சமூகவலை உலகம்

உயரத்துக்கு ஏற்ற வீடு; உயர்ந்து நிற்கும் காதல் - நெகிழ வைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

3 months 1 week ago

இந்த மினி தம்பதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மண்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பிரபலமான இந்த ஜோடி, தங்கள் உயரத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டியுள்ளனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்னைகள் குறித்தும் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க விரும்புகிறார்கள்.

#Couple #MiniCouple

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?

3 months 1 week ago

540512615_24570246982571410_179226218314

தேங்காய்க்கு Coconutனு ஆங்கிலத்தில் பேருன்னு எல்லாருக்கும் தெரியும். அது ஏன்னு தெரியுமா?
o 0 o
Coco என்றால் ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் தலை, மண்டை என்று பொருள்.
தேங்காயைப் பார்த்தால் மூன்று புள்ளிகளுடன் ஒரு முகத்தைப்போலத் தோன்றியதால், போர்த்துக்கீசிய நாட்டுப்புற இலக்கியங்களில் வரும் பேயையும் குறிக்கும் கோகோ என்ற சொல்லால் கோகோ நட் எனப் பெயர் வைத்தார்கள். அதுதான் coconut ஆனது.
உலகில் இரண்டு வகை தேங்காய்கள் உள்ளன. ஒன்று இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நிலப்பகுதியில் உருவான தேங்காய். மற்றொன்று பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பகுதியைச் சேர்ந்த தேங்காய். எந்தெந்த நாடுகளில் தென்னை மரங்கள் உள்ளன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். (தெரியாவிட்டால் கூகுளில் பார்க்கவும்.)
இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்துதான் உலகின இதர பகுதிகளுக்கு தேங்காய் பரவியது என்று ஒரு கருத்து நிலவியது. கடல் நீரோட்டத்தின் மூலமும், பயணிகள் மூலமும் பல நாடுகளுக்கும் பரவியது உண்மைதான். ஆனால் இந்திய-பசிபிக் கடலோரத் தேங்காய்களின் டிஎன்ஏவைப் பரிசோதித்தபோது, இரண்டும் வேறு வேறு எனத் தெரிய வந்துள்ளதாம். (இரண்டுக்கும் மத்தியில் உள்ள மடகாஸ்கரில் இரண்டின் கலவையும் உண்டாம்!) ஆக, ஒரே சமயத்தில் உலகில் பல பகுதிகளிலும் உருவாகி வளர்ந்தது தென்னை.
தென்னையின் பயன் யாருக்கும் தெரியாதது அல்ல. தென்னையிளங் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது என்று டிஎம்எஸ் பாடியது முதல், கேஸ்ட் அவே திரைப்படத்தில் தனிமையில் வாடும் நாயகனின் தாகம் தீர்ப்பது வரை தென்னையின் பயன் பரந்துபட்டது. 🙂

Shahjahan R

விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்

3 months 2 weeks ago

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடல் தகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

கட்டுரை தகவல்

  • சம்பத் திஸாநாயக்க & ஷெர்லி உபுல் குமார, கிளிநொச்சியில் இருந்து

  • பிபிசி சிங்கள சேவை

  • 3 செப்டெம்பர் 2025, 01:43 GMT

    புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

''பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் உயிருடன் அல்லவா கையளித்தோம். சடலத்தைக் கொடுக்கவில்லையே'' என கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.

செல்வதுரை கோபிநாத் என்ற அவரது மகன், பள்ளி ஆசிரியராக இருந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றினார்.

சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தருணத்தில் தனது மகனை ராணுவத்திடம் ஒப்படைத்த போதிலும், அவருக்கு என்ன நடந்தேறியது என்பது தொடர்பில் எந்தவிதத் தகவலும் இல்லை என கோபிநாத்தின் தாய் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் இந்தச் சம்பவமானது, நாட்டில் தீர்க்கப்படாதுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பட்டியலில் மற்றுமொரு சம்பவமாகவும் இருக்கக்கூடும்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளின் பிரகாரம், உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அதிகளவானோர் காணாமல் போன நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இராக் முதல் இடத்தில் உள்ளது.

கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் வசித்து வந்த செல்வதுரை கோபிநாத், தனது 27வது வயதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, அவரது தந்தையின் கூற்றுப்படி, கோபிநாத் விருப்பமின்றித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்திகளை வழங்கச் சென்றார்.

மா, வாழை, தென்னை போன்ற மரங்கள் நிரம்பிய தோட்டத்திற்கு மத்தியில் மிகவும் அமைதியான சூழலில் அவரது வீடு அமைந்துள்ளது. நாங்கள் அவரது வீட்டை நெருங்கிய சந்தர்ப்பத்தில், அவரது தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி வரவேற்றார்.

அதன் பின்னர், அவரது கணவர் சுப்ரமணியம் செல்வதுரை எங்களிடம் பேசத் தொடங்கினார். 73 வயதான அவருக்கு, கடந்த ஒரு வார காலமாக காது கேட்கும் திறன் குறைந்துள்ளது.

முச்சக்கரவண்டி (ஆட்டோ) ரிப்பேர் வேலைகளைச் செய்தல், வாகனங்களின் ஆசனங்களுக்கு மேலுறை தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

''எமது மகன் செல்வதுரை கோபிநாத் ஒரு ஆசிரியர். அக்கராயன் மகா வித்தியாலயத்தில் அவர் ஆசிரியராக வேலை செய்தார். அவர் ஆங்கில ஆசிரியர். அவருக்கு ஆங்கலம் நன்றாகத் தெரியும்.''

''நிதர்சனம் என்ற விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேனல் ஒன்று இருந்தது. எனது மகன் 1:15 மணிக்கு விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தியை வாசிக்கச் சொன்னார்கள். செய்தியை வாசிக்க வேண்டும். 10,000 ரூபா சம்பளம் கொடுத்தார்கள்'' என சுப்ரமணியம் செல்வதுரை தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் செல்வதுரை சொல்லும் விதத்தில், தனது இரண்டாவது மகனான கோபிநாத், விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகச் சென்றமையானது, தனது சுய விருப்பத்திற்கன்றி, வேறு மாற்று வழி இல்லாமையே அவர் அங்கு சென்றார் எனப் புரிகிறது.

ஆங்கில செய்தி வாசிப்பாளராகப் பணியாற்ற வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவிக்காத பட்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காகத் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற அச்சத்திலேயே அவர் அதற்கு விருப்பம் தெரிவித்து இருந்ததாக கோபிநாத்தின் பெற்றோர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தனர்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, தாயார் இன்னும் கோபிநாத்தின் டூத்பிரஷை பத்திரமாக வைத்துள்ளார்.

''என்னை இவ்வாறு அழைக்கின்றார்கள் என்ன சொல்வது என்று எனது மகன் கேட்டார். எங்களுக்கு இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதற்கான வழி இல்லை. அதனால், செய்தி வாசிக்குமாறு நான் கூறினேன். அப்படி இல்லையெனில், விடுதலைப் புலிகள் அழைத்து செல்வார்கள்தானே!''

"கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே அவர் ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் மாவீரர் தினத்திற்கான நேரடி ஒளிபரப்பிற்காக முதலில் அவரை அழைத்துச் சென்றார்கள். அவர் செய்தியை மொழிபெயர்ப்பு செய்வார். வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு இந்த இடத்திலிருந்தே அவரை அழைத்து சென்றார்கள்" என்று விவரித்தார் அவரது தந்தை.

"வாகனத்தில் இருவர் வருகை தந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரியவர்கள் என நினைக்கின்றேன். பிரபாகரன் ஐயாவின் நேரடி ஒளிபரப்பை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. போகுமாறு கூறினோம்.''

''பின்னர் 9 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்து இறக்கி விட்டார்கள். அவர் பள்ளிக்குச் சென்று வருவார். அன்றுதான் இது ஆரம்பமானது. நீங்கள் நன்றாகச் செய்தி வாசிக்கின்றீர்கள் என மக்கள் சொன்னார்கள். ஆளுமை நன்றாக இருக்கின்றது என்றார்கள். அதனால் நீங்களே செய்தி வாசிக்க வேண்டும் என்றார்கள்.

அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், எதுவும் செய்ய முடியாது. செல்ல வேண்டும். அழைப்பது பெரியவர்கள், அவர்களுடன் எம்மால் மோத முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதால் போகச் சென்னோம். அதன் பின்னர் 9:15 மணி செய்தியை வாசித்தார். ஒன்பது முப்பது அல்லது 10 மணி போல வீட்டிற்கு வருவார். அவர் வரும் வரை நாங்கள் வீதியைப் பார்த்துக் கொண்டிருப்போம்.''

கடந்த 2009-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ''குண்டுகள் விழ ஆரம்பித்தன. நாங்கள் முள்ளிவாய்க்கால் - வள்ளிபுரம் கிராமத்திற்குச் சென்றோம்.''

கோபிநாத்திற்கு மூத்த மற்றும் இளைய சகோரர்கள் இருக்கின்றார்கள். யுத்தம் கடுமையானதை அடுத்து, சுப்ரமணியம் செல்வதுரை தனது குடும்பத்தினருடன் கிளிநொச்சியை விட்டு வெளியேறி, முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுபட்டு, இந்த குடும்பத்தினர் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வந்துள்ளனர்.

''விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பித்து ராணுவத்திடம் சென்றோம். அவர்கள் எங்களை ஓர் இடத்தில் தங்கச் சொன்னார்கள். அதன் பின்னர் பிரிந்து இருக்குமாறு சொன்னார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நாங்கள் அழுதோம். நாங்கள் அழுது கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ராணுவத்தினர் வந்து மகன்கள் இருந்தால் வருமாறு கூறினார்கள். ஏன் வரச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னால் அதை விவரிக்க முடியவில்லை, கவலையாக இருக்கின்றது'' என செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி கூறினார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, "எங்கள் மகனுக்கு என்ன ஆனது எனச் சொல்லுங்கள். நாங்கள் அவனை உயிருடன்தானே கொடுத்தோம், சடலமாக அல்லவே!" என்று அவர் சற்று சீற்றத்துடன் கேள்வியெழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக வேலை செய்தமையால், எனது மகனை பலரும் அடையாளம் கண்டு கொண்டிருந்தனர் என்பதாலேயே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம் என கோபிநாத்தின் தந்தை தெரிவிக்கின்றார்.

''நான் தப்பு செய்யவில்லை. அம்மா எந்தவித பொய்யையும் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்' என்று அவர் எந்நேரமும் சொன்னார்'' என அவரின் தாய் கூறுகின்றார்.

''மகன் பள்ளியில் தங்கியிருப்பார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வருவார். வெள்ளிக்கிழமை வருகை தந்து மாலை 6 மணியளவில் செய்தி வாசிப்பதற்காகச் செல்வார். இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வருவார். வாரத்தில் இரண்டு தினங்கள் மாத்திரமே செய்தி வாசிப்பதற்காக அவர் செல்வார்.''

''அம்மா என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது என அவர் சொன்னார். அப்பாவுக்கு கண் தெரியவில்லை என அவர்கள் வந்தால் கூறுங்கள். அதையும் செய்து, இதையும் செய்ய முடியாது எனச் சொல்லுங்கள். நாங்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு தொகையை அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்லுங்கள். எமது சம்பளத்தில் ஒரு தொகையைத் தருகின்றேன். வேறு ஒருவரை எடுக்குமாறு கூறுங்கள்'' என்று அவர் கூறியதாகவும் தாயார் கூறினார்.

அதோடு, ''முள்ளிவாய்க்கால் செல்லும் வரை அவர் எம்முடனேயே இருந்தார். எமது மகன் தவறு செய்யவில்லை என பேருந்தில் ஏறும்போது சொன்னேன். மகனும் தகவல்களைச் சொன்னார்.''

"எனது மகன் தவறு செய்யவில்லை என ராணுவத்திடம் நான் சொன்னேன்.''

''இல்லை, இல்லை. அவரிடம் தகவல்களைப் பெற்றதன் பின்னர் அனுப்புவோம் என அவர்கள் கூறினார்கள்.'' 'இவரிடம் தகவல்களை பெற வேண்டும் என மற்றுமொருவர் கூறினார்.''

''இல்லை, இல்லை அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்து கையளிப்போம். எதுவும் செய்ய மாட்டோம். பயப்பட வேண்டாம். உங்கள் மகனை நாங்கள் அனுப்புவோம் என்று சொன்னார்கள்''

''அதன் பின்னர், "அம்மா அழுக வேண்டாம். அடையாள அட்டையைத் தாருங்கள். சென்று வருகின்றேன் அம்மா. அழுக வேண்டாம் அம்மா' என்று எனது மகன் சொன்னார். பேருந்தில் ஏறும்போதும் சென்று வருகின்றேன் என்றார்.''

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

படக்குறிப்பு, கோபிநாத்தின் தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷினி, எங்களை வீட்டிலுள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, கோபிநாத் பயன்படுத்திய பொருட்களைக் காட்டினார்.

தனது மனதில் ஏதோ ஒருவித சந்தேகத்தில் வாழ்கின்ற போதிலும், தனது மகன் இன்னும் வாழ்கின்றார் என்ற பெரும் நம்பிக்கையுடன் வாழ்வதாகவே பத்மா பிரியதர்ஷனி. ''மகன் இருக்கின்றார் என்று நம்புகின்றேன். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.''

ராணுவம், போலீஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில் சோர்வடைந்த இந்தப் பெற்றோர், ஜோதிடம் பார்க்கும் இடங்களுக்கும் சென்றுள்ளனர். இந்தியாவில் உள்ள ஜோதிடம் சொல்லும் கோவிலுக்குக் கூட சென்றுள்ளனர்.

அவர்கள் மாத்திரமன்றி, அவர்கள் தேடிச் சென்ற ஜோதிடர்கள்கூட, தனது மகன் உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ள போதிலும், அவர் தொடர்பில் இன்று வரை எந்தவிதத் தகவலும் இல்லை என சுப்ரமணியம் செல்வதுரை கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

கோபிநாத்தின் தாயான பத்மா பிரியதர்ஷனி எம்மை வீட்டின் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று, தனது மகனின் பொருட்களைக் காண்பித்தார்.

''எனது தங்க நகைகளை விட்டுவிட்டு, எனது மகனின் பொருட்களை மீண்டும் எடுத்து வந்தேன். இது அவர் பயன்படுத்திய பொருட்கள்'' கூறியவாறு பெட்டியொன்றைத் திறந்து எமக்குக் காண்பித்தார்.

வலுவான உடல் கட்டமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட பழைய படமொன்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்ட அவரது தாய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஏனைய இளைஞர், யுவதிகள் தொடர்பிலும் கவலை தெரிவித்தார்.

''படலந்த தொடர்பில் சொல்லும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது. எமது பிள்ளைகளுக்கும் ஏதேனும் நடந்தேறியிருக்கும் என நினைத்துக் கவலையாக இருக்கின்றது.''

''யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் எமது பிள்ளைகளை உயிருடன் கையளித்திருந்தோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரே நாங்கள் அவர்களைக் கையளித்திருந்தோம். அவர்கள் என்ன கூறி அழைத்துச் சென்றார்கள்? தகவல்களைப் பெற்று மீண்டும் அனுப்புவதாகச் சொன்னார்கள் அல்லவா? அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். எமது பணமோ காணியோ ஒன்றுமே வேண்டாம். பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள். உயிருடன் கையளித்தோம். சடலத்தைக் கையளிக்கவில்லை அல்லவா!'' என உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசினார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

'கவலையில் இருக்கும் தந்தை'

வேறொரு முகாமில் இருந்த தனது நெருங்கியவர்கள், தனது மகனைக் கண்டுள்ளதாகக் கூறுகிறார் கவலையில் இருக்கும் தந்தை.

''ராமநாதன் என்ற பெயரில் முகாமொன்று இருந்தது. பெரும்பாலானோருக்கு எம்மை நன்றாகவே தெரியும் அல்லவா? உங்களின் மகனைக் கண்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். நன்றாக இருக்கின்றார். தண்ணீர் எடுக்கும் குழாய் அருகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கறுப்பு நிற கால் சட்டை அணிந்திருந்தார். நான்கு பேர் இருந்தார்கள். கையில் காயம் இருந்தது எனக் கூறினார்கள். சிறு குழந்தை ஒன்றும் அதேபோலக் கூறியது. நான் மாமாவை கண்டேன் என்று சொன்னது'' என்கிறார் அவர்.

அதன் பின்னர், இந்தக் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாமில், வெளியில் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டதை அடுத்து, உறவினர்களைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரத்தை பெற்று கோபிநாத்தின் தந்தை முகாமை விட்டு வெளியில் சென்றிருந்ததாக அவரது தந்தை கூறினார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், தான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், வவுனியா - மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் வெள்ளை நிற வேன் ஒன்றில் நான்கு பேருடன் தனது மகன் நின்று கொண்டிருந்ததை அவதானித்ததாக சுப்ரமணியம் செல்வதுரை தெரிவிக்கின்றார்.

அவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என சுப்ரமணியம் செல்வதுரை கூறிய போதிலும், அதைச் சுயாதீனமாக எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

பேருந்தில் இருந்து இறங்கி அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அந்த இடத்தில் இருந்து குறித்த வேன் வெளியேறியிருந்ததாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

''அநுராதபுரம் சிறைச்சாலையில் கோபிநாத் என்ற நபர் ஒருவர் இருக்கின்றார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. நான் அங்கு சென்றேன். அவர் இல்லை. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர்'' என கோபிநாத்தின் தந்தை கூறினார்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

'ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும்'

''மகன் இருக்கின்றார் என்று அனைவரும் கூறுகின்றார்கள்''

''மகன் வருவார் என்று உயிர் இருக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். மகனின் எந்தவொரு பொருளையும் அழிக்கவில்லை. நான் அனைத்து இடங்களுக்கும் அதை எடுத்துச் சென்று, இங்கு கொண்டு வந்துள்ளேன். எனது தங்க நகைகளையும் கைவிட்டுவிட்டேன். மகனின் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகளைக் கொண்டு வந்தேன். அவரது டுத் பிரஷையும் கொண்டு வந்தேன். பாதணியையும் கொண்டு வந்து வைத்துள்ளேன்.''

''நாங்கள் ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும். அவரிடம் இவ்வாறு இருப்பதைக் கதைக்க வேண்டும். எத்தனை ஜனாதிபதிகள் பதவிக்கு வந்த சென்றுள்ளார்கள்? ஆனால் எங்களுக்கு விடுதலை இல்லை. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் ஒரு முடிவு தேவைப்படுகிறது. எதுவும் நடக்கவில்லை.''

''நான் மாத்திரம் இதைக் கதைக்கவில்லை. அனைவரும் கையளிப்பதாகச் சொல்லிச் செல்கின்றார்கள். நாங்கள் வந்தவுடன் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று இந்த ஜனாதிபதி கூறினார், கதைப்பதாகவும் கூறினார். ஆனால், இன்னும் கதைக்கவில்லை. அவர் பதவிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கதைக்கவில்லை.''

''எங்களுக்குப் பணம் தேவையில்லை. எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? உயிருடன் நாங்கள் கையளித்தோம்'. அம்மா என்று சொல்லி, அடையாள அட்டையைப் பெற்றுச் சென்றார்.''

''அவர் சாப்பிடும் உணவுகளை நாங்கள் வீட்டில் சமைக்க மாட்டோம். அவர் நினைவு வரும் என்பதற்காகவே சமைப்பது இல்லை.''

'பெற்றோர் என்பதை வைத்துக்கொண்டு மாத்திரம் பதில் சொல்ல முடியாது'

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள இந்தத் தருணத்தில், வடக்கில் மாத்திரமன்றி, தெற்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பானவர்களின் அரவணைப்பின்றி கவலையுடன் வாழந்து வருகின்றனர்.

முழு அளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் நிர்க்கதி ஆகியுள்ளதுடன், பகுதியளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வை முன்னோக்கிக் கொண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், சில தரப்பினர் எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி, தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஊடக பிரதானி தயா மாஸ்டர் மற்றும் சர்வதேச நிதி தொடர்பான பிரதானியாகக் கடமையாற்றி கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆகிய விடுதலைப் புலிகளின் முன்னிலை செயற்பாட்டாளர்கள், சட்டக் கட்டுப்பாடுகள் இன்றி இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

செல்வதுரை கோபிநாத், விடுதலைப் புலிகள் செய்தி வாசிப்பாளர், இலங்கை, ராணுவம், இறுதிக்கட்டப் போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்" என்கிறார் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே. (கோப்புப் படம்)

இவ்வாறான பின்னணியில் ராணுவத்தின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கோபிநாத்திற்கு என்ன நடந்தது? அவர் ராணுவம், குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு ஆகிய நிறுவனங்களின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டாரா என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தோம்.

இதன்படி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வருகை தந்து ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செல்வதுரை கோபிநாத் தொடர்பில் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகேவிடம் பிபிசி சிங்கள சேவை முதலில் வினவியது.

அதற்கு அவர், ''பெற்றோர் கூறுகின்ற விதத்தில் மாத்திரம் தன்னால் பதில் கூற முடியாது. எம்மிடம் ஒப்படைக்கப்பட்டாரா? நாங்கள் பொறுப்பேற்றோமா? என்பது தொடர்பில் தகவல் இல்லை'' என பதிலளித்தார்.

''ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் புனர்வாழ்வு அளித்தோம். ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் போகவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.

'ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'

அவ்வாறான 15,000 திற்கும் அதிகமானோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

''ராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'' என்று கூறுகிறார் அவர்.

''அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் தேவை எமக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்.''

''முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ராணுவத்தில் இணைந்து கொண்டு கடமையாற்றினார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியிருந்தனர்.''

''அவர்கள் சுயவிருப்பத்துடன் ராணுவத்தில் இணைந்து கொண்டார்கள். புனர்வாழ்வின் பின்னர் எம் மீது எழுந்த நம்பிக்கை காரணமாக அவர்கள் எம்முடன் இணைந்தார்கள்.''

''எம்மிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் ஆக்கப்பட்டதாக எந்த வகையிலும் குற்றச்சாட்டு இல்லை.''

''அந்தப் பெற்றோர் சொல்கின்றமை தொடர்பில் இதையே கூற வேண்டும். நாங்கள் பொறுப்பேற்ற அனைவருக்கும் உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். எம்மிடம் தற்போது யாரும் இல்லை'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பதில்

செல்வதுரை கோபிநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் நாயகம் மிரான் ரஹீமிடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.

பிபிசி சிங்கள சேவை வழங்கிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி அலுவலக அதிகாரிகளை கோபிநாத்தின் தந்தையுடன் தொடர்புபடுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, அடுத்தகட்ட விசாரணைகளில் இந்தச் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'உலகில் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 2வது இடம்'

இந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 29வது அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளது.

இதற்கு முன்னர் சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கானோர் உண்மை மற்றும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அதிகளவில் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது. முதலாவது இடத்தில் இராக் உள்ளது.

வலிந்து அல்லது தன்னிச்சையாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவில், இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளின் பிரகாரம், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் 6,264 வலிந்து காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 1980ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களாகக் குறைந்தது 60,000 முதல் 100,000 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை கணிப்பிட்டுள்ளது.

கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஆகியவற்றில் தண்டனைகளின்றி மீறியுள்ளதுடன், சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெற்ற கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், சிறுவர்கள் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டமை போன்ற மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgngr9d8zro

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர், அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள்.

3 months 2 weeks ago

541458093_1352205133137951_6524796394563

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்
கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வல்வை மண்ணின் மகத்தான புதல்வன், சந்நிதியான் அருளில் திகழும் தொண்டர், “அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல்” எனப் புகழப்படும் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நாளை (31.08.2025) தனது 76ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
🌺 சந்நிதியான் சுவாமியின் பணி
பெரியபுராண நாயன்மார்களின் வழியில், “அடியார்க்கு அமுதூட்டல் தான் உயர்ந்த தர்மம்” என்ற கருத்தை வாழ்வின் கடமையாக ஏற்று நிற்கும் மோகன் சுவாமி, 1989 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றில் சந்நிதியான் ஆச்சிரமத்தை நிறுவினார்.
அன்று தொடங்கிய அந்த தர்மம் இன்றும் 37ஆண்டுகளாக, வருடம் 365 நாட்களும், தினம் மூன்று வேளையும் அன்னதானமாக தொடர்கிறது...
சந்நிதிக்கு வரும் அடியவர்கள் எவரும் பசியோடு செல்லக்கூடாது எனும் உயரிய சிந்தனையில் சந்நிதியான் ஆச்சிரமத்திலிருந்து அன்னதானப் பணியை அரும்பணியாக செய்து வருகிறார்.
அன்னதானப்பணியுடன் நின்று விடாது சந்நிதியான் ஆச்சிரமம் ஊடாக பல சமூக, சமய பணிகளையும் ஆற்றுகின்றார்.
65 முதியோருக்கு உடை, உணவு, மருத்துவம்,
கல்விக்கான உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணங்கள்,
சமூக நலத்திற்கான வீடமைப்பு, கிணறு அமைப்பு, மருந்து வழங்கல் என பரந்து விரிந்த அறப்பணிகளின் பெருங்கடலாக வளர்ந்து நிற்கிறது.
தன்னடக்கம் மிக்க தொண்டர்
அவரை எவ்வளவு பாராட்டினாலும், சுவாமி தன் வாக்கில் தாழ்மையுடன் –
“நான் ஒன்றும் செய்யவில்லை; சந்நிதியான்தான் செய்கிறான்; நான் வெறும் கருவிதான்” என்று கூறுவர்.
இத்தகைய தன்னடக்கமே அவரை அடியார்க்கு அடியார் என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
🌺 சைவக் கலாச்சாரச் சேவைகள்
1992 இல் தொடங்கிய சைவகலை பண்பாட்டுப் பேரவை,
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைவ நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.
1998 முதல் மாதந்தோறும் வெளிவரும் “ஞானச்சுடர்” ஆன்மிகச் சஞ்சிகை ஆயிரக்கணக்கானோரின் இல்லங்களுக்குச் சென்று சந்நிதியான் அருள்வாக்கினை பரப்பி வருகின்றது.
இந்தச் சேவைகளின் இயக்குனர் கலாநிதி மோகனதாஸ் சுவாமி.
🌺 மலையகத்திற்கான கரம் நீட்டல்
2014 அக்டோபர் 29 மீரியப்பொத்த மண்சரிவு மலையக உறவுகளை சோகத்தில் ஆழ்த்தியபோது, முதலில் உதவிக்கரத்தை நீட்டியவர் மோகன் சுவாமி.
அதன்பின் பதுளை, கெக்கிராவ, முல்லைத்தீவு என எங்கு துயரம் ஏற்பட்டாலும் அங்கு அவர் ஆச்சிரமத்தோடு விரைந்து சென்று உணவு, மருந்து, கல்வி, வாழ்வாதார உதவி வழங்கும் பணியில் முன்னிலை வகித்து வருகிறார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
அவரது தொண்டுகளை உலகம் பாராட்டியதன் சின்னமாக,
அமுதவாரிதி விருது,
அறப்பணி அரசு விருது,
சமூகச் சுடர் விருது,
2017 இல் இந்தியப் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்,
2018 இல் யாழ்ப்பாண மாநகரசபையின் “யாழ் விருது”
என பல கௌரவங்கள் அவரை அணிந்துள்ளன.
ஆனால் மக்களின் நம்பிக்கையே மிகப்பெரிய விருது என்று கருதுபவர் தான் மோகன் சுவாமி.
வாழ்த்துப் பிரார்த்தனை
“சமயம் என்பது சமூக நலனாகவே வெளிப்பட வேண்டும்” என்பதை தன் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டும் வள்ளல் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வுடன், அடியார்க்கு அமுதளிக்கும் அறப்பணியில் பல்லாண்டு சிறக்க சந்நிதியான் அருள்புரியப் பிரார்த்திப்போம்.
(நன்றி பாபுஜி)

நம்ம யாழ்ப்பாணம்

Checked
Thu, 12/18/2025 - 20:15
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed