யானைகள் சில தாவரங்கள் மூலம் தமக்குத் தாமே மருத்துவம் செய்யும் - ஆய்வில் புதிய தகவல்
பட மூலாதாரம்,Mount Elgon Foundation
படக்குறிப்பு,காட்டு யானைகள் 35-க்கும் மேற்பட்ட தாவரங்களைப் பயன்படுத்துவதாக உள்ளூர் நிபுணர்களின் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன, அவற்றில் பல அறியப்பட்ட மருத்துவப் பயன்களைக் கொண்டவை.
கட்டுரை தகவல்
விக்டோரியா கில்
அறிவியல் செய்தியாளர்
27 செப்டெம்பர் 2026
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஆப்பிரிக்க யானைகள் தாங்களோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களோ நோய்வாய்ப்பட்ட போது பல்வேறு மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்தி தாமே குணப்படுத்திக் கொள்கின்றன.
கென்யாவின் மவுண்ட் எல்கன் பகுதியில் யானைகளுடன் வாழ்ந்து பணியாற்றும் மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு இதைத் தெரிவிக்கிறது.
இந்தப் பகுதியில் வாழும் யானைகள், அவற்றின் அசாதாரண நடத்தையால் நீண்ட காலமாகவே விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தங்கள் உணவுக்குத் தேவையான தாதுப் பொருட்களைப் பெற, அவை குகைகளுக்குள் சென்று தந்தங்களால் பாறைகளைச் சுரண்டுவதால், இவை "உப்புச் சுரங்க யானைகள்" என்று அழைக்கப்படுகின்றன.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, இந்த யானைகள் காட்டில் வளரும் பல்வேறு தாவர இனங்களையும் மருத்துவ நோக்கங்களுக்காகக பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது.
பட மூலாதாரம்,Mount Elgon Foundation
படக்குறிப்பு,மவுண்ட் எல்கன் அறக்கட்டளை அமைத்த கேமராக்கள், உணவில் தாதுச் சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காக யானைகள் குகைகளில் உப்பைத் தோண்டி எடுக்கும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன.
இந்த ஆய்வின் முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எலோடி ஃப்ரெய்மன் கூறுகையில், காடுகள் அழிக்கப்படுவதன் மூலம் விலங்குகளும் மனிதர்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான இயற்கை மருந்துகளை இழக்க நேரிடுகிறதா என்ற கேள்வியை இந்த ஆய்வு எழுப்புகிறது என கூறினார்.
"நாம் பயன்படுத்தும் மருந்துகள் மனிதரல்லாத இயற்கை உலகுடன் எவ்வளவு ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை இது காட்டுகிறது," என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
குட்டி யானைகளுக்கான மருந்து
பட மூலாதாரம்,S Powles
படக்குறிப்பு,காடுகள் யானைகளுக்கான 'இயற்கை மருந்தகங்கள்' என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகள், மவுண்ட் எல்கன் அறக்கட்டளை என்ற இயற்கைப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து பணியாற்றினர். வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் அவர்கள் நேர்காணல் நடத்தினர்.
அந்தப் பதிவுகளின்படி, உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தோன்றிய நேரங்களில் யானைகள் குறிப்பிட்ட தாவரங்களைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதையும், தாய் யானைகள் மருத்துவத் தாவரப் பொருட்களைத் தங்கள் குட்டிகளுக்குக் கொடுப்பதையும் அவர்கள் விவரித்தனர்.
இதன் அடிப்படையில், யானைகள் 35 வகையான தாவரங்களைப் பயன்படுத்துகின்றன என்றும், அவற்றில் 25 வகைகள் மருத்துவப் பயன்பாடு கொண்டதாக உள்ளூரில் அறியப்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், தகவல் வழங்கியவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் தங்கள் அனுபவங்களைத் தயக்கமின்றிப் பகிரும் வகையில் அவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டது.
சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு வனவிலங்கு கண்காணிப்பாளர், "அங்குர்வீட்" எனப்படும் தாவரத்தை யானைகள் "குட்டிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்தாக" பயன்படுத்துவதைப் பார்த்ததாகக் கூறினார்.
அங்குர்வீட் வயிற்று வலி உள்ளிட்ட நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தாய் யானைகள் அதைத் தங்களின் வாயில் மென்று கலக்குவதாகவும் - "இலைகளை நீக்கி, வேறு சில மரங்களின் வேர்களுடன் சேர்த்து அது மிருதுவாகும் வரை மெல்லுவதாகவும்" அந்த வனவிலங்கு கண்காணிப்பாளர் விவரித்தார்.
தாய் யானைகள் இந்தத் தாவரப் பொருளைத் தங்களின் சொந்தப் பாலுடன் கலப்பதையும் தான் கண்டதாக அவர் விவரித்தார். "அவை அதைத் தங்களின் குட்டிகளுக்கு கொடுக்கின்றன, குட்டிகள் அதைத் தாங்களாகவே மென்றுவிட்டு, அதன் சக்கையைத் துப்பிவிடுகின்றன."
"அவை அதை குட்டிகளுக்குக் கொடுக்கின்றன. குட்டிகள் அதை மென்று, திடப்பொருட்களை வெளியே துப்பிவிடுகின்றன," என்றார் அவர்.
ஜப்பானில் வசிக்கும், தற்போது நாகசாகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விலங்கியல் ஆய்வாளர் பேராசிரியர் மைக்கேல் ஹஃப்மேன் கூறுகையில், இந்தத் தகவல் "மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும்" வகையில் இருந்தாலும், யானைகள் தங்கள் குட்டிகளுக்காகத் தனிப்பட்ட மருத்துவப் பராமரிப்பு வழங்குகின்றன என்பதை நிரூபிக்க இன்னும் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படும் என்றார்.
அத்தகைய ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இணைந்து பணியாற்றிய உள்ளூர் வனவிலங்கு நிபுணர்களுக்கு கேமராக்களை வழங்கி, அவர்கள் காணும் நடத்தைகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
அவர்கள் யானைகள் பயன்படுத்தும் தாவரங்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். யானைகளே கண்டறிந்திருக்கக் கூடிய புதிய மருந்துகளை அவர்கள் தேடி வருகின்றனர்.
இந்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய ஆய்வாளரான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரிலுள்ள பெர்ன்ஹார்ட் நோக்ட் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸ், பிபிசி நியூஸிடம் கூறுகையில், "உள்ளூர் அறிவு எங்களுக்கு ஒரு வரைபடத்தை வழங்கியுள்ளது" என்றார்.
"இப்போது யானைகளைப் பின்தொடர்ந்து, அவை குறிப்பிட்ட உடல்நலச் சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக்கிறதா, அந்தத் தாவரங்களுக்கு தொடர்புடைய உயிரியல் செயல்பாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய விரும்புகிறோம்," என்றார்.
பட மூலாதாரம்,Fabien Schultz
படக்குறிப்பு,இந்த விலங்குகள் பயன்படுத்தும் 35 வெவ்வேறு தாவர இனங்களை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
இயற்கை மருந்து தொழிற்சாலைகள்
பல விலங்குகள் தாவரங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு தாங்களே சிகிச்சையளித்துக் கொள்கின்றன.
யானைகள் "சுய மருத்துவம்" செய்வதைப் பற்றிய முதல் அறிவியல் குறிப்புகள் கிபி மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் இருந்து கிடைக்கின்றன.
ரோமானிய எழுத்தாளர் கிளாடியஸ் ஏலியானஸ், தனது டி நேச்சுரா அனிமலியம் (விலங்குகளின் இயல்பு பற்றி) என்ற நூலில், ஈட்டிகளாலும் அம்புகளாலும் காயமடைந்த ஒரு யானை ஆலிவ் மரத்தின் பூக்களையும் எண்ணெயையும் உட்கொண்டதாக எழுதியுள்ளார். பின்னர் அந்த யானை முழுமையாகக் குணமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, காடுகளில் பரிணாம வளர்ச்சி பெற்ற தாவரங்களின் பண்புகளைப் பற்றி வனவிலங்குகளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
"இந்த உலகில், மருந்துகளை உருவாக்கும் ஆச்சரியமான திறன் கொண்ட உயிரினங்கள் உள்ளன," என்று ஃப்ரெய்மன் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார். "நம்மைச் சுற்றியுள்ள எங்கும் இயற்கையான மருந்துத் தொழிற்சாலைகள் இருக்கின்றன."
பட மூலாதாரம்,Christopher Powles
படக்குறிப்பு,யானைகள் பயன்படுத்தும் தாவரங்களை அடையாளம் காண ஆராய்ச்சியாளர்கள் உள்ளூர் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றினர்.
பேராசிரியர் ஹஃப்மேன் மேலும் கூறுகையில், "கொசுக்கள், டிரோசோஃபிலா ஈக்கள், தேனீக்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் சுய மருத்துவம் செய்வதை நாம் இப்போது அறிவோம். இது பரிணாம வளர்ச்சியின் பல நிலைகளைக் கடந்து ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பெரிய குரங்குகள் வரை செல்கிறது."
"ஒவ்வொரு புதிய உயிரினமும் ஆய்வு செய்யப்படும்போது, நமது மருத்துவ வரலாற்றைப் பற்றிய புரிதல் மேலும் மேலும் விரிவடைகிறது."
டாக்டர் ஃப்ரெய்மனின் பார்வையில், இந்தக் கண்டுபிடிப்புகள் நமது எதிர்காலத்திற்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கின்றன.
"மருந்தகங்களில் நாம் வாங்கும் பல மருந்துகள், மரங்கள், பாசிகள், பூஞ்சைகள் மற்றும் பவளப் பாறைகளிலிருந்து பெறப்பட்ட வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை."
"எதிர்காலத்தில் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய புதிய இயற்கை மருந்துகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள, இந்தக் காடுகளையும் அவற்றின் இயற்கை மருந்தகங்களையும் பாதுகாப்பது நமக்கெல்லாம் பயன்தரும் ஒரு செயலாகும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/crjw5elqze52o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.