ஊர்ப்புதினம்

வரிச் சலுகைகள் 2022/23 நிதியாண்டில் LKR 978 பில்லியன் வருவாயை இழக்க வழிவகுக்கும்

2 months 2 weeks ago

Published By: VISHNU   02 APR, 2024 | 01:42 AM

image
 

2022/23 நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை), வரிச்சலுகைகள் மொத்தமாக 978 பில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்டியதாக அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) தெரிவித்துள்ளது.

05.png

இது 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 56% ஆகும்.

வெறிற்றே ரிசர்ச் இனால் பராமரிக்கப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார நுண்ணறிவு தளமான PublicFinance.lk ஆல் இது முன்னிலைப்படுத்தப்பட்டது.

இலங்கையின் நிதி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட “வரிச் செலவின அறிக்கை” என்ற ஆவணத்தை மூலமாகக் கொண்டு இவ் ஆய்வு வெளியிடப்பட்டள்ளது.

இலங்கை வழங்கிய பல்வேறு சிறப்பு இலக்கு வரிச் சலுகைகள் காரணமாக இழக்கப்பட்ட மொத்த வருவாய் குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடுகளை இவ் ஆவணம் தெரிவிக்கிறது. "சர்வதேச சிறந்த நடைமுறைகளிற்கேட்ப இலங்கையின் நிதி அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது" என ஆவணம் அதன் நோக்கத்தைக் கூறுகிறது.

IMF திட்டத்தில் அரையாண்டு அடிப்படையில் “முதலீட்டு வாரியம் மற்றும் SDP [மூலோபாய மேம்பாட்டு திட்டங்கள் சட்டம்] மூலம் வரி விலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியல் மற்றும் வரி விலக்கு பெருமானத்தின் மதிப்பீடுகளை" வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த வெளிப்படுத்தளைத் தொடங்குவதற்கான கடைசித் திகதி மார்ச் 2023 ஆகும். இது ஃபெப்ரவரி 2024 அன்று கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டதன்படி, “IMF ட்ராக்கர்” இனால் (https://manthri.lk/en/imf_tracker) “நிறைவேற்றப்படவில்லை” என்று பதிவு செய்யப்பட்டது.

https://www.virakesari.lk/article/180197

வடமாகாண சுகாதார சேவைக்கு பல சிரேஷ்ட பணிப்பாளர்கள் புதிய நியமனம்

2 months 2 weeks ago

Published By: VISHNU    02 APR, 2024 | 01:17 AM

image

அண்மையில் நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவைகள் பணிமனைகள், பெரிய வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கான சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

அதன் விளைவாக இன்று நாடு முழுவதும் உள்ள சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான வெற்றிடங்களுக்கான நியமனம் சுகாதார அமைச்சு செயலாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில், வடமாகாணத்தில் வைத்திய நிர்வாகிகளுக்கான வெற்றிடங்களுக்கு பின்வரும் புதிய வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

1.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்: வீ. பீ. எஸ். டீ. பத்திரண (Dr. V. P. S. D. Pathinrana)

2.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா: எஸ். சுபாஸ்கரன் (Dr. S. Subaskaran)

3.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு: எம். எஸ். உமாசங்கர் (Dr. M. S. Umashankar)

4.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மன்னார்: பீ. கே. விக்கிரமசிங்க (Dr. P. K. Wickramasinghe)

5.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி: டீ. வினோதன் (Dr. D. Venoden)

6.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா: ஜீ. சுகுணன் (Dr. G. Sukunan)

7.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு: கே. ஜீ. சீ. வை. எஸ். பீ. வீரக்கோன் (Dr. K. G. C. Y. S. B. Weerakoon)

8.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார்: எம். எச். எம். அஸாத் (Dr. M. H. M. Azaath)

9.பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி: பீ. எஸ். என். விமலரட்ண (Dr. P. S. N. Wimalaratne)

புதிய சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளின் நியமனம் சுகாதார சேவையின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருப்பதுடன் சுகாதார சேவையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பதாகவும் இருக்கும்.

அவர்களின் சிறப்பான கடமைகளுக்கு எல்லோரும் தமது உயரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/180195

வருடாந்தம் 4 பில்லியன் டொலர் வருமானத்தை சுங்கத்திணைக்களம் இழக்கிறது - சம்பிக்க

2 months 2 weeks ago
01 APR, 2024 | 04:19 PM
image

(எம்.ஆர்.எம், இராஜதுரை ஹஷான்)

பல்வேறு வகையான வரிகள் ஊடாக இந்த ஆண்டு மாத்திரம் 600 பில்லியன் வரி வருமானத்தை  திரட்டிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில்  1066 பில்லியன் ரூபா வரியை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலிக்கவில்லை.

அத்துடன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது தவறான  விலைபட்டியல் மூலம் ஆண்டு தோறும் 4 பில்லியன் டொலர் வருமானத்தை சுங்கத்திணைக்களம் இழக்கிறது. தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உரிய வழிமுறை முன்வைத்துள்ள போதும் அவை செயற்படுத்தப்படவில்லை என  வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது  வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையின் தேசிய வருமானத்தில் இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம்  முக்கிய பங்கு வகிக்கின்றன.

இருப்பினும் இந்நிறுவனங்கள்  முறையாக வரி அறவிடுவதில்லை.இதனால் தொடர்ச்சியாக அரச வருமானம் நீக்கப்பட்டுள்ளது.

தேசிய இறைவரித்  திணைக்களம்  2023.12.31 ஆம்  திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம்  1066 பில்லியன்  ரூபா வரியை அறவிடவில்லை.  அத்துடன் 1 முதல் 5 ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் 656 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சேர்பெறுமதி வரி (வற் வரி) 18 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. இதன் ஊடாக  600 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

ஆனால் இறைவரித் திணைக்களம்  பல கோடி ரூபா வரியை அறவிடவில்லை. இந்த  வரிகளை முறையாக அறவிடுவதற்கு சட்டம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். இருப்பினும் நிதியமைச்சு முன்னேற்றகரமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சுங்கத் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் 58.6 பில்லியன் ரூபா வரி வருமானம் நீக்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தொழில்நுட்ப மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கியுள்ளோம்.

பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது  தவறான  விலைப்பட்டியல் மூலம் ஆண்டுதோறும் 4 பில்லியன் டொலர் இழக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்படும் பொருட்களை சுங்கத்தில்  உள்ள ஸ்கேனர்கள் மூலம் பறிமுதல்  செய்வது செயலிழந்திருத்தல் மற்றும் தங்கம் போன்ற  பெறுமதியான பொருட்களை  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரும் போது செயற்படும் முறைமை தொடர்பில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இலங்கை மதுவரித் திணைக்களம் 700 கோடி ரூபா வரியை அறவிடவில்லை. மதுபான உற்பத்தியில் முன்னிலையில் உள்ள  இரு பிரதான நிறுவனங்கள்  வரி வருமான இழப்பில்  70 சதவீத பங்கு வகிக்கின்றன. மது உற்பத்தியாளர்கள்  வரி செலுத்த தவறுதல் மற்றும் மதுவரித் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தல் தொடர்பாக  தீவிர கவனம் செலுத்தப்பட்டது என்றார்.

https://www.virakesari.lk/article/180126

அதிக சிறுத்தைப் புலிகள் செறிந்து வாழும் இடமாக வில்பத்து தேசிய பூங்கா தெரிவு!

2 months 2 weeks ago
01 APR, 2024 | 01:12 PM
image
 

அதிக சிறுத்தைப் புலிகள்  செறிந்து வாழும் இடமாக  வில்பத்து தேசிய பூங்கா  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விலங்கியல் நிபுணர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது . 

2011 ஆம் ஆண்டு முதல் விலங்கியல் நிபுணர் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் குறித்த பூங்காவில் சுமார் 313 சிறுத்தைகள்  இருப்பதாகவும், 8 சிறுத்தை புலிக்குட்டிகள்  உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

131,690 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வில்பத்து நாட்டின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகக் கருதப்படுகிறது. 

வில்பத்து பூங்காவானது மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை எல்லையாகக் கொண்ட வில்பத்து, புத்தளம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பூங்காவாகும். 

அதிக சிறுத்தைப் புலிகள் செறிந்து வாழும் இடமாக வில்பத்து தேசிய பூங்கா தெரிவு! | Virakesari.lk

3 மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

2 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

01 APR, 2024 | 05:12 PM
image
 

இவ் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாட்டிற்கு 600,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி, மார்ச் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி  நாட்டிற்கு 608,475 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும்  200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது இலங்கைக்கு ஒரு  திருப்பு முனையாகவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிகையை அண்மித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA)தரவுகள் சுட்டிகாட்டியுள்ளது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் 208,253 பேரும், பெப்ரவரி மாதத்தில்  218,350 பேரும், மார்ச் மாதத்தில் 209,181 பேரும் வருகை தந்துள்ளானர்.

மார்ச் மாதத்தில் இந்தியாவிலிருந்து 28,218 பேரும்,  ரஷ்யாவிலிருந்து 25,112  பேரும், ஜேர்மனியில் இருந்து 16,745 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 16,649  பேரும், சீனாவிலிருந்து 11,220 பேரும் வருகை தந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, போலந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

3 மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை | Virakesari.lk

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்!

2 months 2 weeks ago

யாழ்ப்பாணம் - வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஞாயிற்றுக்கிழமை (31) வாள்களுடன்  சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்! | Virakesari.lk

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்

2 months 2 weeks ago

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. இருப்பினும் உண்மையை மற்றும் யதார்த்தம் பற்றி அவதானம் செலுத்த வேண்டும்.

 கூரகல விகாரை விவகாரத்தை தொடர்புப்படுத்தி ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள்  ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அந்த வழக்குக்கு அமையவே ஞானசார தேரருக்கு நான்காண்டு கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூரகல விகாரை 2000 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்த விகாரையை  அண்மித்த பகுதியில் இருந்த  பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை முஸ்லிம் அடிப்படைவாதிகள்   ஆசிட் திரவம் ஊற்றி அழித்து, அடையாளங்களை சிதைத்து கட்டிடங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு எதிராகவே ஞானசார தேரர் குரல் கொடுத்தார்.

பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் போது பௌத்தர்களின் மனம் வேதனையடையாதா? கூரகல விகாரையின் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கபபட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரரே  ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால் அதனை எவரும் கவனத்திற் கொள்ளவில்லை.விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தோற்றுவித்தது.

சுதேச முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாகியுள்ளன. பௌத்த அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம்,இஸ்லாமிய அடிப்படைவாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில்  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்து அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்படும் தேவை தற்போது காணப்படுகிறது என்பதை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - அனுப பஸ்குவல் வலியுறுத்தல் | Virakesari.lk

ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு

2 months 2 weeks ago
defence-750x375.jpg ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு.

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இந்நாட்டின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் உக்ரேன் இராணுவத்திற்கு சேவையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத பின்னணியில் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1376003

பாடசாலை மாணவர்களுக்கு ஜப்பானில் இருந்து சைக்கிள்கள்!

2 months 2 weeks ago

தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது.

சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஜப்பானிய ‘Childfund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Childfund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் இரண்டரை கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது இந்த சைக்கிள்களை வழங்குவதில் முக்கிய நிபந்தனையாக கருதப்பட்டது. இலங்கை ‘Childfund” வேண்டுகோளுக்கு இணங்க இந்த சைக்கிள்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/297775

வட மாகாணத்தில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

2 months 2 weeks ago
01 APR, 2024 | 12:39 PM
image

வட மாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. 

அதன்படி, 24 நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச்சிக்குளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

"அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" என்ற அரசாங்கத்தின் எண்ணக்கருவின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின்படி,  அந்த அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவு சமூக நீர் திணைக்களத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டன. இதன் மொத்த திட்ட மதிப்பு 211 மில்லியன் ரூபாயாகும். 

முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில், முதல் கட்டமாக 26 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 16,480 குடும்பங்கள் பயனடைவார்கள்.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நாளொன்றுக்கு சுமார் 2,000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டவை என்று மீள்குடியேற்ற பிரிவு தெரிவிக்கிறது.

நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச்  சுத்திகரிக்கும்போது நீரிலிருந்து அதிக   உப்புகளை நீக்குகிறது. நனோ சுத்திகரிப்பின் மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும்   ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் துர்நாற்றமும்  நீக்கப்படும்.

https://www.virakesari.lk/article/180123

அரசாங்கத்தால் புதிய ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு!

2 months 2 weeks ago

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இது தவிர, உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடு, இந்த வருடத்தில் பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் நிர்வாகச் செலவுகளில் இருந்து செய்யப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பொறிமுறையின் பிராந்திய மையங்களான பிரதேச செயலகங்களை வலுவூட்டும் நோக்கில் இந்த விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/297743

தேர்தல் வரப்போது!

தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.

2 months 2 weeks ago

spacer.png 

 GF7F7giXQAA4Cui.jpg

யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம்  09ஆம் திகதி ஹரிகரனின் 
இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை  வாசகர்களுக்கு  நினைவிருக்கும்.

சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன்  சென்ற போது   நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது.

பனைமரத்தில் ஏறிய இந்த  நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள   பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்."  என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள்.

இது சம்பந்தமான  விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும்,  முதல் கட்டமாக   நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும்  மூத்த  காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

Kaathilai puu. Com

ஜூலைக்குள் கடன் மறுசீரமைப்பின்றேல் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

2 months 2 weeks ago

Published By: VISHNU   31 MAR, 2024 | 11:18 PM

image

(இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு அரசமுறை கடன்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குக்குள் மறுசீரமைக்காவிடின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். பஷிலின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதா ? அல்லது நாட்டை ஸ்திரப்படுத்துவதா ?  என்பதை ஜனாதிபதியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் உண்மை வெளிவரவில்லை.திட்டமிடப்பட்ட அரசியல் நாடகமாகவே இந்த குண்டுத்தாக்குதலை கருத வேண்டும்.ஐந்து வருடகால சூழ்ச்சியின் ஊடாகவே கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.

 இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு மேல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஞானசார தேரரை பயன்படுத்தி சிங்கள முஸ்லிம்; இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் திட்டமிட்ட வகையில் இன முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன.அதனை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு சற்று ஸ்திரநிலையடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமைய வேண்டும். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

வெளிநாட்டு அரசமுறை கடன்கள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் மறுசீரமைக்க வேண்டும்.இல்லையேல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும்.அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என பஷில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

நாட்டில் அரசியல் ஸ்திரப்படுத்தலுக்காக பொதுத்தேர்தலை நடத்த கோருவதாக ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, பாராளுமன்றத்துக்கு சென்று விடலாம் என்று ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/180092

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமயவில் விரிசல்!

2 months 2 weeks ago
Jetavanaramaya.jpg வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேதவனராமயவில் விரிசல்!

அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஜேதவனராமயவில்  ஏற்பட்டுள்ள விரிசல்களை பார்வையிடுவதற்காக விசேட குழுவொன்று நாளை அனுராதபுரத்திற்கு செல்லவுள்ளது.

கலாசார அலுவல்கள் அமைச்சின் மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இதில் இணையவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி விரிசல்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் குழுவும் இதற்காக இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1375949

15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிளி. பாரதிபுரம் செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைப்பு - பணிகள் ஆரம்பம்!

2 months 2 weeks ago
31 MAR, 2024 | 03:48 PM
image

கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப் பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது கிளி. பாரதிபுரம் செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 15.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்ட பாரதிபுரம் செபஸ்ரியார் வீதி பாலப் புனரமைப்புற்கான பணிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

பாரதிபுரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள இப் பாலமானது சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக உடைந்த நிலையில் காணப்படுவதனால் போக்குவரத்து தடைப்பட்டு பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், அரச சேவைகளுக்கு செல்லும் அதிகாரிகள் என பலரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

IMG_0006.jpg

IMG_0005.jpg

https://www.virakesari.lk/article/180072

தந்தை செல்வாவின் 126வது பிறந்த தினம் இன்று அனுஷ்டிப்பு!

2 months 2 weeks ago
31 MAR, 2024 | 02:05 PM
image

தந்தை செல்வாவின் 126ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (31) காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா நினைவிடத்தில் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அவரது சதுக்கத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.   

இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், கட்சியின் உப செயலாளர் குலநாயகம் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.   

IMG-20240331-WA0081.jpg

IMG-20240331-WA0079.jpg

IMG-20240331-WA0077.jpg

IMG-20240331-WA0078.jpg

https://www.virakesari.lk/article/180063

யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!

2 months 2 weeks ago
31 MAR, 2024 | 01:28 PM
image
 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 

கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி தளத்தில் கார்த்திகைப்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/180061

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன

2 months 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய சிறிசேன - முன்னாள் ஜனாதிபதியின் புதிய சகாவே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமா என அரசாங்கம் விசாரணை

Published By: RAJEEBAN   31 MAR, 2024 | 02:05 PM

image

சண்டே டைம்ஸ் 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என  அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சண்டேடைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

easter_sunday_attack_main.jpg

கடந்த காலங்களில் வெளியான விடயங்களை தலைகீழாக மாற்றும் விதத்தில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றை மாற்றியமைக்கும் விதத்தில்  புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு சில நாட்கள் இருக்கையில் அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டார்.

கண்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டவேளை தனக்கு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விடயங்கள் தெரியவந்துள்ளதை அவர் கோடிட்டுக்காட்டியிருந்தார்.

கண்டியில் தனது நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தான் அறிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் யார் என்பதை அவ்வேளை அவர் தெரிவிக்கவில்லை. நான் நீதிமன்றத்தின் முன்னிலையிலேயே அதனை தெரிவிப்பேன் என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இந்த தகவலின் மிக முக்கிய தன்மை காரணமாக தனக்கு மேலதிக பாதுகாப்பையும் கோரவுள்ளதாக குறிப்பிட்டார்.

கொழும்பில் சிறிசேன ஊடகங்களிற்கு பேட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அவரின் இரண்டு உதவியாளர்கள் மேற்கொண்டிருந்தமை அவ்வேளையில் புலனாகியது.

சிறிசேனவின் இந்த தகவலிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம்.

எனினும் இந்த தகவல் வெளியானதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற அழுத்தங்களிற்குள்ளானார். குற்றச்செயல்கள் குறித்த விபரங்களை மறைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்யவேண்டும் என சில தரப்பினர் வாதிட்டனர்.

பொலிஸ்மா அதிபர் ஊடாக மைத்திரிபால சிறிசேனவை விசாரணை செய்யவேண்டும் என்ற உத்தரவை அமைச்சர் பிறப்பித்தார்.

மிக முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி சிஐடிக்கு அழைக்கப்பட்டார் அவரின் வாக்குமூலம்பதிவு செய்யப்பட்டது.

ஐந்து மணிநேரத்திற்கு மேல் விசாரணைகள் இடம்பெற்றதாக  பொலிஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளார் என சண்டே டைம்சிற்கு தெரியவந்துள்ளது.

அவருக்கு எப்படி தெரியும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இந்திய இராஜதந்திரியொருவர் தனக்கு தெரிவித்தார். என்ன காரணங்களிற்காக அந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதையும் அவர்  தெரிவித்தார் என சிஐடியினரிடம் தெரிவித்துள்ள சிறிசேன அந்த இராஜதந்திரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியா தனது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலிற்கான காரணம் என அந்த இராஜதந்திரி தெரிவித்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உதாரணத்திற்கு மத்தல விமானநிலையம் போன்ற திட்டங்கள்.

சிறிசேனவிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதா?

easter_sunday__attack22.jpg

அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனதான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரதன்மையை உணரவில்லை போல தோன்றுகின்றது.

எந்த இராஜதந்திரியும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்கு சென்று நாங்கள்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவிக்கப்போவதில்லை - சித்த சுவாதீனமற்றவர் மாத்திரமே அவ்வாறு செயற்படுவார்.

இந்தியாவின் ரோ அமைப்பிடமிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியான எச்சரிக்கையை முதலில் அறிந்தவர் சிறிசேன.

ஏன் அவர் தற்போது உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்.

சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள  வாகன இறக்குமதியாளருக்கும் இந்த குற்றச்சாட்டுகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா என அரசாங்கத்தின் சில மட்டத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்டவர் மோசமான நடவடிக்கைகள் காரணமாக அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நபர் தொடர்ந்தும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தினை சிஐடியினர் பதிவு செய்துகொண்டிருந்தவேளை இந்த நபர் மேற்குலக இராஜதந்திரியுடன் உணவகமொன்றில் காணப்பட்டார்.

சிறிசேன தனது வாக்குமூலத்தை பூர்த்தி செய்ய முன்னரே இந்த இராஜதந்திரி இந்தியாதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில்உள்ளதாக தனது தொடர்பில் உள்ளவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து அரசாங்கத்தின் உயர்வட்டாரங்கள் ஆராய்ந்துள்ளன.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதாலேயே  அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன.

 

சட்டமா அதிபரின் அறிவுரையின் கீழ் சிஐடியினர் நீதிமன்றத்தில் பி அறிக்கையை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நான்காம் திகதி நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானால் சிஐடியினர் முன்னிலையில் தெரிவித்த அனைத்து விடயங்களையும் அவர் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய நிலையேற்படும்.

இதனை விட மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இதற்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகும்.

உள்நோக்கம் உள்ளதா இல்லையா தெரியவில்லை. இந்தியா குறித்து குற்றம் சாட்டுவது இந்த விடயம் குறித்து இதுவரை தெரிவிக்கப்பட்ட அறியப்பட்ட அனைத்தையும் முற்றாக மாற்றியுள்ளது.

இலங்கை முஸலீம்களே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பது நன்கு அறியப்பட்ட விடயம்.

ஏன் தாக்குதலிற்கு இந்தியா ஒரு சமூகத்தை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும்.

மேலும் இந்த விடயத்தில் ஐஎஸ் அமைப்பு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதும் சிறிசேன தெரிவித்துள்ள விடயங்களை அர்த்தமற்றதாக்குகின்றது.

சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசாங்கத்தின் தலைமை மீது கடும் தாக்கத்தினை செலுத்தக்கூடும் 

மைத்திரிபால சிறிசேனவை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/180066

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை : சம்பந்தன் அறிவிப்பு !

2 months 2 weeks ago
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை : சம்பந்தன் அறிவிப்பு !
kugenMarch 31, 2024
 
Sampanthan-7201-720x480.gif


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.

அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பிலான உரையாடல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை நிலையிலும் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது.

அத்துடன், குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.

அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.

அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.

எம்மைப்பொறுத்தவரையில்ரூபவ் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள்.

அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும் என்றார்.

https://www.battinews.com/2024/03/blog-post_640.html

 

கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!

2 months 2 weeks ago
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
adminMarch 30, 2024
Pillayan-Karuna-1170x682.jpg

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அமைச்சர்களாக இருந்தும் மக்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு மாறாக தாங்கள் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இந்த வேலை திட்டங்களை கொண்டு வருகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகள் இன்று அமைக்கப்பட்டாலும் அதில் பத்து வீதத்திற்கு மேற்பட்ட தரகுகள் வாங்கப்படுகின்றது இவ்வாறு செயல்பட்டால் எமது கட்டுமானங்கள் எந்த அளவிற்கு இஸ்திரத்தன்மையற்ற நிலையில் இருக்கும் என்பதனை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுவரையில் மயிலத்தமடு பிரச்சனைக்கு எதிர்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர்.

இதே போன்று  வடமாகாணத்தை பொறுத்தவரையில் மத திணிப்புகளும் மதவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மீண்டும் இன குரோதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை, தேவையற்ற விதத்தில் சில மதகுருமார்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் வெடுக்குநாரி மற்றும் குறுந்தூர் மலை போன்ற பிரச்சனைகள் உருவாகி உள்ளன.

தமிழ் மக்களின்  ஆலயங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இன்று அதில் பலவந்தமாக புத்த கோவில்களை கட்டி மத திணிப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள் இது போன்ற பல நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் தமிழர்களின் அவிலாசைகளை தீர்ப்பதற்கு தமது கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடி இருக்கின்றது.

ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஸ இருந்த காலத்தில் நாடு ஒரு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் தான் அவர் மக்களால் துரத்தி அடிக்க பட்டார் அவரின் அவ்வாறான செயற்பாட்டால் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்ததன் பிற்பாடு இன்று பல சிரமத்தில் மத்தியில் இருந்த எமது நாட்டை கட்டி எழுப்பியிருக்கின்றார். அதனை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று டொலரின் பெறுமதி எந்த அளவிற்கு குறைந்திருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு இன்று நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

தமது கட்சியை பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதாகவும்,  தமது கட்சியின் செயற்பாடுகளை பரவலாக முன்னெடுத்து வருவதாகவும்,  இறுதிக் கட்டத்தில் தாங்கள் கூட்டு சேர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை இறுதி கட்டத்திலே அறிவிக்க உள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் சிவாஜிலிங்கம் போன்றவர்களும் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்கள் தமிழ் மக்களை மற்றும் தன்னை பொறுத்தவரையில் இலங்கை நாட்டிலே ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட நாடாக இருக்கின்ற காரணத்தினால் யாரோ ஒரு சிங்கள தரப்பினர்தான் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழர்கள் பிரதமராக அல்லது அமைச்சர்களாக வருவது அது ஒரு வேறுபட்ட விடயம் ஆனால் ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து மக்களுக்கும் அனைத்து கல்விச் சமூகங்களுக்கும் இடையிலான தெரிந்த விடயம் சிங்கள குடிமகன் தான் ஜனாதிபதியாக வருவார் ஆகவே அந்த வகையில்  அதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்வது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம்.

“தமிழர்கள் போட்டியிடுவதை வரவேற்கின்றோம் அது இலங்கை குடிமகன் யாராக இருந்தாலும் எங்கும் போட்டியிடலாம் அதனை வரவேற்கின்றோம்.”

இது ஒரு நல்ல விடயம் ஆனால் அதனை முன் வைப்பதற்கு முன்னர் அனைத்து கட்சிகளும் கூடி கலந்தாலோசித்து அதில் ஒருமித்த கருத்தினை எடுத்து அனைத்து தமிழ் மக்களும் அந்த ஒருவருக்கு வாக்களித்து எதிர்ப்பினை காட்டுவார்களாக இருந்தால் உலக மத்தியில் பாரிய வரவேற்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது இதனை மறப்பதற்கு இல்லை.

ஆனால் அந்த அளவிற்கு எந்த கட்சி ஒற்றுமையாக இருக்கும் என்பது வேடிக்கையான விடயம் ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவிலே இன்னமும் தீர்மானம் இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேசியம் கதைத்துக் கொண்டு தலைவர் தெரிவில் நீதிமன்றத்தை நாடி நிற்கின்றது என்றால் எவ்வளவு பிற்போக்குத்தனமாக அந்த கட்சி இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் இந்த நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றாகுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

“இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு இது தொடர்பாக தெரியும் என கூறுகின்றார் அதே நேரம் இந்த விடயம் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றது. கோட்டபாய ராஜபக்ஸ  மற்றும் பிள்ளையானும்  புத்தகம் வெளியிட்டுள்ளனர். இதனை ஒரு முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமமாக தான் பார்க்கின்றோம். ஏனென்றால் அசாத் மௌலானா  சிறந்த ஆதாரங்களை நிரூபித்து இருக்கின்றார். அவர் நீண்ட காலமாக அந்த கட்சியிலே ஒரு முக்கிய உறுப்பினராக செயலாளராக அல்லது பிரதம ஆலோசகராக செயல்பட்டவர் என்பது உண்மையான விடயம். ஏனென்றால் அவர் கூறிய விடயங்களை எவரும் மறுப்பதற்கு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்கின்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

ஏனென்றால் இன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. இதை ஏவியவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது என்பது தங்களது பிரச்சினைகளை மறைப்பதற்காக அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகதான் பார்க்கப்படுகின்றது.

உண்மையிலே இதற்கான தீர்வு என்பது ஆண்டவரால் வழங்கப்படும். ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தற்போது கடந்த கால ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் நான் அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன் என்று. அதனை நாங்கள் வேடிக்கையாக பார்க்க முடியாது ஏனென்றால் அவர் இலங்கையில் ஒரு பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி அவர் கூறுகின்ற போது இதற்கு பின்னால் பாரிய உண்மைகள் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நிருபிக்கப்பட்டு இதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.” என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/201410/

Checked
Mon, 06/17/2024 - 13:19
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr