தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி

படக்குறிப்பு,கோப்புப் படம்
கட்டுரை தகவல்
சேவியர் செல்வகுமார்
பிபிசி தமிழ்
10 டிசம்பர் 2025
தமிழ்நாட்டில் சமீபத்தில் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டுயானைகள் இறந்ததன் எதிரொலியாக யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இரு மாதங்களில் இந்த குழு இதற்கான வரைவு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்க வேண்டுமென்று காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யானைகள் காட்டை விட்டு வெளியில் வருவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இத்தகைய குழுக்களை அமைப்பதால் எந்த பயனுமில்லை என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மனிதர் வாழும் பிரதேசத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை இடப்பெயர்வு செய்வதே தீர்வு என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் யானைகளை இடப்பெயர்வு செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறை அவசியம் என்கின்றனர் அரசு நிர்ணயித்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள்.
நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழு அமைப்பு

மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டத் தரவுகளின்படி, இந்தியாவிலுள்ள 29 ஆயிரம் ஆசிய யானைகளில் தமிழகத்தில் 10 சதவிகிதம், அதாவது 2,961 யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளின் வலசைப் பாதைகளில் ஏற்படும் பலவித தடங்கல்களால் யானை–மனித மோதல்கள் பதிவாகின்றன.
இதன் காரணமாக, அதில் தொடர்புடைய யானைகளை இடமாற்றம் செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு இடமாற்றம் செய்வதற்கு, இந்திய காட்டுயிர் மையம் (Wildlife Institue of India) வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) கடைபிடிப்பது அவசியம்.
சமீபத்தில் தமிழக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டு யானைகள் உயிரிழந்தன.
அதன் தொடர்ச்சியாகவே யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க 6 பேர் கொண்ட சிறப்புக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவன இயக்குநருமான உதயன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் வனத்துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஷ்ரா, மாவட்ட வன அலுவலர்(கூடலுார்) வெங்கடேஷ் பிரபு, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் கலைவாணன், முதுமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்தில் 2 காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் காரணமாகவே, தற்போதுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யானைகளைப் பிடிப்பதில் துவங்கி, அவற்றைக் கையாள்வது, இடமாற்றம் செய்து விடுவிப்பது, அந்த புதிய இடத்தில் கண்காணிப்பது பற்றிய நடைமுறைகள் சார்ந்து அறிவியல் அடிப்படையில் மதிப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறும் அந்த அறிக்கை, யானைகளை இடமாற்றம் செய்யும் நடைமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தெளிவான நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது.

படக்குறிப்பு,கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒரு காட்டுயானை உயிரிழந்தது.
காட்டு யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான விரிவான, செயல்படுத்தக்கூடிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) உருவாக்க வேண்டுமென்று கூறியுள்ள தமிழக அரசு, அந்த நெறிமுறை தேசிய மாதிரியாகக் கருதப்படுவதற்கு ஏற்ற தரநிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட இரு காட்டு யானைகள் இறந்ததைக் காரணம் காட்டியே, இந்த குழுவை அமைத்துள்ளதாக அரசே கூறியிருப்பது ஒரு வகையில் விவாதப்பொருளாகியுள்ளது. இவ்விரு யானைகளும் பிரச்னைக்குரிய யானைகளாக (problematic elephant) அடையாளம் காணப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்பு இடமாற்றம் செய்யப்பட்டவை.
நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்ட காட்டுயானை ஒரு மாதம் க்ரால் எனப்படும் பலமான மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, சாந்தப்படுத்தப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அந்த யானை, அடுத்த 45 நாட்களில் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்தது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்பகுதியில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி பிடிக்கப்பட்ட மற்றொரு காட்டுயானை (ரோலக்ஸ் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது), ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அந்த யானை கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தது.
2 யானைகள் உயிரிழப்புக்கு வன அதிகாரிகள் கூறும் காரணமென்ன?

படக்குறிப்பு,நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் ஒரு காட்டு யானை, கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்டது.
இரு யானைகளின் இறப்புக்கும், அவை இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். இயற்கையான விபத்து மற்றும் உடல்நலக்குறைவே இறப்புக்கு காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கூடலூர் பகுதியில் பிடிபட்ட யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) வெங்கடேஷ் பிரபு, ''ஒரு யானை பிடிக்கப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. 45 நாட்கள் கழித்து, கனமழை பெய்தபோது மலையில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரு பக்கத் தந்தம் உடைந்து ரத்தம் பெருமளவில் வெளியேறி இறந்துவிட்டது. அது ஒரு விபத்து.'' என்றார்.
கூடலுார் பகுதியில் 2024 டிசம்பர் மாதத்தில் பிடிக்கப்பட்டு, அதே அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை ஒன்று இப்போது வரை அங்கே நன்றாகவுள்ளது என்றார் வெங்கடேஷ் பிரபு. இவ்விரு யானைகளுக்கும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்ட காட்டு யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ், ''அந்த யானைக்கு 50 வயதாகிவிட்டநிலையில், இதயம், நுரையீரல் இரண்டிலும் பிரச்னை இருந்துள்ளது. முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இதய செயலிழப்பே உயிரிழப்புக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது. உடற்கூறு மாதிரிகள், சென்னை, கேரளா உள்ளிட்ட 5 ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை வந்த பின்பே முழு காரணத்தை அறியமுடியும்.'' என்றார்.
வழக்கமாக ஒரு காட்டு யானை 3.5 டன் முதல் 4 டன் வரை எடையிருக்கும். ஆனால் இந்த யானையின் எடை 6.5 டன் ஆக இருந்ததாக கூறிய களஇயக்குநர் வெங்கடேஷ், இது அதீதமான எடை என்பதாலும் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ்
யானைகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
ஆனால், இத்தகைய யானைகளை இடமாற்றம் செய்வதே தவறு என்று வைல்ட்லைஃப் ரேங்க்ளர்ஸ் (Wildlife Wranglers) அமைப்பின் நிறுவனர் கிறிஸ்டோபர் கூறுகிறார். அந்த யானைகள் மயக்க நிலையில் பிடிக்கப்பட்டு, அவற்றின் வாழ்விடங்களை விட்டு இடமாற்றம் செய்யப்பட்டு புதிய இடங்களில் விடப்படுவதால் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாவதும் அவற்றின் இறப்புக்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்வதில் வனத்துறை தவறு செய்கிறது. வளர்ந்த யானைகளால் புதிய வாழ்விடங்களின் இயற்கை அமைப்புடன் ஒன்றுவது எளிதானது அல்ல. அதில் ஏற்பட்ட சிக்கலால் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம்.'' என்றார்.
'இடமாற்றம் செய்யும் யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிப்பதாகக் கூறும் வனத்துறை, அந்த யானையை பிடித்த பகுதியிலேயே அடர்ந்த வனத்தில் விடுவித்து அதனை கண்காணிப்பதில் என்ன பிரச்னை என்று கிறிஸ்டோபர் கேள்வி எழுப்பினார்.
'இடமாற்றம் செய்வதே தீர்வு'
இந்த கருத்துடன் ஓசை சூழலியல் அமைப்பின் தலைவர் காளிதாசன் உடன்படவில்லை. பிரச்னைக்குரியவையாக கருதப்படும் யானைகளை இடமாற்றம் செய்வதே தீர்வு என்பது அவரது கருத்து.
தமிழ்நாட்டில் 1985 முதல் இதுவரை 22 ஆண் காட்டு யானைகள் மட்டுமே பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடியேற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து யானைகள் காட்டை விட்டு வெகு தூரம் வெளியே வந்ததால் பிடிக்கப்பட்டு மீண்டும் அதே காட்டில் விடப்பட்டவை. மற்ற யானைகள் வேறு காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்கிறார் அவர்.
''இவற்றில் பெரும்பாலான யானைகள் விடப்பட்ட சில நாட்களிலேயே காட்டை விட்டு வெளியே வந்து பயிர் சேதம் விளைவித்தல், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டன. சில யானைகள் இறந்து போயின. சில யானைகளைப் பற்றிய தகவல் இல்லை.'' என அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்யும் பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் 2 காட்டுயானைகளை பிடித்து 200 கி.மீ. தள்ளி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் விட்டனர். ஆனால் அந்த இரு யானைகளும் ஹாசன் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டன.'' என்றார்.
''பிரச்னைக்குரிய யானைகளை கும்கியாக மாற்ற வேண்டும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். யானைகளை இடமாற்றம் செய்யும்போது, வழக்கமான கூட்டத்தின் தொடர்பற்ற புதிய காட்டில் தனித்துவிடப்படும்போது அவை மன அழுத்தத்துக்கு உள்ளாவதும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளால் இறந்து போவதற்கும் சாத்தியம் அதிகமுள்ளது. அதனால் யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான நெறிமுறைகளை மறுஆய்வு செய்து புதிதாக உருவாக்குவது நல்ல முயற்சிதான்.'' என்றார் காளிதாசன்.
யானைகளை இடமாற்றம் செய்வதற்கு தற்போது கடைபிடித்து வரும் இந்திய காட்டுயிர் மையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில்லாமல் புதிதாக உருவாக்குவதன் அவசியம் என்ன என்ற கேள்வியையும் பலரும் முன் வைக்கின்றனர். ஆனால் தேசிய அளவில் மட்டுமின்றி, மாநிலத்துக்குள்ளேயே யானைகளால் ஏற்படும் பிரச்னை, பகுதிக்குப் பகுதி வெவ்வேறாக இருக்கும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார்.
''ஓசூரில் 30–60 யானைகளைக் கொண்ட யானைக்கூட்டம் அதிகமாக இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கேழ்வரகு (ராகி) உண்பதற்காக தனது கூட்டத்தை மூத்த பெண் யானை வழிநடத்தி வரும். அவற்றைக் கையாள்வது ஒரு சவாலாக இருக்கும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலேயே பவானி சாகரில் ஒரு விதமாகவும், கடம்பூரில் வேறு விதமாகவும் பிரச்னை இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஒற்றை ஆண் யானைகளால்தான் பிரச்னை ஏற்படும்.'' என்றார் அவர்.
ஒற்றை யானைகளை இடமாற்றம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கும் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன், ''ஆப்ரிக்காவில் மிகவும் அறிவியல்பூர்வமாக யானைகளை இடமாற்றம் செய்கிறார்கள். முதலில் அதன் குணாதிசயத்தைக் கவனிப்பார்கள். பின் மன அழுத்தத்தை சோதிப்பார்கள். இடமாற்றத்துக்கு முன்னும் பின்னும் அந்த யானைகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.'' என்கிறார். யானை ஆராய்ச்சியாளரும், உதவி பேராசிரியருமான பாஸ்கரன், தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.
''அத்தகைய அறிவியல்பூர்வமான நெறிமுறைகளை உருவாக்கும் நோக்கத்தில்தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். காட்டுயானைகளை இடமாற்றம் செய்கையில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.'' என்கிறார் பாஸ்கரன்.
"ஒரு யானை கூட இறக்கக் கூடாது என்பதே நோக்கம்"

படக்குறிப்பு,வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ
தற்போது யானைகளை இடமாற்றம் செய்வதற்கு கடைபிடிக்கப்படும் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வழிகாட்டுதல் நெறிமுறைகள், தமிழகத்தின் காட்டுயிர் பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிறார் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ. அந்த காரணத்தால்தான் தனியாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை (Sop) உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, ''எக்காரணத்திற்காகவும் இடமாற்றத்தின்போது அல்லது அதற்குப் பின் ஒரு யானை கூட இறக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் 8–9 காட்டு யானைகளை இடமாற்றம் செய்த நிலையில், இந்த 2 யானைகள் மட்டும் இடமாற்றத்திற்குப் பின் இறந்துள்ளன என்பதால், அதில் ஏதாவது தவறு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதும், அப்படியிருந்தால் அது எதிர்காலத்தில் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுப்பதும் நம் பொறுப்பு என்பதால்தான் தகுந்த நிபுணர்களால் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவனம், இத்தகைய விஷயங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் நிறுவனம் என்பதால்தான் அதன் இயக்குநர் உதயனை இதற்கு தலைவராக நியமித்துள்ளோம்.'' என்றார் சுப்ரியா சாஹூ.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c075mge92gko