
படக்குறிப்பு, எலத்தூர் குளம்
கட்டுரை தகவல்
பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் 2002இன் படி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள எலத்துார் குளத்தை மூன்றாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது.
அதற்கு அடுத்த மாதத்திலேயே அதற்கு மிக அருகிலேயே உள்ள நாகமலை குன்றை நான்காவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்தது.
எலத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 கி.மீ. துார இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு இடங்களையும் பாரம்பரிய பல்லுயிர் தலங்களாக அறிவித்திருப்பது, அவற்றின் மீது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அப்படி அந்த இடங்களில் என்ன இருக்கிறது? இவற்றின் சூழலியல் சிறப்புகள் என்ன? விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வுக்குச் சென்றது.
ஊர்ப் பறவைகளை கவர்வதில் முக்கிய இடம் பிடித்த எலத்துார் குளம்
எலத்துார் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. சுற்று வட்டாரத்திலுள்ள 21 கிராமங்கள்தான் இதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன. குளத்தில் இருந்து வெளியேறும் நீர், ஓடை வழியாகச் சென்று அரசூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது.
இந்தக் குளத்திற்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன.
இதற்குள் குடைவேலம், நாட்டுக் கருவேலம், வேம்பு, அரப்பு, மூலிகைச் செடிகள் எனப் பலவிதமான மரங்களும், தாவரங்களும் இருக்கின்றன. குளத்திலுள்ள தண்ணீர் தெளிந்த நீராகத் தெரிகிறது. 134 விதமான மண்ணின் மரங்கள் கரைப்பகுதிகளில் உள்ளன.
மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ள இந்தக் குளத்தில்தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இருந்தன. வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன.

பட மூலாதாரம், ebird.org
அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்புக்கான இ-பேர்ட் இணையதள தரவின் அடிப்படையில், 2024–2025ஆம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் (Great Backyard Bird Count) எலத்துார் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 23வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோன்று 2024 ஜனவரி 28 அன்று, தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக பறவைகளைக் கொண்ட நீர்நிலையாகவும் எலத்துார் பதிவு பெற்றுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை பெருவெள்ளத்தின்போது தொடங்கப்பட்ட 'சூழல் அறிவோம்' அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் 5 ஆண்டுகளாக எலத்துார் குளம் மற்றும் நாகமலை குன்று பற்றி ஆவணப்படுத்தியுள்ளார்.
''கோவிட் காலத்தில் இந்தக் குளத்திற்கு வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருவதைப் பார்த்தோம். பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், இங்குள்ள பறவைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த பெரிதும் உதவினார். அதன் பின்பே இந்தக் குளத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தொடர்ந்து அங்கு வரும் பறவைகளை 5 ஆண்டுகளாகப் பதிவு செய்தோம்'' என்றார் தீபக் வெங்கடாசலம்.

படக்குறிப்பு, சூழல் அறிவோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம்
இந்தக் குழுவினர் இங்கு வரும் பறவைகளை ஆவணப்படுத்தி இ–பேர்ட் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் 2 ஆண்டுகளாக ஊர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் எலத்துார் குளம் முதலிடம் பெற்றுள்ளது.
குளத்தை நவம்பர் முதல் வாரத்தில் பிபிசி நேரில் பார்வையிட்டது. அப்போது பெருமளவில் குளம் நிரம்பியிருந்தது. குளத்திற்கு நம்பியூர் பகுதியிலிருந்து சிறிய ஓடையில் தண்ணீர் வருகிறது. சமீப காலமாக அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலமாகவும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் வருகிறது.
குளத்தின் நடுவிலுள்ள மரங்களிலும், நீர்ப் பகுதிகளிலும், தரையிலுள்ள புதர்க் காடுகளிலும் பல ஆயிரம் பறவைகள் தங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது.
நீர்க்காகம், கொக்கு, வாத்துகள் என பலவகை பறவைகள் பகல் நேரத்திலேயே அங்கிருந்தன. மாலையில் இருள் சூழும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக நுாற்றுக்கணக்கான பறவைகள் அணி அணியாக வந்து குளத்தில் தங்குவதற்கு (Roosting) இறங்கியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

படக்குறிப்பு, எலத்தூர் குளம்
204 பறவையினங்கள்
'சூழல் அறிவோம்' ஆவணப்படுத்தியுள்ள தரவுகளின்படி, எலத்துார் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 77 வலசைப் பறவைகள் என்றும், அவற்றில் 47 தொலைதுார வலசைப் பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர்ப் பறவைகள் உள்ளன. 64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் (அழியும் அபாயத்தில்) உள்ள 9 பறவைகள் இங்கு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் (State of Indian Birds) உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது.
குளத்திற்கு அருகிலுள்ள செங்காளிபாளையத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவிகா, ''ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில்தான் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த குளத்திற்கு ஏகமாகப் பறவைகள் வரும். அதிலும் அந்தி நேரத்தில் பார்த்தால் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வரும். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்திலும் தண்ணீர் வருகிறது. குளத்தில் அதிக தண்ணீர் தொடர்ந்து இருப்பதால் மீன்களும் அதிகமாக இருக்கின்றன'' என்றார்.

படக்குறிப்பு,தேவிகா, செங்காளிபாளையம்
குளம், குன்று ஆகியவற்றின் அமைப்பு மற்றும் முக்கியத்துவத்தை சூழல் அறிவோம் குழுவினர், நம்முடன் நடை பயணம் மற்றும் மலையேற்றம் செய்து நேரில் விளக்கினர்.
குளத்திற்குள் கீச்சான், கரிச்சான்குருவி, குயில், புறா, சில்லை, அன்றில், தேன்சிட்டு, கொண்டலாத்தி, கதிர்குருவி உள்பட ஏராளமான உள்ளூர்ப் பறவைகள் இருப்பதை சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி அடையாளம் காண்பித்தார்.
அவை இனப்பெருக்கம் செய்வதற்காக அங்குள்ள மரம், புதர், தரை எனப் பல இடங்களில் கட்டியுள்ள விதவிதமான கூடுகளையும் காண்பித்து, அந்தப் பறவைகளின் இனப்பெருக்க காலத்தையும் விவரித்தார். ரசாயனப் பொறியாளரான கேசவமூர்த்தி, 'இயற்கை நடை' என்ற சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''எலத்துார் குளத்தைப் பாதுகாப்பதில் இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பு பிரதானமாகிவிட்டது. அரசின் அறிவிப்புக்குப் பின், சூழலியல் ஆர்வலர்கள், பறவை ஆய்வாளர்கள், மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கேயும் நாகமலை குன்றிலும் நாங்கள் இயற்கை நடைக்கு அழைத்துச் சென்று இங்குள்ள உயிர்ச் சூழல், பறவைகளின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்கிறோம்'' என்றார்.

படக்குறிப்பு, இயற்கை நடை ஒருங்கிணைப்பாளர் கேசவமுர்த்தி
தொல்லியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நாகமலை குன்று
இந்த குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் நாகமலை குன்று உள்ளது. நாகமலை குன்றின் அடிவாரப் பகுதிகளையும், குன்றின் உச்சியிலுள்ள பாறைப் பகுதிகளையும் பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டது.
நாகமலை குன்றின் உச்சியிலும், மலையடிவாரத்திலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 700க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் தனிப்பாறையில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் கொண்ட தனிக்கோவில் உள்ளது.
நாகமலை குன்று பகுதியில் புலிக்குத்தி நடுகல், பாறைத்தட்டுகள் போன்ற வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் க.ராஜன் தனது 'கொங்கு களஞ்சியம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார். குன்றில் 5 இடங்களில் உள்ள பாறை ஓய்விடங்கள் (Caves) பண்டைக்கால வேட்டைச் சமூகத்திற்கான வாழ்விடங்களாக இருந்திருக்கலாம் என்கிறது அவரது நுால்.
நாகமலை குன்றின் மலையடிவாரப் பகுதியில் இருந்த மரங்களில் பகல் நேரத்திலேயே ஏராளமான பறவைகள் இருந்தன. அந்தக் குன்றின் உச்சியில் ராசாளிக் கழுகுகள் இணையாக வசிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறினர். அவற்றில் ஒரு ராசாளிக் கழுகு வெளியில் வலம் வந்ததையும் நேரில் பார்க்க முடிந்தது.

படக்குறிப்பு, நாகமலை குன்று, முருகன் கோவில்
நாகமலை குன்று உச்சியைச் சுற்றிலும் உள்ள பாறைப் பகுதிகளில் 3 இடங்களில் நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் கந்தன் தேரை இருப்பதை நேரில் காண்பித்த சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி, எலத்துார் குளத்திற்கும், நாகமலை குன்றுக்கும் ஓர் உணவுச் சங்கிலி இருப்பதையும் அவர் விவரித்தார்.
அரிய வகைப் பறவைகள் மட்டுமின்றி, அரிதான பல தாவரங்கள் இங்கு இருப்பதையும் தாவரவியல் வல்லுநர்களின் உதவியுடன் சூழல் அறிவோம் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.
எலத்துார் பேரூராட்சியின் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழு (Biodiversity Management Committee), குளம் மற்றும் குன்று பகுதிகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
பறவைகளை நாட்டுத் துப்பாக்கி வைத்து வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், வலை விரித்து மீன்களைப் பெருமளவில் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், பேரூராட்சி குப்பைகளைக் குளத்தில் கொட்டுதல் போன்றவை சூழல் அறிவோம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக் குழுவின் முயற்சிகளால் பெருமளவில் தடுக்கப்பட்டு இருப்பதாக பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

படக்குறிப்பு, நாகமலை குன்று
உள்ளூர் மக்களின் கோரிக்கைகளும், வனத்துறையின் முன்மொழிவும்
குளம் மற்றும் குன்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சூழல் அறிவோம் குழுவினர், சுற்றுவட்டாரத்திலுள்ள 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை இங்கே அழைத்து வந்து 'இயற்கை நடை' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இதைச் செய்து வருகின்றனர்.
''பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் (Biological Diversity Act, 2002) மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதால்தான், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தலம் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். இதில் இந்த இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மக்கள்தான் முடிவு செய்ய முடியும். இவை தவிர்த்து, அரசிடம் அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு என சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றார் தீபக்.
சூழல் அறிவோம், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக்குழு மற்றும் உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் முன் வைக்கும் சில கோரிக்கைகள்:
குளம் மற்றும் குன்றின் பகுதிகளில் பறவை வேட்டையை முற்றிலும் தடுக்க, 2 இடங்களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தல எல்லையை வரையறுத்து, நிறைய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
தாவரங்கள், உயிர்களின் வாழ்விடம் பாதிக்கும் வகையில் நில அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.
குளத்தில் நம்பியூர் கழிவுநீர் கலக்காமல் சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் வேறு வழியில் வெளியே கொண்டு செல்ல வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராஜ்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இத்தகைய தலங்களை பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புக் குழுதான் பராமரிக்க வேண்டும். ஆனால் பறவைகள் வாழ்விடம் என்ற வகையில் வனத்துறையும் அதைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் ஆலோசனைப்படி சில முன்மொழிவுகளைத் தயார் செய்து வருகிறோம்'' என்றார்.
"வனத்துறைக்கு வெளியே உள்ள உயிர்ச்சூழல் முக்கியத்துவம் உள்ள இடங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் ஒருங்கிணைந்த உயிரியல் வாழ்விடப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி கோரி முன்மொழிவு அனுப்பியிருந்தோம். அந்த நிதி கிடைக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க அனுமதி கிடைக்கும் வரை, தற்போது வனத்துறையினர் இவ்விரு இடங்களையும் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
''நாகமலை குன்றை அப்படியே பாதுகாத்தால் போதுமானது. எலத்துார் கரையில் சூழல் நடை பயிலும் வகையில் ஒரு சிறிய நடைபாதை அமைத்து, சுற்றிலும் அங்குள்ள பறவைகள், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் பலகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கரைப் பகுதிகளில் ஆலமரங்களை நட்டுப் பராமரிக்கும் திட்டமும் உள்ளது. சூழல் சுற்றுலாவை உருவாக்கினாலும் அதுவும் அங்குள்ள மக்களின் பங்களிப்போடுதான் செயல்படுத்தப்படும்.' என்றார் கள இயக்குநர் ராஜ்குமார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/ckg16k3xxlro