சமூகவலை உலகம்

அழிக்கப்படும் தமிழர் தாயகம் | Vedukkunari Sivan temple destroyed | விகாரை ஆக்கப்பட்ட வெடுக்குநாறி

3 days 23 hours ago

 

வாங்க 2023 மார்ச் மாதம் வெடுக்குநாறி மலையில இருந்த ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு அங்க இருந்த சிவலிங்கம் உடைக்கபட்டு இருந்த. இந்த காணொளி 2 வருடங்களுக்கு முதல் நாங்க போகேக்க அங்க எப்பிடி இருந்த எண்டுறத காட்டுது.

 

 

 

மனிதர்களை வேட்டையாடும் விளம்பரங்கள்

1 week 3 days ago

விளம்பரங்கள் பற்றிய புத்தகம் எழுதிய மன்னர் மன்னரின் பேட்டி.
மனிதர்களை ஏமாற்ற பதினைந்து உளவியல் கோட்பாடுகள் இருப்பதாக  குறிப்பிடுகிறார். ஆர்வமுள்ளோர் பாருங்கள்.

யாழ்ப்பாணத்தில இந்த மரங்கள் எல்லாம் வளருமா?? | எங்கட தோட்டம்🌳| Our Home Garden Vlog in Tamil 🌳

1 week 5 days ago

வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தினை முழுசா சுத்தி பாப்பம்,  கிட்டத்தட்ட 100 வகையான மரங்களுக்கு கிட்ட  இருக்கு. எல்லாமே இங்க வச்சு ஒரு 3-5 வருசங்களுக்குள்ள வளர்ந்த மரங்கள் தான், பாருங்கோ பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.  அதே மாதிரி இன்னும் என்ன மரங்கள் வச்சா நல்லா இருக்கும் எண்டு சொல்லுங்கோ.

 

பலர் அறியாத யாழ்ப்பாணத்து பாலைதீவு | Walk around Palaitivu island | தன்ணிர் தேடி தீவை சுத்தி நடந்தம்

1 week 5 days ago

வாங்க நாம இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இருக்க பல தீவுகளில ஒண்டான பாலைதீவுக்கு பயணம் செய்யிறதையும் அங்க என்ன என்ன இருக்கு எண்டும் பாப்பம். அதே நேரம் இந்த தீவை சுத்தி நடக்கிறதுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டும் பாப்பம் வாங்க. நீங்க இந்த தீவுக்கு இதுக்கு முதல் பொய் இருக்கீங்களா எண்டும் சொல்லுங்கோ.

உங்களுடன் நீங்களே நேர்மறையாக பேசி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

2 weeks 3 days ago
உங்களுடன் நீங்களே நேர்மறையாக பேசி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நேர்மறை எண்ணங்களை நமக்கு நாமே வளர்த்து கொள்வதும், நம்மிடம் நாமே நேர்மறை கருத்துக்களை பேசிக்கொள்வதும் நமது வாழ்வில் நல்ல பலன்களை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இன்று இணையதளங்களில் நிறைய மோசமான செய்திகள் கொட்டி கிடந்தாலும், அந்த எதிர்மறை கருத்துகள் அனைத்தையும் சமன் செய்யும் வகையில் அங்கே நேர்மறை செய்திகளும் இடம்பெறுகின்றன.

ஆங்கிலத்தில் இன்று நீங்கள், Inspiration, Motivation போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இணையத்தில் தேட துவங்கினால், எண்ணிலடங்கா கணக்குகளில் நேர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும் நேர்காணல்களும், உத்வேகப்படுத்தும் வகையிலான கருத்துகளும், கட்டுரைகளும் உங்கள் முன் தோன்றும்.

அதில் நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், ”அறிவை விட கற்பனைதான் சிறந்தது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தெரிவித்த கருத்துக்களையும், நிக்கி மினாஜின் “எல்லோரும் இறக்கிறார்கள்; ஆனால் எல்லோரும் வாழ்கிறார்களா” என்ற பாடல் வரிகளையும் நீங்கள் காணலாம்.

 

பெரிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், இவ்வளவு ஏன் இன்றைய இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை அனைவரும் நேர்மறை கருத்துக்களையும், வார்த்தைகளையும் அதிகமாக பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

தான் சந்தித்த இனவெறி தாக்குதல்கள் குறித்து, மாயா ஏஞ்சலோ தன்னுடைய வசீகரமான எழுத்துகளில் எழுதியிருப்பதை, இந்த உலகத்தின் எந்த மூலையிலிருந்து எவர் படித்தாலும், அவர்களால் அதனை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள முடியும். ”உங்களிடமிருந்து பிரகாசிக்கும் ஒளியை எந்த சக்தியாலும் மங்க செய்ய முடியாது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

வாழ்க்கையில் இப்படி சாதனை புரிந்திருக்கும் எவருடைய கதைகளையும், அனுபவங்களையும் கேட்கும்போதும், படிக்கும்போதும் நமக்குள் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதை உணர்ந்திருப்போம்.

இத்தகைய எண்ணங்களில் நம்மை நாம் தொடர்ச்சியாக தக்கவைத்துகொள்ளும்போது, நமது வாழ்க்கை உண்மையிலேயே நேர்மறையான பாதையில் செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நேர்மறை உணர்வுகளை பெறுவது எப்படி?
வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேர்மறையான உணர்வுகளுக்கு அதிகளவிலான சக்திகள் இருக்கிறது. உற்சாகம், ஆர்வம், நன்றியுணர்ச்சி மற்றும் பிற வகையான நேர்மறையான எண்ணங்களை நாம் முதன்மையாக கொண்டிருக்கும் நிலையை,”விரிவாக்கப்பட்ட சிந்தனை செயல்திறன்” (expanded thought-action repertoires) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இத்தகைய சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள், புதிய சாத்தியங்கள் மற்றும் புதிய முயற்சிகள் மேற்கொள்வது குறித்து அதிகமான கற்பனை திறன் கொண்டிருப்பார்கள் எனவும், ஒரு பிரச்னையில் அவர்களால் எளிதாக தீர்வு காணமுடியும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க உளவியல் மருத்துவரான மார்டின் செலிக்மென், PERMA (Positive Emotion, Engagement, Relationships, Meaning, Achievement) என்னும் மாதிரி நல்வாழ்வு முறையை உருவாக்கினார். நேர்மறை எண்ணங்களை எளிதாக பின்பற்றுவதற்கு இந்த வாழ்க்கை முறை உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சாவல்கள் நிறைந்த சூழ்நிலைகளிலும் நேர்மறை கருத்துக்களை உள்வாங்கி கொள்வதற்கும், அன்பானவர்களுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும், கடினமான சூழ்நிலைகளை எளிமையாக புரிந்து கொள்வதற்கும் இத்தகைய நல்வாழ்வு முறைகள் உதவுவதாக கூறப்படுகிறது.

பலனளிக்கும் மதசார்பற்ற பிரார்த்தனைகள் :
வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாழ்வில் நாம் நேர்மறையான வகையில் உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளும்போது, அது நமது வாழ்வின் பல்வேறு கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. செய்திகளில் உள்ளடக்கியிருக்கும் தார்மீக கருத்துக்களையும், அது சார்ந்த நினைவுகளையும் பலப்படுத்துவதற்கு இத்தகைய நேர்மறையான உறுதிமொழிகள் நமக்கு உதவுகின்றன.

”உணர்ச்சிவசப்பட்டு ஒரு செயலில் ஈடுபடுவதை விட, செயல்பாட்டின் மூலம் ஒரு உணர்ச்சியை நீங்கள் மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என அமெரிக்க உளவியலாளர் ஜெரோம் பர்னர் கூறுகிறார்.

அதேபோல சாதனை புரியும் மனிதர்கள் குறித்து மிச்செல் ஒபாமா கூறும்போது, ”உண்மையிலேயே சக்திவாய்ந்த மனிதர்கள் மற்றவர்களையும் வாழ்க்கையில் உயர்த்திக் கொண்டு செல்வார்கள்; வலிமையான மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பார்கள்” என குறிப்பிடுகிறார்.

இந்த விதத்தில் நாம் நேர்மறை உறுதிமொழிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, அது மதசார்பற்ற பிரார்தனைகளுக்கு நிகராகிறது. அதாவது நீங்கள் சத்தமாக பிரார்த்தனைகள் மேற்கொள்ளும்போது, அந்த பிரார்த்தனைகள் உங்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும், ஆறுதலையும் அளிக்கும். அதேபோல நேர்மறையான கருத்துக்கள் கொண்ட மேற்கோள்களை நீங்கள் வாசிக்கும்போதும், உத்வேகமளிக்கும் பாடல்களை பாடும்போதும் அது உங்களுக்கு அதிக ஆற்றல்களை கொடுக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அதேபோல நமக்கு ஏற்படும் ஏமாற்றங்களையும், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் சமாளித்து, நமது லட்சியங்களை நோக்கி நம்மை பயணிக்க வைப்பதற்கு, நாம் எடுத்துக்கொள்ளும் நேர்மறையான உறுதிமொழிகள் உதவிபுரியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, “ தன்னை தானே நேர்மறை வார்த்தைகளால் உத்வேகப்படுத்தி கொள்கிறவர்கள்தான், வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும், அவர்களே தங்களது வாழ்க்கையிலும் வேலையிலும் நிறைவான திருப்தி அடைந்தவர்களாக இருக்கிறார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையை அழகாக்கும் நுண்ணிய உணர்வுகள் :
வாழ்க்கை, மனநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கூரிய அனைத்தையும் விட, வாழ்க்கையை நாம் எந்த மனநிலையில் அணுகுகிறோம் என்பதே நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதும், நமது மனநிலையை சார்ந்தே அமைகிறது.

நீங்கள் சமூக நீதிக்காக போராடுபவராக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை மகிழ்ந்து அனுபவிக்க விரும்பும் ஒரு சாமனிய மனிதராக இருந்தாலும் சரி, உங்களுடைய வாழ்க்கை நினைவுகள் அனைத்தையும் உங்களது மனநிலைதான் தீர்மானிக்கிறது.

அதனால் எப்போதும் உங்களை உத்வேகப்படுத்தும் வகையிலான கருத்துகளை படியுங்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான பாடல்களை கேளுங்கள். உங்களுடைய படுக்கறை சுவர்களிலோ, எப்போதும் நீங்கள் வைத்திருக்கும் பைகளிலோ நேர்மறையான சிந்தனைகளை பிரதிபலிக்கும் குறிப்புகளை வைத்துகொள்ளுங்கள். எப்போதெல்லாம் நீங்கள் சோர்வடைகிறீர்களோ அப்போதெல்லாம் அதனை எடுத்து படியுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேளுங்கள். அப்போது உங்களின் லட்சியங்கள் குறித்தும், உங்களது வாழ்க்கையின் நோக்கங்கள் குறித்தும் பெரிதாக கற்பனை செய்ய துவங்குங்கள். அது உங்களது எண்ணங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்களது நேர்மறையான எண்ணங்களை மற்றவர்களிடமும், சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்காக உங்களை நீங்களே அவ்வபோது பாராட்டி கொள்ளுங்கள்.

நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து பேசும்போது, அது உங்களிடமும், உங்களை சுற்றி இருப்பவர்களிடமும் ஏற்படுத்தும் மாற்றங்களையும், நேர்மறை அதிர்வுகளையும் உங்களால் முழுமையாக உணர முடியும். மீண்டும் மீண்டும் நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அது உங்களிடம் ஏற்படுத்தும் ஆதித ஆற்றல்களை கண்டு நீங்கள் நிச்சயம் ஆச்சரியமடைவீர்கள்.

https://www.bbc.com/tamil/articles/czk84p3dgj7o

விட்டுக்கொடுத்து வாழ்வோம்! உறவு செழிக்கும்.

2 weeks 6 days ago

May be an image of animal and outdoors

இரண்டும் முரண்பட்டுக் கொண்டன.
கடுமையாக முட்டி மோதிக் கொண்டன.
முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன.
 
நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை.
மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன.
இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை.
இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும்சண்டைகளும் கூட! நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை.
 
நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல.
மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி/விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம்.
உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை.
 
உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம்!
மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால்.
எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம்.
அனைத்திலும் நுட்பம் பார்க்க வேண்டாம்!
விட்டுக் கொடுத்து வாழ்வோம்! உறவு செழிக்கும்;
அன்பு தழைக்கும். 🌹🌹

மறுக்க முடியாத, வேதனை தரும் உண்மை.

3 weeks ago
May be an image of 1 person and text
 
📱 இன்றைய தலைமுறையினருக்கு
பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்
📱 படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...
📱 யாருக்குமே மரியாதை தரக்கூடாது..
📱 தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...
📱 எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...
📱 சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..
📱 பெண்கள் மீது மரியாதையே இல்லை..
📱 ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...
📱 வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..
📱 ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..
📱 ஒரு வரி கூட வாசிப்பதில்லை..
📱 தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...
📱 ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..
📱 வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..
📱 பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..
📱 சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌.. எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..
📱 எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..
📱 ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....
📱 இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..
📱 பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..
📱 பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..
📱 தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...
📱 அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....
📱 இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..
📱 பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..
📱 இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..
📱 மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.
📱 காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்
📱 கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. எதிர்கால வரலாறு.....
 
🌹*இவை மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை*..........🌹
 

யாழ் கோட்டையில் ஒரு சமையல் | Cooking with strangers Jaffna

3 weeks 1 day ago

 

 

கொஞ்சம் வித்தியாசமா ஒரு காணொளி செய்து பாப்பம் எண்டு செய்தது, பாத்து சொல்லுங்கோ எப்படி வந்து இருக்கு எண்டு... 

அதோட போன பதிவில கலந்துரையாடின விடயங்களை பாத்தன், திரும்ப போய் பாக்கும் போது எனக்கும் அப்பிடி தான் தோணுது, என்னை அறியாமலே வருது போல, நீங்க சொன்ன மாதிரி கூட தமிழ் நாடு காணொளிகளை பாக்கிறதால ஏற்படுற மாற்றமோ தெரியல, இனி வார காணொளிகளில குறைச்சுக்க முயற்சி பண்ணுறன். 

 

 

 

 

கற்பனா வாதங்களையும், கனவுலக சஞ்சாரங்களையும் விடுத்து, திவ்வியா சத்தியராஜ் போல் நிஜவுலகில் சஞ்சரிப்பார்களா தமிழக தலைவர்கள்?

1 month ago
கற்பனா வாதங்களையும், கனவுலக சஞ்சாரங்களையும் விடுத்து, திவ்வியா சத்தியராஜ் போல் நிஜவுலகில் சஞ்சரிப்பார்களா தமிழக தலைவர்கள்?
நெடுந்தீவில் சமூக சேவையில் ஈடுபடும் தன் மகளை நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்யராஜ் பாராட்டி உள்ளார்.
“இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமைச் சமூதாயம் என்ற பெயரில் ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தியாகிய பூங்கோதை சந்திரகாசனும், என்மகள் திவ்வியா சத்தியரா ஜும் இணைந்து, ஒரு அற்புதமான திட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அந்த திட்டத்தில் பல பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது.
முதலாவது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், விவசாயம் என்ற ஒரு அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது, அதில் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களையும் ஈடுபடச் செய்து எதிர்காலத்தில் அவர்கள் நல்ல தொழிலை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு என அவ்வளவு நல்ல விசயங்களும் அடங்கியிருக்கின்றன.
இது இந்தநேரத்தில் மிகவும் பயனுள்ள, மிகவும் அவசியமான, சிறப்பான ஒரு சமூகப் பணியாகும். இந்தப் பணியை பூங்கோதை சந்திரகாசனும் எனது மகள் திவ்வியா சத்தியரா ஜும் இணைந்து செயற்படுவதை நினைக்கும் போது, எனக்கு புரட்சித் தலைவர் அவர்களின் ஒரு பாடரல வரி நினைவுக்கு வருகிறது.
”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.”
ஈழத் தமிழர்களின் நலனுக்காக என்மகள் திவ்வியா சத்தியராஜ் தொடர்ந்து உழைப்பார்.
நன்றி.
சத்தியராஜ்.
 
 

இரும்புப் பெண்மணி, கல்வி ஆலோசகர் நெல்லை உலகம்மாள்

1 month ago

இரும்புப் பெண்மணி, கல்வி ஆலோசகர் நெல்லை உலகம்மாள்.

325305213_561894662506513_4525946031625616371_n.jpg
324877049_502677612009254_7346939221337093592_n.jpg

நெல்லை உலகம்மாள். நெல்லையில் மட்டுமல்ல சென்னையும் அறிந்த பெயர்தான். சின்னச் சின்னதாய்த் தடங்கல்கள் இடையூறுகள் குறைகள் ஏற்பட்டாலே ஓய்ந்து போய் அமரும் பெண்ணினம், நெல்லை உலகம்மாள் பற்றிக் கேள்விப்பட்டால் தங்கள் தன்னம்பிக்கைக்குப் புத்துயிர் ஊட்டிக் கொள்ளும். லேடீஸ் ஸ்பெஷலுக்காகப் பேட்டி வேண்டும் என்றபோது மிக மகிழ்ந்து தன் முனைவர் பட்ட வேலைகளுக்கு நடுவிலும் இன்னொரு கல்லூரிக்கு உரையாற்றச் சென்ற பயணப் பொழுதினில் தன் காரில் இருந்தபடியே என் கேள்விக்கான பதில்களை அனுப்பினார்.   

SCAN_.jpg

நெல்லையில் பிறந்தவர் உலகம்மாள். கூடப்பிறந்தவர்கள் நால்வர், மூத்த சகோதரி, மூத்த சகோதரர் மற்றும் இரு தம்பியர். பெற்றோர்கள் இருவரும் ஆசிரியரகள் என்றாலும்,

பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் என்ற சொல்லுக்குத் தகுதியான அன்பினையும், அரவணைப்பினையும், பெற்றோரிடமும், உடன் பிறப்புகளிடமும் பெற்றுக் கொண்டிருப்பவர். சிற்சில உடற்குறைபாடு இருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை இன்னும் இளமையாக இனிமையாகப் புதுப்பித்துக் கொண்டிருப்பவர். எப்போதும் தான் எடுத்த முடிவிலும் பின் தயங்காதவர். இரும்புப் பெண்மணி என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர். சேவைக்காகவே தன்னை ஒப்புக் கொடுத்தவர்.

எந்த விழா என்றாலும் தன் உதவியாளர் உதவியுடன் தன் வாகனத்தில் சரியான நேரத்துக்கு வந்து சிறப்பிப்பார். எந்த இடம் என்றாலும் தயங்கியதே இல்லை. சென்னை மட்டுமல்ல எந்த ஊர் என்றாலும் நட்புக்குக் கரம் கோர்ப்பதில் இவர் வல்லவர். இவரை நண்பர்களாகப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நானும்தான்.

இவர் ஆற்றி வரும் பணிகளில் சிலவற்றை உங்களுக்காகத் தொகுத்து அளித்துள்ளேன். சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அகாடமியில் 14 ஆண்டுகளாக கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டலோடு, நிர்வாக பணியில் இருந்து நல்ல அனுபவம் பெற்ற அடிப்படையில், 2015 முதல், பள்ளி மாணவர்களுக்கு இப்போது வரை கல்வி ஆலோசனை வழங்கி வருகிறார்.

JEO பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலரர்களுக்கு, அவர்களின் பயிற்சியின் போது உரையாற்றும் வாய்ப்பினை 2016 முதல் பெற்று, அதற்கான  சான்றிதழும்  பெற்றுள்ளார். அத்தோடு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்யும் போட்டித் தேர்வுக்கு  தயாராகும் மாணவ/மாணவியருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டலும் தொடர்ந்து செய்து வருகிறார்.

தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு “முதன்மை பயிற்சியாளராகப்” பணிபுரிந்து வருவதோடு,  கொரோனா  தொற்றுக் காலத்தில்  கைபேசியில்  காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனையுடன், தேவையான உதவிகளை, துறை உயர் அதிகாரிகள் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கும் பணியினையும் செய்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார்.

பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பல பணிகள் ஆற்றுவதுடன், சென்னை லயோலா கல்லூரி அவுட் ரீச் மாணவர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று பெண்களுக்கான விழிப்புணர்வுடன், பெண்களுக்கான உளவியல் ஆலோசனை, முதியோர் இல்லமும் சென்று ஊக்க உரையாற்றி வருகிறார்.

கொரோனா தொற்றுக் காலத்திலும், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், வேலைவாய்ப்பு மையம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிகழ்த்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்து ஆன்லைனில் உயர்கல்வி, உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். பல மாவட்டங்கள், பல மாநிலங்கள், பல நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும், பல்வேறு நிகழ்வுகளில் சந்தித்து வருகிறார்.

காது கேளாதோர் பள்ளி பணியாற்றும் 30 ஆசிரியர்களிடையே அவர்கள் பணியினை உற்சாகமூட்டும் வகையில்ஊக்க உரை ஆற்றியுள்ளார். காது கேளாதோர் பள்ளி மாணவ/மாணவியர்களிடமும் அறநெறி குறித்து ஆலோசனை வழங்கும் நிகழ்வு ஆகியனவும் நிகழ்த்தி உள்ளார்.

கோட்டூர்புரம், பார்வையற்றோருக்கான செயிண்ட் லூயிஸ் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கான வழிகாட்டலுடன், 10 & 12 வகுப்பு  பொதுத்  தேர்வுக்கு தயாராவது குறித்த ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தோடு அவர்களுக்குத் தேவையான ஒலி புத்தகங்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பதிவு செய்து கொண்டு போய் கொடுத்துள்ளார். 2015 விருந்து நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று, 26000க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகளைச் சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட 200 மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு சென்று வழிகாட்டல் ஆலோசனை வழங்கியுள்ளார்.

SCAN__0001.jpg

இதற்கெல்லாம் தூண்டுதலாக இருந்தது எது எனக் கேட்டபோது,

நான் குழந்தையாக இருந்த போது அப்பா துவங்கிய மழலையர் பள்ளியிலிருந்து கிடைத்தது எனக் கூறினார். கல்வி ஆலோசனை சேவைக்கெனவே  M.Com., M.Ed., M.Phil., D.Co.Op., PGDCA., M.Sc Counselling & Psychotherapy ஆகிய பட்டங்களைப் பெற்றதோடு தற்போது Ph.D "கல்வி"யில் முனைவர் பட்டப் படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இப்பணியின் ஏற்ற இறக்கங்கள் என்ன, தடைகள் என்ன? எனக்கேட்ட போது ஏற்ற இறக்கங்கள்  என்று  எதுவும் என் வாழ்க்கையில் எப்போதும் இல்லை. சுமுகமான சீரான வாழ்க்கை. இயலாமை என்பது அனைவருக்கும் பொதுவானது என்று என் அறியாத வயதிலேயே ஏற்றுக் கொண்டதாலோ என்னவோ இறக்கங்கள் என்று எதனையும் எண்ணியதில்லை என்றார். இவர் செய்யும் "பணிக்கான தனித்துவம்" என்பது, எளிமையாகச் சொல்லி விளங்க வைப்பது என்கிறார்.

மேலும் இத்துறையில் பலருக்கு  வேலையிலும், உயர் கல்விக்கும் வழிகாட்டுதல் என்பது, இதனை "செய்", "செய்யாதே", என்று "அறிவுரை" கூறாமல், வழிகாட்டுகிறார். செய்யாதே என்பதனை விட எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று ஆலோசனயுடன் வழிகாட்டுவேன் என்கிறார்.  ஆகையால் குழந்தைகளுக்கு என்னைப் பிடிக்கும். மேலும் நான் தடைகளாக எதையும் பார்த்ததில்லை. சவால்களாகத் தான் பார்க்கிறேன். ஆகையால் எதுவும் எனக்கு தடை இல்லை.

இத்துறையில் என் 20 வயதில் கல்லூரி காலங்களிலேயே சேவை மனப்பான்மையுடன் என் பயணத்தை துவங்கிவிட்டேன். கல்வித் தகுதியுடன் 2001 விருந்து முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தேன்.  முதலில் வழிகாட்டல் ஆலோசனை வழங்குவதை தொழிலாகச் செய்யவில்லை. ஆங்கிலத்தில் பாசன் (Passion) என்று சொல்லக்கூடிய வேட்கை, ஆர்வம், ஆசை என்று சொல்லுமளவிற்கு செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன். புதிதாக எதையும் செய்ய விரும்புபவர்களுக்கு அறிவுரையாக அல்லாமல் வழிகாட்டலாக கூறுகின்றேன். செய்யும் பணியில் ஈடுபாட்டுடன், நேசித்து உங்களை ஈடுபடுத்துங்கள்.

அடைக்கலம் அறக்கட்டளையின் ’’ஜெம்ஸ் ஆஃப் திஷா’ விருது, சிற்பி அமைப்பினர் வழங்கிய ”தைரியமான வீரமங்கை” விருது, அமுத சுரபி என்னும் முகநூல் பக்கத்தினர் வழங்கிய ”அமுத பட்டிமன்ற விருது”, மற்றும் ”இரும்புப் பெண்மணி” விருது, ஊருணி அறக்கட்டளையின் ”பாத் பிரேக்கர்” விருது, பூவரசி அமைப்பின் ”நம்பிக்கை” விருது, S2S அமைப்பின் “சமூகச் சிற்பி” விருது, கலாம் யு.வி. அறக்கட்டளை “பாராட்டு விருதுகள்”,  இந்தியன் உலக சாதனைகள் – சிறந்த மனிதநேய விருது, சூப்பர் ராயல் டிவி விருது – 2021, சிறந்த கல்வியாளர் & ஆலோசகர், காவல்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான பாராட்டு சான்றிதழ்,  கலங்கரை விளக்கம் அறக்கட்டளை, காருண்யம் அறக்கட்டளை, கவித்திறன் மேடை இணைந்து பத்மஸ்ரீ விவேக் நினைவாகக் “கலைச்செல்வர் விருது”, “ஆரஞ்சு உலக சாதனை சான்றிதழ்” பதின்பருவ சவால்கள்” தலைப்பில் ஆற்றிய உரைக்காக, ஷாக்ஷம் “டைனமிக் கேரியர் கவுன்சிலர்” விருது, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ், “பெண்மையை” கொண்டாடுதல் மற்றும் கௌரவித்தல், ஸ்ரீமதி சோனியா காந்தி விருதுகள்-2022, சிரம் அறக்கட்டளை, கெளரவ விருந்தினர், தங்க மங்கை விருது – 2022, தமிழால்  இணைவோம்-உலகத் தமிழ் பேரியக்கம் ஆகியன இவருக்கு இப்பணிகள் மூலம் கிடைத்த விருதுகள், பரிசுகள்,  முக்கியஸ்தர்களின் வாழ்த்துகளும் அடங்கும்.

வாழ்க்கையில் நட்டம் என்று எதுவுமில்லை. லாபம் என்று  பார்த்தால், பல ஆயிரக்கணக்கான மாணவ/மாணவியரின் அன்பினையும், பல்வேறு ஆளுமைகளின் இதயங்களிலும் இடம்பெற்றுள்ளேன். இந்த உலகில் நெல்லை உலகம்மாளுக்கு என்று தனி ஒரு இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் சமூகத்திற்கும், அதனைக் கண்டு ஆனந்திக்கும் என் பெற்றோருக்கும், செயல்பாடு கள் மூலம் நன்றி கடன்  செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

தன் வாழ்க்கையில் எதையுமே பாசிட்டிவாக எதிர்கொள்ளும் நெல்லை உலகம்மாளைப் பார்த்தால் எந்தப் பெண்ணுமே ஓய்ந்து அமர மாட்டார்கள். புயல் ஒன்று புறப்பட்டதே என்று வேகம் கொள்வார்கள். அவ்வளவு எனர்ஜி ஏற்பட்டது எனக்கும் இந்தப் பளிச் பெண்ணுடன் உரையாடியபிறகு. உங்களுக்கும்தானே !

http://honeylaksh.blogspot.com/2023/02/blog-post_24.html

"என் வெற்றிக்கு பின்னால் இருப்பது ‘ஜீரோ’ தான்" - 3அடி உயர புகைப்பட கலைஞர்

1 month ago
"என் வெற்றிக்கு பின்னால் இருப்பது ‘ஜீரோ’ தான்" - 3அடி உயர புகைப்பட கலைஞர்
கட்டுரை தகவல்
 • எழுதியவர்,திவ்யா ஜெயராஜ்
 • பதவி,பிபிசி தமிழ்
 • 59 நிமிடங்களுக்கு முன்னர்
புகைப்பட கலைஞர்

’ஸ்டூடியோவிற்குள் வருபவர்கள் முதலில் என் உயரத்தை பார்த்துவிட்டு போட்டோ எடுப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் படம் எடுத்து கையில் பிரிண்ட்டு போட்டு கொடுத்த பின் அதன் நேர்த்தியை பார்த்துவிட்டு ஆச்சரியமடைவார்கள்’ என்று நெகிழ்கிறார் சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் தினேஷ்.

 

பொதுவாக புகைப்பட கலைஞர்களுக்கு உயரம் என்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஆனால் தினேஷ் அதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறார். ஆம் இவரின் உயரம் 3 அடி மட்டுமே!

 

 

’என்னுடைய உயரம் காரணமாக சிறு வயதிலிருந்தே பல புறக்கணிப்புகளையும், கேலி கிண்டல்களையும் சந்தித்து இருக்கிறேன். வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டுமே பிரதானமாக பார்த்து வந்தவன் நான். ஆனால் இது எல்லாவற்றிலிருந்தும் என்னை மீட்டு வந்து, இந்த உலகில் தொடர்ச்சியாக இயங்க வைத்துக்கொண்டிருப்பது என்னுடைய புகைப்பட தொழில்தான்’ என்று பிபிசியிடம் பேசத்துவங்குகிறார் தினேஷ்.

’எனக்கு அப்போது 18 வயது. அதுவரை என்னை ஒரு மாற்றுத்திறனாளியாக மட்டுமே அனைவரும் பார்த்து வந்த நிலையில், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு போட்டோ ஸ்டூடியோவில் வேலை கொடுத்தவர் என் முதலாளி ஏழுமலை. ஒரு பிறந்தநாள் விழாவில் நான் அவரை சந்தித்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டிருந்தேன். ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்து நேரில் வந்து பார்க்க சொன்னார்.

பின் ஒருநாள் அவர் சொன்ன இடத்திற்கு சென்றேன். அது சென்னை போரூரில் அமைந்திருந்த ஒரு போட்டோ ஸ்டூடியோ. என்னை வரவேற்ற அவர், உடனடியாக ஸ்டூடியோவில் வேலை கொடுத்து தொழிலை கற்றுக்கொள் என கூறிவிட்டார். அதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அன்றிலிருந்துதான் என் வாழ்க்கை மாறியது. இப்போது இந்த தொழிலுக்கு வந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டது’ என்கிறார் தினேஷ்.

 

தன்னுடைய இந்த பயணம் குறித்து தினேஷ் மேலும் பேசும்போது ‘என் முதலாளி எனக்களித்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். ஆரம்ப நாட்களில் இரவு முழுவதும் ஸ்டூடியோவிலேயே தங்கி இந்த தொழிலை முழுமையாக புரிந்துக்கொண்டேன். ஒரு புகைப்படம் எப்படி எடுக்க வேண்டும், லைட்டிங் எப்படி செய்ய வேண்டும் மற்றும் கஸ்டமர்களை எப்படி கையாள வேண்டும் போன்ற அனைத்தையும் நானாகவே கற்றுக்கொண்டேன்.

 

அது தவிர இங்கே போட்டோ ஆல்பமும் தயார் செய்கிறோம். போட்டோ பிரிண்ட்டுகளை சரியாக வெட்டி எடுத்து ‘ஃப்ரேம்’ போடுவதும், ஆல்பம் போடுவதும் கடினமான வேலை. உயரமாக இருப்பவர்கள் மட்டுமே இதனை எளிதாக கையாள முடியும். ஆனால் அதையும் நான் செய்ய துவங்கினேன். உயரத்திற்காக இரண்டு தகர டின்களை எடுத்து வைத்து, அதன் மேல் ஏறி ஆல்பங்கள் தயார் செய்வேன். என்னுடைய ஆர்வத்தையும், உழைப்பையும் பார்த்து, இந்த ஸ்டூடியோவை கவனித்து கொள்ளும் முழு பொறுப்பையும் என்னிடமே என் முதலாளி ஒப்படைத்து விட்டார்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

 

புகைப்பட கலைஞர்

புகைப்படம் எடுப்பதற்கும், ஸ்டூடியோவை கவனித்துகொள்வதற்கும் தன்னுடைய உயரம் தனக்கு ஒரு பெரிய தடையாக இல்லை என்கிறார் இவர்.

 

இது குறித்து அவர் பேசும்போது, ’புகைப்படம் எடுக்கும்போது ’லைட்’ ஸ்டாண்டுகளை சரியான இடத்தில் வைப்பது, கஸ்டமர்களை சரியான முறையில் நிற்கவோ, அமரவோ வைத்து சரியன அமைப்பை(position) முடிவு செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் யார் உதவியும் இல்லாமல் நான் தனியாகவே செய்துவிடுவேன். பின் நாற்காலிகளின் உதவியுடன் அவர்களை படம் எடுத்து கொடுப்பேன். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜடை அலங்கார போட்டோ, குரூப் போட்டோ, திருமண வரன் பார்ப்பதற்காக எடுக்கப்படும் தனி நபர் போட்டோ போன்ற ஸ்டூடியோவிற்குள் எடுக்கப்படும் அனைத்து வகையான படங்களையும் நான் எடுத்து கொடுக்கிறேன்.

ஸ்டூடியோவிற்குள் வருபவர்கள் முதலில் என் உயரத்தை பார்த்துவிட்டு போட்டோ எடுப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் படம் எடுத்து கையில் பிரிண்ட்டு போட்டு கொடுத்தப்பின் அதன் நேர்த்தியை பார்த்துவிட்டு ஆச்சரியமடைவார்கள். சிலர் என் வேலையை பாராட்டி என் தோளில் தட்டுக்கொடுப்பார்கள். அதுதான் எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது’ என்று நெகிழ்கிறார் தினேஷ்.

 

ஒரு ’புகைப்பட கலைஞராக’ தினேஷ் தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தாலும், இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல. தன்னுடைய உயரக்குறைபாடு காரணமாக பல மோசமான அனுபவங்களை அவர் சந்தித்திருக்கிறார்.

 

புகைப்பட கலைஞர்

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கர்பப்பையில் இருக்கும்போதே எனக்கு உயரக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் என் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் இடையே சில சண்டைகளும் நடந்துவந்தது. இதனால் நான் பிறந்தவுடனேயே என் அம்மா என்னைவிட்டுச் சென்றுவிட்டார். அவரின் முகத்தை கூட நான் பார்த்தது இல்லை. என் அப்பாவும், பாட்டியும்தான் என்னை வளர்த்தார்கள்.

குழந்தையாக இருக்கும்போது எனது உடல்நிலை அடிக்கடி மோசமடையும். எனது அப்பா நிறைய கடன் வாங்கி எனக்கான மருத்துவ செலவுகளை செய்து வந்தார். ஒருகட்டத்தில் கஷ்டம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் எனக்கு எல்லாமுமாக இருந்தது எனது பாட்டி மட்டுமே’ என்று கூறும் தினேஷ், தொடர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பிபிசியிடம் பகிர்ந்துக்கொண்டார்.

‘சிறுவயதிலிருந்தே என் உயரக்குறைபாடு காரணமாக பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். உறவினர்கள் யாருமே என்னிடம் பேசியதில்லை. அப்பா இறந்தபின் என்னை ஹாஸ்டலில் விட்டுவிடும்படி உறவினர்கள் பாட்டியை கட்டாயப்படுத்த துவங்கினர். அவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் என்னை என் பாட்டி ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். அப்போது நான் 5ஆம் வகுப்பு முடித்திருந்தேன். ஆனால் அந்த ஹாஸ்டலை உள்ளடக்கிய அந்த பள்ளி நிர்வாகம், என் உயரத்தின் காரணமாக என்னை மீண்டும் ஒன்றாம் வகுப்பில் அமர வைத்தது. தொண்டையை அடைக்கும் அளவிற்கான துக்கம் எனக்கு அப்போது ஏற்பட்டது.

என்னுடைய உயரம் காரணமாக எனக்கு நல்ல நண்பர்கள் கூட கிடைக்கவில்லை. சக மாணவர்கள் விளையாட செல்லும்போது, நானும் வருகிறேன் என்று கூறுவேன். ஆனால் உன்னால் நீண்ட தூரம் எங்களுடன் நடந்து வர முடியாது என்று கூறி என்னை மட்டும் தனியே விட்டுச்செல்வார்கள். எத்தனையோ நாட்கள் மனதளவில் உடைந்து போய் அமர்ந்திருக்கிறேன்.

 

புகைப்பட கலைஞர்

அப்போதெல்லாம் எனக்காகவே வாழ்ந்து வந்த என் பாட்டியை நினைத்துக்கொண்டு மனதை ஆறுதல்படுத்திக்கொள்வேன். ஆனால் இப்போது அவரும் உயிருடன் இல்லை. உடல்நிலை சரியில்லாமல் சமீபத்தில் அவரும் இறந்துப்போனார்’ என்று கவலையுடன் தெரிவிக்கிறார் தினேஷ்.

 

இப்போது தினேஷிற்கு உறவினர்கள், நண்பர்கள் என யாரும் இல்லை. அவருக்கு துணையாக இருப்பது அவரது புகைப்பட தொழிலும், அதன் வாடிக்கையாளர்களும்தான். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தவிக்கும் ஒவ்வொரு சமயத்திலும், தன்னை தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருப்பது தன்னுடைய ’கேமரா’ மட்டுமே என்கிறார் தினேஷ்.

 

’என்னுடைய சொந்த ஊர் கூடுவாஞ்சேரி. அங்கே எனக்கென யாரும் இல்லை. ஆனால் இன்று என்னுடைய தொழில், போரூரில் என்னை பலருக்கு அடையாளப்படுத்தியுள்ளது. என்னை ஒதுக்கிவைத்த அத்தனை உறவினர்களின் வீடுகளிலும் இன்று நான் எடுத்துக்கொடுத்த புகைப்படம் இருக்கிறது. இந்த சமூகத்தில் எனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியது என் தொழில்தான். இப்போது எனக்கென சில லட்சியங்கள் உள்ளது. சொந்தமாக ஒரு ஸ்டூடியோ வைக்க வேண்டும், பின் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் என்னால் செய்ய முடியுமா என சிலர் நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் என்னுடைய பதில் ‘முடியும்’ என்பது மட்டுமே. ஏனென்றால் என்னுடைய வெற்றிக்கு பின்னால் எப்போதும் ‘ஜீரோதான்’ இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான். முற்றுப்புள்ளிக்கு பின்னால் துவக்கப்புள்ளியை வைப்பது நம்முடைய கைகளில்தானே இருக்கிறது!’ என்று கண்கள் மிளிர கூறுகிறார் இந்த நம்பிக்கை மனிதர்.

https://www.bbc.com/tamil/articles/cqqe460ryv7o

இஸ்ரேலும் உயர் தொழிநுட்ப விவசாயமும்

1 month 1 week ago

இஸ்ரேல் நாடு மிகப் பெரும் ராணுவ பலம் கொண்ட நாடு மட்டுமல்ல. அது உயர் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது.

அது விவசாயத்தில் பெரும் தொழில் நுட்ப புரட்சி செய்கிறது.

 

 

நாம் மகிழ்ச்சியாக இருக்க நமக்கு எவ்வளவு பணம் தேவை?

1 month 2 weeks ago
நாம் மகிழ்ச்சியாக இருக்க நமக்கு எவ்வளவு பணம் தேவை?
3 மணி நேரங்களுக்கு முன்னர்
பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பொதுவாக அதிக பணம் இருந்தால் நாம் சந்தோஷமாக இருப்போம் என நினைக்கிறோம்.

ஆனால் அது உண்மையா? நீங்கள் சந்தோஷமாக இருக்க உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

நமது வருவாய், கடன் மற்றும் நஷ்டம் இவற்றுடன் நமக்குள்ள உணர்வுப் பூர்வமான தொடர்பு மிகவும் நுணுக்கமானது.

சரி பணம் எப்படி நமது மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளது என்று பார்ப்போம்.

 
மகிழ்ச்சிக்கும் பணத்திற்கும் தொடர்பு உள்ளது?

மனித வாழ்க்கைக்கு பணம் தேவை என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. மனிதன் ஒரு நாகரிகமான வாழ்வை வாழ்வதற்கு பணம் அவசியமானதாக உள்ளது. ஆனால் ஆய்வுகளின்படி உங்கள் வருமானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மகிழ்ச்சிக்கும் வருமானத்திற்கும் உள்ள தொடர்பு என்பது ஒரு கணித கோட்பாடை போன்றது. எடுத்துக்காட்டாக உங்களின் 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் இரட்டிப்பாகி 40 ஆயிரமாக மாறினால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். அதேபோல அதே அளவு நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டுமென்றால் 40 ஆயிரம் ரூபாய் 60 ஆயிரம் ரூபாயாக மாறினால் போதாது. 40 ஆயிரம் ரூபாய் இரட்டிப்பாகி 80 ஆயிரம் ரூபாயாக மாறினால் மட்டுமே உங்களால் அதே அளவு மகிழ்ச்சியை பெற முடியும்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

அதாவது ஒரு அளவிற்கு மேல் நீங்கள் உங்கள் ஊதியத்தை இரட்டிப்பாக்க முயற்சி செய்வது வீண்தான். பிரிட்டனில் அந்த அளவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்ட் என நிர்ணயிக்கின்றனர். பலர் இந்த அளவை எட்டும் அளவிற்கு அதிர்ஷ்டம் பெற்றவர்களாக இருப்பதில்லை.

ஆனால் இந்த அளவிற்கு மேல் ஒருவர் தனது வருமானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக பெரிதும் கருதுவது இல்லை என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெ நேவே

'மகிழ்ச்சி என்பது வருமானத்தை சார்ந்தது மட்டுமல்ல'

உணவு, உறைவிடம் இது இரண்டும் பூர்த்தியான பிறகு வேறு சில விஷயங்கள் நமது மகிழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றன. அதுகுறித்து விவரிக்கிறார் 'சாரிட்டி ஃபார் ஹாப்பினெஸ்' என்ற அமைப்பின் இயக்குநர் மார்க் வில்லியம்சன் .

 • சமூகத்துடன் அதாவது குடும்ப உறவுகள், நண்பர்கள், சக பணியாளர்களிடம் நல் உறவை பேணுதல்,
 • நம்மைக்காட்டிலும் மேலானவற்றின் ஒரு அங்கமாக இருத்தல் (எடு.க தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலராக பணி செய்தல்)
 • நாம் எடுக்கும் முடிவுகளை நமது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
 • கடினமான சூழல்களில் இருந்து விரைவாக மீண்டு எழுவது
நார்டிக் நாடுகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பது ஏன்?

ஐநாவின் உலக மகிழ்ச்சி பட்டியலை தயாரிக்கும் நபர்களில் ஒருவராக இருக்கும் டெ நேவே தொடர்ந்து டென்மார்க், ஃபின்லாந்து போன்ற நாடுகள் அந்த பட்டியலில் இடம் பிடிப்பதன் காரணத்தை விளக்குகிறார்.

 • மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது
 • மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தும் அரசுகள்
 • அரசின் வரித் திட்டங்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆழமான நம்பிக்கை

அதேபோல சமத்துவமான சமூகமும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் டெ நேவே. சில வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நார்டிக் நாடுகளில் பாகுபாடு குறைவாக உள்ளது என்கிறார் டெ நேவே.

பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'பணம் குறித்த விநோத தகவல்கள்'

மனிதர்கள் என்றால் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு கொள்வது இயல்பான ஒன்றுதான். நாம் சம்பாதிக்கும் பணம், சொத்து, உடை என எல்லா வகையிலும் பிறரோடு நம்மை நாம் ஒப்பிட்டு பார்த்து கொள்வோம்.

இதற்கு ஒரு முக்கிய காரணமாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஒருவரின் பதிவை பார்த்து நாம் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதேபோல நாம் பணத்தை சம்பாதிக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோமோ அதைக்காட்டிலும் அதை இழக்கும்போது நாம் வருத்தமடைகிறோம்.

ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட மற்றொரு உளவியல் உண்மை, நமக்கு இருக்கும் கடனை முழுவதுமாக அடைப்பதைக் காட்டிலும் அதை பகுதியளவாக அடைக்கும்போது நாம் அதிகளவில் மகிழ்ச்சியடைகிறோம். நாம் வாங்கிய கடன் குறைந்து கொண்டே வரும்போது நமக்கு ஒரு புதுவித மகிழ்ச்சி கிடைக்கிறது.

பணம் தொடர்பாக ஆய்வாளர்கள் முன்வைக்கும் மற்றொரு முக்கியமான பழக்கம், சேமிப்பு மற்றும் குறைந்த அளவிலான பயன்பாடு (மினிமலிசம்). அதாவது நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை சேமித்து வைக்கவில்லை என்றால் நமக்கு எந்த பலனும் இல்லை. அதேபோல சம்பாதிக்கிறோம் என ஆடம்பரமாக செலவு செய்வதையும் நாம் அடியோடு மறக்க வேண்டும்.

முடிந்தவரை நமது தேவைகளை குறைத்து கொள்வது நமது வாழ்க்கை முறையை சீர்ப்படுத்தும்.

https://www.bbc.com/tamil/global-64559042

மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா?

1 month 3 weeks ago
மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா?
கட்டுரை தகவல்
 • எழுதியவர்,கிறிஸ் கோர்ஸ்கி
 • பதவி,பிபிசி
 • 6 பிப்ரவரி 2023
எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எச்சில் என்பது நமது வாயை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மட்டும் பயன்படுவது அல்ல. நமது சுவைக்கு பின்னால் உள்ள பிரதான காரணிகள் எச்சிலில் உள்ள பொருட்கள்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை ஈரப்பதம் ஆக்குவதற்கு உதவும் ஒரு சலிப்பூட்டும் பொருளாகத் தான் தெரியும். ஆனால், உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

 

உமிழ்நீரானது வாயில் நுழையும் அனைத்துடனும் தொடர்பு கொள்கிறது, மேலும் அது 99% தண்ணீராக இருந்தாலும், நாம் சாப்பிடும் மற்றும் குடிக்கும் சுவைகளில் - மற்றும் நமது இன்பத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“எச்சில் என்பது திரவம், ஆனால், எச்சில் என்பது திரவம் மட்டுமே அல்ல ” என்று கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வாய்வழி உயிரியலாளரான கை கார்பெண்டர்.

எச்சில் பற்களை பாதுகாக்கிறது, பேசுவதை எளிதாக்குகிறது, உணவுகள் வாய்க்குள் எளிதாக செல்லும் சூழலை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால், ஆய்வாளர்கள் தற்போது, எச்சில் ஒரு மத்தியஸ்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், உணவு எவ்வாறு வாய் வழியாக நகர்கிறது மற்றும் அது நம் உணர்வுகளை எவ்வாறு தூண்டுகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எச்சில் மற்றும் உணவுக்கு இடையிலான தொடர்புகள் நாம் சாப்பிட விரும்பும் உணவுகளை வடிவமைக்க உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

எச்சில் மிகவும் உப்பு தன்மை உடையது அல்ல. அதனால்தான், உருளைக்கிழங்கு சிப்ஸின் உப்புத்தன்மையை நம்மால் உணர முடிகிறது. நாம் நினைப்பதுபோன்று மிகவும் அமிலத்தன்மை வாய்ந்ததும் அல்ல, அதனால்தான் எலுமிச்சை சாறு நமக்கு உற்சாகம் அளிக்கிறது. எச்சிலின் நீர் மற்றும் புரதங்கள் ஒவ்வொரு வாய் உணவையும் உயவூட்டுகின்றன, மேலும் அதன் நொதிகளான அமிலேஸ் மற்றும் லிபேஸ் ஆகியவை செரிமான செயல்முறையைத் தொடங்குகின்றன.

 

இந்த ஈரமாக்கல், சுவையின் ரசாயன கூறுகளை அல்லது சுவைகளை எச்சிலில் கரைக்கிறது, இதனால் அவை எச்சில் மூலம் சுவை மொட்டுகளுக்கு பயணிக்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும் என்கிறார் சீனாவின் ஹாங்சோவில் உள்ள ஜங்க் குங்க்‌ஷங் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானி ஜியான்ஷே சென். “நாங்கள் உணவின் ருசி, சுவை , ரசாயன தகவல்களைக் கண்டறிகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

உணவு அறிவியல், உணவுப் பொருட்களின் இயற்பியல், உணவுக்கான உடலின் உடலியல் மற்றும் உளவியல் மறுமொழிகள் மற்றும் பலவற்றைப் பற்றி 2009 இல் "உணவு வாய்வழி செயலாக்கம்" என்ற சொல்லை அவர் 2022 ஆண்டு உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மதிப்பாய்வில் எழுதினார். மக்கள் சாப்பிடும்போது, அவர்கள் உணவை மட்டும் சாப்பிடுவது இல்லை. அதனுடன் சேர்ந்து எச்சிலையும் சாப்பிடுகின்றனர்.

எடுத்துகாட்டாக, ஒரு உணவில் உள்ள இனிப்பு அல்லது உவர்ப்பு சுவையுடைய மூலக்கூறு நமது சுவைமொட்டை சென்றடையும்போதுதான், நாம் அதன் சுவையை அறியமுடியும். அவ்வாறு மூலக்கூறு சென்றடைய வேண்டுமென்றால் அவை நாக்கின் மேல் இருக்கும் எச்சிலை கடந்து செல்ல வேண்டும்.

எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனினும் இதனை கை கார்பென்டர் மறுக்கிறார். நீண்ட நேரத்துக்கு முன்பே மூடி திறக்கப்பட்ட சோடா ஏன், புதிய சோடாவை விட இனிப்பாக இருக்கிறது என்று கேள்வி எழுப்கிறார். புதிய சோடாவில் கார்பன் டை ஆக்சைட் குமிழ்கள் வெடிப்பது ஒரு அமில தாக்கத்தை அளித்தது, இது இனிப்புத்தன்மையிலிருந்து மூளையை திசை திருப்புகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், கார்பென்டர் மற்றும் அவரது குழுவினர், ஆய்வகத்தில் செயற்கை வாயை உருவாக்கி இது தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது, சோடாவின் குமிழ்கள் நாக்குக்கும் அண்ணத்திற்கும் இடையில் பாய்வதை எச்சில் தடுப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த குமிழ்கள், சர்க்கரை நாக்கில் உள்ள சுவை ஏற்பிகளை அடைவதை தடுக்கின்றன என்று கார்பென்டர் கருதுகிறார்.

 

நமது சுவை பற்றிய பெரும்பாலான கருத்துக்கு காரணமாகும் உணவில் உள்ள நறுமணத்தையும் எச்சில் பாதிக்கலாம். நாம் சுவைக்கும்போது, உணவில் உள்ள சில சுவை மூலக்கூறுகள் எச்சிலில் கரைந்துபோகும். ஆனால், அவ்வாறு கரையாதவைகள் நம் நாசியை எட்டி உணர்வை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, வெவ்வேறு எச்சில் ஓட்ட விகிதங்கள் அல்லது வெவ்வேறு எச்சில் கலவை கொண்டவர்கள் - ஒரே உணவு அல்லது பானத்திலிருந்து வேறுபட்ட சுவை அனுபவங்களைக் கொண்டிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பழச்சுவை சேர்க்கப்பட்ட ஒயினை பருகிய10 நபர்களின் எச்சில் ஓட்ட விகிதங்களை ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் அளவெடுத்தனர். அதிக எச்சிலை சுரக்கக்கூடிய நபர்களுக்கு பிறரை விட அதன் சுவையை அதிகம் அறியமுடிந்தது. ஒருவேளை அவர்கள் அடிக்கடி விழுங்குவதால், அதன் நறுமணம் அவர்கள் நாசியை எட்டியிருக்கலாம்.

 

அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணரவும் எச்சில் உதவுகிறது. இரண்டு தயிர்கள் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரே அளவில் இருந்தாலும், குறைந்த கொழுப்பு உள்ளது வாயில் குறைவான ஈரப்பதத்துடன் இருப்பதை போன்று தோன்றும் என்கிறார் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானி அன்வேஷா சர்க்கார்.

“நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பது உணவின் தன்மையை அல்ல, ஆனால் உணவு [வாயின்] மேற்பரப்புடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை,” என்று சர்க்கார் கூறுகிறார். பால் கொழுப்பு எச்சிலுடன் இணைந்து துவர்ப்புத்தன்மையை மறைக்கக்கூடிய நீர்த்துளிகளின் அடுக்கை உருவாக்குகிறது. மேலும், தயிரின் சுவையையும் கூட்டுகிறது என்று அவர் கூறுகிறார்.

 

எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,FLAVIA MORLACHETTI/GETTY IMAGES

 

உணவு வாய் வழியாக நகரும்போது என்ன நடக்கிறது மற்றும் அது உண்ணும் உணர்ச்சி அனுபவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உருவகப்படுத்துவதற்காக செயற்கை எச்சிலில் நனையவைக்கப்பட்ட இயந்திர நாக்கை தனது ஆராய்ச்சிக்கு சர்க்கார் பயன்படுத்தினார். குறைந்த கொழுப்புள்ள ஒரு ஸ்மூத்தி, முதலில் பார்க்கும்போது கிரீம்தன்மையாக தோன்றலாம். ஆனால், எச்சிலுடன் கலக்கும்போது, கொழுப்பு வழங்கும் தன்மையை அது இழக்கிறது.

எச்சில், உணவு மற்றும் வாய் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த தொடர்புகளை முழுமையாக புரிந்துகொள்வது - மற்றும் தகவல் மூளைக்கு எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதை அறிந்துகொள்வது ஆரோக்கியமான உணவுகளை வடிவமைக்க வழிவகுக்கும் என்று சர்க்கார் கூறுகிறார்.

 

ஆனால் அத்தகைய உணவுகளை உருவாக்குவதற்கு இந்த இடைவினைகளை நன்கு புரிந்துகொள்வது எளிதானது அல்ல, ஏனெனில் எச்சில் மற்றும் உணர்தல் நாள் முழுவதும் மற்றும் தனிநபர்களிடையே மாறுபடும். பொதுவாகவே, எச்சில் காலையில் மெதுவாகவும், பிற்பகலில் வேகமாகவும் பாயும். மேலும், தனி நபர்களின் எச்சில் கூறுகளும் நாள் முழுவதும் மாறுபடும்.

இதை ஆய்வு செய்வதற்காக, போர்ச்சுகலில் உள்ள எவோரா பல்கலைக்கழகத்தின் வாய்வழி உயிர்வேதியியல் நிபுணர் எல்சா லாமி, சில நபர்களை கண்களை கட்டிக்கொண்டு ரொட்டியின் சில துண்டுகளை சில நிமிடங்களுக்கு நுகரும்படி செய்தார். அவர்களின் எச்சிலில் மாற்றம் ஏற்படுகிறதா என்று கண்காணித்தார்.

சுவை உணர்திறன் உடன் தொடர்புடைய அமிலேஸ்கள் மற்றும் சிஸ்டாடின்கள் என்று அழைக்கப்படும் இரண்டு வகை புரதங்கள், ரொட்டியின் சுவையை நுகர்ந்த பின்னர் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர். வென்னிலா, எலுமிச்சை என பல பொருட்களை வைத்து அவர்கள் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு முறையும், எச்சிலில் உள்ள புரதத்தின் அளவு மாறுபடுவதை அவர்கள் கண்டறிந்தனர். இது என்ன செயல்பாட்டைச் செய்யக்கூடும் என்பதை கண்டறியும் ஆய்வில் அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,WESTEND61/GETTY IMAGES

எச்சிலின் ஒப்பனை நபருக்கு நபர் மாறுபடும் - அது ஒரு நபரின் கடந்தகால உணவுத் தேர்வுகளைப் பொறுத்தது என்று பஃபலோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் நடத்தை நரம்பியல் விஞ்ஞானி ஆன்-மேரி டோரெக்ரோசா கூறுகிறார். டோரெக்ரோசா எலிகளுக்கு கசப்பான சுவை சேர்க்கும் உணவுகளை அளித்தபோது, எச்சில் புரதங்களில் குறிப்பிடத்தக்க பல வகை அதிகரிப்புகளைக் கண்டார். அந்த மாற்றங்கள் நடந்ததால், எலிகள் தங்கள் உணவில் உள்ள கசப்பை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். "இதைப் பற்றி நாங்கள் நினைக்கும் விதம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் ப்ரோக்கோலியை சாப்பிட்டால், ப்ரோக்கோலி உங்களுக்கு மோசமாக சுவைக்காது" என்கிறார் டோரெக்ரோஸ்ஸா.

 

மற்றொரு பரிசோதனையில், கசப்பான உணவுகளை உண்ணும் பழக்கமுள்ள எலிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட எச்சிலை, அப்பழக்கம் இல்லாத எலிகளின் வாயில் மாற்றுவதற்கு டோரெக்ரோசா வடிகுழாய்களைப் பயன்படுத்தினார். கசப்பு சுவை தொடர்பான அனுபவம் இல்லாத எலிகள் அவற்றின் வெளிப்பாடு இல்லாவிட்டாலும், கசப்பான உணவை மிகவும் சகித்துக்கொண்டன. ஆனால், வடிகுழாய்கள் வழியாக எச்சில் வழங்கப்படாத எலிகள், தொடர்ந்து கசப்பு சுவையுடைய உணவுகளை தவிர்த்தன. இந்த சகிப்புத்தன்மைக்கு எந்த புரதங்கள் காரணம் என்பதை அவரும் அவரது குழுவும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்கவில்லை என்று டோரெக்ரோசா கூறுகிறார்.

 

நிச்சயம், எலிகள் மனிதர்கள் அல்ல- ஆனால், மனிதர்களின் சுவை உணர்வுகளிலும் எச்சில் இத்தகைய செயல்களை செய்கிறது என்பதற்கான குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். “மனித உணவுகள் மற்றும் அனுபவங்களில் பல விஷயங்கள் உள்ளன, அவை நமது அன்றாட அனுபவத்தை பாதிக்கின்றன, குறிப்பாக உணவுகள் மற்றும் சுவைகளுடன், ஆனால் எலிகள் இவற்றை சமாளிக்க வேண்டியது இல்லை” என்கிறார் சுவை மற்றும் அதன் செயல்பாடுகளை படிக்கும் புர்டூ பல்கலைக்கழகத்தின் உணர்வு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வாளர் லிசா டேவிஸ்.

ஆனால் இந்த வடிவங்களை கண்டறிந்து புரிந்து கொள்ள முடிந்தால், சாத்தியம் அதிகம் என்கிறார் லாமி. “குழந்தைகளின் எச்சிலில் ஏற்படும் மாற்றங்களை ஊக்குவிக்கும் ஒரு சேர்க்கையை நீங்கள் எப்படியாவது குழந்தைகளுக்கு வழங்க முடிந்தால், கசப்பான காய்கறியுடன் அவர்களின் அனுபவத்தை மிகவும் சுவையாக மாற்றினால், அது ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும். அநேகமாக அவர்கள் அந்த காய்கறியுடன் ஒன்றிபோவார்கள்” என்று அவர் கூறுகிறார்.

இன்னும் விரிவாக, எச்சில் சுவையை எவ்வாறு பாதிக்கிறது - மற்றும் உணவு எச்சிலின் கலவையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குவது மற்றும் புறக்கணிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி உணவு விருப்பங்களைத் தூண்டுவதற்கு புதிய வழிகளைத் திறக்கலாம். “உணவுகளை வெறுப்பவர்களை அந்த உணவுகளை விரும்புவோராக மாற்ற முடியுமா? என்பதை அறிய தான் நான் ஆவலுடன் உள்ளேன்” என்று டோரெக்ரோசா கூறுகிறார்.

இந்தக் கட்டுரை முதலில் நோவபிள் இதழில் வெளிவந்தது மற்றும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் மீண்டும் வெளியிடப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c51l8x0wgv0o

அறம் வெல்லும்..?

2 months ago
அறம் வெல்லும்..?
 
'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு.
'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நிறைவேற்றும் கருவிகளாக மக்களே (சமூகமே) விளங்குகின்றனர்.
'BigBOSS' இல் விக்ரமன் தோற்றதால் 'அறம்' தோற்றதா? அல்லது தோற்கடிக்கப்பட்டதா..? என்று விவாதிப்பதற்கான பதிவு இல்லை இது. அல்லது விக்கிரமன் அறத்தின் காவலனா? இல்லையா ? என்று பகுப்பாய்வதும் இப்பதிவின் நோக்கமல்ல.
ஆனால், ‘அறம்’ மக்கள் பலத்தால் தோற்கடிக்கப்படுகிறது என்பதே சமகால பொது விதி. இந்நிலையில், ‘அறம்’ பற்றிய சொல்லாடலின் குறியீட்டு அடையாளமாக ‘விக்கிரமன்’ பெயர் புழக்கத்தில் உள்ளதால், சமூகப் பிறழ்வுகள் குறித்து மக்கள் மனங்களில் ஒரு சிந்தனைத் தூண்டலைச் செய்வதற்கான தருணமாக இது அமையலாம் என்ற ஒரு புள்ளியான நம்பிக்கையின் வெளிப்பாடே இப்பதிவு.
கணிசமானவர்கள், BigBOSS என்ற கள்ளுக்கொட்டிலுக்குள் கூடியிருந்து கள்ளடிச்ச போதையில், 'ஊடக அறம்' எது? என்று வகுப்பெடுத்துக்கொண்டு இருப்பீர்கள். ஆகவே, நானும் கள்ளுக்கொட்டிலுக்கு வெளியில் நின்று கள்ளடிச்சுப்போட்டு வந்திருக்கிறன். போதை உள்ளவர்களோடு போதையில் தானே உரையாடவேண்டும்.
அறத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் கொண்டு செயற்படவேண்டிய வெகுஜன ஊடகங்கள் (Mass Media), மக்களை எப்பொழுதும் ஒரு போதை மயக்கத்தில் வைத்துக்கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாக உள்ளன. இவ்வித்தையில் தமிழக ஊடகங்களைப் பொறுத்தமட்டில் நான் முந்தி.. நீ முந்தி.. என்று ஒரு பிரகடனப்படுத்தப்படாத ஊடகப் போர் நடை பெற்றுவருகிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால், “…அதி உச்சமான ரசனை மிக்கவர்கள் ஈழத்தமிழர்கள், எச்சங்களுக்கு எல்லாம் கைதட்டமாட்டார்கள்..” என்ற ஒரு காலத்து நிலை மாற்றம் கண்டு, இன்று எச்சங்களை மட்டுமே தலையில் தூக்கிக் கொண்டாடும் இனமாக ஈழத்தமிழினமும் மாறியிருக்கிறது.
எனது கணிப்புச் சரி என்றால், அடுத்த நிகழ்ச்சிக்கு (Season க்கு) கனடாவில் இருந்தும் ஒரு போட்டியாளர் உள்வாங்கப்படலாம். நாமும் Facebook ஐக் கதறவிட்டு வாக்கு வேட்டையில் இறங்கக்கூடும். அதன் பின்னர் Pearson விமான நிலையத்தில் மாலை, பொன்னாடை, தாரை-தப்பட்டைகளோடு அப்போட்டியாளரை விழா எடுத்து வரவேற்போம்.
கழுதையாக இருந்தாலும், தமிழகத் தொலைக்காட்சியின் வாசம் பட்டால் குதிரையாகிவிடும் என்ற நம்மவர்களின் ‘அக்கரை’ மோகம், நம்மத்தியில் உள்ள திறமையாளர்களை தரக்குறைவாக இழிவு செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. எனினும், திறமையாளர்களுக்கு பெரிய தளங்களில் அங்கீகாரம் கிடைப்பதை இப்பதிவு குறை கூறவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மண்ணில் அங்கீகரிக்கப்பட்டாலே, நாம் நம்மவர்களின் திறமைகளை அங்கீகரிப்போம் என்ற நிலையைத்தான் குறைகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், கேளிக்கை விநோதங்களின் மைய்யமாக, மக்களை வசியம் செய்யும் பெருச்சாளிகளாக, ஊடகங்கள் பெருவளர்ச்சி காண்பதில் மக்களே பங்காளிகளாக விளங்குகின்றனர் என்பதை மக்கள் உணர்வதில்லை. எனவே, விடுப்பு, விறுவிறுப்பு, விசித்திரம் என்று நாடுகிற மக்கள் கூட்டத்துக்கு தேவைப்படும் தீனியை அள்ளிக் கொடுக்கும் ஊட்டிகளாக, இவ்வூடகங்கள் விஸ்வரூபம் பெற்றுள்ளன. மாறாக சமூகத்துக்கு உண்மையைச் சொல்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற ஊடகங்களையும் / ஊடகர்களையும் புறக்கணிக்கும் பழக்கத்தையும் இது போன்ற கேளிக்கை மைய்யங்களே உருவாக்கி வைத்துள்ளன.
ஆனால், சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க விரும்பி ஊடகக் கற்கையை பயின்றும், பயிற்சியைப் பெற்றும், அதற்குரிய மதிப்பும் மரியாதையும், வெகுமதியும் கிடைக்காமல், அரச - தனியார் நிறுவனங்களில் கிடைத்த தொழிலைச்செய்கிற வழக்கமும் பழக்கமாகிவிட்டது.
ஒரு நுகர்வோனின் பலவீனமே, வியாபாரியின் பெரும்பலம். இந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சந்தைப்படுத்தலின் மூலோபாயம் (Marketing Strategy) வகுக்கப்படுகிறது. அதனை தமிழகத்து தொலைக்காட்சிகள் செவ்வனே செய்து வருகின்றன. ஆனால், பார்வையாளர்களும், பங்காளிகளும் இங்கு மக்களே என்பதே அடிப்படை. தாம் நிர்ணயம் செய்கிற இலக்கை, தமக்கு சேதாரம் இல்லாமல், மக்கள் எனும் கருவிக்கொண்டு இயக்குபவனே இங்கு ஆட்ட நாயகன். இது தெரியாமல் தன் பணத்தை, நேரத்தை, வாழ்வை விரயம் செய்கிறவனே ரசிகன் என்ற பங்காளி.
உண்மையில், இங்கே முற்றுமுழுதாகப் பாதிக்கபடுகிற (Vulnerable) தரப்பு, பங்காளியாகவுள்ள பொதுமகனே. ஆனால், அதனை அவன் உணர்வதில்லை. காரணம், ஒரு சாமானியப் பொதுமகனுக்கு பொழுதுபோக்கே முக்கியம். அவனுடைய அன்றாடத் தேவைகளின் பட்டியல் என்பது கேளிக்கை, வேடிக்கை, விடுப்பு என்ற ஆதாயங்களைத் தேடியே அலைகிறது. இதற்கு படித்தவர் /பாமரர் என்ற வேறுபாடு கிடையாது.
எனவே, இவ்வாறான மனோநிலையில் மக்களை வைத்துக்கொண்டாலே போதும், வணிக மூலோபாயமும், அரசியல் மூலோபாயமும் கட்டுக்குள் வந்துவிடும். இது போன்ற பிறழ்வுகள் தமிழகம்/ இந்தியாவில் நெடுங்காலப் பழக்கம் என்றாலும், அண்மைக்காலமாக நம்மவர்கள் மத்தியில் புகுத்தப்பட்டுள்ள சினிமா/ சின்னத்திரை / விடுப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் திணிப்பும், அவை நம் சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கத்தின் அளவும், ஒரு பெரும் சமூகக் கட்டுமானச் சீரழிவையே ஏற்படுத்திவருகின்றன.
இன்று நம்மவர்கள் மத்தியில் ஊடகம் தொடர்பான புரிதலும், அது சார்ந்த செயல்களும் மலினப்பட்டுவருகின்றன. அதன் அடுத்த பரிணாமமாகவே சமகால சமூக ஊடகங்களின் பெருக்கமும், அவை தாங்கி வருகின்ற விடுப்புகளும் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அவற்றின் அடிப்படை என்பது, மக்களை வசியம் செய்யும் நோக்கமும். அதனூடாகப் பணம் ஈட்டும் வெறியும் கொண்ட செயல்களாக அமைந்துள்ளன. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)
சமூக ஒன்று கூடல்களே இவ்வூடகங்களின் அதிகபட்ச செய்தி மைய்யம் (coverage). கனடாவில் 4 லட்சம் பேர் இருப்பதாக மார்தட்டுகிற நம்மவர் நிகழ்வுகளின் பதிவுகளில் 40 பிரபல தம்பதிகளும்.. 40 வணிகர்களும்... 40 தமிழ் பெண்பிள்ளைகளும் மட்டுமே திரும்பத்திரும்ப 360 கோணத்தில் பதியப்படுகின்றனர் (படம் எடுக்கப்படுகின்றனர்).
உதாரணமாக கனடாவிலும் பெருகியுள்ள சமூக ஊடகங்களில் கணிசமானவை சமூகப்பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேரலை செய்வதிலும், ஒளிப்படம் எடுப்பதிலும், செய்தியாக்குவதிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அவர்களுக்குள் ஒரு நீயா? நானா? போட்டியும் நடைபெற்று வருகிறது. அத்தோடு கலியாணம், செத்தவீடு என்று முன்பந்தியில் அமர்ந்து நேரலை செய்யும் அளவுக்கு ஊடகங்கள் மலினப்பட்டுள்ளன.
ஆனால், இவ்வாறான ஊடகப் பிறழ்வுகள் தொடர்பிலோ.. ஊடக அறம் பிழைத்ததாகவோ.. யாரும் கவலையோ.. கரிசனையோ ..கொள்ளவில்லை. எனவே, இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.. அதனை நாம் கொடுக்கிறோம் என்று குறித்த ஊடகங்களும்.. நியாயம் சொல்ல வசதியாகிவிட்டது.
மறுபுறத்தில் தமிழர்களுக்கு உரிமையும், இனப்படுகொலைக்கு நீதியும் வேண்டி நின்ற அமைப்புக்கள், GTA நகரங்களை குத்தகை எடுத்து விழா நடத்துகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தமது பலத்தை குறித்த அமைப்புகள் பறைசாற்றுகின்றன.
தமிழ் இருக்கைக்காக 3 மில்லையன் டொலர்களை திரட்டும் திறன்கொண்ட சமூகத்தால், போரால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் பேருக்கு தீனிபோட வழிபிறக்கவில்லை. திருவிழாவும், தெருவிழாவும் செய்து ஒரு வணிகமயப்பட்ட கட்டமைப்புக்களாக உருமாறியுள்ள அமைப்புக்களின் அறப்பிறழ்வுகள் குறித்து யாருக்கும் கவலை இல்லை.
காரணம், நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதற்கான மேடைகள் வழங்கப்படுவதோடு, உங்கள் கவனம் அவர்கள் மீது திரும்பாமல் வேடிக்கையும் காண்பிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்து படம் எடுக்க கிடைத்த வாய்ப்புக்காக, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விளம்பர முகவர்களாக சமூக ஊடகர்கள் தமது ஒளிப்படக்கருவிகளை காணிக்கையாக்கிவிட்டனர்.
ஆக, நம்மைச் சுற்றி எத்தனை அறப்பிறழ்வுகள் உண்டு?. அத்தனை அறப்பிறழ்வுகளின் பின்னால் பங்காளிகளாக யார் உண்டு.? என்ற கேள்விகளை நம் சமூகம் சிந்திக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் போல, சுயம் இழந்த சமூகமாக நாம் மாறிவருவது குறித்து நம்மவர்கள் வாய் திறப்பதில்லை. அப்படிக் குரல் கொடுப்போருக்குப் பக்க பலமாகவும் நிற்பதில்லை.
ஆக, இத்தனை அறப்பிறழ்வுகளையும் கண்டுகொள்ளாத சமூகம், கூத்தாடிகள் கூடாரத்தில் அநீதி நடப்பதாக முணுமுணுப்பது வேடிக்கையானது.
எனவே, BigBoss விடயத்தில் தோற்றது விக்ரமன் என்றாலும், வென்றது விஜய் தொலைக்காட்சியே. இனிமேல், தமது நிகழ்ச்சிகளில், செயல்களில், எவ்வித அறத்தையும் பேணவேண்டிய அவசியம் இல்லை என்பதை, மக்களே சொன்னார்கள் அல்லது சொன்னதாகக் காட்டினார்கள் என்ற நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் இனி அனைத்து ஊடகங்கள் மத்தியில் வீரியம் பெறும். சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டு பயணிக்கும். சமூகம் வெறும் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடு என்பதை ஊடகங்கள் உறுதியாகப் புரிந்துகொள்ளும். ஆனால், வணிகமும், வணிகனும் வெல்வர்.
எனவே, அறம் தோற்பதில்லை... தோற்கடிக்கப்படுகிறது.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சமூகத்தால்...
(இப்பதிவை இறுதிவரை பொறுமையாகப் படித்தோருக்கு நன்றி🙏. ஏனையோர் அடுத்த விடுப்பைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..🥲)
Checked
Sat, 04/01/2023 - 14:46
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed