கவிதைக் களம்

முதுமையும் மறதியும்

2 months 1 week ago

முதுமையும் மறதியும் 

நினைவு 

நினைவு மறந்து விட்டது 
நினைக்காமல் 
இருக்கவும் முடியவில்லை .

அம்மாவின் மறதி 

என் பிறந்த தினத்தில் எப்பவும் 
மறக்காமல் வந்து வாழ்த்து சொல்லும் அம்மா 
இன்று எப்படி மறந்தாளோ .

முதுமை 

வயது திண்டு கொண்டு இருக்கிறது என்னை 
மறந்து போகிறேன் 
என்னை என்ன செய்ய .

கனவுகள் 

என் கனவுகளை 
சட்டமாக்கி கொள்ள 
அரசிடம் அப்பீல் கொடுத்து இருக்கிறேன் .

மறதி 

மறதி மட்டும் மறக்காமல் இருக்கிறது 
மற்ரவை எல்லாம் 
மறந்து விட்டது .

மறந்து போகிலேன் 

எல்லா என் நினைவுகளும் மறந்தே போகிலும் 
உந்தன் நினைவை மட்டும் 
மறக்காது இருக்கச் செய்வாய் தாயே .

வெள்ளை மயிர் 

வெள்ளை மயிர் ஒன்று 
காட்டிக்கொடுக்கிறது 
காலவதியாகும் திகதியை .

பா .உதயகுமார்

ஈழம் - அகமும் புறமும் - புதிய தொகுப்புக்கான10 கவிதைகள் 

2 months 3 weeks ago
ஈழம் - அகமும் புறமும்
புதிய தொகுப்புக்கான10 கவிதைகள்
 
1.
 
நீலம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
 
தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.
மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
 
ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்;
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை
இளமை என்பது நித்திய காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
 
தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
2011
 
2.
 
பாவைக் கூத்து
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
அம்ம வாழிய தோழி,
பதிலுக்கு வாழ்த்தவும் மறந்து
யார் அவன் யாரென மீண்டும் வினவுதி,
உனக்கு வேறு வேலையே இலதோ?
*
அறிந்திலையோடி?
மச்சு வீட்டின் காவல் மறந்து
ஊரின் சந்து பொந்து மரத்தடி எல்லாம்
காதல் குறுஞ்செய்தி பெய்து அலையுமே
அந்த நாயின் சொந்தக்காரனடி.
போயும் போயும் அவனையா கேட்டாய்?
 
 
*
அறம் இல்லாது
ஒருத்தனுக் கெழுதிய காதல் சேதியை
பிரதி பிரதியாய்
பலருக்கு அனுப்பும் கைபேசிக் கிளியே
அவனே உனக்குச் சாலவும் பொருத்தம்
அப்பாலே போ.
 
 
*
பிரிக்கவே சூழும் பெண்விதி கொடிது.
இனி, பொம்மலாட்டப் பாவையைபோல்
ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய
இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி.
உந்தன் மழலை அவனை ஆட்டும் நாள்வரை
இனி அவனே உந்தன் பாவைக் கூத்தன்.
 
 
*
சரிதான் போடி உன்
நூறு நூறு குறுஞ்செய்திகளை
அவனுக்கே அனுப்பு.
காலை தோறும் எண்திசை வானில்
ஆயிரம் ஆயிரம்
சிறு வெண் கொக்குகள் பறக்க விடுகிற
கடற்கரையோரப் புன்னை மரமினி
என் துணை ஆகுக
 
 
2019
 
3.
 
பாடா அஞ்சலி
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
உதிர்கிற காட்டில்
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்?
.
சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின்
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில்
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது.
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத...
.
இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய்
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின்
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.
.
அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”
 
4.
 
நதி வட்டம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
கடற்கொள்ளை அடித்த முகில்
காமத்தில் மலையேற
குறுஞ்சிப்பூ மடிமீது
பெயல்நீராய் நெழிந்தேன்
.
யாருமற்ற மலைக்காட்டில்
தீயாக பூத்து
செம்பவளமாய் உதிரும்
பலாச மரங்களே வியக்க
பகல் ஒளியில் சிலம்பமாடி
வண்ணங்களாய் இறுமாந்தேன்.
.
பசிய கிளை உடைத்துப்
பசியாறும் யானை மந்தை நாண
மீண்டும் கிளைகளாய் நிறைந்து
குருத்தெறிந்து சிரிக்கும்
பச்சை மூங்கில்களின் கீழே
ஈழவரை நினைத்தபடி
மலைகளைக் கடந்துவந்தேன்.
.
வழிநீள வழிநீள
பாய்ந்தும் விழுந்தும்
தழுவிய தேவதையர்
மார்பால் உரைத்துவிட்ட
கொச்சி மஞ்சள் கமழ
நெடுந்தூரம் வந்துவிட்டேன்.
.
காற்றில் இப்ப கரிக்கிறது உப்பு.
கமழ்கிறது தாழம்பூ
இனிக்குது கடற்பறவை
இசைக்கிற நாடோடிப் பாடல்
.
சந்தனமாய் தேய்கிற வாழ்வில்
எஞ்சிய வானவில் நாட்கள்
போதை தருகிறது.
என்றாலும்
கடல் புகுந்த ஆறு, முகிலாகி
மீண்டும் மலையேறும்
நதி வட்டப் பெரு வாழ்வில்
முதுமை எது? சாவு எது?
,
இன்னும் நீராட வாராத
வனதேவதைக்காக
இறுதிவரை ஆறாய் இருப்பேன்.
.
2017
 
5.
 
உலா
- வ.ஐ.ச.ஜெயபாலன்
 
நீலப் பாவாடையில் குங்குமமாய்
எழுஞாயிறு கசிய
பூத்தது விடலை வானம்.
வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள்.
எனினும் அன்பே
உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான்
இந்த வசந்த நாளை அழகாக்கியது,
 
வண்ணத்துப் பூச்சிகளாய் காற்றும் பூத்துக் குலுங்கும் வழி நெடுக.
காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல
கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான்
உலாவை ஆரம்பித்தோம்.
காடு வருக என
கதவுகளாய்த் திறந்தது.
 
சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட
கூறைச் சேலையாய்
வண்டாடும் மரங்களின்கீழ்
உதிரிப்பூ கம்பளங்கள்.
 
என் அன்பே
முகமறைப்பில் இருளில் இணையத்தில்
கண்காணா தொலைவில்தான்
இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க முடியுதென்பாய்..
முதலிரவுப் படுக்கையாய் பூச்சூடிய இந்தக் காடும்
விடுதலைப் பிரதேசமல்லவா
.
நீ முணுமுணுக்கும் பாடலை உரக்கப் பாடு
உன் மந்திர நினைப்புகளை ஒலி
தோன்றினால் சொல் கை கோர்க்கலாம்..
2015
 
 
6.
 
வரமுடியவில்லை அம்மா
வ.ஐ.ச. ஜெயபாலன்
 
வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட...
 
சிங்கமும் நரிகளும் பங்கும்
நீர்சுனையின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னைச் சுவர்பாலை
துடிக்கும் பல்லி வாலானேன்.
 
தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக் கரை ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகளச் சுமந்தபடி
 
இறால் பண்ணை நஞ்சில்
நெய்தல் சிதைந்தழியும்
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்லை.
 
கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதைகளைக்
காலத்தில் எழுகிறேன்...
2006
 
7.
 
இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்
 
உலகம்
விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு.
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
 
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
 
நிச்சயம் இல்லை நமக்கு
 
நாளைய மது அல்லது நாளை.
 
எனக்காக இன்று சூரியனை
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில்
நிலாவுக்காக
ஓரம்போகிற சூரியனே
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
 
கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
 
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
 
நனைந்த நிலத்தில்
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
 
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.
 
 
9.
 
என் கதை
வ.ஐ.ச.ஜெயபாலன்
 
*
அவள் தனி வனமான ஆலமரம்.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.
நானோ அவளை
கீழே நகரும் பாலையில் தேங்கிய
பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.
 
*
ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி
ஜாடை காட்டினாள்.
மறுநாள் அங்கிருந்தது என் கூடு.
இப்படித்தான் தோழதோழியரே
எல்லாம் ஆரம்பமானது.
தண்ணீரை மட்டுமே மறந்துபோய்
ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்
பாலை வழி நடந்த காதலர் நாம்.
 
*
அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.
நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.
சிறகுகளில் மிதக்கும் எனக்கோ
நிலைத்தல் இறப்பு.
மண்ணுடன் அவள் எனை
வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,
நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்
எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.
 
*
உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.
 
*
ஓரு வழியாக இறுதியின் இறுதியில்
கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்
சமரசமானோம்.
மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு
நம் காதலாய் அரங்கேறியதோ
உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்
என்றோ எழுதிய நாடகச் சுவடி.
 
*
இப்போது தெளிந்தேன்.
சந்திக்கும் போதெலாம்
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”
மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்
” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்.”
 
*
இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.
//
 
9.
 
இல்லறம்
-வ.ஐ.ச.ஜெயபாலன்.
 
ஆற்றம் கரையில்
இன்னும் தோற்றுப்போகாத மரம் நான்.
 
இன்று தெளிந்துபோய்
புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டுத் தொட்டுடச் செல்கிறது அது.
நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல.
 
எனது கன்றுகள்
முளைத் தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பதுபோல.
 
நேற்றைய துன்பமும் உண்மை
நாளைய பயமோ அதனிலும் உண்மை.
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்.
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்.
 
நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.
 
10.
 
நெடுந்தீவு ஆச்சிக்கு
வ.ஐ.ச.ஜெயபாலன்
 
அலைகளின்மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற
என்னுடைய ஆச்சி
 
காலம் காலமாய் உன்னைப் பிடித்த
பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின
போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்
தென்னம் தோப்பு
நானும் என் தோழரும்
செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.
 
தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின்மேல்
காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.
 
என்ன இது ஆச்சி
மீண்டும் உன் கரைகளில்
நாங்கள் என்றோ விரட்டி அடித்த
போத்துக்கீசரா ?
தோல் நிறம் பற்றியும்
கண் நிறம் பற்றியும்
ஒன்றும் பேசாதே
அவர்கள் போத்துக்கீசரே
 
எந்த அன்னியருக்கும் நிலை இல்லை
எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு
கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
 
ஆச்சி
என் இளமை நாள் பூராக
ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்
தேடிய வாழ்வெலாம்
ஆமை நான், உனது கரைகள் நீழ
புதைத்து வந்தேனே.
என்னுடன் இளநீர் திருட
தென்னையில் ஏறிய நிலவையும்
என்னுடன் நீர் விழையாட
மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்
உனது கரைகளில் விட்டுவந்தேனே
என் சந்ததிக்காக.
 
திசகாட்டியையும் சுக்கானையும்
பறிகொடுத்த மாலுமி நான்
நீர்ப் பாலைகளில்
கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி
 
நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர
எதனைக் கொண்டுநான்
மனம் ஆற என் ஆச்சி
(பெருந்தொகை -1995)
*நெடுந்தீவு (Delft) எனது மூதாதையரின் தீவு. இன்று இரணுவத்தின்
பிடியில் சிக்கியுள்ளது. விட்டு விடுதலையாகி நின்ற இந்த தனித்த தீவு
பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டது.
 

நல்லதோர் வாழ்வு இருந்தது

2 months 3 weeks ago

நல்லதோர் வாழ்வு இருந்தது 


நல்லதோர் வாழ்வு ஒன்று 
இருந்தது ஒரு காலம் 
நாலு பேர் வந்து போயினர் 
நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது 

ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் 
உறவுகள் வந்து போயினர் பிரியாமல் 
முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு 
பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் 

ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு 
அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் 
அங்கு ஓர் பிரிவும் இல்லை 
அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை 

அழகான பனை இருந்தது 
அருகில் ஒரு வேம்பு நின்றது 
அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது 
கூவிப் பல பாடல் கேட்டது 

காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது 
பூவோடு கனவு இருந்தது 
கனவு மெய்ப்படக் காத்து இருந்தது 
பாட்டும் கேட்டது கூத்தும் கேட்டது 
பகல் எல்லாம் குழந்தை சிரித்தும் கேட்டது 

பறவைகள் வந்தனர் அருகில் இருந்தனர் 
பாடிப் பல பாடல்கள் கேட்டன 
மாடு இருந்தது மடி நிறையப் பால் இருந்தது 
மனிதர்க்கு இதில் அன்பு இருந்தது 
தாயைப் போல் பாலும் தந்தது 
தமிழர்க்கு இது அடையாளமானது 

மார்கழி மாதம் மழையுடன் பூத்த 
மல்லிகை போல் பல பெண்கள் இருந்தனர் 
ஆலய மணியின் ஓசைகள் கேக்க 
அள்ளிக் கூந்தலை கட்டிய பெண்கள் 
துள்ளி திரிந்ததோர் காலம் ஒன்று இருந்தது 

கடல் இருந்தது கார்த்திகை பூ இருந்தது 
கல்லறை எங்கும் தீபங்கள் எரிந்தது 
கனவுகள் கண்ட உயிர்களின் பாடல் 
காத்தினில் கேக்கும் காலம் ஒன்று இருந்தது 

எம்மோடு மண் இருந்தது 
மண்ணில் பல மரம் இருந்தது 
மரத்தில் பல கூடு இருந்தது 
கூடிப் பல குஞ்சுகள் வாழ்ந்தது 

நிலம் ஒன்று இருந்தது நின்மதி இருந்தது 
கடல் இருந்தது வயல் இருந்தது 
வயிறு நிறைய சோறு போட்டது 
காவலுக்கு ஒரு படை இருந்தது 
அது வரை துணிவு இருந்தது 
நிமிர்வும் இருந்தது 

அன்று ஒரு நாள் யுத்தம் வந்தது 
அழகிய எம் வாழ்வை தின்று தீர்த்தது 
அழகிய நிலவு ஒன்று கடலில் வீழ்ந்தது 
அத்தனை கனவும் கரைந்தே போனது 
இருப்பது மட்டும் தொலைந்தவன் கண்ணீர்
இனி ஒரு காலம் இது போல் வருமோ .

 

 

 

 

இழப்பும் நினைப்பும் 02

2 months 3 weeks ago

இழப்பும் நினைப்பும்… 
               

நீலத் திரைக் கடலில் 
நீராடி வந்த பகலவன்;   
மஞ்சள் பூசி எழுந்து 
மனதுக்கு மகிழ்ச்சி தந்தான். 

கோழிகள் குருவிகள் இரை தேட
கொண்டைச் சேவல்கள் பின்தொடர
ஆடுகளை மாடுகளை வெளியேற்றி
அப்பா சென்றார் கோடிப்; பக்கம் 

இவற்றைப் பார்த்து இரசித்தபடி
எனது பணியைத் தொடர்வதற்கு
வேப்ப மரத்தில் குச்சி பிடுங்கி – அதன்
வேரில் இருந்து பல் தேச்சேன். 

செம்பில் கொஞ்சம்  நீரெடுத்து 
தெளித்து மெதுவா முகம் கழுவி
காய்ந்த  சேலை யொன்றினைக்  
கையிலெடுத்து முகம் துடைத்தேன் 

அடுப்பில் காச்சிய ஆட்டுப் பாலை
ஆவி பறக்க ஆற்றி எடுத்து 
மூக்குப் பேணியில் முழுதாய் நிரப்பி
முற்றத்தில் தந்தார் அப்பாச்சி.

முண்டி முண்டிக் குடித்திடவே  
முகம் எங்கும் வேர்த்துக் கொட்டும் 
அது அடங்கி விட  முன்பே
அரிசிமாப்  பிட்டும் வந்துவிடும்

பிட்டு வருமுன்  அதன் வாசம் வரும்
பிடித்துப் பிசைந்தால் எண்ணை வரும்
பச்சைப் பெருமாள் நெல்லரிசி  எம்
பாரம்பரியத் தானியமே. 

இந்த நினைவில் நானிருக்க 
எருதுகள் இரண்டைக் கலைத்தபடி
ஏரைத் தூக்கித் தோழில் வைத்து 
எனது தந்தை நடந்து சென்றார்.

விதை நெல்லை ஒருவர் சாக்குடனும் 
விதை நெல் பெட்டியை அப்பாச்சி நாரியிலும் 
மண்வெட்டி, நுகத்தை நான் தூக்கி
நகர்ந்து சென்றோம் அவர் பின்னே.   

அப்பா வயலில் நெல் விதைக்க
அவர்பின் ஒருவர் உழுது செல்ல
குருவிகள் கொக்குகள் காகங்கள் 
கூட்டமா வந்து இரை பொறுக்கும்

மூலை வயலை நான் கொத்த
முழுதாய் வெய்யில் வந்து விடும் 
வேலை செய்த களைப்பாற
விரைவாய் செல்வோம் மரத்தடிக்கு

முதிரை பாலை நாவல் மரம் 
முற்றமாய்ப் பரந்து நிழல் கொடுக்கும் 
ஆற அமர மரத்தடியில்  
அமர்ந்து உண்போம்  தட்டுவம் கோலி.

உயிர்கள்  வாழ உணவளிக்கும் 
உழவர்; பலர் ஒன்று சேர்ந்து
உண்டு களைத்த சோர்வு நீங்க 
உறங்குவார்கள் கண்ணயர்ந்து. 

மரக் கிளையில் மணிப் புறாக்கள் 
மகிழ்து சேர்ந்து குறுகுறுக்கும் 
படுத்திருந்தோர் குறட்டையொலி 
பக்கவாத்தியாமாய் இசை சேர்க்கும் 

களம் உழுத காளைகளும் 
களைப்பு நீங்க வைக்கல் தின்னும் - அவை
களுத்தாட்ட  சலங்கை மணி;
கணீர் கணீரென ஒலி எழுப்பும்

சலங்கை மணிச்; சத்தம்கேட்டு
சகலரும் விழித்தெழுந்து
விட்ட குறை வேலைகளைத்
விரைந்து செய்யக் கிழம்பிடுவார்.


(நினைவுகள் தொடரும்)  


 

இழப்பும் நினைப்பும்

3 months ago

இழப்பும் நினைப்பும் 

வணக்கம், 
        தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால்  தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி  இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில்  தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத்தேசித்துள்ளேன். இரசனைக்காக காதலையும் இணைத்துள்ளேன். நீங்களும் இதற்கான ஆதரவை அளிப்பீர்களென ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன், வழமை ஒழிந்து போகும் சொற்பிரயோகங்களையும் பொருட்களின் பெயர்களையும்  பதிவு செய்ய உதவவேண்டுமெனவும்; கேட்டுக்கொள்கிறேன்.  

நன்றி
செண்பகன்


இழப்பும் நினைப்பும்… 
   
01. உதயம்

வன்னி நிலப்பரப்பில்
வளம் கொழிக்கும் நெல் வயல்கள்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
காட்சி தரும் வரட்சியுடன்
 
நெல் வயல்கள் இடைக்கிடையே  
மேட்டு நிலங்கள் தலை காட்டும்
இவற்றில் சிலவற்றில் குடிமனைகள் 
எழுந்து நிற்கும்  

ஓலைக் குடி மனையில் நான்;
உறக்கம் நீங்கிப் படுத்திருக்க 
அதன் ஓலை இடுக்குகளில்   
தோரணமாய் வைக்கோல்கள்

சிட்டுக் குருவிகள் சில
சிறு கூடுகள் அமைத்தங்கே
குடியும் குடித்தனமுமாய் 
கும்மாளம் செய்து வாழும்.

தன் கூடு நோக்கி ஒரு
தாய்க் குருவி பறந்துவரும் 
அக்கம் பக்கம் பார்த்த பின்பு
அக் கூட்டில் அது நுழையும்

தாயைக் கண்ட குஞ்சுகளோ
தம் மொழியில் குதூகலிக்கும் 
தனித்தனியாக் குஞ்சுகளுக்கு
தாய்க் குருவி இரையூட்டும்.  

ஆண்குருவி தான் இரை தேட
அங்கிருந்து பறந்துவிடும்
அதைப் பார்த்து என் மனது
என் பணியை நினைவூட்டும்

வேப்பமரக் கிளைகளிலே வேவ்வேறு சேவல்வகை
விடியலை வரவேற்று விண்ணதிரக் கூவிநிற்க
கொக்கரித்துக் கொக்கரித்துக் 
கோழிகள்  கீழ்ப் பறக்கும். 

கட்டி நிற்கும் ஆடுகளோ
கத்திக் கத்திக் குரல் கொடுக்க 
பால் குடித்த குட்டிகளோ 
பாய்ந்து பாய்ந்து துள்ளி ஓடும்.

காட்சிகள் ஒவ்வொன்றாய் 
களிப்புடனே அரங்கேற
தட்டியால்  ஒளிபாய்ச்சிக் கதிரவன்; 
தன் கதிர்களால் உள்புகுந்தான்

பாயில் கிடந்த நான் 
பகலவன் ஒளி படவே
கைகொண்டு கண்கசக்கி
களிப்பிழந்து துயில் முறித்தேன். 

தொழுவத்தில் எருதுகளைத்
தொட்டுத் தடவியபின்
கடகத்தில் தவிடெடுத்து
களனி கலந்து வைத்தேன் 
 
முற்றத்தில் வாழைகள் 
குலைதள்ளி நிற்கும்   
முற்றிப் பழத்தவையில்; 
அணில்கள் துள்ளி ஓடும். 
இலைகளின் நடுவினிலே 
கிளிகள் காதல் புரியும் 
இனிமையாய்ப் பேசி அவை
தலைகோதி மகிழும்  

தென்னை மரக் கீற்றுகளைத்; 
தென்றல் தழுவிப் போகும் 
செவ்வரத்தம் பூக்களைச் சுற்றி
தேன்சிட்டுக்கள் பறக்கும்.   

வண்டினங்கள்  இரைந்தபடி  
வண்ண மலர்களை மொய்க்கும்  
வகைவகையாய்ப் பறவைகளும் 
வந்து வந்து போகும். 

மஞ்சள் வர்ண ஒளியிலே
மனம் மகிழும் காட்சி
மக்கள் எல்லாம் உசாரடையும் 
உதயணன் மீள் எழிற்சி
 

 

தாகமெடுத்துத் தவிக்கும் தமிழ்நாடே

3 months ago

தாகமெடுத்துத் தவிக்கும் தமிழ்நாடே
சற்றுப் பொறு
விரிகுடா வங்கத்தை 
விவாகரத்துப் பண்ணிவிட்டு
காவிரித் தோழியைக் கட்டித்தழுவக்
கங்கை வருகிறாள்.

எண்ணி ஓர் ஐம்பது ஆண்டுகள்தான்.
இப்போதே இமயத்திலிருந்து வரும் பனிக்கட்டிகள்
எண்ணக் கனவுகளில்,
எங்கள் உச்சிகளைக் குளிர்விக்கின்றன.
எம் கனவில்
வங்கத்தைப் பிரியும் கங்கை 
வளம்தனைக் கொழித்து நிற்க
சிங்க மராட்டியத் தலைமை வந்து ‘‘சிஸ்டம்
சரியில்லை தீர்த்து வைக்கிறேன் 
வையத் தலைமை கொள்ள 
வந்து நிற்கிறேன்‘‘ என்று கவிதை பாடுகிறது.
தந்தங்களைப் பிடுங்கிப் பரிசளிக்க 
சட்டமில்லை! அதனாலென்ன?

காவிரி வெற்றிலையைப் பரிசளிப்போம். 
எப்படியோ மாறிச் சுழித்து
பாரதியே நீ கண்ட கனவு நனவாகப் போகிறது
தமிழ் மக்களே தற்போதைக்கு
நாமிருந்து பாடுவோம்
நாவரண்டு வாடுவோம். 
தலைவன் கட்டவுட்டுக்குப் பாலூற்றுங்கள் 
ஊற்றும்பாலில் தாமரைகள் மலரட்டும்.

உறவுகள்

3 months ago

உறவுகள் 


 உறவுகள் இருந்தனர் ஒரு காலம் 
ஒற்றுமை இருந்தது பலகாலம் 
கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் 
குலைந்து இப்போ போயினர் சில காலம் 

அன்புடன் இருந்தனர் ஒரு காலம் 
அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் 
ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் 
அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் 

இரவின் நிலவில் கதை பேசி 
கதையில் கனவுகள் கண்டு வந்தோம் 
இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் 
இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் 

கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை 
நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை 
இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் 
இது தான் விதி என அறியாயோ 

வாழ்வுகள் இருப்பது சில காலம் 
வருவதும் போவதும் ஒரு காலம் 
உறவுகள் என்பது தொடர் காலம் 
இதை  நீ உணர்வாய் ஒரு காலம் .

பா .உதயகுமார் 

வரலாறுகள் மீண்டும் ———

3 months 2 weeks ago

History Repeats Itself

வரலாறுகள் சுழண்டு 
கொண்டு தான் 
இருகின்றன
அன்று ஒரு நாள் 
ஈழத்து கிழவன் 
ஒருவன் சமஸ்டி 
கேட்டான் 
இதே காவி உடை 
கண்டியில் இருந்து 
வந்த ஊர்வலத்தால் 
கடைசி வரை 
துன்பம் தொடர்ந்தது 
இன்று ஒரு நாள் 
இன்னும் ஒரு 
கண்டி ஊர்வலம் 
இது முஸ்லிமுக்கு மட்டுமல்ல 
ஈழ தமிழனுக்கும் 
இது ஒரு எச்சரிக்கை 
இந்துவும் முஸ்லிமும் 
இனி இணைந்தால் ஒழிய 
இலங்கை பெரும் தேசியம் 
எப்பவும் அடங்காது 
இரண்டு மாநிலமும் 
இணைந்த தீர்வு 
ஒன்று தான் 
இந்துவுக்கு முஸ்லிமுக்கும் 
பாதுகாப்பாகும் .

பாவைக் கூத்து - வ.ஐ.ச.ஜெயபாலன்

3 months 2 weeks ago
தயவுடன் இந்த பரீட்சார்த்த கவிதைபற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள். கற்றுகொள்ள உதவும்.
.
 
பாவைக் கூத்து
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
அம்ம வாழிய தோழி,
பதிலுக்கு வாழ்த்தவும் மறந்து
யார் அவன் யாரென மீண்டும் வினவுதி,
உனக்கு வேறு வேலையே இலதோ?
*
அறிந்திலையோடி?
மச்சு வீட்டின் காவல் மறந்து
ஊரின் சந்து பொந்து மரத்தடி எல்லாம்
காதல் குறுஞ்செய்தி பெய்து அலையுமே
அந்த நாயின் சொந்தக்காரனடி.
போயும் போயும் அவனையா கேட்டாய்?
 
*
அறம் இல்லாது
ஒருத்தனுக் கெழுதிய காதல் சேதியை
பிரதி பிரதியாய்
பலருக்கு அனுப்பும் கைபேசிக் கிளியே
அவனே உனக்குச் சாலவும் பொருத்தம்
அப்பாலே போ.
 
*
பிரிக்கவே சூழும் பெண்விதி கொடிது.
இனி, பொம்மலாட்டப் பாவையைபோல்
ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய
இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி.
உந்தன் மழலை அவனை ஆட்டும் நாள்வரை
இனி அவனே உந்தன் பாவைக் கூத்தன்.
 
*
சரிதான் போடி உன்
நூறு நூறு குறுஞ்செய்திகளை
அவனுக்கே அனுப்பு.
காலை தோறும் எண்திசை வானில்
ஆயிரம் ஆயிரம்
சிறு வெண் கொக்குகள் பறக்க விடுகிற
கடற்கரையோரப் புன்னை மரமினி
என் துணை ஆகுக
 

என் சில கிறுக்கல்கள் - நிழலி

3 months 2 weeks ago

யன்னல்களால் வெளியே
ஓங்கி வீசும்
பெருங்காற்றின் சத்தங்களை
தடுக்க முடியுது இல்லை

...

பிணைச்சல்களையும் பூட்டுக்களையும்
கடந்து வீட்டின் உள்ளே
நுழைந்து
மாடிப்படிகள் ஒவ்வொன்றிலும்
நிதானமாக ஏறி
என் அறையின் வாசல் கதவு
வரைக்கும் வந்து
நிற்கின்றன காற்றின்
சத்தங்கள்

படுத்துக் கிடக்கும் எனை
எழுப்ப விருப்பமின்றியும்
சொல்ல வந்த பெருங்கதையை
சொல்லாமல் போக மனமின்றியும்
அறையின் கதவோரங்களில்
காத்து நிற்கின்றன

விடிந்த பின்
கதவை திறக்கும் போது
அவை மீண்டும்
யன்னல்களினூடு
வெளியேறிச் செல்லும்
கொண்டு வந்த கதைகளை
சுமந்து கொண்டு

அவை சொல்ல
எத்தனிக்கும் கதைகளையும்
சங்கதிகளையும்
கேட்க
விருப்பமின்றி
என் நாட்கள் கடந்து
செல்லும்......

-June 02,2019

 

இலங்கையின் நீதி

3 months 3 weeks ago

சட்டமும் ஒழுங்கும் 

சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் 
பின்பு ஏன் பிக்குமாரை 
பின் கதவால் திறந்து விடுகிறார்கள் .

 

நீதியும் அரசியலும் 

என்ன தீர்ப்பை இலங்கை நீதியரசர்கள் 
எழுத வேண்டும் என்று 
ஏற்கனவே எழுதி இருப்பர் 
இலங்கை அரசியல் வாதிகள் .

 

நீதி 

எ .வி .டைசியின் சட்ட புத்தகம் 
இலங்கையில் செல்லுபடியாகாது 
இங்கு நீதி என்று எங்கும் இல்லை .

 

அரசியல் கைதிகள் 

அரசியல் கைதிகளுக்கு 
விடுதலை இல்லை 
அவர்கள் தமிழர்கள் என்பதால் 
அப்படித்தான் 
அந்த அரசியல் அமைப்பு 
எழுதி இருக்கிறது .

பா .உதயகுமார் .

பால்ராஜ் அமரனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

4 months ago
மே.20.2008 அஞ்சலி
.
பால்ராஜ் அமரனுக்கு
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
அமரா
நீ மீட்ட ஆனையிறவில்
தரை இறங்கும்
செங்கால் நாரைகள் போல்
வன்னியெங்கும்
தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.
என் கவிதையிலே நீ இருக்க
ஈழம் கதறியழும் நியாய மென்ன.
.
நீயோ முடங்கிய காலில்
மூண்டெரிந்த விடுதலைத் தீ.
தீவெட்டியாய் உன்னைச்
சுமந்து சென்ற தோழருக்கு
'இத்தாவில்' பகையிருட்டில்
வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.
உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.
களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்
காலங்கள் ஊடே
என் கவிதை இனிச் சுமக்கட்டும்
.
அவனை ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாளை மணலாற்றை மீட்டு
வாழ திரும்புகையில் நம் சனங்கள்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை.
மணலாற்று அகதிகளின் புதையல்
ஆழப் புதைக்காதீர்.

முள்ளி.. வாய்க்கால்

4 months ago

தமிழீழ மூச்சே

எதுக்கம்மா

போனாய் முள்ளி வாய்க்கால்.

ஊரின் பெயரே

உன்னை எச்சரிக்கவில்லையோ...

இல்லை..

முள்முடி தரித்த

தூதரின் நிலை போல்

முள்ளி மேல் நடக்கப் பிரியப்பட்டனையோ..?!

சத்திய சோதனைக்கு

சுய பரிசோதனைக்கு

அதுவா வேளை..??!

 

நாலாம்

இராணுவ வல்லரசையே

வன்னிக் காட்டுக்குள்

கட்டிப் போட்டு

கால் பறித்து

கதறி ஓட வைத்த அனுபவம் இருந்தும்..

ஆழ ஊடுருவல்

அங்கொன்றும் இங்கொன்றும் இருந்ததுக்காய்

எதுக்கம்மா காலி செய்தாய்

காட்டை..!

இன்று வன்னிக்காடுகள்

கண்ணீர் விடுகின்றன

காவல் தெய்வங்கள்

இல்லா நிலையில்

தம் கால் தறிபடும் தறிகெட்ட தனம்

தலைவிரித்தாடுவதால். 

 

தமிழீழத் தாயே

உன் மூச்சுத் தாங்கி...

தோப்பாய் நின்ற சனம்

தொப்புத் தொப்பு என்று

சரிந்து வீழ

தரிசான முள்ளி வாய்க்கால்

முத்தாய்ப்பாய் அமைந்து விட்டதே.!

யார் விரித்த வலையோ

யார் விதித்த சதியோ..

மேற்பார்வையாளர் என்று வந்த

மேலை நாட்டு மேட்டுக் குடிகள்

வசதியாக.. 

மெளனித்து  விட்டனர்

தேவ தூதனுக்கே முள்முடி சூடி

சிலுவையில் ஏற்றிய

கூட்டங்களின் வாரிசுகளோ அவர்கள்..?!

 

ஐநா சபையாம்

கணக்கு போடுது

எத்தனை சிறுவர் போராளி

எத்தனை கரும்புலின்னு..

அடப்பாவிகளா

சனம் ஆயிரக் கணக்கில்

கண் முன்னே வீழ்ந்ததில்

அத்தனையும் காட்சியாய் உங்களிடம் இருக்க

எதுக்கடா... 

வெட்டிக்கணக்குப் போட்டு

வேளை கடத்தி

கூட்டு இனக்கொலைக்கு

இணக்கம் கற்பிற்கிறீர்கள்..?!

 

பூமிப் பந்து

இயற்கையானது

சுத்தமானது

பொறுமையானது

வேற்றுமையற்றது

ஆனால்

அதனையும் தன் சொத்தென்று

சொந்தம் கொண்டாடும்

கொடிய மிருகம்

மனிதனே

இன்று எல்லாம்

அழித்து

தானும் அழியும் நிலைக்கு

வல்லரசு.. ஆயுதம்.. ஆக்கிரமிப்பின்னு

சுயநலக் கருவிகளால்

கர்வம் கொண்டியங்கும்

இந்த நாளில்..

 

சோழப் பெரும்பாட்டனின் 

வாரிசுகள்

மீண்டும் நாடாள்வதோ

உலகாள்வதோ

என்று வெறுப்பில்..

அடுத்தவரின் தேவைக்கான

பயங்கரவாதத் திணிப்பில்..

தமிழீழ மூச்சே

நீ மூச்சிறைத்திருக்கலாம்

ஆனால்

மூச்சிழக்கவில்லை..!

முள்ளிவாய்க்கால்

உனக்கு முடிவும் அல்ல..!!

மூச்சிழந்தோர்

தந்த உயிர் மூச்சு

உன்னை காத்து நிற்கும்

காலம் காலமாய்..!!!

 

ஆக்கம் நெடுக்ஸ்: 19.05.2019

மே 18

4 months ago

ஈழத்து சிறுமியின் டயறி மே 18ம் நாள் 

 


மே 18 ம் நாள் 
காலை பொழுது ஒன்றில் 
கையில் இரத்தங்களுடன் 
கடந்து போகின்றன 
பேரிரைச்சலோடு 
இராணுவ வண்டிகள் 
சாம்பல் மேடுகளை 
தாண்டியபடி 
அந்த ஊழியின் கடைசி 
தினம் அன்று 
பாதி பாண் துண்டை 
என் தம்பியின் கையில் 
கொடுத்து விட்டு 
நானும் தம்பியுமாக 
அம்மாவை பார்த்தபடி 
அந்த பதுங்கு குழியில் 
என்று தொடங்கும் 
அவளது டயரி குறிப்பு 
அன்று ஒரு நாள் 
அந்த நாசி படைகளுக்கு 
அஞ்சியபடி 
அந்த அவுஸ்வைஸ் சிறையில் 
இருந்து எழுதிய சிறுமி 
அன்னா பிராங்கின் 
யுத்த கால டயரி 
குறிப்புகள் போலவே இருந்தன .

போரோய்ந்த பூமியிலே

4 months ago
60767204_10212024103671492_6662493964093

 

போரோய்ந்த பூமியிலே வேறொன்றும் ஓயவில்லை
நாளாந்த வாழ்வினையும்
நீங்களும் வாழவில்லை
வேரோடிப் போன மண்ணில்
வீரர்கள் சாகவில்லை
மண்விட்டுப் போனபின்னும்
மானத்தைக் காத்திடவே
விழுதுகள் தாங்கி உங்கள்
வேதனை போக்கிடவே
ஊரோய்ந்து போனபின்னும்
உங்களைத் தாங்கிடவே
உங்களின் பிள்ளைகளாய்
நாங்கள் இருக்கிறோம் - உமக்காய்
நாங்கள் இருக்கிறோம்

சொந்த மண் தானிழந்து
சுற்றங்களும் இழந்து
சோர்ந்து நீர் தோள் சாய
சொந்தச் சுவர் இழந்து
ஊரூராய்த் திரியும் எங்கள்
உதிரத்து உறவுகளே
உங்களின் இருப்புக்காய்
உணர்வுகள் தனைத்தாங்கி
ஓய்ந்த உம் தலைசாய்த்து
ஆறுதல் கொண்டிடவே
உங்களின் உறவுகளாய்
நாங்கள் இருக்கிறோம் - உமக்காய்
நாங்கள் இருக்கிறோம்

செங்குருதி தோய்ந்து அன்று
சிவப்பாகிப் போன தேசம்
உடல்கள் சிதறி எங்கும்
வெடிப்பாகிப் போன தேசம்
உன்னத வீரர்கள்
உயிர்களைக் கொடுத்த தேசம்
உருக்குலைந்தே போக
உறவுகள் விடமாட்டோம்
உங்களின் வலி போக்கி
உயிர்ப்புடன் உலவுதற்கு
ஊக்கியாய் நாமிருந்து
உதவிகள் புரிவதற்கு
உங்களின் உறவுகளாய்
நாங்கள் இருக்குறோம் - உமக்காய்
நாங்கள் இருக்கிறோம்

அனைவருக்கும் அஞ்சலிகள்

4 months ago

எப்படிச் சொல்வோம் எம் இழப்பை
ஏதிலியாகி நாம் ஊரூராய் அலைகையில்
எப்படிச் சொல்வோம் எம் இழப்பை

பத்து ஆண்டுகள் பறந்தே போனது
நடந்தவை அனைத்தும் மறந்தும் போனது

நமக்கேன் நாடு என்றும் கேட்கிறார்
நாடு காட்டிப் பிழைக்கும் எம்மவர்

நன்றாய் இருக்குது நாடும் ஊரும் 
என்று சொல்லி எங்கும் திரிகிறார்
எந்த இழப்பும் அற்ற எம்மவர்

நாவாந்துறையில் பிடித்த மீனும்
நண்டு கணவாயும் நல்லாய் தின்று
நாடு நல்லாய் இருக்கென்று நாம் கூறலாமோ???

கோழைகள் போல் ஓடிவந்தவர் 
கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்து
கொலிடே போக மட்டும் நாடாம்

வெட்கம் கெட்ட தமிழர் நாங்கள்
வேருடன் அழித்தவர் ஊர்கள் பார்க்க
வெளிநாட்டில் இருந்து விருப்பாய் போகிறோம்

வெடிகள் பட்டவர் முடமாய் இருக்க
வெடிகள் கொழுத்தி விழாவெடுக்கிறோம்
விழலாய் எம் பணத்தை இறைக்கிறோம்
வரிகளில் மட்டும் வேதனை கொள்கிறோம்

விழித்தெழு தமிழா இனியும் வீணராய் போகாது
வல்லமை கொண்டே உன் வளங்கள் பெருக்கி
வாழ்விழந்து தவிக்கும் எம்மினம் சீர்பெற
வருந்தி நீயும் உழைத்திடாயோ மானிடா

பாடா அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன்.

4 months ago

TAMIL ORIGINAL
பாடா அஞ்சலி
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
உதிர்கிற காட்டில் 
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 

சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் 
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில் 
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ 
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. 
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... 
.
இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற 
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய் 
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் 
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.
.
அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”
- 2017

Eloge funéraire
Non chanté
In Tamil V.I.S.Jayayapalan
French Translation by Vasu Devan 
****
Dans une forêt qui s'effeuille,
à quelle feuille chanterais-je l'éloge funéraire ?
*
Je suis le poète de ceux qui, descendant des coteaux boisés, 
se sont réfugiés à la plage,
en ayant entendu l'alerte au tsunami. 
*
Quant à ce monde, au sein duquel s'enfouissent 
les perdants et les gagnants, il s'effeuille telle une vieille forêt. 
Sur quelle tombe déposerais-je mes fleurs ?
Sur Quelle feuille rédigerais-je mes éloges funéraires ? 
*
Quel est le cimetière qui soit plus grand que ce monde ? 
C'est le lieu où se dressent de nouveaux drapeaux 
sur d'innombrables empires enfouis. 
*
Voici errent tels des serpents sous des pierres tombales 
les malédictions lancées 
Par les fillettes déchirées de nos villages, 
*
Sur une terre où s'estompent les lamentations 
des oiseaux migrateurs,
chantent les arbres nus.
"Histoire fera fleurir les forêts"

Checked
Sat, 09/21/2019 - 02:49
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/