"குழந்தைக்கான நல்லுணவு தேடல் என் வாழ்வை மாற்றியது" இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
இயற்கை விவசாயி அனுராதா
- எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
- பதவி,பிபிசி தமிழ் செய்தியாளர்
-
1 ஏப்ரல் 2023, 10:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்
குழந்தைக்கான நல்லுணவுத் தேடலே என்னை இயற்கை விவசாயி ஆக்கியது என்கிறார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான அனுராதா. அதற்காக கல்யாண நகைகளை விற்று நிலம் வாங்கிய போது பரிகாசம் செய்த உறவுகள், நண்பர்கள் பலரும், இன்று தன்னுடைய இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு வாடிக்கையாளர்களாகி அவரது வெற்றிக்கு சான்றாக நிற்கிறார்கள்.
பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு வந்த ஆண்டுகளில் உணவுப் பஞ்சத்தால் பசி, பட்டினியில் தவித்த இந்தியா பசுமைப் புரட்சியின் விளைவாக இன்று உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதுடன், ஏற்றுமதி செய்யும் நிலைக்கும் உயர்ந்திருக்கிறது. நாடு கண்ட பசுமைப் புரட்சியில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் முக்கிய இடம் உண்டு. ஆனால், அதிகப்படியான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடும் சில நேரங்களில் ஆபத்தாகிவிடுகிறது.
அதன் எதிரொலியாகவே, இயற்கை விவசாயம் என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே டிரெண்டாகி வருகிறது. அந்த டிரெண்டில் இணைந்து கொண்டவர்களில் விக்கிரவாண்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும் ஒருவர்.
பட்டதாரிப் பெண்ணான அவர், குடும்பத் தலைவியாக வீட்டு நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்த தாம், இயற்கை விவசாயியாக மாறியது ஏன்? அதற்காக எதிர்கொண்ட சவால்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் சாதித்தது என்ன? என்பது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். இனி அவரே தொடர்கிறார்.
என்னுடைய கணவர் நடராஜன் ஸ்டேஷனரி கடை வைத்திருக்கிறார். குடும்பத்தலைவியாக இருந்து வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நான், அவ்வப்போது கடைக்குச் செல்வேன். கணவர் இல்லாத நேரங்களில் கடையைப் பார்த்துக் கொள்வேன். இப்படியாகத்தான் என்னுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
என்னுடைய ஒரே மகனுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற தேடலே என் வாழ்க்கையை மாற்றியது. குழந்தையின் ஆரோக்கியம் கருதி இயற்கை விவசாயப் விளைபொருட்களைத் தேடி வாங்கி வீட்டில் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால், இயற்கை விவசாயப் விளைபொருட்கள் என்ற பெயரில் கிடைக்கும் பலவும் போலியானவை என்பது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. நான் என் குழந்தைக்காக வாங்கிப் பயன்படுத்திய பலவும் போலியானவை என்பதை அறிந்த போது வருந்தினேன்.

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
"நாமே ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது?" என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதனை வீட்டில் சொன்ன போது உறவுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது என்ன பைத்தியக்காரத்தனம்? என்று உறவுகளும், நண்பர்களும் பரிகாசம் செய்தார்கள். ஆனால், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். இயற்கை விவசாயம் செய்தே தீருவது என்று தீர்மானித்தேன்.
திருமணத்திற்காக என்னுடைய வீட்டில் எனக்கு போட்டிருந்த நகைகளை விற்று, இயற்கை விவசாயம் செய்ய 4 ஏக்கர் நிலம் வாங்கினேன். எனக்கு ஆதரவாக நின்ற என் தங்கை ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயத்திற்காக என்னிடம் அளித்தார்.
விவசாயத்திற்காக நான் நிலம் வாங்கியதை என் உறவினர்கள் பலரும் எதிர்த்தனர். அதிலும், நகைகளை விற்று விவசாய நிலம் வாங்கியதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "பணத்தை மண்ணில் போட முடிவு செய்தால் வீட்டுமனை வாங்கு? விவசாய நிலம் எதற்கு?" என்பது அவர்களின் அறிவுரை.
எதிர்ப்புகள், பரிகாசங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, 2013-ம் ஆண்டு எனக்குச் சொந்தமான 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் தொடங்கினேன். என்னுடைய முதல் இலக்கு என் குழந்தைக்கு, என் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
போதிய அனுபவம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் இறங்கிய நான் முதலில் சீரக சம்பா நெல்லை விளைவித்தேன். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 மூட்டைகள் வீதம் நெல் கிடைத்த போது, எனக்கு ஏக்கருக்கு 6 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் இருந்தது.
என் நிலத்தில் விளைந்த சீரக சம்பா நெல்லை நானே அரிசியாக்கி சந்தைப்படுத்த முயன்றேன். சென்னைக்கு நேரில் சென்று, சுயமாக வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அந்த நேரத்தில், இயற்கை விவசாயத்தில் விளைந்த சீரக சம்பா அரிசியை கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய்க்கு என்னால் விற்க முடிந்தது.
இயற்கை விவசாயத்தில் என்னுடைய முதல் அனுபவம் சற்று கடினமான ஒன்றாகவே இருந்தது. ஏக்கருக்கு 6 நெல் மூட்டைகள் மட்டுமே கிடைத்ததால் எனக்கு நஷ்டமே மிஞ்சியது. ஆனாலும், மனம் தளராமல் என்னுடைய முயற்சியைத் தொடர்ந்தேன். சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்தேன்.
பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டதில், ஆரோக்கியமான உணவுப்பொருளை என் குடும்பத்திற்கும், மக்களுக்குக் கொடுக்கிறேன் என்ற மன திருப்தி இருந்தாலும் பொருளாதார ரீதியில் அது பெரிய அளவில் பலன் தரவில்லை. இயற்கை விவசாயத்தில் சுமார் 4 ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு நான் அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன்.
இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த சான்றிதழ் பெறுவது அவசியம் என்பதை அறிந்து அதற்காக திண்டிவனத்தில் உள்ள வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்குச் சென்றேன். அங்கே திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ஷீபா, எனக்கு ஆதரவாக இருந்ததோடு நல்ல வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இயற்கை விவசாயத்தில் எனக்கிருந்த ஆர்வத்தையும், என்னுடையே நோக்கத்தையும் வெகுவாக பாராட்டிய அவர், இயற்கை விவசாயத்தில் சிறந்த முன்மாதிரியாக திகழும் நீங்கள் ஏன் மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்தின் பால் ஈர்க்கக் கூடாது என்று கூறி என்னுடன் 150 விவசாயிகள் குழுவாக இணைந்து விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் செயல்பட வழிவகை செய்தார்.

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
என்னுடைய வழிகாட்டுதல்களால் இயற்கை விவசாயத்தின்பால் கவரப்பட்டு அந்த குழுவில் இருந்த பலரும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முன்வந்தனர். ஆனால், அதிகம் பேர் கொண்ட அந்த குழுவை முழுமையாக மேற்பார்வை செய்ய முடியாததால் சிலர் இயற்கை விவசாயம் என்ற பெயரில் ஏமாற்றியதை அறிந்து ஏமாற்றம் அடைந்தேன். இதனால், அந்த முயற்சியைக் கைவிட்டேன்.
இயற்கை விவசாயத்தில் என்னுடைய தொடர்ச்சியாக செயல்பாடுகளால், சென்னையைச் சேர்ந்த 'நல்லகீரை' ஜெகன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. உரம், பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கையான முறையில் கீரை வளர்ப்பது குறித்து அவரிடம் கற்றுத் தேர்ந்தேன். இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார். இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள் பலவற்றில் முதல் ஆளாக சென்று பங்கேற்று வழிகாட்டுதல்களைப் பெற்று விடுவேன்.
தமிழ்நாட்டில் நம்மாழ்வாரைப் போல மகாராஷ்டிராவில் இயற்கை விவசாயத்தில் புகழ் பெற்ற சுபாஷ் பாலேக்கரிடம் நேரில் சென்று பயிற்சி பெற்ற அனுபவம் எனக்கு உண்டு. புனேவில் சுமார் 10 நாட்கள் தங்கி இயற்கை வேளாண் பயிற்சி பெற்று வந்தேன். ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற கருத்தை நாடு முழுவதும் விதைத்தவர்களில் ஒருவரான அவர் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக கைக்கொள்வது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
அதன் பின்னரே, காய்கறிகள், கீரைகள் மீது என் கவனத்தை திருப்பினேன். அவற்றை இயற்கை விவசாயத்தில் விளைவித்து சந்தைப்படுத்த தீர்மானித்தேன். இது நல்ல பலனையும் கொடுத்தது. ஏனென்றால், ஒரே ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யக் கூடிய நெல்லைக் காட்டிலும் அவ்வப்போது பறித்து சந்தைப்படுத்த வாய்ப்பளிக்கக் கூடிய காய்கறிகள், கீரைகளை இயற்கை விவசாயத்தில் விளைவிக்க விவசாயிகள் ஆர்வமுடன் முன் வந்தனர்.
வயலில் விளையும் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை விற்பதன் மூலம் வாரந்தோறும் பணம் கிடைக்கும் என்பதால் இயற்கை விவசாயத்தில் என்னுடன் பலரும் இணைந்து கொண்டனர். அவர்களை இணைத்துக் கொண்டு"ஞாயிறு இயற்கை உழவர் குழு"வை தொடங்கினேன்.
இந்த குழுவில் தற்போது 55 பேர் இருக்கிறோம். பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், கீரைகள் என அனைத்தையும் இயற்கை முறையில் விளைவிக்கிறோம். எங்கள் குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் விஷமில்லா உணவைக் கொடுக்கிறோம்.
எங்கள் குழுவில் இன்று ஒருவர் சத்துமாவு தயாரிக்கிறார், மற்றொருவர் சிறுதானியங்களில் இருந்து லட்டு செய்கிறார், இன்னொருவர் அரிசி ஆலை அமைத்திருக்கிறார். அந்த அரிசி ஆலையில் நாங்கள் அனைவருமே நெல்லை அரைத்துக் கொள்கிறோம். ஏனென்றால், மற்ற ஆலைகளில் உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட நெல்லும் அரைக்கப்படும் என்பதால், அதனுடன் கலக்காமல் இருக்க நாங்கள் அனைவரும் எங்கள் குழுவில் உள்ளவரின் ஆலையையே பயன்படுத்திக் கொள்கிறோம். இயற்கை விவசாயத்தில் விளைவித்த நெல்லை அரிசியாக்கிக் கொள்கிறோம். நாட்டு மாட்டுப் பசுவின் பாலில் நெய் தயாரிக்கிறோம்.
நாங்கள் விளைவிக்கும் எண்ணெய் வித்துகளை பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்க எங்கள் குழுவில் உள்ள ஒருவர் 'செக்கு' வைக்க முன்வந்திருக்கிறார். எங்கள் குழுவினர் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்த 'உழவி ஆர்கானிக்ஸ்' என்ற பெயரில் தனியே இணையதளமும் தொடங்கியுள்ளோம்.

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
சீரக சம்பா நெல்லை விதைத்து இயற்கை விவசாயத்தை தொடங்கிய நான் இன்று அதே 5 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் நெல், மற்ற இடங்களில் கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள் என என்னுடைய விவசாயப் பண்ணையை ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றியுள்ளேன். நிலத்தடி நீரைப் பராமரிக்க வெட்டியுள்ள சிறு குட்டையில் மீன் வளர்க்கிறேன். இதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. என்னுடைய நிலத்திற்குள் சுமார் 150 கோழிகள் மற்றும் மாடுகளையும் வளர்க்கிறேன்.
ஒருங்கிணைந்த பண்ணை முறை சிறந்த பலனைத் தருகிறது. இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்வது எப்படி என்று நாங்கள் இன்று பயிற்சி அளிக்கிறோம். எங்களிடம் ஆர்வத்துடன் வரும் விவசாயிகளிடம், ஒருங்கிணைந்த பண்ணை முறையில் இயற்கை விவசாயம் செய்யவே அறிவுறுத்துகிறோம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் கணவனும், மனைவியும் மட்டுமே உடல் உழைப்பைச் செலுத்தி இயற்கை விவசாயம் செய்தால் மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாயை எளிதில் ஈட்டிவிட முடியும் என்று எடுத்துச் சொல்கிறோம். விதை முதல் விற்பனை வரை அத்தனையையும் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.
ஒரு காலத்தில் திண்டிவனம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளரே முன்னின்று அமைத்துக் கொடுத்த விவசாயிகள் குழுவில் என்னுடன் இணைந்திருந்த பலரை என்னால் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற முடியவில்லை. ஆனால், இன்றோ இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள பலரும் என்னைத் தேடி வருகின்றனர். நாங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறோம்.
இயற்கை விவசாயத்தை செய்வது குறித்து மட்டுமின்றி, விளைவித்த வேளாண் பொருட்களை அவரவர் உள்ளூரிலேயே சந்தைப்படுத்தவும் வழிவகை செய்து கொடுக்கிறோம். இன்று தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாயிகள் நெட்வொர்க்கும், அதனை சந்தைப்படுத்துவதற்கான வலையமைப்பும் உருவாகி விட்டது.
தற்சார்பு வாழ்க்கை என்பதே எங்களின் இலக்கு என்பதால், மையப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்துதலை நாங்கள் ஆதரிக்கவில்லை. அப்படி செய்தால் அது கார்ப்பரேட் போன்றதாகி விடும். அதனைத் தவிர்க்கவே, ஆங்காங்கே பத்துப்பத்துப் பேராக இயற்கை விவசாயிகள் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்கிறோம். உழவர்கள் தாங்கள் இயற்கையான முறையில் விளைவிக்கும் வேளாண் பொருட்களை உள்ளூரிலும், சுற்றுப்புறங்களிலும் தாங்களே விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறோம்.

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
எங்கள் குழுவில் உற்பத்தி செய்யும் இயற்கை வேளாண் பொருட்களை சென்னை உள்பட தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்புகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் கூட எங்களுடைய ஆர்கானிக் பொருட்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன.
ஆனால், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மிகுதியான உற்பத்தி எங்களிடையே இல்லை. நாட்டு மாட்டுப் பசுவில் தயாராகும் நெய்யை அவர்கள் கேட்கும் அளவுக்கு எங்களால் இப்போதைக்கு சப்ளை செய்ய முடியாது.
இயற்கை வேளாண்மைக்காக தமிழ்நாடு அரசோ அல்லது மத்திய அரசு வகுத்திருக்கும் திட்டங்கள், சலுகைகள் நாடிச் செல்வதில்லை. ஏனெனில், அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்வது கடினமாகி விடுகிறது. சில நேரங்களில் 100-க்கும் அதிகமானோர் இணைந்து செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது. அவ்வாறு செய்ய முற்பட்டால் அத்தனை பேரும் உண்மையிலேயே இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது சிக்கலாகிவிடும்.
எங்கள் குழுவில் 55 பேர் இருப்பதே அதிகமாகத் தோன்றுகிறது. இதையே நாங்கள் இரண்டாக வகைப்படுத்தி இயற்கை வேளாண்மையை கண்காணிக்கிறோம். அப்படிச் செய்தால் மட்டுமே விதை முதல் இடுபொருட்கள் வரையிலான விவசாயிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிப்பதுடன், அவர்களின் விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மேற்பார்வை செய்யவும் முடிகிறது.

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN
உலகம் முழுவதும் பல கோடி பேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா பேரிடர் என்னுடைய வாழ்க்கையில் நல்லதையே செய்திருக்கிறது. சுமார் 3 ஆண்டு காலம் முழுமையாக என் பண்ணையிலேயே நான் கழித்தேன். எங்கே, எந்த இடத்தில் தவறு நடக்கிறது? எங்கே இடறுகிறது? என்பதை என்னால் உணர முடிந்தது. அத்துடன் குடும்பத்தினரும் உடனிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அவர்கள் இயற்கை விவசாயத்தை புரிந்து கொள்ளவும் இது வாய்ப்பாக அமைந்தது.
அதுமட்டுமின்றி, கொரோனா காலம் என்னுடைய சந்தைப்படுத்துதலை எளிமையாக்கியது. என்னுடைய பண்ணையில் விளைந்த பொருட்களை சந்தைப்படுத்த நான் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை. சமூக வலைதளத்தில் 'என்னிடம் 200 கிலோ இயற்கை வேளாண் விளைபொருள் இருக்கிறது' என்று பதிவிட்டால் உடனே பண்ணைக்கே வந்து வாங்கிச் சென்றுவிட்டார்கள்.
கொரோனா காலம் எனக்கு இயற்கை வேளாண்மை முறையை மெருகூட்டிக் கொள்ளவும், சந்தைப்படுத்துதலை எளிதாக்கிக் கொள்ளவும் உதவியது.
என்னுடைய குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற தேடலே என்னை இயற்கை விவசாயி ஆக்கியது. இயற்கை விவசாயத்தில் இறங்கிய போது என்னை பரிகாசம் செய்தவர்களே இன்று என்னுடைய வாடிக்கையாளர்களாகிவிட்டனர்.
என்னைச் சுற்றிலும் 50 பேரையாவது இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டேன். இதேபோல், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் 50 பேர் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் அது மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். 50 பேர் என்பது 500 பேர் ஆகலாம். இன்னும் அதிக எண்ணிக்கையைத் தொடலாம்.
இயற்கை விவசாயத்திற்கு மாறும் போது முதல் 3 ஆண்டுகள் சற்று கடினமான இருக்கும். அந்த காலத்தை மட்டும் கடந்துவிட்டால் அதன் பிறகு மண் நாம் சொல்வதைக் கேட்கும். இயற்கை விவசாயம் லாபகரமான ஒன்றாகிவிடும். ஒவ்வொரு ஊரிலும் இந்த நிலை உருவாகும் போது அனைவரின் தட்டிலும் ஆரோக்கியமான உணவு போய்ச் சேரும். அதுவே எங்களின் இலக்கு.