ஊர்ப்புதினம்

சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு!

3 months 1 week ago

சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு!

adminJune 11, 2025

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு , வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்தப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக காவவற்துறையினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2025/216619/

சிறைச்சாலை தலைமையகமே சட்டவிரோதமாக செயற்பட்டது; கைதிகள் விடுப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

10 JUN, 2025 | 06:44 PM

image

(இராஜதுரை ஹஷான்)

சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். இதுவே உண்மை.

சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக்குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது.

நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும்.

ஆனால் அந்த திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. மோட்டார் வாகனத்தின் செயற்பாடுகள் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது.

வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூக கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

வரலாற்று சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூக கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும். பழக்கத்தால் அடிமையான ஒருவிடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

https://www.virakesari.lk/article/217113

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

3 months 1 week ago

10 JUN, 2025 | 05:49 PM

image

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை புதன்கிழமை (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.

இந்த கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advisory-sea-1.jpg

https://www.virakesari.lk/article/217100

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி; ஆதரவு வழங்குமாறு பிரஜைகள் குழு கோரிக்கை

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

10 JUN, 2025 | 01:39 PM

image

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு பேரணியானது, காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும்.

எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/217086

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்படும்; அடையாள அட்டை அவசியம் - சிந்தக்க அபேவிக்கிரம

3 months 1 week ago

10 JUN, 2025 | 03:01 PM

image

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04ம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்தார்.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என கூறினார்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.

வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/217083

வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; ஓய்வுபெற்ற நீதிபதி

3 months 1 week ago

வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; ஸ்ரீநிதி நந்தசேகரன்

10 JUN, 2025 | 11:56 AM

image

பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன பொருத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நலிவுற்ற சமுதாயத்தினரே கூடியளவு சமூகப் பிரச்சினைகளான பாலியல் துஸ்பிரயோகம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிப்படைகின்றனர்.

இதற்கு மேலதிகமாக குடும்பங்களின் வறுமையும், சமூகத்தில் ஏற்படும் கலாசார மாற்றம், தொலைபேசி பாவனை, சமூக வலைத்தள பாவனை போன்றவற்றினூடான இடர்பாடுகளும் காரணமாக உள்ளன.

இவர்களுக்கான முறையான வழிகாட்டல்களுடன் சமூகப்பொறுப்புணர்வுடன் சகலரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களையும், முறைப்பாடுகளையும் கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

ஏனைய பாடசாலைகளிலும் இவை பொருத்தப்பட்டு முறைப்பாட்டுப் பெட்டியின் திறப்பு நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும்.

இரட்டை பிரஜாவுரிமையில் குழந்தை தத்தெடுப்பது தொடர்பான விடயங்களில் தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் கையாள்வதே பொருத்தமானதாக அமையும்.

சகல உத்தியோகத்தர்களும் கூட்டுப்பொறுப்புடனும் குழந்தைகளின் நலன்சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தும் செயற்படவேண்டும்.

சிறுவர் இல்லங்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள சகல சிறுவர்களுக்கும் சிறுவர் சார்பான கடமை உத்தியோகத்தர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன தெரிவிக்கப்பட வேண்டும்.

சமூக கண்காணிப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வுக் குழுக்கள் சமூக மட்டத்தில் உருவாக்கப்பட்டு நலன்சார் விடயங்கள் கவனிக்கப்படவேண்டும் எனவும், சகல விடயங்களையும் ஒருங்கிணைக்க பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார்.

https://www.virakesari.lk/article/217079

கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்

3 months 1 week ago

கண்டி மாவட்டம்,கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் (வயது 43), அவரது மனைவி பாத்திமா பர்ஹானா-(வயது 34) இவர்களின் குழந்தைகள் முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா-(வயது 4), அமிரா-(வயது 4) ஆகிய 5 பேர்களாவர்.

இவர்கள் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் திங்கட்கிழமை(09)  அதிகாலை வந்து இறங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய போது, முஹம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilmirror Online || கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்

இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்

3 months 1 week ago

10 Jun, 2025 | 12:35 PM

image

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாற்றும் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடாத்தும் 'இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் 16 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் | Virakesari.lk

யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு

3 months 1 week ago

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் நடந்துகொள்ளும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள், ரெலோ தலைவர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் நேற்று முன்தினம்  யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

வன்னியில் வவுனியா மாநகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் தங்கள் தரப்பு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி ரெலோ தரப்பினர் இந்தச் சந்திப்பின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளின் விடயத்தில் ரெலோ கட்சியும் அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் எப்படி நடந்துகொள்கின்றனவோ, அதே முறைமையில் வன்னியில் பதில் தரப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் பொதுச்செயலாளரும் ஒரே நிலைப்பாடாக உறுதியாக ரெலோ பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். 

அந்தந்த சபைகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி, ஆட்சி அமைப்பதற்கு உதவும் முன்னைய பகிரங்க அறிவிப்பை ரெலோவும், அது சார்ந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் பின்பற்றுமானால் அதே முறைமையை இலங்கை தமிழ் அரசும் தவறாமல் பின்பற்றும்.

அந்த முறைமைக்கு மாறான போக்கை ரெலோ உட்பட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பின்பற்றுமானால், அதேபோல் மாறான முறையைத் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்னியில் பின்பற்றும் என்று அக்கட்சியின் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள்.

இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயல்பட வேண்டும். 

அவர்கள் அதற்கு மாறாக செயற்படுவார்களானால் வவுனியா மாநகர சபை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் நாமும் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுவோம் என எதிர்பார்க்கக் கூடாது. 

இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு | Virakesari.lk

வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

3 months 1 week ago

10 Jun, 2025 | 05:39 PM

image

பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவித்தார்.

இதன்போது அவர், வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில் அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார். 

அதற்கு பதிலளிக்கும் வகையில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை | Virakesari.lk

யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது

3 months 1 week ago

யாழ்.சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு  இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கைது

இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களில் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது | Muslim Businessman Arrested Narcotic Pills Jaffna

இதன்போது, சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தக நிலையத்தை நடத்தும் 45 வயதான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக் கொள்வது தெரியவந்துள்ளது.

ஜஸ் போதைக்கு அடிமை

இந்த நிலையில் இன்று குறித்த வர்த்தகர் 330 போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது | Muslim Businessman Arrested Narcotic Pills Jaffna

அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/

வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும் : வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்

3 months 1 week ago


வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும் : வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்

Published By: RAJEEBAN

10 JUN, 2025 | 06:33 AM

image

வட,கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

வட,கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்பணி சூ.யே. ஜீவரட்ணம்  அ.ம.தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கி அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

 கடந்த பங்குனி மாதம் 28ம் திகதி காணி நிரணய உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும் அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தபோது இறுதியில் அதை இரத்துசெய்தமையை வரவேற்கின்ற வேளை, இன்னும் இன மத சமூக நல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார் காணிகளுக்குள் அத்துமீறிய பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும் புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த வித அகழ்வு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பௌத்த விகாரைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் எல்லாம் வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினை மனப்பான்மையையும் அதிகார வாக்கம் வெளிப்படுத்துகிறது. இதை வடமாகாண நீதி சமாதான நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.

அதேவேளை வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரித்துக்காணிகளை கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மத சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கிறது. அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள் கட்டப்படுகின்ற மத தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும் அநியாயமானதும் என்பதை புரிந்து கொண்டு வட கிழக்கு மாகாணங்களில் சட்ட விரோத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலங்களை நோக்கிய தங்களின் ஆன்மீக பயணங்கள் வேதனையளிக்கிறது என்பதை புரிந்துகொண்டு நல்மனதோடு அவற்றை தவிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கிகரித்து அவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடைய கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம். 

அது மாத்திரம் இன்றி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய வளமான நிலங்கள், காணிகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்து அவற்றை எல்லாம் விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு உணரப்படுகின்ற வேளை இப்படியான காணி அபகரிப்பு செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்த விரும்புகின்றது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/217061

யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் பெயர்களை பரிந்துரைத்த தமிழரசு!

3 months 1 week ago

யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் பெயர்களை பரிந்துரைத்த தமிழரசு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்குத் விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளது.
மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
யாழ். நல்லூரில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.samakalam.com/யாழ்-மாநகர-சபைக்கான-மேயர-2/

தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை!

3 months 1 week ago

தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை!

adminJune 10, 2025

Thaiyiddy5.jpg?fit=1170%2C658&ssl=1

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது.

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.06.25)  நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் (09.06.25) திங்கட்கிழமை போராட்டம் ஆரம்பமான போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறவுள்ளது.

போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் காவற்துறையினரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thaiyiddy1.jpg?resize=800%2C514&ssl=1Thaiyiddy2.jpg?resize=800%2C600&ssl=1Thaiyiddy3.jpg?resize=800%2C450&ssl=1Thaiyiddy4.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/216568/

எதிர்காலத்தில் அபாயகரமான நிலை உருவாகும் : கருணா

3 months 1 week ago

எதிர்காலத்தில் அபாயகரமான நிலை உருவாகும் : கருணா

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக  செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை காணப்படும். எனவே, கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான கருணா அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கிழக்கு தமிழ் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் வெறும் பதவி பட்டங்களுக்காக அல்ல. எங்களது கிழக்கு மாகாண மக்கள் உரிமையுடனும் தற்துணிவுடன் காத்திரமான தியாகத்துடன் வாழவேண்டும் என்பதற்காக.

கிழக்கு மாகாணம் மூவினங்களும் செறிந்து வாழும் இடம். எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் நிச்சயமாக ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாது. ஆகவே தான் கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுள்ளோம்.

இப்போது அரசாங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. எனவே யார் முன்வருகின்றார்களோ, எங்களுக்கு சாதகமான பேச்சுவார்த்தை நடாத்தி நாங்கள் அந்த ஆட்சியை அமைப்பதற்கு உதவி செய்வோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால் இன்று ஆட்சி அமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த கஜேந்தரகுமாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. அவ்வாறே டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் சந்தித்துள்ளார். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் வேடிக்கையான விடயம் ஒட்டுக்குழு, தலைவரை சந்தித்ததாக கூறப்பட்டதேயாகும்.

அவரும் மக்களுக்காக போராட்டத்துக்காக ஆயுதம் தூக்கி வந்த தலைவர்தான். அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றி வந்தவர். ஆகவே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவஞானம் துணிந்து சென்று டக்ளஸுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம். இது போன்று எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

அதை தான் கிழக்கு மாகாணத்தில் எதிர்பார்க்கின்றோம். வேடிக்கை என்னவென்றால் யுத்தம் நடந்த காலத்தில் யுத்தத்தை விமர்சித்தவர்கள் அல்லது யுத்தத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் தற்போது தேசியவாதிகளாக மாற்றமடைந்துள்ள அவர்கள்தான் தேசியத்தை பற்றி அதிகமாக பேசுகின்றனர்.  

உண்மையில் களத்தில் இருந்த போராளிகள் இன்று துரோகிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே களத்தில் நின்ற எத்தனையோ போராளிகள் கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றார்.  R

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எதரகலததல-அபயகரமன-நல-உரவகம-கரண/73-358894

நாட்டின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார் சுகாதார அமைச்சர்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

09 JUN, 2025 | 05:45 PM

image

நாட்டிலேயே மேற்கத்திய மருந்துகளுக்கான மிகப்பெரிய உள்ளூர் உற்பத்தி ஆலையின் கட்டுமானம் சுகாதார அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

இந்த மருந்து உற்பத்தி ஆலையில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்குவதன் மூலம், நாட்டின் மருந்து உற்பத்தித் துறையில் ஒரு பெரிய புரட்சி தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

பிங்கிரியா ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு அடிப்படை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும், நாட்டின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தியாளரான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், (Synergy Pharmaceuticals Corporation Private Limited) சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் ஆய்வு செய்யப்பட்டது.

பிங்கிரியா ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 15 ஏக்கர் பரப்பளவில் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (USD 120M) நிதி முதலீட்டில் சர்வதேச தரத் தரங்களின்படி கட்டப்பட்டு வரும் இந்த மருந்து தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப நிறுவப்பட்ட அதிநவீன மருந்து உற்பத்தி இயந்திர அமைப்பு மற்றும் இங்குள்ள அடிப்படை மருந்து உற்பத்தி நடவடிக்கைகள் ஆகியவற்றை சுகாதார அமைச்சர் ஆய்வு செய்தார்.

8607abb6-283e-47ab-a680-54950ea76bda.jpg

மருந்து உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட ஊழியர்களை தங்க வைப்பதற்காக கட்டப்பட்டு வரும் தங்குமிட கட்டிடத்தையும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆய்வு செய்தார். தற்போது இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள நாட்டிற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் உற்பத்தி செய்ய உள்ளது. கூடுதலாக, சினெர்ஜி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்ப மருந்து உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. செனுரா சிவில் இன்ஜினியரிங் (பிவிடி) லிமிடெட் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மருந்து உற்பத்தி ஆலையை ஆய்வு செய்த பின்னர் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த மருந்து உற்பத்தி ஆலை திறக்கப்படுவது நாட்டின் மருந்து உற்பத்தி துறையில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இந்த மருந்து உற்பத்தி ஆலை நவீன மருந்து உற்பத்தித் துறையில் புரட்சியை முன்னோடியாகக் கொள்ள முடியும் என்றும் கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த ஆலையால் உற்பத்தி செய்யப்படும் சர்வதேச தரத்திலான மருந்துப் பொருட்கள் அரசு மருத்துவமனைகளிலும் சந்தையிலும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து குடிமக்களுக்கும் தற்போது கிடைக்காத அனைத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளையும் உயர் தரத்தில் வழங்குவதே தனது இலக்கு என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில் மருந்துத் துறையில் இருந்த பிரச்சினைகள் காரணமாக, இந்தப் பிரச்சினையை இன்னும் பல மாதங்களுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவமனை அமைப்புக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளில் குறைந்தது 95 சதவீதத்தையாவது தொடர்ந்து வழங்க சுகாதார அமைச்சகம் நம்புகிறது என்றும் அவர் கூறினார்.

மக்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 200 பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாகவும், அரசாங்கம் எவ்வளவு பணம் ஒதுக்கினாலும், விநியோகச் சங்கிலியில் உள்ள பலவீனங்கள் காரணமாக மக்களுக்கு மருந்துகளை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை என்று அரசாங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மிகச் சரியான பதில், நாட்டில் மருந்துகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

54702a3a-b7b4-407e-a167-4ebed8e778d6.jpg

இதற்குத் தேவையான பல மருந்துகளை அதிக நிதி முதலீட்டில் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்றும், இந்த மருந்து உற்பத்தி ஆலையின் தயாரிப்புகள் எப்போதும் உயர் தரத்திலும் சர்வதேச தரத்தின்படியும் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் மருந்து உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாட்டிற்கு அதிக முதலீட்டாளர்களை பெரிய அளவில் கொண்டு வருவது புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறினார். உள்ளூர் உற்பத்தியாளர்கள் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்தால், அவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் கூறினார்.

பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தை நாட்டின் ஒரு பெரிய பொருளாதார வலயமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்குள் இந்த மருந்து உற்பத்தி ஆலை நிறுவப்படுவதன் மூலம், நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் ஏராளமான மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழிற்சாலையில் மட்டும் சுமார் 2,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சந்தர்ப்பத்தில், சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரவி விஜேரத்ன, நிர்வாக இயக்குநர் ரோஹன் விஜேசூரியா, தலைமை இயக்க அதிகாரி இந்திய நாட்டவர் ஆர்.கபாதாஜி, முதலீட்டு வாரியத்தின் தலைவர் அர்ஜுன ஹேரத், மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஒழுங்குமுறை இயக்குநர் அர்ஜுன பத்மகுமார, மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்குமுறைத் தலைவர் வசனா வெலிபிட்டிய, இலங்கை வங்கியின் துணைப் பொது மேலாளர் சம்பத் பெரேரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/217047

இந்த வருடத்தில் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஐ ஈட்ட முடிந்துள்ளது – மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

09 JUN, 2025 | 05:54 PM

image

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104%ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.

2025ஆம் ஆண்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் ரூபா 240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும், ரூபா 2 பில்லியனை பீடியிலிருந்தும் ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஷர்ஷன சூரியப்பெரும தலைமையில் வழிவகைகள் பற்றிய குழு கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.

மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் முகாமைத்துவம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இக்குழு கூடியிருந்தது.

கடந்த வருடத்தில் மே 31ஆம் திகதி வரையாகும்போது மதுவரி வருமானம் ரூபா 88 பில்லியன் என்றும், இதற்கு அமைய இந்த வருடத்தில் வருமானம் ரூபா 10 பில்லியனால் ஏற்கனவே அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமான மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் விலகியிருப்பது, அரங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என்றும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டுடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கையடக்கத்தொலைபேசிகளில் உள்ள செயலியின் மூலம் ஸ்கான் செய்து போலியான மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் கேள்வியெழுப்பினார். இச்செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டினர்.

2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய QR குறியீட்டு ஸ்டிக்கர் முறையின் பின்னர் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் மதுபானப் போத்தல்களின் உண்மைத் தன்மையைப் பரிசீலிக்கும் திட்டம் எதிர்காலத்தில் பொதுமக்களுக்களுக்கும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதியமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றில் போலியான மதுபானப் போத்தல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வது மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மதுவரித் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மதுபானத்தின் விலை அதிகமாக இருப்பதால் சட்டவிரோதமான மதுப்பாவனை அதிகரிப்பதாகவும், இதற்குத் தீர்வாக நியாயமான விலையில் தரமான மதுபானத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரி செலுத்தும் நடைமுறையில் சகல பிரஜைகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தை ஒரு ரூபா கூட வீண்விரயமாக்காமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் என்றும் வலியுறுத்தினார்.

பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக சபுமல் ரண்வல, அஜித்.பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் சட்டத்தரனி ஹசாரா லியனகே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-09_at_15.54.22.jp

WhatsApp_Image_2025-06-09_at_15.54.23.jpWhatsApp_Image_2025-06-09_at_15.54.23__1WhatsApp_Image_2025-06-09_at_15.54.21.jp

https://www.virakesari.lk/article/217043

இணுவில் - காரைக்கால் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டம்

3 months 1 week ago

09 JUN, 2025 | 04:25 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது.

அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும் சந்தித்தவண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

IMG-20250609-WA0004.jpg

IMG-20250609-WA0005.jpg

IMG-20250609-WA0003.jpg

IMG-20250609-WA0002.jpg

https://www.virakesari.lk/article/217022

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

3 months 1 week ago

09 Jun, 2025 | 05:30 PM

image

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர்.

தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.

இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர்.

இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1000442139.jpg

1000442144.jpg


வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி  | Virakesari.lk

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !

3 months 1 week ago

09 Jun, 2025 | 05:10 PM

image

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. 

இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் ! | Virakesari.lk

Checked
Thu, 09/18/2025 - 10:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr