கவிதைக் களம்

கடலின் சலனம் ( கரை வாழ் மனிதர்)

4 days ago

வைகறை நேரத்தில் கரை தாண்டி கடல் தீண்டி கட்டுமரம்  சென்றதே

அந்தி மாலை ஆனதே அந்த ஆதவனும் அரைபாதியாக மேற்கு எல்லையில் நின்றதே

கரை திரும்புமா கட்டுமரம் அதில் எனை மணம்முடித்த

மணவாளனும் பாதுகாப்பாக திரும்பி வந்திடுவானா  என காத்திருக்கும்

மனைவியின் கன்னத்தில் கண்ணீர் துளிகளும்

தாமத்தின் பதற்றத்தில் மங்கை அவள் மனதில்

நடுகடலில் ஆழிசுழல் வந்து களத்தினை பாதித்ததோ

அண்டை நாட்டு கள்வர்களால் பாவம் நிகழ்ந்திருக்குமோ

என எல்லைக்கடந்ததே எண்ணங்கள் 

என்னவளின் மனதில் என கூறிடும் அலையின் சலனங்கள்

அதை என்றும் கைது செய்திட ஆளில்லை 

என்னவளின் அச்சத்தினால் அதை நிறைவு செய்திட இயலவில்லை

கண்ணெதிர கணவனை காணும் வரை....

நிழலுக்கு வெட்கம்

4 days 20 hours ago

பகலவன் பார்வையிலே 

பதுங்கி நிற்கும் நிழலே

சிறு தட்பம் தந்தாய் பாதத்திலே

அந்த நிமிடம் இளைப்பாறிய தேகத்திலே

புத்துணர்வு தந்தாய் புன்னகை வெட்கத்திலே

இந்த இரவு நேரத்திலே

இதயத்தின் ஓரத்திலே

உன் மீது தோன்றிய மோகத்தினாலே

உன்னை எண்ணி

வர்ணித்தேன் சில வரிகளாளே........

 

 

ஆண்டவர் வரலாறு.

1 week 4 days ago

தையில் பிறப்பாய்

மாசியில் குளிர்வாய்

பங்குனியில் உலர்வாய்

சித்திரையில் புலர்வாய்

வைகாசியில் மிளிர்வாய்

ஆனியில் அடிப்பாய்

ஆடியில் கூழல்வாய்

ஆவணியில் மங்குவாய்

புரட்டாதியில் நனைவாய்

ஐப்பசியில் பொழிவாய்

கார்த்திகையில் சுடர்வாய்

மார்கழியில் வீழ்வாய்..!

ஆண்டே இது தான்

ஆண்டவர் வரலாறு. 

சில நேரங்களில் சில மனிதர்கள்- பா.உதயன்

1 month ago

 சில நேரங்களில் சில மனிதர்கள்

இருக்கும் போது போற்றுவதும் 
இல்லாதபோது தூற்றுவதுமாய் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

இருக்கும் போது வருவதும் 
இல்லாதபோது மறப்பதுமாய் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

நல்லவர் போல் நடித்து 
நம்மை கீழே போட கதைப்பதுமாய் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

பழைய கோத்திரம் பாடி
பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

அவர்களை தெரியும் எமக்கு 
அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்

வாழும் போது தூற்றி விட்டு 
வாழ்வு போன பின் வந்து 
வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று 
பொய் உரைத்து போற்றுவார்கள் 
சில நேரங்களில் சில மனிதர்கள்

எல்லோருக்கும் உபதேசம் செய்வர் 
பின்பு படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் 
என்பது போல் இருப்பார் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

கட்டி வந்த பொட்டலங்களோடு இருந்துகொண்டு 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பர் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

அவருக்கு என்ன தெரியும் 
அரசியல் தெரியாத செல்லாக்காசு என்பர் 
சோக்கிரட்டீஸ் உடன் படித்தவர் போல் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

உதவிகள் மட்டும் கேக்க வருவார் 
அடுத்த நாள் கண்டால் 
யார் இவர் என்பார் 
சில நேரங்களில் சில மனிதர்கள்.

தற்பெருமை பேசி 
தம்மையே புகழ்வர் 
சில நேரங்களின் சில மனிதர்கள்.

தேடிப் பார்க்கிறேன் மனிதர்களை 
எங்கேயும் கண்ட மாதிரி இல்லை.

பா.உதயன்.
 

பொங்கல் வாழ்த்து

1 month ago

பொங்கல் வாழ்த்து 2020.

இரண்டாயிரத்து இருபதிலே எங்கும் தமிழர் இனமதனை

அண்டாதிருக்கப் பெருந்துயரம் அகலத் தீமை இருள் விலக

உண்டாயிருக்கத் திருவெல்லாம் ஓடி மறையப் பகையெல்லாம்

திண்டோளுயர்த்தி ஞாலமதில் சீரும் சிறப்பும் பெறுவோமா?;

 

தமிழைக் கணனி தனிலேற்றி தரணியறியப் புகழேற்றி

அமிழ்தின் இனிய எம்மொழியை அகிலத் துயர்த்தி அறிவியலில்;

கமழும் மொழியாயுருவாக்கி கலைகள் நிறைத்துச் செறிவாக்கி

திமிரோடிருந்த எம் பெருமை திரும்ப நாங்கள் பெறுவோமா

 

நாடொன்றமைத்துப் படைபலத்தால் நாங்கள் வாழ்ந்த பெருவாழ்வை

கேடென்றுலுத்தர் எண்ணியதால் கீழ்மைச் செயல்கள் பலசெய்து

வாடப் பலபேர் அகதிகளாய் வதைகள் புரிந்து வன்னியிலே

ஆடத் தருமம் நிலை தாழ்ந்த அவலம் போக்கி உய்வோமா?

 

வங்கக் கரையில் நிலைத்துயர்ந்த வாழ்க்கை இன்று மண்ணாகி

மங்கத் தமிழன் சிரம் தாழ்ந்து மாணா மானத்தாற் குறுகி

எங்கள் வரலாறழிந்தொழிய இயலாதவராய் வீழ்ந்ததுபோய்

பொங்கி மறவர் மீண்டுவரும் போழ்தை இனி நாம் காண்போமா?

 

இனிய பொங்கற் திருநாளில் எமக்காய் இந்த ஞாலமதில்

தனியே அரசொன்றமைத்திடவே சபதம் எடுத்து, தலை தாழ்ந்து

குனியான் தமிழன் எத்தகைய கொடுமை செயினும் யாருக்கும்

பணியான் என்ற பாடமதை பலரும் படிக்க வைப்போமா?

 

ஓர் நாள் எமக்காய்த் தமிழ்த்தேசம் உலகில் உதிக்கச் செய்வோமென்(று)

ஏர் நாள் தன்னில் எல்லோரும் எடுக்கும் சபதம் நிறைவேறி

பார்மீதினிலே தமிழர் கொடி பட்டொளி வீசிப் பறப்பதற்காய்

வாரீர் வாரீர் ஆர்வலர்காள்; வாழ்வைச் சிறிது கொடுப்போமா?

அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

சித்தி கருணானந்தராஜா.

பொங்குக தமிழா பொங்குக-பா.உதயன்

1 month ago

 

காலை புலர்ந்தது காலை புலர்ந்தது 
காலைச் சேவல் கூவிச் சொன்னது 
கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் 
பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது 

உழவனுக்கு என்றே உலகம் செய்து 
உன்னையும் என்னையும் உயிரோடாக்கி 
மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை 
எண்ணுக மனமே எண்ணுக 

காலை புலர்ந்தது காலை புலர்ந்தது 
எழுக தமிழா எழுக தமிழா 
இன்றைய காலை உனக்காய் விடிந்தது 
பொங்குக மனமே பொங்குக 

வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய 
வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து 
வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு 
வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும் 

ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க 
அழகிய குயில்கள் கூவி பாடின 
காலையில் மல்லிகை கோலம் போட்டாள்
கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் 

அன்பு நெஞ்சங்களுக்கு தமிழன் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள் 

பா .உதயகுமார் 

ஊழிக் கால நடனம் - நிழலி

1 month ago

பனியும் மழையும் இல்லா
குளிர் கால இரவொன்றை
கடும் காற்று
நிரப்பிச் செல்கின்றது

...

காற்றின் முனைகளில்
பெரும் வாள்கள்
முளைத்து தொங்குகின்றன
எதிர்படும் எல்லாக்
கனவுகளையும்
வெட்டிச் சாய்கின்றன

திசைகள் இல்லா
பெரும் வெளி ஒன்றில்
சூறைக் காற்று
சன்னதம் கொண்டு
ஆடுகின்றது
புல்வெளிகளும் நீரோடைகளும்
பற்றி எரிகின்றன
தீ சூழும் உலகொன்றில்
பெரும் காடுகள் உதிர்கின்றன

காலக் கிழவன்
அரட்டுகின்றான்
ஆலகால பைரவன்
வெறி கொண்டு
ஆடுகின்றான்
சுடலைமாடன் ஊழித்
தாண்டவத்தின் இறுதி
நடனத்தை ஆரம்பிக்கின்றான்

அறம் பொய்த்த உலகில்
அழிவுகள்
ஒரு பெரும் யானையை போல்
நடந்து செல்கின்றது
மதனீரில் பாவங்கள் கரைகின்றது
பிளிறல்களில் எல்லா பொய்களும்
அழிகின்றது

ஆதித்தாயின் கருப்பை
நெருப்பை சுமக்கின்றது
கோடானு கோடி பிள்ளைகளின்
கருவூலம்
தீயில் வேகின்றது

கால பைரவன்
எல்லாவற்றையும் தின்று
தீர்க்கட்டும்

புல் வெளிகளும்
மழைக்காடுகளும்
மூங்கில் தோட்டங்களும்
வயல் பரப்புகளும்
மானுட சரித்திரமும்
பற்றி எரியட்டும்

மனுசர் இல்லா பேருலகம்
இனியாவது வாய்க்கட்டும்

உலகம் பேரமைதி
கொள்ளட்டும்

 

-------------

நிழலி
ஜனவரி 12, இரவு 10

இருபது இருபது இளையவரே வருக வருக.

1 month 2 weeks ago

இருபது இருபது

இளையவரே வருக வருக..

இன்பம் தந்து துன்பம் தொலைத்து

இனிதாய் வருக வருக.

 

இனி ஒரு காலை

இவ்வவனியில் புதிதாய் உதிக்க வருக வருக

இவ்வையகம் வெப்பம் தாழ்ந்து

இனி குளிர் கண்டு

இன்புற்றே நிற்க வருக வருக.

 

இனிப் பல்லினமும்

இன்பமாய்ப் பெருகி

இச்சை கொள் பச்சை தந்து

இவள் பூமகள்

இனிதே வாழ வருக வருக.

 

இழிசெயலாய் நெகிழிகள் பெருகி

இனி இந்த தேசம்

இருக்காது எனும் நிலை தொலைத்து

இவ்வையகம் வாழ்வாங்கு வாழ

இலைகுழை தான் போல் உக்கும் வகைகள்

இனி பல்கிப் பெருகிப் புழங்க வருக வருக. 

 

இல்லை எனி நல்லார்

இந்த நிலை இன்றி

இங்கு இல்லை எங்கும்

இருப்போர் நல்லோர் எனும் நிலை காண

இனிதே வருக வருக. 

 

இருபதின் இரட்டையில் வரும்

இளையஞரே மிலேனியத்தின் மிடுக்கரே

இனியனாய் நேசம் பொங்க

இவள் பூமி மகள் மீது

இச்சை கொண்டு வாரும்

இனி இங்கு சர்ச்சைகள் வேண்டாம் 

இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.. வருக வருக.! 

 

வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…!

1 month 2 weeks ago

வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…!
********************

2019..!
ஆண்டொன்றை முடித்து
அனைவருக்கும் 
அகவையெனும்.

விருதை வழங்கி
வெளிக்கிடும் ஆண்டே
 
வேதனையும் சோதனையும்
வெற்றிகளும் தந்தவனே
உன் வாழ்வில் போன உயிர்
உன் மடியில் பிறந்த உயிர்
என்றும் மறவோம் நாம்-எனி
எமையாள யார் வருவார்.


2020..!
உன்னுக்குள் எமை வைத்து
ஓராண்டு உன்வாழ்வின்
எண்ணற்ற நிமிடமெல்லாம்
எமைக்காக்க வருவாயே!

புதிய உன் வரவால் 
பூமித்தாய் மலரட்டும் 
புதுமைகள் பிறக்கட்டும்
இயற்கை செழிக்கட்டும் 
இன்னல்கள் அழியட்டும் 

பொய்,களவு பொறாமை 
போலியான வாழ்க்கை 
போதைக்கு அடிமை

சாதி,மத சண்டை 
சரும நிற வெறித்தனம் 

அரசியல் சாக்கடை 
ஆதிக்க தலைக்கனம் 
அகதியாய் அலைதல் 
அடிமை புளு வாழ்வு 

வாள்வெட்டு கலாச்சாரம்
வதைக்கின்ற தற்கொலை
பாலியல் கொடுமை
பரிதவிக்கும் ஆட்கடத்தல்

காலத்தால் அழியா-இந்த 
கதி நிலை போக்க 
வீரனாய் வருக! 
விடியட்டும் உலகம்.🙏🏿

அன்புடன் -பசுவூர்க்கோபி-
ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.

பாரதிக்கு பிறந்த நாள்-பா.உதயன்

2 months 1 week ago

பாரதிக்கு பிறந்த நாள்


பறவைகள் பறக்கும் 
பொழுது தான் 
சுதந்திரத்தின் அருமை 
புரிந்தது 
பாரதியை படித்த 
பின்பு தான் 
தமிழின் அழகு 
தெரிந்தது.

பிரிவு

2 months 3 weeks ago

sadhguru-isha-wisdom-article-image-illus

பிரிவுகள் வலியை கொடுத்தாலும் ,

அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து.

தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் 
பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி

( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )

என் தமிழச்சி

2 months 3 weeks ago

p.txt.jpg

என்னை சுமந்த உன்னை 
நான் சுமக்க ஆசை  படுகிறேன் 
தாய்யாகவா ?
அல்லது தாரமாகவா ?
 நீயே சொல்  என் தமிழே...!

 

மறு வாழ்வு

2 months 3 weeks ago

thaali.jpeg

கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் 
மறு வாழ்வு,
மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய்.

                                                              ~ கபியின் கவி

கண்ணீர் பயணம்

2 months 3 weeks ago

photo-1499084732479-de2c02d45fcc.jpg

பார்வை கடலில் நீந்திய நாட்கள் 
நினைவாய் உடன் இருக்க.
வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.

கண்ணீரின் தடங்கள்...!

2 months 3 weeks ago

maaveerar-naal.jpg

 

ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....!

 

ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...!

அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..!

என்ன பாடம் என்றில்லை..,

எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..!

ஒரு நாள் கேட்டார்...!

உனக்கு உரிமை இருக்கா எண்டு...?

 

என்னடா இது புது வில்லண்டம்?

வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..!


அப்போது புரியவேயில்லை...!

ஆறாம் வகுப்பு முடிஞ்சு ...,

அட்வான்சு லெவல் வந்த போது..,

எல்லாமே புரிஞ்சது...! 


நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு....

ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....!

கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம்  வெளிச்சது மாதிரி...!

மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல...!

குட்டக் குட்டக் குனிந்தவன் கொஞ்சம் ...நிமிர்வது போல...!


அடித்தவனுக்குத் திருப்பிக் கொடுக்க...,

அட ...அவனுக்கும் வலித்திருக்க வேண்டும்...!


எத்தனை...விமரிசனங்கள்....?

இது நியாயமா.....இது சரிதானா?


எதுவுமே....காதில் விழவில்லை...!

எல்லோரும்....தலைவராகத் துடிக்கும்...,

இனத்தில்.....இப்படியும் ஒரு இயக்கம்...!

எவ்வாறு சாத்தியமானது?


சகுனிகள் முளைத்தார்கள்...!

ஒன்றல்ல.....இரண்டல்ல...,

ஆயிரம் சகுனிகள் உதித்தார்கள்...!

எதிரிகளாக....அல்ல...,

நண்பர்களாக..!

சூரியன்களாக ஒளிர்ந்தார்கள்..!


அந்தப் பிரகாசத்தில்...,

உண்மைச் சூரியன்.....மறைந்து போனது..!


சகுனிகள்...,

இன்னும் பிரகாசிக்கிறார்கள்...!


இன்னுமொரு.....

சூரியன் உதிக்கும் வரை....,

சகுனிகள் பிரகாசிப்பார்கள்..!

எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே.

2 months 3 weeks ago

எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே.

மொழியாகி எங்கள் 
உயிர்மூச்சான மாவீரர்களே!
வழி ஏதும் தெரியாமல் இன்று
தட்டுத்ததடுமாறுகிறோம்
தளர்ந்து தள்ளாடுகின்றோம்.
தனித்து போய்விட்டோமென 
நாளும் நாளும் தவிக்கின்றோம்.

தன்முனைப்பு, போட்டி பொறாமை
தன்னலம்,பொருளாசை என்று
மக்களை மறந்து,
தம்மினம் படும் துயரங்கள் புரியாமல்
மனிதம் மறந்தவர்களாக 
தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு
எம்மவர்கள் மாறிப்போகும் இந்த
கொடுமையான உலகில,;
எமக்காக உள்ளவர்கள் 
எங்கள் மாவீரச் செல்வங்கள் 
நீங்கள் மட்டுமே.

உங்களுக்காக நீங்கள் 
ஒருபோதும் வாழ்ந்ததில்லை.
பெற்றவரையும் உற்றவரையும் துறந்து,
உங்கள் விருப்பு வெறுப்புகளைக் களைந்து,
மக்கள் வாழ்வுக்காக
மனஉறுதியுடன்
மகிழ்வோடு சாவினைத் தழுவ
தயாரான நிலையில் வாழ்ந்தவர்கள் நீங்கள்.

எம்மக்கள் வாழ்வு விடியவேண்டும் என்று
உங்களை உடலாலும் மனதாலும் வருத்தி
இறுதிவரை போராடினீர்கள்.
எங்கள் நல்வாழ்வுக்காக
உங்கள் இன்னுயிரை ஈகம் செய்தீர்கள்.
தன்னலம் மறந்த தற்கொடையாளர்கள்
உங்களால் மட்டுமே
எங்களைக் காத்திட முடியும்.

உங்களை வணங்க உங்களிடம் வருகின்றோம்
உங்கள் விழிகளைத் திறந்து
எங்களை ஒரு நொடி பாருங்கள். 
கையறுநிலையில் உள்ள 
எங்கள் பரிதாப நிலையை 
ஒரு தரம் ஒரே ஒரு முறை பாருங்கள்.

நெஞ்சில் ஈரமற்ற மனிதர்களாலும்
தன்னலம் மட்டுமே சுமந்த
பணப் பேய்களாலும்,
பதவி ஆசைக்காக
தம்மினத்தையே விற்கத் துணிந்த
கொடிய பாவிகளாலும்
நாளும் நாளும் வேதனையில் சாகின்றோம்.

எந்தப் பக்கம் திரும்பினாலும்
ஏமாற்றுக்காரர்கள் மட்டுமே.
எந்த நம்பிக்கையும் இல்லாமல்
இன்னும் இன்னும் இப்படியே
எத்தனை காலம் எம்மால் வாழமுடியும்?
எங்கள் மாவீரச் செல்வங்களே!
எமக்காக நீங்கள் மட்டுமே.

மொழி தொலைத்த குமுகாயமொன்று
உருவாகி வரும் அவலம் தரும்
வேதனை சுமக்கின்றோம்.
மொழி இல்லையேல் 
இன அடையாளம் இழந்த
ஆதரவற்றவர்களாவோம் என்பதை
உறுதியோடு எடுத்தச் சொல்ல
உங்களால் மட்டுமே முடியும்
உறுதியோடு எடுத்தச் சொல்ல
நீங்கள் வரவேண்டும்.

உங்கள் துயில் கலைத்து
எழுந்து வாருங்கள்.
எங்களுக்காக
எழுந்து வாருங்கள்.
எம்மால் இனியும் இனியும்
இந்த தன்னல விரும்பிகளை
நம்பி வாழ்வது என்ற பெயரில்
செத்துக்கொண்டிருக்க முடியாது.

எங்கள் மாவீரச்செல்வங்களே?

உங்களை வணங்கிட வந்திருக்கும்
எங்கள் முகங்களைப் பாருங்கள்.
ஆருமற்ற நிலையில் தவிக்கும்
எங்கள் நிலையைப் பாருங்கள்.
நீங்கள் மட்டுமே 
எமக்கு உயரிய வல்லமை
உங்கள் ஈகமே
எங்கள் உயிர்காப்பு.


மந்தாகினி


 

செம்பருத்தி பூக்காறி-பா.உதயன்

3 months 2 weeks ago

செக்கச் சிவந்த முகம் 
எப்பவுமே சிரித்த முகம் 
எங்க ஊரு சொந்தக்காறி 
தங்கமான உதட்டுக்காறி 
இவளை விட அழகுராணி 
எவள் இருப்பாள் 
அந்த அழகு ரோசா
தோத்துப்போகும் 
இவள் ஆடிப்பாடி 
சிரிக்கும் போது .

மொழி-பா.உதயன்

3 months 3 weeks ago


மொழி-பா.உதயன் 


காற்றுக்கும் மொழி உண்டு 
கடலுக்கும் மொழி உண்டு 
காலையில் தினம் பாடும் 
பறவைக்கும் மொழி உண்டு 

மலை கூடி மொழி பேசும் 
மௌனமாய் கவி பாடும் 
அழகான நதி வந்து 
அதனோடு கதை பேசும் 

அமுதான தமிழ் போல 
அந்த குருவிக்கும் மொழி உண்டு 
மலர் கூட மொழி பேசும் 
மனதோடு இசை பாடும் 

அழகான கிளி எல்லாம் 
அமுதமாய் தமிழ் பேசும் 
அருகோடு குயில் வந்து 
அதனோடு சுரம் பாடும் 

மழை கூடி தினம் வந்து 
மலரோடு கதை பேசும் 
இரவோடு இது பேசும் 
மொழி எல்லாம் தனி ராகம் 

சிற்பியின் உளியோடு 
சிலை கூட மொழி பேசும் 
அவனோடு தனியாக 
அது பேசும் மொழி வேறு 

அழகான பாவங்கள் 
அசைந்து ஆடும் ராகங்கள் 
மனதோடு அது பேசும் 
மனிதர்க்கு மட்டும் தான் 
மொழி என்று எவன் சொன்னான் 

இயற்கையின் மொழி எல்லாம் 
இறைவனின் படைப்பாகும் 
இது பேசும் மொழி எல்லாம் 
இதயத்தின் கனவாகும் .

 

 

Checked
Thu, 02/20/2020 - 13:34
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/