எங்கள் மண்

“தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்புக்கு 43-வது அகவை!

4 months 1 week ago
“தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்புக்கு 43-வது அகவை!
AdminMay 5, 2019

ltte-flag-1தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு இன்று  43-வது அகவையில் கால் பதிக்கிறது.

“தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற இயக்கத்தை தனது சிறந்த நெறிப்படுத்தலினாலும், அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் .

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீதும், தமிழர் வாழ்விடங்கள் மீதும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு அடித்தளம் இட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும் தமிழரை புறக்கணிக்கும் நடவடிக்கைகளையும் புரிந்து வந்தது. இந்தியத் தமிழர்களை நாடு கடத்தியது. இச்செயலால் இலங்கையில் இனச் சதவீதத்தில் தமிழர்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து  பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. மகாவலி, கல்லோயா போன்றத் குடியேற்றத் திட்டங்களின் மூலம் வட கிழக்கிந் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களைவர்களைக் குடியேற்றியதன் மூலம் அப்பகுதிகளில் தமிழர் சதவீதம் குறைக்கப்பட்டது. சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்கும் சிங்கள மட்டும் சட்டம், மற்றும் 1956 ஆம் 1958 ஆம் ஆண்டு இனக் கலவரங்கள் மேலும் 1970 இல் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் திட்டம் மூலம் இலங்கை பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் இலங்கை அரசின் மீது வெறுப்பை கொண்டிருந்தனர். காந்திய அகிம்சை கோட்பாடுகளை கைக்கொண்டு வந்த தமிழ் கட்சிகளின் அகிம்சைப் போராட்டங்களும் பலனற்றுப் போகவே, 1957 இன் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்படுதல் போன்றச் செயற்பாடுகளால் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளையும் நம்ப மறுத்தனர்.

இதன் விளைவாகத் தமிழர் தரப்பில் புரட்சிகர அரசியல் அமைப்பு ஒன்றின் தேவையையும், சிங்கள இனவாதத்திற்கு எதிராக போராடவேண்டிய தேவையும்,  தமிழர் தரப்பால் உணரப்பட்டது. இதன் விளைவே தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆங்காங்கு அரசுக்கு எதிராக போராடும் நோக்கில் சிதறுண்டு இருந்த இளைஞர்களை ஒன்றுச் சேர்த்து 1972 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது 17வது வயதில் “புதிய புலிகள்” எனும் அமைப்பை உருவாக்கினார்.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற இப் “புதிய புலிகள்” இயக்கமே 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் சுதந்திர தமிழீழமே இலக்காகக் கொண்டு அர்ப்பணிப்பும், தியாகமும் நிறைந்த ஒரு பெரும் விடுதலை அமைப்பாக உருப்பெற்றது.

இவ் விடுதலை அமைப்பே அனைவரும் வியக்கும் சாதனைகளைப் படைத்து மரவுவழிப் படையணி, கடற்படை, விமானப்படை எனும் முப்படைகளையும் கொண்ட ஒரு பெரும் விடுதலை அமைப்பாகவும் உலகிலே இதுவே முப்படை அமைத்த பெருமைக்குரிய அமைப்பாகவும் திகழ்கின்றது.

 

http://www.errimalai.com/?p=4438

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது.!

4 months 1 week ago

“நாகவிகரையில்
பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று..
இனி என்ன?
“காமினி ரீ றூம்”
கதவுகள் திறக்கும்!
சிற்றி பேக்கரியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில்
அறிமுகமாகும்!
புத்தன் கோவிலுக்கு
அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்!
சிங்கள மகாவித்தியாலயம்
திரும்ப எழுமா?
எழலாம்.
வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின்
வெள்ளரசிற் கட்டலாம்,முனியப்பர் கோவில்
முன்றலிலும் கட்டலாம்,
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில்
மதிலிலும் கட்டலாம்!
எவர் போய் ஏனென்று கேட்பீர்?
முற்ற வெளியில்
“தினகரன் விழாவும்”
காசிப்பிள்ளை அரங்கில்
களியாட்ட விழாவும் நடைபெறலாம்!
நாகவிகாரையிலிருந்து
நயினாதீவுக்கு
பாதயத்திரை போகும்!
பிரித் ஓதும் சத்தம்
செம்மணி தாண்டிவந்து
காதில் விழும்!
ஆரியகுளத்து
தாமரைப் பூவிற்கு
அடித்தது யோகம்!
பீக்குளாத்து பூக்களும்
பூசைக்கு போகும்!
நல்லூர் மணி

துருப்பிடித்துப்போக
நாகவிகாரை மணியசையும்!
ஒரு மெழுகுவர்த்திக்காக
புனித யாகப்பர் காத்துக்கிடக்க
ஆரியகுளத்தில்
ஆயிரம் விளக்குகள் சுடரும்!
எம்மினத்தின்
இளைய தலைமுறையே,
கண் திறக்காது கிடகின்றாய்.
பகைவன்
உன் வேரையும்
விழுதையும் வெட்டி
மொட்டை மரமாக்கி விட்டான்!

-தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை

https://www.thaarakam.com/2019/05/02/கவிஞர்-புதுவை-இரத்தினதுர/

இயற்கையையும், மனிதத்தையும் போற்றும் பாடல்!

4 months 2 weeks ago
பாடல் கேட்டபின் பாடலுக்கு நீங்களும் அடிமை

அருமையான உள்ளதை உருக்கும் மனிதம் குறித்த பாடல்.

மலையாள பாடல் ஒன்றினை தமிழாக்கம் செய்து பாடியுள்ளார் சாகுல் ஹமீது. .

அந்த நாடு இறந்து விட்டதோ, அது ஒரு பெருங்கனவோ என்னும் போது, ஊர் நினைவு வந்து வாட்டுகினறது.   

அன்றும் பல மதம் இருந்ததே, அதையும் தாண்டி அன்பிருந்ததே.

உன்னைப் படைத்தோன், என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டையில்லையே.

 

ஒரிஜினல் மலையாள பாடல்.

 

இலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்

5 months 1 week ago

pattarivua-Recovered.jpg

 
இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது.
 
 
அது போலவே இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற வரலாறு பற்றிய குறிப்புகள் போதிய அளவு பதிவு செய்யப்பட்டதில்லை என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. ஒரு வகையில் சிங்களத்தில் கூட அது பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழில் முதலாவது அச்சான நூல் எது என்கிற கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதில்லை.
 
TH21_FIRST_BOOK_IN_TAMIL_.jpg
“தம்பிரான் வணக்கம்” தான் முதலில் அச்சிடப்பட்ட தமிழ் நூல் என்பதை நாமறிவோம். ஆனால் அது தென்னிந்தியாவில் வெளியானது. இந்திய மொழிகளியே முதன்முதலில் அச்சு வடிவம் பெற்ற மொழி தமிழ் மொழி தான் (20.10.1578). அந்த நூலுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியிருந்தவர் ஜோன் கொன்கல்வஸ் (John Goncalvez). 

1578 இல் அது தென்னிந்தியாவில் கொல்லத்தில் அந்த நூல் வெளியான போது அன்றைய உலகின் மிகப்பெரிய செல்வந்த நாடுகள் பலவற்றில் கூட தத்தமது மொழியில் அச்சில் நூல்கள் வெளிவராத காலம். இதன் மூலம் இந்திய - இலங்கை மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சிடப்பட்ட மொழியாக தமிழ்மொழி அமைந்தது.
 
Lingua_Malabar.jpg
ஆனால் 1554இலேயே தமிழ் நூல் வெளிவந்தது விட்டது என்கிற பதிவையும் பல இடங்களில் காண முடியும். “கார்த்தீயா ஏ லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues - தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சிற்றேடு") என்கிற தலைப்பில் வெளியான அந்த நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. அதாவது இன்றைய அர்த்தத்தில் Transliteration வடிவத்தில் அது வெளியாகியிருந்தது. நேரடி தமிழ் எழுத்துக்களில் வெளியாகாதாதால் அதனை முதல் நூல் என்று கணக்கிற்கொள்வதில்லை. எழுத்து உருவாக்கப்பட்டு (movable type) அச்சாக்கம் பெற்ற முதன்மை மொழிகளில் தமிழும் அடங்கும்.
 
 
first%2Bbooks.JPG
அச்சு இயந்திரம் வந்து சேர்ந்தது
இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலனித்துவ நாடுகள் மாறி மாறி தலா ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்துவிட்டுப் போனார்கள். போர்த்துக்கேயரை விரட்டிவிட்டு ஒல்லாந்தர் கரையோரங்களைக் கைப்பற்றி ஆளத் தொடங்கியபோது இலங்கையை ஆள்வதற்கு சுதேசிய மொழியின் அவசியத்தை அதிகம் உணர்ந்துகொண்டார்கள். புதிய விதிகளையும், சட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல படாதுபாடுபட்டனர். குறிப்பாக அவர்களின் வரி தொடர்பான அறிவித்தல்களை உள்ளூர் சிங்களவர்களின் உதவியுடன் விளம்பர அட்டைகளை சிங்களத்திளும், தமிழ் பிரதேசங்களில் தமிழிலும் எழுதி மக்கள் கூடும் இடங்களில் ஒட்டினார்கள். ஒட்டிய அறிவித்தல்களை பொதுமக்கள் கூடிய இடத்தில்; வாசிக்கத் தெரிந்த ஒருவர் உரத்து வாசிக்க மற்றவர்கள் அதனை அறிந்து செல்வார்கள். இப்படித்தான் ஒரு நூற்றாண்டு கழிந்தது.
 
ஆனால் இப்படி ஒரேவகையான ஏராளமான அறிவித்தல்களை எழுதி எழுதி நாளடைவில் இதற்கு ஒரு சிறந்த தீர்வை காண்டடைய எண்ணினார்கள். அப்போதுகேரளாவில் - கொல்லத்தில் ஏற்கெனவே அச்சு இயந்திரம் கொண்டுவரப்பட்டு அச்சாக்கம் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. “நெதர்லாந்தில் என்றால் இதெற்கெல்லாம் அச்சு இயந்திரம் இருக்கிறது.” என்பதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்கள். ஆளுநரும் இலங்கைக்கு அச்சு இயந்திரத்தை கொண்டுவரப் பணித்தார்.
 
MS_OA_1161.jpg_1180825940.jpg
தமிழ் சிங்கள எழுத்து வார்ப்பு
விதிகளையும், வரி விபரங்களையும் அச்சடிப்பதற்கு அடுத்ததாக அவர்களுக்கு இன்னொரு பெரிய தேவையும் இருந்தது. அது தான் தமது மதப் பிரச்சாரம். சமய நூல்களையும், துண்டுப் பிரசுரங்களையும் வெளியிடும் தேவை அதிகமாக இருந்தது. அவர்கள் நடத்திய பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு தேவையான சிறு வெளியீடுகளை அச்சடிக்கும் தேவையும் இருந்தது.
 
அன்றைய டச்சு காலனித்துவ சக்திகள் போர்த்துகேயர் அளவுக்கு மத நிர்ப்பந்தங்களை செய்யாத போதும் அவர்கள் தமது புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புவதில் கவனம் செலுத்தவே செய்தார்கள். போர்த்துக்கேயர் துரத்துப்பட்டுவிட்டாலும் கூட போர்த்துக்கேயர் பரப்பிய மதத்துக்கு மாற்றீடாக புரட்டஸ்தாந்து மதத்தை பரப்புவதும், புதியவர்களை மத மாற்றம் பண்ணுவதும் அவர்களது வேலைத்திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அந்த சவாலை சரிகட்டும் ஆயுதமாக ஒரு அச்சு இயந்திரத்தை இலக்கு வைத்ததில் ஆச்சரியமில்லை.
 
சிமோன் கட் (Simon Kat), யோஅன்ன ருவல் (Joannes Ruel), வில்ஹெம் கொனின் (Wilhelm Konyn) போன்ற டச்சு சீர்திருத்த சபையின் (Duch Reformed Church) மதகுருமார் ஆரம்பத்தில் புனித பைபிளின் பகுதிகளை சிங்கள மொழியில் வெளிக்கொணர பிரதான பாத்திரம் வகித்தவர்கள். இவர்களில் வில்ஹெம் கொனின் பெரும்பங்கை ஆற்றியிருந்தார். அவர் 1739 இல் சுவிசேஷ நூல்களை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அவற்றை ஓலைச்சுவடிகளில் பதிவுசெய்தார்.
 
கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதப் பொறுப்பாளராக இருந்த கேபிரியேல் ஷாட் (Gabriel Schade) என்பவரிடம் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணியை ஆளுநர் ஒப்படைத்தார். அவர் தான் நுணுக்கமான உலோக வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார் ஷாட்..
 
இந்தப் பணி இலகுவாக இருக்கவில்லை. இந்த பணி 1720 இலிருந்து இழுபறிபட்டுகொண்டே சென்றது. 
 
1726-1729 காலப்பகுதியில் புதிய ஆளுனராக Petrus Vuyst என்பவர் பதவியேற்கிறார். வந்ததுமே இலங்கைக்கு அப்படியொரு அச்சுப்பணிகள் தேவையில்லை என்று கூறி ஷாட்டை சிறையில் அடைத்துவிடுகிறார். அந்தப் பணிகள் நின்று விடுகின்றன. ஆளுநரும் இறந்து போனார். 1734இல் கொழும்பில் அச்சகம் உருவானது. கிழக்கிந்திய கொம்பனியும், டச்சு சீர்த்திருத்த சபையும் (Dutch Reformed Church) இணைந்து இந்த அச்சகத்தை நிறுவினார்கள்.
 
thumbnail-by-url.jpg
1736-1740 வரையான காலப்பகுதியில்  குஸ்தாப் வில்லம் (Gustaaf Willem Baron van Imhoff) என்பவர் ஆளுநராக வருகிறார். இந்தப் பணிகளை அவர் முன்னெடுக்கிறார். ஷாட்டுக்கும் வயதாகி விட்டது. சிறையில் இருந்து மிகவும் நலிந்து போயிருந்தார். ஆனாலும் விட்ட இடத்தில் இருந்து அந்தப் பணிகளை மீண்டும் தொடங்கினார். 
 
பழைய ஓலைச் சுவடிகளில் இருந்து இந்த எழுத்துக்களை குறிப்பாக அடையாளம் கண்டு அதனை பல்வேறு ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்களுடன் ஒப்பிட்டு இந்தப் பணிகளை செய்வது லேசான காரியமில்லை. ஏற்கெனவே “சிங்கள இலக்கண எழுத்து நுட்பம்” (Grammatica, of Singaleesche Taal-Kunst) என்கிற ஒரு நூல் டச்சு மொழியில் Johannes Ruell என்பவரால் எழுதப்பட்டு 1699இல் 190 பக்கங்களில் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அதில் சிங்கள எழுத்துக்களின் வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விபரமான ஆராயப்பட்டிருக்கிறது. எழுத்துக்களுக்கு சரியான வடிவம் கொடுப்பதற்கு இந்த நூல் நிச்சயம் பெரும்பங்காற்றி இருக்கவேண்டும்.  
 
Johannes Ruell இன் நூலில் பயன்படுத்தப்பட்டிருந்த சிங்கள எழுத்துக்களும், ஏற்கெனவே பால்டேஸ் 1672இல் வெளியிட்ட “The Coromandel Coast and Ceylon'' என்கிற நூலில் வெளியிட்டிருந்த தமிழ் எழுத்துக்களும் மரப்பலகையில் வெட்டப்பட்டு செதுக்கப்பட்டு அச்சு செய்யப்பட்டிருந்தது.
 
இறுதியில் சிங்களத்திலும், தமிழிலும் பலகைகளில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் அச்சுக்குத் தயாரானது.  அவற்றைக் கொண்டு அச்சு வேலையும் தொடங்கப்பட்டது. அதுவரை பனையோலையில் சுருங்கியிருந்த எழுத்துக்கள் கடதாசிக்கு வந்தது. அதுபோல அதுவரை குறிப்பிட்ட, வர்க்கத்துக்கும், குறிப்பிட்ட சாதிகளுக்கும் குறிப்பிட்ட குழாமினருக்கும் மட்டுபடுத்தப்பட்டிருந்த எழுத்து, வாசிப்பு, என்பவையெல்லாம் பாமர மக்களுக்கும் மெதுமெதுவாக போய் சேரத் தொடங்கின.
 
இந்த அச்சு இயந்திரம் தான் பல வருடங்களாக தமிழிலும், சிங்களத்திலும், டச்சு, ஆங்கில மொழிகளிலும் பல ஆண்டுகளாக வெளியீடுகளைத் தந்துகொண்டு இருந்திருக்கிறது.
 
 ஷாட்டுடன் இந்தப் பணிகளில் அருகில் இருந்து ஒத்துழைத்தவர்கள் J. W. Konyn மற்றும் J. P. Wetselius என்கிற பாதிரியாரும் தான். இவர்கள் இருவரும் இணைந்து எழுத்துக் கோர்ப்பதையும், அச்சு செய்வதையும் எனயோருக்குப் பயிற்சியளித்தார்கள். இறுதியில் முதற் தடவையாக 05.04.1737 அன்று சிங்களத்தில் முதலாவது தடவையாக அச்சில் அறிவித்தல் அட்டைகள் (Plakkat) வெற்றிகரமாக அச்சு செய்யப்பட்டன. மாத்தறை பிரதேசத்தில் மிளகுச் செய்கை தொடர்பான ஆணை அது.  ஆனால் அவர்களின் இலக்கு மதப்பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான நூல். தமிழில் முதலாவது அறிவித்தல் பலகை 1741இல் வெளியிடப்பட்டதாக ராஜ்பால் குமார் டீ சில்வா தனது ஆய்வில் கூறுகிறார் (Illustrations and Views of Dutch Ceylon 1602-1796) 
 
முதன் முதலாக சிங்கள, தமிழ் எழுத்துக்களுக்கு இன்றைய வடிவத்துக்கு உயிர்கொடுத்த ஷாட் அந்த நூலைப் பார்க்கு முன்னமே 1737 நடுப்பகுதியில் இருந்துபோனார். பல ஆண்டுகளாக அந்த வார்ப்புக்காக பாடுபட்ட ஷாட்டின் இறப்பின் பின் ஒரு சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.
 
Singaleesch_gebeede_boeck-9b.jpg
 
சிங்களத்தில் முதல் நூல்
அவர்களின் இலக்கின்படியே “The Singaleesch Gebeede-Boek” (சிங்கள பிரார்த்தனை புத்தகம்) என்கிற நூல் 06 செப்டம்பர் 1737 இல் வெளியிடப்பட்டது. 19.5 × 13 சென்டிமீட்டர் அளவில் 43 பக்கங்களில் அது வெளியானது. சிகப்புத் துணியால் மூடப்பட்ட அட்டையின் மத்தியில் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின்  VOC லட்சினை (Vereenigde Oost Indische Compagnie, V.O.C.) பொறிக்கபட்டிருக்கிறது. மேன்மைமிகு கொம்பனியின் சார்பில் அச்சு செய்யப்பட்ட வருடம் 1737 என்று அதில் தொடங்குகிறது. அது தான் சிங்களத்தில் அச்சான முதலாவது நூலாக வரலாற்றில் இடம்பெறுகிறது. அது வெளிவந்தது 280ஆண்டுகளைக் கடந்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரால் அச்சுப் பணிகள் தொடங்கப்பட்டது இதற்குப் பின் நூறாண்டுகள் கழிந்து தான் என்பதையும் இங்கு பதிவு செய்தல் அவசியம்.
 
காலை, மாலை செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், ஆகாரத்துக்கு முன்னரும் பின்னரும் செய்ய வேண்டியவை, மற்றும் பத்துக் கட்டளைகள் என்பவற்றின் சுருக்கம் இதில் அடங்கியுள்ளது.
 
 
vintage-book-open-first-page-covers.jpg
 
தமிழில் முதல் நூல்
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) என்கிற நூல் கூட அதற்குப் பின்னர் தான் 1739 இல் கொழும்பில் வெளியாகியிருக்கிறது. 1847இல் நெதர்லாந்தில் வெளியிடப்பட்ட நூல்களின் பட்டியல் தொகுப்பான “Catalogus Van De Bibliotheek Der Maatschappij Van Nederlandsche Letterkunde, Te Leiden, Volume -2” என்கிற டச்சு நூலில் இருந்து ஆரம்பத் தகவல்களை திரட்ட முடிந்தது பின்னர் அந்த நூலையும் இந்தக் கட்டுரைக்காக தேடிக் கண்டு பிடிக்க முடிந்தது. இலங்கையில் அச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதான் பின் ஆரம்பத்தில் வெளியான சிங்கள, தமிழ் நூல்களின் பட்டியலை மேற்படி நூலில் உறுதியாக காணமுடிக்கிறது. மேலும் புதிய ஏற்பாடு (Rev. Philip De Melho) பிலிப் டீ மெல்ஹோ என்கிற பாதிரியாரின் மொழிபெயர்ப்பில் 1748இலும் 1759இலும் வெளிவந்ததாக அதில் தகவல்கள் காணப்படுகின்றன. 
 
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” நூலின் தொடக்கப் பக்கத்தில்;  
“கிறிஸ்தவர்களுடய உண்மையான வேதப்படிப்பினையின் அத்திபாரமான முகனையைக் கொண்டு சுருக்கமாகப் பிரித்த கேள்விகளும் உத்தாங்களும் அத்துடனெ பிரதானமான அஞ்சுவணக்கமும் கிறிஸ்தவர்களுடய விசுவாசத்தின் பன்னிரண்டு பிரிவுகளும் சருவெசுபானருளிச் செய்த பத்துக் கற்பினைகளும் இந்தப் பொஸத்தகத்திலெ அடங்கியிருக்குது
பிரகாசம் பொருந்திய உத்தம கொம்பஞ்ஞியவாலெ அச்சிலெ பதிக்கபட்டது:”
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” நூலில் “சிங்கள பிரார்த்தனை நூலில்” உள்ளது போலவே
“உதய காலம் ஓதும் வணக்கம்”,
“இராத்திரி காலம் ஓதும் வணக்கம்”
“ஆசனம் பண்ணுமுன் ஓதும் வணக்கம்”
“ஆசனம் பண்ணின பிறகு ஓதும் வணக்கம்”
“பத்துக் கற்பினை” (பத்துக் கட்டளைகள் – Ten Commandments)
போன்ற தலைப்புகளில் அத்தியாங்களைக் காண முடிகிறது.
 
Mallebaars_Catechismus_en_Gebede_Boek-2.
“எங்கள் கிறிஸ்தவர்களுடைய சந்தேகமற்ற விசுவாசத்தின் பன்னிரண்டு பிரிவுகள்” என்கிற தலைப்பில் வரும் அத்தியாயத் தில் “வானத்தையும் பூமியையும் படைத்த சருவத்துக்கும் வல்ல பிதாவாகிய தம்பிரானையும்...” என்று போகிறது. கொல்லத்தில் 1578 இல் வெளியான முதல் தமிழ் நூலின் தலைப்பும் தம்பிரான் வணக்கம். “தம்பிரான்” என்பது “கடவுள்” என்பது அர்த்தம். அதுவே பிற்காலத்தில் நாவலரின் வேதாகம மொழிபெயர்ப்பில் “ஆண்டவர்” என்று குறிக்கப்படுவதையும் கவனிக்க.
 
“தம்பிரான் வணக்கம்” வெளிவந்து 161 வருடங்களின் பின்னர் தான் இலங்கையில் முதல் தமிழ் நூல் வெளியாகிறது. ஆனால் தம்பிரான் வணக்கத்தில் எங்கும் முற்றுப்புள்ளி, காற்புள்ளி போன்ற புள்ளிகள் எப்படி எங்கும் இடப்படவில்லையோ அதுபோலவே இந்த “தமிழ் சமய பிரார்த்தனை புத்தகம்” நூலிலும் எங்கும் அப்படி இடப்படவில்லை. 
 
தமிழில் ஏற்கனவே “தம்பிரான் வணக்கம்” நூல் வந்திருந்ததால் தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கவில்லை. “தமிழ் பிரார்த்தனை புத்தகத்துடன்” ஒப்பிடும்போது அதில் உள்ள வடிவ ஒற்றுமைகளைக் காண முடிகிறது.
 
தமிழில் தவறவிடப்பட்ட வரலாற்று செய்தி
“தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” பற்றிய செய்திகள் பிற்காலங்களில் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
 
தமிழில் அச்சான நூல்களின் பட்டியலை ஆராய்பவர்களுக்கு மிகவும் துணையாய் இருப்பவை
 
  1. 1. Classified Catalogue Of Tamil Printed Books, with Introductory notices. Compiled By John Murdoch.  Christian Vernacular Education Society, MADRAS 1865
  2. Catalogue of the Tamil Books in the Library of the British Museum edited by L. D. Barnett, George Uglow Pope – London - 1909

இந்த இரு நூல்களும் கூட இந்த விபரத்தைத் தவற விட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

 
டச்சு மொழியில் வெளிவந்ததாலேயோ என்னவோ இந்த தகவல்கள் இலங்கை மொழிகளில் சரியாக பதிவு செய்யப்படவில்லை போல் தெரிகிறது. குறிப்பாக தமிழ் ஆய்வாளர்களின் (அல்லது தமிழ் மொழி, அரசியல், வரலாறு குறித்த ஆய்வாளர்களின்) கவனத்தைப் பெறவில்லை. முதல் அச்சகத்தை நிறுவியவர்கள் என்கிற வகையில் இந்த விடயத்தில் டச்சுக்காரர்களின் இந்தக் காலத்து ஆவணங்கள் நமது கவனத்தைப் பெற்றிருக்கவேண்டும். நெதர்லாந்தில் 1847இல் வெளியான நூல் பட்டியலில் 430, 431,432 ஆகிய பக்கங்களில்; ஆரம்பத்தில் வெளியான தமிழ், சிங்கள நூல்களின் பட்டியலை தொகுத்திருப்பதை காண முடிகிறது.
 
Catalogus_van_de_bibliotheek_der_Maatsch
Catalogus_van_de_bibliotheek_der_Maatsch
Catalogus_van_de_bibliotheek_der_Maatsch
 
இந்த நூல் 1739இல் வெளிவந்தபோதும் சிங்களத்தில் வெளிவந்த அதே காலத்தில் இதையும் திட்டமிருந்திருக்கிறார்கள் என்று ஆளுனர் குஸ்தாப் 1737இல் எழுதிய குறிப்புகளில் காண முடிகிறது.
 
“...எனது ஆட்சிக் காலத்தில் மிகப் பிரயோசமிக்க அந்த கருவி இயக்கப்பட்டது. “சிங்கள பிரார்த்தனை நூல்” வெளியிடப்பட்டுவிட்டது. மலபார் மொழியிலும் (தமிழில்) வேத புத்தகத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்கிறார்.
 
ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த அதுவும் டச்சு மொழி நூல் என்பதாலேயோ என்னவோ இந்தத் தகவல் எவரது பார்வைக்கும் அகப்படவில்லை. அது மட்டுமன்றி அப்போதெல்லாம் தமிழ் பிரதேசங்களை மலபார் என்றும், தமிழர்களை மலபாரிகள் என்றும், தமிழ் மொழியை மலபார் மொழி என்றும் பல ஆவணங்களிலும் நூல்களிலும் பதிவாகியுள்ளன.
 
இந்த நூல் கூட “மலபாரிகளின் பிரார்த்தனை புத்தகம்” (Mallebaars Catechismus- en Gebede-Boek) என்று தான் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். தேடல்களில் இருந்து தவறியமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அடுத்தது தமிழ் மொழியை சில இடங்களில் “Tamil”, “Tamul” என்றும் தான் குறிப்பிடுகின்றன. எனவே குறிப்பாக நாம் இரு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆவணங்களைத் தேடுகின்ற போது இந்த புரிதலோடு தேடுவது ஆய்வுகளுக்கு உதவும். வெளியிடப்பட்ட இடம் கூட “Kolombo” என்று தான் காணப்படுகிறது.
 
uc1.b4194698-seq_3.jpg
டக்ளஸ் கிராவ்போர்ட் (Douglas Crawford McMurtrie) என்பவர் 1931 ஆம் ஆண்டு உலக நாடுகளில் முதலாவது அச்சு வெளிவந்தவை பற்றிய பட்டியலைக் கொண்ட சிறு சிறு நூல்களை வெளியிட்டார். அந்த வரிசையில் அவர் இலங்கைப் பற்றியும் 10 பக்கங்களில் தனி நூலை வெளியிட்டார் (Memorandum on the First Printing in Ceylon: With a Bibliography of Ceylonese Imprints of 1737-1760).  அதில் நூல்களில் பட்டியல் 4 பக்கங்களில் மாத்திரம் உள்ளது. அந்தப் பட்டியலில் 1739 இல் வெளிவந்ததாக மேற்படி “தமிழ் வேத பிரார்த்தனை புத்தகம்” என்கிற நூலையும் பட்டியல்படுத்தியிருக்கிறார். ஆனால் அவர்  “Catechism and Prayers” என்று தலைப்பை ஆங்கிலப்படுத்தியிருக்கிறார். வந்திருந்த மொழியிலேயே  Mallebaars Catechismus- en Gebede-Boek என்று அவர் பதிவிட்டிருந்தால் கூட மேலதிகமாக தேடுவோருக்கு அந்த நூல் எட்டியிருக்கக் கூடும்.
 
இலங்கையில் அச்சான முதலாவது தமிழ் நூல் எது என்பது பற்றி இப்போது திரட்டியிருக்கும் தகவலைத் தவிர வேறு ஏதும் வெளிவந்ததாத எதுவித தகவல்களும் இல்லை. 1841 இல் வெளியான “உதயதாரகை” பத்திரிகையே இலங்கையில் முதலாவது பத்திரிகை என்று அறிந்துவைத்திருக்கிறோம். ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழில் நூல் அச்சாகி வெளியாகியிருக்கிறது.
 
1909இல் பிரிட்டிஷ் நூலகம் நூலாக தொகுத்த அதுவரை வெளியான தமிழ் நூல்களின் பட்டியலின்படியும் இந்த காலத்துக்கு முன்னர் தமிழ் நூல்கள் அச்சானதாக ஆதாரங்களைக் காண முடியவில்லை.
 
மேலும் சிங்களத்தில் முதன் முதலில் வெளியிட்ட அதே பிரார்த்தனை நூலையே தமிழுலும் வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கலாம். இந்த சிங்களத்தில் எப்படி எழுத்துக்களை வார்த்திருக்கிறார்களோ, அதே போலவே தமிழிலும் செய்யப்பட்டிருப்பதை இரு நூல்களையும் ஆராய்கிறபோது உறுதிசெய்துகொள்ள முடிகிறது. சிங்கள நூல் 40 பக்கங்களிலும் தமிழில் 96 பக்கங்களிலும் காண முடிகிறது.
 
இந்த இரு மொழி நூல்களிலும்; வெளியிடப்பட்ட ஆண்டின் இலக்கத்தை தமிழிலும், சிங்களத்திலும் எழுத்துக்களாக இட்டிருக்கிறார்கள். தமிழில் இலக்கங்களை குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தை நாம் அறிந்திருக்கிறோம். சிங்களத்திலும் அதுபோலவே இலக்கங்களைக் குறிக்க சிங்கள எழுத்துக்கள் உண்டு. அதனை இங்கே காண முடியும்
singala%2Bnumbers.JPG

 

tamil-ilakkangal.gif
 
 “சத்தியத்தின் வெற்றி” (Triumph der Waarheid) என்கிற நூலும் தமிழில் 1753இல் கொழும்பில் வெளியாகியிருக்கிறது. 
012-old-book-cover-template-backgrounds-
 
அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழிலும் சிங்களத்திலும் பல கிறிஸ்தவ சமய நூல்கள் வெளிக்கொணர்ந்திருப்பதை நெதர்லாந்தில் வெளியான நூல் பட்டியல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த நூல்களில் பலவற்றை பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கிறோம். சில நூல்கள் மட்டுமே இலங்கையின் சுவடிகூடத்தினைக்களத்தில் பார்வையிட முடிகிறது. ஏனையவற்றில் சில நெதர்லாந்திலுள்ள டச்சு நூலகத்தில் இன்றும் காணப்படுகின்றன.
 
இலங்கையில் வெளியான முதலாவது சுதேசிய மொழிப் பத்திரிகை தமிழ் பத்திரிகையான “உதயதாரகை”. 1841 இல் உதயதாரகை வெளியானது. அது போல இலங்கையில் வெளியான முதல் சிங்களப் பத்திரிகை 1860இல் வெளியான “லங்காலோக” என்கிற பத்திரிகையே. 
 
ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர்களின் வசம் கைமாறியபின் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இந்த அச்சு இயந்திரமும் அச்சகமும் ஆங்கிலேயர்களின் பயன்பாட்டுக்கு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 15.03.1802 இல் முதன் முதலில் வர்த்தமானிப் பத்திரிகையை (No. 1 of The Ceylon Government Gazette) இந்த அச்சகத்தில் இருந்து தான் வெளியிட்டார்கள். 
 
முதன்முதலில் இலங்கை மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற கதை அது தான். அந்த வடிவத்தைப் பின்பற்றியே இன்றைய நவீன அச்சுவேலைகளுக்கான கணினி எழுத்து வடிவங்கள் வரை உருவாக்கப்பட்டு ஒப்பேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சுக் கலைத் தோற்றம் பெற்ற அதே காலப்பகுதியில் சுதேச மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டு வளர்ச்சியுற்று வந்த வரலாறு மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்று. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு. மறக்கக் கூடாத நிகழ்வு. நாம் தவறவிட்ட வரலாற்றுப் பதிவு.
 

நன்றி - தினக்குரல்
 

பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை

5 months 1 week ago

பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை

பெரும் பொருட்ச்செலவில், நிலையாமையில் நம்பிக்கை இல்லாது, அமைத்த பொறியியல் திறன் மிக்க இந்த கோட்டை, அமைத்து முடித்த 3 வருடங்களில், பிரிட்டிஷ்காரர்கள் கை மாறியது.

இன்று சிங்களவர்கள் கையில் இருந்தாலும் அதுவும் ஒரு நாள் மாறும். அதுவே உலக நியதி.

 

 

இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127வது ஜனனதினம்!

5 months 2 weeks ago

காரைதீவு  நிருபர் சகா

உலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாரின் 127வது ஜனனதினம் இன்று(27) புதன்கிழமைதமிழ்கூறுநல்லுலகெங்கணும் கொண்டாடப்படுகிறது.

 

அவர் பிறந்த காரைதீவு மண்ணில் இன்று சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள 127வது ஜனனதினவிழா மணிமண்டப வளாகத்தில்நடைபெறவுள்ளது

அங்குள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர்மாலைஅணிவித்து வேதபாராயணம் ஓதப்படவிருக்கிறது.

 

அடிகளாரின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடல் இசைக்கப்பட்டதும் பிரதானசொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

இதேபோன்று நாட்டின் பலபாகங்களிலும் குறிப்பாக அவருடைய நாமத்தில்இயங்கும் நிறுவனங்களில் பாடசாலைகளில் இந்த ஜனனதினவிழா ஒழுங்குசெய்யப்பட்டள்ளது

கடல்கடந்த கனடாவிலும் விழா இடம்பெறவிருப்பதாக அதன் போசகர் பேராசிரியர்.பாலசுந்தரம் தெரிவித்தார்.

http://battinaatham.net/description.php?art=19045

வாழ்வை வென்ற நிமால்

5 months 3 weeks ago
வாழ்வை வென்ற நிமால்
Editorial / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:55 Comments - 0

-ஜெரா  

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப்  பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன.  

image_59d674be51.jpgகடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக் கல்வியின் ருசியைச் சுவைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள், இறுதிக்கட்டப் போர் வலயக் குழந்தைகள். (முல்லைத்தீவின் உண்ணாப்புலவு, செல்வபுரம் உள்ளிட்ட கிராமங்கள்) பென்சில்களில் எழுதிய முதிர்ச்சியும் பேனாவால் எழுதப்பழகும் தொடக்கமும் அந்த எழுத்துகளில் தெரிகின்றன. 

அனைத்துக் கடிதங்களினதும் சாரம், ‘அண்ணா! நீங்கள் எங்களுக்குப் புதுநம்பிக்கையைத் தந்திருக்கிறீர்கள். நான் சாதிப்பேன்’ என்பதாகவே இருக்கின்றன. 

அவர்களுக்கு, நிமால் நீண்டகாலம் கற்பிக்கும் ஆசிரியனல்ல; பெரும் பேராசிரியருமல்ல; ஓர் அண்ணாவாக, ஒரே ஒரு பாடவேளைப் பொழுதில் மட்டும் சந்தித்துக்கொண்ட வழிப்போக்கனாக மட்டுமே இருந்தார்.  

நிமால், நண்பர்களுடன் இசையமைத்துப் பாடிய, வலி போக்கும் பாடல்களைப் பாடிக்காட்டி இருக்கிறார். போர் மிச்சம் விட்ட, தன் உடலின் முழுப் பாகங்களையும் பயன்படுத்தி, ‘ஓக்டோபாட்’, ‘ட்ரம்ஸ்’ வாசித்துக் காட்டியிருக்கிறார். 

தான் வளர்ந்த கதையைச் சொல்லி, வாழ்வில் நம்பிக்கை பெறவேண்டிய தருணங்கள் குறித்துச் சில நிமிடங்கள் கலந்துரையாடி இருக்கின்றார். அந்த நம்பிக்கை உரமூட்டலுக்கான குறிப்பை, தனது வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதன் விளைவே, நிமாலை நாம் சந்தித்தபோது, அவரின் கட்டிலெங்கும் மலையெனக் குவிந்துகிடக்கும் கடிதங்கள். 

இக்கடிதங்களை, வெறும் மடல்கள் என்று மட்டும் சொல்லி, வார்த்தைப் பெறுமதியைக் குறைத்துவிடமுடியாது. நம்பிக்கையற்று அலையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய உலகின் அரிய புத்தகங்கள்.  

நிமால் யார்? அவரும் இந்த மண்ணின் மைந்தன்தான். போரின் ஆரம்பக் கட்டத்தில் பிறந்த குழந்தைதான். அதனால் போரின் முழு விளைவுகளையும் அவர் தாங்கி இருக்கின்றார். 

பிறந்தது யாழ்ப்பாணமாக இருந்தாலும், விவரமறிந்த காலம் முழுவதும் வன்னிதான். புதுக்குடியிருப்பு,  கைவேலி பகுதியில் வாழ்ந்திருக்கிறார். அறிவைத்தொட்ட கல்வி அனைத்தையும் அவர் வசித்த கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கற்றார். 

அந்தக் காலப்பகுதியில், பாடசாலைக்கு பஸ்ஸில் செல்லவோ, ஓட்டோவில் ஒய்யாரமாய் ஏறிச் செல்லவோ, சைக்கிளில் செல்வவோ வசதி இருக்கவில்லை. நடை! கால்நடையாகவே ஒவ்வொரு நாளும், பத்துக் கிலோமீற்றர்களைக் கடந்து கற்றார் நிமால். இடையிடையே வரும் சைக்கிள்காரர்கள் விரும்பினால் ஏற்றி, இறக்கிவிடுவதுண்டு. அவ்வாறாக உதவியவர்கள் சிலரை இன்றும் நினைவுகூர்கின்றார்.  

நிமாலின் குடும்பம், கர்நாடக இசைப் பின்னணியுடனோ, வேறெந்த இசை வல்லளார்களின் வாரிசுகளோ அல்ல. வள்ளிபுனம் பாடசாலையின் மேசைதான், நிமாலின் இசையறிவை வளர்த்தது. பாடமற்ற வேளைகளில், நண்பர்கள் அனைவரும் கூடி, மேசையின் முதுகில் மேளம்தட்டிப் பாடுவது, இசையின் நுணுக்கங்களை அவருக்குள் வளர்த்தது. அதுவே நிமாலை, பாடசாலையின் பிரபலமான பாடகராக்கியது. 

அந்தக் காலத்தில், பாடசாலைகளில் அடிக்கடி மாணவர் நிகழ்வுகள் நடைபெறும். அவை அனைத்தையும் நிமாலின் பாடல்கள், உயிர்பெறச்செய்தன. அப்படியே நிமால், ஒரு பாடகரானார். அவர் உயர்தரம் கற்கையில், வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும், இலங்கையிலும் இயங்கும் 20க்கு மேற்பட்ட இசைக்குழுக்களில் பாடிப் பிரபலமடைந்திருந்தார். இந்தக் கட்டுரையை வாசிப்போர் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! நிமால் முறையாகச் சங்கீதம் கற்றுத் தேறியவன் அல்ல; சுய விருப்பும் சுய முயற்சியும் காரணமாகவே, பாடசாலை மேசைகளில் சங்கீதத்தைக் கற்றுக் கொண்டார்.  

image_f6ff9542c6.jpgஇப்படியே ஓடிக்கொண்டிருந்த காலத்தில், போரும் இறுதிக் கட்டத்தை நெருங்கியது. அந்தப் போர், தன் அகோரத்திலிருந்து யாரையும் விட்டுவைக்கவில்லை. 

01.08.2008 அன்று, நிமால் இருந்த பதுங்கு குழிக்குள் எறிகணை வீழ்ந்து வெடித்தது. அந்த வெடிப்பில் நிமாலின் இரு கால்களும் சிதறிவிட்டன. போரால் அரை மனிதானாக்கப்பட்ட கதை நிமாலினுடையது.  

போர்க் காலத்தில், காலில்லாத வலியும் மன நோவும் மிகவும் அதிகரித்தது. பல இரவுகள் படுத்த படுக்கையாக, பதுங்கு குழிக்குள் வாழவேண்டி ஏற்பட்டது. அருகில் எறிகணை வீழ்ந்தால் கூட, வேறொருவரின்  துணையின்றி அவரால் நகரமுடியாது. அந்தக் காலகட்டத்தில், நிமாலிடம் மாற்றுவலுவுடையவர்களுக்கான வண்டி கூட இருக்கவில்லை. பசி, பட்டினி, நோய் என்று ஒரு மனிதன் எந்தத் துயரமெல்லாம் அனுபவிக்க முடியுமோ, அவை அனைத்தையும் ஆற அமர இருந்து ருசித்து வெளியேறினார் நிமால். போரும் அத்தோடு முடிந்தது.  

image_37fab3b9e6.jpgநிமாலுக்கு வாழ்க்கை சலிக்கவில்லை. தனியாகவே சில காலம் அலைந்தார். அவரின் அலைவு, தமிழகம் வரைக்கும் நீண்டது. தமிழகத்தின் பிரபலமான இசைக் கலைஞர்கள் நிமாலைச் சந்தித்து உரமூட்டினர்; அனுசரித்தனர்; நம்பிக்கையூட்டினர். 

எல்லாம் போனாலும், இசையிருக்கிறது என்ற நம்பிக்கையுடன், தனக்குக் கிடைத்த சக்கரக் கதிரையுடன் மீண்டும் நகரத் தொடங்கினார். ஆங்காங்கே இருந்த துறைசார்ந்த நண்பர்கள் கைகொடுத்தனர். தன் வாழ்க்கையை இசைக்கோர்வையாக்கினார். தன் வலியை மிருதுவாக, மற்றையவர்களுக்கு எடுத்துக்கூறினார்; நிலைமையறிந்தவர்கள் உதவினர். 

எல்லோருடைய வாழ்க்கைக்கும் இதம் தடவும் வார்த்தைகளை இசையாக்கி, தன்னால் இயன்ற இடங்களில் வெளியிட்டு வருவது இவரின் தற்போதைய தொழில். அது ஒரு வெற்றிகரமான தொழில். நிமாலின் கட்டிலெங்கும் கொட்டிக் கிடக்கும் அந்தக் கடிதங்கள் அதற்கு ஆதாரம். அவர் தன்னைப்போல போர் அலைக்கழித்த குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார்; குழந்தைகள் தம் எழுத்துகளால், நிமாலுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்கள். வாழ்வில் பிரகாசமாகப் பயணிக்க, கொடுக்கல்-வாங்கல் முறையிலான நம்பிக்கையளித்தலைத் தவிர, வேறென்ன தேவை. இதுவுமோர் உளச்சிகிச்சை முறையல்லவா? எனவேதான், நிமால் வாழ்க்கையை வென்றவனாகி இருக்கிறான்.  

இந்த வெற்றியை, மற்றையவருடன் பகிர்ந்துகொள்வதிலும் நிமால் முன்னணியில் இருக்கிறார். தன் இசைப் பயணத்திலும் மற்றையவரை ஊக்கப்படுத்தல் பயணத்திலும் சம்பாதிக்கும் பணத்தின் ஒருதொகையை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து உதவுவதை, வழக்கமாகக் கொண்டிருக்கிறார். போரில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தொழில்வாய்ப்பொன்றைத் தொடர்வதற்காக, தன்னிடம் இருந்த 50,000 ரூபாய் பணத்தைக் கொடுத்து உதவியதில் தொடங்கியது இவரின் இப்பயணம். 

image_d17f3b4a93.jpgஅன்றிலிருந்து இன்றுவரை, பல்வேறு வழிகளிலும் பலருக்கும் உதவியிருக்கிறார். அண்மை நாள்களாக, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கான போராட்டங்களிலும் தன் உடல்நிலையையும் கவனத்தில் கொள்ளாது இணைந்துகொள்கிறார்.   

நிமாலிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் அதிகம் பேர், நம் மத்தியில் இருக்கின்றனர். போரில் தம் அங்கங்களை இழந்து, வாழ்க்கையை வெறுத்து அலையும் முன்னாள் போராளிகள், குடும்பங்களைத் தொலைத்தவர்கள், தற்கொலை எண்ணத்தோடும், அதைத் தடுக்கவும் நினைக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், போதைபொருள் பாவனைக்கு ஆட்பட்டு மீளமுடியாது தவிப்போர், உளவியல் துறைசார்ந்து இயங்கும் நிபுணர்கள், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், நம்பிக்கையைத் தொலைத்த பிடிமானமற்றவர்கள் அனைவரும் ஒருமுறை நிமாலைச் சந்தியுங்கள். அல்லது அவரின் வாழ்க்கையை முன்மாதிரியான எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், எந்தப் புத்தகங்களும் தராத நம்பிக்கையை, நம் முன் நடமாடும் நிமால் தருகிறார்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வாழ்வை-வென்ற-நிமால்/91-231238

அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்

5 months 3 weeks ago
அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்
March 24, 2019
IMG_2343.jpg?resize=800%2C534

எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று  கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து  போய் நின்றேன். மனைவி விறைத்து போய் நின்றாள்  அவளது முகத்தில் கண்ணீர் வடிந்தோடியது. என்றார் குழந்தைவேல் விஜயகுமார்.

கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த ஒரு முன்னாள்  போராளியான குழந்தைவேல் விஜயகுமார் 2009 நவம்பர் மாதம்  ஓமந்தை தடுப்பு முகாமில் இடம்பெற்ற அந்த பத்து நிமிட சந்திப்பை பற்றி குறிப்பிடும் போதே  இவ்வாறு தெரிவித்தார். தனது வாழ்நாளில்  மறக்க முடியாத அந்த சந்திப்பு இன்றும் பசுமரத்து ஆணி போல் மனதில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டு திருமணம் செய்த விஜயகுமாருக்கு 2008.05.18 ஆம் திகதி மகன் தர்சன் பிறந்திருக்கிறார். அப்பா என்ற அந்தஸ்த்து கிடைக்கிறது. இயக்கப் பணி, காரணமாக வீட்டுக்கு வந்து செல்வது அவ்வவ்போதுதான். அப்பா என்ற வாழ்க்கையின் ஒரு படியை கடந்த அவருக்கு மகன் அப்பா என்றழைக்கும் தருணத்திற்காகவும் காத்திருந்திருக்கின்றார்.

மகன் பிறந்த காலப்பகுதி இறுதி யுத்தம் தீவிரமடைந்துக்கொண்டிருந்த காலம். கிளிநொச்சி இடப்பெயர்வு, அதன் பின்னர் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால்வரை இடம்பெயர்ந்த வாழ்க்கை இதனால் தான் மகனோடு செலவழித்த காலங்கள் மிகவும் குறைவு இதனால் தனது முகம் மகனுக்கு நெருக்கமில்லாது போய்விட்டது. மகனின் முதலாவது பிறந்த நாளான 2009.05.18 அன்று  வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரால் பேரூந்தில் ஏற்றப்படுகின்றோம். 18 ஆம் திகதி பேரூந்தில் ஏறிய நாம் 20 ஆம் திகதி ஓமந்தையை வந்தடைந்தோம். அந்த  இரண்டு நாட்கள்தான் எனது மகனோடு நானிருந்த அதிக நேரம். அதற்கு முன் ஒரு நாளும் அவ்வாறு இருந்ததில்லை. ஆனால் அந்த இரண்டு நாட்களும் மகிழ்ச்சியாய் இருந்ததில்லை.

ஓமந்தையில் நான் இராணுவத்திடம் சரணடைந்தேன்  மனைவி மகனுடன் தனியாக எவரது உதவியுமின்றி  செட்டிக்குளம் முகாமுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றார்.பின்னர்தான் தெரியும் அவர் மெனிக்பாம் ஆனந்தகுமாரசாமி முகாமில் கொண்டு சென்று விடப்பட்டார் என்று. இதன் பின்னர் ஆறு மாதங்களாக எங்களுக்குள் எந்த தொடர்புமில்லை.  மனைவிக்கு தெரியாது நான் எங்கிருக்கிறேன் என்று. எனக்கு தெரியாது மனைவி எங்கு எப்படி இருக்கின்றார் என்று. பின்னர் முகாமிலிருந்து திருகோணமலையில் உள்ள உறவினர்களிடம் மனைவியும் மகனும் சென்றுவிட்டனர். ஆறு மாதங்களின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமே மனைவி நான் ஓமந்தையில் இருப்பதை அறிந்துகொண்டார். அங்கிருந்தே 2009 நவம்பர் மாதம் ஓமந்தை தடுப்பு முகாமுக்கு என்னை சந்திப்பதற்கு வந்திருந்தனர். அந்த 10 நிமிட சந்திப்பே என் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பு.

எனது மகனின் வாயால் அவனது மழலை மொழியில் அப்பா என அழைப்பான் என ஆவலோடு இருந்த போது மாமா என்றான் அத்தருணம் என் உணர்வுகள் ஒரு அப்பாவாக மரணித்தன. மகனின் மூன்று வயது வரை அவனருகில் நான் இருந்து பழகி விளையாடியது கிடையாது. அவன் பிறந்து ஒரு வயது வரை இயக்கப் பணிகள் நிமித்தம்  நேரம் கிடைப்பதில்லை பின்னர் மூன்று வயது வரை தடுப்பு வாழ்க்கை இந்தக் காலப்பகுதியில் மனைவின் சகோதரர்களுடன் நெருக்கமாக பழகியவன்  அதனால் அவன் பார்க்கின்ற ஆண்கள் அனைவரும் மாமாவாக இருந்தனர்.  அப்பா என்ற உறவு அவனுக்கு தெரியாது. மூன்று வயதில் கூட புகைப்படத்தை காட்டி இதுதான் அப்பா என்று சொல்வதற்கு கூட மனைவியிடம் எனது புகைப்படமும் இல்லை. யுத்தம் எல்லாவற்றையும் பறித்து விட்டது.  ஒரு தடைவ நெளுக்குளம் தடுப்பு முகாமுக்கு மனைவியும் மகனும் சந்திப்பதற்கு வந்திருந்தனர். அப்போது மகனை நோக்கி தம்பி இங்க வாங்கோ என்றேன். அவன் தாயிடம் அம்மா மாமா கூப்பிடுறார் என்றான்.  அருகில் இருந்த முன்னாள்  சக போராளிகள் என்னை ஒரு மாதிரி என்னடா இது? என்ற வகையில் நேர்க்கினார்கள்.  பின்னர் அவர்களுக்கு நிலைமையை விளங்கப்படுத்தினேன்.

என்னை மாமா என்று அழைக்கும் போதெல்லாம் மனைவியின் கண்களில் கண்ணீர் வரும். நாம் யாரை நோவது. யுத்தம் இவற்றையே எமக்கு பரிசளித்துவிட்டு சென்றுள்ளது என்று எண்ணிக்கொண்டு வாழத்தொடங்கினோம். அவனது மூன்று வயது வரை தனது மாமாக்களுடன்தான் அதிகம் வாழ்ந்தான். அப்பா என்று கூப்பிடுவதற்கான வாய்ப்பு மகனுக்கு கிடைக்கவில்லை. அயல் வீட்டுக்காரரையும், பிற ஆண்களையும் மாமா என்றழைத்தவனுக்கு நானும் மாமாவாகே தெரிந்தேன். உண்மையில் மிகவும் வேதனையான விடயம். அதுவும் தடுப்பு முகாம்களில் சில வேளைகளில் தனிமையில் இருந்து யோசிக்கின்றபோது வாழ்க்கையே வெறுக்கும் எனத் தெரிவித்த விஜயன்

2009 தொடக்கம் 2011 வரை ஓமந்தை,  வெலிகந்த, நெளுக்குளம், பூந்தோட்டம் என நான்கு தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வுப்பெற்று குடும்பத்துடன் இணைந்தேன். மீள்குடியேற்றப்பட்டு கிளிநொச்சி உதயநகருக்கு வந்தோம் அப்போதும் என்னை மாமா என்றே அழைப்பான் தாய் அடிக்கடி அப்பா என்று எடு;த்துக் கூறிய போதும் அவன் அதற்கு உடனடியாக பழக்கப்படவில்லை அப்போது எனக்கும் மாமா என்ற வார்த்தை அப்பா என்பதாகவே ஒலிக்கும் பழகிவிட்டது. ஆரம்பத்தில் மாமா என்று சொல் செவிகளுக்குள் செல்லும் போது காதுக்குள் ஆணி  வைத்து அறைவது போலிருக்கும்.  வீட்டில் தாய் இல்லாத நேரம் என்னுடன் தனிமையில் இருக்கமாட்டான் என்னுடன் நெருக்கமாக பழகமாட்டான். ஒரு அப்பாக மகனுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அது என் வாழ்க்கையில் இடம்பெறவில்லை. மழலை மொழியில் பேசி விளையாடி கடைக்கும் கடற்கரைக்கும் சென்று மகனுடன் மகிழ்ச்சியாய்  பொழுதை போக்கி செல்லமாக அவனுடன் சண்டையிட்டு இப்படி ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் இருந்தேன்   ஆனால் எல்லாம்  பகல் கனவாகிவிட்டது. எனது மகனின் மழலை பருவத்தில் அவனுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அது எதுவும் நடக்கவில்லை

என்னிடம்  அதை வாங்கி தா இதை வாங்கித்தா என்று கேட்க வேண்டிய வயதில் என் மகன் அவன் என்னிடம் அப்படி ஒரு நாளும் கேட்டது கிடையாது அவற்றையெல்லாம் தனது மாமாக்களிடம் கேட்பான்.  அவன் வளர்ந்த சூழலின் விளைவாக இருந்தது. வீட்டில் நானும் மனைவியும் தாயும் இருந்த காலத்தில் என்னுடன் கொஞ்சம் கொஞ்சம்  நெருங்க ஆரம்பித்தான். முன்பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த போது நான் அவனை ஏற்றி இறக்குவது வழக்கம் அப்போதே என்னிடம் நெருக்கமாக வந்தான் என்னை அப்பா என்று அழைப்பதற்கு அவனுக்கு நான்கு வருடகங்கள் சென்றது. இப்போது எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு  மகன் ஒரு மகள். மகன் என்னுடன் மிகவும் நெருக்கமாக  உள்ளான் இரவிலும் நான்  இல்லாது உறங்கமாட்டான்.

தற்போது நிரந்தர தொழில் இல்லை பிரத்தியோகமாக மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிக்கின்றேன். உயர்தர மாணவர்களுக்கு இராசயனவியலும் படிப்பிக்கின்றேன். போதுமான வருமானம் இல்லாத போதும்  மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. என்னை பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட நிலமை எந்த அப்பாக்களும் ஏற்படக் கூடாது. அந்த வலிமிகவும் கொடியது. என்றர் விஜயகுமார்.

 IMG_2345.jpg?resize=800%2C534
 

இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை

5 months 4 weeks ago
இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை
இலங்கை

இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப்படுகின்றன.

இலங்கை

வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ். பத்தமநாதன், இந்த தொல்லியல் சின்னங்கள் மேற்குறிப்பிட்ட காலங்களுக்குரியவைதான் என்பதை, பிபிசிக்கு உறுதிப்படுத்தினார்.

மலைகளிலும் மலைகள் அருகே காணப்படுகின்ற இந்தப் புராதன சின்னங்கள், இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றினை பாதுகாப்பதற்கான போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என, அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினால், அங்கு காணப்படும் பெறுமதிமிக்க புராதன சின்னங்கள் சேதமடைந்தும், அழிவடைந்தும் செல்கின்றன என்று, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கே. தர்மராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இலங்கை

இப்பகுதியில் கல்வெட்டுக்கள், நடுகல், கல்லறைகள், பாறைத்தூண்கள், மலைகளில் குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் மற்றும் நீர்த் தொட்டிகள் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்களை இன்னும் காணக் கிடைக்கின்றன.

இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் 'நடுகல்' இங்கு காணப்படுகின்றமையினை பேராசியர் பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளதோடு, 'நடுகல்' என்பது, ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற - பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகும் எனவும் கூறியுள்ளார்.

பெருங்கற்கால மக்கள்தான் 'நாகர்'கள் என அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் பத்தமநாதன் தெரிவித்தார்.

அந்த வகையில் 'நடுகல்' இங்கு காணப்படுகின்றமையினை வைத்து, கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் இங்கு பரவியிருந்தார்கள் என்பதை திடமாகக் கூறலாம் எனவும் பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அங்கே கிடைக்கப்பெற்ற பானையோடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்து காணப்பட்டதாகவும், இதனை தென்னிந்திய ஆய்வாளர்களும் அக்காலத்தில் உறுதி செய்தனர் என்றும் பேராசிரியர் பத்மநாதன் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

இலங்கை

"ஈமத்தலங்களில் அமைக்கப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட கல்லறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இவை நீள் சதுரமான வடிவுடையவையாகும். அந்த கல்லறையை நீளமான ஒரு கல்லினைக் கொண்டு மூடி விடுவார்கள். அதனை தொப்பிக் கல் (Dollmen) என்று சொல்வார்கள். இந்த 'தொப்பிக்கல்'கள் இங்கு காணப்படுவதை வைத்தும், கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ் மொழிபேசிய மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்த முடியும்" எனவும் பேராசிரியர் பத்தமநாதன் தெரிவித்திருந்தார்.

பெருங்கற்கால மக்கள் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்றும், அவர்கள்தான் தமிழ் மொழியை இலங்கைக்குக் கொண்டுவந்தனர் என்றும் பேராசிரியர் பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கிடைக்கப்பெற்ற தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், கி.முன்னர் 04 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான், தமிழ் - எழுத்து வடிவம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை

அந்த வகையில், ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற - பெருங்கற்காலத்தில் தமிழ் பேசிய மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைக்கப் பெற்றுள்ள இடத்தையும், அங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டியமை அரசின் கடமையாகும்.

அனுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற இடங்களிலுள்ள தொல்லியல் சின்னங்களை அரசு பாதுகாத்து வருகின்றமை போல், சங்கமன் கண்டி பிரதேசத்திலுள்ள தொல்லியல் சின்னங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47602296

வடு - ஜெரா

6 months 1 week ago
வடு
Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0

-ஜெரா 

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர்.   

அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார்.    

“போர் நிறைவுற்றுப் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர், அந்த நினைவுகளுக்கு உரிய உளச்சிகிச்சைகளைப் பெறாமலே, மறக்கச் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்காலங்களில், உளச்சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள்கூட, மறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மக்கள் ஓரளவுக்கு இறந்தோரை நினைவுகூரவும், பொதுவெளியில் அழுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளனர். இது முன்னேற்றகரமானது. இருந்தபோதிலும், கடந்தகாலப் பாதிப்புகள், நீண்டகால நோக்கில், சிலபல விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.  

அதற்கு உதாரணமான ஒருவர்தான், இந்தக் கட்டுரையில் வரும் மலரம்மா. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  

வன்னியில், போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக, அந்த பஸ் பயணித்துக் கொண்டிருக்கிறது....
மர நிழலில் காத்திருந்த சிலர், பஸ்ஸை  வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டத்திலிருந்து, கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட, 60 வயதைத் தாண்டிய உடற்றோற்றம்! பஸ்ஸின் வாசலூடாகத் தவழ்ந்து ஏறுகிறார். நடத்துநரும் வேறுசிலரும் உதவிசெய்து, ஓர் ஆசனத்தில் அமர வைக்கின்றனர். 

யாரையும் நிமிர்ந்து பார்க்காத அந்த அம்மா, யன்னலுக்கு வெளியே, வேகமாகக் கடந்துபோகும் வெட்டைவெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணீரின் கறை படிந்து, கறுப்பு வளையங்கள் கொண்ட கண்கள், மங்கி சுருங்கி இருக்கின்றன. வர்ணங்கள் நீர்த்துப் போன வாழ்வின் குறியீடாக, அந்தத் தாய் தெரிகிறாள்.  

அவரின் பெயர் மலரம்மா.  

“இந்த ஊரிலை இருக்கிறது என்ற பேருக்குத் தான் இருக்கிறா; யாரோடையும் கதைக்கமாட்டா; அவவுக்கு ஒரு மாதிரி எண்டு சொல்லுகினம்; தனியத்தான் திரியுறா; நல்லது கெட்டது ஒண்டுக்கும் வரமாட்டா; சிலவேளை, நடுவெய்யில்லை நிண்டு கத்துவா, வானத்தை அண்ணாந்து பாத்து, ஏதோ கதைச்சுக்கொண்டு இருப்பா” மலரம்மாவைப் பற்றி, அந்த ஊர் தந்த அறிமுகம் இது. 

அவருக்கு அப்பிடி என்ன பிரச்சினை? அதுவும் நீண்ட காலமாக இப்பிடியே இருக்கிறாராம். குடும்பம் எங்கே? கணவன், பிள்ளைகள் இருக்கிறார்களா? என்ன நடந்தது?  

2009ஆம் ஆண்டு, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், கடந்த 30 ஆண்டுகளாகப் போரின் பல்வேறு வடுக்களை மக்கள் தாங்கி இருக்கின்றனர். உடல் காயமாக, உளக்காயமாக அது அவர்களைத் துருத்தி, வேதனை அளித்துக் கொண்டே இருக்கின்றது. 

இந்த இரண்டு வகையான பாதிப்புகளுக்குள்ளும் வசமாக அகப்பட்டவர்தான் “அவவுக்கு ஒரு மாதிரி” என, ஊர் அறிமுகம் செய்யும் மலரம்மா.  

1990ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் வடுக்களை, அவர் சுமந்திருக்கிறார். அந்த நாள்களில், கரையோரப் பிரதேசங்களில் கடலன்னையின் அரவணைப்பில் உழைத்துக்கொழித்த செல்வத்தோடு, இறைவன் கொடுத்த மக்கள் செல்வத்தின் பயன், நான்கு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் அது.  

நீண்ட பிரயத்தனத்தின் பின்னர் மலரம்மா கதைக்கத் தொடங்கினார். “தொண்ணூறாம் ஆண்டு, தொடர்ச்சியாக ‘புக்காரா’வின் (குண்டு வீச்சு விமானம்) குண்டுமழைக்கு நடுவில், எங்கள் மக்கள் வீடு வாசல், ஊரின் மண் வாசத்தையெல்லாம் இழந்து, பிரிந்து, தூரதேசத்துக்கு நடந்து கொண்டிருந்தனர். ‘இஞ்சேரப்பா, எல்லாரும் போய்க் கொண்டிருக்கினம். நாங்கள் இந்தச் சின்னனுகளை வைச்சுக்கொண்டு என்ன செய்யப்போறம். அவங்கள், மாறி மாறி ஷெல்லடிச்சுக் கொண்டிருக்கிறாங்கள்’ எண்டு அவரிட்ட அடிக்கடி சொல்லியிருப்பன். என்ரை மூத்தவள் நிலா உண்மையா நிலவு முகம்தான்! ‘அம்மா பெரியம்மாக்கள் போயிட்டினம்; நாங்களும் போவம்; பயமாக்கிடக்கு’ என்று அவள் கேட்கத் தொடங்கி இருந்தாள். கடைசிச் சின்னவன் கைக்குழந்தை. எனக்கு எல்லாம் யோசிக்கப் பயமாக்கிடந்தது. அந்த மனநிலையை வார்த்தையாலை சொல்ல ஏலாது. பயமும் ஏக்கமும், அமைதியற்ற நிலையும் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற அல்லாட்டம் தான் நிறைந்திருந்தது. ‘பொறடியப்பா! நீ சும்மா பயப்பிடுறாய், நிலைமையைப் பாத்து நாங்களும் வெளிக்கிடுவம்’. அவரின்ரை கண்ணிலும் பயம் தெரிந்தது. எனக்கு, ஏதோ நடக்கப்போகுது எண்டு விளங்கிட்டுது; என்ன நடந்தாலும் நான், என்ரை பிள்ளையளைக் கொண்டு, எப்படியாவது போயிடவேணும் எண்டு முடிவெடுத்திட்டன். காலமை பத்து மணியிருக்கும், எங்கட நாய் பதறிப்பதறி, ஓடிஓடி குலைக்கத் தொடங்கியது. எனக்கு நெஞ்சு பதறத்தொடங்கிட்டுது. சாப்பிட இடியப்பமும் அவிச்சு, கும்பிளா மீனில குழம்பும் வைச்சனான். இவர் கடற்கரைக்குப் போட்டார். ஒரு கிண்ணியிலை இடியப்பத்தை அடுக்கி வைச்சுப்போட்டு,பிள்ளையளை எல்லாரையும் கூட்டிக்கொண்டு, எனக்குப் பக்கத்திலை இருக்க வேண்டும், ஒருடமும் போகக்கூடாது என்று சொன்னன். பிள்ளையளும், அம்மா ஏதோ பிரச்சினை எண்டுதான் அப்பிடிச்சொல்லுறா எண்டு நினைச்சு, என்னைச்சுத்தி வரிசையா இருந்ததுகள். எனக்கு இப்பவும் நினைவிருக்கு! பிள்ளையள் என்ரை முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததுகள். பயத்திலை முகமெல்லாம் வெளிறிப்போச்சு; எனக்குத் தொடர்ச்சியாப் பக்கத்திலை கேட்ட வெடிச்சத்தத்திலை என்ன நடக்குது, என்று தெரிஞ்சாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல், செல்லங்களே ஒருத்தரும் பயப்பிடக்கூடாது, அம்மா இருக்கிறன் தானே! அப்பா இப்ப வந்திடுவார், நாங்கள் வெளிக்கிட்டுப் போவம், அதுவரைக்கும் அம்மாவை விட்டு ஒருத்தரும் அசையக்கூடாது என்று சொன்னன்! அப்பிடிச்சொல்லி, பிழை விட்டுட்டேன்! ஐயோ! நான் பெரிய பிழையவிட்டுட்டேன். கடற்கரையில ஒரே பெரிய வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் என்ரை சின்னனை, மடியிலை வைச்சுக்கொண்டு, சுத்தி எல்லாரையும் வைச்சுக்கொண்டு இருந்தன். (இரு கைகளையும் மடித்து, தன் மடியோடு அந்தக் குழந்தையை அணைத்து வைத்திருந்ததைச் செய்து காட்டுகிறார்) காதைப்பிய்க்கிற மாதிரி ஒரு சத்தம் கேட்டது. பக்கத்திலை தான் குண்டு விழுந்தது. எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்களைச்சுத்திப் பளீர் என்று ஒரு வெளிச்சம் வந்து போனது. என் வயிற்றில் சுரீரென்று ஏதோ குத்தியது போல இருந்தது. மயக்கம் வருமாப்போல இருந்தது. பிறகென்னத்தைச் சொல்ல; நான் என்ரை நாலு பிள்ளையளையும் கண்ணுக்கு முன்னாலே பறிகொடுத்துவிட்டேன். அம்மா என்று பெரிய அழுகைச்சத்தம் தான் கேட்டது. என்ர நாலு பிள்ளையளும் என்ர கண்ணுக்கு முன்னாலயே சிதறிப் போயிட்டினம். (சொல்லி முடிக்க முன், மலரம்மாவில் பெருகும் கண்ணீர், மேலும் பேசத் தடைவிதிக்கிறது) என் கண்ணீருக்கு யாரும் பதில் சொல்ல முடியாது. என்ரை கைக்குழந்தையையும் என்ரை நிலாவையும் எல்லாரையும் பறிகுடுத்திட்டேன்; இன்றைக்கு நான் நடைப்பிணமாகத் திரியுறேன்.. இன்றைக்கும் என் கண்முன்னே என்ரை பிள்ளைகள் கத்தியழுத காட்சிதான் வருகிறது. என்னவென்று நான் மறப்பேன். கண்ணுக்கு முன்னாலை கத்திக் கத்தி இரண்டுபேரும், ஒரு சத்தமும் இன்றி இரண்டுபேரும், ஐயோ.... இப்ப நினைச்சாலும் என்ரை நெஞ்சு பத்தியெரியுது”  

அந்த நாளிலிருந்து, அனைவரிடமும் ஒதுங்கி வாழ்ந்து, தன்னுடைய மனதின் ஆழத்திலுள்ள சோகங்களைக் கொட்டி அழாத, அந்த அம்மாவின் சோகங்களுக்கு, எங்களின் வருகை ஒரு வடிகாலாக அமைந்தது என்கிறார், அவருக்கு இப்போது உளச்சிகிச்சை அளித்து வரும் களப்பணியாளர் ஒருவர்.  

கிட்டத்தட்ட 60 வயது மதிக்கத்தக்க அந்த அம்மாவின் கைகள் இரண்டும் தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்றப் போராடிய போராட்டத்தில் செயலிழந்து விட்டன. உடலின் பல்வேறு பகுதிகளிலும் போர் கொடுத்த வடுக்களைத் தாங்கியுள்ளார். 

தன்னுடைய பிள்ளைகளை, எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்திலிருந்து சற்றேனும் இன்னும் அவர் விடுபடவில்லை.  “மூத்தவள் இப்ப எப்படியும் கல்யாணம் கட்டியிருப்பாள். என்ரை கடைசி இன்டைக்கு படிச்சுப் பெரிய நிலைமையிலிருப்பான்; ரெண்டாவது அப்பவே சொல்லுவான், அம்மா நான் படிச்சு பெரிய எழுத்தாளனா வருவேன் என்று” அடிப்படையில், படிப்பில் கெட்டிக்காரக் குழந்தைகள் போலும்! 

மலரம்மாவும் அந்தக் காலத்திலை எஸ்.எஸ்.சி (சாதாரணதரத்துக்கு நிகரானது) படித்தவர்தான்!  
“என்னையும் உந்தக் கொடிய ஷெல் கொண்டுபோயிருக்கவேணும். தப்பவிட்டு, இண்டைக்கு நான் அநாதையாக நிக்கிறேன். என்ரை அக்காவின்ர பிள்ளை வீட்டை சாப்பிடப்போவன்; அவன் ஒன்றும் சொல்ல மாட்டான். ஆனாலும், என்ரை மனம், அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு வரும் வரைக்கும், உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கும். நாங்கள் எப்படியிருந்த குடும்பம்; நான் தனிய அலைஞ்சி கொண்டிருக்கிறன். என்னைய சிலர், ‘பிள்ளையளைப் பறிகொடுத்ததிலை அவளுக்குப் பைத்தியமாக்கிட்டுது என்று சொல்லுகினம்’ எங்கடை ஊரிலை இருக்கும் போது, எல்லா நாளும் என்ரை பிள்ளையளின்ரை நினைவு தான். நான் நிறையக் கனவோட இருந்தனான். என்ரை கனவுகள் எல்லாம் அழிஞ்சு போய்விட்டன. நான் யாரோடை கதைச்சு என்னத்தைப் செய்யப்போறன். இனி நான் நல்லா வந்து, யாருக்கு என்ன லாபம்? ஏதோ என்ரை காலம் முடியுற வரைக்கும் நான் இப்பிடியே இருந்திட்டு செத்துப்போறன்” தொடர்ந்தும் பெரிய சத்தத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.  

ஒரேநேரத்தில் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் கண்ணுக்கு முன்னாலேயே பறிகொடுத்துவிட்டு, இழிவிரக்கத்துடன், தொடர்ச்சியாக யாருடனும் பேசாது, மனதிலுள்ள துன்பங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்துக்கொண்டிருந்த மலரம்மாவில் இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக உளசிகிச்சைப் பணியாளர் சொல்கிறார். 

கோவிலுக்குச் செல்லவும் அயலாருடன் பேசவும் தன் வீட்டுக் கடமைகளைத் தானே செய்துகொள்ளவுமான மாற்றங்களை களப்பணியாளர் அவதானித்துப் பட்டியலிடுகின்றார்.  

போர் இப்படித்தான் விளைவுகளைச் செய்யும். நீண்டகாலமாகச் செரிக்காத நிலையிலிருந்து, மனிதர்களை மன ஊனமாக்கும்; மலரம்மா அதற்குச் சாட்சி.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடு/91-230354

சதம்

6 months 2 weeks ago
சதம்
Editorial / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:39 Comments - 0

-ஜெரா

 

‘அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன்’ என்று, வேலை வெட்டியில்லாதவர்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில், ஐந்து சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே, இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. 

பழமொழி குறிப்பதுபோல, ஐந்து சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும் ரூபாய்களின் அறிமுகமும், அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும், காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்களிடம், சதத்தின் பெறுமதி குறித்த கதைகள் நிறையவே உண்டு. அவர்களுடைய காலத்தின் பொருளாதார நிலையை, குப்பைகளில் கிடக்கும் சதங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக நாணயப் புழக்கம் என்பது, குறித்த சமூகம் ஒரு மய்யப்பட்ட அதிகார சக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையிலேயே சாத்தியமாகும். அதாவது, அந்தச் சமூகத்தை ஆள்வதற்கு ஒரு தலைவனோ, மக்கள் மயப்பட்ட நிர்வாகமோ இருக்கும்போது, அவர்களின் கொடுக்கல் - வாங்கல்களுக்காகப் பணம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதை வெளியிடும் அமைப்பு, ஆளுபவர்களின் அங்கிகாரம் பெற்றதாக இருக்கும்.

இலங்கையை அல்லது வடக்கைப் பொறுத்த வரையில், கி.மு 2500ஆம் ஆண்டுகளில் இருந்து இவ்வாறான சதங்கள் கிடைக்கின்றன. ஆகவே, குறித்த காலப்பகுதியிலிருந்து இலங்கையில் அதிகாரமயப்பட்ட அரசுகள் உருவாகிவிட்டன என்ற முடிவுக்கு வரமுடியும். அத்துடன், கொடுக்கல் - வாங்கல் முறையான பண்டமாற்று முறையும் மாற்றம் கண்டு, பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் முறையும், வணிகமயப்பட்ட சுரண்டல் சமுதாயத்தின் உருவாக்கத்தையும், சதங்களின் வருகையிலிருந்து அவதானிக்கலாம்.

எங்கள் மத்தியில், அரைச் சதத்திலிருந்தே சதப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரான பணத்துக்கு நிகரான உலோகக் குற்றியை, அனா என்கின்றனர். “ஆறு அனாவுக்குக் குதிரையும் வேணும், ஆறுகடக்கப் பாயவும் வேணும்” என்ற பழமொழியும், சதத்துக்கு முன்னராக பணப்புழக்கத்தை நினைவுபடுத்துகின்றது. 

அரைச் சதம் பாவனையிலிருந்தது, இப்போதிலிருந்து 3 அல்லது 4 தலைமுறையினருக்கு முன்பான காலத்திலாகும். அதாவது, தமிழ் உறவு முறையின்படி பூட்டன், பூட்டிக்கும், அவர்களுக்கு முந்திய தலைமுறையினருக்கும் உரிய பணமே அரைச் சதம். அவர்களின் காலத்தில், அரைச் சதமென்பது பெரும் பணம். அதைக் கொண்டு, நாளொன்றின் முக்கிய பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். அதிகளவில் அரைச் சதத்தின் பயன்பாடு, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பான காலத்திலேயே இருந்திருக்கின்றது. 

செப்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட அரைச் சதங்களில், பிரித்தானிய இளவரசி அல்லது இளவரசனின் தலைச் சின்னம் பொறிக்கப்பட்டு, தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அரை என்பதை, ஒன்றின் கீழ் இரண்டாக எண்ணில் எழுதி வெளியிட்டிருப்பார்கள். அதிலும், தமிழில் எழுதப்படுகிகையில் “ரூ. சதம்” என்று தெளிவாகத் தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அரைச் சதங்களைக் கொண்டு, அந்தக் காலத்து அரசியலைச் சொல்லிவிடலாம். இலங்கை, நேரடியாக பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பணம் உள்ளிட்ட முக்கிய அரச விடயங்களை, அவர்களே கவனித்துக் கொண்டனர். அந்த அரச நிர்வாகம் எப்படி இருக்குமெனில், அரசாளுபவருக்கு முன்னிலையளித்திருக்கும். அதை நாணயத்தில் தம் தலையைப் பொறித்துக் கொள்ளவதிலிருந்து அறியலாம். இப்படி அவரவர் சிந்தனைக்கும் அறிவுக்கும் அமைவாக, இந்தக் காலத்தில் பெறுமதியற்றுக் கிடக்கும் அரைச் சதத்துக்குப் பின்னாலிருந்த அரசியலைப் புரிந்துகொள்ளலாம்.

இனி, ஒரு சதம். ஒரு சதத்தைப் பயன்படுத்தியவர்கள், நம்மிடையே இருக்கின்றார்கள். அதாவது, வாழ்வின் இறுதி அந்தத்தில் இருப்பவர்கள், ஒரு சதப் பாவனையளார்களாயிருப்பர். “அந்தக் காலத்தில, ஒரு சதத்துக்குத் தோடம்பழ இனிப்பும் கலர் கலராய் விற்கும் பல்லி முட்டாசும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறன்” என்கிறார், அப்படியான ஒருவர். ஆக, ஒரு சதம், பாடசாலைக் குழந்தைகளில் பைக் காசாக அப்போது இருந்திருக்கிறது. ஒரு சதத்தையும், பிரித்தானியர்களே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அரைச் சதம் போன்ற அமைப்புடன், ஆங்கிலத்தில் மட்டும், சதத்தின் பெறுமதியைக் குறித்து, தமிழ், சிங்கள மொழிகளில் சதம் என்பதை மட்டுமே குறித்திருக்கின்றனர். ஆரம்பகால ஒரு சதம், முழுக்க முழுக்க பிரித்தானியர்களின் பணமாக இருந்திருக்கின்றது. தமிழ் - சிங்கள மக்கள் பணத்தின் பெறுமதியை அறிந்து கொள்ள மாத்திரமே, அவர்களது சுதேசிய மொழியில் சதம் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் வெளிவந்த ஒரு சதத்தில், சிங்களப் பெரும்பான்மைப் பலம் அதிகரிப்பதை அவதானிக்கலாம். ஆங்கிலத்தில் “சிலோன்” என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டதற்குப் பதிலாக, அதைவிடப் பெரிய எழுத்துகளில, சிங்களத்தில் “ஸ்ரீ லங்கா” என்று பொறிக்கப்பட்டிருக்கும். சதத்தின் முன் பக்கத்தில் காணப்படும் இலங்கை - பிரித்தானிய இணைப்புச் சின்னத்தில், இந்த நாட்டைக் குறிக்கும் வாளேந்திய சிங்கமும், கீழே தமிழ் - ஆங்கிலத்தில் கண்ணுக்குத் தெரியாதளவில் “இலங்கை” என்று எழுதப்பட்டிருக்கும். உட்பக்கத்தில் கொட்டெழுத்தில் “சதம்” என சிங்களத்திலும், “ரூ.” (ரூபாய்) என்பதைத் தவிர்த்து, “சதம்” என்று தமிழிலும், “சென்ட்ஸ்” என்று ஆங்கிலத்திலும் சம அளவில் எழுதப்பட்டிருக்கும். பிரித்தானியாவிலிருந்து இலங்கை முற்றாக விடுதலை வாங்கிய 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த ஒரு சதங்களில், உட்பக்கம் மட்டுமே தமிழில் “சதம்” என்பது மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.

“இப்போது பெறுமதியற்ற ஐந்து சதம், அப்போது பெரிய காசு. அந்த நாளில அஞ்சு சதம் குடுத்தால், ஒரு குவியல் மீனும் இறாலும் வாங்கி, நல்லாச் சமைச்சுச் சாப்பிடலாம். யாழ்ப்பாணத்தில உள்ளுக்குள்ள ஓடுற பஸ்களுக்கு, அஞ்சு சதந்தான் குடுப்பம். ஒரு இடியப்பம், 3 சதத்துக்கு சாப்பிட்டிருக்கிறன். இப்பத்தைய இடியப்பம் எண்டு நினைச்சிப் போடாதையுங்கோ. அந்த காலத்தில கோதுமை மா, பாடை ஒட்டுறத்துக்குத்தான் வாங்குறது. அதால, அரிசி மா இடியப்பம்தான் அவிப்பினம். 3 இடியப்பம் சாப்பிட்டா, 9 சதம். ஒரு சதம் எண்டாலும் திருப்பித் தந்துடுவார் கடைக்காரர். இப்ப 10 ரூபாய் மிச்சம் எண்டாலும் இனிப்புத் தாறாங்கள்” என்கிறார், ஐந்து சதத்தின் பெறுமதியறிந்த ஒருவர்.

பிரித்தானியர் இலங்கையில் வெளியிட்ட ஐந்து சதங்களில், அவர்கள் இந்திய, இலங்கை நிர்வாகங்களை ஒரே வரிசையில் மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. ஒருபக்கத்தில் இந்தியாவுடன் இணைந்ததே இலங்கை என்பதைக் குறிக்கும் எழுத்துகள், ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும். சதத்தின் உட்பக்கத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளுக்கு சம அந்தஸ்து வழங்கியிருப்பார்கள். இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலங்களில் வெளியிடப்பட்ட ஐந்து சதங்களில், சிங்களப் பெரும்பான்மைத்துவம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

“பத்துச் சதம் என்பது மிகப்பெரும் பணம். ஒரு நாள் செலவுக்கு, பத்துச்சம் (பத்துச் சதம்) மிச்சம்மிச்சமா போதும் தம்பி. அந்த நாளையில, ஒரு நாள் கூலிச் சம்பளமே பத்துச்சம்தான். சில பேர், சதம் வாங்குவாங்கள். சிலர் சாப்பிட்டிட்டுத் தோட்டத்தில இருக்கிற எதையாச்சும் எடுத்துக் கொண்டு போவாங்கள். தென்னை மரம் ஏறித் தேங்காய் புடுங்க, பத்துச்சம். பனை ஏற 15 சதம். சதம் வாங்காட்டி, 3 தேங்காய் வாங்கிக் கொண்டு போவாங்கள்” என்பவரிடம், சதம் பற்றிய அதிக குறிப்புகள் உண்டு. “அந்த நாளில புதுப்படம் எண்டால் 65 சதம், பழைய படம் எண்டா, 35 சதம், அரை ரிக்கேட் 25 சதத்திலிருந்து 10 சதம் வரைக்கும் போகும். 25 சதம் இருந்தா, படம் பாத்து, அண்டைய நாள் முழுதும் நண்பர்களோட யாழ்ப்பாணம் முழுதும் சுத்தித்திரிஞ்சிச் சாப்பிட்டும் போடுவம். இப்பயெண்டால் முடியுமே?” என்கிறார். அந்தத் தலைமுறை, வாழ்வைச் செலவின்றி அனுபவித்துத்தான் இருக்கின்றது என்பதை, சதப்பாவனை குறித்த அவர்களின் நினைவுகள் சொல்கின்றன.

பத்துச் சதத்திலும், பிரித்தானியர்கள் தெளிவாகவே செயற்பட்டிருக்கின்றனர். அவர்கள் தவிர்ந்த இலங்கையர்களுக்கு, சதத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் பின்னர் வெளியிடப்பட்ட வெள்ளிப் பத்துச் சதங்களில், இலங்கை அரசின் குறியீடும், அதாவது சக்கரத்துக்குள் வாளேந்திய சிங்கம், உள்ளே தமிழில் பத்துச் சதம் என எழுத்தில் எழுதப்பட்டும் உள்ளது.

இவை அனைத்தையும் இணைத்தே 25 சதம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியர் இலங்கையில் வெளியிட்ட 25 சதங்களில், தமிழில் தெளிவாக “சதம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும். சிங்களத்தில் வெறும் “சதம்” என்பது மட்டும் குறிக்கப்படும். வழமையான அவர்களின் இளவரசர் தலைச் சின்னம் பொறித்த சதமாகவே இதுவும் காணப்பட்டது. இலங்கை அரசாங்கம் வெளியிட்ட 25 சதங்களில், பெரும்பான்மைத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருக்கும்.

இவ்வாறாக 25 சதத்தைத் தாண்டிய சதங்களின் பாவனை 50 சதமாகவும், பின்னர் ஒரு ரூபாயாகவும், இரண்டு, ஐந்து, பத்து, பத்தாயிரம் ரூபாயாகவும் மாறியது. உலகம் சுருங்கி வியாபாரமயப்பட சதங்களின் பெறுமதி குறைந்து, மறைந்தே போனது. ரூபாய்களின் பெறுமதி அதிகரிக்க அதிகரிக்க, சமூகத் தேவைகளும் அதிதீவிர சுரண்டல்களும் ஏற்பட்டன. நாளொன்றின் சராசரித் தேவை, அரைச் சதத்தில் தொடங்கி 1,000 ரூபாய்களைத் தாண்டிச் செல்கிறது. சதங்களின் காலத்தில் இல்லாத களவு, கொள்ளை, வழிப்பறிக் குற்றங்கள் ரூபாய்களின் காலத்தில் மிதமிஞ்சிவிட்டன. சதங்கள் பெறுமதியாக இருந்த காலத்தில், பெறுமதியாக இருந்த மனிதன், ரூபாய்கள் பெறுமதியாக இருக்கின்ற காலத்தில், பெறுமதியற்றுப் போகிறான். ரூபாய்களின் முன்னால், மனிதன் சதமானான்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சதம்/91-230086

 

வணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01

6 months 3 weeks ago
வணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01
0a765ae3bb289b44652e0b9938c7e08a?s=26&d=By Admin Last updated Feb 18, 2019
 
 
Share

ம்…. இவளவு நாளா பொறுமையா இருந்திருந்து… இனி பொறுக்கேலாதெண்ட
கட்டத்திலை கணபதியப்பு சந்தியிலை வந்து நிக்கிறன் கண்டியளோ.. … சந்தி
எண்டவுடனை எனக்கு பழைய நினைவொண்டு வருது… முந்தி எங்கடை
சந்திவழிய உறுமல் எண்டொரு செய்திப்பலகை இருக்கும்.

தொடர்ந்து காணொளியில் பாருங்கள்…….

 

https://www.thaarakam.com/2019/02/18/வணக்கம்-பாருங்கோ-கணபதிய/

தலைமகனின் காதல்

6 months 3 weeks ago
தலைமகனின் காதல்
_18678_1550148537_CDE764F5-25B9-41FF-A04E-A182B541EC8F.jpeg

(அவதானி)

 அந்த ஒரு நிமிடம் வரைக்கும் அவர்கள் இருவருக்குமிடையில் எதுவும் இல்லை என்பது நிச்சயம்.

தென்னிலங்கை மற்றும் மலையகப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களை யாழ். மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுமாறு அரசிடம்  கோரிக்கை விடப்பட்டது. இதனை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஏற்றுக்கொள்ளவில்லை.  இதனால் யாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக்  கழக மாணவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிட்ட நேரம்  வாகனங்களினால் ஒலி (ஹோர்ண்) அடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் அந்த ஏற்பாடு சரியாக நடந்தது.

அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்துக்கு யாழ். நகரப்பகுதிக்கு வந்த சகல வாகனங்களையும் மறித்து யாழ். முற்றவெளிப்பகுதிக்குக் கொண்டு சென்றனர் பொலிஸாரும் படையினரும். அந்நேரம் வந்ததும் ‘‘சரி இண்டைக்கு ஹோண் அடியுங்கோ பாப்பம்” என்றனர். அத்துடன் அந்த நடவடிக்கை முடிவுற்றது. புலிகளைத் தவிர ஏனைய  இயக்கங்கள் யாவும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளித்தன. ஜே .ஆர். அரசு  இம்மாதிரியான போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது என்ற சாரப்பட தமது நிலைப்பாட்டை துண்டுப்பிரசுரம் மூலம் புலிகள் வெளிப்படுத்தினர்.

தமது கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்து

கின்றது என்றவுடன் சாகும் உண்ணவிரதம் வரை என மாற்றுவது என்று மாணவர்கள் முடிவெடுத்தனர்.  இந்த முடிவெடுத்ததும் புலிகள் ‘ஆபத்தான வேலையில் இறங்குகின்றீர்கள்| ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள்தான் பொறுப்பு’ என எச்சரித்தனர்.

குடாநாட்டு மக்கள் பெருமளவில் உங்களுக்கு ஆதரவு வழங்குவதைக் கண்டே இந்த விஷப்பரீட்சையில் இறங்குகிறீர்கள் என யாழ். பல்கலைக் கழக மாணவரவைத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராசாவுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. (அவர் புலிகள் இயக்கத்துக்குச் சார்பாகத்தான் இருந்தார். பின்னர்தான் முழு நேர உறுப்பினராகி மாவீரரானார்.)

எதிர்பார்த்தது போல ஜே. ஆர் இறங்கி வரவில்லை. உண்ணாவிரதமிருந்தோரில் லலிதா என்ற மாணவிக்கு விக்கல் எடுத்தது. அந்த நேரம் தான் சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது மாணவர்களுக்கு. புலிகளிடம் ஓடிவந்தனர்.  அவர்களைச் சாக விடமுடியாது. உண்ணாவிரதத்தை இடைநிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனைய இயக்கங்களுடன் கதைத்து உடனே முடிவெடுக்கவேண்டிய நிலை. ரெலோவில் மட்டுமே முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் உள்ளோர் அங்கு நின்றனர்.  “நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தி அவர்களைக் காப்பாற்றப் போகிறோம்’’  என புலிகள் தங்கள் முடிவைச் சொன்னார்கள். ரெலோ சம்மதித்தது. நல்லவேளை சித்தாந்தங்களால் வறுத்தெடுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் போன்றவை அங்கு நிற்கவில்லை.  நின்றிருந்தால் அவர்களது சித்தாந்த விளக்கங்கள் முடியுமுன், யாராவது ஒருவர் உயிரிழந்திருப்பார்.புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த சுகந்தன் (ரவிசேகரம்) எல்லா மாணவர்களிடமும் கையெடுத்துக் கும்பிட்டு இந்தப் போராட்டத்தை நிறுத்துங்கள் என வேண்டினார்.  ரகு உட்பட மேலும் சில போராளிகள் உண்ணாவிரதமிருந்தோரை வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். ஓரிடத்தில்  வைத்து அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. உண்ணாவிரதமிருந்தோரில் நால்வர் மாணவிகள் . இதில் ஜெயலட்சுமி, வனஜா ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ். வைச் சார்ந்தவர்கள். லலிதா மற்றும் மதிவதனிக்கு எந்த இயக்கத்துடனும் தொடர்பிருந்திருக்கவில்லை.  அடுத்தநாள் புளொட், ஈபி.ஆர்.எல்.எவ். இந்த நடவடிக்கையை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டின. துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன. தமது

தோழிகளைத் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். கோரியது. அந்தக் கால கட்டத்தில் எந்தநேரமும் எங்கும் படையினர் சென்று வரக்கூடிய நிலை இருந்தது. மாணவிகள் கைதானால் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டினர் உட்படப் பலருக்கும் சிக்கல் வரலாம். இந்த ஆபத்தை விளக்கியபோதும்,  தோழர்கள் இதனைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. சந்தோஷம், சுகந்தன் போன்ற பொறுமையானவர்களே சினமடைந்துவிட்டனர். இங்கே கையளிக்க முடியாது. இந்தியாவிடம்தான் ஒப்படைப்போம் எனக் கூறினர்.  அனைவரும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  மாணவர்களில் படிகலிங்கம், ஜனகன் ஆகியோர் புலிகளுடன் இணைந்து கொள்ளச் சம்மதித்தனர். ஏனையோர்  அவர்கள் குறிப்பிட்டவர்களிடம் கையளிக்கப்பட்டனர்.  மாணவிகள் அன்ரன் பாலசிங்கம் தம்பதியினர் தங்கியிருந்த திருவான்மியூர் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குதான்பிரபாகரன் தங்கியிருந்தார். வைத்திய சிகிச்சைக்காகச் சென்ற இன்னொரு போராளியும் அங்கு கொண்டு செல் லப்பட்டார். அங்கேயே எல்லோருக்கும் சமையல். ஈ.பி.ஆர்.எல்.எவ்.வைச் சேர்ந்த இருவரையும் அவர்களிடம் ஒப்படைப்பதற்காக சங்கர் (சொர்ணலிங்கம்) அவர்களின் பணிமனை   ஒன்றுக்குச் சென்றார். சென்னையில் உள்ள செய்தித் தகவல் மையத்தில் அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் அங்கு பொறுப்பில் இருந்தார்.

 

“எங்கிருந்து வருகிறீர்கள்” என்ற அவரது கேள்வி வில்லங்கத்தின் ஆரம்பம் எனப் புரிந்தார் சங்கர். “ரைகேஸில் இருந்து” என்று பதிலளித்தார். “எந்த ரைகேர்ஸ்” என்று அடுத்த கேள்வி. “ரைகேஸ் என்று சொல்லுறதுக்கு எந்த இயக்கத்துக்கு உரிமை இருக்கோ அதில இருந்துதான் வாறன்’’ என மீண்டும் பொறுமையாகப் பதிலளித்தார். தொடர்ந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் விதண்டாவாதங்கள், சித்தாந்தங்கள் சங்கர் திரும்பிவிட்டார். பிரபாகரனிடம் நடந்ததைக் கூறினார்.

இதனை ஜெயலட்சுமியும் வனஜாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். “எங்கட விசயமா பேச வந்ததெண்டு சொன்னவுடனேயே நாங்கள் சுகமா இருக்கிறமோ எண்டுதான் அவை கேட்டிருக்கவேணும். எங்கட நலனை விட அவைன்ர பிரச்சினைதான் பெரிசா இருக்கு. ஆனபடியா நாங்கள் அங்க போக விரும்பேல்ல. இனி எங்கட விசயமா அவையோட கதைக்காதேங்கோ.” என்றனர்.

***

 

அடுத்தது மதிவதனி.  அவரின் உறவினர் சென்னையில் இருந்தனர். அவர்களிடம் மதிவதனியை ஒப்படைக்குமாறு ராகவனிடம் சொன்னார் பிரபாகரன்.  அப்படியே நடந்தது. ஆனால், அதற்கடுத்த நாளே மதிவதனி அங்கு திரும்பி வந்துவிட்டார்.. “இவ்வளவு பேரோட ஒண்டா இருந்திட்டு அங்க தனிய இருக்க விசராக் கிடக்கு” என்பது அவரது கூற்று.

இக்காலப்பகுதியில் ஹோலிப்பண்டிகை வந்தது. வீதியில் மஞ்சள் கலந்த  (பல்வேறு வர்ணம்) நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றுவர் இப்பண்டிகையின்போது. இதனைக் கண்ணுற்ற மதிவதனி அந்த வீட்டில் மஞ்சள் பொடியைக் கரைத்தார். வேறு எங்கே முக்கிய அலுவலாகப் போகவேண்டியிருந்த பிரபாகரன், இந்த வீட்டுக்கு வந்து கதவைத் திறந்ததும் மஞ்சள் நீரை அவர் மீது ஊற்றினார் மதிவதனி. வெள்ளை வெளீரென்ற சட்டையுடன் வந்த அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. இந்தமாதிரி அவருடன் எவரும் பழகியதில்லை. தனது சட்டையைப் பயன்படுத்த முடியாதே என்ற கோபமும் அவருக்கு. பாடசாலை வாழ்வு, தலைமறைவுக் காலம் எதிலும் இவ்வாறான உரிமையை அவரிடம் எவரும் எடுத்ததில்லை. கோபத்தில் திட்டிவிட்டார் அவர்.

மதிவதனி  அழுதுகொண்டே ஓடினார். தானும் அவசரப்பட்டுப் பேசிவிட்டேன். பொறுமையாக இருந்திருக்கலாம் எனஅவர்நினைத்திருக்கிறார் போலும்...தனியே அழுதுகொண்டிருந்த மதிவதனியைச் சமாதானப்படுத்தினார். அந்தக் கணத்தில் தான் அந்தப் பொறி விழுந்தது. விழுந்துவிட்டேன் காதலில் என உணர்ந்தார தலைவர். அதைப் பின்னர் மதிவதனியிடம் தெரிவித்தார்.   அவரும் சம்மதித்தார். பாலா அண்ணரிடம் இதைத் தெரிவித்தார் பிரபாகரன். மாப்பிள்ளைத் தோழனாக கே.பி. இருக்க, வடபழனி கோயிலிலே அவர்கள் திருமணம் நடந்தது. போராட்டத்தின் ஆரம்பத்தில் போராளிகளாக இருப்பவர்கள் திருமணம் முடிப்பதில்லை என்ற நிலை இருந்தது. அப்பையா அண்ணன், இளங்கோ போன்ற ஏற்கனவே திருமணமானவர்களைத் தவிர, ஏனையோர் திருமணமாகாமலே இருந்தனர். ஆதரவாளராக இருந்த குடும்பஸ்தரான தேவா அண்ணாவும் இணைய நேர்ந்தது. தொடர்ந்து பல போராளிகள் தமக்கிடையே மலர்ந்த காதலால் தம்பதியாகினர். சில பெண் போராளிகள் சிவிலியன்களாக இருந்தவர்களைத் திருமணம் முடிக்குமளவுக்கு நிலைமை மாறியது. பிரபாகரன், பொட்டு, சங்கர் போன்றோரைத் திருமணம் செய்ததால் அவர்களது துணவியரும் தம்மை அழித்துக்கொண்டனர். பல போராளிகளின் துணைவியரும் கொல்லப்பட்டனர். இறுதியில் சரணடைந்த போராளிகளின் துணைவியரும் அவர்களுடன் சென்று காணாமல் போயினர். திருமணமான பெண் போராகளிகளும் தம்மை அழித்துக்கொண்டனர். சில மாவீரர்களின் பிள்ளைகள் போராளிகளாகினர். சில போராளிகளின் பிள்ளைகள் மாவீரர்களாகினர். சில மாவீரரின் பெற்றோர் போராளிகளாகினர்.பல்கலையில் உண்ணாவிரதம் இருந்தோரில் லலிதா என்பவர் போராளியாகி செஞ்சோலையின் பொறுப்பாளராக மாறினார். கிளிநொச்சியுடன் அவரும் ஆயுதத்தைக் கட்டிக்கொண்டு தான் வளர்த்த பிள்ளைகளைப் பிரிந்துசொன்றார். ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பாக ஆரம்பத்தில் இருந்த ஜெயலட்சுமி புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார். மாவீரர்நாள் பாடல் உருவாக்கவேண்டுமென்பது இவரது சிந்தனையே. இதனை புதுவையண்ணை செயற்படுத்தினார்.

 

_18678_1550148630_CB2235BC-526B-49FA-87D

http://www.battinaatham.net/description.php?art=18678

Checked
Mon, 09/16/2019 - 20:54
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed