளாசோட ஒராள் வருகுது. அவர்தான் விருந்தாளியாக இருக்க வேணும். அவருக்குப் பக்கத்தில வலு பவ்வியமாக ஆமிக்காரர் வருகினம். ஆமிக்காரரென்றால்,சும்மா ஆமிக்காரரில்லை. வன்னிக் கட்டளைத் தளபதியாயிருக்கிற கமால் குணரட்ண ஏற்கனவே இந்தக் காம்பிற்கு வந்திருக்கிறார். அவரும் கூலிங்கிளாசுக்குப் பக்கத்தில பவ்வியமான சிரிப்போட வாறார். எல்லாம் பொடியளும், எங்கட ஆள் மாதிரியே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கினம்.

இதெல்லாம் சரி. இதுக்குப் பிறகு நடந்துதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக எல்லாப் பொடியளாலும் நோக்கப்பட்டது. நடக்கிறது உண்மையோ என்று கூட எங்கட ஆளுக்கு சந்தேகம் வந்திது. தமிழில,  வலு சுத்தத் தமிழில, நாங்களெல்லாம் கதைக்கிற தமிழில வந்தேறு குடிகளென்று சரத்பொன்சேகாவால் சொல்லப்பட்ட தமிழர்களின் தமிழில் அந்தாள் வணக்கம் சொல்லிச் சிரிச்சார். இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராகப் பொத்திப் பிடிச்சுக் கொண்டு கதைக்கத் தொடங்கினார். அவர் கதைச்சதை விடச் சிரிச்சது அதிகம். இடையில் ஒருமுறை கண்ணை வேறு துடைத்துக்கொண்டார். அவர் கதைத்ததின் சாரம் நானும் உங்கட ஆள்த்தான். எல்லோரும் ஒரே ஆக்கள்தான். தமிழர் சிங்களவரென்ற வித்தியாசமில்லை. யுத்தம் கொடூரமானது. எல்லோருமதைப் புரிந்துகொள்ள வேண்டும். இனி வன்முறையை நாடாதீர்கள். உங்களை உயிரோடு விடும் அரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருங்கள் என்பதுதான்.

 

அவர் நல்ல உற்சாகமான மனுசனாக இருக்க வேணும். இந்த நாளைச் சந்தோசமானதாக்க யாராவது ஒருவரைப் பாடச்சொன்னார். ஒருதரும் எழும்பயில்லை. இந்தப் பெரிய கூட்டத்தில ஒரு பட்டுக்காரன் இல்லையோ? முந்தி எவ்வளவு பாட்டை இயக்கம் விட்டது. இயக்கத்தின்ர மரியாதையைக் காப்பாற்ற ஒராளை எழும்பச் சொன்னார். முன் வரிசையிலயிருந்து ஒருவன் எழும்பினான். என்ன பாட்டு பாடப்போகிறான் எனக்கேட்டார்.

“புலி உறுமுது புலி உறுமுது”என்று முதல்வரியை எடுத்து விட்டான். அவரின்ர முகம் ஒரு மாதிரிப் போனது.பிறகு மெல்லிய சிரிப்புடன் சொன்னார் – “ஏனப்பு திரும்பத் திரும்ப அப்பிடிப் பாட்டுகள் பாடுறியள்… வேற நல்ல பைலாப்பாட்டு… ஆ… சிங்களத்தில இருக்குதே ‘என்டமல்லி’ பாட்டு… அது மாதிரி…” என்று. பாடுவதற்கு தயாரான பொடியனுக்கு அந்தப் பாட்டுத் தெரியாது. கடைசியில,அவரோட வந்த ஒரு ஆமிக்காரன் றப்பட்ட றப்பட்ட சொல்லி ‘என்ட மல்லி என்ட மல்லி’என்று பாட எல்லோரும் ஆடிஆடித் தாளம் போட்டு அந்த புரோகிராமை முடிச்சினம். அவரும் போயிற்றார்.

முன்னால இருந்த மாஸ்ரரை தட்டி, இது ஆரென எங்கட ஆள் கேட்டுது. மாஸ்ரர் ஒன்றும் சொல்லுறார் இல்லை. பேசாமல் இருந்தார். பிறகு, “அதைவிடு… உதுகளைப் பற்றி யோசிக்காமல் உருப்படியான காரியங்களைச் செய்..’| என்றார்.

எங்கட ஆளுக்கு வந்த கோபத்தில மாஸ்ரரின்ர முதுகில ஒரு மிதிமிதித்தால் என்ன என யோசித்தார். மாஸ்ரர்… இந்த உறண்டல் மனுசன் இப்பிடித்தான். அங்கயும் இப்பிடித்தான். இஞ்சயும்  இப்பிடித்தான். இன்னும் குணம் மாறவில்லை. இந்த இடத்தில மாஸ்ரர் இல்லாமல் வேறயாரும் இருந்திருக்க வேணும். எங்கட ஆள் ஒரு போடுபோட்டிருக்கும். தன்ர முதலாவது பொறுப்பாளரென்றதால பேசாமலிருக்கிறார்.

எங்கட ஆளின்ர குறூப் ரெயினிங் முடிச்சு முல்லைத்தீவில நிற்குது. மொத்தம் நூற்றியிருபது பேர். எல்லாரும் யாழ்ப்பாணத்துப் பக்கப் பொடியள். ஒருநாள் சூசையண்ணை வந்து கதைச்சு, கடற்புலிக்கு வர விருப்பமானவர்களை கையை உயர்த்தச் சொன்னார். அதில கையை உயர்த்தி கடற்புலிக்கு போனதுதான் எங்கடஆள். அங்க போனால், இவர்தான் உங்கட பொறுப்பாளரென்று ஒரு ஆளை அறிமுகப்படுத்துகினம். ஒருபெரிய சிரிப்போட மாஸ்ரர் வாறார். மாஸ்ரர் வலு கட்அன்ட்ரைட்டான மனுசன். விடியப்புறம் நாலரைக்கு எழும்பவேணும்.ஆறுமணிக்கு சத்தியப்பிரமாணம் எடுக்கவேணும். ரெயினிங்கில பம்மாத்து விடக்கூடாது. சென்ரியில நித்திரை கொள்ளக்கூடாது. கிழமைக்கு கிழமை குளோரோகுயின் குளிசை போடவேணும்.

கடலே தெரியாமல் வளர்ந்த எங்கட ஆள், மாஸ்ரரின்ர பொறுப்பிலதான் கடல் றெயினிங் எடுக்குது. பத்து கடல்மைல் நீந்தச் சொல்லுங்கோ. அல்லது முல்லைத்தீவு கடலில ஒரு வோட் குடுத்து தாய்லாந்தின்ர சிறீரச்சா துறைமுகத்தில ஏறச்சொல்லுங்கோ. எங்கட ஆளுக்கு எல்லாத்துக்கும் ஓம்தான். எல்லாம் மாஸ்ரரின்ர கண்காணிப்பில பழகினதுதான்.

உண்மையில,மாஸ்ரர் நல்லவரா? கெட்டவரா ? என்பது இன்றுவரை எங்கட ஆளுக்கு தெரியாது. நல்ல பொறுத்த பணிஸ்மன்றும் குடுப்பார். சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க போனால், ஒருவாய் தீத்தியும் விடுவார். எங்கட ஆளுக்கும் இரண்டும் நடந்ததுதான்.

எல்லாம் நல்லாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்பதான் எங்கட ஆளுக்கு ஒரு சந்தேகம் வருது. ஆரம்பத்தில இதைப் பற்றியெல்லாம் யோசிக்கயில்லை. போகப்போகத்தான் சந்தேகங்கள் வருது. கொஞ்சம் பிடிபடப் பிடிபட சந்தேகங்கள் வரும் தானே. இந்த சந்தேகத்தை ஒரு பொடியளாலயும் தீர்க்க முடியாமல் போயிற்றுது. உண்மையைச் சொன்னால், ஆள் இதைப்பற்றி கதைக்கத் தொடங்கினதுக்குப் பிறகுதான் கனபொடியள் இதைப் பற்றி யோசிக்கவே தொடங்கினவை. அந்த நேரம் சந்திக்கிற எல்லாப் பொடியளிடமும் கேட்டார் – “எங்கட இரண்டாவது தலைவர் யார்?…”

முந்தின காலமென்றால் மாத்தையா இருந்தார். எங்கட ஆள் அப்ப இயக்கத்தில இல்லை. ஆனால் மாத்தையாவில நல்ல விருப்பம். அவரின்ர மீசை, உடம்பு,உயரம் எல்லாமே கம்பீரமானவை. பிரபாகரனும் மாத்தையாவும் பக்கத்தில பக்கத்தில நிற்கும் படத்துடன் முந்தின காலத்து ஈழநாதப் பேப்பரின்ர கலண்டர் வரும். இந்தப் படத்துக்காகவே வீட்டில சண்டை பிடிச்சு பேப்பர் எடுக்க வைச்சிருக்கிறார். அந்த கலண்டர் கனகாலமாக வீட்டு சுவரிலயிருந்தது. பிறகு, தகப்பன்காரன் மாத்தையா இருக்கிற படத்தை மட்டும் கிழித்து எடுத்து விட்டார். பாதிக் கலண்டர்தான் சுவரிலயிருந்தது.

அந்த நேரம் இயக்கத்தில இருந்த ஆட்களின்ர வாயில தமிழீழத்துக்கு அடுத்தபடியாக உச்சரிக்கப்பட்ட வசனமென்றால் அது இந்திய றோவாகத்தானிருக்கும். அந்நிய ஊடுருவல் போன்ற வசனங்களெல்லாம் தாராளமாக பாவிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வல்லரசு புலனாய்வு அமைப்புகள் என்று றெயினிங் காம்பில கலைக்கோன் மாஸ்ரர் தொடர் வகுப்பெடுத்தவர். ஆனால், யாரும் மாத்தையாவின்ர பெயரை உச்சரிக்கினமில்லை. இயக்கத்திலும் சிலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர் என்ற தொனிப்பட வகுப்பு நடக்கும்.

எங்கட ஆள் மாத்தையாவைப் பற்றி சிலரோட கதைச்சும் பார்த்தார். மாத்தையா ஆர்?என்ன செய்தவர்? இப்ப எங்கே? இனி யார் இரண்டாவது தலைவர்? தலைவருக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் இரண்டாவது தலைவரை அறிஞ்சு வைக்கிறது நல்லதுதானே. பிறகு வீண் பிரச்சனையள் வராது என யோசித்தார். ஆனால் பொடியள் இது பற்றி கதைக்கினமில்லை. மெல்ல கழன்று விடுகினம். தேவையில்லாத கதை கதைச்சு வீண் பிரச்சனையில மாட்டாதை என்று அட்வைஸ் பண்ணின ஆட்களும் இருக்கத்தான் செய்யினம்.

பலதையும் யோசிச்சுப் பார்த்திட்டு, ஒரு நாள் நேரடியாக மாஸ்ரரிடமே போய்க் கேட்டார். வெளியில் எங்கேயோ போவதற்காக வாகனத்தில் ஏறி இருந்த மாஸ்ரர், விசயத்தை கேட்டதும் இறங்கினார். அடிக்கிறதுக்கு கை ஓங்கிப்போட்டுச் சொன்னார் “இயக்கத்தில அடிக்கக்கூடாதென்ற ஓடர் இல்லாமலிருந்திருக்க வேணும். உனக்கிப்ப என்ன நடந்திருக்குமென்று எனக்கே தெரியாது..” என அடிக்காமல் விட்டவர். ஆயிரம் தோப்புக்கரணம் போடச்சொல்லி பணிஸ்மன்ற் தந்தார். தோப்புக்கரணம் போடுவதை எண்ணுவதற்கும் ஒரு பொடியனை விட்டார். இதுக்குப் பிறகு எங்கட ஆள் மாஸ்ரரோட அவ்வளவாக முகம் குடுத்துக் கதைக்கிறதில்லை. ஏதும் அலுவலிருந்தால் மட்டும் அளவான கதையிருக்கும்.

கொஞ்ச நாளில எல்லாமே எங்கட ஆளுக்குப் பிடிபட்டிட்டுது. நாலு இடத்துக்குப் போய் நாற்பது பேருடன் பழகத் தொடங்க நெளிவு சுழிவுகள் விளங்கினமாதிரி, இரண்டாவது தலைவர் பிரச்சனையும் விளங்கியது. அதாவது முதல் மாத்தையா இருந்திருக்கிறார். அதுக்குப் பிறகு, வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைவர் மாதிரி கிட்டு மாமா தான் வெளிநாட்டில இருந்திருக்கிறார். அவர் தமிழீழத்திற்கு வந்து சேர்ந்திருந்தால் அவரை இரண்டாவது தலைவராக இயக்கம் அறிவிச்சிருக்குமாம். அதுவும் பிசகிவிட்டுது. அதுக்குப் பிறகு இப்ப, இரண்டாவது தலைவர் மாதிரி இரண்டு பேர் இருக்கினமாம். தமிழீழத்தில ஒராள். வெளிநாட்டில ஒராள். தமிழீழத்தில பொட்டம்மான். வெளிநாட்டில இருக்கிறவரை கன இயக்ககாரருக்கே தெரியாதாம். கொஞ்சம் வயசான  ஆள் வேறயாம். அனேகமாக அது அன்ரன் பாலசிங்கமாக இருக்கலாமென்று எங்கிட ஆள் யோசிச்சார். என்னயிருந்தாலும் பொட்டம்மான் தான் இதுக்கு சரியான ஆளென அபிப்பிராயப்பட்டார். இதையும் சிலரோட கதைச்சவர் தான்.

மாஸ்ரர் பணிஸ்மன்ற் குடுத்த சம்பவம் எங்கட ஆளுக்கு பிடிக்கயில்லை. என்னயிருந்தாலும் இந்தக் கேள்வியை ஒரு தேசத்துரோகக் குற்றம் மாதிரி மாஸ்ரர் பார்த்திருக்கக் கூடாது என யோசிச்சார். இதுக்குப் பிறகு மாஸ்ரருக்குக் கீழ் இருக்கப் பிடிக்கயில்லை. ஒருநாள் ஆற அமர இருந்து யோசித்து விட்டு, வலு கிளீனான ஒரு கடிதம் எழுதினார். எதிரிகளினால் முற்றுகைக்குள்ளாகி தேசம் இக்கட்டான நிலையிலிருக்கும் போது, என்னை மாதிரி செங்களம் புக ஆவல் கொண்ட வேங்கைகளை ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள். ஆணையிடுங்கள் தலைவா என்பதுதான் சாரம். கடிதம் சூசையண்ணைக்குப் போகுது.

அடுத்த கிழமை மெயின்காம்பிற்கு வரச்சொல்லி அறிவித்தல் வருது. ஆளுக்கு பதற்றமாகவுமிருக்குது. சந்தோசமாகவுமிருக்குது. சொன்ன வேலை செய்ய வேண்டுமென இயக்கத்தில சேர்ந்த நாளிலயிருந்து  சொல்லித்தாற விசயம். இதை விட்டிட்டு,வேற வேலை தா என எழுதியது பிடிக்காமல் போகுமோ என பலதையும் யோசித்துக்கொண்டு போனார். அங்க ஒரு பிரச்சனையுமில்லை. ஆள் விரும்பியது மாதிரியே வேறு வேலை கிடைக்குது. இவ்வளவு நாளும் தரையில கிடந்த ஆள், இனி வருசக்கணக்காகக் கடல் தானென ஆனது.

இயக்கத்தின்ர ஆயுதக் கப்பலொன்றில ஆளை ஏத்தினார்கள். உங்களில சிலருக்கு தெரிந்திருக்கும் இயக்கத்தினது ஆயுதப் பரிவர்த்தனை பற்றி. இப்ப லாவோசின்ர கறுப்புச் சந்தையில கொஞ்சச் சாமான் வாங்கப்படுகிறது என்று வையுங்கோ. அது ஒரு கிழமையிலயோ, ஒரு வருசத்திலயோ முல்லைத்தீவில இருக்கும்.  அங்க ஏற்றுவதற்கும் , இங்கே இறக்குவதற்குமிடையில் வேலையை மூன்று செக்சனாகப் பிரித்திருந்தார்கள். இதில இடையில சாமானை  வாங்கி இலங்கை எல்லை வரை கொண்டுவரும் இரண்டாவது செக்சன்காரர் வருசக் கணக்காக கடலிலயே இருப்பினம். அவையள் கரையை காணுறதென்பது எப்போதாவது வெகுஅரிதாகவேயிருக்கும். ஆள் இப்ப இந்த செக்சனோடதான்.

இந்த வாழ்க்கை ஆளுக்கு நல்லாப் பிடிச்சிருந்தது. என்ன, கரைக்குப் போகேலாது. நாலு பேரைச் சந்திக்க ஏலாது. மற்றும்படி எல்லாம் இயக்க வேலைதானே. ஒரு வருசமும் எட்டு மாதமும் கரையையே காணாமல் கடலுக்குள்ள ஓடித்திரிந்து கொண்டிருந்த கப்பலில ஆள் இருக்குது. எங்கட ஆளின்ர கப்பலில்தான் ஒரு முக்கியமான சாமான் தமிழீழத்திற்கு வந்தது. அந்த நேரம் சுப்பசொனிக், கிபீர் என அரசாங்கத்தின் ஜெட்விமானங்கள் இயக்கத்திற்கு பெரிய தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. இதுகளை விழுத்திற ஏவுகணை வாங்க இயக்கமும் நாயாய் பேயாய் அலைந்துதிரியுது. ஒரு இடமும் சரிவராமலிருந்தது. எங்கட ஆள் கப்பலுக்கு போன ராசியோ என்னவோ கடைசியில ஒரு இடத்தில மாட்டியது. அதுவும் உக்ரைனிடமிருந்து. அவையள் தாங்கள் செய்த வெப்பத்தை நாடிச் செல்லும் ஏவுகணையள் கொஞ்சத்தை வித்திட்டினம். இப்ப நீங்கள் யோசிப்பியள், உக்ரைனிட்டயிருந்து ஏவுகணை வாங்கிக்கொண்டு வந்தும் பொடியளால ஏன் கிபிரை விழுத்த முடியாமல் போனதெனக் கதையைக் கேளுங்கோ.

தாய்லாந்தின் சிறீரச்சா துறைமுகத்துக்குக் கிட்டவாக கப்பலை வைச்சிருந்த ஆட்களை, அவசரமாக உக்ரைன் வரச் சொல்லியாச்சுது. அது உக்ரைன் நேவியின்ர துறைமுகம். விசயம் வலு ரகசியமாக காதும் காதும் வைச்சது மாதிரி நடக்குது. கப்பலில இருக்கிற பொடியளுக்கு உக்ரைன்காரர் அன்று டின்னர் குடுத்திச்சினம். அவையளின்ர சாப்பாடு பொடியளுக்கும் பிடிச்சிருந்தது. இடைக்கிடை தங்களின்ர ஏவுகணையைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தினம். அன்றிரவு ஒரு பரிசோதனையும் செய்து காட்டிச்சினம். அந்த பரிசோதனையை பார்க்க வெளிநாட்டிலயிருக்கிற எங்கட பெரிய ஆட்கள் சிலரும் வந்திருந்தார்கள். வெள்ளை ரீசேட்டும், வெள்ளை ஜம்பரும் போட்டிருந்த நடுத்தர வயசுக்கார மனிதர். கறுப்பு உடுப்புடனிருந்த இளைஞன் மற்றும் இன்னும் சிலருமிருந்தனர். வெள்ளை ஜம்பரும், கறுப்பு உடுப்பும் தான் முக்கியமானவர்கள் போல. அவர்களுடன்தான் உக்ரைன்காரர் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கப்பலில வந்த பொடியளைக் கொஞ்சம் தள்ளி நிற்பாட்டி வைத்து விட்டார்கள். இதனால் இயக்க பெரியவர்களை சரியாகப் பார்க்க முடியாமல் போனது.

பரிசோதனை நடக்கிற இடத்துக்குப் பக்கத்தில ஒரு இடத்திலயிருந்து ஆட்லறி செல்லடிச்சினம். அது தானியங்கி ஏவுகணை. அதன் உணர் திறனுக்குட்பட்ட பகுதியில் வெப்பத்தை வெளியிட்டபடி ஏதும் போனால் தானாகவே புறப்பட்டு துரத்தும். உக்ரைன் ஆட்லறி செல்லையே நடுவானத்தில அந்த ஏவுகணை அழிச்சது.

பொடியளுக்கு நல்ல சந்தோசம். இனி சிங்களவனின்ர பிளேன் எல்லாம் சுக்குநூறாக உடையப்போகுதென்ற கதையைத்தான் எல்லோரும் கதைத்தார்கள். அன்று கப்பலில எங்கடஆள் பெரியகுரலெடுத்து “நந்தசேன மல்லி நீ வந்ததேனோ துள்ளி” என்ற பாட்டை பாடினார். பொடியளெல்லாரும் கைதட்டி ஆட்டம் போட்டினம். இந்தப் பயணம் தான் இப்படி பாட்டும் கூத்துமாக அமர்க்களப்பட்டது. சாமானை முல்லைத்தீவுக்குக் கிட்டவாக கைமாற்றிப்போட்டு, கிபிர் விழுந்திட்டுதாம் என்ற செய்திக்காக பொடியள் காத்திருந்தினம். கடைசிவரை அப்பிடியொரு செய்தியே வரவில்லை. பிறகுதான் தெரியும், பொடியளுக்கு ஏவுகணையை விற்ற கையோடையே அரசாங்கத்துக்கு விசயத்தை சொல்லி, ஏவுகணைக்கான எதிர்ப்பை அரசாங்கத்துக்கு விற்ற உக்ரைன் காரனின்ர பிஸ்னஸ்.

கொஞ்சக் காலத்துக்குப் பிறகு எங்கட ஆள் திரும்பவும் முல்லைத்தீவில தரையிறங்கினார். ஒரு மோட்டார் சைக்கிள் கொடுத்து ஒரு மாதம் லீவில விட்டினம். ஆள் வன்னி முழுவதும் ஓடித்திரிந்தார். அப்ப மாஸ்ரர் இடைக்கிடை முட்டுப்படுறவர் தான். ஆனால், இப்ப ஆள் பெரிய ஆள்த்தானே. முந்தித்தான் மாஸ்ரருக்குக் கீழே. இப்ப எங்கிட ஆள் நினைச்சுக் கொண்டிருக்குது,  தனக்கு மேல மூன்று பேர்தான் இருக்கினமென. முதலாவது தலைவர். அடுத்தது அந்த இரண்டாவது தலைவர் பிறகு, சூசையண்ணை. மாஸ்ரர் கணக்கிலேயே இல்லை. இடையிடையே எங்காவது எதிர்ப்பட்டால், கோர்ன் அடித்தபடி போவார். எங்காவது நேருக்குநேர் சந்தித்தால் இரண்டொரு கதை. அதுக்குப் பிறகு இப்போதுதான் கதைக்கிறார்கள்.

இவ்வளவு காலத்திற்கு பிறகு கதைக்கிறம். அப்ப கூட பார் இந்த உறண்டல் மனுசனை. தேவையில்லாத கதையை விடட்டாம். எது தேவையில்லாத கதையென எங்கட ஆள் தனக்குள்ளயே வெப்பியாரப்படத் தொடங்கினார்.

இப்ப மெல்ல மெல்ல ஆட்களை விடுதலை செய்யத் தொடங்குகிறார்கள். விடுதலையாகும் ஆளை நெருங்கிய உறவுக்காரர் ஒருவர் பொறுப்பெடுக்க வேண்டும். கொஞ்சக் கொஞ்ச ஆட்களாக கூப்பிட்டு வீட்டுக்காரர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லாப் பழகின ஆட்களை ஆமிக்காரரும் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சி பிரியாவிடை சொல்லுகினம்.

இப்ப எங்கட ஆளையும் இன்னும் கொஞ்சப் பேரையும் கூப்பிடுகினம். அதில தான் மாஸ்ரரும் வாறார். விபரங்களைப் பதிவு செய்து புகைப்படம் எடுத்து,கைரேகை பதிந்து ஆட்களை வெளியில் விட்டார்கள். வெளியில வாற எங்கட ஆளின்ர தகப்பன்காரன் நின்று கட்டிப்பிடிச்சு அழுகிறார். எங்கட ஆளும் கண்ணை மூடிக் கொண்டு நிக்குது. இந்த சென்டிமென்ற் எல்லாம் முடிய எங்கட ஆள் பஸ் ஏறப் போனார். அந்த நேரம் பின்னால ஆரோ கூப்பிடுகினம். திரும்பிப் பார்த்தால், மாஸ்ரர். மாஸ்ரர் கத்திச் சொன்னார்.

“நீ ரெண்டாவது தலைவர் ரெண்டாவது தலைவரென்று நச்சரிப்பியே… நாளைய உதயன் பேப்பரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளு”என.

அன்று வீட்டுக்கு வந்த எங்கட ஆளுக்கு பலத்த வரவேற்பு. சொந்தம் பந்தமெல்லாம் மாலைபோடாத குறையாக வரவேற்கினம். எல்லோருடனும் கதைத்துவிட்டு படுக்க நடுச்சாமம் கடந்துவிட்டது. ஆனாலும் அடுத்தநாள் நேரத்துக்கே எழும்பி சந்தியிலயிருக்கிற பேப்பர் கடைக்குப் போனார். ஒரு உதயன் வாங்கினார். அதில நேற்று நடந்த விசயமிருந்தது.

இன்னார் வந்து இன்ன இன்ன அட்வைஸ் பண்ணினாரென்ற விபரம் படத்துடன் வந்திருக்குது. அதை வாசித்த எங்கட ஆளுக்கு தலைவிறைச்சுது. நேற்று வந்தவர் கதைச்ச விசயத்தை போட்டு அவரின்ர பழைய படம் ஒன்றுதான் போட்டிருந்தினம். அது உக்ரைன் ஏவுகணை பரிசோதனைக்கு வந்த ஆள். அந்த ஆள்த்தானா நேற்று வந்த ஆள். எவ்வளவு மாறிவிட்டார்? அவர்தானா எங்கட இரண்டாவது தலைவர்? இது தெரிந்திருந்தால் அவருடன் கதைக்க முயன்றிருக்கலாமென யோசித்துக்கொண்டு கடைக்கு முன்னாலையே நிற்கிறார். “ச்சா… எவ்வளவு பெரிய பிழை விட்டிட்டன.”என தனக்குள்ளே சொல்லிக்கொண்டார். பிறகு, இந்தப் பிழைக்கு தான் மட்டும் பொறுப்பில்லைதானேயெனவும் யோசிக்கத் தலைப்பட்டார். ஏனெனில்,முன்னரெல்லாம் குமரன் பத்மநாபன் என்ற பெயர் பத்திரிகைகளில் வருவதில்லை.

அப்படி வந்தாலும் , யாழ்ப்பாணத்திலும் பிற இடங்களிலும் கூட்டம் வைத்து

யுத்தத்தின் அழிவுகளை நினைத்துக் கண்ணீர் விடுவது  மாதிரியான படங்களெதுவும் பிரசுரமாகியிருக்கவில்லைத்  தானே.

வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன்

2 months 1 week ago
வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன்
வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன்

நாங்கள் இந்த அப்பார்ட்மண்ட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பூரணிக்கு ஃபிளைட் டிக்கெட் உறுதியானவுடன் முதல் காரியமாக வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிட்னியில் நினைத்தவுடன் வீடு அமைவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஹோம்புஷ் போன்று இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடங்களில் கிடைப்பது இன்னுமே கடினம். இந்தப் பகுதியைச் சுற்றி ஈழத் தமிழர்களும் வசிக்கிறார்கள். இந்த அப்பார்ட்மண்ட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் ஒரு இந்தியன் ஸ்டோர் இருக்கிறது. இந்தியச் சமையலுக்குஉகந்த அத்தனை மளிகைப் பொருட்களும் அங்கே கிடைக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரையிலிருந்து குங்குமம்,சந்தனம் பத்தி முதலான பக்திப் பொருட்கள் உட்பட எல்லாமும் கிடைக்கும். விகடன், குமுதம் போன்ற வார இதழ்கள்கூட கொஞ்சம் தேதிப் பிந்தி வரும். அந்தக் கடையை ஒரு ஈழத்தமிழர் வைத்து நடத்துகிறார். அவருக்கும் ஐம்பத்தைந்திலிருந்து அறுபது வயதிருக்கும்.இருபது வருடங்களாக இங்கே வசிக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் கல்லாப்பெட்டி மேசையில் ஒரு சிறிய ஸ்பீக்கரில் எப்போதும் பி.பி.சீனிவாஸின் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கும்.

அந்தக் கடையிலிருந்து, இடப்பக்கத்தில் பத்து கடைகள்தள்ளி பஞ்சாபி கறிக்கடை ஒன்று இருக்கிறது. அங்கே சிக்கனும் மட்டனும் கிடைக்கும். அது ஹலால் என்பதால் பக்கத்துப் புறநகர்ப் பகுதிகளான ஸ்ட்ராத்ஃபீல்ட், ஆஸ்ஃபீல்ட், ஃபெளமிங்டன் போன்றவற்றிலிருந்துகூட ஆட்கள் வந்து வாங்கிப் போவார்கள். அதே கடைத் தெருவில் தாஜ் இண்டியன் மசாலா என்ற பெயரில் ஒரு இந்திய உணவகமும் சக்தி கேட்டரிங் என்ற பெயரில் இடியாப்பம், புட்டு, பரோட்டாபோன்றவற்றை பார்சல் மட்டும் வழங்கும் இலங்கை உணவகமும் உள்ளன. வார இறுதி நாட்களில் எங்குப்பார்த்தாலும் இந்தியத் தலைகளே தென்படும்.

இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான், என்னுடைய பிராஜெக்ட்டின் தலைமை அதிகாரி ஜான் பிராண்டன் எங்களுடைய முதல் தனிச் சந்திப்பின்போது ஏன் அப்படிக் கேட்டார் என்பது புரிய வந்தது. 

“பயணமெல்லாம் சவுகரியமாக இருந்ததா ஹரி? ஹ..ரி..எவ்வளவு சுலபமாக இருக்கிறது. ப..ர்..மே..ஸ்..வ..ர பி..ல்..லா.. ரொம்ப கஷ்டம் ரொம்பவே கஷ்டம்.” என்று அவரது கனத்த உடலைக் குலுக்கிச் சிரித்தார்.

அவர் எங்கள் அணித்தலைவரான பரமேஷ்வரன் பிள்ளையின் பெயரைத்தான் அப்படி உச்சரித்துப் பார்த்துச் சிரித்தார். நானும் அவருடன் மெதுவாகத் தலையாட்டிச் சிரித்தேன்.

“அதிலொன்றும் பிரச்சினையில்லை ஜான். நல்லபடியாக வந்து சேர்ந்தேன்.”

“அடுத்து என்ன? ஹோம்புஷில் வீடு பார்க்கப் போகிறாயா?”

“இல்லையில்லை. அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ஏன் ஹோம்புஷ்?”

“ஓ.. உனக்கு உண்மையிலேயே தெரியாதா?” என்று சொல்லிச் சிரித்து மறுபடியும் குலுங்கினார். பின்னர் அவரே, “ஆங்கிலத்தில் ‘மர்மரேஸன்’  (murmuration) என்று ஒரு வார்த்தை உண்டு. உனக்குத் தெரியுமா?கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றார்.

நான் தெரியாது என்பதாக உதட்டைப் பிதுக்கினேன். 
 

spacer.png

“இங்கே, ஸ்டார்லிங் என்ற ஒரு பறவையினம் இருக்கிறது. பார்ப்பதற்குக் குருவி போல இருக்கும். அதன் மேலெல்லாம் பச்சையும் கறுப்பும் சேர்ந்து பளபளப்பாய் பார்க்க ரொம்பவும்அழகாகஇருக்கும். அதனுடைய மொத்த அளவே இதோ இவ்வளவுதான் இருக்கும்.” என்று சொல்லி தன் வலது உள்ளங்கையை நீரைத் தேக்கி வைக்க குவித்துப் பிடிப்பதைப் போல பிடித்துக் காட்டினார். “அதிக பட்சம் நூறு அல்லது நூற்றைம்பது கிராம் எடை இருக்கும். அவை கூட்டமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக்காவும் தூரமாய்ப்பறந்து போகும். தூரம் என்றால் பல்லாயிரக் கணக்கான மைல்கள் போகும். கூட்டமாக ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்கள் ஒன்று சேர்ந்து பறந்து போகும். இளமாலை வெயிலில் அவை பறந்து போவதைப் பார்க்க நட்சத்திரத் திரளொன்று நகர்வதைப் போலிருக்கும்.அப்போது அவை சேர்ந்து முணுமுணுவென்று சத்தம் எழுப்பும். அந்தச் சத்தத்துக்குப் பெயர்தான் ‘மர்மரேஸன்’.எப்போவாது வடக்கு ஆஸ்திரேலியா பக்கம் போக வாய்த்தால் கிளிகள்கூடஇப்படிப் போவதை நீ பார்க்கலாம்.” என்று சொல்லி என்னையே உற்றுப் பார்த்தார். 

பின்பு அவரே, “இப்போது ஏன் அதைப் பற்றி இங்கேசொல்கிறீர்கள் என்று நீ கேட்க வேண்டும்.”என்றார்.

நான் பதில் பேசாமல் புன்னகைத்தேன். நான் கேட்காவிடிணும் அவர் சொல்லாமல் விடப்போவதில்லை என்பது தெரிந்தது.

“அந்த ஸ்டார்லிங்கைப் போலதான் இருக்கிறீர்கள்இந்தியர்கள் அனைவரும். ஓ! அப்படிச் சத்தம் எழுப்புகிறீர்கள் என்று சொல்ல வரவில்லை. அதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் அதை அர்த்தப்படுத்த நான் இதைச் சொல்லவில்லை. தவறாக நினைக்காதே!” என்று சொல்லி கண்களைச் சிமிட்டிச் சிரித்தார். “எங்கே போனாலும் கூட்டமாகக் கூடிக் கொள்வதைச் சொன்னேன். இங்கேகூட நன்றாக கவனித்துப் பார். ஒரு காபி பிரேக்கில்கூட யார் யாருடன் சேர்ந்துபோய்க்குடிக்கிறார்களென்று. மொத்தமாக இந்தியர்கள் மட்டும் என்று சொல்லிச் சுருக்கிவிட முடியாது. ஆசிய மக்களில் நிறையப் பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்போது, நீங்கள் எல்லாம் அப்படி இல்லையா என்று நீகேட்கலாம். ஆமாம், நாங்கள் அப்படிச் செய்வதில்லை. அது ஏன் என்றுஇன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். ஆனால், அப்படிச் சேர்ந்து இருக்கக் கூடாதா? தவறா என்றால், அப்படியில்லை என்றுதான் சொல்வேன். அந்தப் பறவைகளேஏன் அப்படிச் சேர்ந்து போகிறன தெரியுமா? அப்படிச் சேர்ந்து பறப்பதன் வழியே பருந்து, வல்லூறு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து அவை தற்காத்துக்கொள்கின்றன. மேலும், நெருக்கமாகச் சேர்ந்து பறக்கையில் குளிர் காலங்களில் ஒன்றின் வெப்பம் மற்றொன்றுக்குப் படர்ந்துகடுங்குளிரைத் தாங்கவும் உதவுகின்றன. இங்கே அதுபோலத்தான் நீங்களும் சேர்ந்துகொள்கிறீர்கள். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.” என்றார்.

“ஸ்..டார்..லிங்”

“ஆமாம் ஸ்டார்லிங்”

அந்தக் கடைத் தெருவுக்கும் எங்கள் அப்பார்ட்மண்டுக்கும் சமதொலைவில்தான் ஹோம்புஷ்மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. நான் வேலைபார்க்கும் பராமட்டாவுக்கும் அதற்கு நேர்எதிர்த்திசையிலிருக்கும் சிட்னியின் மையப் பகுதியான டவுன்ஹாலுக்குப் போவதற்கும் மணிக்கு நான்கு ரயில்கள் உண்டு. இதையெல்லாம் கருத்தில்கொண்டே இந்த அப்பார்ட்மண்ட்டை உறுதி செய்தேன்.

பூரணி வரும் வரையில் அலுவலகமிருக்கும் பராமட்டாபகுதியில் நண்பர்களுடன் அறையைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்ததும் முதலில் தனி வீடு பார்க்கலாமா என்றுதான் யோசித்தேன். ஆனால், என்னுடைய பிராஜெக்ட் அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு மேல்தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றாலும் எதையுமே நிச்சயமாகக் கூற முடியாது.  முதல் நாள் இரவு பதினொன்றுமணி வரை மொத்த அணியும் உயிரைக்கொடுத்து வேலைபார்த்து முடித்துக்கொடுத்துவிட்டு வீடு போய் திரும்பிவந்த மறுநாள் காலை, “துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிராஜெக்ட் நம்மிடம் இனி தொடர்வதில்லை. விரைவில் உங்களுக்கு புதிய பிராஜெக்ட் ஒதுக்கப்படும்.” என்ற மெயில் எங்கள் பாஸிடமிருந்து வந்ததைப்பார்த்த அனுபவம் உண்டு. அன்று காலை வரை அதற்கான எந்தச் சுவடும் வெளித் தெரியா வண்ணம் பார்த்துக்கொள்வார்கள். எனவே இந்த ஆறு மாதத்தை நம்பி ஒரு முடிவுக்கு வர முடியாது. ஒரு வேளை ஆறு மாதம்கூட நீடிக்காமல் இந்த பிராஜெக்ட் முடிந்து போனால் இங்கேயே இன்னொரு பிராஜெக்ட் உடனடியாகக் கிடைப்பதற்கான சாத்தியம் குறைவு. உடனே இந்தியாவுக்கு மூட்டை கட்டி அனுப்பிவிடுவார்கள். 

எல்லாவற்றுக்கும் மேல் தனியாக வீட்டை ஒத்திக்கு எடுத்துவிட்டு இடையில் கிளம்பினால், ஒரு நாள் இருந்துவிட்டாலும்கூட அந்த ஒப்பந்தத்தை மீறுவதற்காக ஒரு மாத வாடகையைத் தண்டமாக அழ வேண்டியிருக்கும். அதையும் இந்திய ரூபாயில் கணக்கிட இருக்கிற எரிச்சலோடு வயிற்றெரிச்சலும் சேர்ந்துகொள்ளும். 

இப்படியாக, தனி வீடு பார்க்கும் முடிவைக் கைவிட்டுவிட்டு அப்பார்ட்மண்ட்டில் ஒரு வீட்டை இன்னொரு குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். வருடத்துக்கு லட்சம் டாலர் சம்பளம் வாங்கும் எங்கள் போட்டி நிறுவனத்தைச் சேர்ந்த மானேஜர் ஒருவர் இதையே ஒரு பகுதி வேலையாகப் பார்க்கிறார். அவர், முதலில் ஒரு வீட்டைஅவருடைய பெயரில் ஒத்திக்கு எடுத்துவிடுவார். பின்னர், அதை இரண்டு குடும்பங்கள் சேர்ந்து வசிக்கும்படியாக வசதிகள் செய்துகொடுத்து உள் வாடகைக்கு விட்டுவிடுவார். இங்குள்ள சட்டப்படி இப்படியாக உள் வாடகைவிடுவது தவறு என்றாலும் பெரும்பாலும் இவர் ஒத்திக்கு எடுப்பது தெற்காசியர்களின் வீடுகளைத்தான். அவர்களும் அதிகமாகக் கிடைக்கும் ஒரு நூறு டாலருக்காக இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை. அவருக்கோ இதில் கணிசமான தொகை லாபமாகக் கிடைக்கும். 

தனியாக அப்பார்ட்மண்ட் எடுத்தால் கொடுக்க வேண்டியதில் பாதியளவு வாடகை கொடுத்தால் போதும். மேலும் இங்கிருந்து காலி செய்வது என்றாலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தகவல் தந்தால் போதுமானது. ஒப்பந்த மீறல் அபராதம் போன்ற எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. இன்னும் கொஞ்சம் டாலர்களை மிச்சம் பிடித்து ரூபாயாக மாற்றிஇண்ஸ்டாரெம் வழியே இந்தியாவுக்கு அனுப்பிக்கொள்ளலாம். 

நாங்கள் அங்கே வந்து ஒரு வாரம் ஆகியும், அதுவரை யாரும் எங்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ள வரவில்லை. நான் அலுவலகம் சென்று திரும்பி வருவது வரை பூரணிவீட்டில்தனியாகத்தான் இருக்க வேண்டும். புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால் கொஞ்சம் பயந்துபோய் இருந்தாள். அவளுக்கு ஓப்பல் கார்ட் வாங்கிவைத்திருக்கிறேன். ரயில், பஸ் பயணங்களை மெதுவாகப் பழக்க வேண்டும்.

இடையில் ஒரு நாள், நான் அலுவலகம் சென்றிருந்த வேளையில் யாரோ கதவைத் தட்டியிருக்கிறார்கள். நீண்ட நேரமாகத் திறக்காமலே இருந்திருக்கிறாள். யார் என்று கேட்டதற்குக்கதவுக்கு மறுபக்கமிருந்தவர் சொன்ன பதிலும் விளங்கவில்லை போலும். பயந்துபோய் எனக்குஅழைத்தாள். பாதுகாப்பு கண்ணாடித் துவாரத்தின் வழியே வந்திருப்பவரைப் பார்க்கலாம் என்பதுகூட அவளுக்கு அந்நேரத்தில் தோன்றியிருக்கவில்லை.

கடைசியில் அது வாரம் ஒருமுறை வந்து வீட்டைச் சுத்தம் செய்துபோகும் மார்க் லியூ. 

யாராவது இன்னொரு இந்தியக் குடும்பம் வந்தால் கொஞ்சம் ஆதரவாக இருக்கும் என்பதால் நாங்களே அப்படி வருபவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அதே நேரத்தில் அதில் வேறு சில சிக்கல்கள் இருந்தன. ஒரே கிச்சன். திருப்பிய ‘ப’ வடிவில் ஹாலுடன் கிச்சன் திறந்திருக்கும். அதில் ஆளுக்குப் பாதி. நான்கு பர்னர்கள் கொண்ட அடுப்பை ஆளுக்கு இரண்டாய் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒரே ஒரு பாத்திரத் தொட்டி. வருபவர்கள் எங்களைப் போன்று மாமிசம் உண்பவர்களாக இருந்தால் பரவாயில்லை. இல்லாது போனால் இருவருக்கும் சங்கடம்.எல்லாவற்றுக்கும் மேல் வீட்டுப் பெண்களுக்குள் ஒத்துப்போக வேண்டும்.

அன்று இரவு மிக்ஸியில் அரைத்த மாவால் தோசை வார்த்துச் சாப்பிட்டுவிட்டு ஹாலிலிருந்த நான் டி.வி.யில் மாஸ்டர் செஃப் பார்த்துக்கொண்டிருந்தேன். பூரணி உள்ளே அறையில் தன் தங்கையுடன் தன்னுடைய ஒரு வாரக் கால சிட்னிஅனுபவத்தை ஒப்பித்துக்கொண்டிருந்தாள். 

வீட்டின் காலிங் பெல் அடித்தது.

மானேஜர் பிரகாஷ்தான் வெளியே நின்றுகொண்டிருந்தார்.காபி ஏதாவது போடவா என்று கேட்ட பூரணியை வேண்டாம் என்று மறுத்து உக்காரச் சொன்னார்.

“வீடெல்லாம் பரவால்லல? கார்பெட் மட்டும் கொஞ்சம் அழுக்கா இருந்தது. டீப் கிளினிங் பண்ணச்சொல்லி சரி பண்ணிட்டேன். வேற எதுவும் இருந்தாலும் சொல்லுங்க ஹரி.”

“பிரகாஷ் வீடு ரொம்ப நல்லாருக்கு. பால்கனிய திறந்துவிட்டா மொத்த ஹோம்புஷும் தெரியுது. இந்த பெரிய பிரஞ்ச் விண்டோ எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”

“ஹா.. அப்போ சந்தோஷம். ஒரு பக்கம் பரமட்டா ரோடு மறுபக்கம் மெட்ரோ ரயில். ரொம்ப அமைப்பான வீடுதான் இது.பொதுவா பிரஞ்ச் விண்டோவ குளிர்காலத்துல எப்பவும் மூடி வச்சிருப்போம். ஆனாலும் பகல்ல மட்டும் அப்பப்போ காத்து வர்ற மாதிரி கொஞ்ச நேரம் திறந்துக்கணும். இல்லன்னா சுவர் முழுக்க மோல்ட் பிடிச்சுக்கும்.”

“ஓகே பிரகாஷ். தாங்க்ஸ். அப்புறம் மெயின் கதவு மட்டும் கொஞ்சம் டக்குன்னு பூட்ட முடியல. கொஞ்சம் திறந்துஇழுத்துத் தள்ளிச் சாத்த வேண்டியிருக்கு. அது மட்டும் கொஞ்சம் பார்த்துக்கொடுக்க முடியுமா?”

“நானே டூல் பாக்ஸ் எடுத்துட்டு வரேன் பிறகு. முடியல்லன்னா ஆள் வரச் சொல்லிக்கலாம். அப்புறம்.”

“சொல்லுங்க பிரகாஷ்!”

“இன்னொரு ஃபேமிலி  உங்களோட ஜாயிண்ட் பண்ணிப்பாங்கன்னு சொல்லிருந்தேன்ல.”

“ஆமாமா.”

“அநேகமா இன்னும் இரண்டு மூணு நாள்ல வந்துடுவாங்க. அவங்களும் தமிழ் ஃபேமிலிதான்.” என்று தயங்கினார்.

“தமிழ் ஃபேமிலின்னா ரொம்ப சந்தோஷம். நான்கூட யாராவது நார்த் இந்தியன் மாதிரி வந்திட்டா இங்கயும் இங்கிலிஷ்லயே பேசணுமேன்னு யோசிச்சுட்டு இருந்தேன். நம்மவங்கன்னா பிரச்சினையே இல்லை.” இதைச் சொல்லும்போது அவர் எதையோ சொல்வதற்காகத் வார்த்தைகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தார் என்பது புரிந்தது. 

“ஏன் அவங்க வெஜிடேரியனா?”

“அய்யே அதெல்லாம் இல்ல. அவங்களும் நான் வெஜிடேரியன்தான்.”

“அப்புறம் என்ன?”

“இல்ல.. அவங்க முஸ்லீம். அதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே.” என்றார்.

என்னுடன் வேலை பார்க்கும் இந்தியர்களில் பலரும் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள். பீரையும் பிராந்தியையும் பழகியவர்களுக்குக்கூட அசைவ உணவுகள் ஒப்புக்கொள்வதில்லை. அப்படியானவர்கள் யாருமென்றால் எப்படிச் சமாளிப்பது என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தோம். இதை யோசிக்கக்கூட இல்லை. ஆனால்,அவர் ஏன் இதைக் கேட்க இவ்வளவு மென்று விழுங்குகிறார் என்பது முதலில் புரியவில்லை. 

“அட! அதெல்லாம் ஒன்னுமில்லே பிரகாஷ். தாராளமா வரட்டும். எங்களுக்கு ஒரு பிரச்சினையுமில்ல. உண்மையிலே சைவம்ன்னு யாரும் வந்தா தான் சிரமம்.”

அவர் சற்று உற்சாகமாகிவிட்டார். “அப்பச் சரி ஹரி. நான் அவங்ககிட்ட பேசிடுறேன். நாளைக்கு அவங்க எப்போ இங்க வருவாங்கன்னு கேட்டு சொல்லிடுறேன்.” என்று சொல்லிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டார்.

“என்ன டக்குன்னு ஓ.கே. சொல்லிட்டீங்க?”

“ஏன் வேறென்ன சொல்லணும்?”

“அதுக்கு இல்ல. நாம கலந்து பேசிட்டு சிவா அண்ணாகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவை நாளைக்கு சொல்லிருக்கலாம்.”

“இதுல சிவாகிட்ட கேட்க என்ன இருக்குன்னு எனக்குப் புரியல.”

“அவங்க இங்கயே ரெண்டு வருசமா இருக்காங்கல்ல. அதுக்காகச் சொன்னேன்.” என்று சமாளித்தாள்.

“இதோ பாரு. நீ எதுக்குச் சொல்றன்னு எனக்குத் தெரியும். கொஞ்சமாவது படிச்ச பொண்ணு மாதிரி நடந்துக்கோ. ஊர்க்காரப் பொண்ணு மாதிரி இல்லாததையும் பொல்லாததையும் யோசனைபண்ணிட்டு இருக்காத.”

“அப்படி சொல்லல. யாரு என்னன்னு தெரியாதவங்க இல்ல.”

“உனக்கு அவங்க யாருன்னு தெரியாதது இல்ல பிரச்சினை. யாருன்னு தெரிஞ்சதுதான் பிரச்சனை.”

“எனக்கு என்னமோ மனசுல பட்டத சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்.” சொல்லிவிட்டு விடுவிடுவென்று உள்ளுக்குச் சென்றுவிட்டாள்.

எந்த ஒரு விவாதத்திலும் பூரணி கைக்கொள்ளும் கடைசி ஆயுதம் இது. அவளுக்கு உவப்பில்லாத ஒரு முடிவின் மொத்தப் பொறுப்பையும் என் தலையில் போட்டுவிடுவாள். பின் அடுத்து வரும் நாட்களில் அதைப் பற்றிய எதிலும் கலந்துகொள்ள மாட்டாள். அந்த முடிவின் விளைவாக வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் என் மேல் குற்றம் சாட்டி தன்னுடைய முடிவே சரியானது என்பதை நிறுவிக்கொள்வதில் அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம். 

எதிர்பார்த்தது போலவே அவள் அடுத்த இரண்டு நாட்களும் எங்களோடு தங்க வருபவர்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. பிரகாஷ் பேசிவிட்டுப் போய் அது மூன்றாவது நாள். அவரிடமிருந்தும் தகவல் இல்லை. நான் இல்லாத நேரத்தில் அவர்கள் வந்து, முதல்முறையே இவள் ஏதாவது முகத்தைத் திருப்பிக்கொண்டாள் என்றால் தர்ம சங்கடமாகிவிடும். அவரிடம் ஓ.கே. சொல்லும் முன் பேருக்காவது இவளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவு சொல்லியிருக்கலாம். அதுவும் அவர் முன்னால் கேட்டிருந்தால் இவளே சரியென்பதாகத்தான் தலையாட்டியிருப்பாள். இப்போதுகூட அவர்கள் வருவதற்காக கிச்சனைத் துடைப்பது, பரத்தியிருந்த பொருட்களை எடுத்து ஒதுக்குவது, ஃஃப்ரிட்ஜின் ஒரு கீழ் இரண்டு அடுக்குகளை சுத்தம் செய்வது என்று எல்லாவற்றையும் அவளேதான் செய்துவைத்தாள். அதே நேரத்தில், பாத்திரத் தொட்டி இருக்கும் கிச்சன்பகுதியைஎடுத்துக்கொள்வது, ஃப்ரிட்ஜில் மேல் அடுக்குகள் என்று நைச்சியமாக சில சவுகரியங்களைச் சொந்தமாக்கிக்கொண்டாள்.  

அடுத்த ஞாயிற்றுக் கிழமை, நானே பிரகாஷுக்கு அழைத்தேன். 

“பிரகாஷ், அவங்க வரதைப் பத்தி தகவல் சொல்றேன்னு சொல்லிருந்தீங்க. ஒன்னும் சொல்லல. அதான் எப்ப வருவாங்கன்னு கேட்டுக்கலாம்ன்னு கால் பண்ணேன்.”

“வீட்லயா இருக்கீங்க?”

“ஆமா பிரகாஷ்.”

“இருங்க. பத்து நிமிசத்துல நானே மேல வரேன்.” என்றார். 

அவரும் இந்த அப்பார்ட்மண்ட்டின் முதல் தளத்தில்தான்குடியிருக்கிறார். எங்களுடையதுமூன்றாவது தளம். அவர் என் கல்லூரித் தோழன் சிவாவுக்கு மானேஜர். அவரே இங்கு தங்கியிருப்பதால் அப்பார்ட்மண்ட்டின் வசதிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஊர் பழகும் வரை அவசர உதவிக்கும் ஆகும் என்று சொல்லி அவன்தான் இவரைத் தொடர்பு செய்யச் சொல்லி பரிந்துரைத்தான்.

பூரணி தலைவலி என்று சொல்லிவிட்டுப் உள்ளறையில்படுத்திருந்தாள். காலிங் பெல் அடிக்கத் தேவையில்லாத படி,வீட்டுக் கதவைத் திறந்து வைத்து சோபாவில் அமர்ந்திருந்தேன்.

பிரகாஷ் கதவை நடுவிரலால் இரண்டு முறை மெதுவாகத் தட்டினார்.

“வாங்க பிரகாஷ்.”

“அதொண்ணுமில்ல ஹரி. அவங்க இப்போ இங்க வரல. எங்க பிராஜெக்ட்ல ஒருத்தர் அடுத்த வாரம் இந்தியாலருந்து தன் ஃபேமிலியைக் கூட்டிட்டு வரார். அவர் இங்கே ஜாயின்பண்ணிப்பார். சென்னைக்காரர்தான். முத்துச்சாமின்னு சிவாவுக்கும்கூட பிரண்டுதான். சிவா உங்ககிட்ட சொல்லலியா?” என்றார்.

“ஓ அப்படியா, இல்லையே பிரகாஷ். நடுவுல அவன்கிட்ட பேசவேயில்ல.”

“இவங்க கன்பார்ம்டுதான்.”

“ஓ.. இல்ல அவங்க ஏன் வரலயாம்?”

“அவங்க என்கிட்ட இருந்த வேற ஒரு வீட்டுலசேர்ந்துகிட்டாங்க.”

“ஓ, அப்போ அதுவும் ஜாயிண்ட் வீடுதானா?” என்றேன்.

“ஆமாமா” என்று சொல்லி எழுந்துவிட்டார். எனக்கு அவர்கள் ஏன் இந்த வீட்டைத் தேர்வு செய்யவில்லை என்பதைத்தெரிந்துகொள்ள வேண்டும். அதை நேரடியாகக் கேட்பது சரியாக இருக்காது. அது குறித்துப் பேச வாயெடுப்பதும் தவிர்ப்பதுமாய் இருந்தேன். பிரகாஷ் அதைக் கண்டுபிடித்துவிட்டார் என்பது அவருடைய முகக்குறிப்பில் தெரிந்தது. 

“வேற ஏதாவது சொல்லணுமா ஹரி?”

“இல்ல.. ஒன்னுமில்ல. தாங்க்ஸ்!”

“சரி வரேன் ஹரி. பை!” என்று சொல்லி வெளியேறி கதவைச் சாத்தினார். அது சரியாகச் சாத்தவில்லை. திரும்பவும் திறந்துநன்றாக இழுத்துச் சாத்த வேண்டும். அதற்காகக் கதவைத் திறந்தவர், எட்டிப் பார்த்தபடி, “ஸாரி ஹரி, நாளைக்கு டூல்ஸ் எடுத்துட்டு வரேன். இதைக் கையோடு சரி பண்ணிடலாம்நிச்சயமா. ஐயம் ஸாரி!” என்றார். 

இழுத்துச் சாத்துவதற்கு முன்னர் என்னைப்பார்த்தபடி, “அந்த வீட்டுலயும் ஏற்கனவே ஒரு முஸ்லிம் ஃபேமிலி இருக்காங்க. அவங்களுக்குள்ள பேசிட்டு இவங்களே அங்க போறதா எங்கிட்ட சொன்னாங்க. சும்மா உங்க தகவலுக்குச் சொல்றேன். சரி, நீங்க பாருங்க. பை!” என்று சொல்லிவிட்டு கதவை இழுத்துச் சாத்தினார். 

அதைக் கேட்டதும் உண்மையில் சற்று ஏமாற்றமாக இருந்தது. 

அவர் சென்றதும் பால்கனிப் பகுதியிலிருந்த அந்த பிரஞ்ச் மாடல் பெரிய ஜன்னலைத் திறந்தேன். எங்கிருந்தோ கிளம்பிச்சில பறவைகள் சேர்ந்து பறந்துகொண்டிருந்தன. பெரிய கூட்டம் இல்லை. ஆயிரமோ நூறோ இல்லை. பத்து இருபதுஇருக்கும். அவ்வளவுதான்.

***

– கார்த்திக் பாலசுப்ரமணியன்
 

https://vanemmagazine.com/வலசை-கார்த்திக்-பாலசுப/

இசைவு - இராசேந்திர சோழன்

2 months 3 weeks ago
இசைவு

நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன்.

மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்லை.

குடும்பச் சொத்து என்று மொத்தத்தில் நாலு காணி நஞ்சையும் ரெண்டு காணி புஞ்சையும் இருக்கிறது. மாமனார்தான் சாகுபடி செய்துவருகிறார். கூடவே அரவை நிலையம். சீசனைப் பொறுத்து நெல்லு வியாபாரம். அடிக்கடி வெளியூர் போய்விடுவார். மாமி மட்டும் தனியே.

மாமியையும் நடேசனின் மனைவியையும் ஒன்றாக நிறுத்தினால் தாயும் பெண்ணும் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அக்கா தங்கை என்றுதான் சொல்வார்கள். அனுபவ முதிர்ச்சியை ஒதுக்கிப் பார்த்தால் மாமியைத் தங்கை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவு கச்சிதமான தோற்றம். நடேசனின் சம்சாரம் கொஞ்சம் பருமன், மாமி சற்றே ஒல்லி.

மழமழவென்று பூசி மெழுகினாற்போல எலும்பு தெரியாத அளவான திட்டமான சதை, அதே மழமழப்போடு கூடிய கை கால்கள், மெல்லிய சின்ன இடுப்பு, அளவான மார்பு, கனிவான முகம், தலை என எல்லாமே இதுதான் திட்டமான வளர்த்தி, இதற்குமேல் கிடையாது என்பது போலச் சொல்லாமல் சொல்லி நிற்கும். எந்நேரமும் அலுப்பு சலிப்பில்லாத இளநகை பூக்கும் வதனம். வாழ்க்கையில் துக்கப்பட என்ன இருக்கிறது என்பது மாதிரி. எதிலும் நிறைவு காணும் சாந்தம் மிகுந்த மனம். என்ன துயரமாயிருந்தாலும் மாமியை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டால் போதும். எல்லாம் ஓடி மறைந்துவிடும். மனசில் பளுவெல்லாம் குறைந்து லேசாகி மிதப்பதுபோல் இருக்கும். அப்படி ஒரு களை, ஈர்ப்பு.

இதற்காகவே நடேசன் அடிக்கடி இங்கு வந்துபோவான். எந்த நேரமும் மாமியார் வீடே கதியாய்க் கிடக்கிறானே என்று யாராவது பேசிக்கொள்வார்கள் என்றால்கூட நடேசனுக்கு அதுபற்றி கவலை இல்லை. அப்படி ஒரு மாமி கிடைத்திருந்தால் அதன் சுகம் அப்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும். அவள் அருகில் இருக்கிறோம் என்ற நினைவு ஒன்று போதும். வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்றும் தோன்றும்.

வாரத்தில் இரண்டு தலை முழுக்கும் கறிசோறும் சவரட்சணையும் வேறு எங்கு கிடைக்கிறது? நடேசனின் சம்சாரமும்தான்  சமைக்கிறாள். என்னத்துக்குப் பிரயோசனம்? அப்படி ஒரு பாகமும் ருசியும் இவளுக்கு வருமா?

அம்மாவின் கைப்பக்குவம் பெண்ணுக்கு அப்படியே வரும் என்பார்களே… இவளுக்கு மட்டும் ஏன் அப்படி வராமல் போய்விட்டது? 

நடேசன் அடிக்கடி மாமியாரைப் புகழ்ந்து ஏதாவது சொல்ல, ‘உங்களுக்கு கொஞ்சம்கூட கூச்சநாச்சமே கிடையாதா?’ என்பாள் மனைவி.

‘என்னாடி அவர போய் இந்த மாதிரி பேசிக்னு. வூட்டுக்கு ஒரு புள்ள இருந்தா…! இவராவது இப்படி கலகலன்னு இருக்காரே… மொத மருமகப்புள்ள மாதிரி உம்முன்னு இல்லாம…’ என்பாள் மாமி.

‘போம்மா… உனக்கும் ஒரு இது கெடையாது…’

‘என்னா கெடையாது… ஆளுக்கு ஒருபக்கம் மூஞ்ச தூக்கி வச்சிக்னு குந்திக்னு இருக்கணும்றியா…? கப்பல் கவுந்துட்டாப் போல… என்னாத்தடி வாரிக்னு போயிடப் போறம்…’

‘கரெக்ட் மாமி’ என்பான் நடேசன்.

மாமி சிரிப்பாள். ‘அவ சொல்றாளேன்னு நீங்க ஒன்னும் சங்கடப்படாதீங்க. அவ அப்படிதான்…’ என்பாள்.

மாமி எப்பவும் நடேசனின் பக்கம். அவன் மனைவி பேசாமல் வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். வெறுத்துப் போய், ‘எப்பிடியாவுது போங்க. மொதல்ல நீங்க ஊருக்குக் கௌம்புங்க. அப்பதான் சரிப்படும்…’ என்பாள்.

நடேசன் மாமியைப் பார்ப்பான்.

‘அவ கெடக்கிறா… இதுக்குள்ள என்ன அவசரம்? எல்லாம் கூட நாலு நாள் தங்கிட்டுப் போவலாம். அவ வேணுமின்னா மின்ன போவட்டும்.’

நடேசனின் முகம் மலரும்.

கலியாணமாகி ஒரு வருஷத்துக்குள் ஏழெட்டு தடவை வந்துபோய்விட்டிருப்பான். பக்கத்தில் பத்தொன்பது மைலில்தானே? சில சமயம் மாமி வீட்டிலேயே தங்கி தினம் பஸ்ஸில் ஆபீஸ் போய் வந்துவிடுவான்.

இந்தச் சமயம் நடேசனின் மனைவிக்கு வளைகாப்பு. மாமியும் மாமனாரும் சீர் வரிசைகளுடன் வந்து அழைத்துப் போனார்கள். தனியே ஓட்டலில் எங்கே சாப்பிடுவது? பஸ்ஸுக்கு அழுதால் அழுது தொலைகிறது என்று நடேசனும் கூடவே கிளம்பிப் போய்விட்டான்.

நடேசனுக்கு எல்லாக் கவனிப்பும் மாமிதான். மனைவிக்குச் சாதாரணமாகவே இங்கேயிருப்பதைத் தூக்கி அங்கே வைத்தால் புஸ்.. புஸ்.. என்று மூச்சு இறைக்கும். இப்போது வாயும் வயிறுமாக இருப்பதால் மூச்சு இன்னும் கொஞ்சம் மோசம். உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது. எழுந்தால் உட்கார முடியாது.

குளித்துவிட்டு வந்த நடேசன் உடம்பைத் துவட்டிக்கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து வியர்வை முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்த மாமி, ‘என்னாடி இப்பிடி எளைக்க வச்சுட்ட இவர? எலும்பெல்லாம் தூக்கிக்னு இருக்குதே. ஏங்க… அவ என்னாதான் ஆக்கிப்போடறா உங்களுக்கு?’ என்றாள்.

நடேசன் சிரித்தான். உண்மையில் நெஞ்சு எலும்பு கொஞ்சம் கிளப்பிக்கொண்டுதான் இருந்தது. ‘பரவாயில்லை, போவறதுக்குள்ள சரியாப்பூடும்’ என்றான் நடேசன்.

மாமி சிரித்தாள்.

தட்டில் நாலு இட்டிலிகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சட்டினிக்காக உள்ளே போனாள் மாமி. நடேசனின் மனைவி அவனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு, ‘ரொம்ப அழகுதான் போங்க…’ என்று பழிக்காமல் பழித்துக்காட்டுவது போன்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ‘சரிதான் போயேன்’ என்பதுபோல நடேசனும் அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு இட்டிலியைப் புட்டான்.

‘என்னா உங்க ரெண்டு பேருக்குள்ள…’ என்று கேட்டபடியே வந்தாள் மாமி.

‘என்ன ஊருக்குப் போவச் சொல்றா…’ என்றான் நடேசன்.

‘ஏண்டி?’ என்றாள் மா£மி.

‘சும்மா வாயெக் கௌறாதீங்க…’ என்றாள் நடேசனின் மனைவி.

நடேசன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

சட்டினியைக் கரண்டியில் மொண்டு தட்டில் வைத்துவிட்டு பக்கத்திலேயே குந்திக்கொண்டாள் மாமி. இவ்வளவு கிட்டத்தில் இப்படி எப்போதும் குந்தியதில்லை. நடேசன் மட்டும் தனியாக இருந்தால் கொஞ்சம் கூச்சப்பட்டு ஒருவேளை சற்றுத் தள்ளி உட்கார்ந்திருப்பாள். மகளும் இருக்கிறாளே என்பதனால் விரசமில்லாமல் குந்திவிட்டிருக்கலாம். தலைமுடி லேசாய்க் கலைந்து காதோரங்களில் தொங்கியது. வியர்வை ஈரத்தில் முகத்தோடு அழுந்திப் பதிந்து கிடந்தது. சிவந்த முகத்தில் கரிய மயிர்கள். சின்ன எடுப்பான மூக்கு. உற்சாகமான கண்கள். வியர்வை முத்திட்ட கழுத்து, கை, இடுப்பு, கீழே கொஞ்சம் பருமன். மட்டிபோட்டு தூணோரம் சாய்ந்து குந்தியிருந்தாள். சிவந்த பாதங்கள். விரல் நுனிகள் மேலும் சிவந்திருந்தன. கால் மோதிரம் நெட்டி… மொழுமொழுவென்று கணுக்கால் வரை சிகப்பு. கண்டஞ்சதை, புடவைக் கரை, இடுப்பு வரை புடவை. அப்புறம் அதே சிகப்பு ரவிக்கை வரைக்கும் தழைந்து சரிந்த முந்தானையின் ஊடே… சிவந்த வயிறு, மெல்லிய சின்னஞ்சிறு மடிப்பு. மடிப்பு மடிப்பாகத் தழைவான மடிப்பு…

பிட்ட இட்டிலியைச் சட்டினியிலேயே தோய்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மாமி, ‘கொஞ்சம் எண்ணெய் கொண்டு வரட்டா… சட்டினி காரமாயிருந்தா…’ என்றாள்.

நடேசன் மனசை உலுப்பிக்கொண்டு, ‘வேண்டாம்’ என்றான்.

‘என்னா நெனப்பெல்லாம் எங்கியோ இருக்குதா?’ என்றாள் லேசான கடுப்புடன் மனைவி.

‘எங்க இருக்கும்? எல்லாம் உன்னப் பத்தி, உன் பிரசவத்தப் பத்தித்தான்…’ என்று சிரித்தான். பின்பு மனைவிக்கு ஆறுதலான வகையில், ‘பொறக்கறது புள்ளையா இருக்குமா, பொண்ணா இருக்குமான்னு யோசனை…’ என்றான்.

‘ஆமா ஆமா… யோசனை வந்துட கிந்துடப்போவுது’ என்றாள் மனைவி.

‘ஏண்டி இருக்காதோ…? புள்ளைதான்…’

சிற்றுண்டி முடித்து ஆபீசுக்கு புறப்பட்டான் நடேசன். 

‘வேளையா வந்து சேருங்க. அவருகூடம் ஊருல இல்ல. தனியா வெட்டு வெட்டுனு…’ என்றாள் மாமி.

இரவு எல்லாம் சாப்பிட்டாகிவிட்டது. மொட்டை மாடியில் வழக்கம்போல நடேசனுக்கு படுக்கை விரித்திருந்தது. படுக்கையில் மனம் கொள்ளவில்லை. புரண்டுகொண்டிருந்தான். உள்ளங்காலிலிருந்து ஜிவு ஜிவு என்று ஏதோ ஏறி உடம்பெல்லாம் கிறுகிறுக்க வைத்த மாதிரி. அப்புறம் அப்படியே நெஞ்சில் குடுகுடுவென்று உருள்கிற மாதிரி துள்ளுகிறது.

ராத்திரி சாப்பிடும்போது ‘என்னா ஒரு மாதிரியிருக்கீங்க…?’ என்றாள் மாமி.

‘ஒன்னுமில்லே…’ என்றான் நடேசன்.

‘அவருக்கென்னா, அவரு நல்லாதான் இருக்காரு. நீ என்னாம்மா ஒரேடியா இது பண்ணிக்னு…’ என்றாள் நடேசன் சம்சாரம்.

‘சும்மா இருடி. ஒனக்கு ஒன்னும் தெரியாது’ என்று சொல்லி, சட்டென்று நடேசனின் நெற்றியில் புறங்கை வைத்துப் பார்த்துவிட்டு, ‘லேசா கனகனன்னு இருக்கிறாப்போல இருக்கு. என்ன ஒடம்புக்கு?’ என்றாள்.

‘ஒன்னுமில்லியே…’ என்றான் நடேசன்.

‘அடாடடடா…!’ மனைவி.

‘ஒனக்கு ஏண்டி எரிச்சலா இருக்குது?’ என்றாள் மாமி.

சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் கையை வாயைக் கழுவிக் கொப்பளித்துக்கொண்டு படியேறும் சமயம், மாடியில் நடேசனுக்குப் படுக்கை போட்டுவிட்டுக் கீழே இறங்கிக்கொண்டிருந்தாள் மாமி. ஒதுங்கி வழி விடலாமா… நேரே போலாமா… வேண்டுமென்றே லேசாய் உரசிப் பார்க்கலாமா… கொஞ்ச நேரத்தில் பித்துக்குளித்தனமான எத்தனையோ எண்ணங்கள் மத்தாப்பாய்ப் பொசுங்கின. மௌனமாய் ஏறினான்.

‘பாத்து வாங்க இருட்டுல…’

புடவை மணம். தலைமுடி வாசனை. மூச்சுக்காற்று. சோப்பு மணம். எல்லாம் நடேசனைக் கடந்துசென்றது. உடம்பு உரசவில்லை. காற்று உரசியது. ஒருகணம்தான். அது நெஞ்சில் அப்படியே தொற்றிக்கொண்டது.

தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்து, அப்படிப் புரண்டதினாலேயே ஒரு ஆயாசம் ஏற்பட்டு கண்ணை இழுக்க… கீழே சந்தடியெல்லாம் ஓய்ந்து, ஊர் சந்தடியும் அடங்கிவிட்டது. மொட்டை மாடியில் மங்கிய நிலா. மேலே தலை நீட்டியிருந்த வேப்ப மரத்தில் மட்டும் லேசாய் சலசலப்பு. தழைகள் தலையாட்டின. யாரோ பாய் பக்கத்தில் வந்து குந்தியது போல உணர்வு. புரண்டான். உடம்பு குந்தியிருந்த உடம்பின்மேல் பட்டது. ஒன்றோடொன்று இழைந்தது. கண் விழித்தான்.

‘தூங்கிட்டீங்களா…’ மாமிதான்.

‘ஆமா… லேசா கண்ணை இழுத்துக்னே பூடுத்து.’

‘ஒடம்பு சரியில்லாம இருந்துதே. எப்படி இருக்குதுன்னு பாத்துக்னு போலாம்னு வந்தேன்.’

‘தேவலாம். நீங்க தூங்கலியா…’

‘தூக்கம் வரல்ல…’

‘அவ தூங்கிட்டாளா…?’

‘கொரட்ட வுடுறா…’

படுத்தவாக்கிலேயே மெல்ல மார்பின்மேல் சாற்றிக்கொண்டான். கை இடுப்பைத் தடவி வளைத்துக்கொண்டது. நடேசனின் மூச்சின் உஷ்ணம் அவளைச் சுட்டது. தலையை ஒருக்களித்து வாகாக நெஞ்சில் தலை வைத்து கால்களைச் சரித்தாள். நடேசனின் இரண்டு கைகளும் தோள்களை நெருக்கி முதுகை வருடின. ரவிக்கையில் நூல் இழைகள் பிகுவாக உடம்போடு ஒட்டி, முதுகெலும்பு மேடு தட்டியது. விலாவுக்கு மேலே அவள் மார்பு புதைந்து கிடந்தது. கைகளால் மெல்லத் தலையைக் கோதினாள். நடேசன் அந்தக் கைகளைப் பிடித்து அவளைக் கீழே சரித்தான். அவள் முகம் நடேசனின் வயிற்றுக்கு நேரே… குழந்தை மாதிரி தூக்கி மேலே ஏற்றிப் படுக்க வைத்து இறுக்கி அணைத்தான். இறுக்கம்… இறுக்கம்… அவள் ‘அப்பா… போதும் மெதுவா…’ என்றாள்.

எல்லாம் முடிந்த பிறகும் மாமிக்கு எழுந்து போகவேண்டும் என்று தோன்றவில்லை. அப்படியே படுத்துக் கிடந்தாள்.

நிலவு மேற்குப் பக்கம் சாய்ந்து வெம்பிக் கிடந்தது. காணாததைக் கண்ட குமைச்சலாயிருக்கும். மாமி மெல்ல நடேசனின் கையை விலக்கித் தொட்டு எழுப்பி, அணைப்பிலிருந்து விலகிய பின், ‘கீழே போறேன். நடுராத்திரி தாண்டியிருக்கும்’ என்று எழ முற்பட்டாள். அவளை விட மனமில்லாமல் இழுத்து நெஞ்சில் முகம் புதைத்தான் நடேசன்.

‘போதும் போதும். ரொம்ப அழகுதான்…’ என்றாள்.

‘ஏன்? என்னா…’ என்றான் நடேசன்.

சிரித்துக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டாள்.

மறுநாளும் அதற்கு மறுநாளும் மாமி மெத்தைக்கு வந்தாள். அதற்கும் மறுநாள் மாமனார் ஊரிலிருந்து வந்துவிட்டார். கொஞ்ச நாள் கழித்து மனைவிக்குப் பிரசவமாகியது. பெண் குழந்தை. சுகப் பிரசவம். பிரசவத்துக்குப் பின் தீட்டெல்லாம் கழிந்த பிறகு, மாமனார் மறுபடியும் வெளியூர் போனார். இரவு வந்தது. மாமியும் வந்தாள். நிலவும் வந்தது; வேடிக்கை பார்க்க!

நடேசனின் கையைத் தன் மடியில் எடுத்து வைத்து விரல்களை எண்ணுவது மாதிரி பிரித்துப் பிரித்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள் மாமி. எப்படியும் நடேசனின் சம்சாரத்தைவிட பதினெட்டு இருபது வயதாவது கூடுதலாக இருக்கும். பார்த்தால் தெரிகிறதா? செலவாகிப் போகாமல், செலவுக்கு வேண்டும் என்று அப்படியே தேங்கிவிட்டதா? இந்த வயதிலும் எப்படித் துடிப்புடனும் குதுகுதுப்புடனும் இருக்கிறாள்? பாவம் மாமனார். கொடுத்து வைக்காதவர். அவருக்கு ஆளத் தெரியவில்லை.

ரெண்டு பெண்டுகள் கூடம் எப்படிப் பிறந்ததோ? மூத்த பெண் அப்படியே அம்மா ஜாடை. பார்த்திருக்கிறான். ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருக்கும். அவளுக்கு அம்மாவிடம் அதிகமான ஒட்டுதல், பிரியம், பாசம் எல்லாம் உண்டு. ஆனால் அவள் புருஷன் மட்டும் கொஞ்சம் முசுடு. உம்மென்று ஆச்சு, ஆச்சு என்று கிளம்புவதிலேயே இருப்பான். அதிகமாய் வருவதுகூட இல்லை.

நடேசனின் சம்சாரத்துக்கும் மாமிக்கும் முகஜாடை கொஞ்சம் ஒப்புமை இருந்தாலும் அங்க அமைப்பில் சம்பந்தமே இல்லை. இந்த உறுதியும் நளினமும் குழைவும் எங்கே… அந்தப் பொதபொதப்பும் கதனை கதனையான பொறுத்தமற்ற சதையும் எங்கே…

மாமியையே பார்த்துக்கொண்டிருந்தான். புருவ மேட்டுக்குக் கீழே கண் குழியிலும், வதன மடிப்புக்குக் கீழும் மேலுதட்டிலும் இருள் பரவியிருந்தது. மற்ற இடமெல்லாம் நிலவொளியில் தெளிவாய்த் தெரிந்தது. 

மஞ்சளுமில்லாமல் வெள்ளையுமில்லாமல் மழமழவென்று பளிங்கு மாதிரி இருந்தது. இடதுகை விரல் நுனியால் மெல்ல அவள் வலது கன்னத்தில் கோலம் போட்டான் நடேசன். அந்தக் கையையும் இழுத்து மடியில் வைத்துக்கொண்டாள் அவள். அவளின் மன ஓட்டத்துக்கு அது தடைசெய்ததோ என்னவோ?

‘என்ன யோசனை?’ என்றான் நடேசன்.

‘யோசனையா?’ கலகலவென்று, ஆனால் ஓசைப்படாமல் சிரித்தாள். ‘உங்களை ரெண்டாந்தாரம் கட்டிக்கலாமான்னு யோசனை.’

நடேசனுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தான்.

‘கட்டிக்கோங்களேன்… அதப்பத்தி என்னா…’

நடக்கமுடியாத எத்தனையோ விஷயங்களை இப்படிப் பேசி, வெளியிட்டு, நெஞ்சின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அபிலாஷைகளை அவிழ்த்துவிட்டுக் கொள்வதில்தான் எத்தனை சுகம்! அதுவும் தனிமையில் அதன் காரண கர்த்தாக்களுக்குள். அப்படித்தான் இருந்தாள் அவள்.

‘இங்க பாருங்க’ என்று மெல்லத் தலையைத் திருப்பினான். ‘மூனாம் மாசம் அழைச்சிம் போயிடட்டுமா…’

‘ஏன்? என்னா அவசரம்?’

‘எனக்கு அவசரம் எதுவுமில்ல. கேக்கணும்னு தோனுச்சு. கேட்டேன்’ என்றான்.

‘ஒம்பதாவது மாசமாவது, பதினோராவது மாசமாவது அழைச்சிக்னு போகலாம்’ என்றாள் அவள்.

‘பொண்ணுக்கு பாட்டி பேரதான் வக்யணும்…’

‘நான் பாட்டியா?’ என்று சிரித்தாள்.

‘பின்ன இல்லியா…?’ என்று இழுத்து அணைத்துச் சிரித்தான் நடேசன். அவன் வாய் அவள் மூக்கைக் கவ்வியது. மூக்கு, வாய், கன்னம் – கன்னம், வாய், மூக்கு – வாய்… எவ்வளவு நேரமோ…

கீழே முனகல் சத்தம் கேட்டது. ‘அம்மா…ம்மா…’ பெண்தான் கூப்பிடுகிறாள். நடேசன் தட்டி எழுப்பி, ‘அவ முழிச்சிக்னா போலக்து… கூப்புடுறா…’ என்றான். 

மாமி தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு கீழே இறங்கினாள். கீழே சிறிது பேச்சுக்குரல் கேட்டது. தாய்க்கும் மகளுக்கும்தான். எதுவும் சரியாக காதில் விழவில்லை. குழந்தைக்கு குளுக்கோஸ் தண்ணி போடக் கூப்பிட்டிருக்கலாம். கொஞ்ச நேரம் வரைக்கும் விழித்திருந்தான். மாமி திரும்ப வரவில்லை. தூங்கிப் போய்விட்டான்.

மறுநாள் முற்பகல் சமையல் வேலை எல்லாம் முடித்து தோட்டத்தில் பூப்பறிக்கும் போது மாமி நடேசனைக் கண்டு லேசாய் சிரித்து மெல்லக் கிசுகிசுத்தாள். ‘அவளுக்கு சந்தேகம் வந்துட்டுது. எரிபுரின்னு இருக்குறா…’ என்றாள்.

சொன்ன மாதிரியே மனைவி அப்படித்தான் இருந்தாள். நடேசனிடம்கூடச் சரியாக எதுவும் பேசவில்லை.

மாமியின் இஷ்டப்படியே பதினோராம் மாசம் வரைக்கும் சம்சாரம் இருக்கவிடவில்லை. அஞ்சாம் மாசமே, கிளம்பு கிளம்பு என அரித்தெடுத்துவிட்டாள். அவள் அவசரத்தின் காரணம் சம்பந்தப்பட்ட இருவருக்கும் புரிந்தது. வேண்டா வெறுப்பாகத்தான் அதை விட்டுக் கிளம்பினான். வீடு வந்த பிறகு ரகளை.

‘உங்களுக்குக் கொஞ்சம்கூட இதுவே கெடையாதா…?’

‘என்னா?’ நடேசன் முறைத்தான்.

‘சே… உங்களுக்குத்தான் மூளையில்லேன்னாலும் அவுங்களுக்கும் மூளையில்ல…’

‘என்னா சொல்ற நீ?’

‘ஒன்னுந் தெரியாதுன்னு நெனச்சிக்னு சும்மா வாயக் கௌறாதீங்க… அப்புறம்…’ என்று இழுத்தாள்.

‘சரி சரி. அதெல்லாம் ஒன்னுங் கெடையாது. சும்மா இரு’ என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

‘இனிமே மாமி வூடு… அது இதுன்னு… எப்பனா பொறப்டு போனீங்க… அப்புறம் அவ்ளவுதான்…’

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டது. மாமனார் மட்டும் நடுவில் இரண்டு மூன்று முறை வந்து போனார், பேத்தியைப் பார்க்க. ஒருதடவை வந்தபோது ரொம்பக் கூச்சத்துடன் தன் சம்சாரம் முழுகாமலிருக்கிற சேதியைச் சொல்லிவிட்டுப் போனார். நடேசனுக்கு நெஞ்சமெல்லாம் கிறுகிறுத்தது. மனைவி முகத்தைச் சுழித்துக்கொண்டாள். 

மகள் குழந்தை பெற்று பேரன் பேத்திகளைக் காண்கிற இந்த வயதில் இப்படி ஒரு கருத்தரிப்பு தேவையா என்பது கேள்வியாக இருந்தாலும், பல பேரின் எள்ளல் பேச்சுக்கு உள்ளாகி இருந்தாலும், எக்காரணத்தை முன்னிட்டும் கருக்கலைப்பு என்ற எண்ணத்திற்கு மட்டும் இடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஏதாவது செய்ய முனைவது, உடம்பு தாங்காது, உயிருக்கு ஆபத்தாய் முடிந்தாலும் முடியலாம். இயற்கையாக உடம்பு எந்த அளவு அனுமதித்ததோ, அந்த அளவு நடக்கட்டும். இயற்கை விதிப்படி எது நடக்கிறதோ நடக்கட்டும். நாமாக எதுவும் செய்யவேண்டாம் என்று உறுதிபடச் சொல்லிவிட்டார் டாக்டர்.

ஒரு தடவையாவது நடுவில் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று துடிப்பு. தெரியாமல் போய் வந்துவிடலாம் என்றால் எப்படியும் முடியாது. மெல்ல அவளிடம் பீடிகை போட்டான்.

‘பாவம் உங்க அம்மா. போய் பாத்துட்டு வர்றதுக்குக் கூடம் இல்ல. எப்பிடி இருக்காங்களோ…’ என்றான் நடேசன்.

‘போதும் உங்க கரிசனம். எல்லாம் அங்க இருக்கிறவங்க பாத்துக்குவாங்க. நீங்க சும்மா இருங்க.’

பிறகு அவன் அந்தப் பேச்சையே எடுப்பதில்லை. தனியே இருக்கும்போது மனம் பரிதவிக்கும். கிடந்து வதைவான். அந்த வதைவு, அது யாருக்குப் புரியும்?

‘சார் தந்தி!’ என்று ஆபிஸ் சேவகன் நீட்டிய அஞ்சல் தாளை நடுக்கத்துடன் வாங்கிப் பாரத்தில் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டுப் பிரித்தான். மாமனார் கொடுத்திருந்தார். ‘உடனே புறப்பட்டு வரவும். மாமிக்கு மோசம்.’ அப்படியே கால் காகிதத்தில் பரபரவென்று லீவு எழுதி மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து கட்டின துணியோடு அவளையும் கூட்டிக்கொண்டு அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டுவிட்டான்.

என்ன, ஏது என்று விவரமாக ஒன்றும் இல்லாமல் மாமிக்கு மோசம் என்றால் என்னவென்று நினைப்பது? மனசு எங்கெல்லாமோ தட்டுக்கெட்டுத் தடுமாறி அலைபாய்ந்து தவித்துத் திரும்பியது. நல்ல காலம் வீட்டெதிரில் எதுவும் கூட்டமில்லை.

அவளுக்கு முன் நடேசன்தான் உள்ளே நுழைந்தான். கட்டிலில் மாமி. ஓரத்தில் ஒரு டாக்டர். பக்கத்தில் மாமனார். இன்னும் அக்கம் பக்கத்து வீட்டு பொம்பளைகள் ரெண்டு மூணு பேர்.

மாமி தன் உடம்புக்குப் பொருத்தமில்லாத பாரத்தைத் தாங்கியவள் போல் துவண்டு கண்ணை மூடியிருந்தாள்.

‘நடுவில் நீண்டநாள் இடைவெளி இல்ல. கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கும். கவலப்படாதீங்க. ஒன்னும் ஆவாது’ என்றார் டாக்டர்.

இரவு ரொம்ப கஷ்டமாகவும் வேதனையுடனும் கழிந்தது. நடேசன் வந்தபிறகு கண்ணை விழித்த மாமியின் முகத்தில் ஒரு ஒளி பரவி மறைந்தது. பக்கத்தில் போய் உட்கார்ந்து கையைப் பிடித்துக்கொள்ளவும் தலையைக் கோதிவிடவும் தேறுதல் சொல்லவும் நெஞ்சம் பதைத்தது. அதே ஏக்கம் அவள் முகத்திலும் பிரதிபலித்தது. யாரும் தனியாக இருக்கவிடவில்லை. ஒருத்தர் மாற்றி ஒருத்தர். அதை நினைத்துக் கசந்தபடியே உறக்கத்தில்… இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு பெரிய சப்தம். உயிர் பிரிகிறது மாதிரி. உடம்பிலிருந்து உயிர் பிரிகிற சத்தம் இல்லை. உயிரிலிருந்து உயிர் பிரிகிற சத்தம்.

பொழுது விடிந்துவிட்டது. சுகப் பிரசவம். ஆண் பிள்ளை. தீட்டு, தடுக்கு, தலைமுழுக்கு எல்லாம் ஒரு வாரத்தில் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது. பத்து மணிக்கு மேல் மாமனார் வெளியே புறப்பட்டுப் போனார் போஸ்டாபீசுக்கு. சொந்தக்காரர்களுக்கு கார்டு எழுதிப் போட. அடுப்பில் குழம்பு கூட்டிப் போட்டுவிட்டு குழந்தையை மடியில் தாங்கிப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள் நடேசன் சம்சாரம். அவளும் எழுந்து தோட்டப்பக்கமாவது எங்கியாவது போவ மாட்டாளா… இன்னும் குழந்தை எப்படியிருக்கும் என்றுகூடப் பார்க்கவில்லை. மாமி எப்படியிருக்கிறாளோ…

‘ஏண்டி…’ பிரசவித்த அறையிலிருந்து கீச்சென்று ஒலித்தது மாமியின் குரல் பல்வேறு தவிப்புகளுடன்.

‘என்னாம்மா…?’ உட்கார்ந்த நிலையிலேயே இவள் கேட்டாள்.

‘அவரு இல்லியா…?’

‘அப்பாவா…?’

கொஞ்ச நேரம் மௌனம்.

‘மாப்பிள்ளை…!’ மீண்டும் உள்ளிருந்து குரல் வந்தது.

‘இருக்காரு இருக்காரு’ என்று சொல்லிவிட்டு நடேசனைப் பார்த்தாள் மனைவி.

‘கொஞ்சம் வரச்சொல்லு…’

நடேசன் தயங்கி அறைக்குள் போனான்.

சோர்ந்து வெளுத்திருந்தாள் மாமி. பக்கத்தில் செவேலென்று சிசு. பிறந்த வீச்சம் மாறாத சிசு. கண்ணை மூடி கைகளை மூடிக் கிடந்தது. 

உதடுகள் நெளிய மெல்லச் சிரித்த மாமி, ‘உக்காருங்க’ என்றாள். அவன் வெளியே எட்டிப் பார்த்தான்.

‘அவ கெடக்கறா… ஒக்காருங்க…’

நடேசன் உட்கார்ந்தான். நடேசனின் கைகள் இரண்டையும் எடுத்துத் தன் கன்னங்களில் பதித்துக்கொண்டு, ‘நடுவில ஒருதரம்கூட வரலியே’ என்றாள்.

அவன் மௌனமாயிருந்தான். எத்தனை நாள் ஆவேசமோ? நெஞ்சிலிருந்து நீராய்ப் பீரிட்டு கண்களில் முட்டியது.

‘கொழந்தையப் பாத்தீங்களா…?’

அவன் கண்களை ஒற்றிக்கொள்ள கைகளை விடுவித்துக்கொண்டு சிரித்தான்.

‘நான்தான் தந்தி குடுக்கச் சொன்னேன். எனக்கே நம்பிக்கை இல்ல…’ என்றாள்.

‘நான் பயந்தே போயிட்டேன்.’

‘செத்திடுவனேன்னா…’ சிரித்தாள் அவள். கைகளை எடுத்து நெஞ்சில் வைத்து இறுக்கிக்கொண்டு, ‘ஒரு மாசத்துக்கு இங்கியே இருந்துட்டுப் போலாம். அவளும் எனக்கு ஒத்தாசையா இருப்பா…’

‘அவகிட்ட சொல்லுங்க’ என்றான் நடேசன். எவ்வளவோ இழந்துவிட்ட பொருமலுடன்.

‘அவ என்னா சொல்றது? இருடீன்னா இருக்க வேண்டியதுதானே?’ என்று தீர்மானமாய்ச் சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் நடேசனையே பார்த்துக்கொண்டிருந்தாள். மனசிலிருந்த பளுவெல்லாம் இறங்கிய மாதிரியிருந்தது. செல்லமாய் உரிமையுடன் லேசாய் கன்னத்தைக் கிள்ளினான்.

‘ஸ்…’ என்றாள் கையை விலக்கிவிட்டு. கொஞ்சம் ஒருக்களித்து சிசுவைச் சீண்டி, ‘அப்பா பாருடா கண்ணா’ என்று சிரித்தாள். அந்தப் பலவீனத்திலும் என்ன ஒரு களை.

‘அப்பா இல்ல. மாமா!’ என்று திருத்தினான் நடேசன்.‘அப்பா வர்றாருமா…’ தெருப் பக்கமிருந்து எதிலும் படாதவள் போல் குரல் கொடுத்தாள் நடேசனின் சம்சாரம். அதுதான் என் சம்சாரம் என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் நடேசன்.

 

https://tamizhini.in/2022/08/30/இசைவு/

10,000 டாலர்... பரிசு பெற்ற, கார் சாரதி. 

3 months 2 weeks ago

May be an image of 3 people, people standing, car and road

10,000 டாலர்... பரிசு பெற்ற, கார் சாரதி. 

 

ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார்.
நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.
 
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று,
அவர் கார் முன் நின்றது.இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..
 
'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'.
 
போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்......
"நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல்,
சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால்,
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து,
10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.
 
அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார்,
'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.
 
போலிஸ் ஒருமாதிரி பார்க்க,
உடனே அவரின் மனைவி... 'சாரி சார், தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.
 
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார்,
'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால்,
இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்......🤦‍♂
 
படித்தவுடன் சிரிக்க வைத்தது. 😁
Checked
Tue, 11/29/2022 - 09:40
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதைக் களம் feed