புதிய பதிவுகள்2

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

3 months ago
செம்மணிக்கு நீதி? அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது. போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார். அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துள் இயங்கும் ஓர் அலுவலகமானது இலங்கையை பொறுப்புக்கூறவைப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருப்பதன்மூலம் அணையா விளக்கு போராட்டமானது மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அனைத்துலக பொறிமுறையையும் நிபுணத்துவத்தையும் கோரி நிற்கின்றது. அதாவது, உள்நாட்டு பொறிமுறையை நம்பவில்லை என்று பொருள். ஐநாவில் 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அந்த அலுவலகம் ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் “ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டம்”(OSLAP) இதன்படி சான்றுகளையும் சாட்சிகளையும் அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வருகைக்குப்பின் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படுமா ? ஆனால் தன்னுடைய இலங்கை வருகையின் இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஊடகங்கள் மத்தியில் ஆற்றிய உரையில் என்ன சொன்னவர் தெரியமா? “இறுதியிலும் இறுதியாக இது இலங்கை அரசின் பொறுப்பாகும், அதோடு,இந்த முன்னெடுப்பு இலங்கையின் தேசிய உடமை என்பது முக்கியம்.மேலும் இது சர்வதேச வழிமுறைகளால்,உதவிகளால் பூர்த்தி செய்யப்படலாம்,”அதாவது அவருடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில்,அவர் உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவது பற்றியே பேசுகிறார்.அப்படியானால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐநாவில் இயங்கிவரும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அந்த அலுவலகத்தின் பொருள் என்ன?அது உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றா?ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வர விசா இல்லையே? சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அந்த அலுவலகத்தில் அடிப்படைப் பலவீனங்கள் உண்டு.இப்படி ஒரு பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது என்பதனை ஊகிகித்து 2021 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சிவில் சமூகங்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்தன.மூன்று கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதன் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் 2021 ஜனவரி மாதம் ஐநாவுக்கு எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கேட்கப்பட்டன.ஒன்று, பொறுப்புக் கூறலை ஐநா. மனித உரிமைகள் பேரவையிடமிருந்து ஐநா பொதுச் சபை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதைப் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.இரண்டாவது கோரிக்கை, மேற்சொன்ன பொறிமுறையானது குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அதன் செயற்பாடுகளை முடிக்கும் விதத்தில் வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.அந்த பொறிமுறைக்குரிய செயற்படு காலத்தை 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டாகக் குறைக்கும்படி கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.அக்கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்ட பின் தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்பொழுது குற்றஞ்சாட்டியது. அக்கூட்டத் தொடரின் முடிவில் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் 46/1 இன்படி ஒரு பொறிமுறை அதுதான் மேற்படி அலுவலகம் (OSLAP) உருவாக்கப்பட்டது. ஆனால் அது தமிழ்த் தரப்பு கேட்டிருந்த ஒரு பொறிமுறை அல்ல.அதில் பின்வரும் அடிப்படைப் பலவீனங்கள் இருந்தன. முதலாவதாக,அது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்கு உள்ளே இயங்கும் ஒரு நிகழ்ச்சி திட்டம்தான். அதாவது கூட்டுக் கடிதத்தில் கேட்டதுபோல பொறுப்புக்கூறலை அவர்கள் மனிதஉரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகவில்லை. இரண்டாவது அதற்கு ஆறு மாத அல்லது ஒரு வருட கால நிர்ணயம் செய்து அதன் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படவில்லை. பதிலாக இன்றுவரை அது இயங்குகின்றது.இப்படித்தான் இருக்கிறது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஐநாவின் பதில் வினை. அது தமிழ் மக்கள் கேட்டதை விட,எதிர்பார்த்ததைவிட பலவீனமான ஒரு பொறிமுறை என்ற போதிலும் அப்பொறிமுறையைச் சேர்ந்த அலுவலர்கள் நாட்டுக்குள் வந்து சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை. இப்படிப்பட்டதோர் அரசியல் மற்றும் ராஜதந்திர பின்னணிக்குள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது அழுத்தங்களளைப் பிரயோகிக்கும் விதத்தில் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் விட்டது, அவருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் அந்தப் பொறிமுறையை அவரே பலவீனப்படுத்துவதாக அமையுமா? அது ஒரு பலவீனமான கட்டமைப்புத்தான். எனினும் அந்த அலுவலகமானது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்குள்ள அனைத்துலகப் பரிமாணத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.ஏனென்றால் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது இப்பொழுது ஓர் அனைத்துலக நடைமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயத்தில் தமிழ்மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துலக நிலைமைகள் இப்பொழுது ஒப்பீட்டளவில் பலமாக உள்ளன. மேலும் அந்த அலுவலகம் சேகரித்துவரும் சான்றுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் அண்மை ஆண்டுகளில் அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரித்தானியாவிலும் குறிப்பிட்ட சில படைப் பிரதானிகளுக்கும் படை அலுவலர்களுக்கும் எதிராகப் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கேயும் தமிழ்த் தரப்பு நோக்கு நிலையில் இருந்து ஒரு கேள்வி உண்டு. அந்தப் படைப்பிரதானிகள் தாங்களாக அதைச் செய்யவில்லை அவர்களுக்கு உத்தரவிட்ட,அதற்கு வேண்டிய அரசியல் தீர்மானத்தை எடுத்த,அரசுக் கட்டமைப்பு உண்டு.அந்தக் கட்டமைப்பைக் குற்றஞ்சாட்டும் ஒரு நிலை இன்று வரை ஐநாவிலோ அல்லது மேற்கு நாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியிலோ ஏற்படவில்லை. அதாவது இனப்படுகொலையைச் செய்தது ஒரு அரசுக் கட்டமைப்பு.இன அழிப்பு என்பது அந்த அரசுக் கட்டமைப்பின் கொள்கையாக இருந்தது என்ற அடிப்படையில் அந்த அரசுக் கட்டமைப்பைத் தான் விசாரிக்க வேண்டும்.அதற்கு எதிராகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பு கேட்கின்றது.ஆனால் அப்படி ஒரு வளர்ச்சி ஐநாவிலும் ஏற்படவில்லை,மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும் ஏற்படவில்லை. எனினும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு அது தமிழ் மக்கள் கேட்டதை விடப் பலவீனமானது என்ற போதிலும் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது ஒரு முன்னேற்றம்தான். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான்,செம்மணியும் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் தமிழ்மக்கள் தமது சக்திக்கேற்ப சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் DNA பரிசோதனைகளைச் செய்வதற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.செம்மணி தொடர்பில் மட்டுமல்ல தமிழ் மக்களிடம் பெரும்பாலான விடயங்களில் விஞ்ஞான பூர்வமாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் உண்டா? தன்னை பலிகடா ஆக்கிய தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு ராணுவ சார்ஜன் சொன்ன சாட்சியத்தை வைத்துதான் செம்மணியில் நானூறுக்கும் குறையாத உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த விடயத்தில் செம்மணியில் எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்பதனை அதற்குரிய துறைசார் நிபுணர்கள் கண்டுபிடிக்கட்டும்.அதேசமயம்,செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டவேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு.அவ்வாறான தரவுகளைத் திரட்டும் கட்டமைப்புகள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும், மிகப் பலமான ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தைக் கொண்டிருந்த போதிலும், தமிழர்களால் ஏன் அவ்வாறான தரவுகளைத் திரட்டும் பொதுக் கட்டமைப்புக்களை உருவாக்க முடியாதிருக்கிறது?குறைந்தபட்சம் டிஜிட்டல் பரப்பிலாவது அவ்வாறு ஒரு பொதுவான தகவல்திரட்டும் வேலையைத் தொடங்கலாம்.இதுவிடயத்தில் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்ற மனிதஉரிமைகள் தகவல் பகுப்பாய்வு அமைப்பின் (Human Rights Data Analysis Group: HRDAG) நிபுணத்துவ உதவியைக் கேட்கலாம். இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டம் என்று கடந்த பதினாறு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.நீதிக்கான போராட்டத்தை எங்கேயிருந்து தொடங்க வேண்டும்? குற்றச் செயல்களை, குற்றவாளிகளை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் அதைத் தொடங்கவேண்டும்.அதற்குரிய கட்டமைப்புகள் எத்தனை தமிழ்மக்கள் மத்தியில் உண்டு ? போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விடையங்களை இப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்கும் உறவினர்கள் கிராமங்கள் தோறும் உண்டு. அவ்வாறு உறவினர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில்தான் செம்மணிக்கு அருகே நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு ஒரு சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட 24தமிழர்களுக்கு நீதி கேட்டு ஒரு வழக்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தொடுக்கப்பட்டது.அந்த வழக்கின் விளைவாகத்தான் அந்த வழக்கை முன்னெடுத்த சட்டவாளர் கலாநிதி குருபரனுக்கு எதிராக நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டு முடிவில் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீங்கினார். நாட்டை விட்டும் சிறிது காலம் விலகியிருந்தார்.இப்பொழுது அந்த வழக்கு ஒரு தென்னிலங்கை சட்டவாளரால் முன்னெடுக்கப்படுகின்றது. நிலைமாறு கால நீதியின் கீழ் உள்நாட்டு நிதியின் விரிவை பரிசோதிக்க முற்படும் வழக்குகளில் அதுவும் ஒன்று. உள்நாட்டுப் பொறி முறையே பொருத்தமானது என்று கூறும் அரசாங்கத்துக்கும் உள்நாட்டுப் பொதுமுறையை அனைத்துலக தராதரத்துக்கு பலப்படுத்த வேண்டும் என்று கூறும் ஐநா அதிகாரிகளுக்கும் உள்நாட்டுப் பொறிமுறையின் இயலாமையை நிரூபிக்கத் தேவையான வழக்குகளைத் தமிழ் மக்கள் தொடுக்கலாம். கிரிசாந்தியின் விடயத்தில் அப்போது இருந்த அரசாங்கம் தான் நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக்கொள்ள முற்பட்டதன் விளைவாக,அதனால் தண்டிக்கப்பட்ட ஒரு படை ஆள் அரசுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கினார்.அந்த வாக்குமூலம்தான் செம்மணியை வெளியே கொண்டு வந்தது. எனவே உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிப்பதற்கும் உள்நாட்டு நீதியின் போதாமைகளை உணர்த்துவதற்கும் வழக்குகளைத் தொடுப்பதற்கு சட்டச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு தேவையான எத்தனை சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் உண்டு? தமிழ் சட்டவாளர்கள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.அரசியல் செயல்பாட்டாளர்களாக மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் சட்டச் செயற்பாட்டு மையங்கள் என்று பார்த்தால் மிகக்குறைவு. கொழும்பை மையமாகக் கொண்ட சட்டவாளர் ரட்ணவேலும் அவருடைய அணியும் செம்மணியில் நிற்கிறார்கள்.இந்த விவகாரத்தில் மட்டுமல்ல சரணடைந்தபின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகளையும் பெருமளவுக்கு ரட்ணவேல்தான் கையாண்டு வருகிறார்.அவருடைய மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான மையம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள போற்றுதலுக்குரிய சட்டச் செயற்பாட்டு அமைப்பாகும். அதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்யும் சந்திப்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டது சட்டத்தரணி ரட்ணவேல்தான்.ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.பொது வேட்பாளருக்காக உழைத்த மக்கள் அமைப்போடு சிவில்சமூக செயற்பாட்டாளராகிய சட்டத்தரணி புவிதரன் இணைந்து வேலை செய்தார். குருபரன் சில குறிப்பிட்ட உதவிகளைச் செய்தார்.எனினும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சட்ட உதவி மையங்கள்,சட்டச் செயற்பாட்டு மையங்கள் எத்தனை உண்டு? இத்தனைக்கும் நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம். நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது.அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதன்மூலம் முதற்கட்டமாக உள்நாட்டு நீதியின் விரிவை பரிசோதிப்பதற்கான வழக்குகளைத் தொடுக்கலாம்.உள்நாட்டு நீதியின் போதாமை நிருபிக்கப்படும்போது அனைத்துலக நீதிப் பொறிமுறைக்கான தேவை மேலும் நிரூபிக்கப்படும்.அனைத்துலக அளவில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு அலுவலகம்-அது பலவீனமானது என்ற போதிலும்-ஓர் அனைத்துலக யதார்த்தமாக மாறியிருக்கிறது.அது தமிழ் மக்களுக்குப் பலமானது. தமிழ் மக்கள் நீதிக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு கற்பனையில் திளைக்காமல் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்க வேண்டும்.முதலில் விஞ்ஞானபூர்வமாகத் தகவல்களைத் திரட்டும் தளங்களைத் திறக்க வேண்டும். இரண்டாவதாக,சட்டச் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள் கட்டமைப்புச் சார்ந்து சிந்திக்க வேண்டும்.கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதாவது தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கட்டமைப்புகள். https://www.nillanthan.com/7526/

தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன்

3 months ago
தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன் 13 JUL, 2025 | 11:19 AM (நா.தனுஜா) தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து சகல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்படி ஒற்றுமை முயற்சிகளில் தமிழரசுக்கட்சி பங்கெடுக்குமா என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர், அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்துதான் பயணிக்கவேண்டும் எனவும், தமிழர்களுக்கான நியாயமான சுயாட்சியை உறுதிப்படுத்துவதற்கு கூட்டுமுயற்சி அவசியம் எனவும் குறிப்பிட்டார். இருப்பினும் கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மிகமோசமான வார்த்தைப்பிரயோகங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டதன் பின்னர், மீண்டும் தற்போது ஒற்றுமை முயற்சி பற்றிப் பேசுகையில், ஏற்கனவே பேசிய மோசமான பேச்சுக்களே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/219843

நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

3 months ago
தீவு பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! அமைச்சர் சந்திரசேகர்! யாழ்ப்பாணத்தில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை சேதமடைந்த படகில் இருந்த பயணிகளை விரைந்து மீட்ட பணியாளர்களுக்கும் கடற்படையினருக்கு தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதுடன் அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438948

வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

3 months ago
வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும், ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளையும் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும், சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும், மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகிவிட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ்ப்பாண வைத்தியசாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார். இதுபோன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இதேவேளை, சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை, புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடமானது ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்க வாரன்டோர்ஃப் கிளை (German Red Cross Warendorf Branch) மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டதுடன் அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு இலங்கை கடற்படை மற்றும் இராணுவம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438940

ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

3 months ago
'நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து வரமாட்டேன்' - கேரள செவிலியரின் தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி படக்குறிப்பு, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த வருடம் ஏமன் சென்றார் பிரேமா குமாரி, உடன் சாமுவேல் ஜெரோம். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்ததாக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார் கேரள செவிலியர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், 'ப்ளட் மணி' எனப்படும் பணத்திற்கு ஈடாக மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் நிமிஷாவும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று 2024 ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நிமிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நிமிஷா பிரியா குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் இதைக் கூறினார். ஆனால், இதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும், சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோமும் காணொளி நேர்காணல் மூலமாக ஜூலை 11ஆம் தேதி இரவு பிபிசி தமிழிடம் உரையாடினார்கள். படக்குறிப்பு, மகளைக் காப்பாற்றும் நம்பிக்கையில் இருக்கிறார் நிமிஷாவின் தாய் (2023இல் கேரளாவில் எடுக்கப்பட்ட கோப்புப் படம்) தண்டனை குறித்த அறிவிப்பு நிமிஷாவுக்கு சொல்லப்பட்டதா? கேள்வி: ஜூலை 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை நிமிஷாவுக்கு தெரியப்படுத்திவிட்டார்களா? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "எனக்கு ஜூலை 7ஆம் தேதி, மரண தண்டனைக்கான தேதியை உறுதி செய்துவிட்டோம் என சனா மத்திய சிறையின் தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி கிடைத்தது. என்னிடம் சொல்வதற்கு முன்பே, நிமிஷாவுக்கும் இந்தச் செய்தியை தெரியப்படுத்திவிட்டோம் என்றே சிறை நிர்வாகம் கூறியது. நான் அப்போது தனிப்பட்ட வேலைக்காக இந்தியா வந்திருந்தேன். செய்தி கேட்டவுடன் உடனடியாக ஏமனுக்கு புறப்பட்டு வந்தேன்" என்கிறார். மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியானவுடன், ஏமனின் சனா நகரின் சிறையில் இருந்து சிறைத்துறை நிர்வாகம் மூலமாக நிமிஷா தனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாக, நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி கூறினார். "ஆனால், அதில் சமீபத்திய அறிவிப்பு குறித்து அவள் ஏதும் சொல்லவில்லை. நான் நலமோடு இருக்கிறேனா என்று மட்டுமே கேட்டிருந்தாள். நான் கவலைப்படக் கூடாது என்பதற்காக அவள் அதை சொல்லவில்லை. சாமுவேல் ஜெரோம் கூறிய பின்பே எனக்கு விவரம் தெரிந்தது." என்கிறார் பிரேமா குமாரி. கடந்தாண்டு ஏமன் சென்ற பிரேமா குமாரி, நிமிஷாவை இரண்டு முறை சிறையில் சந்தித்துள்ளார். படக்குறிப்பு, டோமி- நிமிஷா தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கேள்வி: சிறையில் முதல்முறை நிமிஷாவைப் பார்க்கும்போது என்ன பேசினீர்கள்? அந்த உணர்வு எப்படி இருந்தது? இதற்குப் பதிலளித்த பிரேமா குமாரி, "நான் 12 ஆண்டுகள் கழித்துதான் நிமிஷாவை பார்த்தேன். முதல்முறை கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பார்த்தேன். ஏப்ரல் 23, தூதரக அதிகாரிகளும் நானும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவளை பார்க்க முடியாதோ என்று கவலைக்கு உள்ளானேன். அதன் பிறகு அவளை பார்க்கும் போது அவளுடன் இரண்டு பேர் வந்தனர். ஒரே மாதிரி ஆடை அணிந்திருந்தனர். அவள் என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள். நானும் அழுதேன். உடன் இருந்தவர்கள் அழாதீர்கள் என்று சொன்னார்கள். 12 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அவளை பார்த்தேன். நான் இறந்தால்கூட அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. தான் சந்தோஷமாக இருப்பது போல நிமிஷா என் முன் நடித்தாள்." என்று கூறினார். கேள்வி: கேரளாவில் உள்ள நிமிஷாவின் கணவர் டோமி மற்றும் நிமிஷாவின் மகளுடன் இந்த தண்டனை அறிவிப்பு குறித்து பேசினீர்களா? "டோமியுடன் பேசினேன், அப்போது என் பேத்தியும் பேசினாள். எப்போது பேசினாலுமே அம்மாவை கூப்பிட்டுதானே வருவீர்கள் என்று என்னிடம் பேத்தி கேட்பாள். அம்மாவை சிக்கீரம் கூப்பிட்டு வரவேண்டும், அம்மாவை பார்க்க ஆசையாக உள்ளது என்று சொன்னாள். நிமிஷாவிடம் பேசும் போதும் இதை சொன்னேன். 'அம்மாவை கூப்பிட்டு வருவேன் என்று சொன்னேன், அவர்கள் முன்பு நான் எப்படி போய் நிற்பேன். என்னால் திரும்பி போக முடியாது' என்று நிமிஷாவிடம் சொன்னேன்." என்று கூறினார் பிரேமா குமாரி. படக்குறிப்பு, 2015இல், ஏமனில், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்குடன் சாமுவேல் ஜெரோம். கேள்வி: இந்த வழக்கில், இந்திய அரசின் தூதரக உதவிகள் ஏதும் கிடைத்ததா? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "இந்த வழக்கில் தொடக்கம் முதலே இந்திய தூதரகம் உதவி வருகிறது. 2017இல் இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டபோது, உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் இருந்த இந்திய தூதரகம் செயல்படவில்லை. அப்போது ஏமனைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தான் எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த விஷயத்தில் நீங்கள் இந்திய அரசை அணுகவில்லை என்றால், நிமிஷாவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறாது என்று கூறினார். நான் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்கை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். உடனடியாக என்னுடன் தொலைபேசியில் அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள இந்திய தூதரக முகாம் மூலமாக ஒரு கடிதத்தை (Note Verbale) ஏமனுக்கு அனுப்பிவைத்தார். அதைக் கொண்டுபோய் ஹூத்திகளின் வெளியுறவு அமைச்சகத்திடம் கொடுத்தோம். அதன் பிறகே அல்-பைதா எனும் பகுதியிலிருந்து சனா நகரத்திற்கு நிமிஷா கொண்டுவரப்பட்டார். முறையான விசாரணைகள் நடைபெற்றது." என்றார். "வி.கே.சிங் அனுப்பிய அந்தக் கடிதம் தான் நிமிஷா இன்றுவரை உயிரோடு இருப்பதற்கு காரணம்" என்று கூறினார் சாமுவேல் ஜெரோம். தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் பங்கு படக்குறிப்பு, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். கேள்வி: மஹ்தியின் குடும்பம் நிமிஷாவுக்கு மன்னிப்பு அளிக்க மறுத்துவிட்டார்களா? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "அவர்கள் இதுவரை நிமிஷாவை மன்னிப்பதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, சம்மதமும் தெரிவிக்கவில்லை" என்று கூறினார். கேள்வி: தொடக்கம் முதல் நீதிமன்ற விசாரணைகள் வரை, இந்த வழக்கில் மஹ்தி குடும்பத்தின் பங்கு என்ன? சாமுவேல் ஜெரோம், "மஹ்தியின் கொலை நடந்தது ஏமனின் வடக்குப் பகுதியில், ஆனால் நிமிஷா கைது செய்யப்பட்டது ஏமனின் மாரிப் எனும் பகுதியில். மாரிப் நகரின் சிறையில் இருந்த நிமிஷாவை, மீண்டும் வடக்கு ஏமனுக்கு அழைத்து வந்ததே மஹ்தியின் குடும்பம் தான். தங்கள் சொந்த வாகனத்தில் சென்று அவர்கள் அல்-பைதாவுக்கு அழைத்து வந்தனர். தெற்கு ஏமனில் நிமிஷா இருந்திருந்தால், அவருக்கு சட்டரீதியான விசாரணை நடந்திருக்காது. எனவே நிமிஷாவுக்கு நீதி விசாரணை நடந்ததற்கு மஹ்தியின் குடும்பமும் ஒரு காரணம். ஆனால் அவர்கள் நிமிஷாவை அழைத்து வந்தது வேறு நோக்கத்திற்காக." என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "மஹ்தியின் குடும்பத்தினர் 'ஒசாப்' எனும் பழங்குடி குழுவை சேர்ந்தவர்கள். அவர்களின் பூர்வீகம் சனாவுக்கு அருகில் தமார் என்ற பகுதி. ஆனால் அவர்கள் வணிகம் செய்து, வாழ்வது அல்-பைதா பகுதியில். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைக்காக வசிப்பது போல. ஸ்வாதியா எனும் பழங்குடி குழுவின் பூர்வீகம் தான் அல்-பைதா. அப்படியிருக்க அங்கு வைத்து மஹ்தி கொலை செய்யப்பட, அதற்கான பழி ஸ்வாதியா பழங்குடி மீது விழும் அபாயம் உருவானது. ஏனென்றால், ஏமனில் தங்கள் எல்லையில் வாழும் வேறொரு பழங்குடி நபர் உயிரிழந்தால், அதற்கு பூர்வீக பழங்குடி இனமே பொறுப்பு. நிமிஷா தான் குற்றவாளி என்பது அப்போது தெரியாது. இரு பழங்குடி குழுக்கள் இடையே சண்டை உருவாகும் சூழல் இருந்தது. பிறகு மஹ்தியின் குடும்பத்திற்கு உண்மை தெரிந்தவுடன், அவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாரிப் நகரம் சென்று நிமிஷாவை அழைத்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு இருந்த கோபத்திற்கு, நிமிஷாவை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் நிமிஷாவை பத்திரமாக அல்-பைதாவிற்கு அழைத்து வந்தார்கள். அதன் பிறகு, நிமிஷாவை சனாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஹூத்தி வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு வந்ததும் . அதை மதித்து அனுப்பி வைத்தார்கள்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார். கேள்வி: ஏமன் நீதிமன்றங்களால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிமிஷாவை மீட்க முயற்சிப்பதற்கான காரணம் என்ன? "நிமிஷா குற்றம் செய்துள்ளார். அவருக்கான தண்டனையும் கொடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இப்போது ஷரியா சட்டத்தில் மன்னிப்பு என்ற வழி உள்ளதால் தான் நிமிஷாவைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் பதிலல்ல. நிமிஷாவுக்கு ஒரு மகள் உள்ளார், அவரது தாயார் இந்த வயதில் ஏமன் வந்து கஷ்டப்படுகிறார். மஹ்தியின் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொள்ளும் நாம், இவர்கள் தரப்பையும் பார்க்க வேண்டும். அதேசமயம், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு அளித்தால் மட்டுமே நிமிஷாவை மீட்க முடியும். இல்லையென்றால் அவரது தண்டனை நிறைவேற்றப்படும்" என்றார் சாமுவேல் ஜெரோம். ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சனா நகரில் ஒரு மத நிகழ்விற்காக கூடியிருக்கும் ஏமன் மக்கள் (கோப்புப் படம்) கேள்வி: ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த வழக்கை எவ்வாறு பார்க்கிறார்கள்? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "தங்கள் நாட்டு குடிமகனை கொன்றுவிட்டார் என்ற கோபத்தில் தான் ஏமன் பொதுமக்களும், ஊடகங்களும் நிமிஷாவைப் பார்க்கின்றன. அதே சமயம், நிமிஷாவைப் பற்றி நன்கு அறிந்த சிலர் அவர் காப்பாற்றப்பட வேண்டுமென நினைக்கிறார்கள்" என்றார். கேள்வி: நிமிஷாவின் தண்டனையை ஒத்திவைக்க வழியுள்ளதா? "தெரியவில்லை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து பாப்போம்" என்கிறார் சாமுவேல் ஜெரோம். இந்திய அரசின் தூதரக நடவடிக்கைகள் நிமிஷா பிரியாவை, தூதரக நடவடிக்கை மூலம் இந்திய அரசு மீட்க உத்தரவிடக் கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' என்ற தன்னார்வலர் குழு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10ஆம் தேதி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஜூலை 14-ஆம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தது. அதே நேரம், ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியிருப்பதால், வழக்கின் தன்மை மற்றும் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, மனுவின் நகலை இந்திய அட்டர்னி ஜெனரலிடம் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த வழக்கில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அது குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கோரினர். வழக்கின் பின்னணி என்ன? கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர். நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86d21p53no

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months ago
தவறான தகவல், பாஜக தனித்து போட்டியிட்டே தன் முதன் சட்டமன்ற தொகுதியை வென்றது, அதிமுக கூட்டணியில் முதன் பாராளுமன்ற தொகுதியை வென்றது. பின்னர் தான் திமுகவுடன் கூட்டணி. அதற்கு பிறகு கூட, திமுக, அதிமுக அல்லாது பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பாராளுமன்ற தொகுதியை வென்றுயிருக்கிறது

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months ago
இல்லை. அருண் சித்த்தார்த், நேரத்து ஒரு பெயர் பட்டியலோடு அலைகிறார். தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிஞாயமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக்கொடுக்கப்போகிறாராம், அதற்காக காத்திருக்கலாமென நினைக்கிறன்.

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?

3 months ago
பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங்கிக் கொடுத்த 'பெருமாள் பிச்சை' கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். கார்த்தி - சந்தானத்துடன் இணைந்து 'அழகுராஜா' என்ற திரைப்படத்தில் நகைச்சுவையிலும் அவர் கலக்கியிருப்பார். வில்லன் கதாபாத்திரங்களில் அசத்திய சீனிவாச ராவ் இளம் வயதில் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பின்னாட்களில், நாடக கலையால் ஈர்க்கப்பட்ட அவர் திரையுலகிற்கு வந்தார். குணசித்திர வேடங்களில் மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் அவர். கிராமப் புறத்தில் வாழும் நபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய அவர், நவ நாகரிக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியும் நடிப்பில் அசத்தினார். தெலுங்கில் கிருஷ்ணா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற பிரபலங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சிலம்பரசன் ஆகியோரின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 'ஆஹா! நா பெல்லண்டா' என்ற படத்தில் பிசினாரி என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான கணேஷ் திரைப்படத்தில் அரசியல் தலைவராக நடித்திருக்கும் அவர் தெலுங்கானாவுக்கே உரித்தான தெலுங்கு பேச்சுவழக்கில் மிரட்டியிருப்பார். நகைச்சுவை உணர்வுக்காக நன்கு அறியப்பட்டவர் அவர். பட மூலாதாரம்,UGC அரசியல்வாதியாகவும் சீனிவாச ராவ் நடிப்பில் மட்டுமின்றி அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். விஜயவாடா கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ஆம் ஆண்டு அவர் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புத் திறமைக்காக பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். நந்தி, சைமா உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற அவருக்கு 2015-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. திரையுலகினர் இரங்கல் கோட்டா சீனிவாச ராவின் திறமையான நடிப்பு குறித்து பல நேரங்களில் நடிகர்களும் இயக்குநர்களும் புகழ்வது உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு ஜூலை 10 அன்று, கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளை ஒட்டி இயக்குநர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "நடிகர்கள் உங்களை சிரிக்க வைக்கலாம். சிலர் உங்களை அழ வைக்கலாம். ஆனால் கோட்டாவால் மட்டுமே உங்களை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், அச்சப்படுத்தவும் முடியும்," என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrl90q802zo

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

3 months ago
Published By: DIGITAL DESK 3 13 JUL, 2025 | 10:50 AM காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். காலி தொடக்கம் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆகையினால் காலி தொடக்கம் மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219840

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months ago
'கோலி'யாக மாறிய கில்: தனி நபர் சாதனைக்கு முன்னுரிமை தந்ததால் பெரும் விலை கொடுத்த இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் பிபிசி தமிழுக்காக 13 ஜூலை 2025, 02:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் மாறி மாறி உள்ளே வெளியே ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு செசனில் இங்கிலாந்தின் கை ஓங்கினால் அடுத்த செசனில் இந்தியா முன்னுக்கு வருகிறது. சம பலத்துக்கு சான்று கூறும்விதமாக இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக (387) முடிந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக முடிந்துள்ளன. 8–ல் 1 முறை மட்டுமே கடைசியாக பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது என்பது இந்தியாவுக்கு பாதகமான ஓர் உபரி தகவல்! அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் - பந்த் நீரும் நெருப்பும் ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கேஎல் ராகுல்–பந்த் இருவரின் பார்ட்னர்ஷிப். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பந்த்தின் காயமடைந்த விரலை குறிவைத்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வியூகம் வகுத்தார். பந்த்திற்கு எதிராக வழக்கத்துக்கு மாறாக பீல்டர்களை வளையத்துக்குள் நிற்கவைத்து அவர் தாக்குதல் தொடுத்தார். ஆர்ச்சர் வீசிய நாளின் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகள் விளாசினாலும், பிறகு சூழலை புரிந்துகொண்டு முதல் சில ஓவர்களுக்கு பந்த் பொறுமையை கடைபிடித்தார். ஆர்ச்சரின் பந்துவீச்சில் மிகச் சொற்பமான பந்துகளையே பந்த் எதிர்கொண்டார். காயமடைந்த சக வீரருக்காக ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுல் சந்திக்க துணிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் முதல் நாள் ஆட்டத்தில் பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட்டுக்கு போப் கை கொடுத்தது நினைவுக்கு வருகிறது. கார்ஸை கொண்டு பந்த் மீது பவுன்சர் தாக்குதல் நடத்தினார் ஸ்டோக்ஸ். அந்த பந்துகளை எதிர்கொள்ளும் போது பந்த் வலியால் அவதிப்பட்டதை பார்க்க முடிந்தது. ஆனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகம் ஒருகட்டத்தில் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. ஒருபக்கம் பந்த் தன் பாணியில் ஆவேசமாக பவுண்டரியும் சிக்ஸரும் பறக்கவிடும் போது, மறுபுறம் ராகுல் தன் கிளாஸ் என்னவென்பதை காட்டினார். இருவருடைய ஆட்டம் முழுவதும் நேரெதிரான டெக்னிக் கொண்டதாக இருந்தது. பந்த், வலியை பொருட்படுத்தாமல் முன்னும் பின்னும் நகர்ந்து பந்துவீச்சாளர்களின் லெங்த்தை குலைத்து ரன் குவித்தார். ராகுல் பந்தை நேரம் கொடுத்து உள்ளே வரவழைத்து கடைசி நொடியில் விளையாடி ரன் சேர்த்தார். புல் (pull) ஷாட் விளையாடும் முறையிலும் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. பந்த் தன் முழு பலத்தையும் கொடுத்து பவுன்சர் பந்துகளை பறக்கவிட்ட போது, ராகுல் எவ்வித சிரமமும் இன்றி மேலிருந்து கீழாக சாமர்த்தியமாக (Top to bottom) பந்தை புல் ஷாட் அடித்தார். இந்த தொடரில் டெக்னிக்கலாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ராகுல்தான் என்று சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல். ராகுல் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த பென் ஸ்டோக்ஸ் உணவு இடைவேளைக்கு சில பந்துகள் மட்டும் இருந்த நிலையில் 248 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டும் இழந்து இந்தியா வலுவான நிலையில் இருந்தது. அப்போது ராகுல் 98 ரன்களுடன் எதிர்முனையில் (Non striker end) இருந்தார். Lunch–க்கு முன்பாக ராகுலுக்கு சதமடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பஷீர் பந்தில் இல்லாத ரன்னுக்கு அவசரப்பட்டு ஓடி, ஸ்டோக்ஸ் கையால் ரன் அவுட்டானார் பந்த். சதத்தை எட்டுவது என்பது ஒரு வீரருக்கு முக்கியமான ஒன்றுதான். நீண்ட நேர உழைப்பின் ஊதியம் சதம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அணியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனி நபர் சாதனைக்கு அவர்கள் முன்னுரிமை அளித்ததால் இந்தியா பெரும் விலை கொடுக்க நேரிட்டது. மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நன்றாக செட் ஆகியிருந்த பந்த் - ராகுல் ஜோடி பிரிய நேரிட்டது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரூட் 99 ரன்களுடன் இருக்கும் போதும் 1 ரன்னுக்கு அவசரப்படவில்லை என்பது இரு அணியினரின் முன்னுரிமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது. ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம். இரைக்காக சிறுத்தை பதுங்குவதை போல காத்திருந்த அவர், பந்த் ஓடிய அடுத்த நொடியே விக்கெட் என்று மனதில் குறித்துக் கொண்டார் என்பது போல இருந்தது அவருடைய வேகமான த்ரோவும் அதன் பிறகான அவருடைய கொண்டாட்டமும். முழு உடற்தகுதியில் இருக்கிறாரா என்பது விவாதமான நிலையில், 100 பந்துகளுக்கு மேல் பேட்டிங்கின் போது எதிர்கொண்டு, முக்கியமான ரன் அவுட் ஒன்றை செய்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, கூடவே கேப்டன்சியும் செய்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம் கை கொடுத்த ஜடேஜா சதமடித்து அடுத்த சில பந்துகளில் கவனத்தை தொலைத்து விக்கெட்டை ராகுல் பறிகொடுத்தார். கேஎல் ராகுலுக்கு நிகரான திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் இன்று கிரிக்கெட் உலகில் மிகவும் குறைவு. ஆனாலும் முக்கியமான கட்டத்தில் சோம்பலாக விளையாடி விக்கெட்டை இழக்கும் பலவீனம் இருப்பதால்தான் அவருடைய சராசரி 40–க்கும் குறைவாக இருக்கிறது. ஒரு உச்சபட்ச பேட்ஸ்மேன் சதத்தை எட்டிய பிறகு அவ்வளவு எளிதாக விக்கெட்டை பறிகொடுக்கமாட்டார். ராகுல் விக்கெட்டுக்கு பிறகு தடுமாறிய இந்திய அணியை ஜடேஜா–நிதிஷ் ரெட்டி இணை தூக்கி நிறுத்தியது. ஒரு டெஸ்ட் போட்டியின் தலையெழுத்தை மூன்றாம் நாள் ஆட்டம்தான் தீர்மானிக்கும் என்பார்கள். இருவரில் ஒருவர் விரைவில் ஆட்டம் இழந்திருந்தாலும் இந்தியாவுக்கு பின்னடைவாக முடிந்திருக்கும். ரன்னுக்கு அழைக்கும் போது இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாதது துலக்கமாக வெளிப்பட்டது. 2, 3 முறை ரன் அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பினார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் அசத்திய நிதிஷ் ரெட்டி, சரியான கால்பாடம் (Footwork) இல்லாவிட்டாலும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் வீசிய ஒரு அட்டகாசமான பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம். ஆனால், ஏனோ இந்த டெஸ்டில் இந்தியா வென்றாலும் ஜடேஜாவின் பங்களிப்பை பற்றி யாரும் பேசப்போவதில்லை. ஸ்டோக்ஸ் எந்தளவுக்கு தன் அணிக்கு பங்களிக்கிறாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவுக்கு ஜடேஜா உதவுகிறார். ஆனால் அவர் பெயர் என்றும் தலைப்பு செய்தியாக மாறுவதில்லை. ஜடேஜா–சுந்தர் பார்ட்னர்ஷிப்பின் போது, எல்லாருடைய கண்களும் சுந்தர் மீதுதான் இருந்தன. ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான டெக்னிக்கை கொண்டவர் சுந்தர். இந்திய அணி அவருக்கு இன்னும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அதேநேரம், ஜடேஜாவின் பேட்டிங் சோடை போனது என்று சொல்லிவிட முடியாது. வேகப்பந்து வீச்சுக்கு பின்னால் செல்ல வேண்டும்; சுழற்பந்து வீச்சுக்கு முன்னால் நகர வேண்டும் என்பது பேட்டிங்கின் அடிப்படை என்பார்கள். அதை கனக்கச்சிதமாக நேற்று ஜடேஜா செய்ததை பார்க்க முடிந்தது. இப்படி சரியாக செய்வதிலேயே ஒரு மெக்கானிக்கல் தன்மை வந்து, அவருடைய பேட்டிங் வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்றுகூட சில சமயம் தோன்றுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம் சுவாரசியம் இழந்த ஆட்டம் கடைசிக் கட்டத்தில் சுந்தர் ஏன் அடித்தாடாமல் விட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒன்று ரிஸ்க் எடுத்து அடித்தாடி இருக்கலாம். இல்லை, tail ender–களை நம்பி ஸ்டிரைக் கொடுத்து கிடைக்கும் ஒன்றிரண்டு ரன்களை சேர்த்து அணி லீட் எடுக்க உதவியிருக்கலாம். கடைசி கட்டத்தில் தெளிவான திட்டத்துடன் அவர் விளையாடியது போல தெரியவில்லை. முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உயிரைக் கொடுத்து அதிவேகத்தில் பந்துவீசிய போதும் அதிர்ஷ்டம் கைகொடுக்காததால் ஆர்ச்சரால் நேற்றைய தினம் 1 விக்கெட்தான் எடுக்க முடிந்தது. இந்த இன்னிங்சில் ஒட்டுமொத்தத்தில் 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்திய அணியின் முதல் விக்கெட்டையும் (ஜெய்ஸ்வால்) கடைசி விக்கெட்டையும் (வாஷிங்டன் சுந்தர்) ஆர்ச்சர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் பஷீர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியதால் ரூட் சுழற்பந்து வீசவேண்டிய நிலை ஏற்பட்டது. காயம் இடது கையில் (Non bowling arm) என்பதால் நான்காவது இன்னிங்சில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம். நாளின் இறுதியில் இங்கிலாந்தை 2-3 ஓவர்கள் பேட்டிங் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற இந்தியாவின் வியூகம் பலிக்கவில்லை. பும்ராவின் முதல் ஓவரில் கிராலி தன்னுடைய முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி நேரத்தை இழுத்தடித்தார். பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராலி செயல்பட்டது போன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜாக் கிராலியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார். இந்த சேட்டைகள் எல்லாம் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான் என்ற போதும் இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்திய விதம், கோலியை நினைவூட்டியது. இந்திய அணியில் கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எதிரணியினரிடம் ஆக்ரோஷம் காட்டுவதில் விராட் கோலி பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தில் கில் - கிராலி மோதிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிராமா மூன்றாவது நாளின் இறுதியில் இந்த டெஸ்டுக்கு ஒரு விறுவிறுப்பை கொண்டுவந்துள்ளது. இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் சமநிலை பெற்றிருப்பதால் இன்றைய நான்காவது நாள் ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சிறப்பாக செயல்படும் அணியின் கையே இந்த டெஸ்டில் ஓங்கும் என்று கூறலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39z3r31e3lo

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

3 months ago
அகமதாபாத்தில் எயார் இந்தியா பேரழிவில் சிக்கியது எப்படி? நொடிக்கு நொடி நடந்து என்ன? ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை 13 JUL, 2025 | 11:19 AM விமானம் புறப்பட்ட ஒரு நொடிக்குள், இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த எயார் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்து, இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பதிவாகியுள்ளது. 260 உயிர்களைப் பலிகொண்ட இந்த துயரச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தால் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, விபத்துக்கான அதிர்ச்சியூட்டும் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது: விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே, அதன் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு ஒரு நொடி இடைவெளியில் மாறியதே விபத்துக்குக் காரணம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது இந்த ஆரம்ப அறிக்கை, நிகழ்வின் ஒவ்வொரு நொடியையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது, இது விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான மிகத் துல்லியமான தகவலை அளிக்கிறது. நொடிக்கு நொடி நடந்து என்ன? காலை 11:17: எயார் இந்தியா ட்ரீம்லைனர் VT-ANB விமானம் டெல்லியில் இருந்து AI423 விமானமாக அகமதாபாத்தில் தரையிறங்குகிறது. பிற்பகல் 1:18:38: விமானம் விமான நிலையத்தின் பே 34 இல் இருந்து புறப்படுவது கவனிக்கப்படுகிறது. பிற்பகல் 1:25:15: விமான ஊழியர்கள் டாக்ஸி அனுமதி கோர, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அனுமதி அளிக்கிறது. விமானம் ரன்வே 23 நோக்கி டாக்ஸிவே R4 வழியாகச் சென்று, புறப்படுவதற்காக வரிசையில் நிற்கிறது. பிற்பகல் 1:32:03: விமானத்தின் கட்டுப்பாடு தரைக்கட்டுப்பாட்டில் இருந்து டவர் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. பிற்பகல் 1:37:33: புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. பிற்பகல் 1:37:37 மணி: விமானம் புறப்படத் தொடங்குகிறது. பிற்பகல் 1:38:39 மணி: விமானம் தரையிலிருந்து மேலே எழும்புகிறது. விசாரணை அதிகாரிகள், காற்று/தரை சென்சார்கள் 'ஏர் மோட்'க்கு மாறுவதைக் குறிப்பிடுகின்றனர், இது புறப்படுதலுக்கு இணக்கமானது. பிற்பகல் 1:38:42 மணி: விமானம் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை அடைகிறது. உடனடியாகப் பிறகு, என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறுகின்றன, ஒரு வினாடி இடைவெளியில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக. "என்ஜின்களுக்கு எரிபொருள் வழங்கல் துண்டிக்கப்பட்டதால், என்ஜின் N1 மற்றும் N2 அவற்றின் புறப்படும் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின." காக்பிட் குரல் பதிவுகள் ஒரு குழப்பமான தருணத்தைப் பதிவு செய்துள்ளன: ஒரு விமானி மற்ற விமானியிடம் ஏன் எரிபொருளைத் துண்டித்தார் என்று கேட்க, மற்றொரு விமானி தான் செய்யவில்லை என்று பதிலளிக்கிறார். விமான நிலைய சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஆரம்பகட்ட ஏறும் போது ராம் ஏர் டர்பைன் (RAT) வெளியேறுவதைக் காட்டுகின்றன. "விமான நிலைய சுற்றுச்சுவரைக் கடக்கும் முன் விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது," என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டது. பிற்பகல் 1:38:47 மணி: இரண்டு என்ஜின்களின் மதிப்புகளும் குறைந்தபட்ச செயலற்ற வேகத்திற்குக் கீழே குறைகின்றன. RAT இன் ஹைட்ராலிக் பம்ப் ஹைட்ராலிக் சக்தியை வழங்கத் தொடங்குகிறது. பிற்பகல் 1:38:52 மணி: என்ஜின் 1 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்ச் மீண்டும் 'கட்ஆஃப்' நிலையிலிருந்து 'ரன்' நிலைக்கு மாற்றப்படுகிறது. பிற்பகல் 1:38:56 மணி: என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சும் இதேபோல் 'ரன்' நிலைக்கு மீட்டமைக்கப்படுகிறது. விசாரணை அறிக்கை கூறுகிறது: "விமானத்தில் இருக்கும்போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் CUTOFF இலிருந்து RUN க்கு நகர்த்தப்படும்போது, ஒவ்வொரு என்ஜினின் முழு அதிகார டிஜிட்டல் என்ஜின் கட்டுப்பாடு (FADEC) தானாகவே மறுதொடக்கம் மற்றும் உந்துவிசை மீட்பு வரிசையை நிர்வகிக்கிறது." "என்ஜின் 1 இன் மைய வேகம் குறைவது நின்று, தலைகீழாகி, மீட்சிக்கு முன்னேறத் தொடங்கியது." "என்ஜின் 2 மீண்டும் பற்றவைக்க முடிந்தது, ஆனால் மைய வேகக் குறைவை தடுக்க முடியவில்லை." பிற்பகல் 1:39:05: விமானிகளில் ஒருவர் "MAYDAY, MAYDAY, MAYDAY" என்று அவசர அழைப்பை விடுக்கிறார். பிற்பகல் 1:39:11: விமானத்தில் இருந்து தரவு பதிவு நிறுத்தப்படுகிறது. பிற்பகல் 1:44:44: விபத்து தீயணைப்பு வாகனங்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளுக்காக விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறுகின்றன. இந்த அறிக்கை, ஒரு சில நொடிகளில் எடுக்கப்பட்ட தவறான அல்லது தற்செயலான ஒரு செயல், எப்படி ஒரு பேரழிவிற்கு வழிவகுத்தது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த விபத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விரிவான விசாரணை தொடரும் நிலையில், இந்த ஆரம்ப அறிக்கை எதிர்கால விமானப் பாதுகாப்பிற்கான முக்கியமான பாடங்களை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/219848

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months ago
பாஸீர் கலீலுர் ரஹ்மான் இயக்கத்தில் உருவான குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்) என்ற ஆவணப்படம் வெளியாகிறது. இது குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்’ என்ற ஆங்கிலத் தலைப்பில்) ஆவணப்படத்தின் முன்னோட்டக் காணொளி. இலங்கையின் போரின் போது காத்தான்குடிக்கு செல்லும் பாதைகளில் பயணிகள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை இது வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. 1990 ஜூலை 12 ஆம் தேதி குறுக்கள் மடம் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒருவரினதும் அதுபோன்ற ஒரு படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ஒருவரினதும் கதைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அத்தினத்தில், ஹஜ் பயணத்திலிருந்து திரும்பியவர்கள் உட்பட 72 அப்பாவிப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர். இந்த ஆவணப்படம் பாஸீர் கலீலுர் ரஹ்மான் அவர்களால் இயக்கப்பட்டு எமது அமைப்பினால் விரைவில் வெளியியடப்படவுள்ளது. This is the trailer for the documentary Killing the Travellers | Kurukkalmadam Massacre, which exposes the abductions of travellers on roads to and from Kattankudy during the Sri Lankan civil war. It highlights the massacre that took place in Kurukkalmadam on 12th July 1990, where 72 innocent people – including returning Hajj pilgrims – were killed and buried by armed groups. The documentary is produced by Activists Without Borders and directed by Baazir Kaleelur Rahman. https://madawalaenews.com/24518.html

இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

3 months ago
இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி 13 JUL, 2025 | 09:13 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார். செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். செம்மணி மனிதப்புதைகுழி என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அது ஏற்கனவே சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருந்த ஒரு விடயமாகும். கிருஷாந்தி குமாராசுவாமியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னர் சர்ச்சைக்குரிய அந்த மனிதப்புதைகுழி விவகாரம் தொடர் விசாரணைகளின்றி இடைநடுவே முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும்கூட செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது தற்செயலாகத்தான் இந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை' என அவர் குறிப்பிட்டார். அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்தமட்டில், அவ்வேளையில் ஆட்சிபீடத்தில் இருந்த மற்றும் அதனைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய தரப்பினர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான தரப்பினர் என்பதனால், அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொணரவேண்டிய தேவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தையும், இனவழிப்பையும் அப்போதைய அரசாங்கங்களுடன் இணைந்து ஊக்குவித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, அக்காலப்பகுதியில் உருவான செம்மணி போன்ற மனிதப்புதைகுழிகள் தொடர்பில் எவ்வாறு நீதியான விசாரணைகளை முன்னெடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினார். ஆகவே செம்மணி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சர்வதேசத்தின் தலையீடோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணையோ இன்றி, அதுகுறித்த உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவே முடியாது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219830

வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

3 months ago
அகராதி: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People's Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது.
Checked
Tue, 10/14/2025 - 12:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed