புதிய பதிவுகள்2

ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்

1 month 3 weeks ago
1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 2 July 8, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது அல்லைத்திட்டம் இத்திட்டமே திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது திட்டமிட்ட விவசாயக் குடியேற்றமாகும். இது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். மகாவலி ஆற்றை மறித்து வாய்க்கால் மூலம் திருப்பி அல்லைக் குளத்தை நிரப்பி அதனோடு சூழவுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் கூட இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 இல் வாய்க்கால் வெட்டப்பட்டு தாழ்நிலமாக இருந்த பகுதிகள் இணைக்கப்பட்டு அல்லைக்குளம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1910 ஆம் ஆண்டு குளம் பலப்படுத்தப்பட்டதோடு வாய்க்கால்களும் பெரிதாக்கப்பட்டன. 1949 இலேயே இது மிகப்பெரிய விவசாயத் திட்டமாகப் புனரமைக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 17,500 ஏக்கர் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 4 ஏக்கர் வயல் நிலமும், ஒரு ஏக்கர் மேட்டு நிலமும் என பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களில் 75% ஆன நிலங்கள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 25% ஆன நிலங்களே தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணி உரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது, சிங்கள மக்களிடமிருந்து, இலங்கையின் எல்லா மாவட்ட அரசாங்க அதிபர்களின் மூலமாகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை, திருகோணமலை மாவட்டத்தில், அதுவும் மூதூர்ப் பகுதியில் இருப்பவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இப்பாரபட்சங்களை அன்றிருந்த தமிழ் பேசும் அரசியல் சக்திகள் தடுத்திருக்கலாம். அவர்கள் அது தொடர்பான முயற்சிகளில் எதிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலையிலும் மூதூரிலுமாக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1949 இல் திருகோணமலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். சிவபாலனும் மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த A.R.A.M. அபூபக்கரும் விளங்கினர். மக்கள் குடியேறத் தொடங்கிய 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இராசவரோதயமும், மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சையான M.E.H. முகமட் அலியும் விளங்கினர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இதில் அக்கறையற்று இருந்தாலும் தமிழ்த் தேசியத்தையும் அதன் அடிப்படையிலமைந்த சமஷ்டிக் கோரிக்கையையும் முன்னெடுத்த அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி இதில் போதிய அக்கறை காட்டாதது தான் மிகவும் கவலைக்குரியது. இதன் பின்னர் 1959 இல் இருந்து மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு 1977 வரை T. ஏகாம்பரம், அ. தங்கத்துரை போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தபோதும் குடியேற்றங்களைப் பொறுத்தவரை அவர்களின் செயற்பாடு போதியதாக இருக்கவில்லை. 1977 இல் மூதூர்த் தொகுதி மீளவும் ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன் பகுதிகள் சேருவல தேர்தல் தொகுதியுடன் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் மூதூர்ப் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கிருந்த உறுப்புரிமை இல்லாமல் செய்யப்பட்டது. காணி பெறுபவர்களுக்குரிய தகைமைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது விண்ணப்பதாரிகள் விவசாயிகளாகவும் திருமணம் புரிந்தவர்களாவும், விவசாயக் காணிகளைச் சொந்தமாகக் கொண்டிராதவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரை, இத் தகைமைகள் கடைப்பிடிக்கப்பட்டன. சிங்கள மக்களைப் பொறுத்தவரை இவை காற்றில் பறக்கவிடப்பட்டன. விவசாயமே தெரியாதவர்களும் நிலங்களைச் சொந்தமாக வைத்திருந்தவர்களும் தாராளமாகத் தெரிவு செய்யப்பட்டனர். கந்தளாய்த் திட்டம் இத்திட்டம் 1950 ஆம் ஆண்டு கந்தளாய்க் குளத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேறத் தொடங்கினர். இத்திட்டத்தின் கீழ் 24,750 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் 14,360 ஏக்கர் நெற் செய்கைக்காகவும், 10,420 ஏக்கர் கரும்புச் செய்கைக்காகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 80% ஆன காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை 20% ஆன காணிகளே தமிழ், முஸ்லிம் மக்களுக்கெனப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அல்லைத் திட்டத்தினைப் போலவே ஒரு குடும்பத்திற்கு 4 ஏக்கர் நெற்செய்கை நிலமும், 3 ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது. கந்தளாய்ப் பிரதேச சபையும், கந்தளாய்ப் பிரதேச செயலர் பிரிவும் இக்குடியேற்றப் பிரதேசத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. கந்தளாய்ப் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் 22,737 வாக்காளர்களில் மிகப் பெரும்பான்மையோர் சிங்களவர்களாகவே உள்ளனர். இப்பிரதேச சபை 397.30 சதுர மைல் விஸ்தீரணத்தைக் கொண்டது. இன்று திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களுக்குத் தலைமை தாங்கும் பிரதேசமாக கந்தளாய்ப் பிரதேசமே உள்ளது. பதவியாத் திட்டம் திருகோணமலை மாவட்டத்தின் வட பகுதியை சிங்களமயமாக்குவதற்காக இத்திட்டம் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேறத் தொடங்கினர். அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதவியாக் குளத்தினை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. பதவியாக்குளம் அனுராதபுர மாவட்டத்தில் இருந்தபோதும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளுக்கு நீர் பாய்ச்சுவதை நோக்கமாகக் கொண்டு இக்குளம் உருவாக்கப்பட்டது. இக்குடியேற்றத்திற்காக 2400 ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் திட்டக்காணி முழுவதும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1958 கலவரத்தினைத் தொடர்ந்து தென்னமரவாடியை அண்டியுள்ள பகுதிகளில் வசித்திருந்த தமிழர்கள் பலாத்காரமாக அகற்றப்பட்டு அவ்விடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது இப்பகுதி 100% சிங்கள மக்களைக் கொண்ட பகுதியாகவே உள்ளது. இவர்களுக்காக பதவி சிறீபுர என்னும் பெயரில் ஒரு பிரதேச சபையும், சிங்களப் பிரதேச செயலர் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை 7,023 என்ற அளவுக்கு மிகக் குறைவாக இருந்தபோதும், குடியேற்றங்களுக்கு அரசியல் உறுதிப்பாட்டை கொடுக்கவேண்டும் என்பதற்காகப் பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இப்பிரதேச சபை 217.70 சதுர மைல் விஸ்தீரணத்தைக் கொண்டதாகும். பதவிக்குளம் என்ற பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசமே பின்னர் பதவியா என மாற்றப்பட்டது. மொறவெவ திட்டம் முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசமே பின்னர் மொறவெவ என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டது. இத்திட்டம் 1959 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வருடம் தமிழர் % முஸ்லிம்கள் % சிங்களவர் % 1827 15,663 81.8 3,245 16.9 250 1.3 1881 14,394 64.8 5,746 25.9 935 4.2 1891 17,117 66.4 6,426 25.9 1,109 4.3 1901 17,069 60.0 8,258 29.0 1,203 4.2 1911 17,233 57.9 9,714 32.6 1,138 3.8 1921 18,586 54.5 12,846 37.7 1,501 4.4 1946 33,769 44.5 23,219 30.6 11,606 15.3 1953 37,517 44.7 28,616 34.1 15,296 18.2 1963 54,050 39.1 42,560 30.8 40,950 29.6 1971 71,749 38.1 59,924 31.8 54,744 29.1 1981 93,510 36.4 74,403 29.0 86,341 33.6 1962 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். திருகோணமலையிலுள்ள பிரித்தானியக் கடற்படைத்தளத்தில் வேலை செய்தவர்கள், தளம் மூடப்பட்டதால் வேலை இழந்தபோது, அவர்கள் விவசாயம் செய்வதற்கென்றே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4040 ஏக்கர் காணிகள் பங்கிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் காணிகள் பங்கிடுவதற்கான காணிக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழரசுக் கட்சித் தலைவரில் ஒருவரான வன்னியசிங்கம் நேரடியாகவே அதில் பங்கேற்றிருந்தார். காணிகள் பங்கிடப்படும் போது 55% காணிகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், 45% காணிகள் சிங்கள மக்களுக்கும் என ஒதுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சமூகமளித்தும் கூட மூன்று இனங்களுக்கும் சமமாகவோ அல்லது குறைந்தபட்சம் திருகோணமலை மாவட்ட இன விகிதாசாரப்படியோ காணிகள் பங்கிடப்படாதது கவலைக்குரியது. ஆனால் மேட்டு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் பங்கிடப்பட்ட போது 75% வீடுகள் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. 25% வீடுகள் மட்டுமே தமிழ், முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. வீடுகள் கொடுக்கப்படாததால் திருகோணமலையில் இருந்த தமிழ், முஸ்லிம் மக்கள் உடனடியாகக் குடியேறவில்லை. சிங்கள மக்கள் மட்டுமே குடியேறினர். தொடர்ந்து வந்த இனக் கலவரங்களினால் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேறத் தயக்கம் காட்டவே, நாளடைவில் குடியிருக்காத நிலங்கள் இரத்துச் செய்யப்பட்டு அவ் இடங்களிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு விமானப் படையினருக்கான விவசாயப் பண்ணை அங்கு உருவாக்கப்பட்ட போது, அதனைச் சாட்டாக வைத்தும் பல சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். விமானப் படையினரின் பண்ணை சிங்களக் குடியேற்றத்தை மேலும் பலப்படுத்தியதால் எஞ்சியிருந்த ஒரு சில தமிழ்க் குடும்பங்கள் கூட பின்னர் வெளியேறின. இக்குடியேற்றத்தினை மையமாக வைத்தே மொரவேல சிங்களப் பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இது 322 சதுர மைல் விஸ்தீரணத்தை உள்ளடக்கியுள்ளது. தமிழர்கள் எவரும் இப்பிரதேசத்தில் இல்லை. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் 38.08% வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். மொத்தமாக 2,200 வாக்குகளே அளிக்கப்பட்டன. மக்கள் மிகக் குறைவாக இருந்தபோதும், குடியேற்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதேச சபை உருவாக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. பிரதேச சபையில் மொத்தம் 9 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். அவர்கள் அனைவரும் சிங்களவர்களேயாவர். மகாதிவுல்வெவ திட்டம் பெரியவிளான் குளம் என்னும் தமிழ்ப் பிரதேசமே இத்திட்டம் கொண்டுவரப்பட்ட பின் மகாதிவுல்வெவ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1981 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேற்றம் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் 1200 ஏக்கர் காணி பங்கிடப்பட்டது. இதில் 65% சிங்கள மக்களுக்கும் 35% தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் எனப் பங்கிடப்பட்டது. இவ்வாறு பங்கிடப்படும் போது ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் வயல் நிலமும், ½ ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது. இத்திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களை மையமாக வைத்தே 1977 இல் சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தேர்தல் தொகுதி வந்த பின்னரே சிங்களப் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். 1977 இற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதித்துவம் என்பது திருகோணமலை மாவட்டத்திலிருந்து இருக்கவில்லை. தமிழ்ப் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் மட்டும் இருந்தனர். 1960 இற்கு முன்னர் திருகோணமலை, மூதூர் எனும் இரு தொகுதிகள் மட்டுமே இருந்தன. திருகோணமலைத் தொகுதியிலிருந்து ஒரு தமிழரும் மூதூர்த் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்பட்டனர். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டதால் அத்தொகுதியிலிருந்து ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் என இருவர் தெரிவு செய்யப்பட்டனர். இதனால் மொத்தமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழரும் ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்படும் நிலை இருந்தது. 1977 வரை இந்நிலை தொடர்ந்திருந்தது. 1977 இல் சேருவில தொகுதி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு இனத்திலுமிருந்து தலா ஒருவரே தெரிவு செய்யப்பட்டார். 1989 ஆம் ஆண்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாவட்டத்தில் ஏறத்தாழ மூன்று இனங்களும் சமமாக இருப்பதனால், தேர்தல் முறைமையின் பண்புக்கு ஏற்ப, இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை மாற்றமடைந்து வருகின்றது. ‘போனஸ்’ ஆசனம் முதலாவது வரும் கட்சிக்கு வழங்கப்படுவதால் ஓர் இனத்திற்கு இரண்டு ஆசனங்களும் ஏனைய இனங்களுக்கு ஒவ்வோர் ஆசனமும் கிடைக்கின்றன. நீர் நிலங்கள் 96 சதுர மைல்களைப் பிடித்துள்ள திருகோணமலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 2630 சதுர மைல்களாகும். இதில் திருகோணமலைத் தேர்தல் தொகுதி 461.30 சதுர மைல்களையும், மூதூர்த் தேர்தல் தொகுதி 570.70 சதுர மைல்களையும், சேருவில தேர்தல் தொகுதி 1598.80 சதுர மைல்களையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றில் திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் தமிழரும், மூதூர்த் தேர்தல் தொகுதியில் முஸ்லிம்களும், சேருவில தேர்தல் தொகுதியில் சிங்களவரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். காடுகளைப் பொறுத்தவரை கூட திருகோணமலை மாவட்டக் காடுகளின் அடர்த்தியான விஸ்தீரணம் 870 ஹெக்டயர் ஆகும். சாதாரண காடுகள் 16,310 ஹெக்டயரில் அமைந்துள்ளன. சேருவில தேர்தல் தொகுதியில் மட்டும் 9510 ஹெக்டயர் காடுகள் உள்ளன. பெரிய பிரதான குளங்கள் அனைத்தும் சேருவில தேர்தல் தொகுதியிலேயே உள்ளன. சிறிய பிரதான நீர்ப்பாசனக் குளங்களிலும் பெரும்பாலானவை சேருவில தேர்தல் தொகுதியிலேயே உள்ளன. இத்தொகுதி மூதூரின் தென் எல்லையிலிருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு எல்லைவரை பரந்துள்ளது. இச்சேருவில தேர்தல் தொகுதியில் ஐந்து பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோமரங்கடவல, சேருவில, மொறவெவ, பதவி சிறீபுர, கந்தளாய் என்பன அவையாகும். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தின் பெரும் பகுதியைக் கோறையாக்கிக் கைப்பற்றினாலும், திருகோணமலை மாவட்டத்தின் தலைநகர் திருகோணமலையாக இருப்பது பேரினவாதிகளுக்குப் பெரிய சங்கடமாகியுள்ளது. குடியேற்றங்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு மாவட்டத்தின் தலைநகரை தங்களின் கைக்குள் வைத்திருப்பது அவசியம் என உணர்கின்றனர். இதனாலேயே அண்மைக்காலமாக தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள திருகோணமலை நகருக்குள் ஊடுருவிக் குடியேறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நகரை நோக்கிய ஊடுருவல் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம் என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேருவில தேர்தல் தொகுதிப் பிரதேச சபைகள் பிரதேச சபைகள் நிலப்பரப்பு கோமரங்கடவல 285 ச.மைல் சேருவில 279 ச.மைல் ஈச்சிலம் பத்தை 98 ச.மைல் மொறவெவ 322 ச.மைல் பதவி சிறீபுர 217.70 ச.மைல் கந்தளாய் 397.30 ச.மைல் இனம் ஆண்டு தொகை வீதம் தமிழர் 1901 17,069 60.0% 2012 122,080 32.3% முஸ்லிம் 1901 8,258 29.0% 2012 152,845 40.0% சிங்களவர் 1901 1,203 4.2% 2012 101,991 7.0% திருகோணமலையில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு – 1951 ஏப்ரல் 13, 14, 15 தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டின் பிரதான தீர்மானங்கள்: • தமிழ் பேசும் மக்கள் ஒரு தனியான தேசிய இனம். அவர்கள் சிங்களவர்களுடன் சமஷ்டி அமைப்பில் இணைய விரும்புகின்றனர். • சோல்பரி அரசியல் திட்டம் தமிழ் பேசும் மக்களை அடிமையாக்குவதற்கு ஏதுவான திட்டம் என்பதால் மாநாடு அதனைக் கண்டிக்கின்றது. • தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ் தமிழ் பேசும் மக்கள் சந்திக்கும் அவமதிப்பையும் குடியுரிமைச் சட்டங்களின் கீழ் அவர்கள் படும் அவமானங்கள் பற்றியும் குறிப்பெடுத்துக்கொள்கிறது. • தற்போதைய அரசியல் அமைப்பின் கீழும், தற்போதைய அரசாங்கத்தின் கீழும், தமிழ் மொழியும், கலாசாரமும் எதிர்நோக்கியிருக்கும் பேராபத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. மாநாட்டில் தந்தை செல்வா ஒருவரே தலைமைப் பதவியில் தொடர்ந்திருப்பது உகந்ததல்ல எனக்கூறிய போதும் தொடக்க காலம் என்பதால் தலைவராக இருக்கும்படி வற்புறுத்தப்பட்டது. தயக்கத்தின் பின் தந்தை செல்வா ஏற்றுக்கொண்டார். தலைமையுரையில் தந்தை செல்வா, “கிழக்கு மாகாணம் ஆபத்தான நிலைக்குச் செல்கின்றது. இதைத் தடுக்க கிழக்கு மக்கள் எழுச்சியுற வேண்டும். ஏனைய தமிழ் மக்கள், அவர்களுடன் சேர வேண்டும்” எனக் கூறினார். பிரதமர் டி. எஸ். சேனநாயக்கவின் யாழ் வருகையும், பகிஷ்கரிக்கும் பிரச்சாரமும் 1951 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இவர்தான் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் உருவாக்கினார். மலையக மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தார். தேசியக் கொடியில் தமிழ் மக்களினை இலங்கை இறைமைக்கு வெளியே தள்ளினார். இத்தகையவரின் வருகையைப் பகிஷ்கரிக்குமாறு தமிழரசுக் கட்சி பிரச்சாரம் செய்தது. 1952 பொதுத்தேர்தல் இத்தேர்தலில் வடக்கு – கிழக்கில் ஏழு தொகுதிகளில் தமிழரசுக் கட்சி போட்டியிட்டது. திருமலையில் இராசவரோதயமும், கோப்பாயில் வன்னியசிங்கமும் மட்டும் வெற்றி பெற்றனர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கேசன்துறைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நடேசனிடம் தோல்வியடைந்தார். மொத்தம் 45,531 வாக்குகள் கட்சிக்குக் கிடைத்தது. மட்டக்களப்புத் தொகுதியில் கட்சி அனுதாபியான ஆர்.பி. கதிர்காமர் வெற்றி பெற்றாராயினும் அடுத்த நாளே, தந்தி மூலம், ஐக்கிய தேசியக் கட்சியில் சேந்தார். கல்குடாவில் சிவஞானம் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1953, தை மாதம், பொங்கல் தினத்தன்று தமிழரசு வாலிப முன்னணி உருவாக்கப்பட்டு அமிர்தலிங்கம் அதன் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழரசுக் கட்சியின் 2 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தமிழரசு வாலிப முன்னணி ‘சங்கிலி’ நாடகத்தை அங்கு மேடையேற்றியது. 1953, ஆகஸ்ட் 12, ஹர்த்தால் அரிசியின் விலையை அரசாங்கம் 25 சதத்திலிருந்து 75 சதத்திற்கு உயர்த்தியதை எதிர்த்து இடதுசாரிகள் ஹர்த்தாலை ஒழுங்கு செய்தனர். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் வெற்றி பெற தமிழரசுக் கட்சி உதவியது. இதனால் டட்லி சேனநாயக்க பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தமையைத் தொடர்ந்து, சேர்.ஜோன். கொத்தலாவல பிரதமரானார். ஹர்த்தால் போராட்டத்தில் லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழரசுக் கட்சியும் மட்டுமே பங்குபற்றின என சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் லெஸ்லி குணவர்த்தன கூறினார். சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர், தாம் எதிர்ப்பில்லையாயினும், இலங்கை மக்கள் அத்தகைய ஒரு போராட்டத்தை நடாத்துவதற்கு தயாரான கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்று தாம் நம்பவில்லை எனக் கூறினர். கொத்தலாவலக்கு கறுப்புக் கொடி (1954) 1954 நடுப்பகுதியில் எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வருகை தந்தார். இதன்போது இடம்பெற்ற நிதி மந்திரி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நன்றி தெரிவிப்பு உரையானது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நடைபெற்றது. தமிழ் மொழிபெயர்ப்புத் தானும் இருக்கவில்லை. இதன் பின்னர் கொத்தலாவல யாழ் வருகைதந்த போது தமிழரசுக் கட்சி அவர் வருகையைப் பகிஷ்கரித்தது. தமிழைப் புறக்கணித்தமை, இந்திய வம்சாவளியினரை நாடு கடத்தும் ஒப்பந்த முயற்சிகளை மேற்கொண்டமை, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியமை, திரிசிங்கள, ஜாதிக பெரமுனவை ஆதரித்தமை என்பவற்றைக் கண்டித்துப் பகிஷ்கரிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழரசு வாலிப முன்னணி கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றது. யாழ் நகர மண்டபத்தில் வரவேற்புக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த வேளையில் பிரதமர் மேடையில் ஏறியதும் அமிர்தலிங்கம் தலைமையில் 200 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னரே ஏற்பாடு செய்தபடி, சட்டைப் பைகளில் இருந்த கறுப்புக் கொடிகளைக் காட்டி ‘பிரதமரே திரும்பிப் போ!’ எனக் கோசமிட்டனர். பார்வையாளர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். பொலிஸ் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தமையினால் இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டனர். இதுவே இரத்தம் சிந்திய முதல் போராட்டமாகும். முதற் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் இதுவே. சேர்.ஜோன். கொத்தலாவல கொக்குவிலில் நடந்த வரவேற்பில், ஹண்டி பேரின்பநாயகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் சிங்களம், தமிழ் இரண்டையும் அரச கரும மொழியாக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்படும் எனக் குறிப்பிட்டார். ஆனால் கொழும்பு திரும்பியதும் அடுத்த நாளே எதிர்ப்பு ஏற்பட்டதால், அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டார். 1954 இல் கொழும்பு நகர மண்டபத்தில் நடந்த லங்கா சமசமாஜக் கட்சியின் மொழிச் சமத்துவக் கூட்டம் பிலிப் குணவர்த்தன குழுவினரால் குழப்பப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு 1955 ஏப்ரல் 16,17 ஆம் திகதிகளில் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவராக வன்னிய சிங்கமும், செயலாளராக செல்வநாயகமும் தெரிவு செய்யப்பட்டனர். 1955 ஆம் ஆண்டு என்.எம். பெரேரா மொழிச் சமத்துவத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உட்பட பலர் இதனை நிராகரித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாடு 1956 பெப்ரவரி 18 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தனது களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கரும மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள், தமிழ்த் துணை அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர். இத்தீர்மானத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சி தமிழ்ப் பிரதேசமெங்கும் 1956 பெப்ரவரி 20 திகதி ஹர்த்தால் அனுஷ்டித்தது. தமிழ் அமைப்புகளை இணைத்து ஐக்கிய முன்னணி அமைக்க முயற்சி தமிழரசுக் கட்சியின் செயற்குழு, தமிழ் அமைப்புகளை இணைத்து ஐக்கிய முன்னணி அமைக்கும் முடிவை எடுத்தது. ஏனைய குழுக்களுடனும், தனிநபர்களுடனும் பேசுவதற்கு கட்சி சார்பில் கு. வன்னியசிங்கம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், இராசவரோதயம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தமிழாசிரியர் சங்கத்துடன், நீதியரசர் நாகலிங்கம் போன்றோரும் இதற்கான முயற்சியைச் செய்தனர். ஆனால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. 1956 பொதுத் தேர்தல் 1956 ஏப்ரல் 5, 7, 10 ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் இரண்டும் போட்டியிட்டன. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி 10 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. 1952 ஆம் ஆண்டு தேர்தலில், 45,331 வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் 1,42,036 வாக்குகளைப் பெற்றது. வடக்கு – கிழக்கில், தமிழ் – முஸ்லிம் வாக்குகளையும் பெற்றிருந்தது. இதனூடாக வடக்கு – கிழக்கு மக்கள் தமது ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். தேர்தலின் பின்னர் பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி முதன்முதலாக ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சியை அமைத்தது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 8 ஆசனங்களை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சி ஸ்தானத்தையும் இழந்தது. சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா எதிர்க்கட்சித் தலைவரானார். இதற்குத் தமிழரசுக் கட்சியும் ஆதரவளித்தது. https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-2/

ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்

1 month 3 weeks ago
1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1 June 6, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா இக்காலகட்டம், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் இயக்கம் தொடங்கியதில் முடிவடைகின்றது. இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் இலங்கை என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இருந்து விலகி வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வலியுறுத்தி அதற்கு அதிகாரத்தைக் கோரும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் மூன்று மாற்றங்கள் இடம் பெற்றன. ஒன்று, ஒற்றை ஆட்சியில் சமவாய்ப்புக் கோரிக்கை என்பது கைவிடப்பட்டு, சமஸ்டிக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது, தாயகம் அடையாளப்படுத்தப்பட்டதும் தமிழீழ அரசியல் தமிழத்தேசிய அரசியலாக மாற்றமடைந்தது. மூன்றாவது, இதுவரை காலமும் சட்டசபைகளில் பேசுதல் அல்லது உரையாற்றுதல், கோரிக்கை மனுக்களை அனுப்புதல் என்கின்ற அணுகுமுறைக்கு மாற்றாக மக்களை இணைத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம், 1957 ஆம் ஆண்டு திருமலை யாத்திரை, 1957 – 58 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டங்கள், 1961 ஆம் ஆண்டு கச்சேரிகளின் முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் என்பன முக்கியமானவையாகும். அகில இலங்கை தமிழரசுக் கட்சி இப்போராட்டங்களை முன்னெடுத்தது. எஸ்.ஜே.வி செல்வநாயகம், ‘தந்தை’ செல்வா என அழைக்கப்பட்டார். அவர் இக்காலகட்டத்தை நகர்த்திய முக்கிய தலைவராகக் காணப்படுகின்றார். • புதிய கட்சி உருவாக்க முயற்சி இடம்பெறல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய செல்வநாயகம் குழுவினர் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்துப் பிரசாரம் செய்தனர். இதற்கான முதல் கூட்டம் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முன்றலில் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன், வன்னியசிங்கம் உட்பட இளைஞர்களின் சார்பில் சட்டமாணவராக இருந்த அமிர்தலிங்கமும் உரையாற்றினார். தொடர்ந்து கொழும்பில் ஒவ்வொரு வியாழன் இரவும் ஒவ்வொரு நண்பர் வீட்டில் சமஸ்டிக் கோரிக்கை தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. டாக்டர் வி.என். பரமநாயகம், எம்.திருவிளங்கம், வி.என். திருநாவுக்கரசு, பி. நல்லசிவம்பிள்ளை, வி.பி.சி. முத்துக்குமாரசுவாமி, எஸ்.பி. வேலாயுதப்பிள்ளை, வி. நவரத்தினம், எஸ்.டி. சிவநாயகம், அருள் தியாகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதற்கப்பால் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் சமஸ்டி பற்றிய கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன. திருகோணமலையில் 1949 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 8 ஆம் திகதி சக்தி நிலைய ஆதரவில் சமஸ்டி பற்றிய கருத்தரங்கு இடம்பெற்றது. இராஜவரோதயம் இராமநாதன், விஜயநாதன் ஆகியோர் இக்கருத்தரங்கினை ஒழுங்கு செய்வதில் முன்னிலை வகித்தனர். மட்டக்களப்பில் ஆர்.ப. கதிர்காமர் தலைமையில் முதலாவது கூட்டம் இடம்பெற்றது. ஈ.ஆர். தம்பிமுத்து, சாகுல்ஹமீது, செ. இராசதுரை, இரா. பத்மநாதன், பாலசுப்பிரமணியம், சித்தாண்டி நாகலிங்கம், சிவஞானம், ஆசிரியர் கனகசபை ஆகியோரும் இதனை ஒழுங்குபடுத்துவதில் முன்னிலையில் நின்றனர். • நந்திக்கொடி ஏற்றல் 1949 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் மூன்றாம் திகதி நல்லூர் சங்கிலித் தோப்பில் 1619 இல் அழிக்கப்பட்ட சங்கிலி மன்னனின் நந்திக்கொடியை புதிய அணியினர் மீளவும் ஏற்றினர். நந்திக்கொடி ஏற்றலின் பின்னர் ஊர்வலமாக நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் வீதிக்குச் சென்றனர். அங்கு ப. முத்துக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்தது. போலீசார் கூட்டத்தினைத் தடை செய்தனர். அடுத்தநாள் நான்காம் திகதி நல்லூர்க் கூட்டம் தடைப்பட்டதைக் கண்டித்து நவாலியில் பண்டிதர் இளமுருகனார் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர். அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் தோற்றம் – 1949 டிசம்பர் 18 அகில இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களும், சமஸ்டிக் கோரிக்கைக் கருத்தினால் கவரப்பட்ட உறுப்பினர்களும் 1949 டிசம்பர் 18 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு மருதானையில் உள்ள அரசாங்க லிகிதர் சேவை கட்டிடத்தில் கூடி அகில இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோர் கூட்ட அழைப்பாளர்களாக பத்திரிகைகள் மூலம் அழைப்பு விட்டிருந்தனர். டாக்டர் எம். திருவிளங்கம் வரவேற்புக்குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். செல்வநாயகம், கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். செல்வநாயகம் அவர்களின் தலைமைப் பேருரையின் சுருக்கம் “யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்குமுன் இங்கு வசித்த மக்கள் பல நூற்றாண்டுகளாகச் சிங்களம்பேசும் இனம், தமிழ்பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். தமிழ்பேசும் மக்களில் அரைப்பங்கினரைப் பிரஜாவுரிமை அற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன் அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் தமிழ்பேசும் மக்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது. சிங்கக்கொடி சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று அது சிங்களவருடைய அதிகாரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக்கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக்கொடி எனக் கொள்ளப்படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் தேசியக்கொடியாக ஓர் இனத்தவரின் கொடியைக்கொண்ட நாடு வேறு எதுவும் உலகில் இல்லை. தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கை தமிழ்பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங்கம் அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்! தமிழ்பேசும் மக்களின் எல்லாப் பிரிவினருக்குள்ளும் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள் இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மட்டுமன்றி, அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக்கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கைவாழ் தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்யும் பொறுப்பு பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது. அரசாங்கத்தின் குடியேற்றக்கொள்கை எல்லாவற்றையும் விடவும் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இக்கொள்கையின் ஆபத்தை கல்லோயாவில் காண்கின்றோம். கல்லோயாத் திட்டத்தின்கீழ் நீர் பாய்ச்சப்படும் பிரதேசம், தமிழ்பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ்பேசும் இப்பிரதேசத்தில் அரசாங்கம் சிங்கள மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இது உண்மையாக இருந்தால் இன்றைய தமிழ்பேசும் பிரதேசத்தை குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றது என்பது தெளிவு. தடுப்பார் இன்றி, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப்பிரதேசமே இல்லாதொழியும். ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும், ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டிற்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஸ்டி அரசு இலங்கையில் ஏற்பட வேண்டும். தமிழ்பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தினால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால் இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாக இருக்கிறது. கிழக்கு மாகாணம் முழுவதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வேண்டுமென்றால் தமிழ்பேசும் தமிழர்களும், முஸ்லீம்களும் ஒன்று சேர வேண்டும். ஆனால் எங்களுடைய இயக்கம் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப்பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? சிங்களம்பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லீம்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. அவர்களுக்கு என்ன வேண்டும்? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமென்றால், நமது சமூகத்தில் இருக்கும் குறைகளைக் களைந்து அதைத் தூய்மைபெறச் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுபவர்ளாகக் கருதுகின்றனர். ‘யாம் ஒருவருக்கு கொடுமை செய்தால் தர்ம நீதியின்படி எமக்கும் பிறர் ஒருவர் அதையே செய்வார்’. தமிழ் மக்கள் அரசியல் சுதந்திரம் பெற வேண்டுமேயானால், தம் சமுதாயத்தில் உரிமையற்றவர்களாய் இருக்கும் மக்களுக்கு அவ் உரிமை வழங்க வேண்டும். மலைநாட்டில் வாழும் தமிழ் தொழிலாளர்களது நிலைமையானது இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டத்தகாதவர்களாகி விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிைமை இல்லாமல் இருப்பது மாத்திரமன்றி தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவும் இருக்கிறார்கள். ஏனைய தமிழ்பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்காக எதிர்பார்ப்பது இந்தியாவை அல்ல. சுதந்திரம் விரும்பும் இலங்கைவாழ் மக்களிடமிருந்தே அவ் உதவி வருதல் வேண்டும்.” கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1. தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவும் வகையில் உழைப்பதற்காக தமிழ்பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குதல். 2. கட்சியின் பொருளாதாரக் கொள்கையாக, சோசலிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளல். இரண்டாவது தீர்மானம் தொடர்பாக காராசாரமான விவாதம் நடைபெற்றது. இதன்போது சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை இளைஞர்கள் வற்புறுத்தினர். ஆனால் பெரியவர்கள் இதனை எதிர்த்தனர். கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இருபக்கத்திற்கும் சமமான வாக்குகள் கிடைத்தன. ஈற்றில் தலைவரான செல்வநாயகம் தனது வாக்கை இளைஞர் பக்கத்திற்கு அளித்து சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை ஒரு வாக்கினால் வெற்றியுறச் செய்தார். சோசலிஸப் பொருளாதாரக் கொள்கை, தீண்டாமையை ஒழித்தல், சமூக உயர்வு – தாழ்வுகளை இல்லாமல் செய்தல் என்பவற்றை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டதை பழமை விரும்பிகள் பலர் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் விலகிக்கொண்டனர். கட்சியை ஆரம்பிப்பதற்காக உழைத்த பலர்கூட விலகிச்சென்றனர். அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சி X தமிழ்க்காங்கிரஸ் என்ற இரு சக்திகள் இயங்க ஆரம்பித்தன. தமிழிலேயே கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தினர் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதான ஆதரவுத்தளமாக மாறினர். சோல்பரியின் யாழ்ப்பாண வருகையும், பகிஸ்கரிப்பும் சோல்பரி அரசியல் திட்டத்தினை உருவாக்கிய சோல்பரிப் பிரபுவே அவ் அரசியல் திட்டத்தின்கீழ் மகாதேசாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1950 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். தமிழரசுக்கட்சி இவரது வருகையை பகிஸ்கரிக்க முடிவு செய்தது. இதுவே தமிழரசுக் கட்சியின் முதற் போராட்டமாகவும் இருந்தது. ‘தமிழினத்தின் வைரியை வரவேற்காதீர்’ என்ற தலைப்பில் தமிழரசுக்கட்சி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு ‘வருகையைப் பகிஸ்கரியுங்கள்’ என மக்களைக் கோரியது. இது தொடர்பாக 22-1-50 இல் யாழ். நகர மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதி நேரத்தில் அரசாங்கத்தினால் கூட்டம் தடை செய்யப்பட்டது. கூட்ட நாளன்று மண்டபத்தைச் சுற்றிப் பொலிஸ் காவலில் நிற்றனர். ஆயிரக்கணக்கில் வந்த மக்கள் அருகில் உள்ள தனியார் ‘கராஜ்’ஜில் கூடினர். அங்கு ஒரு மேசையின்மீது ஏறி நின்று தலைவர்கள் பேசினர். தேசியக்கொடிப் பிரச்சினை 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தேசியக்கொடியை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டது. S.W.R.D. பண்டாரநாயக்கா, கலாநிதி செனரத்பரணவிதான, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, சேர்.ஜோன். கொத்தலாவல, ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.பி. ஜாயா, எஸ். நடேசன் ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர். இதற்கு முன்னரே தேசியக்கொடி சிங்களவர்களின் சிங்கம், தமிழ் மக்களின் நந்தி, முஸ்லீம்களின் பிறை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என ஒரு பிரேரணையை தந்தை செல்வா முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அதனை ஆமோதித்தார். ஆனால் சிங்களத்தரப்பு இதனை நிராகரித்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரம் கிடைத்தபோது எந்தக் கொடியை ஏற்றுவது என்று பிரச்சினை வந்தது. 1835 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவப்பு நிறப் பின்னணியுடன் வாளேந்தியபடி இருக்கின்ற கண்டி அரசனின் சிங்களக் கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டுமென மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் முதலியார் சின்னலெப்பை பாராளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டுவந்தார். ஏ.ஈ. குணசிங்கா அதனை ஆமோதித்தார். பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவும் வரவேற்றார். இதனால் சிங்கக்கொடியே சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது. அனைத்து மதத்தவர்களும் வழிபடும் ‘சிவனொளிபாதமலை’ தேசியக்கொடியாக இருக்க வேண்டும் என ஹண்டி பேரின்பநாயகம் வலியுறுத்தினார். தமிழ், முஸ்லீம்களை குறிப்பதற்கு செம்மஞ்சள், பச்சை நிறக்கோடுகள் வாளேந்திய சிங்கத்திற்கு வெளியே இருக்கும்வகையில் கொடி உருவாக்கப்பட்டது. செனட்டர் நடேசன் இதனைக் கடுமையாக எதிர்த்தார். கொடியில் தமிழர்களும், முஸ்லீம்களும் சிங்கள தேசத்தின் எல்லைகளுக்கு வெளியே இருப்பதாகவும் அந்த இரு இனங்களையும் தடுத்து நிறுத்துவதற்காக சிங்கம் தன் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் கூறி, செனட்டர் நடேசன் எதிர்ப்புத் தெரிவித்துக் குழுவை விட்டு வெளியேறினார். ஜீ.ஜீ.பொன்னம்பலமும் டி.பி. ஜாயாவும் கொடிக்கு இணக்கம் தெரிவித்தனர். 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 14 ஆம் திகதி தேசியக் கொடிக்குழு தேசியக்கொடி பற்றிய பரிந்துரையைச் செய்தது. செனட்டர் நடேசன் இதனை ஏற்கவும் இல்லை, கையெழுத்திடவும் இல்லை. 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 15 ஆம் திகதி செனட்டர் நடேசன் இது பற்றி அறிக்கை வெளியிட்டார்.. அதில் “தேசப்பிரிவினையின் குறியீடாக கொடி இருக்கும்” எனக் கூறினார். 1952 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 02 ஆம் திகதி தேசியக்கொடி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தேசியக்கொடிக்கு ஆதரவாக 51 பேரும் தேசியக் கொடியை எதிர்த்து 21 பேரும் வாக்களித்தனர். வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் தேசியக்கொடியை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இடைத்தேர்தல் இடம்பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபை மேஜர் குரே வவுனியாவில் போட்டியிட்டார். சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார். அகில இலங்கை தமிழரசுக்கட்சியும் தேசியக்கொடியை நிராகரித்தது. “தமிழ்பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட இரண்டாம் தரப்பிரஜைகளாக இந்நாட்டில் வாழ்கின்றனர் என்பதைப் பிரகடனப்படுத்தும் ஒட்டுக்கொடி” எனப் பிரசாரம் செய்தது. சிங்களக் குடியேற்றங்கள் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைந்தது. 1941 இல் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டமும் சுதந்திரத்தின் பின்னரே நடைமுறையில் துரிதநிலைக்கு வந்தது. இக்குடியேற்றத்தின் மூலம் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 38 கிராமங்கள் சிங்களவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 06 கிராமங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. பட்டிப்பளையாறு என்ற தமிழ்ப்பெயர் கல்லோயா என மாற்றப்பட்டது. மாவட்டத்தின் சனவிகிதாசாரத்தை மாற்றுவதன் மூலம் மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதலே நோக்கமாக இருந்தது. இக்குடியேற்றத்தை மையமாக வைத்தே 1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தேர்தல் தொகுதியும், 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைநகராக குடியேற்றப் பிரதேசமான அம்பாறை தெரிவு செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டம் என்ற பெயர் பின்னர் ‘திகாமடுல்ல’ மாவட்டம் என மாற்றப்பட்டது. சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகா ஓயாவும், பதியத்தலாவையும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சிங்களப் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி கல்முனை, சம்மாந்துறை போன்ற இடங்களுக்குச் சென்று குடியேற்றங்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டது. இக்குடியேற்றங்கள், பின்னர் திருகோணமலை மாவட்டத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனிதப் பிரதேசக் குடியேற்றம், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்துவகைக் குடியேற்றங்களும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள்தான் இவற்றில் பெரியவையாக இருந்தன. மாவட்டத்தின் சனத்தொகையை மாற்றியமைப்பதில் பெரும்பங்களிப்பினைச் செய்தனர். அல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், மொறவேவாத் திட்டம், மகாதிவுல்வௌத்திட்டம், பதவியாத்திட்டம் என மிகப்பெரும் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற மாவட்டமாக இருப்பது திருக்கோணமலைதான். தாயக ஒருமைப்பாட்டைச் சிதைத்தலே இக்குடியேற்றங்களின் முக்கிய நோக்கமாக இருத்தது. 1970களில் இக்குடியேற்றங்களை வால்போல இணைத்து ‘சேருவல’ என்கின்ற சிங்களத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. பிரதேசசபைகளும் உருவாக்கப்பட்டன. ‘சேருவல’ தொகுதியின் உருவாக்கத்தால் மூதூர் என்ற இரட்டை அங்கத்தவர் தொகுதி, ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன்மூலம் மூதூர்ப் பிரதேச தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் குறைவடைந்தது. பிற்காலத்தில் இக்குடியேற்றங்கள் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டது. வவுனியா வடக்கில் மகாவலித்திட்டத்தை இதற்காகப் பயன்படுத்தினர். இன்று வவுனியா வடக்குப் பிரதேச சபையில்கூட நான்கு வட்டாரங்கள் சிங்கள வட்டாரங்களாக இருக்கின்றன. முல்லைத்தீவில் ‘வெலிஓயா’ என்ற பெயரில் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி வழங்கப்பட்ட சுதந்திரம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களினை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியது. ஆட்சியாளர்கள் ஒரேநேரத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது, அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவது என்கின்ற இரண்டு செயற்திட்டங்களை முன்னெடுத்தனர். முதலாவது செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு, கலாசார அழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன. தேசியக்கொடி குறியீட்டு வடிவில் அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது. 1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம், ஒரேநேரத்தில் தேசிய இன அழிப்பாகவும், அரசு அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவதாகவும் இருந்தது. கல்லோயாத் திட்டம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தனது நிரந்தர செயலாளர் சேர். கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசனப் பணிப்பாளர் ரி. அழகரத்தினம், நில அளவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ். புறோக்கியர் என்போரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். கிழக்கு மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டிப்பளை ஆற்றினை பாரிய நீர்பாசனத் திட்டமாக்கப் போவதாக அறிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி அழகரத்தினத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டிப்பளை ஆறு பதுளை மாவட்டத்தில் உள்ள மடுல்சீமை மலைத்தொடரில் ஊற்றெடுத்து 56 மைல்கள் பாய்ந்தோடி, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. இதன் தரையில் பிரதான தமிழ்க்கிராமமான பட்டிப்பளை இருந்தது. சிறந்த விவசாய பூமி. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சிறந்த விவசாயப் பிரதேசமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை வளர்க்கும் முகமாக இறக்காமம், கொண்டை வெட்டுவான், அம்பாறைக் குளங்களைப் புனரமைத்துக் கொடுத்தனர். அழகரத்தினம் குழுவினர் சம்மாந்துறை சென்று அங்கிருந்து மாட்டுவண்டி மூலம் பட்டிப்பளை ஆற்றின் மேல் பகுதியில் உள்ள அம்பாறை, இங்கினியாகலை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பட்டிப்பளையாற்றை இங்கினியாகலையில் மறித்து நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கி நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சிபாரிசு செய்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கல்லோயா அபிவிருத்திச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பட்டிப்பளை ஆறு கல்லோயாவாக மாற்றப்பட்டது. தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டும் முயற்சி இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தி வேலைகளை 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இங்கினியாகலையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார். பட்டிப்பளை ஆற்றை இங்கினியாகலையில் மறித்து அணை ஒன்றைக் கட்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. டி.எஸ். சேனநாயக்க அதனை ஆரம்பித்து வைத்ததால் இதற்கு சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. கல்லோயாத் திட்டம் 12,0000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் நிலங்களும் இரண்டு ஏக்கர் மேட்டு நிலங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடியிருக்க வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. 40 குடியேற்றக் கிராமங்களில் 34 கிராமங்கள் சிங்களவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டன. 6 கிராமங்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டன. கல்லோயாத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 20,000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 6 கிராமங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடியேற்றப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கல்லோயாத் திட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர். மீண்டும் குடியேறிய மக்கள் 1958 இல் நடைபெற்ற கலவரத்தில் மீண்டும் விரட்டப்பட்டனர். மீண்டும் திரும்பிய ஒருசிலரும் 1990 இல் விரட்டப்பட்டனர். இறுதியில் கல்லோயாத் திட்டம் தனித்துச் சிங்களவர்களுக்கான திட்டமாகவே மாறியது. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமென ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலங்களிலும் சிங்களவர்களே பயிர்ச்செய்கையை மேற்கொண்டனர். இதைவிட பொத்துவில் லகுகலவில் வாழ்ந்த 343 தமிழ்க் குடும்பங்களும் சிங்களவர்களினால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் காரைதீவு, விநாயகபுரம், ஆலையடி வேம்பு போன்ற இடங்களில் அதிகளவாக வாழ்கின்றனர். 1959 ஆம் ஆண்டு தேர்தல்தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. அதன்போது முதன்முதலாக சிங்கள மக்களுக்கு என அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத் தேர்தல் தொகுதியிலிருந்து முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு சிங்களவர் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டார். 1961க்கு முன்னர் இப்பிரதேசம் மட்டக்களப்புத் தெற்கு என்றே அழைக்கப்பட்டது. 1961 இல் அம்பாறை என்ற தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. குடியேற்றப் பிரதேசமான அம்பாறை இதன் தலைநகராக்கப்பட்டது. 1980களில் இதன்பெயர் திகாமடுல்ல என மாற்றப்பட்டது. இதே காலப்பகுதியில் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மாவட்டத்தில் கூட்டுவதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகாஓயா, பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. திருகோணமலைக் குடியேற்றங்கள் உலகின் எல்லா இடங்களிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதற்கு ஆதிக்கசக்திகள் குடியேற்றங்களையே ஒரு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைகளின் அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கும், போர்க்காலங்களில் போராளிகளை இலகுவாக ஒடுக்குவதற்கும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களிடையே நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ளாமல் கூறுபோடுவதற்கும், தீர்வு என வரும்போது குடியேற்ற மக்களைக்காட்டி தீர்வு முயற்சிகள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குச் சார்பாகச் செல்லவிடாமல் தடுப்பதற்கும், இக்குடியேற்றங்களே அவர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன. பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றம், அயர்லாந்தில் புரட்டஸ்தாந்தியர்களின் குடியேற்றம், கொசேவாவில் சேர்பியர்களின் குடியேற்றம், திபெத்தில் சீனர்களின் குடியேற்றம், கிழக்குத் தீமோரில் இந்தோனேசியர்களின் குடியேற்றம், பிலிப்பைன்ஸ் மிந்தானோவில் கிறிஸ்தவர்களின் குடியேற்றம் என்பன இந்த வகையிலேயே நடைபெற்றன. உலக நாடுகளின் நிர்ப்பந்தங்களினால் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது இக்குடியேற்றங்களே பெரும் தடைகளாக விளங்குகின்றன. கிழக்குத் தீமோர் மக்களின் சுதந்திரத்தினை அங்கு குடியேறியுள்ள இந்தோனேசியர்கள் தடுத்ததையும், பாலஸ்தீன சுயாட்சி ஒழுங்காகச் செயற்படுவதை மேற்குக்கரை, காஸா பகுதிகளில் குடியேறிய யூதக் குடியேற்றவாசிகள் தடுப்பதையும் இந்தவகையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைச் செயலற்றதாக்குவதற்கு ஆட்சியாளர்கள் குடியேற்றங்களையே ஒரு பிரதான கருவியாகப் பயன்படுத்தினர். தமிழர்களின் தனிவழி அரசியல் 1920களிலேயே உணரப்பட்டதால் அக்காலத்தில் இருந்தே சிங்களப் பேரினவாதிகளிடம் இக்குடியேற்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியிருந்தது. 1931 இலிருந்து 1947 வரையான டொனமூர் அரசியல் யாப்புக் காலப்பகுதியில் சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த வகையிலேயே 1941 இல் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுதந்திரத்தினைத் தொடர்ந்து தமிழர் அரசியல், சமத்துவ உரிமை என்பதற்கப்பால் தாயக இறைமை என்பதனை நோக்கி வளரத் தொடங்கியது. தாயகக் குறியீடாக வடக்கு – கிழக்கு நிலப்பரப்பு என்பது எழுச்சியடைந்தது. இத்தாயக இறைமை, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தடுக்கும் வகையில் ஒரு நீண்டகால இலக்கில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அவர்கள் பிரதானமாக தேர்ந்தெடுத்த இடமே திருகோணமலை மாவட்டமாகும். திருகோணமலை மாவட்டத்தினை கடற்கரைப்பக்கமாக வில்போல சுற்றிவளைத்து இவை மேற்கொள்ளப்பட்டன. ஏனைய தமிழ்ப்பிரதேசங்களுடனான தொடர்புகளை துண்டித்தலே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. ஒரு வில்போல நீளமாக வளைந்திருக்கும் குடியேற்றப் பிரதேசமான சேருவல தேர்தல் தொகுதியினைப் பார்க்கும்போது இவ்வுண்மை தெளிவாகப் புலப்படும். இந்நிலையில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் இக்குடியேற்றங்களைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள சதி முயற்சிகளைப் பற்றியும், பேரினவாதிகளின் மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும். இவ்வறிந்து கொள்ளலே இப்புற்றுநோயை இந்த மட்டத்திலாவது இடைநிறுத்தி மேலும் வளராமல் தடுப்பதற்குரிய மார்க்கங்களைப் புலப்படுத்தும். பேரினவாதிகளின் செயற்பாட்டிற்கு மாற்றான ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் திறந்துவைக்கும். மாற்றுமருந்து வகைகளையும் கண்டுபிடிக்கும். சுதந்திரத்திற்கு முன்னர் திருமலை மாவட்டத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த சிங்கள மக்கள் என விரல்விட்டு எண்ணக்கூடியோரே வாழ்ந்திருந்தனர். இதற்குப் புறம்பாக திருமலை நகரத்தில் மட்டும் துறைமுக வேலைகளுக்காகவும், பிரித்தானியக் கடற்படைத்தள வேலைகளுக்காகவும் தற்காலிகக் குடியேறிகள் சிலர் வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட விவசாயக் குடியேற்றத் திட்டங்களைத் தொடர்ந்தே, பெரும் எண்ணிக்கையானவர்கள் குடியேறத் தொடங்கினர். தொடர்ந்து இவற்றைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத விவசாயக் குடியேற்றத் திட்டங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றங்கள், மீனவர் குடியேற்றங்கள், புனிதப் பிரதேசக் குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள் என்பன சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தன. இக்குடியேற்றங்களின் வளர்ச்சியினாலேயே திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3% ஆக இருந்த சிங்களவர் எண்ணிக்கை, 1981 இல் 33.62% ஆக அதிகரித்தது. அதேவேளை 1827 இல் 81.82% ஆகவிருந்த தமிழர்களின் எண்ணிக்கை 36.4% ஆகக் குறைந்தது. இனி திருகோணமலையின் முக்கிய திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களைப் பார்ப்போம். தொடரும். https://www.ezhunaonline.com/1949-1968-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-1/

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. Babu Babugi

ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்

1 month 3 weeks ago
1921 தொடக்கம் 1949 வரையான காலகட்டம்: ஒற்றையாட்சிக்குள் சமவாய்ப்பு May 3, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா 1921 ஆம் ஆண்டு ஆரம்பித்த இக்காலகட்டம் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெறும்வரை நடைமுறையில் இருந்தது எனக் கூறலாம். இக்காலகட்டத்துடன் தமிழின அரசியல் என்பது ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் இக்காலகட்டத்து தமிழர் அரசியல் என்பது இலங்கை என்கின்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குள் சமவாய்ப்பைக் கோரும் அரசியலாகவே இருந்தது. இதை ஆரம்பித்து வைத்தவர் சேர். பொன்னம்பலம் அருணாசலமாவார். ஆனாலும் இக்காலகட்ட அரசியலை வளர்த்து எடுத்தவராக ஜீ.ஜீ பொன்னம்பலம் விளங்குகின்றார். தமிழர் மகாசபையின் தோற்றம் இலங்கைத் தேசியக் காங்கிரஸில் இருந்து வெளியேறிய சேர். பொன்னம்பலம் அருணாசலம் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தமிழர் மகாசபை எனும் இனரீதியான அரசியல் இயக்கத்தை யாழ்ப்பாணத்தில் உருவாக்கினார். இதன் உருவாக்கத்தின்போது தமிழ் அகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இலங்கைத் தீவில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களையும் இணைத்த அரசியலாகவே இக்காலகட்ட அரசியல் இருந்தது. 1924 ஆம் ஆண்டு பொன்னம்பலம் அருணாசலம்; மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்றபோது அங்கு மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனால் இக்காலகட்ட அரசியலை இவரால் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. முன்னரே கூறியதுபோல ஜீ. ஜீ பொன்னம்பலம் இதனை வளர்த்து எடுத்தார். அவரது ‘50 : 50’ கோரிக்கை இதன் அடிப்படையிலேயே எழுச்சியடைந்தது. இதன் அர்த்தம் அனைத்து விவகாரங்களிலும் 50 சதவீதம் பெரும்பான்மை இனத்திற்கும் மீதி 50 சதவீதம் ஏனைய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். பெரும்பான்மை இனம் ஏனைய இனங்களுக்கு எதிராகச் செயற்படக்கூடாது என்பதற்காகவே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் – 1924 1924 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் முன்னோடியாக ஹண்டி பேரின்பநாயகம் கருதப்படுகின்றார். இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையை இவ்வமைப்பு முன்வைத்திருந்தது. தமிழின அரசியலில் இவ்வமைப்பு பெரிய அக்கறை காட்டவில்லை. ஆனாலும் தமிழ்ச்சூழலில் சமூக மாற்ற அரசியலை இவர்களே ஆரம்பித்து வைத்தனர். குறிப்பாக, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியத் தேசிய காங்கிரஸின் அரசியலினாலும், போராட்டங்களினாலும் கவரப்பட்டவர்களாக இருந்தனர். இந்தியத் தேசிய காங்கிரஸின் இடதுசாரிப் பிரிவுடன் இவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவர்களை, யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பிரசாரக் கூட்டங்களை நடத்தினர். இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு போன்ற இந்தியத் தேசிய தலைவர்கள், இவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை வந்து யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றினர். மனிங் டிவென்சயர் அரசியல் சீர்திருத்தம் – 1924 இவ் அரசியல் சீர்திருத்தத்தின்படி சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 49 ஆக காணப்பட்டது. இதில் 37 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும், 12 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களில் 23 பேர் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்டனர். சிங்கள மக்களிலிருந்து 16 பேரும், தமிழ் மக்களிலிருந்து 7 பேரும் தெரிவு செய்யப்படக்கூடியதாக இப்பிரதிநிதித்துவம் ஒழுங்கமைக்கப்பட்டது. ஆறு பேர் இனரீதியாகத் தேர்தலின்மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஐரோப்பியர் – 3, பறங்கியர் – 2, மேல் மாகாணத் தமிழர் – 1 என்ற வகையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தவகையில் மேல் மாகாணத் தமிழர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் அருணாசலம் மகாதேவா ஆவார் . கண்டிய தேசிய அவையின் சமஸ்டிக் கோரிக்கை கண்டிய தேசிய அவை 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கரையோரச் சிங்கள மக்களின் ஆதிக்கம் கண்டியப் பிரதேசத்தில் வளரக்கூடாது என்பதற்காகவே இவ்வமைப்புத் தோற்றம் பெற்றது. இது இலங்கையில் முதன்முதலாக சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இவ்வமைப்பின் சமஸ்டிக் கோரிக்கை இலங்கையானது கரையோரப்பகுதி, கண்டியப்பகுதி, வடக்கு – கிழக்குப் பகுதி என மூன்று சமஸ்டிப் பிரதேசங்களை உருவாக்க வேண்டும் என்றும், அம்மூன்றையும் இணைத்து ஒரு மத்திய அரசை உருவாக்க வேண்டும் என்றும் இருந்தது. 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபோது டொனமூர் விசாரணைக்குழு முன்னிலையில் சமஸ்டிக் கோரிக்கையை இவ்வமைப்பு முன்வைத்தது. இக்கோரிக்கையைப் பிரசாரம் செய்வதற்காக யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கூட்டத்தை நடத்தினர். ஆனால் தமிழ்மக்கள் இவர்களது சமஸ்டிக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. இந்தச் சமஸ்டிக் கோரிக்கையின் பிரதான ஆதரவாளராக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விளங்கினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஸ்டிக் கோரிக்கையை ஆதரித்து இவர் உரையாற்றினார். சர்வஜன வாக்குரிமையும் மலையக மக்களும் டொனமூர் யாப்பின்கீழ் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது, மலையக மக்களும் வாக்குரிமை பெற்றுவிடுவார்கள் என்பதற்காக சிங்களத் தலைவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பான விவாதம் சட்டசபையில் இடம்பெற்ற போது டி.எஸ். சேனநாயக்கா “இந்தியர்களுக்கு ஒரு பெரிய நாடு உள்ளது. எங்களுக்கு இச்சிறுதுண்டு நிலமே உள்ளது” எனக் குறிப்பிட்டார். பிரான்சிஸ் மொலமூறே “பழைய காலத்தில் இலங்கையை லிப்டனின் தோட்டம் என்றனர். எதிர்காலத்தில் இலங்கையை இந்திய ஆலமரத் தோட்டம் என குறிப்பிடக்கூடும்” என்றார். சி.டபிள்யூ. கன்னங்கரா “இந்தியரின் வாக்குரிமையை எதிர்க்காதோர் துரோகிகள்” என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். இறுதியில், நாட்டில் நிலையான அக்கறை உடையோருக்கு அல்லது நாட்டில் நிலையாக வசிப்போருக்கே வாக்குரிமை என டொனமூர் குழுவினர் சிபாரிசு செய்தனர். 1931 ஆம் ஆண்டு தேர்தலில் மலையக மக்களிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டனர். ஹட்டன் தேர்தல் தொகுதியில் இருந்து பெரிசுந்தரமும், தலவாக்கலை தேர்தல் தொகுதியில் இருந்து எஸ்.பி. வைத்திலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர். டொனமூர் அரசியல் யாப்பு – 1931 1927 ஆம் ஆண்டு டொனமூர் குழுவினர் ஓர் அரசியல் யாப்பைச் சிபாரிசு செய்ய இலங்கை வந்தனர். அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு டொனமூர் அரசியல் யாப்பு என்ற பெயரில் 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை நடைமுறையில் இருந்தது. டொனமூர் குழுவினரின் மத்தியில், இலங்கையில் செயற்பட்ட அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. சிங்கள மக்களின் பிரதிநிதிகள் பிரித்தானிய மாதிரியிலான அரசாங்கம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். கண்டியப் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் முன்னரே கூறியதுபோல சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கூறினர். ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் செயற்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. டொனமூர் குழுவினர் இலங்கைச் சமூகம் ஐக்கியப்பட்ட சமூகமாக இல்லாததனாலும், இலங்கையர்கள் அரசியல் நிர்வாகத்தில் பயிற்சி குறைவுடையவர்களாக இருந்ததனாலும், அரசியல் கட்சிமுறை வளர்ச்சி அடையாமல் இருந்ததனாலும், அரைப் பொறுப்பாட்சி முறையையும், அனைத்துத் தரப்பும் பங்கேற்கக்கூடிய நிர்வாகக்குழு முறையையும் சிபாரிசு செய்தனர். நியமன உறுப்பினர்களும், தேசாதிபதியின் அதிகாரங்களும், நிர்வாகக்குழு முறையும், பொதுச்சேவை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களும் தமிழர்களின் அதிருப்தியைப் போக்குவதில் பங்காற்றும் எனவும் குறிப்பிட்டனர். சேர். பொன்னம்பலம் இராமநாதன் டொனமூர் அரசியல் யாப்பைக் கடுமையாக எதிர்த்தார். “டொனமூர் என்றால், தமிழர் இல்லை” என்று குறிப்பிட்டார். 1927 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் இதனைக் கடுமையாக எதிர்த்தார். டொனமூர் அரசியல் யாப்பு ஏற்கனவே கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி நிர்வாகக்கட்டமைப்பிடம் பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அடிப்படையில் அதிகாரத்தை ஒப்படைத்தது. முதன்முதலாக குறைந்த மட்டத்திலாவது பெரும்பான்மை இனம் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்நிலை உருவானது. சிங்கள – பௌத்தக் கருத்தியல் வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்ததால், ஏனைய இனங்களை அதிகாரக் கட்டமைப்பில் இருந்து விலக்குவதாகவும், அவர்களை ஒடுக்குவதாகவும் ஆட்சிமுறை வளரத் தொடங்கியது. 1833 ஆம் ஆண்டு கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புவரை, இனப்பிரச்சினைக்கு தீர்வாக இனவாரிப் பிரதிநிதித்துவ முறையையே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முன்வைத்தனர். 1921 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையினால் பிரதிநிதித்துவச் சமநிலை குழம்பியது. 13 சிங்களப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, 3 தமிழ்ப் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட்டனர். எனினும் ஆட்சி அதிகாரம் முழுமையாக ஆங்கிலேயரிடம் இருந்தமையினால் ஆபத்துகளைத் தொட்டுணரக்கூடிய நிலை இருக்கவில்லை. 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் பிரதிநிதித்துவச் சமநிலை குலைவுடன், கூடவே பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் இருந்தமையினால், புறக்கணிப்பைத் தொட்டுணரக்கூடிய நிலை உருவானது. இதன் அடிப்படையில் தமிழர்கள் கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர். நியமன உறுப்பினர்களும், தேசாதிபதியின் அதிகாரங்களும், நிர்வாகக்குழுமுறையும், பொதுச்சேவை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களும், சிறுபான்மையோரின் காப்பீடாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. 1931 இற்குப் பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மேற்கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளே முன்வைக்கப்பட்டன. இராமநாதன், டொனமூர் திட்டத்தை, “தமிழ் மக்களின் தூக்குக் கயிறு” எனக் குறிப்பிட்டார். சட்டசபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஒரு வாக்கினால் இவ் அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. அந்த ஒரு வாக்கினை மட்டக்களப்பைச் சேர்ந்த ஈ.ஆர். தம்பிமுத்து என்பவரே வழங்கியிருந்தார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் தேர்தல் பகிஸ்கரிப்பு டொனமூர் அரசியல் யாப்பின்கீழ் முதலாவது தேர்தல் 1931 ஜூன் மாதம் இடம்பெற்றது. இத்தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பகிஸ்கரித்தது. பகிஸ்கரிப்புக்கான காரணமாக, டொனமூர் அரசியல் யாப்பு இலங்கைக்கு பூரண சுதந்திரத்தை வழங்கவில்லை என்று கூறப்பட்டது. இப்பகிஸ்கரிப்புப் போராட்டத்திற்கு சிங்கள அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்குவதாகக் கூறியபோதும், பின்னர் பின்வாங்கினர். இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. 1927 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் டொனமூர் அரசியல் யாப்பை நிராகரித்த போதும், தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட முடியாமையினால் மன்னார் – முல்லைத்தீவு தொகுதியில் போட்டியிட்டு எஸ்.என். ஆனந்தன் என்பவரிடம் தோல்வியடைந்தார். 1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடைத்தேர்தல் இடம்பெற்றது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். இவ்வெற்றியுடன் தமிழ் அரசியலில் அவரது தலைமைத்துவம் உறுதியாகிவிட்டது. அதேவேளை காங்கேசன்துறை தொகுதியில் இருந்து நடேசன் என்பவரும், யாழ்ப்பாணத் தொகுதியில் அருணாசலம் மகாதேவாவும், ஊர்காவற்துறைத் தொகுதியில் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளையும், மன்னார் – முல்லைத்தீவுத் தொகுதியில் எஸ்.என். ஆனந்தனும், திருகோணமலைத் தொகுதியில் எம்.எம். சுப்பிரமணியமும், மட்டக்களப்புத் தொகுதியில் ஈ.ஆர். தம்பிமுத்துவும் தெரிவு செய்யப்பட்டனர். சிங்கள மகாசபை – 1934 19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து ‘சிங்கள மகாசபை’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மகாகவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம். ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்), பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகாசபையின் ஸ்தாபகர்களாகக் காணப்பட்டனர். சிங்கள மகாசபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல; வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் ‘சுவதேஷிய மகாசபா’ (Swadeshiya Maha Sabha – சுவதேசிய மகாசபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரமுகரான குமாரதுங்க முனிதாச அந்தப் பரிந்துரையைத் தோற்கடித்தார். பிளவுபட்டிருக்கிற சிங்கள இனத்தை ஒன்று சேர்த்து தேசாபிமானத்தைக் கட்டியெழுப்பி தேசத்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே இதனை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. நாட்டுக்கு சிங்கள மகாசபையின் அவசியம் என்ன என்பது குறித்த பண்டாரநாயக்கவின் விளக்கம், 10.05.1934 அன்று, ‘லக்மின’ பத்திரிகையில் வெளியாகியிருந்தது. சிங்கள மகாசபையினர் மலையகத் தோட்டத் தொழிலாளார்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக உள்நாட்டில் அவர்களுக்கு உரிமைகள் வழங்குவதை எதிர்த்ததுடன், அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றம் – 1935 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதலாவது அரசியல் கட்சியாகவும், முதலாவது இடதுசாரிக் கட்சியாகவும் லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது. சூரியமல் இயக்கம், வெள்ளவத்தை நெசவாளர் போராட்டம், மலேரியா நிவாரணச் சேவை என்பன லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெறுவதற்கு காரணமாக விளங்கின. இவ் இடதுசாரி இயக்கம் தமிழ் மக்களின் நலன்கள்மீதும், மலையக மக்களின் நலன்கள்மீதும் அக்கறைகொண்ட அமைப்பாக விளங்கியது. ஆரம்பத்தில் கட்சி மூன்று இலக்குகளைப் பிரதானமாகக் கொண்டிருந்தது. பூரண சுதந்திரத்தை அடைவது, உற்பத்தி விநியோகப் பரிவர்த்தனை சாதனங்களைத் தேசியமாக்குவது, வர்க்க – சாதி – இன – சமய ஏற்றத்தாழ்வுகள் காரணமாகத் தோன்றும் சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளை ஒழித்துக்கட்டுவது என்பவையே அவையாகும். இடதுசாரி இயக்கத்தினர், இந்தியத் தேசிய காங்கிரஸ் இயக்கத்தினரினால் கவரப்பட்டவர்களாக விளங்கியமையினால், இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர்களை இலங்கைக்கு அழைத்து தென்னிலங்கையில் கூட்டங்களை நடத்தினார். மிக நீண்டகாலம் ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றவர்களாகவும் அவற்றிற்குக் குரல் கொடுப்பவர்களாகவும் செயற்பட்டனர். 1936 ஆம் ஆண்டுத் தேர்தலும் தனிச்சிங்கள மந்திரி சபையும் 1936 ஆம் ஆண்டுத் தேர்தலில் பின்னர் மந்திரிசபை அமைக்கப்பட்டபோது அனைவரும் சிங்களவர்களாகவே இருந்தனர். அது தனிச்சிங்கள மந்திரி சபையாகவே இருந்தது. இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஜீ.ஜீ. பொன்னம்பலம் ‘50 : 50’ கோரிக்கையை முன்வைத்தார். இதன் பின்னர் ‘50 : 50’ கோரிக்கை ஓர் அரசியல் இயக்கமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்தேர்தலின் பின்னர் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவினால் சேர். வைத்திலிங்கம் துரைசாமி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின்போது சமநிலை காணப்பட்டது. ஆனால் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான டாக்டர் என்.எம். பெரேராவின் முயற்சியினால் அபயகுணசேகர என்ற உறுப்பினர் சேர். வைத்திலிங்கம் துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்தார். 1942 ஆம் ஆண்டு ரி.டி. ஜெயதிலகவின் உள்நாட்டு மந்திரிப்பதவி வெற்றிடமாக, அவ்விடத்திற்கு அருணாசலம் மகாதேவா அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். அமைச்சர் பதவியைத் தொடர்ந்து அருணாசலம் மகாதேவா சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப்போக முனைந்தார். ஆனால் ஜீ.ஜீ. பொன்னம்பலம் சிங்களத் தலைவர்களிடமிருந்து விலகியே இருந்தார். தமிழ் அரசியலில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் செயற்பாடு மேலும் வளர்ச்சிபெற ஆரம்பித்தது. டொனமூர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த, குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு எதிராகப் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1935 ஆம் ஆண்டின் 19 ஆவது சட்டமாகிய காணி அபிவிருத்திச் சட்டம், 1940 ஆம் ஆண்டின் 24 ஆவது சட்டமாகிய மீன்பிடிச் சட்டம், 1942 ஆம் ஆண்டின் 47 ஆவது சட்டமாகிய பேருந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம் என்பன அதில் முக்கியமானவையாகும். இவற்றில் முதலாவது சட்டம் 1927 ஆம் ஆண்டின் நில ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளுக்குச் சட்ட உருக்கொடுக்கும் முகமாக ஆக்கப்பட்டதொன்றாகும். அதன் பிரதான நோக்கம் நிலமற்ற குடியான்களுக்கும், மத்திய வகுப்பினருக்கும் காணிகளைப் பங்கிட்டுக் கொடுப்பதாகும். இரண்டாவது சட்டமாகிய மீன்பிடிச்சட்டம் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் இலங்கையர் அல்லாதோர் மீன்பிடிக்க விரும்பினால், அதற்குரிய அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென விதித்தது. இதன் இலக்கு இந்திய சமூகத்தவர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதினின்று தடுப்பதாகவே இருந்தது. மறுபுறம் பேருந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம், பேருந்து சேவையை நடத்துவதில் இலங்கையருக்கு முன்னுரிமை வழங்க முன்வந்தது. இந்தச் சட்டங்கள் இந்தியருக்கு எதிரானவை என்பது நேரடியாக எடுத்துக்கூறப்படாத போதும், நடைமுறையில் அவை இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளியினரை நாட்டின் பொருளாதார அலுவல்கள் சிலவற்றிலிருந்து ஒதுக்கி, அந்த வாய்ப்புகளை இலங்கையர்பால் திருப்பிவிட முனைந்தன என்பதில் சந்தேகமில்லை. இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்கள் இத்தொழில்களில் ஈடுபட அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டது. அதேவேளை, இக்காலங்களில் அரச ஊழியர்களாக இந்திய வம்சாவளி மலையக இனத்தவர்கள் பலர் இருந்தனர். 1939 ஆம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர்.ஜோன். கொத்தலாவல, ஒரே நாளில் சுற்று நிரூபணம் ஒன்றைக் கொண்டுவந்து, அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றிய இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் வேலையிலிருந்து நீக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த நகர்ப்புறங்களில் செயற்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் அமைப்புகள், இந்தியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய மகாத்மா காந்தியிடம் இப்பாதிப்புப் பற்றி முறையிட்டனர். காந்தி இவ்விவகாரம் தொடர்பாக இலங்கையின் தலைவர்களோடு பேசித் தீர்த்து வைக்குமாறு ஜவஹர்லால் நேருவை இலங்கைக்கு அனுப்பினார். நேரு இலங்கைத் தலைவர்களுடன் பேசியபோதும், இலங்கைத் தலைவர்கள் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. இதன்பின்னர் நேருவின் ஆலோசனையின் பெயரில் 1939 ஆம் ஆண்டு இலங்கை – இந்தியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதுவே இந்திய வம்சாவளியினர் மத்தியில் உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் இயக்கமாகும். 1940 ஆம் ஆண்டு அப்புத்தளை கதிரேசன் கோயிலில் இலங்கை – இந்தியக் காங்கிரஸ் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. இது, 1950களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1940களின் பிற்பகுதியில் சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை – இந்தியக் காங்கிரஸின் தலைவராகப் பதவியேற்றார். இறக்கும்வரை அவரே அதன் தலைவராக விளங்கினார். கிராம சபைகளும் மலையக மக்களும் டொனமூர் யாப்பு சில கட்டுப்பாடுகளுடன் மலையக மக்களுக்கு வாக்குரிமையை வழங்கியது. தம்மைப் பதிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் வலுவான அக்கறை காட்டினர். இது சிங்கள அரசியல் தலைவர்களிடையே அச்சத்தைக் கொண்டுவந்தது. அவர்கள் உள்ளூராட்சிச் சபைகளில் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முனைந்தனர். 1889 ஆண்டின் கிராமிய சபைச் சட்டத்தின்படி ஐரோப்பியர், பறங்கியர், இந்தியர் என்போருக்கு கிராமசபைகளில் பங்குபற்றும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் கிராமிய வாழ்க்கையுடன் இணைந்த பகுதியினர் அல்லர் என இதற்குக் காரணம் கூறப்பட்டது. 1937 ஆம் ஆண்டு, கிராமப்பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டங்களுக்கு வரி அறவிடுவது என்றும், ஐரோப்பியருக்கும் பறங்கியருக்கும் கிராமசபை உறுப்பினர் உரிமை வழங்குவதென்றும் கிராமசபைச் சட்டம் திருத்தப்பட்டது. இந்திய வம்சாவளியினரான மலையக மக்களுக்கு அவ்வுரிமை வழங்கப்படவில்லை. இச்சட்டத்திற்கு இலங்கையிலிருந்த இந்தியச் சங்கங்கள் பல எதிர்ப்புத் தெரிவித்தன. “இச்சட்டம் இன வேறுபாடு காட்டலின் அடிப்படையில் அமைந்தது” என இந்திய அரசாங்கமும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் காரணமாக பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராமசபை உறுப்பினர் உரிமையை மறுக்கும் இன்னொரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தோட்டங்களில் சிங்களத் தொழிலாளர்கள் மிகக்குறைவாக இருந்ததனால் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரானதாகவே இச்சட்டம் அமைந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி – 1943 லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து எஸ்.ஏ. விக்ரமசிங்க தலைமையில் வெளியேறிய குழுவினர், 1943 ஆம் ஆண்டு ஜூலை 3 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். சோவியத் யூனியனின் தலைவர்களில் ஒருவரான லியோன் ரொஸ்கிக்கும், சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஸ்டாலினிற்கும் இடையே ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகளே கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்குக் காரணங்களாக அமைந்தன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது மாநாட்டில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்டதுடன் அதன் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொண்டது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1944 1944 ஆம் ஆண்டு சோல்பரி குழுவினர் இலங்கைக்கென ஒரு புதிய அரசியல் யாப்பை சிபாரிசு செய்வதற்காக இலங்கை வந்தனர். இச்சோல்பரிக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஜீ.ஜீ. பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டார். சோல்பரிக் குழுவினர் முன்னிலையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்தது. இதன் நோக்கம், பெரும்பான்மைச் சமூகம் ஏனைய சமூக நலன்களுக்கு எதிராகச் செயற்படாதவாறு சமவாய்ப்புகளைக் கோருவதாக இருந்தது. போல்சேவிக் லெனினிசக் கட்சி – 1945 1945 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய கொல்வின் ஆர்.டி. சில்வா, அக்கட்சியில் இருந்து வெளியேறி போல்சேவிக் லெனினிசக் கட்சியை உருவாக்கினர. இக்கட்சி தமிழ்மக்கள் விவகாரங்களில் வலுவான அக்கறையைக் காட்டிய கட்சியாக விளங்கியது. ஐக்கிய தேசியக் கட்சி – 1946 சோல்பரி அரசியல் யாப்பு, பாராளுமன்ற அரசாங்கமுறையைச் சிபாரிசு செய்தது. இவ்வரசாங்கமுறைப்படி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கையின் பிரதான இயக்கமாக விளங்கிய இலங்கைத் தேசிய காங்கிரஸ், எஸ்.டபுள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் உருவாக்கப்பட்ட சிங்கள மகாசபை, முஸ்லிம் மக்கள் நலன்களைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கின. டி.எஸ். சேனநாயக்கா இக்கட்சியின் தலைவராக விளங்கினார். 1947 ஆம் ஆண்டு தேர்தலின்போது இக்கட்சி ஏனைய சிறு கட்சிகளுடனும், சுயேட்சை உறுப்பினர்களுடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. டி.எஸ் சேனாநாயக்கா இலங்கையின் முதலாவது பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் உபதலைவர்களாக எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, சேர். ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ரி.பி. ஜாயா, அருணாசலம் மகாதேவா, எஸ். நடேசன் என்போரும்; செயலாளராக எச்.டபுள்யூ. அமரசூரியவும்; பொருளாளர்களாக ஜே.ஆர். ஜெயவர்த்தன, ராசிக் பரீத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். சோல்பரி அரசியல் யாப்பு – 1947 சோல்பரி அரசியல் யாப்பு 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு அமலுக்கு வரும்வரை நடைமுறையில் இருந்தது. இதில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த இனங்களைப் பாதுகாக்கவென சிறுபான்மையோர் பொதியொன்று உருவாக்கப்பட்டது. இதில் சிறுபான்மையோர் காப்பீடுகளாக, பின்வருவன கொள்ளப்பட்டன. 1. யாப்பின் 29 ஆவது சரத்து 2. செனட் சபை 3. நியமன உறுப்பினர் 4. பல்லங்கத்தவர் தேர்தல் தொகுதி 5. யாப்பை திருத்த 2/3 பெரும்பான்மை பெறப்படல் 6. அரசாங்க சேவை, நிதிச் சேவை ஆணைக்குழுக்கள் 7. கோமறைக்கழகம் ஆயினும், இவை எதுவும் நடைமுறையில் பெரிய பயன்களைத் தரவில்லை. சோல்பரி யாப்பு மீதான தமிழர்களின் எதிர்ப்பு சோல்பரி யாப்பின் தீமைகளை, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்க, ஜீ.ஜீ பொன்னம்பலம் பிரித்தானியா சென்றார். ஆனால் சிங்களத் தலைவரில் ஒருவரான டி.எஸ். சேனநாயக்கா மற்றும் தமிழ்த் தலைவர்களான நடேசன், அருணாசலம் மகாதேவா, தியாகராஜா என்போரின் ஆதரவுடன் சோல்பரி யாப்பு நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமுற்ற ஜீ.ஜீ. பொன்னம்பலம், யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்ப்பிரதிநிதிகளைத் தேர்தலில் தோற்கடிக்கப்போவதாகச் சபதம் செய்தார். 1947 ஆம் ஆண்டு தேர்தல் 1947 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளைவிட அதிக ஆசனங்களைப் பெற்றது. ஆனாலும் அரசாங்கத்தை அமைக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸ் ஏழு இடங்களில் வெற்றி பெற்றது. சோல்பரி அரசியல் யாப்பிற்குச்சார்பாக வாக்களித்த தமிழ்த் தலைவர்களை, குறிப்பாக அருணாசலம் மகாதேவாவை, தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஜீ.ஜீ. பொன்னம்பலம் தனது பிறப்பிடத் தொகுதியான பருத்தித்துறைத் தொகுதியைவிட்டு, யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, அருணாசலம் மகாதேவாவைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். ஏனைய தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காங்கேசன்துறையிலும், ஓடிட்டர் ஜெனரலாக இருந்த திரு கே. கனகரத்தினம் வட்டுக்கோட்டையிலும், திரு சி. வன்னியசிங்கம் கோப்பாயிலும், நீதிபதியாக இருந்த திரு இராமலிங்கம் பருத்தித்துறைத் தொகுதியிலும், திரு வி. குமாரசாமி சாவகச்சேரித் தொகுதியிலும், திரு சிவபாலன் திருகோணமலைத் தொகுதியிலும் வெற்றிபெற்றனர். தேர்தலின் பின்னர் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்பேசும் மக்களின் தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அதன் தலைவர் திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழரின் தலைவராகவும் விளங்கினார். பிரஜாவுரிமைச் சட்டங்களும் தேர்தல் திருத்தச் சட்டமும் 1948 ஆம் ஆண்டு முதலாவது பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒருவர் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற, அவர் இலங்கையில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது அவரது தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இச்செயற்பாடு இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்காமல் செய்தது. தொடர்ந்து இந்தியாவின் அழுத்தம் காரணமாக 1949 ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இலங்கையர் அல்லாத ஒருவர் பிரஜாவுரிமையைப் பெற வேண்டுமாயின், அவர் திருமணம் செய்தவர் எனில், இலங்கையில் ஏழு வருடம் தொடர்ந்து வசித்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். திருமணம் செய்யாதவர் எனில், 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாமையினாலும், பிறப்பைப் பதியும்முறை 1911 இல் அறிமுகமானதாலும், அரசாங்கத்தினால் கேட்கப்பட்ட பல தகவல்களைப் பூர்த்திசெய்ய இவர்களால் முடியவில்லை. இதனால் இவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைக்காமல் போனது. தொடர்ந்து இதே ஆண்டு தேர்தல் திருத்தச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பிரஜாவுரிமை உள்ளோருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால் இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை இல்லாமல் போனது. 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிசார்பாக, ஏழு உறுப்பினர்கள் வெற்றிபெற்றும், 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒரு உறுப்பினரும் வெற்றிபெறவில்லை.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 month 3 weeks ago
Jaffna International Cricket Stadium, யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இப்படித்தான் அமையப்போகிறது. 3D அமைப்பில் திட்டமிடப்பட்டிருக்கும் மைதானம் மற்றும் புற அமைப்பு. Vaanam.lk

ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்

1 month 3 weeks ago
1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும் April 18, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது உதவி : ஜீவராசா டிலக்ஷனா இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க பல்வேறு வழிகளில் பொருளாதார, சமூக, நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பெற்றனர். அரச ஊழியர்களிடம் கேள்விக்கொத்துகளை வழங்கி தகவல்களைப் பெற்றதுடன், பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்கள், மதகுருமார்களுடன் கலந்துரையாடியும் தகவல்களைப் பெற்றனர். இவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் 1833 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக: சட்டசபை அறிமுகம் செய்யப்பட்டமை. சட்ட நிர்வாக சபை அறிமுகம் செய்யப்பட்டமை. மாகாணங்கள் ஐந்தாகக் குறைக்கப்பட்டமை. ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை. இராஜகாரியமுறை நீக்கப்பட்டமை. கட்டற்ற வர்த்தகம் அறிமுகம் செய்யப்பட்டமை. இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டமை. தேசாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை. அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை. கிராமசபை அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை. என்பவற்றைக் குறிப்பிடலாம். தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்கள் அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள், வரலாறு வழியாக கட்டங்கட்டமாகத் தூக்கிவீசப்பட்ட ஒரு செயற்பாடு நடைமுறையில் நிகழ்ந்திருக்கின்றது. இதற்கு எதிரான போராட்டமே தமிழர்களின் விடுதலைப் போராட்டம். இலங்கையில் பிரித்தானியர்களின் கைகளில் இருந்த ஆட்சி அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் ஊடாகவே இலங்கையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பு அறிமுகத்துடன் முடிவுக்கு வந்தது. இதிலிருந்து, இலங்கையர்களின் அரசியல் யாப்பு வரலாறு என்பது தமிழ் மக்களை ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கிவீசிய வரலாறாக இருக்கின்றது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் அரைப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்புடன் முழுப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புடன் பேரளவு அதிகாரங்களைக்கூட கைவிடுவதாகவும் அமைந்திருந்தது. முதலாவது காலகட்டத்தில் தமிழர்கள் ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பாரதூரமான விளைவுகளைப் புரிந்திருக்கவில்லை. ஆட்சி அதிகாரங்கள் ஆங்கிலேயரின் கைகளில் இருந்தமையினால் ஒடுக்குமுறைகளைத் தொட்டுணரக்கூடிய சூழலும் இருக்கவில்லை. இதனால் முதலாவது காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் என்பது அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையும், பண்பாட்டுத்தளத்தில் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் பேணுவதாக இருந்தது. அன்று தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்களும், தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை, முழு இலங்கைக்கும் தலைவர்களாக இருந்தனர். குறிப்பாக அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முதலாவது நபர் சேர். முத்துக்குமாரசாமி. இவர் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் தாய் மாமன் ஆவர். இவர்தான் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துக் கருத்துகளைக் கூறியவர். இவரிடம் ஆசிய தேசியவாதம் காணப்பட்டது. இவருடைய மகன்தான் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி. அவர் பண்பாட்டுத்தளத்தில் ஆசிய அடையாளத்தை நிலைநிறுத்திய ஒருவராக விளங்கினார். இரண்டாமவர் சேர். பொன்னம்பலம் இராமநாதன். மூன்றாமவர் சேர். பொன் அருணாசலம். இவர் சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரனாவார். கோல்புறூக் சட்டசபை கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்மூலம் இலங்கையில் முதன்முதலாக சட்டசபை உருவாக்கப்பட்டது. இதில் 15 பேர் அங்கம் வகித்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும், 6 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்கள் அந்தந்த உத்தியோகங்களை வகிப்பதன் ஊடாக சட்டசபையில் அங்கம் வகித்தனர். உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக விளங்கினர். ஐரோப்பியர் – 3 சிங்களவர் – 1 தமிழர் – 1 பறங்கியர் – 1 என்றவகையில் இப்பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது. தமிழர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆவார். இவர் சேர். பொன் இராமநாதனின் தாயின் தந்தை ஆவார். தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக இருந்த இவரை இராஜினாமாச் செய்யவைத்த தேசாதிபதி, மக்கள் பிரதிநிதியாக நியமித்தார். உத்தியோகப்பற்ற அங்கத்தவர்கள் அனைவரையும் தேசாதிபதியே நியமித்தார். கோல்புறூக் குழுவினர் இலங்கையின் பன்முகச் சமூகத்தன்மையை அடையாளம் கண்டனர். இதனாலேயே பல இனத்தைச் சேர்ந்தவர்களும் சமமான வகையில் பிரதிநிதித்துவத்தைப் பெறும்வகையில் இனவாரிப் பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இனவாரிப்பிரதிநிதித்துவ முறையை முன்வைத்தனர் எனலாம். உண்மையில் இதனை அடுத்த கட்டத்திற்கு வளர்த்திருக்க வேண்டும். அந்த அடுத்த கட்டம் என்பது மரபுரீதியாக தனித்தன்மைவாய்ந்த இனங்கள் அதிகாரக் கட்டமைப்பில் தங்களது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய வகையில் பங்குபெறுவதாக இருந்திருக்க வேண்டும். 1889 வரை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தமிழ்ப்பிரதிநிதியே பிரதிநிதித்துவப்படுத்தினார். தங்களை தமிழ்ப்பிரதிநிதி பிரதிநிதித்துவப்படுத்துவதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1889 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு என தனியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் ‘காசிம் அப்துல் ரகுமான்’ தேசாதிபதியால் நியமிக்கப்பட்டார். ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆ. குமாரசுவாமி பருத்தித்துறைக்கு அண்மையில் உள்ள கெருடாவில் கிராமத்தில் 1783 ஆம் ஆண்டு பிறந்தார். கொழும்புக்கு அவர் வந்தபோது இவரது பண்புமிக்க நடத்தை, திறமை, வியாபார நுண்ணறிவு என்பனவற்றினால் நகரத்தின் முன்னணித் தமிழர்களின் நன்மதிப்பை விரைவில் சம்பாதித்துக்கொண்டார். 1808 இல், முதலில் இவர் தேசாதிபதி தோமஸ் மெயிட்லண்ட்க்கு மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் 1810 இல் ஒரு தமிழரினால் வகிக்கப்படக்கூடிய அதி உயர்ந்த பதவியாகிய தேசாதிபதியின் ‘பிரதம தமிழ் மொழிபெயர்ப்பாளர்’ பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார். குருமக்கலம் அரசியல் திருத்தம் – 1912 1912 ஆம் ஆண்டு குருமக்கலம் அரசியல் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்கீழ் தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு நான்கு பிரதிநிதிகள் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். ஐரோப்பியர் இரண்டு, பறங்கியர் ஒன்று, படித்த இலங்கையர் ஒன்று எனத் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இத்தேர்தலில் கல்வியறிவு உடையோரும், சொத்துடையோரும் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் இடம்பெற்றபோது முழு இலங்கையிலும் படித்த இலங்கையர் சார்பில் சேர். பொன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். ஓய்விற்காக தமிழ்நாடு, கொடைக்கானல் விடுதியில் தங்கியிருந்த இராமநாதனை வேட்பாளராக நிறுத்த, சிங்கள அரசியல் தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தந்தை ஹெக்டர் ஜெயவர்த்தனா அங்கே சென்று, அவரைச் சம்மதிக்க வைத்து, அங்கேயே வேட்புமனு விண்ணப்பத்தின் மீது கையொப்பமும் வாங்கிவந்தார் எனக் கூறப்படுகின்றது. இத்தேர்தலில் மார்க்கஸ் பெர்னாண்டோ என்கின்ற சிங்கள மருத்துவரோடு போட்டியிட்டு, இராமநாதன் வெற்றிபெற்றார். மார்க்கஸ் பெர்னாண்டோ மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கரவா சாதியினராக இருந்தமையினால், சிங்கள உயர் சாதியினர் இராமநாதனையே ஆதரித்தனர். தொடர்ந்து 1916 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் டி.எஸ். ஜெயவர்த்தனா என்பவரோடு போட்டியிட்டு இராமநாதனே வெற்றிபெற்றார். இக்காலத்தின் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை இராமநாதன் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார் எனக் கூறமுடியாது. அவர் இலங்கை மக்களுக்காக, குறிப்பாகச் சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவராக விளங்கினார். வெசாக்தினத்தை விடுமுறை தினமாக்கியதில் இவரது பங்கு அதிகமாக இருந்தது. சிங்களமொழியைப் போதனா மொழியாக்குவதற்கு இவர் கடுமையாகக் குரல் கொடுத்தார். சிங்கள – முஸ்லிம் கலவரம் (1915) 1915 ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரம் இடம்பெற்றது. கலவரம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறுகிய காலத்திலேயே இலங்கை முழுவதும் பரவியது. இது, முதலாம் உலக மகா யுத்த காலத்தில் இடம்பெற்றமையினால், ஜேர்மனியின் உளவாளிகள் சிங்கள மக்களிடையே இருந்து செயற்படுகின்றார்கள் என ஆங்கிலேயர்கள் கருதினர். ஆகவே இதனை மிகமோசமாக நசுக்கத் தொடங்கினர். குறிப்பாக மது ஒழிப்பு இயக்கத்தில் பங்குபற்றிய பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவும் ஒருவராவார். பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது விடயத்தில் ஆட்சியாளர்களின் மிக மோசமான அடக்குமுறையைக் கண்டித்து சேர். பொன் இராமநாதன் சட்டசபையில் நீண்ட நேரம் உரையாற்றியது மட்டுமல்லாமல், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முதலாம் உலக மகா யுத்த நெருக்கடிக் காலத்தினையும் கவனத்தில் கொள்ளாது, கப்பல்மூலம் லண்டன் சென்று அங்கு பிரதமர், குடியேற்ற நாட்டுச் செயலாளர் என்பவர்களுடன் பேசி, கலவரத்தை உடனே நிறுத்தினார். கைது செய்யப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்களையும் விடுவித்தார். லண்டனிலிருந்து கப்பலில் இராமநாதன் நாடு திரும்பியதும், துறைமுகத்தில் இறங்கி தனது குதிரை வண்டியில் வீடு செல்லத் தயாரானபோது, சிங்கள அரசியல் தலைவர்கள் குதிரையைக் கழற்றி தாங்களே அவரை வீடுவரை இழுத்துச் சென்றனர். சேர். பொன் அருணாசலத்தின் வகிபங்கு 1. சேரிப்புற மக்கள் மத்தியில் பணிபுரிதல் சேர். பொன் அருணாசலம், சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரன் ஆவார். பதிவாளர் நாயகமாக இருந்த இவர், 1913 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்று நேரடியாக அரசியலுக்கு வந்தார். அரசியலில் அவர் முதல் தெரிவுசெய்த மக்கள் கூட்டம், கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் அடிநிலை மக்கள்தான். இம்மக்களின் நலன்களைப் பேண தொழிலாளர் நலன்புரிச் சங்கத்தை உருவாக்கினார். சேரிப்புற மக்களின் நலன்களை விஞ்ஞானபூர்வமாக மேம்படுத்தும் பொருட்டு, லண்டன் சென்ற அவர், லண்டன் மாநகரசபை எவ்வாறு சேரிப்புற மக்களின் நலன்களைப் பேணுகிறது என்பதை ஆராய்ந்தறிந்து, அதனை இங்கு நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். 2. மலையக மக்கள் மீதான அக்கறை சேர். பொன் அருணாசலம் சேரிப்புற மக்களுக்கு அடுத்ததாக, அக்காலத்தில் மிகுந்த ஒடுக்குமுறைக்கு உள்ளான மலையக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டார். மலையக வம்சாவளியினரான பெரிசுந்தரத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர் நலன்புரி அமைப்பை உருவாக்கினார். இவ் அமைப்பின் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரிசுந்தரமும் விளங்கினார்கள். மலையகத்தில் நிலவிய மோசமான ஒடுக்குமுறையான துண்டுமுறையை இல்லாது ஒழிப்பதில் இவரது பங்கு முக்கியமாகக் காணப்பட்டது. துண்டுமுறை என்பது ‘ஒருவர் தோட்டத்திலிருந்து திருமணம் காரணமாகவோ அல்லது வேறு விடயங்களின் காரணமாகவோ இன்னொரு தோட்டத்திற்குச் செல்லவேண்டி ஏற்பட்டால், முன்னர் கடமையாற்றிய தோட்ட நிர்வாகம் குறித்த நபர் நன்னடத்தை உடையவர் என்றும், இவருக்கு கடன் எதுவும் இல்லை என்றும், ஒரு கடிதத்தை எழுத்தில் வழங்க வேண்டும்.’ கடிதம் இருந்தால் மட்டுமே மற்றைய தோட்டம் குறித்த நபரை ஏற்றுக்கொள்ளும். இலங்கையில் வாழும் அடிநிலை மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட காரணத்தினாலேயே இவரை ‘இலங்கையின் சமூக மாற்ற அரசியலின் தந்தை’ என அழைக்கின்றனர். ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிற்சங்க தலைவர்கள் இவரது கருத்தியலினால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தனர். ஏ.ஈ. குணசிங்க தன்னுடைய அரசியல் குரு அருணாசலம்தான் என்பதைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. 3. இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் – (1919 டிசம்பர் 11) சிங்கள – முஸ்லிம் கலவரம் போன்று இன்னொரு கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும், இலங்கை மக்களுக்கு உள்ளூர் நிர்வாக சுயாட்சி அதிகாரத்தைக் கோருவதற்காகவும் 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் சேர். பொன் அருணாசலம் முதன்மையாகச் செயற்பட்டமையினால், இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தின்போது இலங்கையில் உள்ள பல்வேறு இனங்களையும் ஐக்கியபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்களிடையே சேர். பொன் அருணாசலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. சிங்கள மக்கள்சார்பாக இலங்கை தேசிய சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீரிசும், இலங்கை அரசியல் சீர்திருத்தக்கழகத்தைச் சேர்ந்த ஈ.ஜே. சமரவிக்கிரமவும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள்சார்பாக யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்தோர்; அம்பலவாணர் கனகசபை தலைமையில் கலந்துகொண்டனர். 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாணச் சங்கம் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் புதிய அரசியல் சீர்திருத்தத்தின்போது, தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு என ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் இரு கோரிக்கைகளை முன்வைத்தது. இரு கோரிக்கைகளையும் ஏற்று, சிங்களத் தலைவர்கள் உத்தரவாதத்தை வழங்கினர். இதுவே தமிழ்த்தரப்பிற்கு சிங்களத்தரப்பு வழங்கிய முதலாவது எழுத்து மூல உத்தரவாதமாகும். மனிங் அரசியல் சீர்திருத்தம் – 1921 1921 ஆம் ஆண்டு மனிங் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இது முதன்முதலாக இலங்கையில் பிரதேசவாரி பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தது. இதன்படி இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில், மேல் மாகாணம் தவிர, ஏனைய மாகாணங்களுக்கு தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மேல் மாகாணம் சனத்தொகை கூடிய மாகாணமாக இருந்ததால் 3 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்த மூன்று பிரதிநிதித்துவத்தினுள் ஒரு பிரதிநிதித்துவம், முன்னரே உத்தரவாதம் அளிக்கப்பட்டதன்படி தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த்தரப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. இதைச் சிங்களத் தலைவர்கள் நிராகரித்தனர். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு இலங்கை தேசிய காங்கிரஸே பொறுப்பாகாது எனக் கூறப்பட்டது. ஏ.ஈ. குணசிங்க போன்ற சில தலைவர்கள் இதில் சமரசத்தில் ஈடுபட்டு, தமிழ்த்தரப்பிற்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற உடன்பாட்டைக் கொண்டுவந்தனர். இதை நம்பி சேர். பொன்னம்பலம் அருணாசலம் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அரசாங்கச் செயலகத்திற்கு சென்றார். அவர் செல்ல முன்னரே, மூன்று வேட்பு மனுத்தாக்கல்களும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் அருணாசலம் மிகவும் அதிருப்தி அடைந்தார். “பிரமாணம் பிரமாணமாக இருக்க வேண்டும். சிங்களத் தலைவர்கள் அதை மீறிவிட்டனர். எனவே இவர்களுடன் ஒன்றாகப் பயணிக்க முடியாது” எனக்கூறிவிட்டு, இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இந்த வெளியேற்றத்துடன் தமிழரசியல் வரலாற்றின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்துவிட்டது எனலாம். https://www.ezhunaonline.com/the-period-from-1833-to-1921-tamil-leaders-and-the-ceylon-national-congress/

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

1 month 3 weeks ago
இது அதிசயமல்லவே? ஒரு நாட்டில் பிறந்த குழந்தையை பிரஜையாக ஏற்றுக் கொள்வதா என்ற விடயத்தில், இரு வகையான சட்ட முறைமைகள் இருக்கின்றன. ஒன்று: "jus soli (right of soil)" எனப்படும் பிறந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட பிறப்புரிமை (birthright citizenship). மற்றையது, பெற்றோரின் பிரஜாவுரிமையை அடிப்படையாகக் கொண்ட "jus sanguinis (right of blood)" என்ற முறை. இதில் இந்தியா பின்பற்றும் முறை அனேகமாக பெற்றோரின் பிரஜாவுரிமையைக் கொண்டு குழந்தையின் பிரஜாவுரிமையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியர்களுக்கு நிகரான உரிமையை எதிர்பார்க்க முடியாது. இன்னொரு கோணத்தில், இதை உங்கள் போன்றோர் எதிர்பார்ப்பது இன்னும் அதிசயம்! "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே" என்று முழங்கும் MAGA ட்ரம்ப் விசிறியாக இருக்கிறீர்கள். அதே ட்ரம்ப், அமெரிக்காவில் இருக்கும் jus soli முறைமையை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் மும்முரமாக இருக்கிறார். இதில், இங்கே பிறக்கும் குடியேறிகளின் குழந்தைகளே இரண்டாம் தரப் பிரஜைகளாக மாறும் ஆபத்து இருக்கிறது. இதையெல்லாம் கடந்து ட்ரம்ப் ஐயாவை மோகித்த படி, இந்தியா இலங்கைத் தமிழர்களை பிரஜைகளுக்கு சமமாக நடத்த வேண்டுமென்று எப்படிக் கேட்கிறீர்கள்😂?

250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு

1 month 3 weeks ago
05 Sep, 2025 | 02:39 PM மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நீர் திறக்கப்படும்போது, வருடந்தோறும் நன்நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோகிராம் வரையிலான மீன்கள் அடித்துச் செல்லப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இனப்பெருக்க திறன் கொண்ட முதிர்ந்த மீன்களின் இழப்பு, எதிர்கால மீன்வளத்தை கடுமையாகக் குறைத்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் நன்னீர் மற்றும் மீன்வளர்ப்பு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கையில் 95 வகையான நன்னீர் மீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 52 இனங்கள் நாட்டிற்கு சொந்தமானவை என குறிப்பிடப்படுகிறது. 250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு | Virakesari.lk

கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தபோது இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல்

1 month 3 weeks ago
05 Sep, 2025 | 04:41 PM கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளையில் இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (5) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் நடத்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில் தஞ்சமடைந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி, கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. “எங்கே எங்கே உறவுகள் எங்கே”, “எமக்கு எமது உறவுகள் வேண்டும்”, “எமக்கு நீதி விசாரணை வேண்டும்”, “எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”, “1990-09-05அன்று வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் எங்கே” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன. 1990.09.05 அன்று அகதி முகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி, பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர். மைதானத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு, முகமூடி மனிதர்களால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்த சம்பவத்தை 35 வருடங்கள் கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூருகிறார்கள். இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழுவானது பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது. 1990 செப்டம்பர் 5ஆம் திகதி 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் 24 மணிநேரத்துக்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் எனவும் அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ பதில் அனுப்பியிருந்தார். இந்த பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது. விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த ஜெரி சில்வா உட்பட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர். இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்துச் சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும் தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர். ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆம் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டுசென்றனர் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் 35வது வருடமாக உறவுகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தபோது இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல் | Virakesari.lk

இனித்திடும் இனிய தமிழே....!

1 month 3 weeks ago
rdpnsoteSo32t26m8:1p2eie te3la8a108gb8g1803hg6ls22,t84g0 1mr · Veeramani Sekar rdpnsoteSo32t26û6:1a2,i to3la2a008g68g1803hg6lc23ai84g011mt · ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக் கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா------முடியாது தெலுங்கு----- முடியாது மலையாளம்------முடியாது ஏனைய மொழிகள்----முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது. ஆனால் தமிழில்..... #தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழழகன், தமிழ்த்தும்பி, தமிழ்த்தம்பி, தமிழ்த்தொண்டன், தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன், தமிழ் வேந்தன், தமிழ் கொடி. என்று தமிழோடு... தமிழ் மொழியோடு பெயர் வைத்துக் கொள்ள முடியும்!!! தமிழன் மட்டுமே... தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!! அனைவருக்கும் பகிருங்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... பெத்தவங்கள ஏன் ..... "அம்மா" "அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!! எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.? அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..? *அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...? அ – உயிரெழுத்து. ம் – மெய்யெழுத்து . மா – உயிர் மெய்யெழுத்து. அ – உயிரெழுத்து. ப் – மெய்யெழுத்து . பா – உயிர் மெய்யெழுத்து. தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். இந்த உயிரும், மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது. நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!! "மம்மி - என்பது பதப்படுத்தப்பட்ட பிணத்தின் பெயர்..." படித்தேன்... பகிர்கிறேன்... இனிய காலை வணக்கம்.🙏" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> வாழ்க வளத்துடன்.......! Voir la traduction தமிழின் சிறப்பு . ....... ! 🙏

காட்டுத்தீ வளி மாசடைவை அதிகரிக்கிறது; ஐ.நா. வானிலை அமைப்பு

1 month 3 weeks ago
Published By: Digital Desk 3 05 Sep, 2025 | 12:00 PM கடந்த ஆண்டு வளி மாசுபாட்டுக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுற்றுப்புற வளி மாசுபாடு ஆண்டுக்கு 4.5 மில்லியன் அகால மரணங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடும் காட்டுத் தீ ஏற்படும் அமேசன் காடுகள், கனடா, சைபீரியா மற்றும் மத்திய ஆபிரிக்கா போன்ற இடங்கள் வளி மாசுபாடு ஏற்படும் இடங்களாக 2024 ஆம் ஆண்டிற்கான உலக வானிலை அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல் வானிலை முறைகளை மாற்றுவதால், காட்டுத்தீ உலகம் முழுவதும் அடிக்கடி மற்றும் பரவலாகி வருகிறது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் மரம் எரிப்பதாலும், போக்குவரத்து மற்றும் விவசாயத்தாலும் உருவாகும் காற்றில் பரவும் துகள்களுடன் இதுவும் இணைகிறது. "காட்டுத்தீ தூசிகள் மாசுபாட்டிற்கு ஒரு பெரிய பங்களிப்பாகும், மேலும் காலநிலை வெப்பமடைகையில் இந்த பிரச்சினை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அதிகரித்து வரும் அபாயங்களை ஏற்படுத்துகிறது," என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. "காலநிலை மாற்றம் மற்றும் வளியின் தரத்தை தனித்தனியாகக் கையாள முடியாது. நமது , சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களைப் பாதுகாக்க அவற்றை ஒன்றாகச் சமாளிக்க வேண்டும்." என துணை பொதுச்செயலாளர் கோ பாரெட் மேலும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தெற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் அளவு கண்டம் முழுவதும் மாசுபாட்டிற்கு பங்களித்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. காட்டுத் தீ குறைக்க எடுத்த முயற்சிகளால் கிழக்கு சீனாவில் வளி மாசுபாடு குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/224272

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

1 month 3 weeks ago
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் விடுதலை நீர் சேகரிப்பு 05 Sep, 2025 | 03:33 PM சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்றைய தினம் (4) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224291

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

1 month 3 weeks ago
இலங்கை: 1000 அடி பள்ளத்தில் உருண்ட பேருந்து - கடைசி நொடிகளில் நடந்தது என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பதுளை - எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் (04) இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உள்ளடங்களாக முப்பதிற்கும் அதிகமானோர் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 9 பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. அத்துடன், காயமடைந்தவர்களின் 6 ஆண்களும், 5 பெண்களும், 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்ட இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர். விபத்து எவ்வாறு நேர்ந்தது? எல்ல - வெல்லவாய பிரதான சாலையின் 23வது மற்றும் 24வது மைல் கல் பிரதேசத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. "வெல்லவாய திசையை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, எதிர் திசையில் வருகைத் தந்த ஜீப் ரக வாகனமொன்றில் மோதுண்டதை அடுத்து, சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது" என்று போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைவு இருந்த பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், பஸ் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தங்காலை நகர சபையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை, தியதலாவை மற்றும் பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களும் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் ஜீப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பட மூலாதாரம், G.KRISHANTHAN படக்குறிப்பு, இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை, தியதலாவை மற்றும் பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக தொடர்ந்த மீட்பு பணி விபத்து இடம்பெற்ற தருணம் முதல் பிரதேச மக்கள் மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வருகைத் தந்த போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், ராணுவத்தினரும் மீட்பு பணிகளுக்காக வரழைக்கப்பட்டிருந்தனர். பிரதேச மக்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும் பொதுமக்கள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். இரவோடு இரவாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இயங்கி வரும் மலை ஏறும் குழுவினரும் மீட்பு பணிகளுக்காக வருகைத் தந்திருந்தார்கள் என பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் கோரப்பட்ட மீட்பு உதவிகள் பட மூலாதாரம், G.KRISHANTHAN படக்குறிப்பு, விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும் பொதுமக்கள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். பஸ் விபத்து இடம்பெற்ற தருணத்தில் பேஸ்புக் ஊடாக பல்வேறு தரப்பினர் மீட்பு பணிகளுக்கான உதவிகளை கோரியுள்ளனர். ''எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்பதற்காக பாரிய பிரயத்தனம் முன்னெடுக்கப்படுகின்றது. அருகிலுள்ளவர்கள் உதவி செய்யுங்கள்.'' என சமூக வலைத்தளத்தில் பதிவுகள் பகிரப்பட்டன. இவ்வாறு வெளியிடப்பட்ட சமூக வலைத்தள பதிவுகளை அடுத்து, அதற்கான உதவியை பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர். இதன்படி, கயிறுகள், மின்விளக்குகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு விபத்து நேர்ந்த இடத்திற்கு பிரதேச மக்கள் வருகைத் தந்துள்ளனர். மீட்பு பணியாளர்கள் அனுபவம் பட மூலாதாரம், G.KRISHANTHAN மலை தொடர்களில் ஏறும் குழுவினரின் ஒத்துழைப்பு இதன்போது கிடைக்கப் பெற்றதாக பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர், பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். பஸ் விபத்துக்குள்ளான பள்ளத்தில் காணப்படும் பாரிய கற் பாறைகளின் ஊடாக கயிறுகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் செயற்பாட்டை அவதானிக்க முடிந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டோர் பிபிசி சிங்கள சேவைக்கு தமது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். ''அது தொடர்பில் கூற வேண்டும் என்றால், எமக்கு தகவலொன்று கிடைத்தது. நாங்கள் முதலாவது செயற்பாட்டாளர்களாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றோம். நாங்கள் பிளை ராவணா குழு என பிரதிநிதித்துப்படுத்துகின்றோம்'' ''இந்த தகவலை அறிந்து பலர் வருகைத் தந்திருந்தார்கள். நாங்கள் கீழே சென்று பார்த்த போது காயமடைந்தவர்களை போன்று உயிரிழந்தவர்களையும் காணக்கூடியதாக இருந்தது.'' ''பள்ளத்தில் சிக்குண்ட நிலையில், நான்கு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஏனைய மூவரும் காயமடைந்திருந்தனர். அவர்கள் மூவரையும் பிரதேச மக்கள் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் நான் கீழே கொண்டு வந்தேன்'' ''இந்த பள்ளத்தில் 80 - 100 அடி வரையான கற்களிலான பள்ளமொன்று உள்ளது. பஸ் அதிலிருந்தும் கீழே வீழ்ந்திருந்தது.'' ''முதலில் மீட்பு பணிகளை ஆரம்பிக்கும் தருணத்தில் எந்தவொரு உபகரணங்களும் இருக்கவில்லை. அதன்பின்னர் கயிறு போன்றவற்றை எடுத்துக்கொண்டு குழுவொன்று வருகைத் தந்தது'' ''விரைவாக உபகரணங்களை தயார் செய்து, கீழே இறங்கினோம். மிகவும் கவலையாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் எமக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. மன வருத்தமாக இருக்கின்றது. எங்களால் முடியுமான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்தோம்'' ''நாங்கள் எமது வாழ்க்கையை கூட நினைத்து பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு உதவி செய்தோம். நான் நினைக்கின்றேன். இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று நினைக்கின்றேன்.'' மீட்பு பணிகளின் ஈடுபட்ட குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் தனது அனுபத்தை இவ்வாறு பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டிருந்தார். பிரேக் பிடிக்காததால் விபத்து? விபத்துக்குள்ளான பஸ்ஸில் பிரேக் இருக்கவில்லை என பஸ்ஸின் சாரதி கூறியதாக பஸ் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் ஒருவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''எல்ல பகுதிக்கு அருகில் வைத்து பஸ்ஸில் பிரேக் இல்லை என சாரதி சொன்னார். நான் அவர்களுடன் பஸ்ஸின் முன்புறத்தில் அமர்ந்து அவர்களுடன் கதைத்துக்கொண்டு வந்தேன். சாரதி சொன்னார். பஸ்ஸின் நடந்துநர் சிரித்தார். பஸ்ஸில் ஏனையோரும் இருந்தார்கள். பொய் சொல்ல வேண்டாம் என சொல்லி சிரித்தார்கள். இரண்டாவது வளைவில் வைத்து மீண்டும் சொன்னார் பிரேக் இல்லை என் சொன்னார். திடீரென பஸ்ஸை திருப்பி செலுத்தினார். அதன்பின்னரே பஸ்ஸில் பிரேக் உண்மையிலேயே இல்லை என்பதை நாங்கள் அறிந்துக்கொண்டோம். முன்புறமாக வாகனமொன்று வந்தது. அதில் மோதுண்டே பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. நான் இறந்து விட்டேன் என்றே நினைத்தேன். சில மணிநேரம் நினைவு வரவில்லை. சிறியவர் ஒருவர் கூச்சலிடும் சத்தத்திலேயே நான் எழுந்தேன். சிறுவனை அங்கிருந்து எடுக்க முயற்சித்தேன். என்னால் எழ முடியவில்லை. கூச்சலிட்டேன். அப்போது விசேட அதிரடி படையினர் வருகைத் தந்தார்கள்.' என அந்த பயணி பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். பட மூலாதாரம், G.KRISHANTHAN ராணுவ மீட்பு குழு பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சுமார் 100 பேரை கொண்ட ராணுவ குழுவொன்று கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்தார். ''விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, எமது குழுவொன்று பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது'' ''விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை மீட்டு, அவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த குழு சென்றுள்ளது'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தியத்தலாவை விமானப்படை முகாமிலுள்ள எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர் ஒன்றும், வீரவில விமானப் படை முகாமிலுள்ள பெல் 412 ஹெலிகொப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது. அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் நோயாளர்களை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு அல்லது ஏனைய மீட்பு பணிகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை குறிப்பிடுகின்றது. மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலைமை இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன், காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரும் காயமடைந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்தவர்களில் சிலரது கைகள் மற்றும் கால்கள் உடைந்துள்ளதாக பதுளை மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான பஸ்ஸிற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற பின்னணியில் தொடர்ந்தும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. சம்பவம் தொடர்பில் எல்ல போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c708zeqz4y5o

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 3 weeks ago
மன்னாரில் காற்றாலை, கனிம மணல் அகழ்வுக்கு எதிரான 34ஆம் நாள் போராட்டம் - ரவிகரன் எம்.பி பங்கேற்பு 05 Sep, 2025 | 01:32 PM மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனியமணல் அகழ்வு என்பவற்றிற்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (05) 34ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த தொடர்போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். குறித்த 34 ஆவதுநாள் போராட்டத்தினை தோட்டவெளி, ஜோசெப்வாஸ் கிராமமக்கள் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224277

புதின் சந்திப்பு முடிந்ததும் கிம் ஜாங் உன் இருக்கையை வட கொரிய குழு சுத்தம் செய்தது ஏன்?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவில் எஸ்சிஓ கூட்டத்திற்கு முன்பு வட கொரியாவின் உயர் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சந்திப்பு கட்டுரை தகவல் பாரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிக அளவு விவாதிக்கப்படும் ஒரு உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஆகும். இந்த இரு தலைவர்களின் சந்திப்பில் நடந்த உரையாடல்கள் விவாதிக்கப்படுகிறது, ஆனால் அதைவிட அதிக கவனம் ஈர்த்திருப்பது இந்த சந்திப்பு முடிந்த பிறகு நடந்த ஒரு நிகழ்வு. சந்திப்பு முடிந்து இரு தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டதும், வட கொரியாவின் ஊழியர்கள் கிம் ஜாங் உன் உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகே வந்தனர். அவர்கள் கையில் துணி இருந்தது, அவர்களின் நோக்கம் - கிம் ஜாங் உன் தொட்ட ஒவ்வொரு பொருளையும் கவனமாக சுத்தம் செய்வதுதான். அவர் உட்கார்ந்திருந்த இருக்கை மிகவும் கவனமாக சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் ஏன்? இது வெளிநாட்டு அல்லது எதிரி நாடுகளின் உளவாளிகளின் திட்டங்களை தோல்வியடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் வட கொரிய தலைவருடைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று நிபுணர்கள் கூறுவதாக ராய்ட்டர்ஸ் முகமையின் செய்தி கூறுகிறது. இருப்பினும், கிம் ஜாங் உன் மற்றும் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையே நட்பு உறவு உள்ளது. வட கொரியாவுடன் நல்லுறவு பேணும் வெகு சில நாடுகளில் ஒன்றான சீனாவில் இது நடைபெற்றது. கிரெம்ளின் செய்தியாளர் அலெக்ஸாண்டர் யுனாஷேவ், வட கொரியாவின் இரண்டு ஊழியர்கள் கிம் ஜாங் உன் மற்றும் புதினை வரவேற்கும் அறையை சுத்தம் செய்யும் காணொளியை டெலிகிராமில் பகிர்ந்திருக்கிறார். அவர் உட்கார்ந்திருந்த இருக்கையின் சாயும் பகுதி மற்றும் கைகளை வைக்கும் பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது. கிம் ஜாங் உன் இருக்கை அருகில் வைக்கப்பட்ட மேசை சுத்தம் செய்யப்பட்டது. அந்த மேசையில் வைக்கப்பட்ட கண்ணாடி அங்கிருந்து அகற்றப்பட்டது. "சந்திப்பு முடிந்தவுடன், வட கொரிய தலைவருடன் வந்த ஊழியர்கள் கிம் ஜாங் உன் அங்கு இருந்ததற்கான அறிகுறிகள் அனைத்தையும் மிகவும் கவனமாக அழித்துவிட்டனர்," என அந்த செய்தியாளர் தெரிவித்தார். கிம் ஜாங் உன் சிறப்பு ரயிலில் கழிப்பறையும் வந்ததா? பட மூலாதாரம், Disney via Getty Images படக்குறிப்பு, கிம் ஜாங் உன்னின் சிறப்பு ரயிலில் அவரது கழிப்பறையும் கொண்டு வரப்பட்டது கிம் ஜாங் உன் தனது முந்தைய வெளிநாட்டு பயணங்களைப் போலவே இந்த முறையும் பச்சை ரயிலில் அவரது சிறப்பு கழிப்பறையை பேக் செய்து சீனாவுக்கு கொண்டு வந்ததாக தென்கொரிய மற்றும் ஜப்பான் உளவு நிறுவனங்கள் கூறியதாக ஜப்பானின் நிக்கெய் பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டிம்சன் மையத்தில் வட கொரிய தலைவர்களின் நிபுணர் மைக்கல் மேடன், கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் ஆட்சியில் இருந்தே இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் வட கொரியாவின் நிலையான நடவடிக்கையாக இருப்பதாக கூறினார். "இந்த சிறப்பு கழிவறைகள், மலம், குப்பைகள் மற்றும் புகையிலை முனைகளை வைக்கும் குப்பை பைகள் போன்றவற்றின் மாதிரிகளை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் எடுத்து பரிசோதனை செய்ய முடியாதபடி பாதுகாக்கப்படுகின்றன. இவை அனைத்திலிருந்தும் கிம் ஜாங் உன்னின் மருத்துவ நிலை பற்றிய சில தகவல்கள் கிடைக்கலாம். இதில் முடி அல்லது தோலின் சிறு பகுதிகளும் அடங்கும்," என அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். வட கொரியா தனது தலைவர்களுடன் தொடர்புடைய எந்த தகவலையும் வெளியிட விரும்பாததற்கான காரணம் பற்றிய கேள்விக்கு, வட கொரியா மிகவும் ரகசியமான நாடு என்பதால் தன்னைப் பற்றியும் மற்றும் தனது உயரிய தலைவரைப் பற்றியும் எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை என டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கொரிய மொழி மற்றும் ஆய்வுகளில் பேராசிரியராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற வைஜயந்தி ராகவன் கூறினார். " வட கொரியாவின் மிகப்பெரிய தலைவருடன் தொடர்புடைய தகவல்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியம். அவரது உணவு முதல் கழிவுகள் வரை யாரிடமும் கிடைக்காமல் பாதுகாக்க விரும்புகின்றனர். கிம் ஜாங் உன் நடத்தும் அரசியல் மற்றும் அவரது நாட்டின் கொள்கைகள் காரணமாக, நாட்டிற்குள் மற்றும் வெளியே இருந்து சில அபாயங்கள் ஏற்படும் பயம் உள்ளது. எனவேதான் அவர் மற்ற நாடுகளுக்கும் தனது சொந்த சிறப்பு ரயிலில் செல்கிறார்," என வைஜயந்தி பிபிசியிடம் கூறினார். டி.என்.ஏ பற்றிய விவாதம் ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டி.என்.ஏ ஒரு மரபணு குறியீடு ஆகும், இது எந்தவொரு உயிரினத்திற்கும் தனிப்பட்ட அடையாளத்தை அளிக்கிறது. இப்போது கிம் ஜாங் உன்னின் இருக்கையை சுத்தம் செய்வது தொடர்பான கேள்விக்கு திரும்புவோம். அவரது ஊழியர்கள் உண்மையில் எதை சுத்தம் செய்தார்கள், ஏன்? ஊடக செய்திகள் இது கிம் ஜாங் உன்னின் டி.என்.ஏ மாதிரி அங்கிருந்து எடுக்கப்படுவதை தடுப்பதற்காக செய்யப்பட்டதாக கூறுகின்றன. இந்த பதிலிலிருந்து மற்றொரு கேள்வி எழுகிறது - டி.என்.ஏ என்றால் என்ன மற்றும் இது ஏன் இவ்வளவு முக்கியமானது? டி.என்.ஏ-யின் முழு பெயர் டீ ஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம் (deoxyribonucleic acid). இது ஒரு மரபணு குறியீடு (genetic code) ஆகும், இது எந்தவொரு உயிரினத்திற்கும் தனிப்பட்ட அடையாளத்தை வழங்கும் மரபணுக்களை உருவாக்குகிறது. இது இரண்டு நீண்ட நூல்களால் ஆன சுழல் போல் தோன்றும் ஒரு வேதிப்பொருள். இது இரட்டை சுருள் (double-helix) கட்டமைப்பைக் கொண்டது. இதில் மரபணு குறியீடு (genetic code) என்று அழைக்கப்படும் மரபணு தகவல்கள் (genetic information) உள்ளன. கருவுறுதல் (fertilization) நிகழும் போது, இந்த டி.என்.ஏ பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது. வல்லுநர்கள் டி.என்.ஏவை "வாழ்க்கைக்கான வரைபடம்" (blueprint of life) என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு மனிதனின் விரல் ரேகைகளும் வேறுபடுவது போலவே, ஒவ்வொரு மனிதனின் டி.என்.ஏயும் வேறுபடுகிறது. ஒவ்வொரு நபரிடமும் மூன்று பில்லியனுக்கும் மேற்பட்ட வெவ்வேறு டி.என்.ஏ அடிப்படை ஜோடிகள் (DNA base pairs) உள்ளன. ஒரே தோற்றம் கொண்ட இரட்டையர் (identical twins) தவிர மற்ற ஒவ்வொருவரின் டி.என்.ஏவும் வித்தியாசமானது. இது போன்ற விஷயங்களில் ஒருவரது டி.என்.ஏவும் அவரது இரட்டையரின் டி.என்.ஏவும் ஒரே மாதிரியாக இருக்கும். டெல்லி பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பயிற்றுவிக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் ஹரேன் ராம் சியாரி, டி.என்.ஏ ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சில பண்புகள் அல்லது அம்சங்களை (characteristics or features) கடத்துகிறது என்று கூறுகிறார். எளிய வார்த்தைகளில் சொல்வதானால் டி.என்.ஏ எங்கள் உடலுக்கு ஒரு அறிவுறுத்தல் கையேடு (instruction manual) போலவும், உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அவசியமானதாகவும் உள்ளது. இது நமது கண்களின் நிறம், முடியின் நிறம் போன்றவற்றை தீர்மானிக்கிறது. நமது உடல் லட்சக்கணக்கான செல்களால் ஆனது மற்றும் இந்த டி.என்.ஏ ஒவ்வொரு செல்லின் உட்கருவில் (nucleus) உள்ளது. இது A, T, C, G போன்ற நான்கு குறியீடுகளால் (characters) ஆனது மற்றும் அவை அனைத்தும் ஜோடிகளை உருவாக்குகின்றன, எடுத்துக்காட்டாக AT அல்லது GC ஜோடி. இவை அடிப்படை ஜோடிகள் (base pairs) என்று அழைக்கப்படுகின்றன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு கூட்டத்தின்போது கிம் ஜாங் உன் வடகொரிய தலைவரின் டி.என்.ஏவை பாதுகாக்கும் வகையில் இருக்கை மற்றும் பிற பொருட்கள் சுத்தம் செய்யப்படுகின்றன என்றால், அங்கு டி.என்.ஏ எங்கே இருந்தது என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், ஒரு நபரின் டி.என்.ஏவை முடி வேர்கள் (hair follicles), தோல் செல்கள் (skin cells), எச்சில் (saliva) போன்றவற்றிலிருந்து பெற முடியும். முடி வேர்கள் என்பது முடியின் அடிப்பகுதியில் உள்ள பகுதியாகும், அதாவது வேரைப் போல உள்ளது. முடி விழும்போது, அதுவும் சேர்ந்து தலையில் இருந்து நீங்கிவிடுகிறது. "உங்கள் முடியின் எந்த பகுதியும் இருக்கையின் மீது விட்டுவிட்டால், அதிலிருந்து டி.என்.ஏவை பெற முடியும். இதைத் தவிர, எங்கள் உடலின் தோலின் சில மிக நுண்ணிய துகள்கள் விழுந்தால், அவற்றிலிருந்தும் டி.என்.ஏவை அணுக முடியும். இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, ஒரு நபர் பேசும்போது பேச்சின் போது எச்சிலின் சில துளிகள் வெளியே விழுகின்றன. இவற்றிலிருந்தும் டி.என்.ஏவை பெற முயற்சி செய்யலாம்." டாக்டர் ஹரேன் ராம் சியாரி விளக்குகிறார். டி.என்.ஏவை பாதுகாக்க போராட்டம் ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிம் ஜாங் உன் மற்றும் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதற்கு பதிலளித்த மருத்துவர் சியாரி, "யாராவது ஒரு நபரின் டி.என்.ஏவை பெற்றிருந்தால், அந்த நபருக்கு மரபணு நோய் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். குடும்பத்தில் ஏதேனும் நோய் உள்ளது மற்றும் அது தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது என்றால், அதுவும் கண்டறியப்படலாம்" என்று கூறினார். "இதைத் தவிர, உடலில் எந்தவொரு மருந்து அல்லது நோய் எதிர்ப்பு மருந்துக்கு ஒவ்வாமை உள்ளதா என்பது பற்றிய தகவலும் பெற முடியும். டி.என்.ஏவிலிருந்து பலவற்றை அறிய முடியும், ஆனால் மரபணு நோய்கள் முதலில் கண்டறியப்படும். டி.என்.ஏவைப் பயன்படுத்தி குடும்பம் பற்றிய தகவலை அறிய முடியும், குடும்பத்தில் தலைமுறைதலைமுறையாக வரும் மரபணு நோய்கள், குறைபாடுகள் அல்லது பிற மரபணு குறைபாடுகள் பற்றிய தகவல்களை பெற முடியும்," என டாக்டர் சியாரி கூறினார். டி.என்.ஏ ஒரு நபரின் உடல் நிலை எப்படி உள்ளது என்பதையும் கூற முடியுமா? இதற்கு பதிலளித்த அவர், "தற்போது நபர் ஆரோக்கியமாக உள்ளாரா அல்லது நோயுற்றவரா என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. டி.என்.ஏக்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எனவே உடல் நிலையை துல்லியமாக கண்டறிய முடியாது. ஆனால் நோய்களை உறுதியாக கண்டறிய முடியும்." கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு பின் மட்டுமல்லாமல் பயன்படுத்துவதற்கு முன்பும் அனைத்து பொருட்களையும் அவரது குழு மிகவும் கவனமாக சுத்தம் செய்கிறது. 2018-ல் தென்கொரிய அதிபரை சந்தித்த போதாகட்டும், 2023-ல் ரஷ்ய அதிபரை சந்தித்த போதாகட்டும் அவரது இருக்கையை அவரது குழு ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்ததையும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு ஸ்கேன் செய்ததையும் காண முடிந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg93632pldo

கிளிநொச்சி ஏ-9 வீதியில் திடீரென தீப்பற்றியது கார்

1 month 3 weeks ago
05 Sep, 2025 | 02:06 PM கிளிநொச்சி ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வெள்ளிக்கிழமை (05) திடீரெனதீப்பற்றி எரிந்ததுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிஸார், தீயை அணைத்த பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு பிரிவானது 24 மணி நேர சேவையை வழங்க வேண்டிய ஒரு முக்கிய நிறுவனம் ஆகும். இதைவிடமும் இன்னமும் பாரிய தீ விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவு இவ்வாறு அலட்சியமாக இருந்தால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே, இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/224280

திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

1 month 3 weeks ago
05 Sep, 2025 | 11:33 AM திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் சமூக நலன் விரும்பிகளால் வெள்ளிக்கிழமை (05) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இது எமது வைத்தியசாலை வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப சத்திர சிகிச்சைக் கூடங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும், சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். களங்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் வேண்டும், நோயாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், மகப்பேற்றுக்காக கட்டப்பட்ட சத்திரசிகிச்சைக்கூடம் இயக்கப்பட வேண்டும், எலும்பு முறிவுக்காக தனியான தனியான களம் வேண்டும், ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது, பிண அறையில் வேலை செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள A&E கட்டடம் திறக்கப்பட வேண்டும், பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/224267

விக்ரம் 3201 சிப் இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் விண்கலங்களில் எவ்வாறு பயன்படும்?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், ISRO கட்டுரை தகவல் த.வி. வெங்கடேசுவரன் பேராசிரியர், ஐஐஎஸ்இஆர் மொஹாலி 4 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான சந்திரனை நோக்கிய அடுத்த பயணம், ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் மின்னணு (electronics) கருவிகளின் இருதயமாக இந்த 'சிப்' (chip) தான் அமையும். இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் 3201 செயலி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) வடிவமைக்கப்பட்டு, சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகத்தால் (Semi-Conductor Laboratory - SCL) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி இணைப்பு சோதனை (Space Docking Experiment - SpaDeX) தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய 30 டிசம்பர் 2024 இல் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி60 (PSLV-C60) திட்டத்தில் இந்த கணிப்பி பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. விண்வெளிச் சூழலில் இந்த 'சிப்' சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொண்ட இஸ்ரோ, 2009 முதல் அதன் விண்கல இயக்க மின்னணு கருவிகளில் பயன்பட்டு வந்த 16-பிட் கணிப்பி விக்ரம் 1601க்கு பதிலாக, இனி வரும் திட்டங்களில் மேம்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 செயலியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பட மூலாதாரம், X/@DrLMurugan செல்போன் சிப்பை விட குறைந்த திறன் கொண்ட விக்ரம் 3201 நவீன ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் கணிப்பி செயலிகளுடன் மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால், விக்ரம் 3201 செயலி மிகவும் பழைய தொழில்நுட்பம் என்று தான் கருதத் தூண்டும். எடுத்துக்காட்டாக, விக்ரம் 3201 ஒரு 32-பிட் செயலி, அதே நேரத்தில் சமீபத்திய மடிக்கணினிகள் பெரும்பாலும் 64-பிட் செயலிகள் (64-bit processors) கொண்டு இயங்கும். எளிய சொற்களில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், 32-பிட் அமைப்பு 2^32 நினைவக முகவரிகளை (memory addresses) ஒரே கணத்தில் அணுக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறன் கொண்ட கணிப்பியைப் பொருத்திய கணினிகளில் 4 ஜிபி ரேம் (RAM) வரை கையாளும் திறன் கொண்டு இயங்கும். மாறாக, 64-பிட் செயலி 2^64 நினைவக முகவரிகளைக் கையாளும்; எனவே 8 ஜிபி முதல் 16 ஜிபி ரேம் வரை அல்லது அதற்கும் மேற்பட்ட ரேம் நினைவகத்தைக் கையாளும் திறன் படைத்ததாக அமையும். 64-பிட் செயலி கொண்டு இயங்கும் கணினியில் வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல லாவகமாக அனிமேஷன் படங்கள் கொண்ட கேமிங் செயல்படும்; ஆனால் 32-பிட் அமைப்பில் அதே கேமிங் திரையில் காட்சிகள் விட்டுவிட்டுத் தென்படும். நவீன 64-பிட் செயலி, 32-பிட் செயலியை விட சந்தேகத்துக்கு இடமின்றி அதிக திறன் கொண்டது தான். மேலும், விக்ரம் 3201 ஒரு 180 நானோமீட்டர் (180nm) நுணுக்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 'சிப்'. இது 1990களின் பிற்பகுதி முதல் 2000களின் தொடக்கம் வரை புழக்கத்தில் இருந்த பழைய தொழில்நுட்பமாகும். இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்யும் தனது எளிய மற்றும் மலிவான நவீன கணினியில் உள்ள 11-ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5 (11th-generation Intel Core i5) செயலி மேம்பட்ட 10 நானோமீட்டர் (10nm) நுணுக்கம் கொண்டது. 'நானோமீட்டர்' (nm) என்பது ஒரு மீட்டரின் பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கிறது. சிப் உற்பத்தி (chip manufacturing) சூழலில், எவ்வளவு நுணுக்கமாக சிலிக்கான் சிப்பில் (silicon chip) நுண்ணளவு கொண்ட டிரான்சிஸ்டர்களை (transistors) எவ்வளவு அடர்த்தியாக (density) வடிவமைத்து உற்பத்தி செய்கிறோம் என்பதைக் குறிக்கும். குறைவான nm என்றால் அதே அளவு திறன் கொண்ட கணிப்பியின் அளவு மேலும் சிற்றளவாக்கம் (miniaturisation) கொண்டிருக்கும் என்று பொருள். சிலிக்கான் சிப்பின் கூடுதல் அடர்த்தி கணிசமான நன்மைகளை வழங்குகிறது. அருகருகே டிரான்சிஸ்டர்கள் உள்ளதால் எலக்ட்ரான்கள் (electrons) குறுகிய தொலைவு பயணம் செய்தால் போதும்; எனவே கணினியின் வேகம் கூடும். சிறிய நுணுக்கமான டிரான்சிஸ்டர்கள் செயல்படுவதற்குக் குறைவான மின் ஆற்றல் போதும்; எனவே மின்கலங்களில் உள்ள மின்னாற்றல் நீண்ட காலத்துக்கு இயங்கும். அடர்த்தி கூடுதல் என்றால் அந்த மின்னணுக் கருவியின் அளவும் கூடுதல் சிற்றளவாக்கம் கொள்ளும்; எனவே, மேலும் கையடக்க கருவிகள் சாத்தியம் ஆகும். வணிகப் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், இன்று அதிநவீன தொழில்நுட்பம் வழியே ஆய்வகத்தில் 3nm முதல் 2nm சிப்பு வடிவாக்க தொழில்நுட்ப நிலையை உலகம் அடைந்துவிட்டது. இந்தச் சூழலில் 180nm என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போலதான் தென்படும். பட மூலாதாரம், @GoI_MeitY ஆனால் ஸ்மார்ட்போன்களின் தேவைகளிலிருந்து விண்வெளி மின்னணுவியலின் (space electronics) தேவைகள் அடிப்படையில் மாறுபடுகின்றன. விண்ணை நோக்கி ஏவூர்தி சீறிப் பாயும்போது பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். புவியின் வளிமண்டலத்தைக் கடந்து விண்வெளிக்குச் சென்றால் அங்கே கதிரியக்கம், வெப்பத் தாக்கம் போன்ற பல்வேறு இடர்களைச் சமாளிக்க வேண்டிவரும். இந்த இடர் மிகு சூழலில் விண்வெளித் தொழில்நுட்ப மின்னணுக் கருவிகள் நம்பகமாக செயல்படவேண்டும். விண்வெளியில் விண்கலங்கள் மீது வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள், கருந்துளைகள் போன்ற விண்பொருள்களிலிருந்து வேகமாகப் பாய்ந்து வரும் மின்னேற்றம் கொண்ட காஸ்மிக் கதிர்கள், சூரியன் உமிழும் சூரியக் காற்று போன்ற கதிரியக்கத் துகள்கள் அடைமழை போல விழுந்துக்கொண்டே இருக்கும். டிரான்சிஸ்டர்களுக்குள் நுண்ணளவில் மின்னேற்றம் உள்ள நிலை, ஏற்றம் அற்ற நிலை என்பதே பூச்சியம் அல்லது ஒன்று என்கிற டிஜிட்டல் தரவாக (digital data) பதிவு ஆகும். மீஉயர் ஆற்றல் கொண்ட கதிர்கள் விழும்போது, மழைத்துளி பட்டு நுண்மண்துகள் தெறிப்பது போல, டிரான்சிஸ்டர்களுக்குள் உள்ள மின் ஏற்ற நிலையை மாற்றிவிட முடியும். அதன் தொடர்ச்சியாக பூஜ்ஜியம் இருந்த இடத்தில் ஒன்று அல்லது ஒன்று இருந்த இடத்தில் பூஜ்ஜியம் என மாறுதல்கள் இயல்பில் ஏற்படும். இந்த நிகழ்வு தனி-நிகழ்வு நிலைகுலைவு (Single-Event Upset - SEU) என அழைக்கப்படுகிறது, இது ஒரு சிறிய, சீரற்ற மாற்றம் (random change). இதன் விளைவாக விண்கலத்தின் கணினியில் உள்ள டிஜிட்டல் தரவு சலனம் அடையும். இயல்பில் ஏற்படும் இத்தகைய SEU தனி-நிகழ்வு நிலைகுலைவுகளைச் சமாளிக்க செக்சம் போன்ற சரிகாண்-சரிசெய் தொழில்நுட்பங்கள் (error correction techniques) உள்ளன. ஆயினும், குறிப்பிட்ட அளவு தரவு நிலைகுலைவை மட்டுமே நம்பகமாக சீர் செய்யமுடியும். பட மூலாதாரம், PTI படக்குறிப்பு, செமிகான் இந்தியா 2025 நிகழ்வில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப்பை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோதியிடம் வழங்கினார். டிரான்சிஸ்டர்களின் அளவு சுருங்கும்போது அவற்றில் நிலைப்படுத்தப்படும் மின்னேற்ற அளவு குறையும்; எனவே சற்றே ஆற்றல் குறைவான காஸ்மிக் கதிர்கள் கூட இந்தச் சூழலில் தனி-நிகழ்வு நிலைகுலைவுகளை ஏற்படுத்த முடியும். எனவே, கூடுதல் தரவு நிலைகுலைவுகளைச் சமாளிக்க வேண்டும்; இதன் விளைவாக கணிப்பின் நம்பகத்தன்மை இயல்பில் குறையும். அடர்த்தி குறைவான, அளவில் கூடுதலான சிப்பு ஏற்பாட்டில், தரவு நிலைகுலைவு வாய்ப்பு குறைவாக அமையும்; எனவே கணிப்பின் நம்பகத்தன்மை கூடும். எனவேதான் இஸ்ரோ தற்போது பழைய 180nm சிப்பு வடிவமைப்பையே பயன்படுத்தி வருகிறது. மேலும், விண்கலம் பூமியைச் சுற்றிவரும்போது ஒருசமயம் பளீர் என்ற சூரிய ஒளியிலும், பூமிக்கு மறுபுறம் செல்லும்போது பூமியின் நிழலில் கும்மிருட்டையும் சந்திக்கும். சூரிய ஒளி படரும் தருணத்தில் சுட்டெரிக்கும் +125°C வெப்ப நிலையும், பூமியின் நிழலில் புகும்போது விறைப்பான -55°C உறைகுளிர் நிலையையும் சந்திக்கும். மேலும் கணநேரத்தில் இந்த வெப்ப மாறுதல் ஏற்படும். விண்வெளிக்குச் செல்லும் மின்னணுக் கருவிகள் இந்த வெப்ப அதிர்வைத் தாங்கிச் செயல்படும் வகையில் அமையவேண்டும். -55°C முதல் +125°C வெப்ப நிலையில் இயங்கும் திறன் கொண்டதாக விக்ரம் 3201 சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விண்கலத்தில் 1.8V முதல் 5V மின்னழுத்த நிலையில் வேலை செய்யும் படியும் இந்தச் 'சிப்' உள்ளது. கூடுதல் வேகம், மேலும் சிற்றளவு என்பது பூமியில் பயன்படுத்தப்படும் கையடக்க மின்னணுக் கருவிகளின் தேவை. வெப்பம், கதிரியக்கம் முதலியவற்றால் பாதிப்பு அடையாத, நினைவகத்தில் நிலைகுலையாத, நம்பகமான தரவு சேமிப்புத் திறன் தான் விண்வெளி மின்னணுக் கருவிகளின் அடிப்படைத் தேவை. நமது திறன்பேசிகளில் உள்ள அதிநவீன 'சிப்'கள் விண்வெளி நிலையில் சட்டென்று செயலிழந்துவிடும், ஆனால், விண்வெளிப் பயனுக்கு உகந்த மின்னணு கணிப்பியாக விக்ரம் 3201 அமைகிறது. 2009 இல் விண்ணில் ஏவப்பட்ட CARTOSAT-3 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவிய PSLV-C47 திட்டத்தில் தான் இந்தியா சுயமாகத் தயாரித்த விக்ரம் 1601 சிப்பு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அதுமுதல் இன்று வரை இந்தச் சிப்பு தான் இஸ்ரோ ஏவூர்திகளிலும் விண்கலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விக்ரம் 3201 அதன் முன்னோடியான விக்ரம் 1601 இலிருந்து ஒரு கணிசமான வகையில் முன்னேற்றம் கொண்ட கணிப்பி ஆகும். மிதவை-புள்ளி ஆதரவு, Ada போன்ற உயர்-நிலை மொழிகளுடனான இணக்கத்தன்மை உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை இது உள்ளடக்கியது. மேலும், நவீன 70nm சிப்பு வடிவமைப்பில் இஸ்ரோ ஆய்வைத் துவங்கியுள்ளது. இஸ்ரோ வடிவமைத்து சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகம் உற்பத்தி செய்யும் இந்தச் சிப்புகள் விண்வெளித்துறைக்கு மட்டுமல்ல, ரயில்வே போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார ரயில்களை இயக்கப் பயன்படும் மின்னணுக் கருவிகள், மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தப்படும் தன்னிறைவு தானியங்கி ரயில் மேற்பார்வை (indigenous Automatic Train Supervision - i-ATS) நுட்பக் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் விக்ரம் 1601 சிப்பு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், விக்ரம் 3201இன் வருகை காரணமாக பல்வேறு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மேலும் மேம்படும். விக்ரம் 1601 தயாரிப்புக்கு முன்னர் மோட்டரோலா, இன்டெல் போன்ற நிறுவனங்களிடமிருந்து தனக்கு வேண்டிய கணிப்பி சிப்புகளை இஸ்ரோ இறக்குமதி செய்து வந்தது. இறக்குமதியை நம்பி இருந்த இந்தியா விநியோகச் சங்கிலி அபாயங்கள் (supply chain risks), ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் (export restrictions), தேசிய பாதுகாப்புச் சவால்களை (national security challenges) சந்தித்தது. 1998 போக்ரான் சோதனைகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடைகள் (sanctions), நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை (home-grown strategic tech) சுயமாக உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டின. இதைத் தொடர்ந்துதான் விக்ரம் வரிசை சிப்வடிவமைப்பு உற்பத்தி எனும் தற்சார்பு நிலையை இஸ்ரோ கைக்கொண்டது. அதன் முதிர்ந்த நிலையே விக்ரம் 3201 உருவாக்கம். செமிகாண் இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் அளிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப், தடைகளை முறியடித்துத் தன்னிறைவுக்கு எடுத்துச் சென்ற இந்திய அறிவியல் தொழில்நுட்பச் சாதனையைப் பறைசாற்றுகிறது எனலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy8r4jz0dgmo

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு

1 month 3 weeks ago
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுசேர்க்கும் முகமாகப் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் நேற்றையதினம், காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. இந்த நீர் சேகரிப்பு நிகழ்வு, நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446212
Checked
Wed, 10/29/2025 - 23:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed