ஊர்ப்புதினம்

யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் மாவட்ட செயலர் மகேசன் நியமனம்!

3 months 1 week ago

யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் மாவட்ட செயலர் மகேசன் நியமனம்!

1210535408.jpeg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த மார்ச் மாதம் முதல் செயற்படும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களில் கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவி வறிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு கணபதிப்பிள்ளை மகேசனை நியமிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

உடனடியாகச் செயற்படும் வகையில் எதிர்வரும் 2028 மார்ச் நான்காம் திகதி வரையான காலப்பகுதிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு, இலங்கைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 44(55)ஆம் பிரிவின் கீழான விதிகளுக்கு உட்பட்டதாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழகப்_பேரவை_உறுப்பினராக_முன்னாள்_மாவட்ட_செயலர்_மகேசன்_நியமனம்!#google_vignette

ரி.எம்.வி.பியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் CID விசாரணை!

3 months 1 week ago

ரி.எம்.வி.பியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் CID விசாரணை!

adminJune 6, 2025

TMVP.jpeg?fit=1170%2C658&ssl=1

வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினையடுத்து மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியலயத்தை கடந்த 30 ஆம் (30-5-2025) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சுமார் 12 மணித்தியாலம் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன் போது அங்கிருந்து ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி உட்பட 3 கையடக்க தொலைபேசிகள், சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, ஐபொட் ஒன்று, 9 மில்லிமீட்டர் ரக கைதுப்பாக்கியின் 5 தோட்டாக்கள் , ரிப்பீட்டர் ரக துப்பாக்கியின் 5 வெற்று தோட்டாக்களை மீட்டனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி தொடர்பாக் ரி.எம்.வி.பி கட்சியின் வாழைச்சேனையை சேர்ந்த மார்கண் என்று அழைக்கப்படும் ஜயாத்துரை ரவி மற்றும் அவரின் உதவியாளர் குமரன் ஆகிய இருவரையும் நேற்று (5) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சி.ஐ.டியினர் வரவழைத்து சுமார் 5 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவர்களை விடுவித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று (6.06.25) பகல் 11.00 மணியளவில் வாழைச்சேனை பேத்தாளையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரான ஜெயம் என்பவரது வீட்டை சிஜடியினர் முற்றுகையிட்டு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை விடுவித்துள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/216424/

இந்தியாவின் நிதியுதவியில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

3 months 1 week ago

Published By: VISHNU

06 JUN, 2025 | 09:53 PM

image

இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

IMG-20250606-WA0008.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (6) மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

IMG-20250606-WA0006.jpg

இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20250606-WA0009.jpg

இந்நிகழ்வில் உரையாற்றிய துணை தூதர் சாய் முரளி, ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்று குறிப்பிட்டார். இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.

உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது, இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது என்ற உறுதியை துணை தூதரக ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார். வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் விளக்கினார்.

வட மாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்துறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது என்றும் இருக்கும் என்றும் தூதர் உறுதியளித்தார். நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாக துணை இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/216822

உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்தால் நடவடிக்கை - வசந்த சமரசிங்க எச்சரிக்கை

3 months 1 week ago

06 JUN, 2025 | 05:00 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நுகர்வோரை பாதிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உப்பை விலை அதிகரித்து விற்பனை செய்ய முற்பட்டால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே எம்.பியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்குவதற்காக உப்பு இறக்குமதிக்கு சந்தையை திறந்துவிட்டோம். அதற்கு இருந்த வரையறையை நீக்கி இருந்தோம். என்றாலும் இறக்குமதி செய்வதற்கு உணவு கட்டுப்பாட்டு பிரிவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். உப்பு, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதாக இருந்தால், அதுதான் நாட்டின் சட்டம்.

அதன் பிரகாரம், இதுவரை இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அந்தளவு உப்பு இறக்குமதி செய்யும் என நாங்கள் நினைக்கவில்லை. நேற்று முன்தினம் வரை 15ஆயிரத்தி 800 மெட்ரிக்தொன் வரை நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் அயடின் மற்றும் அயடின் அல்லாத இரண்டு வகை உப்பும் வந்திருக்கிறது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு ஒரு கிலோவின் அதிகபட்ச விலை 84, 85 ரூபாவுக்கும் குறைந்தபட்ச விலை 65 ரூபாவுக்கும் விற்பனை செய்யவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். என்றாலும் சந்தையில் இந்த உப்பை 120 ரூபாவில் இருந்து 280 ரூபா வரை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.

என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புக்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதன் மூலம் விலை அதிகரித்து விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களுக்கு தெரிவித்திருக்கிறோம். எனவே இந்த நடவடிக்கையில் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனை தவிர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/216801

10 ஆம் திகதி முதல் வலுவடையும் தென்மேற்கு பருவமழை

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

06 JUN, 2025 | 04:27 PM

image

நாடளாவிய ரீதியில் தென் மேற்கு பருவமழை இம்மாதம் (ஜூன்) 10 ஆம் திகதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால்,  நாட்டின் தென் மேற்கு பகுதியில்  10 ஆம் திகதி முதல் அடுத்த சில  நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வு கூறல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://www.virakesari.lk/article/216785

இந்திய மீனவர்களை சுட்டு பிடியுங்கள் - இலங்கை மீனவர்கள் கடற்படையிடம் ஆவேசமாக வேண்டுகோள்!

3 months 1 week ago

06 JUN, 2025 | 04:29 PM

image

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது.

இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள் வரப்போகின்றார்கள். அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் எமது அரசாங்கத்தாலோ அல்லது இந்திய அரசாங்கத்தாலோ எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

கடப்படையானது தோளோடு தோள் நின்று எமக்கு பக்கபலமாக செயல்பட வேண்டும். இந்திய இழுவைமடிப் படகுகளை வராமல் தடுக்க வேண்டும். இரண்டு நாட்டு அரசாங்கமும் இனிமேலாவது கதைத்து எமக்கு ஒரு நல்ல முடிவை கூற வேண்டும்.

அத்துடன் நமது கடற்படைக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுகின்றோம். அதாவது இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டாவது அவர்களை பிடியுங்கள். இவ்வாறு பிடித்து அவர்களை சிறையில் அடைத்து விட்டு படக்குகளை கைப்பற்றுங்கள். எமது மீனவர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு இதனைத் தவிர வேறு வழி இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/216790

தமிழரசுக்கட்சி கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3 months 1 week ago

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: RAJEEBAN

06 JUN, 2025 | 01:41 PM

image

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட  ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன ,

நாங்கள் இணங்கியமைக்கான பிரதான காரணம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கான ஒரு பெரும் ஆணையை வழங்கியிருந்தார்கள்.

தனித்தனியாக எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை எந்தவொரு சபையிலும் வழங்கியிருக்காவிட்டாலும், தமிழ்தேசிய தரப்பிற்கு தங்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள்

தமிழ்தேசியம் பேசி வாக்குகளைகோரிய  ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்தேசிய பேரவை தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள்.

ஆகவே உண்மையிலே நடக்கவேண்டியது என்னவென்றால் ,எவ்வாறு தமிழரசுக்கட்சியும்ஜனநாயக  தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தனவோ அதேபோன்று,தமிழரசுக்கட்சியும் அந்த இணக்கப்பாட்டிற்கு வந்து அதன் ஊடாக ஒவ்வொரு சபையிலும் ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குவதுதான் பொருத்தமாகயிருக்குமே தவிர,அதனை விட்டுவிட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாக, செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்வதும், அதுவும் தமிழ் தேசியத்துடன் இருக்ககூடியஈ ஏற்கனவே இருக்ககூடிய ஒரு பலமான கூட்டை தோற்கடிப்பது அதற்காக செயற்படுவது உண்மையிலே பொருத்தமற்றது.

இது தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும், மக்களிற்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும்.

எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த கூட்டில் கைச்சாத்திட்டவேளை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்திருந்தோம்,எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல, மாறாக, இந்த கூட்டின் ஒப்பந்தத்தை படித்து, எவரும் பிழைகண்டுபிடிக்க முடியாத வகையிலேயே அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது, ஆகவே தமிழரசுகட்சி அதனை ஏற்றுக்கொள்வதற்கு எந்த விதமான தயக்கம் இருக்க முடியாது.

உண்மையிலே தமிழ்தேசியத்தை நேசித்து அதற்கு நேர்மையாக நடப்பதாகயிருந்தால் அந்த ஒப்பந்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் எதிர்க்க முடியாத நிராகரிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது.

இண்டைக்கும் நாங்கள் கேட்கின்றோம், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்.

கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார்.

https://www.virakesari.lk/article/216765

பாத்ஃபைண்டர் - அக்ஷய பத்ரா இணைந்து கொழும்பு பாடசாலைகளில் இலவச பகல் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

06 JUN, 2025 | 01:33 PM

image

கொழும்பு மாவட்டத்தில்  தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இலவச பகல் உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இந்தியாவின் அக்ஷய பத்ரா அறக்கட்டளையுடன் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை உத்தியோகபூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. 

இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட அக்ஷய பத்ரா அறக்கட்டளையானது பாடசாலைகளில் இலவச உணவு வழங்கும் உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் 3 முக்கிய நகரங்களில் செயல்படும் இந்த அறக்கட்டளையானது, தற்போது 23,581 பாடசாலைகளில் நாளாந்தம் 2.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு போசாக்கான பகல் உணவை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தினூடாக 78 மத்திய மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. அங்கு சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் பின்பற்றப்படுகின்றன.

இந்திய அரசாங்கத்தின் முதன்மையான "PM POSHAN" ஊட்டச்சத்து திட்டத்தில் அக்ஷய பத்ரா  முக்கியமானதொரு பங்காளியாகவும் உள்ளது. இதற்கு முக்கிய நன்கொடையாளர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

பெங்களூரில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்தில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட மற்றும் அக்ஷய பத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மது பண்டித் தாசா இடையே அண்மையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சந்திப்பின் போது, இலங்கையில்  தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் முன்னோடியாக பகல் உணவு திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இரு இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையினால் செயல்படுத்தப்படும் கொழும்பில் பாடசாலைகளில் பகல் உணவு வழங்கும் திட்டத்துக்கு அக்ஷய பத்ரா உணவு தயாரித்தல் மற்றும் விநியோகத்திற்கான தொழில்நுட்ப செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் MMBL பாத்ஃபைண்டர் குழுமத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே. பாலசுந்தரம் மற்றும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைவர் பெர்னார்ட் குணதிலக்க ஆகியோர் கையெழுத்திட்டனர். 

அக்ஷய பத்ராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக அதிகாரிகள் சஞ்சலபதி தாசா மற்றும் சிவா சுவீர் சனிதாஸ் ஆகியோர் பெங்களூருவிலிருந்து மெய்நிகர் வழியாக கையெழுத்திட்டனர்.

https://www.virakesari.lk/article/216764

குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!

3 months 1 week ago

குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!

June 6, 2025

தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை  காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன்   (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார்.

குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள சில காணிகளின் உரிமை தொடர்பாக மாகாணத்தின் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையைத் தீர்ப்பதில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அந்த காணி தொல்பொருள் துறைக்குச் சொந்தமானதாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதை காவல்துறையினரும் தொல்லியல் திணைக்களமும் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வழக்குத் தொடுனர் சார்பில் தொல்பொருள் திணைக்களத்தாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சந்தேகநபர்களும் இந்த வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நீதிமன்ற கட்டளையிலேயே, விசேடமாக குறித்த பிரதேசமானது இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுனரே ஏற்றுக்கொண்டிருந்ததை நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.”

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு விவசாயிகளின் சார்பாக சாட்சியங்களை முன்வைக்க 12 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் மேலும் தெரிவித்திருந்தார்.

தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.

ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள்  அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் திணைக்களத்தால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர்.

மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.ilakku.org/குருந்தூர்மலை-விவசாயிகள/

வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!

3 months 1 week ago

வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!

502059299.jpeg

பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு 

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது - என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/வட்டுவாகல்_பாலம்_சீரமைப்பு_ஓகஸ்ட்_மாதம்_ஆரம்பமாகும்!

சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!

3 months 1 week ago

சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!

1791625679.jpeg

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

https://newuthayan.com/article/சிவகுமாரனின்_51ஆவது_ஆண்டு_நினைவேந்தல்_நிகழ்வுகள்_யாழ்._பல்கலையில்_முன்னெடுப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

3 months 1 week ago

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

494048520.jpeg

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. 

எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. 

திஸ்ஸ விகாரைக் காணிகள் தொடர்பான போலியான தகவல்களை வழங்கியே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் ஒவ்வொரு பொசன் தினத்தன்றும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

https://newuthayan.com/article/தையிட்டி_திஸ்ஸ_விகாரையில்_ஆயிரக்கணக்கில்_சிங்கள_மக்களை_களமிறக்குவதற்குத்_தீவிர_முயற்சி!

யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு!

3 months 1 week ago

யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு!

யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் மக்களிடம் மீளக் கையளிக்க முடியாத நகைகளை வடக்கின் அபிவிருத்திக்கான நிதியத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட தங்க நகைகளை ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இவ்வேளையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இராணுவத்தினர் வசமிருந்த கிலோ கணக்கான தங்கம் தற்போது நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை யுத்த காலத்தில் வடக்கில் மீட்கப்பட்டவையாகும். இவை தங்கமாகவே இருக்கின்றன. இவை தொடர்பில் இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எவ்வளவு தங்கம் உள்ளது என்பதனை ஆராய்ந்து அந்த அறிக்கையை பெற்ற பின்னர் அரசாங்கத்தால் மக்களுக்கு அந்த தங்கத்தை தங்களுடையது என்பதனை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கலாம்.

அத்துடன் யுத்த நிலைமையால் நிருபிக்க முடியாத பகுதியும் இருக்கலாம். மக்கள் பெற்றுக்கொள்ளாதவற்றை வடக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அவற்றில் அந்த தங்கத்தின் பகுதியை போட்டும், அரசாங்கத்தினால் நிதி வழங்கியும் வடக்கிற்கான விசேட அபிவிருத்தி நிதியத்தை அமைக்கவும், அதற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ரீதியிலும் வாழும் இலங்கையர்களுக்கும் யுத்தத்தால் நாட்டில் இருந்து சென்ற மக்களுக்கும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

https://www.samakalam.com/யுத்த-காலத்தில்-மீட்கப்-2/

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

3 months 1 week ago

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

adminJune 6, 2025

annarasa.jpg?fit=1170%2C659&ssl=1

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டைப் பண்ணைகள் மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றாமல் அதனை மீன்களும் உண்டு அதை நாமும்உண்டு பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் இந்த செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது.

பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன அவை அகற்றப்படவில்லை இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ்  அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/216410/

தையிட்டி பிரச்சினை குறித்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு

3 months 1 week ago

Published By: VISHNU

05 JUN, 2025 | 09:55 PM

image

யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என  தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் விகாரைக்கும் இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இந்த பிரச்சினைக்கு இனவாதம் என்ற உருவமளிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரதான பொறுப்பாக ' பல்லின சமூகத்துக்குள் மற்றும் அவர்களுக்கிடையில் சிறப்பான மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைப்பதாகும்' உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த பிரதேசத்துக்கு பலமுறை சென்று பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாவதாக யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரிடமிருந்து பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தலைமையில் யாழ் மாவட்ட சகவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தையிட்டி பகுதியில் காணி உரித்து கோரும் 13 குடும்பங்களின் உறுப்பினர்கள், தையிட்டி விகாரையின்  விகாராதிபதி உட்பட நிர்வாக சபை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.நாக விகாரையில் விசேட கருத்தாடல் அமர்வும் நடத்தப்பட்டது.

பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை ஒன்றிணைத்து, இந்த விடயத்தை ஒழுங்குப்படுத்தல் தொடர்பிலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/216729

கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை

3 months 1 week ago

Published By: VISHNU

05 JUN, 2025 | 08:59 PM

image

கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த  நடவடிக்கை எடுக்குமாறு  வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses)  பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது.

மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு  ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது  திறந்து வைக்கப்பட்டது.

இருந்தும் இதுவரை குறித்த  மகப்பேற்று மருத்துவமனை இன்று வரை செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை.  ஆளனி இன்மையே  இதற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவித்துள்ள  நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர்.

பணியாளர் எண்ணிக்கை அட்டவணை (cadre)  உடனடியாக திருத்தி, தேவையான ஊழியர்களை நியமித்தால், கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையின் புதிய மகப்பேறு வளாகத்தை  சிறப்பாக இயங்கச்செய்து, வடமாகாணத்தில் நிலவும் நீண்டகால சேவைப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம். இது தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.

எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் அனுமதியும் நியமனமும் மேற்கொண்டு, கிளிநொச்சி புதிய மகப்பேறு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216727

“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்

3 months 1 week ago

Published By: VISHNU

05 JUN, 2025 | 07:53 PM

image

உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05)   சிபெட்கோ நிறுவனம்  அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி  நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன.

இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்,  சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட

150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர்  இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka  செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,  Clean Sri Lanka  வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka  செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-06-05_at_18.19.08_13

WhatsApp_Image_2025-06-05_at_18.19.06_bf

WhatsApp_Image_2025-06-05_at_18.19.07_ba

WhatsApp_Image_2025-06-05_at_18.19.06_a1

WhatsApp_Image_2025-06-05_at_18.19.04_ac

WhatsApp_Image_2025-06-05_at_18.19.04_30

https://www.virakesari.lk/article/216723

”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன” - ராமநாதன் அர்ச்சுனா

3 months 1 week ago

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்," என்று எம்.பி. கூறினார்.

"பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்," என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். 

"அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆனால் அவர் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது," என்று எம்.பி. மேலும் கூறினார்.


Tamilmirror Online || ”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன”

ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார்

3 months 1 week ago

05 Jun, 2025 | 12:17 PM

image

ஈ.பி.டி.பி. உடனோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய பேரவை சுயாதீனமாகவும் இயங்கும். நாற்காலிகளை அலங்கரிப்பது நோக்கமல்ல. சித்தார்த்தன் டக்ளஸை அணுகியது எம்முடன் கூட்டில் உள்ள எவருக்கும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார் | Virakesari.lk

நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பம் நிலவும் நாடாக இலங்கை ; உலக வங்கி

3 months 1 week ago

05 Jun, 2025 | 01:26 PM

image

நாளொன்றுக்கு சராசரியாக ஆறு மணிநேரம் பொது வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் அடங்கும். 2050 ஆம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரமாக அதிகரிக்கலாம் என உலக வங்கியின் 'ஆபத்திலிருந்து மீள் எழுச்சி தன்மைக்கு தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவுதல்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 2030 ஆம் ஆண்டில் சுமார்  90 சதவீத மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும், ஐந்து பேரில் ஒருவருக்கும் அதிகமானோர் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொது வரவு செலவு திட்டம் அழுத்தத்தில் இருப்பதால், பெரும்பாலான மாற்றங்களுக்கான முயற்சிகளை தனியார் துறை முன்னெடுக்க முன் வர வேண்டும். அடிக்கடி மாற்றம் ஏற்படும் மற்றும் சேதத்தை விளைவிக்கும் வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்ப வீடுகள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான புதிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வகுத்துள்ளது.

இந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் தெற்காசியாவின் வளர்ந்து வரும் சந்தை மற்றும் பொருளாதாரங்களில் (EMDEs) மிகவும் பாதிக்கப்படக்கூடியது. 

கடந்த இரண்டு தசாப்தங்களில் வெள்ளம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு  நிகழ்வுகளின் அதிக அதிர்வெண் காணப்படுவதால் இது மிகவும் சாதாரணமான ஒன்றாகவுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல், தெற்காசியாவில் சராசரியாக ஆண்டுக்கு 67 மில்லியன் மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்றனர். 

கடந்த பத்தாண்டுகளில் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தீவிர வெப்பநிலையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் விவசாயம் பெரும் ஆபத்தை சந்திக்கும் என இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 

"காலநிலை மாற்றம் பிராந்தியத்தின் விவசாய முறைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில்  வெப்பநிலை அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை,  பருவம் மாறி மழை பெய்தல் மற்றும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளும் அடங்கும்" என குறிப்பிட்ப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பம் நிலவும் நாடாக இலங்கை ; உலக வங்கி | Virakesari.lk

Checked
Thu, 09/18/2025 - 10:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr