எங்கள் மண்

நிதர்சனம், புலிகளின்குரல் உருவாக்கத்தின் காரணகர்த்தா பரதன் வாழ்க்கை வரலாறு

2 months 4 weeks ago

நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே, தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே !

A01A0D37-68A7-4157-89D0-FD34792AD932.jpe

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலி உருவாக்கத்தின் காரணகர்த்தாவும், அவற்றின் முதன்மைப் பொறுப்பாளருமாகிய பரதன் அண்ணாவைப் பற்றி அவருடன் நீண்ட காலமாய் பழகியவனும், ஒன்றாக செயற்பட்டவன் என்ற காரணத்தினாலும் அவர் பற்றிய முக்கியமான கருத்துப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

பரதன் அண்ணா 83ஆம் ஆண்டு தன்னை முழுநேர உறுப்பினராக புலிகளுடன் இணைத்துக் கொண்டார். 1987இல் தான் எனக்கு அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் திலீபன் அண்ணாவுடன் நிதர்சனம் முகாமிற்கு செல்வேன். அப்போது பரதன் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் செல்வதோ நடுச்சாமம். அப்போது அவர் அடுத்த நாள் ஒலிபரப்பிற்கான வேலைகளை செய்து கொண்டிருப்பார். பரதன் அண்ணாவின் முகாமிற்கு செல்வதென்றால் எமக்கு பெரும் ஆசை. காரணம் அந்த சாமத்திலும் சுடச்சுடப் பாணும் ஜாம் அல்லது பட்டரும் இருக்கும். ஆனால் அவருக்கு வெறும் தேநீர் மாத்திரம் போதும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எமது போராளிகள் இராப் பகலாக கண் விழித்து தங்கள் வேலைகளை திறம்பட செய்தவர்கள். பரதன் அண்ணாவைப் பொறுத்தவரை வளமில்லாத காலத்திலும் வளமான படைப்புக்களை தான் ஒலி, ஒளிபரப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். ஒவ்வொரு பதிவுகளும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமான பிடிவாதத்தில் இருந்தார்.

தன்னை விளம்பரப்படுத்தாத ஒரு மனிதர். தலைவரின் கனவை கிட்டண்ணாவுடன் சேர்ந்து நனவாக்கியவர். நேர்த்தியென்ற பேச்சு வருகின்ற போது கிட்டண்ணாவையே உதாரணமாகக் காட்டுவார் பரதன் அண்ணா. காரணம் ஒருமுறை அவர்களது முகாமிற்கு காலையிலேயே கிட்டண்ணா போயிருக்கின்றார். முகாம் துப்புரவாக இல்லை. ஒருவர் மட்டுமே வேலை செய்துகொண்டிருந்தார். மற்றவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவரே முகாமை சுத்தம் செய்யத் தொடங்கி விட்டார். அயர்ந்த தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பவுமில்லை. இரவிரவாக வேலை செய்து களைத்துத் தூங்குகின்றனர் என்று அவருக்குத் தெரியும். ஆயினும் சத்தம்கேட்டு விழித்துக் கொண்டவர்கள் அசடுவழிய நின்றனர். இந்தச் சம்பவத்தை மறக்க முடியாது என்று பரதன் அண்ணா அடிக்கடி கூறுவார்.

இந்திய இராணுவத்துடனான போரின் போது ஒலி, ஒளி நாடாக்களை பத்திரப்படுத்துவது மிகவும் சவாலான விடயம். ஈரத்தன்மை புகாதவாறு புதைக்க வேண்டும். அதனை திறம்படச் செய்து முடித்தார் பரதன் அண்ணா.

இந்திய இராணுவத்தின் முதற்குறியே நிதர்சனமாக இருந்தது. காரணம் நிதர்சனத்தின் செய்திகள் ஒளிப்படங்கள் எல்லாம்  இந்திய வல்லரசிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  இதற்கு மூலமாக இருந்தவர் பரதன் அண்ணா.

88 காலப்பகுதியில் கொழும்பில் மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவருக்கும் வெவ்வேறு வேலைகள். அவர் அப்பொழுது முதலாவது ஒலிநாடா உருவாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அது ‘புயல்கால ராகங்கள்’ என்ற பெயரில் தென்னிந்திய கலைஞர்களின் பங்களிப்பால் தரமான ஒலிநாடாவாக வெளியிடப்பட்டது. அதில் பாடிய மனோ, வாணி ஜெயராம் ஆகியோர் பாடி முடித்த பின்னர் அழுதுவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவ்வளவு சிறப்பாக அமைந்தது அவரது ஆரம்ப முயற்சி. இதற்கான பாடல் வரிகளை காசியண்ணா, புதுவையண்ணா, இன்குலாப் ஆகியோர் எழுதியிருந்தனர்.

அக்காலகட்டத்தில் இலங்கையின் அதிபராக இருந்த பிரேமதாசா அவர்களுடனான பேச்சுவார்த்தைக் காலம். ஒலி – ஒளிபரப்பு சாதனங்களை எல்லாம் வாங்குவதற்கு ஏற்ற காலமாகவும் திட்டமிடப்பட்ட நேரமாகவும் காணப்பட்டது. அதற்கு முன் தலைவரை சந்திக்க வேண்டும். வன்னிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. பரதன் அண்ணாவிற்கு அதுவொரு புது அனுபவம். நானே அடிக்கடி சென்று வருவேன்.

சில நேரங்களில் தலைவரை சந்திக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருக்கும் காலத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. நாங்கள் வவுனியாவில் கிடாய்ச்சூரி என்னுமிடத்தில் ஒரு ஆதரவாளர் வீட்டில் நின்றிருந்தோம். ஆதரவாளரின் மகன் வந்து உங்களுக்கு பால் பிளேன் ரீயோ, சும்மா பிளேன் ரீயோ வேணும்? என்று கேட்டார். சிரிப்பை அடக்கிக் கொண்டு சும்மா பிளேன் ரீ என்று சொல்லி விட்டு அவர் பிளேன் ரீ கொண்டு வந்த பின் அவரை இருத்தி சரியாக சொல்வது எப்படியென பரதன் அண்ணா சொல்லிக் காட்டினார். பின்பு அவர் புத்தகத்துடன் வந்து பரதன் அண்ணாவிடம் பாடம் கற்றது வேறு விடயம். இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு விடயத்தை பகிடியாக சிரித்து விட்டு கடந்து செல்பவரல்ல அவர். சரியானதை சொல்லிக் கொடுத்து நேர்ப்படுத்தும் சீரிய பண்பு கொண்டவர் தான் பரதன் அண்ணா.

தலைவரை சந்திக்க வந்த பின்பு இலத்திரனியல் கொள்வனவிற்காக நித்தியண்ணாவுடன் சிங்கப்பூர் சென்று அங்கு தான் பெரிய கொள்வனவை முடித்து வந்தார். லொறி நிறைய இலத்திரனியல் சாதனங்கள். அந்த நேரமே கோடிக்கணக்கான பெறுமதி கொண்டவை. கட்டுநாயக்காவிலிருந்து மணலாறு செல்லும் வரை STF இன் பாதுகாப்பிலேயே கொண்டு போய் சேர்க்கப்பட்டது. பின்னாளில் இதை வைத்து தான் தர்மேந்திரா கலைக்கூடம் உருவானது.

1990இல் இந்திய இராணுவம் வெளியேறி எமது கட்டுப்பாட்டில் எமது பிரதேசம் வந்த பின், இருவரும் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நிதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். ஆரம்பமே பெரும் சவாலாகத்தானிருந்தது. புதிதாக எல்லாவற்றையும் நிறுவ வேண்டும். ஒரு ஒழுங்கான வடிவமைப்பின் கீழ் நேர்த்தியாக செய்து முடித்ததில் அவரின் சகலதுறை ஆளுமையும் புலப்பட்டது.

நிதர்சனம், புலிகளின்குரல் வானொலிச் சேவைகள் 90இல் மிகுந்த தரத்துடன் தொடங்கப்பட்டது. சொற்ப ஆட்களுடன் ஆரம்பித்த இச் சேவை மிகப்பெரும் விருட்சமாக பரிணமித்தது. பரதன் அண்ணாவின் நிர்வாகத் திறமையால் பலாலி வீதியில் பெரிய அலுவலகம் உருவாக்கப்பட்டு அங்கு அமலன் அரங்கம் அமைக்கப்பட்டு அங்கேயே ஒலி – ஒளிப் பதிவுகள் செய்யப்பட்டன. ஒலி – ஒளிபரப்பின் தரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் பரதன் அண்ணா. எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்காது.

நிலக்கீழ் ஒலி – ஒளிப்பதிவுக்கூடம் அமைக்கத் தீர்மானித்து, அதற்கான வரைபடம் பரதன் அண்ணாவால் வரையப்பட்டு, அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலிருந்த மரங்கள் வெட்டப்படாமல் அதனைச் சுற்றியே நிலம் அகழப்பட்டு, நிலக்கீழ் அறை உருவனது. பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன் பலமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் பாதுகாப்பனதாகவும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும். படப்பிடிப்பு போராளி தர்மேந்திரா நினைவாக தர்மேந்திரா கலையகம் உருவானது. குறைந்த செலவில் தரமானதாக உருவானதில் தலைவராலும் பாராட்டப்பட்டோம்.

பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம்.

எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல் என்று பனடோலைப் போட்டுவிட்டு எனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். நாளாக நாளாக குறையவில்லை. என்னைப் பார்த்த பரதன் அண்ணா என்ன நவீனத்தார் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு சரியில்லையோ என்று கேட்டார். காய்ச்சல் போலிருக்கிறது என்றேன். வா ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்றார். இல்லை பனடோல் போட்டனான். ஆக ஏலாது விட்டால் போவோம் என்று சொன்னேன். நீ போய் படப்பு என்று சொன்னார். எனக்கு கொஞ்ச வேலை இருக்கிறது. முடித்துவிட்டு படுக்கிறேன் என்று சொன்னேன். அதைப் பிறகு செய்யலாம். படுத்து எழும்பினால் சுகமாயிருக்கும். போய் படு என்று சொல்ல, நானும் அறைக்குள் சென்று படுத்துவிட்டேன். சிறிது நேரம் செல்ல நடுங்கத் தொடங்கி விட்டது. சத்தம் கேட்டு வந்து பார்த்தவர் நல்லா கூடிற்றுது போல என்று சொல்லி, வாகனம் தர்மேந்திராவில் நிற்கிறது. எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி போர்வையால் போர்த்ததும், பயங்கரமாக குலப்பன் அடிக்கத் தொடங்கி விட்டது.

அடுத்த கணமே என்னைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த திருநெல்வேலி நேர்ஸிங் ஹோமிற்கு போனார். எனக்கோ கதைக்க முடியாத நடுக்கம். என்னைப் பரிசோதித்த மருத்துவர் சிவபாதசுந்தரம், இது சாதாரண காய்ச்சல் இல்லை. இரத்தப் பரிசோதனையின் மூலம் தான் கண்டுபிடிக்கலாம் என்றும், உடனடியாக இரத்தப் பரிசோதனையை போய் செய்யும்படியும் கூறினார். அதற்குள் மணியண்ணாவும் வாகனத்தைக் கொண்டுவந்து விட்டார். இரத்தப் பரிசோதனையில் கடுமையான நெருப்புக் காய்ச்சல் என்றும் உடனடியாக அதற்கான மருந்து ஏத்த வேண்டும் எனவும், ஆனால் மருந்துக்குத் தட்டுப்பாடு. எங்கிருந்தாவது கொண்டு வந்தால் தான் காப்பாற்ற முடியும் என்றும் சொன்னார். பரதன் அண்ணாவின் முகம் மாறிவிட்டது. அதை வெளிக்காட்டாமல் எனது தலையைத் தடவி நீ ஒன்றுக்கும் யோசிக்காதை நான் மருந்தோடுதான் வருவேன் என்று கூறி, திலகனை என்னோடு நிற்கும்படியும் சொல்லி விட்டு சென்றார். சிலமணித்தியாலங்கள் கழித்து மருந்தோடுதான் வந்தார். உடனடியாக மருந்து ஏற்றத் தொடங்கி விட்டார்கள்.

வேலைப் பழுவிலும் அடிக்கடி வந்து பார்த்து மருத்துவரிடமும் கதைத்துவிட்டு தான் போவார். ஒரு வாரத்தின் பின் காய்ச்சல் குறைந்து விட்டது. அந்த சமயத்தில் என்னைப் போல் பெண் பிள்ளை ஒருவருக்கும் காய்ச்சல். மருந்து ஏற்ற வேண்டும். மருத்துவர் பரதன் அண்ணாவிடம் நிலைமையைக் கூறி மருந்தை அந்தப் பிள்ளைக்கும் கொடுங்கள். பொது மக்களோ, போராளியோ உயிர்தான் அவர்களுக்காகத் தானே நாம் போராடுகின்றோம் என்று கூறி அந்தப் பிள்ளையையும் பார்த்து ஆறுதல் கூறினார். அந்தப் பிள்ளை சுகமாகி தாயாருடன் எமது முகாமிற்கு வந்திருந்தார். தாயார் பரதன் அண்ணாவின் கையைப் பிடித்து அழுத அந்த நெகிழ்வான தருணம் இன்னும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

அவரின் நிர்வாகத் திறமை பார்ப்போரை வியக்க வைக்கும். அவரது ஆளுமையின் கீழ் நிதர்சனம், புலிகளின்குரல், தமிழீழ வானொலி, புகைப்படம், ஒலி, ஒளி நாடா வெளியீடுகள், பயிற்சி வகுப்புகள் என அவரின் ஆளுமை வியாபித்திருந்தது. பொறுப்பாளன் என்றால் பொறுப்பேற்கும் பக்குவமும் வேண்டும். இதற்கு ஒரு சம்பவம் தலைவரின் மாவீரர் நாள் பேச்சு ஒலிபரப்பில் நடந்தது. அப்போது புலிகளின்குரல் ஒலிபரப்பிற்கு சிவா அண்ணா பொறுப்பாகவிருந்தார். தலைவரின் மாவீரர் நாள் உரையின்போது தடங்கல் ஏற்பட்டது. ஒழுங்காக தயாரிக்கப்பட்ட உரையின் ஒலி நாடாவிற்குப் பதிலாக வேறு போடப்பட்டு விட்டது. பின் இடைநிறுத்தி மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. தலைவரின் உரையில் எப்படி இது நடக்கச் சாத்தியம் என்று இன்றுவரை புரியவில்லை. எல்லாம் சரிபார்க்கப்பட்டுத் தான் இறுதியாக ஒலிபரப்புக்குக் கொடுக்கப்படும். உடனடியாக தலைவரிடம் சென்று தவறுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.

தவறிழைத்தது அவரல்ல. ஆனாலும் தான் முழுவதற்கும் பொறுப்பு என்பதால், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைவரும் பரவாயில்லை. பரதன் அடுத்தமுறை இப்படி நடக்காமல் நீங்களே நேரடியாக நின்று கவனியுங்கள் என்று சொல்லியனுப்பானார். இந்த நிகழ்வு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதற்குப் பின் தனி ஒலிநாடாவில் பதியப்பட்டு அவரே நேரடியாகச் சென்று கொடுத்து கவனித்துக் கொள்வார்.

அவரது ஒலிபரப்பில் உருவான முதலாவது குறும்படம் ‘இனியொரு விதி’ தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தயாரிப்பு வேலைகள். ஞானரதனின் எழுத்துருவாக்கம். நாவண்ணன் அவர்களின் மகள், ஸ்ரீராம் (படப்பிடிப்பு போராளி, பின்நாளில் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதி) நடித்திருந்தனர். பரதன் அண்ணாவிற்கு உதவியாளராக நான் இருந்தேன். நாவற்குழிக்கும், கைதடிக்கும் இடைப்பட்ட குளத்துடன் சேர்ந்த வயல் வெளியில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒலி ஒளிக் கோவைகளின் பின்னர் 30 நிமிட குறும்படம் தயாரானது. தயாரானவுடன் தலைவர் எமது முகாமிற்கு வந்து படத்தைப் பார்வையிட்ட பின்னர் அவருடைய முகத்தில் ஒரு பெருமிதம். நல்லாச் செய்திருக்கிறியள். முப்பது நிமிடம் என்றீர்கள் கெதியாய் முடிந்து விட்டது என்றார். இந்த வார்த்தைக்காகத்தான் பரதன் அண்ணாவும், நாமும் காத்திருந்தோம். விரைவாக முடிந்து விட்டது என்றால் பெரிய வெற்றி தானே.

பின்னர் வெளியீட்டு விழா ஸ்ரீதர் திரையரங்கில் நடைபெற்றது. அங்கு தான் முதல் ஒளிபரப்பு வெளியானது. பல நாட்கள் நிறைந்த மக்களுடன் இனியொரு விதி ஒளிபரப்பானது.

அதைத் தொடர்ந்து உதயம் ஒலிநாடா உருவானது. இதற்கான ஒலிப்பதிவுகள் யாழ். ரமணன் குழுவினரின் இசையமைப்பில் தர்மேந்திரா கலையகத்தில் நடைபெற்றன. சில பாடல்களுக்கு தவில், நாதஸ்வர இசை சேர்க்கப்பட்டது. இதன் போது ஒரு துயர் நிகழ்வும் ஏற்பட்டது. அருகில் இருந்த வீட்டுக்காரர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அதற்காக அடுத்த நாள் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு இறுதிக் கிரியைகளின் பின்பு தான் மீண்டும் ஒலிபரப்பு நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவில் வீரமணி ஐயரின் பங்கும் மிகவும் முக்கியமானது.

முழுக்க முழுக்க தமிழீழக் கலைஞர்களைக் கொண்டு தர்மேந்திரா கலையகத்தில் உருவான முதலாவது ஒலிநாடா இதுவாகும். இதன் வெளியீடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சண்டைகள் உக்கிரமடைந்திருந்த நேரம், அப்பொழுது கிட்டண்ணா லண்டனில் இயங்கிக் கொண்டிருந்தார். அவர் பரதன் அண்ணாவிடம் அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் ஆவண ஒளிவீச்சாக செய்து அனுப்பும்படி கூறியிருந்தார். அதற்கான வேலைகள் தொடங்கிய நிலையில் பரதன் அண்ணா ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார். தரமானதும், அதேநேரம் மேலைத்தேய ஊடகங்களுக்கு இணையாகவும் இருத்தல் வேண்டும் என்பது தான் அது.

அந்த நேரம் தான் மாங்குளம் முகாம் மீதான தாக்குதல் முடிவிற்கு வந்த நேரம். வேறு இடங்களில் சண்டை மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எமது படப்பிடிப்பு போராளிகள் பெரும் குண்டு மழையிலும் தம்மால் எடுக்கக்கூடிய காட்சிகளையெல்லாம் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போராளிகளின் வீரம், மக்களின் அவலங்கள் அவர்களின் காட்சிகளில் சாட்சியங்களாக அமைந்தன. அவற்றில் இருந்து ஒரு தரம் வாய்ந்த ஒரு ஒளிவீச்சு ஆவணம் உருவானது. இதில் பல பிரதிகள் எடுக்கப்பட்டு கிட்டண்ணாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நித்திரையற்றதன் விளைவாக உடல் அசதி காட்டத் தொடங்கியது.

அடுத்த நாள் தலைவரின் மாவீரர் நாள் உரைக்கான ஒலி, ஒளிப்பதிவுகள் நடைபெறவிருந்தது. அதற்கான ஆயத்தங்களையும் செய்ய வேண்டும். மறுநாள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டோம். வருபவர்களுக்கான உணவுகளும் தயாராகி விட்டது. பரதன் அண்ணாவும், கிருபாவும் பங்கருக்கு சென்று விட்டனர். மீண்டும் ஒலிப்பதிவுக் கருவிகளைப் பரிசோதிப்பதற்கு ஆயத்தமானேன். நான் முன்வாசலில் உள்ள கதிரையில் இருந்து கொண்டு காவலில் நின்ற ரஞ்சனிடம் வாகனம் வாகனம் வந்தால் சொல்லு என்று சொல்லிவிட்டு அசந்து தூங்கி விட்டேன். ஜெயம் அண்ணா வந்து எழுப்பும் மட்டும் வாகனம் வந்து நின்றது தெரியாது. திடுக்கிட்டு முழித்து பின்பக்கம் செல்ல முயன்ற போது, அண்ணை அருகில் வந்து விட்டார். நவீனன் என்று கூப்பிட்டு கேட்ட முதல் கேள்வியே எத்தனை நாள் நித்திரை கொள்ளவில்லை என்பது தான். அதற்குள் பரதன் அண்ணாவும் வந்துவிட்டார். கிட்டண்ணாவிற்கு அவசரமாக ஒளிநாடா அனுப்ப வேண்டியிருந்ததால், இரண்டு நாளாக நித்திரையில்லை என்று சொல்ல, அதற்கு தலைவர் இரவு நித்திரை முழித்து வேலை செய்தால் கட்டாயம் பகலில் குறைந்தது மூன்று மணிநேரமாவது நித்திரை கொள்ளுங்கள் என்றார். நீங்களும் தான் என்று பரதன் அண்ணாவைப் பார்த்துச் சொன்னார்.

நான் இதைக் குறிப்பிட்டதன் நோக்கம் தலைவர் போராளிகளிடத்தில் எவ்வளவு அக்கறையும், கரிசனையும் கொண்டவர் என்பதற்கான சிறு உதாரணமே. அண்ணை ஒலிப்பதிவு முடித்துப் போகவே நடுச்சாமம் ஆகி விட்டது. அடுத்த நாள் அடுத்த ஓட்டத்திற்குத் தயாராகி விடுவோம். இரண்டு நாட்களில் அடுத்த ஒரு பெரிய நிகழ்வுக்கான தயார்ப்படுத்தல்.

அது புலிகளின் குரல் வானொலியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா. யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழாவும் தொடங்கி விட்டது. அதில் நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசை் குழுவினரின் வில்லுப்பாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தடை பற்றி பேசியவர் சவர்க்காரத்தை தடை செய்து விட்டு என்று கூறி… அப்போதைய ஜனாதிபதியின் சாதி பற்றி மறைமுகமாக மேடையில் பேசியதை அவதானித்த பரதன் அண்ணா, உடனடியாக அவர்களது நிகழ்ச்சியை நிறுத்தி திரை போடச் சொன்னார். அவர்களை மண்டபத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டு விழாவிற்கு வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி எங்களுடைய நிகழ்வில் நடந்த இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதில் இரண்டு விடயங்கள் புலனாகியது. ஒன்று கொள்கைப் பற்று, மற்றையது முடிவெடுக்கும் திறன்.

அந்த நிகழ்வு எல்லோராலும் பாராட்டப்பட்டு புலிகளின் நிலையை வலியுறுத்திய பேசுபொருளாகவும் அமைந்தது. அதேநேரம் எதிரியைக்கூட மதிக்கும் மாண்பாயும் அமைந்தது. இதை தலைவர் அறிந்தவுடன், பரதன் செய்தது தான் சரி. இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றார்.

நான் இவற்றையெல்லாம் எழுதுவதன் காரணம் தேசத்தின் மீதும், தேசியத் தலைவர் மீதும் எவ்வளவு பற்றுறுதியோடிருந்தார் என்றும், அவரின் ஆற்றலும் அர்ப்பணிப்புகளும் சாதாரணமல்ல; ஊடகத்துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கங்களை தெரியப்படுத்தவுமே.

சில வருடங்களின் பின் நான் வேறு வேலைக்கு சென்று விட்டேன். அவரும் வேறு திசை. நாட்டில் அவரைக் கடைசியாகக் கண்டது 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குடிசையில். அவர், வினோ அக்கா, இரு பிள்ளைகள். இவர்களுடன் பரதன் அண்ணாவின் அப்பா, அம்மாவும். அந்த நேரம் மிகவும் கஷ்டம். மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நேரம். இடப்பெயர்வின் வலி அது. பின் அங்கிருந்து ஒருவாறாக இலண்டனுக்கு குடும்பத்துடன் வந்து விட்டார். நான் மீண்டும் பரதன் அண்ணாவைச் சந்தித்தது 1999ஆம் ஆண்டு. நான் இலண்டன் வந்தவுடன் முதலில் வந்து பார்த்தது பரதன் அண்ணா தான்.

அப்பொழுது அவர் இலண்டனில் ஒளிப்படம் எடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அவருடன் பல நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தச் சமயத்தில் தான்  மூன்றாவது கண்(THIRD EYE) என்னும் ஒளிப்பட நிறுவனத்தை தொடக்கி நடத்தினார். அவரால் இரண்டு ஒளி நாடாக்களும் (UN TOLD STORY / MY NEIROUR IN SRI LANKAN TAMIL) தயாரித்து வெளியிடப்பட்டது.

அவர் தொடாத துறைகளே இல்லை. அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது. அவருடைய கனவே எமது போராட்டத்தின் முழுமையும் ஆவணப்படுத்தி அதை அடுத்த சந்ததியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பது தான். அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் தேசத்தின் மீதும், தேச மக்களின் மீதும் தேசியத் தலைவர் மேலும் கொண்டிருந்த கொள்கைப் பற்றும், அவர்கள் மீதான பற்றுறுதியிலும் விலகவேயில்லை.

அவரின் கனவை நனவாக்க முன்னோக்கிச் செல்வோம்

உங்கள் நினைவுகளுடன் நவீனன்.

சமாதான காலத்தில் நெடுந்தீவுக் கடலில் எரிந்த மூன்று தீபங்கள்

3 months 2 weeks ago
  • எழுத்தாளர்: தெரியவில்லை

 

6.2.2003 அன்று இரவு மன்னார் கிராஞ்சி கடற்கரை கடற்புலிகளின் முகாமில் இருந்து மீன்பிடி வள்ளத்தில் பயணம் தொடங்கியது. 4 கரும்புலிகளின் இருந்தனர். நான் மட்டும் கடற்புலி போராளி. படகின் மேல்தளத்தில் நான் தூங்கி கொண்டு இருந்தேன். 

எனக்கு உரிய பணி வள்ளத்தில் பிரயாணம் மட்டுமே. 4 கடற்கரும்புலிகள் தான் வள்ளத்தின் மாலுமிகள். நான் ஒரு பிரயாணி.

7.02.2003 அதிகாலை 3 மணிக்கு நெடுந்தீவை கடக்கும் போது இயந்திரம் பழுது படுகிறது. நீண்ட முயற்சி செய்தும் இயந்திர பழுதை திருத்த முடியவில்லை. இலங்கை கடற்படை டோரா படகு எம் வள்ளத்தை அவதானித்தது. அருகில் வந்தது.

இந்தக் காலத்தில், மன்னாரில் லெப்டினன் கேணல் பகலவன் அண்ணா பொறுப்பாளர். அடுத்த நிலையில் சுடரொளி அண்ணா இருந்தார். இன்று லண்டனில் இருக்கிறார். உடன் பகலவன் அண்ணா, சுடரொளி அண்ணா, சூசை அண்ணா தொடர்பில் வந்தார்கள். நிலமை விளங்கப்படுத்தப்பட்டது.

சூசை அண்ணா, சுடரொளி அண்ணாவிற்கு கட்டளை இட்டார், கடற்புலிகளின் முகாமில் இருக்கும் வேகமான படகில் சென்று நிலமையை நேரில் பார்க்கச்சொல்லி. 

நிலமை இப்படி இருக்க இலங்கை டோரா எம்மை நெருங்கியது. அச்சம் இன்றி எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி நாம் ஐவரும் இருந்தோம். 

இலங்கை கடற்படை டோரா படகு எம்மீது மோதும் அளவிற்கு வந்தது. எம் வள்ளத்தை அணைக்க தயார் ஆனது.
இந்த நிலையில் சுடரொளி அண்ணாவின் படகும் எம்மை நெருங்கியது. 

உடனே கடற்படைக்கு சொன்னோம், "நீங்கள் எம்மை பரிசோதிக்க முடியாது. நாங்கள் கடற்புலிகள். மீன்பிடிக்க சென்றோம். இயந்திர கோளாறு காரணமாக நிற்கிறோம். எம்மை கரைக்கு கொண்டு செல்ல எமது படகு வந்து விட்டது" என்று. 

ஆயினும் இலங்கை கடற்படை எம் வள்ளத்தை வலுக்கட்டாயமாக தங்களின் முகாமுக்கு கட்டி இழுக்க தொடங்கியது.

நிலமை விபரீதம் ஆனது. இதை அவதானித்து கொண்டு இருந்த சூசை அண்ணா உடனே உத்தரவு இட்டார், என்னை சுடரொளி அண்ணா இருக்கும் படகில் ஏறு என்றார். நான் ஏறினேன். என்னோடு இன்னொரு கரும்புலி வீரனையும் இணைத்துக்கொண்டு வள்ளத்தை விட்டு சுடரொளி அண்ணா இருக்கும் படகில் ஏறினேன்.

அடுத்து சூசை அண்ணா இலங்கை கடற்படைக்கு கூறினார், "எமது வள்ளத்தை விட்டு விடுங்கள். இப்போ போர் நிறுத்த காலம். நாங்கள் போர் புரிய வரவில்லை" என்று. பலதடவை கூறியும் இலங்கை கடற்படை கேட்கவில்லை.

மீன்பிடி வள்ளத்தில் இருக்கும் கரும்புலிகள் நாம், பகலவன் அண்ணா, சூசை அண்ணா அனைவரும் ஒரே அலைவரிசையில் வந்தோம், அனைவரின் உரையாடலையும் எல்லோரும் கேட்டு கொண்டு இருந்தோம். எமக்கு நிலமை புரிந்து விட்டது. அந்த நேரத்தில் ஒரு அமைதி. கரும்புலிகள் மூவரும் ஒரே இடத்தில் இருந்து மூவரும் தங்கள் கைகளை பற்றி பிடித்து கொண்டு புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று கூறி வெடிமருந்தை வெடிக்க வைக்க தீயானது கடலில் மூண்டது. கூட இருந்தவர்கள் கடலினில் கரைந்து போக என் இதயம் வலியின் வேதனையை அனுபவித்தது. அதி வேகமாக கரைவந்து சேர்ந்தோம். என் சுவாசம் கூட அழுதது.

தலைவன் பிரபாகரன் புலிகளின் கப்பலின் நிறத்தை மாற்ற சொன்னதால் தப்பிய கப்பல்

3 months 2 weeks ago
  • எழுத்தாளர்: தெரியவில்லை

 

புலிகள் அமைப்பில் இருந்தால் புலியாக இருத்தல் வேண்டும். எனது நீண்ட பயணத்தில் பல ஆயிரம் போராளிகளின் பல சாதனைகள். அதில் தான் புலிகள் இயக்கம் பாரிய வெற்றியை தன்னகத்தே கொண்டு இருந்தது.

நானே பல சாதனைகளுக்கு சொந்தக்காரன். எனக்கு புலிகள் பற்றி வியாக்கியானம் கூறக்கூடாது. நாம் தாம் புலிகள். எம்மோடு நின்ற ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தான் புலிகள். 

நான் ஒரு கணப்பொழுதில் சாதித்து இவை:

2001 ஆண்டு இந்தியா-அவுஸ்டேலியா கிரிகெட் விளையாட்டு சென்னையில் நடை பெற்றுக்கொண்டு இருந்த நேரம் புலிகளின் இரண்டு கப்பல்கள் சென்னையில் இருந்து 70 கடல்மைல் தூரத்தில் நின்று கொண்டு இருந்தது.

மஞ்சோசி என்ற கப்பலில் இருந்து கொய் என்ற கப்பலுக்கு பொருட்களை மாற்றி ஏற்றிக்கொண்டு இருந்தோம்.

கொய் கப்பலுக்கு கப்டனாக ரஞ்சன் அண்ணாவும் மஞ்சோசிக்கு கப்பலுக்கு ரவிசங்கர் கப்டனாகவும் இருந்தனர். அப்போது தான் ரவிசங்கர் கப்டனுக்கு சேவையை பாராட்டி ஓய்வு வழங்க தலைவன் முடிவு செய்கின்றார். சாளையில் பொறுப்பாளராக இருந்த ரஞ்சன் அண்ணாவை கப்பலை பொறுப்பெடுக்க தலைவன் கட்டளை இட ரவிசங்கர் கப்டனுக்கு ஓய்வுக்காக கப்பல் மாறுகின்றார்.

மஞ்சோசி கப்பலில் இருந்து பொருட்களை இறக்கி கொண்டு இருந்த நேரம் நான் கப்பல் தெலைக்காட்சி அன்ரனாவை திருப்பினேன். தொலைகாட்சி படம் ஏதும் இழுக்கின்றனவா என்று பார்க்கவே அவ்வாறு செய்தேன். அந்நேரத்தில் இந்திய தூர்தர்சன் தெலைக்காட்சியில இந்திய-அவுஸ்ரெலிய கிரிக்கெட் விளையாட்டு போய்கொண்டு இருந்தது. நான் உடனே ரவிசங்கர் கப்டனுக்கு அதைக் கூறினேன். அவர் மகிழ்ந்தார். அடுத்த கப்பலான கொய்யில் கப்டன் ரஞ்சன் அண்ணாவுக்கும் கூறினேன். பொருட்கள் அனைத்தும் மாற்றப்பட்டது. இரு கப்பல்களும் இணைந்தே இருந்தது. கடல் அமைதியாக இருந்தது. அனைவரும் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினார்கள்.

சில மணி நேரத்தில் இந்திய கடலோர காவற்படையின் விமானம் இரண்டு எமது கப்பலை நல்ல பதிவாகவே நெருங்கியது. எமக்கு என்ன செய்வதெற்னு என்று புரியவில்லை. உடனே இரண்டு கப்பல்களின் இயந்திரத்தையும் இயங்க வைத்தோம். இரண்டு கப்பல்களும் வேறு வேறு திசைக்கு ஓட தொடங்கிய போது மஞ்சோசி கப்பலை ரவிரங்கர் கப்டன் வேகத்தை குறைத்து ஓடினார்.

கொய் கப்பலி ஆயுதங்கள் அதிகம் என்பதலும் ஆட்லறியும் உள்ளதாலும் வெகமாக ஓடவிட்டு மஞ்சோசி கப்பல் மெதுவாக ஓடிக்கொண்டு இருந்தது. அந்நேரம் இந்திய கடற்படை கப்பல் ஒன்று எம்மை நெருங்கியது. நாமும் திசை மாற்றாமல் சிங்கபூர் போவது போல் சென்று கொண்டு இருந்தோம். 2 மணிநேரம் எமக்கு பின்னால் பின் தொடர்ந்த இந்திய கடற்படை கப்பல் மொதுவாக எம்மை விலத்தி சென்னை துறைமுகத்திற்கு திருப்பிக்கொண்டு சென்றது.

அந்த நேரத்தில் இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு அறிவிக்கின்றது, சந்தேகத்திற்கு இடமான பச்சை நிற கப்பல் முல்லைதீவுக்கு 300 கடல்மை தூரத்தில் செல்கின்றது என்று. இலங்கை கடற்படை உடனே எம்மை நோக்கி வரத்தொடங்கியது.

சாளையில் இருந்த தொலைதொடர்பு ஒட்டுக்கேட்கும் பிரிவு இந்த செய்தியை சூசை அண்ணாவுக்கு கூற, சூசை அண்ணா நிலமையை தலைவனிடம் கூற, தலைவின் கட்டளை வருகின்றது கப்பலின் நிறத்தை மாற்றச்சொல்லி.

ரவிசங்கர் கப்டன் எம்மை அழைத்து விசயத்தை கூறினார். தலைவன் கப்பலின் நிறத்தை மாற்ற நினைத்ததை நானும் லெப்டினன் கேணல் செம்பகச்செல்வனும் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினோம். கயிற்றில் பலகை கட்டி கப்பலின் வெளிப்புறத்திற்கு இறங்கினோம். 

சவால் நிறைந்தது. கப்பல் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது. கடல் அலைகள் மோதுகின்றது. பயங்கரமான நிலமை. மனதில் உறுதி எடுத்தோம். 

கப்பலில் குகா என்ற பொதுமகனும் வள்ளுவன், சகாதேவன் என்று சிலரும் இருந்தனர். அவர்கள் அனைவரும் நாங்கள் கப்பலில் வெளிப்புறத்தில் தொங்கிகொண்டு இருந்து கேட்கும் பொருட்களை எமக்கு தந்தனர். பெயின்ட்களை தருவார்கள், உணவு, தண்ணீர் என்று அனைத்தும் மரணத்தின் விழிம்பில் இருந்து குகா பலதடவை எம்மோடு இணைத்தார். 

நிறம் மாற்றினால் கப்பல் தப்பும் இல்லையேல் 12 பேர் வீரமரணம். அத்தோடு கப்பலில் இருந்த அனைத்து பொருட்களையும் புலிகள் இழப்பார்கள் என்ற நிலமை புரிந்தது. எப்படிப்பட்ட சாவல்!

இந்த நிலையை மாற்ற எம்மிடம் கிறே நிறம் தான் அதிகமாக இருந்ததால் உடனே இருவரும் இணைந்து கப்பலின் நிறத்தை பல மணிநேர போராட்ரத்திற்கு மத்தியிலும் பல மணிநேர கடும் முயற்சியாலும் கப்பல் நித்தை மாற்றினோம்.

எம் இருவராலும் இயங்க முடியவில்லை. கப்பலின் நிறத்தை மாற்றும் வரை அதிக அளவான சக்தியுடன் இயங்கி கொண்டு இருந்த நாம் நிறத்தை மாற்றிய பின் எமது உடல் நிலை மேசமானது.

ஒரு பெரும் கப்பலுக்கு நிறம் மாற்றுவது என்பது கற்பனையில் நடக்காது. ஆனால் நாங்கள் இருவர் நடத்தினோம். உடனே கப்பலின் மேல் தளத்திற்கு நாம் இருந்த பலகையை தூக்கியே எடுத்தார்கள். நாம் கப்பல் தளத்திலே வீழ்ந்து படுத்து இருந்தோம்.

சில மணி நேரத்தில் இலங்கை கடற்படை நெருங்கியது. எம்மை அழைத்தது. ரவிசங்கர் கப்டன் ஆங்கில புலமை மற்றும் கடல் அனுபவம் அதிகம் கொண்டவர் என்பதால் இலங்கை கடற்படைக்கு சவால் விடும் விதமாக பேசினார்.

எமது கப்பலில் உடனே நாம் இந்தோனேசிய கொடி கட்டினோம். சில மணிநேரம் எம்மை பின் தொடர்ந்த இலங்கை கடற்படை எமது கப்பலை நிறுத்தச்சொல்லி கட்டளையிட ரவிசங்கர் கப்டன் மறுத்துவிட்டு எமது பாதையில் சென்றார். நாம் யாரும் கப்பலுக்கு வெளியில் வரவே இல்லை. அறைகளின் உள்ளே இருந்தோம். இலங்கை கடற்படை தொலை நோக்கி வைத்து எமது கப்பலை பார்கின்றார்கள். கப்பலில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் இல்லை என்று முடிவு செய்து இலங்கை கடற்படை திரும்பிக்கொண்டு திருகோணமலை துறைமுகம் சென்றது.

நாம் பூமி பந்தின் மத்திய பிரதேசத்தை தாண்டிச் சென்று எமது கப்பலை நிறுத்தி ஓய்வு எடுத்து கொண்டோம். தலைவனின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த தருணங்களின் இதுவும் ஒன்று. தலைவன் கப்பலின் நிறத்தை மாற்ற சொன்னதால் நான் இன்று வரலாறு கூறுகின்றேன்.

இன்று அந்த கப்பலும் இல்லை, கூட இருந்த நண்பன் செம்பகச்செல்வனும் இல்லை. வள்ளுவன், குகா, சகாதேவன் ரவிசங்கர் கப்டன் என்று பலர் இருக்கின்றோம். அதை சில மணிநேரத்தில் மாற்றியோர்; நேரியன் மற்றும் செம்பகச்செல்வன் என்ற இரு கடற்புலிகள் ஆவர்.

செய்சின் கப்பலின் ஓட்டையை அடைத்த கதை

3 months 2 weeks ago
  • எழுத்தாளர்: தெரியவில்லை

 

2002.06.15 திகதி அன்று செய்சின் கப்பல் சுமத்திரா தீவிற்கு அண்மையில் பூமப்பந்தின் நடுவில் 0 பாகையில் நின்று கொண்டு இருந்தோம். கப்பல் கப்டன் எஸ்.கே இருந்தார். தலைமை இயந்திர பொறிஞராக நண்பன் இளங்கதிர் இருந்தான்.

இளங்கதிர் இயந்திர பகுதியில் கப்பலின் கீழ் பகுதியில் கழிவு நீர் கழிவு ஒயில் அகற்றி கொண்டு இருந்த நேரம் கப்பலில் ஓட்டை ஒன்று திடீரென வந்து விட்டது. கப்பலுக்குள் கடல் நீர் எங்களை தூக்கி எறியும் வேகத்தில் கப்பலுக்குள் ஏறியது. இயந்திரத்தின் கீழ் தளம் வரை வலு வேகமாக உள் நுழைந்தது. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் நானும் நண்பன் ஜெனர்தனனும் உள்ளே இறங்கினோம்.

தண்ணீர் வேகம் எங்களை தாக்கியது. சிறிய அளவிலான துவாரத்தில் புகுந்து இயந்திர அடிப்பகுதிக்கு சென்று அங்கே துவாரம் வீழ்ந்த இடத்தை இருவரும் இணைந்து கையில் கொண்டு சென்ற சிறிய துணியை வைத்து இருவரும் அழுத்தி பிடிப்பது என்ற நோக்கம். தண்ணீர் துவாரத்தை முதல் நிறுத்துவோம் அதன் பின் கப்பலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றுவோம் என்பது திட்டம்.

நானும் நண்பனும் துவாரம் விழுந்த இடத்தை கடினமாக போராடி 20 நிமிடத்திற்குப் பின் சென்றடைந்தோம். துவாரத்தையும் அழுத்தி விட்டோம். கப்பலுக்குள் நீர் வரத்தை தடுத்து விட்டோம். இருந்தும் எங்கள் இருவரின் கைகளை கடல் நீர் தள்ளுகின்றது. எங்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலை. கைகள் எடுத்தால் மரணம் என்ற நிலையை உணர்ந்த நாம் இருவரும் உடல் வலிமையை மன வலிமையை அதிகரித்துக்கொண்டு கைகளை அசைக்காது இருந்தோம். எங்கள் தலை மட்டும் நீருக்கு வெளியில் இருந்தது. 

பல மணி போராட்டத்தின் பின் கப்பலுக்குள் இருந்த நீரை வெளியேற்றி விட்டார்கள். நாங்கள் இருவரும் நீரில் பல பணி நேரம் கைகள் அசைக்காமல் இருந்ததால் - அதே நேரம் நாம் எங்கள் சக்தியை தேவையில்லாமல் வெளியில் விடாமல் இருப்பதற்காக கதைத்துக்கொள்ளவும் இல்லை. எங்கள் சக்தியை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

நீரை வெளியேற்றிய பின் நண்பன் இளங்கதிர் இருவருக்கும் தேனீர் கொண்டு வந்து இருவருக்கும் பருக்கிவிட்டான். தேனீர் குடித்தவுடன் சிறிய உசாரானது. எமது கைகள் அசைக்கவே இல்லை. வெளியில் சென்றான் இளங்கதிர்.

எஸ்.கே உள்ளே வந்தார். நிலமையை பார்த்தார். எங்கள் இருவரின் நிலை எஸ்.கேயை கவலை கொள்ள வைத்தது. வெளியில் சென்ற எஸ்.கே இளங்கதிர் உடன் சில மணித்தியாலத்தில் இரண்டு கம்பிகள் ஒட்டிய தட்டை கொண்டு வந்து இரண்டு முனைக்கும் இறுக்க சொன்னார்.

எம் கைகள் எடுத்த உடனே நீர் பாயும். அந்த நேரத்தில் தகட்டை வைத்து அழுத்தி கம்பிகளால் இறுக்க வேண்டும். திட்டம் சரியாக இருந்தது.

நாம் இருவரும் கைகளை நகர்தினோம். நீர் கப்பலுக்குள் பாய்ந்தது.

எங்கள் கைகள் இயங்க மறுத்தது. நண்பன் இளங்கதிர் கடினமாக போராடிக்கொண்டு இருந்தான். நாங்களும் இயங்க மறுத்த கையை வாழ்வா சாவா என்ற கேள்வில் கைகளை இயக்கி இளங்கதிருக்கு உதவினோம். இரு தகட்டையும் இறுக்கி விட்டோம். உள்ளே வந்த நீரை வெளியேற்றி அந்த பகுதியேல்லாம் கடல் நீர் இல்லாமல் துடைத்து எடுத்து நன்னீர் போட்டு துடைத்தோம்.

எங்கள் உடல் கைகளை இயக்க மறுத்தது. எங்களை தூக்கி வெளியேற்றினார்கள், நண்பர்கள். கப்பலுக்கு மேல் தளத்தில் படுக்க வைத்தார்கள். சில மணி நேரத்தில் துவாரம் விழுந்த இடத்தை சுற்றி சீமெந்து போட்டு அந்த பகுதி அனைத்தும் அடைத்து விட்டார்கள்.

கப்பல் துவாரம் விழுந்த தகவல் கேபி அண்ணாவுக்கும் சூசை அண்ணாவுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருவரும் எங்கள் செய்தி என்ன என்று பார்த்து கொண்டு இருந்தார்கள். கப்பல் மீட்ட கதையை கப்பல் கப்டன் எஸ்.கே இருவருக்கும் கூறி மகிழ்ந்தார். கப்பலில் இருந்த அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் குதுகலித்து இருந்தார்கள். எம்மால் காக்கப்பட்ட கப்பல் இன்று அத்தனை வீரர்களுடனும் கடலில் கரைந்து விட்டது. வீரவணக்கம். 

கப்பல் வரலாறு தொடரும்….

 

https://yarl.com/forum3/uploads/monthly_2024_01/large.318825823_1305785940212303_5698621076466929847_n.jpg.f0cbfefa22b80cff84acd2df5afed95f.jpg

 

large.319092480_905027497543981_75215785

 

பாலா அண்ணையை கடலால் அனுப்பிய கதை

3 months 2 weeks ago

1998 ஆண்டு சாளைத்தொடுவாயில் நீர் வரத்து அதிகரித்து இருந்தது. சாளை தொடுவாய் உடைத்து நன்னீர் கடலை நோக்கி பாய்கின்றது. சாளையில் இருந்த எல்லா வினியோக படகுகளையும் சாளைத்தொடுவாய் நோக்கி நகர்த்துகின்றோம்.

அக்காலத்தில் சாளை பொறுப்பாளராக கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா இருந்தார். இராண்டாம் நிலைப்பொறுப்பாளராக மாவீரர் லெப்டின் கேணல் சுபன் அண்ணா இருந்தார். சுபன் அண்ணா செங்கொடி படகின் கட்டளை அதிகாரியாகவும் இருந்தார். நான் ஓட்டியாக இருந்தேன். 

1998 ஆண்டு இறுதி மாதம். கடும் காற்றும் கடலலை கடுமையாகவும் இருந்தது. கடற்பிராயணம் கடுமையானதாக இருந்தது.

ஜெயசிக்குறு எதிர்சமர் கடுமையாக இருந்த காலம். தலைவர் அடிக்கடி எமது சாளை முகாம் நோக்கி வந்து போவது வழமையாக இருந்தது. தலைவருக்கும் ஓய்வாகவும் இயல்பாக இருக்கவும் எமது சாளை முகாம் இருந்தது. 

அந்த காலப்பகுதியில் அன்ரன் பாலசிங்கம் அண்ணா கடும் சுகவீனம் அடைந்து இருந்தார். இலங்கை ஐனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கா அவர்களிடம் புலிகள் உதவி கேட்டு இருந்தார்கள். புலிகள் கேட்டது மனிதாபிமானம். ஆனால் இலங்கை அரசு புலிகளுக்கு கூறியது டீல் . யாழ்பாணம் செல்லும் கடல்வழி பயணத்திற்கு கடற்புலிகள் தடையாக இருக்க கூடாது என்றும் யாழ்பாணம் செல்லும் இராணுவ கப்பல்களை கடற்புலிகள் தாக்க கூடாது என்றும் டீல். அந்த நாளே தலைவர் சாளைக்கு வந்தார். 

சாளை தொடுவாய்க்கு வந்து படகுகளை பார்வை செய்தார். சூசை அண்ணா கொஞ்ச நேரம் செல்ல வந்தார். சூசை அண்ணா வரும் வரை எம் தேசத்தின் தலைவன் எம்முடனே இருந்தார். நாங்கள் கடலுக்கு செல்வதற்கு படகுகளை தயார்படுத்திக்கொண்டு இருந்தோம்.
 
அந்த நேரத்தில் சூசை அண்ணா வந்தார். பின் இருவரும் இணைந்து படகுகளை பார்வை இட்டனர். எமது செங்கொடி படகை நீண்ட நேரம் பார்வை இட்டுச் சென்றனர். நாம் கடலுக்கு சென்று அடுத்த நாள் காலை வந்தோம்.

படகு கட்டுமான பொறுப்பாளர் சாளைக்கு வந்தார். ஆதித்தன் அண்ணா எமது படகை அளவு எடுத்துச் சென்றார்.

பின் நடந்தது வரலாற்று பதிவு.

அது ஒரு அற்புதமான தருணம். அன்று ஒருநாள் காலை ஆதித்தன் அண்ணா எமது செங்கொடி படகின் மேற்பரப்பில் கூரை மாதிரியான வடிவில் நீர் அடிக்காதவாறு இருக்க கூரை பாகம் ஒன்றை கொண்டு வந்து பொருத்தினார். 

அதே நாள் நாம் கடலுக்கு செல்வதற்காக படகை தயார் செய்து கொண்டு இருக்கும் போது இயந்திரத்தில் அனுபவம் வாய்ந்த மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மற்றும் மாவீரர் லெப். கேணல் டிக்கான் அண்ணா ஆகியோர் படகின் இயந்திரத்தை பார்கின்றனர். சுத்தம் செய்கின்றனர். இயந்திரத்தின் அனைத்து பரிசோதனைகளையும் மாவீரர் லெப். கேணல் கடாபி அண்ணா மேற்கொண்டு இருந்தார். நாம் எரிபொருள் நிரப்பி படகை சுத்தம் செய்து கொண்டோம். ஆயுதம் வைத்திருப்பவர்கள் ஆயுதத்தை சுத்தம் செய்து இருந்தனர். செங்கொடி படகு வீதியோரத்தில் மருதமரம் அணைவில் எப்போதும் நிறுத்தப்பட்டு இருக்கும். 

சாளைத்தொடுவாய் நீர் அதிகமாக இருந்தது. 

ஒரு கணப்பொழுதில் வந்தது, தலைவனின் வாகனம். இறங்கினார் தலைவர். வேக நடை போட்டு நடந்து வரும் தலைவரின் கண்கள் பிரகாசித்து கொண்டு இருந்தது. தொடர்ந்து  சூசை அண்ணாவின் வாகனம் வந்தது. தொடர்நது தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் வந்தது. அதில் இருந்து அடெல் அன்ரி இறங்கினார். எமக்கு புரிந்து விட்டது என்ன நிகழப்போகின்றது என்று. எமக்கு மகிழ்ச்சி, எமது படகில் நாம் கொண்டு செல்லப் போகின்றோம் என்று!
  
சூசை அண்ணாவுடன் சுடரொளி அண்ணா நின்று கொண்டு இருந்தார்.
 
நான் நினைக்கின்றேன், அன்று மருத்துவ பிரிவு பொறுப்பாளர் றேகா அண்ணா வந்ததாக நினைவு இல்லை. குறிப்புக்கு மட்டும்.

அன்ரன் பாலசிங்கம் அண்ணாவை வாகனத்திலிருந்து இறக்கி மெதுமெதுவாக தள்ளுவண்டி மூலம் தள்ளிகொண்டு வந்து படகில் ஏற்றினார்கள். அடெல் அன்ரியை எமது படகில் ஏற்றப்பட்டது. எமது படகில் படுகை எல்லாம் போடப்பட்டு சிறப்பாக செய்து இருந்தோம்.

உடனடியாக சூசை அண்ணா படகில் உள்ள போராளிகளை மாற்றம் செய்தார்.  இயந்திர பொறிஞர் மாற்றம் நடந்தது. சுடரொளி அண்ணாவை கட்டளை அதிகாரியாக ஏற்றினார். கட்டளை அதிகாரியாக இருந்த சுபன் அண்ணா ஓட்டியாக மாற்றம் செய்யப்பட்டது. என்னை இறங்க சொன்னார் சூசை அண்ணா.

இப்படி மாற்றம் செய்து கொண்டு இருக்கும் போது தலைவர் சூசை என்று அழைத்து, "சூசை படகில் ஏறி நீர் போகலாம்!" என்றார். அங்கு நின்ற கடற்புலி போராளிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. 

சூசை அண்ணாவை கடலுக்கு அனுப்பவதா? ஒன்று நடந்தால் நிலமை என்ன ஆகும்? அப்போது அருகில் நின்ற தலைவன் இருக்கின்றார் என்ற வைராக்கித்துடன் பணிகளை தொடங்கினோம். அனைத்து படகையும்  கடலுக்கு அனுப்பினோம்.

செங்கொடி படகு செல்லும் போது தொடுவாய் இரண்டு பக்கமும் கடற்புலிகள் சென்று நின்றுகொண்டு இருந்தனர். 

படகு பயணம் ஆனது. கடலின் அலை அடி அதிகமாகவும் காற்றின் வேகம் பலமாகவும் இருந்தது. எல்லா போராளிளும் கை காட்டி அனுப்பி வைத்தோம்.

பிற்பாடு தமிழ்செல்வன் அண்ணா சென்று விட்டார். வெளியில் இருந்து வந்த சிலர் சென்று விட்டனர். ஆனால் எமது தேசத்தின் தலைவன் எமது படகுகளின் கட்டுபாட்டு அறைக்குச் சென்று சூசை அண்ணாவிற்கு பதில் பொறுப்பில் இருந்தார்.
 
தலைவர் சற்றும் தூங்காமல் படகுகளை அவதானித்து கொண்டு இருந்தார். அப்போது மதி தான் கட்டுப்பாட்டறை பொறுப்பளர். அபிமஞ்சு அண்ணாவும் இருந்தார். சாளை கடற்புலி போராளிகள் யாரும் தூங்கம் கொள்ளாமல் கடலையே பார்த்து கொண்டு இருந்தோம்.
 
100 கடல் மை தொலைவில் காத்து நின்றார் கௌசிகன் அண்ணா, புதிய கப்பலுடன். அன்டன் பாலசிகம் அண்ணா ஏற்றப்பட்டார். அடெல் அன்ரிக்கு சரியாக சத்தி, உடற்சோர்வு என்று பல இருந்தது.

கப்பல் தொடரை பின் தொடர்கின்றேன்.

சாமம் கடந்து சூசை அண்ணாவின் படகு வந்தது. தொடுவாய்க்கு உள்ளே வந்த படகை நாம் எல்லோரும் இணைந்து கரைக்கு கொண்டுவந்து மருத மரத்தில் கட்டினோம். சூசை அணணா சிரித்தபடி இறங்கினார்.
 
தலைவன் உடன் வந்து கைகொடுத்து கூட்டி வீதிவரை சென்றார். சூசை அண்ணா சற்றும் எதிர்பார்க்கவில்லை. போராளிகள் நாமும் இதை எதிர்பாக்கவில்லை. பின் இருவரும் இணைந்து கட்டுப்பாட்டறை நோக்கி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடி அனைத்து படகையும் கரை சேர்த்துவிட்டு தலைவர் சென்றார்.
 
பின் 3 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பிற்பகல் தலைவனுக்கு போராளிகளுடன் சந்திப்பு நடக்க தயாராக இருந்தது. சாப்பாடு தயார் ஆனது. ஐஸ்கிறீம் எல்லாம் வந்தது. சந்திக்கும் இடம் எல்லாம் தயாரானது. எமக்கு மதியம் தகவல் வருகின்றது, குமாரவேல் ஊடாக, தலைவருக்கு சரியான காச்சல் என்றும் தலைவருக்கு காச்சல் கூடியது என்றும். போராளிகள் ஆகிய நாம் நொந்து போனோம்.

பின் சில நாட்களுக்குப் பிறகு எமது முகாமிற்கு வருவது போல் வந்தார். இந்த முறை கடாபி அண்ணா கூட இருந்தார்.

இந்த கதையும் தொடரும்…….

  • எழுத்தாளர்: அறியில்லை

வான்கரும்புலிகளை தமிழீழம் கொண்டு வந்த கண்ணீர் கதை

3 months 2 weeks ago
  • எழுத்தாளர்: அறியில்லை

வான்கரும்புலிகளான ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை உலகத்துக்கு தெரியப்படுத்திய பாரிய கடமை & பொறுப்பு கடற்கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா மற்றும் கௌரியையே சாரும்.

மூருவருடனும் நீண்ட நாட்கள் பழகி இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் கவலை அதிகம் தான். இதில் கௌரி என் நண்பனும் கூட. இப்போதும் இந்த கதாபாத்திரத்தின் நாயகன் இருக்கிறான்.

10.03.2003 அன்று கடற்புலிகளின் கப்பல் முல்லைதீவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது. அந்த தகவல் இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு கொடுத்த சாயுரா என்ற பாரிய கப்பலை புலிகளின் கப்பல் நோக்கி செலுத்தப்படுகிறது. புலிகளின் ராடாரில் படவில்லை.

ஒரு மீன்பிடி வள்ளத்தில் கௌரி எமது கப்பலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான் கௌரி. கடற்புலிகளின் கப்பல் கெளரியை எதிர்பார்த்து நின்ற போது அங்கே வந்தது, சாயுரா. புலிகளின் கப்பலை வழி மறித்தது. 

இதை தெரிவிக்க ரஞ்சன் அண்ணா கெளரியை தொடர்பு கொண்ட போது, கௌரி எமது கப்பலை நோக்கி வர இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கும் என்று முடிவெடுக்க, அனைத்தையும் உணர்ந்த ரஞ்சன் அண்ணா உடனே கௌரி வள்ளத்தை நோக்கி கப்பலை செலுத்துகிறார். சாயுரா பின்தொடர்ந்து செல்கிறது. சாயுரா கடற்புலிகளின் கப்பலை தாக்கவில்லை. ஆனால் சாயுராவின் கண்ணில் கௌரியின் மீன்பிடி வள்ளம் தெரியவில்லை.

ரஞ்சன் அண்ணா உடனடியாக வான்கரும்புலி ரூபன்-சிரித்திரன் ஆகியோரை கெளரியின் வள்ளத்தில் இறக்கி விடுகிறார். உடனே கப்பலை திருப்புகிறார் ரஞ்சன் அண்ணா. கப்பலும் மீன்பிடி வள்ளமும் நிக்காமல் ஓடியபடி அணைத்து தான் ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை ஏற்றினார்கள். கடினமான பணி.

கௌரி திருகோணமலை சல்லி நோக்கி மீன்பிடி வள்ளத்தை செலுத்துகிறான். கப்பலை குறி வைத்து தாக்குகிறது சாயுரா.

சூசை அண்ணா கண்காணிப்பு குழுவை தொடர்பு கொண்டு எமது வணிக கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட விபரத்தை அறிவிக்கிறார். கண்ணாணிப்புக் குழு சொன்னது, கடற்படையிடம் போகும் படியும் அவர்கள் பரிசோதனை செய்து விட்டு விடுவார்கள் என்றும். அதிர்ந்த சூசை அண்ணா ரஞ்சன் அண்ணாவை தொடர்பு கொண்டு சொன்ன போது ரஞ்சன் அண்ணா சிரித்தார்.

சாயுராவின் தாக்குதல் அதிகரிக்கின்றது. 

கப்பல் முழுவதும் எரிபொருள் ஊற்றப்படுகிறது. வெடிமருந்தை வெடிக்க வைக்கப்படுகிறது. கப்பல் கடலில் மூழ்கின்றது. கடலினில் காவியம் நடைபெறுகிறது. மாண்டு போன அத்தனை பெரும் என் ஆருயிர் நண்பர்கள்!

ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் திருகோணமலை சல்லி கடற்கரைக்கு வந்து சேருகிறார்கள். அங்கு இருந்து வன்னிக்கு வந்தார்கள். 

ரூபன்-சிரித்திரன் அண்ணாவை பத்திரமாக பாதுகாத்து கொண்டு வந்த அத்தனை பேரும் காவியமாகி விட்டார்கள். கௌரி மட்டுமே சாட்சியாக உள்ளான்.

அதன் பின் ரூபன்-சிரித்திரன் அண்ணாக்கள் வான்கரும்புலியாக வெடிக்கிறார்கள். வீரவணக்கம் ரூபன்-சிரித்திரன்  அண்ணாக்கள்.

இருவருடனும் இரண்டு மாதங்கள் நன்கு பழகியவன் நான். இந்து மாகடலில் இருந்து செங்கடல் சென்று வந்துள்ளோம். 

கப்பலில் மாண்டு போன அனைவரும் என் ஆருயிர் நண்பர்கள். இவர்களை நெஞ்சில் நிறுத்த இதயம் கனக்கிறது. வீரவணக்கம்

இவர்களை விட்டு கரைக்கு வந்து 3 நாட்களின் பின் என்னையே கௌரி தான் கொண்டு வந்தான். நன்றி கௌரி

சிங்கள மக்கள் தவறுதலாகக் கொல்லப்பட்டமைக்காக கடிந்து கொண்ட தலைவர்

3 months 2 weeks ago

பிரபாசெழியன்
 

முதன்முதலாக தாக்குதல் அணியொன்றிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்று. திருகோணமலை மாவட்டத்தில் சிறியதொரு ராணுவ முகாம் ஒன்றினை தாக்கியழிக்கும் கடமை எனக்கு தலைவரால் தரப்பட்டது. தலைவர் இட்ட கட்டளையை எனது தலைமையிலான தாக்குதலணி வெற்றிகரமாக செய்து முடித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக தாக்குதலின்போது சில அப்பாவி சிங்கள மக்கள் பலியாகிவிட்டனர். 

தலைவர் இந்த செய்தியறிந்ததும் என்னை வன்னிக்கு வரச்சொன்னார் போனேன். கிழி விழபோகுது எண்டு தெர்ந்துதான் போனேன்.

தலைவர், "வாரும் வாரும் உம்மைதான் எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் உம்மிடம் நான் ஆமிகாரனெ அடிக்க சொன்னேனா இல்ல சிங்கள சனத்தை அடிக்க சொன்னேனா" என்று சற்று கடுமையான தொனியில்கேட்டார். தவறுதலாக நடத்திட்டண்ணை என்றேன். "நீர் செய்தது பிழை இனி இப்படியான அலுவல்கள் நடக்ககூடாது நீங்கள் தாக்குதலை தொடுக்கும்போது அப்பாவி சனம் பாதிக்கப்படும் எண்டு அறிந்தால் தாக்குதலை கைவிட்டிட்டு திரும்பி வாங்கோ அப்பாவி மக்களை கொன்றுவிட்டு வெற்றிவிழா கொண்டாட ஏலாது" என அறிவுறுத்தி சொன்னார். இனி இப்படி நடக்காதன்னை எண்டேன். மறுகணமே "சாப்பிட்டியளா? முன்பைவிட மெலிந்திட்டியள்! உடம்பை பாருங்கோ" எண்டார். இதுதான் எங்கள் தலைவர் எங்களுக்கு தாயுமானவர்.

சிங்கள பேரினவாதம் அப்பாவிதமிழ் மக்கள்மீது ஈவிரக்கமின்றி காட்டிய கொடுரத்தை அண்ணையும் அப்பாவி சிங்கள மக்கள்மீது காட்டியிருந்தால் ராஜபக்க்ஷே கோத்தபாயவை போல் அண்ணையும் நினைத்திருந்தால் முள்ளிவாய்கலுக்கு முன்னரே கொழும்பு எரிந்திருக்கும் தென்னிலங்கையில் அணைக்கட்டுகள், பாலங்கள், குடியிருப்புகள் அனைத்தும் தகர்ந்திருக்கும். ரயில் நிலைய்ங்கள் புத்த விகாரைகள் எல்லாம் சிதைந்து சின்னா பின்னமாயிருக்கும் சிங்கள மக்கள்தொகை பாதிக்கு கீழ் குறைந்திருக்கும். அப்படி செய்ய அவன் பாமரன் இல்லை, பிரபாகரன்!

எந்தன் உயிரே! உணர்வே! ஆசானே! அன்னையே! தந்தையே!
அறம் சார்ந்து நியாய வழி நடந்து நீ நடத்திய தர்மயுத்தம்தான் பழம்பெருமை கொண்ட தமிழித்தின் கடைசி வரலாறு. நீ தான் கடைசி வீரன். இனியொருவன் உன்னைப்போல தமிழினத்தில் பிறக்கபோவதில்லை.

பிரபாசெழியன்
 

எஸ்.ஒ. அண்ணையின் மெய்க்காவலன் கடற்கரும்புலி மேஜர் பாலனுடனான அனுபவம்

3 months 2 weeks ago


எழுத்தாளர்: தெரியவில்லை
 

பாலன் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக இருந்த நேரத்தில் தான் நானும்  புதியவராக மெய்பாதுகாவலராக இணைந்தேன். அந்த  நேரத்தில் சூசை அண்ணா தேவிபுரத்தில் முகாம் அமைத்து இருந்தார். 

கடற்புலிகளின் இரு முகாம்களை நாங்கள் எங்களுடைய தேவைக்காக பயன்படுத்தி வந்தோம்.

சூசை அண்ணாவுடன் செல்லும் இடம் எல்லாம் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக பாலா அண்ணா செல்வார். ஓய்வு எடுக்க மாட்டார்.

மெய்பாதுகாவலராக இருக்கும் அனைவரும் கட்டாயம் மாறி தான் ஆக வேண்டும். ஆனால் பாலன் அண்ணா மாறமாட்டார். மாற்றி விட சொல்லியும் எமது பொறுப்பாளர் கருணா அண்ணா சொல்ல மாட்டார். 

பாலா  அண்ணாவின் சிந்தனை, அர்ப்பணிப்புத் திறன், அவரின் செயல், வித்தியாசமான பேச்சுத்  தமிழ், எந்த  வேலையை எடுத்தாலும் அதை முடிக்கும் தன்மை என்பன பாலா அண்ணாவின் அருகில் இருக்கும் போது எமக்கு இருந்த உணர்வுகள் ஆகும்.

பாலா அண்ணா அதிகமாக சூசை அண்ணாவின் குழந்தைளுடனே வீட்டில் நேரத்தை பொழுது போக்குவார். அப்போது சூசை அண்ணாவின் குழந்தைகளுக்கு வயது சிந்துவுக்கு மூன்று, மணியரசனுக்கு இரண்டு தான். இருவரிலும் சரியான பாசம். இருவரை ஒரே நேரத்தில் தோளில் தூக்கி கொண்டு சுற்றுவர். சிந்துவும் மணியரசனும் வித்தியாசமான உணர்வில் மகிழ்வார்கள்.

எந்த நேரமும் சூசை அண்ணாவிடம் கேட்டு  கொண்டே இருப்பார், நான் கரும்புலியாக செல்ல போகபோகின்றேன்  எனக்கு விடை தாருங்கள் என்று. அதற்கு சூசை அண்ணா விடை கொடுக்க மறுத்து கொண்டே தான் இருந்தார்.  

ஒருநாள் சூசை அண்ணா முற்றத்தில் இருந்து செய்தி தாள்கள் படித்து கொண்டு இருந்தார். பாலன் அண்ணா கடுமையா உறுதியாக சூசை அண்ணாவிடம் எனக்கு விடை தாருங்கள் என்று கேட்டார். அதிர்ந்து போனார் சூசை அண்ணா. சரி தருகிறேன் என்றார். அருகில் நான் செய்தி தாள்களை மடித்து அடுக்கிக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். 

நான் சிறியவன்; எனக்கு 16  வயது தான். எனக்கு போர் பற்றிய அனுபம் இல்லை. இருவரும் வாக்குவாதப்பட்டு வென்றது பாலன் அண்ணா. நான் அவதானித்து கொண்டு இருந்தேன்.
 
அன்று இரவு சாலைக்குச் சென்றோம். அங்கே லெப். கேணல் டேவிட் அண்ணா சாள்ஸ் படையணிக்கு பொறுப்பாக இருந்தார். மகளிர் படையணிக்கு துர்க்கா அக்கா இருந்தார். 

அந்த நேரத்தில் கரும்புலிகளின் படகுகள் அனைத்தும் சிறியவை. வெடிமருந்துகளும் வெறும் 500 கிலோவுக்கு உள்ளே தான். இயந்திரம் ஒன்று கூட 200, 250 குதிரை வலு இல்லை. வெறும் 100, 150 குதிரை வலு இயந்திரம் தான் இருந்தது.
 
பாலா, பார் உனக்கான கரும்புலிப்படகு இது இல்லை. உனது படகு இது தான் என்று கடல்புலிகளின் விநியோக படகை காட்டி சூசை அண்ணா கூறினார். எல்லோரும் அதிர்ந்து போனார்கள். உடனே சூசை அண்ணா கூறினார், பாலாவுக்கான கரும்புலி படகில் மூன்று பிரிவுகளை கொண்ட  3000 கிலோ வெடி மருந்து ஏற்ற வேண்டும் என்றும் அத்தோடு கிளைமோர் 1000 கிலோ வெடிமருந்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். பாலா அண்ணா மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். 

நாம் நினைத்தோம் மொத்தமாக 4000 ஆயிரம் கிலோ வெடித்தால் மனிதனின் உடல் எப்படி சிதறும் என்று! பாலா அண்ணா கூறினார், இதை வைத்து இலங்கை கடற்படையின் மிகப் பெரும் கடற்கலத்தை மூழ்கடிக்கலாம். கடற்கலம் சிதறும், கடலே அக்கினியாக மாறும் என்று கூறி மகிழ்ந்தார்! இதை கேட்டு கொண்டு இருந்த எனக்கு தலை சுற்றியது. நானே சிறியவன், போர் பற்றி அறிய ஆர்வம் கொண்டு இருந்த காலத்தில் தான் இது நிகழ்த்தது.
 
அடுத்த நாள் காலை பாலா அண்ணாவை சூசை அண்ணா அழைத்தார். விநாயகம் அண்ணாவையும் அழைத்து  பாலா உமது பொறுப்புக்களை விநாயகத்திடம் கொடுத்து விட்டு முதல் இயந்திரம் திருத்தும் வேலையை பழகவும் என்று கூறி அனுப்பினர். படிப்பு ஆறு மாதம். அந்த நேரத்தில் முல்லைத்தீவு சண்டை "ஓயாத அலைகள் ஒன்று" நடைபெற போகின்றது. பாலா அண்ணாவின் பயிற்சியும் முடிகின்றது. மீண்டும் சூசை அண்ணா பாலா அண்ணாவை   மெய்ப்பாதுகாவலராக இணைத்து கொண்டார். 

முல்லைத்தீவு பிடிபடுகின்றது. கடல்புலிகளின் கடற்பரப்பு நீள்கின்றது. முல்லை கடலே கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் வருகின்றது. 

புதிதாக ஒரு விநியோக படகு ஒன்று தாயரிக்கப் படுகின்றது. அந்தப் படகு வினியோகத்திற்கு அனுப்பிவிட்டாத்தான் பாலா அண்ணாவுக்கான படகை விநியோகத்தில் இருந்து எடுத்து கரும்புலித் தாக்குதலுக்கு தயார்ப்படுத்தலாம் என்று இருக்கும் போது சாலை கடற்புலிகளின் முகாம் வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகின்றது. சாள்ஸ் படையணியின் முகாம் (வன் வன் (1.1))  முற்றாக தாக்குதலுக்கு உள்ளாகின்றது. அதில் ஆனந்தபாபு  மாஸ்டர் உடன் ஐந்து பேர் வீரச்சாவு அடைகின்றார்கள். கடல்புலிகளின் தாக்குதல் பிரிவை முள்ளிவாய்க்கால் புளியடிக்கு மாற்றுகின்றோம்.

அந்தக் காலப் பகுதியில் பாலா அண்ணாவுக்கான படகைத் தயார் செய்ய யாட்டுக்கு கொன்டு சென்றனர். சிறிய காலத்தில் படகும் தயார் ஆனது. படகில் வெடிமருந்து ஏற்றும் இடத்திற்கு சூசை அண்ணா சென்று பார்த்தார், பாலா அண்ணாவையும் கூட்டி கொண்டு. படகை கண்டதும் பாலா அண்ணா ஓடி சென்று ஏறினார். உள்ளே புகுந்து பார்த்தார். அத்தனையும் வெடிமருந்து. பாலா அண்ணா மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். 

அன்று இரவு பாலா அண்ணா தூங்கவே இல்லை. காவலில் இருக்கு எம்மோடு வந்து பேசி கொண்டே இருந்தார். நாம் காவலில் இருந்து மாறி கொண்டே தான் இருந்தோம். விடியற்காலை தூக்கம் வருகின்றது என்று சொல்லி விட்டு தூங்க சென்று விட்டார். விடிந்தது காலையில் நாங்கள் தயார் ஆனோம். பாலா அண்ணா நல்ல தூக்கம். சூசை அண்ணா "பாலா!" என்று அழைத்தார். நாம் சொன்னோம், "பாலா அண்ணா இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இப்போது தான் தூங்குகின்றார்" என்று. அதற்கு சூசை அண்ணா கூறினார், "அவன் தூங்கட்டும். எதிரி பாரிய நடவடிக்கையினை வவுனியாவில் இருந்து ஆரம்பிக்க போகின்றான். அதற்கு மட்டக்களப்பில் இருந்து போராளிகளை கடலால் ஏற்றி வரவேண்டும். செம்மலை செல்வோம்." என்று கூறி செம்மலை சென்றோம்.

அங்கே மட்டு அம்பாறைக்கு சென்று போராளிகளை ஏற்றும் படகு தயார் ஆனது. அத்தனை படகுகளும் திருக்கோணமலை கடக்கும் மட்டும் சூசை அண்ணா கட்டுப்பாட்டு அறையில் தான் இருந்தார். திருக்கோணமலை துறைமுகத்தை கடந்ததும் சூசை அண்ணா முகாம் திரும்பினார். 

முகாம் வந்து பாலா அண்ணாவை அழைத்து சொன்னார், "உனக்கு மூன்று கிழமை விடுமுறை தருகிறேன். அம்பாறை சென்று உனது குடும்பத்துடன் இருந்துவிட்டு வா." என்று கூறினார். பாலா அண்ணா தயார் ஆனார். அடுத்த நாள் பாலா அண்ணாவை செம்மலை கடற்புலிகளின் முகாமுக்கு கொண்டு சென்று விட்டோம். இரவு படகில் பாலா அண்ணா ஏறுவதற்கு முன் என்னை கட்டிப் பிடித்து அணைத்தார். படகில் ஏறியதும் கை அசைத்தார். சூசை அண்ணாவும் கை அசைத்தா.ர் விடைபெற்று சென்றார், பாலா அண்ணா விடுமுறைக்காக. 

 

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%

 

 

மே 12 அன்று கடற்கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க நடவடிக்கையும் இறுதிக் கடற்சமரும்

3 months 2 weeks ago

எழுத்தாளர்: தெரியவில்லை

 

இன்றும் மறக்க முடியாத நாள் தான் 12/05/2009!

எங்களுடைய ஆயுதங்கள் மெளனிப்பதற்கு சில தினங்களுக்கு முன், அதாவது 12/05/2009 அன்று, ஒரு தரையிறக்கத் தாக்குதல் மேற்கொள்வதற்காக கடற்கரும்புலிகளினால் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியிடம் அனுமதி கோரப்பட்டது. 

அவர்களின் விருப்பத்திற்கமைய 13 பேர் கொண்ட கடற்கரும்புலிகளின் அணியினைக் கொண்டு ஒரு தரையிறக்கத் தாக்குதல் செய்வதாக வட்டுவாகல் கடற்புலிகளின் தளத்திலிருந்து திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. அதற்காக 2 கரும்புலிப் படகும் ஒரு புளூஸ்ரார் படகும் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. 

3 கடற்கரும்புலிகள் தரையிறக்க வேண்டிய பாதையைத் திறக்க மற்றைய 10 கடற்கரும்புலிகளும் தரையிறங்கித் தாக்குதல் செய்ய வேண்டும், அவர்களுக்குத் துணையாக தரையூடாகவும் ஒரு அணி சென்று வட்டுவாகல் கடல்நீரேரியைக் கைப்பற்றுவதே இத் தரையிறக்கத் தாக்குதலின் நோக்கமாகக் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியால் திட்டமிடப்பட்டது. 

இத் திட்டத்திற்கமைய எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் பணி ஆரம்பமானது. அதன் முதற் கட்டமாகக் கடற்கரும்புலிகளைத் தேர்வு செய்தல் ஆரம்பமானது. அப்பொழுது தான் ஒன்றைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் கடற்கரும்புலிகள் ஒவ்வொருவரும் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு நின்றார்கள். தாய் மண் மீது கொண்ட பற்றினால் இறுதிக் கட்டம் என்று தெரிந்தும் தன் தாய் நாட்டிற்காக நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அபிலாசையும் அவர்கள் மனதில் உறுதியாய் இருந்தது. 

அவர்களில் ஒரு கடற்கரும்புலி அன்றைய தினம் தனது பிறந்தநாள் என்பதனாலும் முல்லைப் பெருங்கடற்பரப்பில் கடலூடாகச் சென்று தாக்கும் இறுதித் தாக்குதல் என்பதனாலும் அத் தாக்குதலில் தானும் பங்கு பெற வேண்டுமென்று அனுமதி கோரினார். அவர் வேறொரு தாக்குதலுக்காகத் தயார் நிலையில் இருந்தமையினால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

ஒருவாறாகக் கடற்கரும்புலிகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களைத் தேர்வு செய்யும் பணி முடிவிற்கு வந்தது. 

தாக்குதலுக்கான சகல நடவடிக்கைகளும் பூரணப்படுத்தப்பட்டு கடற்கரும்புலிகளின் விருப்பத்திற்கமைய கடற்புலிகளின் சிறப்புத் தளபதியினால் தீட்டப்பட்ட திட்டத்தை செயல்வடிவம் கொடுக்கும் நேரமும் வந்தது. 

தாக்குதலுக்காகக் கடற்கரும்புலிகள் தயாராகினார்கள். 

கரும்புலிப் படகில் சென்று 3 கடற்கரும்புலிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை வெற்றிகரமாகச் செய்து முடிக்க ஏனைய 10 கடற்கரும்புலிகளும் தரையிறங்கித் தாக்குதல் நடத்தும்போது, அவர்களுக்குத் துணையாகத் தரையூடாகச் சென்று தாக்குதல் நடத்தவிருந்த அணி சற்றுத் தாமதமானது. தாக்குதல் சற்றுத் திசைமாற 11 கடற்கரும்புலிகள் கடலன்னையின் மடியில் தம்மை ஆகுதியாக்கிக் கொள்ள 2 கடற்கரும்புலிகள் மீண்டும் தளம் திரும்பினர். இறுதிக் கணத்திலும் கொண்ட கொள்கையிலும் இலட்சியத்திலுமிருந்து சற்றும் தளர்வடையாது தாம் தவழ்ந்த கடலன்னையின் மடியில் ஆகுதியாகிய 11 கடற்கரும்புலி மறவர்களுக்கும் அன்றைய தினம் பல்வேறு நடவடிக்கைகளின் போதும் வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
கடலிலே காவியம் படைப்போம்!

ஆட்லறிக்கான ஒரு சண்டை | தொடர்

3 months 2 weeks ago
தடங்கள்-1

1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது.

தொடக்க நாட்களிலேயே நெடுங்கேணியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்த எமக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. ஆகவே எமது கற்கைநெறியும் பாதிக்கப்பட்டது. காட்டுப்பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னகர்ந்து புளியங்குளத்தில் எமது முதன்மைத் தளத்தை அமைத்துக் கொண்டோம். அங்கே நிர்வாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, படிப்புக்காக மட்டுமே அணிகள் அங்கே ஒன்றுகூடுவோம். மற்றும்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறுசிறு அணிகளாகப் பிரிந்து சற்றுத் தூரம் தள்ளித் தங்கியிருந்தோம். இந்தப் புளியங்குளம் என்பது ‘ஜெயசிக்குறு’ புகழ் புளியங்குளமன்று. அது கண்டிவீதியில் ஓமந்தைக்கும் கனகராயன் குளத்துக்குமிடையில் அமைந்துள்ளது. இது ஒட்டுசுட்டான் புளியங்குளம். ஒட்டுசுட்டான் – முள்ளியவளைச் சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துள்ள கிராமம்.

எமது கற்கைநெறி மீண்டும் தொடங்கியது. சிரமத்துக்கு மத்தியிலும் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு வகுப்புக்களாவது நடந்துவிடும். ஒட்டுசுட்டான் நோக்கியோ முள்ளியவளை நோக்கியோ நகராமல் புளியங்குளத்தை நோக்கி நகர்வதே நெடுங்கேணி இராணுவத்தின் நோக்கமாக இருந்ததால் எமது பக்கத்தில் அதிக சிக்கலிருக்கவில்லை. ஆனால் மக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள்.

ஒருநாள் காலை வகுப்புக்கென்று நாங்கள் அமர்ந்திருந்த நேரத்தில், ‘இன்று வகுப்பில்லை, முக்கிய விடயம் பற்றி உங்களோடு ஒருவர் பேசுவார்’ என்று கற்கைநெறிப் பொறுப்பாளர் சொன்னார். ஒரு பிக்-அப் வாகனம் வந்துநின்றது. ஒருவர் வந்து கதைக்கத் தொடங்கினார். அவர் கதைக்குமுன்னமே எமக்குள் இருந்த சிலரை வகுப்பறையிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். அவர்களுள் இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

“உங்களை ஒரு வேலைக்காகக் கூட்டிக்கொண்டு போகச்சொல்லியிருக்கினம். அதுபற்றிக் கதைக்கத்தான் வந்தனான். உங்களில சிலபேரை எடுக்க வேண்டாமெண்டு உங்கட தளபதிகள், பொறுப்பாளர்கள் சொன்னவை. அவையளைத்தான் முதலிலயே எழுப்பி அனுப்பீட்டம். நீங்கள் போற இடத்தில கஸ்டமான வேலையள் வரும். பெரிய வெயிற்றுகள் தூக்கிப் பறிக்கிற வேலை வரும். உடல்நிலை ஏலாத ஆக்கள் இப்பவே சொல்லிப் போடுங்கோ. அங்கபோய் நிண்டுகொண்டு கஸ்டப்பட்டால் அதால எல்லாருக்கும் பிரச்சினைதான். உங்களைக் கூட்டிக்கொண்டு போனபிறகு வேலை தொடர்பாக் கதைக்கிறன்”

எது தொடர்பான வேலை என்பது எம்மிற் சிலருக்கு உடனேயே விளங்கிவிட்டது. கூட்டிச்செல்ல வேண்டாமென்று படையணியால் சொல்லப்பட்டவர்களைப் பார்த்தால் இது ஏதோ தாக்குதலோடு தொடர்புபட்டது என்பதும் விளங்கிவிட்டது. ஏனென்றால் பயிற்சித் திட்டத்துக்கென அவர்கள் வரும்போது அவர்கள் நின்ற இடமும் பணியும் அப்படிப்பட்டது. அவர்களுள் ஒருவன் கப்டன் அன்பரசன்.

எம்மோடு வந்து கதைத்தவர் வேறு யாருமில்லை. மணியண்ணை. ‘மோட்டர் மணி’ என்று முன்பும் ‘ஆட்டி மணி’ என்று பிற்காலத்திலும் இயக்கத்தில் அறியப்பட்ட தளபதி மணிவண்ணன்தான் எம்மோடு வந்து கதைத்தார். அவரைப்பற்றி இயக்கம் முழுவதும் அறிந்திருந்தாலும் பெரும்பாலானவர்கள் அவரைக் கண்டதில்லை. அப்போது வகுப்பறையில் இருந்த பலருக்கு தம்மோடு கதைப்பது யாரெனத் தெரிந்திருக்கவில்லை, அவர் கதைக்க முன்பு சொல்லப்படவுமில்லை.

எமக்கோ அது ஆட்லறியோடு தொடர்புபட்ட வேலையென்பது விளங்கிவிட்டது. அந்நேரத்தில் ஆட்லறிப் படையணியை ராயு அண்ணையும் மணியண்ணையும்தான் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாம் எவரிடமும் இதைப்பற்றிப் பேசவில்லை. அது இயக்க நடைமுறையுமன்று. நிறையப் பேருக்கு என்ன வேலை, தம்மோடு கதைப்பது யாரென்பது தெரியாமலேயே இருந்தது. எம்மை ஏற்கனவே மணியண்ணைக்குத் தெரியுமென்பதாலும், இந்த வேலை எது தொடர்பானதென்று நாம் ஊகித்திருப்போம் என்று அவர் கருதியதாலும் எம்மைத் தனியே அழைத்து ‘இந்த வேலைக்குச் சரிவராத ஆட்களை நீங்கள் தான் சொல்ல வேணும். ஏலாத ஆக்கள் அங்க வந்தால் பிறகு எல்லாருக்கும் சிரமமாத்தான் போகும். அதுக்காக அவையளை இஞ்சயே விட்டிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு வேற வேலைக்கும் ஆக்கள் தேவைதான். அவையள அங்க விடுவம்.’ என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்கள் மூன்று பேரைக் காட்டிக் கொடுத்தோம். ஒருவன் வயிற்றுவெடிக்காரன். மற்ற இருவரும் கையெலும்பு முறிந்தவர்கள். அதன்பிறகு வந்த ஒருவருடத்துக்கு – எமது முதன்மைக் கற்கைநெறி முடிவடையும்வரை – அந்த மூவராலும் நாங்கள் ‘காட்டிக் கொடுப்போராக’க் குறிப்பிடப்பட்டு வந்தோமென்பது தனிக்கதை.

அன்று காலையுணவை முடித்துக் கொண்டு நாம் புறப்பட்டோம். நிப்பாட்டப்பட்டவர்கள் போக எஞ்சிய எமது படையணிப் போராளிகள் எட்டுப்பேருக்கும் லெப்.கேணல் கதிர்(பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்தார்) பொறுப்பாக வந்தார். எமது கற்கை நெறியிலிருந்தும் அங்குநின்ற நிர்வாகப் போராளிகளிலிருந்தும் கிட்டத்தட்ட நாற்பது பேர்வரை மணியண்ணையோடு புறப்பட்டோம்.

தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ?

விசுவமடுவில் ஒரு காட்டுப்பகுதி. முகாம் ஏதும் அங்கு இருக்கவில்லை. காட்டுக்குள் சிறு கூடாரங்கள் இரண்டு இருந்தன. போனவுடன் எம்மை நான்கு அணிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு கூடாரம் தந்து எமக்கான வதிவிடத்தை அமைக்கச் சொன்னார்கள். அங்கு தேவராஜ் அண்ணன்தான் பொறுப்பாக நின்றார். அவர் ஏற்கனவே எம்மோடு நின்று, முல்லைத்தீவில் ஆட்லறி கைப்பற்றப்பட்டதும் ஆட்லறிப்படையணிக்கென்று அனுப்பப்பட்டவர். இரண்டில் ஓர் ஆட்லறி இவரின் பொறுப்பின் கீழேயே இருந்தது. அன்று மாலை மணியண்ணை வந்தார்.

‘நீங்கள் ஆட்லறிப்பயிற்சி எடுக்கப் போகிறீர்கள்’ என்று அப்போதுதான் சொன்னார். ஓர் ஆட்லறி கொண்டுவரப்பட்டது. எம்மோடு நின்றசிலர் முல்லைத்தீவுச் சண்டையில் பங்குபற்றியதோடு ஆட்லறியைக் கைப்பற்றிய அணியிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களைவிட மற்றவர்கள் அனைவரும் முதன்முதலாக அன்றுதான் ஆட்லறியைப் பார்க்கிறோம். மணியண்ணையின் கதையைத் தொடர்ந்து எமக்கான பயிற்சிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன.

பயிற்சித்திட்டம் 24 மணிநேரப் பயிற்சியாக இருந்தது. ஓரணி இரண்டு மணிநேரம் பயிற்சியெடுக்கும். அந்நேரத்தில் மற்ற இரு அணிகள் ஓய்வெடுக்கும். எஞ்சிய ஓரணி ஆட்லறிக்கான காவற்கடமையில் ஈடுபட்டிருக்கும். பிறகு மற்றதோர் அணிக்கு இருமணிநேரப் பயற்சி, பிறகு இன்னோர் அணிக்கு என்று தொடரும். நான்காம் அணிக்குப் பயிற்சி முடிந்ததும் மீள முதலாமணி தொடரும். காவற்கடமையும் இரண்டு மணித்தியாலத்துக்கொருமுறை சுழன்றுகொண்டிருக்கும். இச்சுழற்சிமுறைப் பயிற்சியில் ஆசிரியர்களும் மாறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆட்லறி ஒன்றாய்த்தானிருந்தது. அந்த ஆட்லறிக்குரிய தேவராஜ் அண்ணையின் அணியினரே பயிற்சி தந்துகொண்டிருந்தனர். மற்ற ஆட்லறியும் அதற்குரிய அணியும் ஏற்கனவே நடவடிக்கைக்காக நகர்த்தப்பட்டிருந்தது. பயிற்சி 24 மணிநேரமும் சுழற்சியில் நடந்துகொண்டேயிருந்தது. இரவில் பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் நடக்கும். ஓரணிக்குக் கிடைக்கும் நான்குமணிநேர இடைவெளியில்தான் நித்திரை, சாப்பாடு, குளிப்பு, துவைப்பு, அரட்டை எல்லாமே.

இரண்டு பகல்களும் மூன்று இரவுகளும் இப்படியே பயிற்சி நடந்தது. இரண்டு மணிநேரப் பயிற்சியிலேயே உடல் துவண்டுவிடும். இதற்குள், இருமணிநேரக் காவற்கடமை, இருமணிநேரப் பயிற்சி, நான்குமணிநேர ஓய்வு (இதற்குள் மற்ற வேலைகளும் வந்துவிடும்) என்று மூன்றுநாட்கள் நடந்த தொடரோட்டத்தில் உடம்பு தும்பாகிப் போனது. ஓர் ஆட்லறி எறிகணையின் மொத்தநிறை 43 கிலோகிராம் என்பதாக இப்போது நினைவுள்ளது. அதில் குண்டுப்பகுதி மட்டும் முப்பது கிலோவுக்கு மேல்வரும். கட்டளைக்கேற்ப அதைத்தூக்கிக் கொண்டு ஆட்லறியடிக்கு வந்து குழலேற்றுவதும் பிறகு தூக்கிக் கொண்டு மீளப்போவதுமென்று நாலைந்து முறை செய்தாலே நாக்குத் தள்ளிவிடும். ஆள்மாறி ஆள்மாறி அந்த இரு மணிநேரங்களும் நெருப்பாக நிற்க வேண்டும். ஆட்லறிக் கால்களை விரிப்பது, சுருக்குவது என்று நாரி முறியும். நுட்பங்கள் விளங்கப்படுத்தப்படும் சிலநிமிடங்கள் மட்டுமே ‘அப்பாடா’ என்றிருக்கும்.

இயக்கத்தில், ஆட்லறிப் பயிற்சியெடுப்பதில் நாங்கள் மூன்றாவது தொகுதியாக இருந்தோம். முதலாவது தொகுதி, முல்லைத்தீவில் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டதும் ஒழுங்கமைக்கப்பட்டு பயற்சியெடுத்த தொகுதி. புளுக்குணாவ இராணுவ முகாமிலிருந்த ஆட்லறியைக் கைப்பற்றவென தென்தமிழீழப் போராளிகளைக் கொண்ட ஓரணி பயிற்சியெடுத்துச் சென்றது. அதுவே இரண்டாவது தொகுதி. நாங்கள் மூன்றாவது தொகுதி. எந்தத் தொகுதிக்கும் எங்களைப்போல் பயிற்சி நடக்கவில்லை. அவையெல்லாம் முறைப்படி நடத்தப்பட்ட பயிற்சி நெறிகள். நாங்கள்தான் ‘மூன்றே நாளில் முனைவராவது எப்படி?’ என்ற கணக்காகப் பயிற்சியெடுத்தவர்கள்.

ஆட்லறி எறிகணைகள் ஏவிக் காட்டப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தும் அதற்கான நேரமிருக்கவில்லை. மூன்றுநாட்கள் நடந்த பயிற்சியிலேயே நாங்கள் ஒருவழி ஆகிவிட்டிருந்தோம். எறிகணையை ஏவிப்பார்க்கவில்லையே தவிர மற்றதெல்லாம் அத்துப்படி. நித்திரைத் தூக்கத்திற்கூட எந்தப்பிழையும் விடாமல் முறைப்படி செய்யும் நிலைக்கு அந்த மூன்றுநாள் கடும்பயிற்சியில் வந்திருந்தோம்.

மூன்றாவது இரவுப்பயற்சி நடந்துகொண்டிருந்தபோது மீளவும் மணியண்ணை வந்தார். பயிற்சி நிறுத்தப்பட்டது. அந்த இரவு வினோதமாக இருந்தது. ஆட்லறிப் படையணியின் நிர்வாக வேலைகளில் நின்ற அனைவரும் பொறுக்கி ஒன்றுசேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முறைப்படியாகவோ அரைகுறையாகவோ ஆட்லறிப்பயிற்சியெடுத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, முன்பு புளுக்குணாவ முகாம் தகர்ப்புக்காக வந்து பயிற்சியெடுத்தவர்களில் வன்னியில் எஞ்சி நின்ற போராளிகளையும் அங்கிங்கென்று பொறுக்கிக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களில் இருவர் கொம்பனி நிலை அணித்தலைவர்களாக இருந்தும்கூட அழைத்துவரப்பட்டிருந்தார்கள்.

மளமளவென அணிகள் பிரிக்கப்பட்டன. ஓர் ஆட்லறிக்கு எட்டுப்பேர் என்றளவில் அணிகள் அமைக்கப்பட்டன. பயிற்சியாளர்களின் அறிவுரையோடு ஒவ்வோர் அணியிலும் ஆட்களுக்கான பணிகள் வழங்கப்பட்டன. முதன்மைச் சூட்டாளன், தொலைத் தொடர்பாளன், எறிகணையைக் குழலேற்றுபவன் என்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வோர் அணியோடும் தேவராஜ் அண்ணையின் ஆட்லறியணியின் போராளிகள் இருவர் கலக்கப்பட்டனர். இறுதியில் ஒன்பது அணிகள் எம்மிடமிருந்தன. இன்னும் ஓரணிக்கு என்ன செய்வதென்பது மணியண்ணையின் தலையிடியாகவிருந்தது. எங்களுக்கு ஒன்றுமட்டும் விளங்கியது, இயக்கம் சுளையாக எதையோ பார்த்துவிட்டது, காலங்கடத்தாமல் கொத்திக்கொள்ளப் பரபரக்கிறது.

‘இந்த மூண்டுநாளும் பயிற்சியெடுத்தாக்கள் ஓய்வெடுங்கோ, இப்ப வந்து சேர்ந்தாக்கள் திரும்ப ஞாபகப்படுத்திறதுக்காக பயிற்சியெடுங்கோ. விடிய நாலு மணிக்குள்ள எல்லாரும் ரெடியாயிடோனும்’ என்று மணியண்ணை சொல்லி எம்மை ஓய்வுக்காக அனுப்பிவைத்தார்.

எங்கே ஓய்வெடுப்பது? உடல் மிகமிகக் களைப்படைந்திருந்தாலும் மனம் மிகமிக உற்சாகமாகவே இருந்தது. எல்லோருக்கும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. இன்னும் இரண்டொரு நாட்களில் எமது போராட்டத்தில் பெரிய வரலாற்றுத் திருப்புமுனை நிகழப்போகிறது என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் ஒவ்வொருவரிடமும் மிகுந்திருந்தது. ஒன்றில் இயக்கத்திடம் புதிதாக பத்து ஆட்லறிகள் வந்திருக்க வேண்டும், அவற்றை வைத்து அவசரமாக பெரியதொரு தாக்குதலைச் செய்யப் போகிறது; அல்லது எங்கோ பத்து ஆட்லறிகளை இயக்கம் கண்வைத்து விட்டது, அவற்றைக் கைப்பற்றப் போகிறது. ஆட்லறிகளைக் கொள்வனவு செய்துவந்து இறக்குவதென்பது அப்போது சாத்தியமற்றதாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டது. எனவே இரண்டாவது நிகழ்வையே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

சிந்தனைகள் இன்னும் விரிவடைந்துகொண்டிருந்தன. தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ?

கிடைத்திருக்கும் நான்கு மணிநேரத்தில் யார்தான் நித்திரை கொள்வார்கள்? நித்திரைதான் வந்துவிடுமா? மற்றப்பக்கத்தில் ஏனையவர்களுக்கு மீளநினைவூட்டற் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அன்றிரவு தூக்கமின்றி குறுகுறுப்பாகவே கழிந்தது. மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது.

தொடரும்…

எழுதியவர்: அன்பரசன்.

https://www.eelanesan.com/2021/12/thadankal-1.html

September 3, 2009

உள்ளிருந்து ஒரு குரல் | தொடர்

3 months 2 weeks ago

மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள்.

விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது.

காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும்.

வலப்புறம் வீதியை விட்டு, வீதியின் இடதுபுறம் ஒரு காப்பரண், அதற்கு இடப்புறமாக இன்னொரு காப்பரண் – இந்தக் காப்பரண் அமைவிடத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தவாறு ஒரு சிறு அணை வடிவிலான உயரமான நிலப்பரப்பு இருந்தது-, அதற்கு இடப்புறம் ஒரு காப்பரண் – இதில் கொம்பனியின் மேலாளர் தமிழ்தென்றல் வானலைக் கருவித் தொகுதியோடும் ஒரு பீ.கே. எல்.எம்.ஜி அணியோடும் போர் முன்னரங்கிலேயே நின்றார்-, இதற்கு சற்று இடப்புறத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தபடி ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அணை வடிவிலான நிலப்பரப்பானது முன்னரங்கின் சற்றுப் பின்புறமாக இடது புறமாகத் திரும்பி அருவியைக் குறுக்கறுத்துப்போனது. ஆற்றுக்கு இடப்புறம் இரு காப்பரண்கள், தொங்கலில் செங்கயலும் முடியரசியும் நின்றனர்.

மேலே உயர்ந்த சோலைக்காடு. நிலமட்டத்தோடு நெருக்கமான பற்றைக்காடு. எழும்பி நின்றாலும் எதிரியைக் கண்காணிக்க முடியாது. நிலமட்டத்தோடு பார்த்தாலும் ஒன்றும் தெரியாது. குனிய ஐந்து நிமிடங்கள், குனிந்தவர்கள் நிமிர பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். கொழுக்கி வடிவில் அமைந்த முட்கள் ஆட்களை அசையவிடாமல் பிடித்து வைத்திருக்கும். தட்டிவிட முடியாது. ஒவ்வொரு முட்களாகக் கழற்றித்தான் நிமிரலாம். சண்டை பிடிப்பது ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. இந்த முட்களுடனான பிணக்கும் விலக்கும்தான் பெரிய வேலை அவர்களுக்கு.

நாளாந்தம் சோறு, கறி வராது. ஐந்தாறு நாட்களுக்கொரு தடவை தரப்படுகின்ற உலர் உணவுகளைச் சுமந்தபடி காலை, மதியம், இரவு என்று தேடுதல் செய்தபடி அந்த அணி நின்றது.

அன்று அவர்களுக்கான உணவுகளை எடுக்கப்போக வேண்டிய நாள் மூவர் தேடுதல் செய்தனர். இடையிலே அந்நியமான தடயங்களைக் கண்டுவிட்டு, அதைப் பின் தொடர்ந்தனர். ஆனால் இடையிலே அவற்றைக் காணவில்லை. இருண்டுவிட்டது. எனவே சாப்பாடு எடுக்கப்போகவில்லை. அன்று எவரும் சாப்பிடவில்லை. ஒருவரிடமும் சாப்பிட ஒன்றுமில்லை.

மறுநாள் நால்வர் தேடுதல் செய்தபடி எடுத்துவரப் போயினர். மெல்ல மெல்ல நகர்ந்த அணி அந்த உயரமான நிலப்பகுதியருகே இருந்த வெளியில் இறங்க, அந்த உயரமான நிலப்பகுதித்தொடரின் மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் இவர்களைத் தாக்கத் தொடங்கினர். நேற்றைய தடயங்களுக்குரிய சிங்களப் படையினர் எங்காவது மறைத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அவர்கள் அந்த அணைத் தொடரை நெருங்கவே நீண்ட நேரமாகிவிட்டது.

முதலாவதாகப் போன தமிழிசை அணையில் ஏற முற்பட, அதன் மறுபுறமாக மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் சுட, எதிர்பார்ப்புடனே போனதால் இவர்களும் சுட, சண்டை தொடங்கிவிட்டது. முன்னர் ஒரு சமரில் காலில் காயப்பட்டிருந்த தமிழிசை ஏறிய நிலையில் நின்று நிமிர்ந்து மேலே சுட, காயமடைந்த கால் சறுகி கீழே விழுந்துவிட்டார். விழுந்தகணமே எழும்பித் திரும்பவும் எதிரியின் ரவை தமிழிசையின் முதுகை உரசி, வானலைக் கருவியின் தொங்குபட்டியை அறுத்து, ரவைக்கூட்டுத் தூளியைக் கிழித்துச் சென்றது.

அவர் குனிந்து வானலைக் கருவியை எடுப்பதற்குள் சிங்களப் படையினர் அவரை நெருங்க முயன்றனர். தோளில் காயம்பட்ட தமிழிசை நிமிர்ந்த வேகத்திலேயே சிங்களப் படையினரைச் சுட்டார். சிலர் காயமடைந்து விழ, தமிழிசை போர் முன்னரங்குக்கு, தனது காப்பரணுக்கு வந்துவிட்டார்.

சண்டை தொடங்கிய சத்தம் கேட்டவுடனேயே தமிழ்தென்றல் தன்னோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியை அந்த அணை வடிவிலான நிலத்தொடரை நோக்கி நகர்த்தினார். ஆனால் சுட முடியவில்லை. அதற்கு அப்புறம் இருப்பவர்களை இப்புறம் கீழே நின்று சுட்டால் குருவிக்குத்தான் படும். ஒரு எதிரிக்கும் படாது. எனவே அணைத்தொடரைக் கண்காணித்தபடி அவ்வணி மறைவாக நிலைகொண்டது.

வீதியருகிலிருந்த காப்பரணில் நின்ற புலியரசி தனது காப்பரணின் பின்புறமாக அணைபோன்ற நிலத்தொடரை நோக்கித் தேடுதல் செய்தபடி ஒரு அணியோடு நகர்ந்தார். அவர்களை வானலையில் வழிநடத்தினார் தமிழ்தென்றல். அவர்களின் பின்புறமாக ஒரு கிளை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க முற்பட, ஆற்றின் மறுகரையில் சிங்களப் படையினர் நிற்பதைக்கண்டு அங்கு சண்டையைத் தொடக்கியது அவ்வணி.

ஆற்றுக்கு அப்புறம் நின்ற சிங்களப் படையை பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் அடையாளங்கண்டு அவர்களும் சண்டையைத் தொடங்கினர்.

தம்மை நோக்கி இருபுறமும் தாக்குதல் வந்ததால் அவ்விடத்தில் மேலும் நிற்க முடியாத நிலை தோன்ற, சிங்களப் படையினர் தமது பகுதியை நோக்கி நகர முயன்றனர். பின்வாங்கும் முயற்சியில் அவர்கள் நகர்ந்த பாதைக்கு குறுக்கே இருந்தது தமிழ்தென்றலின் கட்டளை மையமான காப்பரண் – காயப்பட்ட சிங்களப் படையினர் கத்திக்கொண்டிருக்க அவர்களைச் சுமந்தபடி வந்த ஏனைய படையினரை நோக்கி தமிழ்தென்றலோடு நின்றவர்கள் தாக்கினர்.

எல்லாப்புறமும் அடிவிழ, வீதிப்புறமாக நகர்ந்து எமது முன்னரங்கைக் கடக்க அவர்கள் முயன்றனர். வீதியோரக் காப்பரணில் நின்ற புலியரசியின் அணி சண்டைக்கென அணை போன்ற உயரமான நிலத்தொடரை நோக்கிப் போனபோது, அக்காப்பரணில் சேரமலரின் அணியைத் தமிழ்தென்றல் விட்டிருந்தார். தம்மைக் கடக்க முயன்ற சிங்களப் படையினரைச் சேரமலரின் அணி போட்டுத் தள்ளியது. சிங்களப் படையினரில் சிலர் தமது பகுதியை நோக்கி ஓட, சிலர் மீளவும் எமது போர் முன்னரங்கின் பின்புறமாக ஓடினர். முற்றுகையிட வந்தவர்கள் இப்போது தப்பிப்போக வழியற்று, முற்றுகைக்குள் அகப்பட்டனர்.

புலியரசியோடு சண்டைக்குப் போனவர்களில் இசை என்ற ஆண் போராளி விழுப்புண்ணடைந்து காலில் முறிவு ஏற்பட்டதால், புலியரசியோடு தொடர்ந்து முன்னேறாமல், மேட்டு நிலத்தொடருக்கு அருகாக போர் முன்னரங்கின் பின்புறம் காட்டினுள் மறைந்து நின்றார். மேட்டு நிலத்தொடருக்கு மறுபுறம் நிற்கும் சிங்களப் படையினரின் குரல்கள் அவருக்குக் கேட்டுக் கொண்டிருந்தன. அவரின் தகவலுக்கமைய வழுத்திருத்தங்களுடன் எறிகணைகள் வீசப்பட்டன.

தமிழ்தென்றலின் அணிக்கு உதவியாக லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினர் தமது 50 கலிபருடன் ஓடோடி வந்து, அணை போன்ற உயரமான பகுதியின் அடிவாரப் படையினரைத் தாக்கினர். மீண்டும் நிலைகுலைந்த சிங்களப் படையினர் சிதறிக் கலைந்தனர்.

இப்போது பி.ப.3.00 மணியாகிக் கொண்டிருந்தது. நேற்று முழுதும் சாப்பாடு, தண்ணீரில்லை. இன்றும் அதே நிலைமை. எல்லோர் நாக்குகளும் உலர்ந்துபோயின.

ஆற்றுக்கு அப்பால் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணிப் போராளி யாழவனும் 2 ஆம் லெப். மாலதி படையணிப் போராளிகள் முடியரசியும் மதியழகியும் தேடுதல் செய்தபடி தண்ணீர் அள்ளுவதற்காக ஆற்றை நோக்கி நகர்ந்தனர். சண்டைக்குள் நிற்பவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டுமே. ஆற்றுக்குப் போவதற்கிடையில் சிங்களப் படையினரைக் கண்டு, எல்.எம்.ஜி.யால் வெளுத்து வாங்கினார்கள். ஐயாமாருக்கு அப்புறமும் அடி, இப்புறமும் அடி, உட்புறமும் அடி. திருப்பித் தாக்காமலேயே ஐயாமார் நடையைக் கட்டினர். காயப்பட்டவர்களைக் காவிக்கொண்டோ, கைவிட்டோ போய்ச் சேர்ந்தால் போதும் சாமி. யுத்தம் சரணம் கச்சாமி.

இம்முறை சிங்களப் படையினர் தமது பகுதி நோக்கிப்போக முயற்சித்த பாதைக்குக் குறுக்கே இருந்தது செங்கயலின் காப்பரண்.

செங்கயலின் பக்கம் படையினர் போவதாக தமிழ்தென்றலுக்கு யாழவன் சொல்லிக் கொண்டிருந்தபோது சண்டைச்சத்தம் கேட்டது.

‘ஆள் என்ரை பக்கம்தான் வந்தவர். நல்லாக் குடுத்திருக்கிறன். திரும்பி ஓடுறார்”

என்று செங்கயல் அறிவித்தார்.

செங்கயலுக்குச் சற்றுப் பின்னே 2 ஆம் லெப். மாலதி படையணியில் செந்துளசியுடனும், லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் சுடருடனும் ஒருவர் இருவராக மரங்களோடு நிலைகொண்டிருந்தனர். செங்கயலின் அணியிடம் அடிவாங்கிப் பின்னே வந்த சிங்களப் படையினரை இவர்கள் தாக்கினர். கத்திக்குளறிக்கொண்டு விலகி மறுபடி ஆற்றை நோக்கி நகர முற்பட்டவர்களை யாழவன், முடியரசி, மதியழகி உள்ளடங்கலான மூவர் அணி சுட்டுத் தள்ளியது.

அதற்கிடையில் சிங்களப் படையினர் வந்த திசை நோக்கி தமிழ்தென்றலோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் தாக்கிக் கொண்டிருந்தனர். எல்.எம்.ஜி.யின் அடி கேட்டதும் பீ.கே.எல்.எம்.ஜி அடியை நிறுத்தினார்கள்.

மறுபடியும் தப்பியோடும் முயற்சியில் சிங்களப் படையினர் இறங்கினர்.

போராடும் அகவை கொண்ட அனைவருக்கும்,

 

வணக்கம்.

ஐந்து மாதங்களின் முன், முள்ளிக்குளத்தில் எம்மை முற்றுகையிட வந்த சிங்களப் படையினர் தமது முதுகெலும்பு முறிந்து திரும்பிப்போன கதை இது. எங்களின் பலம் இன்னும் சற்று அதிகமாக அன்று இருந்திருந்தால், அவர்களின் ஈமங்களைச் சுமந்த நூறு பொதிகள் சிங்கள நாட்டுக்குப் போயிருக்கும். எங்கள் பின்னே எழுந்து வாருங்கள் என்று அன்றும் நாம் உரத்த குரலில் கூப்பிட்டோம். இன்று முழங்காவிலில் நின்றும் கூப்பிடுகின்றோம்.

வீட்டுக்கு ஒருவர் போதும் என்று யார் முடிவெடுத்தது? கப்டன் வாசு (1987), கப்டன் சுந்தரி (1990), மேஜர் ஜேம்ஸ் (1991) என ஒரு வீட்டிலிருந்து மூவர் போராட வந்த பாரம்பரியம் அல்லவா எம்முடையது.

எழுந்து வாருங்கள்.

எத்தனைபேர் வந்தோம் என்பதை விடுதலையின் பின்னர் கணக்குப் பார்ப்போம்.

இப்போது எம் கைகோர்க்க வாருங்கள்.

நன்றி
அன்புடன்
தமிழ்தென்றல்.

 

நினைவுகளுடன்:- போராளி மலைமகள்.
வெள்ளிநாதம் (05 புரட்டாதி 2008) இதழிலிருந்து…..

https://pulikalinkuralradio.com/archives/34769

Checked
Fri, 04/19/2024 - 17:40
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed