எங்கள் மண்

புளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக")

1 day 4 hours ago

 

PLOTE%2B%25281%2529.jpg
 
குறிப்பு: "புளாட்டில் நான்" என்ற தலைப்பில் புளாட் வதை முகாமில் சித்திரவதைக்குள்ளான சீலனினால் ndpfront.com இணையத்தில் 2010 இல் தொடராக எழுதப்பட்டு பின்னர் "வெல்வோம் அதற்காக" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. சீலனின் அனுமதியுடன் இங்கு மீள்பிரசுரமாகின்றது. 

 

எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்த வண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர்.

இன்று இனியொருவில் ஐயர் எழுத ஆரம்பித்த பிறகு, பலருக்கு தமது நிலை பற்றிய விமர்சனத்தையும் அதிருப்தியையும் எழுத முடியும் எனறு முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அன்று இருந்த இயக்கங்களில் இருந்த பலர் தமது இயங்கங்களின் உள்முரண்பாடுகளின் காரணமாகவும், புலிகளின் சகோதரப் படுகொலைகள் காரணமாகவும் ஒதுங்கியவர்கள், இன்று தமக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றாற் போல மவுனித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வருகின்றனர். இது ஒருபுருமிருக்க இன்னும் சிலர் 80 களின் பிற்பகுதியில் இருந்து சஞ்சிகைகளை வெளிக்கொண்டு வந்தனர். இதில் பல சஞ்சிகைகள் ஒரே பாணியில் இருந்தன. இவற்றை விட இலக்கியச் சந்திப்பு என்றும், மூன்றாவது பாதை என்றும், இன்னும் ஒரு படி முன்னேறி ஒரு கூட்டு வேலைமுறையை நோக்கி நகர முற்பட்டனர். ஆனால் அவைகள் அனைத்து சிதறி சின்னாபின்னமாக, ஐரோப்பாவில் இருந்து தமிழீழக் கட்சி என்றும், இந்தியாவில் இருந்து தேசபக்கத முன்னணியினர் கழகம் என்ற இரண்டுமே முன்பு சஞ்சிகைகளாக இருந்தவர்களில் கணிசமானோரை உள்வாங்கிக் கொண்டது. இவைகள் செயலற்றுப் போக (இது தொடர்பாக தனிமையில் ஆராயப்பட வேண்டியுள்ளது) இணையத்தளங்கள் உருவாகின. இவற்றின் வளர்ச்சியில் இன்று சிறு சிறுகுழுக்களாக பலர் ஒன்று திரண்டு வருகின்றனர். இருந்த போதும் இதில் பல குழுக்கள் முள்ளிவாய்க்காலுடன் முடிந்து போன எமது போராட்டத்தை மீளாய்வுக்குட்படுத்தாது, எங்கு முடிந்ததே அக்கிருந்தே ஆரப்பிக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், மீண்டும் தமிழ் மக்கள் மீது தமது நலன் சார்ந்த பலரால் உருவாக்கப்படும் புதிய அமைப்புகளில் அடாவடித்தனமும், நேர்மையற்ற அரசியல் போக்கையும் கட்டவிழ்த்து விட வழிவகுக்கும். இதனடிப்படையிலேயே நான் எனக்கு நடந்த அனுபவத்தை, எழுத்துருவில் கொண்டுவர முயற்சிக்கின்றேன்.

இந்த வகையில் நான் அங்கத்துவம் வகித்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், மார்க்சியம் பேசிக்கொண்டு எவ்வாறு மக்கள் விரோதப் போக்கை கொண்டிருந்தது என்பதை உணர்த்த முனைகின்றேன். மக்கள் விடுதலையை விரும்பி பயிற்சிக்கு சென்றவர்களை, எவ்வாறு நடத்தியது என்பதை கவனத்தில் கொண்டு வரமுனைகின்றேன். அதேவேளையில் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த உட்படுகொலைகளுக்கும், ஒட்டு மொத்தத்தில் உமாமகேஸ்வரனை பழிமுடித்து விட்டு தாம் தப்பித்துக் கொள்ளும் பலரை, அவர்களின் இயக்க பெயர்களுடன் அம்பலப்படுத்தும் வகையில் இதை எழுத முற்படுகின்றேன். இங்கு கவனிக்க வேண்டியது நான் உமாமகேஸ்வரனை நல்லவன் என்றோ அல்லது அவர் கொலை செய்யவில்லை என்றோ இங்கு கூறவரவில்லை அத்தோடு நடந்த அத்தனை கொலைகளுக்கும் கழகத்தின் செயலதிபர் என்ற நிலையில் அவர் மீது குற்றம் சுமத்தினாலும், இதில் பல கொலைகள் அவருக்கு தெரியாமேலே நடந்தேறின என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று தம்மை புரட்சியாளர்களாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிவரும் பலர், இச்சம்பவங்களுடன் மறைமுகமாக சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை வெளிக்கொணரும் முகமாக, எனக்கு தெரிந்தவற்றை எழுத முற்படுகின்றேன்.

இவர்கள் பலர் தம்மை பற்றிய எந்தவித சுயவிமர்சனங்களும் இன்றி, மக்களுக்கு மீண்டும் ஏதோ ஒருவகையில் தீங்கிழைக்க முற்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டும் எமது போராட்டமானது மக்கள் சார்பில் எவ்வாறு நிலைகொள்ள வேண்டும் என்பதையும், மக்கள் இவர்கள் மத்தியில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தவே, எனக்கு நடந்த கசப்பான அனுபவத்தினுடாக மீளாய்வினை செய்ய முற்படுகின்றேன்.

அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்படுகொலைகள் பற்றியும் அதன் அராஜகப் போக்கு பற்றியும் தோழர் கேசவனால் எழுதப்பட்ட "புதியதோர் உலகம்" என்ற நூலில் அடங்காத பல விடையங்களை இங்கு ஆராய முற்படுகின்றேன். இதில் புதியதோர் உலகம் தீப்பொறி என்ற அமைப்பால் வெயியிடப்பட்ட போதும், அவ்வமைப்பையும் எனது பாதையில் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றேன். தீப்பொறி அமைப்பானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து இடைநடுவில் பிரிந்து சென்ற பலரை, உள்வாங்கிய ஒரு அமைப்பாக இருந்தது. இதில் பலர் நடந்த உட்படுகொலைக்கு பதில் கூறவேண்டியவர்களாக இருந்த போதும், புதியதோர் உலகம் என்ற நுலின் மூலம் தமக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என கட்டி தப்பித்தனர். எனவே அவ்நூலுக்கு அப்பால் நடந்தது என்ன என்பதையும், எவ்வாறு தீப்பொறியினர் மற்றைய போராளிகளை விட்டுவிட்டு, தமது உயிரை பாதுகாத்துக் கொண்டனர் என்பதையும் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. தீப்பொறியினர் பிரிந்து செல்வதற்கு முன்பே, இந்தியாவில் முகாம் ஒன்றில் நடந்த உட்கட்சிப் போராட்டம் தொடர்பாக அவர்கள் எதையும் கருத்தில் கொள்ளாது, தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த பலரையும் இங்கு பார்வைக்குட்படுத்துகின்றேன்.

தொடரும்

சீலன் (2010)

 

http://poovaraasu.blogspot.com/2020/08/plote-1.html

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?

1 day 11 hours ago
திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?

 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன். அவர் தன் உடலை வருத்தி உண்ணா நோன்பிருந்த இரண்டாவது தினம் இன்றாகும்.

இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரில் நவம்பர் 27, 1963 அன்று திலீபன், இராசையா தம்பதிகளுக்குப் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பக்கால உறுப்பினராகவும் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தவர். 1987ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை தமிழர் தாயகத்தில் அமைதிப்படையாக காலடி வைத்தது இந்திய ராணுவம்.

ஒப்பற்ற தியாகத்தை உலகறியச் செய்த ஈழத் தமிழர்களின் உன்னத புதல்வனுக்கு நினைவு தினம்! | Athavan News

ஈழ தமிழரின் பிரச்னையை தீர்க்க என்று கூறி இந்திய- இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போதும், அது தமிழர்களுடைய தேசிய பிரச்னையை தீர்ப்பதற்கும், தமிழர் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையிலான அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்க வழிகோலவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு தமிழர் தரப்பு அலோசனைகளையும் இந்திய இலங்கை அரசுகள் பெறவில்லை. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்பும் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு எதிராக பெரும் மனித உரிமை மீறல்களையும் அடக்கு முறைகளையும், தமிழர் தாயகமாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களையும் மிக வேகமாக தொடர்ந்தார்.

thileepan last wish: மாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்! - thileepan death anniversary september 26 | Samayam Tamil

இந்த நிலையில் தான், சிங்கள அரசிடம் தமிழ் இனப்பிரச்னைக்கு நீதி கேட்பதில் பயன் இல்லை என முடிவெடுத்த திலீபன், இந்திய அரசு தான், தமிழினப்பிரச்னையில் தலையிட்டது, மக்களின் உரிமை பிரச்னைக்கு உத்தரவாதம் அளித்தது, விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்தது. ஆகவே இந்திய அரசிடமே தமிழ் மக்களின் உரிமையைக்கோரி போராடுவதன் மூலம் அதன் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

Eelam | Tamileelam | Indo Srilanka Peace Accord | July 29

மஹாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக பறை சாற்றும் இந்திய அரசிடம், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நீதி கேட்டு, ஆயுதப்போராளியான திலீபன், அகிம்சை வழியில் செப்டம்பர் 15, 1987.அன்று ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து நீர் கூட அருந்தாமல் உண்ணா விரதப் போரை ஆரம்பித்தார்.

தியாக தீபம் திலீபன் பாடல்கள் – Pulikalin Kural

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2. சிறைக் கூடங்களிலும், ராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3. அவசரகாலச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே திலீபனின் கோரிக்கைகள் ஆகும்.

இந்த ஐந்து கோரிக்கைகளும் புதிதானவை அல்ல. ஏற்கனவே இலங்கை அரசுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விஷயங்கள்தான்.

அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக இருகின்றன.

அதேபோல, உண்ணாவிரத மேடை ஏறுவதற்கு முன்பு தன்னுடைய நண்பர்களிடம்,

1 கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

2 ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்

3 எனக்கு மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யக்கூடாது.

4 நான் உணர்வு இழந்த பிறகும் என் வாயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றக்கூடாது

5 இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது என இந்த 5 உறுதிமொழிகளையும் வாங்கிக்கொண்டுதான் மேடை ஏறினார். அதே நேரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் திலீபனின் கோரிக்கைகளை முன் வைத்து அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

திலீபன் அங்கு அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத மேடையில் ஏறி சிரித்த முகத்துடன் அமரும் போது எவரும் அவர் உயிர் தம் கண் முன்பாகவே பிரியும் என்று எதிர்பார்க்கவில்லை.

அகிம்சைப் போராட்டங்களை, இந்தியா மதிக்கும்… இந்தியாவின் அடிப்படைத்தத்துவம், ஆன்மீகத் தத்துவம், உயர்வான தத்துவம் அனைத்துமே அகிம்சைக் கோட்பாடுதான் என தமிழர்கள் நம்பினர். மேலும், 1986ம் ஆண்டு இந்திய அரசால் தொலைத் தொடர்புச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது, அதை திரும்பத் தர வலியுறுத்தி, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டப் போராட்டம் வெற்றி பெற்றதும் அகிம்சைக்கு இந்தியா தலைவணங்கும் என மக்கள் நம்பியதற்கு மற்றொரு காரணம்.

ஆனால் திலீபன் தன் உறுதியான போராட்டம் தமிழர் வாழ்வில் மக்கள் புரட்சியூடான ஓர் மாற்றத்தை கொண்டு வரும் என நம்பினார்.

நாட்கள் நகர்ந்தன…ஆனால் இந்திய அரசு தரப்பில் திலீபனின் கோரிக்கைகள் தொடர்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. நாவறண்டு தொண்டைக்குழிக்குள் சொற்கள் புதைந்து போக… உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டு 4ம் நாள் உரையாற்றுகின்றார்… திலீபன்.

“அன்பார்ந்த தமிழீழ மக்களே! விளக்கு அணையுமுன்னர் பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கின்றேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேச முடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்!

மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது உடல் உறுப்புக்கள் செயலிழப்பதனால் இனிமேல் என்னால் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் என்னைத் தொடர்ந்து வருவார்கள் அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார்.

Thileepan: The Reckoning That Non-Violence Didn't Stand A Chance - Colombo Telegraph

நாட்கள் கடக்க கடக்க இந்திய அரசின் மீதான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது. இந்திய அரசு மவுனமாக நாட்களை நகர்த்தியது.இருந்தும் திலீபன் தன் உடலை திரியாக்கி உயிரை நெய்யாக்கி லட்சிய வேள்வியில் உருகிக்கொண்டிருந்தார். திலீபன் இருந்த மேடைக்கு அருகிலேயே இன்னொரு மேடை அமைத்து உண்ணா விரதத்துக்கு ஆதரவாரக பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில்,

“திலீபன் அழைப்பது சாவையா – இந்தச் சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா – அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா” என்று அன்று குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

தினம் செத்துக்கொண்டிருக்கும் திலீபனின் நிலை கண்டு…,

‘விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான் பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு சொத்தல்லோ – எங்கள் சுகமல்லோ தாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் – போய் முடியப் போகின்றான்… போய் முடியப் போகின்றான்.. என்று கவிஞர் புதுவை இரத்தினதுரையும் கதறி நின்றார்.

Thileepan, Hunger and Remembrance – Ilankai Tamil Sangam

தான் இறக்கப்போவது உறுதி என்று அறிந்திருந்தும், தனது கொள்ளையில் மிகவும் உறுதியுடன் பயணித்தார் திலீபன். ஆனால் காந்திய தேசம் திலீபனின் ஐந்து அம்சக்கோரிக்கைகளுக்கும் செவி சாய்காகாது போக … அவர் தனது போராட்டத்தின் 12ஆவது நாள் சாவைத் தழுவினார்.

தியாக தீபம் திலீபனின் மரணம் தொடர்பில், “திலீபனின் மரணம் பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி, ஒருவன் தான் நேசித்த மண்ணுக்காக எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்ய முடியுமோ அந்த அற்புதமான அற்பணிப்பைத்தான் அவன் செய்தான்” என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தியாக தீபம் திலீபனின் மரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு அடிப்படை காரணமாகவும் அமைந்தது. சாத்வீக ரீதியான திலீபனின் சாவை கண்டும் இலங்கை அரசு திருந்தவில்லை, இந்திய அரசும் ஈழத்தமிழர் பிரச்னையின் உண்மை நிலையை இன்று வரையில் உணரவில்லை.

http://www.ilakku.org/thileepanindiarevolution/

 

அரச நிலங்களில் குடியிருக்கும் மக்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

4 days 10 hours ago
செப்டம்பர் 13, கொழும்பு: குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு சட்ட ஆவணங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உரிமையின் சட்ட ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க அரசு நிலங்களில் வசிப்பவர்களை அழைத்து தொடர்புடைய அசாதாரண அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், உள்ளூர் உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கும் அரசு நிலங்களை அதன் உகந்த மட்டத்தில் நிர்வகிப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது "செழிப்பு மற்றும் சிறப்பின் தரிசனங்கள்" கொள்கை அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் . அதன்படி, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு முயற்சியாக, இலங்கை குடிமக்களுக்கு நிலத்தின் தெளிவான பட்டத்தை உறுதிசெய்யும் நோக்கில் முறையான ஆவணம் இல்லாமல் அரசு நிலத்தை அபிவிருத்தி செய்த நபர்களுக்கு உடனடியாக வெளிப்படையான முறையில் சட்ட ஆவணங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. . அரசு நிலங்களை அங்கீகரிக்கப்படாமல் ஆக்கிரமித்து, அவர்களின் தகுதியை உறுதிப்படுத்தும் நபர்களாக அடையாளம் காணப்பட்ட மக்களுக்கு சட்டப்பூர்வ ஆவணத்தை வழங்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களைத் தவிர முழு தீவையும் உள்ளடக்கிய சட்ட ஆவணங்களை வெளியிடுவதற்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு அரசு நிலத்தில் நிரந்தர வீடுகளைக் கட்டியவர்கள், விவசாயத்தில் அல்லது எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவதன் மூலம் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. சிறப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், அதில் நிலம் அமைந்துள்ளது அல்லது அந்தந்த கிராம நிலதாரி / கள அலுவலரிடம் 2020 செப்டம்பர் 30 க்கு முன்பு ஒப்படைக்க வேண்டும்.

 

http://www.colombopage.com/archive_20B/Sep13_1600021693CH.php

பிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்!

5 days 17 hours ago

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது.

செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார். அவருடைய அனுபவங்கள் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் தமிழ் வடிவத்தை இங்கு தருகிறோம். இது ஒரு வரலாற்று குறிப்பாக கொள்ள முடியுமா என்பதில் நிறைய விவாதங்கள் இருக்கும். எனினும், சிங்கள ஊடகத்தில் வெளியான தகவலாக மீள் பதிவிடுகிறோம்.

அந்த பதிவு கீழே-

செல்வராஜா தேவகுமார் அல்லது ரகு 1996 முதல் 2007 வரை பிரபாகரனின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். வெடிகுண்டு காயமடைந்து பாதத்தின் ஒரு பகுதியை இழந்த பின்னர், பிரபாகரன் தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவியை துறக்க வேண்டியிருந்தது.

ரகு பதவியை துறந்தத போதிலும், அவர் புலிகளின் உறுப்பினராக இருந்தார். வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் கடைசி நாட்களில், ரகு பொதுமக்கள் மத்தியில் ஒளிந்துகொண்டு அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு திரும்பினார்.

ரகு ஒரு சாதாரண மனிதனாக பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளர் என்ற உண்மையை மறைத்து, வவுனியாவின் இராமநாதபுரம் இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்தார். பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளராக இருந்த ரகுவை, அப்போது வடக்கு மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி., நிமல் லெவ்கேயின் கீழிருந்த புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

பொலிஸ் காவலில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், பிரபாகரனின் இருப்பிடங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருக்கும் இடத்தைப் பற்றியும் பல உண்மைகளை வெளியிட்டார்.

மூத்த டி.ஐ.ஜி நிமல் லெவ்கே இது குறித்து தெரிவிக்கையில்,

ரகு பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளராக அடையாளம் காணப்பட்டார். அப்போது காவல்துறை ஆய்வாளராக இருந்த சுல்பிகர் எனக்கு கீழ் பணிபுரிந்தார். ரகுவை பற்றி அறிந்து, அவரை காவலில் எடுத்தோம். ரகுவை பொறுப்பேற்றபோது பிரபாகரன் உயிருடன் இருந்தார். எனவே ட்ரோன்களில் இருந்து எடுக்கப்பட்ட வான்வழி புகைப்படத்தை ரகுவுக்குக் காட்டினோம், பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க ஒரு பெரிய முயற்சி செய்தோம். அப்போதும பிரபாகரன் பெரிய மக்கள் கூட்டத்திற்குள் மறைந்திருந்ததால் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, பிரபாகரன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரகு மூலம் ஒரு பெரிய ஆயுதங்களைக் கண்டுபிடித்தோம். பிரபாகரனின் எச்.பி.16 வகை துப்பாக்கி மற்றும் குண்டு துளைக்காத உடுப்பு ஆகியன கடைசியாக போர்கள் நடந்த வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் இவை பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. எச்.பி.16 துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. பிரபாகரன் பயன்படுத்திய குண்டு துளைக்காத உடுப்பு அவருக்காக தயாரிக்கப்பட்டது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இது முழு உடலையும், காதுகளிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்களை உருகுவதன் மூலம் பெறப்பட்ட பித்தளைகளைப் பயன்படுத்தி இது செய்யப்பட்டது.

88 தற்கொலை ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. யுத்தத்தில் உயிருடன் பிடிபடாமல் தற்கொலை செய்ய புலிகள் மத்தியில் அவை விநியோகிக்கப்பட்டதாக ரகு எங்களிடம் கூறினார். கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் 2,000 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ் உயர் வெடிபொருட்களும் உள்ளன

டி.ஐ.ஜி லெவ்கேவின் ஒருங்கிணைப்பின் கீழ் முல்லைத்தீவிவில் ரகுவை சந்தித்தோம். ரகு  பல ஆண்டுகளாக தனது பிரதான மெய்க்காப்பாளராக பணியாற்றுவதைத் தவிர பொதுமக்களைக் கொல்லவோ அல்லது இராணுவத்திற்கு எதிராகப் போராடவோ செல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரகு யாழ்ப்பாணத்தில் ஒரு காய்கறி கடையை நடத்தி வருகிறார் மற்றும் பல பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை பராமரிக்கிறார்.

பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளரான ரகு ஒரு செய்தித்தாளுக்கு பேட்டி அளிப்பது இதுவே முதல் முறை.

‘நான் படிக்கும் போது, இந்திய ராணுவம் எங்கள் பகுதியில் முகாமிட்டது. நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கற்றேன். பாடசாலைக்குச் சென்றபோது, இந்திய வீரர்கள் சிகரெட் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தினர். சிகரெட் வாங்கவும் பணம் தரமாட்டார்கள். எங்கள் குடும்பத்தில் தினமும் இந்திய இராணுவத்திற்கு காசு வாங்க பணமில்லை. நான் மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களையும் சிகரெட்டைக் கொண்டு வரச் சொன்னார்கள். முகாம் கடந்து சிகரெட் இல்லாமல் பாடசாலைக்கு செல்ல முடியாததால் நான் பாடசாலை செல்வதை நிறுத்தினேன். இதன் காரணமாக இந்திய இராணுவத்தின் மீது எனக்கு பெரும் வெறுப்பு எழுந்தது.

நான் பாடசாலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தேன். நான் வீட்டில் இருப்பதால் சோர்வாக இருந்தேன். அப்போது, விடுதலைப் புலிகளில் ஆட் சேர்க்கப்படுவதாக கேள்விப்பட்டு, வீட்டை விட்டு சென்று புலிகளில் இணைந்தேன். ர். வாய்ப்பு கிடைத்ததும் நான் இந்திய வீரர்களை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து விடுதலைப் புலிகளில் சேர்ந்தேன்.

புலிகளில் சேர்ந்த பிறகு எனக்கு ரகு என்ற பெயர் வைத்தார்கள். சிறுவர் போராளியாக பயிற்சியை முடித்த பின்னர் புலிகளின் காவல் முகாம், பதுங்கு குழிகளை வெட்டுதல், பிற முகாம்களுக்கு உணவு மற்றும் பானம் எடுத்துச் செல்லும் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது.

நான் சிறு வயதில் புலிகளில் கொமாண்டோ பயிற்சிக்கு பெற தெரிவானேன். 4 மாத கொமாண்டோ பயிற்சி பெற்னே். தலைவரின் மெய்க்காப்பாளர்களாக பயிற்சி பெற சுமார் 750 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர். கொமாண்டோ பயிற்சியில் சிறந்து விளங்கியவர்கள் வி.ஐ.பி. பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பயிற்சியை 4 மாதங்கள் கொடுத்தேன்.

அந்த நேரத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு முகாமில் இருந்து பயிற்சி பெற்றோம். பயிற்சியின் முடிவில், நான் உட்பட 100 பேர் மட்டுமே நன்கு பயிற்சி பெற்றவர்கள் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு படையினருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பிரபாகரனின் பாதுகாப்புப் பிரிவில் தெரிந்தெடுக்கப்பட்ட எங்களின் குடும்ப விபரங்களை புலனாய்வுத்துறையினர் கண்காணித்தனர். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்ற தமிழ் அமைப்புகளுடன் தொடர்பை கொண்டிருந்தார்களா என கண்காணித்தனர். கடுமையான கண்காணிப்பின் பின் பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டோம். அந்த பிரிவில் கடுமையான ஒழுங்கு விதிகள் இருந்தன. மது, சிகரெட் மற்றும் வெற்றிலை போன்றன கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

ஒருவர் மது அருந்தினால் பிடிபட்டால், அவர் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார். பிரபாகரனின் மெய்க்காப்பாளர்கள் கடமையில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் மது அருந்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் புகைபிடித்த சிகரெட்டுகள் மற்றும் வெற்றிலை சிக்கினால், அதற்கு தண்டனையுண்டு.

(இதேவேளை- தம்முடன் உரையாடிய சில மணி நேரத்தில் ரகு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்ததாக சிங்கள ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்)

பிரபாகரன் தனது பாதுகாப்புப் படையில் சுமார் 750 உறுப்பினர்களைக் கொண்டிருந்தார். ஆனால் ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் அவரது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லோரும் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். வன்னி இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர், அனைத்து -750 மெய்காவலர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அவரது மெய்க்காப்பாளர்களின் பொறுப்பில் இருந்தேன். அவரைப் பாதுகாக்கும் முழு பொறுப்பும் என்னிடமே.

பிரபாகரன் பயணம் செய்ய இரண்டு வெள்ளை வேன்கள் மற்றும் ஒரு பஜிரோ ஜீப்பைப் பயன்படுத்துகிறார். மூன்று வாகனங்களும் ஒரே நேரத்தில் பயணிக்கின்றன. மூன்று வாகனங்களில் எதில் பயணிப்பதென்பதை கடைசி நிமிடத்தில் பிரபாகரன் தீர்மானிக்கிறார். அவர் தனக்கு விருப்பமான ஒரு வாகனத்தில் ஏறியதும், மற்ற இரண்டு வாகனங்களும் பின்தொடர்கிறன. அவர் எங்கு செல்கிறார் என்று கூட சொல்லவதில்லை. அவர் போன பிறகு நாங்கள் கிளம்புகிறோம்.

தனது பாதுகாப்புத் திட்டங்களை பிரபாகரனே திட்டமிட்டார். அவரது பாதுகாப்புக்காக பிற தலைவர்களின் எந்த பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அவர் தனது பாதுகாப்பு திட்டங்களையே செயல்படுத்தினார். மற்றவர்களின் பாதுகாப்புத் திட்டங்களை அவர் நம்பவில்லை.

பின்னர் நான் பிரபாகரனால் அவரது பிரதான மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டேன். அவருக்கு என் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவருக்காக நான் இறக்கத் தயாராக இருந்தேன். எங்களுக்கு நல்ல புரிதல் இருந்தது.

இந்த சம்பவம் 2004 ல் நடந்தது. அந்த நேரத்தில் நான் பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளராக இருந்தேன். ஒருநாள் பிரபாகரன் பஜிரோ ஜீப்பில் சென்றார். அவருக்கு இரண்டு வெள்ளை டொல்பின் வாகனங்கள் பாதுகாப்பளித்தன. புதுக்குடியிருப்பு பகுதி வழியாகச் செல்லும்போது, பிரபாகரனின் பஜிரோ ஜீப்பில் திடீரென தீப்பிடித்தது.

அந்த நேரம் ஜீப்பில் நான் இருந்தேன். தீ விபத்து ஏற்பட்டவுடன் ஜீப் நிறுத்தப்பட்டது. நான் உடனே நடவடிக்கை எடுத்து பிரபாகரனை தீயிலிருந்து வெளியேற்றினேன். அந்த நேரத்தில் பிரபாகரன் தப்பி ஓடவில்லை. அவர் பயப்படவில்லை. எந்த பீதியும் இல்லை. அவர் புன்னகைத்து அடுத்த வாகனத்தில் ஏறினார். எந்த உரையாடலும் இல்லாமல் அவர் விரும்பிய வழியில் சென்றார். இந்த சம்பவம் குறித்து புலிகள் புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இது பிரபாகரனின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியா என்று புலிகளின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வந்தன. ஆனால் விசாரணையில் இது அப்படி இல்லை என்று தெரிய வந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு வடமராட்சி நடவடிக்கையின் போது, படையினர் தன்னை கைது செய்ய முயன்ற போதும், இந்திய தலையீடு காரணமாக அவ்வாறு செய்ய முடியவில்லை என்று பிரபாகரன் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

இராணுவ ஆழ ஊடுருவும் பபடைப்பிரிவின் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் 2001 ஆம் ஆண்டில் பிரபாகரன் பயணித்த பஜிரோ ஜீப்பை குறிவைத்து வெடிகுண்டு ஒன்றை வெடித்து வெடித்தனர். குண்டுவெடிப்பில் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பிரபாகரன் ஜீப்பில் இல்லை என்று ரகு கூறினார்.

பிரபாகரனுக்கு உணவு தயாரிக்க மூன்று சமையல்காரர்கள் இருந்தனர். அவர் உணவருந்த முன்னர், அந்த உணவை நான் முதலில் சாப்பிட்டேன். நான் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து பிரபாகரன் சாப்பிட்டார். சாப்பாட்டில் ஏதேனும் விஷம் இருக்கிறதா என்று பார்க்க இதைச் செய்தோம்.

ஈழத்தை வெல்வதற்கான போராட்டத்தை வழிநடத்த தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று பிரபாகரன் அடிக்கடி கூறியுள்ளார். அதனால்தான் அவர் எப்போதும் கவனமாக இருப்பதை உறுதி செய்தார். ரகுவின் கூற்றுப்படி, இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி தாக்குதலை தீவிரப்படுத்திய பின்னர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்தி, எச்சரிக்கையடைந்தனர்.

பிரபாகரனின் பயணப்பாதையில் ஒருமுறை அழுத்த குண்டை புதைக்க வைக்க குழி தோண்டப்பட்டிருந்தது. அதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

(தொடரும்)

https://www.pagetamil.com/145342/

சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்

1 week 1 day ago
சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்

 

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.ilakku.org/சத்துருக்கொண்டான்-படுகொ/

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம்

1 week 4 days ago
இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம்

krishanthi-murder-protest.jpg

 

யாழ்.செம்மணி பகுதியில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்தை தொடர்ந்து
செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

1996ம் புரட்டாதி மாதம்  7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த  இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெரித்து படுகொலை செய்திருந்தனர்.

செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனும், யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 )  ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர்.

அதேவேளை யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள் , காணாமல் ஆக்கப்பட்ட அவர்கள் 600 பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.ilakku.org/இராணுவத்தால்-படுகொலை-செய/

வந்தாறுமூலைப் படுகொலை

1 week 5 days ago
வந்தாறுமூலைப் படுகொலை

 

 

 

Vanthaarumoolai-University-Massacre-1990.jpg

 

வந்தாறுமூலைப் படுகொலையை மறப்பரோ தமிழீழத் தமிழர்! (05.09.1990 – 23.09.1990)

தென்தமிழீழத்தின் கல்வித் பட்டறையாக விளங்கி எண்ணற்ற பட்டதாரிகளை தமிழீழத்திற்கு தந்த பல்கலைக்கழகம் வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம்.

இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 40,000 தமிழர்கள் ஏதிலிகளாகத் தங்கியிருந்தனர். தென் தமிழீழத்தின் பலபகுதிகளிலும் சிங்கள படைகளும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும், இரத்த வெறிபிடித்த புளட் மோகன் குழுவினரும் தமிழர்களை வேட்டையாட அலைந்து திரிந்தனர். பல இடங்களிலும் இவர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்த தமிழர்கள் வேடடையாடப்பட்டனர். கல்விக் கோயினான வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தினுள் தங்கினால் வேட்டை மிருகங்களிடம் இருந்து தப்பலாம் என்ற நம்பிக்கையில் உறவுகளைப்பிரிந்து உடமைகளை இழந்து உயிரை மாத்திரம் கையில் பிடித்துக் கொண்டு தஞ்சமடைந்திருந்தனர் அம்மக்கள்.

இவர்களை வேட்டையாடவென 1990ம் ஆண்டு புரட்டாசி 05ம் திகதி கப்டன் மொனாஸ் தலைமையில் வந்த சிறீலங்காப் படைகள் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வலைத்தன. தலையாட்டிகளோடு வந்த இராணுவத்தினர் 158 தமிழர்களை தம்மோடு கொண்டு வந்த இரு அரச பேருந்துகளில் அடைத்து வாழைச்சேனை நோக்கிக் கொண்டுசென்றனர். இதன்போது தமது உறவுகளைக் கொண்டுசெல்ல வேண்டாம் எனக் கதறிய உறவுகளிடம் அவர்களை உடனே திருப்பிக் கொண்டு வருவோம் என படைத்தரப்பால் வாக்குறுதி அளிக்கப்பட்டது. “158 தமிழ் மக்களின் கைகளை சிங்கள இராணுவம் முரட்டுத்தனமாகக் கட்டிய வேளையில் பல்கலைக்கழகக் கட்டிடத்தினுள் எழுந்த மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை” என்று கூறுகின்றார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர். கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களில் 11வயது சிறுவனொருவனும் அடங்கியிருந்தான் இவனைக்கூட விட்டு வைக்காத சிங்களப்படை 158 தமிழர்களையும் வாழைச்சேனைக்கு அருகேயுள்ள நாவலடி இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்து புதைத்தது.

மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கப்டன் மொனாஸ், கப்டன் பாலித, வாழைச்சேனை இராணுவமுகாம் பொறுப்பாளர் மேஜர் மஜீத், செங்கலடி இராணுவ முகாமைச் சேர்ந்த களு ஆராய்ச்சி, மட்டக்களப்பு பிரதான முகாமைச் சேர்ந்த மேஜர் மோகான் சில்வா ஆகிய ஐவரும், இப்படுகொலைகளின் சூத்திரதாரிகள் மட்டுமல்ல, இந்தக் கொடுமையில் நேரடியாகவே பங்குபற்றியுள்ளனர் என்பதை முன்னாள் நீதிபதி பாலகிட்ணர் தலைமையிலான ஆணைக்குழுவினால் இனங்காட்டப்பட்டபோதும், இந்தக் கொடுமையாளர்கள், மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளால் எதுவித தண்டனைக்கும் உட்படுத்தப்படவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கெதிராக மோசமான கொடுமைகளை புரிந்த அவர்களின் சேவைகளை பாராட்டி, சிங்கள அரசுகள் பதிவு உயர்வுகளையே வழங்கிவந்துள்ளன.

பல்வேறு சர்வதேச அழுத்தங்களினால் அன்றைய பிரேமதாசா அரசு இப்படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென ஜே.எல்.ஏ.சொய்சா தலைமையிலான மனித உரிமைகள் பணிக்குழுவினை நியமித்தது. இக்குழு மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள் நீண்ட இழுத்தடிப்பிற்குப்பின்னர் 1994ல் மூன்று பக்க அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டன. இதில் 158 பொதுமக்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்படவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ஆகிய இரு சிபாரிசுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவற்றில் இதுவரை எதுவும் மாறிமாறிவந்த சிங்கள அரசுகளால் அமுல்படுத்தப்படவில்லை.

ஆனால், தமது உறவுகள் சிங்கள இனவெறிப் படையினரால் உயிரோடும் கொன்றும் மண்ணில் புதைக்கப்பட்டத்தை தென்தமிழீழ மக்கள் மறக்கவில்லை.

சிங்களப்படையின் கொடுங்கரங்களில் 158 தமிழ் மக்கள் சிக்கி மடிந்த கொடுமையின் பத்தாண்டு நினைவை, (2000ம் ஆண்டு வரையப்பட்டது மீள் பதிவாக தேசக்காற்று) 05.09.2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம், நெஞ்சுகனக்க நினைவு கூர்ந்தது. மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விழிப்புக்குழுவின் வேண்டுகோளின் பேரில் மாவட்டம் எங்கணும் பூரண கதவடைப்பு நடைபெற்றது. நகர பகுதிகளான மட்டுநகர், செங்கலடி, வந்தாறுமூலை, வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்தனர். வீதிகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. ஆலயங்களில் பங்குத்தந்தைகள் கொன்றொழிந்தவர்களின் நினைவாக விசேட திருப்பலியில் நிகழ்த்தப்பட்டன. இந் நினைவுகூரல் நிகழ்வுகளையும் சிங்களப் படைகள் குழப்ப முற்பட்டன. இலட்சியத்தால் ஒன்றுபட மக்களின் முன்னால் ஆக்கிரமிப்பாளனின் அடக்குமுறை முறைமைகள் ஒன்றும் செய்யமுடியாது என்பதற்கமைய சிங்களப் படைகளால் மக்களின் உணர்வு வெளிப்பாட்டை தடுத்து நிறுத்தமுடியவில்லை. இந் நினைவுகூரல்கள் வெறுமனே நினைவு நிகழ்ச்சிகள் அல்ல மாறாக தாயக விடுதலைக்காக திரண்டு நிற்கும் ஒரு தேசிய இனத்தின் உணர்வுக்கு குமுறல்கள் என்பதை சிங்களப் படைகளால் ஒருபோதும் உணர முடியாது.

நன்றி: களத்தில் இதழ் (07.09.2000).

https://thesakkatru.com/vanthaarumoolai-university-massacre-1990/

 

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள்

1 week 5 days ago
ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள்

Eegaiperoli-Senthilkumaran-Memorial.jpg

 

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும்.

புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனிவா ஐ.நா முன்றலின் முருகதாசன் திடலிலே தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.

Eegaiperoli-Senthilkumaran-scaled.jpg

நீளும் நினைவுகளாகி…

Viduthalai-Neruppu-Thesakkatru.jpg

தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தவும் தாய்த்தமிழகம், மலேசியா, சுவிஸ்சர்லாந்து ஆகிய நாடுகளிலே தமது இன்னுயிர்களை தீயினிற் கருவாக்கிய அனைத்து ஈகியர்களையும் இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://thesakkatru.com/eegaiperoli-senthilkumaran-memorial/

 

ஆறாத ரணம் - வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை நடந்து 30 ஆண்டுகள்!

1 week 6 days ago

ஆறாத ரணம் - வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை நடந்து 30 ஆண்டுகள்.!

tk.jpg

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களின் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது.

செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (UTHR) நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது.

“ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள்  வளாகத்துக்குள் வந்தன.

எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது[3]) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச்சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டுசெல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.

மூடப்பட்ட அகதிமுகாம்

முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது.

பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.

நீதி தராத அரச விசாரணை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது.

குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனங்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஆண்டுதோறும் நினைவு நாள்

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்  நடைபெற்று 29 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.

–கவிஞர் தீபச்செல்வன்–

https://vanakkamlondon.com/stories/2020/09/83047/

தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணம்

1 week 6 days ago
தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணம்

Thile-bat3.jpg

 

தாயக விடியலுக்காக தன்னுயிர் தந்து தரணிவாழ் தமிழரின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு  தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணத்தை தாயக இளையோர் சமூகத்தினர் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நடைபயணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபியிலிருந்து எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் நினைவஞ்சலியுடன் நிறைவடையவுள்ளது.

எனவே இந்த புனிதமான எழுச்சி நடைபயணத்தில் தாயகத்திலுள்ள  அனைவரும் இதய சுத்தியுடன் ஒத்துழைப்பு தருவதுடன் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு அஞ்சலியிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த நடைபயணத்துக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு  தமிழ் தேசிய கட்சிகளின் இளையோர்  அணியினர் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

http://www.ilakku.org/தமிழ்த்தேசிய-எழுச்சி-நடை/

 

தற்செயலாக கண்டெடுத்த பணத்தை பேஸ்புக் ஊடாக உரியவரிடம் ஒப்படைத்த பாடசாலை உப அதிபர்..! யாழ்.சங்கானையில் சம்பவம், பலரும் பாராட்டு..

2 weeks ago

தற்செயலாக கண்டெடுத்த பணத்தை பேஸ்புக் ஊடாக உரியவரிடம் ஒப்படைத்த பாடசாலை உப அதிபர்..! யாழ்.சங்கானையில் சம்பவம், பலரும் பாராட்டு..

Money-Dj.jpg

வங்கிக்கு முன்பாக தவறவிடப்பட்ட ஒரு தொகை பணத்தை மீட்ட பாடசாலை உப அதிபர் ஒருவர் உரியவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்திருக்கின்றார். 

சங்கானை இலங்கை வங்கி கிளையின் பணப்பரிமாற்று இயந்திரத்தில் ஒரு தொகை பணத்தை எடுத்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் அதனை தவறவிட்டிருந்தார். 

இந்நிலையில் குறித்த வங்கி கிளைக்கு சென்றிருந்த சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபர் பேஸ்புக் ஊடாக உரிமையாளரை கண்டுபிடித்து, 

உரிய தாதிய உத்தியோகஸ்த்தரிடம் பத்திரமாக சேர்த்துள்ளார். உப அதிபரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தொிவித்திருக்கின்றனர்.

https://jaffnazone.com/news/20243

டிஸ்கி 

இந்த காலத்தில் இப்படிப்பட்ட நபர் ..👌

இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி

2 weeks 1 day ago
இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி
 
med-final-696x493.jpg
 

இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது.

போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது.

போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார்.

நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது.

ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு.

எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”.

இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர்.

குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.

LTTE-MED-2.jpeg

புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர்.

போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது.

மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின.

புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது.

ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.

md.jpg

அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது.

போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது.

மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது.

அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின.

இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார்.

மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.

 

DSCN8486.jpg

இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின.

தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன.

பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின.

போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள்.

இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர்.

பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன.

மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.

W-tigers3.jpg

சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர்.

ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது.

மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது.

குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும்.

அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள்.

போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.fff.jpeg

இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும்.

உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர்.

வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார்.

திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது.

உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார்.

தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.

கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர்.

பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள்.mat_03.jpg

( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்)

இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது.

மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது.
உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது.

“எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்”

என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம்.

 

http://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/

அடிப்படை வசதிகளற்ற நிலையில் சாளம்பஞ்சேனை மக்கள்!

2 weeks 1 day ago
01-9.jpg?189db0&189db0

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்றர் தூரத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு காணப்படுகின்றனர்.

இங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளாக குடி நீர் பிரச்சனை பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. இங்கு காணப்படும் பொதுக் கிணறுகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு ஒருவரின் வீட்டின் மாத்திரமுள்ள கிணற்றில் ஓரளவு நீர் காணப்படுகின்றது.

குறித்த நீரையே இங்கு வாழும் மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பெற்றுக் கொள்வதுடன், மிஞ்சும் நீரைக் கொண்டு தோட்டப் பயிர்களுக்கு ஊற்றி தோட்டங்களை பராமரித்து வருகின்றனர். இங்கு வாழ்பவர்களின் ஜீவனோபாய தொழிலாக வீட்டுத் தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன முக்கியத்துவம் பெறுகின்றது.

கிராம மக்கள் தங்களது வீடுகளின் தோட்டங்கள் அமைத்து தங்களது அன்றாட தேவைகளுக்கும், வியாபார நடவடிக்கைகளுக்குமாக மேற்காண்டு வரும் நிலையில் தண்ணீர் பிரச்சினையானது பாரிய பிரச்சனையாக இவர்களின் மத்தியில் எழுந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் எவரும் கரிசணை கொள்வதில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும் அரசியல்வாதிகளிடம் மற்றும் அரச திணைக்களங்களுக்கு சென்று அரச அதிகாரிகளிடம் குடி நீர் பிரச்சனையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் இடம்பெற்றவில்லை.

அத்தோடு எமது சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் இரவு வேளைகளில் யானைகளினால் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன்காரணமாக சில வீடுகள் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டதுடன், உடமைகள் அனைத்தையும் சேதமாக்குகின்றது. அத்தோடு வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட கச்சான், கத்தரி, வெண்டி, மிளகாய் என்பவற்றையும் அழித்து துவம்சம் செயகின்றது.

எங்களது பகுதிகளுக்கு தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் இடம்பெற்று வரும் நிலையிலும், இதன் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இரவு நேரங்களில் கண் விழித்து தோட்டங்களை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் எமது பகுதியை அண்மித்த இடங்களில் வெளி மாவட்டங்களில் உள்ளவர்களின் மாடுகள் கட்டப்பட்டுள்ளதால் மாடுகளை மேய்வதற்கு வெளியில் விடும் சமயத்தில் எமது கிராமத்திற்குள் வரும் மாடுகள் எங்களது தோட்டப் பயிர்களையும் அழித்து விடுகின்றது.

இதனால் யானைகளில் இருந்து காப்பாற்றும் மீதி தோட்டப் பயிர்களை மாடுகளுக்கு உண்பதற்கு கொடுக்கும் நிலைமை உருவாகின்றது. இங்கு வாழும் மக்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் கண் விழித்து தோட்டங்களை மற்றும் வீடுகளை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

அத்தோடு சாளம்பஞ்சேனை கிராமத்திற்கு பிரதான வீதியில் வருவதற்கான வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. உள் வீதிகள் சில கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டாலும் பிரதான வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

எமது சாளம்பஞ்சேனை கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகளுக்கு எங்களது கிராமம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஆனால் தேர்தல் முடிந்ததும் எங்களது கிராமங்களை மறந்து விடுகின்றனர். தேர்தல் காலங்களில் வரும் போது அதனை செய்வோம், இதனை நிறைவேற்றுவோம் என்பார்கள் ஆனால் எதுவும் செய்து தருவதில்லை.

ஆனால் மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது முன்னையவர்கள் செய்யவில்லை. நாங்கள் செய்து தருவோம் என்று எங்களை ஏமாற்றி செல்வார்கள். அவர்களால் எதுவும் இடம்பெறுவதில்லை. தற்போது வந்துள்ள அரசாங்கமாவது எங்களது நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பில் பல தடவை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும், இனியாவது இதில் கூடிய அக்கறை கொண்டு எங்களது உயிரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

எனவே சாளம்பஞ்சேனை கிராம மக்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி யானை வேலி அமைத்து தருமாறும், எமது பகுதியை அண்டியுள்ள பகுதியில் கட்டப்படும் மாடுகளை வேறு பகுதிகளில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு குறித்த கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு பெறும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (150)https://newuthayan.com/அடிப்படை-வசதிகளற்ற-நிலை-2/

கிழக்கு பல்கலைக்கழக மாணவி மிதுசியாவின் கல்வி பணி.

2 weeks 2 days ago

கிழக்கு பல்கலைக்கழக மாணவி மிதுசியா செய்யும் செயல் யாருக்காவது தெரியுமா.?

manavi.jpg

செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை வசதி வாய்ப்புகளுடன் கற்பித்து வரும் கல்வி யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் தகரக் கொட்டகை ஒன்றை அமைத்து தன்னலம் கருதாது கற்பித்து வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர்.

மாணவர்கள் பாடசாலை முடிந்து வந்ததும் பிற்பகல் வேளையில் அவர்களுக்குக் கற்பித்து வருகிறார் இந்த யுவதி.

பின்தங்கிய வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இந்த மாணவி தற்போது பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தான் ஆரம்பத்தில் கல்வி கற்பதற்காக அனுபவித்த இன்னல்களை தனது கிராமத்தைச் சேர்ந்த ஏனைய பிள்ளைகளும் எதிர்கொள்ளக் கூடாது என நினைத்து இம்மாணவி இந்த சேவையை மேற்கொண்டு வருகின்றார்.

தனது சொந்த முயற்சியினால் தமது வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் சிறியதொரு தகரக் கொட்டகை அமைந்து தமது கிராம பிள்ளைகளுக்கு தனது பல்கலைக்கழக கற்றல் நேரங்களை விட எனைய ரேரங்களில் கற்பித்து வருவதாக தெரிவிக்கின்றார் கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவி கோணேஸ்வரன் மிதுசியா.

தனது முயற்சியினால் தற்போதைய கொழுத்தும் வெயிலுக்கு மத்தியில் தகரக் கொட்டகை அமைத்து, அதனுள் மணல் இட்டு, அதற்குள் பாய் விரித்து பிள்ளைகளை வைத்து கற்பித்து வருகின்றார் இவர்.

“இந்த கொட்டகையை சற்றுப் பெரிதாக்கி, பிள்ளைகள் இருக்கக் கூடிய மேசை கதிரைகள் வழங்கினால் இப்பகுதியைச் சேர்ந்த ஏனைய பிள்ளைகளையும் அழைத்து நான் கற்பிப்பேன்” என தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றார் மிதுசியா.”தற்போது எமது சமூகம் மெல்ல மெல்ல கல்வியில் வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது.

ஆனால் அவர்களுக்குரிய அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டியது அவசியமாகும், ஆனாலும் எமது பகுதியில் அதிக பிள்ளைகள் இடைநடுவே பாடசாலைக் கல்வியை விட்டு விடுவார்கள். இனிமேலும் அந்த நிைலமை ஏற்படக்கூடாது என நினைத்து நான் ஆரம்பத்தில் மநிழலில் வைத்து பிள்ளைகளுக்கு கற்பித்தேன். தன்போது எனது சிறு முயற்சியின் காரணமாக சிறிய தகரக் கொட்டகை ஒன்று அமைத்துள்ளேன்.

ஆனால் அதனுள் கதிரை, மேசை, என்பன இல்லாமலுள்ளன” என அவர் மேலும் விசனம்  தெரிவிக்கின்றார். கொடுவாமடு கிராமத்தில் தன்னலம் கருதாது அப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உந்துசக்தியளிக்கும் மிதுசியாவின் முயற்சிக்கு பணவசதி படைத்தோர் உதவி செய்ய முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/82493/

மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை

2 weeks 2 days ago
மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை

6673-secondary-students-leaving-new-lab-696x392.jpg

 

ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும்  பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும்  மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும்  எம்மவர்களின் கற்றல், கற்பித்தல்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் பயனாக உருவாகிவரும்  எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும்  தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதியை மேம்படுத்துவதற்கு  செய்யப்படவேண்டிய விடயங்கள்  தொடர்பாக பலருடன் கலந்துரையாடல்களை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டுவருகின்றது. இதன் பயனாகச் செயற்படுத்தப்பட வேண்டிய பத்து விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

1. மாணவர்களின் உண்மையான ஆர்வமும் திறனும் அடையாளப்படுத்தப்படல் தொடர்பாக பயிற்சியளித்தல்.
2. மாணவர்களினுடைய கற்றல் சம்பந்தமான தெரிவுகளுக்கு முன்னுரிமை வழங்குவதும்  கற்பித்தல் சம்பந்தமாக அவர்களின்  அபிப்பிராயங்கள் உள்வாங்கப்படுவதற்கான பொறிமுறைகளை மேம்படுத்துவதற்கும் பயிற்சியளித்தல்.
3. நல்ல பழக்கங்களையும் செயல்களையும் மாணவர்கள் பழகுவதற்கும் செய்வதற்கும் ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை பொறிமுறைகளுடன்  நடைமுறைப்படுத்தல்
4. மாணவர்களுக்குக் கற்றல் செயற்பாடுகளில் ஆர்வமூட்டும் நடைமுறைகளை  அறிமுகம் செய்தலும்  தன்னார்வ கற்றல் செயற்பாடுகளை ஊக்குவித்தலும்
5. குடும்பம், ஆசிரியர்கள், மொழி, கலை, கலாசாரம், தன்னிறைவு என்பவற்றில்  மாணவர்களுக்கு இருக்கும் மதிப்பையும் பற்றுறுதியையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகம் செய்தல்
6. சவால்களை எதிர்கொள்ளும் திறனையும், வெற்றி நோக்கி முயற்சிக்கும் மனப்பாங்கையும், தோல்விகளை தாங்கிக்கொள்ளும்  மனப்பக்குவத்தையும்  வளர்க்க முயற்சி எடுத்தல்
7. நட்புறவு, சகோதரத்துவம், நம்பிக்கை உணர்வுகளை வளர்த்து பிறரின் மனம் நோகாத சிநேகபூர்வ தொடர்பாடல்களுக்கான பயிற்சி வழங்குதல்.
8. நேரத்தையும் வாழ்க்கையையும் திட்டமிடுவதற்கான பயிற்சியளித்தல்.
9. நல்ல அடிப்படை குணாதிசயங்களை கற்கும், கற்பிக்கும் உபாயங்களை அறிமுகப்படுத்தல்
10. மற்றவர்களின் உரிமைகளையும் மன உணர்வுகளையும் புரிந்துகொள்ள பயிற்சியளித்தல்.

இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பல விடயங்களையும் நடைமுறைப்படுத்தி முன்னெடுக்க  பல்வேறு தரப்பினருடனும் இணைந்து பணியாற்றும் முயற்சிகளை தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்திருக்கிறது. இதற்கான தொடர் திட்டமிடல் செயலமர்வுகளில்  கலந்துகொள்ள விரும்பும் அமைப்புகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்  tpcofficialmail@gmail.comஎன்ற மின்னஞ்சல் ஊடாக தமிழ் மக்கள் பேரவையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை.
01.09.2020.

 

http://www.ilakku.org/மாணவர்களின்-கல்வித்-தரத்/

சிலாவத்துறை படுகொலை 2007

2 weeks 2 days ago
சிலாவத்துறை படுகொலை 2007

 

 

Chilaavaththurai-Massacre-2007.jpg

சிலாவத்துறை படுகொலை – 01 செப்ரெம்பர் 2007.

2007 இல் சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னார் மாவட்டம் மீதான வலிந்த தாக்குதலின் விளைவாக சிலாவத்துறையைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த 13 குடிமக்களை ஏற்றிக்கொண்டு வான் ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவம் 2007.09.02ம் நாள் இடம்பெற்றது.

இராணுவத்தின் மத்தியில் எற்பட்ட இம்மோதலின்போது கொல்லப்பட்ட பொதுமக்களின் உடலம் இரண்டு நாட்களாக அகற்றப்படவில்லை. பழுதடைந்த உடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவால் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒரு தந்தை, தாய், 04 வயது மகனும் உள்ளடங்குவார்கள்.

சிலாவத்துறை பகுதியில் சிறிலங்கா இராணுவம் மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருந்து…

Chilaavatturai-2007-1.jpg

Chilaavatturai-2007-3.jpg

Chilaavatturai-2007-2.jpg

Chilaavatturai-2007-4.jpg

இதிலிருந்து மூன்று வாரங்களின் பின்னர் செப்ரெம்பர் 26ஆம் நாள் வணபிதா நீக்கிலாப்பிள்ளை பாக்கியரஞ்சித் இவ்வாறானதொரு கிளைமோர்த் தாக்குதலில் இதற்கு அருகாமையிலுள்ள இடத்தில் வைத்துக் படுகொலை செய்யப்பட்டார். அவர் அப்பொழுது தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்தார். இதில் அவரது உதவியாளரும் கொல்லப்பட்டார்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 2002 – 2008 நூல்.

 

https://thesakkatru.com/chilaavaththurai-massacre-2007/

Checked
Fri, 09/18/2020 - 09:38
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed